சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 3,083 
 
 

மதியம் நல்ல வெயில் உண்ட களைப்பில் உறங்கிப் போனான் உமாபதி. யாரோ தொட்டு எழுப்புவதுபோலத் தோன்ற, கண்கள் மலர்ந்தான் யாருமில்லை. பகல் தூக்கம் இரவுத் தூக்கம் போல இருக்காது. கோழித் தூக்கம் தானே அது! அருகில் நடப்பது அசரீதியாய்க் கேட்பது போலக் கேட்டுக் கொண்டே உறங்கும் தூக்கம் பகல் தூக்கம். ஆனால், பகல் தூக்கத்தில் யாராவது எழுப்பினால்கூட, எல்லாருக்குமே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்.

யாரோ, சிரிப்பதுபோலக் கேட்க, கண்மலர்ந்து அக்கம் பக்கம் பார்த்தான். முத்தம்மாதான் வானத்தைப் பார்த்து ‘கெக்கே’ என வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

‘இந்தா.. இப்ப எதுக்குச் சிரிக்கிறே?’ என்றான் உமாபதி.

‘மாலைச் செவ்வானம் எவ்வளவு அழகா இருக்கு?’ என்றாள் அவள்.

‘மாலைச் செவ்வானத்துக்குத்தான் இத்தனை சிரிப்பாணியா?’

‘பின்னே..?! மாலைச் செவ்வானம் மழையைக் காட்டுமில்லே..?! காலைச் செவ்வானம் காற்றைக் காட்டும்!’ என்றாள் தனக்குத் தெரிந்த கிராம நம்பிக்கையில்.

அவள் கிராமத்தில் தோட்டம், காடு பார்த்து வளர்ந்தவள். காட்டுல மழை பெஞ்சாத்தானே வெள்ளாமை?!. சோளமோ ராகியோ போட்டு ஒண்ணுமில்லேன்னா மிளகாயாவது பயிரிட்டுப் பணம் பார்ப்பார்கள்.

கல்யாணமாகி குடிவந்தது ஒரு அப்பார்ட்மெண்டுக்கு! அங்க பயிரிட என்ன இடமா இருக்கு?! பால்கனியில் நின்னு ஓய்வெடுக்கும் நாலடி வராண்டாவில் நர்சரியில் வாங்கிவந்த ரோஜாவை வட்டத் தொட்டியில் வைத்திருந்தாள். வளர்க்கும் நப்பாசையில் அப்பார்ட்மெண்ட் போர்வெல் வாட்டர் ‘அதிக கடுசு’. உப்பு அதிகம். ஒண்ணும் வளராது ஒடம்புல செதில் வேணா வளரும். அம்புட்டுத்தான். பழகிய பழக்கமாச்சே!? செடிகிடி வளர்க்காம பொழுது போகுமா? அதான் நர்சரி நம்பிக்கையில் ரோஜா வூட்டில் ஒரு பயிராக! ‘ஊடுபயிராக இல்லே! வூட்டில் ஒரு பயிராக!’.

அப்பார்ட் மெண்ட் தண்ணி ஆகாத செடிக்கு மாலைச் செவ்வான மழை வரப்பிரசாதமில்லையோ?! வாடிய பயிரைக் கண்டு வாடியவள் சித்திரை செவ்வான, மாலை செவ்வான மகிழ்ச்சியில் திளைக்கிறாள். அடுத்தவர் சிரிப்பில் ஆனந்தம் காணாமல் பகல் தூக்கம் தூங்கி என்ன பரலோகமா பார்க்கப்போறோம்?!. தன்னையே தேற்றிக் கொண்டான் உமாபதி.

முத்தம்மாவோடு சேர்ந்து சிரித்தான் உமாபதி. இப்படிச் சிரிப்பைச் சிறுகச் சிறுகச் சேமித்துதான் சுகரைக் குறைக்க ஒரு அசோசேனே இருக்கிறதே அப்பார்ட்மெண்ட்டில்…?!

சிரிக்கட்டும்…! சிரிக்கட்டும்!. சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே…! அது அவடிக்கும் கவிதை ஆயிரம். அவை எல்லாம் உன் வண்ணமே! என்று முத்தம்மாவைப் பார்த்துப் பாடினான் உமாபதி.

முத்தம்மா நர்சரி ரோஜாவாய் நாணிச் சிரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *