கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,211 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

பன்னீர் மலை, பூவேலிக்கு வடமேற்கில் மூன்று மைல் தள்ளி உள்ள முருகன் ஸ்தலம். பன்னிருகை வேலன் கோயில் பிரசித்தமானது. வேலனின் ஒவ்வொரு கையிலும் சம்ஹாரக் கருவிக்குப் பதிலாக யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள் இருந்தன. 

இதனால்தானோ என்னவோ அங்கே ஆண்டுதோறும் ஆடி மாதக்கடைசி வார வெள்ளிக்கிழமையில் பெரியவர், சின்னவர் என்ற வித்தியாசமில்லாமல் சுற்று வட்டாரக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருபத்து நாலு மணி நேரமும் பெரிய விழாக் கொண்டாடுவார்கள். 

சிம்மப்பாதையிலிருந்து தாசிகுலக் கன்னிகைகள் சதிர் ஆடிக் கொண்டு அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் காட்சியைப் பார்ப்பதற்கென்றே அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் அத்தனை பேரும் கூடி விடுவார்கள். 

வக்கீல் வரதாச்சாரியும் அவர் மனைவி கோமளம்மாளும் வழக்கம்போல் அந்த வருட விழாவுக்கும் வந்திருந்தார்கள். 

மொட்டையாக நின்று கொண்டிருந்த தேர்ச் சப்பரத்துக்கு அருகே வரதாச்சாரியின் பீட்டன் வண்டி வந்து நின்றது. வாதாச்சாரிக்கு ஏக வரவேற்பு. கோயில் நிர்வாகிகள் அவரை முதல் வரிசைக்கு அழைத்துப் போய் உட்கார வைத்தார்கள். மஞ்சள் நீராடி, புதுசு உடுத்தி, பளீர் பளீர் என்று கன்னிகை கள் வெள்ளிக்குடத்தில் நீர் மொண்டு ஊர்வலமாகக் கோயிலுக்குள் போவதைக் கோமளம்மாள் மட்டும் வண்டியிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“மாமி!” என்று பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பிப். பார்த்தபோது நிலவு போல பாப்பா நின்று கொண்டிருந்தாள். நகை ஏதும் அணியாமல், பளிச்சென்ற மேனி, மூன்றாவது அழகுக் கண் திறந்தது போல் நெற்றியில் குங்குமப் பொட்டு. 

“வாம்மா! வா! ஏறிக்கோ. இந்தக் கூட்டத்திலே நான் வந்திருப்பது உனக்கு எப்படித் தெரிஞ்சது?” என்று கேட்டாள் மாமி. 

“பீட்டன் வண்டியைப் பார்த்தேன். நீங்க வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்!” என்றாள் பாப்பா. 

“நீ குடம் எடுக்கப் போகலையா?”

“ஆசைதான் மாமி! ஆனா அதுக்கு எனக்கு அருகதை உண்டோ இல்லையோன்னு சந்தேகமாயிருந்தது. அதனால் போகலே” என்று குரலில் சிறிதே வருத்தம் தொனிக்கக் கூறினாள். 

“அதுக்கென்ன, பாப்பா! நீயும் குடம் எடுத்தா யார் வேண்டாங்கப் போறா?” என்றாள் மாமி. 

“எனக்கு எதிலுமே புத்தி போகலை மாமி! அவர் வந்திருக்கார் பார்த்தேளா?” என்றாள். 

“யாரு, சாமண்ணாவா?”

“ஆமாம்! அவர் மட்டுமில்லை. எல்லா நாடகக்காரர்களும் வந்திருக்காங்க. சிங்காரப் பொட்டு செல்லப்பா கூட வந்திருக்கார்.” 

“உடம்பு சரியில்லாமல் இருந்தாரே, அவர் எப்படி வந்தார்?” 

“ஆமாம்! கொஞ்ச நாளாகவே படுத்த படுக்கையா இருந்தாராம். முருகன் அருளாலே இப்ப பூரணமா குணமாயிட்டு தாம்.” 

“நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுவார். ஜில்பாக் குடுமி வைத்துக் கதுப்புக் கன்னங்களில் குழி விழச் சிரிச்சார்னா ஊரே மயங்கிப் போகுமே!” 

“இப்ப சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சு மறுபடியும் நாடகம் நடத்தப் போறாராம். அதுக்காகத்தான் இங்கே வந்திருக்கார்னு அப்பா சொன்னார். பல பெரிய மனுஷாளைச் சந்திக்கிறதுக்கு இது ஏத்த இடமாச்சே! எல்லாரும் இங்கே வந்திருக்கா பாருங்கோ!” 

“சந்திச்சு என்ன செய்யப் போறார்?” 

“எல்லாப் பெரிய மனுஷாகிட்டேயும் பணம் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காராம்!” 

“அடி சக்கை! அப்படின்னா சீக்கிரமே புதுக் கம்பெனி ஊர்லே வந்துடும்னு சொல்லு” என்று சந்தோஷப்பட்டாள் கோமளம். 

“வரலாம்” என்று தலைகுனிந்து கூறினாள் பாப்பா. 

“ஏன் பாப்பா! உனக்கு இதில் ஏதாவது வருத்தமா?” 

“இல்லை மாமி” என்று சொல்லும் போதே ஒரு பெருமூச்சு வந்து அவளது உண்மை நிலையைக் காட்டியது. 

“ஏதாவது மனசுலே இருந்தாச் சொல்லிடு. எங்க ஆத்துக்காரர் உங்க குடும்ப வக்கீல் இல்லையா? உங்களுடைய சுகதுக்கத்துல எங்களுக்கும் பங்கு உண்டே! நீ எதையும் என்கிட்டே மனம் திறந்து பேசலாம்!” என்றாள் கோமளம். 

“இல்லை மாமி! அவரை நான் பார்த்தேன்.” 

“யாரு, சாமண்ணாவையா?” 

“ஆமாம்.” 

“அவர் என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டார். மனசு சுக்கலாப்போச்சு. அப்படி நான் என்ன மாமி இவருக்குத் தப்புச் செய்தேன்? நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சு, மத்த நாடகக் காரர்களெல்லாம் ஒரு அபிமானத்துக்கு என்னை வந்து பார்த்துட்டுப் போனா, எங்க அம்மா காலத்திலே இவர்களுக் கெல்லாம் எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? அந்தப் பழைய விசுவாசம். இவருக்கு என்னைப் பிடிக்கலைன்னா பிடிக்காமப் போகட்டும். அதுக்காகப் பார்த்த கண்ணை இப்படியா வெட்டி முறிச்சு வேறு பக்கம் திருப்பிட்டுப் போகணும்?” 

“அழாதேம்மா, இதுக்கெல்லாம் கண் கலங்கலாமோ?” என்று மாமி அவளைத் தேற்றினாள். 

“நாடகத்திலே இவர் நடிப்பையும் ரூபத்தையும் பார்த்து மயங்கிப் போனேன். எதேச்சையா அன்னைக்கு ஒரு நாள் நாங்க இவர் வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அக்கறை காட்டி அன்பாகப் பழகினார். இப்ப திடீர்னு அவருக்குப் பிடிக்கலை போல இருக்கு. போனாப் போகட்டும். யாரும் வற்புறுத்தலையே!” 

“ஸ்திர புத்தி இல்லாம இருக்காண்டி அவன். என்னென்னவோ பேசுறான். கேஸ் வேறே குழப்பிட்டுதா! கொஞ்ச நாள் போகட்டும்; எல்லாம் சரியாப் போயிடும். நான் அவனுக்குப் புத்தி சொல்லிண்டுதான் இருக்கேன். நான் சும்மா விடப் போறதில்லை அவனை. இப்படியா ஒரு பெண்ணை வயிற்றெரிச்சல் கொட்டிக்கிறது?” என்று சற்று ஆவேசமாகப் பேசினாள் கோமளம். 

“நான் அப்படி என்ன கொடுமை பண்ணிட்டேன்? ஏன் இப்படி நடந்துக்கிறார்? நினைக்க நினைக்க இதயமே வெடிச்சுடும் போல இருக்கு மாமி!” 

தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“இந்தா பாப்பா! சின்னக் குழந்தையாட்டம் அழாதே! எதுக்கு அழணும்? அவன் போனாப்போறான். விட்டுத் தள்ளு. நன்றிகெட்டவன்! நீ மட்டும் வக்கீல் மாமாகிட்டே சிபாரிசுக்கு வரலைன்னா இவன் இந்தக் கேஸ்லேருந்து தப்பி வெளியே வந்திருக்க முடியுமா? போலீஸ் இன்ஸ்பெக்டர் முனகாலா சும்மா விட்டிருப்பாரா? முட்டியைப் பெயர்த்துட்டுத்தானே வெளியிலே அனுப்பிச்சிருப்பார்! கொஞ்சமாவது நன்றி இருக்கா? உன்கிட்டே நேரிலே ஒரு வார்த்தை சொல்ல வேணாமோ? எங்கிட்டே சொல்லி என்ன பிரயோசனம்? வரட்டும்! வரட்டும்” என்று கறுவினாள் மாமி. 

“ஐயோ, மாமி! கோபப்பட்டு அவரை எதுவும் உங்க வாயாலே சொல்லிடாதீங்க. சாபம் கொடுத்துராதீங்க. பெரியவங்க வாக்குப் பலிச்சுடும். அவர் எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும்.ஆனா அவருக்கு எந்தக் கெடுதலும் வரக் கூடாது. அவர் நன்னாயிருக்கணும். நான் உதவி செஞ்சது உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சாப் போதும். இப்பவும் அவருக்கு நான் ஏதாவது செய்யணும்னுதான் நினைக்கிறேன்! இந்தச் சிங்காரப் பொட்டுக்காரர் ஒவ்வொரு பெரிய மனுஷாளாய்ப் பார்த்து சகாயம் கேட்கிறார். அவர் பின்னாலே இவர் அலையறார். இவர் ஏன் போகணும்? தலையெழுத்தா இவருக்கு? சொல்லுங்கோ. என்னை அவர் பார்க்க வேண்டாம். என்கிட்டே பேச வேண்டாம். தூரத்திலேயே இருந்துக்கட்டும். ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தா இவருக்கு நான் ஒரு டிராமாக் கம்பெனியே ஆரம்பிச்சுக் கொடுத்திருப்பேனே!” 

“ஐயோ பாப்பா! திருப்பித் திருப்பி ஏன் புலம்பறே? அவனை விடு! உனக்கு ஏன் இப்படி துக்கம் பீறிப் பீறிண்டு வர்றது? அவன் ஏதோ புத்தி தடுமாறிப் போயிருக்கான். நாலு இடத்திலே போய் முட்டிக் கொண்டு வரட்டும். பட்டால்தான் தெரியும் அவனுக்கு.” 

“மாமி! நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவீங்களா?” 

“என்ன செய்யணும் சொல்லு?” 

“நான் அவருக்கு எப்படியாவது, எந்த விதத்திலாவது உதவியாயிருக்கணும்னு நினைக்கிறேன். இப்ப அவருக்கு அது தெரிய வேண்டாம். பின்னாடி அவர் தெரிஞ்சுக்கிட்டு மனம் மாறி என்கிட்ட வரணுங்கிறதுக்காக இல்லை. சத்தியமா அந்த எண்ணம் இல்லை. ஒரு நல்ல நடிகர் வாழ, நான் உதவணும்னு தான் மனப்பூர்வமா விரும்பறேன். அதுக்காகத்தான் உதவி செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த அனாதைக்கு ஒத்தாசை செய்யணும்”

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? அனாதைன்னு சொல்லிக்காதே! உனக்கென்ன குறைச்சல்? அப்படி அனாதை ஆக நாங்க ளெல்லாம் விட்டுற மாட்டோம். என்ன செய்யணும் சொல்லு!” 

“அவர் கஷ்டப்படக் கூடாது மாமி! அதுதான் நான் வேண்டிக்கிறது, நீங்கதான் அவரைக் காப்பாத்தணும். அவருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், எவ்வளவு பணம் வேணும்னாலும் நீங்களே கொடுத்து உதவுங்க. நான் அதையெல்லாம் உங்களுக்குத். தந்துடறேன். ஆனா, நான்தான் இதெல்லாம் செய்யறேன்னு அவருக்குத் தெரிய வேண்டாம்.” 

“இது என்ன பெரிய விஷயம்? உனக்காக அவசியம் செய்யறேன். கவலையே படாதே! ஆனா எனக்கு இன்னொரு யோசனை தோண்றது. அது சரியாயிருக்குமான்னு பாரு. சொல்லட்டுமா?” 

“சொல்லுங்கோ.” 

“சிங்காரப் பொட்டு பணத்துக்காக அலையறார்னு சொன்னியே! நீ ஏன் சிங்காரப் பொட்டுக்கே ஒரு டிராமாக் கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுக்கக் கூடாது? அந்தக் கம்பெனியிலே சாமண்ணா சேர்ந்துக்கலாமே! அது மறைமுகமாக இவனுக்கு உதவின மாதிரி இருக்குமே! என்ன சொல்றே?” 

மாமி நிறுத்த, பாப்பா பரவசத்தோடு யோசித்தாள். 

அத்தியாயம்-11

அன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். 

மூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள். 

இப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன் தோரணங்களும் வண்ணக் காகிதக் குழல்களுமாய் விழாக்கோலம் பூண்டிருந்தது. 

‘மனோ ரஞ்சனி கந்தர்வ கான சபா’ என்ற கொட்டை ஜிகினா எழுத்துக்களில் நீண்ட பானர் துணி மேலும் கீழும் அலைவீசிக் கொண்டிருந்தது. 

ஆங்காங்கே காஸ் லைட்டுகள் ஜொலிக்க, டிக்கெட் கவுண்ட் டர்களில் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டிருந்தது. 

உள்ளே சபை நிறைந்து சோடாக் கலர் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. 

நீர் ஊற்று பொழியும் தோட்ட ஸீன் படுதாக் காட்சி. மேடையில், மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது. 

6.35 ஆனதும் ‘ட டாம்’ என்று சத்தம். 

‘ஜோதி சுந்தர வினோதா, ஆதிகண நாதா’ என்ற விநாயக ஸ்துதிப் பாடல் கும்மென்ற ஹார்மோனிய சுருதியுடன் கோரஸாக ஒலிக்க, மேடையின் இடுக்குகள் வழியே வந்த ஊதுவத்தி சாம்பிராணிப் புகை சபை முழுவதும் மணம் பரப்பியது. 

சபையோரின் ஒருமொத்த ஆவல் மேடையை நோக்கி லயித்திருந்தது. 

வக்கீல் வரதாச்சாரி ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அவரை வரவேற்க நாலைந்து பேர் வாசலுக்கு ஓடினார்கள். இரண்டு முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். 

“உங்க ஆசீர்வாதத்தாலும் உதவியாலும் இந்தப் புதிய நாடகக் கம்பெனியைத் தொடங்கி இருக்கோம்” என்றார் நிர்வாகிகளில் ஒருவர். 

கோமளம் வைரச் சிரிப்போடு உடம்பில் ஜரிகையும், தங்கமும் மின்ன பணக்கார தோரணையுடன் வந்திருந்தாள். 

அடுத்தாற்போல் டி.எஸ்.பி. மனைவி ஏக அமர்க்களமாக உள்ளே நுழைந்தாள். 

டி.எஸ்.பி.நாராயணசாமி ஜிப்பா போட்டு, குதப்பிய வெற்றிலையுடன் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்தில் ஒரு கலியாண வீட்டு விருந்தாளி போல் காணப்பட்டார். 

அடுத்தபடி தாசில்தார், பிறகு மிட்டாதார், மிராசுதார், பக்கத்து ஜமீன் எல்லாருமே ஒவ்வொருவராய் வந்து இறங்கினர். 

இந்த ஆர்ப்பாட்ட வைபவங்களிடையே மெல்லிய தென்றல் உள்ளே வருவது போல் பாப்பா வந்து கொண்டிருந்தாள். 

அவளைக் கண்டதும் அத்தனை ஆண்களின் மூச்சும் தடைப்பட்டு நின்றன. பெண்கள் அவளைப் பொல்லாக் கண்களோடு பார்த்தார்கள். 

அத்தனை பேருக்கும் தன் அபிநயக் கைகளால் அழகாகக் கும்பிடு போட்டு அடக்கமாகப் பின் வரிசை நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டாள். 

கண்பதிஸ்தோத்திரப்பாடல் இசை வெள்ளமாய்ச்சபையை நிறைக்க திரை சுருண்டு சுருண்டு மேலே போக, அத்தனை கண்களும், ‘அடுத்தது என்ன?’ என்பது போல் ஆவலோடு நோக்கின. 

சிவலிங்கத்திற்குப் பத்மாவதி பூஜை செய்யும் முதல் காட்சி ஆரம்பமாயிற்று. 

‘கர்ண– அர்ச்சுனா’ நாடகம். 

“மகேசுவரா! என் மனோரதம் என்று பூர்த்தியாகும்? உம்முடைய கிருபையினால்தான் நான் என் மனதுக்குகந்த மணாளனை என்று பெறுவேன்? என் ஜீவியத்தையும், யௌவனத்தையும் நான் யார் பாதங்களில் அர்ப்பணம் செய்யப் போகின்றேன்?” இந்த நீண்ட வசனத்தைத் தொடர்ந்து ஆனந்தபைரவியில் ஒரு சுலோகம். 

பாப்பா பலமாகப் பெருமூச்சு விட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. பத்மாவதியாக நடிக்கும் ஜில்ஜில் என்ன உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறாள்? பாப்பா தன்னையே பத்மாவதியாக எண்ணிக் கொண்டாள். 

அதே முறையில்தானே அவள் மனமும் பிரார்த்தனை செய்கிறது? 

‘என் யௌவனத்தையும் வாழ்க்கையையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறேன்?’ என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டாள் பாப்பா. 

‘சாமண்ணா எப்போ வருவார்?’ அவள் நினைவெல்லாம், கவனமெல்லாம் சாமண்ணாவின் மீதே இருந்தது. 

சுப்பன், குப்பன் என்ற இரண்டு விதூஷகர்கள் இடையில் வந்து கொச்சை மொழியில் உரையாடித் தமாஷ் செய்துவிட்டுப் போனது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 

சாமண்ணா வந்திருந்தால் கொட்டகை அதிர்ந்திருக்குமே! அப்படி ஒரு நடை போட்டுக் காட்டுவாரே! 

புது நாடக சபா தொடங்கி, புது நாடகம் உருவாக்கி இருக்கிறார்கள். நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்கள் பிழைப்பார்கள். 

ஆமாம், சிங்காரப் பொட்டு நடத்த ஆரம்பித்துள்ள இந்த நாடக கோஷ்டியில் சாமண்ணா இருக்கிறாரா, இல்லையா? 

நிச்சயம் இருக்க வேண்டுமே! சாமண்ணா புது வேடம் போடப் போவதாகச் சொன்னார்களே! எந்த வேடத்தில் வருவாரோ? 

இடைவேளை வந்தது. ஆனால் சாமண்ணாவைத்தான் காணவில்லை. பாப்பா குழம்பிப் போனாள். 

வக்கீல் வரதாச்சாரி வெளியில் எழுந்து போனபோது முன் வரிசையில் இருந்த கோமளம் பின்பக்கம் திரும்பிப் பாப்பாவுக்கு ஜாடை காட்டினாள். 

பாப்பா சுருக்கென்று எழுந்து தளிர்நடையாகக் கோமளத்தின் அருகில் போய் அமர்ந்தாள். 

“என்ன பாப்பா இவன்! ஏதாவது அக்கிரமம் பண்றானா? இன்னும் ஆசாமி வரவேயில்லையே! ஒருவேளை வராமலே இருந்து விடுவானோ?” என்று சாமண்ணாவைக் குறித்துக் கவலைப்பட்டாள் கோமளம். 

“அதான் மாமி நானும் யோசிக்கிறேன். இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்திருக்கிறாரா, இல்லையா என்றே சந்தேகமாயிருக்கிறதே! ஒருவேளை இந்த நாடகத்தில் அவருக்கு வேஷமே இல்லையோ, என்னவோ!” என்று தவித்தாள். 

“சேர்ந்திருக்கேன்னுதான் சொன்னான். பார்க்கலாம், இன்னும் பாதி இருக்கே!” 

“மாமி! சிங்காரப் பொட்டு நல்லவர்தானே?”

“நல்லவனாத்தான் இருக்கணும்.” 

“பணத்தை வாங்கி முழுங்கிட மாட்டானே?” 

“முழுங்கினா, தொடர்ந்து மூணு வேளைச் சாப்பாடு கிடைக்க வேண்டாமோ? நாடகம் நடந்தாத்தானே கிடைக்கும்.” 

“நீங்க கண்டிஷன் பேசிட்டுத்தானே பணம் கொடுத்திருக்கீங்க?” 

“கண்டிஷனா? வக்கீல் மாமா சும்மா கொடுத்துடுவாரா? பத்திரம் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினப்புறம்தான் பணம் கொடுத்திருக்கார். இப்போ மாமா எதுக்கு வெளியிலே போயிருக்கார்னு தெரியுமா?” 

“எதுக்கு?” 

“இன்னிக்கு வசூல் கணக்கைப் பார்க்கத்தான்.” 

பாப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வரதாச்சாரி இவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஆறுதலாயிருந்தது. 

தணிந்த குரலில், “மாமி! நான் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரியாதே?” என்று கேட்டாள். 

“மூச்! ஒரு வார்த்தை வெளியில் போகாது!” 

“சிங்காரப் பொட்டுவுக்குக் கூட நீங்கள் கொடுக்கிறதாத்தானே சொல்லியிருக்கீங்க?” 

“ஆமாம், நாங்க ஒருத்தர்தான் கொடுத்தோம்னு சொன்னா சந்தேகப் படுவாரேன்னு நாலு பேர் சேர்ந்து பணம் போட்டிருப்பதாகச் சொல்லி வச்சிருக்கோம்.” 

“என்னவோ! எல்லாம் நல்லபடியா நடக்கணும். அதோ மாமா வரார்! நான் என் ஸீட்டுக்குப் போறேன்.” 

பாப்பா எழுந்து தன் இடத்துக்குப் போய் விட்டாள். 

வரதாச்சாரி வந்து உட்கார்ந்ததும் கர்ணன் வேடம் பூண்டிருந்த சிங்காரப் பொட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, “வக்கீல் ஸார்தான் எங்களுக்கு ஆதரவு திரட்டி இந்த நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சு வைத்தவர். அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைச் சொல்லி இந்த மலர் மாலையை அவருக்குச் சூட்டுகிறேன்” என்று கொஞ்சம் நாடகத் தமிழ் பேசி மாலையைச் சூட்டினார். 

பாப்பாவுக்கு இதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் சாமண்ணாவை அதுவரை மேடையில் காணவில்லையே என்ற கவலையும் – ஒருபுறம் வாட்டிக் கொண்டிருந்தது. 

திரை உயர்ந்து, கையில் வில்லுடனும் கிரீடத்துடனும் பட்டு பஞ்சகச்சத்துடனும் வந்த அதி ரூப சுந்தரனைப் பார்த்ததும் பாப்பாவுக்குப் பக்கென்று நெஞ்சு அடைத்தது. 

மத்யமாவதியில் கம்பீர எடுப்புடன் தித்திக்கும் சாரீரத்தில் பாடிக் கொண்டு சபையை பிரமிக்க அடிப்பவர் யார்? 

அடி வயிற்றிலிருந்து ஒரு இன்ப உணர்வு அவள் அங்கமெல்லாம் பாய்ந்தது. 

ஏற்கெனவே தாபம் கொண்டவள், இப்போது தாபம் மிகையாகி விட, ஒரு நீண்ட வெப்பப் பெருமூச்சு விட்டு, சாமண்ணாவைத் தன் காதல் நிறைந்த கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள். 

‘ஆகா! சாமண்ணா! எத்தனை அழகு! என்ன ராஜகம்பீரம்! இத்தனை நாளும் இவர் பொருத்தமில்லாத கோமாளி வேடம் போட்டுத் தன் நாடக வாழ்க்கையையே பாழாக்கிவிட்டாரே!’ 

அடுத்து, 

‘மெச்சினனே, உன்னையே – வில் விஜயனே!’ என்று கிருஷ்ணன் குந்தள வராளியில் பாடவும், 

அதற்கு அடுத்து இந்துஸ்தானி அஸாவேரியில், ‘உன் உயர் அன்பை நான் என்னவென்பேன்?’ என்று சாமண்ணா அமுத கானமாகப் பதிலுக்குப் பாடிமுடிக்க, சபையில் எழுந்தபரவச உற்சாகங்கள் கரகோஷங்களாக மாறின. 

உணர்ச்சி வசப்பட்ட பாப்பாவுக்குக் கண்ணீர் மல்கியது. 

அன்று அரக்கனாக வந்த சாமண்ணா அத்தனை பேரையும் கவர்ந்து விட்டான். 

அதுவும் கடைசிக் காட்சியில் கர்ணனைப் பார்த்து, “ஆ! சகோதரா! உன்னைச் சகோதரன் என்று தெரியாமல் கொன்றேனே!” என்று உணர்ச்சி ததும்பக் கூறியபோது சபையே கலங்கி விட்டது. 

நாடகம் முடிந்ததும் பாப்பா பூமிக்கு இறங்கி வரச் சற்று நேரம் பிடித்தது. 

எல்லோரும் சாமண்ணாவின் நடிப்பைப் பாராட்டிப் பேசியபடி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். 

பாப்பா வெளியில் வந்து நின்ற போது அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. 

ஃபோர்ட் ஸெடான் கார் பளபளவென்று நிற்க, அதன் அருகில் டாக்டர் ராமமூர்த்தியும் அவர் மகள் சகுந்தலாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 

சகுந்தலா நாகரிக யுவதியாகக் கையில் வாட்ச் கட்டி, ஸாரியில் புரூச் குத்தி சொகுசாக நின்று கொண்டிருந்தாள். அவள் விழி சாமண்ணாவின் மீது லயித்திருந்தது. அவள் எதிரே சாமண்ணா இன்னும் வேஷத்தைக் கலைக்காமல் அர்ச்சுனனாகவே நின்று கொண்டிருந்தான். 

“பிரமாதம் போங்க! உங்களை மறக்கவே முடியாது! அர்ச்சுனன்னா நீங்கதான்! ஷேக்ஸ்பியர் நாடகம் பார்த்தா அப்படி அனுபவம் வரும்னு சொல்வாங்க. இன்னிக்கு உங்க நாடகத்தைப்பார்த்து எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது!” 

அந்தப் பெண் பரவசமாய்ப் பேசினாள். சிறிது கூட வளையவில்லை. கூசவில்லை. கம்பீரமாக ஓர் ஐரோப்பிய மாது நிற்பது போல நின்று கொண்டிருந்தாள். 

டாக்டர் ராமமூர்த்தியும் சாமண்ணாவை வெகுவாகப் புகழ்ந்தார். 

விடைபெறும்போது, “அப்பா அவரை நம் வீட்டுக்குச் சாப்பிட அழையுங்களேன்!” என்றாள் சகுந்தலா. 

“ஆமாம் சாமண்ணா! சாப்பாட்டுக்கு வரணும். கம்பவுண்டரை அனுப்பறேன். என்னிக்கு வரேன்னு சொல்லு” என்றார் டாக்டர். 

அர்ச்சுன சாமண்ணா கைகூப்பி நன்றி தெரிவிக்க, அவனது கண்கள் மென்மையாகச் சகுந்தலா மீது விழுந்தன. 

அவள் கண்களும் அவனை நோக்கி இருக்க, இருவர் கண்களும் ஆயிரம் செய்திகள் பேசிக் கொண்டன. 

இதையெல்லாம் சற்று எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த பாப்பா ஒரு கற்சிலை போல் உறைந்து போனாள். 

அத்தியாயம்-12

சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில கண்ணீர் வந்துடுத்து!” என்றாள். 

“நல்ல வசூல் ஆகும் பாருங்கோ” என்றார் டாக்டர் ராம மூர்த்தி. 

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்!” என்று சாமண்ணா கைகூப்பினான். 

“இன்னொரு தடவை கூடப் பார்க்கணும் போல இருக்கு. வெள்ளிக்கிழமை மறுபடியும் வரலாமா, அப்பா?” என்று கேட்டு சாமண்ணாவைத் தன் அழகிய விழிகளால் பார்த்துக் கொண்டே ஸெடானின் பின்புறம் போய் உட்கார்ந்தாள். டாக்டரும் ஏறி அமர்ந்து கையைக் காண்பித்தார். 

தேவரதம் ஒன்றில் இருவரும் கொலு வீற்றிருப்பது போல் இருந்தது அது. 

அத்தனை நேரமாக அந்தக் காட்சியைச் சற்று எட்ட இருந்த படியே கவனித்துக் கொண்டிருந்த பாப்பாவுக்கு உள்ளத்தில் ஒரே எரிச்சலாய்ப் புகைந்தது. 

“என்னிடம் ஒரு வார்த்தை பேசினாரா? நான் இங்கே வந்திருப்பது கூடத் தெரியாததுபோல் ஓர் அலட்சியமா? அந்தப் பெண்ணோடு எத்தனை இளிப்பு!” என்று பொருமினாள். 

உள்மனம்: ‘நீ நிற்பதை அவர் கவனிக்கவில்லை பாப்பா! ஏன் ஆத்திரப்படுகிறாய்? கவனித்திருந்தால் பேசாமல் இருப்பாரா?’ 

பாசம் வைக்கிறவர்களுக்கு அதன் விளைவாக நேரும் துன்பங்கள் நிறையப் பிடிக்கும். அதுவும் பாசத்துக்கு உரியவரிடமிருந்தே அந்தத் துன்பம் வரும்போது அதை ரசிக்கவே செய்வார்கள். 

பாப்பா இரவு பூராவும் சாமண்ணாவின் அலட்சியப் போக்கை நினைத்து மருகினாள். “என்னைப் பார்க்கவே இல்லை. என்னிடம் பேசவே இல்லை” என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினாள். 


பொழுது விடிந்ததுதான் தாமதம். குளித்துச் சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவிடம் வண்டியைத் தயார் பண்ணச் சொல்லி வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டாள். 

வெயில் சுள்ளென்று உரைத்தது. 

வரதாச்சாரி மனைவி கோமளம் கையில் ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய ‘தேவ சுந்தரி’ கனத்துக் கிடக்க, 

அதில் வரும் தேவசுந்தரி, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் இக்கட்டு நிலையில் இருந்து கொண்டு, கெட்ட எண்ணத்தோடு வரும் ஜெகந்நாதனிடம், 

“ஐயா! நீர் உயர் குடியில் பிறந்தவராய் இருந்தும் இம்மாதிரி அனாதையாகிய ஒரு ஸ்திரீயை அவமானம் செய்வது நீதியாகுமா? நீர் உடனே என்னைப் போகும்படி விட்டு விட வில்லையெனில் நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க, 

வாசலில் குதிரை வண்டியிலிருந்து பாப்பாவும் குமாரசாமியும் இறங்குவதைப் பார்த்ததும், படித்த இடத்திற்கு அடையாளக் குறியாய்த் தனது மூக்குக் கண்ணாடிக் கூட்டை வைத்து விட்டு, “வா, வா” என்று பாப்பாவை வரவேற்றாள். 

குமாரசாமி பாப்பாவைப் பார்த்து, “நீ உள்ளே போம்மா. நான் அரை மணியில் திரும்பி வந்துடறேன்” என்று சொல்லி வண்டியோடு புறப்பட்டுப் போய் விட்டான். 

பாப்பா! வந்து ஊஞ்சலில் சுவாதீனமாக உட்கார்ந்தான்.

“பாப்பா நீ வருவேன்னு எனக்குத் தெரியும்! எதிர்பார்த்துண்டேதான் இருந்தேன்” என்றான். 

“அதெப்படி தெரியும் உங்களுக்கு?” எனக் கேட்டாள் பாப்பா. 

“எப்படியோ! நேத்தே ஊகிச்சுட்டேன். நான் ஊகிச்சது சரியாப் போச்சா, இல்லையா?” 

“நேத்திக்கு நடந்ததைப் பார்த்தேளா மாமி?” என்று பாப்பா ஆரம்பிக்க, 

“அர்ஜுன மகாராஜாதானே? அமர்க்களம். அந்த வேஷத்துல எத்தனை அழகா இருந்தான் பார்த்தாயா அந்த சாமண்ணா!” என்று கோமளம் வியக்க 

“என்கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசல்ல மாமி” என்று பாப்பா துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்ன போது கோமளத்துக்குப் பரிதாபமாயிருந்தது. 

“ஏன், என்னாச்சு? எதுக்கு இப்படி வருத்தப்படறே?” என் அனுதாபத்தோடு கேட்டாள் கோமளம். 

“டாக்டரையும், அவர் பெண்ணையும் ரொம்ப அக்கறையா கார் வரை போய் வழி அனுப்பி வச்சவருக்கு நான் எதிரிலேயே மலை மாதிரி நிக்கறது கண் தெரியலையாக்கும்! என்னைப் பார்க்கலைன்னாலும் உங்களையாவது வந்து பார்த்திருக்கலாம் இல்லையா?” 

“இதப் பாரு! பாப்பா! எங்காத்துக்காரர் குணம்தான் உனக்கு நன்னாத் தெரியுமே! வெளியிலே சடசடன்னு வந்து வண்டி ஏறிடுவார். கூட்டத்தில் நிற்கிறதே அவருக்குப் பிடிக்காது. அதனால் ஒருவேளை பார்க்க முடியாமல் போயிருக்கலாம். இதையெல்லாம் நாம் பெரிசா நினைச்சு ஒரு குத்தமா எடுத்துக்கக் கூடாதும்மா…” 

“இருக்கட்டும். நீங்க விடுவிடுன்னு போறதாகவே இருக்கட்டும். அதுக்குள்ளே ஓடி வந்து ஒரு வார்த்தை சொல்லி வழி அனுப்பியிருக்க வேண்டாமோ? நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு முக்கியம்னு கூடத் தெரியாமப் போச்சா? இந்த டிராமா நடக்கறதுக்கே நீங்கதானே மூல காரணம்?” 

“இந்தா பாப்பா! நாங்க வெறும் மூல காரணம்தான். மூலதனக் காரணம் நீதானே?” என்று சிரித்த கோமளம் மாமி, “சாமண்ணா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லம்மா. அவன் ரொம்ப நல்ல பையன். அந்த கும்பல்ல அவன் கண்ணிலே நீ பட்டிருக்க மாட்டே. இல்லாட்டா. நிச்சயம் உன்னண்டை வந்து பேசியிருப்பான். அதோட அர்ச்சுன வேஷத்துல அப்படிவே வெளியே எத்தனை நேரம் நிப்பான்? சந்தர்ப்பம் அப்படி. உன் போலயோ எங்க பேர்லயோ அவனுக்கு விரோதமா, என்ன? அசடாட்டம் பேசாதே! அவன் மனசு எனக்குத் தெரியும். நாடகம் நடக்கிறப்போ கவனிச்சுண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதும் ஆர்மோனியக்காரர் வந்து நின்னுண்டு அவரைப் பார்க்கிறாப் போல உன்னை ஒரு பார்வை பார்க்கத் தவறலையே!”. 

“என்னைப் பார்த்தாரா? நிச்சயமா என்னைப் பார்த்தாரா? அதென்னவோ நீங்கதான் சொல்றீங்க! எனக்கு அப்படித் தெரியலை” என்று அகமும் முகமும் மலரக் கூறினாள் பாப்பா. 

“உன்னைப் பார்க்கறதுனா அப்படி அப்பட்டமா நேரடியாப் பார்ப்பானா? ஆர்மோனியக்காரரைப் பார்க்கிற மாதிரி நாசூக்கா…நீயும்தான் கவனிச்சயே! நான் அதைப் பார்த்தேனே!’ என்று உதடும் மூக்கும் பேசரியும் புன்னகையில் மூழ்கச் சொன்னாள் கோமளம். 

“எனக்குச் சந்தேகமா இருந்தது மாமி!” என்றாள் பாதி மகிழ்ச்சியை விழுங்கிக் கொண்டு. 

“இதுக்கெல்லாம் சந்தேகமாக்கும். ஓர் அபிநயத்திலே மனசை முழுக்கக் காட்டறதிலே நீங்கள்ளாம் கெட்டிக்காராளாச்சே! உன்னாலே இதைப் புரிஞ்சுக்க முடியலேன்னா நான் நம்புவேனா? இரு, இதோ காப்பி கொண்டு வர்றேன்.” 

கோமளம் மாமி போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாப்பாவின் மனம் பரவசமாகிக் கையைத் திருகிக் கொண்டிருக்க, வாசல் பக்கம் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். 

“மாமி இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா உள்ளே வந்து எதிரில் நின்றபோது பாப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழுக்குப் போல எண்ணெய்ப் பசையோடு மினுமினுத்தான். கண்களில் தூக்கம் தெரிந்தது. அவனைத் தொடர்ந்து நாய் ஒன்று வாலைக் குழைத்துக் கொண்டே உள்ளே வர அவன், “சூ சூ!” என்று அதை விரட்டிய வேகத்தில் அவன் விரலிலிருந்த மோதிரம் நழுவித் தரையில் உருண்டு ஓடியது. சட்டென்று அதைக் குனிந்து எடுத்த பாப்பா, “இந்தாங்க” என்று அவனிடம் கொடுத்தாள். அப்படிக் கொடுக்கும்போதே, ‘அது முந்தைய இரவு அர்ச்சுன வேடத்தில் அவன் அணிந்த பகட்டு மோதிரம், நிஜ மோதிரம் அல்ல’ என்பதைத் தெரிந்து கொண்டாள். 

“சாதாரண மோதிரந்தான்! வேஷம் கலைக்கிறப்போ கழற்றி வைக்க மறந்து போச்சு” என்றான். 

“உண்மைக்கும் பகட்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்!” என்றாள். 

‘பாப்பா ஏன் இப்படிப்பேசுகிறாள்? இதற்கு என்ன அர்த்தம்? இவளுக்கு என் மீது என்ன கோபம்?’ என்று குழம்பினான் சாமண்ணா. 

“ஏன் பாப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? என் மேலே ஏதாவது கோபமா?” 

“எனக்கென்ன கோபம்? உங்களுக்கு ஞாபக சக்தி குறைஞ்சிட்டு வர மாதிரித் தோணுது. பாவம், ஏகப்பட்ட கவலை உங்களுக்கு. மோதிரம் கழற்றி வைக்க மறந்துவிட்ட மாதிரி, எல்லாத்தையுமே மறந்துடாதீங்க!” 

“நான் வேற எதையும் மறக்கலையே!”

“மறக்காமலிருந்தால் சரி!” 

“ராத்திரி நாடகம் எப்படி இருந்தது? அதைப் பற்றி நீ ஒண்ணுமே சொல்லலையே! நீ இங்கே வந்திருப்பாய். உன்னைப் பார்த்துப் பேசிவிட்டும் போகலாம்னுதான் அவசரம் அவசரமாகத் தூங்காமக் கூட ஓடி வந்தேன்.” 

“என் அபிப்ராயம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா என்ன? பெரிய இடத்து ரசிகர்களெல்லாம் உங்களைப் பாராட்டிக் கை குலுக்கறப்போ என் பாராட்டுதானா முக்கியம்?” 

“சபையிலே பின் வரிசையிலே நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என் கவனமெல்லாம் உன் மீதேதான் இருந்தது. ஆனா நாடகம் முடிஞ்சு திரும்பிப் போறப்பதான் பார்க்க முடியாமப் போயிட்டுது.” 

“ஆமாம், முக்கியமாப் பேசறவாகிட்ட பேசி முடிச்சுட்டுத் தானே மத்தவங்களைப் பார்க்க முடியும்?” 

எங்கேயோ வலித்தது சாமண்ணாவுக்கு. 

“எனக்கு எல்லார் தயவும் வேண்டும். யாரை விட முடியறது?” என்றான் அவன். 

“உண்மைதான். பாதி ஹீரோ வேஷம் போட்டாச்சு! முழு ஹீரோ ஆயிட வேண்டியதுதானே இனி பாக்கி!” 

“ஆமாம்; பெரிய்ய ஹீரோ….உடுத்திக்கிறதுக்கு நல்லதா ஒரு வேட்டி கிடையாது. ஹீரோவாம் ஹீரோ!” 

பாப்பா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குரலில் தோய்ந்திருந்த வருத்தம் அவளை உலுக்கியது. 

சற்று மெலிந்து போயிருந்த சாமண்ணா கசங்கிப் போன சட்டையும் அழுக்கு வேட்டியுமாக வந்திருந்தான். 

முகம் சிறிது ஏழ்மை காட்டியது. கழுத்துக்குக் கீழ் வெறுமையாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று அர்ச்சன வேடத்தில் பார்த்த ராஜ கம்பீர சாமண்ணா எங்கே? இந்தக் குசேல வறுமையில் வாடும் சாமண்ணா எங்கே? 

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குமாரசாமியும் வக்கீலும் வந்து கொண்டிருந்தனர். 

“சாமண்ணாவை நேத்து பார்க்கலியே நீங்க?” என்று குமாரசாமியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் வக்கீல். “இல்லைங்க. நான்தான் அந்த விவகாரமாப் போயிட்டேனே!” என்றான் குமாரசாமி. அந்த விவகாரம் என்ன என்பது வக்கீலுக்குத் தெரியும். 

“இதோ வந்துடறேன் சாமண்ணா! அஞ்சே நிமிஷம். இவரோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்” என்று சொல்லித் தமது ஆபீஸ் அறைக்குள் குமாரசாமியை அழைத்துச் சென்றார். கதவைச் சாத்திக் கொண்டார். தஸ்தாவேஜுகளை எடுத்து குமாரசாமியோடு அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினார். “அந்தப் பையனிடமிருந்து விடுதலைப் பத்திரம் வாங்கிடலாம். அவனே அதுக்குத் யாரா இருக்கானே! அதனால் ப்ராப்ளம் இல்லை. அடுத்த வாரத்திலேயே முடிச்சுடலாம்” என்றார். 

“சீக்கிரமாகவே அதைச் செய்திடுங்க; அப்பத்தான் பாப்பாவுக்கு நிம்மதி” என்று கூறிய குமாரசாமி வக்கீலிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது பாப்பாவும் தயாராக எழுந்து நின்றாள். 

அவர்கள் இருவரும் வண்டி ஏறும்வரை கீழ்ப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சாமண்ணா. 

“சாமண்ணா! என்ன இது? ராத்திரி நாடகம் முடிஞ்சதுக்கப் புறம் நீ பாப்பாவை வந்து பார்க்கவே இல்லையாமே! அந்த டாக்டருடைய பெண் சகுந்தலாவைப் பார்த்து இளிச்சு இளிச்சு பேசிண்டிருந்தயாம். வழி அனுப்பி வைச்சா எல்லோரையும் சமமாப் பார்க்க வேண்டாமோ? நேற்று வந்த டாக்டர் பெண் அத்தனை ஒசத்தியாயிட்டாளா?’ நான் இருக்கிறதே அவர் கண்ணில் படலையா?’ என்று அழுது ஆத்திரப்பட்டாள், பாவம்! பாப்பா என்ன உசத்தி இல்லையோ? அவள் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமோ உனக்கு? நினைச்சா, இந்த ஊரையே வாங்கிடலாம்” என்றாள் கோமளம். 

“தெரியும் மாமி! பணம் இருக்கட்டும் மாமி, அதைக் காட்டிலும் அவளுடைய நல்ல குணம் இருக்கே, அது யாருக்கு வரும்? என் போதாதகாலம், இப்படி நடந்து போச்சு. நான் வேணும்னு அப்படிச் செய்யலை. டாக்டர் வந்து விடாப்பிடியாப் பிடிச்சுண்டுட்டார். இல்லாட்டா உங்களை, பாப்பாவை எல்லாரையுமே வழி அனுப்பி வச்சிருப்பேன்” என்று அழமாட்டாக் குறையாகச் சொன்னான் சாமண்ணா. 

“அது போகட்டும். பாப்பா இப்ப இங்கே வந்திருந்தாளே, இப்பவாவது அவளோடு சரியாப் பேசியிருக்கலாமே!” 

“பேசினேனே!” 

“எங்கே பேசினே? நான் பாத்துண்டுதானே இருந்தேன் ! நீயும் ஒரு நடிகனா இருக்கியே! நடிப்பிலேதான் உன் நேசம், பாசம் எல்லாத்தையும் காட்டுவியா?. நிஜ வாழ்க்கையில் மாட்டியா?”

“ஏன் மாமி அப்படிச் சொல்றீங்க?” 

“அந்தப் பெண் உன் மேலே உசிரையே வச்சிருக்கு. நீயானா முன்பின் தெரியாத மாதிரி நடந்துக்கறே. அதுக்கு ஒரு வார்த்தை இதமாச் சொல்ல மாட்டேங்கறே!” 

“அது பாசந்தானா?” என்று ஒரு கேள்வி கேட்டு சாமண்ணா நிறுத்தியதும் கோமளம் திகைத்துப் போனாள். 

“ஏன் சாமண்ணா, அதையும் தாண்டி ஒரு படி மேலே போயிட்டாத்தான் என்ன? அதிலே என்ன தப்பு இருக்கு? நீ என்னவோ படிக்கலை. உத்தியோக லைன்லே வரல்லை. கஷ்டத்திலே பிறந்து நாடகத்திலே சேர்ந்திருக்கே. நாடகம் உனக்கு நிரந்தரமா சோறு போடுங்கறது என்ன நிச்சயம்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க வேணாமா!” 

கேள்வியைக் கேட்டு ஊஞ்சலில் சட்டென்று உட்கார, ஆரணி முதலியார் தொப்பென்று கீழே விழுந்தார். 

சாமண்ணா வெலவெலத்து நின்றான். 

உயிர் ஆழத்தில் ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது அது. அவனையே கலக்க வைக்கும் கேள்வி. 

அவன் தவிப்பதைப் பார்த்து, “உட்காரு சாமண்ணா! உட்காந்துக்க!” என்று கோமளம் சொன்னதும் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தான் சாமண்ணா. 

“மாமி! வாழ்க்கையிலே எல்லாம் நம்பிக்கைதானே!” என்றான் சுருக்கமாக. 

“என்ன நம்பிக்கை வச்சிருக்கே, சொல்லு!” என்றாள் கோமளம். 

“நாடகத்திலே நடிச்சுப் பெரும் புகழ் வாங்கி, பெரிய ஹீரோ வாயிடலாம்னுதான்!” 

“கடவுள் உனக்கு அனுக்கிரகம் செய்யட்டும். ஆனா இந்தத் துறையிலே லேசா யார் அப்படி ஹீரோவாகி, எத்தனை லட்சம் சேர்த்துட்டா சொல்லு.” 

சாமண்ணா திகைத்தான். 

“சேர்த்திருக்க முடியும் மாமி! ஆனா நாலு காசு வரதுக்குள்ள தான் குடியிலேயும், கூத்தியிலேயும் இறங்கிடறாளே!”

“எல்லாத்தையும் இழந்துட்டா இல்லையா?” 

“ஆமாம்.” 

“சரி! எத்தனை நாடகக் கம்பெனி ஒழுங்கா இருக்கு, அதைச் சொல்லு. ஒரு கம்பெனி எத்தனை காலம் வாழ்ந்திருக்கு?” 

சாமண்ணா மனக்கண் முன்னால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்காரர்கள், உரிமையாளர்கள், மானேஜர்கள் எல்லாருமே இன்று அன்னக்காவடிகளாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். 

மாமி சொல்வது எவ்வளவு உண்மை! 

ஆனாலும் அதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. மழபாடி மகாதேவன் பிரமாதமாக வாழவில்லையா? 

இன்றைக்கு ஏராளமாய் நிலம் வாங்கி, ஊரையே வளைத்துப் போட்டிருக்கிறானே! 

சாமண்ணாவுக்கு உதடுகள் துடித்தன. 

“ஏன், மாமி! என் வாழ்க்கை வித்தியாசமா இருக்காதா? எங்க அம்மா உயிரோடு இருந்தப்ப என் சின்ன வயசிலே எனக்கு ஆயிரம் தடவை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா. அதெல்லாம் வீண் போகாது. நான் ஒரு நாளைக்கு நிச்சயம் பெரிய நடிகனாகத்தான் போகிறேன். பேரும், புகழும், பணமும் குவிக்கப் போகிறேன். அதையெல்லாம் பார்க்க எங்கம்மாவுக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. நீங்க அவள் ஸ்தானத்துலே இருந்துண்டு பார்க்கத்தான் போறீங்க.” 

“சரி! அப்படி நீ பேரும், புகழுமாக வளரணும்னா அதுக்கும் யாராவது ஒருத்தருடைய உதவி இருந்தாத்தானே முடியும்?” 

கோமளம் தன்னை மடக்கி மடக்கிப் பேசிய விதம் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. 

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *