இருளும் ஒளியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2024
பார்வையிட்டோர்: 580 
 
 

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

31. அழைக்காத விருந்தாளி

மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களை அநேகமாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாஸர் வசித்து வந்த வீடும், அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனார், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்து கொண்டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, “ஏனம்மா! நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்” என்று கூப்பிட்டார்.

ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவிடு. “தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான் வேட்டகம் போயிருக்கிறான். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?” என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே, “அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக்கிறாய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவனாக யாரைச் சொல்லுகிறாயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!” என்று உருக்கமாகக் கூறினார்.

ஸரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணீர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பனாரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சியால் துடிக்க, “அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த கபவாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். அவனாவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு யோசித்துத்தான் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும், மனத்தெளிவும் சாதாரணப் பெண்ணாகிய எனக்கு இல்லை” என்றாள் அவள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வான வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி. ‘அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தானும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்’ என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற்பட்டது.

“குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?” என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோது தான் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், ”ஏனம்மா! வருத்தப்படுகிறாயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணீர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய ‘குழலோசை’ என்கிற கவிதையைப் படித்துச் சொல்கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!” என்று அன்புடன் கோபால தாஸர் அழைத்தார் ஸரஸ்வதியை.

வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் வீட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான் என்ன செய்கிறான் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பனாரைப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி, இப்பொழுது அத்தானின் போக்கைக் கண்டு வருந்தினாள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங்களில் தோன்றும் கண்ணகியும், திரௌபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.

“என்னம்மா, விஷயம்?” என்று கேட்டார் அவர்,

“இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான் இருக்கிறானே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானாக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப் போய் உட்கார்ந்திருக்கிறான். மனிதன் வாழ்க்கையில் ஏமாறுவது சகஜந்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிறாள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல” என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப் படித்தாள்:

“அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயாணமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிறாய்? உன்னுடன் ஒன்றாக ரெயிலடி வரையில் வந்த நான், என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிறாள். ‘நீ இங்கே விருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னைப் பொசுக்கி விடுவாள்’ என்று அடிக்கடி சொல்கிறாள்.

தங்கம் ‘ஸரஸு அக்கா’வை மறக்களில்லை. உன்னிடம் கற்றுக்கொண்ட ‘சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா’வைத் தினம் பாடுகிறாள். அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன சாரீரம் என்கிறாய், ஸரஸு! இறைவன் சிலருக்குத் தான் இந்த பாயத்தை அளிக்கிறான் போலும். தங்கத்துக்கு நிகமாகவே பூட்டிக்கொள்ள உடம்பில் தங்க நகைகள் இல்லையே தவிர, அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லை.

மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?”

ஸரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன; “அழகாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய வர்ணனை! பாவம், பேதைப் பெண்!” என்றாள் ஸரஸ்வதி.

செந்தமிழை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், “என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் சௌக்கியந்தானே?” என்று விசாரித்தார்.

“சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன், மாமா! கொஞ்சம் என் அத்தானுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதைப்போய்த் தெளியவைக்க வேண்டும்” என்றாள் ஸரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாஸர் மனத்துக்குள் வியந்தார்.

32. நீச மனோபாவம்

கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள், தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங்காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப்பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலையைக்கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்து விட்டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்து போவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம், “அப்பா!” என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். ”அப்படியே கண்ணைப் பறிக்கிறதே, இது!” என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து ஜலம் இழுக்கும் போது ராட்டினங்கள் ‘நொய், நொய்’ என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்டனர். தலை தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத்தின் இன்னொலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்.

அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்துவதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஓடினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனாள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, “என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?” என்று கேட்டான்.

தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் ’பளபள’வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், “அவர்கள் வீட்டில் தலை தீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னைக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள் தான் தீபாவளிக்கு ஊருக்குப் போகாமலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர்களே! போங்கள் அத்தான்! சாவித்திரி மன்னி உங்களை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?” என்று கேட்டாள் தங்கம்.

ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனை லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.

”ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த கல்யாணந்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதே, அவள் ஓயாமல் தர்மத்தைப்பற்றியும், நியாயத்தைப்பற்றியுந்தான் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்! ‘சர்க்கரை’ என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? ’சாவித்திரி, சாவித்திரி’ என்று ஜபித்துக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்” என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஓர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிறாள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிறான் கணவன், தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி ’கமகம’ வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும், ’ஸ்ட்ராங்’ காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறான்.

ரகுபதிக்கு மேலும் தான் அங்கே நிற்பது அசம்பாவிதம் என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தானாகவே மேஜை மீது வைத்தாள். பிறகு, ‘காப்பி கொண்டு வருகிறேன்’ என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான். இரண்டடி முன்னே சென்றான். தங்கத்தின் புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.

‘லோக நாயகனாகிய ஸ்ரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன்; சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன்; சொன்ன சொல்லைக் கடவா தவன் சத்தியசந்தன்.’ இப்படிப்பட்ட ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்’ என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.

தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும் அந்தணருக்குப் பிக்ஷை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.

ரகுபதி இடியால் தாக்குண்டவன் போல் அயர்ந்து போய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்; அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. ‘சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால் தான் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண்டும்?’ என்று வருந்தினான் அவன்.

அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். “ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!” என்றாள் அவள்.

ரகுபதி அவளுக்கு மறுமொழி கூறாமல் காப்பியை அருந்தி விட்டு வெளியே போய் விட்டான்.

33. என்னுடைய குற்றம்

தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் சௌஜன்ய பாவம் நிறைந்திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப்பான்: ஓர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிறோம். அவர்கள் நம்மை ‘வா’ என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிறோம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிறோம். “அவர்கள் சுபாவம் அப்படி” என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக் கொள்கிறோம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.

சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஓடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும், வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அனுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.

‘சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து, அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாளா?’ என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன் பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளை அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச்சென்று விடுவார்கள்.

அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். வாஞ்சையுடன் தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, “ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண்டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!” என்று விசாரித்தான்.

மங்களத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஆமாம் அப்பா! ‘மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்’ என்கிற நம்பிக்கையே ‘டானிக்’ மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரைப் பற்றியும் கவலையில்லை. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணாக நீ கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டாயானால் அவள் உன் தகப்பனாரைக் கவனித்துக் கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணாக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது” என்று நா தழுதழுக்கக் கூறினாள் மங்களம்.

சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ”அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ரகுபதியே என்னை மரியாதைக் குறைவாக நடத்தினாலும் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விகாவதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம். அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமானம் அடைந்தாலும் பாதக மில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாதுவாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத்தைச் செய்யக்கூடாதா என்ன?” என்றான் உணர்ச்சியுடன்.

காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து.. ” அண்ணா ! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிறாராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிறாளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள்” என்று தெரிவித்தாள்.

மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. ஸரஸ்வதியின் விலாசம் தெரிந்தாலாவது, நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக் காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரிய வில்லையே. என்ன செய்கிறது இப்போது?” என்று கவலையுடன் கேட்டாள்.

“இனிமேல் நேரில் தான் எல்லா விஷயங்களையும் தீர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென்றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தானின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்”, என்று கூறினான் சந்துரு.

” அப்படித்தான் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளானால் அவளையும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகலவே மாட்டேன் என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான் அவளை எனக்குத் தெரியும். ஆனால், அவளை நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!” என்றாள் மங்களம்.

“அதான் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் பண்ணுகிறேன் என்று. நாம் எல்லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்து விட்டார்களானால் எனக்கு என்ன அம்மா தருவாய்?”” என்று சிரித்துக் கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.

” உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக்கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவனாக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னொன்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணாகக் கலியாணம் செய்து கொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான் நான் தரமுடியும்!” என்று உருக்கமாகக் கூறினாள் மங்களம்.

சந்துரு வெட்கத்தினால் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து. “என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிறாயே சீதா, சொல்லிவிடேன்” என்றான்.

“இந்தப் பகிரங்க ரகசியத்தை நான் தான் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணா விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணாகத்தான் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய் அண்ணா?” என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.

“தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான் எனக்கு முக்கியமானது” என்றாள் மங்களம்.

“இது என்னுடைய ஆசை மட்டுந்தான். ஸரஸ்வதியின் மனசைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.”

“ஏதேது அண்ணா. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!” என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.

“அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவளாக இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் மனம் ஆழமானது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை லேசில் வெளியிடவே மாட்டாள்!”

“உனக்குச் சம்மதமிருந்து. அவளுக்கும் இஷ்டமிருந்தால் நடக்கட்டுமே. இந்தப் புது சம்பந்தத்தால் நம்முடைய பழைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்” என்றாள் மங்களம்.

கொல்லைப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த சாவித்திரி கடைசியாகத் தாயார் கூறியதைக் கேட்டாள். ‘நம்முடைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்’ என்று கூறியது அவள் செவிகளில் மணி ஓசைபோல் கேட்டுக்கொண்டே இருந்தது.

‘நம்முடைய குற்றம்! நம்முடைய குற்றம்!’ என்று அவள் மனம் உருப் போட்டது. ”நம்முடையது’ அல்ல. சாவித்திரியின் குற்றம். என்னுடைய குற்றம்” என்று சொல்லிக் கொண்டாள் சாவித்திரி, தன் மனத்துக்குள்.

அவரவர்களுடைய குற்றத்தை உணர்வதே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த குணம். அதை உணர்ந்து மனம் வருந்தினாலே போதும். ‘குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்ளும் குணக் குன்றாகிய இறைவன்’ நம்மை மன்னித்து நாம் வாழ வழி செய்வான்.

34. பிரார்த்தனை

பொழுது விடிந்தால் ஸரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக – நாதோபாஸனையின் மூலமாக– உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் ஸரஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே ஸரஸ்வதி கோபாலதாஸருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ‘சிலு சிலு’ வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலைக்குப் புறப்பட்டு விட்டாள். மலை அடிவாரத்தை அடைந்ததும் கோபாலதாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, “குழந்தை! உன்னால் மலை ஏற முடியுமா? இல்லாவிடில் ‘டாக்ஸி’ வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர யுகத்தில் வசிப்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதானத்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?’ என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.

மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதியாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்குகிறாள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழகிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரௌத்ராம்சத்தில் வீற்றிருக்கிறாள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே. அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. ’அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்’ என்று கர்ஜித்து கோரரூப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிறாள் ஈஸ்வரி.

சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, “ஜய சங்கீத ரஸிகே!” என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிச்கொண்டாள் அவள்.

“உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் தூய்மையுடனும், உன்னிடம் மாறாத பக்தியைச் செலுத்துபவளாகவும் என்னை வைத்திரு. தாயே!” என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.

கோவிலைவிட்டுக் கீழிறங்கி ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் தூய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான் மணந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற ஸ்ரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் ஸரஸ்வதி.

அதற்கு அநுசரணையாகக் கோபாலதாஸர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, ”திருச்செந்தூர் பார்த்திருக்கிறாயா? பழனிக்குப் போய் இருக்கிறாயா? மதுரையில் மீனாக்ஷியை வணங்கி இருக்கிறாயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். ’தாஸ மீராலால கிரிதர’னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தானையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்க வேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன் மனசில் பிரதிஷ்டை செய்து கொள் அம்மா. உனக்கு ஒரு குறைவும் வராது!” என்று பல விஷயங்களைக் கூறி ஆசீர்வதித்தார்.

ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வதி அவரை வணங்கினாள். “மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத்தீர்கள். என் அத்தானையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிடமிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயணக் கவிதைகளைப் படிக்கிறேன், வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங்களைக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போய் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!” என்று அவரை வேண்டிக்கொண்டாள்.

35. ‘நான் ஏழைப் பெண்’

தீபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னைப்போல ’ரகுபதி’ யிடம் அதிகம் பேசுவதில்லை. ‘படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தானுக்கு!’ என்று நினைத்துக்கொண்டாள் தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி என்று வேறு நாமகரணம் சூட்டி இருந்தார்கள். ’கன்னாபின்னா’ என்று பல்லைக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத்தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்து கொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்த போதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டையால் ‘சுளீர் , சுளீர்’ என்று அடிப்பது போல் பிரமை ஏற்படுவதுண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனை அனுபவித்திருந்தான் அவன். தங்கம் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணீரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது ‘பட் பட்’டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச் சுழற்றி வீசினாள். ‘சுளீர்’ என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றபோது ‘சுரீர்’ என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ’தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தானே காப்பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளை யாரம்மா காப்பாத்தினாங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசனா அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதீங்க!’ என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.

சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் துவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள் தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறான். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன. எல்லோரையும் மரியாதையாகக் கௌரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் தூய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிறார்கள். போலிக்கௌரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத்திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். ‘தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான். ஏரிக்கரைக்குத் தங்கம் போனால் அங்கே அவனும் விரைந்தான்.. கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் சும்மா விடுவார்களா?’

ஒரு நாள் அதிகாலையில் ஏரியில் குளித்து விட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான் ரகுபதி. குடலை நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம், பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.

“என்ன அத்தான்! இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்!” என்று சொல்லாமல் சொல்லி விளங்கவைக்தாள் தங்கம்.

“வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.”

”வேடிக்கைதான்! பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில் அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!’ என்று வியந்தாள் தங்கம்.

இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், “வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னை இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்! உங்கள் நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வளவாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம்….!”

ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனையாக, “ஆமாம்!” என்றான்.

“உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்றாகப் பேசுகிறாயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!” என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த புஷ்பக் குடலையைப் பற்றி, “இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்துவது போதாது என்று கையிலே வேறு!” என்று கூறிக் குடலையை வாங்கினான்.

தங்கம் பதறிப்போனாள். சட்டென்று குடலையை நழுவ விடவே அது கீழே விழுந்து மலர்கள் சிதறிப்போயின. மை தீட்டிய விழிகளால் அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் தங்கம்.

“அத்தான்! என் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள். என்னைத் தனியாக வந்து எங்கேயும் சந்திக்க வேண்டாம். மாசற்றவளாக இருக்கும்போதே என்னைச் சமூகம் கீழே தள்ளி மிதிக்கிறது. பிறகு கேட்கவே வேண்டாம். நான் ஏழைப் பெண் அத்தான்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு நடந்து விட்டாள் தங்கம்.

பெண் குலத்தின் பெருமையைக் கலையின் மூலம் உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டு வந்த ரகுபதியா அவன்? சந்தர்ப்பக் கோளாறுகளால் அவன் ஏன் இப்படி மாற வேண்டும்? கணவனின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளாத மனைவியை அடைந்த குற்றந்தான் காரணமாக இருக்க வேண்டும். சாவித்திரிதான் அவன் இப்படி மாறி வருவதற்குக் காரணமானவள்.

ரகுபதி இனிமேல் கிராமத்தில் இருப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். அன்றே பகலில் சாப்பிடும்போது அலமுவிடம், “அத்தை! ஊருக்குப் போகிறேன். அம்மாவை விட்டு வந்து எவ்வளவோ நாட்களாகின்றன. ஸரஸ்வதியும் ஊரில் இல்லை!” ” என்றான்.

“இவ்வளவு நாட்கள் இங்கே இருந்துவிட்டு உன் வேட்டகத்துக்குப் போகாமல் திரும்புவது நன்றாக இல்லை ரகு. போய் உன் மனைவியை அழைத்துப் பாரேன். என்னவோ அப்பா எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்த வீட்டுக்கு உங்களால்தான் ஒளி ஏற்படவேண்டும். மன்னிக்கு ஒன்றுமே தெரியாது. பாவம், அவள் மனம் புழுங்கிச் சாகிறாள் ரகு. அவளுக்காகவாவது நீ சாவித்திரியுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும்!” என்று உருக்கமாகக் கூறினாள் அலமு.

ரகுபதி எவ்விதத் தீர்மானத்துக்கும் வராமல் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு வெளியே போய் விட்டான்.

– தொடரும்…

– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *