ட்ராவல்ஸ் பேக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 303 
 
 

பணி நிமித்தமாய் மாநில புலனாய்வு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, உண்டு இல்லை என்று அதிகாரிகளால் வசைபட்டு ஒரு வாரத்துக்குள் நகை திருட்டு கேசை முடித்து கொடுக்கிறேன் என்று உறுதி கொடுத்த பின்னால்தான் அதிகாரிகள் கொஞ்சம் சிரித்து பேசினார்கள். அந்த எரிச்சலில் மனம் சலித்து இரவு கோவை செல்ல இரயில் நிலையம் விரைந்தேன்

சென்னை இரயில் நிலையத்தில் இரவு பத்து மணிக்கு மேல் கோவை நோக்கி கிளம்பும் சேரன் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரம் பிடிக்கும் என்பதால், எனக்கு பதிவு செய்யப்பட்ட கோச்சில் எனது படுக்கை எண்ணை கண்டு பிடித்து அதில் கைப்பைகளை வைத்து விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் இரயில் நிலையம் பரபரப்புடனே இருந்தாலும் எனது கோச்சில் அதிக கூட்டம் காணப்படவில்லை.

அந்த பெண் என் கண்ணை கவர்ந்தாள். அந்த கூட்டத்திலும் அவள் என் கண்ணை கவர்ந்த்தற்கு பெரிய காரணம் எதுவுமில்லை. அங்கிருந்த எல்லோரும் அவளை ஒரு நிமிடமாவது பார்த்து இரசித்து விட்டே பார்வையை வேறு பக்கம் திருப்பி இருப்பர். எனது பார்வை அப்படி திரும்ப மறுப்பதால் அதை பற்றி உங்களுக்கு விவரிக்க வேண்டியுள்ளது.

முதலாவது அவளது நிறம் சிவப்பும் இல்லாமல் வெளுப்பும் இல்லாமல் அதே நேரத்தில் பளிச்சென்று இருந்தது, அடுத்து அவளது அலங்காரம், கொஞ்சம் அதிகபட்சமாய் உதட்டு சாயம் பூசியிருந்தாள். முகத்தில் கண்களுக்கு அருகில் சுருண்டு தொங்கி கொண்டிருக்கும் அவளது நெற்றியின் மேலிருந்து விழும் முடி, அதை லாவகமாய் தலையை சாய்த்து ஒதுக்கி விட்ட பாவனை, அடுத்து அவளது உடைகள், ஜீன்ஸ் பேண்ட டக் செய்த இலேசான டீ சாட் அதில் ஏதோ வாசகம் எழுதியிருந்த்து. அந்த டீ சர்ட்டின் மேல் ஓவர் கோட் போல போட்டிருந்தாள்.. ஆனால் அதை மூடாமல் திறந்த வாக்கிலேயே போட்டிருந்தாள். பார்ப்பவர்கள் அவளது டீ சர்ட்டின் வாசகத்தை பார்க்கட்டுமே என்று கூட இருக்கலாம்.

பெட்டி அருகே வந்து ரிசர்வேசன் சார்ட்டில் தன் பெயர் இருக்கிறதா என்று பார்த்தாள். என்னைப்போல நின்று கொண்டிருந்த அனைவரின் கவனமும் அவள் மேல்தான் இருந்தது. நம்ம சீட்டுக்கு பக்கமா, எதிரிலா? என்று கூட நினைத்திருக்கலாம். ஏனென்றால் நான் அப்படித்தான் நினைத்தேன். தோளில் ஒரு டிராவல்ஸ் பேக்கை தொங்க விட்டிருந்தாள்.

இப்பொழுது அவள் ரிசர்வேஷன் சார்ட்டை பார்த்து விட்டு திரும்பியவளின் பார்வையில் படும்படி ஒவ்வொருவரும் படபடப்புடன் நின்று கொண்டிருந்தோம். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் பெட்டிக்குள் ஏறினாள். அவள் ஒவ்வொரு இடமாய் நகர்வது ஜன்னல் வழியாக தெரிந்தது. கண்டு பிடித்து விட்டாள் போலிருக்கிறது. அந்த இட்த்திற்கு மேல் அவள் நகர்வது தென்படவில்லை.

அவ்வளவுதான் அதுவரை வெளியில் நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய் உள்ளே ஏற ஆரம்பித்து விட்டனர். நானும்தான். மெல்ல ஒவ்வொரு சீட்டாய் தேடுவது போல் பாவ்னை செய்தபடி இரகசியமாய் அவள் எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என்பதை பார்வையால் துழாவியபடி நடந்தேன். என்ன ஆச்சர்யம் என் சீட்டிற்கு நேர் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. நான் அவள் எதிரில் உட்கார்ந்தபோது ஏதோ பெரும் போட்டியில் பரிசு பெற்றவன் போல் உணர்ந்தேன்.

என்னுடைய உணர்வுகள் எதையும் அந்த பெண் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவள் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தாள். எங்கள் சீட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு நொடி அவள் உட்கார்ந்திருக்கும் அழகை பருகிவிட்டு என்னையும் பொறாமையுடன் பார்த்து செல்வதை என்னால் உணர முடிந்த்து. அவர்களுக்காக வருத்தப்பட்டேன். என் எதிரில் ஒரு அழகு பெண், இன்று இரவு பயணத்தை மகிழ்ச்சிப்படுத்தப்போகிறாள். இது போதும் எனக்கு. மெல்ல கண்ணை நிமிர்த்தி அவளை பார்த்தேன். அவள் அப்பொழுதும் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஏதோ சத்தம் கேட்டு அவள் நிமிர்ந்தாள். அவள் கண்களில் மிரட்சி. சட்டென எழுந்தவள் “எக்ஸ்கியூஸ்..மீ..” என்னை தொட்டு கவனத்தை திருப்பினாள். நான் கவனம் முழுவதும் அவள் மீதுதான் வைத்திருந்தேன் என்பது அவளுக்கு தெரியாத வகையில் உட்கார்ந்திருந்ததால், ஒன்றும் அறியாதவன் போல் “யெஸ்” என்றேன். “ஒரு நிமிசம் இந்த பேக்கை பாத்துக்கறீங்களா?”.

அவளின் குரலில் இருந்த இனிமை என்னை கற்பனை உலகிற்கு அழைத்து செல்ல “வித் பிளஷர்” எப்படித்தான் ஆங்கிலம் வருகிறதோ இந்த பெண்களை பார்த்தவுடன்!

அவள் வேகமாக பின்புறம் நகர்ந்து, அந்த மனித கூட்ட்த்தை தள்ளிக்கொண்டு செல்வது தெரிந்தது. என்ன அவசரமோ? யோசனையாய் அவள் வைத்திருந்த பேக்க்கை கவனமாய் பார்த்துக்கொண்டேன்.

என் சீட்டை தாண்டி நான்கைந்து பேர் ஒவ்வொரு சீட்டாய் உற்று உற்று பார்த்து சென்றனர். என் சீட்டிற்கு எதிரில் யாரும் இல்லாததால் கேள்விக்கணையாய் என்னை பார்த்தனர். நான் அவர்களிடம் இங்க இருக்கறவங்க

இப்ப வந்துடறேன்னு போயிருக்கறாங்க. அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இரயில் கிளம்ப கார்டு விசில சத்தம் கேட்டது. சேரன் எக்ஸ்பிரஸ் தன் உடம்பை மெல்ல உலுக்க ஆரம்பித்தது. எனக்கு படப்டப்பு எங்கே இன்னும் அந்த பெண்ணை காணோம்? ஒரு வித பதட்டம் தொற்ற ஆரம்பித்தது. இரயில் வேகம் எடுக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த பெண் வரவில்லை. இது ஏதடா வம்பாய் போய் விட்ட்து, இப்பொழுது என்ன செய்வது? அந்த “ட்ராவல்ஸ் பேக்கையே” பார்த்துக் கொண்டிருந்தேன். இரயில் கொஞ்சம் கொஞ்சமாக தனது வேகத்தை அதிகரித்து கோவையை நோக்கி விரைந்தது.

எனக்கு துக்கம் துக்கமாக வந்தது, பாவிகள் யார் கண் பட்டதோ? அழகிய பெண் எதிரில் உட்கார்ந்து இரசித்து செல்ல வேண்டிய பயணம் இப்படி ஒரு “பேக்கை” பார்த்துக் கொண்டு செல்வது ஏமாற்றமாய் இருந்தது.

நேரம் ஆக ஆக இதுவரை வராத தூக்கம் வர ஆரம்பித்தது. ஆனால் அந்த பேக்கை என்ன செய்வது? அது அந்த சீட்டின் மேல் அநாதையாய் உட்கார்ந்திருந்த்து எனக்கு மிரட்சியாய் இருந்தது. யாராவது தூக்கி சென்று விட்டால்? சரி அதை எடுத்து எனக்கு அருகில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்தால் அந்த ‘பேக்கில்’ ஏதாவது வில்லங்கம் இருந்து தொலைத்து விட்டால்? இப்படி எல்லா மன குழப்பங்களும் என்னை சுற்றி சுழன்றடிக்க நான் தூக்கத்தையும் மறந்து அந்த ‘பேக்கையே’ பார்த்து பொழுதை போக்கினேன். எனக்கு மேல் புறம் இருந்த படுக்கையும் எதிர்புறத்தில் இருந்த படுக்கைக்கும் அடுத்தடுத்த ஸ்டேசன்களில் ஆட்கள் வந்து விட்டனர். இருந்தாலும் கீழ் புற படுக்கையில் ஒரு பேக் மட்டும் இருந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு அதை கண் கொத்தி பாம்பாய் பார்த்துக்கொண்டிருக்கும் என்னையும் வியப்பாய் பார்த்து விட்டு மேலேறி படுத்தனர்.

சேலம் ஜங்க்ஷன் இரயில் வந்து நிற்கவும் நான்கைந்து பேர் ஏறி இறங்கி கொண்டிருக்க கொஞ்சம் பரபரப்பாய் இருந்தது. திடீரென்று அந்த பெண் எதிரில் தோன்றியவள், என்னை பார்த்து புன்னகையுடன் “சாரி நான் வர வர இரயில் கிளம்பிடுச்சு பக்கத்து பெட்டியில ஏறிட்டேன்”, கிளியாய் என்னிடம் கொஞ்சி பேசிவிட்டு அந்த ‘பேக்கின்’ அருகில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாடி என்னோட இடைவிடாத தவத்திற்கு பலன் கிடைத்தது போல் உணர்ந்தேன்.

அந்த பெண் முகம் இப்பொழுது புன்னகையுடன் இருந்தது போல் இருந்த்து. நீங்க கோயமுத்தூரா? ஆம் என்று தலையசைத்தேன். சாரி உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன், நான் கொஞ்சம் படுக்கறேன், அவள் அப்படியே தன் உடம்பை சாய்த்தவள் ஐந்து நிமிடத்தில் தூங்கி போனாள். அதுவரை விழித்திருந்த என்னால் அதற்கு மேல் முடியாமல் அப்படியே படுத்துக்கொண்டேன்.

விழிப்பு வந்து பார்த்த பொழுது எதிர் சீட் காலியாக இருந்தது. அந்த பெண்ணை காணவில்லை. திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்க்க இரயில் சென்று கொண்டே போடும் தாள நயத்தில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். எங்கு போயிருப்பாள் அந்த பெண்? பெரிய மர்மமாய் இருக்கிறாளே? இரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது மூடியிருந்த ஜன்னலை திறந்து பார்க்க முயற்சி செய்தேன். விடியலில் காற்று ஜிலு ஜிலுவென அடிக்க அந்த மெல்லிய வெளிச்சத்தில் திருப்பூர் பக்கம் வந்து விட்டதோ? சந்தேகம் தோன்றியது. அப்படியானால் ஈரோடு தாண்டி விட்டதா? அந்த பெண் ஈரோட்டில் இறங்கி போயிருக்க வேண்டும். ஏமாற்றமாய் போய் விட்டது. இந்த பயணம் இப்படி ஒரு ஏமாற்றமாய் போய் விட்ட்தே?

அலுத்து ஓய்ந்து சேரன் எக்ஸ்பிரஸ் கோயமுத்தூர் இரயில் நிலையத்துக்குள் வந்து நிற்க நான் எதிர் சீட்டை ஏக்கமாய் பார்த்துக்கொண்டு கீழே இறங்கினேன்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவன் அந்த விடியலிலேயே ஏற்பட்டிருந்த வாகன நெரிசலையும், மக்கள் நெரிசலையும் கடந்து அலுவலகம் சென்று விட்டு வீட்டுக்கு போகலாம் நடக்க ஆரம்பித்தேன். என் முன்னால் நடந்து கொண்டிருக்கும் ஜோடியில் அந்த பெண்…!

அந்த பெண் தன் ட்ராவல்ஸ் பேக்குடன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞனின் மேல் சாய்ந்து கொண்டு சென்றாள். எனக்கு ஆத்திரம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களை தொடர்ந்து நடந்தேன்.

இப்படி ரிசர்வேஷன் பண்ணிட்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண்டா ஏறி அங்க இருக்கற லேடீசுகிட்ட நகைய அடிச்சுட்டு மத்தவங்களுக்கு சந்தேகம் வராம வந்துடறே. பரவாயில்லை உன் தைரியம்.

அதை ஏன் கேக்கறே, நகைய திருட்டு கொடுத்த ஒரு பார்ட்டி என்னைய தேடிகிட்டு ஸ்டேசனுக்கு வந்துட்டாங்க, எதிர் சீட்டுல ஒரு இளிச்சவாயன் என்னையே முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தான், அவன்கிட்டயே இந்த “பேக்கை” வச்சு பாத்துக்கன்னு சொல்லிட்டு சத்தமில்லாம ஜெனரல் க்ம்பார்ட்மெண்டல் போய் இருந்துட்டேன். அவன் என்னை பார்த்த மயக்கத்திலேயே பாவம் அந்த “பேக்கை”பத்திரமா பார்த்துட்டு வந்தான். மறுபடி சேலம் வந்து அந்த பேக்கை எடுத்துட்டு ஈரோட்டுல மறுபடி ஜெனரல் கம்பார்ட்மென்ட்டுக்கே வந்துட்டேன்.

காதுக்குள் இவர்கள் பேசிக்கொள்வது எனக்கு கேட்கத்தான் செய்தது, ஆனால் சிரிப்புத்தான் வந்தது. அந்த பெண் இன்னும் பேக்கை திறந்து பார்க்கவில்லை, திறந்து பார்த்திருந்தால் அவள் அதற்குள் பதுக்கி வைத்திருந்த நகைகள் இப்பொழுது இந்த இளிச்சவாயன் பையிற்குள் போய் இருப்பது தெரிந்திருக்கும்.

இந்த நகை திருட்டு கேசில் யார் ஈடுபடுகிறார்கள் என்றுதான் தடுமாறுகிறோம் அதற்காகவே. சென்னைக்கு அழைத்து அதிகாரிகளால் வசைகள் வாங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தனியாய் வந்திருக்கும் ஒரு பெண்ணை தேடி நான்கைந்து பேர் பெட்டி பெட்டியாய் தேடி வந்தால் எதிரில் இருப்பவனுக்கு சந்தேகம் வராமல் இருக்குமா? அதுவும் காவல் துறையில் இருப்பவனிடம்?

இவர்களை தொடர்ந்து செல்ல என்ன செய்யலாம்? இந்த யோசனையுடன் நான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *