கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 2,480 
 
 

‘காதலிக்கும் போது, தான் மகிழும் படியாக பேசிய வார்த்தைகளைப்போல், தனது அழகையும், தான் அணியும் உடைகளையும் வண்ணித்தது போல் தன் கணவன் நிகன் திருமணத்துக்குப்பின் நடந்து கொள்வதில்லை’ எனும் மன வருத்தம் நிவ்யாவை வாட்டியது.

நிகன், நிவ்யாவின் மாமன் மகன் தான். சிறுவயதிலிருந்தே அவனது ஒவ்வொரு செயலும் அவளுக்கு பிடித்திருந்தது. 

ஒரே கல்லூரியில் படிக்கச்சேரும் வரை உறவினராக, நல்லவனாக, மனம் விரும்பியவனாக, நல்ல நண்பனாக மட்டுமே தெரிந்தவன், தனக்குள் காதலனாக உருமாறியதையறிந்து வெட்கத்துக்கு மனதில் இடம் கொடுத்தாள். அவனை மறைந்திருந்து கவனிக்கலானாள்.

அவனது ஆடைகளை, நடையை, பேச்சின் நளினத்தை தனக்குள் ஈர்த்துப்பூரித்து மகிழ்ந்தாள்.

ஒரு நாள் தனிமையில் கல்லூரியின் மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தவனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தவள் “என்னை உனக்கு பிடிச்சிருக்கா…?” எனக்கேட்டாள்.

“என்னடி இப்படிக்கேட்டுட்டே…? பிடிச்சிருக்காவா…? அதுக்கும் மேல உசரத்துல ஏதாச்சும் வார்த்தை இருந்தா சொல்லு….”

என்றவன் அவளது கைகளை அன்பாக, முதலாகப்பற்றிக்கொண்டான். அவளது கைகள் வெட்கத்தால் நடுங்கின. அவன் மேலும் இறுகப்பற்றிக்கொண்டான். அவளது தாமரை இதழ் போன்ற செக்கச்சிவந்த உள்ளங்கைகளை பார்த்தும் ரசித்தான்.

“ஜோசியம் படிச்சிருக்கையா…?”

“ஏன் கேக்கறே….?”

“கையில….அதுலயும் எடது கையில ரேகைய உத்துப்பார்க்கிறே….? “

“பொதுவான பழக்கம்…”

“என்னது….? பழக்கமா…? அப்படின்னா இது வரைக்கும் நெறைய பொண்ணுங்க கையைப்பிடிச்சுப்பார்த்திருப்ப போல….”

“போடி அசடு. அப்படியிருந்திருந்தா என்னோட பர்சனாலிட்டிக்கு பத்துப்பொண்ணுங்க என்னச்சுத்தி வந்திருப்பாங்க…”

“சும்மா பேச்சுக்கு சொன்னேன்…. கோவிச்சுக்காதே…” என்றாள் கொஞ்சும் குரலில்.

“பேச்சுக்கும் சொல்லவே கூடாது. நான் உனக்கே உனக்காக…உனக்காக மட்டுமே படைக்கப்பட்டவன்….” எனும் நிகனின் வார்த்தையைக்கேட்டு ஐசாக தன் மனதால் உருகி அவன் மடி மீது சாய்ந்தாள் நிவ்யா.

இவர்களது காதல் இரண்டு வீட்டினருக்கும் தெரியவர, முறைப்படி தன் சகோதரனிடம் பெண் கேட்ட நிகனின் தாய் சாரா, சகோதரன் சம்மதம் சொன்னதும் தனது மருமகள் நிவ்யாவை வாரி அணைத்து மகிழ்ந்தாள். 

வயதாகும் காலத்தில் தங்கள் வீட்டிற்கு வரும் மருமகள் உறவாக இருந்தால் தங்களை நன்றாகக்கவனித்துக்கொள்வாள் எனும் சுயநலத்தாலும் முன் காலத்தில் உறவுகளில் பெண் எடுத்தனர் ஆணைப்பெற்றவர்கள்.

திருமணமாகி குழந்தைகள் வந்த பின் முன்பிருந்த காதல் தன் மீது கணவனிடம் இல்லாததை எண்ணி வருந்தினாள். அவளது சோர்ந்த முகத்தைப்பார்த்தவாறே வேலைக்கு கிளம்பியவன், அடுத்த ஒரு மணி நேரத்துக்குப்பின் போனில் மெஸேஜ் அனுப்பினான்.

‘திருமணத்துக்கு முன் எனது இதய மரத்திலிருந்து அன்பெனும் கனிகளை தினமும் பறித்து வந்து ஒவ்வொன்றாகக்கொடுத்தேன். திருமணம் செய்து கொள்ளும் முடிவு என்பதே மொத்தமாக இதயத்தையே மொத்தமாகக்கொடுத்து விடும் நிலை என்பதால் இதய மரம் கனிந்து, கனிந்து உனக்குள் மட்டுமே விழுந்து கொண்டு இருக்கும். அதை நீ கவனிக்கவில்லையா…? எனது ஒவ்வொரு செயலும் உனக்காக நான் மொத்தமாகக்கொடுத்த இதய மரத்தின் அன்புக்கனி தான் என்பது…..? அப்போது எனது சில மணித்துளிகள் உனக்காக என்னைப்பயன்படுத்தினேன். இப்போது வாழ்க்கையே உனக்காக…. வாழ்வதே உனக்காக… எல்லாம் உனக்காக…. மோகத்தோடு கணவனை எதிர்பார்த்துக்காத்திருக்க வேண்டிய வயதில் எதற்க்காக சோகத்தோடு பார்த்திருக்கிறாய்…?’ படித்ததும் உணர்ச்சி வசப்பட்டதால் ஆனந்தக்கண்ணீர் சிந்தினாள். ‘தவறாகப்புரிந்து கொண்டோம்’ என நினைத்து வருந்தினாள்.

புதியவளாக, புரிந்தவளாக, மனப்புத்துணர்வோடு ‘தானும் காதல் கணவனைப்போலவே அன்பெனும் தனது இதயக்கனி மரத்தை மொத்தமாக அவனிடத்தில் இன்று கொடுத்து விட வேண்டும்’ எனும் மன உறுதியுடன் அலுவலகத்திலிருந்து வரவிருக்கும் கணவன் நிகனின் வரவுக்காக ஆவலோடு வாசலிலேயே மலர்ந்த முகத்துடன், மலர்கள் நிறைந்த கூந்தலோடு எதிர் பார்த்துக்காத்திருந்தாள் நிவ்யா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *