கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 4,564 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

ஜே கே. தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் ஒரு முக்கியமான மனிதரைச் சந்திக்கும் சில நோட்டுகள் கைமாறும் 

முதல் அத்தியாயம் 

ஏதோ ஒரு காலநிலையில் துவங்க வேண்டியிருக்கிறது. எங்கே துவங்கலாம்? துவங்குவது என்ன துவங்குவது? ஆரம்பிப்பது ஆரம்பிப்பதற்கு முன் இந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு ‘ஜனகண்மன பாடினால் என்ன என்கிற ஆசை பிரதானமாக இருக்கிறது செய்யலாமா? 

எழுந்து 

நில்லுங்கள்,

‘ஜன கண மன அதி நாயக…’ 

இருங்கள். உட்காருங்கள் மறுபடி, என்னைப் பற்றி எழுத்தில் சொல்ல வேண்டிய கட்டாயமோ, முக்கியத்துவமோ எதுவும் எனக்கு இல்லை. ஆனால் நான் அவ்வளவு சாதாரணனும் அல்ல எனக்குச் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அவைகளை, நிகழ்ந்த வரிசையைச் சொல்லுகிறேன். நான் அதைச் சொல்லும் விதத்திலிருந்தே என்னைச் சற்று வேறுபட்ட ஆசாமி என்று நீங்கள் ஊகித்திருக்கலாம். நீங்கள் என்று யாரை வைத்துப் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் யார்? நீங்கள்… இப்போது இந்த வரியை, இந்த ‘யை’ யன்னா வைப் படிக்கும் நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? 

ராமமூர்த்தி? 

பெர்னாண்டஸ்? 

கலா? 

சரஸ்வதி, நளினி, வசந்தி, கிருஷ்ணசாமி, ஸாலமன் ராஜ், ஜெஸ்ஸிலா, ஸையத்? 

நீங்கள் ஏன் இந்தப் பத்திரிகையை எடுத்து இந்தப் பக்கத்தைப் படிக்கிறீர்கள் ? எந்தச் சூழ்நிலையில் படிக்கிறீர்கள்? உங்கள் சரித்திரம்என்ன? நீங்கள் கவலைப்பட்டது உண்டா? மணலில் நடந்ததுண்டா? என்னைப் போல் கையில் உள்ள மோதிரத்தை விற்று ‘டாஸ்டாயவ்ஸ்கி’யின் ‘கரமஸாவ்’ புத்தகத்தை வாங்கிப் படித்திருக்கிறீர்களா?  என்னைப் போல் விமானத்தை ஓட்டியிருக்கிறீர்களா? என்னைப் போல விபத்தில் உருண்டு, மூன்று நாள் நினைவற்று படுத்திருக்கிறீர்களா? என்னைப் போல அடிபட்டிருக்கிறீர்களா? அடித்திருக்கிறீர்களா? நம்பிய துண்டா? 

சொல்லுங்களேன். 

நீங்கள் தனிப்பட்டவர்தான். புத்தகம் படிப்பவர்கள் தனிப்பட்டவர் கள்தான். நான் ஏதோ இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்பதற்கு உங்களுக்கு ஐஸ் வைப்பதாக நினைத்துக்கொள்ள வேண் டாம். நாம் எல்லோரும் தனிப்படத்தான் தவம் கிடக்கிறோம். பிரபல மெய்தும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ‘கூட்டத்தில் ஒருவன் இல்லை நான், நான் சற்று வேறுபட்டவன்.’ என்று பெயர் வாங்கத்தான் எவ்வளவோ அல்லாடுகிறோம். 

பூதலமெல்லாம் அலைந்து
மாதருடனே கலந்து 
பூமிதனில் வேணும் என்று
பொருள் தேடி… 

நான், தேனீக்களின் சுறுசுறுப்புக்குக் காரணம் ஒருநாள் ராணியாக ஆகலாம் என்கிற ஆசைதான் என்று நினைக்கிறேன். நான்கு பேர் பல்லக்கு தூக்குகிறவர்கள் இருந்தால் அதிலும் ஒரு ‘ஸீனியர்’ இருப்பான். இமாலயத்தின் பனிப்படலத்தில் முன்னூறு சோல்ஜர்கள் ஒரே விதமாக உடையணிந்திருந்தால் அதிலும் ஒருவன் ஹார்மோனிக்கா வாசிப்பான். அல்லது கூடாரத்திற்குச் சென்று கைகளைச் சுட வைத்துக்கொண்டு கவிதை எழுதுவான். தனித்தன்மை எய்த நமக்கெல்லோருக்கும் மோகம் இருக்கிறது. நான் என்ற சொல்லே எவ்வளவு தூரம் என்னை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது! நான் நீயல்லடா, முட்டாளே! நான். 

நான் ஏதும் பிரபலத்தை நாடி நயாகராவுக்குக் குறுக்கே கம்பி போட்டு அதன்மேல் நடக்கவில்லை. ஆஸ்வால்ட் போல, கென்னடியைச் சுட்டுவிட்டு, கொட்டை எழுத்துகளில் உலகத்துச் செய்தித் தாள்கள் எங்கும் எரியவில்லை… 

நான் ஜேகே. என்னை ஜேகே என்று கூப்பிடுங்கள் ஒரே வார்த்தை. ஜே தனி, கே தனி இல்லை. ஜேகே. அவ்வளவுதான் என் பெயர். அந்தச் சுருக்கத்தில் ஓர் அன்னியோன்னியமும், அவசரமும் இருக்கிறது அல்லவா? ஜேகே! நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் ஜேகே பைலட் ஸ்டண்ட் நடிகன், காதலன், அடிபட்டவன், அடிப்பவன், எல்லாவற்றையும் ஒருமுறை பதம் பார்த்தவன் (நீங்கள் நினைப்பது உட்பட), அழாதவன், அனாதை, திகட்டத்திகட்டச் சந்தோஷம் கொண்டவன், அந்தந்த கணங்களில் வாழ்பவன், முட்டாள், கெட்டிக்காரன், எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கையோ, கவலையோ இல்லாதவன், கல்யாணமாகாதவன் ஜேகே. 

என்னைப் பின்பற்றாதீர்கள். என்னைப் படியுங்கள். பை ஆல் மீன்ஸ் கோ அஹெட் ஆனால் என்னைப் பின்பற்ற வேண்டாம். என்னைப் படிப்பதால் ஏதோ பிரயோசனத்தையோ, வாழ்க்கையை அமைக்க உபதேசத்தையோ, உபதேச ரத்தின மாலையையோ எதிர்பார்க்காதீர்கள். நான் எழுதுவது திருக்குறள் இல்லை. நான் பார்த்த ஜனங்கள் ஞானிகள் இல்லை. எனக்கு நிகழ்ந்த விஷயங்கள் நல்ல விஷயங்கள் இல்லை. 

எனவே, இந்தக் கதையில் நீதி தேடுகிறவர்களுக்குச் சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன், விலகுவதற்கு.

மூன்று நிமிஷம்.

மற்றவர்கள் மேலே படிக்கலாம்! 


காலை நேரம். சாதாரணமான காலை நேரம். டில்லியில் நான் அப்போது இருந்தேன். இப்போது அங்கில்லை. அப்போது என்பாட் டுக்கு என் வேலையைக் கவனித்துக்கொண்டு, ஒருவரையும் வம்புக் கிழுக்காமல், டிரான்ஸிஸ்டரில் நிக்ஸோடர்ம் விளம்பரத்தைக் கேட்டுக் கொண்டு, எதையோ படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

அப்போது ஆரம்பித்தது வினை. 

அதற்குமுன் என் சொந்த விவரங்கள் இன்னும் கொஞ்சம். சலித்துக் கொள்கிறீர்களா? போர் அடிக்கிறதா? சுறுசுறுப்பான ஸார்? அப்படி என்றால் மறுபடியும் டயம் கொடுக்கிறேன். படிக்காதீர்கள். வேண்டாம். ‘விட்டுவிடுங்கள்.’ க்விட்! 

ஹலோ, இன்னும் என்னிடம் பிடிவாதமாக இருக்கிறவரே! நீர் என் நண்பர்! அல்லது நீ என் சிநேகிதி. வா என் உலகத்துக்கு. உன்னை எனக்குப் பிடிக்கிறது: சமயம் வரும்போது உன்னை ஏரோப்ளேனில் அழைத்துச் செல்கிறேன்! வருகிறாயா? 

எங்கே இருந்தேன்? அ… சுய விளம்பரங்கள். 

நான் ஒரு விமானி. விமானி என்றால் உடனே ஜம்போ ஜெட், ராஜஸ்தான் உடையில் பணிப்பெண்கள், ஷாம்பேன் பி ஃபார்ம், ‘யுர் அடென்ஷன் ப்ளீஸ்’, அவினாஷ் ராஜேஷ், தேவி என்று கற்பனை செய்ய வேண்டாம்! நான் ஓட்டும் விமானம் ஒரு சின்ன விமானம். அதன் இறக்கையில் மருந்தடிக்கக்கூடிய சாதனங்கள் மெல்லிய குழாய் வடிவத்தில் இருக்கும். இரண்டுபேர் உட்காரலாம். மருந்து டாங்க் பின்னால் இருக்கும். டில்லி, பஞ்சாப், உத்திரப்பிரதேசங்களில் கோதுமை, கரும்பு, நெல் வயல்களுக்குப் பூச்சி மருந்து அடிக்கும் விமானம். ஸஃப்தர்ஜங் விமான நிலையத்திலிருந்து கிளம்பி 1,500 அடியில் பறந்து சிவப்பு முண்டாசுடன் அடையாளத்துக்கு நிற்கும் விவசாயிகளை நோக்கி, 

வி ர் ர் ர் ர் ர் ர் ர் ர் டு ம்… 

என்று இயங்கி 50 அடியில் பறந்து, மருந்தைச் சிதற அடித்து விட்டு, மறுபடி ஏறி, மறுபடி இறங்கி நூறு அடி தள்ளி, மறுபடி மூன்று வரிகளுக்கு முன் சேர்த்துக்கொள்ளவும். 

பேஜாரான வேலை. பிழைப்புக்கு எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். நிறைய பணம் செலவழித்து லைசென்ஸ் எடுத்தபோது, இரண்டாயிரம் சம்பளமும், தினத்துக்கு ஒரு மணிநேரம் வேலையும் தான் கனாக் கண்டேன் தோழி நான். பாழாய்ப் போகிற அரசாங்கம் எங்கேயோ ஒரு சைபர் சேர்த்துத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டு ஏகப்பட்ட பைலட்டுகளுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டுக் கடைசியில் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் மிஞ்சிவிட்டவர்களில் ஒருவன் ஆகிவிட்டேன். நானாவது பரவாயில்லை. என் சக பைலட் ஒருவன் பெட்ரோல் பங்கில் “எத்தனை லிட்டர் ஸார்?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறான். நான்? என்னைப் பின் பாகத்தில் தூக்கிவிட மந்திரிகளோ, எம்.பி.க்களோ, இல்லை. கடைசியில் பிளாண்ட் ப்ரொடக்ஷன் டைரக்டரேட் என்ற ஒரு மத்திய சர்க்கார் டிபார்ட்மெண்டில் காண்ட்ராக்ட் பைலட் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதிலும் எத்தனையோ கஷ்டப்பட்டு, எத்தனையோ வாசலில் நின்று, எத்தனையோ சிரித்துவிட்டுத்தான் கிடைத்தது ஓட்டை விமானம். நானே சகலமும். பைலட், இன்ஜினியர், ரேடியோ மெக்கானிக் எல்லாம். ஆனால் அதிலும் த்ரில் இல்லாமல் இல்லை. என்னுடன் ஒரு தடவை வந்து பார். மன்னிக்கவும் வந்து பாருங்கள். தந்திக் கம்பத்தில் குந்தி இருக்கும் குருவிகளைச் சிதற அடித்துப் பறந்து பாருங்கள். இந்த த்ரில் புரியும். 

எனவே நான் ஒரு குட்டி விமானி. என் அறையில் அந்த ஞாயிற்றுக் கிழமை டிரான்ஸிஸ்டர் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் அனுபவங்கள் தொடங்கின. 


அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்தேன். ஓரு அழகான பெண். மார்பில் ஸாரி நழுவ, உதடுகள் சற்றே திறந்திருக்க, நடுவே பற்கள் அழகாக, வரிசையாக ஒளிர நின்றுகொண்டிருப்பாள் என்று தானே எதிர்பார்த்தேன். தப்பு. ஒரு கிழவர். ஜெயராஜ் கவனிக்கவும். 

கிழவர் உள்ளே நுழைந்ததும் இன்னும் கிழவராகத் தோற்றமளித்தார். அவர் தலை மயிர் கலைந்திருந்தது. கண்ணாடி மூக்கில் சரியாக நிற்கவில்லை. பையில் ஏழெட்டுப் பென்சில்கள் வைத்திருந்தார். விரல்களில் இங்க் கறை படிந்திருந்தது. மூக்கு நுனி சிவந்திருந்தது. அவர் மீசையை எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது.

“குட்மார்னிங்” என்றேன். 

“நீங்கள்தான் பைலட். இல்லையா?”

“ஆம். நான் ஒரு பைலட்.” 

“உங்கள் பெயர்?” 

“ஜேகே.” 

“வெறும் ஜேகே?” 

எல்லோரும் கேட்கும் கேள்வி. 

“வெறும் ஜேகே. கால் மி ஜஸ்ட் ஜேகே! நீங்கள்?” 

“என் பெயர் பரமேஸ்வரன். டாக்டர் பரமேஸ்வரன். நான் ஒரு ஜியாலஜிஸ்ட்.” 

“அப்படியா, சந்தோஷம். உட்காருங்கள்.” 

“ஜியாலஜிஸ்ட் என்றால் என்ன தெரியுமா?” 

“தெரியும்.” 

“என்ன சொல்லுங்கள்”. 

தயக்கத்துக்குப் பின் “நீங்களே சொல்லுங்கள்” என்றேன்.

“எனக்கு நீங்கள் ஒரு வேலை செய்ய வேண்டும்.”

“சொல்லுங்கள்.” 

அவர் சுற்று முற்றும் பார்த்தார். “நாம் தனியாக இருக்கிறோமா?”

“டிரான்ஸிஸ்டர் இருக்கிறது” என்றேன்! 

“நான் சொல்லப்போவது மிக முக்கியமான விஷயம். அருகே வாருங்கள்”. 

“என்ன செய்ய வேண்டும்?” என்றேன். மிகச் சிறிய எழுத்துகளில்.

“உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?” 

“அதைப் பற்றி என்ன உங்களுக்கு?” 

“இல்லை. 2500 ரூபாய் உங்களுக்கு அதிகமான தொகையா, குறைவான தொகையா?”

“சம்பளமா?” 

“இல்லை, ஒருநாள் வேலைக்கு” 

“2500 ரூபாயா?” 

“ஆம்.” 

“விசில் அடிக்கலாமா? 2500 ஒரு ஃப்ளைட்டுக்காகவா? யாரை அழைத்துப் போக வேண்டும்?” 

“யாரையும் வேண்டாம். ஒரு சிறிய சாதனம். அதை உங்கள் விமானத்தில் கொண்டுவர வேண்டும்.”

“என்ன சாதனம்? காமிராவா?” 

“இல்லை. ஒரு ஸிண்டிலேஷன் கௌண்டர்” 

“வெடியா?” 

“சேச்சே. நீங்கள் என்னைத் தப்பாக நினைக்கிறீர்கள். நான் ஓர் ஆராய்ச்சியாளன். நான் செய்திருக்கும் ஆராய்ச்சி இந்தத் தேசத்துக்கு முக்கியமானது. ஆனால் மிஸ்டர் ஜேகே, இதில் கொஞ்சம் இரகசியம் தேவையாக இருக்கிறது”. 

“எங்கிருந்து கொண்டுவர வேண்டும்?”

“மோங்கா” என்றார் பரமேஸ்வரன்.. 

“ஏங்கா?”

“மோங்கா. உத்தரப்பிரதேசத்தில் ஒரு டவுன். நாளை நீங்கள் மருந்து அடிக்க அந்த இடத்திற்கு அருகில் செல்கிறீர்கள் என்பது உங்கள் ஆபீஸ் மூலம் தெரிய வந்தது. மோங்காவில் ஒரு பழைய இரண்டாம் உலக யுத்த காலத்து – விமான நிலையம் இருக்கிறது. உபயோகப்படாத ஸ்ட்ரிப் அது. அதில் நீங்கள் இறங்க வேண்டி இருக்கும். உங்கள் சின்ன விமானத்தில் அது முடியும் என்று நினைக்கிறேன். இறங்கினவுடன் எங்கள் கம்பெனி ஆட்கள் வந்து உங்கள் விமானத்தில் அந்தக் கருவியைப் பொருத்துவார்கள். பொருத்தினவுடன் நீங்கள் கிளம்பி நேராக டெல்லி வந்துவிட வேண்டும். ஸஃப்தர்ஜங் விமான நிலையத்தில் நாங்கள் வந்து அந்த சாதனத்தைக் கழற்றிக் கொண்டு சென்றுவிடுவோம். அவ்வளவுதான் வேலை. 2500 ரூபாய்.”

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் சற்று நேரம்,

“டாக்டர் பரமேஸ்வரன்…”

“மிஸ்டர் ஜேகே..” 

“நான் உங்களைப் பரமேச்சு என்று கூப்பிடலாமா?”

“ஐ பெக் யுர் பார்டன்!” 

“மறவுங்கள் இந்த விவகாரமே எனக்குக் கொஞ்சம் நிழலாகப் படுகிறது?”. 

“ஏன்?”

“நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்கிறீர்களா?”

“வித் பிளஷர் ஜேகே” 

”மோங்கா! அந்த மோங்காவில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்கே என்ன வேலை?” 

‘மோங்கா டவுனில் எங்கள் தொழிற்சாலை இருக்கிறது”

“எங்கள் என்று பன்மையில் பேசுகிறீர்கள். யார் ‘எங்கள்?’?”

“எங்கள் கம்பெனி!” 

“என்ன கம்பெனி?” 

“ஏஸ் எலக்ட்ரானிகஸ். நீங்கள் இதை ரசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்”. 

“அப்புறம் அந்தக் கருவி: அது என்ன பெயர் சொன்னீர்கள்?”

“ஸிண்டிலேஷன் கௌண்டர்”

“அது என்ன செய்யும்?” 

“ஒரு ஸிண்டிலேட்டரின் மேல் அயோளேஸிங் ரேடியேஷன் பட்டால் அதிலிருந்து ஏற்படும் வெளிச்ச ஃப்ளாஷகளை ஃபோட்டோ மல்டிப்ளையர் வைத்துக்கொண்டு எண்ணுகிறது.” 

நான் சிரித்தேன், “பரமேச் ஓல்ட் பாய்! இந்த வேலை வேண்டாம். அது என்ன செய்யும்? மிக எளிய, சுலபமான பாஷையில் இரண்டு வயதுக் குழந்தைக்குக்கூடப் புரியும்படியாகப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.” 

அவர் யோசித்தார். “ரேடியம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியும்!” என்று வாட்சைக் காட்டினேன்.

“அ! அதுபோல, யுரேனியம், தோரியம்… எல்லாம் விலை உயர்ந்த உலோகங்கள். அதைக் கண்டுபிடிக்கிறது இந்தச் சாதனம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.”

“போட்டோ கீட்டோ என்று சொன்னீர்களே?” 

“சேச்சே! நீங்கள் காமிரா என்று நினைக்கிறீர்கள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது ஒரு பெட்டி. ஒரு பென் ரிகார்டர் இருக்கும். அவ்வளவுதான்.” 

“ஏன் கேட்கிறேன் என்றால் நாளைக்கு தான் பறக்கப் போகும் ரூட் நேபால் எல்லைக்கு அருகில் செல்கிறது. சற்று ஜாக்கிரதையாக…”

அவர் வாய்விட்டுச் சிரித்தார். “சேச்சே என்ன இது? நான் சொல்வது ஆராய்ச்சிக் கருவி. நீங்கள் வேறு ஏதோ எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், ரொம்ப சுலபமான வேலை. ஒரு சாதனத்தை விமானத்தில் கொண்டு வரவேண்டும். அவ்வளவே!”

“தென் வொய் ஆல் திஸ் ஹஷ் ஹஷ்?” 

“புரியவில்லை.” 

“ஏன் ரகசியம்? ஏன் இத்தனை பணம்?” 

“ரகசியம்! இது முக்கியமான ஆராய்ச்சி. மற்றப் போட்டிக் கம்பெனிகளுக்கு லீக் ஆகிவிடக் கூடாது. இந்தக் கருவி சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்து பேட்டண்ட் எடுத்துவிட்டால் எங்கள் கம்பெனிக்கு ஏகப்பட்ட லாபம் ஏற்படும்… முக்கிய ஆராய்ச்சி. அதனால் அத்தனை பணம். இந்தக் கருவியை டெவலப் செய்வதற்காக இதுவரை மூன்றரை லட்சம் செலவாகி இருக்கிறது தெரியுமா!”

“மற்றொரு கேள்வி! அதை ரெயிலில் எடுத்து வர முடியாதா? ஜீப்பில் எடுத்துவர முடியாதா?” 

“அதில் பிரயோசனமில்லை. இந்தக் கருவி ‘ஏரியல் சர்வே’க்கான கருவி விமானத்தில் கொண்டு வருவதன் மூலம் மிகப் பெரிய பரப்பை கவர் செய்யலாம். ஒரே ஓட்டில் கண்டுபிடித்து விடலாம். புரிகிறதா?” 

“புரியவில்லை. ஆனால் 2500 ரூபாய் புரிகிறது”. 

“முன் பணம் தேவையா?” என்று தன் பைக்குள் கைவிட்டுக் சில புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தார். “இந்த ஆராய்ச்சியினால் நம் நாட்டுக்கு மிகுந்த நன்மை விளையப் போகிறது, உங்களுக்கு தேசபக்தி இல்லையா?”. அவருடன் நானும் ஆயிரம் வரை எண்ணினேன். 

“என்ன செய்ய வேண்டும் – மூன்று தடவை ‘ஜெய் ஹிந்த்’ சொல்ல வேண்டுமா?”

“வேடிக்கையாகப் பேசுகிறீர்கள்” என்று சிரிக்காமல் நூறு ரூபாய் நோட்டுகளை என்னிடம் நீட்டி, “ஆயிரம் ரூபாய் இருக்கிறது. நாளைக்கு நீங்கள் மருந்து அடிக்கச் செல்லும்போது மோங்காவில் ஒரு தடவை இறங்குங்கள் – ஏஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற கம்பெனி ஜீப் தயாராக நிற்கும். அவர்கள் உங்களிடம் ‘கௌண்டரை’க் கொடுப்பார்கள். அதை எப்படி இயக்குவது என்று சொல்லித் தருவார்கள். ஸஃப்தர்ஜங்கில் வந்து இறங்கினதும், எனக்குப் பெட்டி கிடைத்ததும், பாக்கிப் பணம். சம்மதமா?”

“சம்மதம்” என்று வாங்கிக்கொண்டேன். 

“உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. குட் டே! வருகிறேன்!”

ஏற்றுக்கொண்டுவிட்டேன். ‘மணிக்கொடி’ காலத்து எழுத்தாளர்கள் கதைகளில் விதி சிரிக்குமே; அதுபோல, அப்போது என் அறையில் அலமாரி ஓரத்தில் ஹேர் ஆயில் பாட்டில் அருகில் விதி சின்னதாக உட்கார்ந்திருந்தால் சிரித்திருக்கும் –

மூன்று தினங்களில் நான் கைதாகப் போவதை நினைத்து.

ஜேகே ன் விமானத்தில் உங்களை அழைத்துச் செல்லும்

இரண்டாம் அத்தியாயம் 

திங்கட்கிழமை காலை எப்பொழுதும் போலப் புலர்ந்தது. சூரியன் எப்பொழுதும்போல எழுந்தான. வேலையில்லாத இளைஞர்கள் எப்பொழுதும் போல க்யூக்களில் நிற்கத் தயாரானார்கள். க்றிஸ்டல் துல்லியமான காலை. காற்றில் ஒரு ‘சில்’ இருந்தது. ஆகாயம் மேகமற்ற வெண்ணீல மேலாக்கு. 

நான் ஸஃப்தர்ஜங் சென்றேன். ஸஃபதர்ஜங் விமான நிலையத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கிறவர்கள் அடுத்த பாராவுக்குச் செல்லவும். பார்க்காதவர்கள் கேட்கவும். ஒரு காலத்தில் இந்த விமான நிலையம் செல்வாக்காக இருந்தது. அப்பொழுது எல்லாம் விமானங்கள் இவ்வளவு பெரிதாக இல்லை. ஏதோ ஒரு டக்கோட்டா, இன்னொரு டக்கோட்டா, சின்னச் சின்ன பயிற்சி விமானங்கள் என்று பயந்து பறந்துகொண்டிருந்தன. நிலையம் டில்லி நகரின் வயிற்றில் இருக்கிறது. சுற்றிலும் ‘சிக்’கென்று வீடுகள். நடுவே ஒரு பச்சை பேஸின் போல நிலையம். இதை மூடுவதற்குப் பலபேர் உற்சாகமாக இருக்கிறார்கள். ஏனென்றால் பாஸஞ்சர் விமானப் போக்குவரத்து முழுவதும் பாலம் விமான நிலையத்திற்குச் சென்று விட்டது. இங்கே பறப்பது ஒரு சில பயிற்சி விமானங்களும், இன்னொரு சில க்ளைடர்களும், என்னைப் போன்ற உபரி பைலட்டுகளின் அழுக்கு விமானங்களுமே. எனவே விமான நிலையக் கட்டடமும் சற்று சிதிலமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஒரே ஒரு புக் ஷாப் இருக்கிறது. அதில் கடைசியாக 1954ஆம் வருடத்து ‘வீக்லி’யும் சில கந்தல் நாவல்களும் கிடைக்கும். அதாவது கடை திறந்தால் ரெஸ்டாரெண்டுக்கு உள்ளே போனால் உம்மேல் ஒட்டடை படிவதற்குள் வெய்ட்டர் வந்தால் அன்று உம் அதிர்ஷ்ட தினம்… மாடியில் கொஞ்சம் சலசலப்பு இருக்கும். அதிகாரிகளும், சாதனங்களும் நிரம்பி இருக்கும். ஏனென்றால் இது டில்லி ஏரியாவுக்கு கண்ட்ரோல் சென்ட்டர். 

மாடிக்குச் சென்று என்னுடைய ஃப்ளைட் ப்ளானை நிரப்பினேன்… டிஃராபிக் கண்ட்ரோல் ஆபீஸர் என்னைப் பார்த்து சிரித்தார். “தினம் போலத்தானே?” என்றார். 

“ஆம்” என்றேன், சற்று தயக்கத்துடன். 

தினம் போல நான் பறக்கப் போவதில்லை. இன்று மோங்காவில் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் சொன்னால் சத்தியமாக க்ளியரன்ஸ் கிடையாது. சொல்லவில்லை. எனக்குக் கொடுத்திருப்பது வயல்களில் மருந்தடிக்க ஒரு பொதுவான கிளியரன்ஸ். பாதையை விட்டுச் சற்று விலகினால்கூட, ரேடியோ மூலம் கூப்பிட்டு ஏர் ஃபோர்ஸ்காரர்கள் அதட்டுவார்கள். ஹிண்டன் பக்கம் போனால் மிக் (எம்.ஐ.ஜி.) விமானங்கள் மூக்கருகே கோபமாகச் சீய்த்துக்கொண்டு செல்லும்.. 

“காப்டன்” என்றார் அவர் அன்பாக.

என்னை காப்டன் என்று கூப்பிட்டதில் எனக்குச் சந்தோஷம். “எஸ்!” என்றேன் காதலுடன். 

“என்னை ஒரு நாள் ஜாய் ரைட் அழைத்துக்கொண்டு போகிறீர்களா?”

“இப்பொழுதே வாருங்களேன்…” வரமாட்டார், தெரியும்.

“இப்பொழுதா! நான் டியூட்டியில் இருக்கிறேனே!” என்றார் ஏமாற்றத்துடன். 

“ஸம் அதர் டைம். நான்தான் தினம் போகிறேனே! அந்தப் பெண் யார்?” 

“அவள் ஒரு டெலிபிரிண்டர் ஆப்பரேட்டர்.”

“திரும்பிப் பார்க்காமலேயே சொல்கிறீர்கள்.”

“அவள் ஒருத்திதான் இங்கே அழகான பெண்.”

“ஓ, ஆ!” என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். 

“கன் யூ ஆஸ்க் ஹர் இஃப் ஷி வாண்ட்ஸ் ஏ ஜாய் ரைட்?”

“அவளும் ட்யூட்டியில் இருக்கிறாள். ஸம் அதர் டைம்” என்று சிரித்தார். 

ப்ளடி கான்ஸ்பிரேட்டர். 

அங்கிருந்து வானிலை ஆசாமியைப் போய்ப் பார்த்தேன். அவர் நான் பறக்கப் போகும் ரூட் முழுவதும் வரைபடத்தில் சுழித்துச் சுழித்துக் கலர்ப் பென்ஸிலால் எழுதி இவ்விடத்தில் இடி, மின்னல், மழை இருக்கக்கூடும் என்று சுட்டுவிரலால் கண்ணாடி அணிந்த வருண பகவான் போலக் காட்டினார். “அப்படியா” என்றேன், சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு. “தாங்க்ஸ்” என்றேன். சந்தோஷத்தோடு வெளிவந்தேன். செத்தாலும் மழை பெய்யாது. 

ஜாக்கெட்டை அணிந்துகொண்டேன். ரெஸ்டாரெண்டுக்குள் சென்று தென்பட்ட வெய்ட்டரை சட்டென்று பிடித்துக்கொண்டு இரண்டு முட்டை ஆம்லேட்டும் ஓரிரண்டு ஸ்லைஸ்களும் காப்பியும் ஆர்டர் செய்தேன். அவன் கோழியைத் தேடி உள்ளே சென்றான். நான் யோசித்தேன். என் பையில் அந்த நூறு ரூபாய் நோட்டுகள் மடங்கிப் பதிந்து இருந்தன. ஏற்கெனவே அதில் 160 காலி. ரம்மி. பாயிண்டுக்கு ஒரு ரூபாய். கட்டு முழுக்க ஜோக்கர். ஒன்பது பேர் ஆடுவார்கள். ஸ்கூட் பண்ணக்கூடச் சந்தர்ப்பம் வராது. எடுப்பான், டிக் பண்ணுவான், ஜப்பானிய விசிறி போல விரித்துப் பணத்தைக் கறந்துவிடுவார்கள். 

என்ன சொல்ல வந்தேன்? ரம்மியில் 160 விட்டேனா? பாக்கி 840-இல் ஒரு சில பனியன்களும் ஒரு பேனாக் கத்தியும் வாங்கிக் கொண்டேன். அப்புறம் நாற்பத்து ஆறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம் ஒரு பார்ட்டியைத் தேடிப் போகலாமா என்று யோசித்து, சமீபத்தில் வரப்போகும் எனது மெடிக்கலை ஞாபகத்தில் இருத்திக் கொண்டு மிக நல்ல பிள்ளையாக ரூமிலே புத்தகம் படித்துக் கொண்டிருந்து விட்டேன். 

ஆம்லேட் வந்தது… ஸாஸைச் சேர்த்துக்கொண்டு ஸ்லைஸைக் கடித்துக்கொண்டு முள் குத்தி அதை விழுங்கினேன். நல்ல பசி! இல்லாவிட்டால் இந்த மாதிரி ஆம்லெட்டைச் சாப்பிடுகிற ஜாதியா நான்? 

வெயிட்டரைக் கூப்பிட்டேன். “என்ன எண்ணெய்யப்பா உபயோகப்படுத்துகிறீர்கள்? ஏரோப்ளைன் எண்ணெயா?”

“இல்லை ஸார். சுத்தமான நெய்!” என்றான். 

“சுத்தமான பொய்” என்று சொல்லிவிட்டு ரூபாய் நோட்டு, சில்லறையை விசிறிவிட்டுக் கிளம்பி நடந்தேன். 

எஸ்ஸோ ஆளிடம் அப்பா தாயே பெட்ரோல் அனுப்பு என்று கெஞ்சிவிட்டு – சர்க்கார் துறை அல்லவா – என் விமானத்தை நோக்கிச் சென்றேன். 

“குட்மார்னிங் சார்லி!” என்றேன். 

சார்லி பதில் சொல்லவில்லை. சார்லி என் விமானத்தின் பெயர்.


தேகப் பயிற்சிபோல் கைகளை வைத்துக்கொள்ளுங்கள். சற்று மண்டி போட்டுக் கொண்டு மூக்கை 45 டிகிரி மேல் நோக்கி உயர்த்துங்கள். அப்படியே இருங்கள்… நீங்கள் என் சார்லி போல் இருப்பீர்கள். வாத்ஸ்யாயனரின் காதலனுக்குத் தன் காதலியின் ஒவ்வொரு அங்கமும் பரிச்சயமாம். அதுபோல எனக்குச் சார்லி பரிச்சயம். 

சார்லியின் அன்றைய ஆரோக்கியத்தை ஆராயத் தொடங்கினேன். கௌலிங்ஸை விலக்கி எல்லாப் பாகங்களும் அதனதன் இடத்தில் இருக்கிறதா என்று பார்த்தேன். மூஞ்சியில் உள்ள ப்ரொபெல்லர், கையால் சுற்றி வியர்த்தேன். சார்லி ‘கள்க் கள்க்’ என்று சொல்ல, யாவும் நலம் என்று தெரிந்துகொண்டு இஞ்ஜினீயர் மேனனைத் தேடிச் சென்றேன். டெய்லி இன்ஸ்பெக்ஷன் சர்ட்டிபிகேட்டை அவர் கையெழுத்திட வேண்டும்.

மேனன் ஒரு பிரிக்கப்பட்ட டக்கோட்டா என்ஜினின் அடியில் படுத்திருந்தார். அழுக்காக வெளிவந்தார். 

“ஹலோ ஜேகே!” 

“ஹலோ”. 

“எந்தப் பக்கம்?”

“உத்தர் பிரதேஷ்”. 

“க்ராப் ஸ்ப்ரேயிங்.” 

“ஆம்.” 

“நான் உனக்கு மெக்ஸிகோ தேசத்து வண்ணாத்தியின் ஜோக் சொன்னேனா?”

“சொல்லிவிட்டீர்கள். கையெழுத்துப் போடுகிறீர்களா?”

“எல்லா செக்கும் ஆகிவிட்டதா?”

“ஆம்.” 

“நான் வந்து பார்க்க வேண்டுமா?”

“விருப்பமிருந்தால் பார்க்கலாம்.”

“ஜேகே! யூ ஸன் ஆஃப் எ கன். ஐ பிலிவ் யூ!” 

“தாங்க்ஸ்.” 

கையெழுத்தை வாங்கிக்கொண்டு சக்கரங்களின் கீழ்க் கட்டைகளை நகர்த்திவிட்டு, ஓர் ஆளை உதவிக்கு அழைத்து விமானத்தை வெளியே கொண்டு வந்ததும், எஸ்ஸோ ஆசாமி சின்ன வண்டியுடன் வந்தான். சூயிங்கம் கடித்துக்கொண்டே ஹோஸை இழுத்து இணைத்துப் பெட்ரோல் நிரப்பினான். நான் காத்திருந்தேன்.

8.30க்கு விமானத்தைக் கிளப்பி ரன் அப் பார்த்துவிட்டு அப்படியே ரன்வேயை நோக்கிச் செலுத்தினேன். ரேடியோவைத் தட்டிவிட்டு ஸஃப்தர்ஜங்குடன் பேசி அனுமதி வாங்கிக் கொண்டேன். ரன்வேயின் முகப்பின் அருகில் நிறுத்தி ப்ரேக் போட்டு சார்லியை அலற வைத்தேன்… 

8.42க்கு ரன்வேயில் நுழைந்து கிளப்பி வேகம் பிடித்து மிக வேகமாக 1000 அடிக்கு எவ்வினேன். பாகிஸ்தான் எம்பஸி கட்டடத்தின் நீலக்கோளத்தின் மேல் சாய்ந்து பறந்தேன். கீழே சாணக்யபுரியில் ஒரு நவீன வீட்டின் பின்புறத்தில் ஒரு நீச்சல் குளம்; நீல நீண்ட சதுரமாக ஸ்டாம்பு போலத் தெரிந்தது. அருகே ஒரு பெண்ணுடல் பளபளத்தது. உயரத்தைக் குறைத்து டைவ் அடிக்கலாமா என்று யோசித்தேன். ஜேகே உனக்கு நல்லதல்ல! வேண்டாம் வம்பு.

ரேடியோ டெலிபோன் கரகரத்தது. அதில் சிக்கனமாகப் பேசிவிட் இடது பக்கம் ஒதுங்கி விலகினேன். 

எத்தனை சின்ன ஜனங்கள்! என் கையின் ஒரு சாண் இடைவெளியில் எத்தனை ஆதர்சங்கள்… நம்பிக்கைகள்… ஆசைகள்… பஸ் பிரயாணங்கள், படுக்கைகள்… பலாத்காரங்கள், இனிமையான கணங்கள். 

சார்லி எனக்கு அத்துப்படியான விமானம். சொன்னபடி போகும். திடீர் என்று இரும ஆரம்பித்தால் த்ராட்டிலை ஒரு தடவை பின் வாங்கி முன்னுக்குத் தள்ளினால் சரியாகிவிடும். ஆர்.பி.எம். முள் திடீரென்று சில வேளைகளில் நடுங்கிச் சாமியாடும். பயப்படக்கூடாது. முள்ளில்தான் கோளாறு. ஆர்.பி.எம்.மில் இல்லை. காம்ப்பஸ்ஸில் கொஞ்சம் தப்புகள் உள்ளன. ஆனால் காம்பஸ்ஸை யார் கவனிக்கிறார்கள். எனக்கு வரைபடம் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். பிரதேசத்தில் பறந்து பறந்து என் கைரேகைகளை விட அன்னியோன்னியமாக அந்த ஏரியா எனக்கு அத்துப்படி…

“சார்லி நாம் இன்று மோங்காவில் இறங்கப் போகிறோம்” என்றேன். நான் மிகத் தனிமையானவன். எனக்கு என் விமானத்துடன் பேசியாக வேண்டும். இல்லையென்றால் தனியாக மணிக்கணக்கில் பறந்து கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். சார்லியுடன் பேசிக்கொண்டே இருப்பேன். சார்லி கேட்டுக் கொண்டே இருக்கும். சார்லியை நான் இரு கைகளுக்கும் இறக்கை பொருத்திய என் எளிய சக்திக்குப் பூமி ஈர்ப்பை மீறும் அபார, அபாய சக்தி தந்த என்னுடைய உடம்பின் ஒரு நீட்டலாகத்தான் கருதினேன். குட் ஓல்ட் சார்லி…


வடகிழக்காகப் பறந்து கங்கைக் கால்வாயைக் கடந்ததும், மரங்கள் அடர்ந்து தார் நரம்புபோல் ஓடும் ட்ரங்க் ரோடைப் பிடித்துக்கொண்டேன். நகரங்கள் சிறிய தேனீக்கூடுகள். கிராமங்கள் சிறிய குப்பல்கள். நதிகள் வெள்ளி ஜரிகையிட்ட அழுக்குக் கோடுகள். வயல்கள் பச்சைச் சதுரங்கள். அப்புறம் எல்லாவற்றையும் மீறிய மகா சத்தியமாக நீல வானம். நீல நீல வானம். 

வயல் வந்துவிட்டது. பின்னால் இருக்கும் டாங்க்கின் வால்வைத் திறந்தேன். பச்சைக் கதிர்கள் எனக்கு வரவேற்பாகக் காற்றில் ஆடின. வேடிக்கை பார்க்க நிறைய சிறுவர்களும், கைத்தடிமேல் கழுத்தை ஊன்றின பெரியவர்களும் ஓரமாக நின்றிருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு தினசரிப் புதுமை. நூற்றுக்கணக்கான வருடங்களாக மாறாத முறைகளை இன்றைய நாகரிகம் அவசரமாக மாற்ற நினைக்கும் வானப்படை எடுப்பு. ஃப்ரண்ட் பானலில் இருக்கும் குமிழைத் திறந்தேன். வெண்மேகமாக மருந்து என் இறக்கைகளிடமிருந்து வீசிப் பரவியது. வேலை செய்கிறது. மூடிவிட்டேன். 

கைகளைத் தேய்த்துக்கொண்டேன். மரங்கள் – அவைகளைத் தவிர்க்க வேண்டும். டெலிபோன் கம்பங்கள் – அவைகளைத் தவிர்க்க வேண்டும். தூரத்தில் உச்ச வோல்ட் மின்சார டவர்கள் – அவைகளைக் தவிர்க்க வேண்டும். அதேசமயம் வயல்களின் மேல் தாழ்வாகப் பறக்க வேண்டும். அதேசமயம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் உடனே இறங்க சமதளம் பார்த்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் சிக்கலான வேலை என்று சொன்னால் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குக் கொடுக்கும் சம்பளம் எம்மாத்திரம் என்றால்கூட ஆமாம் போடுவீர்கள் என நம்புகிறேன். தினம் அறுவடை சீசனுக்காக முன் இதே வேலை மிஸ்டர் ராமஸ்வாமி, அல்லது கிருஷ்ணசாமி! பச்சைப் புரட்சி என்று பேப்பரில் பிரபலமாக அடிபடுகிறதே, என் போன்றவர்களைப் பற்றி ஒரு வார்த்தை?

த்ராட்டிலைக் குறைத்து சரிந்தேன். இறக்கைகளைச் சாய்த்துக் கொண்டு திரும்பி மேலும் இறங்கினேன். சம உயரத்தில் வயல்களை நோக்கி விரைந்தேன். 

ஆனால் அந்த கணத்துக்காக, அவ்வளவு தாழ்வாக எதிரே அவ்வளவு வேகத்தில் குடிசைகளும், கிணறுகளும் விரைய மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கிலியில் கன்னா பின்னா என்று ஓட, மருந்துத் தோகை விரித்த அரசன் போல் அந்தப் பிரதேசம் முழுவதும் ஆச்சரியத்தை இறைத்துப் பறக்கும் இந்தக் கணத்துக்காக நான் சம்பளம் இல்லாமல் உழைக்கத் தயார். தினம் தினம் இதேதான் செய்கிறேன். இருந்தும் ஒவ்வொரு தடவையும் அந்தக் கடைசி டைவில் என் இதயம் புதிதாகப் பிறக்கிறது. என் ரத்தம் சுத்தம் அடைகிறது. ஒரு பெண்ணில்கூட இந்த த்ரில் இல்லை ராஜா!

மருந்து வேலை முடிந்ததும் மறுபடி உயரம் பிடித்துக் கொண்டு லெவல் செய்துகொண்டு வடக்குப்புறமாகத் திரும்பினேன். டாக்டர் பரமேச்வரன் கொடுத்த நூறு ரூபாய் நோட்டுகள் நினைவுக்கு வர, மோங்கா! ஹியர் ஐ கம்! 

மோங்கா டவுன் எல்லா உத்தரப்பிரதேசத்து டவுன்கள் ஏரோப்பிளைனில் இருந்து தெரிவதுபோல் தான் இருந்தது. கறுப்புக்கோடு ரயில்வே லைன். புளியங்கொட்டைகளை இறைத்தாற்போல வீடுகள். கன்னா பின்னா என்று பச்சை, பழுப்பு சதுரங்கள் வயல்கள்.

டவுனிலிருந்து விலகித் தனியாக அந்த சிதிலமான விமான நிலையத்தின் ரன்வேக்கள் இரண்டு ப்ளஸ் வடிவத்தில் தெரிந்தன. சில வெள்ளைப் புள்ளிகள் – பசுமாடுகள் தெரிந்தன. ஒரு சிறிய பச்சை மூட்டைப் பூச்சி தெரிந்தது – கார். காற்று எப்படி வீசுகிறது என்று மரங்களைக் கொண்டு குத்துமதிப்பாகக் கவனித்துக்கொண்டேன். காற்றுக்கு எதிர்த்திசையில் அணுகுவதற்கு ஏற்ப ஒரு ரன்வேயைப் பார்த்து வைத்துக்கொண்டேன். அந்த ரன்வேயின் நடுவில் கறையாக இருந்தது. அது பள்ளமாக இருக்கலாம். என் திட்டத்தில் ரன்வேயின் நீளம் 4000 அடி இருக்கலாம். அதில் 2000 அடிதான் எனக்குக் கிடைக்கும், போதும். 

எதற்கும் ஒரு ரன் அடித்துப் பார்க்கலாம். அந்தக் காரில் காத்திருக்கும் நண்பர்களுக்கும் சற்று இதயத்துடிப்பை அதிகப்படுத்தலாமே! 

மிகத் தாழ்வாக அந்த ரன்வேயின் மீது பறந்து அந்தக் காருக்கருகே வந்ததும் – குப்பென்று – மேலேறித் திரும்பினேன் 

இரண்டு பேர் தத்தம் சட்டைப்பைகளின் மேல் கையை அழுத்திக் ஓடினார்கள். 

சிரித்துக்கொண்டேன். ரன்வே பரவாயில்லை. அதிகம் கரடு முரடாக இல்லை. யுத்த காலத்துத் தார் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது. அடுத்த தடவை நல்ல பிள்ளையாய் இறங்கினேன். தத்தித் தத்தி ஊர்ந்து நிறுத்தினேன். இன்ஜினை அணைத்தேன். விமானத்துக்கு வெளியே வந்தேன். 

அந்த இரண்டு பேரும் காத்திருந்த காரிலிருந்து ஆளுக்கொரு பக்கமாக ஒரு சாதனத்தைப் பிடித்துக்கொண்டு என்னை நோக்கி சைட் வாங்கிக் கொண்டு நடந்து வந்தார்கள். நான் அவர்களை நோக்கி நடந்தேன். 

“குட் மார்னிங்” என்றார்கள் 

“குட் ஆஃப்டர்நூன்” என்றேன். கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு. 

“டில்லியிலிருந்து வருகிறீர்களா?” என்றான் ஒருவன். அவன் தொளதொளப்பாக எப்பொழுதும் உடைந்துவிடுவான் போலிருந்தான். அவன் கழுத்தின் ரஸகுல்லா பேசும் பொழுது மேலே சென்றுவிட்டுத் திரும்பியது. 

“தீப்பெட்டி இருக்கிறதா?” என்றேன். எடுத்துக் கொடுத்தான்.

“இதை எங்கே வைக்க?” என்றான் மற்றவன். 

அவனுக்கு இருபத்து ஐந்து வயது இருக்கலாம். அடர்த்தியான புருவமும் பூனைக் கண்களும் ஆக இருந்தான். சற்று செம்பட்டையாகத் துண்டுமீசை வைத்திருந்தான். கொண்டுவந்த அயர்வில் வியர்த்திருந்தான். 

அவர்கள் கொண்டுவந்திருந்த அந்த மிஷின் ஒரு மூணடிக்கு இரண்டடிப் பெட்டிபோல இருந்தது. அதன் முகப்பில் ஒரு சார்ட் இருந்தது. சில குமிழ்கள் தென்பட்டன. சார்ட்டில் சிவப்பு சிவப்பாக மெலியதாக, ஒழுங்காக, கோடுகள் தெரிந்தன. சார்ட்டின் மேல் ஒரு முள் துடித்துக்கொண்டிருந்தது. அவர்கள் தூக்கும் அதிர்ச்சியில் அந்த முள் துடிதுடித்துக் கோடுகள் இழுத்துக்கொண்டிருந்தது. 


நான் விமானத்தின் கதவைத் திறந்து அதைப் பைலட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் வைக்கச் சொன்னேன். அவர்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் அதை உட்கார வைத்தார்கள். வைத்ததும் ஒல்லி அதனடியிலிருந்து ஒரு சாவியை எடுத்து கிராமபோனுக்குச் சாவி கொடுப்பது போலக் கொடுத்தான். நான் சிகரெட் புகைத்துக்கொண்டே அசிரத்தையாகப் பார்த்தேன். 

“இங்கே சற்று வாருங்கள்” என்றான். 

“என்ன?” என்றேன் இடத்தைவிட்டு நகராமல்.

“இதில் ‘ஆன்’ என்று எழுதியிருக்கிறதே ஸ்விட்ச், அதை நீங்கள் மேலே ஏறியதும் தட்டிவிட வேண்டும்.” 

“சரி சரி” என்றேன். “உன் பெயர் என்ன?” என்றேன்.

“வர்மா.” 

“வர்மா! வாட் இஸ் ஆல் திஸ்?”

“என்ன?” 

“இந்த மிஷின், இந்த ஸ்விட்ச், இந்த மாதிரி உபயோகமில்லாத ஸ்ட்ரிப்பில் நான் இறங்குவது… இதை டில்லிக்கு எடுத்துச் செல்வது…”

“எனக்குத் தெரியாது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை இந்த விமானத்தில் இதைக் கொண்டு வைப்பதே!”

“யார் வைக்கச் சொன்னார்கள்?” 

“கம்பெனியார்”. 

“என்ன கம்பெனி?” 

“ஏஸ் எலெக்ட்ரானிக்ஸ்.’ 

“எங்கே இருக்கிறது?”

“இங்கிருந்து எட்டு மைலில்.” 

“அங்கே என்ன செய்கிறார்கள்?”

“கருவிகள்”. 

“வர்மா! அதிகம் பேசாதே! உன் வேலை முடிந்துவிட்டது வா!” என்றான் மற்றொருவன். 

“வெயிட் எ மினிட்” என்றேன். “இதில் ஏதும் வெடிமருந்து இல்லை என்று எப்படி நான் நிச்சயமாக இருக்க முடியும்?”

அவன் சிரித்துவிட்டு விலகிக்கொண்டான். 

நான் சற்றுநேரம் யோசித்தேன். பார்த்துதான் விடலாமே… மறுபடி விமானத்தில் ஏறிக்கொண்டேன். கிளம்பினேன். பக்கத்தில் அந்தக் கருவி மெலிதாக வரைந்து கொண்டிருந்தது.

நான் ஊர்ந்து கொண்டிருந்தபோது ஒரு ஆள் என்னை நோக்கி அட்டகாசமாக ஓடி வருவதையும், அவன் கைகளை ஆட்டும் பாவனையில் “போகாதே நிறுத்து!” என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பதையும் பார்த்தேன். 

– தொடரும்…

– 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *