காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 1,986 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-11

பொதுவாக, மாமியாரைப் பொறுத்தவரையில், சித்தரஞ்சனுக்குப் பிரச்சினை எதுவும் கிடையாது.

அந்த வீட்டில், திலோத்தமா தவிர, எல்லோருமே அப்படித்தான்.

பணத்துக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் விதமாகத் திலோவை வளர்த்து விட்டார்கள் என்பது ஒன்றுதான், அவர்களிடம் குறையாக, அவன் உணர்ந்தது. 

ஆனாலும், இப்போது அதிகமாக ஒட்டி உறவாடினால், பின்னர் பிரியும்போது சங்கடமாக இருக்கக் கூடும் என்பதால், தேவை என்கிற அளவுக்குமேல், சித்தரஞ்சன் மாமனார் வீட்டுப் பக்கம் போனதில்லை. தங்கி இருந்ததும் இல்லை! 

மாமியாரும் இப்படிக் கூப்பிட்டுப் பழக்கம் கிடையாது. அன்பு காட்டினாலும், மட்டு மரியாதையும், அதிகமாகவே வெளிப்படும். அந்தப் பையன் நரேந்திரன் விஷயமாக ஏதாவது ஆலோசனை கேட்க, மாமியார் விரும்புகிறாளோ என்று யோசித்துவிட்டு, அப்படி இராது என்று ஒதுக்கினான், மருமகன். 

நரேந்திரன் வயதுக்கு, அவன் அருமையான பையன். அவனால் பிரச்சினை எழும் பேச்சுக்கே இடமிராது. 

பின்னே, பேச வேண்டியது, தன்னைப் பற்றியேதானோ? 

குப்பென்று வியர்த்தது, அவனுக்கு. 

திலோ ஏதேனும் சொல்லியிருப்பாளோ? 

ஆனால், அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள் என்றுதான், அவனுக்கு நிச்சயம். சில மோசமான ஆசைகள் உண்டு என்றாலும், திலோ ரோஷக்காரி. தான் தோற்றுவிட்டதாகத் தாயிடம் கூறக்கூட, அவளுக்குப் பிடிக்காது. 

அது மட்டுமல்ல. எப்போதோ நடக்கப் போகிற விஷயத்துக்காக, இப்போதே பெற்றவள் மனதை வருத்த வேண்டாம் என்று, வேதனையைத் தனக்குள்ளே வைத்துக்கொண்டு, வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கக் கூடியவளும் கூட! 

அந்த அளவுக்குத் தாயிடம் பாசமும் உண்டு! தாய், தந்தை, உற்றம் சுற்றம் எல்லாரிடமும். 

அவனுடைய பெற்றோரிடமுமே அன்புதான். அவள் காட்டிய அன்புதானே, அவர்களிடம் இருந்தும், திரும்பக் கிடைத்திருக்கிறது! திலோவிடம் என்னதான் அளந்தாலும், அவன் திட்டமிட்டிருந்த பிரிவு பற்றி அவர்களிடம் சொல்வது, அவ்வளவு எளிதல்லதான். அவனுக்குமே கடினம்தான். 

திலோவிடம் நல்லவை நிறையத்தான்! ஆனால், அந்தப் பணத்தாசை… அது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதே! பாத்திரம் நிறையப் பாலை, ஒரு துளி விஷம் நாசமாக்குவது போல! 

அது மட்டும் இல்லையென்றால், வாழ்க்கை சொர்க்கமாக இருந்திருக்குமே! 

ஆனால்… இல்லை. இப்போது அந்தப் பிரச்சினை பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. 

மாமியார் எதற்காக வரச் சொல்லுகிறாள்? என்ன கேட்கப் போகிறாள்? என்னவாக இருந்தாலும், ஒரு மூத்த தலைமுறை பேசவேண்டும் என்று சொல்லும்போது செல்லாமல் இருப்பது மரியாதை அல்ல. அவன் மரியாதை அறியாதவனும் அல்ல! 

எதுவானாலும், அங்கே போய் விஷயத்தை அறிந்துகொண்டு, நிலைமைக்கேற்ப நடந்துகொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்து, சித்தரஞ்சன் திலோவின் பிறந்த வீட்டுக்குச் சென்றான். 

முகம் வாடியிருந்தபோதும், மருமகனுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் எதையும், செந்திரு விட்டுவிடவில்லை. 

வரவேற்று, உட்காரச் சொல்லி, உண்ண, குடிக்க எடுத்து வைத்த பிறகே, அவனை வரவழைத்த காரணத்தைச் சொன்னாள். 

ஆனால் சுற்றி வளைக்காமல், நேரடியாக விஷயத்துக்கே வந்தாள். 

“என் அம்மா உங்களைக் கோவையில், தம்பி வீட்டில் நேரில் பார்த்திருப்பதாகச் சொன்னார்கள், மாப்பிள்ளை! மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, என் தம்பி வேலை விஷயமாக வெளிநாடு சென்றபோது, பாட்டிக்குத் துணையாக, அங்கே திலோ போயிருந்தபோது…அங்கே, வீட்டுக்கே போயிருக்கிறீர்களாமே! அம்மாவின் கண் பார்வை அவ்வளவு சரிகிடையாதல்லவா? சந்தேகத்துக்குத் திரும்பத் திரும்பக் கூர்ந்து பார்த்தார்களாம். உங்கள் அங்க அசைவுகள் எல்லாம் அதேதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்! இருவரும் சேர்ந்து, அடிக்கடி வெளியே கூடப் போயிருக்கிறீர்களாமே! அப்போது.. அப்போது ஏதேனும் தப் . .. உங்களுக்குள் தகராறு வந்து, அவளைப் பழி கிழி வாங்கவென்று திலோவை மணந்தீர்களா?” 

திடுமென விழுந்த கேள்வியில், சட்டென விறைத்தான் சித்தரஞ்சன். 

தன் வாட்டத்தின் காரணம் என்று திலோ, தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லியிருக்கக் கூடும்? 

மனதைக் காட்டிக் கொள்ளாமல், “திலோ அப்படிச் சொன்னாளா?” என்று கேட்டான். 

“ஐயோ!” என்றாள் செந்திரு கலங்கிப் போய். 

உடனேயே, “இல்லையில்லை. திலோ அப்படிச் சொல்லவே இல்லை. எனக்கே ஒரு சந்தேகத்தில் அவளிடம் லேசாகக் கேட்டபோதுகூட, சும்மா ஏன் இந்த அசட்டுக் கேள்வி என்றாளே! நீங்கள் வாங்கிக் கொடுத்த நகைகளைக் காட்டி, என்னை ..என்னைத் திசை திருப்பி விட்டாளே! ஆனால், கடவுளே! நீங்கள் இரண்டு பேருமே, நேரடியாக மறுக்கவில்லையே! அப்படியானால், ஏதோ பெரும் பிரச்சினைதான். இல்லையா? ஐயோ, என் பெண் முகத்தில் ரொம்ப நாளாகச் சிரிப்பையே காணோமே! கள்ளமில்லாத அந்தச் சிரிப்புதானே, நாலு பேர் அவளை அழகி என்று சொல்ல முக்கியமான காரணமே!” என்று பொருமிப் புலம்பினாள், பெற்றவள். 

“நீ .. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அத்தை.” என்று பொதுப்படையாகப் பேசியே, சித்தரஞ்சன் சமாளிக்க முயன்றான். திலோ எதையும் தெரிவித்து விடவில்லை எனும்போது, அவனும் வாயை விட்டுவிடக் கூடாது. 

கூடவே, பெற்ற தாயிடம் கூட, மனைவி தன்னை விட்டுக் கொடுக்கவில்லை என்று ஒரு பெருமிதமும் உண்டாயிற்று. 

ஆனால், தாயின் பாசம் பொறுமையற்றுத் தவியாய்த் தவித்தது. 

“பின்னே என்ன? சொல்லுங்கள் மாப்பிள்ளை! வேறே என்ன நடந்தது? ஆனால், என் அம்மா சொன்னது மெய்தான், இல்லையா? அப்போது, அங்கிருந்து வந்த பிறகே.. அவளிடம் பழைய துள்ளல் இருக்கவில்லை! வேலைக்குப் போகிறவள், பொறுப்பு வந்துவிட்டது என்று நினைத்தேனே! எல்லாம் தப்பு! 

“என் திலோ…இரண்டு நாள் விடுமுறை கிடைத்தாலும், சும்மாச் சும்மாக் கோவைக்கு ஓடினாளே! உங்களைப் பார்க்கத்தானா? “பாட்டி வீட்டு மோகத்தில், வாங்குகிற சம்பளத்தை ரயிலுக்குக் கொடுத்தே தீர்த்து விடுவாய் போலிருக்கிறதே” என்று அவள் அப்பா கூடத் திட்டுவார். 

“ஆனால், அங்கேயும் வீட்டில் தங்க மாட்டாளாமே! பக்கத்து வீட்டுப் பெண்ணின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போய், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, வாடி வதங்கிப் போய் வருவாள் என்கிறார்கள், அம்மா! இருவரும்தான் சுற்றினீர்களா? அப்படியானால், வாடி வதங்குவானேன்?

“கிட்டத்தட்ட ஒரு வருஷம், இந்த அலைச்சல் அலைந்தாள். தம்பி கேட்டால், முகவரி தவறிவிட்ட ஒரு தோழியைத் தேடினேன் என்பாளாம். இப்போது கூட, என் தம்பியிடம், அவன் மாதிரியே பேர் கொண்ட ஒருவரைத் தேடச் சொன்னாளாமே! யார் அவர்? மாப்பிள்ளை, என்னவோ என் பெண் அவளுக்கு என்ன? அங்கே என்ன நடக்கிறது? அவள் நன்றாக இல்லை. வே வேதனைப் படுகிறாள். அது தெரிகிறது. ஆனால், கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறாளே. என் அம்மா மாதிரி, திலோவும் ரொம்ப ரோஷக்காரி. கஷ்டத்தை வாய்விட்டு யாரிடமும் சொல்கிற பழக்கம், அவளுக்கும் கிடையாது. ஆனால் . “என்ன என்று, நீங்களாவது சொல்லுங்கள் மாப்பிள்ளை! அன்று ஒரு கணம், அவள் கண்ணில் தெரிந்த வலி … சோர்வு … மெலிவு! என்னால், தாங்க முடியவில்லையே!” என்று பரிதவித்தாள் பெற்றவள். மாமியாரின் தவிப்பில் பொய்மை இருப்பதாக சித்தரஞ்சனுக்குத் தோன்றவில்லை! எல்லாமே மெய்தான். 

மருமகன் முன்னிலையில் அழக் கூடாது என்று, அடக்கிக்கொண்டு பேசுகிறாள். 

மகள் சொல்லாவிட்டாலும், நேரடியாக மருமகனிடம் பேசிச் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், அவனை வரவழைத்திருக்க வேண்டும். 

ஆனால், அந்த அளவுக்கு வாக்குறுதி கொடுப்பதற்கு, அவன் இன்னமும் தயாரில்லை! நெஞ்சு நிறையக் காதலோடு, அவன் காத்திருந்தபோது, பணம் சம்பாதிப்பவனை விட்டு, உன்னை மணப்பதற்கில்லை என்று, அவளேதானே சொன்னாள்! 

அதைக் கேட்டு, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல உணர்ந்தது, அவனது சொந்தக் காதுகளே அல்லவா? அதில் சந்தேகப் படவே வழியில்லையே! 

இப்போது, உன் நன்மைக்காகத்தான் அப்படிச் சொன்னேன் என்று சமாளித்தால், எப்படி நம்புவது? 

அதாவது, சந்தேகத்துக்கு இடமற்று, எப்படி நம்புவது? 

இவர்கள் சொல்வது போலக் கொஞ்ச காலம் … மாமியார் குறிப்பிட்ட ஓர் ஆண்டு காலமே கூடத் திலோ கோவையில் அவனைத் தேடியிருந்தாலுமே, அப்புறம்? 

அடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில், என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாமே! நல்ல வரன் கிடைத்திருந்தால், எவனையோ கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்பாள்தானே? 

அவனைப் போல, அவளையே நினைத்தபடி இருந்திருப்பாளா, என்ன? அவன் மெல்ல எழுந்தான். “நீங்கள் அழைத்தீர்களே என்று, நான் பாதி வேலையில் தொழிற்சாலையிலிருந்து வந்தேன் . .அப்பா கூட ஊரில் இல்லை 

சட்டென்று செந்திருவுக்கு மனம் பொங்கிவிட்டது. 

பத்து மாதம் சுமந்து பெற்ற மகளது வாழ்வைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள், அவள். இந்த மருமகனின் வாழ்வும், அதுதான். ஆனால், இவனுக்குத் தொழிற்சாலைதான் பெரிதாகத் தோன்றுகிறதா?

அவர்களைப் போல ஒருவனை சற்று மேல்தட்டு மத்திய வகுப்பில் ஒருவனை, மகள் மணந்திருந்தால், இப்படித் தொழிற்சாலையைப் பெரிதாக நினைப்பானா? மனைவியின் மகிழ்ச்சிதான் முக்கியம் என்று, அதற்கானதைப் பார்த்திருக்க மாட்டானா? 

அந்த மாதிரி எத்தனை பேர் … 

மனம் நினைத்தது, வார்த்தையிலும் வந்தது. 

“திலோவைப் பெண் கேட்டு, நல்ல நல்ல இடங்களில் இருந்து உங்கள் அளவு பணம் இல்லாவிட்டாலும், எங்களை விடக் கூட மேலாக, அரை லட்சம், முக்கால் லட்சம் ஊதியம் வாங்குகிற பையன்கள் பலர், அவள் அழகைப் பார்த்து, ஆசைப்பட்டுக் கேட்டார்கள். ஆனால், அவள் கண்ணெடுத்தும் பார்க்க மறுத்துவிட்டாள்! இரண்டு ஆண்டுகள் அவளோடு மல்லாடினோம். கடைசியாக, உங்களை மட்டும்தான், ஒரு தரம் பாரத்ததுமே சிரித்துக்கொண்டு சரி என்றாள். மூன்று ஆண்டுகளாக, உள்ளே புதைத்து வைத்திருந்தது என்று இப்போது புரிகிறது. ஆனால் … சாப்பிடக் கூட இல்லாமல், படுத்தே கிடக்கிறாளாமே! உங்கள் வேலையாள் சொன்னாள். ஃபோனையும் எடுப்பது இல்லை! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன், மாப்பிள்ளை! உடனே போய், என் பெண்ணைப் பாருங்கள்! உங்களுக்கு நேரமில்லாவிட்டால், சொல்லுங்கள். நானே அவளை இங்கே கூட்டி வருகிறேன்!” என்றாள் அவள் வேதனையோடு. 

இங்கே கூட்டி வருவதா? 

ஒரு கணம் திகைத்தவனுக்கு உடனே புரிந்தது! 

குரலில் கனிவோடு, “கவலைப் படாதீர்கள், அத்தை! விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? மேல்கொண்டு நடவடிக்கை எடுப்பது, இனி என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் அமைதியாக இருங்கள். ” என்று தேறுதலாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். 

அவனுக்குச் சற்று யோசிக்க வேண்டியிருந்தது. 

போக்குவரத்து அதிகம் இல்லாத சந்துத் தெரு ஒன்றினுள் காரைச் செலுத்தி, மர நிழலில் நிறுத்திச் சிந்தனையில் ஆழ்ந்தான். 

இந்தக் கடைசி விவரம், திலோ கூறவில்லை. ஆனால், அவள் குணத்துக்கு, இது போலெல்லாம் பெருமையடிக்க மாட்டாள். அவளுக்காக எத்தனை பேர், வரிசையில் நின்றார்கள் என்று … அது போன்ற பேச்சையே அருவருக்கிறவள்! 

அவ்வளவு அழகாக இருந்துகொண்டு, அதையுமே, அவள் பெரிதுபடுத்திப் பேசியதில்லை. 

தம்பட்டம் பிடிக்காது. தற்பெருமை கிடையாது. இன்னும், இன்னும், இன்னும் நிறையத்தான்! 

அவனுடைய பெற்றோரின் அன்பும், நம்பிக்கையுமே, அவளுக்கு மிகச் சிறந்த நற்சான்றுகள் ஆயிற்றே! 

‘இவள் நல்லவளாகவும் இருக்கலாம்” என்று எண்ணிப் பார்க்கச் சொன்னாளே! 

அவள் சொன்னது போல, ஒருவேளை, அவனது படிப்பும் பட்டமும் வீணாகி விடக் கூடாது என்று அவனை உந்தி விடுவதற்காகவே திலோத்தமா திருமணம் பற்றி, அப்படிச் சொல்லியிருந்தால்?

திலோ, மறுபடி கோவை சென்று அவனைத் தேடியது நிஜமாகவே இருக்கலாம். இப்போது, நிஜமாகத்தான் தோன்றுகிறது. அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதுமே, பொய்யாயிருக்க வழியில்லை. ஏனெனில், கண்டுபிடித்திருக்க முடியாது! 

சித்தரஞ்சன் அப்போது சென்னையிலிருந்து, நேராகச் சென்று, வீட்டுப் பாதுகாப்புக் கருவிகளின் தேவை பற்றித் தனிப்பட்ட ஒரு கணக்கீட்டை நடத்திக் கொண்டிருந்தான். அவர்களது “கனவு இல்லம்” நிறுவனம் கட்டும் வீடுகளில், இந்தக் கருவிகளைப் பொருத்தி, அதற்கு ஒரு தொகை சேர்த்தால், எடுபடுமா என்கிற ஆராய்ச்சி. யார் என்று தெரிந்தால், நிறுவன அலுவலர்களின் வழிசலும், குறுக்கீடும் ஏற்படக் கூடும் என்பதால், கோவைக் கிளையில் இவன் பெயரே கூறாது வைத்திருந்தான். அவன் கோவையில் இருந்ததே, அங்கே யாருக்கும் தெரியாது.கூடவே, “ரஞ்சன்” என்று பாதிப் பெயரை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தான். 

திலோ அறிந்தது, அந்த வெறும் “ரஞ்சனை”யே. அந்தப் பெயரைக் கோவைக் கிளையில் கேட்டால், தெரியாது என்றுதான் சொல்லியிருப்பார்கள். சம்பளப் பட்டியலிலும் பெயர் இருக்க வாய்ப்பில்லைதானே? 

ஒரு நம்பகத்தன்மைக்காக மட்டுமே, “கனவு இல்லம் ” பெயரைப் பயன்படுத்தினானே தவிர, கோவைக் கிளையோடு, அவன் தொடர்பே வைத்துக் கொள்ளவில்லை. 

சுந்தரேசன், பணக் கணக்குப் பகுதியில் பணி புரிந்தது மெய்யே! திலோத்தமாவின் தொல்லை தாளாமல், அவர் சம்பளப் பட்டியலைக் காட்டியும் இருக்கலாம்! 

கோவைக் கிளையை இரண்டாகப் பிரித்து, அனுபவப்பட்ட அலுவலர்களைக் கொண்டே, ஈரோடு, திருப்பூர் கிளைகளைத் தொடங்கியதால், கனவு இல்ல நிறுவனமே, அங்கே இல்லாது போனதாக அவள் சொன்னதும் சரியே! 

அதற்கு மேல், திலோவுடைய தாயார் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட எல்லாமே, திலோ சொன்னதோடு பொருந்தித்தான் வருகிறது! 

கிட்டத்தட்ட! 

ஆனால் இதை நூறு சதவீதமாக எப்படி ஏற்பது? 

ஆனால், வாழ்வில் எதுதான் நூறு சதவீதத்தை எட்டுகிறது? சர்வ சல்லமை பொருந்திய அரசாங்கத்தின் எத்தனை எத்தனை திட்டங்கள்! எல்லாம் சரியாக நிறைவேறியிருந்தால், இப்போது நாட்டில், பாலாறும், தேனாறுமாகத்தான் ஓடவேண்டும். அப்படியா நடக்கிறது? 

தொழில் வெற்றிகளை எடுத்துக் கொண்டால், ஐம்பது சதவீதம் கிடைத்தாலே, ஆஹா என்றுதான் இருக்கிறது. 

வாழ்க்கையையும், அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமோ? குற்றம் பார்க்கில், சுற்றம் இல்லை! 

“திலோ நல்லவளாக இருந்தால்’ என்று, அதையே மந்திரமாக உருப்போட்டபடி வாழவேண்டியதுதான். யோசித்துப் பார்த்தாலும், அவள் நல்லவளாகத்தானே, தெரிகிறது! 

இந்தப் “பிரிவு ” என்கிற வார்த்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, எல்லோரையும் போலக் குழந்தை, குட்டி என்று குடும்ப உறவைப் பலப்படுத்திக் கொண்டால், எல்லாம் சரியாகப் போய்விடும். “பிரிவை”க் கைவிடுவதும், அப்படி ஒன்றும் கடினம் அல்ல. 

சும்மாவே, சற்று சிரமப்பட்டுத்தான், திலோவிடம் சொல்லுகிற சாக்கில், அதைத் தனக்குமே அவன் நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். இனி, அந்தத் தொல்லை மிச்சம்! 

எவ்வளவோ ஆறுதலாகவும், நிம்மதியாகவும் உணர்ந்தபோதும், உடனே வீட்டுக்குச் சென்று, மனைவியோடு இதைப் பகிர்ந்துகொள்ள, சித்தரஞ்சன் விரும்பவில்லை. 

இது பெரிய விஷயம். சும்மா வீட்டுக்குப் போய், திலோத்தமாவிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் அலுவலைப் பார்க்கக் கிளம்பிப் போவது கடினம். 

அலுவலகத்துக்குப் போகாமல் விடவும் முடியாது. 

எனவே வேலைகளை முடித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்று, நிதானமாகத் திலோவிடம் சொல்லி, அவளது முகம் மலர்வதை ரசித்து.. 

முத்தாய்ப்பாகப் பல இனிய கற்பனைகள் தானாக மலர, முடிந்த அளவு விரைவாக வேலைகளை முடித்துக்கொண்டு சித்தரஞ்சன் வீடு சென்றால், அங்கே அவன் மனைவி இல்லை! 

மாடிக்குச் சென்றதுமே, மனைவி கண்ணில் படாததைச் சித்தரஞ்சன் பெரிதாக எண்ணவில்லை! கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக …இவன் பிரிவு பற்றிச் சொன்ன நாளிலிருந்தே, முடிந்த அளவு, அவள் ஒதுங்கித்தான் போனாள். அவனாக நெருங்குவதுதான். 

அது கூட, அவனுக்கு உள்ளூரச் சிரிப்புதான். 

உண்மை தெரிந்த பிறகு, தானாக எப்படி ஒட்டிக் கொள்ளப் போகிறாள்! 

முதலில் இருந்த மாதிரி! 

வழக்கம் போலக் குளித்துவிட்டு வந்தால், உணவு பற்றிக் கேட்கக் கதவருகில்கூட, அவளைக் காணோம்! 

என்ன விஷயம்? 

டாக்டரிடம் போகலாமா என்று அவன் காலையில் கேட்டதற்கு, திலோ அலுப்பாக “உச்”சுக் கொட்டியதும், எரிச்சலுடன் அவன் திரும்பிச் சென்றதும், நினைவு வந்தன. 

கரிசனமாகக் கேட்டால் அலட்சியமல்லவா காட்டினாள்! 

சரியாகச் சொல்லப் போனால், அவன்தான் கோபப்பட வேண்டும். ஆனால், இனிமேல் திலோ மீது கோபமாவது, இன்னொன்றாவது? கீழேதான் ஏதாவது செய்துகொண்டு இருப்பாள். வருவாள். 

தலை வாருவதற்காகச் சீப்பை எடுத்தபோதுதான் அவன் முதல் முதலாக அதிர்ந்தான். 

ஏனெனில், சீப்புக்கு அடியில், வெறுமனே, சித்தரஞ்சன் என்று, அவன் பெயர் மட்டும் எழுதப் பட்டிருந்த ஒரு கவர் இருந்தது. 

கையெழுத்து, திலோத்தமாவுடையது! 

அத்தியாயம்-12

சீப்பை எடுத்த கை அப்படியே அந்தரத்தில் நிற்க, சித்தரஞ்சன் சற்று நேரம் அசைவற்றுப் போனான்! 

இப்படி ஒரு திருப்பத்தை, அவன் எதிர்பார்க்கவில்லையே! 

அதுவரை கண்ணில் படாத திலோ, அந்த வீட்டிலும் இல்லையா? பிரிவு பிரிவு என்ற அவனை விட்டு, அவள் பிரிந்தே போய் விட்டாளா? மற்றபடி, வீட்டுக்குள்ளேயே கடிதம் எதற்காக? அவர்கள் இருவரும், ஒருவருக்கொருவர் பேசாமல் ஒன்றும் இருக்கவில்லை! 

சீப்பை வைத்துவிட்டுக் கவரை எடுத்தபோது, தன் கை நடுங்குவதைப் பார்க்க, அவனுக்கே ஆச்சரியம்தான். அந்த அளவுக்கு, மனம், உடலைப் பாதிக்குமா? 

அல்லது, அதிர்ச்சிதான் ரொம்பப் பெரிதா? 

ஒரு நெடுமூச்செடுத்து, மனதையும் உடலையும் கட்டுப்படுத்திக்கொண்டு, அதன் பிறகே காகித உறையைப் பிரித்தான். 

ஒரு சுருக்கமான கடிதமும், அதனோடு இணைக்கப் பட்டிருந்த திலோத்தமாவின் கையெழுத்துடன் கூடிய ஒரு வெற்றுத் தாளும், அதில் இருந்தன! 

அவன் அஞ்சியது போல, விஷயம் பெரிதுதான்! 

பிரிவைச் சொல்லி, அவன் மிரட்டிக் கொண்டிருந்தான். அவள் நிஜமாகவே பிரிந்து சென்றிருந்தாள்! எங்கென்று சொல்லாமல்! 

அவன் உள்ளம் தேடிய நூறு சதவீதச் சான்று, இப்போது அவன் கையில் இருந்தது. 

ஆனால், அவள்?! 

சித்தரஞ்சன் கொடுத்த “பிரிவு” என்ற அதிர்ச்சிக்குப் பிறகே, திலோத்தமாவுக்கு உடலில் பழைய உற்சாகம் இல்லை எனலாம். அது மனதில் இருந்தால் அல்லவா, உடம்பில் தென்பு வரும்? 

கணவனிடம் எவ்வளவோ வாதாடிப் பார்த்தாள். போராடியும் பார்த்தாள். 

ஆனால், அவன் சற்றேனும் அசைந்து கொடுத்தால் அல்லவா? உடும்பு போல, தான் கொண்ட கருத்தில் அவன் ஒரே பிடியாக இருக்கவே, ஒரு கட்டத்தில், அவளுக்கு வாழ்க்கை அலுத்துப் போயிற்று! 

உணவு, உடை, அலங்காரம், அனைத்திலும் ஈடுபாடு குறைந்தது. இவைகளுக்காகத்தானே, இப்போது, அவனை மணந்திருப்பதாகச் சொன்னான்! 

அவன் சொன்ன வாழ்க்கை வசதிகள், உயர்வுகள் அனைத்தும் வெறுத்துப்போயின. 

அதிலும் உணவு! உயிர் வாழ, இதையெல்லாம் தின்றுதான் தீர வேண்டுமா என்று வெறுப்பாக உணர்ந்தாள். 

ரஞ்சனின் கோபத்துக்காக, அவற்றைக் கொறித்தாளே தவிர, விரும்பி உண்பது அடியோடு நின்று போனது! அவன் வீட்டில் இல்லாத நேரம், அதுவுமில்லை! 

சத்தற்று உண்டது, திலோவின் உடம்பைச் சிறுகச் சிறுகப் ாதித்திருக்கலாம். 

ஆனால், பாட்டி வந்து போன பிறகு, அவள் ரொம்பவே சோர்ந்து போனாள். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, அப்போதிருந்த சந்தோஷமும், எதிர்பார்ப்பும்.நேர் எதிரான இன்றைய நிலையும்! நல்லது எதுவும் திரும்பக் கூடும் என்ற நம்பிக்கையே இல்லையே! 

ஆனால், எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்து மறுகினாளே தவிர, எதையும் பெற்றவளிடம் சொல்லவும் மனம் வரவில்லை. 

கல்யாணம் வேண்டாம், வேண்டாம் என்று, அப்போது ஒரு மூச்சு கஷ்டப்படுத்திவிட்டு, இப்போது விரும்பிச் செய்த திருமணம் தோற்றுவிட்டதாக, இன்னொரு துன்பமும் தருவதா? 

இதே மனஉளைச்சலில் இருந்ததாலோ என்னவோ, அன்று இரவுக்கும், மறுநாளைக்கும் உரிய மெனுவைச் சமையல்காரம்மாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பும்போது, தலை சுற்றித் தடுமாறிவிட்டது! 

சுவரைப் பிடித்து சமாளித்தால், சமையல்காரம்மா அருகில் வந்து, “இது போல நேரம், ரொம்பப் பதனமாய் இருக்க வேணும்மா. இப்படியெல்லாம், டக்கு டக்குனு திரும்பப் படாது.” என்று கரிசனமாக உரைத்தாள். 

என்ன நேரம்? என்ன பதனம்? 

புரியாமல் பார்த்தாள் திலோத்தமா 

“நீங்க, இந்தக் காலத்துப் புள்ளைக. ஒண்ணும் தெரியாது. பெரியம்மாவைச் சீக்கிரமாக வரச் சொல்லுங்க. அவங்க, உங்களை நல்லாப் பார்த்துக் கொள்வாங்க.” என்றாள் தொடர்ந்து. 

என்னத்தைப் பார்ப்பது என்று எண்ணும்போதே, அந்த அம்மாள் சொல்வது புரிந்து, திலோவுக்கு நெஞ்சு காந்தியது. 

அதற்கெல்லாம்தான் வாய்ப்பே கிடை … அல்லது …எஎன் . .ன இது? 

ஒரு கணம் மூச்சே நின்றுவிடும் போல ஆயிற்று அவளுக்கு. 

வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்து, “இஇன்னும் பத்துப் பதினைந்து நாட்களில், அத்தை வந்து விடுவார்கள். சமையல் … நீங்கள், நான் சொன்ன மாதிரியே செய்துவிடுங்கள்.” என்றுவிட்டு, மெல்ல அவளது அறைக்குச் சென்றாள். 

உட்கார்ந்து யோசித்தால், சமையல்காரம்மாவின் ஊகம் சரியாகவே இருக்கும் என்றே தோன்றியது. 

சித்தரஞ்சன் “பிரிவு” வெடிகுண்டு போட்டதிலிருந்து, கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக, மாத்திரை போட நினைவே இருக்கவில்லை! என்ன செய்வது, என்ன செய்வது என்று அதே நினைவாக, ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஒரே தவிப்பாக வேறு என்னதான் நினைவு இருந்தது? 

பெற்ற தாயைக்கூட மறந்து போனாளே! 

சட்டென்று, இன்னொன்று தோன்றியது. 

அனேகமாகத் தினமுமே, சித்தரஞ்சனும், இந்த மாத்திரையை அவளுக்கு நினைவுபடுத்துவான். அவனுமே, அவளிடம் மாத்திரை பற்றிக் கேட்கவே இல்லையே! 

ஒருவேளை, அவனுக்குமே மனதில் பெரும் பாதிப்பாகத்தான் இருந்ததோ என்று ஒரு தரம் ஆவலாக யோசித்துவிட்டு, உடனேயே, அந்த யோசனைக்காகத் தன்னையே ஒருமுறை குட்டிக் கொண்டாள். 

இந்த மட்டி மனம் ஒன்று! கணவனிடம் இல்லாத மேன்மைகளை எல்லாம் கற்பனையிலேயே தேடிக் கண்டுபிடித்து, சந்தோஷப்பட்டுக் கொள்ளும்! பிறகு, உச்சந் தலையில் அடித்து, அவன் உண்மை புரிய வைக்கும்போது, உள்ளம் வெடித்து அழும்! 

தெள்ளத் தெளிவாய் என்னமோ சொன்னானே, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிற மாதிரி என்று, அது போல அவளை உணர வைத்துச் சொன்னானே! 

பிறகும், பிரிவு பற்றி, எத்தனை முறை நினைவூட்டியிருப்பான்? 

இத்தனை தடவைகள் சொல்லியாயிற்றே, இந்த மர மண்டைக்குக் கட்டாயமாக நினைவிருந்து, ஒழுங்காக மாத்திரைகளை விழுங்கியிருப்பாள் என்கிற நம்பிக்கையில், அவன்ஞாபகப் படுத்தவில்லை. அவ்வளவே! அதற்குள், என்னென்ன பைத்தியக்கார எண்ணங்கள்! பட்டிருப்பது, போதாது? இன்னும் ஏன் இந்த அசட்டுக் கற்பனை? 

தன்னைத்தானே நொந்துவிட்டு, திலோத்தமா மறுபடியும் நடப்புக்கு வந்தாள். 

இது, ரஞ்சன் பிடிவாதமாக வேண்டாம் என்று மறுத்த குழந்தைச் செல்வமாகவே இருக்கலாம் என்று நினைக்கும்போதே, திலோவுக்கு, உடலும் உள்ளமும் பரபரத்தன. 

“இருக்கலாம்” என்ன? நிச்சயமாகவே குழந்தைதான். மற்ற விஷயங்களோடு, ஒருவாரம் பத்து நாட்களாகத் தலை தூக்க முடியாமல் கிடந்தது, அதனால்தானே இருக்கவேண்டும்? 

ஒப்புக்காக வேண்டுமானால், ஒரு மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாமே தவிர, அவள் மனதில் இப்போது சந்தேகம் சிறிதும் இல்லை! 

ஆனால், இதைக் கணவனிடம் சொல்லி, அவள் சந்தோஷப்பட முடியாது! அவன் நிச்சயமாக மகிழ்ந்து துள்ள மாட்டான். 

மாத்திரை உட்கொள்ள, அவள் மறந்ததாகவும் ஒத்துக்கொள்ள மாட்டான். 

சித்தரஞ்சனைப் பொறுத்த வரையில், அவனது குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப் பட்டுவிட்டதாகத்தான், பணக்காரன் என்பதால், பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள, அவளது எடுத்த நடவடிக்கை என்றுதான் சொல்லுவான்! சர் … வ நி ..ச்சயமாக. 

பிணைப்பை நிரந்தரமாக்க இடம் கொடுக்கக் கூடாது என்றுதானே, அவளைக் கருத்தடை மாத்திரை உண்ண வைத்ததே! 

இப்போது அவனைத் திலோ ஏமாற்றிவிட்டதாகக் கூறுவதோடு, கருவை அழிக்கவும் முயற்சி செய்வான்! இதுவும் உறுதியே! 

சித்தரஞ்சனை இழக்க மனமின்றி, குழந்தை வேண்டாம் என்ற நிபந்தனையை ஒத்துக்கொண்டு, திலோ அவனை மணந்தாள். 

இப்போது, தன்னை மீறி உருவான இந்தக் கருவை அழிக்க விடுவதா? கணவன்… குழந்தை! யாரை இழப்பது? 

மின்னல் வெட்டியது போலத் திலோவுக்குள் ஒரு தெளிவு உண்டாயிற்று! உடனடியாக முடிவும் கிடைத்தது. 

அவளுடைய குழந்தை, அன்றைய நிலையில், ஓர் அணுக்கூடக் குறையாமல், முழுசாக, அவளுடையதாக, அவளுள் இருந்தது. ஆனால், அவளுடைய கணவன், மனமும் உடலுமாக முழுதாக அவளுக்குச் சொந்தமாக இருந்ததே இல்லையே! 

இல்லாத ஒன்றை இழப்பதில், பெரிதாக யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? 

அவளுக்குக் குழந்தை வேண்டும். அதே சமயம், அவன் சொன்ன சொத்து, பணம் எதுவுமே வேண்டாம். எதையுமே தொடக் கூடாது! குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க, அவளாலேயே முடியும்! அவளுடைய பெற்றோரின் தயவில், அதற்குத் தேவையான கல்வியும், திறமும் அவளுக்கு இருக்கின்றன! 

கணவனின் உதவியே இல்லாமல், கிடைத்த வலிமை! 

ஒரு முடிவை எடுத்தபின், அதற்கேற்பச் செயல்பட, திலோவால் முடிந்தது. 

குறைந்த பட்சமாகச் செய்வதறியாத மலைப்பு இல்லை! 

உட்கார்ந்து, வேகமாகத் திட்டமிட்டாள். 

எப்போது சமையல்காரம்மாவால் ஊகிக்க முடிந்ததோ, அதன் பிறகு, இங்கே ஒரு நாள் தங்குவது கூட ஆபத்து என்று தோன்றியது. எனவே, அன்றே கிளம்ப முடிவும் செய்தாள். 

முக்கியமாகப் பணம் பிரச்சினை ஆகாது.அவள் வேலை பார்த்துச் சம்பாதித்ததே, பாங்க்கில் நிறைய இருந்தது! அதிகம் என்றால், சித்தரஞ்சனுக்கு அப்படித் தோன்றாவிட்டாலும், அவளது பல மாதச் செலவுகளை இலகுவாகத் தாங்கும் அளவுக்கு மேலாகவே இருந்தது. அவளது கல்வித் தகுதிக்கு, இன்னொரு வேலை தேடிக் கொள்வதும், கடினம் அல்ல. அந்தப் பணமும் சேரும்! 

எனவே, எங்கேனும் மறைந்து வாழ்ந்து பிள்ளையைப் பெற்றெடுப்பதோடு, அதை நல்லபடியாக வளர்த்து, வாழவும், திலோவால் முடியும்! 

ஆனால் பல காரணங்களால், இந்த ரகசியத்தில், இனிமேல் தாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், திலோத்தமா தீர்மானித்தாள். அன்னை அறியாமல் காணாமல் போனால், பாவம், ஏங்கியே செத்துவிடவும் கூடும் என்பது, ஒரு காரணம்! வெறும் செல்களாக வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்காகவே, அவள் இவ்வளவு பார்க்கும்போதுதானே, பத்து மாதம் சுமந்து பெற்று, இத்தனை ஆண்டுகள் வளர்த்தவளுக்கு எப்படி இருக்கும் என்று, நன்கு புரிகிறது! அத்தோடு, இந்த நிலையில், தாயின் ஆலோசனை அவளுக்குத் தேவையாகவும் இருக்கக் கூடும். 

அடுத்து வரும் மாதங்களில், எப்படியெப்படி நடந்துகொள்வது என்று பல புத்தகங்களில் படித்துக் கூடத் தெரிந்து கொள்ளலாம்தான். ஆனால், அதே விவரம் தாயிடமிருந்து வரும்போது, அனுபவ அறிவோடு, அன்பும் பரிவும் சேர்ந்து கிடைக்கும்! 

இப்போது இருப்பதைப் பார்த்தால், இன்னும் என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படக் கூடுமோ? அனாவசிய அச்சங்களைக் களைவதற்கும், அம்மா மிகவும் அவசியம் அல்லவா? 

கணவனைப் பிரியப் போகிறோம் என்று எண்ணும்போது, திலோவுக்குச் சற்றுக் கலக்கமாகத்தான் இருந்தது. ஆனால் பிரிவதற்காகத்தானே, அவன் திருமணமே செய்தான்! அப்புறமென்ன? 

குளிர்ந்த நீரை எடுத்து முகத்தில் நன்றாக அடித்துக் கழுவிய பிறகு, கண் கரிப்பு நின்று, உடம்பும் இன்னும் கொஞ்சம் சொன்ன பேச்சுக் கேட்டு, வேகமாகச் செயல்பட்டது. 

ஒரு தோள்ப் பையில், பணியாட்கள் சந்தேகப்படத் தோன்றாத அளவு துணிமணி எடுத்து வைத்தாள். வாக்காளர் அட்டை, பாங்க் பாஸ் புக், கல்விச் சான்றிதழ்கள் … கையில் இருந்த அவளது சொந்தப் பணம். யோசித்து, யோசித்து, வேகமாகச் சேகரித்தாள். 

“கால் டாக்சி”க்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லிவிட்டு, சித்தரஞ்சனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். 

குழந்தையைக் காப்பதற்காக என்று எழுத, அதைப் பற்றிக் குறிப்பிடக்கூட, அவளுக்கு மனமில்லை. என்றாவது ஒரு நாள் உரிமை கோர வருவாள் என்று, அதையும் அவன் தவறாகவே எண்ணக் கூடும்! காரணமே காட்டாமல்தானே, குழந்தை வேண்டாம் என்று நிபந்தனையிட்டான்? அவளும்தான் எதற்காகக் காரணம் காட்ட வேண்டும்? 

மொட்டையாகத் தொடங்கி, “நீங்கள் விரும்பிய “பிரிவை” நீங்கள் கோருமுன்னே கொடுத்துப் பிரிந்து போகிறேன். திரும்பி வர மாட்டேன். இத்துடன் ஒரு வெள்ளைக் காகிதத்தில், அடியில் கையெழுத்திட்டு வைத்திருக்கிறேன். விவாகரத்துக்கு என்ன காரணம் தேவையோ, எழுதிக் கொள்ளுங்கள். வாழ்க்கைப் பணம் தேவைப்படாது. வேண்டாம்.” என்று எழுதி, அதிலும், இன்னொரு வெள்ளைக் காகிதத்திலும் தெளிவாகக் கையெழுத்திட்டு, மடித்து, உறையிலிட்டு, அவன் பார்க்கும் வண்ணம் வைத்தாள். 

வீட்டுச் செலவுப் பணத்தில் மிச்சத்தையும் அலமாரியில் வைத்தாள். டாக்சி வருவதைக் கவனித்து, பையுடன் மாடியியிலிருந்து இறங்கி வந்தாள். கண்ணில் பட்ட வேலையாளிடம் வெறுமனே தலையசைத்துவிட்டு, வண்டியில் ஏறிக் கிளம்பிவிட்டாள். 

அந்த வீட்டை விட்டுக் கிளம்புவது, இவ்வளவு எளிதாக இருக்குமென்று, திலோ சற்றும் எதிர்பார்க்கவில்லை! 

திருமணமாகி வந்த நாள் தானாக நினைவு வந்து, தன்னை மீறி நெஞ்சை அடைத்தது. 

ஆனால், அது பொய்யான வாழ்வு! முட்டாளின் சொர்க்கம். அதற்காக ஏங்குவதும் மடத்தனமே! 

பிடிவாதமாக, அடுத்துச் செய்ய வேண்டியதில் மனதைச் செலுத்தினாள். ஏற்றாற்போல, பளிச்சென்ற தோற்றத்துடன் ஒரு மருத்துவமனை, செல்கிற வழியிலேயே இருந்து, அவளது கண்ணில் பட்டது. தாய், சேய் நல மருத்துவமனைதான். 

அனேகமாகப் பார்க்கிற எல்லோருமே, தனக்கு ஒரே பிள்ளைதான் என்கிறார்கள்., ஆனால், இந்த மருத்துவமனைகள்தான் அதிகம் பெருகுகின்றன என்று எண்ணியபடி, டாக்சியை நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே சென்றாள். 

அவளது கருத்து உறுதியான ஆறுதலுடன் மீண்டும் வந்து, வண்டியில் ஏறினாள். 

தன் வாழ்க்கை நிலை, இன்று எடுத்த முடிவு பற்றிச் செந்திருவிடம் சொல்வது, திலோத்தமாவுக்குச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. சற்று என்ன, ரொம்பவே! 

ஆனால், மகள் நன்றாக இல்லை என்று ஏற்கனவே ஊகித்திருந்ததால், செந்திரு சீக்கிரமே சமாளித்துக் கொண்டாள். 

மகள் முட்டாள் அல்ல என்பதோடு, அவளது பிடிவாதமும் அறிந்திருந்ததால், ஒரே ஒரு முறை மருமகனிடம் அப்பாவை அனுப்பிப் பேசச் சொல்லலாமா என்று கேட்டவள், மகளின் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டு, மகளின் திட்டத்துக்கே உதவி செய்தாள். 

செந்திருவுடைய தோழி ஒருத்தி, திருச்சியின் புறநகர்ப் பகுதியில், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், பெரியோருக்காக ஓர் இல்லம் அமைத்து நடத்திக் கொண்டிருந்தாள். 

கணவன் மனைவி இருவருமே பட்டம், பயிற்சி பெற்ற மருத்துவர்கள். சேவை மனப்பான்மையில், இருவரும் இந்தப் பணி செய்துவந்தனர். திலோவை அங்கே அனுப்பினால், மகளைப் பற்றி, அதிகக் கவலை இல்லாமல் இருக்கலாம் என்று செந்திரு எண்ணினாள். 

தோழிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, டாக்டர் தேவகியும், திலோத்தமாவை உடனே அனுப்பச் சொல்ல, சின்னவளின் தங்குமிடத்துப் பிரச்சினை, உடனே தீர்ந்தது! 

இந்த டாக்சியிலேயே போகலாமா என்று யோசித்துவிட்டு, வேண்டாம் என்று, திலோ தீர்மானித்தாள். பங்களாவில் யாராவது, டாக்சி எண்ணைக் குறித்து வைத்திருந்தால், 

வீண் ஆபத்து! 

எனவே, அந்த வண்டியைக் கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு, இன்னொரு “கால் டாக்ஸி” நிறுவனத்தில், வேறு வண்டி கொண்டு வரச் சொன்னாள்! 

திருச்சிக்குக் கிளம்புமுன், தன் தாயிடம், திலோத்தமா ஒரு வாக்குறுதி வாங்கினாள், எக்காரணம் கொண்டும் தான் இருக்குமிடத்தை, சித்தரஞ்சனிடமோ, அவன் சம்பந்தப்பட்ட வேறு யாரிடமுமோ சொல்வதில்லை என்று. 

பிரிவுதான் சித்தரஞ்சனின் கடைசி முடிவு என்றாலும், இன்னமும் மோகம் தீரவில்லை என்று, அவனே சொல்லியிருக்கிறானே! 

தேடி வந்தாலும் வரலாம். அப்போது, அன்னை இளகிவிடக் கூடாதே என்பது, அவளுக்கு! 

அப்படி அவள் இருப்பிடத்தைச் சித்தரஞ்சனிடம் தெரிவித்தால், அப்புறம் தன்னை உயிருடன்பார்க்க முடியாது என்று எச்சரித்தும் வைத்தாள். 

தாயின் அடிபட்ட பார்வையில், “அவருக்குத் தெரிந்தால், குழந்தையை என்னவும் பண்ணி விடுவாரோ என்று பயமாக இருக்கிறதம்மா!” என்று காரணம் சொல்லிச் சமாளித்தாள். 

ஒருவாறு திலோத்தமா திருச்சிக்குப் போய்ச் சேர்ந்தபோது, அவளது உடலும் மனமும் மிகவும் களைத்திருந்தபோதும், இன்னொரு தாயாய் டாக்டர் தேவகியின் அன்பான கவனிப்பு, அருமருந்தாக இருந்து அவளைத் தேற்றியது! 

தேவகி கொடுத்த மருந்துகளின் வலிமையால், திருச்சியில் திலோத்தமா அயர்ந்து உறங்கியபோது, சென்னையில் சித்தரஞ்சன், கூண்டுப் புலிபோல, மாடி முழுக்கச் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். அவளைப் பிரிந்து, திலோ போகக் கூடுமா? எப்படி முடியும்? 

அவனை விடவும் பெரிய பணக்காரனைக் கண்டால் அவன் மனம் அங்கே தாவிவிடும் என்றதும், மோகம் தீர்ந்ததும், அவளைப் பிரியப் போவதாகச் சொன்னதும், எல்லாமே இப்போது பயங்கரமான சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றின. கொடூரமாகவும். 

ஒரு பொருளின் அருமை, அது இல்லாது போகும்போதுதான் தெரியும் என்பார்கள். 

திலோவை ஒரு நாள் பிரியக் கூடும்., பிரிந்து வாழ முடியும் என்று, எப்படி நினைத்தான்? அன்றைய ஓர் இரவு முழுவதும்கூட, அவள் இல்லாததைத் தாங்க முடியாது போலத் தவித்துப் போனான், அவன். 

குறைந்த பட்சமாகத் திலோ இருக்குமிடம் தெரிந்தாலாவது… தெரிந்து போய்க் கேட்டாலும், திலோ திரும்பி வருவாளா என்பது சந்தேகமே! 

அவன் மிரட்டிய “பிரிவை” அவளே தருவதாக எழுதியதில், அவளது கோபம் புரிந்ததோடு, வாழ்க்கைப் பணம் வேண்டாம் என்றதில், அவளது வலியோடு, ரோஷமும் தெளிவாகத் தெரிந்ததே. இதில், எதை ஒன்றுமில்லை என்று ஒதுக்கி, அவனுடைய திலோ, அவனிடம் திரும்பி வரக் கூடும்? 

ஆனால், அவள் இருக்குமிடம் தெரிந்தால், அவளது கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சினால் ..ஒரு வேளை அவள் மனமிளகி 

“நம் டிரைவரை அங்கே நிறுத்தி வைக்க வேண்டாம் என்று, டாக்சியில் போனாள் போல… ” என்று, வேலையாட்களிடம் ஒன்றுமில்லாதது போலக் காட்டிக்கொண்டு, வாடகைக் காரின் எண், நிறுவனம் பற்றி, சித்தரஞ்சன் தெரிந்துகொண்டான். 

அந்த நிறுவனத்துக்கு ஃபோன் செய்து கேட்டால், “நம் நிறுவனத்துப் பேரில் ஓடினாலும், அந்த டாக்சி தனியாளோடது. அவர் காலையில் ஒன்பது மணிக்குத்தான் வருவார். அதற்கு முன், அவரோடு தொடர்பு கொள்ள இயலாது என்றார், அங்கு இரவுப் பொறுப்பில் உள்ளவர். 

முடியாது என்றால், வற்புறுத்திப் பார்க்கலாம். இயலாது என்பவரை என்ன செய்வது? 

மாமனார் வீட்டுக்கு ஃபோன் செய்ய, அவனுக்கு மனமில்லை. ஒரு வேளை அவர்களுக்கும் தெரிவியாமல் திலோ வேறு எங்காவது சென்றிருந்தால், அவர்களும் சேர்ந்து கலங்க நேரும். அவனுடைய பெற்றோரை விட இளமையே என்றாலும், ஒரு தலைமுறை மூத்தவர்களே அல்லவா? 

அதிலும், பார்த்துக் கொள்ளுகிறேன் என்று மாமியாரிடம் மதியம் சொல்லிவிட்டு, கோட்டை விட்டுவிட்டதாகக் கையைப் பிசைந்துகொண்டு எப்படி நிற்பது? திலோ அங்கேதான் இருப்பதாகத் தெரிந்தாலாவது, போய்ப் பார்க்கலாம். 

“முடியாப் பகலே, விடியா இரவே” என்பார்கள். 

அவனைப் பொறுத்த அளவில், உலகிலேயே மிக நீண்ட இரவின் கும்மிருட்டு கலைந்து விடிவதற்காக, சித்தரஞ்சன் தவிப்புடன் காத்திருந்தான். 

வாடகைக்கார் நிறுவனத்தில் கிடைத்த தகவல் ஆறுதல் அளிக்க, நேரே மாமனார் வீட்டுக்குச் சென்றான். ஆனால்… 

அத்தியாயம்-13

எல்லாத் தாய்மாரையும் போல, செந்திருவுக்கும் மகள், கணவனோடு நெடுங்காலம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஆசைதான். 

ஆனால், உயிர் விட்டுவிடுவதாக மிரட்டி, திலோ பெரிய குண்டு போட்டு வைத்திருந்தாளே! அதை மீறி எப்படிச் சொல்வது? 

என்ன இது பேச்சு என்று எரிச்சல் பட்ட போதும், மணிகண்டனுக்கும், மகளை மீறத் தைரியம் இருக்கவில்லை! ஆனால், சித்தரஞ்சனை எதிர்பார்த்ததால், அன்று அலுவலகம் செல்லாமல், மனைவிக்குத் துணையாக வீட்டிலேயே தங்கியிருந்தார். 

மாமனாரையும் வீட்டில் பார்த்ததும், இவர்கள் அறியாமல் திலோ எங்கும் செல்லவில்லை என்று, சித்தரஞ்சனுக்கு உறுதியாயிற்று. 

ஆனால், அதனால் நிம்மதி அடைய வழியின்றி, இருவருமே, அவனுக்குத் தேவையான பதிலைத் தர மறுத்தனர். 

திலோவோடு சேர்ந்து நல்ல வாழ்வு வாழ்வு வாழ்வதற்காகவே என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும், பெரியவர்கள் அதே நிலையில் நிற்கவும், சித்தரஞ்சன் பொறுமையிழந்தான். 

கணத்தில் முடிவு செய்து, “அத்தை, மாமா கவனியுங்கள். நீங்கள் சொல்லாவிட்டால், என்னால் என் மனைவியைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணாதீர்கள். நாளைக்கே, நாட்டில் உள்ள அத்தனை பத்திரிகைகளிலும், அவள் படத்தைப் போட்டு விளம்பரம் செய்யப் போகிறேன். அவளைக் கண்டுபிடித்துத் தருகிறவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் தருவதாக அறிவிக்கப் போகிறேன். அதற்கு மேல், அவள் இருக்குமிடம் ரகசியமாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். 

“ஐயோ, அவ்வளவு பணமா?!” என்று இருவருமே திகைத்தனர். பணத்தை விடவும், மருமகன் வழி கண்ட விதத்தில், மணிகண்டனுக்கு அவன் மீது மதிப்பும் உண்டாயிற்று. 

அதற்குள், அவனே தொடர்ந்து பேசினான். “திலோ பற்றிய விவரம் உடனே வந்து சேர்ந்துவிடும் என்றாலும், இதில் ஒரு வகை ஆபத்தும் இருக்கிறது. இவ்வளவு பணமா என்று, அவளையே கடத்திச்சென்று, இன்னமும் பணம் பறிக்கவும், யாரேனும் முயற்சிக்கலாம்! ‘ 

“ஐயோ, ஆமாம்!” என்றாள் செந்திரு அச்சத்துடன். 

மாமனார் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, சித்தரஞ்சன் மேலும் தொடர்ந்தான். “சுமார் ஒன்றரை மாதங்களாக, எங்களுக்குள் இந்த . இந்தச் சச்சரவு இருக்கிறது. ஆனால், இதுவரை, அவள் உங்களிடம் கூட, அதுபற்றி, ஒரு வார்த்தை சொன்னதில்லை என்று எனக்குத் தெரியும். அவ்வளவு ரோஷக்காரி திலோ! அவளது குடும்பப் பிரச்சினையை ஊர் அறிவது, அவளுக்குப் பிடிக்குமா என்று நீங்களே யோசியுங்கள். இதற்கு மேலும் மறைத்தீர்கள் என்றால், பத்திரிகை 

விளம்பரம் தவிர, எனக்கு வேறு வழியில்லை!” என்று முடித்தான். “கெட்டிக்காரர் நீங்கள், மாப்பிள்ளை!” என்று சிலாகித்த மணிகண்டனின் முகம் உடனே மாறியது. “இது ஒரு தினுசான பிளாக்மெயில்தான். ஆனால், உங்களுக்கு ஏற்றவளாக, உங்கள் மனைவியும் இன்னொரு தினுசாக, எங்களை ஏற்கனவே மிரட்டி வைத்திருக்கிறாளே! அவள் பற்றிய தகவல் எதையும் உங்களிடம் சொன்னால், உயிரை விட்டுவிடுவதாக, ரொம்பக் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறாள். முதலில் இதைத் தெரிந்துகொண்டு, பிறகு அவள் இருக்குமிடம் பற்றிய விவரம் கேளுங்கள்!” என்றார். 

“என்னது?!” என்று ஒரு கணம் அதிர்ந்தபோதும், உடனே மறுப்பாகத் தலையசைத்தான் மருமகன். “நிச்சயமா மாட்டாள். தற்கொலை செய்ய எண்ணுகிறவள், வாக்காளர் அடையாள அட்டை, பாங்க் புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தன்னோடு எடுத்துச் செல்ல மாட்டாள். எனக்குச் சொல்லக் கூடாது என்பதுதான் குறிக்கோளாகத் தெரிகிறது! ஏன் அப்படி? இத்தனை நாள் கழித்து, இன்று என்ன திடீரென்று?” என்று கேட்டான். 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது, கூர் நோக்கில் பட்டது. 

லேசாகத் தோளைக் குலுக்கி, “அதுவும் உங்களுக்குத் தெரியும். ஆனால், அதையும் சொல்ல மாட்டீர்கள்! அப்படித்தானே? பரவாயில்லை! அதை நான், திலோவிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். நீங்கள், முகவரியை மட்டும் கொடுங்கள். போதும். ” என்றான். 

மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும், “அத்தை, மாமா, இருவரும் கொஞ்சமும் கவலையே படாதீர்கள். ஒரு பேச்சு தப்பாக நினைத்ததற்காக, அவளிடம் மன்னிப்புக் கேட்கத்தான் போகிறேன். வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். திலோ காலில் விழுந்தேனும், அவளைத் திரும்பக் கூட்டி வருவதுதான், என் நோக்கம். அதனால், தைரியமாக, அவளது விலாசத்தைக் கொடுங்கள். ஆனால் ஒன்று. நான் அங்கே செல்வது பற்றி, அவளிடம் தெரிவித்து விடாதீர்கள். என்னைச் சந்திக்குமுன், அங்கிருந்தும் அவள் எங்கேனும் 

சென்றுவிட்டால், கண்டுபிடிப்பது, மிகவும் சிரமமாகி விடும்! அப்புறம், பத்திரிகை விளம்பரம் தவிர, வேறு வழியிராது! ” என்றான் மருகன். புன்னகையை அடக்கியபடி, மனைவியிடம் பேனாவை எடுத்துக் கொடுத்தார் மணிகண்டன். 

பல தினங்களுக்குப் பிறகு, திலோத்தமா நன்றாகத் தூங்கியிருந்தாள். 

கண்ணுக்கும் காதுக்கும் சுகமாக, சலசலவென்று நீரோடும் வாய்க்கால். பலவண்ண மலர்களோடு, செழிப்பாக வளர்ந்திருந்த செடிகொடிகள்! பல்வேறு பறவைகள் எழுப்பிய இனிய ஒலிகள்! 

வித்தியாசமான உணவாகக் கேப்பைக் களியும், பருப்புத் துவையலும் ருசியாக இருக்க, சிலபல நாட்களுக்குப் பிறகு, காலை உணவும் உள்ளே இறங்கியது. 

எல்லாமாகத் திலோவுக்கு உடம்பு தென்பாக இருந்திருக்க வேண்டும்! தன் ஆயிரம் வேலைகளுக்கு நடுவே வந்து, அவளிடம் நலம் விசாரித்த டாக்டர் தேவகியிடம் நன்றாக இருப்பதாகத்தான் திலோ சொன்னாள். ஆனால், உண்மையில் அவள் அப்படி இருக்கவில்லை! எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை., எதையும் கேட்கப் பிடிக்கவில்லை., யாருடனும் பேசவும் பிடிக்கவில்லை! பேசாமல், சுருட்டியடித்துப் படுத்துக்கொள்ள வேண்டும் போல மட்டும்தான் இருந்தது! தங்குவதற்கு இடமும் கொடுத்து, உடல் நிலைக்கேற்ப மருந்தும் கொடுத்து, மெனக்கெட்டு வந்து அன்பாக விசாரிப்பவளிடம், இதையெல்லாம் சொல்ல முடியுமா? 

உ தவி செய்தவளின் மனதுக்கு இதமாக அவள் பேச, மருத்துவராகத் தேவகி ஆலோசனை கூறினாள். “அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், அப்படியே தோட்டத்தைச் சுற்றிப் பார், திலோ. பச்சென்றிருக்கும் இடங்களில் உலாவினால், மனதுக்கும் உற்சாகமாக இருக்கும். கால் வலிக்கிற மாதிரி இருந்தால், அங்கங்கே உட்கார்ந்து கொள். இப்படி மரம் செடி கொடிகளுக்கிடையே திறந்த வெளியில் உலாவுவது, உனக்கு உடம்புக்கும் நல்லது.மனதுக்கும் தென்பாக இருக்கும். 

என்னத்தைத் தென்பாக இருப்பது? 

கண் விழித்து எழுந்ததிலிருந்து, ஆறடி மனிதன் ஒருவனை நினைத்து ஏங்கிக் கொண்டே இருந்தால், தென்பு எங்கிருந்து வரும்? 

நல்லது என்று அவளே யோசித்து எடுத்த முடிவுதான். இப்போதும், அதுதான் சரி என்று, அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்தான். ஆனால் அதற்காக ஒருத்தி சந்தோஷமாக இருக்க முடியுமா, என்ன? மதிய உணவும் அங்கே நன்றாகத்தான் இருந்தது.ஆனால்,திலோவால் சாப்பிட முடியவில்லை. அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வாகப் படுக்கச் சென்றவளுக்குப் படுக்க முடியாமல், அங்கேயும் மனம் அலை பாய்ந்தது. 

அங்கே, சென்னையில் ரஞ்சன் என்ன செய்கிறானோ? 

வழக்கமாக மதிய உணவை, அவனுக்கு வீட்டிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தாள். இன்று என்ன நடக்கிறதோ? 

சாப்பிட்டானோ, இல்லையோ? 

எழுந்து சென்று, மறுபடியும் தோட்டத்தைச் சரண் புகுந்தாள். 

ஒரு பெரிய மரத்தின் மீது அரைக் கண் மூடி அவள் சாய்ந்திருந்தபோது, அருகில் யாரோ அமர்ந்தார்கள். 

யார் என்று திரும்பிப் பார்த்தால், சித்தரஞ்சன். 

அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், உருவெளித் தோற்றமாகத் தெரிகிறதோ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தால், உருவம் மறையாமல், அப்படியே இருந்தது. 

அது மட்டுமல்ல. வாயைத் திறந்து, “கண்ணை இப்படிக் கசக்காதே, கண்மணி. வந்திருப்பது, நானேதான்!” என்றும் சொன்னது! 

சொன்னதோடன்றி, அவளது கையைப் பற்றிக் கண்ணை விட்டு, அகற்றவும் செய்தது. 

சுய உணர்வு வந்து விலுக்கென நிமிர்ந்து உட்கார்ந்தாள் திலோத்தமா. முகத்தில் கோபம் படர, “நீங்கள் எப்படி இங்கே..” என்றவள் உடனே ஊகித்தாள். 

“இந்த அம்மா . .” என்று ஆத்திரமாகத் தொடங்கியவளை இடையிட்டு, “அத்தை மேல் கோபப்படாதே, திலோ. அவர்களை ஒரு விதமாக மிரட்டித்தான், அதற்கு மேல் வேறு வழியில்லாமல்தான், இந்த முகவரியை அவர்களிடமிருந்து வாங்கினேன். ஆனால், அது இருக்கட்டும். முதலில் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுகிறேன். என் உயிர் இருக்கு மட்டும், உன்னை நான், இனி ஒரு நாளும் பிரிய மாட்டேன். என்னால் உன்னைப் பிரிந்து வாழவே முடியாது. அதனால், எப்போதும் பிரியாமல் என்னுடனேயே இருக்க, நீ ஒத்துக் கொள்ள வேண்டும்!” என்றான் வேகமும், சிறு பதற்றமுமாக. திலோ புருவம் சுளித்து யோசிக்கு முன்னே, “அடுத்துச் செய்ய வேண்டியதையும், உன் கண் முன்னே, இப்போதே செய்து விடுகிறேன். இது, நீ கையெழுத்துப் போட்டு வைத்திருந்த வெற்றுக் காகிதம். இதோ பார். “என்று அவளுக்கு விரித்துக் காட்டிவிட்டு, அந்தக் காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான். 

துணுக்குகளைத் தூர வீசப் போனவன், கையை அடக்கி, “இங்கே குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது?” என்று கேட்டான். 

பதிலாக அவள் சுற்றுமுற்றும் பார்க்கவும், “பரவாயில்லை.” என்று, அருகில் கிடந்த சிறு கல்லால் தரையில் ஒரு பள்ளம் தோண்டினான். பள்ளத்தினுள், காகிதத் துணுக்குகளைப் போட்டு மூடினான். 

பிறகு, மீண்டும் அவளது கையைப் பற்றி, “என் தப்பான கருத்துகள், தப்பான பேச்சுகள், செயல்கள் எல்லாவற்றையும் மன்னித்து, மறந்து, மறுபடியும் என்னை ஏற்பாயா, கண்ணம்மா? திருமணத்துக்கு முன், டாக்டர் அனுசூயாவிடம் கூட்டிப் போனேனே, அதிலிருந்து என் சொல்… செயல்கள்… உன்னை வருத்திய அனைத்தையும் அடியோடு மறந்து, என்னை நீ மனதார ஏற்க வேண்டும். செய்வாயா? தயவு செய்து ஒத்துக்கொள் கண்மணி. ஏனென்றால்… ஏனென்றால்…” என்று குரல் கரகரக்கத் தடுமாறினான். 

என்ன இது? எல்லாம் தலை கீழாக அல்லவா இருக்கிறது?… அல்லது, இப்போதுதான் தலை சரியாக மேலே நிற்கிறதோ? ஆனாலும் எப்படி? 

திகைப்புடன், “ஏனென்றால்.. .?” என்று எடுத்துக் கொடுத்தாள் மனைவி. 

“ஏனென்றால், உன்னைப் பிரிந்து என்னால் வாழவே முடியாது, திலோ. நிச்சயம்! பிரிந்தால், ஏங்கி, ஏங்கியே செத்துவிடுவேன்!” என்றான் சித்தரஞ்சன். 

எளிதான வார்த்தை போல! அவளும் அப்படித்தானே, பெற்றவளை மிரட்டிவிட்டு வந்தாள்? “செத்துவிடுவேன்” என்று. 

ஆனால், அப்படி மிரட்டக் காரணம் இவன்தானே? 

ஓரக் கண்ணால் பார்த்து, “நான்தான் பணத்துக்காக உங்களை . .” என்று தொடங்கியவளின் வாயைப் பொத்தி, “இல்லை, நீ அப்படிப்பட்டவளே கிடையாது! நீ முன்பு சொன்னது எல்லாமே, நிஜம்! ஒரு பயங்கரமான ஏமாற்றத்தில், உன் மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தியிருந்தேனா? வேறு யோசிக்கவே வரவில்லை. ஆனால், அன்று, நல்லவளாக இருந்தால் என்று ஒருதரம் யோசிக்கச் சொன்னாய் அல்லவா? அப்படி யோசிக்கையில், உன்னிடம் தப்பையே காணமுடியவில்லை, திலோ! தப்பே அறியாத உன்னை எப்படியெல்லாம் வாட்டிவிட்டேன்! பிரிவு, பிரிவு என்று சொல்லிச் சொல்லி … உன்னை மட்டுமின்றி, என்னையும் வாட்டி …மெய்தான், கண்ணம்மா. பிரிவைப் பற்றி உன்னிடம் சொல்லும்போதெல்லாம், எனக்கும் பெரும் வேதனைதான். ஆனால், ஒரேயடியாக உன் காலில் விழுந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே நினைவூட்டுவதற்காகவே, வலிக்க வலிக்கத் திரும்பத் திரும்பச் சொன்னேன். “என்றான் அவன் வருத்தத்துடன். 

அவனுக்கும் வலித்திருக்கிறதே! பாவம்தான் என்று திலோ எண்ணுகையில், ரஞ்சன் மேலும் பேசினான். “நீ விலகி நின்றபோது, ஒரு நாள் கூட என்னால் தாங்க முடியவில்லை, தெரியுமா? ஆனால், இதுவும் பழக வேண்டியதுதானே என்று, சகித்துப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. பக்கத்தில் நீ இருக்கிறாய் என்பது இல்லாமல், என்னால் தூங்க முடியவில்லை. காலையில் உன் முகம் பாராமல், எழ முடியவில்லை! அதனால்தான் அதட்டுவது போல, மறுபடியும், உன்னை என் அறைக்கேக் கொண்டு வந்தேன்! ஆனால்..உண்மையைச் சொல்லு. உனக்கும் அப்படித்தானே?” என்று கெஞ்சலாகக் கேட்டான். 

இப்படி உருகிப் பேசுகிறவனிடம், வறட்டு கௌரவம் பாராமல் மன்னிப்பை வேண்டுகிறவனிடம், எப்படி விறைப்புக் காட்டி, மறைத்துப் பேசுவது? 

அல்லது, இப்போது எதற்காகத்தான் மறைப்பதாம்? 

செவ்விதழ்கள் புன்னகையால் விரிய, ஒப்புதலாகத் தலையாட்டினாள் திலோத்தமா 

“ஆஹ்ஹா!” என்று அவளை நோக்கி எழுந்த கைகளை அடக்கி, மடக்கி வைத்துக்கொண்டான் சித்தரஞ்சன். 

“இது மட்டும் நம் வீடாக இருந்தால் . . ஹூம்!” என்று பெரிதாக ஏக்கப் பெருமூச்சு விட்டவனைப் பார்க்கையில், திலோவுக்குச் சிரிப்பு வந்தது. ஆறுதலாகப் புன்னகை செய்தவன், ஏதோ நினைவு வர, விவரம் கேட்டான். “ஆனால் திடீரென்று, என்ன ஆயிற்று, திலோ? இத்தனை நாள் பொறுத்திருந்தவள், இப்படிப் பட்டென்று என்னை விட்டுக் கிளம்பிவிட்டாய்?” என்ற கேள்வியில், வியப்புடன், கண்டனமும் தொனித்தது! 

“நேற்று இரவு முழுவதும், நான் படுக்கக் கூட இல்லை, தெரியுமா? சொல்லு., என்ன ஆயிற்று? கூண்டுப் புலி மாதிரி எதுவும் செய்ய முடியாமல் நடந்து, நடந்து காலே ஓய்ந்துவிட்டது! எதற்காக இப்படி ஓர் அதிர்ச்சி வைத்தியம்?” 

“அது . . ” என்று ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்தாள் மனைவி. 

இனி, இவனிடம் மறைக்கத் தேவையில்லை. ஆனால், எப்படிச் சொல்வது? 

“நாம் டாக்டர் அனுசூயாவுக்கு ஃபீஸ் கொடுக்கவில்லை, அல்லவா? மருத்துவர்களிடம் கடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று என் தாத்தா சொல்வாராம். அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்!” 

புரியாமல் விழித்தான் அவன். “ஆனால், நான் கொடுக்கப் போனபோது, அவர்கள்தானே, மறுத்தார்கள்?”

“ஆனாலும், கொடுக்க வேண்டிய பணம் கொடுத்துத்தானே, ஆகவேண்டும்? அதனால், சென்னை சென்றதும், அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும்…” 

“அவர்களையா? டா..க்டர் அனுசூயா…” ஒரு கணம் யோசித்தவனின் கண்களில் பிரமிப்பு பரவியது. “அது… அப்படியானால்…” என்று ஆச்சரியத்துடன் வினவினான் அவன். 

ஒப்புதலாகத் தலையசைத்து, “சாரி ரஞ்சன். இந்த ஒன்றரை மாதமாக அனுபவித்த மனக் குழப்பத்தில், அவர்கள் சொன்ன மாத்திரையை, அடியோடு மறந்து போனேன்!” என்றாள் அவள், மெல்லிய குரலில். 

சொல்லிவிட்டு, சிறு இறுக்கத்துடன் காத்திருந்தாள். 

இதை, அவன் எப்படி எடுத்துக்கொள்ளக் கூடும்? இதுதான், அவனுக்கான “லிட்மஸ் டெஸ்டா”? 

“குழப்பம் என்று நகாசாகச் சொல்லுகிறாயா, திலோம்மா? என் கொடுமையால் ஏற்பட்ட வேதனையில் என்று, சும்மா வெளிப்படையாகவே சொல்லு. செய்த தப்புக்குத் தண்டனையாக, வருத்தமும் பட வேண்டும்தானே? ஆனால் உன்னை வாட்டும்போதே, எனக்கும் குழப்பம், வேதனை இரண்டுமே இருந்தன, திலோம்மா. வெளிப்படையாகச் சொல்லி, உன்னை வேதனைப்பட வைத்ததிலிருந்து, மிகவும் அதிகமாக! இரண்டுமாக என்னை ஆட்டிப் படைத்த விதத்தில், எனக்குமே, எல்லாம் மறந்துவிட்டது என்று தோன்றுகிறது! ” என்றான் பழைய நினைவு தந்த வருத்தப் பாதிப்பில் இறங்கிய குரலில். 

திலோவின் மனம் சட்டெனத் துள்ளியது. 

கணவனும் மனக் குழப்பத்தில் மறந்திருக்கக் கூடும் என்று அவள் நினைத்தது சரியாகத்தானே இருந்திருக்கிறது? 

அப்படியானால், அவன் குணத்தை, அவள் சரியாகத்தானே, கணித்திருக்கிறாள்? 

சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரு சிறு விதைதானே, பெரு மரமாக வளர்வதும்? 

அவள் மனம் குளிர்கையிலேயே, திடுமென, “யாஹூ!” என்று உற்சாகத்துடன் கூவினான், சித்தரஞ்சன். 

செய்தியைச் சந்தோஷமாகவே ஏற்கிறான்! 

திலோத்தமா புன்னகையோடு நோக்க, கண்ணில் சிரிப்புடன் அவன் தொடர்ந்தான். “ஆக, அம்மா திரும்பி வரும்போது, அவர்களுக்கான நல்ல சேதி தயார் என்று சொல்லு! மாமியார் சொல் தட்டாத மருமகள்! உச்சி குளிர்ந்து போவார்கள்! ” என்றுரைத்த சித்தரஞ்சன் சட்டென எழுந்தான். 

“கிளம்பு, கிளம்பு திலோ! நம் வீட்டுக்குக் கிளம்பு! இதற்குமேல், இப்படிப் பொது இடத்தில் இருந்து நல்ல சேதி கேட்டுத்தாங்க முடியாது! நம் வீட்டில், தனி அறையில், ஒழுங்கான முத்தாய்ப்பு வைக்கக் கூடிய விதமாகத்தான் சொல்ல வேண்டும். வா!” என்று அவள் பிடித்து எழுவதற்கு வசதியாகக் கையை நீட்டினான். 

உறுதியும் வனப்புமான அவனது கையை மறுக்காமல் பற்றி, மகிழ்ச்சியோடு எழுந்தாள் மனைவி!

(முற்றும்)

– காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2012, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *