அன்பெனும் ஊற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 1,595 
 
 

வினிதா ஒரு நாகரிகமான பெண். அவளுக்கு எந்த கத்தல், கூச்சலும் இல்லாமல் அமைதியாக வாழ்வது பிடிக்கும். எதிர் வீட்டில் புதிதாகக் குடி வந்தவர்கள் கிராமத்திலிருந்து பட்டணத்தில் குடியேறியவர்கள். அவர்களுக்கு கத்திப் பேசித் தான் பழக்கம். டிவியைப் பெரிதாக வைப்பார்கள். வாசலில் கோலம் போடுகிறேன் பேர்வழி என்று தினமும் ஒரு வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவுவார்கள். இவர்கள் வீட்டுக் கதவு திறந்திருந்தால், மேனர்ஸ் இல்லாமல் பார்த்துக் கொண்டே செல்வார்கள். அதனால் வினிதா கதவைச் சாத்தியே வைத்திருப்பாள். கணவனிடம் இவர்களைப் பற்றி தினமும் புகார் பண்ணுவாள். அவன் ’இதையெல்லாம் பெரிசுபடுத்தாதே, அவா வீட்டில் என்ன வேணும்னாலும் செய்ய அவாளுக்கு உரிமை இருக்கு. அதுல ஒனக்கு என்ன கஷ்டம்? அக்கம் பக்கத்துக்காராளோட சண்டை போட்டால், ஏதாவது தேவைன்னா யார் வருவா? அதனால சும்மாயிரு’ ன்னு சொல்லி அவள் வாயை அடக்குவான்.

வெளியில் இருக்கும் குழாயில் குடி தண்ணீர் பிடிக்கப் போனாள் வினிதா. அங்கு எதிர் வீட்டு சோலையம்மாவும் வந்திருந்தாள். வினிதாவைப் பார்த்து புன்னகைத்தாள். பதிலுக்கு அவளும் மரியாதைக்காக புன்சிரிப்பு சிரித்தாள். சோலையம்மா, இவள் கேட்காமலே தன் வீட்டு விவரங்களைச் சொன்னாள், ”நாங்க வெவசாயக் குடும்பங்க, அங்க கிராமத்தில எங்க வீடு விசாலமா இருக்கும். எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு பசுமையா இருக்கும். நல்ல தண்ணி, கறந்த பால், வெண்ணை எல்லாம் கிடைக்கும். ஆனா ஒண்ணு, படிப்பு வசதி இல்ல, மேல் படிப்புக்குப் பட்டணம் தான் வரணும். அதுக்காக நெலம் நீச்செல்லாம் வித்துப்புட்டு இங்க வந்தோம். இங்க வீடு ரொம்ப சின்னது. வெள்ளையே அடிக்காம வெச்சிருக்காஙக. நாங்க வருசா வருசம் பொங்கலுக்கு வெள்ளையடிப்போம். வீட்டுக்குள்ள காத்தே காணோம், எந்நேரமும் ஃபான் சுத்த வேண்டியதா இருக்கு, ஆமாம், நீங்க கதவை வேற அடச்சு வெச்சிருக்கீங்க உங்களுக்கு கஷ்டமா இல்லியா” ன்னு கேட்டாள். வினிதாவுக்கு எப்போடா இவள் தன் பேச்சை முடிப்பாள்னு இருந்தது, அவளுக்கு சோலையம்மா தலையிலிருந்து வந்த வேப்பெண்ணை வாசனை வேறு வயிற்றைக் குமட்டியது. அதனால், ”ஒண்ணும் கஷ்டமாயில்ல” என்று ஒரு வரியில் மட்டும் சொல்லி விட்டு நகர்ந்தாள்.

வினிதாவின் குழந்தை பேபிக்கு அன்று ஏதோ வயிற்றுப் பிரச்சினை. வயிற்றுப் போக்கு வேறு. மேலும் அழுது கொண்டே இருந்தாள். இரவு நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் வினிதாவும் அவள் கணவனும் தவித்தனர். எதிர் வீட்டு சோலையம்மாவைக் கூப்பிட்டுக் கேட்கலாம் என்று தோன்றி அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினாள் வினிதா. உடனே ஓடி வந்த சோலையம்மா, விஷயத்தைக் கேட்டறிந்து வெந்தயத்தை வறுத்துப் பொடி பண்ணி அதை தேனில் கலந்து கொடுத்தாள். பிறகு விளக்கெண்ணையை குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவி விட்டாள். பிறகு வினிதாவிடம், ’கவலைப்படாதே, பயப்பட ஒண்ணுமில்ல, கொழந்தைக்கு பல்லு மொளைக்குது. அதனால இருக்கலாம். இல்லேன்னா கீழேயிருந்து எதையாவது பொறுக்கித் துண்ணுருக்கும், அது வயித்துல சொருகிச்சுன்னா வயித்தால போகும்னு”, சொல்லிக் கொழந்தை தூங்கும் வரை மடியில் வைத்திருந்து பிறகு வீட்டிற்குச் சென்றாள்.

வினிதாவிற்குத் தன்னை எண்ணி வெட்கமாயிருந்தது. தோற்றத்தை விடக் குணம் தான் முக்கியம் என்பதை அன்று உணர்ந்தாள். அன்றிலிருந்து அவர்கள் வீட்டோடு நெருங்கிப் பழகலானாள். பேபி சோலையம்மா வீட்டுக் குழந்தையாகவே வளர்ந்தாள்.

சோலையம்மாவின் மகன் பாண்டித்துரை பொறியியல் முடித்து ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் அமர்ந்தான். அதன் உரிமையாளரின் பெண் மலர் அடிக்கடி அப்பாவுடன் கம்பெனிக்கு வருவாள். கம்பெனி விஷயமாக பாண்டித்துரையுடன் பேசுவாள். அது பழக்கமாக மாறிக் காதலாக மலர்ந்தது. சில ஆண்டுகள் அவர்கள் காதல் தொடர்ந்தது. இருவருக்கும் வீட்டில் சொல்லப் பயம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் ஆஃபீஸில் கல்யாணம் செய்து கொண்டு வந்தால் வீட்டில் பெற்றோர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என நினைத்து அங்கு வாடகைக் காரில் சென்றார்கள். மலர் ஃப்ரெண்டைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிப் போனவள் இன்னும் காணவில்லையே என்று வீட்டில் அவளுடைய அப்பா காத்துக் கொண்டிருந்தார். ஃபோன் பண்ணினால் அது ஸ்விச்ட் ஆஃப் என்று வந்தது. அவருக்குக் கவலையாக இருந்தது.

வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் வந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே மாலையும் கழுத்துமாக வந்து நின்ற மலரையும் பாண்டித்துரையையும் பார்த்து அவர் கோபப்படவில்லை.. மாறாக ’வாங்க’ என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்று உள்ளே உட்கார வைத்தார். பிறகு தன் மனைவியையும் அழைத்து வந்து அவர்கள் இருவருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு, ”நான் உன்னை நல்ல விதமாத் தானே வளர்த்தேன்? என்னிடம் பொய் சொல்லிட்டு ஏன் இப்படி ஒரு காரியம் செஞ்சே? நான் காதலுக்கு எதிரின்னு நெனச்சியா? நானே ரெண்டு வீட்டு பெத்தவங்களோட சம்மதம் இல்லாம காதல் கல்யாணம் செஞ்சு அவங்களால ஒதுக்கி வெக்கப்பட்டு வாழ்க்கையில் நெறைய கஷ்டப் பட்டிருக்கேன். என்னை விட உங்கம்மா தான் உறவுகள் எல்லாம் தன்னை கை கழுவி விட்டாங்களேன்னு வருத்தப்படுவா. நான் தான் நம்மை வேண்டாம்னு சொன்ன உறவுங்க நமக்கும் வேண்டாம், உனக்கு நானே இனி எல்லா உறவும், வீணா வருத்தப்படாதேன்னு தைரியம் சொல்லி அவ அப்புறம் அதைப் பத்தி பேசறதை நிறுத்திட்டா. நீ சொல்லி இருந்தா, நாங்களே செலவழிச்சு ஊரறிய கல்யாணம் பண்ணி வெச்சிருப்போமே,” என்றவரைப் பார்த்து மலர் தன் தவறுக்கு வருந்தினாள். ”என்னை மன்னிச்சிடுங்கப்பா, நீங்க சம்மதிக்க மாட்டிங்கன்னு தான் இப்பிடிப் பண்ணினேன்,” என்று சொல்லிக் காலில் விழுந்தாள். பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு பாண்டித்துரையின் வீட்டிற்கு சென்றனர் மலரின் பெற்றோர்.

வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த சோலையம்மா, ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு சுதாரித்துக் கொண்டு எல்லோரையும் வரவேற்றாள். மலரின் அப்பாவே நடந்ததை எல்லாம் கூறினார். அவருக்கு பாண்டித்துரை வீட்டைப் பார்த்தவுடன் ’நம் பெண் சொகுசாய் வளர்ந்தவள். இங்கு எப்படிக் குப்பை கொட்டப் போகிறாள்’ என்ற கவலை தொற்றியது. அவர் நினைத்தது போலவே நடந்தது. காதலுக்கு விலை கஷ்டம் தானா என்று வாழ்க்கை மலரை நினைக்க வைத்தது. கூண்டில் அடைபட்ட கிளி பறக்க நினைத்தது. சில காலம் பொறுத்திருந்து பார்த்து தன் பிறந்த வீட்டுக்கே கணவனோடு சென்று விடலாம் என்று எண்ண ஆரம்பித்தாள். அதைத் தன் அப்பாவிடம் சொல்ல அவர் பாண்டித்துரையிடம், ”நீங்க எல்லாருமே நம்ம வீட்டில இருக்கலாம். பெரிய வீடு, ஆளுங்க இருக்காங்க வெளி வாசல்ல போக்க கார் இருக்கு. எதுக்குத் தனியா கஷ்டப்படுறீங்க? அம்மா, அப்பாகிட்டே நான் சொல்றேன்,” என்றார். பாண்டித்துரை தன் பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்கள், ”நீ, மருமகன், அதனால் போயாகணும். நாங்க இங்கேயே இருக்கோம். அது தான் எங்களுக்குக் கௌரவம், நீ உன் மாமனாரிடம் சொல்லிடு,” என்றார்கள்.

பாண்டித்துரை, போன புதிதில், அடிக்கடி பெற்றோரைப் பார்க்க வந்து கொண்டிருந்தான், பிறகு அதுவும் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் குறைந்தது. அவனுடைய தங்கை படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தாள். அவள் சம்பளம், .கையில் இருந்த காசு, வைத்துக் குடும்பம் ஓடியது. அங்கு பாண்டித்துரையின் நிலைமை தலையாட்டி பொம்மையானது. மலரின் தம்பி கல்யாணத்திற்கு அக்காக்களுக்கு சமமாகத் தானும் செய்ய வேண்டும் என்ற மலரின் கட்டளைக்கு இணங்கித் தங்கச் செயின் மோதிரம், தங்க கைக்கடிகாரம் வாங்கினான். ஃப்ரெண்டுகள் எதிரே தன் பெருமையைக் காட்ட வெளி நாட்டுக் கார் ஒன்று வாங்கச் சொன்னாள். இதற்கெல்லாம் பணத்திற்கெங்கே போவது? வாங்கினான் கடன். இந்த யோசனையில் கார் ஓட்டிய பொழுது அது எதிரே வரும் லாரியில் மோதியது. நல்ல வேளை, உயிர் தப்பியது, ஆனால் ஒரு கால் போய் விட்டது. அவனுடைய தாய், தந்தை, தங்கை ஆசுபத்திரி வந்து பார்த்து அவன் நிலைமைக்கு வருத்தப்பட்டு அழுதார்கள். அவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினதும் மலரின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவனை ஒதுக்குவதாக உணர்ந்தான். அங்கு யாருமே தன்னைக் கண்டு கொள்ளாத மாதிரி இருப்பதாகத் தோன்றியது. வாழ்க்கை கசந்தது, முள் மேல் இருப்பதாகத் தோன்றவே தன் பிறந்த வீட்டிற்கே செல்ல முடிவெடுத்தான். மனைவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

வீட்டிற்கு வந்த அவனை, சோலை அன்புடன் வரவேற்று நலம் விசாரித்தது அவனுக்கு இதமாய் இருந்தது. விளக்கைத் தவிர்த்து மின்மினிப் பூச்சியைத் தேடிப் போன தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான். அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்களை நோகடித்து விட்டோமே என்று வருந்தினான். சோலை ”என்னடா, பாண்டி, நானும் வந்ததிலிருந்து பாக்குறேன், என்னவோ பறி குடுத்தாப்ல இருக்கே, கால் போச்சேன்னு வருத்தமா? அதெல்லாம் வருத்தப்படாதே, உசிரு பொழச்சயே, அத நெனச்சுக்கோ, வயித்துப்பாட்டுக்கு எவ்வளவோ வழி இருக்கு, நீ படிச்சிருக்கே, என்ன கவலைன்னு,” சொன்ன அம்மாவைப் பார்த்து அவனுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. ”அம்மா, என்னை மன்னிச்சுடும்மா, நான் பண்ணின தப்புக்கு இது தண்டனைம்மா” ன்னு காலில் விழுந்தான். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. அது ஓடியது. அவன் வீட்டு எதிரில் இருக்கும் வினிதாவின் குழந்தை பேபி அவன் துயர் துடைக்கும் மருந்தாக இருந்தாள். அவளுக்குக் கதை சொல்வது, பாடம் சொல்லிக் கொடுப்பது, அவளோடு விளையாடுவது என்று பொழுது கழிந்தது. பாண்டித்துரை துக்கம் மறந்து ஆன்லைன் வேலை வீட்டிலிருந்து செய்ய ஆரம்பித்தான். அவன் மனைவி அவனுக்கு ஃபோன் கூடப் பண்ணவில்லை, வந்தும் பார்க்கவில்லை. அவன் தங்கை பூவிழிக்குக் கல்யாணம் செய்ய நினைத்தார்கள் அவனது பெற்றோர். வரன் பார்த்து, சம்பிரதாயங்கள் முடிந்து, கல்யாணம் நிச்சயமானது. அவளுடய அப்பா பொன்னையன், அவளுக்கு நகை வாங்கப் புறப்பட்டார். வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக்கொண்டு நகைக் கடைக்குப் புறப்பட்டார். நகையெல்லாம் வாங்கிய பிறகு ஆட்டோவுக்காக்க காத்திருந்தார். வெய்யில் தாங்க முடியவில்லை,

களைப்பாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் காஃபி சாப்பிடலாமென்று போனார். அங்கு அவருடைய கிராமத்து நண்பரைப் பார்த்த குஷியில் தன்னை மறந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். வெளியில் ஆட்டோ ஒன்று நிற்பதைப் பார்த்து ஏறி உட்கார்ந்தார். ஆட்டோவில் போகும் போது நல்ல காற்று இதமாக தாலாட்டு பாடியது. அவர் தான் எடுத்துக் கொண்டு போன பையை சுத்தமாக மறந்து விட்டார். வெறுங்கையுடன் வீடு வந்து சேர்ந்த அவரை சோலை, ”என்னங்க, எடுத்துட்டு போன பை எங்க?” ன்னு கேட்டவுடன் தான் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆட்டோ இருக்கிறதா என்று போய்ப் பார்த்தார். அது அங்கு இல்லை. இவருக்கு இப்பொழுது பையை ஆட்டோவில் விட்டோமா அல்லது ஹோட்டலில் விட்டோமா என்று குழப்பம். தலை சுற்றியது. நகை போய் விட்டதே என்ற கவலையோடு பெண் கல்யாணம் நின்று விடுமோ என்கிற பயம் சேர்ந்து அவரை பூதாகாரமாய் மிரட்டியது. அப்படியே சாய்ந்து விட்டார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை. பின்பு ஆசுபத்திரிக்கு எடுத்துப் போய் காண்பித்ததில் அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி விட்டார் டாக்டர். ஏழைக் குடி, ராஜ வைத்தியம் என்ற பழமொழிக்கேற்ப பணம் தண்ணீராய்ச் செலவழிந்தது. சம்பந்தி வீட்டில் பாண்டித்துரை நடந்ததைச் சொல்லி கல்யாணத்தைச் சிறிது தள்ளிப் போட அனுமதி கேட்டான். அவர்கள், ”எங்களுக்கு உங்க சம்பந்தமே வேண்டாம், நகை தொலஞ்சது அபசகுனம்னு நெனக்கிறோம், உங்க வீட்டு பொண்ணு ராசியில்ல, அவளால எங்களுக்குப் பிரச்சினை வர்றதை நாங்க விரும்பல, நீங்க வேற இடம் பாருங்க” ன்னு சொல்லி விட்டார்கள். பாண்டி இதை வந்து சொன்னதும் பூவிழி, ”இவங்களோட கொணம் புரிய வெக்கறதுக்குத் தான் இந்த சம்பவம் நடந்திருக்குன்னு நெனக்கிறேன், என்கிட்டே அன்பா இருக்கிறவரு கெடச்சா நல்லது, இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம், நீ ஒருத்தன் சூடு பட்டுக் கிட்டதே போதும்,” என்றாள்.

ஹோட்டலில் பொன்னையன் சீட்டில், அடுத்து சாப்பிட வந்தவர் உட்கார முயலும்போது, அங்கு பையைப் பார்த்து அதை வீட்டிற்கு எடுத்துப் போனார். அதில் நகைகளைப் பார்த்துத் தொலைத்தவர் மனம் எவ்வளவு பாடு படும் என்று உணர்ந்து அதைப் போலீசில் ஒப்படைக்கத் தீர்மானித்தார். ஆனால் அவர் மனைவியும் மகளும் தேடி வந்த அதிர்ஷ்டம் கையை விட்டுப் போகக் கூடாது என்று அவரைத் தடுத்தனர், ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அப்பொழுது மகள், ’’நாளைக்கு என் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு நான் போட்டுகிட்டு போய் வந்தப்புறம் குடுங்க,” என்றாள்L ஆனால் கல்யாணத்திற்குப் போன மகளைத் தலையில் கட்டுடன் இருவர் தாங்கிப் பிடித்து வருவதைக் கண்டு, ”என்னடி ஆச்சு? தலையில என்ன கட்டு” ன்னு பெற்றோர் கேட்க, ”பயப்படாதீங்க, கல்யாண மண்டபத்தில மாடிப்படியில உருண்டு விழுந்துட்டா, படி ஓரம் கொஞ்சம் ஒடஞ்சு இருந்திச்சு அது குத்தி தலையில ரத்தம் வந்திச்சு அதான் கட்டு போட்டிருக்கு” ன்னு கூட வந்தவர்கள் சொன்னார்கள். அவர்கள் போனவுடன் அந்த பெண்ணின் அம்மா பயந்து போய், “இந்த நகையே வேண்டாங்க, இதை தொலச்சவங்க சாபம் தான் நம்ம பொண்ணுக்கு இந்த கஷ்டத்தைக் குடுத்திருக்கு, அதனால மொதல்ல இதக் குடுத்துட்டு வர வழியப் பாருங்க” ன்னு கூறினாள் அவரும் அதை எடுத்துப் போய் போலீசில் கொடுக்கச் சென்ற பொழுது, வழியில் ஒருவன் வேகமாக ஓடி வந்து இவர் கையில் இருந்த பையைத் தட்டிப் பறித்து ஓடினான். இவர், ”திருடன், திருடன், பிடிங்க” என்று கத்துவது கேட்டு அந்த வழியாக நாயுடன் வந்த பார்வையற்றவர் ஒருவர், நாயை விட்டுத் துரத்த, திருடன் பயத்தில் பையைக் கீழே போட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் ஏறித் தப்பி விட்டான். அந்த பார்வையற்றவரின் பெயர், விலாசத்தைக் குறித்துக் கொண்டு நன்றி சொல்லி விட்டு நகைப் பையை போலீசில் ஒப்படைத்துத் தன்னுடைய பெயர், விலாசம், கைபேசி எண்ணைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

போலீஸில், நகைகளைத் தொலைத்தவரைத் தொடர்பு கொள்ள ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று அறிய நகைப் பையைத் திறந்து பார்த்தார். அதில் பணம் எடுத்ததற்கான பாங்க் ஸ்லிப்பும், நகைக்கடை ரசீதும் தான் இருந்தன. பாங்க் ஸ்லிப்பை அங்கு எடுத்துப் போய் விலாசம் அறிந்து வந்த கான்ஸ்டபிள், அதிலுள்ள பெயரையும், நகைக் கடை ரசீதிலுள்ள பெயரையும் சரி பார்த்து, பொன்னையனைக் காணச் சென்றார். பொன்னையன் குடும்பத்தினருக்கு நகைகளைப் பார்த்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது. போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர் கொடுத்த நம்பருக்கு ஃபோன் செய்தான் பாண்டித்துரை, அவரிடம், ”நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி, உங்களுடைய பொறுப்புணர்ச்சிக்குத் தலை வணங்குகிறேன்,” என்றதற்கு அவர், ”நான் செய்தது ஒண்ணுமே இல்ல ஸார், நீங்க நன்றி சொல்லணும்னா அந்த பார்வையற்றவருக்குத் தான் சொல்லணும் என்று கூறி நடந்ததை விவரித்தார். பிறகு அவரின் விலாசத்தைக் கொடுத்தார். பாண்டிதுரையும், பூவிழியும் அந்த விலாசத்தைத் தேடிச் சென்றனர். கதவைத் தட்டியவுடன் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது பாண்டித்துரைக்குp பயம். அவனுக்கு ஒற்றைக் காலை வைத்துக் கொண்டு ஓடக் கூட முடியாதே! சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தவர், ”மன்னிக்கணும், நான் உங்களைக் காக்க வெச்சிட்டேன். துணி துவைச்சிட்டு இருந்ததால் கதவு தட்டுற சத்தம் கேக்கல, ஆமாம், நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும்?” எனக் கேட்க பாண்டித்துரையும், பூவிழியும் தாங்கள் வந்த காரணத்தைக் கூறி நன்றி தெரிவித்தனர். அதற்கு அவர், ”இது என்ன பெரிய உதவிங்க? மனுஷனாப் பொறந்து மத்தவங்களுக்கு உபயோகமா இல்லைன்னா அப்புறம் வாழ்க்கைல என்ன அர்த்தம் இருக்குங்க? இதுக்கெல்லாம் நன்றி எதுக்குங்க? உங்க நகை திரும்பக் கெடச்சதே ரொம்ப சந்தோஷங்க” ன்னு சொன்னவரைப் பார்த்து பூவிழி தன் லட்சியக் கணவன் கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். ஊனமான பின் தன் அண்ணனை எட்டிப் பார்க்காத அண்ணி மாதிரியான மனிதர்கள் மத்தியில், மனிதாபிமானம் நிறைந்து ஊனமாய் இருப்பவர்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது. இந்த எண்ணத்தில் பார்வையற்ற அவர் மேல் அவள் அன்பு பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *