மாமருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 1,793 
 
 

இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள். ஆமாம் பொருளாதார வாழ்விலும் சரி, உறவாதார வாழ்விலும் இன்றியமையாத நாள். நேரடியாக சொன்னா, என் ஐந்து வருட தவத்திற்கு வரமாக, இன்று என் ஆபிசுல எனக்கு ப்ரோமோசன், மேனேஜராக, மற்றும் போனசாக என் காதலியின் அப்பாவை சந்தித்து எங்கள் திருமணத்தை பற்றி பேசி, காதலனில் இருந்து கணவனாக ப்ரோமோசன் ஆக போகிறேன். நான் இதை பற்றியே பல்வேறு கனவு மற்றும் நனவுகளுடன் சற்று நீண்ட நேரம் தூங்கிவிட்டேன் போல, ஜன்னல் வழி ஆதவன் அலார ஒளி வீசினான்.

கண் கூசி விழித்த நான், தினசரி உயிருள்ள அலார அம்மாவின் மீது மிகுந்த கோவத்துடன் தேடினேன். என் வீடு நேற்று இரவுக்கு பிறகு இயங்க மறுத்ததை அம்மா படுத்த படுக்கையாக பறைசாற்றினார். பதறி அலறி நான் “அம்மா,, அம்மா.. என்னாச்சு மா? இவ்ளோ நேரமாகி… உங்கள இப்டி பாத்தது இல்லையே மா? என்ன பண்ணது மா?” எழுப்பி விட்டேன். காய்ச்சல் கொதிக்குது அம்மாவுக்கு தும்மல் இருமல் ஜலதோஷம் வேற எக்ஸ்ட்ராவா எப்பவுமே மூட்டு வலி. எனக்கு ஒண்ணுமே புரியல. மணி 8:30 ஆச்சு. இந்நேரம் டிபன்… லஞ்ச்… அப்புறம் நான் எல்லாமே தயார் செய்யபட்டிருப்போம் அம்மாவால் . ஏனோ தெரில சற்றும் குற்றவுணர்ச்சி இல்லாமல் அம்மா மேலேயே கோவம் வந்தது. அம்மா நடுங்கியபடி “ஏம்பா நேரமாச்சா,? கொஞ்சம் இரு… பத்து நிமிசத்துல எல்லாம் ரெடி பண்றேன்”. நான் டென்சனாக “ஆமா கிழிச்சீங்க, முடியலன்னா முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே நைட்டே ஹாஸ்பிடல் போயிருக்கலாம்ல” கத்திகொண்டே போனை எடுத்து பார்த்தேன்.

நேத்து நைட்டு போன் ஜார்ஜ் போட்டு வழக்கம்போல் ஸ்விட்ச் போட மறந்துட்டேன். எப்பவும் காலைல அம்மா தான் ஸ்விட்ச் போடுவாங்க. டீ கொடுத்து எழுப்புவாங்க. எல்லாம் சொதப்பல் இன்னைக்கு. இப்ப அம்மாட்ட கோவப்பட்டு பிரோயோசனம் இல்ல அவங்களால் எழும்பவே முடில. பைக்கிலும் அழச்சிட்டு போக முடியாதுபோல, பெயர் வைக்காத காய்ச்சல் வைரலான நேரம். பதட்டம் அதிகமாகிட்டே இருந்தது, இப்போ உடனே ஹாஸ்பிடல் போகணும், மேனேஜர்கிட்ட பெர்மிசன் வாங்கணும். அஞ்சு வருசமா ஒரு நாள் கூட லீவ் போடல, போயும் போயும் இன்னைக்கு போய் இப்டி ஆகுதே. அப்புறம் ஹெட் ஆபிசுல இருந்து DM, RSM வரும்போது கம்பெனில இருக்கணும் அப்புறம் லவ்வர மீட் பண்ணனும் தலை சுற்றியது எனக்கு.

ஆட்டோ மணி அண்ணனுக்கு கால் பண்ணேன், நான் “ஹலோ மணியண்ணா, அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல ஹாஸ்பிடல் போகணும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க அண்ணா” ஆட்டோ மணி “இருப்பா ஸ்கூல் சவாரி முடிச்சிட்டு வரேன், இல்லேன்னா ஆட்டோ சொல்லி விடறேன்” னு கட் பண்ணிட்டார். நான் பொலம்பியபடி “பொழுதேனைக்கும் பஸ் ஸ்டாண்ட்ல வெட்டி கத பேசி அரட்ட அடிப்பானுங்க, நாம கூப்பிட்ட மட்டும் எப்புடித்தான் பிசி ஆயிருவாங்கலோ”.

ஆட்டோ வருவதற்குள் பலவித முன்னேற்பாடுகளுடன் அரக்க பறக்க தயாரானேன் புத்துணர்ச்சி இல்லாமல் திருப்தி இல்லாமல். மேனேஜரிடம் போனில் “சார் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, காய்ச்சல் அதிகமா இருக்குனு”… இழுத்தேன். எப்பவும் எரிந்து விழும் அவர் “சரி சரி அம்மாவை பத்ரமா பாத்துக்கோ, எங்க பாத்தாலும் ஒரே பீவரா இருக்கு, நான் ஆபீஸ் பாத்துகிறேன் நீ கவனமா அம்மாவை ஹாஸ்பிடல் அலைச்சிட்டு போய் பாரு” னு அக்கறையா சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம், அப்புறம் தான் யோசிச்சு பாத்தேன். எனக்கு ப்ரோமோசன் கெடச்சா அவருக்கு ட்ரான்ஸ்பர் கொடுப்பாங்கனு சொல்லிட்டு இருந்தது ஞாபகம் வந்தது. அதனால் வந்த செயற்கை யான அக்கறை அது.

ஒரு வழியா மணியண்ணா ஆட்டோவில் ஹாஸ்பிடல் வந்துட்டோம். எங்க ஏரியாவின் ஒரே பிரபல MBBS டாக்டர் குணபாலன் ஹாஸ்பிடல் இன்னும் தொறக்கல. ஒரு பாட்டி மட்டும் ஹாஸ்பிடல் கேட்டுல தலைய வச்சி படுத்திருந்தாங்க. அம்மாவுக்கு நிக்கவே முடியல. நான் “அண்ணா ஹாஸ்பிடல் திறக்குறவரைக்கும் கொஞ்சம் … அதற்குள் குறுக்கிட்டு மணி “டேய் தம்பி நெறைய சவாரி இருக்குடா, நீ காசே தர வேணாம் ஆள விட்ரா” னு கிளம்பிட்டார். அப்புறம் சேத்து வச்சி வசூல் பண்ணுவார். அம்மாவை பிடிச்சு ஹாஸ்பிடல் சுவத்துல சாச்சி பிடிச்சுகிட்டேன். அந்த பாட்டி “ஏம்பா எந்த ஊரு நீ? அம்மாவுக்கு என்ன பண்ணுது?” னு ஆரம்பிச்சு அதுபாட்டுக்கும் பேசிட்டு இருக்கு. பேச முடியாம அம்மாதான் அதுக்கு ஈடு கொடுத்து போராடிகிட்டு இருந்துச்சு. எனக்கு அங்க இருப்பு இல்ல.

ஹாஸ்பிடல் கதவு உள்ளேந்து திறக்க பட்டது, அந்த பாட்டி தொப்னு விழுந்துச்சு உள்ளார, அத கண்டுக்கவே இல்ல அந்த கம்பவுண்டர் அவ்ளோ நல்ல முனுசன். அப்புறம் அந்த பட்டியையும் அம்மாவையும் ஆளுக்கு ஒரு கைல பிடுச்சு அழச்சிட்டு போய், மனிதாபிமான அடிப்படையில் அம்மாவை பஸ்டு அப்புறம் அந்த பாட்டியை இரண்டாவதா உக்கார வச்சேன். எதோ என்னால முடிஞ்சது. அதுக்கு அப்புறம் கம்பவுண்டர டோக்கேன் போட சொன்னேன். அதுக்கு அவர் “ஆமா இங்க வந்து கிழிக்கிற கூட்டத்துக்கு டோக்கேன் ஒண்ணுதான் கேடு , அட சும்மா போய் வரிசையில உக்காருப்பா, டாக்டர் இப்போ வந்துடுவார் பாத்துட்டு போவியா? னு சலிச்சுகிட்டார். அதுக்கு அப்புறம் அஞ்சாறு பேர் வரிசையில் வந்துடாங்க.

ஒருவழியா டாக்டர் வந்துட்டார். உள்ள போய் உக்காந்து “ட்ரிங்” அடித்தார். முதல் ஆளா உள்ள போக அம்மாவை எத்தனித்தேன். அதற்குள் கம்பவுண்டர் ஓடி வந்து “அட இருப்பா செத்த” னு தள்ளிகிட்டு உள்ள போனார். எனக்கோ உள்ளுக்குள் மனசு அறிவு உடம்பு எல்லாம் எரியுது. நேரமாகிட்டே இருக்கு. கம்பவுண்டர் வெளியே வர்ற நேரத்துல அந்த ஏரியா போலிஸ் இன்ஸ்பெக்டர், எந்த கேள்வியும் கேக்காம சட்டென உள்ளே சென்றபடி “என்ன டாக்டர் சார் நல்லா இருக்கீங்களா? னு கேட்டுட்டே உள்ளே போய்ட்டான். ஆளுக்கு பத்து நிமிஷம் எடுத்துப்பார் அந்த குணபாலன் டாக்டர். ஆனா எனக்கு பத்திக்கிட்டு வருது. அம்மா வேற நிக்க முடியாம முனங்கிகிட்டே இருக்கு.

அடுத்ததா போக ரெடியா இருந்தேன், ஆனா அந்த ஏரியா ஆளுங்கட்சி பிரமுகர், போலிசுக்கு கைகுலுக்கிட்டு, டாக்டருக்கு அரசியல் கத்துகொடுக்க போனார். அந்த போலீசாரை முறைத்தேன், அவர் ஒரு மாதிரியாக பார்த்துகொண்டு ஊசி போட ஒரு அறை உள்ளே சென்றார். எனக்கு அப்டியே அந்த ஊசியை பிடுங்கி அவர் கண்ணுலேயே குத்தனும்போல இருந்தது. அம்மாவுக்கு உக்காரவே முடியல. பெட்ல படுக்க வைக்கலாம்னு பாத்தா, டாக்டர் பாத்த பிறகுதான் உள்ள போக முடியும். என்ன பண்றதுன்னே புரியல, எல்லார் மேலயும் கோவம் வருது. போன் வேற சார்ஜ் இல்லாம கத்த ஆரம்பிச்சிட்டு. அந்த பாட்டி “ஏம்பா தம்பி டாக்டர் வந்துட்டாரா? னு கேட்டுச்சு பாருங்க. எனக்கு வந்த கோவத்துக்கு நேரா கம்பவுண்டர கத்த போனேன், அதற்குள் அந்த ஏரியா பிரபல ரவுடி ஒருத்தன் அடிபட்டு கை உடைந்த நிலையில் டாக்டர் அறைக்கு சென்றான். அவன் அடியாளுங்க வேற ரெண்டு பேரு. கம்பவுண்டர் கொஞ்சம் கத்தி பாத்தாரு, ஆனா அவங்க கேக்கல உள்ளே போயிட்டே இருந்தாங்க.

எனக்கு வந்து வெறுப்புக்கு போன் வேற அடிச்சது யாருன்னு பாக்கமா ஹலோ னு கத்துன கத்துல காதலி பேர சொல்லிட்டு போன் சுவிச் ஆப் ஆனது. எரிச்சலின் உச்சத்துல இருந்த நான், அடுத்து போக காத்திருந்தேன். நேரமாக நேரமாக எல்லாரும் முனுமுனுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு சிலர் ஹாஸ்பிடல்விட்டு கிளம்பி வெளியே போய்டாங்க. இன்னும் சிலர் நோயின் தாக்கம் அதிகமானதுபோல் நடிக்க ஆரம்பிச்சுடாங்க. முதல் ஆளா வந்த அந்த பாட்டி தரையில் விழுந்து படுத்துட்டு. மணி 11.30 ஆச்சு என்னோட ப்ரோமோஷன் நேரம் நான் இங்கிருக்கேன். அம்மாவுக்கு வர வர ரொம்ப முடியல, காலையில இருந்து தண்ணி கூட குடிக்கல. அந்த அரசியல்வாதி வெளியே வந்தான் ப்ரிஸ்க்ரிப்சனோடு. அடுத்து ஒருத்தன் அதிகபட்ச பெர்பார்மன்ஸ் பண்ணி உள்ளே போக தயாராகினான்.

டாக்டர் ரூமை திறந்து சத்தமா நான் “ஏன் சார்? தெரியாமதான் கேக்குறேன் என்ன சார் நடக்குது இங்க? எங்களயெல்லாம் பாத்த எப்டி தெரியுது உங்களுக்கு? அவிங்க இஷ்டத்துக்கு வர்ராங்க போறாங்க, எதோ தொறந்த வீட்டுல நாய் புகுந்த மாதிரி, இவ்ளோ நேரம் அமைதியா உக்காந்து இருக்க நாங்க எல்லாம் என்ன பைத்தியமா? ஹாஸ்பிடல்யுமா சார் உங்க அரசியல் அட்டகாசம்? நோயோட வீரியம் தான் டாக்டர பாக்க முன்னுரிமை, அதிகார பயன்படுத்தி நோயாளிங்ககூட போட்டி போட்றீங்க உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? கேக்க ஆளு இல்லன்னு நீங்களும் இப்டி பண்றீங்களே அறிவு இல்ல உங்களுக்கு? அட பாவிங்களா இதலயுமா ஊழல் முறைகேடு? டாக்டர பாத்து ஹாஸ்பிடளுக்கே கேக்குற மாதிரி செம கத்து கத்திட்டேன், திரும்பி பாத்தா அந்த போலிஸ், அரசியல்வாதி, ரவுடி இன்னும் சில கொசுறுகள் என்னை கோவத்துடன் தாக்க வர, எங்க அம்மா காக்க குறுக்க வர பேசண்டுகள் எல்லாம் வெளியே ஓட இதான் நான் கடைசியா பார்த்த காட்சி. செத்துவிட்டேன் என்று நினைத்தேன்.

மூளையில் காதலியின் காத்திருந்த வெறுப்பு, ஆபிசில் தவறி போன பொறுப்பு, மருத்துவமனையின் இயலாமை, சமூகத்தின் ஆற்றாமை எல்லாமே என்னை பந்தாடியது. நான் நினைவிழந்தேன். கண் திறந்தேன் நீண்ட நேரம் உணர பட்டது. சுதாரித்தேன் அம்மா மற்றும் உறவுகள் சூழ்ந்திருந்தனர். ஆட்டோ மணி அண்ணா “சரி வரண்டா” னு அந்த பாட்டியை ஆட்டோவில் அழைச்சிட்டு போனார். உடலை எங்கும் தடவி பார்த்தேன் எங்கும் காயங்கள் இல்லை. அம்மாவை பார்த்தேன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல எல்லாம் கனவா? இல்ல எது கனவு? கண்ணை தேய்த்து திரும்பி பார்த்தேன். அம்மா அருகே வந்து “இப்போ எப்டி இருக்கடா? னு என்னை நலம் விசாரிச்சாங்க. நான் அதிர்ச்சியுடன் சுயநினைவாக “ஏம்மா என்னம்மா நடந்துச்சு? என்ன போட்டு சவடிக்காம சொல்லுங்க” அம்மா ஏளனமாய் “அட போடா பைத்தியகாரா, ஆஸ்பிடலல சண்ட போட்டியே அத ஞாபகமிருக்கா? அது வரைக்கும் இருக்கும்னு” இழுத்தாங்க, அவசரமாகி நான் “அதுக்கு அப்புறம் சொல்லுங்கமா?”. தொடர்ந்த அம்மா “நீ பதட்டத்துல மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாம போய்ட்ட, அப்புறம் நான் என்ன பண்றதுன்னு தெரியாம திணறி போராடி, எல்லார்கிட்டயும் கெஞ்சி அப்புறம் டாக்டர் பாத்து ஊசி போட்டு குளுக்கோஸ் போட்டு, வீட்ல கொண்டந்து போட்டாச்சு.” எதோ அன்றாட வேலையை சாதரணமாக பாத்துகொண்டே சொன்னங்க. நான் “உங்களுக்கு எப்டி அதுக்குள்ளே சரி ஆச்சு, உங்களுக்கும் ஊசி குளுக்கோஸ் போட்டாங்களா”? அம்மா “ஆமா நீ மயங்கி கீழ விழுந்ததும், நானே சேத்து பொழச்சு, உனக்கு வைத்தியம் பாக்க மட்டும்தான் தோணிச்சு, எனக்கும் அப்டியே சரி ஆச்சு” சொல்லிட்டு போய்டாங்க சாதாரணமாக. நேரம் 5.30 .ஐயோ நான் பதறி அடுத்த அதிர்ச்சிக்கு ரெடியானேன் கத்தினேன் “அம்மா அம்ம்மா என் போன் எங்க? ஐயோ என் வேல? என் லவ்வு? என் லைப்? என்னாச்சுன்னு தெரியலையே” னு புலம்பினேன்.

அம்மா சற்றும் அதிராமல், மெதுவாக வந்து என் போனை கையில் எடுத்துகொண்டு, டீவியை ஆன் செய்து ரிமோட் கொண்டு வந்து ரெண்டையும் கையில கொடுத்தாங்க. ஒரு இன்ப மற்றும் பேரதிர்ச்சி பிளாஷ் நியூஸ்-ல் போய் கொண்டு இருந்தது. அது “கொரானா லாக் டவுன் மற்றும் அவரச 144 சட்டம்” நடைமுறைபடுத்தபட்டிருந்தது.

முழுசா நியூஸ்-ஐ புரிந்த பிறகுதான் நிம்மதியானது. அப்டியே படுத்துக்கொண்டே எல்லாருக்கும் போன் செய்து தன்னிலை மற்றும் சூழ்நிலை பகிர்ந்து ஆஸ்வாசபடுத்தியது அறிவு. ஆக மொத்தத்தில் எல்லா நிகழ்வும் தள்ளி வைக்கபட்டிருப்பது தெளிவானது. ஆயினும் புரியாத புதிராக அம்மா உடல்நிலை சீர் முன்னேற்றம் மெய்சிலிர்க்க வைத்தது. மெதுவாக இன்று நடந்ததை மனதில் ஓட்டி பார்த்து கொண்டே வெளியே வந்தேன். நேற்று தெருவில் அடிபட்டி கிடந்த எங்க வீட்டு நாய் தன் குட்டியை நக்கி நக்கி தான் குணமாகி கொண்டிருந்ததை வெறித்து பார்த்தேன்.

“தாய்பாசமெனும் மாமருந்து”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *