கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 1,564 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

இடிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோயிலுக்கு சாட்சியாக கருடகம்பம் மௌனமாய் நிற்க, அரச மரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா. 

அந்தச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, “தம்பி! குமாரசாமி வீடு எங்கே இருக்கு தெரியுமா?” என்று கேட்டான். 

“பாப்பா வீடா? அதோ ஒத்தை வண்டி தெரியுது பாருங்க, அதான்” என்று கைகாட்டினான் ஒரு பையன். 

உள்குரல்: 

“ஆறு மாதங்களுக்குப் பின் சற்றும் எதிர்பாராமல் தன்னைப் பார்க்கும்போது பாப்பா என்ன நினைப்பாள்? என்னைச் சரியான முறையில் வரவேற்பாளா? ஒருவேளை அடியோடு மறந்து போயிருப்பாளா?” 

சைக்கிளைத் திண்ணை ஓரமாக நிறுத்தினான். 

வாழைப் பூ வடிவத்தில் விட்டத்தில் தொங்கிய நெற்கதிரகளைச் சுற்றிக் குருவிகள் ‘லூட்டி’ அடித்துக்கொண்டிருந்தன. 

ஜூலை மாதத்து வெயில் முதுகைப் பிளந்தது. உள்ளே முற்றத்து வெயிலில் தாம்பாளம் நிறையக் கீரை விதைகள் கறுப்பாக உலர்ந்து கொண்டிருந்தன. 

சாமண்ணா தயக்கத்தோடு எட்டிப் பார்த்தான். பாப்பாவும் அவள் சிநேகிதி அலமேலுவும் தாழ்வாரத்தில் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

பின்பக்கம் இரண்டாம் கட்டிலிருந்து ‘தொம் தொம்’ என்று நெல் குத்தும் ஓசை, வீடெங்கும் நிறைந்திருந்த தானிய மூட்டைகளைக் கண்ட சாமண்ணாவின் உள்குரல்: “சுபிட்சமான பணக்காரக் குடும்பம் போலிருக்கு.” 

யாரோ கனைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த பாப்பா. ரேழியில் சாமண்ணா நிற்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் கலந்து பூரிப்புடன், “உள்ளே வாங்க” என்றாள். மகிழ்ச்சிப் பெருக்கில் உள்ளம் சிறகடித்தது. 

இதற்குள் அவள் தோழி அலமேலு கொல்லைப்புறத்து வழியாக ஓட்டமாய் ஓடி மறைந்துவிட்டாள். 

“அப்பா இல்லையா?” 

“பனங்கா வெட்டி வரப் போயிருக்கார். இப்ப வந்துருவார். அம்மா பின்கட்டிலே இருக்காங்க” என்றாள் பாப்பா. 

சாமண்ணாவின் உள்குரல்: “அம்மாவா? எந்த அம்மா? யாரைச் சொல்றா?” 

“ஓடறாளே, அந்தப் பெண் யாரு?” என்று கேட்டான். 

“அடுத்த வீடு. என் சிநேகிதி. கூடப் படிச்சவ. வாங்க, இப்படி வந்து உட்காருங்க” என்று அழைத்து ஊஞ்சலைக் காட்டினாள். “எங்களை மறந்துட்டீங்களோன்னு நினைச்சோம். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க? நானும் அப்பாவும் உங்களைத் தேடி ஒரு தரம் டவுனுக்குக் கூடப் போய்ப் பார்த்தோம். சரியான தகவல் எதுவும் கிடைக்கலே, டிராமாலயும் உங்களைக் காணலே….” என்று கூறியவள் தாகத்துக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். “எங்க ஞாபகமே வரலையா, உங்களுக்கு?’ 

”உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அந்த ஓட்டர் ஐயர்கிட்ட போய் வத்தி வச்சிருக்கான் காதர்பாட்சா. அதைக் கேட்டுட்டு அந்த ஓட்டல்காரன் என்னைக் கண்டதும் ஒரேயடியா எகிறிக் குதிச்சான். அவன் மகளை அந்த அரைப் பைத்தியத்தை என் தலையில் கட்டிடணும்னு காத்திருந்தவனுக்கு இது ரொம்ப ஏமாற்றமாயிட்டுது. நான் அன்னைக்கு உங்களை வழி அனுப்பிச்சுட்டு ஓட்டலுக்குப் போனதும்… 

‘ஏண்டா, அந்தத் தேவடியாச் சிறுக்கியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறயாமே! இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வச்சிருந்தனா? கூத்தாடிப் பயலே! உனக்கு வேறு யார்ரா பெண் கொடுப்பாங்க? தாசி மகதான் கிடைப்பாள்’ என்று கேலியாகச் சிரித்தான். அதைக் கேட்டதும் எனக்கு ரோசம் பொத்துக்கிட்டது. ரத்தம் கொதிச்சுது. பேயா மாறிட்டேன். 

‘ஏண்டா ஓட்டல்காரப் பயலே! என்ன சொன்னே? நாக்கை அடக்கிப் பேசு! பணத் திமிரா?’ன்னு பதிலுக்குக் கேட்டு அவன் கன்னத்திலே ஓங்கி அறைஞ்சுட்டேன்.உடனே ‘லபோ லபோ ‘னனு கத்தி ஊரைக் கூட்டினான். ஒருத்தரும் அவன் உதவிக்கு வரலே…”

“அப்புறம்?” 

“அப்புறம் என்ன? போலீசுக்கு லஞ்சம கொடுத்து என் மேல திருட்டுக் குற்றம் சாட்டி எனக்கு ஆறு மாசம் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்தான்….” 

“அடப்பாவி! திருட்டுக் குத்தமா? உங்க பேர்லயா?” 

“ஆமாம். நான் வீட்டிலே இல்லாத சமயம் பார்த்து மாறு சாவி போட்டுக் கதவைத் திறந்து அவன் மகள் செயினைக் கொண்டு வந்து வச்சுட்டு என் மேலே சந்தேகப்படறதாப் போலீஸ்ல சொல்லியிருக்கான். போலீஸ்காரங்க வந்து சோதனை போடறப்போ பாத்ரூமில செயினும் அலமாரியில இரண்டு நூறு ரூபா நோட்டும் கிடைச்சுது…” 

“இந்த ரூபா ஏது? உன்னுதா’ன்னு கேட்டாங்க போலீஸ்ல. அது என் பணமில்லேன்னேன். 

“செயின் மட்டும்தானே காணாமப் போயிட்டதா கம்ப் ளெயிண்ட் கொடுத்திருக்கார். அப்படின்னா இந்த ரெண்டு நூறுரூபாய் நோட்டும் இங்கே எப்படி வந்தது’ன்னு கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னேன்…. பாப்பா ஏன் அழறே? நீயும் என்னைத் திருடன்னு நினைக்கறியா?” 

“இல்லை, அந்த நோட்டு ரெண்டையும் உங்களுக்கு உதவியா யிருக்கட்டுமேன்னு நான்தான் புஸ்தகத்துலே மறைச்சு வச்சுட்டு வந்தேன். அதுவே உங்களுக்கு அபகாரமாயிட்டுதேன்னு நினைக்கிறப்ப ரொம்ப துக்கமாயிருக்கு….”

“ஓகோ, நீ வச்ச பணம்தானா அது! நான் செய்யாத குற்றத்துக்கு என்னை ஜெயில்லே போட்டு அவமானப்படுத்திட்டான் அந்த ஓட்டல்கார அயோக்கியன்! நான் மானத்தோடு வாழ்ந்து கிட்டிருந்தேன். என்னை அந்த ஊரார் முன்னே தலை குனிய வெச்சுட்டான் இருக்கட்டும். அவனை நான் சும்மா விடப் போறதில்லை” என்று கறுவினான். 

”குற்றம் செய்யறதுதான் அவமானம். செய்யாத குற்றத்துக்கு ஜெயிலுக்குப் போறது அவமானம் இல்லே” என்றாள் பாப்பா. 

”நான் ஜெயிலுக்குப் போனதைக்கூட பெரிசா நினைக்கலே. உன்னை அவன் தாசி மகள்னு ஏசினதை நினைக்கறப்பதான் உடம்பெல்லாம் பத்தி எரியுது. ஜெயில்லேருந்து நேத்துதான் வெளியே வந்தேன். நேரா நாடகக் கொட்டகைக்குப் போனேன். காண்ட்ராக்டரைப் பார்த்தேன். அவர் காப்பி வாங்கிக் கொடுத்துட்டு, ‘சாமண்ணா, உன்னை நான் மறுபடியும் நாடகத்துலே சேர்த்துக்க முடியாது. என் நிலைமை அப்படி. என் பேர்ல வருத்தப்படாதே’ன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டேன். 

‘ரொம்ப நஷ்டமாயிட்டுது. ஓட்டல்காரர்தான் கடன் கொடுத்து கை தூக்கிவிட்டார். கடன் கொடுக்கறப்பவே, சாமண்ணா திரும்பி வந்து வேலை கேட்டா. லேலை தரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி வச்சிருக்கார். கம்பெனியே இப்ப அவர் பேர்லதான் நடக்குது. ஓட்டல்காரருக்குச் சொந்தம் மாதிரிதான்’ என்றார். 

அங்கிருந்து நேரா ஓட்டலுக்குப் போனேன். என்னைக் கண்டதும் அந்த அயோக்கியன் பதறிப் போனான். திருதிருன்னு முழிச்சான். வேகமாகப் போய் அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்து தரதரன்னு நடு ரோட்ல கொண்டு வந்து நிறுத்தி ‘ஏண்டா கலப்பட எண்ணெய்! என் மேலே பொய்க் கேஸ் போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சதுமில்லாம திரும்பி வந்தா வேலை தரக்கூடாதுன்னு வேறே காண்ட்ராக்டர்கிட்டே சொல்லி வச்சிருக்கியாமே!’ என்று அவன் மென்னியை இறுக்கப் பிடிச்சேன். 

‘ஐயோ, ஐயோ என்னைக் கொல்றானே! எல்லாரும் இப்படி வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்களே!’ என்று கூப்பாடு போட்டான். 

‘சத்தம் போட்டே, கொலையே விழும். ஜாக்கிரதை’ன்னு தொந்தியிலே ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அம்மாடின்னு அப்படியே விழுந்துட்டான். 

இதுக்குள்ளே கூட்டமான கூட்டம் கூடிட்டுது. 

விட்டுருங்க பாவம், விட்டுருங்கன்னு. என்னைப் பிடிச்சு இழுத்து, அழைச்சிட்டுப் போயிட்டாங்க. அப்பவும் நான் சும்மா இல்லே. தெருப்புழுதியை வாரி அவன் மேலே வீசினேன். 

‘டேய், மோசக்காரா! பொய்க் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினே இல்லே என்னை! இரு, இரு ! இன்னும் கொஞ்ச நாளில் இதே ஊர்ல நானே சொந்தமா நாடகக் கம்பெனி ஆரம்பிச்சு உன் கம்பெனியை க்ளோஸ் பண்றனா இல்லையா பார். அது மட்டும் இல்லே. உன்னையும் நடுத்தெருவிலே நிக்க வைக்கலே என் பேர் சாமண்ணா இல்லே’ன்னு நாலு பேர் முன்னால் சத்தியம் செஞ்சுட்டு வந்திருக்கேன். என் ரத்தம் கொதிச்சுப்போச்சு. உன்னைப்பார்த்து தாசி மகள்னு சொன்னவன் நாக்கை அறுத்து எறிய வேணாம்! ஆமாம், என் சபதத்தை நிறைவேத்தினப்புறம்தான் உன் கழுத்திலே தாலி கட்டப் போறேன். அதைச் சொல்லிட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன்.” 

பாப்பா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 

“நீ அழாதே பாப்பா!நீ ஏன் அழறே?” 

”நீங்க எனக்குத் தாலி கட்ட முடியாது. எனக்கு அப்பவே கலியாணம் ஆயிட்டுது. இத பாருங்க தாலி!” என்று தன் கழுத்தில் மறைந்திருந்த தாலியைத் தொட்டுக் காட்டினாள் பாப்பா. 

“என்னது! உனக்குக் கலியாணம் ஆயிட்டுதா!” 

“ஆமாம்.” 

“அப்படின்னா உன் புருஷன்….?” 

“நான் தாசி மகளாம்! அவன் என்னைத் தள்ளி வச்சுட்டான். இப்ப நான் வாழா வெட்டி” என்றாள் பாப்பா. 

அத்தியாயம்-5

“அம்மா, நான் குளிச்சு இன்னியோடு நாப்பத்தேழு நாளாச்சு!” என்று சொல்லும்போதே அபரஞ்சியின் கண்கள் மலர்ந்து காது மடல் சிவந்து போயிற்று. 

“அடிப்பாவி! அந்த மேட்டுப்பட்டி மிராசுதார் புள்ளையா வயித்துல?” என்று தாயார் நாகரத்னம் வியக்க, பதில் ஏதும் கூறாமல் கால் கட்டை விரலால் தரையைக் கீறினாள் அபரஞ்சி. 

“சொல்லித் தொலையேண்டி. அந்த ஐயர் சிநேகத்தை விட்டுருளனு எத்தனை முறை சொல்வேன்? நீயானால் பெரிய பெரிய இடங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு எந்நேரமும் அவர் நினைப்பிலேயே மிதந்துட்டிருக்கே?” 

“அவருக்கென்ன குறைச்சலாம்? பெரிய மிராசுதாராச்சே?’ 

“ஆத்துலே வெள்ளம் புரண்டாலும் நாய் நக்கித்தாண்டி குடிக்கணும். அவர் மிராசுதாராயிருந்தா நமக்கு என்னடி ஆச்சு? பொட்டு கட்டிக்கிட்டவளுக்கு எல்லாரும் பொது. தனிப்பட்ட முறையில் ஆசையை வளர்த்துக்கக் கூடாது. நம்ம குலதர்மம் அப்படி. ஒருத்தன் கூட சிநேகம் வச்சுக்கவா உனக்குக் கோயில்ல வச்சு பொட்டு கட்டினேன்.” 

“மாட்டேன். நான் அவரைத் தவிர, வேற யாரையும் தொட மாட்டேன்.” 

“என்னடி சொன்னே?” என்று கையை ஓங்கினாள் நாகரத்னம். 

“சரிதான், நிறுத்தும்மா! உன் மிரட்டலுக்கு நான் பயப்படப் போறதில்லே!” என்று மிஞ்சினாள் அபரஞ்சி. 

“என்னடி ரொம்பத்தான் பேசறே! கத்த வித்தையெல்லாம் பெத்த தாய் கிட்ட காட்டறயா?”

“பெத்த தாயாவா நடந்துக்கற நீ? பொட்டு கட்டித் தொலச்சாச்சு.தாசி குலம்னு முத்திரை குத்தி வாசல்ல பலகை மாட்டாத குறைதான். எனக்கு இந்த அசிங்க வாழ்க்கை பிடிக்கல. பல பேருக்கு உடம்பைக் கொடுத்துட்டு பட்டும் பகட்டுமா காசு மாலையைச் சாத்திக்க மனசு இடம் தரலே.”

“ஒருத்தனோட குடும்பம் நடத்தறதுக்காக ஆண்டவன் நம்மைப் படைக்கலடீ! பல பேருக்குச் சந்தோஷம் கொடுக்கற பிறவிகள் நாம். மேட்டுப்பட்டி ஐயரோட மட்டும் நீ சிநேகமா இருக்கிறதால என்ன லாபம்? ஊரும், உலகமும் உன்னை உத்தமின்னு பேசிடப் போகுதா? தாசிங்கிற பேரு மாறிடப் போகுதா?” 

“எனக்கு உலகைப் பத்திக் கவலையில்லே. அது எப்பவும் என்ன வேணாலும் பேசிட்டுத்தான் இருக்கும். இந்த அவலங் கெட்ட வாழ்க்கை எனக்குப் பிடிக்கலைன்னா என்னை விட்டுடு. நீ சம்பாதிச்ச சொத்தை நீயே வச்சுக்க. எனக்கு வேணாம் அது. உனக்கு இந்த எச்சில் வாழ்க்கை பிடிச்சிருக்கலாம். மணம் வீசலாம். ஆனால் எனக்குப் பிடிக்கல்லே. உடம்பெல்லாம் முள் குத்தற மாதிரி இருக்கு.” 

வாசலில் தாழம்பூ மணம் வீசியது.

நிமிர்ந்து பார்த்தாள் நாகரத்னம். 

குமாரசாமி கையில் தாழம்பூவோடு வந்து கொண்டிருந்தான். 

“வா, குமாரசாமி! என்ன விசேஷம் இன்னைக்கு? ஏது தாழம்பூ?” என நாகரத்னம் கேட்க, “பாப்பாவுக்குத் தலை பின்னி விடற நேரமாச்சே. அதுக்குப் பிடிக்குமேன்னு ஏரிக்கரைப் புதர்லேர்ந்து வெட்டி வந்தேன்.” 

“பாவம், உனக்குத்தான் இந்தக் குடும்பத்து மேலே எத்தனை அக்கறை?’ என்று சூள் கொட்டினாள் நாகரத்னம். 

“அது சரி,அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்ன தர்க்கம்?”  

“எப்பவும் உள்ளதுதான். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலையாம். மிராசு ஐயரோடதான் வாழப் போறாளாம். குமாரசாமி! நீ இப்பவே ஐயர்கிட்டே போய் அபரஞ்சி முளுகாம இருக்காங்கற செய்தியைச் சொல்லிட்டு வா.” 

“சொல்றேன் அபரஞ்சி. ஆனா இப்ப அதுக்கு நேரம் சரி யில்லே. ஐயாவோட சம்சாரம் உடம்புக்கு முடியாமப் படுத்திருக்காங்க. பாவம், நாலு நாளா நல்ல காய்ச்சல்! வண்டி அனுப்பி வைத்தியரைக் கூட்டியாரச் சொன்னாங்க. நான்தான் போய்க் கூட்டி வந்தேன். ஜன்னி மாத்திரை தேய்ச்சுக் கொடுத்திருக்காரு வைத்தியர். அந்தம்மாவுக்கு உடம்பு நல்லபடி குணமாயிடணும்னு மாரியாத்தாளை வேண்டிக்கிட்டிருக்கேன். காலையிலேர்ந்து சாப்பிடக் கூட நேரமில்லே.” 

“பலகாரம் சாப்பிடறயா? புட்டு செஞ்சு வச்சிருக்கேன்.”

“புட்டா? திடீர்னு என்ன புட்டு மேலே ஆசை வந்திருச்சு, உனக்கு?” 

“எனக்கில்லை. அபரஞ்சிக்குத்தான். புள்ளைதாச்சிப் பொண்ணு கேட்டுதேன்னு செஞ்சிருக்கேன்.” 

“எனக்கு மனசே சரியில்லைம்மா. இப்ப எதுவும் இறங்காது.” இந்தக் குமாரசாமி ஒரு வித்தியாசமான பிறவி. 

நாலு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, ஊருக்கு நல்ல வனாய், நாலு பேருக்கு உபகாரமாயிருந்து கொண்டு ஜீவனம் நடத்தும் அபூர்வப் பிறவி. ஐயர் குடும்பத்தைப் போலவே, அபரஞ்சி குடும்பத்தையும் ஒரு வாஞ்சையோடு நேசித்து ஆதர வாகப் பழகி வருபவன். 

அபரஞ்சியை நெஞ்சுக்குள் வைத்துத் தினமும் ஆராதிக்கும் ஒரு ஊமைக் காதலனாய் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்போது அந்தக் காதலும் நீறுபூத்த நெருப்பாகி, அதுவும் சாம்பலாகி விட்டது. 

மேட்டுப்பட்டி ஐயரின் மனைவி தலையைச் சாய்த்து ஒரு மாதம் ஓடிவிட்டது. 

ஆரம்ப துக்கங்கள் ஓரளவு வடிந்து மிராசு ஐயர் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்தி ஊருக்குள் அடிபட்ட போதிலும் ஐயர் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இரவு பகலாக அபரஞ்சியின் மூச்சுக் காற்றையே சுவாசித்துக் கொண்டிருந்தார். 

ஆனாலும், அபரஞ்சிக்கு அதைக் கேட்காவிட்டால் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. “கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்களாமே? பேசிக்கிறாங்களே?” 

“ம்…. அதையெல்லாம் நீ நம்பறயா? வயசு அம்பதுக்கு மேல ஆச்சு! இனிமே கல்யாணம் என்ன வேண்டிக் கிடக்கு? என் பேர் சொல்ல பிள்ளையா குட்டியா?”

“பிள்ளை இல்லங்கற கவலை வேணாம் உங்களுக்கு. இப்ப உங்க குழந்தை என் வயிற்றிலே வளருது.” 

“கேள்விப்பட்டேன். குமாரசாமி சொன்னான். ஹூம்…” என்று பெருமூச்சு விட்டார் மிராசுதார். 

“ஏன் விரக்தியாப் பேசறீங்க? பெருமூச்சு விடறீங்க? சந்தோஷமா இல்லையா உங்களுக்கு? நானே இதை உங்களுக்கு என் வாயாலே சொல்லலையேன்னு வருத்தமா?”

“அதெல்லாம் இல்லை. உன் வயிற்றில் பிறக்கப் போகிற அந்தப் பிள்ளை என் குழந்தைதான்னு நான் ஊர் அறியச் சொல்லிக்க முடியாதே!” 

“அப்படின்னா அந்தக் குழந்தையைப் பற்றின கவலை உங்களுக்கு இல்லையா?” 

“இருக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்?”

“அப்ப அதன் எதிர்காலம்?” 

“அதை நீதான் முடிவு செய்யணும்!”

அபரஞ்சிக்குத் தலை சுற்றியது. மயங்கிக் கீழே விழப் போனவளை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார் ஐயர். நாகரத்னம் ஓடி வந்து, “ஐயோ, என் அபரஞ்சிக்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி தண்ணீரை முகத்தில் தெளித்தாள். அபரஞ்சி மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஐயர் அவளிடம், “நீ கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார். அவர் வெளியே போனதும் அபரஞ்சி தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். 

“புனிதமான உணர்வுகளோடு ஒருத்தருக்கு சமூக அந்தஸ்து தரும் தகுதி எனக்கு இல்லையா? 

“என் வயிற்றில் வளரும் இந்தச் சிசு உலகத்தைப் பார்க்கும் போது அதுக்குக் கிடைக்கக் கூடிய பட்டம்” 

‘தேவடியா பெத்த குழந்தை!’ 

நான் இதை வளர்க்கக் கூடாது…. அவரும் இதை வளர்க் கப் போறதில்லை. ஒரு வேளை எனக்குப் பிறக்கப் போகிற குழந்தை பெண் குழந்தையாப் பிறந்துட்டா? பிற்காலத்தில சமூகம் என் மகளை ஏற்றுக் கொள்ளுமா? ஐயோ, அதை நினைக்கவே பயமாயிருக்கு. வேறயார் கிட்டேயாவது கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டியதுதான். யார்கிட்ட, யார்கிட்ட? குமாரசாமி கண்முன் தோன்றிப் பளிச்சென்று மறைய, அம்மா குமாரசாமியைக் கொஞ்சம் கூப்பிட்டு வரச் சொல்றயா? நான் அவரோடு நிறையப் பேசணும். 

ஒரு வெள்ளிக்கிழமை, விளக்கு வைக்கும் நேரத்தில்… பாப்பா பிறந்தாள். 


“உனக்கு எப்ப கல்யாணமாச்சுன்னு என்கிட்டே சொல்லவேயில்லையே!” 

“நான் உங்களைச் சந்திச்ச ஒரு மாசத்துக்கெல்லாம் ஆயிட்டுது. இப்பத்தானே உங்களைப் பாக்கறேன்.” 

“நான் ஜெயிலுக்குப் போனப்புறமா? அப்படின்னான் புருஷன் இப்ப எங்க இருக்கான்?” 

“நீங்க இருக்கிற அதே ஊர்லதான். என்னை அவர் தள்ளி வச்சதுக்காகக் கூட நான் வருத்தப்படலை.ஆனா தாசி மகள்னு சொல்லி விரட்டியதைத்தான் பொறுத்துக்க முடியலை. நான் ஒழுங்கா, கௌரவமா, குடும்பப் பெண்ணா வாழ்ந்துகிட்டிருக்கும்போது நதிமூலம் ரிஷிமூலம் பாக்க வேண்டிய அவசியம் எதுக்குன்னு எனக்குப் புரியலை.” 

“நான் இப்பவே அவனைப் போய்ப் பார்க்கட்டுமா?”

“வேணாம். ஒரு தடவை நீங்க கோபப்பட்டு ஓட்டல்காரனோட மோதிப் பட்ட துன்பம் போதும். இனியும்…” 

“நான் கோபப்பட மாட்டேன், பாப்பா ! நீ என்னை நம்பு. நியாயத்தைத்தான் எடுத்துச் சொல்வேன்.” 

“வேண்டாங்க. அதெல்லாம் இப்ப அவர் காதிலே ஏறாது. அந்த ஓட்டல்காரன் பொய்யும் புளுகும் பேசி அவர் மனசைக் கலைச்சு விஷத்தைப் பாய்ச்சி வச்சிருக்கான். அதைக் கேட்டுக் கிட்டு அவர் ஆவேசம் வந்த மாதிரி குதிச்சு எவ்வளவு கேவலமாப் பேச முடியுமோ அவ்வளவும் பேசி என்னை வீட்டை விட்டே துரத்திட்டாரு. அப்புறம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அவரோடு இனி என்னால வாழ முடியாது.”

“அதனாலே இப்படியே வாழாவெட்டியாவே இருந்துடப் போறயா?” 

“வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவனோடு வாழணுங்கறதெல் லாம் இப்ப இல்லே. காலம் மாறிப் போச்சு.ஒருவனைப் பிரிஞ் சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லைன்னு ஆயிட் டுது. ஒருவனை விடாம இன்னொருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது எவனோட வாழறாளோ அப்போது அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அதுதான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு. நான் அப்படித்தான் வாழப் போறேன்! அப்படி இன்னொருத்தனுடன் வாழறதுன்னு தீர் மானிச்சா அந்த இன்னொருத்தர் நீங்களாத்தான் இருப்பீங்க.” 

சாமண்ணா சுவரோரம் நின்ற பழைய இரும்புப் பெட்டியைப் பார்த்தான்.அதற்குமேல் சுவரில் மாட்டப்பட்டிருந்த அபரஞ்சி போட்டோவுக்கு மாலை போட்டு எதிரில் சின்ன குத்துவிளக்கு ஏற்றிவைத்திருந்தார்கள்.

அத்தியாயம்-6

பூவேலி கிராமத்தில் பாரதத் திருநாளை முன்னிட்டு பதி னெட்டு நாள் உற்சவம். எல்லைக்கோடியிலுள்ள தர்மராஜா கோயிலில் தாரையும் தப்பட்டையும் அதிர்வேட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. 

“ஊர்ல என்ன விசேஷம்?” என்று பாப்பாவிடம் கேட்டான் சாமண்ணா. 

“தர்மராஜா திருநாள். கோயிலுக்குப் பக்கத்துலே பந்தல் போட்டு, பாரதம் படிச்சு கூத்து நடத்தறாங்க. இன்னிக்கு அர்ஜுனன் தபஸ்….” 

“அப்பாவைக் காணோமே இன்னும்?” 

“வர நேரம்தான். அதுக்குள்ளே நீங்க குளிச்சு ரெடியாயிருங்க. சோப்பு கொண்டு வரேன். அதோ வெந்நீர் ரூம்ல தண்ணி காஞ்சிட்டிருக்கு, பாருங்க” என்றாள் பாப்பா. 

சாமண்ணா சந்தன சோப்பில் குளித்து முடித்து வாசனையோடு வெளியே வந்தபோது கண்ணைக் கசக்கிக் கொண்டான். 

“சோப்பு கண்ணுல பட்டுட்டுதா?” 

“இல்லே, அடுப்பிலந்து வந்த புகைச்சல்….!” 

“இலுப்ப விறகு, ஈரம் காயலே போலிருக்கு” என்றவள், “இந்தாங்க சீப்பு…” 

உள்ளே சமையல்கட்டிலிருந்து பாயச வாசனை மணத்தது.

சாமண்ணாவின் உள்குரல்: ‘பாயசத்துக்கு என்ன விசேஷம்? திருவிழாவுக்காக இருக்குமோ? அல்லது எனக்காகஸ்பெஷலா?’

வாசலில் யாரோ பேச்சுக் குரல் கேட்கவே பாப்பா எட்டிப் பார்த்தாள். 

ஊர் நாட்டாமைக்காரர், கணக்குப் பிள்ளை, கிராம முனுசீப், தலையாரி, தெருக்கூத்து நடிகர் (அர்ஜுனன் வேஷக்காரர்) இப்படி நாலைந்து பேர் கும்பலாக வந்திருந்தார்கள். 

“அப்பா இருக்காரா?” என நாட்டாமைக்காரர் கேட்க, “தோப்புக்குப் போயிருக்கார். வர நேரம்தான்” என்றாள் பாப்பா. 

“இது யாரு இங்க சைக்கிள் விட்டிருக்காங்க?”

“டவுன்லருந்து வந்திருக்கார். டிராமாவில நடிக்கிறாரே அவர்.” 

“யாரு சாமண்ணாவா?” 

“ஆமாம்… உங்களுக்குத் தெரியுமா அவரை?”

“அவரைத்தான் நாங்களும் பாக்கணும்னு பேசிக்கிட்டிருந்தோம். இந்த வருசம் விளாவில் ஒருநாள் அவரை அளைச்சு வந்து கெளரவப்படுத்தணும்னு…” 

சாமண்ணா வெளியே வந்தான். 

“கும்பிடறமுங்க. டவுன்ல உங்க நாடகம் அடிக்கடி பார்த்திருக்கம். ‘மாடி மேல மாடி’ன்னு பாடுவீங்களே….! இப்ப இங்க பாரதக் கூத்து நடக்குது. இன்னைக்கு அர்ச்சுனன் தவசுல இவர்தான் அர்ச்சுனன் வேசம் கட்டறாரு. நீங்க அவசியம் பாக்கணும். நாங்களே டவுனுக்கு வந்து உங்களை அளைக்கணும்னு நினைச்சுட்டிருந்தோம். தேடப் போன மருந்து மாதிரி நீங்களே…” 

“உங்க கால்ல சிக்கிட்டனாக்கம்!” என்று சாமண்ணா சிரிக்க, “அப்படிச் சொல்லக் கூடாதுங்க. நீங்க பெரிய நடிகருங்க…” 

“கூத்துன்னா விடிய விடிய நடக்குமா?” 

“ஆமாங்க. மத்தளம் தட்டி ரெண்டு மணி நேரத்துக்கப்புறம் நடுச் சாமத்துலேதான் அர்ச்சுனன் வருவார். நீங்களும் அந்த நேரத்துக்கு வந்தாப் போதுங்க. கொஞ்சம் முன்னாடி நாங்க தீவட்டியோடு இங்க வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறோம். நாற்காலி போட்டு வைக்கட்டுங்களா?” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தரையில் உட்கார்ந்தே பாக்கறேன். தெருக்கூத்துன்னா அப்படித்தான் பார்க்கணும். அர்ஜுனன் கிரீடம் வச்சு புஜம் கட்டியிருப்பாரில்ல?” 

“அப்படியே தாங்க… கையில மரக்கத்தி புடிச்சி, ஒவ்வொரு பாட்டுக்கும் பாவாடை பறக்கச் சுத்திச் சுத்தி வருவாரு. தூள் பறக்கும்.” 

“தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ராத்திரி வந்துடறேன். குமாரசாமி வந்ததும் அவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க.” 

“இதோ, அவரே வந்துட்டாரே!” 

“என்ன கும்பலா எல்லாரும் இப்படி…?” என்று கேட்டுக் கொண்டே வந்த குமாரசாமி சாமண்ணாவைப் பார்த்துவிட்டு, “வாங்க தம்பி, நீங்க எப்ப வந்தீங்க?” 

“இப்பத்தான், கொஞ்ச நேரமாச்சு, இன்னைக்கு ராத்திரி நான் கூத்து பாக்க வரணுமாம்….!” 

“நீங்க ஒரு பெரிய நடிகர் இல்லையா? நீங்க வந்தால் அது இந்தக் கிராமத்துக்கே பெருமையாச்சே!” 


தர்மராஜா கோயிலுக்கு முன்னால் அர்ஜுனன் தபசுக்காக, பனை மரம் வெட்டி வந்து, அதன் மீது பரண் கட்டியிருந்தார்கள். அர்ஜூனன் அந்தப் பரண் மீது அமர்ந்து தவம் செய்வான். மேலே ஏறும்போது ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டுப் பாடுவான். தவம் முடிவதற்குள்ளே ஏறத்தாழ பொழுதே விடிந்து போகும்! அப்புறம்தான் அர்ஜூனன் கீழே இறங்கி வருவான். 

அன்று சாமண்ணா வந்திருக்கும் உற்சாகத்தில் கூத்து ரொம்ப நேரம் நீண்டுவிட்டது. கிழக்கு வெளுத்து சூரியன் தலைகாட்டுகிறபோதுதான் அர்ஜுனன் கீழே இறங்கி வந்தான். கிராம மக்கள் சார்பில் சாமண்ணாவுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்திய அர்ஜுனன் நாலு வார்த்தை பேசும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க சாமண்ணா எழுந்து பேசினான். 

“பூவேலி கிராம மக்களே வணக்கம்! இங்கே இன்று மிகச் சிறப்பாக ‘அர்ஜுனன் தபஸ்’ நடத்திய தெருக்கூத்துக் கலைஞர் ளைப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். நடிகர்களைக் கூத்தாடி என்கிறார்கள். அது கேவலம் அல்ல. அம்பலத்தில் கூத்தாடுகிற நடராஜப் பெருமான் கூட ஒரு கூத்தாடிதான். சுமக்க முடியாத இவ்வளவு பெரிய பூமாலையைப் போட்டு என்னைப் பூவேலிக்குள் அடைத்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் அன்பினால் மட்டும் என்னைக் கட்டுப்படுத்தவில்லை. இந்தப் பூ வேலியாலும் கட்டுப்படுத்திவிட்டீரகள்” என்று கூறிய போது கிராம மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தன் பேச்சை பாப்பா ரசிக்கிறாளா என்று சாமண்ணா சாடையாகத் திரும்பிப் பார்த்தபோது அவளும் கைதட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். 

“வண்டி கொண்டாந்திருக்கேன். வீட்டுக்குப் போவமா?” என்று சாமண்ணாவிடமிருந்த மாலையை வாங்கிக் கொண்டார் குமாரசாமி. 

“கொஞ்ச தூரம்தானே? நடந்தே போயிடலாமே?” 

“வேண்டாம் தம்பி! கூத்து பாத்தவங்க வழியெல்லாம் மூத்திரம் வழிய விட்டிருப்பாங்க. காலை வைக்க முடியாது” என்றான் குமாரசாமி. 

சாமண்ணாவும் பாப்பாவும் வண்டியில் ஏறி அமர ஒரு சின்ன கும்பல் அவர்களை வழி அனுப்பி வைத்தது. 

வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும், “நான் இப்பவே புறப்படலாம்னு பாக்கறேன். அப்பத்தான் வெயிலுக்கு முன்னால் டவுனுக்குப் போய்ச் சேரலாம்” என்றான் சாமண்ணா. 

“என்ன அவசரம் தம்பி? ரெண்டு நாளைக்கு இங்கதான் தங்கிட்டுப் போறது. பாப்பா எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டுது. நடந்ததைப் பத்திக் கவலைப்படாதீங்க. இது உங்க சொந்த வீடு மாதிரி…”

“ரொம்ப சந்தோஷம். ஆனாலும் இப்ப நான் இங்கே தங்கறது அவ்வளவு சரியாயிருக்காது. கிராமத்துலே நாலு பேர் நாலு தினுசாப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் இடம் தரக் கூடாது பாருங்க. பாப்பாவுக்குக் கல்யாணமாயிட்டுதே! அவள் கணவன் அநியாயமா நடந்துகிட்டதையெல்லாம் பாப்பா சொன்னா….” 

“டவுனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? எங்கே தங்கப் போறீங்க? அங்கதான் டிராமாவிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாமே?” 

“ஆமாம். இருந்தாலும் இன்னொரு முறை கேட்டுப் பாக்கறேன். காண்ட்ராக்டருக்கு உள்ளூர என்னைச் சேத்துக்கணுகற எண்ணம்தான். ஆனா அந்த ஓட்டல்கார அயோக்கியன் தான் தடை போட்டு வெச்சிருக்கான். இருக்கட்டும். அவனை நான் சும்மா விடப்போறதில்லை.” என்று பற்களை நறநறவென்று கடித்தான் சாமண்ணா. 

“அவனை மறந்துடுங்க.தம்பி! எதுக்கு வீண் வம்பு? கொஞ்ச நாளைக்குப் பொறுமையா இருங்க. நீங்க இப்ப டவுனுக்குப் போறதில் பாப்பாவுக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லே….” 

“பாப்பா மனசிலே என்ன இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு ஒரு லட்சியம் இருக்கு. அதுதான் இப்ப எனக்கு முக்கியம், மற்றதெல்லாம் அப்புறம்தான். என் மூச்சு பேச்சு எல்லாமே நாடகம்தான். என் நடிப்பைக் கண்டு இந்த நாடே வியக்கணும். என் கோமாளி வேஷத்தையும் நடிப்பையும் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா இதிலே எனக்கு திருப்தியோ மகிழ்ச்சியோ இல்லை. நான் ஒரு ஹீரோவா, கதாநாயகனா மாறி என் நடிப்பாலே ஊரையே அழ வைக்கணுங்கறதுதான் என் ஆசை. அதை நடத்தியே தீருவேன். எனக்குள்ளே ஒரு பிசாசு இருக்கு.

‘சாமண்ணா! நீ ஒரு பிறவி நடிகன். உன் நடிப்பைக் கண்டு இந்த உலகமே பாராட்டப் போகுது. ம்…. புறப்படு. உன் லட்சியப் பயணத்தை இப்பவே தொடங்கு’ என்று என்னை அது தூண்டிக்கிட்டே இருக்கு: உடம்பெல்லாம் எப்பவும் ஒரு ஆவேசம் வந்த மாதிரி இருக்கு” என்று கூறியவன் திரும்பி பாப்பாவைப் பார்த்து, “நான் வரட்டுமா?” என்று கேட்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, “நீங்க போகத்தான் வேணுமா?” என்பதுபோல் கண்களால் கேட்டுக் கொண்டே ஒப்புக்குத் தலையசைத்தாள் பாப்பா. 

“வெந்நீர் போட்டிருக்கு. குளிச்சு இட்லி சாப்பிட்டுப் போங்க. அப்பத்தான் கூத்துப் பாத்த மயக்கம் தெளியும்” என்றான் குமாரசாமி. 

“இட்லி சாப்பிட்டப்புறம் ஒரு தூக்கம் போடச் சொல்லுங்க. தூங்கி எழுந்திருப்பதற்குள் மணி ஒண்ணரையாயிடும். அப்புறம் சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்வீங்க…” என்று சிரித்தான் சாமண்ணா. 

“சாப்பாட்டுக்கு மேல்தான் புறப்படுங்களேன். வெயில் தாழ்ந்தாப்பல ….” என்றாள் பாப்பா. 

“ஆமாம். அதுக்குள்ளே ராகுகாலமும் போயிடும்!” என்றான் குமாரசாமி. 

அவர்கள் பேச்சைத் தட்ட விருப்பமின்றி ஒரு தூக்கம் போட்டு சாப்பிட்ட பிறகே புறப்படத் தயாரானான்: எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவனிடம் தந்த பாப்பா, “இதைக் கொஞ்சம் போஸ்ட் பண்ணிர முடியுமா?” என்று கேட்டாள். 

“லெட்டர் யாருக்கு?” 

“விலாசம் கவர் மேலேயே எழுதியிருக்கேன்.” 

அதை வாங்கிச் சட்டைப் பையில் திணித்துக் கொண்ட சாமண்ணா சைக்கிள் ஏறிச் சென்றபோது, தெருக்கோடி வரை அவனையே கண் கொட்டாமல் பார்த்து நின்றாள் பாப்பா. 


சூரியகுளம் நாடகக் கொட்டகை வெறிச்சோடிக் கிடந்தது. கொட்டகையில் யாரையுமே காணவில்லை. 

எலெக்ட்ரீஷியன் சிட்டிபாபு மட்டும் மின்சார வயர் ஒன்றைப் பல்லால் கடித்து ஃப்யூஸ் போட்டுக் கொண்டிருந்தான். 

சாமண்ணாவைக் கண்டதும், “வாங்கய்யா” என்று ஜீவனில்லாமல் சொன்னான். 

“என்ன பாபு ! இன்னைக்கு நாடகம் இல்லையா?” 

“அர்த்தால் நடக்கப் போகுதாம். அந்நியத் துணிகளை நடுரோடில் கொளுத்தப் போறாங்களாம். பெரிய கலாட்டாவாயிருக்கும் போல இருக்கு. அதனால் டிராமாவை நிறுத்தி வெச்சிருக்காங்க.” 

“காண்ட்ராக்டரை எங்கே காணோம்?”

“இப்பத்தான் வீட்டுக்குப் போனார்.” 

“காதர் பாட்சா?” 

“அவன் லீவ்ல போயிட்டான்!” 

”சரி; காண்ட்ராக்டர் வந்தா நான் அப்பறம் வந்து பாக்கறேன்னு சொல்லு.” 

சாமண்ணா வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்து அரைக் கதவாய்ச் சாத்தி வைத்திருந்த ‘அஞ்சு ராந்தல் ‘ தண்ணீர்ப் பந்தலுக்குள் நுழைந்தபோது சில பேர் அவனை விநோதமாகப் பார்த்து ரகசியக் குரலில் பேசிக் கொண்டார்கள். அவசரமாக ஒரு காப்பி வாங்கி குடித்துவிட்டுப் பக்கத்து வெற்றிலை பாக்குக் கடை முன் போய் நின்றான். அங்கே, சுதேசமித்திரன் வால்போஸ்டரில் –

“அம்பாள் லாட்ஜ் ஓட்டல் முதலாளி மர்மக் கொலை! சாமண்ணா மீது சந்தேகம்! போலீஸ் சாமண்ணாவைத் வலை போட்டுத் தேடுகிறது!”

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *