ஒரு மரம் பூத்தது

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 1,704 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

மத்திய சிறைச்சாலை! ரகுவும், மற்ற ரிமாண்ட் கைதிகளும் எதிரும்புதிருமாக அமர்ந்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். குற்றம் செய்துவிட்டு வந்தவர் யார்? குற்றம் செய்யாமலே வந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதபடி, அனைவரது முகத்திலும் கவலை, சிந்தனை ஆகியவை விரவிப் பரவிக் கிடக்கின்றன. தோள் கொடுக்கும் தோழனாக நாம் கருதுகிற சிலர் கால்வாரும் துரோகிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்கிறார்களே; அவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று ஆரம்பத்தில் கண்டுபிடிக்கவா முடிகிறது? 

“ரகு.. ரகு…” – ஜெயில் வார்டரின் குரல் கேட்டு, ரகு உட்பட அனைவருமே ஏறிட்டுப் பார்த்தனர். 

“ரகு யாரப்பா…?’ கிட்டே வந்த வார்டர் கேட்டார் 

”நான்தான் சார்!” – என்றவாறு பணிவுடன் எழுந்து நின்றான் ரகு! 

“தேவகி என்ற பெண் உன்னை ‘இண்டர்வியூ’ பார்க்க வந்திருக்கு!”

-இதைக் கேட்ட ரகுவின் முகம் கொள்ளை மகிழ்ச்சியுடன் மலர்கிறது 

வார்டர் முன்னே நடக்க. ரகு பின்னால் நடக்கிறான்.

“யாரப்பா அது, உன் மனைவியா?”- மற்ற கைதிகளில் ஒருவன் ரகுவிடம் கேட்க, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு நடக்கிறான் ரகு. 


தூரத்தில் ரகு வருவதைக் கண்டதுமே, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஆவலுடன் எழுந்து நின்றாள் தேவகி. அவன், அவளை நெருங்க நெருங்க அவளுக்குத் தவிப்பும், பதட்டமும் அதிகமாகியது. கண்களின் நுனியில் கண்ணீர்த்துளி திரண்டு நின்றது. 

தேவகியை ஒட்டி நின்ற ரகு. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதே போல் தான் தேவகியும். சில நிமிடங்கள் அங்கு அமைதி அரசாட்சி செய்தது. என்ன பேசுவது என்று தெரியாமல் உணர்ச்சியின் உச்சநிலையில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். கண்களும், இதழ்களும் துடித்தனவே தவிர வார்த்தைகள் யாருக்கும் வரவில்லை.

தொண்டையைக் கனைத்துக் கொண்ட ரகு. “பாபு எப்படி இருக்கான்?” என்று கேட்டான். அவன் ஆண்பிள்ளை அல்லவா? துக்கத்தை அடக்கி வைக்க அவனால் முடிந்தது. 

அவன் கேட்ட அந்த முதல் கேள்வியின் மூலம், பாபு மீது ரகு எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிந்த தேவகிக்கு அழுகை பீறிட்டுக் கிளம்பியது. இன்னும் சில வினாடிகளில் அவள் கதறியழுது விடுவாள் என்றறிந்த ரகு. “இங்கே அழறது அழகில்லே! ஏன் அழணும்?” என்றான். அப்படிச் சொல்லும் போது அவன் கண்களும் நீரைக் கொட்டத்தான் செய்தன. 

“எனக்காக….. நீங்க இந்தக் கோலத்தில் இவ்வளவு கஷ்டப்படறீங்களே…..?” நெஞ்சு நெக்குருகக் கூறினாள் தேவகி. 

“அதைப்பற்றி இப்போ பேசறது உசிதமில்லே.. பாபு எப்படியிருக்கான்? உடம்பு தேவலையா?” 

“அவனுக்குக் காய்ச்சல் அதிகமாகியிருக்கு! பாழாப்போற அந்தப் பன்னீர் மரக் கிளையிலே ஒரே ஒரு பூதான் இப்போ இருக்கு. அது விழுந்ததும், நானும் செத்திடுவேன்னு அவன் சொல்லிக்கிட்டே இருக்கான்.. எனக்கென்னமோ பயமாயிருக்கு…!” திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி நா தழுதழுக்க இதைக் கூறி முடிக்க தேவகி மெத்தவும் சிரமப்பட்டுவிட்டாள். 

“இந்த நேரத்திலே உங்களைக் கூட்டிவரச் சொல்லி என்கிட்ட ரெண்டு மூணு தடவை சொல்லிட்டான்….!”  

தொடர்ந்து, ரகுவின் முகத்தைப் பார்த்தாள் தேவகி. 

“ஐயோ…… இது என்ன சோதனை?” என்று தனக்குத்தானே கூறிக்கொண்ட ரகு, “இனி அவனுக்கு எந்தச் சிகிச்சையுமே இல்லியா?” என்று தேவகியிடம் கேட்டான். 

“இருக்கு……கடைசி முயற்சி!” என்ற தேவகி, சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்து ஆட்கள் யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டு, தனது மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து ரகுவிடம் கொடுத்தாள். 

“இந்த கடிதத்திலே விவரம் இருக்கு!” என்று அவள் சொல்வதற்கும், வார்டர் வந்து. ‘நேரம் முடிந்து விட்டதம்மா’ என்று சொல்லி நிற்பதற்கும் சரியாக இருந்தது. கண்கள் சந்தித்து கண்ணீரை வெளிப்படுத்தி இருவரும் விடைபெற்றனர். 


சிறைச்சாலைக்குள் வந்த ரகு, அவசர அவசரமாக அந்தக் கடித்த்தை – தேவகி தந்த கடிதத்தைப் படிக்கிறான். அவனுடைய புருவங்கள் மேலேறுகின்றன. முகத்தில் ஒரு மலர்ச்சி இழையோடுகிறது. அப்படியே மேலும் கீழும், சுவர்ப் பகுதிகளை அவனது கண்கள் வட்டமிடுகின்றன. வெளியே பெரும் புயல் வீசுகிறது. ‘பேய்த்தனமான’ இரைச்சலுடன் மழை கொட்டுகிறது. அடிக்கடி இடி முழக்கங்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. 

இந்தக் கோரக் காற்றில், தேவகி வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த அலங்கார விளக்குகள் அப்படியும், இப்படியுமாக ஆடுகின்றன. சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்கள் ‘டக்டக்’ என்று சுவரில் மோதிக்கொள்கின்றன. திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக மழைச் சாரல் உள்ளே தெறிக்கிறது. படுக்கையிலிருந்து தேவகி எழுந்து சென்று ஜன்னலை மூடுகிறாள். 

“ஜன்னலை ஏம்மா சாத்தறே?” பாபுவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறாள் அவள். பாபு, படுத்த நிலையிலேயே தலையை மட்டும் தூக்கிப் பார்த்தபடி இருக்கிறான் 

“ஏம்மா… நீ ஜன்னலை சாத்தினா மட்டும் அந்தப் பூ விழாதாக்கும்?” என்று கேட்ட பாபு…ஏதோ ஒரு விரக்தி படிந்த சிரிப்பை அவள் மீது வீசுகிறான். ஓடி வந்து அவனைச் சேர்த்து அணைத்துக்கொண்ட தேவகி, “கண்ணா தூங்கு கண்ணா… மழைச்சாரல் அடிக்குது. அதனாலதான் சாத்தினேன்!” என்று கெஞ்சுகிறாள். 

“அம்மா…இன்னிக்கு உன் மடியில தலைவச்சிப் படுத்திருக்கணும்னு ஆசையா இருக்கும்மா…!” அழாத குறையாகக் கேட்கிறான் பாபு! 

“படுத்துக்கோ ராஜா!” – அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்ட தேவகி, அப்படியே தலையை வருடியவாறே கண்களை மூடுகிறாள். அடுத்த வினாடியே அவளது மனக்குதிரை எங்கெங்கோ ஓடுகிறது. 

பாபு இறந்து விட்டதைப் போலவும். அவனைக் குளிப்பாட்டுவதைப் போலவும், பாடையில் கிடத்தி தூக்கிச் செல்வதைப் போலவும், இவள், பின்னாலேயே ஓடிச்சென்று தரையில் விழுந்து புரண்டு அழுவது போலவும், பாபுவின் சிதை எரிவது போலவும்…

-இத்தனை அவலக் காட்சிகளையும் அந்த ஓரிரு நிமிடங்களில் தேவகி நினைத்துப் பார்த்து விட்டாள். 

‘பளிச்பளிச்’ என்று மின்னிய மின்னல்களைத் தொடர்ந்து மட மட வென்று பெரிய மரம் சாய்வது போல இடிமுழக்கம் கேட்டுத் திடுக்கிட்டுத் தன் நினைவுக்கு வந்த தேவகி தன் மனதில் நிழலாடிய அவலக் காட்சிகள் நினைவுக்கு வந்தவளாக பதறித் துடித்து பாபுவைப் பார்க்கிறாள். அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது மூக்கின் அருகே கையை வைத்துப் பார்த்தாள், மூச்சு வந்தது. நிம்மதியுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். 


இத்தனை புயலுக்கும். மழைக்கும், இடிக்கும் ஈடு கொடுத்தபடி, அந்தக் காரிருளைக் கிழித்துக்கொண்டு- சிறையிலிருந்து தப்பிய ரகு ஓடிக்கொண்டிருந்தான். சொட்டச் சொட்ட நனைந்தபடி தனது ஓவியக்கூடத்துக்குள் நுழைந்த ரகு, உட்பக்கமாகக் கதவைத் தாளிட்டுக்கொண்டு விளக்கைப் போட்டான். உடம்பிலிருந்த ஈரத்தை ஒரு துண்டால் ஓரளவுக்குத் துடைத்தவன் கண்களும், கைகளும் எதையோ தேடின. 

ஓவியம் வரைய உதவியாக இருக்கும் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் தகட்டை எடுத்தான். அத்தோடு ஒரு கத்திரியையும் எடுத்து மளமளவென்று அப்படியும் இப்படியுமாக அந்தப் பிளாஸ்டிக் தகட்டை வெட்டினான். அவற்றில் ஒவ்வொரு துண்டாக எடுத்து அப்படியும் இப்படியுமாக ஓட்டினான். 

இப்போது, வெள்ளை வெளேர் என்று ஒரு பன்னீர்ப் பூ பிளாஸ்டிக் பூ அவனது கையில் இருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் தொடர்ந்து அவன் கைகள் பரபரவென்று இயங்கின. இரண்டு மணி நேரத்துக்குள் நூறு பூக்கள் தயார். 

அடுத்து மெல்லிய நீண்ட கம்பி ஒன்றை எடுத்து ஒரு சாண் அளவுக்கு நூறு கம்பிகளாக வெட்டினான். ஒவ்வொரு கம்பிக்கும் ஒவ்வொரு பூவைப்பொருத்தி ஒட்டினான். கம்பியில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பூக்களை எடுத்துக் கொண்டு, கதவைத் திறந்து வெளியே வந்தான். 

மீண்டும் மழையில் நனைந்தபடி, காற்றுக்கும் ஈடு கொடுத்து தேவகி வீட்டுப் பலகணிக்கு அருகேயுள்ள பன்னீர் மரத்தடிக்கு வந்தான் ரகு. கொஞ்சம் நிதானித்து நின்று நாலா திசையிலும் பார்த்து விட்டு மளமளவென்று அந்த மரத்தில் ஏறிய ரகு, ஜன்னலை ஒட்டி நின்ற கிளைக்குச் சென்று தான் கொண்டு வந்திருந்த அத்தனை பூக்களையும் அந்தக் கிளையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் குத்திவைத்தான். 

குளிர் நடுக்குகிறது பற்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொள்கின்றன. மரக்கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான் ரகு. கிளையின் அசைவுச் சத்தம்? தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த தேவகியின் காதில் விழவே, மெள்ள வந்து ஜன்னலைத் திறந்து பார்க்கிறாள். உடலெல்லாம் நடுங்க மரத்தில் உட்கார்ந்து, காரியத்திலேயே கண்ணாயிருக்கிறான் ரகு. அவளுடயை மகனுக்காக அவன் படும் பாட்டைப் பார்த்து அவளது மனம் கசிகிறது. 

வெற்றிகரமாக காரியத்தை முடித்துவிட்ட திருப்தியில் மரத்திலிருந்து கீழே இறங்கினான் ரகு. தரையில் கால்பதித்து ஓரடிவைத்திருப்பான்.. அப்படியே சுவரில் சாயந்து தரையில் உட்கார்ந்து விட்டான். அவனால் நடக்கமுடியவில்லை. ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த தேவகி, கீழே ஓடிவருகிறாள். 

தன்னை யாரோ தொட்டுத் தூக்குவதை உணர்ந்த ரகு திடுக்கிட்டுப் போனான். போலீசுக்குத் தப்பி வந்திருப்பவனாதலால் அவனுள் இருந்த பயம் அப்படி அவனைத் திடுக்கிட வைத்தது. ஆனால் தன் உடம்பில் பதிந்த கையைத் தடவிப் பார்த்தபின்தான், அது ஒரு பெண்ணின் கை என்பதையறிந்தான். 

“தேவகி…!” என்று மெதுவாக அழைத்தபடி அவள் முகத்தைப் பார்த்தான். ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையாட்டிய தேவகி, அவனை அப்படியே கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்தாள். 

தேவகியும், அவளது தோளில் சாய்ந்தபடி ரகுவும் செல்வதை அவர்கள் அறியாமல் – கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறான் ராதா. 

மாடியில் ஒதுக்குப் புறமாக இருந்த படுக்கை அறைக்குள் ரகுவை அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள் தேவகி. 

கொடியில் கிடந்த ஒரு டவலை எடுத்துக் கொண்டு அவனிடம் ஓடிவந்த அவள், அவனது தலையைத் துடைப்பதற்காக வேகமாகக் கையைக் கொண்டு போனாள். அடுத்த வினாடியே ‘சடக்’ கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, டவலை அவனிடம் தந்தாள். அவன், டவலால் தலையைத் துவட்டத் தொடங்கினான். 

அங்கிருந்த பீரோவைத் திறந்த தேவகி ஒருகணம் அப்படியே நின்றாள். அதில் அவளது கணவன் திவாகரின் சில உடைகள் அவன் நினைவாக இருந்தன. அதை எடுத்து ரகுவுக்குக் கொடுப்பதா வேண்டாமா என்று அவள் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இறுதியில் ஒரு வேட்டியையும், சட்டையையும் எடுத்து வந்து ரகுவிடம் கொடுத்தாள். 

“உடையை மாற்றுங்க… இதோ ஒரு நொடியில காபி கலக்கிறேன்!” என்று சொல்லிச் சமையல் கட்டுக்குள் பறந்தாள். 

தேவகி கொடுத்த காபியைக் குடித்த ரகு, சிலைபோல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் ஏதோ ஒரு பாரம் இறங்கியிருப்பது போல அவன் முகம் காட்டியது. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி! 

இப்போது அவனது கண்களும் அவள் முகத்தை ஏறிட்டு நோக்கின. 

“எனக்காகக் கொலைப்பழியை ஏத்துக்கிட்டிருக்கீங்க! என் மகனைக் காப்பாத்தறதுக்காக சிறையிலேயிருந்து தப்பி வந்து, அதுக்கும் ஒரு தண்டனையை ஏற்கப் போறீங்க… உங்களுக்கு நான் எப்படித்தான் கைமாறு செய்யப் போறேனோ?” என்று சொல்லிக் கண் கலங்கினாள் தேவகி. 

இதைக் கேட்டு சற்று பலமாகவே சிரித்தான் ரகு.

“நான் உங்கிட்டே இருந்து கைமாறு எதிர்பார்த்தா இந்தக் காரியங்களைச் செய்தேன்?” 

-அமைதியாகக் கேட்டான் ரகு! அவனது கேள்விக்கு தேவகியால் பதில் சொல்ல முடியவில்லை. பேசாமல் உட்கார்ந்திருந்தாள். 

“அப்படியே வச்சுகிட்டாலும் நீ செய்யற கைமாறை – உதவியை நான் அனுபவிக்க முடியுமா?” மீண்டும் சிரித்தான் ரகு. 

“நீங்க…?” தேவகி திணறினாள். 

“ஆமா… தேவகி! என்மேல இருக்கிற குற்றச்சாட்டுக்கு எனக்குத்தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கலாம். இந்த நிலைமையில் என்ன தான் எனக்கு நீ செய்தாலும் …எனக்கு என்ன ஆகப்போகுது?” 

“பின்னே எதுக்குத்தான் எனக்காக இப்படி நீங்க உங்களை அழிச்சுக்கிறீங்க…?” கண்களைத் துடைத்துக் கொண்டாள் அவள்! 

“என் மனசில, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவுபண்ணி என்னிக்கு உன்கிட்ட வந்து கேட்டேனோ… அன்னிக்கே மானசீகமா எனக்கு நீதான் மனைவின்னும், பாபு என் மகன்னும் முடிவு பண்ணிட்டேன். அதுலே எந்த மாற்றமும் இன்னிக்கு வரை இல்லே, இனிமேலும் இருக்காது! உடல்கள் ஒன்றாகிப் பிணைவது தான் தாம்பத்திய வாழ்க்கைன்னு சொல்லும். ஆனா. உண்மைக் காதலுக்கு உள்ளங்கள் பின்னிப்பழகினாலே போதும்! இதுலே… என் விஷயத்துலே… என் உள்ளம்தான் உன்னை நாடுது… உன் உள்ளம் அப்படியில்லே…ஆனாலும் நான் என் முடிவை மாத்திக்க முடியாது, அவ்வளவுதான்!” 

ரகுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேவகியின் மனதில் ஆழமாகப் பதிந்தன. தலை கவிழ்ந்தவாறே கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள். 

“தேவகி……!” ஆசை பொங்க அழைத்தான், ரகு ! 

“என்னங்க?” நிமிர்ந்து பார்த்தாள் தேவகி. “எனக்குத் தூக்குத் தண்டனை விதிச்சா, அதை நிறைவேத்தறப்போ, என்கிட்ட, ‘உன் கடைசி ஆசை என்ன?’ன்னு கேட்பாங்க… அங்கே என் ஆசையை சொல்லிப் பயனில்லே… அந்த என் கடைசி ஆசையை இப்போ உன்கிட்ட சொல்லட்டுமா தேவகி…?” அவன் குரல் கரகரத்தது. 

“சொல்லுங்க… தாராளமா சொல்லுங்க…!” தேவகி அவனை நெருங்கி அமர்ந்தாள். 

“நான் உன்னுடைய கணவன் என்கிற உரிமையோட, நீ என் மனைவி என்கிற நினைவோட நான் சாகணும்… எனது அந்த எண்ணத்துக்கு சம்மதம் தர்ற மாதிரி ஒரே ஒருமுறை என்னை ‘அத்தான்’னு கூப்பிடு தேவகி…!” தேவகிக்கு ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த திவாகரின் படத்தையும், எதிரே உட்கார்ந்திருந்த ரகுவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். 

தனக்காகக் கொலைப்பழியை ஏற்றும், தன் மகனுக்காக புயல் – மழையில் சிறையிலிருந்து தப்பி வந்த குற்றத்தைச் செய்தும், தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயாராக இருக்கும் ரகுவின் தியாகம் அவளது மனத்திரையில் ஓடியது. அவளது இதயத்தில் இடியும் மின்னலும் மாறி மாறித் தோன்றியது போலவே, வெளியிலும் இடியும் மின்னலும் இருந்தன. 

வெறிகொண்டவளைப் போல தேவகி எழுந்தாள். ரகுவும், எழுந்தான். அவன் முகத்தையே பார்த்தபடி கொஞ்சம் கொஞ்சமாக ரகுவை நெருங்கினாள். அவனும் நெருங்கினான். “அத்தான்!” என்று கூவி அவன் மார்பில் சாய்ந்தாள் தேவகி. அவன் தோள்களைத் தடவினாள். அவனது கன்னத்தை இழுத்து தன் கன்னத்தில் ஒட்டவைத்தாள். இருவரும் கண்களை முடி மெய்மறந்து ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகம் கண்டனர். 

‘பளீர்…… பளீர்!’ என்ற ஒளி தோன்றி மறைந்தது. மின்னல் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அது மின்னல் அல்ல! அணைப்பில் மயங்கியிருந்த ரகுவையும், தேவகியையும் ஐந்தாறு போஸ்களில் ‘பிளாஷ்’ போட்டோ எடுத்து விட்டு நழுவிவிட்டான் ராதா. 


இருண்டு கிடந்த உலகத்துக்கு ஒளி கொடுத்து கடமையாற்ற, வழக்கம் போல எழுந்தான் உதயசூரியன். இரவில் வீசிய புயலும், கொட்டிய மழையும், முழங்கிய இடியும் ஓய்ந்து ஒரே அமைதி கோலோச்சிக் கொண்டிருந்தது அப்போது. 

வழக்கத்துக்கு அரைமணி நேரம் முன்பாகவே எழுந்த பாபு, கண்களைக் கசக்கிக் கொண்டு அவனுக்கு எதிர் திசையை பார்த்த போது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான் ரகு. 

கட்டிலில் உட்கார்ந்தபடியே “ரகு மாமா” என்று பலமாக கூப்பிட்டான் பாபு. 

கண்விழித்த ரகு “என்ன பாபு?” என்று கேட்டவாறே அவனருகில் வந்தான். 

“நல்லவேளை… வந்துட்டீங்க… உங்களைப் பார்க்க முடியாதோன்னு நினைச்சேன்…!” என்று கூறி ரகுவின் கையைப்பிடித்துக் கொண்டான் பாபு! 

“ஏன்பாபு அப்படிச் சொல்றே?” ரகு கேட்டான். 

“அய்யய்யோ உங்களுக்குத் தெரியாதா?” என்று இழுத்தான் பாபு. 

அப்போது பாபுவுக்கும். ரகுவுக்கும் காபி எடுத்துவந்தாள் தேவகி. பாபு சொன்னான்: 

“ரகுமாமா…இன்னிக்கு எனக்குக் கடைசிநாள். கடைசி மூச்சு – கடைசிப்பூ!” என்றான். அவன் கண்கள் தேவகியைப் பார்த்து கலங்கின. தேவகி மெளனமாக இருந்தாள். 

“அம்மா… ஜன்னல் கதவைத் திற!” – தேவகியைப் பார்த்துக் கூறினான் பாபு.

“வேண்டாம் பாபு… அப்புறம் திறக்கலாம்”

“எப்போ திறந்தா என்னம்மா…?” 

“சொன்னா கேளுடா… ஜன்னலைத் திறக்க வேண்டாம்…. குளிர் காற்று அடிக்குது!”

தேவகி, கதவைத் திறக்க மறுத்து சண்டித்தனம் செய்வதைக் கண்ட பாபு. வேகமாக எழுந்து சென்று அவனே ஜன்னல் கதவைத் திறந்தான்.

சிறிதும், பெரிதுமாக, ஏராளமான பன்னீர்ப் பூக்கள் அந்தக் கிளையில் பரவலாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்த மலர்களின் வெள்ளை நிறத்தில் மனதைப் பறிகொடுத்தான் பாபு. 

அந்த மலர்களைப் பார்க்கப் பார்க்க பாபுவின் முகம் மலர்ந்தது. அவனது கண்களில் பிரகாசம் மிளிர்ந்தது. அவனது இதழ்கள் புன்னகையை நெளியவிட்டன். 

பல நாட்களுக்குப் பிறகு பாபுவிடம் இவற்றை யெல்லாம் கண்ட தேவகி பரவசத்தால் மெய்சிலிர்க்க நின்றாள். 

“அம்மா…ரகு மாமா…!”  உற்சாகமாகக் கூவினான் பாபு. 

“என்ன கண்ணா?” பல நாட்களுக்குப் பிறகு சிரித்தபடி கேட்டாள் தேவகி 

“எப்படீம்மா…… இவ்வளவு பூ பூத்தது?” ஆச்சரியத்துடன் கேட்டான் பாபு! 

“உன் கனவிலே வந்த தேவதை நேற்று ராத்திரி என் கனவிலே வந்தாங்க…!” 

“என்னம்மா சொன்னாங்க?”

“பாபு நூறு வருஷம் இருப்பான்… அதுக்கு அடையாளமா இந்தப் பன்னீர் மரக்கிளையிலே காலையிலே ஏராளமா பூ பூத்திருக்கும்னு சொன்னாங்க!” நம்பிக்கையோடு பொய் சொன்னாள் தேவகி! 

இதைக் கேட்டதுமே பாபுவுக்கு உடம்பெல்லாம் ஒரு சுறுசுறுப்பு வந்தது. கையையும் காலையும் ஆட்டினான். தேவகிக்கும், ரகுவுக்கும் மாறி மாறி முத்தமிட்டான். அவர்களது கைகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடினான். கட்டிலில் எழுந்து நின்று தரையில் குதித்தான். அந்தக் கூடத்தினுள்ளேயே அங்கும் இங்கும் ஓடினான். பாபுவின் இந்தக் குதூகலத்தைக் கண்ட தேவகி பூரித்துப் போனாள். நன்றியுணர்வோடு ரகுவை நோக்கின அவளது கண்கள்! அடுத்த நிமிடம்- 

கீழே இருந்து ‘தட தட’ வென்று பூட்ஸ் கால்களின் சத்தம். ஓடிச்சென்று எட்டிப்பார்த்தான். ரகு!

ஐந்தாறு போலீஸ்காரர்கள்! வாசலில் நின்றிருந்த ராதாவிடம், “இன்னும் மேலே இருக்கானில்லையா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்கிறார். 

“இருக்கான்… இருக்கான்!” என்று கூறிப் பல்லை இளிக்கிறான் ராதா! 

“தப்பிவந்த குற்றவாளி பற்றித் தகவல் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்ஸ்!” என்று ராதாவின் முதுகில் தட்டிக் கொடுத்த இன்ஸ்பெக்டர் மாடிப்படிகளில் ஏறுகிறார். 

மேலே இருந்து இதைப்பார்த்துக் கொண்டிருந்தனர் ரகுவும், தேவகியும். ஓடிச் சென்று பாபுவுக்கு ஒரு முத்தம் தந்து விட்டு, இன்ஸ்பெக்டருக்கு எதிரே கைகளை நீட்டியவாறே மாடிப்படிகளில் இறங்குகிறான் ரகு. 

ரகுவின் கையில் விலங்கை மாட்டி ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர் போலீசார். “ரகு மாமா ரகு மாமா!” எனக் கூவியழுகிறான் பாபு. அவனை அணைத்துப் பிடித்துச் சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்துச் செல்ல முயன்ற தேவகி, மீண்டும் கீழே எட்டிப் பார்க்கிறாள். ராதா நின்றுகொண்டு அவளையே பார்க்கிறான். அவனை நோக்கிக் காறித் துப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்கிறாள்! 


பாபுவுக்குத் தலைவாரி, பவுடர் பூசி, புத்தகப் பையை அவன் தோளில் மாட்டி, அவனது கையைப் பிடித்து அழைத்து மாடிப்படிகளில் இறங்கினாள் தேவகி. வாசற்படியில் அவள் நிற்க, அவளுக்கு ஒரு ‘இச்’ கொடுத்துவிட்டு “அம்மா டாட்டா” என்றபடி தெருவில் இறங்கினான் பாபு. 

“பார்த்து மெதுவா போ கண்ணா!” என்று அவள் கூறும் போது, மீண்டும் “டாட்டா” என்றான் பாபு! பத்தடிதூரம் செல்வதும், திரும்பிப்பார்த்து ‘டாட்டா’ சொல்வதுமான பாபுவின் செயலை ரசித்தபடி, தெருமுனையில் அவன் திரும்பும்வரை அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் தேவகி. 

தன் கண்ணிலிருந்து பாபு மறைந்ததும் மாடிப்படியேறி வீட்டுக்குள் நுழைந்தபோது மேஜை மீதிருந்த பாபுவின் பேனா தேவகியின் கண்ணில்பட்டது. ‘அடடே பேனாவை மறந்துட்டுப் போயிட்டானே!’ என்றபடி அதை எடுத்துக் கொண்டு அவள் திரும்பும்போது – இருக்கிற பல் எல்லாம் வெளியே தெரிய வந்து நின்றான் ராதா. 

அவனைப் பார்த்ததுமே, “எங்கே வந்தீங்க?” என்றாள் கோபமாக! 

“உன்கிட்டத்தான் வந்தேன்…!” – குழைந்தான் அவன். 

“எதுக்கு வந்தீங்க?” எரிந்து விழுந்தாள் அவள்.

“ரகு வந்தான்னா இதெல்லாம் கேக்கறியா நீ? என்னை மட்டும் வெரட்றியே… தேவகி!” – சிணுங்கினான் அவன். 

“அனாவசிய பேச்சு தேவையில்லே… வந்த விஷயத்தைச் சொல்லுங்க!”

“எனக்கு ஐநூறு ரூபாய் பணம் வேணும்!” 

“இது ஒண்ணும் வட்டிக்கடை இல்லே!”

“தேவகி!” கத்தினான் ராதா. 

“என்ன அலர்றீங்க?'” அலட்சியமாக கேட்டாள் தேவகி. 

“இதோ பார் இந்தப் படத்தை!” –  அவளிடம் ஒரு படத்தை நீட்டினான். 

படத்தை வாங்கிப் பார்த்த தேவகி அதிர்ச்சி அடைந்தாள். ரகுவும் அவளும் ஒருவரை யொருவர் தழுவிக்கொண்டு கண்களை மூடி மெய்மறந்து இருந்தனர் படத்தில். 

“ஒழுங்கா பணத்தைக் கொடு! இல்லே இந்தப் படத்தை பாபுகிட்ட காட்டுவேன். இந்த நெகடிவ்கள் எல்லாம் என்கிட்ட இருக்கு ஜாக்ரதை!” உறுமினான் ராதா. 

அந்தப் படத்தைத் தனது ஜாக்கெட்டுக்குள் திணித்து மறைத்துக்கொண்ட தேவகி, “இந்தப் படத்தைக் காட்டி என்னை ‘பிளாக்மெயில்’ பண்றியா?” என்றாள் கோபமாக! 

“நீ பணத்தைத் தந்திட்டா நான் ஏன் பிளாக் மெயில் பண்றேன்?'”

“என்கிட்ட பணம் இல்லே!” 

“பெட்டியிலே பணமில்லாட்டிப் பரவாயில்லே, கட்டில்லே மெத்தை இருக்கு…வா…!” 

“என்ன, நாக்கு நீளுது?”

“பணம்! இல்லே – படுக்கை!”

“ச்சீ…! நீ ஒரு ஆண் பிள்ளையா?”

“அதனாலேதான் ஒன்னக் கூப்பிடறேன்!”

“உன் எண்ணம் நிறைவேறாது!”

“ஏன் நிறைவேறாது?” – என்று கேட்டபடி தேவகியின் மீது பாய்கிறான் ராதா. அவளது கையைப் பிடித்து இழுக்கிறான், அவள் திமிருகிறாள். 

அந்தச் சமயத்தில் ராதாவின் முதுகில் ‘சுளீர், சுளீர்’ என்று பிரம்படிகள் சரமாரியாக விழுகின்றன! திடுக்கிட்டுத் திரும்புகிறான் ராதா! கையில் ஒரு பிரம்புடன் பாபு நிற்கிறான். பாபு வந்துவிட்டதைப் பார்த்த தேவகி நிலைமையைச் சமாளிக்க, 

“நீ கொடுத்த கடன் பணம் தானே வேண்டும்? இரண்டுநாள் பொறுத்துக்கோன்னு சொன்னதுக்கா இப்படி மிருகம்போல நடந்துகிட்டே? இந்தா பிடி உன் பணத்தை!” என்று கூறியவாறு ஐநூறு ரூபாயை எடுத்து ராதாவிடம் தருகிறாள். 

அதைப்பெற்றுக்கொண்ட ராதா, “முதல் தவணையா வாங்கிக்கிறேன்! இன்னும் மூவாயிரம் தவணை பாக்கியிருக்கு!” என்று சொல்லிவிட்டுப் போகிறான். 

ராதா போனபின்பு, பாபுவை கட்டிக்கொண்டு ஆறுதல் சொன்னாள் தேவகி. 

“நல்ல வேளைம்மா… மறந்து வச்சிட்டுப்போன பேனாவை எடுக்கறதுக்கு வந்தேன்….” என்றான் பாபு! 

“பாபு.. இந்த ஆளு ரொம்ப மோசம்டா! இவனால நமக்கு இனி அடிக்கடி தொல்லை வரும், உன்னை ஊட்டி கான்வெண்ட்லே சேர்த்துட்டு கொஞ்ச நாளைக்கு வேற வீடு பார்த்துட்டுக் குடிபோகலாம்னு இருக்கேன்!” என்றாள் தேவகி. 

“சரிம்மா” என்று சம்மதம் தெரிவித்தான் பாபு! 


சிறைச்சாலை. 

இருபது, முப்பது பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த ‘பிளாக்’கின் திண்ணையில் உட்கார்ந்து அங்கிருந்த சுவரில் கரித்துண்டு ஒன்றைக் கொண்டு ஏதோ வரைந்து கொண்டிருக்கிறான் ரகு! இலைகளோ, மலர்களோ இல்லாத பட்டமரத்தின் படம் அது. 

சற்றுத் தள்ளி திண்ணையில் படுத்துக் கிடந்த மலேசியா மாணிக்கம் என்ற கைதி. ரகு வரைந்த படத்தை பார்த்துக் கேட்டான்: 

“என்னப்பா நீ? பட்ட மரத்தின் படத்தை வரையறியே… என்ன விசேஷம்?” 

“இதுலே ஒரு விசேஷம் இருக்கப்பா!” 

“என்னான்னு சொல்லு?”

சிறிதுநேர மவுனத்துக்குப் பிறகு ரகு கேட்டான்!

“மாணிக்கம் ; இந்த பட்ட மரம் தளிர்க்குமா?”

“அது உன் கையிலேதான் இருக்கு! நீ இலைகளையும், மலர்களையும் வரைஞ்சா அது தளிர்க்கும். இல்லேன்னா இப்படியேதான் இருக்கும்!” 

இதைக் கேட்டு பலமாகச் சிரித்தான் ரகு சிரித்துக்கொண்டே அந்த ‘பட்ட மர ‘த்தில் இலைகளையும் மலர்களையும் வரைந்தான். வரைந்து முடிந்ததும் கரித்துண்டைத் தூக்கி வீசி எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே இருந்தான். 

“ஏய்..ரகு! உன் மூளைக்கு ஒண்ணும் ஆகலியே?” என்று கிண்டலாகக் கேட்டான் மாணிக்கம். 

“மாணிக்கம்! நம்ம சமுதாயத்திலே விதவைப் பெண்களை பட்ட மரம்னுதானே சொல்லுவாங்க?”

எதிர்க்கேள்வி கேட்டான் ரகு! 

“ஆமா.. அதுக்கென்ன இப்போ?”

“நான் ஒரு பட்டமரத்தை விதவையைக் காதலிக்கிறேம்பா… இத்தனைக்கும் அவளது பூர்வீகம் எதுவும் எனக்குத் தெரியாது!”

“அப்படியா?” – வாயைப்பிளந்த மாணிக்கம்! “ஏம்பா அப்படி?” என்றான். 

“அழகு! அவளிடம் தெரிகிற அழகு எனக்கு வேறு எதிலுமே தெரியலே!” 

“அப்போ சரி! நடத்து!” 

“மாணிக்கம்! நான் ஜெயில்லே இருக்கேன்! எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ தெரியாது! நீ இந்த வாரத்து ‘ஜட்ஜ் மெண்ட்’லே விடுதலையானா எனக்கு ஒரு உதவி செய்றியா?”

“சத்தியமா செய்யறேன். என்ன செய்யணும்?”

“தேவகி தன் மகனோட தனியா இருக்கிறா! சரியான பாதுகாப்பு இல்லே அவளுக்கு. இந்தச் சமயத்திலே ராதான்னு ஒரு போட்டோகிராபர் அவளை ‘பிளாக்மெயில்’ பண்றானாம்!” – ரகு குமுறினான். 

“அடப்பாவி…!” மாணிக்கம் பல்லைக் கடித்தான்.  

“நான் இங்கிருந்து தப்பிப்போன காரணம் உனக்குத் தெரியுமில்லே…அன்னிக்கு ராத்திரிதான் என் காதலை அவள் ஏத்துக்கிட்டா. நானும் அவளும் சேர்ந்து நெருக்கமா இருக்கறப்போ… அந்தப் பாவி எப்படியோ ரகசியமா போட்டோ எடுத்திருக்கான். இப்போ அந்தப் போட்டாவை தேவகிகிட்ட காட்டி பணம் கேட்டு மிரட்டறான்!” 

“நீ பேசாம இரு! நான் மட்டும் விடுதலையானா முதல்லே அவனைப் பார்த்து அவன் கையைக் காலை வாங்கறேன்!” கோபம் கொப்பளித்தது மாணிக்கத்திடம். 

“இதோ இந்தப் படத்தைக் காட்டித்தான் இப்போ அவன் மிரட்டறான். நேற்று ‘இண்டர்வியூ’ பார்க்க வந்திருந்த தேவகி, இந்த விஷயத்தைச் சொல்லி அழுதா. இந்தப் படத்தையும் கொடுத்தா!” – படத்தை எடுத்து மாணிக்கத்திடம் தந்தான் ரகு. படத்தைப் பார்த்த மாணிக்கம். தேவகியின் அழகில் மயங்கிச் சிலையானான். அவளது அழகு அவனைக் கொள்ளை கொண்டது.

திடீர் என்று மாணிக்கத்தின் முகத்தில் வியப்புக் குறி. அவன் உதடுகள் ‘தேவகி, தேவகி’ என்று முணு முணுத்தன. ஒன்றும் புரியாத ரகு, அவனது தோள்களை உலுக்கி “என்னப்பா?” என்றான். 

“ரகு…ரகு…. இந்தத் தேவகி யார் தெரியுமா? என் மனைவி விஜயாவும் தேவகியும் இரட்டைப் பிறவிகளப்பா!” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு! 

“அப்படியா?” அதிசயத்துடன் கேட்டான் ரகு!

“ஆமாப்பா! நாங்க எல்லோருமே மலேசியாவில் தான் இருந்தோம்… நான் விஜயாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தேவகி தமிழ்நாட்டுக்கு வந்து யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டா!” 

–மாணிக்கம் பேசப் பேச ரகுவின் கண்கள் வியப்பால் விரிந்தன. 

“ரகு, நாம் ரெண்டுபேரும் எவ்வளவு சீக்கிரத்தில் சொந்தமாயிட்டோம் பார்த்தியா… திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுறதா சொல்வாங்க… அது போல நம்முடைய சொந்தம் சிறைச்சாலைக்குள்ளே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கு!” – என்று கூறிச் சிரித்தான் மாணிக்கம். ரகுவும் சிரித்தான்! 

“நான் விடுதலையாகிப் போனா… முதல்லே அந்த ராதாவைப்பார்த்து அவனை என்ன செய்றேன் பார்!” – கருவினான் மாணிக்கம். 

ரகு குறுக்கிட்டான். 

“இந்த விஷயத்துல ஆத்திரப்படக் கூடாது மாணிக்கம்! எப்படியாவது அவனைச் சந்திச்சி நயமாப் பேசி அந்த ‘நெகடிவ்’களை வாங்கிவிடு!” 

ரகுவின் முதுகில் தட்டிக் கொடுத்த மாணிக்கம், “நீ கவலைய விடு ரகு, மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்றான். 

“நன்றி!” என்று சொன்ன ரகு, 

”மாணிக்கம், தேவகி, தன் மகனை ஊட்டி ‘கான்வெண்ட்’லே சேர்க்கப் போறாளாம். இன்னிக்குப் புறப்பட்டிருப்பா… நாளையோ அல்லது நாளை மறுநாளோ வந்திடுவா. இதோ அவளுடைய விலாசம்…!” என்று சொல்லி மாணிக்கத்திடம் தேவகியின் விலாசத்தைக் கொடுத்தான். மிகப் பெரிய கவலை ஒன்று தீர்ந்தது போல இதயம் இலேசாக ஆகிவிட்டது ரகுவுக்கு. மாணிக்கம் எப்படி யும் காரியத்தைச் சாதிப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தான், ஒரு பெரிய தனவந்தன் என்றும், தனது எதிரிகள், பொறாமையின் காரணமாக பொய்ப்புகார் கூறித் தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரகுவிடம் மாணிக்கம் கூறியிருந்தான். செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டு கைதாகியிருக்கும் தன்னையும், செய்யாத குற்றத்துக்காக வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கும் மாணிக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த ரகு, அங்கிருக்கும் கைதிகளிலேயே மாணிக்கத்தை மட்டுமே தனது அந்தரங்க நண்பனாக ஆக்கிக் கொண்டிருந்தான். அந்த அடிப்படையில்தான் இந்தப் பொறுப்பை அவனிடம் தந்தான். 


தன் வீட்டில், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ரகுவும், தேவகியும் மெய்மறந்த நிலையிலிருக்கும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் ராதா. அப்போது அவனை நெருங்கி வந்த அவனது மனைவி கீதா, “என்னங்க… வீட்டுக்காரர் வந்துவிட்டுப் போனார்!” என்று, வாடகை கொடுக்க வேண்டியதை நினைவு படுத்தினாள்.  

அவளை நிமிர்ந்து பார்த்த ராதா, “கொஞ்சம் பொறுடீ….. பணம் காய்க்கும் மரமே கிடைச்சிருக்கு.. இதோ பார்!” என்று அந்தப் படத்தை அவளிடம் காட்டினான். 

அந்தப் படத்தை அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே……”இந்தப் படத்தை வச்சி லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்…!” என்றான். அப்போது அவன் நாக்கில் நீர் ஊறியது. 

ஜன்னல் வழியாக, பேப்பர் பையன் போட்டு விட்டுப் போன காலைப் பத்திரிகை ‘பொத்’ என்று வந்து ராதாவின் அருகே விழுந்தது. அதை எடுத்துப் பிரித்தான்.

“கள்ளக் கடத்தல் புகாரில் கைதான மலேசியா மாணிக்கம், குற்றமற்றவர் என நிரூபிக்கப் பட்டு விடுதலையானார்” என்ற செய்தி, மாணிக்கத்தின் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. 

அந்தச் செய்தியை ராதா படித்துக் கொண்டிருக்கும் போதே, வாசலில் படகு போன்ற ‘இம்பாலா’ கார் ஒன்று வந்து நின்றது. பேப்பரைக் கையில் எடுத்துக் கொண்டு ராதாவும், அவனுக்குப் பின்னால் கீதாவும் ஓடினார்கள். 

வாட்டசாட்டமான உயரத்துடன், உயர்ந்த ரகப் பட்டாடைகளுடன், உடலெங்கும் ஒளிவீசும் நகைகளுடன் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காரிலிருந்து இறங்கி கம்பீரமாக ராதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்து பிரமித்துப் போன ராதாவும், கீதாவும், “வாங்க…வாங்க!” என்று பணிவுடனும், குழைவுடனும் அவர்களை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தனர். அவர்கள் உட்கார்ந்ததும், பேப்பரில் வெளி வந்திருந்த மாணிக்கத்தின் படத்தையும் அந்த மனிதரையும் மாறிமாறிப் பார்த்தான் ராதா. 

“என்ன பாக்கிறீங்க? நான் மலேசியா மாணிக்கம்..!” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் மாணிக்கம்! 

“அது… தேவகி…?” என்று இழுத்தான் ராதா. 

அதைக் கேட்டுச் சிரித்த மாணிக்கம், “இல்லே…. இவ தேவகியோட அக்கா விஜயா… இருவரும் இரட்டைப் பிறவிகள்… தேவகி விஷயமாகத் தான் உங்களிடம் வந்திருக்கிறோம்!” என்றான். 

இதைக் கேட்டதும் ராதாவுக்கு சற்றுபயம், சமாளித்துக்கொண்டு, “அடியேன்.. என்ன செய்யணும்…?” என்றான். 

“தேவகி சம்பந்தப்பட்ட ரகசிய படங்களையும் நெகடிவ்களையும் தரவேண்டும்!”அலட்சியமாகச் சொன்னான் மாணிக்கம்! 

ராதாவின் முகம் மலர்ந்தது. மாணிக்கம், விஜயா ஆகியோரின் உயர்ந்த ஆடைகளையும், அவர்களது உடலில் மின்னிக்கொண்டிருந்த ஒளி வீசும் நகைகளையும் நோட்டமிட்டு, இவர்களிடம் எவ்வளவு ரூபாய் பேரம் பேசலாம் என்று மனதுக்குள் கணக்குப் போட்டான். பிறகு சொன்னான். 

“தர்றதப்பற்றி ஒண்ணும் இல்லே… நான் கொஞ்சம் சிரமத்துல இருக்கேன்!” 

“என்ன கஷ்டம்?” -மாணிக்கம் கேட்டான்.

“பணக்கஷ்டம்'” ராதாவுக்குப்பின்னால் நின்ற கீதா சொன்னாள்! 

“எவ்வளவு வேணும்…?” ராதாவைப் பார்த்து மாணிக்கம் கேட்டான். 

“ஐம்பதாயிரம்… இருந்தா…கொஞ்சம் சமாளிச்சுக்குவோம்!” என்றாள் கீதா. 

சிறிதுநேரம் யோசித்த மாணிக்கம், “ஐம்பதாயிரம் எனக்கு ஒண்ணும் பெரிசு இல்லே… அதெல்லாம் எனக்கு ஒருநாள் காபிச் செலவு மாதிரி… ஆனா இப்போ தான் நான் வெளியே வந்திருக்கேன்… அதனால் கொஞ்சம் கஷ்டம்!” என்று கூறி; ராதாவையும். கீதாவையும் பார்த்தான். அவர்கள் மவுனமாக இருந்தனர். 

உடனே மாணிக்கம், தன் கழுத்தில் கிடந்த பதக்கச்சங்கிலியைக் கழற்றிக்கொண்டே, “விஜி…உன் நகைகளை எல்லாம் கொடு!” என்றான். அவளும் தனது கழுத்தில் கிடந்த நெக்லஸ், சங்கிலிகள், கைகளில் கிடந்த வளையல்கள், காதில் கிடந்த தோடு எல்லாவற்றையும் கழற்றி மாணிக்கத்திடம் கொடுத்தாள். 

அத்தனை நகைகளையும், ராதாவின் முன் அலட்சியமாகத் தூக்கி எறிந்த மாணிக்கம், “ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாகவே பெறும்” என்றான். ராதாவின் சம்மதத்தை எதிர்பாராமலே பாய்ந்து வந்த கீதா, அந்த நகைகளை அள்ளிக் கொண்டாள். வீட்டின் ஒரு அறைக்குச் சென்று வந்த ராதா, ரகு – தேவகி உள்ள சில படங்களையும், மூன்று நெகடிவ்களையும் மாணிக்கத்திடம் தந்தான். அதைப் பெற்று கொண்ட மாணிக்கம், விஜயாவின் கையைப் பிடித்தபடி எழுந்து நின்றான். அவனுடன் விஜயாவும் எழுந்து நின்றாள். 

“ஒரு நிமிஷம் நில்லுங்க!” என்று கூறிய ராதாக உள்ளே ஓடிச் சென்று கேமராவை எடுத்து வந்தான். 

“உங்க அந்தஸ்தைப் பார்க்காம என் குடிசைக்கு வந்து எங்களை வாழவைக்கிற காரியத்தைப் பண்ணின உங்களை மறக்காம இருக்கறதுக்கு ஒரு போட்டோ எடுத்து விட்டில் மாட்டணும்…!” என்று பல்லைக் காட்டுகிறான் ராதா. இதைக் கேட்ட விஜயா முகத்தைச் சுளித்து மாணிக்கத்தைப் பார்க்கிறாள். 

“பரவாயில்லே விஜி ஏதோ பிரியப்படுறார்…!” என்று கூறிய மாணிக்கம், விஜயாவுடன் ஒட்ட நிற்க, ராதா படம் எடுத்தான். ராதாவிடமும், கீதாவிடமும் விடை பெற்றுக் கொண்டு மாணிக்கமும், விஜயாவும் ‘இம்பாலாவில்’ புறப்படுகிறார்கள். 

கார் புறப்பட்டதும், உதட்டைக் கடித்துக் கொண்டு: மேலும் கீழும் ஒரு மாதிரியாகத் தலையை அசைத்து, முணுமுணுக்கிறான் ராதா. 

“உங்க வாய்க்கு சர்க்கரை போடணும்… பணம் காய்க்கும் மரம்னு நீங்க சொல்லி வாய்மூடலே. நமக்கு வந்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா..” என்று அவன் தாடையைத் தாங்கினாள் கீதா. 

“உன் புருஷனா கொக்கா?” என்றான் ராதா, “ஏங்க… இப்பவே போய் இந்த நகைகளை அடகு வச்சி…பணம் வாங்கி… முன்னே நாம பார்த்த வீட்டுமனையை வாங்கிடுவோம்…!” பரபரத்தாள் கீதா. 

“சீச்சி… வந்த அன்னிக்கே மார்வாரி கடையில் நகைய வக்கிறதா?”

“நீங்க ஒண்ணு… இன்னிக்குதான் நல்ல நாளு… இல்லேன்னா இப்படி நகை வருமா? இன்னிக்கே எல்லா காரியத்தையும் ஆரம்பிப்போம்..” 

அவள் சொன்னால், அதற்கு “அப்பீலே” இல்லை, எனவே புறப்பட்டு விட்டான் ராதா. 


பதக்கச் சங்கிலியையும், வளையல்களையும் மாறிமாறிப் பார்த்த மார்வாரி, உதட்டைப் பிதுக்கினான். “இதெல்லாம் கில்ட் நகைங்க!” என்று கூறி திரும்பவும் ராதாவிடமே தந்துவிட்டான். 

ராதாவுக்கும். கீதாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தன் கழுத்தில் கிடந்த நெக்லசைக் கழற்றி, “இந்த வைர நெக்லஸ்…?” என்று கூறி மார்வாரியிடம் தந்தாள் கீதா. அதை வாங்கிப் பார்த்தவுடனேயே வேகமாக அவளிடமே திரும்பக் கொடுத்துவிட்ட மார்வாரி, “எல்லாமே போலிம்மா…!” என்று கூறிச் சிரித்தான். 

கடையைவிட்டு வெளியேவந்த ராதாவும். கீதாவும் ஒருவருக்கொருவர் பேசாமலே சிறிது தூரம் நடந்தனர். “நம்ம தரித்திரம் நம்ம விட்டுப் போகாது!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் கீதா. 

“பேசாம இருடி.. அவன் என்னை ஏமாத்திட்டதாக நினைக்கிறான்… என்கிட்ட இன்னும் ரெண்டு நெகடிவ் இருக்குது. அதை வச்சி என்ன செய்றேன் பார்!” என்று உறுமினான் ராதா. 

– தொடரும்…

– ஒரு மரம் பூத்தது (நாவல்), முதற்பதிப்பு: 2000, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *