புரியாதப் புதிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 813 
 
 

“என்ன தம்பிங்களா… உங்க அம்மா இன்னும் வரலையா?” என்ற ஒர் ஆண் குரல் கேள்வி கேட்க, திரும்பிப் பார்த்த ஆதிரன், “இன்னும் வரல அங்கள். எப்பயுமே என்னையையும் தம்பியையும் கூட்டிக்கச் சீக்கிரம் வந்திடுவாங்க. ஆனா, இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட்டுனு தெரிலியே…!” என்று பள்ளி காவலாளி கேட்ட கேள்விக்கு ஆதிரன் குழப்பத்துடனே பதில் கூறினான். தன்னுடன் நின்ற நண்பர்கள் அனைவரும் வீடு திரும்பியதைக் கண்டு சற்று வேகமாகத் துடித்த ஆதிரனின் இதயம், தானும்  ஆண்டு ஒன்று படிக்கும் தன் தம்பியும் மட்டுமே பள்ளி வளாகத்தில் நிற்பதை உணர்த்தியது. தன் தம்பியின்  கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வாகனத்தைக் கண் அசைக்காமல் எதிர்பார்த்து காத்திருந்தான்.  

“அதோ அம்மா வந்துட்டாங்க அண்ணா” என்று தம்பி கூறிய நொடிதான் ஆதிரனின் இதயம் சற்று மெதுவாகத் துடிக்கத் தொங்கியது. பள்ளி வளாகத்தில் அம்மாவின் வாகனம் வந்து நின்ற கனமே ஆதிரனும் அவன் தம்பியும் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். “ஏன் மா இவ்ளோ லேட்டு? நானும் தம்பி மட்டும் தான் தனியா நிண்டுகிட்டு இருந்தோம் தெரியுமா?” என்று ஆதிரன் தனது புலம்பலைத் தன் அம்மாவின் காதில் வீசிக் கொண்டிருந்தான். அவனும் தம்பியும்  கூறுகின்றதைக் கூட  காதில் வாங்காமல் அம்மா எதையோ யோசித்துக் கொண்டு வாகனத்தை வேகமாக ஒட்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான், தன் அம்மாவின் முகத்தைக் கவனித்தான். எப்பொழுதும் பள்ளி முடிந்து வந்தவுடன் நடந்தவற்றை எல்லாம் கேட்கும் அம்மா அமைதியாக வருவதை உணர்ந்தான். முக்கியமாக அம்மாவின் முகத்தில் எதோ ஒரு புறியாத பயமும் பதற்றமும் இருப்பதை உணர்ந்தான். “ஏன் மா என்ன ஆச்சி…? ஏன் ஒரு மாறி இருக்கீங்க?” என்று ஆதிரன் அம்மாவிடம் கேட்டான். ஆனால், அம்மாவின் வாயிலிருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. தம்பியோ தனது வகுப்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பேசத் தொடங்கினான்.  

வீட்டை அடைந்தவுடன் எப்பொழுதும் போல் ஆதிரனும் தம்பியும் குளிக்கச் சென்றனர். அம்மா அவர்களுக்கு உணவுகளை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். திடிரென்று அம்மாவின் கைப்பேசி ஒலித்தது. அம்மா ஓடிப் போய் கைப்பேசியை எடுத்து பேசினார். ஆதிரன் குளித்துவிட்டு தன் தம்பியையும் குளிப்பாட்டி  அறையை விட்டு வெளியேறுவதைக் கண்ட அம்மா வேகமாக வீட்டை விட்டு வெளியேப் போய் வாசலில் மெதுவாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அம்மாவின் முகம் வாடிப் போன மலரைப்போல் இருந்தது. கண்கள் கலங்கியது மாறியும் ஆதிரனுக்குத் தூரத்திலிருந்து தெரிந்தது. அவனும் தம்பியும் அம்மாவுடன் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆதிரனால் அம்மா என்ன பேசுகிறார் என்பதை ஊகிக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அம்மா வேகமாக வந்து “சாரி ஐயா… அம்மா போன் பேசிட்டு வர லேட்டு ஆச்சி” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தட்டில் சோறு போட்டார். மூவரும் சாப்பிடத் தொடங்கினர். 

மதிய உணவுகளை உண்டப் பிறகு, அம்மா கைப்பேசியையும் சில பொருள்களையும் பையில்  வைத்துக் கொண்டு எடுத்து வெளியே செல்ல ஆயுத்தமாவதை ஆதிரன் உணர்ந்தான். “ஆதிரா… கதவ பூட்டிட்டு, நீயும் உன் தம்பியும் போய் தூங்குங்க. அம்மா வெளியே போயிட்டு வரேன்” என்று அம்மா பரபரப்புடன் ஆதிரனிடம் கூறிக்கொண்டே வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அம்மா சொல்வது என்னவென்று புரியாமல் “என்னமா சொல்றிங்க? எங்க போரிங்க மா? நீங்க இப்போ வெளிய போய்ட்டா நானும் தம்பியும் மட்டும் தானே தனியா இருப்போம்…!” என்று பயத்துடன் கூறினான். ”நீ அண்ண ஆதிரா… அம்மா இல்லாத நேரத்துலே நீதானே அவன பாத்துக்கணும். அம்மா வர வரைக்கும் தம்பிய கொஞ்சம் பத்திரமாப் பாத்துக்கோ. தம்பிய தூங்க வைச்சிட்டு நீயும் தூங்குச் சரியா…” என்றார் அம்மா. அம்மா எங்கே செல்கிறார் என்ற கேள்விக்கு விடைத் தெரியாததால் மீண்டும் அம்மாவிடம் அக்கேள்வியை எழுப்பினான். ஆனால், அம்மா “அதுக்கெல்லா பதில் சொல்ல நேரமில்லா,  நா அப்புறம் சொல்ற… இப்போ நா வெளிய போய்ட்டு  வர. நீயும் உன் தம்பியும் தூங்குங்க. பத்திரமா இருங்க” என்று இருவரிடமும் பரபரப்புடன் கூறி வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.  

ஆதிரனும் அம்மா சொன்னதற்கு மறுமொழி கூறாமல்  தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கதவைப் பூட்டினான். தன் தம்பியைத் தாலாட்டுப் பாடி உறங்க வைத்து அவனும் உறங்கினான். திடீரென்று ஒரு குரல் அவனை எழுப்பியது. அவனும் பதட்டத்துடன் எழுந்து,  நிமிர்ந்து பார்த்தான். அம்மா துணிகளை மடித்துக் கொண்டே, “டேய்! ஆதிரா… போய் குளி! இன்னும் எவ்ளோ நேரம் தூங்குவ?”  என்று அம்மாவின் குரல் அவனை அதட்ட, தூக்கக் கலக்கத்தில் எழுந்தவன் அம்மா வீடு திரும்பியதை அறிந்து கொண்டான். தம்பியும் தன் விளையாட்டு பொருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நேரம் ஐந்தை எட்டி கொண்டிருந்ததை அறிந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.  

குளித்துவிட்டு வந்த ஆதிரனின் கண்கள் கடிகாரத்தை நோக்கிச் சென்றது. ஆறு மணி ஆக போகிறதே அப்பாவை இன்னும் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டே அம்மாவைத் தேடிச் சென்றான். “அம்மா… மணி ஆச்சி அப்பாவ இன்னும் பாக்கவே இல்லையே? அப்பா வந்திட்டாரா?” என்று ஆதிரன் தன் அம்மாவிடம் ஏக்கத்துடன் கேள்வி கேட்டான். ஒரு நிமிடம் அமைதிக் காத்து, “அப்பாவுக்கு இன்னிக்கு நைட் ஷிப்ட்டு போட்டுடாங்களா. அப்பா நாளைக்கு தான் வருவாங்க” என்று மெல்ல குரலில் தடுமாற்றத்துடன் கூறினார். ஆதிரன் வியப்பு அடைந்து “நைட் ஷிப்ட்டா? இந்த மாறி நடந்ததே இல்லையே. ஏன் திடிர்னு இன்னிக்கு நைட் ஷிப்ட்டு மா?” என்று தன் குழப்பத்தைத் தீர்க்க பல கேள்விகளைக் கேட்டான். ஆனால், அம்மாவோ அவன் கேள்விகள் ஏதும் தன் காதில் கேட்காததுப் போல் இரவு உணவுகளைத் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தார். அவனும் அதற்கு பிறகு எதுவும் கேட்கவில்லை.  

இரவு உணவுகளைத் தயார் செய்துவிட்டு, அம்மா எங்கயோ வெளியே புறப்படுவதற்குப் பொருட்களை தயார் செய்துக் கொண்டிருந்தார். “ஆதிரா அம்மா வெளியே போய்ட்டு வரேன். நீயும் தம்பியும் வீட்ல சாப்பிட்டு வீட்டுப் பாடங்களைச் செய்ங்க. உன் தம்பிக்கும் கத்துக்கொடு.  நா கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். கேட்ட கேள்வியையே கேட்கிறோம் என்று தெரிந்தும்  அம்மாவிடம் அதே கேள்விக் கேட்டதற்கு அம்மாவிடமும் அதே பதில் தான் வந்தது. ஆதிரனும் சாப்பிட்டு விட்டு தம்பியையும் சாப்பிட வைத்து விட்டு வீட்டுப் பாடங்களைச் செய்ய தொடங்கினார்கள். அம்மா இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். வந்தவர் பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்களா என்பதனை உறுதி செய்துக் குளிக்கச் சென்றார். 

ஆதிரனும் தம்பியும் வரவேற்பறையில் வீட்டுப்பாடங்களைச் செய்துக் கொண்டிருந்தனர். அம்மாவும் பூஜை அறையில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு வாகனம் வீட்டின் முன் புறத்தில் நின்றது. “அண்ணா நம்ப வீட்டு முன்னாடி யாரோ நிக்கிறாங்க” என்றான் தம்பி. யாரென்று பார்க்க ஆதிரன் வாசலை எட்டிப் பார்த்தான். ஏதோ கிராப் வண்டி (grab car) வீட்டின் முன் புறத்தில் யாரோ இறங்குவதற்கா நின்றது. “யாரு நம்ப வீட்டுக்கு இந்த நேரத்துல வாரா” என்று எண்ணிக் கொண்டே  ஆதிரன் இரு கண்களையும் விழித்துக் கொண்டு வாசலையே எட்டிப் பார்த்தான். கண்களை விழித்துப் பார்த்த ஆதிரனின் முகத்தில் திடிரென்று புன்னகைப் பூத்தது.  

“அம்மா……!” என்று கூச்சலிட்டப்படியே தம்பி அம்மாவைத் தேடி ஓடினான். ஆதிரன் கதவைத் திறந்து “பாட்டி…!” என்று கூறியே ஓடிப் போய் தன் பாட்டியைக் கட்டி அனைத்துக் கொண்டான். அம்மாவும் வேகமாக ஓடி வந்து கண்களில் நீர் வழிய பாட்டியை அனைத்துக் கொண்டார். பாட்டியின் வருகையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த நொடிக்குப் பிறகு ஆதிரனின் மனதில் சிறு குழப்பம். “ஏன் பாட்டி திடிர்னு வந்துருக்கிங்க?” என்று ஆதிரன் கேட்க, “சும்மா தான் பா வந்தேன். உங்கள பாக்கணும் போல இருந்துச்சி” என்றார் பாட்டி. “ஏன் மா இந்த நேரத்துல எதுமே சொல்லாமே கிராப் ல வந்துருக்கிங்க?” என்று கண்களைத் துடைத்தப்படியே கேள்வி கேட்டார் அம்மா. “இந்த நேரத்துல உனக்கு நா துணையா இல்லாம யாரு இருப்பா? உன்ன எப்படி தனியாவிடுறது. யாராவது கூட்டு வருவாங்களானு காத்து இருந்தேன் யாரும் வரல. அதான் பக்கத்து வீட்டு மீனாட்சி மக கிட்ட கிராப் கேட்டு வந்துட்டேன்” என்றார் பாட்டி. “அதுக்கு ஏன் இப்பவே வரணுமா? நாளிக்கு வரலாம்ல” என்று சொல்லிக் கொண்டே வீட்டில் நுழைந்தனர்.  

“ஆதிரா நீயும் உன் தம்பியும் ரூம்ல போய் படிங்க” என்று அம்மா ஆதிரணிடம் சொல்ல, “இல்லமா நாங்க அப்புறம் படிக்கிறோம், பாட்டி வந்துருக்காங்கல. பேசிட்டு போறோம்” என்றான். அதற்கு அம்மா “நா உங்கள இப்பவே போ சொன்ன” என்று அதட்டினார். அவர்களும் மறு வார்த்தைப் பேசாமல் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அறையில் நுழைந்தனர். ஆனால், அவர்கள் ஏதோ பேசபோகிறார்கள். அதற்கு தான் அறைக்குச் செல்ல சொல்கிறார்கள் என்று ஆதிரனுக்குத் தோன்றியது. பாடத்தை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் அறையிலே உறங்கினார்கள். 

சூரிய ஒளி முகத்தில் பட்டதால் ஆதிரன் சட்டென்று விழித்துக் கொண்டான். பக்கத்தில் தம்பியும் பாட்டியும் மட்டும் படுத்திருப்பதைக் கண்டான். ஆனால், அம்மாவை காணவில்லை. சன்னலை எட்டி பார்த்தான். சூரியன் தனது தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான். “ஐயோ…! விடிஞ்சிருச்சா? ஆப்போ இன்னிக்கி நா ஸ்கூல்க்கு போலையா? அம்மா ஏன் என்னையும் தம்பியையும் எழுப்பவே இல்ல? என்ற பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டு படுக்கையை விட்டு இறங்கி அம்மாவைத் தேடினான். அம்மா சமையல் அறையில் வேளைச் செய்வதை அறிந்து சமையல் அறைக்குச் சென்று “அம்மா” என்று கூப்பிட்டான்.  

“ஆதிரா… எழுந்துட்டியா?” என்று கூறிக்கொண்டே பின்புறம் அம்மா திரும்பி பார்த்தார். “ஆமா மா… ஏன் மா என்ன ஸ்கூல்க்கு எழுப்பிவிடல?” என்று ஆதிரன் அம்மாவிடம் கேட்டான். அம்மா ஒரு நிமிடம் யோசித்து “இன்னிக்கி நம்ப ஒரு இடத்துக்குப் போகபோறோம். அதான் இன்னிக்கி உங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்க்கு அனுப்பல” என்று சொல்லிக்கொண்டே காய்கறிகளை வெட்டி கொண்டிருந்தார். தூக்கமாக இருந்த ஆதிரனின் முகம் ஒரு நிமிடம் சட்டென்று தெளிந்தது. “எங்க மா போறோம்” என்று ஆதிரன் கேட்க, “ரொம்ப தூரம் இல்ல பக்கத்துல தான்… ஒருத்தவங்கள பாக்க போறோம்” என்று பொதுவாகக் கூறினார் அம்மா.  

ஆதிரனும் வெளியே தூரமாக போறோம் என்று நினைத்து ஒரு நிமிடத்தில் கனவுக் கோட்டையையே கட்டிவிட்டான். ஆனால் அம்மா சொன்ன அந்த வார்த்தையில் அவன் கோட்டைச் சரிந்து போனது. சரி அம்மா குளித்து தயாராக இருக்க சொன்னதால் குளிக்க சென்றவன் மீண்டும் அம்மாவிடம் வந்தான். “அம்மா… அப்பா இன்னிக்கி வரதா தான சொன்னிங்க. இன்னும் வீட்டுக்கு வரல. எப்ப மா அப்பா வருவாரு? அவர பாத்து ஒரு நாள் ஆச்சி மா?” என்று வாடிப்போன முகத்துடன் அம்மாவைப் பார்த்தான். ஆதிரன் கேள்வி கேட்ட மறுகணம் அம்மாவின் முகம் கடலில் மூழ்கிப்போன கப்பல் போல கவலையில் மூழ்கிவிட்டது. நிமிர்ந்து ஆதிரனின் முகத்தைப் பார்த்த அம்மாவின் கண்களிலிருந்து இரண்டு துளி நீர் தரையைத் தொட்டது. அம்மாவின் கண்களில்  இருந்த நீர் துளியைக் கண்டதும் அந்த ஒரு நிமிடம் ஆதிரன் புரியாத புதிர் போல் குழம்பி நின்றான். “உன் அப்பா…” என்று ஏதோ பேச தொடங்கிய அவனின் அம்மா, “அம்மா……” என்றே அழுந்து கொண்டு வந்த தன் தம்பியைப் பார்த்ததும் சொல்ல வந்ததைச் சொல்லாமல் அவனைத் தூக்கி அனைத்துக் கொண்டார். அம்மா சொல்ல வந்த வார்த்தைப் பாதிலே அருந்த நூல் போல் தொக்கி நின்றது. மீண்டும் அதைப் பற்றி பேச வாய்ப்பே அமையவில்லை. 

“அப்பா இன்னும் வேலை முடிஞ்சி வரல போல, சரி நம்ப போய் குளிப்போம்” என்று மனதில் சொல்லிக் கொண்டே குளிக்க சென்றான். “அம்மா… எவ்ளோ நேரம் தான் கிளம்புவிங்க? நாங்க எல்லாம் ரெடி மா. வாங்க சாப்புட்டு கிளம்புலாம். மாணி ஆவுது…” என்று குரலை உயர்த்திக் கொண்டே மேசையில் காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் அம்மா. “நம்ப அம்மா தான் ரெடி ஆவ லேட்டு பன்னுவாங்கனு நெனைச்சா… நம்ப பாட்டி அம்மாக்கு மேல போல” என்று ஆதிரனும் தம்பியும் பேசிக் கொண்டே  சிரித்துக் கொண்டனர். “தோ… வந்திட்டேன். சாப்பாடு எடுத்து வை வரேன்” என்று சொல்லியே உணவருந்தும் மேசை நாற்காலியில் அமர்ந்தார் பாட்டி. நால்வரும் காலை உணவை அருந்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினர்.  

ஆதிரனுக்கும் தம்பிக்கும் எங்கு செல்கிறோம் என்று புரியாமல் அம்மாவின் வாகனத்தில் மகிழ்ச்சியாக அமர்ந்து கொண்டு வெளி உலகை இரசித்து வந்தனர். ஆதிரனும் தம்பியும் மீண்டும் அம்மாவிடம் “எங்க மா போறோம்? இப்பயாவது சொல்லுங்க” என்று கேட்டப்போதும் எந்த பதிலும் வரவில்லை. சரி பாட்டியிடம் கேட்டாலாவது விடைக் கிடைக்கும் என்று நினைத்து, அதிரன் பாட்டியிடம் அதே கேள்வியை எழுப்பியப் போதும் இதே அமைதியே பதிலாக வந்தது. “அப்படி எங்க தான்  போறோம்?” என்ற கேள்விக்குப் பதிலைத் தேட ஆதிரனும் தம்பியும் மூளையைப் பிசைந்து கொண்டிருந்த போது அம்மாவின் வாகனம் எதோ ஒரு பெரிய கட்டிடத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்றது. ஆதிரனுக்கும் தம்பிக்கும் எங்கு இருக்கிறோம் என்பதனையே புரியாமல் யோசித்துக் கொண்டிருந்த போது வாகனத்தை விட்டு அம்மா இறங்க சொன்னார். அவர்களும் தனக்குள் முனுமுனுத்துக் கொண்டு வாகனத்தை விட்டு இறங்கினார்கள். அம்மா முகத்தில் எதோ ஒன்றை அணிந்து கொண்டு பாட்டியிடமும் அவர்களிடமும் கொடுத்து அணிந்துக் கொள்ள சொன்னார். இது என்னவென்று பார்த்துக் கொண்டே இருந்த ஆதிரனுக்கு  தெரிந்தது அது முக கவசம் என்று. “இது ஏன்?” என்ற கேள்வி அவன் வாயிலிருந்து வந்தாலும் அம்மா வாயிலிருந்து பதில் வராமல், அது பதிலாக ”போட்டுட்டிங்களா? வாங்க போலாம்” என்ற வார்த்தையே வந்தது.  

“சரி நம்பலே போய் பார்ப்போம்” என்ற எண்ணத்துடனே ஆதிரன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கட்டிடத்தின் முன் புறத்தில் நின்று மேலே இருந்த குறியீடுப் பலகையை அன்னாந்து பார்த்தான். ஆனால் அவன் இருந்த உயரத்திற்கு அதில் எழுதிருப்பதை அவனால் பார்க்க முடியவில்லை. அம்மா அவர்கள் இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு கட்டிடத்தின் உள்ளே நுழைத்தார். உள்ளே அனைவரும் அவர்கள் அணிந்ததுப் போலே முக கவசத்தையும் அணிந்து கைகளில் உரையையும் அணிந்திருந்தனர். உள்ளே நிறையப் பேர் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருப்பதை ஆதிரனும் தம்பியும் நோட்டம் விட்டனர். அதுமட்டுமின்றி, சிலர் வெள்ளை அங்கியையும் அணிந்து கொண்டிருந்தனர். ஆதிரன் போகும் வழியெல்லாம் அலைப்பாயவிட்ட கண்கள் ஒன்றை அடையாளம் கண்டது. ஒருவர் பல வகை மருந்துகள் நிறைந்த தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டே சென்றார். அந்த காட்சியைப் பார்த்த ஆதிரன் அவர்கள் மருத்துவமனையில் தான் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு தன் தம்பியிடம்  கிசுகிசுவென பேசினான். ஆகையால், தங்களின் ஆரம்பத்திலிருந்து இருந்த கேள்விக்கு விடைக் கிடைத்தாலும் இப்பொழுது “இங்க நம்ப யார பாக்க வந்துருக்கோம்?” என்ற புது கேள்வி ஆதிரனின் மனதில் தோன்றியது.  

ஆதிரனின் கேள்விக்கு விடைக் கிடைக்கும் வகையில் அவர்களுடைய கால்கள் ஓர்  அறையின் முன்னே நின்றது. அங்கு சில தாதியர்களும் ஒரு வெள்ளை அங்கி அணிந்த மருத்துவரும் அங்கு உள்ள படுக்கையைச் சுற்றி நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வருகையை அறிந்து அம்மாவைப் பார்த்த மருத்துவர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று எதோ பேசிக் கொண்டிருக்கப் பாட்டித் தாதியர்களின் அனுமதியுடன்  அந்த அறைக்குள் நுழைந்தார். படுக்கையில் யார் படுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிய ஆதிரன் எட்டிப் பார்த்தப்பொழுது அவன் பாட்டி அவர்களை “உள்ளே வாங்க” என்று சொன்னார். அவர்களும் யார் அது என்பதைத் தெரிந்து கொள்ள உள்ளே நுழைய, மருத்துவரிடம் பேசி முடித்த அம்மாவும் அவர்களுடன் அறையில் நுழைந்தார். உள்ளே நுழைந்த ஆதிரனுக்கும் தம்பிக்கும் அதிர்ச்சியே அவர்களது கேள்விக்கு விடையாக அமைந்தது. தன் அம்மாவின் கண்களில் நிறைந்திருத்த கண்ணீருகளும் கவலைகளும் இப்பொழுது இவன் கண்களிலும்.  

 படுக்கையில் படுத்திருந்தது யார் என்ற அவர்களின் கேள்விக்கு பதில் அவன் கண்களிலே தெரிந்தது. “அம்மா… அப்பாக்கு என்ன ஆச்சி? ஏன் அப்பா இங்க படுத்துருக்காறு?” என்று அதிர்ச்சியுடன் ஆதிரன் கேள்வி கேட்டான். இறுதியில் அவன் கேட்ட இந்த கேள்விக்கு தான் அவனுக்கு விடைக் கிடைத்தது. அந்நேரம் தான் நடந்தவற்றை அவன் அம்மா அவனிடமும் தம்பியிடமும் சொன்னார்.

முதல் நாள் காலையில் அம்மா ஆதிரனையும் தம்பியையும் பள்ளியில் விட ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார். அப்பாவும் வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். ஏற்கனவே வேலைக்குத் தாமதமானதால் காலை உணவைக் கூட அருந்தாமல் அப்பா அவசரமாக அம்மாவிடமும் தன் மகன்களிடமும் விடைப்பெற்று மோட்டார் வண்டியில் வேலைக்குச் சென்றார். அம்மாவும் அவர்களைப் பள்ளியில் விட்டு, வீட்டு வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். காலை மணி பத்து அளவில், அம்மாவின் கைப்பேசிக்கு ஒர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பு அப்பாவின் தொடர்பு எண்ணில் இருந்து வந்ததைக் கண்டு “ஹலோ” என்று சொன்ன மறு நொடி வேறொருவரின் குரல் கேட்டு வியந்தார்.  

“ஹலோ… சயா தெலிப்போன் டாரி ஹோஸ்பிட்டால் பந்திங். இனி கெலுவார்கா இன்சிக் மாதவன்?” என்று இதுவரை கேட்காதக் குரல் பேசியது. ”யா” என்று பதற்றத்துடன் அம்மா பதிலளிக்க, அந்த குரல் பேசிய மறு நொடி அம்மா தலையில் இடி விழுந்ததுப் போல் நின்றார். அப்பா சாலை விபத்துகுள்ளாய் மருத்துவமனையில் சேர்க்கப்படுளார். விரைந்து பந்திங் மருத்துவமனைக்கு வாருங்கள் என்பதை அம்மாவிடம் கூறினார். இதைக் கேட்டதற்கு அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் சிலையானார். தான் தனிமையாக என்ன செய்வது என்று புரியாமல் முதலில்  வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். தன் கணவனின் நிலைமையைக் கண்ட அம்மாவின் இருதயம் சுக்குநூறாக உடந்ததுப் போல் இருந்தது. உடல் முழுவது இரத்தம். அவசர சிகிச்சை அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது தான் அப்பாவுக்கு என்ன நடந்தது என்று அங்குள்ள ஒருவர் கூறினார்.  

வேலைக்கு அவசரமாக மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் பறந்து கொண்டிருந்த  எதோ ஒரு நெகிழிப்பை அப்பாவின் முகத்தில் விழுந்து பாதையை மறைத்தது. பாதையைப் பார்க்க முடியாததால் மோட்டாரை எதிர் வரும் கன உனதில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த சம்பவத்தைக் கேட்ட அம்மாவின் உடல் நடுங்கியது. அவருடன் யாரும் துணைக்கு இல்லாததால் தன் அம்மாவிற்கு இந்த தகவலைக் கூறினார். அப்பாவின் சிகிச்சை நடைப்பறும் வரைக்கும் அம்மா மருத்துவமனையில் இருந்து அப்பாவை கவனித்துக் கொண்டார். அப்பா சுயநினைவு இல்லாததாலும் அவசர சிகிச்சை அறையில் இருப்பதாலும் தாதியர்கள் அம்மாவை அப்பாவுடன் நிறைய நேரம் இருக்கவிடவில்லை. அப்பாவைப் பார்த்தப் பிறகு தான் அம்மா ஆதிரனையும் தம்பியையும் பள்ளியில் வந்து கூட்டுக் கொண்டார். 

“ஏன் மா அப்பாக்கு இப்படி ஆச்சினு சொல்லவே இல்ல?” என்று அழுதுக் கொண்டே ஆதிரன் அம்மாவிடம் கேட்டதற்கு, “நீங்க ரெண்டு பேரும் சின்ன பையனுங்க. எப்படி உங்க கிட்ட நா சொல்றது? நீங்க எப்படி இத எடுத்துப்பிங்கனு எனக்கு தெரில. எப்படி சொல்றதுனும் தெரில” என்று சொல்லிக் கொண்டே ஆதிரனைக் கட்டி அனைத்துக் கொண்டு கதறி அழுதார். கையில் மருந்து தட்டுடன் வந்த தாதியர் ஒருவர் மேசையில் அதை வைத்து விட்டு, அப்பா ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியில் இருக்கும்படிச் சொன்னார். ஆதிரனும் தம்பியும் தன் அப்பாவின் முகத்தைப் பார்த்து “அப்பா…” என்று ஏக்கத்துடன் அழைத்து அறையைவிட்டு வெளியேறினார்கள். அனைவரும் அந்த அறையின் வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க ஆதிரன் மட்டும் கொஞ்சம் நகர்ந்து சோகத்தில் வாடி நின்றான். பின்பு இருக்காதா? அப்பாவுடன் என்றுமே மிகவும் நெருக்கமாக இருப்பவன் ஆதிரன். அப்பாவை நினைத்துக் கொண்டே நீரால் நிறைந்து இருந்த இரு கண்களையும் இருக்க மூடிக் கொண்டு இறைவனிடம் பிராத்தனைச் செய்துக் கொண்டிருந்தான். அவ்வேளையில் அவன் காதுகளில் ஏதோ கீழே விழுந்த  சத்தம் கேட்டது. பிராத்தனையில் இருந்தவன் அப்பாவின் அறையில் தாதியர் வைத்த மருந்து தட்டு விழுந்த சத்தம் போல் தெரிகிறதே என்று எண்ணி கண்களைத் திறந்து அப்பாவின் அறையைத் திரும்பிப் பார்த்தான். அம்மா வேகமாக எழுந்து அறைக்குள் நுழைந்ததைப் பார்த்த ஆதிரன் வேகமாக ஓடி அப்பாவின் அறை முன் நின்றான். அறையில் இருந்த தாதியர் மருத்துவரை அழைக்க கதவைத் திறந்து வெளியே வரும்போது உள்ளே எட்டிப்பார்த்த ஆதிரனனின் கண்கள் மீண்டும் நீர் குலமாகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *