கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 4,388 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

பரமேச்வரனை மறுபடி சந்திக்கும்

ஐந்தாவது அத்தியாயம் 

டெலிபோனைச் சுழற்றினேன். எதிரே அவர்கள் நின்றுகொண்டு என்னையே நோக்கிக்கொண்டிருக்க, நீண்ட நேரம் அது எதிர்ப் பக்கத்தில் அடிக்க, என் நம்பிக்கை தளர ஆரம்பித்தது. 

கடைசியில் “ஹலோ” என்றாள் ஒரு பெண். வேறு சூழ்நிலையில் அந்தக் குரலை வர்ணித்திருப்பேன். அதில் கலந்திருந்த வரவேற்பைப் பற்றி ஒரு பாரா கூறியிருப்பேன். தற்போது சூழ்நிலை – ஞாபகமிருக்கிறதா – கைதாகப் போகிற சூழ்நிலை.  

“கணேஷ் இருக்கிறாரா?” 

“ஹு இஸ் ஸ்பீக்கிங்?” 

“ஐ ம் ஸ்பீக்கிங் ஃப்ரம் பீக்கிங்” என்று சொல்லியிருப்பேன் சூழ்நிலை – “என் பெயர் ஜேகே. என்னை அவருக்குத் தெரியாது”.

“ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்.”

அவள் போனைப் பொத்திவிட்டு ஏதோ சொல்கிறாள் என்பது தெரிந்தது. 

“உங்களுக்கு அப்பாயிண்ட் மெண்ட் இருக்கிறதா?”

“உன்னுடனா?” 

“இல்லை, மிஸ்டர் கணேஷுடன்.” 

“மிஸ், உன் பெயர் தெரியாது. நான் அவருடன் அவசரமாகப் பேச வேண்டும் – கணேஷ் என்பவருடன்.” 

மறுபடி பொத்தல். 

“ஸாரி சார். அவர் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார். நீங்கள் உங்கள் டெலிபோன் நம்பரைச் சொன்னீர்கள் என்றால் வில் ரிங் யூ பாக்.” 

“எழுதிக் கொள்ளுங்கள். துக்ளக் ரோடு போலீஸ் ஸ்டேஷன். போன் செய்து மூன்றாவது பெஞ்சில் சைட் பர்ன்ஸுடன் படுத்திருக்கும் கைதி என்று கூப்பிடுங்கள். தாங்க்ஸ்” என்று போனை எறிந்தேன். உள்ளத்தில் எரிந்தேன். யார்யா இந்த கணேஷ். மகாப் பிடுங்கி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமாம். பெயர் சொல்ல வேண்டுமாம். பெண் ஒருத்தி வைத்துக் கொண்டிருக்கிறான், சாக்லெட் கலந்து பேசுவதற்கு. கணேசா! உன்னைத் தனியாகக் கவனித்துக்கொள்கிறேன். நீ இந்தக் கதையில் வேண்டாம். 

“மிஸ்டர் ஜேகே! டெலிபோன் ஆகிவிட்டதா?” என்றார் என்னைக் கைது செய்ய வந்த பஞ்சாபி (பஞ்சாபி தானே சொன்னேன்?)

“ஆம்” 

“லாயர் வருகிறாரா?” 

“இல்லை மிஸ்டர்! எனக்கு இந்த மாதிரிக் கைதாகிப் பழக்கமில்லை. என்னை அனாவசியத்திற்கு இழுத்து உள்ளே தள்ளி இருக்கிறீர்கள். நான் இந்த விவகாரத்தில் ஒன்றும் அறியாத ஒரு வெளி ஆள். என்னை ஒரு கிழவன் வந்து பார்த்தான். நோட்டுகளைத் திணித்தான். உத்தர்பிரதேசத்தில் ஒரு…” 

“அதெல்லாம் எங்களுக்கு முழுவதும் தெரியும்.” 

“பின் ஏன் என்னை இங்கு கூட்டி வைத்திருக்கிறீர்கள்? நான் வரட்டுமா?” 

“இல்லை. இன்றிரவு நீங்கள் இங்கேதான் தங்க வேண்டி இருக்கும். நாளைக்கு பெயிலுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்… இன்றைக்கு நீங்கள் ஜெயிலில் இருந்தாக வேண்டும். மிஸ்டர் அரோரா! எல்லாம் எழுதியாகிவிட்டதா?” 

“நீங்கள் ஒரு மகத்தான தவறு செய்கிறீர்கள். நான் எச்சரிக்கிறேன். எனக்கு பெரிய பெரிய மந்திரிகள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள், ஐ.ஜி. ஆப் போலீஸ் எல்லோரையும் தெரியாது. ஆனால் ஒரு தனிப் பட்ட குடிமகன் என்கிற ரீதியில் நான் என் உரிமைகளுக்காகப் போராட இன்னும் இந்த நாட்டில் முடியும் என்று நினைக்கிறேன். கபர்தார்” என்றேன். 

“ஆசாமி நன்றாகப் போட்டிருக்கிறான்” என்றான் ஒரு கான்ஸ்டபிள்.

“கான்ஸ்டபிள் கா பச்சா! வா உனக்கும் போடுகிறேன்” என்றேன். அவன் உக்கிரமானான். “சார்! நான் இவனை அழைத்துச் செல்கிறேன் உள்ளே” என்று கைகளைத் தேய்த்துக்கொண்டான். 

“கிட்ட நெருங்காதே, கிழிப்பேன்” என்றேன். 

“மிஸ்டர் ஜேகே! டோண்ட் பி இம்பாஸிபில், நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். சட்டப்படி நீங்கள் குற்றம் செய்தவர். எக்ஸைஸ் விதிகளை மீறி ஓப்பியம் கடத்தினீர்கள். போலி நோட்டுகளைப் பரப்பி இருக்கிறீர்கள். சர்க்கார் உத்தியோகஸ்தனைத் தன் கடமையைச் செய்வதிலிருந்தும் தடுத்தீர்கள்…” 

“இதை எல்லாம் நான் முன்பே கேட்டுவிட்டேன், நான் சொல்வது என்னவென்றால்…” 

“நானும் இதை முன்பே கேட்டுவிட்டேன். நாளை மாஜிஸ்டிரேட்டிடம் சொல்லுங்கள். தயவுசெய்து வருகிறீர்களா?”

“மாட்டேன்”. 

“கான்ஸ்டபிள்” 

“நான் கவனிக்கிறேன் சார்”

“கிட்ட வராதே. உதை படுவாய்” என்று முஷ்டிகளைத் தயாராக வைத்துக்கொண்டேன். ஏன் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறேன்? என் ரத்தம் ஏன் இப்படி அநாவசியமாகக் கொதிக்கிறது? ஏன் எனக்கு இருக்கும் சந்தர்ப்பங்களை அரிதாக்கிக் கொள்கிறேன்? 

பேசாமல் கேள்வி கேட்காமல் உள்ளே நடக்க வேண்டியவன்தானே!

கான்ஸ்டபிள் என்னருகே வந்து நான் அவனை அடித்து, அவன் என்னைத் திரும்ப அடித்துக் கலாட்டா ஆகி… இப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதற்கு முன் எல்லோர் கவனத்தையும் கவரக்கூடிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கப்பல் போல ஒரு கார் – இம்பாலா என்று நினைக்கிறேன் – அது வந்து போலீஸ் நிலையத்தின் வாசலில் நின்றது. அதுமிக மென்மையாகத் திறக்கப்பட்டு, சாத்தப்பட்டு, ஒரு ஆசாமி இறங்கினார். நேராக உள்ளே வந்து “ஒன் மினிட் ஆபீசர்” என்று அந்த அதிகாரியைக் கூப்பிட்டார்.

அதிகாரி அவரைப் பார்த்ததும் உடனே நிமிர்ந்தார். “கான்ஸ்டபிள் கொஞ்சம் இரு” என்றார். வந்தவர் அருகில் சென்றார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள். வந்தவர் பேச்சில் அடக்கமும், அதிகாரமும் தென்பட்டது. அவர் நல்ல உயரமாக, தொப்பை போட்டதைக்கூட சமாளிக்கக்கூடிய உயரமாக இருந்தார். கண்ணாடி ஃப்ரேம் தங்கம் காட்டியது. மோதிரங்கள் ஜ்யோவின் புன்னகையைப் போல மின்னின. அணிந்திருந்த கதர் இம்போர்ட்டட் ஆக இருக்க வேண்டும். 

அதிகாரி பவ்யமாக சன்னிதானத்துக்கு முன் ஜுனியர் சிஷ்யன் போலக் கேட்டுக்கொண்டிருந்தார். அடிக்கடி தலை ஆடியது. 

வந்தவர் பேச்சை முடித்தார். தன் இம்பாலாவை நோக்கி நடந்தார். டிரைவர் கதவைத் திறந்து காத்திருக்க, உள்ளே திணித்துக் கொண்டார். கதவுகள் மரியாதையுடன் சாத்தப்பட்டு கார் மரியாதையுடன் கிளம்பி என் காட்சியிலிருந்து மறைந்தது. 

அவரை வழியனுப்பிவிட்டு வந்த அதிகாரி என்னருகே வந்தார். “காப்டன் ஜேகே!” என்றார். 

“எஸ்.” 

“உட்காருங்கள். கோலா சாப்பிடுகிறீர்களா ? ஏய் 1182! ஷர்மா கடையில் போய் ஐஸ் போட்டு கோலா ஒன்று உடைத்துக்கொண்டு வா”.

“எனக்கு வேண்டியது ஆஸ்ப்ரின். என்ன இந்தத் திடீர் மாற்றம்?”

“காப்டன் நீங்கள் இதை முன்னமேயே சொல்லியிருக்க வேண்டும்?” 

“எதை?” 

“அவரை உங்களுக்குத் தெரியும் என்பதை.” 

“எவரை?” 

விஷமமாக, கிருஷ்ண பரமாத்மா போலச் சிரித்தார். “நீங்கள் நன்றாக நடிக்கக்கூடியவர், எனவே ‘ஐ’ம் வெரி ஸாரி. உங்களுக்கு இவ்வளவு சிரமம் ஏற்படுத்தியதற்கு ஸாரி. ஸாரி – ஸாரி. கோலா எங்கேடா? நீங்கள் போகலாம்.” 

“யூ மீன்! நீங்கள் என்னைக் கைது செய்யப்போவதில்லையா ?”

“கைதா? யார் சொன்னார்கள்? உங்கள் மீது குற்றம் ருசுவாகவில்லை. நீங்கள் போகலாம். யூ ஆர் ஃப்ரி!” 

“வாட் இஸ் ஆல் திஸ் ஆபீசர்!”

“உங்களுக்கே தெரியுமே!” 

“நிச்சயமாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைக் கைது செய்யக் கூப்பிடுகிறீர்கள். திடீர் என்று ஸோடா கொடுத்துப் போடா என்கிறீர்கள். என்ன இது விளையாட்டா? அந்த இம்பாலா யார்?”

“நீங்கள் இப்போது எங்களைக் கேலி செய்கிறீர்கள், செய்யுங்கள். ஆனால் இந்த விஷயத்தை தயவுசெய்து மேலே கிளறாதீர்கள். அது எங்கள் லெவலுக்கு மிகவும் மேற்பட்ட விவகாரம். உங்களை நாங்கள் அரெஸ்ட் செய்யவில்லை. எங்கள் வண்டி தருகிறோம். எங்கே வேண்டுமோ அங்கே கொண்டு விட்டுவிடுகிறோம். மன்னிப்பு வேண்டுமானால் எழுதிக்கூடத் தருகிறோம். தயவுசெய்து போகிறீர்களா?” 

நான் புரியாமல் வெளியே வந்தேன். “ஜீப் தயாராக இருக்கிறது, காப்டன்” என்றார் அதிகாரி. நான் ஜீப்பில் யோசித்துக்கொண்டே உட்கார்ந்தேன். ஜேகே விமானத்தில் டப்பா கொண்டுவருகிறான், கைதாகிறான், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகிறான் – திடீரென்று ஒரு புள்ளி விஜயம் – போலீஸ்காரர்கள் குழைந்து பிரிவுபசாரம் செய்கிறார்கள். என்ன இதெல்லாம்? என்ன இதெல்லாம் என்கிறேன்.

“எங்கே போகணும் சார்?” 

“கைலாஷ் காலனி” என்றேன். 

எனக்கு மிகவும் அமைதி தேவையாயிருந்தது. ‘ஆராம்’ தேவையாயிருந்தது. இளமை தேவையாயிருந்தது. 


“ஜ்யோ! ஐ நீட் எ ட்ரிங்க், எ ஸ்டிஃப் ட்ரிங்க்.”

“ஜேகே! எங்கே போயிருந்தாய்?” 

“ஜெயிலுக்கு.” 

“ஹௌ எக்ஸைட்டிங்! ஜெயிலில் ஒரு தடவை…”

“ஷட் அப். எனக்கு நிறைய விஷயங்கள் புரியவில்லை. ஐயோ! நான் குளிக்க வேண்டும்!”

“நான் குளிப்பாட்டுகிறேன்…” 

“ஜ்யோ! டைரக்டரியில் எல்லா பரமேச்வரன்களையும் பார். அட்ரஸ்களை எடுத்துக்கொள். நாம் வெளியே போகப் போகிறோம்!” 

“பரமேச்வரன்!” 

ஒரு வடிகட்டின பாஸ்டர்ட், டாக்டர் பரமேச்வரன்! அவன் சொன்னதில் கொஞ்சம் நிஜம் இருந்தது – “ஜ்யோ! ஐ வாண்ட் டு டேக் எ சான்ஸ்.” 

“காப்டன் நீங்கள் சொல்வது எனக்குப் புரியவே இல்லை. விஸ்கி?”

“இல்லை… இன்னும் இல்லை.” 

“ஷெல் ஐ?” 

“நோ! நான் குளிக்க வேண்டும். கூட வராதே, ஒரு டவல் கொடு போதும். ரொம்ப உஷ்ணமாக உணர்கிறேன்.” 

“அதற்குக் குளித்தால் போதாது’ 

“ஜ்யோ யூ ஆர் எ நிம்ஃபோ”

“ஸ்பெல்லிங்?” 

“உடம்பை மூடிக்கொள். ஸ்பெல்லிங் சொல்கிறேன். ஜ்யோ நீ படித்த புத்தகங்கள் தப்பு. நீ நினைக்கும் எண்ணங்கள் தப்பு. உன் மேல் எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா. உன்னை ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து…. பட் பிஃபோர் தட் பரமேச்வரன்! டாக்டர் பரமேச்வரன், உன்னைத் தேடாமல் அடுத்த வேளை சாப்பாடு கிடையாது எனக்கு… டவல் எங்கே?”

உஷ்ணமான வென்னீர். எக்ஸ்போர்ட் ரக சந்தனசோப், ஷாம்பூ, மறுபடி உஷ்ணமான வென்னீர். நீராவியில் கலந்த மணம். குளிக்கும் அறையின் அத்தனை சுத்தம்… உலகத்தில் எவ்வளவு சின்னச் சின்ன இன்பங்கள் இருக்கின்றன…


“ஜ்யோ நீ வருகிறாயா இல்லையா?” 

“ஒன் மினிட் காப்டன், அந்த பட்டன்…” 

“நான் போடமாட்டேன். உனக்கு சாமர்த்தியமிருந்தால் போட்டுக் கொள். அனாவசியத்துக்கு நீ இந்தக் கதையில் செக்ஸைச் சேர்க்கிறாய். அட்ரஸ்கள் எழுதிக்கொண்டாயா?”

“எழுதிக்கொண்டேன் காப்டன். இப்போது மணி எட்டரை!” 

“விடியும்வரை தேடப் போகிறேன். அப்புறம் அந்த நூறு ரூபா நோட்டுகள். எங்கே வைத்தேன் அவைகளை?”

“எனக்கு எப்படித் தெரியும்.” 

“மற… ஜ்யோத்ஸ்னா!” 

ஜ்யோ என்னைத் தாக்கினாள்! க்ரீம் நிறத்தில் ஸாரி. நெற்றியில் கரீம் நிறத்தில் பொட்டு. காதில் க்ரீம் நிறத்தில் ஏதோ தொங்கல். க்ரீம் நிறத்தில் வளையல்கள். 

“ஹௌ டு ஐ லுக்?” 

“டிஸ்டர்பிங், என்னிடமிருந்து மூன்றடி தள்ளி வா. டாக்ஸியில் நான் முன் ஸீட்டில்தான் உட்காரப் போகிறேன்.” 

“உன் இஷ்டம். நாளைக்கு குமார் வருகிறான்.”

“என் அதிர்ஷ்டம்.” 


சர்தார்ஜி ஜ்யோவை ஒருவிதமாகப் பார்த்தான். தன் மீசையை ஒரு தடவை தள்ளிக்கொண்டு கொடியை மடக்கினான். “எங்கே?” என்றான். 

உள்ளே லைட்டைப் போடச் சொல்லி முதல் விலாசத்தைச் சொன்னாள். “போ” என்றேன். 

க்ரீன் பார்க்கின் அமைதியில் இருந்தது அந்த வீடு. தேடிப் பிடிப்பதற்கு நிறைய நேரமாகிறது. அந்த வீட்டின் கதவைத் தட்டியதும் ஒரு நேபாளி கதவைத் திறந்தான். 

“டாக்டர் பரமேச்வரன் இங்கேதானே இருக்கிறார்?” 

“அவர் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறார். 

“எந்த ஆஸ்பத்திரி?”

“ஆல் இண்டியா இண்ஸ்டிட்யூட்.”

“எதற்கு?”

“அவருக்கு ட்யூட்டி.” 

“அவருக்கு எத்தனை வயதிருக்கும்?”

அவன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “ஏன் ?” என்றான்.

“சும்மா சொல்லு, எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் பரமேச்வரனைத் தேடுகிறோம். இந்த அட்ரஸ் கிடைத்தது. அவர் தானா என்று பார்க்க வேண்டும்.” 

அவன் தயங்கினான். எதிரே ஓர் இளைஞனின் படம் மாட்டி இருந்தது. 

“அது யார்?” என்றேன். 

“அதுதான் டாக்டர் சாப்.”

“ஜ்யோ நட!” என்றேன். 

“உங்கள் பெயர்?” என்றான் நேபாள். 

“ஜேகே. என்னை அவருக்குத் தெரியாது. வா!”

அவன் தலையை ஆட்டிவிட்டு நேபாளியில் முனகிக்கொண்டே கதவைச் சாத்தினான். 

“காப்டன் இது ஒரு விரயமான தேடல்” என்றாள் ஜ்யோ! 

“நெவர் மைண்ட்.” 

“எங்கே போகவேண்டும்?” என்றான் சர்தார்ஜி, “அடுத்த அட்ரஸ்” என்றேன்! 

அடுத்த அட்ரஸில் கிடைத்த டாக்டர் பரமேச்வரன் ஒரு நிழலான டாக்டர். ஜ்யோவை சந்தேகத்துடன் பார்த்து, “உள்ளே வா, கவலைப் படாதே. நான் கவனித்துக் கொள்கிறேன். எல்லாம் சரிப்படுத்திவிடலாம்” என்றார். 

சடுதியில் கழன்று கொண்டு, “அவன் என்ன சொன்னான்?”  என்றாள் ஜ்யோ!  

“தப்புக் காரியம் செய்துவிட்டுக் கலைக்க வந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்!” 

ஜ்யோ சிரித்தாள், “ஐ விஷ்” என்ற அவளை ஆரம்பத்தில் வெட்டினேன். 

மூன்றாவது டாக்டர் பரமேச்வரனின் விலாசத்தில் கதவைத் தட்டியதும் தானாகவே திறந்துகொண்டது. 

தயக்கத்துடன் உள்ளே நுழைந்தோம். இடது பக்கத்து அறையில் வெளிச்சம் தெரிந்தது, “டாக்டர் பரமேச்வரன்” என்று கூப்பிட்டுக் கொண்டே அந்த அறையை நெருங்கினோம். அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தோம். 

ஜ்யோ அலறின அலறலில் நான் சுத்தமாக ஒரு போயிங் 747 டேக் ஆஃப் செய்தேன். 

ஜேகே தன் விருப்பத்திற்கு எதிராகப் பிரயாணம் செய்யும் 

ஆறாம் அத்தியாயம் 

டாக்டர் பரமேச்வரன் அங்கே தரையில் என்னவோ மாதிரிக் கிடந்தார். 

“ஜ்யோ! ஏன் கத்தினாய்? அந்த மனுஷன் தூங்கிக்கொண்டிருக்கலாம்…” என்றேன். 

“ஐ திங் ஹி இஸ் டெட்!” என்றாள் ஐயோ! “ஜேகே, வா போய் விடலாம். நமக்கு வம்பு வேண்டாம். எதையும் தொடவேண்டாம்”.

“டோன்ட் பி ஸில்லி” – கீழே கிடந்த டாக்டர் பரமே, நான் தேடினவர் தான். அவர் கிடந்த விதம்தான் சரியாக இல்லை. தூங்குகிற மாதிரியும் இல்லை. குடித்திருந்த மாதிரியும் இல்லை. கைகால் எல்லாம் காரே மூரே என்று தின வாழ்க்கையில் நாம் முயற்சி செய்யவே முடியாத ஒரு போஸில் இருந்தன. 

நான் அருகே சென்றேன். 

“ஜேகே வேண்டாம். நாம் ஓடிவிடலாம்” என்றாள். 

நான் அவளைக் கவனிக்காமல் அவரைத் தொட்டுத் திருப்பினேன். பனியனில் இருந்தார். தலை அண்ணாந்திருந்தது. மூக்கு நுனி லேசாக அசைகிறதா? தெரியவில்லையே! மூச்சு இருக்கிறதா என்ன!

“டாக்டர்” என்று லேசாக உசுப்பினேன். 

குபீர் என்று தன்னை அவிழ்த்துக்கொண்டு எழுந்தார். ஜ்யோ மறுபடி ஒரு ஸுப்பர்ஸானிக் அலறல் நிகழ்த்தினாள். 

“வாட் ஹாப்பன்ட்?” என்றார் டாக்டர். அவர் நேராகிவிட்டார். என்னைப் பார்த்தார். “ஓ காப்டன் ஜேகே! இருங்கள். ஷர்ட் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறேன். யோகாசனம் செய்து கொண்டிருந்தேன். மயூராசனம். அந்தப் பெண் யார்? ஏன் அலறினாள்?” 

“யோகாசனமா! உடம்பை யாரோ முடிச்சுப போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் என்று எண்ணினேன்! டாக்டர்! நான் உங்களுடன் யோகாசனம் பேச வரவில்லை. எனக்கு எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் நீங்கள்”. 

“முதன் முதலில், காப்டன் ஜேகே, உட்கார். பாப்பா! எத்தனாவது படிக்கிறாய்?” என்றார், ஜ்யோவைப் பார்த்து. 

“இவளா பாப்பா ? சரியாகப் பார்த்துப் பேசும்!” என்றேன். 

“என் கண்ணாடி அங்கே இருக்கிறது. அதை எடுத்துத் தருகிறீர்களா?”  

“ஜ்யோ” என்றேன். 

கண்ணாடி அணிந்துகொண்டு ஜ்யோவை மேலும் கீழுமாகப் பார்த்தார். ஜ்யோ தன் நகத்தை ஆராய்ந்து கொண்டு நின்றாள். 

“என் கஸின் ஜ்யோத்ஸ்னா.” 

“ஷி இஸ் ப்யூட்டிஃபுல்” என்றார். “இன்னும் ஒரு வருஷம் இரண்டு வருஷங்களில் பெருத்துவிடுவாள். நான் ஒரு ஆசனம் சொல்லித் தருகிறேன். செய்கிறாயா? மார்பு நன்றாக…”

“டாக்டர்! நான் பேச வந்தது ஜ்யோவின் மார்பைப் பற்றி அல்ல. நீங்கள் என்னிடம் கொடுத்த பணம். உங்களுக்காக நான் கொண்டு வந்த அந்தக் கருவிகள் – நடந்தது தெரியுமா உங்களுக்கு..?”

“காப்டன் ஜேகே! உங்களுக்கு நான் வந்தனம் சொல்ல வேண்டும். ஆராய்ச்சி மிக அற்புதமாக முடிந்தது. அந்த விண்டிலேஷன் கௌண்ட்டர்…” 

‘ஹஹ் ஹஹ்’ என்று சிரித்தேன். “பரமேச்! இந்த வேலை வேண்டாம். கமான்! அவுட் வித் இட்”

“என்ன?” 

“ஆராய்ச்சியா? ஆராய்ச்சி எதில்? ஓப்பியம் கடத்துவதிலா? நூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதிலா? எனக்கு என்ன குடுமியா?” 

“டாக்டர் அது என்ன ஆசனம் சொன்னீர்கள்?”

“ஷட் அப் ஜ்யோ!” 

“ஜேகே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” 

“இன்று மாலை நான் அரெஸ்ட் ஆனேன். ஓப்பியம் கடத்தினதற்காக. போலி நூறு ரூபாய் நோட்டுகளை உபயோகப்படுத்தியதற்காக.”

“நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் இல்லையா ?”

“ஆம்.” 

“நீங்கள் இப்போது சுதந்திரமானவர்தான்”

“ஆம்.” 

“அவ்வளவுதானே!” 

“டாக்டர்! என்னிடம் அந்தப் போலி நோட்டுகள் பாக்கி இருக்கின்றன! தெரியுமா?”

“அவைகளைக் கொண்டுவாருங்கள் ! மாற்றிக் கொடுக்கிறேன்.” 

“டாக்டர். நீ டாக்டர் தானே!”

“ஆம்!” 

“என்ன இதெல்லாம்? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது. கேள்வி கேட்பது கெட்ட பழக்கம். .. காப்டன்! அந்த நூறு ரூபாய் நோட்டுகளில் இரண்டோ மூன்றோதான் போலி. பாக்கி எல்லாம் நிஜம். இந்த தவறு இனி நிகழாது”. 

“இனி என்றால்?”

“இனிமேல் நீங்கள் எங்களுக்குச் செய்யப்போகும் காரியங்களுக்கு.” 

“நீங்கள் யார்?”

“அப்புறம் சொல்கிறேன்.” 

“டேய் டாக்ட். விளையாடாதே! எனக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது! சொல்லித்தான் ஆக வேண்டும். என்ன இதெல்லாம்? அரெஸ்ட் செய்கிறார்கள். கை சொடுக்கும் நேரத்தில் விடுதலை செய்கிறார்கள்!”

“காப்டன் என் சட்டையை விடுகிறீர்களா?” 

“விட்டேன்.”

“காப்டன் உங்களுக்கு நிறைய பணம் செய்ய ஆசையா?” 

“அச்சடித்தா?” 

“இல்லை. ரிஸர்வ் பாங்க் பணம். உண்மையான பணம். அவள் இளமையைப் போல உண்மையானது. ஸாலிட் காஷ்!”

“எனக்கு வேண்டியது பணம் இல்லை, பதில்கள்”.

“கிடைக்காது!” 

“என்ன?” 

“நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காது. உங்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தில் நம்பிக்கையிருந்தால், கவலை இருந்தால் கேள்வி கேட்கக் கூடாது. சொல்கிற சில சிம்பிளான காரியங்களைச் செய்ய வேண்டும். செய்தால் பலன் தரும். தங்கம் சொரியும்.”

“என்னை முட்டாளாக்கியதை நான் மறக்க முடியாது. பரமேச்வரன். நான் வருகிறேன்! ஜ்யோ!” என்றேன். 

“டாக்டர் அந்த ஆசனம்…” 

“ஆசனம் நான் கற்றுத் தருகிறேன்; முன்னூறு விதங்களில். வா!”

“இருங்கள். எதற்காக இப்படி பாப்கார்ன் மாதிரி வெடிக்கிறீர்கள்? என்ன நிகழ்ந்துவிட்டது? சற்று சிரமம்; அவ்வளவுதானே. ஒரு ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டீர்கள். திருப்பிக் கொண்டுவிடப்பட்டீர்கள். அவ்வளவுதானே”

“என்னை ஏன் விஞ்ஞானம், ஆராய்ச்சி என்றெல்லாம் ஏமாற்றினீர்கள்?”

“மறுபடி கேள்வி.” 

“நான் உன்னைக் கவனிக்கிற விதத்தில் கவனிக்கிறேன். வா ஜ்யோ!” 

“மறுபடி சந்திக்கலாம்” என்றார். ‘மிஸ்! ஆர் யூ ஷ்யூர்? அந்த ஆசனத்தைக் கற்றுக்கொள்ள விருப்பமில்லையா? காப்டன் போகட்டுமே” 

“ஜ்யோ!” என்றேன். 

நான் கிளம்ப அவள் தயக்கத்துடன் என் முன் சென்றாள். பின்னால் ஒரு தடவை டாக்டரைத் திரும்பிப் பார்த்தாள், “டாட்டா” என்று என் முதுகில் கேட்டது. எனக்கு மிகவும் குறையாக உணர்ந்தேன். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்துகொள்ளவில்லை…

“உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். ஹிப் பாத் எடுத்துக் கொண்டால் நல்லது…”என்றார் டாக்டர். 

வெளியே டாக்ஸி காத்துக்கொண்டிருந்தது. “லெடஸ் கோ ஹோம்” என்றேன். 

“ஜேகே எனக்கு ஒன்றும் புரியவில்லை.” 

“எனக்குக் கூடத்தான். தப்பாக உன் அருகில் உட்கார்ந்துகொண்டு விட்டேன்.

அருகில் உராய்ந்தாள். “ஜேகே! ஹிப் பாத் என்றால் என்ன?” என்றாள். 

“காட்டுகிறேன்” என்றேன். 


கைலாஷ் காலனியில் அவளை விட்டுவிட்டு அவசரமாக விடை பெற்றுக்கொண்டேன். அவள் விடை தர மறுத்தாள். சர்தார்ஜி சலித்துக் கொண்டான். 

“நீ போ!” என்றாள், அவனிடம் பதினைந்து ரூபாயைக் கொடுத்து விட்டு, டாக்ஸி விலகியது.

நான் வாசலில் நின்றேன். மணி இரவு 11.30 ஆகி இருந்தது. ஜ்யோ கதவைத் திறந்தாள். சென்றோம். நான் நாற்காலியில் பாய்ந்தேன்.

“அங்கே உட்காரதே” என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.

“ஜேகே! குமார் வரப்போகிறான்” என்றாள். 

“ஸோ?” 

“நேரம் அதிகமில்லை.” 

“ஸோ?” 

“முட்டாள். முட்டாள் ! முட்டாள்! பாசாங்கு செய்கிறாயா?” 

“ஜ்யோ! நான் யார்! ஓர் உபரி பைலட் என்னைச் சக்கையாக ஏமாற்றுகிறார்கள். என் நண்பர்கள் எல்லாம் போயிங்கில் போகிறார் கள். எனக்கு எவ்வித கௌரவமும் சௌக்கியமும் இல்லை. மருந்து அடிக்கிறேன். அந்தக் கிழவன் கொடுத்த போலி ரூபாய்க்குக் குற்றங்கள் செய்கிறேன். என் பொறுப்பில் இருக்கும் பெண்ணிடம்…. பெண்ணிடம் பொறுப்பு இல்லாமல் நடந்துகொள்கிறேன். நீ என் குழந்தை மாதிரி. உனக்கு இருக்கும் இளமை ஒரு விதமான சொத்து. உன் கன்னிமை ஒரு சொத்து. அதை இந்த மாதிரி நீ தயாராக இழப்பதில் ஆர்வம் காட்டுவதில் உன்மேல் எனக்கு மோகம் போய்விடும் தெரியுமா! இவ்வளவு நேர்த்தாக்குதல் செய்யக்கூடாது. பிகு செய்துகொள்ள வேண்டும். தொட்டால் சிணுங்க வேண்டும். கைகளை விலக்க வேண்டும். நகத்தால் கீற வேண்டும். கதவுகளைத் திறக்கக்கூடாது. உடைகளை எளிதில் களையக் கூடாது. நீ அசட்டுப் பெண். ஏன் இப்படி இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி தயாராகிறாய்?”

“ஜேகே நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளட்டுமா..?” 

“எப்பொழுது?” 

“இப்பொழுது! ஏதாவது ஆபீஸ் திறந்திருக்கிறதா? யாரையாவது எழுப்பலாமே. லெடஸ் மாரி!” 

சிரித்தேன். “ஜ்யோ! நீ என்ன விரும்புகிறாய்?” 

“ஃப்ரி லவ். வார்த்தைகள் இல்லாமல்.” 

“நீ பிகு செய்து கொள்ளாவிட்டால் நான் பிடிவாதம் பிடிக்கப் போகிறேன். ஜ்யோ நாம் செய்வது குற்றம். நான் என் அறைக்குப் போகிறேன்.” 

“என்னைப் பார் ஜேகே!” 

அவளைப் பார்த்தேன். ஜ்யோவின் கண்கள் கேட்டன. அவள் அங்கே இருந்த உண்மைப் பரிமாணம், வாசனை இயக்கம், அவள் மூச்சு எல்லாம் கேட்டன. 

“நோ!” என்று எழுந்தேன். “ஐ டோண்ட் ஃபீல் லைக் இட்”

“ஏன்?” என்று கேட்டுவிட்டு மற்றொரு கேள்வி கேட்டாள்.

“அப்படி இல்லை” என்றேன். “என்னை மன்னித்துக்கொள், நான் ஒன்றும் காந்தி இல்லை! ஆனால் இன்றைக்கு இந்தச் சூழ்நிலையில் இது தப்பு என்று படுகிறது. மற்றொரு நாள் மற்றொரு சூழ்நிலையில் மாறலாம்! குட்நைட்” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்து அவளைக் கவனிக்காமல் கிளம்பிவிட்டேன். 


வெளியே வந்து எனக்கு திடீரென்று பசி தோன்றியது. இப்பொழுது கனாட் ப்ளேஸில் தான் கடைகள் திறந்திருக்கும் அங்கே போய்க் கூட்டத்தில் சங்கீதத்தின் நடுவில் சுரண்டி முள் குத்தி அறுத்துச் சாப்பிட விருப்ப மில்லை. எனக்கு டாக்ஸி இப்போது கிடைக்காது. கார் இல்லை.

மெதுவாக நடந்தேன் எல்லா வீடுகளும் தூங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று பகல் வெளிச்சமாகி எல்லா வீடுகளின் சுவர்களை மட்டும் மாயமாக மறைய வைத்துவிட்டால் என்ன என்ன ஆச்சரியங்கள் தெரியும் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரு பெண் படுக்கையில் விம்மிக்கொண்டிருப்பாளா? கரங்கள் விளையாடுமா? உடல்கள் பின்னுமா…உடலகள் ! உடல்கள்!

ஜ்யோ சற்று என்முன் நின்றது, எனக்கு இடுப்புப் பிரதேசத்தில் ஞாபகம் வந்தது. ஜ்யோவிடம் இருந்த வேங்கைப் புலியின் ‘ஸ்லீக்’ அமைப்பு என்னுள் பாய்ந்தது. 

என்ன முட்டாள் நான்! நின்றேன். திரும்பினேன். மறுபடி அவளை நோக்கி நடக்க முற்பட்டேன். 

அப்போது என் அருகே ஒரு கார் வந்து நின்றது. அதில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது இருளில் தெரியவில்லை.

இருட்டிலிருந்து “ஜேகே” என்று குரல் கேட்டது. “யெஸ்” என்றேன், மிகுந்த ஆச்சரியத்துடன். 

“காருக்குள்ளே வாருங்கள்”. 

“எதற்கு?” 

“கேள்விகள் வேண்டாம். உள்ளே வா” என்று ஒரு கட்டைக்குரல் கேட்டது. டிரைவரின் முகம் தெரிந்தது. எனக்குப் பரிச்சயமில்லாத முகம். 

“நீங்கள் எல்லாம் யார்?” 

“உன் நண்பர்கள். ஏறு காரில்!”

“முடியாது” என்றேன். ஓடத் தயாராக இருந்தேன். 

“ட்ரீட்மெண்ட் கொடு” என்றது இருட்டு. காரின் முன் கதவுகள் தோகை விரித்தன. இரண்டு பேர் சிக்கனமாக என்னிடம் வந்தார்கள். என் புஜங்களைப் பிடித்து இழுத்தார்கள். நான் திமிர, மற்றொருவன் – அவனும் முன் சீட்டிலிருந்து வந்தவன் – சேர்ந்துகொண்டு என்னைக் காருக்குள் திணித்தார்கள். என் உடல் முழுவதும், என் முகத்தில்,  என் மார்பில் கைகள், முரட்டுக் கைகள். 

“ஜேகே ஏதாவது சப்தம் போட்டுத் திணறும் நோக்கம் இருந்தால் சொல்! உடனே இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்துக்கு நினைவு திரும்பாத வகையில் உன்னைச் செய்ய முடியும்.” 

“வேண்டாம்” என்றேன். 

“நல்ல பிள்ளையாக இரு. உனக்கு ஒன்றும் நிகழாது. பயப்படாதே.”

மிக வேகமாக கார் சென்றது. அதன் கண்ணாடிகளில் கறுப்பு ஏறியிருக்க வேண்டும். வெளியே தெரு விளக்குகள் மிகக் கருமஞ்சளா தெரிந்தன. ரிங் ரோடில் போவது போலிருந்தது. அதிகம் டிராஃபிக் இல்லாத சில ரோடுகள் கடந்து மறுபடி சாணக்கியபுரிப் பக்கம் செல்வது போலிருந்தது, நான் சாயந்துகொண்டேன். திடீரென்று என் பயங்கள் விலகிவிட்டன. என்னதான் ஆகிறது பார்த்துவிடலாமே! என் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை. சில ஆசாமிகளுக்கு நான் தேவையாக இருக்கிறேன் என்று தெரிகிறது. எதற்கு என்பது தெரிய வில்லை. இருந்தும் அது தெரியாதவரை அந்த ஆர்வம் தரும் ரத்தத் துடிப்பில் எதிர்பார்ப்பில் ஓர் ஆனந்தம்கூட ஏற்பட்டுவிட்டது. எது வேண்டுமானாலும் நடக்கட்டும்! நான் செலுத்தப்படுகிறேன். இதெல்லாம் நீட்டாக அமைக்கப்பட்ட கட்டட வேலைபோல் தெரிகிறது. எல்லாம் நேரம் பார்த்து அளந்து செய்வதுபோல் தெரிகிறது. முதலிலிருந்து எல்லாமே! பார்த்துவிடலாம். முடிவு வரை பார்த்துவிடலாம்! 

கார் மெலிதாகத் தெரிந்த காம்பவுண்டுக்குள் நுழைந்து ஒரு பெரிய வீட்டைச் சுற்றி வந்து அதன் பின்புறத்தில் நிற்பது தெரிந்தது. ஏறச் சொன்னார்கள். ஒரு கண்ணாடிக் கதவை சாவி போட்டுத் திறந்தார்கள். திறந்து மெலிய இருட்டில் உட்சென்று ஒரு திரையை விலக்கி என்னை அழைத்துச் சென்றார்கள். மாடிப்படி ஏற வைத்துச் செங்கல் சிவப்பில் கம்பளம் அமைத்த ஒரு ஹாலின் நடுவே நிறுத்தி, அவர்கள் விலகிக் கொண்டார்கள். நான் சுற்று முற்றும் பார்த்தேன். நின்றேன். 

“வெல்கம் காப்டன் ஜேகே!”

சரேல் என்று திரும்பினேன். 

– தொடரும்…

– 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *