கல்யாணமாம் கல்யாணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 1,145 
 
 

“உங்களைப்பார்த்தா கல்யாணமாகாத கவலை முகத்துல தெரியுது தம்பி…” தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த சக பயணி கிவியிடம் பேச்சுக்கொடுத்தார் நாற்பது வயது மதிக்கத்தக்க இன்னொரு பயணி.

“நீங்க சாதாரண மனுசனே இல்லீங்க. எனக்கு கண்ணுல பாக்கற கடவுள மாதர தெரியறீங்க. பத்து வருசமா எனக்கு இருபத்தஞ்சுல இருந்து முப்பத்தஞ்சு வரைக்கும் காட்ட வித்து கல்யாணத்துக்குன்னு பீரோவுக்குள்ள கட்டுக்கட்டா பத்து லட்சத்த வெச்சிருந்து என்னங்க பண்ணறது…? ஒரு பொண்ணும் தட்டுப்பட மாட்டீங்குது, தட்டுப்பட்டா கட்டுப்பட மாட்டீங்குது. நீங்க மொகத்தப்பாத்தே சொல்லிப்போட்டீங்க. இப்பத்தான் ஒரு ஜோசியரப்பாத்துட்டு வாரனுங்க. குரு பலம் வந்திருச்சு. பொண்ண நீங்க தேடிப்போக வேண்டியதில்ல, ஒரு மாசத்துல தானாத்தேடி வரும், தாலி கட்டற பாக்கியம் ஸ்டாங்கா வந்திருச்சுன்னு சொன்னவரு…., ஒன்னொன்னையுஞ்சொன்னாரு…”

“என்னாது..‌‌..” சக பயணி வினவினார்.

“ஏழாமிடத்துல ராகு இருக்கறதுனால ஏற்கனவே கல்யாணமான பொண்ண பொய் சொல்லிக்கட்டி வெச்சிருவாங்க… ஜாக்கிரதைன்னு சொன்னாரு. நானு ஏமாறுவனுங்களா..? கண்ணப்பார்த்தாக்கண்டு புடிச்சுப்போடுவனாக்கு… கல்யாணமான பொண்ணா, இல்லியான்னு…” பேசி விட்டு பேச்சுக்கொடுத்த பயணியின் தொடையை ஓங்கித்தட்டியபடி கெக்கலக்கை போட்டு கிவி சிரித்ததைப்பார்த்து சக பயணிகள் முகம் சுழித்தனர்.

“ஜோசியர் வாக்கு உண்மையிலேயே பலிச்சிருச்சுங்க…”

“எப்படி….?”

“உங்களுக்குப்பொண்ணு கெடைச்சுப்போச்சுங்க….”

“அப்படியா…? பொண்ணு எங்கே…?” என்றவன் பேருந்து முழுவதும் பார்வையால் தேடினான்.

“பொண்ணு இங்கே வரலீங்க. ஊர்ல அவங்க வீட்ல இருக்குதுங்க. நாளைக்கு பொள்ளாச்சி வந்திருங்க. மாசாணியம்மன் கோவில்ல வெச்சுப்பார்த்து பேசிப்போடலாம். பொண்ண புடிச்சுப்போச்சுன்னா அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்த பண்ணிடுவோம். அப்புறம் நான் யாருன்னு நீங்க கேட்கலியே…”

“இப்பவே கேட்டுப்போட்டா போச்சு… ஆமா…நீங்க யாரு..‌‌.?”

“இந்த மஞ்சப்பையப்பார்த்தா தெரியலையா….? பொண்ணு புரோக்கரு….” சொல்லிச்சிரித்தார்.

“ரொம்ப சந்தோசம். உங்க போன் நெம்பரக்குடுங்க. காத்தாலைக்கு கோயம்புத்தூர்ல இருந்து பொள்ளாச்சிக்கு மொதல் வண்டியப்புடிச்சு வந்தர்றேன். ஆமா நீங்க சாதி கேக்க மாட்டீங்களா.‌‌…?”

“அதெல்லாம் கேக்காம எப்படிங்க…? நீங்க ….”

“இந்தாங்க ஜாதகம். இதுல எல்லா வெவரமும் இருக்குது….” எனக்கூறிக்கொடுத்தான் கிவி.

ஒரு பக்க ஜாதக நகலை வாங்கிப்பார்த்த, தன்னை பெண் புரோக்கரென சொல்லிக் கொண்டவர், “அட நாஞ் சொன்ன அந்தப்பொண்ணு உங்க ஜாதியேதாந்தம்பி. கூட்டமுங்கூட வேறதான். உங்க பங்காளி கூட்டங்கெடையாது. மாமம்மச்சாங்கூட்டந்தான். பொருத்தமுங்கூட பத்துக்கு பத்துப்பொருத்தமும் வரும். பத்து வருசமா ஜோசியகாரங்களப்பார்த்துப்பார்த்து நானும் ஜோசியகாரனாவே ஆயிட்டேன்னா பார்த்துக்குங்களே… உங்க ஜாதகத்துல பின் யோகம். இப்ப லட்சக்கணக்குல பீரோவுல பணத்த வெக்கிற நீங்க, கல்யாணமானதுக்கப்புறம் கோடிக்கணக்குல வெக்கப்போறீங்க. நீங்க பாக்கப்போற பொண்ணுக்கு மூணு கொழந்தைகள்….”

“என்னது ஏற்கனவே மூணு கொழந்தைகள் இருக்குதா…?”

“அட என்னங்க தம்பி நீங்க…. சொல்லி முடிக்கிறதுக்கு முன்னால முந்திரிக்கொட்டையாட்டா முந்தறீங்க… கண்டிப்பா மூணு கொழந்தைகள் கெடைக்கும்ங்கறேன்….”

“அப்படிச்சொன்னீங்களா…? ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுனாப்போதும்னு நெனைக்கிற எனக்கு, மூணு கொழந்தைகள் கெடைக்கும்னு சொன்ன உங்க வாயிக்கு அப்படிக்கெடைச்சா சக்கரை போடறேன்….”

“சக்கரை போட்டு என்ன தம்பி பண்ணறது? எனக்கு சக்கரை நோயி இருக்கறதுக்கு மருந்து வாங்க காசில்லாம கவலையோட இருக்கறேன்….” சொன்னவர் கண்களில் கண்ணீர் வருவதைப்பார்த்த கிவி, உடனே தனது பர்சை எடுத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தைக்கொடுத்தான். அப்பணத்தை வாங்கி பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்த புரோக்கர் கைகூப்பி நன்றி சொல்லி வணங்கினார்.

“நீங்க என்னக்கடவுள்னு சொன்னீங்க. இப்ப நீங்க தான் எனக்கு கடவுளாத்தெரியறீங்க. உங்களுக்குப்போயி இத்தன வருசமா கல்யாணம் ஆகாம இருந்திருக்குது பாருங்க. அந்தக்கடவுளுக்கே கண்ணில்லைன்னுதாஞ்சொல்லோணும். என்ற போன் நெம்பர  எழுதி வெச்சுக்கங்க. நானும் ஆஸ்பத்திரி போயிட்டு ஊட்டுக்குப்போறேன். என்ற பொண்டாட்டி வேற ஆச்சா…ஆச்சான்னு மெஸேஜ் அனுப்பீட்டே இருக்கறாளுங்க…. சொந்தக்காரங்கள நம்பிப்போனா என்னத்த ஆகப்போகுது… உங்கள மாதர நல்ல மனுசங்கனால தான் எங்கள மாதர மனுசங்களுக்கு எல்லாமே ஆகும்ங்க. சேரிங்க தம்பி நாளைக்குப்பார்க்கலாம்ங்க” என பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச்சென்றவரையே பார்த்துக்கொண்டிருந்த கிவி, அவர் சொன்ன செல் போன் எண்ணை பதிவு செய்யும் போது பெயர் கேட்காமல் விட்டது தெரிய, புரோக்கர் என பதிவிட்டான்.

அடுத்த நாள் ஆர்வத்துடன் மாசாணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் நேற்று பார்த்த நபரைத்தேடிய போது பின் பக்கமிருந்து தோள் மீது கை பட, திரும்பிப்பார்க்க, புரோக்கர் சிரித்தபடி நிற்க, வயதான ஆண் பெண் அருகில் சிவப்பு நிறத்தில் மேக்கப்போட்ட படி நின்றிருந்த இளம்பெண் கிவியைப்பார்த்து எகுறு தெரிய சிரித்து வைக்க, இப்பெண் தான் தனக்குச்சொன்ன பெண் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.

“என்ன தம்பி புடிச்சிருக்கா..‌” கேட்ட புரோக்கரைப்பார்த்து தலையாட்டினான். 

உடனே ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்ற புரோக்கர், தனியறையில் அமர்ந்து அனைவரோடும் சாப்பிட்டவுடன்  அப்பெண்ணை சிறிது நேரம் கிவியுடன் பேசச்சொல்ல, “கல்யாணத்த எப்ப வெச்சுக்கலாம்…?” எனக்கேட்டவனை, “பணம் நாஞ்சொன்னபடி ஒரு லட்சத்த பொண்ணோட அப்பனம்மா கிட்ட கொடுத்திடுங்க. எனக்கு சேர வேண்டிய புரோக்கர் கமிஷன அம்பதாயிரத்துல நேத்து ஆஸ்பத்திரி செலவுக்கு குடுத்த பத்தாயிரம் போக நாப்பதாயிரத்தையும் கொடுத்தீங்கன்னா நாளைக்கே நல்ல நாள் தான், பாலக்காட்ல இருக்கிற பகவதியம்மன் கோவில்ல வெச்சு பெரிய செலவில்லாம தாலியக்கட்டி ஊட்டுக்கு கூட்டீட்டு போயிருங்க. உங்க கூட நாலு பேரு வந்தாப்போதும். பொண்ணு ஊட்டுப்பக்கமும் நாலு பேரு வந்திருவாங்க. செலவு மட்டும் உங்களோடதுதான்” என புரோக்கர் கூறியதைக்கேட்டு, “எனக்கு நாளைக்கே கல்யாணம்ங்கிறது நம்பவே முடியலை. சொந்தக்காரங்களக்கூப்புட்டு மண்டபத்துல ரிசப்ஷன் வெக்கோணும்னு என்ற அம்மாளுக்கு ஆசை….”

“அத ரெண்டு நாள் கழிச்சு உங்க ஊர் பக்கம் பண்ணிக்கங்க” என புரோக்கர் கூற, பெண்ணும் சம்மதம் எனத்தலையாட்டியதும், “நாளை திருமணம் செய்து கொள்ள எனக்கும் சம்மதம்” எனச்சொன்னவன் அவர்கள் கேட்ட பணத்தைக்கொடுத்து விட்டு வீடு திரும்பினான்.

“பொண்ணு பார்த்த அடுத்த நாளே கல்யாணமா…? உனக்கு எங்கியோ மச்சம் இருக்குதுடா மாப்பிள்ளை…” என உறவினர்கள் கிண்டலாகப்பேசினர்.

தங்கத்தாலிக்கு பதிலாக அந்த ஊர் வழக்கம் என புரோக்கர் சொன்னதைக்கேட்டு  மஞ்சள் கொம்பில் தாலிச்சரடில் தாலி கட்டிய போது உடம்பெல்லாம் சிலிர்த்தது கிவிக்கு. ஊரில், உறவுகளில் தனக்குத்திருமணமே நடக்காது என கூறியவர்கள் முகத்தில் கரியைப்பூசுவது போல் கற்பனை செய்து கொண்டான். அப்பெண்ணின் சிவப்பான ஆப்பிள் போன்ற அழகிய கன்னத்தை அடிக்கடி தொட்டுப்பார்த்து மகிழ்ந்தான். டாக்ஸியில் பின் பக்கம் நெருக்கமாக புது மனைவியுடன் அமர்ந்து ஊருக்கு வந்தது சொர்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக்கொடுத்தது. வாழ்வில் என்றும் வராத சந்தோசம் இன்று வந்ததாக அப்பெண்ணிடமே சொன்னான்.

ஜோதிடருக்கு போன் செய்து சாந்தி முகூர்த்ததுக்கு நல்ல நேரம் கேட்டவன், தனி அறையில் படுக்கையில் மலர்களைத்தூவி புது மனைவியின் வரவுக்காகக்காத்திருந்தான்.

சொம்பில் பாலுடன் வந்தவளிடம் பால் சொம்பை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு, அவசரமாக மனைவியைக்கட்டியணைக்க நெருங்கிய போது “நான் தூரம் ஆயிட்டேன். அதனால இன்னைக்கு வேண்டாம்” என அப்பெண் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடையாமல் “அதனால என்ன…? நீ என்ற பொண்டாட்டி..‌ இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு சந்தோசமா இருக்கலாம் “என்றவனை பாலைக்குடிக்கும் படி அவள் வற்புறுத்தியதால் சொம்பை வாங்கி மீதம் வைக்காமல் முழுவதும் குடித்தவன், அவளருகில் ஒரே அறையில் இருந்தால் அவளது சொல்லை மீற நேரும் எனக்கருதி வேறு அறையில் சென்று படுத்தவன் உடனே அருகில் என்ன நடக்கிறது என்பதையறியாது குறட்டை விட்டு தூங்கினான்.

காலையில் எழுந்து பார்த்த போது புது மனைவியைக்காணாமல் பதறினான். தேடினான். பல பக்கம் ஓடினான். எங்கும் காணவில்லை. அவள் படுத்திருந்த அறைக்குச்சென்று பார்த்தான். பீரோ திறக்கப்பட்டு பணம் முழுவதும் காணாமல் போயிருந்த போது, தான் ஏமாற்றப்பட்டதைப்புரிந்து புரோக்கருக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் எனத்தெரிந்து தலையில் இடி விழுந்தது போல் கீழே மயங்கிச்சரிந்தான்.

அப்போது தனது மூன்று குழந்தைகளையும் உடன் அழைத்துக்கொண்டு, புரோக்கர் வேடம் போட்டு தனக்கு வேறொருவருடன் திருமணம் நடத்தி வைத்து பணத்தைத்திருடி வர யோசனை சொன்ன தனது கணவனுடன், திருடிய பணப்பையை மடியில் வைத்து இறுக்கமாகப்பிடித்தபடி ஒரு டாக்ஸியில் திருச்சூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தாள் கிவியிடம் ஒருநாள் மனைவியாக நடித்தவள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *