கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,916 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

“தசாவதாரம்” என்று காண்ட்ராக்டர் கண்ணப்பதாஸ் கூறினார். 

ஏகப்பட்ட பணம் செலவாகுமே!” என்றார் சிங்காரப் பொட்டு.

“செலவழிச்சு நடத்தினோம்னா கூட்டம் மொய்ச்சுத் தள்ளும்” என்றார் வக்கீல். 

“டாக்டர் என்ன நினைக்கிறாரோ?” என்று சிங்காரப் பொட்டு மெதுவாக நிரவல் செய்தார். 

டாக்டர் கண்ணைக் கொஞ்சம் மூடித் திறந்தார். அதேநேரம் சகுந்தலா என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகக் குறிப்பிலிருந்து அறியப் பார்த்தான் சாமண்ணா. 

அவள் பார்வை அடிக்கடி சாமண்ணா பக்கம் திரும்பி அங்கேயே லயித்து நின்றது. அது காதலா, கனிவா, அக்கறையா என்பதைச் சாமண்ணாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

முதல்முதல்சாமண்ணா அவளைப்பார்த்ததிலிருந்தேஉள்கதவு திறந்தது போல இருந்தது அவனுக்கு. மென்மையாக ஒரு வாசனைப் புகை போன்ற உணர்வு அவன் உடலெங்கும் நீந்திச் சென்றது. மனசில் ஒரு சின்ன அழுகை கூட வந்தது. 

‘இந்த உணர்ச்சிக்கெல்லாம் என்ன காரணம்? அதை நினைக்கலாமா?’ அந்த ஒரு நினைப்பே பரவசத்தைத் தந்தது. 

‘அவன் தன்னை ஒரு நடிகன் என்ற முறையில் பார்க்கிறாளா? அல்லது தானே கிழித்துக் கொண்ட எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பழகுகிறாளா? அவளை அடையக்கூடிய அந்தஸ்து தனக்கு இருக்கிறதா? ஒருவேளை எட்டாத பழத்துக்கு ஏக்கப் பெருமூச்சு விடுகிறோமா? 

டாக்டர் பேச ஆரம்பித்தார். “தசாவதாரம்னு சொன்னா நிறைய டர்னிங் சீன் போடுவீங்க! மாயா ஜாலங்கள், தந்திரக் காட்சியேல்லாம் காட்டுவீங்க! பத்து அவதாரங்களும் பத்து தினுசான காட்சிகளாச்சே! துண்டு துண்டா வருமே! நடிகர் களுக்குத் தங்கள் நடிப்புத் திறமையைக் காட்டச் சந்தர்ப்பமே இருக்காதே!” 

“நானும் அதைத்தான் சொல்றேன்” என்றார் வக்கீல் வரதாச்சாரி. 

“அப்படின்னா மச்சகந்தி போடுவோமா? ரொம்பக் கவர்ச்சியா இருக்கும்! சாரதாம்பாளுக்கு மீன்காரி வேடம் போட்டால் பிரமாதப்படுத்தி விடுவாள்!” என்றார் பாவலர். அவர்தான் நாடகங்களுக்குப் பாட்டு இட்டுக் கட்டுபவர். 

“நன்னாப் பேசி துடுக்காகவும் நடிப்பா!” என்றார் வக்கீல். மச்சகந்தின்னா ஆண் நடிகருக்குச் சந்தர்ப்பம் இராது. தவிர, காதல், வீரம், சோகம் எல்லா ரசங்களும் ஒரு கதையில வந்தாத்தான் நாடகம் சோபிக்கும்!” 

“ஏன்? மச்சகந்தியில் நிறைய காரம் காட்டலாமே?”

“சிருங்காரத்துக்கு வழி ஏது? ஒருதலைக் காதல்தானே! சந்தனு மகாராஜா மச்சகந்தி மேலே பிரியப் படறார். அவளைப் போய்ப் பெண் கேட்கிறார்., தீர்ந்தது கதை. இதில சிருங்காரத் துக்கு இடம் எங்கே?” 

“மாயா பஜார்…?” என்றார் இன்னொருவர். 

“ப்ஸு வத்ஸலா கல்யாணமா? ரசப்படாது” என்று முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டார் டாக்டர்., “சீதா கல்யாணம்?” என்று சிங்காரப் பொட்டு சொல்ல, டாக்டர் முகத்திலிருந்த இறுக்கம் அப்போதும் தளரவில்லை. 

“அப்பா, இதுவரை நான் கிட்டத்தட்ட பன்னிரண்டு நாடகம் படிச்சுட்டேன்” என்று சகுந்தலா இடைமறித்த போது எல்லார் முகமும் சகுந்தலா பக்கம் திரும்பியது. 

“அதில் நல்லதா ஒண்ணு சொல்லேன் பார்க்கலாம்” என்றார் டாக்டர். 

“நீங்க சொல்ற எல்லா அம்சமும் பொருந்தியிருக்கிற மாதிரி உள்ள ஒரே நாடகம் சகுந்தலாதான்!” என்றாள். 

“துஷ்யந்தன் – சகுந்தலாவா?” என்று யாரோ கேட்க, சாமண்ணா சகுந்தலாவைப் பார்க்க, சகுந்தலா சாமண்ணாவைப் பார்த்தாள். 

சிறிது நேரம் நிசப்தம். 

“உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்று பாவலர் சகுந்தலா வைக் கேட்டார். 

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா சாமண்ணாவுக்குப் பிடிச்சிருக்கணுமே, அதுதானே முக்கியம்?” என்றாள் சகுந்தலா. 

அவள் வார்த்தையில் உள் அர்த்தம் இருப்பது போல் தோன்றியது சாமண்ணாவுக்கு. 

“எனக்கு ரொம்ப நாளா சகுந்தலா மீது ஒரு கண்தான். அப்படி ஒரு நாடகத்துலே நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமான்னு காத்திண்டிருக்கேன்” என்று அவனும் பொடி வைத்துப் பேசினான். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. 

“அதிலே ஒரு சின்னக் குறை” என்று பாவலர் இழுக்க,

“அதென்ன?” என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்தனர் மற்றவர்கள். 

“ரெண்டு பேர் பிரதானமா நடிக்கப் பாத்திரம் இல்லாம இருக்கு.” 

“யாரு அந்த ரெண்டு பேர்?”

“சிங்காரப் பொட்டுவும், சாமண்ணாவும்தான்!”

“அதுக்குத்தான் நான் சொல்ல வந்தேன்” என்று சிங்காரப் பொட்டு எழுந்து நின்றான். 

“சொல்லுங்க” என்றார் டாக்டர். 

“பெரியவங்க என்னை மன்னிக்கணும். ‘கர்ணா – அர்ச்சுனா நாடகம் போட்டோம். ஓகோன்னு ஓடியது. பிரமாதமா வசூல் ஆச்சு. இந்த நாடகம் ஓடினத்துக்குக் காரணம் எல்லாரோட ஒத்துழைப்புன்னு சொன்னா மட்டும் போதாது. சாமண்ணாவின் பங்குதான் பெரிய பங்கு. அவரது நடிப்புத்தான் தூக்கிநின்னுது. அவர் பாட்டுத்தான் இன்னிக்குப் பொது ஜனமே பாடறா. அவர் வசனத்தைத்தான் சின்னச்சின்ன வாண்டுகளெல்லாம் கூடப் பேசுது! அதனாலே இந்த சகுந்தலை நாடகத்தையே நாம் எடுத்து நடத்துவோம். எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கறது முக்கியமில்லை. துஷ்யந்தன் பாத்திரத்துக்குச் சாமண்ணாதான் பொருத்தமானவன். இதில் சாமண்ணாவை ஹீரோவாக்குவோம். ஒரே ஒரு ஹீரோ போதும். அது சாமண்ணாவாகவே இருக்கட்டும்.நானே இப்படிச்சொல்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.” 

சிங்காரப் பொட்டு உட்காரும் போது எல்லோரும் கைதட்டினார்கள். 

“சிங்காரப் பொட்டே ஹீரோவா இருக்கட்டும்” என்று சாமண்ணா வற்புறுத்திய போதிலும் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சகுந்தலா தன் அப்பாவின் காதோடு ஏதோ ரகசியம் பேசினான். உடனே டாக்டர் எழுந்து நின்று, “இந்த நாடகம் ஓடினா, சாமண்ணாவாலேதான் ஓடும்” என்று தீர்க்கமாய் அடித்துச் சொன்ன போது எல்லோரும் கைதட்டி ஆமோதித்தார்கள். 


ஒத்திகை இரவும் பகலுமாக நடந்தது. பாவலர் தலைமையில் சங்கீதப் பயிற்சிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன . சிங்காரப் பொட்டு இந்த முறை டைரக்டர் வேலையைத் தானே எடுத்துக் கொண்டார். 

தமிழ் வருடப் பிறப்பன்றே அரங்கேற்றம் என்று முடிவெடுத்ததும் எல்லோர் உள்ளத்திலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சாமண்ணா, உள்ளத்தில் கரை புரண்ட உற்சாகத்தைத் தன் நடிப்புத் திறமையால் அடக்கிக் கொண்டான். துஷ்யந்தன் கதையைக் கேட்டதும் தன் கையிலிருந்த மோதிரத்தை ஒரு முறை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டான். 

ஓவியர் கேசவன் பிள்ளை தூரிகை எடுத்து, காட்சு சீன், ஆசிரம சீன், துஷ்யந்தன் தர்பார் எல்லாவற்றையும் கண்கவர் வண்ணமாகப் ‘படுதா’வில் உருவாக்கிக் கொண்டிருந்தார். 

நாடக ஒத்திகைக்குச் சகுந்தலா நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தாள். 

சாமண்ணாவின் அருகில் அமர்ந்து வசனங்களை ஞாபகப்படுத்தும் சாக்கில் அவனைத் தொட்டுப் பேசும் போதும் சாமண்ணா அந்த வசனங்களை எடுப்பாகப் பேசும்போது சபாஷ் போடும் போதும் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கினாள். 

“மிஸ்டர் ஸாமு…” என்று ‘ச’வுக்குப் பதில் அவள் ‘ஸ’ போடும் போது சாமண்ணாவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. தமிழ் அவள் இனிய குரலில் கொஞ்சி வருவது போல் தோன் றியது. 

“ஸாமு! எனக்கு இந்த வசனம் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று ஒருநாள் அவள் சொல்ல, “எது?” என்று கேட்டான் சாமண்ணா. 

நோட் புக்கைத் திருப்பிக் காண்பித்தாள் அவள். 

“ரவிகுல திலகரே! இந்த அடியாளின் மனக்கிடக்கையை இன்னும் நீர் அறியீரோ? அன்றொரு நாள் என் காலில் தைத்த முள்ளை எடுத்து என் பாதத்தைத் தடவி விட்டீரே! அது தங்கள் நினைவில் உள்ளதா? இன்று என் மனமெல்லாம் முள் தைத்தது போல் நான் வேதனைப்படுகின்றேன். காதல் என்கிற அந்த முள் நெருஞ்சி முள்ளைக் காட்டிலும் கொடியது ஆயிற்றே! இந்த முள் தைக்கப்பட்டவர்களுக்கு அன்னம் டிக்காது. பானம் பிடிக்காது. துயில் பிடிக்காது. விரக தாபத்தில் உடம்பு அனலாய்க் கொதிக்கும்! சுந்தரா, சுகுமாரா! என் தாபம் அறிந்து தாங்கள் உடனே வர மாட்டீரா?” 

சகுந்தலா இந்த வசனத்தை நின்று நிதானித்து வாசிக்கும் போது அந்த வசீகரமான குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது. 

“ஏது! நீங்களே சகுந்தலாவா ஆயிட்டீங்க போல இருக்கே!” என்றான் சாமண்ணா. 

“இது வெறும் நடிப்புன்னு நீங்க நினைக்கிறீங்களா, ஸாமு …?” 

கேள்வி அவனைத் துளைத்து நின்றது. அவள் பார்வை ஒரு தாபமாக அவன் கண்ணில் வலித்தது. தனக்குள் ஒரு புயல் வீசுவதை உணர்ந்தான் அவன். 

“சாமண்ணா! இவள்தான் உனக்கு ஏற்றவள். மனசை உன்கிட்டே திறக்கிறாப் போல இருக்குதே!” 

“இல்லை பயமாயிருக்கு! சகுந்தலா நாகரிகமானவள்! அவள் விகல்பம் இல்லாமல் பேசுவதை நான் தப்பா நினைச்சுக்கப் படாது! அவள் அந்தஸ்து எங்கே? கேவலம் ஒரு நடிகனான என் அந்தஸ்து எங்கே? நான் இதற்கு ஆசைப்படக் கூடாது. அவள் ஓர் ஆப்பிள். இந்த அன்னக்காவடிக்கு ஆப்பிள் பசி ஏற்படக் கூடாதா?” 

‘ஆசைப்படு சாமண்ணா, ஆசைப்படு! பெரிசை நினைச்சுத் தான் ஆசைப்படணும். ஆமாம்! விடாதே, முயற்சி பண்ணு!’

சாமண்ணாவின் கண்கள் நிறைய வார்த்தைகளோடு தவித்து நின்றன. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இழுத்து நிறுத்தியது. ‘சகுந்தலா படித்தவள். சமூகத்தின் மேல் தட்டில் வாழ்கி றவள். உன்னையாவது… நினைக்கிறதாவது…’ என்றது உள்குரல். 

“உணர்ச்சிவசமா அதை உங்களுக்குப் படிச்சுக் காட்டத் தெரியுது. நீங்களே எங்களுக்குப் பயிற்சி கொடுத்தால் கூட நன்றாயிருக்கும்” என்றான் சாமண்ணா. 

அவள் கலகலவென்று சிரித்துக் கொண்டே, “என்னையே சகுந்தலாவா நடிக்கச் சொன்னாலும் சொல்லுவீங்க போலிருக்கே!” என்றாள். சாமண்ணாவின் மனம், ‘டேய் விட்டுட்டியேடா’ என்று இடித்துக் காட்டியது. 

டிரஸ் ஒத்திகையன்று ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பள்ளிக்கூட மேடையில் நடித்துப் பார்த்தார்கள். 

பன்னிரண்டு மணி வரை ஒத்திகை நடந்தது.ஒரு சின்னப் பிழை வரவில்லை. ஒருத்தர் கூட வசனம் பிசகவில்லை. சாமண்ணா அசல் துஷ்யந்தனாகவே ஆகிவிட்டான். 

“இது பிரமாதமான நாடகமா அமையப் போகிறது” என்று சொல்லிப் பாவலர் பூசணிக்காய் மீது கற்பூரம் வைத்துக் கொளுத்தி திருஷ்டி சுற்றிப் போட்டார். 

சாமண்ணாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. ஒரு ஹீரோ ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள் நெருங்கி விட்டதை நினைத்துப் பார்க்கும் போது உற்சாகம் சிறகடித்துப் பறந்தது. 

தாயாரை நினைத்து மானசீகமாக வணங்கினான். 

அப்போது மூலையில் சற்று ஓரமாக உட்கார்ந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு வடநாட்டு சேட்டுகள் எழுந்து வந்து சாமண்ணாவைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள். 

“இவர்தான் கோவர்த்தன் சேட். பம்பாயிலிருந்து பயாஸ் கோப் எடுக்கணும்னு இங்க வந்திருக்காங்க. அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவங்க” என்று அவர்களை அறிமுகப்படுத்தினாள் சகுந்தலா. 

கோவர்த்தன் சேட் சாமண்ணாவை அப்படியே தழுவிக் கொண்டார். “இந்தாங்க, பிடியுங்க! அட்வான்ஸ்” என்றார். “எதுக்கு இந்த அட்வான்ஸ்? என்ன சமாசாரம்?” என்று ஒன்றும் புரியாமல் விழித்தான் சாமண்ணா. 

“பம்பாயில் இந்த சகுந்தலா நாடகத்தை அப்படியே மூவி எடுக்கப் போறோம். நீங்கதான் ஹீரோவா நடிக்கறீங்க. அடுத்த மாசம் கல்கத்தாவில் நடத்தலாம்னு திட்டம்” என்று சொல்லி ஒரு கவரையும் ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரையும் சாமண்ணாவிடம் நீட்டினார் கோவர்த்தன் சேட். அந்தக் கவரில் ரூபாய் ஐயாயிரம் இருந்தது! 

அத்தியாயம்-17

பெருந்தொகை ஒன்று கைக்குக் கிடைத்ததும் சாமண்ணாவின் மனம் கிறுகிறுத்தது. சட்டென தாயாரின் முகம் மின்னி மறைந்தது. தாயின் கையில் அதைக் கொடுப்பது போலவும், அவள் காலில் விழுந்து வணங்குவது போலவும், அவள் ஆனந்தக் கண்ணீரோடு நிற்பது போலவும் தோன்றியது. 

“சேட்ஜி! நாடகம் அரங்கேத்தணும். உடனே நான் கல்கத்தா வருவதென்பது ரொம்பக் கஷ்டம்…” 

“காமிராக்காரர், டைரக்டர் எல்லாரும் காத்திருக்காங்க. அடுத்த வாரமே ஷூட்டிங் ஆரம்பிச்சுடணும். அவங்களை சும்மா வச்சிருக்க முடியாது. உங்களுக்கு வர முடியலேன்னா சொல்லிடுங்க. வேறே ஒருத்தரைப் போட்டு எடுத்துடறோம்..” 

“இல்லை சேட்ஜி! நான் வந்துடறேன்!” 

“அப்போ முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துரலாமா?”

“சரி” என்றான். 

“கல்கத்தாவுக்குத் தந்தி கொடுத்துரலாமா?”

இன்னொரு சரி. 

“உங்களுக்குத் தனி ஜாகை எடுத்துக் கொடுத்துடறேன். சவாரிக்குக் காரும் கொடுத்துடறேன்.” 

சேட் வியாபார தந்திரத்தில் கைதேர்ந்தவர். எதைச் சொன்னால் ஆட்கள் பறப்பார்கள் என்று அறிந்தவர். 

சாமண்ணா அதற்குள் பெரிய கோட்டை கட்டத் தொடங்கி விட்டான். முதல் வகுப்பு மெத்தையில் ஜம்மென்று சாய்ந்து பிரயாணம் செய்வது போலவும் எதிரே சில பணக்காரப் பெண்கள் அவனை அடிக்கடி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது போலவும் கனவு கண்டான். 

கல்கத்தா வீதிகளில் அவன் கார் பறக்கிறது. கடைத் தெரு, சினிமா ஸ்டூடியோ என்று அலைகிறான்.சினிமா சேட் அவனைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறார். 

“அப்போ உத்தரவு வாங்கிக்கலாமா?” என்று கைகூப்பிப் புறப்பட்டார் சேட். 

விரலில் வைரம் பளபளக்க, இப்படி ஒருமுதலாளி அவனுக்குக்கும்பிடு போடுவது வாழ்க்கையில் இதுதான் முதல்தடவை!

“மறு பேச்சே வேணாம். நான் வந்து விடுகிறேன்” என்றான் சாமண்ணா. 

அன்று ராத்திரியெல்லாம் அவன் தூங்கவில்லை. பொழுது விடிந்ததுதான் தாமதம். அவசரமாக டாக்டர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அவரிடம் மெதுவாக விஷயத்தைப் பிரஸ்தாபித்தான். 

“எனக்குத் தெரியுமே! சகுந்தலா ராத்திரியே சொன்னாளே! அரங்கேற்றத்துக்கு இன்னும் பத்து நாள் கூட இல்லை, கலெக்டர் கிட்டே வேறே நாங்க ‘டேட்’ வாங்கியாச்சு. ஊரே அமர்க்களப்படுது. இந்த நேரத்திலே நீ எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டுக் கல்கத்தாவுக்குப் போகப் போறேங்கறயே, இது சரியா? நன்னா யோசிச்சயா?” என்று கேட்டார் டாக்டர். 

சாமண்ணா பதில் சொல்ல முடியாத நிலையில் தலைகுனிந்தபடி நின்றான். 

“நீங்க சொல்றது புரியறது டாக்டர். இந்த நேரத்திலே நான் போறது தப்பாத்தான் தெரியும். ஆனால் வாழ்க்கையிலே ஒரு சந்தர்ப்பம் ஒரு வாட்டித்தான் வரும்; அதிருஷ்ட தேவதை ஒரு தடவைதான் கதவைத் தட்டுவான்னு சொல்லுவாங்க. எனக்கு அந்தச் சந்தர்ப்பம் வந்திருக்கு. இதுபோல யாருக்காவது கிடைக்குமான்னு யோசியுங்கோ!” என்றான் சாமண்ணா. 

“அரங்கேற்றதை முடிச்சுட்டுப் போறது! அதுக்குள்ளே என்ன அவசரம்?” என்றார் டாக்டர். 

“நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா சேட் அவசரப் படறாரே! ‘வர முடியலைன்னா சொல்லிடு. இன்னொருத்தரைப் போட்டுக்கறே’ங்கறாரே! அப்புறம் அடுத்த படத்துலே சான்ஸ் தரேங்கறாரே! இந்த சான்ஸை விட்டால் மறுபடியும் கிடைக் குங்கறது என்ன நிச்சயம்?” என்றான். 

“ஒரு சான்ஸ் விட்டா இன்னொரு சான்ஸ் வந்துட்டுப் போறது!” 

“வரலைன்னா என்ன செய்வேன்? வீட்டுக் கதவைத் தட்டின ஸ்ரீதேவியை அலட்சியப்படுத்தின மாதிரி ஆகாதா? பயாஸ்கோப் பயாஸ்கோப்னு ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருக்கு. யாரைப் பார்த்தாலும் பயித்தியமா அலையறா! சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி என்கிறா! பட்டணத்திலே இப்ப பயாஸ் கோப்புக்குத்தான் அதிக மவுசாம்! நாடகம் ரெண்டாம் பட்சம் தானாம். அதுக்குத்தான் காற்றுள்ள போதே தூற்றிக்கணும்னு பார்க்கிறேன்.” 

“அப்போ உன்னை நம்பிப் பணம் போட்டவங்களை அம்போன்னு விட்டுடப் போறியா? இவ்வளவு பணத்தைக் கொட்டிப் புது நாடகம் தயார் பண்ணினவங்களுக்கு என்ன பதில் சொல்றது? அவங்க பணமெல்லாம் என்ன ஆறது?” என்று சற்றுக் கடிந்த மாதிரி பேசினார். 

“அரங்கேற்றத்தைக் கொஞ்சம் தள்ளி வச்சுக்க முடியாதா? ஒரு மாசம் தள்ளினா என்ன? அதுக்குள்ளே நான் கல்கத்தா போய் நடிச்சுட்டு வந்துடறேன்” என்றான் சாமண்ணா. 

“ஹ்ம்! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு. பணம் போட்டவங்களைப் படிக்கட்டாக்கி மேலே ஏறிக்கப் போறே! இதுதானே உன் நோக்கம்? எல்லாம் வீண்! பண விரயம்!” என்று சலித்துக் கொண்டார். 

சாமண்ணாவுக்கு அது சுருக்கென்று தைத்தது. 

“டாக்டர் ஸார்! என்னைக் கோவிச்சுக்காதீங்க! ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் முன்னுக்கு வர நேரம். கடவுள் புண்ணியத்துலே சேட்ஜி நிறையப் பணம் கொடுத்துட்டுப் போயிருக்கார். இது வரை ஆன ரிஹர்ஸல் செலவை வேணும்னா நான் கொடுத்துடறேன்.” 

“எனக்குத் தெரியாது. வக்கீலைப் போய்ப் பாரு. அவர் என்ன சொல்றாரோ அதுப்படி நடந்துக்கோ!” என்று ஒரு அலட்சியத்தோடு சொல்லி எழுந்தார். 

சாமண்ணாவுக்குக் கஷ்டமாக இருந்தது. ‘டாக்டர் ஒரு முற்போக்குவாதி. அவரே தன்னுடைய பேச்சை அவ்வளவு சரியாக எடுத்துக் கொள்ளாத போது வக்கீல் என்ன சொல்லப் போகிறாரோ?’ 

‘கீழேயிருந்து ஒருத்தன் முன்னேறி அவாளுக்குச் சமமா, அந்தஸ்தா வரதை யாருமே ஒத்துக்க மாட்டா! வீண் ஆசைன்னு சொல்லிடுவா! இவா மட்டும் நிறைய ஆசைப்படலாம். எப்படியும் வக்கீல்கிட்டே சொல்லிட்டுப் புறப்பட வேண்டியது தான்’. 

இதற்குள் வீட்டுத் தரகர் பல முறை சாமண்ணாவைத் தேடி வந்து விட்டார். ‘பழைய தாசில்தார் வீடு! ரொம்ப ராசி. அரண்மனை மாதிரி இருக்கு. குதிரை லாயம் வேறே இருக்கு. வெல்ல மண்டி செட்டியார் அதை வாங்கத் துடிக்கிறார். நான்தான் நிறுத்தி வச்சிருக்கேன்’ என்றெல்லாம் ஆசை வார்த்தைக் காட்டிக் கொண்டிருந்தார். 

“பணம் கையிலே வச்சிருந்தா செலவாகிப் போகும். எதையாவது செய்யுங்கோ” என்று சுண்டி இழுத்தார். 

மூன்று நாள் யோசித்து யோசித்துக் கடைசியில் தாசில்தார் வீட்டை வாங்குவதென்று முடிவு செய்துவிட்டான் சாமண்ணா. பெருமிதம் தாங்கவில்லை. இப்போதே நாலு பேர் அவனை ஒரு ஆச்சரியத்தோடு பார்ப்பதுபோல் தெரிந்தது. இதற்குமுன் அவனை அலட்சியமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது இவனைக் கண்டதும் மேல் துண்டை இறக்கிவிட்டு மரியாதை காட்டினார்கள். 


“அப்படியா! அப்படியா! அப்படியா!” என்று நூறு ‘அப்படியா’ போட்டுவிட்டார் வக்கீல் வரதாச்சாரி. 

வக்கீல் மாமி கோமளம் கோவிலுக்குப் போயிருந்தாள். அந்த நேரம் பார்த்து, அந்த ஏழு மணி இருட்டில், அவர் வீட்டிற்கு வந்திருந்தான் சாமண்ணா. 

கோமளம் மாமி இருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டாள். அவளது பேச்சு ஒவ்வொன்றும் அவனை ராமபாணமாய்த் தாக்கியிருக்கும். 

“என்ன சாமண்ணா! எங்கே இந்த இருட்ல?” என்று கேட்டார் வக்கீல். 

“உங்களைப் பார்க்கத்தான். மாமி இல்லையா?” என்று தெரியாததுபோல் விசாரித்தான். 

“இப்ப வந்துருவா. கோயிலுக்குப் போயிருக்கா. என்ன விஷயம் சொல்லு” என்றார். 

சாமண்ணா லேசாகக் கனைத்துக் கொண்டான். எப்படி ஆரம்பிப்பது என்று சற்று யோசித்துப் பிறகு பேசத் தொடங்கினான். 

“நீங்களே சொல்லுங்கோ! இந்தக் காலத்துலே யாருக்குத் தான் ஆசை வராது? யாருக்கு இந்த மாதிரி இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும்? என் நிலையிலே இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ வேலை செய்யறதுக்கு யாராவது ஐயாயிரம் கொடுப்பாளா? எனக்கு அந்த அதிர்ஷ்டம் வந்திருக்கு மாமா” என்றான். 

“அப்படியா?” 

“ஆமாம். இதெல்லாம் ஏதோ கடவுள் கிருபை! எனக்கு இப்ப எங்கம்மா இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கலையேன்னு துக்கமா இருக்கு! நான் முதல் சம்பளம் வாங்கினப்போ ஏழு ரூபாய் கொண்டு கொடுத்தேன். அதை எழுநூறு தரம் கையாலே எண்ணிட்டா. இப்போ ஐயாயிரத்தைக் காண்பிச்சிருந்தா, அப்படியே பெருமையிலே பூரிச்சுப் போயிருப்பா! நான் மட்டும் நல்லபடியா முன்னுக்கு வந்தா அம்மா பேரிலே ஒரு ஸ்கூல்…” 

“அப்படியா…?'” 

வக்கீல் குறுக்கிட்டு ஒரு ‘அப்படியா?’ போட்டது அவனுக்கு என்னவோ போல இருந்தது. 

பேச்சில் கோர்வை அறுந்து போயிற்று. தடுமாற்றத்தோடு தொடர்ந்தான். 

“நான் என்னமோ தீர்மானிச்சுட்டேன் மாமா! டாக்டர்கிட்டே நாடகப் பணத்தைத் திருப்பித் தந்துடறேன்னு கூடச் சொல்லிட்டேன். ஒரு மாசம் தள்ளி அரங்கேற்றத்தை வச்சிக்கிறதா இருந்தா வச்சுக்கலாம்னும் கறாராச் சொல்லிட்டேன். அடுத்த வாரம் நான் கல்கத்தா போயாகணும். நான் முன்னுக்கு வரதுக்கு நான் எடுத்திருக்கிற தீர்மானம் இது! நீங்கதான் ஆதியிலிருந்து என் மேலே பாசமும் அக்கறையும் வச்சு எனக்கு வழி காட்டிண்டு வறீங்க. அதனாலே உங்களையும் மாமியையும் பார்த்து நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு வந்திருக்கேன்” என்று சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தான். 

“நன்னா தீர்க்காயுசோடு இரு!” 

சாமண்ணா தலைநிமிர்ந்தான். “அப்போ நான் கல்கத்தா போகலாமில்லையா?”

“தாராளமாப் போ! அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்திருக்கு. நீ போறதுக்கு யாரு குறுக்கே நிற்பா? ஆனா சட்டம் உன்னை விடாதே!” 

“சட்டமா?” சாமண்ணா முகம் விகாரமாய் மாறியது. 

“ஆமாம்; நீ ஜாமீன்லே இருக்கேங்கறதை மறந்துட்டியா? கொலைக் கேஸ்! நீ இந்த ஊரை விட்டு வெளியே ஒரு இஞ்ச் கூட நகர முடியாதே….! போலீஸ்ல விட மாட்டானே!”

“என்ன சொல்றீங்க வக்கீல் ஸார்! அப்படின்னா நான் கல்கத்தா போகவே முடியாதுங்கறேளா?” 

“யாராவது ஜாமீன் கொடுத்தாப் போகலாம். ஜாமீன் யார் அம்பதாயிரம் ரொக்கத்தோட கொடுப்பா?” 

சாமண்ணா அதிர்ச்சியோடு நின்றான். 

அத்தியாயம்-18

சாமண்ணா அதிர்ச்சியிலிருந்து விடுபடச் சிறிது நேரம் ஆயிற்று. மெதுவாகத் தலைநிமிர்ந்து வரதாச்சாரி முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்தான். சுவர்ப் பல்லியாவது கண்ணை ஆட்டும் போல இருந்தது. வக்கீல் முகத்தில் இம்மிச் சலனம் கூடத் தெரியவில்லை. 

“அப்போ ஜாமீன் இல்லாமல் விட மாட்டான்னு சொல்றீங்களா?” என்று கேட்டான். 

வக்கீல் சற்றுக் கோபமாய்த் திரும்பிப் பார்த்தார். “என்ன கேட்கிறே நீ? இதென்ன சாதாரண விஷயமா? விளையாட்டா நினைக்கிறியா? கொலைக் கேஸ்! முனகாலாவுக்குத் தெரிஞ்சுதுன்னா முட்டியைப் பேர்த்துடுவார்!” 

கண்களை உருட்டிக் கொண்டு மேலே பார்த்தார். 

வழக்கமில்லாத தோற்றம் அவனைக் கொஞ்சம் அச்சம் காட்டியது. “ஒரு ஜாமீன்தான் ஏற்கெனவே இருக்கேன்னு நினைச்சேன்” என்றான். 

“அது, நீ ஊரிலேயே இருக்கணும் என்பதற்குத்தான். இதைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க முடியாது… தெரிஞ்சுதா?” 

சாமண்ணா கண்ணைக் கொட்டிக் கொண்டு கெஞ்சுதலாய்ப் பார்த்தான். 

“நீங்கதான் இன்ஸ்பெக்டர் முனகாலா கிட்டே சொல்லி…” 

“முனகாலா என்ன எனக்கு மாமனா? மச்சானா? இல்லை கேட்கிறேன்.” 

வக்கீல் குரல் உயர்ந்து விட்டது. 

“இல்லே, சட்டத்தைத்தான் அவராலே மீற முடியுமா? டி.எஸ்.பி. யாரு தெரியுமோல்லியோ? ரோனால்டுதுரை. தோண்டிப்புடுவான் தோண்டி…”

அவர் சொல்கிற வார்த்தை சாட்டை அடி போல விழுந்தது.  

“ஒண்ணு செய்யறேன். கல்கத்தாவிலே ரெண்டே ரெண்டு வாரம் தங்கிட்டு வந்துடறேன். எல்லோரையும் திருப்திப்படுத்தின மாதிரி ஆயிடும்…” 

“ரெண்டு வாரமா? ரெண்டு நிமிஷம் கூட நீ இந்த ஊரை விட்டுப் போக முடியாது.” 

சாமண்ணாவுக்குக் கிட்டத்தட்ட அழுகை வந்துவிட்டது. “அப்போ நான் என்னதான் செய்வேன்? இப்படி ஒரு இக்கட்டுலே மாட்டிக்கிட்டிருக்கேனே! நீங்க எனக்கு உதவி செய்யக் கூடாதா?” 

“நான் என்ன செய்ய முடியும்?” 

“யாரையாவது கொண்டு ஒரு ஜாமீன்…” 

“ஜாமீனா? குறைஞ்சது ஐம்பதாயிரத்துக்குச் சொத்து மதிப்புக் கேட்பாங்க. பணம் வெச்சிருக்கயா? கேஸ் சாதாரணக் கேஸா? கொலைக்கேஸ்! அவ்வளவு பெரிய தொகைக்கு யார் உனக்கு ஜாமீன் கொடுப்பாங்க? இப்ப கொடுத்ததே பெரிசு….” 

சாமண்ணாவுக்குக் கண் கலங்கியது. 

துக்கத்துடன், “அப்படிக் கூட இரக்கமில்லாதவங்க இருப்பாங்களா? இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் ஏதுமில்லைன்னு எல்லோருக்கும் தெரியுமே! ஒருத்தராவது எனக்கு உதவிக்கு வர மாட்டாங்களா?” 

“என்னை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறே? நீயே போய் யார்கிட்டே கேட்கணுமோ, அவங்களைக் கேளு. நீ என்ன சாதாரணமானவனா? பெரிய நடிகனாச்சே? உனக்கு யார் இல்லேம்பா! உன் பேர் ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கே!” 

“கேட்கத்தான் போறேன்!” 

”கேளு! நீ நான்னு போட்டி போட்டுண்டு முன் வருவாளே!” 

“வக்கீல் ஸார் கேலி பண்றாப்ல இருக்கு. ஏன் ஒரு மாதிரி பேசறீங்க? அப்படி என்ன செஞ்சுட்டேன் மாமா?” 

“சே, சே! என்ன செஞ்சயா? என்ன செய்யலை? நீ முன்னுக்கு வரணும்னு நாலு பிரமுகர்கள் கிட்டே பணம் பறிச்சு நாடகம் அரங்கேற்றி… உன்னை நாலு பேர் முன்னாலே பெரிய மனுஷனா நிறுத்தி, புது நாடகத்துக்கு கலெக்டரையே அழைச்சு.. ஊரையே திமிலோகமாக்கிட்டோம். நீ என்னடான்னா இப்ப எல்லாத்தையும் துண்டை உதர்ற மாதிரி உதறித் தள்ளிட்டு கல்கத்தா போறேங்கறே! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு!” 

வக்கீலின் கோபத்துக்குக் காரணம் புரிந்துவிட்டது. 

சாமண்ணா உடனே கேட்டான். “ஏன் மாமா, நான் முன்னுக்கு வரணும்னு நினைக்கிறது தப்பா? நான் ஒரு பெரிய சினிமா ஸ்டார் ஆகணும்னு ஆசைப்படறது குத்தமா?” 

வக்கீலின் கோபம் முகத்தில் தெரிந்தது. மூக்கு சிவுசிவு என்று ஆகியது. ”உன் லட்சியத்துக்காக நீ மத்தவா முகத்திலே கரியைப் பூசிடறதா? பணம் போட்டவங்க எல்லாம் பட்டை நாமத்தைப் போட்டுக்கணுமா? அதுதான் உன் மரியாதையா? உன் இஷ்டப்படியே செய், போ. இப்பவேபோ. என்கிட்டே வாதாடிண்டு நிக்காதே. இனிமே எனக்கு இதிலே அக்கறை கிடையாது!” 

துண்டை எடுத்து மேலே போட்டார். நேராகக் கிணற்றடிக் கோடிக்குப் போய்க் கொண்டிருந்தார். 

சந்தர்ப்பம் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. வக்கீல் நிறைய அடக்கிக் கொண்டு போகிறார் என்பது தெரிந்தது. 

சற்று விக்கித்து நின்றான். பிறகு மெள்ள எழுந்து மெதுவாக வெளியே நடந்தான். 


அடுத்த நாள் தனது பிரச்னையை எடுத்துக் கொண்டு சாமண்ணா ஊரில் சுற்ற ஆரம்பித்தான். 

பாவலரிடமிருந்து தன் வேட்டையை ஆரம்பித்தான். தனது நிலையை அவரிடம் விவரமாய் எடுத்துச் சொல்லி, “உங்களால் உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டான். 

பாவலர் தமக்குள்ள சங்கடங்களை விவரித்தார். தமது கடன் சுமையைச் சொல்லித் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். 

அடுத்து ராவ்பகதூரைக் கேட்டபோது, “இந்தா, சாமண்ணா! இதைப் போல விவகாரத்தையெல்லாம் இங்கே கொண்டு வராதே! நான் ஒரு பிரின்ஸிபிள்காரன். இம்மாதிரி விவகாரம் எல்லாம் எனக்குப் பிடிக்காது” என்றார். 

பண்ணை பரமசிவத்துக்கு ஏற்கெனவே கோர்ட்டில் இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருந்தன. எனவே, புதுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவர் தயாராயில்லை. 

இரண்டு நாள் அலைந்ததில் சாமண்ணாவுக்கு உலகம் சற்றுப் புரியத் தொடங்கியது. எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துப் போட்டார்கள். உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். 

‘தன்னை ஊர் புகழ்கிறது, தன்னிடம் எல்லோரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தூரத்தில் இருக்கும் வரைதான். யாரையும் அண்டி உதவி கேட்காத வரைதான்’ என்று தோன்றியது. 

கவலை உள்ளத்தை பாரமாக அழுத்தியது. கடவுள் தன்னை எப்படியும் கைவிட மாட்டார் என்று நம்பினான். மூன்றாம் நாள் இரவு, கோவிலுக்குப் போகாதவன், போனான். பிராகாரத்து விநாயகரிடம் வெகு நேரம் நின்று வேண்டிக் கொண்டு வெளியே வந்தான். 

அர்ச்சனை முடிந்து திரும்பிப் போகும் கோமளம் மாமியை எதிரும் புதிருமாகப் பார்த்து விட்டான். 

“ஏது சாமண்ணா, ஆளையே காணல்லை? எங்களையெல்லாம் மறந்துட்டியா?” என்றாள் கோமளம். 

“மறப்பேனா மாமி!” என்று ஈனசுரத்தில் பேச்சைத் தொடங்கியவன் அதுவரை நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறினான். அப்படிச் சொல்லும்போது கூடவே அவன் மனசில் ஒரு சந்தேகமும் ஓடியது. மாமி வேறு எங்கே தன்னைக் கொத்தி எடுத்துவிடப் போகிறாளோ என்ற பயம்தான் அது. 

கோமளம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். 

ஒரு இடைவெளிக்குப்பிறகு அவனைப்பார்த்து, “சாமண்ணா, உன் ஆசை எனக்குப் புரியாமல் இல்லை. மத்தவங்க நியாயமும் தெரியறது. வக்கீல் மாமா எல்லாத்தையும் சொன்னார். இதெல்லாம் தர்ம சங்கடமான சமாசாரங்கள். எது சரி, எது தப்புன்னு சொல்ல முடியாது” என்றான். 

புது நாடகம் தயாரிக்க இத்தனை செலவு செய்துவிட்டு திடீர் என்று கல்கத்தா போகிறேன் என்று சொல்வது அவளுக்கும் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசினாள். 

“பரவாயில்லை; ஒண்ணும் கவலைப்படாதே! ஊரிலே நாலு பேர் நாலு விதமாச் சொல்லுவா. எல்லாரும் இனிக்கப் பேசுவாளே தவிர, காரியம்னு வரப்போ தூர விலகிப் போயிடுவா! நான் எங்காத்து மாமாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.”

“அவரைச் சொல்லாதீங்கோ மாமி. தங்கமானவர்.”

“தங்கமானவர்தான். இல்லைன்னு சொல்லலை! அவர் வக்கீலா இருக்கிறதாலே சில அசௌகரியங்கள் உண்டு. ஆமா! இன்ஸ்பெக்டர் முனகாலாவை லேசுப்பட்டவர்னு நினைக்காதே! உள்ளூரப் பகைதான்… விடு… இப்போ ஒண்ணு சொல்றேன். ஏற்கெனவே, உனக்கு யார் உதவி செய்தாளோ, அவள் காலிலேயே போய் விழு. இந்த நெருக்கடியில் அவளைத் தவிர வேறு யாரும் உனக்கு உதவி செய்ய மாட்டா. கையிலிருக்கிற வெண்ணெயை விட்டுட்டு நெய்க்கு அலையாதே! உன் எல்லா விவகாரங்களுக்கும் பாப்பா ஒருத்திதான் ஆதரவு காட்டுவாள். லேசா வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னாப் போதும். உனக்காக அவள் உயிரையும் கொடுப்பா. யாரையும் எதிர்பார்க்காதே! நேரே அவள்கிட்ட போ! விஷயத்தைச் சொல்லு! ஜாம்ஜாம்னு நடக்கும்.” 

சாமண்ணா எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். கோமளம் சொன்ன வார்த்தைகள் இதமாக இருந்தன. 

ஆனாலும் அவனுக்கு பாப்பாளை அண்டுவது அவ்வளவு பிடித்தமான காரியமாகத் தோன்றவில்லை. 

டாக்டரிடம் கேட்டால் என்ன? அவனது அடிமனத்தில் அந்த ஆசை இருந்தது. போய்க் கேட்டான். 

“ஏன் சாமண்ணா! இந்த விஷயம் போலீஸ் கேஸ்! நான் ஒரு டாக்டர்! நான் எல்லோர்கிட்டேயும் சௌஜன்யமா இருக்க விரும்பறவன். உன் விஷயத்திலே பலபேர் பலவிதமாப் பேசறா ! கடந்த ரெண்டு மூணு நாளா ஊர்லே உன்னைப் பற்றி ஒரே வதந்தியா இருக்கு. இதிலே என் மண்டையும் சேர்ந்து உருளறதை நான் விரும்பலை! வேறே என்ன உதவி வேணாலும் கேளு. செய்யறேன்!” என்றார் டாக்டர். 

ஓர் இருட்டு அடித்தது போல் இருந்தது. டாக்டர் புன்னகை செய்து கொண்டே பேசினார். ‘சகுந்தலா எங்கே? அவளைக் காணவில்லையே…அவள் இருந்திருந்தால்…’ 

முகம் கவிழ்ந்த நிலையில் வெளியே வந்தான். 

அவனது முன்னேற்றத்துக்கு ஊரே எதிர்த்து நிற்கின்றாற் போல் தோன்றியது. ஊகூம்! இதை விடக் கூடாது! ஆமாம், விடக்கூடாது! 


மறுநாள் விடியற்காலையில் சாமண்ணா சைக்கிளை எடுத்துக் கொண்டு பூவேலி கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். பாப்பா வீட்டு முன்னால் சைக்கிளை நிறுத்திய போது உடம்பு உதறியது. நிமிர்ந்து வாயில் நிலையைப் பார்த்தான். 

அங்கே குமாரசாமி நின்றது சற்று திகைப்பாக இருந்தது. புன்னகை செய்தான். குமாரசாமி பதில் சமிக்ஞை செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டது வேதனையாக இருந்தது. “வணக்கம்” என்று படியில் ஏறி நடையில் நின்றான். 

“என்ன வேணும்?” என்றார் குமாரசாமி. அந்தக் குரலில் பற்றுதல் இல்லை. 

நிலையைப் பிடித்துக் குறுக்கே அவர் நின்று கொண்டிருந்தது அவன் உள்ளே போவதைத் தடுப்பது போல இருந்தது. பழைய உபசாரம் எதுவும் இல்லை. இடுக்கு வழியே உள்ளே பார்த்தான். பாப்பா தென்படவில்லை.எங்கே அவள்? 

“என்ன வேணும்?” என்றார், குமாரசாமி சற்று முறைப்பாக. 

தன் நிலையை விளக்கி விவரங்களைக் கூற ஆரம்பித்தான். இடையில் எப்படியும் பாப்பா அங்கே வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் வரவில்லை. குமாரசாமி இரக்கம் காட்டுவார் என்று எதிர்பார்த்தான். 

ஆனால் அவரிடம் எந்தவித மாறுதலும் தெரியவில்லை. எல்லாவற்றையும் கல் போல நின்று கேட்டுக் கொண்டார். அவன் முடித்த பிறகு அவர் ஓர் அழுத்தப் பார்வையாகப் பார்த்தார். 

“இந்தாங்க! உங்களுக்கு இனிமே நாங்க உதவறதுக்கு வழியில்லை. ஆமாம்! இந்த மாதிரி பிரச்னை, விவகாரம் எல்லாம் வச்சுக்கிட்டு இனி இங்கே வராதீங்க. நாங்க இதுவரை பட்டது போதும். நீங்க போகலாம்” என்றார். 

“பாப்பா!” 

“அவளை நீங்க பார்க்க முடியாது!” 

ஓங்கி முகத்தில் அடி விழுந்தது போல இருந்தது. 

சற்று நேரம் வாயடைத்து நின்றான். பிறகு, ”வரேன்” என்று கூறிவிட்டுத் திரும்பி வாசலில் இறங்கி சைக்கிள் ஏறி மிதிக்க ஆரம்பித்தான். கிராமத்துப் பாட்டை வந்ததும் துக்கம் பொங்கி வந்தது. கண்ணீர் பீறிட்டு இருபுறமும் வழிந்தது. கிராமத்து எல்லையைத் தாண்டி அரை மைல் போயிருப்பான். 

அங்கே இன்னொரு வழியாக அந்தப் பாட்டையைக் குறுக்கிடும் பாதையில் ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர் ஸ்தானத்தில் பாப்பா உட்கார்ந்திருந்தாள். சோர்வான பாப்பா, அசதியான பாப்பா, மெலிந்து காணப்பட்ட பாப்பா. 

அவள் கண்கள் அவனையே பார்த்திருக்க, வெலவெலத்து சைக்கிளை நிறுத்தினான். ‘இவள் எப்படி இங்கே வந்தாள்?’ 

அவள் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி வந்து அவன் எதிரில் நின்றாள்.

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *