உண்ட சோறும் உருவான தொப்பையும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 3,763 
 
 

‘கடன் பிரச்சனையைக்கூட தீர்த்துடலாம் போல இருக்கு. தீரவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணி கல்லாட்டம் வந்து விழுந்துவிட்ட தொப்பை தரும் தொந்திரவு!. வயிறைக் கட்டணும்னா வாயை கட்டணும்!. ‘தாயும் பிள்ளையும் ஒண்ணுன்னாலும் வாயும் வயிறும் வேறயாமே?!’ நமக்குத்தான் வாயும் வயிறும்கூட ஒண்ணாவே ஒரே மாதிரி, பெரிசாவே இருக்கு?!

நேரங்கெட்ட நேரமெல்லாம் திங்கறது., அப்புறம் நிமிர்ந்துவிட்ட தொப்பையைக் குறைக்க வழி தெரியாம, விட்டத்தைப் பிடிச்சுத் தொங்கறது. ‘சே! சே! ஷேம் ஷேம் பப்பி ஷேம்…! இல்ல இல்ல ஷேம் ஷேம் தொப்பை ஷேம்..!’

வாக்கிங் போனா வயிறு கொறையுமாம். வாலிப காலத்துல வெலை கொறைஞ்ச செருப்பைப் போட்டுட்டு, ‘வாக்’ பண்ணினதுனால வயோதிகத்துல வயிறும் வந்திருச்சு..! கால்ல ஆணியும் வந்து ஷாக் தந்திருச்சு!. நடக்க முடியாததுக்கு ஆணியே அடிப்படைக் காரணம். நல்ல வேளை கடவுள் நல்லவர். நமக்கு லாடம் கட்டாம, ஆணியோடு நிறுத்தீட்டார்.

ஓருத்தர் சொன்னார் தொப்பையைத் தீர்க்கும் வழின்னு… அவரே அதை பாலோ பண்ணி, அவர் தொப்பையைக் கொறைச்சுட்டாராம். நாமும் முயலலாம்னு முடிவு செஞ்சேன். நல்லதை மூடி மறைப்பானேன்?! மூடி மறைக்க முடியாத அளவு பெருகுன தொப்பையைத் தீர்க்கும் வழிதானே மறைக்காம சொல்வோம்னு சொல்றேன்.

நேரங் கிடைச்ச போதெல்லாம் சாப்பிடாம, நேரத்துல சாப்பிடணுமாம் மாலைக்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர்(தண்ணீ இல்லே?! …வாட்டர்!!) குடிக்கணுமாம். ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டு உடனே தூங்கீடாம உக்காந்திருந்து நைட் ஒரு அரை லிட்டர் தண்ணீரை ஷிப் பண்ணி ஷிப் பண்ணி கட கடன்னு குடிக்காம குடிச்சுத் தீர்க்கணுமாம். வீட்டுல இருக்கற எடத்துல ‘டிரைவிங்க் டெஸ்ட் எட்டு’ போடறாமாதிரி நடந்து எட்டுப் போடணுமாம். எத்தனை எட்டுன்னு சொல்லலை. முடிஞ்ச்ச அளவு போட்டுவந்தா தொப்பை இருந்த எடம் தெரியாம போயிடுமாம்.

இதெல்லாம் செஞ்ச்சா போயிடுமான்னுதானே கேக்கறீங்க… அத தின்னு இத தின்னு., அதைத் திங்காதே இதைத் திங்காதேன்னு சொல்லலை! சொன்னது எல்லாமே நம்மாலே செய்ய முடிஞ்சது.. பஸ்கி எடுக்கச் சொல்லலை., தோப்புக்கர்ணம் போடச் சொல்லலை! சாப்பாட்டில் நேரமாற்றம் மட்டும் நிலைமாற்றத்துக்கு வழிங்கறார்.. செஞ்சுதான் பார்ப்போமே?!

புரியுது அப்படியும் தீரலைன்னான்னு தானே கேக்கத்தோணுது!? தோணும்தான். கேளுங்க!

காடுவரைப் பிள்ளை கடைசி வரை யாரோன்னு கவலைப் படுவானேன்! கரையாத் தொப்பை கடைசி வரை வந்துட்டுப் போட்டுமே.!. காசா! பணமா? நாம பெத்த பிள்ளைதான் வரலை., நாம வளர்த்த தொப்பையாவது வரட்டுமே?!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *