காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 2,580 
 
 

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

அன்பாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான். கூடவே, “நான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும். அப்படி நான் வரும்போது, நல்ல சேதி ஒன்று, எனக்காகக் காத்திருக்க வேண்டும்!” என்று, அவளது ஆசையைக் குறிப்பாக வெளிப்படுத்திச் சொன்ன வார்த்தைகள்! 

ஆனால், அவை மருமகளைப் புண்படுத்தக் கூடும் என்று அந்த அன்னைக்கு எப்படித் தெரியும்? 

திருமணம் என்றால், பொதுவாக எதிர்பார்ப்பதுதான். அதிலும் மூத்த தலைமுறை, பேரக் குழந்தைகளுக்கு ஆசைப்படுவது, இயற்கையே. ஆனால், இரு தரப்புமே பண்பாடு உள்ளவர்கள் என்பதால், இதுவரை யாரும் அது பற்றி நோண்டி, நோண்டிக் கேட்டது இல்லை! நம் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்., அறிவுள்ளவர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கவே, அவர்களது தனிப்பட்ட விஷயங்களில், ஒருவரும் தலையிட்டதுமில்லை! 

இப்போதும், பொதுவான ஓர் ஆவலைச் சொன்னதுதான். ஆனால், திலோவின் மனம் கசங்கிப் போயிற்று! 

பிள்ளைக்கு ஆசைப்பட்டால், திருமணமே வேண்டாம் என்று நிபந்தனை இட்டு மணந்தவன் மகன் என்று சொன்னால், இந்த அன்பான பெண்மணிக்கு எப்படியிருக்கும்? 

அவளும், அதற்கு ஒப்பியே மணந்தாள் என்றால், அவளைப் பற்றியும்தான்,மாமியார் என்ன நினைப்பாள்? 

மருத்துவர் சொன்னது போலத் தினமும் கருத்தடை மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்குவது, சைக்கிள் ஓட்டுவது போல, உடம்புக்குப் பழகிப் போயிற்று. அதை விடப் பெரிய இழப்புடன் ஒப்பிட்டுப் பழகிவிட்டதாலோ என்னவோ, மனதுக்கும் அவ்வளவு பெரிதாக, அதுவரை தோன்றவில்லை! 

ஆனால், இப்போது மாமியார் வாய் திறந்து பிள்ளையென்று குறிப்பாகக் கூறவும், பெரிதாக எதையோ இழந்துவிட்டது போலத் தவிப்பு தோன்றலாயிற்று! 

ஆனால், இப்படியொரு நிபந்தனையிட்டு மணந்த சித்தரஞ்சன் அல்லவோ, தாயின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்? 

என்ன என்று விசாரிக்கக் கூட இடமளிக்காமல், பிள்ளை வேண்டாம் என்பது என் முடிவு., சம்மதம் என்றால் இப்படி., இல்லை என்றால் அப்படி என்று, அன்று கறாராகப் பேசினானே! இப்போது தாயாருக்கும்கூட, அதே கண்டிப்புடன் பதில் வருமா? 

என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக, மாமியார் பேச்சைக் கணவன் காதில் போட்டாள் திலோத்தமா. 

அவன் லேசாகத் தோளைக் குலுக்கிவிட்டு டீவியை நோண்டவும், அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. 

அதென்ன, அவளா பிள்ளை வேண்டாம் என்றாள்? 

ஒருபுறம் தாயார். இன்னொரு பக்கம் மனைவி. இருவரின் உணர்வுகளைப் பற்றியுமே, இவனுக்கு ஒரு மதிப்பும் இல்லையா? இது சரியில்லையே! 

தலை சரித்து நோக்கி, “அப்படியென்றால் என்ன அர்த்தம்? நானும், அத்தையிடம் இப்படி அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டுப் போய்விடலாம் என்பதா?” என்று, திலோ சற்று அழுத்தமான குரலில் கேட்டாள். 

அவன் தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை! “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று அர்த்தம். சில நாட்கள் கவனியாதது போலப் பேசாதிருந்துவிட்டால், தானாகச் சரியாகிப் போய்விடும் என்று அர்த்தம்!” என்றவன், மறுபடியும் டீவி நோண்டலில் தீவிரமானான். 

தானாகச் சரியாகிப் போகுமா? எப்படி? 

அதை முகம் பார்த்துக் கூடச் சொல்லாமல், அப்படி என்ன அலட்சியம்? 

சினம், சீற்றமாக வளரும்போதே, சித்தரஞ்சன் இப்படி அலட்சியமாக இருந்ததே இல்லையே என்று, அவளுக்கு நினைவு வந்தது. 

வீட்டுக்கு வந்தாலே, எப்போதும் கொஞ்சலும், குலாவலும்தான்! டீவியில் நிகழ்ச்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பதைப் பார்த்தால், அதிலும் முழுக் கவனம் இருப்பதாகத் தெரியவில்லை! சும்மா, பேச்சில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக, வெறும் பாவனை! 

அப்படியென்றால், அவனுடைய அன்னை திலோவிடம் பேசியதை, அவனும் கேட்டே இருக்கிறான். அல்லது, மகனிடமும் மாமியார் இது பற்றிச் சொல்லியிருக்கலாம். 

இது பற்றி மனைவி பேச்செடுக்கக் கூடும் என்று எதிர்பார்த்துத் தவிர்க்கிறான்! 

வருங்காலம், அதில் பேர் சொல்ல ஒரு பிள்ளை என்பதெல்லாம் பற்றி, இதுவரை அவர்கள் இருவரும் பேசியதில்லை. பேச, அவன் இடம் கொடுத்ததும் இல்லை! 

“பிள்ளை வேண்டாம்” என்ற அவனது நிபந்தனையை ஒத்துக்கொண்டே மணந்ததால், கல்யாணம் ஆன பிறகும், அந்தப் பேச்சை எடுப்பதற்குத் திலோத்தமாவுக்கு வாய் வந்ததில்லை. 

கொடுத்த வாக்கை மீறுவது போன்ற தயக்கம்! 

அத்தோடு, ரஞ்சன் அவளிடம் அன்பும் ஆசையுமாகத்தானே இருந்தான்! 

அந்த ஆசை, நேசம் உணர்ந்ததாலேயே, அவனது பிள்ளை மறுப்புக்கு, அவளாக ஒரு காரணத்தை யோசித்து வைத்திருந்தாள். 

பிரசவம் என்றால் பெண்ணுக்கு மறுபிறவி என்று யாரோ சொல்ல, அவன் அதைக் கேட்டிருக்கலாம்., அவனுடைய நட்பில், உறவில் யாரோ விதிவசத்தால் அப்படி இறந்தும் போயிருக்கலாம்! அதனாலேயே குழந்தை வேண்டாம் என்று சித்தரஞ்சன் முடிவு செய்திருக்கக் கூடும் என்பது, திலோத்தமையின் ஊகம். 

இது ஓர் அசட்டு பயமே. பிள்ளை பெறுகிற பெண்கள் எல்லோரும் செத்துப் போனால், மக்கள் தொகை, இவ்வளவு வேகமாகப் பெருகுமா, என்ன? 

எப்படியும், பெரியவர்கள், உற்றவர்கள், இது பற்றிப் பேசாமலே இருந்துவிடப் போவதில்லை! இன்றைய மருத்துவத் துறையின் முன்னேற்றத்துக்குப் பிறகு, பிள்ளைப் பேற்றில் பயப்பட எதுவுமே கிடையாது என்று, கணவனுக்கு ஒருநாள் தெரியாமல் போகாது, அப்போது இந்தப் பிரச்சினையும் தானாகவே தீர்ந்துவிடும் என்று தனக்குள்ளேயே ஒரு நம்பிக்கையைத் திலோத்தமா வளர்த்தும் வைத்திருந்தாள். 

ஆனால், பிரச்சினையை சித்தரஞ்சன் எதிர்கொண்ட விதம் அவளை யோசிக்க வைத்தது. அவள் எண்ணியது போலக் கவலையோ, 

கலவரமோ அவனிடம் தெரியவில்லையே! தேவையற்ற பேச்சு என்பது போல ஓர் அலட்சியம்! தூசி, சருகைத் தட்டுவது போல அசட்டை ! அதெப்படி? 

வேறு என்னவோ என்று, திலோத்தமாவின் மனம் கலங்கியது. இதில் ஏதோ இருக்கிறதோ என்ற பழைய, முதல் உறுத்தல், மறுபடியும் மனதில் தோன்றியது. 

கணவன் மனைவிக்குள் என்ன ஒளிவு மறைவு? என்னவாக இருந்தாலும் சொல்ல வேண்டியதுதானே? அவனாகச் சொல்லாவிட்டாலும், விஷயம் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்! 

அவள் ஒன்றும் வாக்கு மீறி, குழந்தை வேண்டும் என்று கேட்கப் போவதில்லையே? இதில் மறைந்திருக்கும் பிரச்சினை என்ன என்றுதானே, கேட்கப் போகிறாள்! 

ஆனால், “ரஞ்சன், உங்களிடம் ஒன்று கேட்க…” என்று அவள் தொடங்கும்போதே, நெற்றியை அழுத்தியவாறு, சித்தரஞ்சன் அவள்புறம் திரும்பினான். 

“திலோ, தலை லேசாக வலிக்கிறது. கொஞ்சம் காபி கிடைக்குமா? உன் அம்மா போட்டுத் தந்தது போன்ற நல்ல காஃபி! சிரமம் இல்லையானால், நீயே போட்டுக் கொண்டு வருகிறாயா?” என்று நயந்து கேட்டான். 

திலோத்தமாவுக்கு மனம் உருகிப் போயிற்று! 

சே! தலைவலியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். அதைக்கூட, அவளிடம் காட்ட மனமின்றி, டீவியை நோண்டுவது போன்ற நடிப்புடன்! அவனைப் போய், என்னவெல்லாம் எண்ணிவிட்டாள்! 

“இதோ ரஞ்சன்!” என்று சமையலறையை நோக்கி ஓடிப் போனாள் அவள். 

விரைந்து சென்றவளைப் பார்த்தவாறு, அசையாமல் அமர்ந்திருந்தான் அவளுடைய கணவன்! 

யோசனையில் சுளித்திருந்த அவனது புருவங்களை, நல்ல நேரமோ, கெட்ட நேரமோ, அப்போதைக்கு அவள் அறியவில்லை! 

பானுமதி மகள் வீட்டுக்குச் சென்று பத்து நாட்கள் முடியுமுன், திலோவுக்கு வீடு போரடிக்கத் தொடங்கியது. போர் என்பதை விடவும், ஒரு திருப்தியற்ற மன நிலை! 

பானுமதி வீட்டில் இருக்கையில், ஆண்கள் அலுவலுக்குச் சென்றுவிட்டால், மாமியாரும் மருமகளுமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். பேசிக்கொண்டே தோட்டத்தில் உலவுவார்கள். இருவருக்கும் பரிமாறிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கடை கண்ணிக்குச் சென்று வருவார்கள். 

பானுமதியைப் பார்க்க வருகிறவர்களை, அவள் மருமகளுக்கு அறிமுகம் செய்து வைப்பாள். அவர்களோடும் கலகலப்பாகப் பேச்சு நடக்கும். 

சமையல் உள்பட வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் இருந்தபோதும், ஏதேனும் கைவேலைகள் செய்வார்கள். புது விதமான பதார்த்தம் எதையாவது, சேர்ந்து சமைப்பார்கள். சரியாக வந்தால் சந்தோஷம். வராவிட்டால், அதைப் பற்றிக் கொஞ்சம் கிண்டலடித்துக் 

கொள்வார்கள். மாலை, இரவில் வரும் மகன், தந்தையிடம் என்ன பதார்த்தம் என்று கண்டுபிடிக்கச் சொல்லி, அவர்கள் திணறுவதைப் பார்த்துச் சிரிப்பார்கள். 

இடையிலே கொஞ்ச நேரம் டீவியும் பார்ப்பார்கள். 

மாலையானால் சித்தரஞ்சன் வந்துவிட, நாள் முழுதுமே எப்படியோ பொழுது பறந்துவிடும். 

இப்படி மாயமாய் மறைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பேச்சுத் துணைக்கே ஆள் இல்லாமல், திலோத்தமா இப்போது, பொழுதைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டியிருந்தது. 

வேலையாட்களுடன் உட்கார்ந்து கதை பேசுவது சரியில்லை என்று பானுமதியின் வழி காட்டுதலால், திலோ தெளிவாக உணர்ந்திருந்தாள். மொட்டு மொட்டென்று தன்னந்தனியே உட்கார்ந்து நேரம் போக்க நேர்ந்ததால், மாலையில் கணவன் வரவுக்காக இரு மடங்கு ஆவலுடன் காத்திருக்கலானாள். 

மாமியார் பானுமதியிடம் பேசியது போல, தன் சின்ன வயது நிகழ்வுகள், படிப்பு, கருத்துக்கள் என்று மனதில் தோன்றிய அனைத்தையும், மாலை சித்தரஞ்சன் வரும்வரை அடக்கி வைத்திருந்துவிட்டு, அவனிடம் படபடவென்று பொழிந்து கொட்டுவாள். 

இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால், ரீங்காரமாய் ஒலித்த இந்தப் பேச்சை முழுதாகக் கேட்பதில், சித்தரஞ்சனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாதிருந்தது. 

அன்று இப்படித்தான். அம்மா வழிப் பாட்டிக்கு இப்போது கால் கொஞ்சம் இலகுவாக நடக்க முடிகிற அளவுக்குக் குணமாகி இருப்பதால், இன்னும் கொஞ்சம் நன்றாக ஆனதும், மகளுடைய 

மருமகனைப் பார்க்கச் சென்னைக்கு வரப் போவதாகக் கோவையிலிருந்து செய்தி வந்ததாகச் செந்திரு, மகளிடம் ஃபோனில் சொன்னாள். 

அதை மகிழ்ச்சியோடு திலோத்தமா கணவனிடம் சொல்லத் தொடங்கினால், அவன் நெற்றியை அழுத்திக்கொண்டு, காஃபி கேட்டான். 

திலோத்தமாவுக்கு ரொம்பவே ஏமாற்றம்தான். 

எப்போதுமே, இந்த பாட்டிக்கு அவ்வளவாக நடக்க முடியாத நிலைதான்.காலைச் ரொம்பவே சாய்த்துத்தான் நடக்க முடியும். மொத்தத்திலும், கொஞ்சம் பலவீனமான உடல் நிலைதான். ரோஷக்காரியான பாட்டி, அதனாலேயே வெளியே எங்கேயும் செல்வதே கிடையாது! யாரேனும் கேலி செய்வார்களோ?, அடுத்தவரிடம் உதவி கேட்க நேர்ந்துவிடுமோ என்று எண்ணி, வீட்டிலேயே முடங்கிவிட்டவள் அவள். 

அதிலும், வீட்டு மருமகன் மரியாதைக்குரிய உறவு என்பதோடு, செந்திருவுக்குத் திருமணமான புதிதில், பெரியவர்களிடையே சிறு மனக் கசப்பும் ஏற்பட்டுவிட்டதால், மகளுடைய கணவரின் முன்னிலையில் தன் குறையைக் காட்டிக்கொள்ள விருப்பமின்றி, மகளின் வீட்டுக்கே கூட, அவள் லேசில் சென்றது கிடையாது. 

தாயின் மனதை உணர்ந்து, செந்திருவின் ஏற்பாடாக, விடுமுறைக் காலங்களில், பேத்தியும், பேரனும்தான் பாட்டியைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார்கள். 

மணிகண்டன் கண்டுகொள்ளாத பாவனையில், அதற்கு மௌன அனுமதி கொடுப்பார். 

திலோத்தமாவின் திருமணத்தின்போது, செல்வநாயகிக்குக் காய்ச்சல் வேறு வந்துவிட, தாய்மாமா மட்டுமே மனைவியோடு, கல்யாணத்துக்கு வந்துவிட்டுப் போனான். 

அப்போதே, தாயாரின் காலுக்கு ஏதோ புது மருத்துவம் பார்க்க முடிவு செய்திருப்பதாக சுந்தர், தமக்கையிடம் சொன்னான்தான். ஆனால், இப்படிப் பல வகைகளில் முயன்று பார்த்துப் பலனில்லாமல் போயிருந்ததால், இதையும் செந்திரு பெரிதாக எண்ணவில்லை. அத்தோடு, பல் வேறு மருந்துகளின் பக்க விளைவுகளால், தாய் இன்னமும் சோர்வதாகத்தான் அவள் கருதினாள். 

எனவே, “புது மருத்துவம் என்று அம்மா உடம்பு இன்னமும் அதிகமாக நொந்துவிடாமல் பார்த்துக் கொள்ளடா.” என்று மட்டும் தம்பியிடம் சொன்னாள், அவள். 

திலோ, நரேனுக்கும் கூட, அதே எண்ணம்தான். 

ஆனால், பாட்டிக்குக் குணமாவதாகக் கிடைத்த தகவல், திலோத்தமைக்குக் குதூகலத்தை அளித்திருந்தது. 

இந்தச் செய்தி, கணவனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பது, அவளுக்கு நிச்சயம். அதனால் அவனோடு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆவலாகக் காத்திருந்தால், அவன் தலையை அல்லவா பிடித்துக் கொண்டிருக்கிறான்! 

அவன் வலியில் வருந்தும் இப்போது, அவள் எப்படி மகிழ்ச்சியைக் காட்டுவது? 

கணவனின் விருப்பம் போலக் காஃபியைக் கலந்து கொண்டுவந்து கொடுத்தபோதும், நினைத்தது போல, நல்ல விஷயத்தை உடனே சொல்ல முடியாது போனது, திலோத்தமாவுக்குக் குறையாகத்தான் இருந்தது! 

காஃபி அருந்திய பிறகும்கூட, அன்று முழுதுமே அவனது முகச் சுளிப்பு மாறாததால், அவளது நல்ல செய்தி, அன்றைக்கு, அவள் உள்ளேயே உறைந்து போயிற்று! 

அன்றைய மனச் சோர்வுக்கு ஈடு செய்கிறவனைப் போல, மறுநாள் சித்தரஞ்சன் மனைவியைக் கூட்டிப்போய், ரூபியில் ஒரு நகை செட் வாங்கிக் கொடுத்தான். 

அதற்கு முந்திய வாரம் வாங்கிய சேலைக்குப் பொருத்தமாக வாங்கியதாக, அவன் காரணம் சொல்லவும், திலோவுக்குக் குபீர்ச் சிரிப்பு வந்தது! 

குளிர் பானம் குடிப்பதற்காக “ஸ்டிரா” வாங்கிவிட்டு, அப்புறமாகக் குளிர்பானம் வைப்பதற்காக ஃப்ரிட்ஜ் வாங்கிய தோழியின் கதை பொருத்தமாக நினைவு வர, அதனால் பொங்கிய சிரிப்பு. விஷயத்தைச் சொல்லவும், ரஞ்சனும் கூடச் சேர்ந்து நகைத்தான். 

சிரித்தாலும், “நகைக்காகச் சேலையோ, அன்றி சேலைக்காக நகையோ, பெரிது சிறிது இரண்டையும் வாங்கப் பணம் இருக்கும்போது, எதை, எப்போது வாங்கினால் என்ன? விருப்பம் போலச் செலவு செய்வது குறித்து சந்தோஷப்பட வேண்டியதுதானே? ” என்றான் அவன். “சொல்லு. இன்று இந்த நகை வாங்கியது, உனக்கு சந்தோஷம்தானா, இல்லையா?” 

“சரிதான், சேலையும், நகையுமாகக் கணவர் வாங்கிக் கொடுத்தால், அது ஒரு தனி மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்? இல்லையென்று எப்படிச் சொல்வேன்?” என்று மந்தகாசப் புன்னகையோடு பதிலிறுத்தாள் மனைவி. 

“பரவாயில்லை! உண்மையை ஒத்துக் கொண்டாயே! அதுவே எனக்கும் மகிழ்ச்சிதான்!” என்றான் அவன். 

மகிழ்ச்சி என்றுதானே, சொன்னான்? ஆனாலும், சற்று முன் இருந்த குதூகலம் சற்றுக் குறைந்து விட்டாற்போல, திலோத்தமா உணர்ந்தாள். 

எதனால் இருக்கும்? 

யோசித்துப் பார்த்தும் புரியாமல் போகவே, வாயிலில் நின்ற ஒரு குழந்தையைப் பார்த்ததும் மனதில் ஏக்கம் தோன்றியிருக்கும் என்று எண்ணிக் கொண்டாள் திலோத்தமா. 

ஆனால், இதைக் கணவனிடம் சொல்ல முடியாதே! 

இன்னமும் சில பல நாட்களில், கணவனிடம் சொல்ல முடியாத விஷயங்களை விடவும், சொல்ல வாய்ப்பில்லாது போனவை வேகமாக அதிகரித்தன. 

காரணம் .. என்னவென்றே திலோவுக்குப் புரியவில்லை. அவர்களிடையே புகுந்த வீட்டு மனிதர்களின் தலையீடு கிடையாது. அந்த வகையில், அவள் ரொம்பவே கொடுத்து வைத்தவள்தான். 

இந்த நாட்டிலேயே இல்லாத நாத்தனார்! அவ்வப்போது பேசும்போதும், கணவன் மனைவிக்கிடையே இப்படி, அப்படி என்று கதை கட்டிக் குட்டை குழப்புகிற பழக்கம் அவளுக்குக் கிடையாது. மாமனார், மாமியாரைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்! அவளை இன்னொரு மகளாகவே நடத்தினார்கள். 

எனவே, அவர்களில் யாருமே திலோவுக்குப் பிரச்சினை ஆவதற்கு வழியில்லை. 

சித்தரஞ்சனும் மனைவியிடம் மிகுந்த அன்புள்ளவனே! 

பின்னே, அவனோடு விருப்பம் போலப் பேச முடியாமல் போவானேன்? 

பிரச்சினை என்றால், அது அப்படித்தான் என்று முயற்சியின்றி விட்டுவிடுகிற பழக்கம் திலோத்தமாவுக்குக் கிடையாது. 

அப்படி அவள் விட நேர்ந்தது, குழந்தை விஷயம் மட்டும்தான். பிள்ளைச் செல்வம் பற்றிய பேச்சு வார்த்தைக்கே ரஞ்சன் இடம் கொடுக்காவிட்டாலும், அதற்குமே திலோ தன்னளவில் யோசித்து, ஒரு விளக்கம் கண்டுதான் வைத்திருந்தாள். 

இப்போதும் அதே போல யோசித்தாள். 

சித்தரஞ்சனோடு மனம் கொண்ட மட்டும் பேச முடியாமல் போவது எப்படி? 

எந்தெந்த தருணங்களில், அவர்களது உரையாடல் தடைப்பட்டுப் போகிறது என்று ஆராய்ந்தபோது, மூன்று விடைகள் அவளுக்குக் கிடைத்தன. ஒன்று, ரஞ்சன் அடிக்கடி மும்முரமாக டீவி பார்த்தான்., அடுத்தது, அடிக்கடி செல்லில் பேசிக் கொண்டிருந்தான்., மூன்றாவதாக, அவனுக்கு அடிக்கடி தலைவலி வந்து காஃபி கலந்து வரச்சொல்லிக் குடித்தான்! 

ஆக, மூன்று விதமான தடைகளுமே, கணவன் சம்பந்தப் பட்டவைதான். அதாவது, அவனது செயல்களால் மட்டுமே நேர்ந்தவை! 

அப்படியானால்…ஒரு கணம் அவளுக்கு மூச்சடைத்துப் போயிற்று! 

தன்னோடு இலகுவாகக் கலந்து பேசக் கணவனுக்குப் பிரியமில்லையோ என்று நினைக்கக் கூடத் திலோத்தமாவால் முடியவில்லை! 

இல்லை., இல்லை., அப்படி இருக்கவே இருக்காது என்று தனக்குள்ளே உருப் போட்டவள், ஓடிப் போய் அலமாரியைத் திறந்து பார்த்தாள். 

எத்தனை நகைகள்! சேலை, சுடி, சல்வார் செட்டுகள் ! மற்றும் பல்வேறு பொருட்கள்! 

அவளுக்குப் பிடிக்கும்., அவளுக்கு நன்றாக இருக்கும் என்று பார்த்துப் பார்த்து வாங்கப் பட்டவை! அவளுக்குப் பொருத்தமற்று, வெறும் காசைக் காட்டுமாறு வாங்கப் பட்டவை, அவற்றுள் எதுவுமில்லை! 

அன்பில்லாதவன் இந்த அக்கறை காட்ட மாட்டான். 

மேலும், சித்தரஞ்சன் அவளோடு பேசி சிரிப்பதே இல்லை என்றும் சொல்ல முடியாதே! வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்டி, ஒருவர் காலை ஒருவர் வாரி, கடைசியில் அடக்க முடியாத சிரிப்பில் எத்தனை உரையாடல்கள் முடிந்திருக்கின்றன! அவனது ஆண்மை மிக்க கலகல நகைப்பை எத்தனை முறை கேட்டுத் தன்னை மறந்து ரசித்திருக்கிறாள்! மாலையானால், ஆவலாகத்தானே வருகிறான்? அணைக்கிறான்? பின்னே? வேறு என்ன? 

திலோத்தமா இன்னமும் ஆழமாக யோசித்தாள். 

ஒருவேளை, எல்லாமே தற்செயலாக இப்படி அமைந்தனவோ என்று எண்ணிப் பார்த்தவளுக்கு, அப்படியில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. 

பேச்சைத் தொடர முடியாதபடி, பல்வேறு தடைகளைச் சித்தரஞ்சன் ஏற்படுத்தவே செய்தான் என்பதே உண்மை என்று மனதுள் உறுதியானதும், எப்போதெல்லாம் அவன் அப்படிச் செய்தான் என்று யோசித்துப் பார்த்தாள். 

ஏதோ ஒன்று பிடிக்காமல் போனால்தானே, தடுக்கத் தோன்றும்? அது என்ன என்று தெளிவானதும், அதற்கான அவனது காரணத்தை அறிந்தாக வேண்டும் எனறே எண்ணத்துடன், அவனிடம் கடந்த காலப் பேச்சை எடுத்தாள். 

சித்தரஞ்சனின் கை நெற்றியில் பதியவும், “இந்தப் பேச்சை எடுத்தாலே தலைவலி, காஃபி என்று தொடங்குகிறீர்களே, ஏன்?” என்று அவனிடம் நேரடியாகக் கேட்டாள்! 

நெற்றியை வருடத் தொடங்கிய அவனது கை, அங்கிருந்து மெல்ல விலகி, மடியில் விழுந்தது. 

திரும்பி அவளை நேராகப் பார்த்துச் சொன்னான். “இன்னும் கொஞ்சம் நாளானால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நீ பெரிய கெட்டிக்காரியல்லவா? விரைவிலே கண்டுபிடித்துவிட்டாய்!” என்ற சித்தரஞ்சனது பதிலும், குரலும் அவளுள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தின! 

அத்தியாயம் – 6

திலோத்தமா அதிர்ந்து “அதிர்ந்து என்பது”, ரொம்பவும் எளிதான வார்த்தை! 

அதை விட, திலோத்தமா பிரமித்து நின்றாள் என்றால் பொருத்தமாக இருக்கும். 

இதுதான்., குறிப்பிட்ட இந்தக் காலக் கட்டத்தில் நடந்தவைகளைத்தான் கணவன் தவிர்க்க முயல்கிறான் என்ற சந்தேகம். 

கிட்டத்தட்ட உறுதிப்பட்ட சந்தேகம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. 

ஆனால், தவிர்க்கப்பட வேண்டிய பெரிய விஷயமாக எதுவும் நடந்திருந்ததாக அவளுக்கு தோன்றாததால், அது பற்றிய முழு உறுதியும் இல்லாதிருந்தது! 

எனவே, தன் கேள்வியைக் கணவன் மறுக்கக் கூடும் என்ற ஐயமும் அந்த ஐயத்தை அவளது ஆசை மனது விடாப்படியாகப் பற்றிக்கொண்டு இருந்தது எனலாம். 

அத்தோடு, அவன் ஆசைப்பட்டுத்தானே அவளை நாடி வந்து மணந்தான்? 

அப்புறமென்ன என்பதும்! 

ஆனால், அவளது குற்றச்சாட்டைப் பெயரளவாகக் கூட, ஒரு சிறு மறுப்புமின்றி, அவன் ஒத்துக் கொண்டதே, அவளுக்கு அதிர்ச்சிதான். 

அத்தோடின்றி, அவள் கெட்டிக்காரத்தனமாகக் கண்டுபிடித்ததாகப் பாராட்டிய விதமும், பயன்படுத்திய வார்த்தைகளும், குரலும், உண்மையில் அவளை இளக்காரம் அல்லவா செய்தன? 

ஒரு நேசக் கணவனாக இருந்துகொண்டு, இப்படி, எப்படிப் பேச முடியும்? அவன் நேசக் கணவனாக இருந்ததே இல்லை என்றல்லவா, சொல்லாமல் சொல்கிறான்! 

காதலிக்காமலே, காதல் செய்தானாமா? என்ன அநியாயம்? இதை, இப்படியே விட முடியாது! விடவும் கூடாது. 

ஒரு பெரிய மூச்சை எடுத்துக்கொண்டு, “புரியவில்லை, ரஞ்சன். என்றாள் அவள், கலக்கமும் திகைப்புமாக விரிந்த விழிகளுடன். 

“ஏனோ? ” என்று, லேசாகத் தோளைக் குலுக்கினான் அவன். 

இந்தப் பேச்சுக்குச் சித்தரஞ்சனும் தயாராகத்தான் இருந்தானோ? என்றோ ஒரு நாள் இது நடக்கும் என்று எதிர்பார்த்து .. 

ஆனால், என்ன பெரிய விஷயம் என்பது போன்ற அவனது அக்கறையற்ற போக்கு இன்னமும் மனதைக் கலக்க, “பழைய விஷயம்.. கோவை பற்றிய பேச்சை நீங்கள் ஏன் தவிர்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை, ரஞ்சன். ” என்றாள் கவலையோடு. 

“ஏன்? அது புரியாததால், இப்போது உனக்கு என்ன குறை?” நிச்சயமாக, இது உதாசீனம்தான்! இந்த உதாசீனம், அவளிடம் கூடாதே! 

நிமிர்ந்து, “குறையாக உணர்வதால்தானே, கேட்கிறேன்!” என்றாள் அவள் தெளிவாக. 

“இது கதை! நீ கனவிலும் நினைத்திருக்க முடியாத நகைகள், துணி மணிகள், வாழ்க்கை வசதிகள்! இதற்கு மேலும் குறையா?” 

“உண்மையாகவே, இவையெல்லாம் வேண்டும் என்று நான் கனவு கண்டதில்லைதான். அதனால், இவைகளுக்காக நான் ஏங்கியதும் இல்லை. ஆனால் .. 

“முழுப் பொய். இதையெல்லாம் நான் வாங்கித் தரும் சமயங்களில், நீ சந்தோஷத்தில் பூரித்துப் போகவில்லை? இல்லை என்று பொய் சொல்லாதே. அப்போதெல்லாம் உன் முகத்தைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.” என்றான் சித்தரஞ்சன். 

“கவனித்து’க் கொண்டிருந்தானா? காதல் கணவனாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் என்று அவள் நினைத்து மகிழும்போது, அவன் ஆராய்ச்சிக் கண்ணால் அலசிக் கொண்டிருந்தானாமே! 

“என்ன சொல்கிறீர்கள், ரஞ்சன்? கணவன் ஆசையாக ஒன்றை வாங்கிக் கொடுத்தால், ஒரு பெண்ணுக்கு சந்தோஷமாக இராதா? சிரிக்காமல், அழவா செய்வாள்? இதைப் போய்ப் பெரி 

அவளது பேச்சைக் கேளாததாய் ஒதுக்கி, “அதிலும், இப்படி விலை உயர்ந்தவைகளை வாங்கித் தரும்போது!” என்று அவன் அதிலேயே நின்றான். 

அன்புச் செய்கை என்று அவள் நினைத்தது தவறு என்று அவனே சொல்லும்போது, வேறு விளக்கம் என்ன இருக்கக் கூடும்? 

அவ்வப்போது மனதில் லேசாக உறுத்தி, பெரிதாக ஒன்றுமில்லை என்று அவளால் ஒதுக்கி, மறக்கப் பட்டவைதான் நிஜமா? 

எல்லாமே தலை கீழாகிறதே! இதை எப்படி ஏற்பது? 

தன்னை விளக்க முயன்றவளாக, “நீங்கள் கண்ணாடி வளையல்களை வாங்கித் தந்திருந்தாலும், அப்போதும் நான் சந்தோஷமாகத்தான் சிரித்திருப்பேன், ரஞ்சன். நீங்கள் எனக்காக யோசித்து, வாங்கித் தருகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். ” என்று எடுத்துச் சொன்னாள் திலோ. 

“சின்னத்திரையிலோ, சினிமாவிலோ கேட்டு ரசிக்க வேண்டிய வசனம். அதுவும் கூடக் கதாநாயகி சொல்ல வேண்டியது. நீ சொன்னால் எடுக்கவில்லை! ” என்றான் அவன், சிறு வெறுப்புடன். 

அவள் கதாநாயகி இல்லை என்றால், வில்லியா? 

“உங்களுக்கு என்னைத் தெரியவே இல்லையே, ரஞ்சன்…சொல்லப் போனால், நானும், உங்களை அறிந்துகொள்ளவில்லை என்றுதான், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ” என்றாள் அவள் வருத்தத்துடன். “அதனால் இப்போது என்ன கெட்டுவிட்டது? எனக்கு இந்த வாழ்வு சம்மதம்தான்.” 

“எனக்கு இல்லையே ரஞ்சன். மனதளவில் எங்கோ தூரத்தில் இருந்துகொண்டு, இது என்ன வாழ்வு? ஆனால், இப்படி எதற்காக? ஏன்?” என்று வேதனைக் குரலில் வினவினாள் திலோத்தமா. 

சட்டெனச் சித்தரஞ்சனின் முகம் சிவந்து, சீறியது. “ஏனா? ஏன் என்று உனக்குத் தெரியாது? நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். இரண்டுமே, அருவருப்பானதாகத்தான் இருக்குமாம்! நம்மது மட்டும் விதி விலக்காகுமா? இதுவும் அப்படித்தான்! அதனால், கிண்டிக் கிளறாமல் இருப்பது, எல்லோருக்கும் நல்லது! முக்கியமாக உனக்கு!” என்று வெறுப்பை உமிழ்ந்தான் சித்தரஞ்சன். 

“என்ன அருவருப்பு? எதற்காக?” என்று அவள் புரியாமலே கேட்கவும், அவன் கோபமே உருவானான். 

“என்ன திண்ணக்கம் இருந்தால், இப்படி என்னையே கேட்பாய்? உனக்கு அப்படியா, எல்லாம் மறந்துவிட்டது? .. ஓ. உன்னளவில் உப்புப் பெறாத விஷயம் என்று மறந்து போய் விட்டாய், போல! கஷ்டப் பட்டேனும், கொஞ்சம் நினைவுபடுத்திப் பாரம்மா!” என்றபோது, ரஞ்சனின் எகத்தாளத்தில் பழைய உதாசீனமும், ஆத்திரமும் வெளிப்பட்டன. 

நினைவு படுத்துவதா? 

என்றேனும், மறந்தால் அல்லவா, நினைவுபடுத்துவதற்கு? ஆனால், அவள் அறிந்தவரையில், இவன் இப்படி ஆத்திரப்பட அதில் எதுவும் இல்லையே! 

ஆயினும், ரஞ்சனின் குரலில் இருந்த எகத்தாளம் சினமூட்ட, “ஒரு வேளை, விஷயம் உப்புப் பெறாத அளவு அலட்சியப்படுத்தத் தக்கது என்பதாலேயே மறந்ததோ என்னவோ?” என்றாள் அவள் பதிலுக்கு. 

சித்தரஞ்சனின் கண்கள் கனன்றன. “ஓ, அவ்வளவு திமிரா? கொஞ்சம் மூளையைச் சிரமப்படுத்தி, யோசித்துப் பார், மறந்ததெல்லாம் கட்டாயம் நினைவு வரும். நினைவு வந்த பிறகும், உனக்குத் தேவை என்றால், பிறகு பேசலாம்!” என்று கடுப்புடன் கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறினான், அவன் . 

ஆண்கள் என்றால், இது ஒரு வசதி. பேசப் பிடிக்கவில்லை என்றால், செருப்பை மாட்டிக்கொண்டு, எந்த நேரமானாலும் வெளியே கிளம்பிவிடலாம் என்று, திலோத்தமா ஆத்திரத்துடன் நினைத்தாள். 

அவன் பக்கம் நியாயம் இருந்தது என்றால், பேசி, அதை நிலைநாட்ட வேண்டியதுதானே? 

கணவன் சென்ற வழியை முறைத்துப் பார்த்தவளுக்கு, அந்தக் கோபம் அதிக நேரம் நிலைக்கவில்லை. 

என்ன இது? ஏன் இப்படி என்று மனம் குழம்பித் தவித்தது. ஏனெனில், அவன் யோசித்துப் பார்க்கச் சொன்னானே, அவளைப் பொறுத்த வரையில், அவை மிக அழகானவையே. பலப்பல முறை, கனவிலும் நினைவிலுமாகக் கண்டு, கண்டு மகிழ்ந்தவை! 

அவளுடைய ரஞ்சனுக்கும், அவை அழகானவைகளாகவே இருந்திருக்கும் என்றுதான் அவள் அத்தனை நாட்கள் நினைத்திருந்தாள். அவனாக, அந்த நாட்களின் பேச்சை எடுப்பான் என்றுகூட எதிர்பார்ப்புதான். 

இன்றைய ஆசை வேகங்கள் சற்று அடங்கிய பிறகு, அமைதியாக உட்கார்ந்து, பழங்கதை பேசுகிற காலத்துக்காக ஒதுக்கி வைத்திருக்கிறானோ என்றுகூட, அவள் எண்ணியதுண்டு. 

அப்போது, அவளது ஒரு சில வார்த்தைகளுக்காக நன்றி தெரிவிப்பான் என்றும் கூட! ஆனால், அவனானால் 

நன்றி தெரிவிப்பது இருக்கட்டும்., அவளை வார்த்தைகளால் குத்திக் குதற அல்லவா துடிக்கிறான்! என்ன கொதிப்பு! என்ன கோபம்! 

எங்கே தப்பாகிப் போயிற்று? அவன் எதைத் தப்பாக எடுத்துக் கொள்ள முடியும்? 

கணவன் சொன்னது போல, பழைய கதையை யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை திலோவுக்கு விடை கிடைக்குமோ? 

ஆனால், சித்தரஞ்சன் இவ்வளவு ஆத்திரப் படும்படியான எதை, அவள் மறந்திருக்கக் கூடும்? 

ஏனெனில், அவனது ஆத்திரம் நடிப்பல்ல. நிஜம்! 

அவனது குழந்தை மறுப்புகூட, இந்த ஆத்திரத்தினால் வந்ததோ என்று ஓர் எண்ணம் தோன்றவும், தீப் பற்றினால் போல், அவளது அடிவயிறு சட்டெனக் காந்தியது! 

இல்லை. இதை முழுதாகச் சிந்தித்துப் பார்த்தே ஆக வேண்டும்! 

எங்கே, யார் மேல் தப்பு என்று கண்டுபிடித்து, பிரச்சினையைத் தீர்த்தே ஆக வேண்டும்! உடனே! 

திலோத்தமா பழசை எண்ணிப் பார்க்கத் தொடங்கியபோது, அடிக்கடி நினைத்துப் பார்த்த பழக்கத்தினாலோ என்னவோ, யோசிக்கும் முயற்சிக்கே அவசியமே இல்லாமல், அந்த நாளைய சம்பவங்கள் திலோவின் மனத்திரையில் ஒரு படச் சுருள் போலத் தடையின்றி ஓடலாயின! 

எப்போதுமே, முழுப் பரீட்சை முடிந்தபின், திலோத்தமாவும் நரேந்திரனும், கோவைக்குப் பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம்தான். விடுமுறை முழுவதும் அங்கே இருக்க மாட்டார்கள். ஆனால், குறைந்தது இரு வாரங்கள். 

திலோத்தமா கல்லூரியை எட்டி, நரேன் பள்ளியில் இருக்கையில், இருவரும் ஒன்றாகப் போவது நின்றது. ஆனால், எப்படியும் ஒரு பதினைந்து, இருபது நாட்கள் கோவை வாசம், இருவருக்கும் நிச்சயம். அத்தையும் அன்பாகவே இருந்ததால், இந்தப் பழக்கம், தடையின்றித் தொடர்ந்தது. 

ஆனால், அவளது கல்லூரிப் படிப்பு முடிந்த அந்தத் தருணத்தில் மட்டும்தான், திலோ, தன் தாய் வழிப் பாட்டி வீட்டில், அதாவது தாய் மாமன் வீட்டில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து தங்கியது! 

அந்த மறக்க முடியாத இரு மாதங்களில்தான், அவள் ரஞ்சனைச் சந்தித்ததும் பழகியதும்! 

அந்த முறை, அவள் இரண்டு மாதங்கள் அங்கே தங்குவதற்கு ஒரு காரணம் இருந்தது. 

மாமா சுந்தர் பணிபுரிந்த நிறுவனத்தில், இரண்டு மாதங்களில் ஒரு “ப்ராஜெக்டை ” முடித்து வருமாறு, அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இருந்தது. குடும்பத்துடன். 

வேலைக்காரியைக் கூடவே வைத்துக்கொண்டு, சமாளித்துக் கொள்வதாகத் தாயார் எவ்வளவு சொல்லியும், அன்னையைத் தனியே விட்டுச் செல்ல, அவனுக்கு மனமில்லை! அதே சமயம், வெகு அபூர்வமாக, கைச்செலவற்றுக் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பைக் வேண்டாம் என்று கைநழுவ விட்டுவிட்டு, வீட்டில் இரு என்று மனைவியிடம் சொல்லவும், அவனுக்கு வாய் வரவில்லை! அவளும் மாமியாருக்குப் பணி புரிவதில், அன்றுவரை, ஒரு குறை வைத்தவள் அல்ல. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், மனைவிக்கு ஆசை என்பது, சுந்தருக்கு நன்றாகவே தெரிந்தது! எல்லாவற்றையும் தமக்கையிடம் அவன் சொல்லிப் புலம்பியபோது, தேவைப்பட்ட உதவி, தமக்கை வீட்டில் இருந்து வரும் என்று, சுந்தர் சற்றும் எதிர்பார்க்கவில்லை! 

ஆனால், அதுதான் நடந்தது. 

படிப்பு முடியு முன்பாகவே, “காம்பஸ் செலஷனி”ல் ஒரு பெரிய நிறுவனத்தில், திலோத்தமாவுக்கு வேலை கிடைத்திருந்தது. தேர்வு முடிவு வந்த பிறகு, வேலையில் சேர்வதற்கு அவகாசமும் கொடுத்திருந்தார்கள். 

அந்தக் காலத்தைப் பயன்படுத்தித் தன் தாய் மாமன் குடும்பத்துக்கு உதவத் திலோத்தமா முன்வந்தாள். 

குடும்பத்துடன் வெளிநாடு சென்று வரும்வரை, பாட்டிக்குத் துணையாகக் கோவையிலேயே தங்கியிருப்பதாக அவள் கூறவே, பிரச்சினையற்று, சுந்தர் குடும்பம் கிளம்பிச் சென்றது. 

அப்போதும், வீட்டோடு ஒரு வேலைக்காரி, தினமும் இருமுறை வந்து தாயின் உடல் நலம் பேணுவதற்கு நர்ஸ் என்று, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத்தான், சுந்தர் நாடுவிட்டுக் கிளம்பினான். 

அப்படிப் பாட்டியோடு தங்கியிருந்த காலத்தில்தான், திலோத்தமா, சித்தரஞ்சனைச் சந்தித்தது. 

ஆனால், அப்போது அவனது முழுப் பெயர் சித்தரஞ்சன் என்று அவளுக்குத் தெரியாது! ரஞ்சன் என்று, அவன் சொன்னபோது, அந்தப் பெயரே அவளது நெஞ்சிலும் குடியேறியது. 

என்ன அழகான, பொருத்தமான பெயர் என்று உள்ளூர ஆச்சரியப்பட்டாள்! 

மாமாவையும், அத்தையையும் விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்து, அப்போது மூன்று தினங்கள் முடிந்திருந்தன. 

வெளியே காட்டிக் கொள்ளாதிருக்க முயன்றாலும், மகனின் பிரிவு, பாட்டியை வாட்டி வதைப்பது, திலோவுக்கு நன்றாகவே புரிந்தது! சோர்ந்து கிடந்தவளுக்குச் சாப்பாடெல்லாம் தன் கையினாலேயே ஊட்டிவிட்டு, முகம் கழுவித் துடைத்து, சாய்ந்தாற் போல உட்கார வைத்துவிட்டு, பாட்டிக்கு என்று வாசகசாலையிலிருந்து எடுத்து வந்திருந்த சில புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டுத் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். 

சற்றுப் பொறுத்துப் பார்த்தால், சாய்வு நாற்காலியிலேயே பாட்டி தூங்கிப் போயிருந்தாள். 

பாட்டி இரவில் சரியாகத் தூங்கவில்லை என்று தெரிந்திருந்ததால், இப்போது அதை ஈடு கட்டட்டும் என்பது, திலோத்தமாவுக்கு. 

பாட்டியின் கையில் இருந்த புத்தகத்தை மெல்ல விலக்கி, பக்கம் குறித்து மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தால், வாயில் அழைப்பு மணி அடித்தது! 

அச்சோ! பாட்டி விழித்துவிடக் கூடாதே என்று, மீண்டும் மணியை அழுத்தி விடுமுன், ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்,திலோ. 

அப்போதுதான், திலோத்தமா முதன் முதலாக, ரஞ்சனைப் பார்த்தது! 

அவள் அஞ்சியது போலவே மீண்டும் அழைப்பு மணியை அழுத்த உயர்ந்த கை அப்படியே நிற்க, வியந்த பார்வையுடன் வெளியே நின்றுகொண்டிருந்தான் அவன்! 

மணியை அழுத்தி அழைத்துவிட்டு, மணிச் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தால், அதிலென்ன ஆச்சரியம் என்று திலோ எண்ணி முடிக்கு முன், அவன் வேகமாகப் பேசினான். 

“என்ன மேடம், இப்படி டக்கென்று கதவைத் திறந்துவிட்டீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அவன். 

மறை கழன்றிருக்குமோ என்பது போல அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, “திறக்கச் சொல்லித்தானே, அழைப்பு மணியை அழுத்தினீர்கள்? அப்புறம், அதிலென்ன கேள்வி?” என்று வினவினாள் அவள். 

“அதில்லை மேடம்., அழைப்பது யார், என்ன என்று தெரிந்து கொள்ளாமலே, கதவைத் திறந்து விட்டீர்களே! அதைச் சொன்னேன்.” என்றான் அவன் மீண்டும். 

என்னடா இது, இவன் சொன்னதையே சொல்லிக்கொண்டு என்று உள்ளூர அலுத்தபடி, “தெரிந்து கொள்வதற்காகத்தானே, கதவைத் திறப்பது?” என்றாள் அவள் நிதானமாக. 

இது கூடத் தெரியவில்லையே என்கிற நிதானம்! 

“அதில்லை மேடம். வெளியே நிற்பது யார் என்று தெரியாமலே கதவைத் திறந்து விட்டீர்களே ….” என்றான் அவன் மறுபடியும். 

ஆனால், எரிச்சலுற்று அவள் பேச வாய் திறக்குமுன், “காலம் கெட்டுக் கிடக்கிறது, மேடம்! கதவுக்கு இந்தப் பக்கம் நிற்பது திருடனாக, கொள்ளையனாக.. கொலைகாரனாகக் கூட இருக்கலாம். நீங்கள் இப்படி ஒரு மணியடிப்புக்கொல்லாம் கதவைத் திறந்தீர்கள் என்றால், இது போலக் குற்றங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல ஆகாதா?” என்று தொடர்ந்து பேசினான் அவன். 

மேடையும் ஒலி பெருக்கியும் கிடைத்தால், நாள் முழுக்கப் பேசுவான் போல இருக்கிறதே என்று எண்ணினாலும், அவன் கூறியது மெய்தானே என்று தோன்றிவிட, “அதுவும் சரிதான். “ என்றவாறு சட்டெனக் கதவை மூடினாள். 

“ஐயோ மேடம், நான் அப்படியில்லை. கொஞ்சம் கதவைத் திறவுங்கள்!” என்று மறுபடியும் மணியை அடித்தான் அவன். 

எரிச்சலுடன் கதவைத் திறந்து, “பாட்டி தூங்குகிறார்கள் மணியை அடித்து அவர்களை எழுப்பி விட வேண்டாம்.” என்றாள் அவள். 

“பார்த்தீர்களா? இருக்கும் ஒரே பாட்டியும், அதாவது பெரிதாகத் துணை என்று உதவிக்கு வர முடியாத வயதில், கூட இருப்பவரும் தூங்குவதாக, அந்த விவரத்தையும் சொல்லி விட்டீர்களே!” 

விட்டால், விரட்டிக்கொண்டே இருப்பான் போல? 

“பாட்டி மட்டும்தான் துணை என்று, உங்களுக்கு யார் சொன்னது?” என்று மிடுக்குடன் கேட்டாள் திலோ. 

ஆனால், கேட்கும்போதே, சட்டெனப் பின்வாங்கிக் கதவை ச் சாத்துவதற்கு வசதியாக, ஓரடி பின்னேயும் எடுத்து வைத்தாள். 

அவள் சந்தேகமாகப் பின் வாங்கவும், இரண்டடி பின்னே போய், கைகளை உயரே தூக்கி நின்றான் அவன். “பாருங்கள்., நான் இவ்வளவு தூரம் தள்ளி நின்றுதான் பேசுகிறேன். அதனால், நீங்கள் தைரியமாக அங்கே நின்று, என் பேச்சைக் கேட்கலாம். சரிதானா? இப்போது நாம் பேசிய விஷயத்துக்கு வருவோம். உங்கள் வீட்டில், நீங்களும் வயதான ஒரு பாட்டியும் மட்டும்தான் இப்போது இருக்கிறீர்கள் என்பது, எனக்கு நிச்சயம்!.. சற்றுப் பொறுங்கள். இந்த முடிவுக்கு எப்படி வந்தேன் என்றும் சொல்லி விடுகிறேன். நான் சொல்லி முடித்து விடுகிறேன். உள்ளே வேறு யாரும் இருந்திருந்தால், இரண்டு அழைப்பு மணிச் சத்தத்துக்கு மட்டுமின்றி, யார் என்று பார்க்கப் போன உங்களை இன்னமும் காணோமே, என்ன விஷயமோ என்று வந்து, எட்டிப் பார்த்திருப்பார்கள் இல்லையா? வேலைக்காரி மாதிரி ஒருத்தி இந்த வீட்டில் இருந்து போனதைச் சற்று முன் பார்த்தேன்…” 

“ஓ..” என்று, திலோ சற்றுத் திகைத்தாள். 

அவன் சொன்னது எல்லாமே சரிதானே? நிறையப் பேர், திருடர்களிடம் மாட்டுவது, இப்படித்தான் போலும்! இவன் நல்லவனாக இருக்கப் போய்… 

ஆனால், அதுவும்தான் என்ன நிச்சயம்? 

திகைப்பைக் காட்டிக் கொள்ளாமல், எச்சரிக்கையுடனேயே நின்று, “இந்தப் பகுதி பாதுகாப்பானது என்று சொல்வார்கள். சட்டென்று, அப்படி அன்னியர் யாரும் உள்ளே வந்துவிட முடியாது என்று மாமா சொல்லுவார்.” என்று ஒரு விளக்கம் சொல்ல முயன்றாள் அவள். 

அன்றைக்கே, சித்தரஞ்சன் தன்னைத் தவறாக..அசட்டு ஏமாளியாகக் கூட எண்ணி விடக் கூடாது என்ற அக்கறை அவளுக்கு இருந்திருக்கும் போலும்! மற்றபடி, அவசரமாகக் கதவை மூடிக்கொண்டு பாதுகாப்பாக உள்ளே போய்விடாமல், அங்கேயே நின்று, அன்னியனான அவனிடம் பேச்சுக் கொடுப்பாளா? 

என்னதான் எச்சரிக்கையுடனேயே நின்றாலும்? 

“என்னங்க பெரிய பாதுகாப்பு? இதோ நான் உள்ளே வரவில்லை? இதுபோல இன்னொருவர் வர எவ்வளவு நேரமாகும்?” 

இதற்கு மேல் இங்கே நிற்பது நிச்சயமாகத் தப்பு! இவனே எப்படி என்று யாருக்குத் தெரியும்? 

மனம் நினைத்ததை, அவளது கண் சொன்னதோ? 

“நான் இவ்வளவு தூரம் தள்ளித்தானே, நிற்கிறேன்? இவ்வளவு நேரம் பொறுத்தீர்கள். இப்போது, சற்றுக் காது கொடுத்து, நான் இனிமேல் சொல்லப் போவதையும் கேட்டுவிட்டுப் போங்கள். பாருங்கள், வந்திருப்பது யார் என்று அறிவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து, ஆபத்திலும் மாட்டிக்கொள்ளவும் வேண்டாம்., யார் என்று பார்க்க முடியாததாலேயே, முக்கியமான யாரையும் கதவைத் திறக்காமல் விரட்டி விடவும் வேண்டாம். உங்களுக்குத் தேவை, எங்கள் “கனவு இல்லம்” நிறுவனத்தின் சில பாதுகாப்புக் கருவிகள் மட்டுமே! அவை என்னென்ன, என்னென்ன வகையில் பாதுகாப்புத் தருகின்றன என்பது பற்றிக் கூறவே, இப்போது நான் வந்திருக்கிறேன்! “ என்று, தன் விற்பனைப் பேச்சைத் தொடங்கினான் சித்தரஞ்சன். 

“கனவு இல்லம்” கட்டிட நிறுவனம் பற்றி, முதல் முதலாக அறிந்தது, அப்போதுதான்! 

கதவைத் திறக்காமல் உள்ளிருந்தபடியே வெளியே நிற்பவரைப் பார்க்க வசதியாகக் கதவில் பதிக்கப்படும் லென்சைப் பற்றி, அவன் பாதி சொல்லும்போதே, “திலோம்மா …” என்று பாட்டியின் குரல் கேட்டது. 

“சாரி. பாட்டி கூப்பிடுகிறார்கள். உங்கள் பொருட்களைப் பற்றி, இன்னொரு நாள் கேட்டுக் கொள்கிறேனே .. ” என்றவாறே கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றாள் திலோத்தமா. 

பாதி பேசுகையில், இப்படிக் கதவைச் சாத்திக்கொண்டு போவது மரியாதை இல்லைதான். ஆனால், அன்னியனான அவனை உள்ளே கூப்பிடுவதோ, கதவைத் திறந்தே வைத்துவிட்டுப் போவதோ, பெரிய தவறாகிவிடக் கூடும் அல்லவா? 

தப்போ இல்லையோ, அப்படித்தான் என்று, அவன் சொல்லிக் காட்ட மாட்டானா? 

சொல்லிக் காட்டுவான்தானே? அப்படிப் பட்டவன்தான்! 

அவனைப் பற்றிய நினைவிலேயே, அன்றைய இரவைக் கழித்தாள் திலோத்தமா!

– தொடரும்…

– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *