மீண்டும் ஒரு குறிஞ்சி மலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 47 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலைக்கண்ணாடி முன் நின்று தன் முகத்திற்கு இலேசாக ஒப்பனை செய்து கொண்டாள் ஜானகி. நெற்றியில் கச்சிதமான வட்ட வடிவத்தில் அமைந்த சிறிய கறுப்புப் பொட்டு. அதற்கு மேலே பூசப்பட்ட திருநீறு அழகாக பளிச்சிட்டது. நீல வண்ணச் சோலையைச் சரி பார்த்துக் கட்டிக் கொண்டாள். ஜானகியை யார் கண்டாலும், “இந்த வயதான காலத்திலும் ஆகா! எப்பேர்ப்பட்ட பேரழகு’ என வியக்காமல் இருக்க மாட்டார்கள். இயற்கையிலேயே ஜானகி நல்ல அழகி. மாநிறம். பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் வசீகர முகம். நாற்பத்தைந்துக்கு மேல் வயதாகிவிட்டதால், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில நரைகள் தோன்றத் தொடங்கின. இருப்பினும் அந்த நரை அவள் அழகைக் கூட்டிக் காட்டியதே ஒழிய, அது அவள் அழகைக் குறைத்துக் காட்டவில்லை.

அம்மா இப்படித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பது சேகருக்குச் சற்று வியப்பாகத் தான் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஏன் இந்த அலங்காரம்? அப்படியென்றால்… அப்படியென்றால் புவனா கூறியதில் உண்மை இருக்குமோ? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? சேகரின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அம்மாவின் இந்தத் திடீர் அலங்காரம் புவனா சொல்வது சரி என நிரூபிப்பது போல் அமைந்திருந்தது. அம்மாவால் இப்படியும் நடந்து கொள்ள முடியுமா? பேரப்பிள்ளை எடுக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு மாற்றமா? அவனுக்குக் குழப்பமாக இருந்தது. புவனா கூறியதை அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

புவனாவை அவன் நன்கு அறிவான். அவள் இல்லாததும் பொல்லாததும் கூறுபவள் அல்ல. தாலி கட்டித் தாம்பத்திய வாழ்க்கை மேற்கொண்ட இந்த மூன்றாண்டு காலத்தில் அவள் தன் தாயாரைப் பற்றி எந்தக் குறையும் சொன்னதில்லை. மாமியாருக்கு மெச்சிய மருமகளாகத்தான் இவ்வளவு நாளும் நடந்திருக்கிறாள். அலுவலக விஷயமாகப் போன வாரம் நாடு திரும்பிய சேகரிடம் தன் மாமியாரின் இந்தப் ‘புது மாற்றத்தைப்’ பற்றிக் கூற, அவள் எப்படி எல்லாம் தயங்கினாள் என்பது சேகருக்குத் தெரியும். அவன் வற்புறுத்தியதால்தான் இவ்வளவும் சொன்னாள். இல்லையேல் அதை அவள் சொல்லி இருக்கவே மாட்டாள். அந்த அளவுக்கு அவள் தன் மாமியார் ஜானகி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள்.

சேகர் கிண்டிக் கிண்டிக் கேட்கவே அதைத் தாங்க மாட்டாது. “என்னங்க அத்தையின் போக்கைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை? கொஞ்ச நாளா இப்படித்தான் நடந்து கொள்றாங்க. அதுவும் நீங்க ஊரில் இல்லாதபோது அவங்க இப்படி நடந்து கொள்றது அவ்வளவு சரியாப்படலை” எனப் புதிர் போட்டு அவள் பேசிய விஷயம் சேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அம்மாவா இப்படி நடந்து கொள்றாங்க? பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றவங்க திருத்துவாங்க. ஆனால் பெத்தவங்களே தவறு செய்தால்…!” அதற்கு மேல் அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அதுவும் புவனா சொன்ன அந்த விஷயம் அப்பப்பா! அதை ஜீரணிப்பது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. இன்று எப்படியும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தவனாய், ஹாலில் செய்தித்தாள் படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.

அலங்காரம் முடிந்தது. ஜானகி வெளியே கிளம்பத் தயாரானாள். வரவேற்பறையில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த சேகர் அம்மா ஹாலுக்கு வருவதைக் கண்டு,

எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்தித்தாள் படிப்பதில் கவனம் செலுத்துவதுபோல் பாவனை செய்தான். புவனா மட்டும் வருத்தம் தொனித்த குரலில், ”அத்தை வெளியே போகக் கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டு வைத்தாள்.

‘ஆமாம்’ என்பதற்கு அடையாளமாக ஜானகி தலையை ஆட்டினாள். பின்தன் மகன் சேகர் பக்கம் திரும்பி, “சேகர் நான் ஒரு முக்கிய விஷயமா வெளியே போயிட்டு வரேன்” எனக் கூறியவள் யாருக்கும் காத்திராமல் வெளியேறினாள். சேகர் அம்மாவைத் தடுத்து நிறுத்த வாய் எடுப்பதற்குள் அவள் இருந்த இடம் தெரியாது மறைந்து போனாள்.

”என்னங்க என்ன பேசாமல் பேய் அறைந்தது போல இருக்கிறீங்க? அத்தையைத் தடுத்து நிறுத்தக் கூடாதா? படிச்சி படிச்சி எவ்வளவோ சொன்னேனே? அவங்களை ஒரு வார்த்தை கேட்கக்கூடாதா? இப்படி நீங்க பேசாமல் இருந்தா, இந்த வீட்டோட கௌரவம் என்ன ஆகிறது?” எனப் புவனா புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் பேசியது எதுவும் சேகரின் காதில் விழவில்லை. அவனை அறியாமல் அவன் கால்கள் அம்மாவைப் பின் தொடரும் பணியில் ஈடுபட்டது. செய்வதறியாத புவனா கணவன் செல்வதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் புளோக்கை விட்டு ஜானகி ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தாள். கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்த அவள். நேரமாகிவிட்டதற்கு அடையாளமாகத் தன் நடையைத் துரிதப்படுத்தினாள். அந்த நடைபாதை பிசான் சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இப்படிப் பெற்ற தாயையே வேவு பார்க்கத்தான் துணிந்ததை நினைத்தபோது சேகருக்குத் தன் செயல் கேவலமாகப்பட்டது. ஆனால் இதைத் தவிர வேறு வழி அவனுக்குத் தெரியவில்லை. மனத்தை இரும்பாக்கிக் கொண்டு தாயைப் பின் தொடர்ந்தான்.

அவன் கண்களுக்குத் தென்பட்ட அவன் தாயார் ஜானகி அவனுக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஒரு கள்வனைப் போல சேகர் உண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அவளைப் பின் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் ஜானகி பிசான் பூங்காவை வந்தடைந்தாள். பூங்காவை அடைந்தவள் அங்கிருந்த ஓர் இருக்கையில் வந்தமர்ந்தாள். அம்மா தன்னைப் பார்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒரு மரத்தின் பின்னால் மறைவாக நின்றான் சேகர். ஆனால் அம்மா அமர்ந்திருக்கும் இருக்கையில் நடப்பதை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

மயக்கும் மாலை வேளை. சூரியன் தன் பணியை முடித்துவிட்ட பூரிப்பில் மேற்கே மறைந்து கொண்டிருந்தான். பிசான் பூங்கா சிறியதாகக் காட்சி அளித்தாலும், அதிலும் ஓர் அலாதி அழகு இருந்தது. வானளாவி நின்ற மரங்களிலிருந்து உதிர்ந்து கிடந்த இலைகள் தரையை மறைத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பூங்காவில் உடற்பயிற்சி பெற அங்குக் குமுமியிருந்தனர். சிலர் மெதுவோட்டம் ஓடினர். ஒரு சிலர் காலார நடந்து கொண்டிருந்தனர். தனக்கு வெகு அருகாமையிலிருந்து ஒரு மழலைக்குரல் “கம் ஹியர்… கம் ஹியர்…” என்ற சத்தத்தைக் கேட்ட சேகர் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தான்.

ஒரு சிறு குழந்தை, வயது மூன்றிருக்கும். கையில் ஒரு சின்ன நாய்க்குட்டியைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு. ‘இங்கே வா… இங்கே வா…” என்ற அதட்டியவாறு தன் முழுப் பலத்தாலும் அதைத் தன் அருகில் இழுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான். அவன் அவளது தந்தை போலும். இருவரும் பிறகு ஒன்றாகவே நாய்க்குட்டியை இழுத்தபடி சேகரைக் கடந்து சென்றனர்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஜானகியின் கண்கள் யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன என்பதை அவள் முகபாவத்தின் மூலம் சேகரால் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் அந்தப் பார்வையில் தவிப்பு இருந்தது. ஒரு பரபரப்பு தெரிந்தது. அம்மாவின் இந்தச் செயல் சேகருக்கு அருவருப்பாக இருந்தது. வயதான காலத்தில் இப்படி ஓர் எண்ணமா? அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடக்குமா? அல்லது நடக்கத்தான் விட்டிருப்பாரா? நல்லவேளை! அவர் உயிரோடு இல்லை. இதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி அவருக்குக் கிடையாது. அப்பா என்றதும் சேகரின் கண்கள் குளமாயின. அடி வயிற்றிலிருந்து பீறிட்டுப் புறப்பட்ட விம்மல்களை வேகமாக விழுங்கிக் கொண்டான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை அல்லவா? அவன் அழலாமா? தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

தன் தாயாரின் பக்கம் எதேச்சையாகத் திரும்பிய சேகர், தேள் கொட்டிவிட்டது போல் தாங்க முடியாத வலியுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். குப்பென்று உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. கையும் காலும் படபடவென்று நடுங்குவதை உணர்ந்தான். நெஞ்சு இரண்டாகிவிடும் போல் தீவிரமாகத் துடித்தது. அவன் மறைந்திருந்த மரத்திற்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் தன் தாயார் அமர்ந்திருக்கும் இருக்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு இலட்சணமாகக் காட்சியளித்தார். சிரித்த முகம். சற்றே காதில் ஓடிய நரை, அமைதியான கண்கள். அவருக்குக் குறைந்தது ஐம்பது வயதிருக்கும். வாட்ட சாட்டமான உடல் அமைப்பு. ஆண்களின் உடலமைப்பு பெண்களைப் போல் அவ்வளவு எளிதில் முதுமை அடைவதில்லை. அதற்கு இலக்கணமாக இளமையுடன் காட்சியளித்தார்.

இவரைத்தான் அம்மா காண வந்தாரா? ஐயோ கடவுளே! அம்மாவுக்கும் ஏன் இப்படிப் புத்தி போக வேண்டும்? சேகரின் உள்ளம் கோபக்கனலைக் கக்கிக் கொண்டிருந்த்து. நல்லவேளை! ஜானகி பக்கம் வந்தவர் அவளிடம் பேசவில்லை. வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனார். இது சேகருக்கு ஆறுதலாக இருந்தது. இருப்பினும் அம்மாவின் இந்த மர்ம நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

அப்பா இறந்து இன்னும் ஒரு வருடம் கூடப் பூர்த்தி ஆகவில்லை. அதற்குள் அம்மாவின் புத்தி இப்படித் தடுமாறத் தொடங்கிவிட்டதே? அப்பாவும் அம்மாவும் எவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள். அப்படி இருந்த அம்மா இப்படி மாறிவிட்டாரே? ஒரு வேளை! ராகவன் சொன்னது சரியாக இருக்குமோ?

ராகவன் வேறு யாருமல்ல. சேகருடன் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். தற்போது சேகரின் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி புரிகின்றான். ஒரு சமயம் அவன் அலுவலகத்திற்கு விடுப்புப் போட்டிருந்தான். விஷயத்தைக் கேட்டபோது அவனின் சிற்றப்பா மகளுக்கு பதிவுத் திருமணமாம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், மணமகளுக்கு இது மறுமணமாம். இந்த விஷயத்தை ஜீரணிப்பது சேகருக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் ராகவன் இதனைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.

”சேகர் இதுல என்னப்பா தப்பு? தன் ஆசைகளை உணர்ச்சிகளைக் கொன்று கொண்டு ஒரு பொண்ணு போலியாக வாழ்வதைக் காட்டிலும், இப்படித் துணிந்து மறுமணம் செய்து கொள்றதுல தப்பே இல்லை.”

“நீ எவ்வளவு தான் நியாயம் இருப்பதாகச் சொன்னாலும் என்னால் இதை ஒத்துக்க முடியாது ராகவா. ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்றதுதான் நம்மோட பண்பாடு”

“நீ இன்னும் பத்தாம்பசலித்தனமா இருக்கீயே? இருபத்தோராம் நூற்றாண்டுல இருந்துட்டு, நீ இப்படிப் பேசறது எனக்கு ஆச்சரியமா இருக்கு சேகர்?”

“எவ்வளவு தான் உலகம் முன்னேறி இருந்தாலும் நமக்குனு பண்பாடுனு ஒன்னு இருக்கே.’

”பண்பாடுனு சொல்லி அந்தப் பெண்ணோட வாழ்க்கையை அழிச்சிடப்போறீயா? விரகதாபம் கொண்டு அந்தப் பொண்ணு தவறு செய்துட்டா, அதை விட வேற வினையே வேண்டாம். அதனால பெரியவங்களா பார்த்து மறுமணம் செய்து தரது நல்லதில்லையா?”

இப்படித் தனக்கும் ராகவனுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை நினைத்துப் பார்த்தான் சேகர். “டேய் சேகர் பண்பாடு அது இதுனு அன்றைக்கிப் பெரிசாப் பேசினேயே, இன்றைக்கு உன் அம்மாவோட நிலையை எண்ணிப் பார்த்தாயா? இந்த வயதிலும் துணையைத் தேடி அவங்க அலையிறதைப் பார்த்தாயா?” என ராகவன் விஸ்வரூபமெடுத்துச் சிரிப்பது போன்றதோர் உணர்வு சேகருக்கு ஏற்பட்டது.

ஐயோ! நான் என்ன செய்வேன்? அவமானம் தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாமா? நான் ஏன் சாக வேண்டும்? தவறு செய்தவர்கள் தான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஒரு மகன் கண் முன்னால் ஒரு தாய் நடத்தும் இந்த லீலையை எண்ணி அந்தத் தாய் வெட்கித் தலை குனிய வேண்டும். ஆம்! அம்மாவின் முன்னால் போய் நின்று என்னென்னவோ கேட்க வேண்டும் என்று அவன் மனம் கோபத்தில் கொந்தளித்து. அவளுக்குச் சாட்டையடி கொடுக்க வேண்டும் என எண்ணியவனாய் ஜானகியின் இருக்கை பக்கம் நடை போடக் காலடி எடுத்து வைத்தான் சேகர்.

அப்போது அவன் எதிரே ஒரு சீன வாலிபன் தன் மனைவி, இரு பிள்ளைகளடன் மெதுவோட்டம் ஓடியபடி முன்னே வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஜானகி குதூகலத்துடன் அவன் பக்கம் தன் பார்வையை ஓடவிட்டாள். அவள் முகம் பகலனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்தது. அவள் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவன் ஓடும் அழகையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் ஜானகி. அவன் அவளை விட்டு மறைந்து சென்றான். அவள் முகம் கறுத்தது. சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அவன் அவளுக்குக் காட்சியளித்தான். அவள் முகம் மலர்ந்தது. இந்த அதிசயக்காட்சி தொடர்ந்து பலமுறை அரங்கேறியது. அவன் மறையும் போதெல்லாம் ஜானகியின் நெஞ்சு பிளந்துவிடும் போல் துடித்தது. கண் இமைகளை மீறிக் கொண்டு கண்ணீர் பொங்கிப் புரண்டது. புடவைத் தலைப்பால் பொங்கி வந்த கண்ணீரை மெல்ல துடைத்துக் கொண்டாள்.

அந்தச் சீன வாலிபன் தன்னைப் பல முறை கடந்து ஓடியபோது தான், சேகரால் அவனை நன்கு பார்க்க முடிந்தது. அவன்… அவன்…அவனே தான். சந்தேகமே இல்லை. சேகருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அம்மாவின் மர்ம நடவடிக்கைக்கான காரணம் என்னவென்றும் தெரிந்துவிட்டது. அவன் கண்களைக் கண்ணீர்த்திரை மறைக்க அவன் உள்ளம் கடந்த காலத்தை எண்ணி அசை போட்டது.

சிங்கையின் தலை சிறந்த மருத்துவமனை என்று பெயர் பெற்ற ‘பெரிய மருத்துவமனை’ அது. மருந்து வாடை எங்கும் பரவியிருந்த்து. எங்கோ ‘ஹோ’ என்று ஒலித்த ஓலம் காதில் விழுந்த்து. நோயால் துடிக்கும் நோயாளிகளின் முணகல் சத்தம் ஆஸ்பத்திரி முழுதும் எதிரொலித்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜானகி, சேகர், புவனா மூவரும் இன்டென்ஸிவ் கேர் தனியறைக்கு வெளியே கலவரத்துடனும் கலங்கிய கண்களுடனும் காணப்பட்டனர். அறைக்குள்ளே இருந்த சோமசுந்தரத்திற்கு ஆக்ஸிஜன், தெரபி முதலியன விரைவிலேயே கொடுக்கப்பட்டன. இரண்டு டாக்டர்கள் போகும் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தனர். என்ன நேரிடுமோ என்று நிர்ணயிக்க முடியாத நிலை. ஜானகி ஆண்டவன் தலையில் பாரத்தைப் போட்டபடி நடப்பது நடக்கட்டும் என அமைதியாகக் காணப்பட்டாள்.

“காலம் கடந்து, கொண்டு வந்திருக்கிறீர்கள். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். பிறகு அவன் பொறுப்பு” என்று கூறி டாக்டர்கள் கைவிட்டுவிட்டனர். நகக்கணுவில் கண்ட நீலம் இப்போது சோமசுந்தரத்தின் நகம் முழுவதும் பரவிவிட்டது. பெனிஸிலின், டெட்ராஸைக்ளின் ஊசிகள், அது, இது என்று நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்துகள் உள்ளே சென்று கொண்டே இருந்தன. என்ன போய் என்ன பயன்?

சோமசுந்தரத்திற்கு நினைவு தப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு அடங்கத் தொடங்கி, நாடித் துடிப்பும், இதயத் துடிப்பும் தேகத்தில் குறைந்து கொண்டே வந்தது. பதறிக் கொண்டு டாக்டர்கள் இதயத்தைக் கையால் பிசைந்து கொடுத்துக் கொண்டு செயற்கையாகச் சுவாசத்தை உண்டு பண்ண முயன்றனர். மருத்துவமனையில் இருந்த சிறந்த டாக்டர்கள் சுற்றி நின்று என்னென்னவோ செய்தும் மாலை ஆறு மணிக்குச் சோமசுந்தரத்தின் உயிர் மெல்ல பிரிந்தது. ஜானகி கத்தவில்லை. ‘ஹோ’ என்று கதறவில்லை. மாலை மாலையாய்க் கண்ணீர் வழியக் கணவன் முகத்தோடு முகம் சேர்த்து அமர்ந்துவிட்டாள்.

அடிக்குரலில், மனத்தின் பயமெல்லாம் வார்த்தைகளில் தெறிக்கச் சேகர், “அப்பா…” எனத் தொண்டை கிழியக் கத்தினான். புவனா “மாமா…” என அலறினாள். அவலத்தின் ஓலம் அவ்வறையை வியாபித்தது. வேதனையின் விளிம்பில் எல்லோரும் இருந்தனர். அப்போது வாட்டத்துடன் ஜானகியின் முன் வந்து நின்ற டாக்டர் லிம் “உங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. அது எனக்கு நல்லாவே தெரியும். விதியை நாம வெல்ல முடியாது மிஸஸ் சுந்தரம். நீங்க மனசு வைச்சா போற ஓர் உயிரைப் போகாம தடுக்க உங்களால முடியும். நான் சொல்றதைக் கொஞ்சம் பிரட்டிக்கலா திங் பண்ணிப் பாருங்க. உங்க கணவரோட உயிர் பிரிஞ்சாலும், அவரோட கிட்னி இன்னொரு உயிரை வாழ வைக்க முடியும். அதனால நீங்க அனுமதி தந்தீங்கனா அதற்கான ஏற்பாட்டை நான் செய்றேன்’ என மருத்துவத்துறையில் கண்டு வரும் சாதனைகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

தன் கணவர் மறைந்தாலும் அவருடைய உறுப்புகளால் பிறர் பயனடைய முடியும் என்பதை ஜானகி உணர்ந்தாள். அதிகம் படிக்காத அவளால் மருத்துவ சாதனையைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தன்னுடைய கணவரின் உடல் இயங்காது போனாலும் அவர் உறுப்பு பிறரை இயக்க முடியும் வேகம் என்பதை அறிந்து கொண்டாள். அவள் உள்ளத்தினுள் புது பிறந்தது. சேகரின் சம்மதத்தைக் கூடக் கேட்காமல் தானே ஒரு முடிவுக்கு வந்தாள். டாக்டரின் யோசனைக்குச் சம்மதம் தெரிவித்தாள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு சீன இளைஞனின் உடலினுள் சோமசுந்தரத்தின் கிட்னி பொருத்தப்பட்டது. தன் கணவருக்கு மறுவாழ்வு அளித்ததற்காக ஒரு சீன மாது ஜானகிக்கு நன்றி தெரிவித்தாள். அதன் பின் மருத்துவமனையில் இருந்த அந்த வாலிபரைக் காண, ஜானகியும் சேகரும் ஒரு முறை சென்றனர். அதன் பிறகு அவர்களிடையே இருந்த உறவு அத்துடன் அறுந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இப்போது தான் மறுபடியும் அவனைப் பார்க்கும் வாய்ப்பு சேகருக்குக் கிட்டியது.

“அம்மா…” என நாத் தழுதழுக்கத் தன் தாயாரை நோக்கி ஓடினான். அவனைச் சற்றும் அங்கே எதிர்பார்க்காத ஜானகி “சேகர் நீயா?” எனத் தட்டுத்தடுமாறி வியப்போடு கேட்டாள். “அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா” என மேலும் பேச முடியாதவனாய் மௌனமானான். ஆனால் அவன் உள்மனம் மட்டும், “சேகர் உத்தமியான உன் தாயை இவ்வளவு கேவலமாக நினைத்துவிட்டாயே” என ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தன் தாயின் முகத்தை ஏறெடுத்து நோக்கினான். “சேகர் அந்த சீனப் பையனை நினைவிருக்கா?” என ஜானகி அமைதியாகக் கேட்டாள். ஆம் என்பதற்கு அடையாளமாக அவன் தலையை அசைத்தான்.

“ஹூம்! அவனைப் பார்க்கிறதுல எனக்கு ஒரு வித ஆத்மதிருப்தி ஏற்படுதுப்பா. உன் அப்பாவோட…”

அதற்கு மேல் ஜானகியால் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. “தெரியும்மா. நீங்க இங்கே அடிக்கடி வரதுக்கான காரணமும் எனக்குத் தெரிஞ்சிட்டு. அப்பாவை உங்களால அவ்வளவு சீக்கிரத்துல மறக்க முடியலைல?” எனக் கேட்டான் சேகர்.

”ஆமாம்பா. அவரோட வாழ்ந்த அந்த வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரத்துல மறக்க முடியுமா என்ன?”

“இனிமே நீங்க தனியா இங்கே வர வேண்டாம்மா. நானும் உங்கக்கூட வரேன். ஏன்னா நானும் அப்பாவை இன்னும் மறக்கலை” என்று கூறினான் சேகர். அவன் உள்ளம் நிறைவாக இருந்தது. அதில் ஒரு வித பூரிப்பு நிறைந்திருந்தது. அவன் மனம் தான் படித்த நாவலை எண்ணிச் சஞ்சரித்தது.

போன வாரம் ஊருக்குத் திரும்பும் வழியில்தான், பொழுதுபோக்குக்காக விமான நிலையத்தில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலைச் சேகர் படித்தான். அதனைப் படித்தபோது பூரணி போன்ற அபூர்வ பெண் இருப்பது சாத்தியமில்லை. அது வெறும் கற்பனையே என எண்ணியிருந்தான். “உடலால் செத்துப் போய்க் கொண்டே உள்ளத்தால் வாழ்ந்த திலகவதி போன்ற புனிதப் பெண் தமிழ் நாட்டில்தான் பிறக்க முடியும்” என நாவலாசிரியர் பெண்மையின் சிறப்பைக் கூறும்போதெல்லாம் ஏளனமும் கேலியும் அவனுக்குள் தோன்றியது. ஆனால் தன் தாயும் அந்த நாவலின் கதாநாயகியைப் போல் உள்ளத்தால் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணிக் கண்ணீர் வடித்தான். அவன் உள்ளம் ‘மீண்டும் ஒரு குறிஞ்சி மலர்’ தன் தாய் வடிவில் பூத்திருப்பதைக் கண்டு பரவசம் கொண்டது.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *