காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 2,490 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

இன்னொரு நாள் என்று திலோத்தமா சொன்னது, முகத்தை முறிக்காமல் அவனைப் போக வைப்பதற்காகத்தான். ஆனால், அவன் “குறிப்பறிய மாட்டாத நன் மரமாக” மறுநாளே வந்து நிற்பான் என்று, அவளுக்குத் தெரியாது. 

அல்லது, செய்யும் தொழிலைத் தெய்வம் எனக் கருதுகிறவனாகவும் இருக்கலாம். 

அல்லது … நினைக்கும்போதே சற்று வருத்தமாக இருந்தபோதும், இன்னோர் எண்ணமம் அவளுக்குத் தோன்றியது.ஒரு வேளை, இந்த விற்பனையில் கிடைக்கும் “கமிஷன்” பணம், அவனுக்கு மிகவும் தேவையாகவும் இருக்கலாம். 

மறுநாள் டாண் என்று அதே நேரத்துக்கு வந்து நின்றவனைப் பார்க்கையில் திலோத்தமாவுக்கு, இப்படியெல்லாம் தோன்றவும், அவனது தோற்றத்தைக் கண்களால் ஆராய்ந்தாள் அவள். 

அவனது உடை ஒன்றும் மட்டமாக இருக்கவில்லை! காலில் கிடந்த ஷூ கூட, சற்று விலை உயர்ந்ததுதான். 

நல்லவேளை! இவன் ஒன்றும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த வேலையைச் செய்யவில்லை! 

அப்பாடி என்று நிம்மதியுற்றவளாக, அவனது பேச்சைக் கவனித்தாள் திலோ. 

“உங்களைப் போலத் தனியாக, அதாவது வயது முதிர்ந்தவர்களோடு துணையாக இருப்பவர்களுக்கு இன்னும் சிறப்பான பாதுகாப்புக் கருவிகள் கூட வைத்திருக்கிறோம், மேடம்! வாயிலில் நிற்பவரை, உள்ளிருந்தபடியே, திரையில் பார்க்கும்படியான காமிரா இருக்கிறது. அதன் லென்சை. இங்கே மறைவாகப் பொருத்திவிட்டால், யார் என்ன என்று உள்ளிருந்தே கண்டுகொள்ளலாம். ஒரு ஃபோன் தொடர்பும் வைத்துவிட்டால், உள்ளே பாதுகாப்பாக இருந்தபடியே, வெளியே இருப்பவரிடம் பேசிப் போகச் சொல்லிவிடலாம். இவைகளால், உங்களுக்கு அதிகச் செலவு ஒன்றும் ஆகாது. அதிலும், விலை மதிப்பற்ற உயிர், மற்றும் விலை உயர்ந்த பொருட்களுக்கான உறுதியான பாதுகாப்பு என்று எண்ணிப் பார்த்து, இந்தக் கருவிகளை வாங்குங்கள், மேடம்!” என்று முடித்தான் அவன். 

“சாரி.” என்றாள் திலோத்தமா. “உங்களிடம் பேசியதில், எனக்கு நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், என் லாபத்துக்காக, உங்கள் நேரத்தை ரொம்பவே வீணடித்துவிட்டேன். ஏஏனென்றால், இது மாமா வீடு. இது போன்ற முடிவுகள் எல்லாம், அவர்தான் எடுக்க முடியும்.” என்று சிறு வருத்தத்துடனேயே விளக்கினாள் திலோ. 

“அவரை வரச் சொல்லுங்ள் அவரிடமும் சொல்கிறேன்.” 

“அவர் …” என்று தொடங்கிவிட்டு, நாவை அடக்கி, “அவரிடம் இப்போது பேச முடியாதே!” என்றாள் அவள். 

“நாளைக்கு? நாளனன்று ..?”

கண்கள் பளிச்சிட, “ஆகா! மாமா எப்போது திரும்பி வருவார் என்று உங்களிடம் சொல்வேன் என்று எண்ணமா?” என்று கிண்டலாகக் கேட்டாள் அவள். 

ஆனால், “பார்த்தீர்களா? உங்கள் மாமா ஊரிலேயே இல்லை என்று தெளிவாகச் சொல்லி விட்டீர்களே!” என்று சிரித்தான் அவன். 

ஒரு கணம் அசடு வழிந்தபோதும், கூடச் சேர்ந்து சிரிக்கத்தான் அவளுக்குத் தோன்றியது! 

சிரித்து முடித்த பிறகு, “வீட்டுத் தலைவரான ஆண் ஊரில் இல்லை என்று, வெளி ஆட்களிடம் சொல்லக் கூடாது, தெரியுமா? ஆனால், எங்கள் “கனவு இல்லத்”தின்பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்துகிறவர்கள், இது போல எந்தக் கவலையுமே, படத் தேவையிராது!” என்றான் அவன் காரியத்திலேயே கண்ணாக. அவனது தொழில் ஆர்வம் கூட, அவளுக்கு ரசிக்கத் தக்கதாகத்தான் தோன்றியது. ஆனாலும், இவன், இன்னும் உயர் நிலையில், சற்றுப் பெரிய அளவில் எதையாவது செய்துகொண்டு இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஓர் எண்ணமும் ஏனோ ஏற்பட்டது. 

காட்டிக் கொள்ளாமல், “நான்தான் சொன்னேனே, முடிவு செய்யக் கூடிய நிலையில் நான் இல்லை என்று. இங்கே என்னிடம் எடுத்துச் சொல்லி நேரத்தை வீணாக்குவதை விட, இன்னும் நாலு இடங்களுக்குப் போனால், உங்களுக்குத் தொழிலாவது, நன்றாக நடக்கக் கூடும்!” “ என்றாள் அவள். 

கண்களில் விரிய ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, மெல்லத் தலையசைத்தான் அவன். “ஆமாம்! சொன்னீர்கள்தான். சரியாகவேயும்! இப்போது நான் கிளம்புகிறேன். உங்கள் மாமா வந்ததும், எனக்குத் தகவல் தெரிவியுங்கள். இந்தப் பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தால், நானே வந்து, அவரிடம் என் பருப்பு வேகிறதா என்று பார்க்கிறேன்! அவருக்குக் கொஞ்சம் ஆர்வம் இருந்தாலும் போதும்..” என்று முறுவலோடு கூறிவிட்டுக் குனிந்து கைப்பையைத் தூக்கினான் அவன். 

சட்டெனப் பொங்கிச் சிரித்தாள் திலோத்தமா. 

பையைத் தூக்காமலே விட்டுவிட்டு, நிமிர்ந்து, அவளை வியப்புடன் பார்த்தான் அவன். “என்ன அப்படியோர் ஆனந்தச் சிரிப்பு?” என்று, ஆவலாக வினவினான். 

பூஞ்சிட்டாய்த் தலையைச் சரித்து, அவனைப் பார்த்தாள் திலோ. “பெரிய புத்திசாலி! பெயரும் சொல்லவில்லை. ஃபோன் எண், முகவரி எதுவும் தரவில்லை! உங்களுக்கு எப்படித் தகவல் தெரிவிப்பதாம்?’ என்றாள் முகத்தில் இன்னமும் புன்னகை விகசிக்க! 

இப்போது அசடு வழிந்தவாறு சிரித்தது, அவன். 

அந்த வழிசலோடேயே, “ஆமாம், என் விவரம் ஒன்றுமே தெரியாதில்லையா?” என்று, “பான்டி”ன் பின்புறப் பையில் இருந்து ஒரு கார்டை எடுத்தவாறே கேட்டான். “ஆனாலும், சொர்க்கமே கிட்டிவிட்ட மாதிரி, அப்படி என்ன சிரிப்பு?’ 

“பின்னே? எத்தனை குட்டுப் படுவது? திருப்பிக் குட்டுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் மகிழ் . .ச்ச்சியாக இராதா?” 

புன்னகை விரிய, “ஓஹோஹோ! அப்படி வந்த சிரிப்பா? நியாயமான சிரிப்புதான்! வாங்கிக் கொள்ளுங்கள்!” என்றவாறு கார்டை எடுத்து நீட்டினான் அவன் 

அவன் கண்ணில் ஏதோ கண்டு, “தனியாக இருக்கும்போது, ஓர் அன்னியர் கை நீட்டித் தந்தால், நானும் கையில் வாங்குவேனா? என்னென்ன போர்க் கலைகளில் நீங்கள் வல்லவரோ? ஆபத்தில்லை? அங்கே வைத்துவிட்டுப் போங்கள். அப்புறமாக எடுத்துக் கொள்கிறேன்.” என்றாள் அவள். 

புன்னகை விரிய, கார்டைக் கீழே வைத்துவிட்டுப் பையை எடுத்துக்கொண்டான் அவன். “நூறு மதிப்பெண்! தேறி விட்டீர்கள். கவலையே வேண்டாம். இனி யாராலும் குட்ட முடியாது! பாராட்டுகள்! வரட்டுமா? கார்டை எடுத்துக்கொள்ள மறந்துவிட வேண்டாம்.” என்றுவிட்டுத் தன் வழியே போனான் அவன். 

ரஞ்சன்! 

அவசரமாக அவள் எடுத்துப் பார்த்த கார்டில், அவன் பெயர் அப்படித்தான் எழுதியிருந்தது! 

எஸ். எஸ் ரஞ்சன் என்ற பெயருக்குப் பக்கத்தில், படிப்புக்கான எந்தப் பட்டத்தையும் காணோம். பாவம். அதிகம் படிக்கவில்லை போலும்! 

அதனால்தான், வீடு வீடாகச் சென்று, இந்த விற்பனையில் ஈடுபட்டிருக்கிறான். 

ஆனால், நிறைய விற்கிற பெரிய நிறுவனப் பொருள் எதையாவது விற்றால், அவனுக்கு நிறையப் பணம் கிடைக்குமே என்றிருந்தது திலோத்தமாவுக்கு. 

மறுநாள் ரஞ்சனின் வருகை, வெகு இயல்பாக இருந்தது. 

அவன் வராதிருக்கக் கூடும் என்ற எண்ணமே அவளுக்கு இல்லை! அவனும், வரவேற்பை எதிர்பார்த்தவன் போல, அழைப்பு மணியை அழுத்திவிட்டுப் புன்னகையோடு நின்றான். 

கதவை விரியத் திறந்து, “உள்ளே வாருங்கள்.” என்று அழைத்தாள் திலோத்தமா. 

ஒற்றை விரலால் பத்திரம் காட்டிவிட்டு, “தாராளமாக உள்ளே அழைக்கிறீர்கள்! நான் எப்படி ஆள் என்று, இன்னமும்தான் உன. .உங்களுக்கு என்ன தெரியும்?” என்று குரலில் சிறு கண்டிப்புடன் கேட்டான் ரஞ்சன். 

“வேலைக்காரி வீட்டில் இருக்கிறாள். பாட்டி விழித்திருக்கிறார்கள். இவை மட்டுமின்றி, நீங்களும் நல்லவரே! ” என்று, திடமான குரலில் அழுத்தமாக உரைத்தாள், திலோ. 

“நல்லவனா? அதாவது, ராமன்? ” 

புருவம் உயர்த்தி, கீழ்க் கண்ணால் அவளைப் பார்த்தான் ரஞ்சன். “இந்த வினாடியில், என் மனதில் என்ன ஓடுகிறது என்று உனக்கு என்ன தெரியும்?” 

விழியகல, அவனை நேராகப் பார்த்தாள் திலோத்தமா. 

கன்னங்களில் வெம்மை பரவுவதைக் கட்டுப்படுத்த முயன்றபடி, “ராவண புத்தியே இருந்தாலும், வளர்ந்து வரும் நாகரீகம், சமுதாயச் சட்ட திட்டங்களை மதித்து, ராமனாகத்தான் நடந்து கொள்வீர்கள் என்பது, எனக்கு நிச்சயம்! 

“ராமனா? ஆனாலும், இப்படியா கையைக் கட்டிப் போடுவார்கள்? ரொம்பவே அநியாயம்ப்பா!” என்று அவன் முணுமுணுத்தது, திலோவின் காதுகளில் நன்றாகவே விழுந்தபோதும், கேளாத மாதிரியே பாவித்து நடந்தாள் 

உள்ளூரச் சிரித்தபடி. 

ஹாலில் பாட்டி சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். திலோத்தமா அறிமுகம் செய்து வைத்தபோது, “அப்படியா?” என்று தலையை ஆட்டி, “எந்த ஊர்?” என்று கேட்டாள். 

“எந்த ஊர் என்றால், என்ன பாட்டிம்மா? பிழைக்க வந்த ஊர்தானே, பிறகு சொந்தமாகிப் போகிறது? அப்படிப் பார்த்தால், இப்போது, இந்தக் கோயம்புத்தூர்தான், என் சொந்த ஊர்!” என்றான் ரஞ்சன் . 

அவனது பதிலை உள்வாங்கப் பாட்டிக்குச் சற்று நேரமாயிற்று போலும். 

சிறு இடை வெளிக்குப் பின், “ஆனாலும், சொந்த ஊர் என்று இருக்கும்தானே? தந்தை, பாட்டன் பிறந்த ஊர் என்று …” என்று கேட்ட பாட்டி, அவனிடம் கேட்டதையே மறந்து, தன் ஊர், கணவர் ஊர் என்று யோசித்து, யோசித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். 

வேலைக்காரி பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். 

ரஞ்சன் அதைக் குடிக்கும்போதே, பாட்டி சோர்வது தெரிந்தது. ரஞ்சனும், அதிக நேரம் இராது, உடனே கிளம்பிவிட்டான். வழியனுப்ப வந்தவளிடம், “பாட்டி உடம்புக்கு என்ன?” என்று விசாரித்தான். 

“ஒரு விபத்து. அதில் தாத்தா இறந்து போனார். அப்போதே, பாட்டி சோர்ந்து, சோர்ந்து படுத்தார்களாம். தாத்தா மறைந்த பாதிப்பு என்று எல்லோரும் அப்போது நினைத்தார்களாம். ஆனால், இவர்களுக்கும் ஏதோ உள் அடி பட்டிருக்கும் போல! தாத்தாவைக் காப்பாற்றும் பரபரப்பு, அப்புறம் இழப்பில், எப்படியோ பாட்டியை அவ்வளவாகக் கவனியாமல் விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். சும்மாவே, காலில் ஒரு வலி உண்டு. அதற்காக, அப்போதைக் கப்போது, உடனடி வலி நிவாரணியாக ஏதேனும் மருந்து மாத்திரைகள் போட்டுக் கொள்வார்கள்! எல்லாமாக, பாதித்துவிட்டன போலும். இப்படி அடிக்கடி “டல்”லடித்து விடுகிறார்கள். அதனால்தான், மாமாவுக்குப் பாட்டியை விட்டுப் போக மனமில்லாமல் இருந்தார். நான் வருகிறேன் என்ற பிறகுதான் விட்டுப் போனார்.” என்றாள் அவள். 

“லிஃப்டை”ப் பயன்படுத்தாமல், இருவரும் படிகளில் இறங்கியே போனார்கள். 

இணைந்து நடந்தபடியே, விவரம் சொன்னாள் அவள். 

“அதாவது, பேத்திக்குப் பாட்டி துணையில்லை! பாட்டிக்குத்தான், பேத்தி துணையாக்கும்!” என்றான் அவன். “என்னவோ, பாட்டி விழித்திருக்கிறார்கள் என்று, அதுவே பெரும் பலம் போல… யாரோ சொல்லவில்லை?” என்று, தீவிரமாக யோசிப்பது போன்ற பாவனையுடன் ரஞ்சன் கேலி பேச, திலோத்தமா சிரித்தாள்.

“விஷயம் தெரியாதவர்களுக்கு அப்படித்தானே?”

“எனக்குத் தெரிந்துவிட்டதே!’ 

“நீங்கள்தான் நல்லவர் ஆயிற்றே!”

“போச்சுடா! ஊகூம். எல்லாம் போச்சு! எதற்கும் வழியில்லை!’ என்று அவன் வருத்தப்பட்ட பாவனையில், திலோ கலகலவென்று சிரித்தாள். 

அவளையே பார்த்துவிட்டு, “ஊகூம். இதற்கு மேல் இங்கே நிற்கக் கூடாது என்று தெரிகிறது. ஆனால், உன் மாமாவிடம், இந்தப் பாதுகாப்புக் கருவிகள் பற்றி, ஃபோனில் கேட்டேனும் சொல்கிறாயா? நீ, இங்கே, இப்படிப் பாதுகாப்பற்று இருப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.” என்றுரைத்துக் கிளம்பினான் ரஞ்சன். 

உலகத்தில் எத்தனையோ பெண்கள்., இவளது பாதுகாப்பு மட்டும் என்ன தனியாம் என்ற எண்ணம் தோன்ற, திலோவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அதைப் போலவே, உலகத்தில் எத்தனையோ இளைஞர்கள் இந்த வாய்ப்பும் கூட இல்லாமல் வருந்தும்போது, இவனது நிலையைப் பற்றி மட்டும், தன் மனம் கவலைப் படுவானேன் என்ற கேள்வியும் தொடர்ந்து எழ, அவள் ரொம்பவே திகைத்துப் போனாள். 

உண்மைதானே? இவன் மட்டும் என்ன தனி? 

தந்தை, தம்பி பேச்சில், முன்னுக்கு வரும் வாய்ப்பே இல்லாமல் எத்தனை பேர் தவிக்கிறார்கள் என்பதெல்லாம் அடிபடும். 

அப்போதெல்லாம் இல்லாத தவிப்பு, இப்போது, இவனைப் பற்றி மட்டும் ஏன் வந்தது? 

ரஞ்சனின் கவர்ச்சிகரமான தோற்றத்தினாலோ என்றொரு சந்தேகம் தோன்றவும், திலோத்தமா பதறிப் போய்த் தன்னைத் தானே, வெகுவாக ஆராய்ந்தாள். 

அப்படி, ஒருவரின் முகத் தோற்றத்தில் மயங்குகிறவளா, அவள்? 

அப்படிப் பார்த்தால், அவளுடைய தந்தையிடம் சிபாரிசு பண்ணச் சொல்லி, அவர்களது வீட்டுக்கே வந்து கேட்ட எத்னையோ பேர், இந்த ரஞ்சனை விடவும், அழகானவர்கள்தான்! 

அவளுடைய தோழி பார்க்கவியுடைய அண்ணனுக்கு சினிமாக் கதாநாயகன் வாய்ப்பே வந்தது! அவளிடம் வந்து, வந்து பேசுவானே! 

இன்னமும், நட்பு வட்டாரத்திலும், குடும்பச் சுற்றத்தின் வகையிலும், பல இளைஞர்கள்! உயர்ந்த, தாழ்ந்த எல்லா நிலையிலும்! 

அவர்களைப் பற்றியெல்லாம், திலோ இப்படிச் சஞ்சலப்பட்டதில்லையே! 

இது, நிச்சயமாக அப்படியில்லை! 

ஆனால், பார்த்த இரண்டு நாட்களில் காதலா என்றால், அதுவும் அவளுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றியது. 

ரஞ்சன் ஆள் நன்றாக இருக்கிறான். உண்மை. ஒரு கேலியைப் புரிந்து கொள்கிறான். நகைச் சுவையாகப் பேசுகிறான். அதுவும் உண்மையே! 

அதற்கு மேல், அவளிடம் அக்கறையும் இருக்கிறது… அல்லது, இந்த அக்கறையே, இன்னொரு விற்பனைக்காக இருக்குமோ? 

அவன் சற்றுத் தாழ்ந்த … திலோத்தமா இந்த வேலையில் சேர்ந்து ஊதியம் பெறத் தொடங்கிவிட்டால், கொஞ்சம் அதிகமாகவே தாழ்ந்த நிலையில் இருக்கிறான் என்பது தவிர, வேறு எதுவுமே தெரியாத ஒருவனிடம், அந்தக் காதல் எப்படி வரும்? 

குடும்பம், உற்றோர், பெற்றோர், நண்பர்கள் அவனது பழக்க வழக்கங்கள் . . .அவளுக்கு எதுவுமே தெரியாதே! 

அல்லது, அதையெல்லாம் ஆராய்ந்து பாராமலே ஏற்படுவதுதான், அந்த நேசமா? 

உள்ளூரத் தன்னையறியாமல் ஓர் இதம் பரவும்போதே, இவனை மணந்துகொள்ள, அவளுடைய பெற்றோர் ஒப்புவார்களா என்ற எண்ணம் தோன்றி, அவளைக் கலங்கடித்தது. 

நிச்சயமாக மாட்டார்கள்! தங்கள் பெண், மகாராணி மாதிரி வாழ வேண்டும் என்பது, அந்த அன்புப் பெற்றோரின் ஆசை! 

குறைந்த பட்சமாகத் தங்களை விட உயர்வாக! அதற்காகவே, இந்தப் படிப்பு, வேலை எல்லாமே! 

அப்படியிருக்க, ரஞ்சன் பெரிதாகப் படித்த மாதிரியும் தெரியவில்லை! 

சும்மா அவனைப் பார்க்கும்போது, அப்படித் தோன்றாவிட்டாலும், அவனது அடையாளக் கார்டில், ஒரு பட்டம் கூட இல்லையே! இவனை, என்ன என்று சொல்லித் தந்தையிடம் அறிமுகப் படுத்துவது? 

அவனது விசிட்டிங் கார்டைப் பார்த்ததுமே, எல்லாம் அடிபட்டுப் போகுமே என்று எண்ணுகையில், திலோவுக்குத் தவிப்பாக இருந்தது! 

சரி, படிப்புத்தான் குறைவு என்றாலும், வருமானமாவது, பெரிதாகச் சொல்லும்படியாக இருக்க வேண்டாமா? 

“உத்தியோகம் புருஷ லட்சணம்” என்று சொல்வதுண்டு. 

அந்த உத்தியோகமே, பணம் சம்பாதிப்பதற்காகத்தானே? மனிதர் நிறைய சம்பாதித்தால், அது போதாதா என்று தந்தையிடம் சொல்லலாமே! 

அப்படி வருமானம் அதிகம் இருந்தாலாவது… 

ரஞ்சனின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் எப்படியாவது உயர்த்த வேண்டும் என்ற எண்ணம், முதல் முதலாகத் திலோத்தமாவுக்குத் தோன்றியது, அப்போதுதான்! 

சரியாகச் சொல்லப் போனால், ஒரு தொழிலின் வெற்றிக்கு, விற்பனை திறன்தான் மிகவும் முக்கியம் எனலாம். 

ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று திட்டமிடுவதும், ஏதோ ஒரு “ஃபார்முலாவைக் கொண்டு, உற்பத்தி செய்வதும், பணம் இருந்தால், எல்லோராலும் முடியும். ஆனால், தயாரித்த பொருட்களை விற்றால்தானே, அது வரை தொழிலில் போட்ட பணம் கைக்கு வரும்! 

அப்படி வருகிற பணம்தான், அந்தத் தொழிலின் லாப நஷ்டத்தை நிர்ணயிப்பது! 

எனவே, ரஞ்சனுக்கு விற்கும் திறன் இருப்பதால், அதிலேயே, முயற்சிக்கலாமோ? 

படிப்பினால் பெறக் கூடிய பெரிய வேலைக்கும், ஊதியமாக வரக் கூடிய பெரிய தொகைக்கும் வழியில்லை எனும்போது எதற்கு நம்பிக்கை இழக்க வேண்டும்? 

“ஹாட் கேக்” என்பார்களே, அது போலப் பரபரப்பாக விற்றுக் கொண்டிருக்கும் பல பொருட்களைப் பற்றி, ரஞ்சனுக்காகத் திலோத்தமா யோசித்துக் கொண்டிருக்கும்போது, திடுமென ஓர் ஐயம், அவளைப் பிடித்து உலுக்கியது! 

இப்படி என்னென்னமோ கற்பனை செய்கிறாளே, ஏற்கனவே அவனுக்குத் திருமணம் ஆகவில்லை என்று, அவளுக்கு என்ன நிச்சயம்? இந்த சந்தேகம் தோன்றியதும், சற்று நேரம், அவளுக் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது! 

ஒருவேளை அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தால்?… திருமணம் ஆகியிருந்தால், இப்படியெல்லாம் அவன் பேச மாட்டான் என்று தனக்குத் தானே, அவள் சொல்லிக் கொள்ளும்போதே, அப்படித்தான் என்று உறுதியாக நினைக்கவும், அவளால் முடியவில்லை! 

ஒரு விற்பனையாளனாக இருக்க வேண்டும் என்றால், அவன் பேச்சுக் கலையில் வல்லவனாக இருந்தாக வேண்டும். அது போல, சீண்டலும் சிரிப்புமாக அந்தக் கலை வல்லுனனாகவே அவன் பேசியிருந்தால்? 

அவன் என்ன, காதலிப்பதாகவா சொன்னான்? இல்லையே! 

சும்மா அவளைச் சீண்டி, தூண்டி உற்சாகப்படுத்தியது, அவனது பாதுகாப்புக் கருவிகளை வாங்க வைப்பதற்காகக் கூட இருக்கலாமே! 

விற்பனையை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவோ, அன்றி, அவளைப் பார்ப்பதற்காகவேதானோ, ரஞ்சன் மறு நாளும் வந்தான். 

இரவெல்லாம் தூக்கமின்றிக் கலங்கித் தவித்திருந்தவள், அவனைக் கண்டதுமே, அவன் என்ன நினைப்பானோ என்ற எண்ணமே இல்லாமல், “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லைதானே?” என்று பதைப்புடன் கேட்டுவிட்டாள். 

ஆனால், அப்படிக் கேட்டதுமே, அவளுக்கு உடம்பு உதறிவிட்டது! வளர்ப்பு முறை என்று, ஒன்று இருக்கிறதில்லையா? 

அதிகப் பழக்கம் இல்லாத ஓர் இளைஞனிடம், இளம் பெண் ஒருத்தி கேட்கக் கூடிய கேள்வியா, இது? 

அவளைப் பற்றி, அவன் என்ன நினைப்பான்? 

என்ன நினைத்தான்? 

கண்கள் பளிச்சிட அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தவன், சட்டென நின்றான். 

விழி விரியக் கவலையும் பயமுமாகப் பார்த்து நின்றவளை நோக்கி முறுவலித்து, “ரொம்பப் பக்கத்தில் வரப் பயம்மாக இருக்கிறது! ஆனால், ஆசைக்கு ஒரு சின்ன அடையாளம் மட்டும்!” என்று இரு விரல்களை மட்டும் நீட்டி, அவளது மூக்கைப் பிடித்துச் செல்லமாக மெல்ல ஆட்டினான். 

“அடேயப்பா! மூக்கு கூட, இப்படி “ஷாக்” அடிக்கிறதே!” என்று, விழி விரித்து வியந்தான். 

பிறகு, “கவலையே வேண்டாம், தேவி! எனக்கு, இன்னமும் திருமணம் ஆகவில்லை!” என்று தெளிவாகக் கூறி முறுவலித்தான்! 

அத்தியாயம்-8

அதன் பிறகு, திலோத்தமாவும் ரஞ்சனும் அடிக்கடி சந்தித்தார்கள். “வேலையாக, இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டு, உன்னைப் பாராமல் எப்படித் திரும்பிப் போவது? அதனால் வந்தேன்.” என்பான். 

மெய்யோ, பொய்யோ என்ற சந்தேகமே, அவளுக்கு வந்ததில்லை. நிச்சயமாக மெய்யே என்றுதான் அப்போது அவள் நினைத்தாள்., அதனாலேயே, அவன் அப்படிச் சொல்வதைக் கேட்கையில், அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்! 

வாயில் புறமாக வராந்தாவில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு, இருவருமாக உட்கார்ந்து பேசுவார்கள். 

சில சமயம், ரஞ்சன் அவளை வெளியே போய் வரலாம் என்று கூப்பிடுவான். 

மூலை ஐஸ்கிரீம் பார்லரில் போய், “கசாட்டா” வாங்கிச் சாப்பிடுவார்கள். 

அவனுக்கு அதிகக் கைப்பிடிப்பாகி விடக் கூடாது என்று, செலவில் பாதியைக் கட்டாயமாகக் கொடுத்து விடுவாள். முதலில் லேசாக மறுத்த ரஞ்சனும், பின்னர் சிரித்தபடியே வாங்கிக் கொள்வான். 

திடுமென, எங்கோ இருந்துகொண்டு, செல்லில் அழைப்பு விடுப்பான். 

“உன் வீட்டுக்கு அடுத்த தெரு பூங்காவுக்கு வருகிறாயா? கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போகலாம். வண்ண வண்ண டேலியா எல்லாம் நிறைய நிறையப் பூத்துக் கொட்டியிருக்கிறது!” என்பான். 

வேலைக்காரியைப் பாட்டிக்குத் துணை வைத்துவிட்டுத் திலோ ஓடுவாள்! 

வெகு நேரம் பேசுவார்கள். 

விண்வெளியில் இருந்து, ஆழ்கடல் வரை, அத்தனையும், பேச்சில் அடிபடும். 

இருவருமே பத்திரிகை படிக்கிறவர்கள். பெரும்பான்மை விஷயங்களில் ஒத்த மனமும் இருந்ததால், பேச விஷயமின்றி அவர்கள் தவித்ததே கிடையாது! 

சீக்கிரமோ, தாமதமாகவோ, எப்போது கிளம்பினாலும், அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து, விட்டுவிட்டுப் போவான். 

பசித்தால், பக்கத்தில் எங்காவது போய் உணவருந்துவார்கள். எப்போதுமே, மொத்தத்தில் அதிகத் தாமதம் ஆகாமலும் பார்த்துக் கொள்வான். 

ஒரு நாள் கூட, அவனது இருப்பிடத்துக்கு, அவளை அழைத்தது கிடையாது! 

எந்தப் பகுதியில் இருக்கிறது என்று மட்டும் பொதுவாகச் சொன்னான். 

“அது கட்டை பிரம்மச்சாரிகள் சேர்ந்து கிடக்கும் இடம்மா. அங்கெல்லாம், நீ வரக் கூடாது.” என்பான். அதுவே, அவன் மீது, அவளுக்கு அதிக மதிப்பையும் ஏற்படுத்தியது. 

எப்படியாவது, தங்கும் இடத்துக்கு வரவழைத்து, விருப்பத்துக்கு வளைக்க முயற்சிப்பார்கள் என்று கேள்விப் பட்டதற்கு நேர் மாறாக ரஞ்சன் நடந்து கொண்டதே, பெருமைக்குரியதாகத் தோன்றியது, செய்கிற தொழிலிலும், ரஞ்சனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது!

“இன்றைக்குத் திருமகள் காலனியில், எட்டுப் பேர், இந்தப் பாதுகாப்புக் கருவிகள் பற்றி, அக்கறை காட்டிப் பேசினார்கள். எப்படியும், மூன்று பேராவது, வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்!” என்று உ உற்சாகத்துடன் கூறுவான்! 

அவன், அப்படிச் சொல்லும்போது, அதை விட்டுவிட்டு, நீ இன்னொன்றைத் தேடு என்று அவனுக்கு எடுத்துக் கூற, அவளுக்குத்தான், தயக்கமாக இருக்கும். 

அப்படியும், மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “மூன்றே ஆர்டர்கள்தான் என்றால், உங்கள் கமிஷனும், குறைந்து போகுமே, ரஞ்சன்?” என்று சிறு வருத்தத்துடன் அவள் தொடங்குவாள். 

அதற்குள், அவனது கவனம் வேறிடம் பாய்ந்துவிடும்! 

“அந்த வீட்டைப் பார், திலோ! போர்டிகோவுக்கும், அதிலிருக்கும் தூணுக்கும் அடித்திருக்கும் வண்ணங்கள், ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை, அல்லவா? இரண்டுமே, இருட்டு வண்ணங்கள்! சே! கண்ணை எப்படி உறுத்துகிறது! ஆனால், வீட்டு உரிமையாளர்கள் அதைக் கவனித்த மாதிரியே தெரியவில்லையே!” என்று அவன் வருந்திக் கூறும்போது, அவள் சொல்ல முயன்றது, முழுசாக அடிபட்டுப் போகும். 

இதனிடையே, திலோவுக்கு இன்னோர் அதிர்ச்சி நேர்ந்தது! ஆனந்த அதிர்ச்சிதான். ஆனால், அவளுக்கு ஒருமாதிரி துன்பம் தருவதாகவும் அது அமைந்துபோனது. 

ஒருநாள் இருவருமாக பூங்காவில் அமர்ந்து, இயற்கையின் பொருத்தமான வண்ணச் சேர்க்கைகள் பற்றி உற்சாகமாக உரையாடுகையில், படிக்கும்போது, கடைசி ஆண்டில், இந்தியா முழுக்க அழைத்துச் சொன்று, ஆங்காங்கே உள்ள கட்டடங்களின் அழகை எடுத்துச் சொல்லிச் சுற்றிக் காட்டியது பற்றி, ரஞ்சன் சொன்னான். “என்ன இருந்தாலும், ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகே தனி, திலோ! இளம் சிவப்பு வண்ணத்தில், அத்தனை அடுக்கு மாளிகையை, அப்போதே எப்படித்தான் கட்டினார்களோ? எப்போதும், ஏசியில் இருப்பது போலக் குளிர்ச்சியாக வேறு இருக்கும்! 

தாஜ்மஹலுக்கு, அதன் நுழை வாயிலில் இருந்து பார்க்கும்போது தெரியும் எடுப்பான தோற்றம்,பார்த்த வினாடியே பிரமிக்க வைப்பது.” 

இப்படி அவன் ஒவ்வொன்றாக விவரம் சொல்லிக் கொண்டிருந்தபோது, திலோத்தமாவின் உள்ளம் படு வேகமாக வேலை செய்தது! 

இந்தியா முழுவதும் சுற்றிக் காட்டுவது என்றால், இவன் படித்தது, என்ன படிப்பு? கடைசி ஆண்டை முடித்தானா, இல்லையா? 

இவன் உற்சாகத்தடன் சொல்வதைப் பார்த்தால், தடையற்றுப் படித்து, முடித்துதான் இருக்க வேண்டும்! 

பின்னே ஏன் இந்த மாதிரி அலைந்து திரிந்து, சம்பாதிக்க வேண்டும்? 

சட்டென, “நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், ரஞ்சன்?” என்று, ஆவலாகக் கேட்டாள் அவள். 

அவனும் பதில் சொல்லத் தயங்கவில்லை. “கட்டடக்கலை. அப்புறம், நிர்வாகப் படிப்பில் எம்பிஏ.” என்றான் பிசிரற்று. 

திலோவுக்குத்தான் தலை சுற்றிப் போயிற்று. 

இவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்? கட்டடக்கலையைப் படித்துவிட்டு, அப்புறம் தொழில் நிர்வாகத்திலும் “மாஸ்டர்” டிகிரி பெற்றுவிட்டவன், ஐந்துக்கும் பத்துக்கும், இந்த “சேல்ஸ்மேன்” வேலை பார்த்துக் கொண்டிருக்கிறானாமா? 

சட்டெனக் கைப்பையைத் திறந்து, ரஞ்சன் தந்திருந்த கார்டை எடுத்துப் பார்த்துவிட்டு, அவனிடமே காட்டினாள். “படித்த படிப்பு ஒன்றையும், இதில் காணோமே!?” என்று கேட்டாள். 

“அது …” என்று இழுத்தவனின் கண்கள் சட்டென நகைத்தன. கிண்டலாக நோக்கி, “அதில் போட்டால்தான், பட்டதாரியா? அப்படியெல்லாம் பீற்றிக்கொள்ள எனக்குப் பிடிக்காதும்மா. நான் வள்ளுவர் பக்தன். “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்று அவர் எழுதியிருப்பதைப் படித்து, அச்சுப் பிசகாமல், அதன்படியே நடக்கிறவனாக்கும்!” என்று பெரிதாக அளந்து கொட்டினான். 

தொடர்ந்து, “ஆனால், நீ என்ன நினைத்தாய்? ஒன்றாம் வகுப்பு “ஃபெயில்” என்றா?” என்று கண்ணை உருட்டிக் கேட்டான். 

“அப்படியில்லை … ஆனால் …” என்று, நினைத்ததைச் சொல்ல முடியாமல்,திலோ தடுமாறியது, அவனுக்கு இன்னும் வேடிக்கையாக இருந்தது போலும்! 

“ஓஹோ! மண்டையில் படிப்பே ஏறாத மக்குப் பையன் என்று முடிவே கட்டி விட்டாயாக்கும்! அப்படியில்லை தாயே! நான்தான் வள்ளுவர் பக்தன் என்றேனே! “செய்வன திருந்தச் செய்” ரகம். வெள்ளிப் பதக்கம் வாங்கியவன். ஒரே ஒரு பொடியன், என்னை விடவும் கெட்டிக்காரனாக இருந்து, இவ்வளவூண்டு மூக்கை நீட்டித் தங்கப் பதக்கத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டான்! இன்னும் கொஞ்சம் பெருமையடிக்க முடியாமல் பண்ணிய அவனை என்ன பண்ணலாம்? அக்கு வேறு, ஆணி வேறாக என்பார்களே, அது போல, அவனை அவனைப் பிடித்து, உடம்பின் எலும்புகளை எண்ணி விடலாமா? அல்லது …” என்று தீவிரமாக ஆலோசிப்பது போலப் பாவனை செய்தான். 

ஆனால், திலோத்தமாவால் சிரிக்க முடியவில்லை. 

ரஞ்சனின் பேச்சுத் திறமை, அவனது நிர்வாகப் படிப்பினால் ஏற்பட்ட மெருகாய் இருக்கும். வெள்ளிப் பதக்கம் என்றால், செய்தொழிலிலும் அதிகத் திறமை இருக்கும்! 

இரண்டும் சேரும்போது, எவ்வளவு உயரப் பறக்கலாம்! 

இவ்வளவு திறமையையும், தகுதியையும் வைத்துக்கொண்டு, வீடு வீடாகப் படியேறி, கதவு கதவாகத் தட்டி, ஆளுக்கேற்றபடி குழைந்து நெளிந்து, கூழைக் கும்பிடு போட்டுப் பேசி, “கமிஷனு”க்கு அலைய வேண்டுமா? 

தேவையே இல்லையே! 

பெரிய நிறுவனம் ஒன்றில், பெரிய பதவியில், நக நுனியில் கூட அழுக்குப் படாமலே, பல்லாயிரக் கணக்கில் சம்பாதித்துக் கொட்டலாமே! லட்சம் கூட, சாத்தியமே! 

அதை விட்டு, இவன், இங்கே என்ன அசட்டுத்தனம் செய்து கொண்டிருக்கிறான்? 

ஒரு கணம், தனக்காக இருக்குமோ என்று உச்சி குளிர்ந்துவிட்டு, அப்படியில்லை என்று, உடனே தெளிந்தாள் திலோத்தமா. 

முதல் முதலாக அவனை, அவள் சந்தித்ததே, வீட்டுக்கான பாதுகாப்புக் கருவிகளை விற்பனை செய்கிறவனாகத்தானே? 

இந்த விற்பனையில் என்ன வரும் என்று, தன் பொன்னான காலத்தையும்,பொன்னை விடச் சிறந்த திறமையையும், இவன் அநியாயமாக வீணடித்துக் கொண்டிருக்கிறான்? 

இவன் மட்டும் கற்ற கல்விக்கு ஏற்ற பதவியில் இருந்தால், துள்ளிக் குதித்துக்கொண்டு போய், தந்தையிடம் இவனை அறிமுகப் படுத்தலாமே! 

தோற்றம் மட்டுமின்றி, கல்வி, வருமானம் முதலியவற்றிலும், பெரிய தகுதி உள்ள இவனைத்தான் மணப்பேன் என்று, குரல் உயர்த்திக் கூறலாமே! 

அதை விட்டு, தந்தையிடம் இவனைப் பற்றி எப்படிச் சொல்வது என்று, இத்தனை நாட்களாக, அவள், திலோ, என்னமாய்த் தவித்துப் போனாள்! 

இப்போது கல்விச் சிறப்பு இருப்பது தெரிந்தாலும், இன்னமும்கூட, ரஞ்சன் ஒரு நல்ல வேலையில் அமரும்வரை, அவனைப் பற்றித் தந்தையிடம் பேச்செடுக்கவே முடியாதுதானே? 

உன் சம்பாத்தியத்தில், உட்கார்ந்து சாப்பிட நினைக்கிற சோம்பேறி என்று, சட்டெனச் சொல்லிவிடுவாரே! 

அதனால், சீக்கிரமே ஒரு பெரிய வேலையைத் தேடிக் கொள்ளும்படி, ரஞ்சனை வற்புறுத்த வேண்டும். 

சொல்லப் போனால், அவர்களது திருமணம் பற்றிய பிரச்சினையே இல்லாது போனாலும் கூட, அவனது தகுதிக்கு உரிய சிறப்பில், அவன் வாழ வேண்டும்தானே? அதை விட்டு, ஏதோ கொஞ்சம் வந்தாலும் போதும் என்று, சரியான இலக்கற்று, அவன் சுற்றிக் கொண்டிருப்பது ரொம்பவே தப்பு! வடி கட்டிய அசட்டுத்தனம்! 

ரஞ்சனின் காதைப் பிடித்துத் திருகியேனும், ஒரு நல்ல வேலை தேடிக் கொள்ளுமாறு, அவனிடம் சீக்கிரமே சொல்ல வேண்டும் என்று, திலோத்தமா முடிவு செய்தாள். 

ஆனால், முடிவு செய்வது வேறு., அதைச் செயல்படுத்துவது, இன்னொன்றல்லவா? 

எப்படியோ, இது பற்றி, ரஞ்சனிடம், திலோ சரியாகப் பேச வாய்ப்பின்றியே, மேலும் சில நாட்கள் கடந்து போயின. 

அல்லது, அந்தப் பேச்சை எடுக்க விடாமல் ரஞ்சன் தள்ளி விட்டானோ என்ற சந்தேகம், அன்று இல்லாதது, திலோவுக்கு இன்று வந்தது! ரொம்ப அதிகமாகவே வந்தது. 

திருமணம் ஆகி இத்தனை நாட்களும், கோவை பற்றிய கடந்த காலப் பேச்சை எடுக்க விடாமல், வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமலே, அவன் தடுத்து விடவில்லையா? இதே போல, அப்போதும், அவன் செய்திருக்கலாமே! 

ஆனால் ஏன்? அதுதான், அவளுக்கு இன்றும் புரியவில்லை! கூடவே, புரியாததை மீண்டும் மீண்டும் யோசித்துக் காலத்தை வீணாக்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. 

அதற்குப் பதிலாக, அவன் என்னவோ நினைவுபடுத்திப் பார்க்கச் சொன்னானே, அதை முழுதாகச் செய்வது மேல். அவளை அறியாமல், அவளே ஏதாவது தப்பு செய்திருக்கக் கூடுமா என்று அப்போதுதானே, தெரியும்? எந்தத் தப்பும் செய்யவில்லை என்று அவளுக்கு இருக்கும் உறுதியே மெய்யானால், அவனிடம் குரலுயர்த்திப் பேசவும் சீக்கிரமே முடியுமே! 

மறுபடியும், வேகமாகப் பழசை எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள் அவள். 

ரஞ்சனின் உயர்நிலைப் படிப்பு தெரிய வந்த மறுநாளே, சென்ற வேலை முடிந்து, அடுத்த வாரம் கிளம்பி வருவதாக, மாமா சுந்தரிடம் இருந்து தகவல் வந்தது. 

இன்னமும் ரஞ்சனிடம் அவனது வேலை பற்றிப் பேசவில்லையே என்று திலோத்தமாவுக்குச் சிறு பதட்டம் உண்டாயிற்று. 

அவளை மேலும் விரட்டுவது போல, அவளது வேலைக்கான அதிகாரப் பூர்வமான நியமனம் வந்திருப்பதாகத் தந்தை தகவல் கொடுத்தார். 

கூடவே, என்றைக்கு வந்து வேலையில் சேருகிறாள் என்று கேட்டு, ஒரு கடிதமும் வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார் . சீக்கிரமே வருமாறு, ஒரு பின் குறிப்புடன். 

அதாவது, மாமா வந்தபின், மேலே தாமதியாமல், அவள் உடனே, சென்னைக்குச் சென்றாக வேண்டும். 

என்னவோ,நாற்புறமும் இருந்து, தன்னைப் பயங்கரமாக அழுத்துவது போல, திலோத்தமா உணர்ந்தாள். 

இன்று ரஞ்சனிடம் இதைப் பேசிவிட வேண்டியதுதான் ., இனித் தள்ளிப் போடக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு திலோ காத்திருந்தால், அவசரமாக ஒரு சிறு பயணம் போவதாகவும், இரண்டு நாட்கள் சந்திக்க முடியாமைக்கு வருந்துவதாகவும் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு, ரஞ்சன் காணாமல் போனான். 

அடுத்த இரண்டு நாட்களும், எப்படிக் கழிந்தன என்றே, திலோத்தமா அறியாள். 

எதையும், அதிகம் கவனிக்காத பாட்டியே, “என்ன திலோம்மா, ஒரு மாதிரியே இருக்கிறாயே?” என்று கேட்கும் அளவுக்கு, பரபரத்துப் போயிருந்தாள் அவள். 

ரஞ்சன் எப்போது வருவான்? 

வந்ததும், அவனது முன்னேற்றம் குறித்து, அவன் மனதில் படுமாறு, எந்தெந்த விதமாக எடுத்துச் சொல்வது? 

அன்று காலையிலேயே, ரஞ்சன் திலோவுக்கு ஃபோன் செய்துவிட்டான், “வந்துவிட்டேன், சுந்தரி!” என்று. 

அது யாரவள் சுந்தரி? முதலில் அவள் காதைப் பிடித்து … என்ற வழக்கமான கிண்டல் பேச்சு, அவளிடமிருந்து வரவில்லை! 

“நான் உங்களிடம் பேச வேண்டுமே, ரஞ்சன் “என்றாள் திலோத்தமா, பேச்சில் முன்னுரை, முகவுரை என்று, எந்த விதமான அலங்காரமும், இல்லாமல்.. 

அவனுக்கு இன்னமும், வேகம் போலும்! 

“என்ன அவசரம், திலோ? நான் வேண்டுமானால், உடனே, உன் மாமா வீட்டுக்கு வந்து, உன்னைப் பார்க்கட்டுமா? 

சரி என்று சொல்லி விடத்தான், திலோவுக்கு ரொம்பவும் தோன்றியது. அவனைச் சீக்கிரமாகப் பார்க்கலாம் என்றாலும், அப்புறம், வீட்டில் வெளிப்படையாகப் பேச முடியாது! அவன் இங்கே வீட்டுக்கு வந்து, அப்புறமாக இருவரும் எங்கேனும் செல்வதை விட, வழக்கமான பூங்கா, அல்லது காஃபி ஷாப்புக்கு வருமாறு அவனிடம் கூறிவிட்டு, அவளும் கிளம்பிச் சென்றால், இருவரும் பாதிப் பாதி தூரத்திலேயே சந்தித்து விடலாம்! 

தன் கணக்கை அவனிடம் திலோ சொல்ல, “பரவாயில்லையே! இவ்வளவு பெரிய கணக்கை, இவ்வளவு சீக்கிரமே போட்டுவிட்டாயே! அடுத்த ஆண்டு ராமானுஜம் விருது, நிச்சயமாக உனக்குத்தான்!” என்று கிண்டலடித்தாலும், திலோத்தமா பூங்காவுக்குள் சென்றபோது, ரஞ்சன் ஏற்கனவே, அங்கே வந்து காத்திருந்தான். 

“ஆஹா! அலங்காரம் முடிந்து நீ வந்து சேர, இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று நினைத்தால், நீ அதற்குள் வந்து, மூளையைக் கசக்கி நான் கணித்ததைப் பொய்யாக்கிவிட்டாயே!” என்று அதிசயித்தான் அவன். 

மண்டைக்குள் அது இருந்தால்தானே, கசக்குவதற்கு என்ற கேலி, அவளுக்கு நினைவு கூட வரவில்லை. 

ஆனால், அதற்குள்ளாகவே முகம் கனிய, “என்னம்மா, என்ன விஷயம்? ஏதேனும் பெரிய பிரச்சினையா? என்ன சொல்லு!” என்று விவரம் கேட்டான். 

திலோ, இப்போது தயங்கவில்லை. 

“பிரச்சினை … பிரச்சினைதான். நீங்கள் சீக்கிரமே ஒரு பெரிய வேலை தேடிக் கொள்ளுங்கள், ரஞ்சன். அப்போதுதான் …” 

“ஏனோ? வேலை இல்லாதவன்தானே, வேலை தேட வேண்டும்? ஹைய்யா, எனக்குத்தான் “கனவு இல்ல”த்து வேலை இருக்கிறதே!” என்று பெருமை போலச் சொன்னான் அவன். 

இந்தச் சுண்டைக்காய் வேலை பற்றிப் பெருமை வேறா? 

தன் தகுதியைப் பற்றிய எண்ணமே இல்லாமல், என்ன உளறுகிறான் என்று, அவளுக்கு எரிச்சல்தான் வந்தது. 

“அது என்ன பிசாத்து வேலை, ரஞ்சன்? இந்த வீட்டுப் பாதுகாப்புக் கருவிகளை விற்றால், ஏதோ “கமிஷன்” கொடுப்பார்கள்! அதுதானே? இதையெல்லாம் கெளரவமாக வேலை என்று சொல்லிக்கொள்ள முடியுமா? உங்கள் படிப்பு, திறமை, தகுதிக்கு, எவ்வளவு நிறைய சம்பாதிக்கலாம், தெரியுமா? “கனவு இல்லம்” ஆட்கள், உங்களை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டு, ஒன்றும் தராமல், ஏமாற்றுகிறார்கள் என்று, எனக்குத் தோன்றுகிறது. வேறே நல்ல பெரிய நிறுவனங்களுக்குப் போய்ப் பாருங்கள், ரஞ்சன். அப்போதுதான் உங்களுக்கு உண்மை நிலவரம் புரியும். மற்ற யார் என்றாலும் நிறையச் சம்பளம் கொடுத்து, உங்களை ராஜா மாதிரி வைத்துக் கொள்வார்கள். அதை விட்டு, உங்கள் படிப்புக்கும் தகுதிக்கும், இப்படி வீடு வீடாகவா, உங்களை அலைய வைப்பது? அநியாயம்! அந்தப் பணப் பெருச்சாளிகளை விடுங்கள். இந்த வேலை உங்களுக்கே கேவலமாக இல்லை?”

“ம்ம்ம்… அதாவது, நம் மக்களுக்கு இந்த வீட்டுப் பாதுகாப்புப் பொருட்களின் தேவை அறியச் செய்து விற்பனையைப் பெருக்குவதற்காக, நான் வீடு வீடாக அலைவது, கேவலம் என்கிறாயா?” என்று நிதானமாகக் கேட்டான் ரஞ்சன். 

அந்தக் “கேவலம்” என்ற வார்த்தை, ரஞ்சனுக்கு ஆத்திரமூட்டி இருக்குமோ என்று, இப்போது திலோத்தமாவுக்கு யோசிக்கத் தோன்றியது. ஏனெனில், “கனவு இல்லம்” ஆட்கள் ஏமாற்றுவதாகச் சொன்னதை, அவன் எடுத்துப் பேசவே இல்லை! தேவை இல்லை என்றாலும், பெயரளவுக்குக் கூட, மறுத்து அவர்களைத் தாங்கிப் பேசவில்லை. 

செய்கிற வேலையைப் பற்றி மட்டும்தான், விளக்கம் கேட்டான். அதிலும், குறிப்பாகக் “கேவலம்” என்ற வார்த்தையைச் சொல்லி! ஆனால், எதையும் விளையாட்டாக எடுக்கும் அவனது மனதில் தைக்கும் விதமாக, வேறு எப்படித்தான் சொல்வது? 

அத்தோடு, அவனுக்குக் கிடைக்கக் கூடிய பெரிய வேலையோடு ஒத்திடும்போது, ரஞ்சன் இந்த வேலை பார்ப்பது, கேவலமேதானே? எனவே, முன் சொன்னதையே தொடர்ந்து, “நான் சொல்வது இருக்கட்டும். என் அப்பாவிடம், உங்களை நான் என்ன விவரம் சொல்லி அறிமுகம் செய்வது? வெறுமனே, ஒரு சாதாரண விற்பனையாளன் என்றா? தொண்டையை விட்டு, வார்த்தைகள் வெளிவருமா? அப்பா முகம் திருப்ப மாட்டாரா? எவ்வளவு அவமானமாக இருக்கும்? அதன் காரணத்தை நினைத்துப் பாருங்கள்!” என்று படபடத்தாள் திலோத்தமா. சொல்லப் போனால், திலோத்தமா தன்னை மிகவும் அடக்கிக்கொண்டு பேசினாள் எனலாம். உண்மையில், அவளுக்கு வாய்விட்டுக் கத்திக் கூச்சலிடலாம் போலத்தான், அப்போது இருந்தது. 

தகுதிகளை வளர்த்துக்கொண்டு, ஒரு நல்ல வேலையில் அமர இருக்கும் ஒரு பெண்ணை, இன்னும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு மணம் செய்து கொடுக்கத்தானே, அவளுடைய பெற்றோர் விரும்புவார்கள்? குறைந்த பட்சம், சம நிலையிலாவது இருக்க வேண்டாமா? தகுதிகள் இருந்தும், அவற்றை ஒதுக்கி, சாதாரண வேலை ஒன்றை ஏற்று சுற்றிக் கொண்டிருப்பவனை, மருமகனாக எப்படி ஏற்பார்கள்? 

இது ஏன் இவனுக்குப் புரியவில்லை என்பது, அவளது அன்றையத் தவிப்பு! 

அந்தக் “கனவு இல்லமே” அவனுடையது என்பதால், வேலையை மாற்றுகிற எண்ணம், ரஞ்சன் மனதில் படாமல் போயிருக்கலாம். ஆனால், உண்மை நிலை அறியாததால், தனது வருங்காலமே இந்த வேலை விஷயத்தில் தொக்கி நிற்பதாக எண்ணிய திலோத்தமாவுக்குத் தன்னை அடக்குவது, மிகவும் கடினமாக இருந்தது! 

அவளது மன நிலையையும், அவனே யோசித்துப் பார்த்திருக்கலாம்தானே? ஆனால், பார்க்கவில்லையே! 

அநாகரீகமாக அலறிக் கூக்குரலிடாமல், ரஞ்சனுக்குப் புரிய வைக்கவே, அப்போதும் அவள் முழு மூச்சுடன் முயன்றாள். 

பொறுமையை இழுத்துப் பிடித்து, “பாருங்கள் ரஞ்சன், இந்த மாதிரி வேலை பார்க்கும் ஒருவருக்கு, என் தந்தை, என்னைக் கல்யாணம் செய்து கொடுப்பாரா? அதை யோசித்துப் பாருங்கள்!” என்று, அமைதியாகத்தான் கேட்டுக் கொண்டாள். 

ஆனால், அப்போதும் சற்று உயரத்தில் படர்ந்து பூத்திருந்த அலமண்டாக் கொடியின் மஞ்ள் நிறப் பூக்களைப் பார்த்தபடி அரைக் கவனமாக, 

“உன் அப்பா நினைப்பது இருக்கட்டும். இந்த நிலையில் என்னை மணப்பது பற்றி, உன் கருத்து என்ன? அதைச் சொல்லு.” என்றுதான் அவன் கேட்டான். 

அவள் இவ்வளவு சொல்கிறாள்., அப்போதும், பார்க்கிற வேலையை மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு வரவில்லையே என்று திலோ கொதித்தாள். 

நிறுவனமே அவனது என்பதால், அந்த எண்ணம் வருவதற்கு இல்லை என்பது, இப்போது அவளுக்குப் புரிந்தது. ஆனால், அன்று அவள் எண்ணியது வேறு அல்லவா? 

இனி, அவளையே இழக்க நேரும் என்றால்தான் மாறுவான் என்று தோன்றிவிட, “நீங்கள்தான் யோசித்துப் பாருங்களேன். என்னைப் போல ஒருத்தி, உங்களைப் போல நல்ல வாழ்வை வீணாக்கிக்கொண்டு இருக்கும் ஒருவனை மணப்பது, முட்டாள்த்தனம் ஆகாதா?” என்று கேட்டாள். 

ஒரு வழியாகத் தலையைத் திருப்பி ப் பார்த்தவனின் முகத்தில் வியப்பு தெரிந்தது. 

அவளை நோக்கி, “நீ அந்த மாதிரி முட்டாளில்லை என்கிறாயா? ஓகே! நீ அவசரம் என்றதால், சாப்பிடாமலே ஓடி வந்தேன். நீயும் சாப்பிடவில்லைதானே? இப்போது வெளியே எங்காவது சாப்பிடலாம், வா!” என்று, அவளை அழைத்தான். 

இப்போது சாப்பாடா முக்கியம்? 

“எனக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே! மாமா சென்னை வரை வந்தாயிற்று. அவர் இங்கே வந்தவுடனேயே, இன்னும் ஓரிரு நாட்களிலேயே, நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டும், தெரியாதா?” என்று தாங்கலோடு கேட்டாள் திலோ. 

“நீதான் முட்டாள் இல்லை என்று சொல்லிவிட்டாயேம்மா. இனித் திட்டங்களை மாற்ற வேண்டியதுதான்.” என்றான் அவன் குரலில் சிறு வருத்தம் தொனிக்க. 

– தொடரும்…

– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *