கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 1,910 
 
 

தன் தந்தையால் தாய் படும் சிரமங்களையும், சித்ரவதைகளையும் கண்டு குடும்ப வாழ்வின் மீதே வெறுப்பு வந்தவளாக திருமணமே வேண்டாம் எனும் முடிவில் இருந்தாள் சர்மிளா.

சிறு வயதிலிருந்து வீட்டில் ஒவ்வொரு நாளும் ‘இன்னைக்காவது அப்பா குடிக்காமல் வருவாரா….? இன்னைக்காவது அப்பா அம்மாவை அடிக்காமல் இருப்பாரா….? என வேதனையில் பயத்தால் பசியை மறந்து உறங்கிப்போன நாட்களே அதிகம். அதோடு சில நாட்கள் அம்மாவை வெளியில் விட்டு வீட்டைச்சாத்தி அப்பா தாழிட்டு விடுவார். அம்மா இரவு முழுவதும் வாசலில் உள்ள திண்ணையிலேயே அழுது கொண்டு படுத்திருப்பாள். அம்மா சிரித்துப்பார்த்ததே இல்லை.

கல்லூரியில் உடன் படிக்கும் தோழி ஊர்மிளாவின் தந்தை ராகவன் மகளிடமும், மனைவியிடமும் எவ்வளவு பிரியமாக நடந்து கொள்கிறார். கேட்பதை வாங்கிக்கொடுக்கிறார். தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்து நிறுத்தத்துக்கு மகளை தானே கொண்டு வந்து விடுகிறார்.

ஞாயிற்றுக்கிழைமை விடுமுறை நாளில் அவரே வீட்டில் சமைக்கிறார், பரிமாறுகிறார், வெளியில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கிறார் என்பதை நினைத்து ஏங்கினாள் சர்மிளா.

‘சர்மி உங்கப்பா நேத்தைக்கு எங்க வீட்டு முன்னாடி பைக்ல விழுந்திட்டார். என்னோட அப்பா ஹெல்ப்பண்ணி  வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்ப வாந்தி பண்ணிட்டார். அப்பத்தாந்தெரிஞ்சுது ஒரே மது வாசம். பாவம்டி நீ…. உன்ன நெனைச்சு எனக்கு ராத்திரி தூக்கமே வரல. எப்படித்தான் டெய்லியும் அவரோட ஒன்னா இருக்கீங்களோ…?’ என கூறிய போது மிகவும் அவமானமாக இருந்தது.

“ஊர்ல ஒவ்வொரு குடித்தனத்துலயும் இப்படியா நடக்குது…? இங்க மட்டும் ஒரே குடிக்கிற தனமா இருக்குது. பெத்த பொண்ணு கண்ணால வயசுல வளந்து நிக்கிறா. இப்படியிருந்தா எப்படி மதிப்பாங்க…? நாளைக்கு உன்ற பொண்ண ஆரு பொண்ணுக்கேட்டு வருவாங்க…?” என சர்மிளாவின் தந்தை சிங்கனின் தாய் திட்டியதைக்கேட்டு “உன்ற வேலை என்னமோ அத மட்டும் பாத்துட்டு ஊரு போயி சேரு. இங்க வந்து இவளுக சொல்லறதக்கேட்டுட்டு கண்டபடி பேசுனீன்னா இப்ப சோத்துக்கு குடுக்கறதையும் குடுக்க மாட்டேன். அப்புறம் நீயி பிச்சையெடுத்துத்தாங்திங்கோணும்” என்று மகன் பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவாறு, “பெத்தவ நானென்னடா… படைச்ச கடவுளே வந்து சொன்னாலும் நீ திருந்த மாட்டே… எக்கேடோ கெட்டுப்போ… நானும் பாக்க வெரைக்கும் பாப்பன். அப்பறம் இருக்கவே இருக்குது அரளி வெத, அத அரைச்சுக்குடிச்சுப்போட்டு செத்துப்போவனாக்கு… பேசறாம்பாரு பேச்சு…. மசுரு, மங்காணின்னு…. சொத்த எழுதி வாங்கீட்டு பெத்தவளுக்கு சோறு போடாம உட்டீன்னா ஏழு ஜென்மத்துக்கு நீ பிச்சையெடுத்தாலும் சோறு கெடைக்காம சீரழியோணும் பாத்துக்க” என கண்ணீர் வடிய பேசி விட்டு சென்ற பாட்டியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டு ஊருக்கு போக வேண்டாமென தடுத்தாள் சர்மிளா.

“ஊருக்கு போனா நாஞ்செத்துப்போவனென்னுமோன்னு பயந்துட்டியா…? அப்படி செத்துப்போயிந்தா உங்கொப்பங்காரன் வகுத்துல இருக்கற போது என்னைய உட்டுட்டு ஒன்னொருத்தியக்கூட்டீட்டு உங்கொப்பாரு… அவருதான் என்ற புருசன் ஓடுனபோதே செத்திருப்பேன். என்ற மனசுல தெகிரியம் நெறைய இருந்ததுனால தனியாளா உங்கொப்பன பெத்து, வளத்தி, படிக்க வெச்சு கண்ணாலத்தப்பண்ணி வெச்சு, எனக்கு எங்கப்பமூட்ல குடுத்த சொத்தையும் பெத்த பையனுக்கே எழுதி வெச்சுட்டு இந்தக்கட்ட உசுரோடு வாழறேன். அப்பறம் உன்ற கண்ணாலத்துக்கு அப்பத்தா அஞ்சு பவுனு எடுத்து வெச்சிருக்கறேன். உங்கப்பன், அவன் தான் என்ற மவன் சிங்கங்குடுக்கறத சோத்துக்கு அரிசி வாங்கிப்போட்டுட்டு, தோட்டந்தோட்டமாப்போயி தென்னமட்ட எடுத்துட்டு வந்து பின்னி வர்ற காச சேத்தி வெச்சு குழுவுல சீட்டு போட்டு நகைய எடுத்து வெச்சிருக்கிறேன். நீ கவலப்படாத சாமி என்ற உசுரு போறதுக்குள்ள ஒன்னம் அஞ்சு பவுனு எடுத்துப்போடறேன். உங்கொப்பன் நகை போடாட்டிக்கெடக்குது நாம் போடறேன்” என பாட்டி பேசியதைக்கேட்டு மகிழ்ந்தாலும் தந்தையின் போக்கு மாறவேண்டுமென கவலை கொண்டாள் சர்மிளா.

கல்லூரி படிப்பு முடிந்து சென்னையில் வேலை கிடைத்ததும், வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அருகிலேயே வீடு பார்த்து கோவையிலிருக்கும் அப்பாவியான தனது தாயை அழைத்துச்சென்று விட்டாள். 

“இது வேற மாதர உலகமா இருக்குது… ஊட்ல கூட்டற வேலைல இருந்து பாத்தரம் கழுவற வேலை வெரைக்கும் மிசினே செஞ்சு போடுது. அப்பறம் எனக்கு இங்க என்ன வேலை….? நா ஊருக்கே போயர்றேன். உங்கப்பங்காரன் சோறில்லாம ஒடம்பக்கெடுத்துக்குவாரு. குடிக்கிறதுக்கு தகுந்த மாதர வகுத்துக்கு நல்ல சோறு இல்லீன்னா கொடலு வெந்து சீக்கிரமே ஒடம்பு கெட்டுப்போகும். என்னை ஊருக்கே கொண்டு போயி உடு சாமி. அப்பறம் நீயும் எத்தன நாளைக்குத்தான் தான் தனியா இருப்பே…? சீக்கிரமா உனக்கும் ஒரு மாப்பிள்ளையப்பார்த்து குடியும், குடித்தனமுமா பொளைக்கிற வழியப்பார்க்கோணும்” என தாய்  சொன்னதைக்கேட்டதும், கட்டிய கணவன் கெட்ட செயலே செய்தாலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது தமிழ் பெண்களின் பெருந்தன்மை என்பதைப்புரிந்து கொண்டவளாய்,  “கல்யாணம் பண்ணி உனக்கு மாதர குடியும், குடித்தனமுமா எனக்கு வேண்டாம்மா. குடித்தனம் மட்டும் போதும்மா” என சிலேடையாக மகள்  சொன்னதைக்கேட்டு வாழ்வில் முதலாகச்சிரித்தாள் சர்மிளாவின் தாய் சரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *