கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 4,033 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-15

ஜேகே அந்த விமான நிலையத்தில் இரவைக் கழிக்கும்

பதினோராம் அத்தியாயம் 

இந்தக் கதையை மேலே தொடர்வதற்கு முன் எனக்கு வரும் விதவிதமான கடிதங்களில் இரண்டு உதாரணங்கள் தருகிறேன். உலகத்தில் உள்ள எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்களில் பிறர் கடிதங்களைப் படிப்பதும் ஒன்றல்லவா! 

முதல் கடிதம் சைதாப்பேட்டையிலிருந்து ஒரு கணவன் – மனைவி தம் குழந்தைக்கு அரவிந்தன் அல்லது ஷ்யாம் சுந்தர் என்று பெயர் வைப்பது பற்றி என் அபிப் பிராயத்தைக் கேட்பதற்கு முன், “எத்தனையோ விஷயங்களில் சண்டை போட்டுக்கொள்ளும் நாங்கள், தங்களின் கதையைப் படிப்பதிலும் விமர்சிப்பதிலும் ஒற்றுமை” என்கிறார்கள். என் பதில் : “வந்தனம், அரவிந்தன்”.

மற்றொரு கடிதம் வத்தலகுண்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்சிலிருந்து ஒரு சினேகம் நிரம்பிய ‘ஹல்லோ’, ப்ரொப்பெல்லர் விமானத்தில் ஆட்டோ பைலட் வசதி இருக்குமா என்று சந்தேகித்திருக்கிறார் இவர். பதில்: இருக்கும். இருக்கிறது. 


சற்று கவனக்குறைவாக இருந்தபோது காணாமற் போய்விட்டாளா என்ன? அந்த அறையை விட்டு விருட் என்று வெளிவந்தேன். வந்த இடம் ஒரு மாதிரியான அரை வட்ட ஹால் என்று சொல்லலாம். நாற்காலி, மேஜை போட்டுச் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சுவர் எங்கும் சர்க்குலர்கள், நோடிஸ் டு ஏர்மன் ஏர் ஹெட் குவார்ட்டர்ஸ் சிக்னல்ஸ். விமானம் ஓட்டுவதன் பத்திரத்தைப் பற்றிய வாக்கியங்கள் தொங்கின. விமானப்படை ஆசாமிகள் இரண்டு மூன்று பேர் அலைந்து கொண்டிருந்தார்கள். அவளைக் காணவில்லை. அங்கு இருந்த வாரண்ட் ஆபிஸரின் அருகில் ஒழுங்காக அடுக்கியிருந்த துப்பாக்கி என் கண்ணில் பட்டது. ‘எடுத்துக் கொள்’ என்று வரவேற்கும் வரிசை. திடீரென்று என்னுள் பயம் ஏற்பட்டது. சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் ? “நிஷா!” என்று சற்று உரக்கவே கூப்பிட்டுப் பார்த்தேன். ஒரு ஃப்ளைட் லெஃப்டினண்ட் திரும்பிப் பார்த்தார், அந்த ராணுவச் சூழ்நிலையில், அந்த இரவில் பெண் பெயர் உறுத்தி இருக்க வேண்டும்.

அவர் என் அருகில் வந்தார். “வாட் டு யு வாண்ட்?” என்றார்.

“ஒரு பெண்! என்னுடன் வந்தாள். அவளைக் காணவில்லை”

“அவள் அந்தப் பக்கம் சென்றாள்” என்று வெளியே கண்ணாடிக் கதவைக் காட்டினார். “டாய்லெட் எது என்று கேட்டாள். இங்கே பெண்களுக்குத் தனி இடம் கிடையாது என்றேன்” என்றார். நான் அந்தக் கதவை நோக்கி ஒரு கைப்பிடியைத் திருகித் திறந்ததும் நிஷாவின் மேல் மோதிக்கொண்டேன். 

“ஈஸி” என்றாள். 

“நிஷா! ஓ தேர் யு ஆர்! எங்கே போயிருந்தாய்?”

“சொல்லித்தான் ஆகவேண்டுமா? நான் இன்னும் தப்பிக்க…”

“சரி! சரி! நான் விமானப்படை முழுவதையும் உனக்குப் பின் அனுப்ப யோசித்திருந்தேன்! என்னுடன் இருக்க வேண்டும். என்னை விட்டு விலக்கூடாது. தெரியுமா!” 

“நான் தப்பித்து ஓடிவிட்டேன் என்றுதானே நினைத்தாய்?” 

“ஆம்.” 

“அதற்கு இன்னும் சமயம் வரவில்லை.” 

“சமயம் இனி வராது! மேலும், இந்த இடத்தில் நீ தப்பிக்க முடியாது! பூரா மிலிட்டரி! சூழ்ந்து கொள்வார்கள். கைதி என்று அவர்களுக்குத் தெரியாது. உன் கை விலங்கை விடுவித்ததற்கு நன்றியுடன் இரு. சொன்னால் ராத்திரி பூரா உன்னை அடைத்து வைப்பதற்கு டப்பாக்கள் இருக்கின்றன. இங்கே.” 

“இந்த இடத்தின் பெயர் என்ன?” என்றாள். சொன்னேன்.

“மிலிட்டரி விமான நிலையம்…” 

“ஆம்.” 

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மறுபடி இங்கு வரப்போகிறேன்” என்றாள்; “எப்பொழுது டில்லி போகப் போகிறோம்?”

“நாளைக் காலை” என்றேன். 

“ராத்திரிக்கு?”

“இங்கேதான் தங்க வேண்டும்.” 

“காப்டன் ஜேகே” என்று வாரண்ட் ஆபீஸர் என்னை கூப்பிட்டார். “என்னுடன் வா” என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றேன். 

அவர் கையில் ஒரு டெலிபிரிண்ட்டர் செய்தி இருந்தது. அதன் வாசகங்கள் என் கண்ணில் பட்டன. 

“அன்கிளாஸிஃபைட். மேராவிடமிருந்து க்ரூப் காப்டன் தாமஸுக்கு: காப்டன் ஜேகேக்கும் பிரயாணிக்கும் எல்லா வசதிகளும் ஏற்படுத்தவும்.” 

“உங்களுக்கு மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்திருக்கிறது இரவு தங்குவதற்கு ரெஸ்ட் ரூமில் ஏற்பாடு ஆகி இருக்கிறது. உங்கள் லக்கேஜ் எங்கே?” என்றார். 

“அவள் ஒருத்திதான்” என்றேன். 

“நாளைக் காலை உங்களுக்கு உதவி செய்வதற்கு இரண்டு மெக்கானிக்குகளை அனுப்புகிறேன். பெட்ரோல் நிரப்பவும் வசதி செய்கிறேன்”

“மற்றொன்றும் செய்யுங்கள். டில்லிக்குக் காலை ஒன்பது மணி சுமாருக்கு ஈ… ட்டி.டி. போட்டுக் கிளியரன்ஸ் வாங்கி வையுங்கள்”

“நோ ப்ராப்ளம்” என்றார். 

“கம் நிஷா” என்றேன். சாப்பிட்டோம். ஒரு எல்.ஏ.ஸி. எங்களுக்கு வழிகாட்ட, நாங்கள் இருட்டில் நடந்தோம். 

“உன் அப்பா மிகவும் செல்வாக்குள்ள ஆசாமி. உடனே கமாண்டிங் ஆபீசருக்கு சிக்னல் வந்துவிட்டதே!” என்றேன். அவள் பேசவில்லை. நல்ல இருட்டு. 

நிஷாவின் புஜத்தைப் பிடித்து இழுத்துச் சென்றேன். தவளைகள் திருகித் திருகிக் கத்திக்கொண்டிருந்தன. ஒரு நட்சத்திரம் தென்பட வில்லை. தூரத்தில் ஓநாய்கள் கைக்குழந்தைகள் போல ஓலம் இட்டுக் கொண்டிருந்தன. 

தனியாக பார்ரக் போலிருந்த ஒரு கட்டடத்திற்கு அழைத்துச் சென்று மூலையில் இருந்த அறையின் பூட்டைத் திறந்து விளக்குப் போட்டான். உள்ளே சுத்தமாக இருந்தது. கொசுவலை மாட்டிய கட்டில் ஒன்று இருந்தது. தம்ளர் தொப்பி போட்ட ஒரு மண் கூஜா, சுவரில் இந்திரா காந்தியின் படம். நிஷா சற்று நேரம் அப்படத்தை வெறித்துப் பார்த்தாள். 

கூட வந்தவன், “பாத்ரூம் இங்கே இருக்கிறது” என்று திறந்து காட்டினான். 

அவன் தலைமேல் சில பூச்சிகள் எலெக்ட்ரான்கள் போலச் சுற்றின. 

ஃபான் ஓடுகிறதா என்று கவலையுடன் போட்டு, ஓடுவதைப் பார்த்ததும் அவன் முகம் சற்று மலர்ந்தது (மலையாளத்து ஆசாமி) 

“எனிதிங் ஸார்!” என்றான். 

“ஏன் கட்டில் கால்களுக்கு அடியில் தண்ணீர் டப்பா வைத்திருக்கிறது?” என்று கேட்டேன். 

“பாம்பு அதிகம்” என்றான். 

நிஷா, அசுவாரசியமாக நின்று கொண்டிருந்தாள்.

“ஆபீஸர்ஸ் மெஸ் திறந்திருக்குமா?” என்று கேட்டேன்.

அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஸாரி ஸார்” என்றான்.

“மற்றொரு கட்டில் வேண்டுமே” என்றேன். 

“ஸாரி ஸார்” என்றான். 

“அந்தப் பூட்டைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்” என்றேன். கொடுத்தான், சாவியுடன். 

“காலை என்னை எழுப்ப வேண்டும்” என்றேன்.

“சரி” என்று சொல்லிவிட்டு விறைப்பாக சல்யூட் அடித்துச் சென்றான். 

நான் கதவைத் தாளிட்டு உள்பக்கம் இருந்த கொக்கிகளுக்குள் பூட்டை மாட்டிப் பூட்டிக் கொண்டேன். 

நிஷா கொசுவலையை விலக்கினாள். படுக்கை சுத்தமாக இருந்தது. ஒரு தலையணை எடுத்துக்கொண்டாள். 

கீழே போட்டாள். “நான் தரையில் படுத்துக் கொள்கிறேன்” என்றாள். 

“வேண்டாம், நீ கட்டிலில் படுத்துக்கொள்ளலாம்” என்றேன்.

அவள், “சென்ற பதினைந்து தினங்களாகத் தரையில் படுத்து பழக்கமாகிவிட்டது. மெத்தையில் படுத்துக் கொள்வதற்கு இன்னும் நேரம் வரவில்லை” என்றாள்.

நிஷா, தரையில் உட்கார்ந்து, தன் காலை ஆராய்ந்தாள்.

“காலில் என்ன?” என்றேன். 

“முள்” என்றாள். 

“நான் பார்க்கவா?” என்றேன். 

“வேண்டாம்” என்றாள். அவள் கால் சிவந்துதான் இருந்தது.

நான் கட்டிலில் உட்கார்ந்தேன். என் ஜாக்கெட்டைக் கழற்றினேன். என் சட்டையைக் கழற்றினேன். ஷூவைக் கழற்றினேன். அசதியும் அதிகமிருந்தது. சாவியைப் படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். 

“நிறைய இடம் இருக்கிறது. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஐ பிராமிஸ். வா!” என்றேன். 

“நோ” என்றாள் சிக்கனமாக. எனக்கு மெத்தையில் படுப்பது குற்ற உணர்ச்சி தந்தது. அவள் இன்னும் தன் காலை ஆராய்ந்த கொண்டிருந்தாள். சின்னப் பெண்! இவளை எந்த வேகம், எந்த ஆவேசம் உந்துகிறது? இவளுக்கும் எனக்கும் நிறைய தூரம் இருப்பதாக எனக்குப்பட்டது. பேச மாட்டாள். இவளிடம் ஒரு பிடிவாதம். ஒரு மறைமுகமான குறிக்கோள் இருக்கிறது. அது சமயம் வரும்போது தப்பிப்பதா? நான் சாவியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். தூக்கம் என் கண்களைக் கெஞ்சியது. “போர்வை வேண்டுமா?” என்று கேட்டு வைத்தேன். 

“வேண்டாம்” என்றாள். அரைத் தூக்கத்தில் அவளைப் பார்த்தேன். ஜ்யோவின் ஞாபகம் வந்தது. ஒரு கம்யூனிஸ்ட் பெண்ணுடன் படுக்கையில் போராடினால் சுவாரசியமாக இருக்கும் என்று திடீரென்று தோன்றிய எண்ணத்தை சிரமத்துடன் தள்ளி வைத்தேன். “நிஷா! நீ படுத்துக்கொள்ளும்போது விளக்கை அணைத்துவிடு” என்றேன். அவள் “ம்” என்றாள். பாத்ரூமில் வெளியே செல்ல வழி கிடையாது. ஒரே கதவைத் தாளிட்டுப் பூட்டி, சாவி பத்திரமாக வைத்திருக்கிறேன். ஜன்னல்கள் சிறியவை கம்பி போட்டவை. கவலை வேண்டாம்…

நான் கண்ணை மூடினேன். தூக்கம் எங்கோ கொண்டு சென்றது.


எப்போதோ சடக்கென்று கண்விழித்தேன். நிஷா இன்னும் உட்கார்ந்திருந்தாள். விளக்கு அணைக்கப்படவில்லை. நிஷா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“நிஷா” என்றேன். 

அவள் திரும்பினாள். 

“நீ இன்னும் தூங்கவில்லையா?” 

“ஓ எஸ்” என்று அப்படியே மல்லாந்து படுத்தாள் அவள்,  சட்டை உயர்ந்திருந்தது. வயிறு தெரிந்தது. 

நான் எழுந்து சென்று தண்ணீர் குடித்தேன். 

“தண்ணீர் வேண்டுமா?” 

“ஆம்.” 

தண்ணீர் கொடுத்து அவள் அருகில் உட்கார்ந்தேன். அவள் எதிரே பார்த்துக்கொண்டே குடித்தாள். என்னிடம் தம்ளரைக் கொடுத்து “தாங்க்ஸ்” என்றாள்.

“கால் எப்படி இருக்கிறது?” என்றேன். அவள் பாதத்துக் காயத்தைப் பார்த்தேன். அவள் பாதம் மிகவும் சேதமாக இருந்தது. “நாளைக்கு எம்.ஐ. ரூமுக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். வேறு எங்கே காயம்?” என்றேன். 

“வாட் டு யூ வாண்ட்?” என்றாள்.

“பார்டன்?” என்றேன், 

“நீ வேண்டுவது என் உடல் தானே?” 

“சே!”

“தெரியும் என் உடலைத் தொடத்தான் நீ முஸ்தீபு செய்கிறாய். உங்கள் ஜாதியை எனக்கு நன்றாகத் தெரியும். பணம், அடல்ட்டரி.. நீ கல்யாணமானவன் தானே?”

“இல்லை.” 

“உனக்கு என்ன வேண்டும்? ஒரு இலவச டிக்கெட். ஒரு பெண் இருக்கிறாள். எதிரே இருக்கிறாள். சுமாராக இருக்கிறாள். சுலபம். சப்தம் போடமாட்டாள். திமிறினால் சமாளிக்கலாம். திமிறினால் அதிய இன்னும் ஆனந்தம் அதிகம் அல்லவா? கமான் காப்டன். உண்மையைச் சொல். உன்முறை எனக்குத் தெரியும். முதலில் காலில் முள் பார்ப்பாய். அப்புறம் வேறு எங்கே முள் எடுத்து விடுகிறாய், சொல். கமான். என்னைத் தொடு. என் சட்டையை கழற்று. என் உடம்பெங்கும் பரவு. உன் சமுதாயத்தில் பெண் ஒரு ரசனைப் பொருள். சீப்பர் தேன் ஏர் கண்டிஷனிங்! வா என்னை வர்ணி. என் மார்பைத் தொட்டு அதன் மென்மைக்கு கவிதைகளைக் கூப்பிடு. என் இடுப்புக்காக ஆயிரம் போர் செய்யலாம் என்று சொல், என்னுடன் காதல் என்று சொல். அந்த கடைசி உற்சாகத்துக்கு எத்தனை உயரம் என்னை அழைத்துப் போவாய், சொல், நாங்கள் எதற்கு இருக்கிறோம்? உங்களுக்குக் களைப்பாக இருக்கும்போது உங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்குத் தானே! பக்கத்தில் அலங்காரம் செய்து, இடுப்பைக் காட்டி மார்பைக் காட்டி, நடனமாடி, சிறிய சிறிய அறைகளில் ‘கஜல்’ பாடி, ஆயிரம் நகைகள் அணிந்து சிரித்துப் படுத்துத் துடித்து இனவிருத்திக்குத்தானே இருக்கிறோம். மெஷின்களைக் கையாண்டுவிட்டு வீட்டுக்கு வரும் உங்களுக்கு ஒரு மெத்தைதானே நாங்கள்! வா ஆண் மிருகமே! வா!” என்றாள்.

“நிஷா, என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ. என் மனதில் உன்னைப் பற்றிய கவலைதான். உன்மேல் வேறு ஏதும் நோக்கமில்லை. உன் அப்பாவை நான் சந்தித்தேன் அவருக்காக பரிதாபப்பட்டேன். அவரிடம் உன்னைச் சேர்த்ததும் நான் விலகுகிறேன். அத்தனை பெரிய பேச்சு விரயமான பேச்சு. படுத்துக் கொள். நான் உன்னைத் தொட மாட்டேன். மேலும் தொடுவதற்கு எனக்கு நினைவு…” 

இவளிடம் ஏன் சொல்ல வேண்டும்? மறுபடி லெக்சர் அடிப்பாள். ‘கோ டு ஹெல்’ என்று சொல்லி எழுந்து வந்து படுத்துவிட்டேன். சற்று சற்று நேரத்தில் விளக்கை அணைத்தாள். சற்று நேரத்தில் நான் தூங்கிவிட்டேன் 


காலை அவள் தான் என்னைத் தட்டி எழுப்பினாள். “எழுந்திரு” என்றாள். நான் அவள் முகத்தில் விழித்தேன். தலையைச் சற்று ஒழுங்கு பண்ணி இருந்தாள். முகத்தை அலம்பி இருந்தாள். “குட் மார்னிங்” என்றாள் சிரிப்புடன். 

எதற்குச் சிரிக்கிறாள்? 

“குட் மார்னிங்” என்று தலையணைக்கடியில் சாவியை தேடினேன். 

“சாவியா? என்னிடம் இருக்கிறது” என்று என்மேல் எறிந்தாள். நான் ஆச்சரியத்துடன் பிடித்தேன். 

“சாவியைத் திருடினாயா?” 

“எடுத்துக் கொண்டேன். நீ குறட்டை விட்டுத் தூங்கிய தூக்கத்தில் உன் சட்டை பாண்டைக் கூடக் கழற்றியிருக்கலாம்.” 

நான் சற்று அவமானத்துடன், “தப்பிக்காமல் இருந்ததற்கு தாங்க்ஸ்” என்றேன். 

எங்களுக்காக காலை டீ வந்தது. அப்புறம் ஆம்லேட், கானபிளேக்ஸ் எல்லாம் வந்தது… 

அவளை இட்டுக்கொண்டு விமானத்தின் பக்கம் சென்றேன். எனக்காக இரண்டு மெக்கானிக்குகள் காத்திருந்தார்கள். ஜெட் விமானங்கள் பயிற்சிக்காக சீறிக்கொண்டிருந்தன. எங்கும் கெரோஸின் வாசனை விரவியிருந்தது. 

நான் விமானத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். “நிஷா வேடிக்கை பார்த்துக்கொண்டு இரு. எங்கும் போய்விடாதே” என்றேன்.

“சாவி ஞாபகமில்லையா?” என்று கேட்டாள்.

அந்த மெக்கானிக்குகளின் உதவி கொண்டு விமானத்தின் முன் பக்கத்து இன்ஜின் கௌலிங்குகளைத் திறந்த உடனே எனக்குத் தலை கால் புரியவில்லை. முற்றிலும் பழக்கமில்லாத புதிய விமானம். இதில் எப்படி நான் ரிப்பேர் பார்க்கப் போகிறேன்.

“கார்ப்ரல், உனக்கு ஸெஸ்னா விமானம் பழக்கமுண்டா?”

“நோ ஸார். நான் ‘வாம்பெயர்’ ஆசாமி” என்றார். 

என்ன செய்வது என்று புரியாமல் கேபின்களையும் பலவிதமான வால்வுகளையும் மானிஃபோல்ட்களையும் தொட்டுக்கொண்டே வந்தேன். கண்ணில்லாதவன் ‘ப்ரெய்ல்’ படிப்பதுபோல. என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கேபிள் லூஸாக இருந்தது. இன்ஜினின் உள் பாகத்துக்குச் செல்லும் இடத்தில் ஒரு அடாப்டர் போட்டு இணைத்திருந்த கேபிள். அடாப்டரின் சில மறைகள் லூஸாகி இருந்தன. ஆட்டிப் பார்த்தால், லேசாக ஆடியது. கழற்றிப் பார்த்தேன். எலக்ட்ரிக்கல். ஜெனரேஷன் சிஸ்டத்தில் ஒரு கேபிள்தான் அது. அதை மறுபடி பொருத்திவிட்டு, அடாப்டரை இறுக மூடிவிட்டு ஓடவிட்டுப் பார்த்தேன். சீராக ஓடியது! ஸ்பானரால் இறுக்கினேன். இன்ஜினைக் கிளப்பி ஓர் அரைமணி ஓட விட்டுப் பார்த்தேன். சீராக ஓடியது.

அணைத்துவிட்டு, “ஃபால்ட் கிளியராகிவிட்டது. நிஷா!” என்று கூப்பிட்டேன். அவள் என்னை நோக்கி வர, அந்த கார்ப்ரல் என்னை ஒரு ஜால வித்தை செய்தவன் போல மரியாதையுடன் பார்க்க, “சரியாகி விட்டது” என்றேன்…


நான் எதிர்பார்த்த ஒன்பது மணிக்கு ஒரு மணி முன்னாலேயே நாங்கள் அந்த விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டோம். பக்கத்தில் நிஷா உட்கார்ந்திருந்தாள். விலங்கு மாட்டவில்லை. கட்டவில்லை. எனக்கு அவளிடம் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நேராக டெல்லிக்கே செல்வதற்கு பெட்ரோல் நிரப்பி இருந்தேன். விமானம் சீராகப் போய்க்கொண்டிருந்தது. நிஷாதான் பேசவே இல்லை. ஒற்றை வார்த்தை பதில்கள்தான்.

டில்லிக்கு ஒரு மணி முன்னதாகக் கிளம்பியதால் பிற்பாடு ஏற்படப் போகும் மகத்தான சிக்கல்கள் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  

சுலபமாக ஏமாற்றப்படும்

பன்னிரண்டாம் அத்தியாயம் 

இரவு டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் நிஷா என்னிடம் சற்றுத் தாராளமாகவே பேசினாள். கல்கத்தாவில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி அவள் சொன்னபோது அவைகளை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அவைகளை எவரும் முழுக் கற்பனையின் மூலம் சொல்ல முடியாது! அவைகளின் அடித்தளத்தில் உண்மையின் சரடு இருப்பது எனக்குப் புரிந்தது.

“செய்தித்தாள்களில் இவை வருவதில்லை. வராது! செய்தித்தாள்கள் இந்தப் பிற்போக்கு அரசாங்கத்தின் எதிரொலிகள்.

“ரெய்ட் என்று ராணுவ ஆசாமிகள் திடீரென்று புயலாக வந்து இறங்குவார்கள். வந்து ஒரு பகுதியைச் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். எல்லோரும் துப்பாக்கி வைத்திருப்பார்கள். வீடு வீடாகச் சென்று சோதனை போடுவார்கள். வெடிமருந்து, வெடிகுண்டு புரட்சி தெரியும் புத்தகங்கள் இருக்கிறதா என்று. ப்ளாஸ்டிக் பாம்கள் அகற்றப்பட்டு விட்டால் அவர்களுக்குக் கொண்டாட்டம். பிடிபட்டவர்களை உடனே அழைத்துச் செல்வார்கள். ஓடினால் சுடுவார்கள். தெரு மத்தியில் சுட்டு வீழ்த்துவார்கள். ஓடக்கூடாது. ஓடமாட்டோம். நேராக அவர்கள் அழைத்துச் செல்லும் இடத்துக்குச் சென்று அவர்கள் செய்யும் கொடுமைகளைச் சமாளிக்க வேண்டும். அதற்கான மன அழுத்தம் எங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. 

“போலீஸ்காரர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். எல்லோருக்கும் கொடுமைப்படுத்தும் ஆசை – ‘ஸேடிஸம்’ இருக்கிறது! அவர்களில் ஒருவன் என்னை எங்கே கடித்தான் சொல்லட்டுமா!

“இருந்தும் எங்கள் சக்தியை அவர்களால் அழிக்க முடியவில்லை. முடியாது கல்கத்தாவின் நட்ட நடு மத்தியில் எங்கள் பிரதேசங்கள் இருக்கின்றன. ‘விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்கள்.’ அங்கே வரி வசூல் செய்கிறோம். மக்கள் கோர்ட்டில் தீர்ப்பு நாங்கள் வழங்குகிறோம்! 

“நாங்கள் வெல்வோம்!” 


இரவு, டில்லி நகரம் ரத்தினக் குவியலாகத் தெரிந்தது. மின்மினிப் பூச்சிகளாக ஊர்ந்துகொண்டிருக்க என்னுடைய முதல் ஃப்ளைட் பனானின்படி நான் வந்து சேரவேண்டிய நேரத்திற்கு அரை மணி முன்பே இறங்கிவிட்டேன். முன்பே கிளம்பிவிட்டதால் இறங்கி நேராக டெர்மினல் அருகிலேயே சென்று நிறுத்தினேன். அவளையும் இறக்கிவிட்டேன். உடன் அழைத்துச் சென்றேன். அவளிடம் எனக்குப் பெரிதாக நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவள் தப்பிக்க இரண்டு மூன்று அவகாசங்கள் இருந்தும் அவள் தப்பிக்கவில்லை. தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அதிலிருந்து எனக்குத் தெரிந்த செய்தி அவளுக்கு அவை எல்லாவற்றையும் உதறிவிட ஓர் இஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை அவள் வெளியே சொல்லவில்லை. சொல்லாததற்கு காரணம், அவள் மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போராட்டமாக இருக்கலாம். தந்தைப் பாசத்திற்கும் இந்தப் புதிய புரட்சிப் புயலின் மேல் ஏற்பட்டிருக்கும் பாசத்திற்கும் இடையே போராட்டமாக இருக்கலாம்! 

அவள் தந்தைக்கு டெலிபோன் செய்ய அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். டெலிபோன் செய்ததில் அவர் சற்றுமுன் விமான நிலையத்திற்குக் கிளம்பிச் சென்றார் என்று செய்தி கிடைத்தது. 

வட்டமாக க்ஷீண தசையில் இருந்த சோபாவின் மேல் இருவரும் உட்கார்ந்தோம். நிஷா “பாத்ரூம் எங்கு இருக்கிறது?” என்று கேட்டாள். எதிரே ‘லேடிஸ்’ என்று கண்ணாடியில் எழுதி இருந்த இடத்தைக் காட்டினேன். அவள் அங்கு சென்றாள். நான் காத்திருந்தேன். காமிரா மாலை அணிந்த ஓர் இளைஞன் வந்து என்னிடம் சிகரெட்டுக்கு நெருப்புக் கேட்டான். கொடுத்தேன். அவன் பற்ற வைத்துக் கொண்டான். நான் சற்று சாய்ந்து கொண்டேன். 

நிலையத்தின் போர்டிக்கோவில் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமாக இருந்த இம்பாலா கார் வந்து நின்றது. அதிலிருந்து நிஷாவின் தந்தை இறங்கி வெளியே வந்தவுடன் என்னை மத்தியில் பார்த்துவிட்டார். புன்னகைத்தார். 

“ஹலோ காப்டன் ஜேகே!” என்றார். அவர் கண்கள் நிஷாவைத் தேடின. நான் அவர் பக்கம் சென்று “ஹலோ ஸார்! உங்கள் பெண்ணைக் கொண்டு வந்து சேர்ப்பித்து விட்டேன்” என்றேன்.

“எங்கே அவள்?” 

“பாத்ரூம் போயிருக்கிறாள். இதோ வந்துவிடுவாள்.”

அவர் பாத்ரூம் பக்கம் பார்த்தார். “சீக்கிரமே வந்து விட்டீர்களா?”

“ஆம். காற்று சாதகமாக இருந்தது. மேலும் சற்று சீக்கிரமே கிளம்பிவிட்டேன்”. 

“நல்லது. ரொம்ப ட்ரபிள் கொடுத்தாளா?” 

“இல்லை.” 

“கட்டிப் போட்டிருந்தீர்களா?” 

“முதல் பகுதியில் கட்டிப் போட்டிருந்தேன். பிற்பகுதியில் அவிழ்த்து விட்டேன்”. 

“ஏன்?” 

“அவளுக்கு தப்பிக்கும் எண்ணம் இல்லை.” 

“சொன்னாளா?” 

“தெரிந்துகொண்டேன். என்ன என்னவோ பேசினாள். ஆனால் அவள் உள் மனத்தில் மாறிவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்”

“என்னைப் பற்றி ஏதும் சொன்னாளா?” 

“ஒரு வார்த்தை கூட இல்லை.” 

“என்ன இன்னும் காணோம்?”

“பாத்ரூமில் இருக்கிறாள்.”

“இத்தனை நேரமா?” 

“வந்து விடுவாள்.” 

வந்துவிடுவாள் என்று இன்னும் ஐந்து நிமிஷம் காத்திருந்தோம். வரவில்லை. “போய்ப் பார்க்கலாம்” என்று எதிரே நடந்தேன். அவர் உடன் வந்தார். 

லேடீஸ் பாத்ரூமில் நான் நுழைந்ததில்லை. அங்கே நின்று கொண்டிருந்த ஒரு ஸ்வீப்பர் பெண்ணை நிறுத்தி, “உள்ளே ஒரு, சுமார் பதினெட்டு வயதுப் பெண் போய் இருக்கிறாள். கூப்பிடு” என்று சொன்னேன். அவள் எங்களைச் சந்தேகமாகப் பார்த்தபடி உள்ளே சென்றாள். 

“உள்ளேதான் இருப்பாள். நான் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன்.” 

“உள்ளே ஒருவரும் இல்லை” என்றாள். வெளியே வந்த அந்தப் பெண்.

“தப்பித்துவிட்டாள்” என்றார் நிஷாவின் தந்தை சுருக்கமாக.

இம்பாஸிபிள். நான் வைத்த கண் வாங்காமல் இந்த பாத்ரூம் வாசலையே பார்த்திருந்தேன். 

“உள்ளே வேறு வழி இருக்கிறதா தாயே?”

“இல்லை” என்றாள். 

“இம்பாஸிபிள். உள்ளே போய் சரியாகப் பார். ஸார் அவள் எப்படிக் காற்றில் கரைய முடியுமா? உள்ளே நிச்சயம் இருந்தாக வேண்டும். நான் போய்ப் பார்க்கிறேன்!”

“ஒரு செகண்ட் கூடக் கவனம் தவறாமல் பாத்ரூம் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்களா?”

“ஆம். ஒரு செக். வெயிட் எ மினிட்.” 

“என்ன?” 

“ஒரு பையன் வந்து சிகரெட்டுக்கு நெருப்புக் கேட்டான். பற்ற வைக்கும்போது எதிரே நின்றான். மறைத்தான். சே! நான் ஒரு முட்டாள். ஸாரி ஸார்!” 

“யூ மீன்!…”

“ஆம், நிஷா தப்பித்து விட்டாள்.” 

அவர் முகம் கவலையிலிருந்து ஆத்திரத்துக்கு மாறியது. “காப்டன் ஜேகே! ஆயிரம் மைல் அவளைக் கொண்டு வந்து விட்டு இப்போது இங்கே அவளை நழுவ விட்டு விட்டீரா?”

*அப்படித்தான் தெரிகிறது! கண்டுபிடித்துவிடலாம். கவலைப் படாதீர்கள். அவள் போகமாட்டாள். இங்கேயே எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பாள். பார்க்கலாம். இப்படித்தான் ஒரு தடவை ஆனது அந்த மிலிட்டரி விமான நிலையத்தில். அவள் தப்பிக்க மாட்டாள்.” 

“எங்கே அவள்! ஓடு. தேடிக் கொடு. அவளை நான் இன்று பார்த்தாக வேண்டும். இல்லை என்றால் உன்னைக் கீமா பண்ணிச் சாப்பிட்டு விடுவேன். போ, தேடு!” 


நான் பைத்தியக்காரத்தனமாக கட்டடமெங்கும் சுற்றினேன். எனக்கு அவள் திடீரென்று ஏதாவது ஒரு அறையில் அகப்பட்டு விடுவாள் என்கிற நம்பிக்கை முதலில் இருந்தது. அப்புறம் நேரமாக ஆக நம்பிக்கை மறைந்துவிட்டது. 

தப்பிவிட்டாள் என்கிறது பூரா உதயமாகிவிட்டது. 

அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மூக்கு கோபத்தில் துடித்தது! “யூ ஆர் எ ஃபூல், ப்ளடி இடியட். என்ன விளையாடுகிறாயா? நான் யார் என்று தெரியுமா உனக்கு…?” 

“ஸார். இந்த இடியட் எல்லாம் நிஷாவைத் திரும்பக் கொண்டு வருமா? எங்கே போயிருப்பாள். தேடிப் பார்க்கலாமே நிஷா! நிஷா!..” கூப்பிடு தூரத்தில் இல்லை. 

“விளையாடுகிறாய்! காப்டன் ஜேகே. இந்த நகரத்தில் அவள் தப்பித்திருக்கிறாள். நான் தேட முயற்சிக்கிறேன். ஆனால் இவ்வளவு முட்டாள்தனமாக அவளைத் தப்பிக்க விட்ட உன்னைத் தப்பிக்க விடமாட்டேன். சரியாக ஒருநாளில் இருபத்து நாலு மணி நேரத்தில் அவள் என்னிடம் வந்து சேரவில்லை என்றால் உன்னை மறுபடி கைது செய்து உனக்கு அப்படிப்பட்ட ட்ரிட்மெண்ட் கொடுக்க சொல்வேன், புதைக்கப்பட்ட பிணங்களை எழுந்து நிற்க வைக்கக் கூடியபடி. போ, தேடு!” 

அவர் விருட்டென்று தன் காரில் உட்கார்ந்துகொள்ள கார் என் காட்சியிலிருந்து மறைந்தது. 


நான் மறுபடி சோபாவில் உட்கார்ந்து லேடிஸ் பாத்ரூமைப் பார்த்தேன். எவ்வளவு சுலபமாகப் பறி! நிஷா! ஏன் இவ்வளவு தூரம் வந்தும் தந்தையைப் பார்க்க மறுக்கிறாள்…? நான் எப்படி நிஷாவை மறுபடி கண்டுபிடிக்கப் போகிறேன்? அவர் வேறு இருபத்து நாலு மணி நேரம் கெடு வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அதற்குள் நிஷா கிடைக்காவிட்டால் என்ன என்னவோ செய்கிறேன் என்கிறாரே!

ரொம்ப முக்கி யோசித்தேன். ஒரு மார்க்கமும் தென்படவில்லை. டில்லியின் ஜனத்தொகை முப்பது லட்சமோ என்னமோ, அதில் நான் எப்படி ஒரு ‘சிங்கிள்’ பெண்ணைத் தேடப் போகிறேன். எப்படி?

எனக்குத் தெரிந்த ஒரே மார்க்கம் ‘நிஷா’ என்று கூப்பிட்டுப் பார்ப்பதுதான். கூப்பிட்டால் ஊர் முழுக்க கேட்காது. சான்ஸ் இல்லை. 

நிஷா நீ எங்கே இருக்கிறாய்? ஒரு பாட்டுப் பாடவா? 

திரு திருவென்று விழித்தேன். நகத்தைக் கடித்தேன். என்ன செய்வேன் சோதரா ? சற்று நேரம் யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தேன். இளம் பெண்ணைத் தவற விட்டுவிட்டேன். மற்றொரு இளம் பெண்ணைப் போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. ஜ்யோ! 

நில்லுங்கள். அதற்குமுன் என்னை மறைத்து என்னிடம் சிகரெட் நெருப்பைக் கேட்டவனைச் சற்றுக் கடுமையாக யோசித்துப் பார்த்தேன். அவன் என்ன சட்டை அணிந்திருந்தான்? மஞ்சளா அல்லது அழுக்குப் பச்சையா – சட்டை அணிந்திருந்தான். அது ஞாபகமிருக்கிறது! சின்னப் பையன்தான். சைட் பர்ன்ஸ் வைத்திருந்தான். மேலே என்ன, அவனிடம் வினோதமாக ஏதாவது தெரிந்ததா? ஓ.எஸ். சட்டென்று ஞாபகம் வந்தது. அவன் கழுத்தில் இரண்டு மூன்று காமிராக்கள் தொங்கியது ஞாபகம் வந்தது. காமிராக்கள் என்றால் பெரிய விலை உயர்ந்த காமிராக்கள், எக்ஸ்போஷர் மீட்டர், ப்ளாஷ் அட்டாச்மெண்ட் என்று விதவிதமாக அட்டாச்மெண்ட்கள் எல்லாம் புடை சூழ… அப்புறம் அவன் முகம் ஞாபகம் இருந்தது. அவனைத் தேடுவதா? அவளைத் தேடுவதா? எனக்கு என்னவோ அந்தப் பையன் நிஷாவின் தப்பித்தலில் சம்பந்தப்பட்டிருந்தான் என்பதை நிச்சயமாகப் பட்சி சொல்லியது. 

அவன் முகத்தை கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தேன். அவன் முகம், அவன் முகம், குறு மீசை, எறும்பு ஊர்துபோல் மீசை. சடைசடையாக அடர்த்தியாக மயிர், ஒல்லியான தேகம். கண்களுக்குக் கீழ் கறுப்பு. எனக்கே ஆச்சரியம் ஏற்பட்டது. முயன்று எவ்வளவு ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடிகிறது!


வெளியே வந்தேன். சின்னப்பையா! உன்னை டில்லியில் எப்படித் தேடப் போகிறேன்? இரவு டில்லி மாறிக்கொண்டிருந்தது. புதிய பாலங்கள் அமைத்துக்கொண்டிருந்தார்கள். கார்கள் கார்களைத் தூரத்திக்கொண்டிருந்தன. டாக்ஸி பிடித்து ஜ்யோவின் வீட்டிற்குச் சென்றேன். குமார் வந்திருக்காமல் இருக்கலாம் என்று கொஞ்சம் நம்பிக்கையுடன் கதவைத் தட்டினேன். திறந்தது குமார். ஜ்யோவின் சகோதரன். “ஜேகே! என்ன இப்படி இரவில் திடீர் என்று. 

“ஜ்யோ எங்கே?” 

“உள்ளே இருக்கிறாள் என்று நினைக்கிறேன்; ஜ்யோ?”

“குமார், எப்படி இருக்கிறாய்? பஞ்சாபில் எவளைப் பார்த்தாய்?”

“நிறைய. நீ சொல், எங்கே போயிருந்தாய்?” 

“ஆயிரம் மைல்கள். ரகசிய மிஷன். நாம் தனியாக இருக்கிறோமா?” என்று அங்குமிங்கும் பார்த்தேன். 

“ஏன்?” 

“ஒரு நக்ஸலைட் பெண்ணை விமானத்தில் கொண்டுவந்தேன். இங்கே கோட்டை விட்டேன்.” 

“புரியவில்லை.”

“மெதுவாகச் சொல்கிறேன். ஹலோ ஜ்யோ.” 

ஜ்யோ சற்று வித்தியாசத்திற்கு ஸாரி அணிந்திருந்தாள். ரவிக்கையில் அங்கங்கே வெட்டப்பட்டு முதுகு கொஞ்சம் தெரிந்தது. பக்கவாட்டில் கொஞ்சம் தெரிந்தது. 

“ஜேகே!” என்றாள் உண்மையான சந்தோஷத்துடன். 

“எங்கேயாவது வெளியில் போகிறீர்களா?” 

“ஆம்” என்றார் குமார். “க்ராம்வெல் சினிமா. நீயும் வாயேன்.”

“நான் இங்கே படுத்திருக்கிறேன். எனக்கு ரெஸ்ட் தேவை. நீங்கள் செல்லுங்கள்.” 

“குமார் எனக்கும் சற்று தலைவலி” என்றாள் ஜ்யோ. 

“மாத்திரை தருகிறேன். அப்புறம் உன் பாய் ஃப்ரெண்ட் காத்திருப்பான் வா.” 

“ஜேகே. நீயும் வாயேன், ப்ளீஸ்.”

நான் சற்று யோசித்துவிட்டுச் சம்மதித்தேன். சாணக்யா தியேட்டரில் நான், ஜ்யோ, குமார், அப்புறம் அந்தப் பையன் என்ற வரிசையில் உட்கார்ந்தோம். ஃபார்ஹன்ஸ் உபயோகிக்காவிட்டால் பல் எப்படி உதிரும் என்று காட்டிக்கொண்டிருந்தார்கள், அந்தப் பையன். ஜ்யோவிடம் வளவள என்று பேசிக்கொண்டிருந்தான். ஜ்யோ அவனைப் பூச்சியாக மதித்தாள். “ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடு” என்று எதற்கோ பதில் சொல்லிச் சிரித்தாள். ஜ்யோவின் கை என் கையைப்  பற்றியது. எல்லா விளக்குகளும் அணையும் வரை காத்திருந்து என் கையைத் தன்மேல் எடுத்துக்கொண்டாள். 

என்னால் சரியாக படம் பார்க்க முடியவில்லை. நிஷாவின் ஞாபகம் அடிக்கடி வந்தது. அந்தப் பையனின் ஞாபகம் வந்தது. தூக்கம் வந்தது. பக்கத்தின் ஜ்யோவின் மென்மையான மார்பில் என் கைபடும்போது எனக்குத் தூக்கம் விழித்தது.

எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தம்? நிஷா ஏன் தப்பித்தாள்?.. ஆனால் நிஷாவை நான் மறுபடி நிச்சயம் பார்க்கப் போகிறேன் என்கிற நம்பிக்கை என் கழுத்துப் பாகத்தில் காலருக்குள் குறுகுறுத்தது… 

எங்கே? 

– தொடரும்…

– ஜே.கே., முதற் பதிப்பு: 1971.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *