பீர்பால் ஃபிரிட்ஜ்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 2,044 
 
 

ஒருவழியாய் பிஈ முடிச்சு ஒரு கம்பெனியில் பிளேஸ்மெண்டுக்குக் காத்திருந்தாள் பிரதீபா! அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆசைப்பட்டார் அப்பா அவினாசிலிங்கம்.  காலங்கெட்டுக் கெடக்கு எந்த ஊர்ல பிளேஸ்மெண்ட் ஆகி வேலைக்குச் சேரணுமோ? எத்தனை வருஷம் வெளியூர்ல குப்பை கொட்டணுமோ?! புரியலை அவருக்கு! இருந்தாலும் ஒத்தைப் பெண்ணுக்கு உபதேசம் பண்ண நினைத்தார். என்ன பண்ணலாம்?! 

அவர் நினைவுக்கு வந்தது. அக்பர் பீர்பல் கதை ஒன்று. 

இத, பாரு பிரதிபா, வெளியூருக்கு வேலைக்குப் போகப் போறே..! கைநிறைய கணினி வேலையில் சம்பாதிக்கப்போறே!. பார்க்க வேற லட்சணமா இருக்கே..! எச்சரிக்கையா இருக்கணும் இல்லையா?! அதனால, பீர்பால் அக்பருக்குச் சொன்ன அட்வைஸ் கதையை அப்பா உனக்கும் சொல்றேன்னு சொல்லி ஆரம்பிச்சார். 

பீர்பால் ஒரு அலுவலக வேலையா வெளிநாடு போக அக்பர்ட்ட அனுமதி வாங்க வந்தார்.. அக்பர் சொன்னார். ’இத பாரு பீர்பால்,  வெளியூர் நம்ம நாடு மாதிரி இருக்காது. ஜாக்கிரதையா இருக்கணும்!. ஏமாத்திடுவாங்க!. அது நம்ம ஊர் மாதிரி இருக்காது!’ என்றார். 

பீர்பால் சற்றும் சளைக்காமல் அக்பர்ட்ட சொன்னார். ’மன்னா! நீங்க அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீங்க!. எங்கிட்ட நூறு தொப்பிகள் இருக்கு. அதைப் போட்டு ஜாக்கிரதையா வெளிநாட்டுல இருந்து திரும்பி வந்துடுவே’ன்னார். 

ஆர்வம் மிகுதியில் அக்பர் கேட்டார். ‘அதென்ன நூறு தொப்பி?’ன்னு. 

‘ராஜா,  எங்கிட்ட ‘புகழ்ச்சி’ங்கற நூறு தொப்பி வச்சிருக்கேன். புகழுக்கு மயங்காதவங்க உலகில் உண்டா?’ என்றார். வெளியூர் காரர்களுக்கு புகழ்ங்கற தொப்பியைப் போட்டு வெற்றிகரமாத் திரும்பி வந்துடுவேன்னாராம். 

அக்பர் சொன்னார். ‘அப்படி இல்லை பீர்பால், புகழுக்கு மயங்காதங்களும் உலகில் உண்டு’ன்னார். 

பீர்பால்,  சட்டுன்னு சொன்னார். ‘இல்லை மன்னா, புகழுக்கு மயங்காத உங்களைப் போன்ற நல்லவர்கள் சிலர் மட்டுமே உண்டு! பொதுவா எல்லாருமே மயங்கிடுவாங்க!’ என்றார். 

அதைக்கேட்ட அக்பர் அசடு வழிய, ‘ஹி…ஹி…ஹி’..ன்னு சிரிச்சிட்டு ‘ஆ!…ஆமான்!’னார். 

பீர்பால் தனக்குள் நினைத்துக் கொண்டார், ‘நூறு தொப்பில் ஒரு தொப்பி இங்கேயே காலியாயிடுச்சு! மிச்சம் தொன்னூற்றொன்பதோடதான் நாம் வெளியூரு போணும் போலிருக்குன்னு!’ இந்தக் கதையைச் சொல்லி, மகளிடம் சொன்னார்..’நீ அழகுன்னு சொல்லுவாங்க…! உபல்காரி!ன்னு சொல்லுவாங்க ஏமாந்துடாதே!’ என்றார். 

அவள் சொன்னாள், ‘நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க அப்பா..!’ இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே.. மகள் வாழ்க்கையில் அப்பாவின் அக்கறையை மகிழ்ந்த மனைவி மரகதம் கிச்சனிலிருந்து ‘ஏங்க… டீ போட்டிருக்கேன்!. எங்கயும் பொசுக்குன்னு கிளம்பிடாதீங்க! இதோ கொண்டாரேன்’ என்று குரல் கொடுத்தாள். 

டீ வந்தது. வெறும் டீயை எப்படிக் குடிப்பது, ‘ஃபிரிட்ஜல இருந்து அந்த பிஸ்கட் பாக்கெட்டை எடும்மா’ என்றாள் மகள். எடுத்ததும் அதை அப்பாவிடம் தந்து அப்பா ‘இதைப் பிரிங்க!’ என்று கொடுத்தாள். 

‘இதை எதுக்கு நம்மிடம் தருகிறாள்?’ என்று அவர் யோசிக்க… 

‘அப்பா, இந்த பிஸ்கட் பாக்கெட் பிரிட்ஜ்ங்கற ஐஸ் பெட்டிக்குள்ளதான் இருக்கு.. ஆனா பாருங்க, பிரிச்சு பிஸ்க்ட்டைக் கடிச்சா மொறமொறப்புப் போகலை! நான் பீர்பாலையோ அக்பரையோ பார்த்ததில்லை! ஆனால் பிரிட்ஜ் பிஸ்கட் பார்த்திருக்கிறேன். எந்தச் சூழலிலும் தன்னிலையை இழக்காத இந்த ஃபிரிட்ஜ் பிஸ்கட் மாதிரி மொற மொறப்பு கொறையாமா அசலா இருப்பேன்!’ என்றாள்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *