காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 2,802 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-9

இருவருமாக, ரஞ்சன் விரும்பியது போலக் காலை உணவருந்தச் சென்றபோது, திலோத்தமா உள்ளூர மகிழ்ச்சியோடுதான் இருந்தாள்.

காரணம், அவனது “திட்டங்களை மாற்ற வேண்டியதுதான்” என்றதன் பொருள், ரஞ்சன் நன்மை தீமை புரிந்துகொண்டான்., புரிந்து, தன் வழிக்கு வந்துவிட்டான் என்று அவள் கருதியதே. 

ஆனால், அன்று உணவருந்த அழைத்துச் சென்ற பிறகு அவனை அவள் சந்திக்கவே இல்லை! 

அவள் கோவையை விட்டுக் கிளம்பும்வரை, செல்லிலாவது பேசிக் கொண்டிருந்தவனின் தொடர்பு, அதன் பிறகு, முழுமையாக அறுந்து போயிற்று! 

ரஞ்சன் மாற்றிக் கொண்டது, அவளை மணக்கும் திட்டத்தையே என்று பெரும் மன வேதனைக்குப் பிறகே, திலோ புரிந்துகொண்டாள். 

சுந்தர் குடும்பம் திரும்பி வந்துவிட, அதற்கு மறுநாளே, திலோத்தமா சென்னைக்குக் கிளம்ப நேர்ந்தது. அவளது வேலையில் சேருவதற்காக. அவளது முதல் வேலைக்காக அவளுக்கு வாழ்த்துச் சொன்னவன், வேறு பேசாமல், அவசரமாகச் செல்ல வேண்டும் என்று பேச்சை நிறுத்திக்கொண்ட போதும்கூட, அவனை, அவள் தப்பாக எண்ணவே இல்லை. 

பெரிய வேலைக்கான ஏதோ முழு மூச்சான முயற்சி என்றுதான் எண்ணினான். 

ஆனால், அதன் பிறகு, ரஞ்சனோடான தொடர்பு அடியோடு அறுந்து, செல்லில் அவனோடு பேசவே முடியாமல் போனபோதுதான், அவனது திட்ட மாற்றம் பற்றி, முதல் முதலாக அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டதே.

அப்போதும், அதை ஒப்ப முடியாமல், கோவைக்குப் பலமுறை சென்று சென்று, அவனைத் தேடிப் பார்த்தாள். இருவரும் சந்தித்த இடங்கள், அவன் வேலை பார்த்த “கனவு இல்ல” அலுவலகம், அவன் தங்கி இருந்ததாகக் காட்டிய கட்டிடம்! 

சென்று பழகிய இடங்கள் எங்குமே, அவனைக் காணக் கூடக் கிடைக்கவில்லை! அலுவலகத்தில், அந்தப் பெயரில் யாரும் வேலையில் இல்லை என்றார்கள். 

அவளது தொல்லை தாங்க முடியாமல், சம்பளப் பட்டுவாடாப் பட்டியலையே காட்டியபோது, அவள் இடிந்து போனாள். கிட்டத்தட்ட ரஞ்சன் என்கிற மாதிரிப் பெயர் கூட, அதிலே இல்லை! 

“பார்த்துவிட்டாய் அல்லவா? இனிமேலாவது, வேலையைக் கெடுக்காமல் போம்மா!” என்றார், அந்தப் பொறுப்பில் இருந்தவர். அடுத்த மாதம் போனபோது, “கனவு இல்லத்”தின் அலுவலகமே அங்கே இல்லாது போயிற்று. 

பெரிய வளர்ச்சிக்காகத் தலை நகரத்துக்குப் போய் விட்டதாகச் சொன்னார்கள். 

ஆனால், அதைப் பற்றிய ஆர்வம் எதுவும் அவளுக்கு இருக்கவில்லை. ரஞ்சன் சொன்னான் என்பது தவிர, அந்த நிறுவனம் பற்றி, அவளுக்கு என்ன அக்கறை? 

அவன் தங்கியிருந்ததாகக் காட்டிய விடுதிக்குப் போனால், அவளையே ஒரு மாதிரிப் பார்த்தார்கள். 

ரஞ்சனைக் காண முடியாது என்று ஆனதும், பெற்றோரிடம் ஏதாவது சொல்லித் திருமணத்தை மறுப்பதில் மட்டும்தான், அவளுக்குக் கவனம் இருந்தது. 

அதிலும், அவளை மீறி, ரஞ்சனுடைய குடும்பம் அவளைப் பார்க்க வந்ததும், “கனவு இல்லம்” என்ற பெயரால் மட்டும், வருகிறவனிடம் ரஞ்சனைப் பற்றிய விவரம் கிடைக்கக் கூடுமோ என்ற ஆசையால், அவள் அவனைப் பார்க்கப் போனதும், அங்கே அவளுடைய ரஞ்சனே மணமகன் என்று அறிந்ததும் சந்தோஷமாகத் தலையாட்டியதும், இப்போது நடந்த கதை! 

மற்றபடி, முழுக் கதையும் இவ்வளவேதான். 

இதில் அவளுடைய ரஞ்சன் … இன்றைய இந்த சித்தரஞ்சன், தன் மனைவியான அவளிடம் ஆத்திரப்படும்படியாக என்ன இருக்கிறது? இப்போதும், தன் பேச்சில் தப்பு இருப்பதாக திலோவால் எண்ண முடியவில்லை. 

அவள் பயன்படுத்தியவை, சற்றுக் கடுமையான வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைகளின் நோக்கம், முழுக்க முழுக்க அவனது முன்னேற்றம்தானே? 

என்ன காரணத்துக்காகச் சொன்னாள் என்று எடுத்துச் சொன்னால், கணவன் புரிந்துகொள்வான் என்றுதான், திலோத்தமா அப்போதும் திடமாக நம்பினாள். 

ஆனால்,நடப்புதான் நேர் எதிராக இருந்தது! 

காலை உணவுண்டு, அலுவலைப் பார்க்க ஆண்கள் கிளம்பிச் செல்லுகையில், எந்த வீட்டுப் பிரச்சினையையும், அந்த வீட்டில் பேசுவது இல்லை! 

மாமியார் கற்றுக் கொடுத்த வழிதான் திலோவுக்கும். 

ஆனால், அன்று மாலை சித்தரஞ்சன் திரும்பி வரும் வரை, திலோத்தமா ரெபம்பவே சங்கடப்பட்டுப் போனாள். 

மாலையில் வழக்கம் போல வீடு திரும்பிய சித்தரஞ்சன், அவனாக எதுவும் சொல்லப் போவதாக, அவளுக்குத் தோன்றவில்லை. 

அதுதான், மேலும் தேவை என்றால் பேசுவோம் என்று சொல்லிவிட்டானே! 

அவளுக்குத் தேவை என்றால், அவள்தான் அந்தப் பேச்சைத் தொடங்கியாக வேண்டும். 

இரவு உணவு முடிந்து, எல்லோரும் அவரவர் அறைக்குள் முடங்கும்வரை பொறுத்திருந்துவிட்டு, அதன் பிறகே திலோத்தமா, தங்ள் பிரச்சினை பற்றிப் பேசத் தொடங்கினாள். 

“நீங்கள் சொன்னது போல, நம் பழைய வாழ்வு பற்றி யோசித்துப் பார்த்தேன். ஆனால், என் மீது எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சொல்லுங்கள் ரஞ்சன், என் பேச்சில், எது தப்பு என்கிறீர்கள்?” என்று, முயன்று வருவித்த அமைதியுடன் கேட்டாள்.

ஆனால், “என்ன திண்ணக்கம்?” என்றான் சித்தரஞ்சன். “என்னை விடவும் பணம்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, அதில் தப்பு இல்லை என்று வேறு சொல்கிறாயா? ” என்றான் ஆத்திரத்துடன்.

“உங்களை விடப் பணம் முக்கியம் என்றேனா? எப்போது?” என்று புரியாமல் கேட்டாள் திலோ. 

அவள் அறிந்த வரையில், அப்படி அவள் சொல்லவே இல்லையே! இவ்வளவு முக்கியமான வார்த்தைகளை, அவள் எப்படி மறந்திருக்கக் கூடும்? 

அவள் முகத்தையே பார்த்தவன், “ஆஹா! என்ன நடிப்பு!” என்று பரிகசித்தான். 

“ஒன்றுமே புரியாத மாதிரி, அப்படி விழிக்கிறாயே! என்னைப் போல ஒருவனுக்கு, உன் அப்பா பெண்ணைக் கொடுப்பாரா என்று நீ கேட்கவில்லை? அதை விடவும், ” நீ என்ன சொல்வாய்” என்று நான் கேட்டதற்கு, என்ன பதில் சொன்னாய்? உன்னைப் போல ஒருத்தி, “உன்ன் . .னைப்’ போல ஒருத்தி, நல்ல் ..ல வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கும் என்ன் .. னைப் போன்ற ஒருவனை மணப்பது முட்டாள்த்தனம் என்று சொல்லவில்லை? நீ அப்படிப்பட்ட முட்டாளில்லை என்றும்!” 

“ஆமாம் சொன்னேன். அப்படியாவது, என்னை இழக்க நேருமே என்றாவது, உங்களது உயர் படிப்புக்கு ஏற்ற வேலையில் அமர்ந்து, பெரிய நிலைக்கு உயர்ந்து, உரிய வசதிகளை அனுபவிப்பீர்கள் என்று எண்ணிச் சொன்னேன். இதையா பெரிதாக நினைத்து …ஆனால், நான் சொன்னதிலே என்ன தப்பு இருக்கிறது? எல்லாம், உங்கள் நல்லதற்குச் சொன்னதுதானே? ” என்று கேட்டாள் திலோ. 

அவள், திலோ என்ன எண்ணிச் சொன்னாள் என்று, இப்போது ரஞ்சனுக்குப் புரிந்திருக்கும். தப்பு எண்ணங்கள் மாறுவதோடு, குழந்தை வேண்டாம் என்ற பிடிவாதம் கூடப் போனாலும் போய்விடும். அவனைப் போல ஓர் 

வேக வேகமாகத் திலோவின் கற்பனைகள் சிறகடிக்கத் தொடங்கியபோது, “உன்னை எப்படி நம்புவது?” என்று நிதானமாகக் கேட்டான் சித்தரஞ்சன். 

திகைத்து, “ஏன் நம்பக் கூடாது?” என்று திலோ கேட்டாள். 

“ஏனென்றால், நீ கனவு கண்டதையும் விடப் பல மடங்கு வசதியான வாழ்வு கிட்டியிருக்கிறதே! இதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, நீ பொய் சொல்லவில்லை என்று எனக்கு என்ன நிச்சயம்?” என்று கேட்டான் சித்தரஞ்சன். 

“எஎன்னது? பொய்யா?” என்று அவள் மேலும் திகைத்து, “ஐய்யோ, அப்படிக் கிடையாது, ரஞ்சன்!” என்று அவள் தலையசைத்து மறுத்ததை, சித்தரஞ்சன் காதிலேயே வாங்கவில்லை. 

“அன்று சுட்ட சட்டியாய்த் தூக்கி வீசிவிட்டுப் போனவள், இப்போது பணக்காரன் என்று தெரிந்ததும், மறு பேச்சின்றி, உடனே கழுத்தை நீட்டிவிட்டாய்தானே? அதை நியாயப்படுத்திக் கொள்ள, இப்படியொரு பொய்யை, நீ என் சொல்ல மாட்டாய்? கரெக்ட்! அதுதான் உண்மை! இந்த வளமா..ன வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்தப் பொய் சொல்கிறாய். ஆனால், இதிலெல்லாம் ஏமாறுவதற்கு, நான் முட்டாளல்ல, திலோத்தமா! உன்னைப் போலவே, நானும் கெட்டிக்காரன்தான்!” என்றான் அவன், ஏளனமாகவே! 

முட்டாள் அல்லவாமா? பெரீய கெட்டிக்காரன்தான்! எப்படித்தான் தொழிலில் ஜெயிக்கிறானோ? 

அவனை வெறித்துப் பார்த்துவிட்டு, “நீங்கள் நினைப்பது சரியில்லை, ரஞ்சன். நான் சொன்ன எதுவும் பொய்யில்லை. இங்கே வேலையில் சேர்ந்த பிறகு, இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும், கோவைக்குச் சென்று, உங்களை எப்படித் தேடி, தேடி அலைந்தேன் தெரியுமா? நாம் சந்தித்த இடங்களில் எல்லாம்…” என்றவளின் பேச்சில் இடையிட்டு, “அங்கெல்லாம் நான் தேவதாசாகச் சுற்றிக் 

கொண்டிருப்பேன் என்று கண்டு ரசிக்க வந்திருப்பாய்! ஆனால், உன்னுடைய இந்தக் கதையையும் நம்புவதற்கு மெய்யாகவே, நான் அவ்வளவு அசடன் என்றா கணித்தாய்? ” என்று, ஏளனமாகக் கேட்டான் அவன். 

“முன்பு இல்லை. இப்போதுதான் அப்படித் தோன்றுகிறது!” என்று, தனக்குள் முணுமுணுத்தாள், திலோத்தமா. 

“என்னது?” 

“ஒன்றுமில்லை!” என்றாள் அவள் கசந்த குரலில். 

இப்படிப் பேசுகிறவனிடம் என்ன விளக்கம் கூறி, என்ன பயன்? 

நிராசையுடன் திரும்பியவளுக்கு ஒன்று தோன்ற, மறுபடியும் திரும்பி, கலக்கத்துடன் சித்தரஞ்சனைப் பார்த்தாள். 

பணம் ஒன்றையே மிகப் பெரிதாக எண்ணுகிறவள். மனித மனதைத் துச்சமாகக் கருதித் தூக்கிப் போட்டு உடைக்கிறவள்! இப்படி மோசமாகக் கணித்துவிட்டு, அவளையே திருமணமே ..அதுவும் விரும்பி வந்து செய்வானேன்? 

வாழ்வின் பாதியாக ஏற்று, அவனது எதிர்காலம் முழுவதையும், அவளிடம் எப்படி ஒப்புவிப்பான்? 

இதற்குள், இன்னும் என்ன வெடிகுண்டு ஒளிந்திருக்கிறது? அவனிடமே கேட்டாள். “சொல்லுங்கள், ரஞ்சன். என்னை இவ்வளவு மட்டமாக நினைக்கிறவர், என்னை தேடி வந்து மணப்பானேன்?” 

இந்த விஷயத்தில், சித்தரஞ்சன் அவளை ஏமாற்றவில்லை. வெடிகுண்டு இருக்கத்தான் செய்தது. 

முகம் கன்றிக் கறுத்த ஒரு சிறு தயக்கத்தின் பின், அது என்ன மாதிரியான குண்டு என்று, அவளிடம், அவனே சொன்னான். ஒளிவு மறைவின்றி. 

“பணத்தின் முன், உனக்குப் பாசம் நேசம் எதுவும் கிடையாது என்று அறிய நேர்ந்தது, எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கத்தல், கதறல், அழுகை என்பன போன்ற எதுவும் இல்லாமல் அமைதியாகவே, உன்னைப் பிரிய முடிவு செய்தேன். அதற்காகத்தான், ஒன்றும் இல்லாதது போல, உன்னைச் சாப்பிட அழைத்துப் போனேன். உன்னைப் பார்ப்பது, அதுவே கடைசி என்று, உள்ளூர திட்டம். நீ கோவையை விட்டுக் கிளம்பியதும், அந்த “ஸிம்” கார்டைத் தூக்கித் தூரப் போட்டேன். உன் குரல், முகம் எல்லாவற்றையும் ஒதுக்கி, விலக்கி விட்டதாக நினைத்தேன். ஆனால்…” 

எவ்வளவு வெறுப்பு என்று மனம் தவித்த போதும், அப்புறமும் நாடி வந்தது எப்படி என்று அறிய, அவள் மனம் துடித்தது! 

“ஆனால்?” என்று எடுத்துக் கொடுத்தாள் அவள். 

லேசாகத் தோளைக் குலுக்கிவிட்டுத் தொடர்ந்தான் சித்தர்ஞ்சன்.

“ஆனால், எத்தனையோ விதத்தில் முயன்றபோதும், உன்னை மறக்க, என்னால் முடியவில்லை. ஏதோ காரணமாக…சும்மா காரணம் இல்லமலே கூட, உன் முகம் என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது! நாளாக ஆகக் குறையும் என்று பார்த்தால், அதிகம்தான் ஆயிற்று….” 

அவளைப் போலத்தான்! அவளுக்கும், அவன் நினைவு மறக்கவே இல்லையே! இதுவே காட்டவில்லையா, அவர்களிடையே உள்ளது, எப்படிப்பட்ட நேசம் என்று! 

ஆனால், சித்தரஞ்சனுக்கு அப்படி நினைக்கத் தெரியவில்லையே! 

“…கடைசியாக, அதிலிருந்து மீள, இந்த ஒரு வழிதான் என்று முடிவு செய்தேன். உனக்கும், நீ விரும்பிய பணம், பகட்டு எல்லாம் கிடைக்கும். எனக்கும் நீ கிடைப்பாய்! ஒரு வழியாக, உன்னைப் பற்றிய என் மயக்கம், ஏக்கம் எல்லாம் நீங்கும்… நம் இருவருக்கும், இது போதும் என்று எண்ணினேன்!” 

போதாது! இன்னமும், ரஞ்சன் முழுசாகச் சொல்லவில்லை. மயக்கம் தீருவதை எதிர்பார்த்து மணந்தவன், அந்த மயக்கம் தீர்ந்த பிறகு என்ன என்று சொல்லவில்லை! 

இவ்வளவுக்கும் மேல், அவன் அவ்வளவு பிடிவாதமாக மறுத்த “குழந்தைக் கதை ஒன்று, இன்னமும் இருக்கிறது! 

அல்லது … திக்கென்றது திலோவுக்கு. 

இரண்டுமே ஒன்றுதானா? மயக்கம் தீர்வதை எதிர்பார்த்துதான், குழந்தை வேண்டாம் என்று நிபந்தனை விதித்தானா? அதாவது, அவனது மயக்கம் தீருகிற காலத்தில், அவனது வாழ்வை விட்டு வெளியேற வேண்டியவள் அவள். கட்டிக் கிழித்த பழந்துணியாய், அவளைத் தூக்கி எறியும்போது, குழந்தை இருந்தால் பிரச்சினை ஆகும் என்பதால், பிரச்சினைக்கு இடமே இல்லாது பண்ணியிருக்கிறான்! என்ன அநியாயம்? என்ன குரூரம்! 

அவள் அறிந்த ரஞ்சன், அப்படிப்பட்ட கிராதகனா? எப்படி முடியும்? நம்ப முடியாத திகைப்புடன் நோக்கி, “அதற்காகத்தான் …பிரிவை எதிர்பார்த்துதான் குழந்தை வேண்டாம் என்றீர்களா? இதென்ன அநியாயம், ரஞ்சன்?” என்று திலோ கேட்டாள். 

ஆனால், அவனுக்கு அநியாயமாக ஒன்றும் தெரியவில்லை போலும். “தப்பென்ன?” என்று விட்டேற்றியாகவே கேட்டான். “யோசித்துப் பார். நமக்கு ஒரு குழந்தை உருவானால், அது உனக்கும் பிரச்சினையாகவே அமையும். 

குறுக்கிட முயன்றவளைக் கையுயர்த்தித் தடுத்து, அவன் மேலே பேசினான். “இன்றைய நிலையில், ஒரு குழந்தை இருந்தால், வீட்டில், உன் உரிமையைப் பலப் படுத்திக்கொள்ள ஒரு கருவியாக உனக்குத் தோன்றலாம். ஆனால், என்னை விடப் பெரிய பணக்காரன் ஒருவனை உனக்குப் பிடித்துப் போய்விட்டால், அப்போது பிரிந்து 

“ரொம்பப் பரந்த மனது, உங்களுக்கு!” என்றாள் அவள் எரிச்சல் தாளாமல், குத்த முயன்று. 

வழக்கம்போல, லேசாகத் தோளைக் குலுக்கினான் சித்தரஞ்சன். “எனக்கும், இதில் ஒரு நன்மை இருக்கிறது, திலோத்தமா. நீ பிரிய விரும்பு முன்னராகவே, எனக்கு நீ அலுத்துப் போய்ப் பிரிவை நான் விரும்பினால், குழந்தையை வைத்து என்னைக் கட்டிப்போட, உன்னால் இயலாதிருக்க வேண்டும் அல்லவா? உன் பணத்தாசை பற்றித் தெரிந்துவிட்டதால், அப்படிப் பட்ட நிலை ஏற்படாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும்தான், இந்த முடிவு செய்தேன்.’ 

உறுத்தலே இல்லாமல் சொல்லி முடித்தவன், “முக்கியமாக, இன்றைய நிலையில், உனக்கு என்னைப் பிரிய மனம் வராதுதானே?” என்றான் ஏளனமாக. 

நொந்து, நைந்து என்று திலோ படித்திருக்கிறாள். உண்மையிலேயே, அப்போது, அவளது இதயம் அப்படித்தான் இருந்தது. மற்றபடி, இப்படி வலிக்காது! 

கடைசி முயற்சியாக, “இவ்வளவு யோசித்துத் திட்டமிட்டுச் செயல்பட, உங்களால் முடிந்திருக்கிறது. ஒரே ஒரு தரம், இவள் நல்லவளாகவும் இருக்கலாமே என்று அந்த மாதிரியும் எண்ணிப் பாருங்களேன், ரஞ்சன்!” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள். 

“எப்படி முடியும்?” என்று கேட்டான் சித்தரஞ்சன். “யாரோ சொல்லி, இதை நம்பி நான் செயல்படவில்லையே! என் கண் முன்னால், என்னிடமே அல்லவா, கூறினாய்! என்னை மணப்பதற்கு, நீ முட்டாள் அல்ல என்றாயே! அதுவும், அவ்வளவு நாட்களும் ஒட்டிப் பழகிவிட்டு! அதற்கு மேலும், உன்னை நம்புவதற்கு, நான் பைத்தியக்காரனா?” “ரஞ்சன், நான் அப்படிச் சொன்னது, மெய்யாகவே உங்கள் ..” என்று மறுபடியும் காரணம் சொல்லத் தொடங்கியவள், அவன் முகம் கடுப்பதைக் கண்டு, திகைத்துப் பேச்சை நிறுத்தினாள். 

அவள் சொல்வது எதையுமே அவன் நம்பத் தயாராக இல்லை என்றால், என்னதான் செய்வது? அவனை நம்ப வைப்பதற்கு, ஒரு வழியுமா இல்லாது போகும்? 

ஏதாவது ஒரு நிரூபணம் … சான்று … 

சட்டென நினைவு வர, மீண்டும் நம்பிக்கையோடு, அவன் முகத்தைப் பார்த்தாள். 

அவன், அவளைத்தானே பார்த்துக் கொண்டிருந்தான். ஓர் ஏளன உதட்டுப் பிதுக்கலுடன், “புதிதாக என்ன கதை உருவாகியிருக்கிறது?” என்று வினவினான். 

“எந்தக் கதையும் இல்லை! மீண்டும், மீண்டும் கோவைக்குச் சென்று, நான், உங்களைத் தேடினேன் என்பதற்கு ஆதாரம். உங்கள் கோவை “கனவு இல்லம்” கிளையில் வேலை செய்த ஒருவர். வரவு செலவுக் கணக்குப் பிரிவு! நான், திரும்பத் திரும்ப சென்று, உங்களைப் பற்றிக் கேட்டு விசாரித்ததில் எரிச்சலடைந்து, சம்பளப் பட்டுவாடா “லிஸ்டை”யே, “நீயே பார்த்துக்கொள்” என்று, என்னிடம் காட்டினார். அவர் பெயர் கூட கிட்டத்தட்ட மாமா பெயர் போல இருக்கும். சு… சுந்தரேசன்!” என்றாள் அவள். “அவரிடம் விசாரித்தீர்கள் என்றால், நான் கோவைக்கு அடிக்கடி போய், உங்களைப் பற்றிக் கேட்டது, கட்டாயம் தெரியவரும்!” என்று உற்சாகத்துடன் கூறினாள்! 

உயிருள்ள சாட்சி! அதுவும், அவனது அலுவலகத்திலேயே பணி புரிகிறவர்! அவர் பேச்சை நம்பாமல், சித்தரஞ்சன் எப்படி விடுவான்? 

ஆனால், “பிரமாதம்!” என்று கணவன் கை தட்டிய விதம், அவளது வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்தது! 

என்னவோ என்று, அவள் விழி விரியப் பார்த்திருக்க, ரஞ்சன் தொடர்ந்தான். “நீ கெட்டிக்காரி என்று எனக்குத் தெரியும், திலோத்தமா! ஆனால், இவ்வளவு குயுக்தி இருக்கும் என்று, எனக்குத் தெரியாதும்மா! நான் அந்த நிறுவனத்தின் உரிமையாளன். எனவே, சம்பளப் பட்டியலில் என் பெயர் இருக்காது என்று ஊகித்து, அதை நீ தேடிக் கண்டுபிடித்த மாதிரிக் காட்ட, ஏறத் தாழ, நீ பிரிந்து சென்ற அந்தச் சமயத்திலேயே, பணியிலிருந்து விலகிப் போனவரைச் சாட்சிக்குக் கூப்பிடுகிறாயே! இப்போது, அவர் இருக்கும் இடமே, தெரியாது! எவ்வளவு கெட்டிக்காரத்தனம் இருந்தால், அவர் பெயரைச் சொல்லுவாய்? அப்ப்பா! படு பயங்கரமான ஆள் நீ!” 

பாராட்டுவது போலவே, ஒருத்தியை இவ்வளவு மட்டம் தட்ட, இவனால் மட்டும்தான் முடியும்! 

ஆனாலும், அவளது தலைவிதியை என்னவென்று சொல்ல? இருந்திருந்து, அந்த மனிதரா, வேலையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? 

அதுவும், அதே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! 

அலுத்துப் போய்விட்டபோதும், திலோத்தமா அத்துடன் விட்டுவிடவில்லை! 

எப்படி விடுவது? வீணாவது, அவளது நிம்மதி ஆயிற்றே! தன் சுய விளக்கப் பேச்சு அவனுக்குக் கடுப்பேற்றுவதை உணர்ந்து, அதை நிறுத்திக் கொண்டாள். 

ஆனால், அவள் எதெதற்கு ஆசைப்படுகிறவள். பேராசைப் படுகிறவள் என்று சித்தரஞ்சன் சொன்னானோ, அவற்றை ஒதுக்கித் தன்னை நிரூபிக்க முயன்றாள்.. 

பெரிய நகைள், உயர்ந்த உடைகள், வாழ்க்கை வசதிகள்! எதுவுமே வேண்டாம் என்று இருக்கத் தொடங்கினாள். 

உணவில் உயிர் வாழப் போதுமானதை மட்டுமே உண்டாள். 

அவளது அறையில் ஏசி போடுவது இல்லை. காரைப் பயன்படுத்தி எங்கும் செல்வது இல்லை. 

அவன் வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த ஆடைகளை அணிவது இல்லை. பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்தவைகளிலும், மிகச் சாதாரணமானவைகளையே தேடி எடுத்து உடுத்தினாள். 

அவன் வாங்கிக் கொடுத்த நகைகளை, அவனது அறையிலேயே கொண்டுபோய் வைத்துவிட்டாள். 

இந்தச் செயல்களால் எந்தப் பயனும் விளையக் கூடும் என்று பெரிய நம்பிக்கை எதுவும் அவளுக்கு வர மறுத்தது! நடிப்பு என்றுகூடச் சொல்லக் கூடும். ஆனால், எவை எவைகளுக்காக எதையும் செய்வாள் என்று, சித்தரஞ்சன் அவளைப் பற்றி மட்டமாகப் பேசினானோ, அந்தப் பொருட்களை அனுபவிப்பது, பயன்படுத்துவது கூட, அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று. 

இதெல்லாம் இல்லாமல், அவளால் வாழ முடியாதா? அல்லது, இவைகளுக்காக மட்டுமே, அவள் யாரையேனும் மணப்பாளா? குடிசையில் கூட, சந்தோஷமாக வாழ்கிறவர்கள் இல்லை? இப்படியெல்லாம் எண்ணியவள், கணவனையுமே, முடிந்த அளவு தவிர்த்தாள். 

போகட்டும். அவன் சொன்ன பிரிவு றேரும்போது, இந்தத் துன்பம், அவள் அனுபவித்துத்தானே தீரவேண்டும்? இது ஒத்திகையாக இருக்கட்டும் என்று எண்ணிப் பல்லைக் கடித்து, சகித்தாள் திலோத்தமா. 

அத்தியாயம்-10

சில் வண்டாய் அருகிலேயே இருந்து பேசிச் சிரித்து விளையாடி இருந்ததை விடுத்து, சித்தரஞ்சனிடமிருந்து விலகி நின்றது, திலோத்தமாவுக்குத் துன்பமாகத்தான் இருந்தது. 

ஆனால், அவன் பேசிய பேச்சுகளின் பின், அவளது எதிர்ப்பும், வேதனையும், அவனுக்கும் தெரிய வேண்டும்தானே? 

ஒரு சில நாட்கள் கவனியாதது போல இருந்தவன், ஒருநாள், திடுமெனக் கோபம் காட்டினான். 

“எதற்கு இந்த ஜாலம்? இதனாலெல்லாம், முன்பு நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை, உன்னைத்தான் நான் இனியும் நம்பிவிடுவேனா? ஏங்கி இருந்தது கிடைத்தால், அதை அனுபவிப்பதுதானே?” என்று கேட்டான். 

“என்றோ ஒரு நாள், உங்கள் வாழ்வை விட்டு என்னை வெளியேற்றப் போகிறீர்கள்தானே? அன்றைய நிலைக்கு, இப்போதே பழகிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்!” என்றாள் அவள் பதிலுக்கு! 

“ரொம்பக் குத்தலாகப் பேசிவிட்டதாக நினைப்போ? சட்ட பூர்வமாக என் மனைவி, நீ. பிரியும்போது கிடைக்கும் பெருந்தொகையே, வளமான வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கும். அதனால், இந்த அசட்டுப் பைத்தியக்காரத்தனங்களை நிறுத்திக்கொள்.” என்றான் அவன் அதிகாரமாக. 

அவளது நகைகளை அவளது அறையிலேயே கொண்டு வந்து வைத்து “முதலில், இந்த நகைகளை எடுத்து, உள்ளே வை! நான் நகை அணிவது இல்லை என்பதோடு, இவை உனக்காக வாங்கியவை. நாம் பிரியும்போதும், இவை உன்னோடுதான் இருக்கப் போகின்றன.’ பிரிவு. அதை அவன் விடுவதாக இல்லை! மறக்க விடுவதாகவும் இல்லை! 

அவள் பேசாமலே நிற்கவும், “இந்த ஒரு வாரத்து நடவடிக்கைகள் எல்லாவற்றையுமே இத்தோடு விட்டுவிடு. எல் . .லாவற்றையுமே! இதனாலெல்லாம், நமக்குள் எதுவுமே மாறப் போவது இல்லை. முக்கியமாக, உன் மீதுள்ள என் மோகம் இப்போதைக்கு, எனக்குத் தீருவதாக இல்லை. அதனால், இப்படி விலகியிருந்து, சீண்டி, தூண்டிவிட வேண்டிய அவசியமும் இல்லை!” 

மனம் வெதும்பி ஒதுங்கினால், அவள் கனவிலும் கருதாத உள்ளர்த்தம் ஒன்றை, அதற்கும் கற்பிக்கிறானே! 

கொதித்துப் போய், “ஒருவேளை, எனக்கு நீங்கள் அலுத்துப் போய்விட்டீர்களோ, என்னவோ?” என்றாள் அவள் ஆத்திரத்தோடு. 

அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. ஏளன நகைப்பு! 

“அருகிலே வந்தேன் என்றால், உன் பொய் ஒரு வினாடி கூடத் தாங்காது என்பது, உனக்கும் தெரிந்த உண்மை!. அதனால், இந்த அசட்டுப் பேச்சுகளை விட்டுவிட்டு, அசட்டுத்தனங்களையும் விட்டுவிட்டு, எப்போதும் போல இரு.” என்றான் அழுத்தத்துடன். 

ஒத்துக்கொள்ளப் பிடிக்கவில்லை என்றாலும், அவன் சொன்னது உண்மைதான். 

அடுத்தவரின் அருகாமை இருவருக்குமே சொர்க்கமாகத்தான் இருந்தது! ஆனால், தனியாக இருந்து யோசிக்கும்போதுதான், திலோத்தமா ரொம்பவும் தவித்துப் போனாள். 

தன்னை இவ்வளவு மட்டமாக நினைக்கிறவன் தொட்டால் ஒட்டிக்கொள்கிறோமே என்று அவமான உணர்வு, அவளைக் குன்றிக் குறுக வைத்தது. 

அதே சமயம், அவன் உறுதியாகச் சொல்லுகிற அந்தப் பிரிவு நேரும்போது, அதைத் தாங்குவது எப்படி என்கிற கவலை வேறு, அவளை நெஞ்சடைக்கச் செய்தது. 

இரண்டுமாகத் திலோவை உலுக்கி எடுத்தது, அவளது உடலில் தெரியத் தொடங்க, அது மற்றவர்களின் கவனத்தையும் கவர்ந்தது. 

தாய் வீட்டுக்கு வந்து, நாள்க் கணக்கில் தங்காவிட்டாலும், வெளியே போய் வருகிற வேளைகளில், திலோ அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டுப் போவாள். சில மணி நேரம் தங்கிவிட்டுக் கூடச் செல்வதுண்டு. 

சித்தரஞ்சனே, உத்தம மருமகனாக மனைவியை அழைத்துப் போய் வருவான். 

இப்போது இருவருக்குமிடையே நேர்ந்த உரசல், கணவன் மனைவி இருவரையுமே பாதித்து, பல பழக்க வழக்கங்களை மறக்கவைத்தது. 

என்னதான் திட்டம் போட்டுத் திலோவை மணந்திருந்தபோதும், அதை இவ்வளவு சீக்கிரமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவர, சித்தரஞ்சன் எண்ணவில்லை போலும். திட்டம் மாற நேர்ந்ததிலோ என்னவோ, அவனுக்குப் பல்வேறு மனப் பிரச்சினைகள்! அதனூடே, அவனது உத்தமப் போர்வையைக் கூட அணிய மறந்து போனான். 

திலோவைப் பொறுத்த அளவில், அது உள்ளார்ந்த உணர்ச்சியில்லை., வெறும் போர்வை என்று அறிய நேர்ந்ததே, மாபெரும் அதிர்ச்சி! 

பயங்கர அதிர்ச்சியும், அதையும் ஒதுக்கி, ஏதேதோ முயன்றும் நிலைமையைச் சீர் செய்ய முடியாத தவிப்புமாக, அன்றாடக் கடமைகள் கூட, அவளுக்கு மறந்து போயின. உணவு உட்பட! 

மெல்ல இது, மற்றவர்களின் கவனத்தையும் கவரலாயிற்று. தொடர்ந்து ஒரு மாதமாகியும் மகள் வராதிருக்கவும், பெற்றவள், தானே மகளைப் பார்க்க வந்தாள். 

மகளின் சிறு மெலிவு, தாயின் கண்களுக்குத் தப்பவில்லை. 

முதலில் ஆவலாக மகளின் முகத்தைப் பார்த்த செந்திரு, அங்கே இருக்க வேண்டிய பூரிப்பைக் காணாமல் திகைத்துப் போனாள். 

அது மட்டுமல்ல. “ஏதேனும் விசேஷமா?” என்று ஆர்வத்துடன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுமுன், பார்த்ததே பொய்யோ என்று ஐயமுறும் வேகத்தில் மகளின் முகத்தில் தோன்றி மறைந்த வலி, தாயின் நெஞ்சைக் கனக்க வைத்தது. 

கவலையோடு, பிரச்சினை என்னவென்று மகளிடம் விசாரித்தாள். 

நிர்மலமான முகத்துடன், “பிபி .. பிரச்சினையா? ஏனம்மா திடீரென்று, இப்படி ஓர் அசட்டுக் கேள்வி?” என்று வேடிக்கை போலக் கேட்டாள் மகள். 

தோன்றியதா, இல்லையா என்றே நிச்சயமில்லாத ஒன்றை, எப்படிக் கேட்பது? செந்திரு சற்றுத் தயங்குகையிலேயே, “இங்கே வாங்கம்மா!” என்று, திலோ, தாயை எழுப்பித் தன் அலமாரியைத் திறந்து காட்டினாள். சித்தரஞ்சன் திருப்பித் தந்த நகைகளைக் காட்டினாள். 

“எல்லாம், வைரம், ரூபி, எமரால்டு என்று ஒரிஜனல் ரத்தினங்கள்ம்மா. இவ்வளவு நாட்களுக்குள், உங்கள் மருமகன் எனக்கு வாங்கித் தந்தவை. நீங்களானால், என்னவோ கேட்கிறீர்களேம்மா!” என்று சலுகையாகத் 

தோளைக் கட்டிக்கொள்ளவும், தாயின் கவலை அகன்று, அப்போதைக்கு நிலைமை சரியாயிற்று. 

ஆனால் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, மகளின் வீட்டுக்குப் போய் வந்தது குறித்துக் கணவனிடம் விவரிக்கும் போதுதான், செந்திருவுக்கு உள்ளூர உறுத்தியது. 

பிரச்சினை பற்றிக் கேட்டபோது, கண்ணைப் பாராமலே, திலோ பதில் சொன்னாளோ? அதற்கு வசதியாகத்தான், சலுகை போலத் தோளில் அவள் சாய்ந்துகொண்டதேயோ? 

உடனே மகளிடம் இது பற்றிக் கேட்டறியச் செந்திருவின் உள்ளம் துடிக்கத்தான் செய்தது. ஆனால், கணவன் மனைவிக்கிடையே, கூடல் போல, ஊடலும் இல்லாதிராது. 

பெற்றவளே என்றாலும், இதிலெல்லாம் மூக்கை நுழைப்பது அநாகரீகம்! புது மணமக்களுக்கு நல்லதுமில்லை! 

தானாக அமர்ந்து விடக் கூடிய கங்கு. ஊதி, பெரும் தீயாக்கி விடக் கூடாது. 

சற்றுத் தள்ளித்தான் என்றாலும், உள்ளூரிலேயே வசிக்கும் மகளைப் பார்க்க, பேசத் துடித்த மனதை, செந்திரு அடக்கிக் கொண்டு சும்மா இருந்தாள். 

பொதுவாகத் தொழில், கிளப் நண்பர்கள் தவிர வேறு எதையும் அதிகம் கவனியாத நடேசனுக்கும், மருமகளின் வேறுபாடு கண்ணில் பட்டு உறுத்தியது. 

ஆனால், அவரும் பெரிய மனிதர் அல்லவா? கணவன் மனைவி தகராறில் அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்து குட்டை குழப்ப, அவரும் விரும்பவில்லை. 

ஆனால் சும்மா ஒதுங்கி விடாமல், வேறு வழி கையாண்டார்! 

மகள் வீட்டுக்கு மனைவி சென்று சில மாதங்கள் கடந்து போயிருந்தன. தானும் சென்று சில தினங்களை மகள் வீட்டிலே கழித்துவிட்டு, மனைவியோடு திரும்பலாம் என்று திட்டமிட்டார். 

மனைவி வந்தால், எல்லாம் சரியாகிப் போகும் என்பது, அவரது அசைக்க முடியாத நம்பிக்கை! 

ஆனாலும் மகனிடம், மருமகள் மெலிவது குறித்து, ஒரு முறை குறிப்பிட்டுப் பேசிவிட்டே போனார். 

அதன் பிறகே விழிப்பு வந்தவன் போலக் கவனித்தபோது, மனைவியின் மெலிவு, சித்தரஞ்சனின் கண்களையும் உறுத்தியது. 

ஆனால் அதற்காகவும், அவளிடமே ஆத்திரப்பட்டான். 

“சுற்றிலும் ஒவ்வொரு பிடியாகப் பலப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாயாக்கும்? 

அப்பா பார்த்து, உனக்காகப் பேச வைப்பதற்காகத்தானே, இந்த அரைப் பட்டினி, முக்கால் பட்டினி எல்லாம்? இன்னும், அம்மா வந்ததும், அவர்கள் வேறு விசாரிக்கவேண்டும்! அதுதானே, குறிக்கோள்? நான்தான், இப்போதைக்கு நாம் பிரியப் போவது இல்லை என்று, தெளிவாகச் சொன்னேனே! அப்புறமும், எதற்கு இந்த அசோக வனத்து சீதை வேஷம்?” என்று காய்ந்தான். 

“வேஷம் போடுவது, எனக்குப் பழக்கம் இல்லாதது.” என்றாள் அவள் மொட்டையாக. 

முகம் கன்றியபோதும், “அதை, நான் சொல்லவேண்டும்!” என்று திருப்பிக் கொடுத்துவிட்டு, “பின்னே, ஒழுங்காகச் சாப்பிடுவதுதானே? ஊறுகாயும், மோர்சாதமும் மட்டுமாய், உன் வீட்டில்கூட உண்டு பழக்கமில்லை என்று எனக்கும் தெரியும்.” என்றான் சித்தரஞ்சன் கோபமாக. 

மேஜைமீது இருந்த உணவு வகைகளை ஆராய்ந்துவிட்டு, கண்களில் யோசனையோடு, “அன்பிலாச் சோறு என்பிலே குத்தியது” என்று, எதிலோ படித்தேன். உங்கள் வீட்டுச் சோறு அல்லவா? எதுவும் மனதுக்குப் பிடிக்கவில்லை.” என்றாள் திலோத்தமா. 

“எப்படிப் பிடிக்கும்? அம்மா, அப்பா வந்து, அவர்கள் முன்னே என்னைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தித் தலை குனிய வைக்குமுன், எதுவுமே பிடிக்காதுதான்!” என்று, ஆத்திரத்துடன் படபடத்தான் சித்தரஞ்சன். 

உணவின் மேல் இருந்த யோசனைப் பார்வை, இப்போது, சித்தரஞ்சனிடம் கூர்மையுடன் திரும்பியது. 

லேசாக உதட்டைப் பிதுக்கி, “வெறும் உணவுக்காகவே தலை குனியத் தயங்குகிறீர்களே? நாளைக்குப் பிரிவு என்பதை, நிமிர்வோடு எப்படித்தான் சொல்லுவீர்களோ? அது, இதைவிட மோசமில்லை?” என்று கேட்டாள். 

குரலில் ஏளனம் கலப்பதை, அவளால் தவிர்க்க முடியவில்லை. உயிர் போக அடிப்பது பற்றி ஒன்றுமில்லையாம். விரல் சிறாய்ப்பைப் பெற்றோர் பெரிதாக நினைப்பார்களே என்று கவலைப்படுகிறானாம்! வேடிக்கைதான்! 

“எங்கே சுற்றினாலும், அங்கேதான் வருவாய் என்று எனக்குத் தெரியும்!” என்று சீறினான் சித்தரஞ்சன். “ஆனால், நீ என்ன முயன்றாலும், என் முடிவு மாறாது. இறுதி முடிவு என்று தெளிவுபடுத்திவிட்டால், அதற்குமேல், என் பெற்றோர் குட்டை குழப்பாமல் ஒதுங்கிவிடுவார்கள். அதனால், இந்த மாதிரிப் பட்டினி கிடந்து உன் உடம்பை நீயே கெடுத்துக் கொள்வதால், எந்தப் பயனும் இல்லை. எனவே, ஒழுங்காகவே சாப்பிடலாம்! சாப்பிடு.” என்றான். 

இறுதி முடிவு! 

தட்டில் இருந்ததைக் கூட உண்ணாமல், திலோத்தமா கைகழுவ எழுந்தாள். 

ஆத்திரத்துடன் தட்டை ஒதுக்கிவிட்டு, சித்தரஞ்சனும் எழுந்தான். “புரிகிறது.நம்மால்தானே இவள் பட்டினி கிடக்கிறாள் என்று எனக்கு மனம் உறுத்த வேண்டும். அதுதானே? நோக்கம் வெற்றி பெற்றுவிட்டதாகச் சந்தோஷப்பட்டுக்கொள்!” என்று, அவளை முந்திக்கொண்டு சென்று கையைக் கழுவினான். 

பொதுவாக, விடுமுறைநாள் உணவு அங்கே சிறு விருந்துபோல இருக்கும். அன்றுதானே, ஆண்கள் ஆற அமர இருந்து உண்கிறார்கள் என்று, பானுமதி செய்த ஏற்பாடு. சித்தரஞ்சனுக்குப் பிடித்தவையே, பொது மெனுவாகவும் இருக்கும். 

எதையும் சாப்பிடாமல் கணவன் செல்வது, திலோவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. 

ஆனால், அவளுக்கும் மனம் என்று ஒன்று உண்டுதானே? அது ரத்தம் வடிக்கையில், அவன் உண்பதற்காக வலியைப் பொறுத்துப் புன்னகை பூசி உட்கார்ந்திருக்க, அவளுக்கு விருப்பமில்லை. 

அதுவும், ரத்தம் வடிய வைத்தவனே, அவன்தான் எனும்போது! உணவைப் போலவே, இரவுத் தூக்கமும், திலோவுக்கு அரிதாகிப் போகலாயிற்று. 

என்ன செய்வது, என்ன செய்வது என்று அதே கேள்வி, மனதை வண்டு போலக் குடையும்போது, நிம்மதியான உறக்கம் எப்படி வரும்? 

பார்த்ததுமே தொடங்கி, மூன்று ஆண்டுகள் தொடர்பே இல்லாதபோதும், இருவர் நெஞ்சிலும் அழியாதிருந்து இணைந்த நேசம்! 

ரஞ்சன் அதை நேசமாக ஏற்க மறுத்தாலும், அது உயிர் நேசமே என்பதில், திலோவுக்கு ஐயமே கிடையாது. அப்படிப்பட்ட அன்பு, எப்படிப் பிரிவில் முடியக் கூடும்? 

தடுப்பதற்கு ஏதாவது வழி இருக்கத்தான் செய்யும். அது என்ன? தன் தாய் மாமா சுந்தரிடம் சொல்லி, “கனவு இல்லம்” சுந்தரேசனைத் தேட வைத்து, ஒரு முயற்சி செய்து பார்த்தாள். ஆனால், பணி விலகிய மனிதர் பற்றி, அக்கம் பக்கத்தில் கூட, எந்த விவரமுமே கிடைப்பதாக இல்லை. வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருக்கும் உறவினரோடு வசிக்கிறார் என்று அதுவும், தெளிவற்ற வதந்திதான் கிடைத்தது. 

ஒரே ஒரு நல்ல சேதியாகப் பாட்டியின் உடல்நிலை, பெரிதும் தேறியிருப்பதாகத் தாய்மாமன் சொன்னான். மற்றபடி, அவளது பிரச்சினை அப்படியேதான் இருந்தது. 

வழக்கம் போல, இல்லாத வழியைத் தேடித் தேடி அலுத்துப்போய், ருளை வெறித்தவாறு திலோத்தமா மனம் சலித்து நின்றாள். 

பழைய பாட்டின் ஒரு பகுதி, காற்றோடு எங்கிருந்தோ வந்து, காதில் மோதியது. 

“….உணவு செல்லவில்லை சகியே, உறக்கம் கொள்ளவில்லை. கணமும் உள்ளத்திலே அமைதி, காணக் கிடைக்கவில்லை ….”

பாட்டின் முன்னும், பின்னும் என்னவோ? ஆனால், கணமும் உள்ளத்திலே அமைதி இல்லாதபோது, பசி, தூக்கம்கூட இல்லாது போய்விடும் போல! 

“ம். இது அடுத்த மிரட்டலா? மொட்டை மாடியில் இருந்து, எப்போது குதித்து, என்னமும் செய்து கொள்வாயோ என்று, நான் பயந்து நடுங்க வேண்டுமாக்கும்?” என்றது சித்தரஞ்சனின் கடுமையான குரல். 

விதியை நினைத்துச் சும்மா நின்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், அதுவும் குற்றமா? 

“நடுங்குவானேன்? நல்லதாயிற்று., பிரிவின்போது கொடுக்க வேண்டிய பெரும் பணம் மிச்சமாகும் என்று சந்தோஷப்படுங்கள். செத்தவர்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தேவை இராதல்லவா?” 

“ஏய் ..!” என்று கையை ஓங்கிவிட்டான் சித்தரஞ்சன்.

கை ஓங்குகிற அளவு கோபமா? 

எத்தனை தரம் மரண அடி கொடுத்தாலும், மீண்டும், மீண்டும் தலை தூக்கிப் பதில் கொடுக்கிறாளே என்பதாலா? அவ்வளவுகூட இல்லை என்றால், அவள் படித்துப் பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகள் வேலை பார்த்ததில் என்ன பயன்? 

அவள் வெறித்துப் பார்த்தபடி அசையாது நிற்கவும், ஓங்கிய அவனது கரம், தானாகக் கீழே விழுந்தது. குரலும் இறங்கியது. 

“வா. உள்ளே வந்து படு. பனியில் நிற்க வேண்டாம்.” என்று இறங்கிய குரலில் கூறியவன், “வா!” என்று, அவளைத் தோளோடு அணைத்து, உள்ளே கூடடிச் சென்றான். 

அவனது வார்த்தைகளுக்கு மட்டுமாக, அவள் பணிந்து வரமாட்டாள் என்று எண்ணினானோ, என்னவோ? பாவம்தான்! 

ஆனால், இப்போது யார் பாவம்? 

இந்நிலையில், செந்திருவிடம் இருந்து, மகளுக்கு ஒரு சேதி வந்தது. கோவையிலிருந்து பாட்டி, வெகு அபூர்வமாகச் சென்னைக்கு வருகிறாளாம். 

அபூர்வம் என்கிற அடைமொழியைப் பாட்டியின் வருகைக்குக் கட்டாயம் சேர்த்தே ஆகவண்டும். ஏனெனில், வீட்டை விட்டுப் பாட்டி வெளியே எங்கும் சென்றதாகத் திலோ கேள்விப்பட்டது கூடக் கிடையாது. 

அப்படியானால், மெய்யாகவே, பாட்டி எவ்வளவோ தேறித்தான் இருக்க வேண்டும்! 

வழக்கம் போலவே, உத்தம மருமகனாக, பெரியவர்களை அலைய விட வேண்டாம் என்று, மனைவியை மாமியார் வீட்டுக்குச் சித்தரஞ்சன் அழைத்துச் சென்றான். 

ஆனால், திலோத்தமா எதிர்பார்த்துச் சென்ற அளவுக்குப் பாட்டியிடம் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட அதே சோர்வு. சோஃபாவில் சாய்ந்துதான் அமர்ந்திருந்தாள். அதே பஞ்சடைந்த கண்கள்! 

பயண அலுப்பு என்றாள் செந்திரு. 

ஆனால், பேத்தியுடைய கணவனைப் புருவம் சுருக்கிப் பாட்டி நன்கு பார்க்க முயன்றதும், அது சரி வராமல் தலையை அசைத்துக் கொண்டதும் சின்னவளுக்கு வருத்தத்தையே அளித்தது. 

இந்த வயதான பெண்மணிக்கு, எதற்கு இந்த அலைச்சலும், வேதனையும்? 

அவளது வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருந்தால், கணவனும் மனைவியுமாகப் பெரியவள் இருக்கும் இடத்திற்கே போய்ப் பார்த்திருக்கலாம். 

அவன்தான், கோவையைப் பற்றிப் பேசவே, முதலில் இருந்தே விடவில்லையே! 

“பிரச்சினையா” என்று கேட்ட பிறகு, தாய் வீட்டில் தனித்திருக்கத் திலோத்தமாவுக்கே அவ்வளவாக விருப்பமில்லை. 

பிரச்சினைகள் எதையும் பெற்றவளிடம் சொல்லி விடுவாளோ என்ற பயமோ, என்னவோ, மனைவியை அங்கே விட்டுச் செல்ல, சித்தரஞ்சனும் பிரியப்படவில்லை. 

எனவே, சற்று நேரம் பாட்டியோடு உட்கார்ந்திருந்துவிட்டு, பெரியவர்கள் ஒருவரும் ஊரில் இல்லாததால் பொறுப்பு .. என்று காரணம் காட்டி, பெரியவள் பேத்திக்குக் கொணர்ந்திருந்த சீரைப் பெற்றுக்கொண்டு, இருவரும் கிளம்பிவிட்டனர். 

என்னவோ ஏமாற்றம் திலோத்தமாவின் நெஞ்சைப் பெரிதாக அரித்தது. அவள் என்ன எதிர்பார்த்தாள்? 

சித்தரஞ்சனைக் கண்டதும், பாட்டி அடையாளம் தெரிந்து கொள்வாள் என்றா? 

தெரிந்துகொண்டு, உன்னைத் தேடி, என் பேத்தி எத்தனை முறை வந்தாள் தெரியுமா என்று கேட்பாள் என்றா? ஆனால், அவள், ரஞ்சனைத் தேடி அலைந்த விவரம், பாட்டிக்கோ, மாமன் வீட்டாருக்கோ, யாருக்குமே, சரியாகத் தெரியாதே. 

குடும்பப் பின்னணி, இருப்பிடம் எதுவும் தெரியாத ஒருவனைத் தேடுவதாகச் சொல்லக் கூசி, ஒரு தோழியோடு ஊரைச் சுற்றியதாகத்தானே, வீட்டினர் எல்லோரையும் எண்ண வைத்திருந்தாள்! 

இப்போது பாட்டி மூலமாக நிஜமே தெரிந்தால்கூட, சித்தரஞ்சன் இருக்கும் மனநிலைக்கு, அதை, அவன் நம்பப் போவதில்லை. ஆனால், கிடைத்திருக்கக் கூடிய சிறுசிறு வழிகளையும், தன் கையாலேயே மூடிவிட்டது போல, ஒரு வருத்தமும், சோர்வும், திலோவை ஆட்கொண்டன. 

வீட்டுக்குத் திரும்பிச் சென்றவள், கண்களை மூடிக்கொண்டு, அப்படியே படுத்துவிட்டாள். 

அன்று மட்டுமல்ல. தொடர்ந்து சில நாட்கள் அப்படியே கழிந்தன.

பாட்டி கோவைக்குத் திரும்புகிறபோது மட்டும், கஷ்டப்பட்டு, ரயில் நிலையத்துக்குப் போய்வந்தாள். 

என்ன செய்கிறது, டாக்டரிடம் போகலாமா என்று சித்தரஞ்சன் கேட்டதற்கு, அவள் பதிலே சொல்லாமல் வெறுமனே “உச்”சுக் கொட்ட, அவனும் எரிச்சலோடு திரும்பிக் கொண்டான். 

இந்நிலையில், அலுவலகத்தில் இருக்கையில், சித்தரஞ்சனுக்கு ஒரு ஃபோன் வந்தது. 

“உங்களிடம் சற்றுப் பேசவேண்டும். எங்கள் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்டவள் செந்திரு! அவனுடைய மாமியார்!

– தொடரும்…

– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *