கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 3,209 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

ஜேகே ஒரு சினேகிதியைப் பற்றிச் சொல்லும்

மூன்றாவது அத்தியாயம் 

அவன் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் கதாநாயகி, ‘சேகர்’ என்று ஓடி வருவதைப் போல் என் விமானத்தை நோக்கி ஓடிவந்தான். என் குறுக்கே வந்து என்னைப் பறக்க விடமாட்டான் போலிருந்தது. அதனால் என்ஜினை நிறுத்தினேன். காரில் வந்த மற்ற இரண்டு பேரும் அங்கேயே மரத்தடியில் நின்றார்கள். 

வந்தவன் காக்கிக் கோட்டும், காக்கிப் பாண்ட்டும் அணிந்திருந்தான். அவன் மார்பில் பித்தளை வில்லை ‘ஸிவில் ஏவியேஷன்’ என்று அறிவித்தது. உலோகப் பூண் போட்ட ஆளுயரக் கம்பு வைத்திருந்தான். அதை உபயோகிக்கத் தயங்க மாட்டான் என்பதும் தெரிந்தது. ‘ஸால்வடோர் டாலி’ போல மீசை வைத்திருந்தான்.

“என்ன சமாசாரம்?” என்றேன். 

“எங்கிருந்து வருகிறீர்கள்?”

“ஏன்?”

“இந்த இடத்தில் இறங்கப் பர்மிஷன் இருக்கிறதா?”

“ஏன்? இந்த இடம் யாருக்குச் சொந்தம்?”

“சர்க்காருக்கு”. 

“நான் கூட சர்க்கார்தான்.” 

“பர்மிஷன் இருக்கிறதா? காண்பியுங்கள்” என்றான் சந்தேகத்துடன்.

நான் என் ஃபிளைட் பிளானைக் காண்பித்தேன். பர்மிஷன் இல்லை அது. அவனுக்குப் படிக்கத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் அதைத் தலைகீழாகப் பார்த்து விட்டு என் விமானத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தான். வெள்ளிக்கிழமை சந்தையில் மாடு வாங்குகிறவன் போல் பார்த்தான்.

“நீ யார், சௌகிதாரா?” 

“ஆம், நீங்கள் இங்கே இறங்கியதற்கு சார்ஜ் கொடுக்க வேண்டும்”. 

“கொடுக்கிறேன், எத்தனை ரூபா?” 

“அது எனக்குத் தெரியாது. எங்கள் பெரிய ஆபீசர்தான் சொல்ல வேண்டும்.” 

“அவரிடம் கேட்டுச் சொல்லு.” 

“அவர் டில்லியில் இருக்கிறார்.”

“சரி, நான் போய் கேட்டுக்கொண்டு வரவா?” 

அதற்குள் அந்த இரண்டு பெரும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு காரில் எங்கள் அருகே வந்து நின்றார்கள். 

“என்ன விஷயம்?” என்றான் துண்டு மீசை.

“லாண்டிங் சார்ஜஸ் கட்ட வேண்டுமாம். எவ்வளவு என்று கேட்டால் சொல்ல மாட்டான்.” 

அவன் சௌகிதாருடன் இந்தியில், லோகல் இந்தியில் பேசினான். சௌகிதார் தலையை லெஃப்ட் ரைட்டாக ஆட்டினான். 

“அவன் சொல்கிறான், நீங்கள் பர்மிஷன் இல்லாமல் வந்திருக்கிறீர்களாம். பர்மிஷன் கிடைத்திருந்தால் அவனுக்குத் தபாலாபீசிலிருந்து டில்லியிலிருந்து டெலிபோன் வந்திருக்குமாம். வரவில்லையாம்.”

“என்ன செய்யச் சொல்கிறான்: கட்டணம்தான் கொடுக்கிறேன் என்றேனே.” 

சௌக் மறுபடியும் தலையை ஆட்டி பேசினான். 

“உங்களை டேக் ஆஃப் செய்ய அனுமதிக்க மாட்டானாம்.” 

நான் சிரித்தேன். “ஆஸ்க் ஹிம் டு ட்ரை” என்றேன். “இதோ பார் உன் பெயர் என்ன? லால் பகதூர் சாஸ்திரியா? கேள். பர்மிஷன் இல்லாமல் அவசரத்திற்கு எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம். எனக்கு இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதனால்தான் நான் இறங்கினேன். இறங்கினதற்கு சட்டப்படி உண்டான பணம் கொடுத்து விட்டுப் போகிறேன். மேலே பேச்சுக் கிடையாது.” 

அவன் யோசித்து மறுபடி தலையை ஆட்டினான். 

“வர்மா, கிவ் ஹி ஃபிஃப்டீன் ரூபீஸ் அண்ட் ஆஸ்க் ஹிம் கெட் தி ஹெல் அவுட் ஆஃப் மை வே” என்று சொல்லிவிட்டு விமானத்தில் மறுபடி ஏறிக்கொண்டேன். செளகிதார் என் சட்டையைப் பிடித்தான். அவர்கள் இருவரும் அவனை விலக்கி, தூரமாகத் தள்ளினார்கள். அவன் கம்பை வீசினான். அது யார் மேலும் படாமல் தள்ளி விழுந்தது. 

“ஒதுங்கு” என்று ஒரே சீறலில் விமானத்தைக் கிளப்பிவிட்டேன்.

உயரம் பிடித்துத் திரும்பியதும் அவர்கள் மூவரும் சண்டை போடுவது, அடிக்கடி குணம் மாறும் ‘ஃ’ எழுத்துப் போல தெரிந்தது. 

“வாட் த ஹெல்.”


மணி 1-20 பிற்பகல். என் அருகில் இருந்த அந்தச் சாதனத்தைப் பார்த்தேன். அதன் பக்கவாட்டில் ‘ஆன்’ என்று எழுதி இருந்த குமிழைத் தட்டினேன். முள் துடித்துக் கீற்ற ஆரம்பித்தது. சார்ட் மெதுவாக நகர ஆரம்பித்தது. அவ்வப்போது முள் அதன்மேல் சிவப்புப் புள்ளிகளை இறைத்தது. 

அது என்னவாக இருக்கும்? 

இதைக் கொண்டுவர ஏற்கெனவே ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தனை மீறியாகிவிட்டது. சர்க்கார் நின்று கெடுக்கும் தெய்வம். 

என்ன ஆகிவிடப் போகிறது, பார்த்துவிடலாம். செளகிதார் மண்ணைத் தட்டிக்கொண்டு எழுந்து போஸ்ட் ஆபீசுக்குப் போய் டில்லிக்கு டிரங்கால் புக் செய்து செய்தி சொல்வதற்குள் நான் டில்லி நிச்சயம் போய்ச் சேர்ந்துவிடுவேன். அந்த ஆபீசரை ‘ஜாய் ரைட்’ அழைத்துச்செல்ல வேண்டும் முதல் காரியமாக. 

சரியாக 4-45க்கு டில்லி நகரம் தெரிந்தது. செக்ரடேரியட் கட்டடங்களிலிருந்து முடிவில்லாத சைக்கிள் வரிசைகள் சாலைகளில் பரவுவதைப் பார்த்தேன், ஆக்டோப்பஸ் போல. 

கிளியரன்ஸ் வாங்கிக்கொண்டு இறங்கினேன். இறங்கி ஹாங்கருக்குத் திரும்பி வந்தபோது தயாராக ஓர் அம்பாஸ்டர் காத்திருந்தது. 

டாக்டர் பரமேஸ்வரன் வெளியில் நின்றுகொண்டிருந்தார். நான் விமானத்தை ஓட்டி வந்து நின்றதும் பரமேச்வரன் உடனே வந்து மிக ஜாக்கிரதையாக அந்தக் கருவியை ஒரு இரண்டு மாதக் குழந்தையை வாங்குவதுபோல வாங்கிக்கொண்டார். பத்திரமாகக் காரின் பின் சீட்டுக்குள் வைத்தார். கதவை மரியாதையாக சாத்தினார். என்னிடம் வந்தார். 

“தாங்க்ஸ்” என்றார்.தன் பாண்ட் பைக்குள் கை விட்டு ஒரு கவரை எடுத்தார். “அதில் 2500 ரூபாய் இருக்கிறது” என்றார்.

“2500 ஆ! முதலிலேயே ஆயிரம் கொடுத்துவிட்டீர்கள். ஞாபகமில்லையா?” என்றேன். 

“1500 பாக்கிப் பணம். 1000 நாளைக்கு அட்வான்ஸ்.”

“நாளைக்கா?” 

“ஆம். நாளைக்கும் கொண்டுவர வேண்டும்.”

“எத்தனை மிஷின்கள் வைத்திருக்கிறீர்கள்?”

“மூன்று தற்போதைக்கு. நாளைக்கும் இதே ஏற்பாடுகள்தான். சரியா?” என்றார். 

“சற்று கஷ்டம்” என்றேன்.

“ஏன்?”

“அந்த கச்சா விமான நிலையத்தில் ஒரு சௌகிதார் இருக்கிறான். அவன் கிளம்பும்போது கலாட்டா செய்தான். ‘எப்படி அனுமதி இல்லாமல் இறங்கலாம். டில்லியின் அனுமதி வேண்டும்’ என்றான். நாளைக்கு நான் அங்கே இறங்க வேண்டும் என்றால் இங்கே சொல்லிவிட வேண்டும். அனுமதி வேண்டும்.”

அவர் அவசரமாக, “இங்கே சொல்ல வேண்டாம்” என்றார். “அந்த சௌகிதார் – அவனைக் கவனித்துக்கொள்ளச் சொல்கிறேன். அவன் இனி உங்களுக்குத் தொந்தரவு செய்யமாட்டான்.”

“டாக்டர் பரமேச்வரன், எனக்கு அது பிடிக்கவில்லை. ஏற்கனவே ஒரு தடவை அனுமதியை மீறி அந்த ஸ்டாப்பில இறங்கியாகிவிட்டது. சௌகிதாருடன் சண்டை போட்டாகிவிட்டது. அவன் இந்த நேரத்திற்கு டெலிபோன் செய்திருப்பான். ஐ க்விட்!” என்றேன்.

“யூ காண்ட க்விட் நௌ!” என்றார் சற்று அழுத்தமாக, அவர் முகத்தில் தசைகள் இறுகுவதை முதல் தடவை கவனித்தேன்.

“ஏன்?” என்றேன். 

அவர் முகம் கோபத்திலிருந்து திடீர் என்று கெஞ்சலுக்கு மாறியது. “பாருங்கள் காப்டன்! அந்த ஆராய்ச்சிக்கு ஏகப்பட்ட பணம் செலவழித்திருக்கிறோம். இன்றைய தினத்துடன் நிறுத்திவிட்டால் ஆராய்ச்சி அரைகுறையாகப் போய்விடும். முழுவதும் ஒருவிதமான ‘காரிலேஷன்’ கிடைக்க மூன்று ஃப்ளைட்டாவது வேண்டும். மூன்று தடவை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அந்தச் செளகிதார் இனி உங்களுக்குத் தொந்தரவு செய்ய மாட்டான். நாளை பாருங்களேன். அவன் அருகில்கூட வரமாட்டான். அங்கே இருக்கவே மாட்டான்… என்ன?” 

யோசித்தேன். 

“சரி” என்று கவர் பெற்றுக்கொண்டேன். 

[என்னுடைய நண்பர் சாமிநாதன் எப்படியாவது தன் பெயர் இந்தக் கதையில் வந்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சாமிநாதன்! சௌக்கியமா? திருப்திதானே ஜும்மு எப்படி இருக்கிறாள்?]

என்ன சொல்ல வந்தேன்? கவர்! கவர் பெற்றுக்கொண்டேன். அவர், ‘குட் நைட்’ என்று காரில் பாய்ந்தார். 

இதில் ஏதோ தகராறு இருக்கிறது வாத்யாரே! என் மயிர்க்கால்களில்கூட உணர்கிறேன். இந்தச் சின்னக் காரியத்திற்காக இத்தனை பணமா? இரண்டு நாட்களில் 5,000 ரூபாய்! இந்திரா காந்தியின் சம்பளம்! ஸம் திங் ராங்! 

ஆனால் ஜேகேயிடம் சில பிரின்ஸிபிள. குறிக்கோள், கொள்கை உண்டு. அது பிசகவே மாட்டேன். காசு! காசு தரும கவர்ச்சிக்கு மறுப்புச் சொல்லாதே. பின்னால், என்ன ஆனால் என்ன? அடுத்த பக்கத்தைப் புரட்டுவதற்குள் நீ இறந்து போய்விடலாம். 

காசு எனக்கு எவ்வளவோ வசதிகள் தருகிறது. ரம்மி ஆடலாம். புத்தகங்கள் வாங்கலாம். சில பார்ட்டிகளைத் தேடிப் போகலாம்.

சில பார்ட்டிகள். 

A 

முத்திரையைக் கவனித்தீர்களா? உங்களுக்கு என்ன வயசு? மேலே படிக்கலாமா? சின்னப் பையன்கள் எல்லாம் ஒருதடவை ஜோராகக் கை தட்டிவிட்டு விலகிக்கொள்ளவும். 

விமானத்தின் காக்பிட் பாகத்தை டார்ப்பாலின் போட்டு, மூடி விட்டுச் சக்கரங்களின் கீழ், கட்டைகள் அமைத்துவிட்டு இறக்கைகளிலிருந்து பூமியில் பதிந்த வளையங்களுக்குக் கயிறு கட்டிவிட்டுக் கிளம்பி வெளியே வந்து டாக்ஸி பிடித்து – ‘என்னிடம் நூறு ரூபாய் நோட்டாக இருக்கிறது’ – கைலாஷ் காலனி என்றேன். 


“ஜேகே! வாட் ஏ ஸர்ப்ரைஸ்!” என்றாள் ஜ்யோ. முழுப் பெயர் ஜ்யோத்ஸ்னா. என் நண்பன் குமாரின் தங்கை, குமாருக்கு வயது 22. அவன் ஊரில் இல்லை.

“நான் போன் பண்ண வேண்டும் முதலில்” என்றேன்.

“போன் பண்ணின பிற்பாடு?” என்றாள். 

“டீ சாப்பிட வேண்டும்.” 

“டீ சாப்பிட்ட பிற்பாடு?”

நான் அவளைப் பார்த்தேன். அவள் நெற்றிப்பொட்டு ஒழுங்காக இருந்தது. கலையப் போகிறது. 

“டீ சாப்பிட்ட பிற்பாடு?” என்று மறுபடி கேள்வியைக் கேட்டாள்.

“நாம் இருவரும் அந்த அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு ‘தி டிக்ளைன் அண்ட் ஃபால் ஆஃப் தி ரோமன் எம்பயர்’ படிக்கலாம்” என்றேன். 

ஜ்யோ என்மேல் சீப்பை எறிந்தாள். 

அழகா இருந்தாள். அழகு என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியாது. என் அர்த்தத்தைச் சொல்கிறேன். அழகு என்றால் கண் கறுப்பு, சடை நீளம், காற்றில் ஆடும் கூந்தல், சின்ன உதடுகள், வரிசையான பற்கள், சிவப்பு உடம்பு, உயரம், வாளிப்பு, என்று வார்த்தைகளை வீணடிக்கலாம். வெறும் வார்த்தைகள்! அவை அவள் அழகில் இருக்கும் சலனத்தை, உயிரை, வயிற்றுக்குள் திடீரென்று ஏற்படுத்தும் அழுத்தமான பிடிப்புணர்ச்சியை வெளிப்படுத்தாது. சோகம் கலக்காத அழகு அழகே இல்லை. சற்று நிதானமாக வாசிக்கவும். சோகம் என்றால் தனிமை, இரவு, ஒற்றை ராகம், இனம் தெரியாது நம் மூக்கருகே திடீரென்று தோன்றும் வாசனை என்று எவ்வளவோ சொல்லலாம்.

புரியவில்லையா? கவனிக்கவும். 

ஜ்யோவின் உடல் 5-4, 5-4 என்பது வெறும் எண். என்னெதிரே நின்றது 5-4 பெண், அவள் உடுத்தியிருந்தது என்னைப் படுத்தியது. உடுத்தாமலிருந்து என்னை அவளருகில் போய்த் தொட்டுப் பார்த்து நிஜமானவள் என்று தெரிந்ததும் மறுபடி மறுபடி தெரிந்துகொள்ளத் தூண்டியது. அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இடையில் பெல்ட் அணிந்திருந்தாள். அந்த பெல்ட்டின் கொக்கி ஆள் காட்டி விரல்களைக் கோத்துக்கொள்ளவும் – அதுபோல் இருந்தது. மார்பில் அவள் அணிந்திருந்த சட்டை – அது பம்பாயில் தைக்கப்படும்போதே தபஸ் பண்ணி இருக்க வேண்டும். அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்தன. அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவையில்லாததாகச் செய்திருந்தது. அவள் செய்துகொண்டிருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கையையும் ஆணவத்தையும் காட்டியது. இந்த நிலைக்கு வர இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை, தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகள்…. எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். 

ஜ்யோ! காஷ்மீரக் கம்பளத்தை மிதித்துப் பாருங்கள் – ஜ்யோ!

கித்தாரின் ஜி கம்பியைத் தட்டிப்பாருங்கள் – ஜ்யோ! 

திராட்சைத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் திராட்சைகளில் ஒரு திராட்சையின் நுனியில் தூங்கும் பனித்துளியை நாக்கில் தொட்டுப் பாருங்கள் – ஜ்யோ! 

இளங்காலையில் 80 மைல் வேகத்தில் ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில் சீறிச் செல்லுகையில் முகத்தில் காற்றை உணர்ந்து பாருங்கள் – ஜ்யோ! 

கதையை விட்டுவிட்டேனே? டெலிபோன் டைரக்டரியில் பரமேச்வரன். ஏ.பரமேச்வரன், ஸி.பரமேச்வரன், டாக்டர் எம்.பரமேச்வரன், டாக்டர் வி. என்று எத்தனை பரமேச்வரன்கள்? அவர்கள் ஒவ்வொரு வரையும் கூப்பிடுவதா? எதற்கு? 

ஜ்யோவுக்கும் எனக்கும் என்ன உறவு என்று சொல்லி விடுகிறேன். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் பெண்களைப் பொறுத்தவரையில் மிகவும் யோக்கியமானவன். உங்கள் வயது வந்த தங்கைகளை என்னிடம் பயமில்லாமல் ஒப்படைக்கலாம். நம்பகமானவன். ஜ்யோ குமாரின் தங்கை. அவன் வெளியூர் சென்றிருக்கிறான். என்னைக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறான். 

“ட்ரெஸ் பண்ணிக்கொள் ஐயோ! வெளியில் போய் டின்னர் சாப்பிட்டுவிட்டு வரலாம். என்னிடம் ஏகப்பட்ட பணம் இருக்கிறது” என்றேன். 

“எப்படிக் கிடைத்தது?” 

“எ ரிச் பெனவலண்ட் அங்கிள்” என்றேன். 

“இங்கேயே இருக்கலாம். பணம் செலவழிக்க வேண்டாம்” என்றாள். என்னருகே! 

“உன் அண்ணன் வந்தால் கத்தியை உருவிக்…” 

“அண்ணன் ஊரில் இல்லை” அவள் என் ஜாக்கெட்டின் ஜிப்பை இறக்கினாள். 

“ஜ்யோ. இது நல்லதல்ல. ஏற்கெனவே எனக்கு ரத்த அழுத்தம் மார்ஜினல். மெடிகலுக்கு வேறு போக வேண்டும்.” 

அவள், நான் பின்பக்கமாக ஊன்றி இருந்த கைகளைத் தட்டி விட்டாள். அப்படியே சாய்ந்தேன். 

“டீ எப்போது வரும்?” என்றேன். 

“பிறகு” என்றாள். 

நான் ஒரு தமிழன். என் கற்பு என்ன ஆகிறது? 

“ஜ்யோ, நாம் இருவரும் உணர்ச்சிவசப்பட்டுத் தன்னிலையை மறந்துவிடக் கூடாது என்று என்னுள் என் மனச்சாட்சி சொல்கிறது” என்றேன். எந்தப் புத்தகத்தில் படித்தேன்? 

“வார்த்தைகள் வார்த்தைகள்” என்றாள் ஜ்யோ. 

“இப்போது நான் பேசாவிட்டால் நிலைமை கவலைக்கிடமாகி விடும்” என்றேன். 

“ஜேகே, காப்டன் ஜேகே! என்னை விமானத்தில் அழைத்துச் செல்கிறாயா?” என்றாள். 

“நாளைக்குக் காலை” என்றேன். 

“ஃப்ளை மி, காப்டன்” என்றாள். 

விமானம் புறப்பட்டு மெதுவாகச் சூடுபிடித்து மிக வேகமாக ஓடி வானத்தில் எவ்விப் பறந்தது. 

ஜேகே மூன்று குற்றங்களுக்காக கைதாகும்

நான்காம் அத்தியாயம் 

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நான் இருந்த நிலையை மேலே விவரிக்கத் தேவையில்லை. இதை வாசிப்பவர்களின் ஊக புத்தியில் எனக்கு நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்ட புத்தி குறைந்தவர்கள் இந்தக் கதையை ஒரு வாரம் இரண்டு வாரம் படித்துவிட்டுத் தூக்கி எறிந்திருப்பார்கள். அவர்களைப் பசியுள்ள புலி தின்னட்டும். எனவே, ஜ்யோ இந்தக் கதையின் கதாநாயகி இல்லை. ஆனால் மறுபடி வருவாள். இந்தக் கதைக்குக் கதாநாயகி என்று ஒருத்தி கிடையாது (சில பெண்கள் வருகிறார்கள்). கதாநாயகன் ஒருவன் உண்டு. அது ஜேகே என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஃபெயில் மார்க் எனவே, 

ஜீயோவை நான் பார்க்கச் சென்றது, அவளை அழைத்துக்கொண்டு புதிய நோட்டுகளை இறைத்துச் செலவழித்து ஓர் ஓட்டலில் சுமாராகச் சாப்பிட்டுவிட்டு, சினிமா போய்விட்டு, அப்புறம்… அவள் என்னவோ முதல் விஷயங்களை விட்டுவிட்டு, ‘அப்புறம்… நிகழ்வ’திலேயே கவனமாக இருந்தாள். அது எனக்குக் கிறக்கத்தை அளித்தாலும் அதை விவரமாகச் சொன்னால், ‘அனாவசியத்துக்கு செக்ஸை நுழைக்கிறான். கட்டையை எடுத்து அடி’ என்பீர்கள். எனவே, கூர்மையாகக் கதைக்குள் நுழைகிறேன். ஜ்யோ? அவளைப் பற்றி ஒன்று மட்டும் சொல்கிறேன். “கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்று தமிழ்மறை சொல்வதை அறியாதாவர் உளரோ, அறியாதாரும் உளரோ, ஜ்யோ மட்டும் என்ன? ஒரு ராஜகுமாரி பின்னால் வருகிறாள். அத்தியாயம் ஆறு என்று நினைக்கிறேன். அந்த ரா. நிஜமாகவே இருதயத் துடிப்பை நிறுத்தக்கூடியவள். காது நுனிகளில் ‘சில்’ என்று உணர வைக்கக்கூடியவள். அவள் மா.. காத்திருங்கள். அத்தியாயம் ஆறு வரை. 

அத்தியாயம் நான்கில ஆரம்பத்திலேயே இப்படி ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே. சித்திரைத் தேர் மாதிரி கதை நகரவில்லை அல்லவா? நகர்த்துகிறேன். 

மறுநாள். 

மறுநாள். 

மறுநாள். 

மூன்று தினங்களும் நான் பூச்சி மருந்தடிக்கச் சென்றேன். சென்ற போது மூன்று தினங்களும் மோங்காவில் இறங்கினேன். மூன்று தினங்களும் வேலை நடந்தது அதே துண்டு மீசை! அதேமாதிரிக் கருவியை விமானத்தில் வைத்தார்கள். அந்த சௌகிதாரின் அட்ரஸே இல்லை. டில்லியில் வந்து இறங்கினதும் உடனே பரமேச் வந்து அதை சேகரித்துக்கொண்டு சென்றார். மூன்றாவது நாள் மட்டும் வரவில்லை. வேறு ஏதோ ஆசாமி வந்திருந்தான். தினம் எனக்கு 2500ரூபாய் கிடைத்தது. ஒரே மாதிரி சலவை நோட்டுகள். ரம்மி ஆடினேன். ஒரு தபலா வாங்கிக்கொண்டு தட்டிப் பார்த்தேன். மேல் வீட்டுக்காரன் அரற்றினான். ஏதோ செலவழித்தேன். நிறைய பணம் பாக்கியிருந்தது. எப்படிச் செலவழிப்பது? 


மூன்றாம் நாள் மாலை ஃப்ளைட்டுக்குப் பிறகு நிரம்ப களைத்திருந்தேன். ஒரு பாட்டில் பீர் சாப்பிட்டால்தான் உடம்பு நிலைக்கு வரும்போல இருந்தது. டில்லியில் இது ஒரு பேஜார். மதுச்சாலைக்குப் (பாருக்கு) போனோம். பருகினோம் (குடித்தோம்) என்று கிடையாது. கடைக்குப் போய் வாங்கிவர வேண்டும். (வாரத்துக்கு இரண்டு நாள் ட்ரை.) கடையிலிருந்து வாங்கி வந்து அதை ரூமுக்கு எடுத்துச் செல்வதற்குள் பீரின் ஜில் கம்மியாகிவிடும். அப்புறம் ஒப்பனரைத் தேடவேண்டும். கஷ்டகாலம் இதனால் நான் கையில் சர்தார்கள் போல இரும்பு வளையம் மாட்டியிருக்கிறேன். இதனால் பாட்டில் திறக்க மிக சௌகரியம்.

குளித்துவிட்டு வைன் ஸ்டோருக்கு நடந்துபோய் கோல்டன் ஈகிள் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி, கதவைத் தாளிட்டுக்கொண்டு, ஒரு கிளாஸில் ஊற்றி நுரையுடன் வாயில் டம்ளரை சப்புகிறேன். அந்த ஆசாமி கதவைத் தட்டுகிறார். எந்த ஆசாமி? கதவைத் திறந்தால்தானே தெரியும்? திறந்தேன்.

“குட் ஈவினிங்” என்றார். 

“ஈவினிங்” என்றேன். 

“நீங்கள்தான்…” என்று பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து முழுப் பெயரையும் வாசித்தார். என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு கேள்விக்குறியைச் சேர்த்தார்.

நான் “ஆம்” என்றேன். அவருக்கு என் வயதுதான் இருக்கும். மீசை கீசை எல்லாம் தடபுடலாக சுத்தமாக வைத்திருந்தார். செம்பட்டைத் தலையும், கறுப்புக் கண்களும், ஒன்று சேர நாள் பார்த்துக்கொண்டிருக்கிற புருவங்களும், சுத்தமான கலப்படமில்லாத, ‘சட்டம்’ என்று அறிவிக்கும் பொதுத் தோற்றமும்.. 

“நான் உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறேன்.”

“எனக்குப் புரியவில்லை” என்றேன். ஆனால் நான் ஒன்றும் அதிர்ச்சி அடைந்து விட்டத்து வரை எம்பி விடவில்லை. நான் ஒருவேளை உள் மனத்தில் இந்தக் கைதை எதிர்பார்த்தேனா? “நீங்கள் யார்” என்றேன். 

“நான் ரமேஷ் வர்மா. ஸி.பி.ஐ.யில் ஸபெஷல் இன்வெஸ்டிகேடிவ் ஆஃபீசர். உங்களைக் கைது செய்ய எனக்கு வாரண்ட் இருக்கிறது. மாஜிஸ்டிரேட் கையெழுத்திட்டது” என்று காகிதத்தை என் முன் நீட்டினார். நான் அதை அசுவாரசியமாகப் படித்தேன். பாதி உருதுவில் எழுதியிருந்தது. 

அன்புள்ள வாசகர்! நீங்கள் இதற்கு முன் கைதாகி இருக்கிறீர்களா? நான்கூட ஆனதில்லை. நான் பார்த்ததெல்லாம் இதுவரை சினிமாவில் தான். இன்ஸ்பெக்டர் இஸ்திரி பண்ணி யூனிஃபார்ம் அணிந்து பளபளக்கும் விலங்கை நீட்டுவார். பின்னணி சங்கீதம் அலறும். என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அழகான முட்டாள்தனமான பெண் விசித்து விசித்து அழுவாள். கதாநாய் கைதாகின்றான் என்று!

என் கேஸில் அப்படி இல்லை. வந்தவர் ஏதோ ரம்மி ஆட வந்தவர் போல வந்தார். காகிதத்தைக் காட்டினார். பின்னணியின் விவித பாரதியில், ஆஷா “கர்வே பியார் கர்லே தோ தின் ஹை யெஹி” என்றாள். நான் “உட்காருங்கள், பீர் சாப்பிடுகிறீர்களா?” என்றேன்.

அவர், “நான் குடிப்பதில்லை” என்றார் காந்தி போல.

“எதற்காக என்னை அரெஸ்ட் செய்ய வேண்டும்?”

“மூன்று காரணங்கள், ஒன்று இண்டியன் ஏர்க்ராஃப்ட் விதிகளை மீறியது. இரண்டு கஸ்டம்ஸ் எக்சைஸ் விதிகளை மீறியது. மூன்று இண்டியன் பீனல்கோடை மீறியது” என்றார். 

“நான் எமர்ஜன்ஸிக்காக எங்கே வேண்டுமானாலும் இறக்கலாம் தெரியுமா?” 

“நான்கு நாட்கள் தினம் தினம் எமர்ஜன்ஸியா? அப்புறம் உத்தரபிரதேசத்திலிருந்து டில்லிக்கு நீங்கள் கொண்டுவந்தீர்களே விமானத்தில்; அது என்ன?” 

“அது ஒரு விஞ்ஞானக் கருவி!”

அவர் சிரித்தார். 

“ஏன்?” 

“காப்டன் ஜேகே! நீங்கள் அமெச்சூர்த்தனமாகப் பொய் சொல்கிறீர்கள்.” 

“ஏன்?”

“நீங்கள் கொண்டுவந்த கருவிகளில் உள்ளே என்ன அடைத்து இருந்தது தெரியுமா?”

“சொல்லுங்களேன்”.

“ஓப்பியம்!” 

“என்ன?”

“ஒப்பியம். போதைச் சரக்கு. மொத்த மதிப்பு மூன்றரை லட்சம். மிஸ்டர் ஜேகே. போலீஸ்காரர்கள் முட்டாள் அல்ல. இண்டர்போல் என்ற ஸ்தாபனம் இருக்கிறது. தெரியுமா? உங்களைப் போன்ற ஆசாமிகள் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறோம் தெரியுமா?”

“ஓப்பியம்!” என்றேன். எனக்கு டாக்டர் (ராஸ்கல்) பரமேச்வரன் ஞாபகம் வந்தது! ‘அடேய், டாக்டர்’ என்று கெட்ட வார்த்தைகள் தேடினேன். 

“ஓப்பியம் கடத்துவது குற்றம் தெரியுமா? அப்புறம் மற்றொன்று சொல்லிவிடுகிறேன். அந்த நூறு ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருக்கிறீர்களா?”

“எந்த நூறு ரூபாய் நோட்டுகள்?”

“நீங்கள் சென்ற தினங்களில் செலவழித்தவை. ஒரு டாக்ஸிக்காரனுக்குக் கொடுத்தது. ஒரு புத்தகக்கடையில் கொடுத்தது. ஒரு சங்கீதக் கருவிக் கடையில் கொடுத்தது.”

இவருக்கு எப்படித் தெரியும்? ஏன்? 

“அவை கள்ள நோட்டுகள். உங்கள் நன்மைக்குச் சொல்கிறேன். உங்களிடம் மீதமிருக்கும் நோட்டுகளை சரெண்டர் செய்துவிடுங்கள்.”

நான் சற்று நேரம் யோசித்தேன். 

“நோட்டுகள் செல்லாதா?” 

“செல்லாது. ஆனால் நல்ல முயற்சி; ‘வாட்டர் மார்க்’கில்தான் சற்றுக் குறை இருந்தது. அச்சகம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?” 

நான் அவரைப் பார்த்தேன். மனதில் டாக்டர் பரமேச்வரன் படவா டாக்டர் பரமேச்சு! விஞ்ஞான ஆராய்ச்சியா? ஸிண்டிலேஷன் கௌண்ட்டரா? தாத்தா டேய்! செல்லாத நோட்டுகள்? எவ்வளவு சுலபமாக ஏமாந்திருக்கிறேன்! 

“ஆபீசர், டாக்டர் பரமேச்வரன் என்று ஒருத்தர்தான் இதில் என்னைக் கூப்பிட்டுவிட்டார். எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. வயசானவர். டூத் பிரஷ் மீசை. அவரை படம் போடும்போது கூட மீசை இல்லாமல் போட்டு விட்டார்கள்.” 

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“சார்! நான் இதில் அறியாமல் மாட்டிக்கொண்டவன். எய்தவன் இருக்க அம்பை என்னவோ செய்கிறீர்கள் நீங்கள்.” 

“அப்படிச் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நேபால் எல்லையிலிருந்து சாமர்த்தியமாகக் கடத்தப்பட்ட ஒப்பியம் டில்லிக்குக் கொண்டுவர நீங்கள் உதவியிருக்கிறீர்கள். அதுபற்றியும் எனக்குத் தெரியவே தெரியாது என்று சொல்லப் போகிறீர்களா?”.

“இப்போது என்ன ஆகும்?” என்றேன்.

“கைது” என்றார் சுருக்கமாக. 

“நான் பீர் சாப்பிடலாமா?” 

“சீக்கிரம் குடியுங்கள். அது குற்றமில்லை”. 

மடக்கென்று குடித்தேன். சற்று தெம்படைந்தேன்.

“என்ன ஆதாரம் இருக்கிறது உங்களிடம், நான்தான் கடத்தினேன் என்பதற்கு!” 

“நீங்கள் இன்று வந்து இறங்கியபோது, எங்கள் ஆசாமிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெட்டி காரில் வைக்கப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்தோம். காரை கேட்டிலேயே மடக்கிவிட்டோம். அதில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்துவிட்டோம். மூன்றாவது நீங்கள். நீங்களும் ஒன்றும் தெரியாது என்கிறீர்கள். பார்த்து விடலாமே எவ்வளவு தூரம் உங்களுக்குத் தெரியும் என்று.”

“என்ன இது?”

“என்ன என்ன இது?” 

“என்னை அடிக்கப் போகிறீர்களா?”

“அடிக்க மாட்டோம்.”

“பின்? லைட் அடியில் வைத்து முகத்தில் தண்ணீர் அடித்துக் கேள்வி மேல் கேள்வி கேட்கப் போகிறீர்களா? நான் அம்பேல் ஸார். எனக்கு ஒன்றும் தெரியாது. கடவுள் சத்தியமாக நான் ஏதோ சாதாரணப் பூச்சி மருந்து பைலட். பூச்சி மருந்து! அக்ரிகல்சர் க்ராப் ஸ்ப்ரே ! விர்ர்ர்… விஸ்ஸ்ஸ்ஸ். .” என்றேன் அபிநயத்துடன். 

“கண்டுபிடித்து விடுவோம்” என்றார். “மிஸ்டர் ஜேகே, அனாவசியத்திற்குப் பொய் சொல்லாதீர்கள். உங்கள் ஆப்பரேட்டர் யார் சொல்லிவிடுங்கள். விட்டுவிடுவோம். உங்களை வைத்துக்கொண்டு தான் இந்தக் கூட்டத்தைப் பிடிக்க உத்தேசம்?” 

“நீங்கள் டாக்டர் பரமேச்வரரை இன்னும் கைது செய்யவில்லை?”

“யாரது?”

“என்னைச் சந்தித்தவர். யூ ஸீ ஸார்…” என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னேன், ஒரு வரி விடாமல்… “இதைத்தவிர வேறு ஏதும் எனக்குத் தெரியாது, தெரியாது, தெரியாது, ஒன்றும் தெரியாது”. 

“அப்படியா” என்றார். அவர் சொன்ன விதத்தில் துளிக்கூட நம்பிக்கை தெரியவில்லை. 

“இரும் இரும்! என் வக்கீலை நான் காண்டாக்ட் செய்ய வேண்டும்.” 

“செய்யலாம். அரசியல் சட்டத்துக்குட்பட்ட எல்லா உரிமைகளும் உங்களுக்குத் தரப்படும். கிளம்புகிறீர்களா?” 

“என்னை ஜெயிலில் போடுவீர்களா?”

“ஆம். நீங்கள் பெயிலுக்கு முயற்சிக்கலாம்!” 

“நான் ஒரு லாயருடன் பேச வேண்டும்.” 

“ஸ்டேஷனில் வசதி செய்து தருகிறோம், வருகிறீர்களா?”

“விலங்கு மாட்டுவீர்களா?”

“தேவையில்லை.”

“டூத் பிரஷ், டூத் பேஸ்ட் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?”

“வேண்டாம் வாருங்கள். உங்கள் லாயரிடம் பேசி பெயில் வாங்கிக்கொண்டு, தற்காலிக விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்”.

நல்ல மனிதராகத் தெரிகிறார். என்மேல் கொஞ்சம் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னை நம்பத் தயாராகிறார் என்பதும் தெரிகிறது. 


சாக்கடையைத் தாண்டி போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. அதில் பெஞ்சு போட்டு சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பெண் – சத்தியமாக பத்தினி இல்லை – விசித்து அழுதுகொண்டிருந்தாள். மகாத்மா காந்தி, கேப்மாறிகளின் போட்டோ ஆல்பம், புராதன மேஜை, மைக்கூடு, பெரிய ரிஜிஸ்டரில் உருது எழுத்துகள், இன்ஸ்பெக்டரின் ஸ்கூட்டர். 

அந்த இன்ஸ்பெக்டர் என்னைக் கைது செய்தவரைக் கண்டதும், ஒரு கஞ்சி போட்டுச் சலவை செய்த சல்யூட் அடித்தார். “உட்காருங்கள்” என்றார். என் இல்லை. 

“நேம்?” – “ஜேகே.” 

“அவ்வளவுதானா?” – “அவ்வளவுதான்!”

“ஆக்குபேஷன்.” – “பைலட்.”

“ஏஜ்?” – “33” 

“ஸெக்ஸ்” – “நிரூபிக்க வேண்டுமா?”

அவர் என்னை நிமிர்ந்து முறைத்ததில் ‘தனியாகக் கவனித்துக் கொள்கிறேன்’ என்பது தெரிந்தது. அந்தப் பெண் அழுகையை நிறுத்திவிட்டாள். என்னைப் பார்த்தாள். பெட்ரூம் பார்வை.

“டெலிபோன் செய்ய வேண்டும்” என்றேன். அவர்கள் நான் சொல்வதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள். காகிதங்கள் கைமாறின. 

“நான் என் லாயரைக் கலந்துகொள்ளாமல் ஒரு வார்த்தை பேச மாட்டேன்” என்றேன்; எட்டு வார்த்தைகளில். 

“யார் உன் லாயர்?”

“எனக்குத் தெரியாது, டைரக்டரியைப் பார்க்கவேண்டும்” என்றேன். “டைரக்டரி தருகிறீர்களா?”

“சர்க்கார் பைலட்டாக எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள்?” 

நான், “டைரக்ட்ரி” என்றேன். 

“சர்க்கார் பைலட்டாக எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள்?”

“டைரக்டரி, டெலிபோன். அப்புறம்தான் மேல்வார்த்தை. என் உரிமைகள் எனக்குத் தெரியும்.” 

டைரக்டரியை என்னிடம் எறிந்தார். நான் அந்தப் பெண் அருகில் போய் உட்கார்ந்தேன். அவள் நகரப் பிரயத்தனம் செய்ய வில்லை. அவர்கள் புகை பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளியே ஸ்கூட்டர்கள் கிழித்துக்கொண்டு சென்றன. 

டைரக்டரியை எடுத்து கிளாஸிஃபைட் லிஸ்ட்டை பச்சைப் பக்கங்களில் தேடினேன். அதில் லாயர்ஸ், வக்கீல்கள் என்கிற பகுதியில் உள்ள பெயர்களில் விரலை ஓட்டினேன். தமிழ்ப் பெயராகத் வக்கீலைக் கூப்பிட வேண்டும். அவரிடம் சற்றுத் தாராளமாகப் பேசலாம். முதலில் நான் பெயிலில் விடுதலை ஆகவேண்டும். ஜெயிலில் படுத்து எனக்குப் பழக்கம் இல்லை. எனக்கு படுக்கை சுத்தமாக இருக்க வேண்டும். தலைக்கு இரண்டு தலையணைகள் வேண்டும்..பக்கத்தில் ஒரு… 

அனந்த நாராயணன் ? – வேண்டாம், வேண்டாம், ரொம்ப நீளமான பெயர்.

பாஸ்கர் ராவ் – வேண்டாம். தெலுங்காக இருந்தால்?

சிதம்பரம் – பெயர் பிடிக்கவில்லை. 

சின்னசாமி ஐயர் – வேண்டாம். சுப்ரீம்கோர்ட்டு மூக்குப் பொடியாக இருக்கும். 

தீனதயாளு ? எதிராஜ்…கணேஷ்…

கணேஷ்! ஓ.எஸ். கணேஷ்… சின்ன, கச்சிதமான பெயர், என் பெயரைப்போல. 

– தொடரும்…

– 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *