கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 1,130 
 
 

முதல் பாகம்

1-5 | 6-10

1.விடி வெள்ளி

பசுமலைக் கிராமம் பனிப் போர்வை போர்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கார்த்திகை மாதத்தின் கடைசி. எந்த நம்பிக்கையும் ஆசையும் அவளைத் தூண்டுகோல் போட்டு அந்தக் கிராமத்துக்கு இழுத்து வந்ததோ, அந்த நம்பிக்கை வறண்டு விட்டது. பவானி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் புரண்டு படுத்தாள். விடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. விடிந்து தான் அவள் என்ன புதுமையை அடையப் போகிறாள்? அண்மையில் படுத்திருந்த அவள் மகன் பாலு. நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பச்சிளம் முகத்தில் வருங்காலத்தைந் பற்றிய சிந்தனைகளையோ, கவலைகளையோ காண முடியாது தெளிந்த நீரைப் போலவும் நிர்மலமான ஆகாயத்தைப் போலவும் அம் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

பவானி நன்றாக விழித்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் ஆகாயத்தைக் கவனித்தாள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து ஓய்ந்த வான வெளியில் திட்டுத் திட்டாக மேகங்கள் சிதறிக் கிடந்தன. அவை வான வெளியில் மெதுவாக தளர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் முடிவு தெரியாத ஒரு நோக்கதுடன் ஓடுவதைப்போல இருந்தன. மேகக் கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடை…க்கு அப்புறம் வறண்டுபோன வயல்களுக்கும், நீர் நிலைகளுக்கும் மரையைப் பொழிந்துவிட்டு அவை மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், தன்னுடைய வறண்டு போன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?

பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்க மற்ற அந்த முகம் ஒன்று தான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவனுடைய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்குள் பற்றிக் கொண்டாள். ‘இன்று இவை சிறு கரங்கள் தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்று விடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப்-போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும்’ என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.

படுக்கையின் தலைமாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட், வேஷ்டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.

கயிற்றுக் கட்டிலின் மீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத்திருந்தான். நோயாளி என்று சொல்லித்தான், பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள் – துல்லியமான வேஷ்டியும், அதன் மீது வெண்ணிற ஷர்ட்டும் அணிந்து, மேலே கம்பளிச் சட்டையை மாட்டிக்கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந்தான். ஆளை நாளடைவில் உருக்கி உருக்குலைக்கும் காச நோயாளி அவன் வலுவூட்டும் ஆகாரங்களும் டானிக்குகளும் அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. ‘நெட்டி யால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்’ என்று பவானி நினைக்கவே யில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தாள்.

கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதலையை ஈன்றபோது இருவர் உள்ளங்களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. ’வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும் தான் இருக்கப் போகிறது’ என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. திடீரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.

“டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள்” என் றாள் பவானி.

”ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடுகிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு” என் றான் வாசு அவளிடம்.

கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் மசிந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண்டான்?

“பவானி! சாயங்காலத்தில் ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலி கூட இருக்கிறது” என்றான் ஒரு தினம் அவன், காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.

பவானி பதறிப் போனாள். “சொன்னால் கேட்டீர்களா? பெரிசாக எதையாவது இழுத்து விட்டுக் கொண்டு?” என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.

அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, ”என்ன சார்! ஒரு மாசமாக இருமுகிறது என்கிறீர்கள்? சாவகாசமாக வருகிறீர்களே! காசம் ஆரம்பித்திருக்கிறதே” என்றார் ஈனஸ்வரத்தில்.

பவானியின் மனம் ’திக்’ கென்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் தைரியசாலி. நம்மால் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது” என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.

”செய்து தான் ஆகவேண்டும் அம்மா. வியாதி பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுமே!” என்றார் டாக்டர்.

”பணத்தை நாம் தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது? என்னால் முடிந்த வரையில் பார்த்து விடுகிறேன். பிறகு பகவான் இருக்கிறான்” என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.

டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது . அவரால் முடிந்த வரையில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி, தான் அடிக்கடி வந்து கவனிப்பதாகவும் கூறினர்.

பசுமலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப்படியாக ஏமாற்றமே ஏற்பட்டது. கணவனைக் காச நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றி விட்டதோ அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். அன்று உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல் இருந்தது . இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள் விளங்கி விட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.

இவை யெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியை வென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.

பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளிதான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன்தோன்றும் விடிவெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண்களுக்குப் பாலுவும் ஒரு விடி வெள்ளியாகவே தோன்றினான். ஆம் இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.

பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

2. பொழுது விடிந்தது

பொழுது பலபல வென்று விடிந்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பசுக்கள் கட்டியிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை யாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.

எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர் கல்யாணராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.

”நீ! இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடு கூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?”

“ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடு-வீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்” என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.

“இன்னொரு கல்யாணமா? உன்னை விட்டு விட்டா?” என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல்வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக் கூத்தாகவே தோன்றின.

அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒருகாரைச்சுவர் தான் இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவளமல்லிகை மரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில் மலரும் மலர்கள் யாவும் பவானி பின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.

“இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவளை மறந்து விட்டு, இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!” என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.

”அது தான் உலக வழக்கம்” என்று பவானி விரக்தியாகப் பதிலளித்து விட்டுக் கீழே உதிர்ந்திருந்த மலர்களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதியிடம் கொடுத்தாள்.

இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்து விட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர் கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர். “உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்கப் பால் தருகிறேன்” என்றார். பவானியின் மகன் பாலுவிடம் அவருகு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.
பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக்கத்துடன் உள்ளே சென்று. பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.

“நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?” என்று கேட்டுக் கொண்டே அவர். செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் ஊற்றினார். பிறகு அவளைப் பார்த்து. ”உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்து விடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்” என்றார்.

பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. ”பால் நான் தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று நினைத் தாள் பவானி.

இருந்தாலும், அவளுக்கு சுயகௌரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்பமிருந்தால் அன்றே- அவள் கணவன் இறந்து போன தினமே-வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். ஆகவே பவானி விநயமாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத் துடன், ”மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள்” என்றாள்.

கல்யாணராமன் பவானியை விழித்துப் பார்த்தார். “பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என்னைப் பற்றியோ என் மனசைப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லை யென்றால் பேசாமல் பாலை வாங்கிக் கொள்.”

கல்யாணராமன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அவர்களுடையது என்று சொல்ல வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால் ஒரு குழந்தை இல்லை. பால்யத்தில் திருச்செந்தூர் முருகனையும் பழனி ஆண்டவனையும் வருஷத்தில் இரு முறை தரிசனம் செய்து தங்கள் குறையை முறையிட்டனர் அத்தம்பதி. ஆனால், மகப்பேறு மட்டும் அவர்களுக்குக் கிடைக்க-வில்லை. கல்யாணராமன் தெளிந்த உள்ளத்தைப் படைத்தவர். ஆகவே, அவர் இந்தக் குறையை மறந்து விட்டார். பார்வதிக்கு இது ஒரு ஆறாத குறை. அவள் இருந்த விரதங்களும், தவங்களும் மேலும் அவளுக்குப் புது ஒளியைத் தந்தன.

அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியத்தின் பிள்ளையும், அண்டை வீட்டில் இருக்கும் பவானியின் மகன் பாலுவும் ஒன்று தான். பாக்கியத்துக்கும் அன்றாடம் பார்வதி மோரும் பாலும் கொடுத்தாள். பவானிக்குக் கொடுத்தால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தினால் தான் பார்வதி இதுவரையில் அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.

கல்யாணராமன் கபடமில்லாமல் கேட்டு கொடுத்தும் விட்டார். பவானி, அத்தம்பதியின் உயர்ந்த மனப் பான்மையை வியந்து கொண்டே பால் தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். குழந்தை எழுந்திருப்பதற்குள் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுவதில் முனைந்தாள்.

அடுப்பங்கரையின் சுவரில் ஒரு காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று தேதி பதினைந்து, அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் வாழ்க்கையில் எத்தகைய மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டது! அவள் பார்வைக்கு எதிராகக் கொட்டையான எண்ணில் அது அவளைப் பார்த்து சிரித்தது. சரியாக இரண்டு வருஷங்களுக்கு முன்பு அந்தப் பதினைந்தாம் தேதிதான் அவளையும், அவள் கணவனையும் இந்த உலகத்தில் நிரந்தரமாகப் பிரித்த நாள். அந்தச் சனியன் பிடித்த எண் கண் முன்னால் தெரியவே பவானி அவசரத்துடன் எழுந்து ‘சர்’ ரென்று அந்தத் தாளைக் கிழித்து எரியும் கும்மட்டியில் போட்டாள்.

3. கருகும் எண்ணங்கள்து

கும்மட்டியில் ஜ்வாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பு அந்தத் தேதித் தாளை அப்படியே பஸ்மமாகப் பொசுக்கி விட்டது. அது கருகிச் சாம்பலாகிப் போவதை பவானி பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பதினைந்தாவது எண் கருகிப்போனதே ஒழிய அவள் மனத்துள் பதிந்து போன அந்தப் பழைய நினைவுகள், அடுப்பில் காற்று வேகத்தில் சுழன்று எரியும் தீயைப் போலச் சுழன்று எழுந்தன.

நான்கு வருஷங்களுக்கு முன்பு சித்திரை மாசத்தில் ஒருநாள். அன்று பதினைந்தாம் தேதி. அது தமிழ் மாசத்தின் பதினைந்தாம் தேதியோ அல்லது ஆங்கில மாசத்தின் பதினைந்தாவது நாளோ? அதைப்பற்றி அவ்வளவு தெளிவாகப் பவானிக்கு நினைவு இல்லை. அன்று அவள் கணவன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்து விட்டான். பவானியின் மனமும் கடந்த பத்து தினங்களாகவே சரியாக இல்லை. இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை’ என்று வைத்தியர் கூறி இருந்தார். ”இருதயம் பலவீனமாக இருக்கிறது; இருமினால் சளியுடன் ரத்தமும் கலந்து வருகிறது. இனிமேல் நான் என்ன செய்ய முடியும்?’ என்று வைத்தியர் கூறியதைக் கேட்ட பவானியின் நெஞ்சம் துயரத்தால் வெந்தது. அவளுடைய மனம் துண்டங்களாகப் பிளந்து சிதறுவது போல் இருந்தது.

“டாக்டர்!” என்றாள் வேதனை தொனிக்கும் குரலில். டாக்டர் சிறிது நேரம் கையிலிருந்த ஸ்டெதஸ் கோப்பைச் சுழற்றிக் கொண்டே நின்றிருந்தார். இருபத்தைந்து வயது கூட நிரம்பாத பூங்கொடியாகிய அவள், இனிமேல் கணவனை இழந்து தனித்துத்தான் நிற்க வேண்டுமா? பிறைமதி போன்ற அவளுடைய நெற்றியில் வட்ட வடிவமாகத் துலங்கும் அந்தக் குங்குமம் அழிந்து தான் போக வேண்டுமா?

டாக்டர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பவானி நீர் மல்கும் கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். ”டாக்டர்! எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்” என்று தன் மலர் போன்ற கரங்களை ஏந்தி அவரிடம் பிச்சை கேட்டாள் அந்தப் பேதை. டாக்டரும் பிறப்பு இறப்பு என்கிற இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்ட ஒரு மனிதப் பிறவிதான் என்பது பவானிக்கு மறந்து போய் விட்டது. பாவம்! வாழ்க்கையின் இன்பக் கோட்டில் நிற்க வேண்டியவள் துன்பத்தின் எல்லையைக் காணும்போது தடுமாறுவது இயற்கைதானே? விழிகளின் கோணத்தில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவர். “நான் என்ன அம்மா செய்ய முடியும்? உயிருக்கு உடையவனாகிய அந்தக் கடவுள் கருணை வைத்தால் உன் கணவன் பிழைத்து எழலாம். என்னால் ஆனவரைக்கும் முயன்று பார்த்தாகி விட்டது” என்றார்.

டாக்டர் தம் மனசைத் தேற்றிக் கொண்டு வெளியே போய் விட்டார். அப்புறம் அவர் முன்னைப் போல் சிரத்தையுடன் பவானியின் கணவனைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை.

பவானி எந்த நாளை ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்துக் கலங்கி இருந்தாளோ அந்தப் பதினைந்தாம் தேதி வந்தது. அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. கிழக்கே உதய சூரியன் பளீரென்று உதயமானான். மலர்கள் மலர்ந்தன. பறவைகள் உதய கீதம் இசைத்தன. தென்றல் வீசியது. பவானி சோர்ந்த உள்ளத்துடன் எழுந்தாள். பல் விளக்கி, முகம் கழுவி, கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.

”பவானி” என்று கூப்பிட்டு இருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் அவள் கணவன். குங்குமச் சிமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பவானி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

செக்கச் செவேல் என்று ராஜாவைப் போல் இருந்த அந்த உருவம் தான் எப்படி வற்றி உலர்ந்து போய் விட்டது! சுருள் சுருளாக அலைபாயும் அந்தக் கிராப்பு எப்படிக் கலைந்து சிதறிப் போய் இருக்கிறது? பார்வையிலேயே தன் உள்ளத்தின் அன்பை வெளியிடும் அந்தக் கண்களின் காந்த சக்தி எங்கே மறைந்து போய் விட்டது? ஆஜானுபாகுவாக இருந்த அந்த நெடிய உருவம் எப்படிப் பூனை போல் ஒடுங்கிக் கிடக்கிறது?

இளமையையும் இன்ப வாழ்க்கையையும் படைத்த இறைவன் ஏன் இந்த நோய் என்னும் துன்பத்தையும் கூடவே படைக்க வேண்டும்? இத்தனை கோடி இன்பங்களைப் படைத்த இறைவன் ஏன் இப்படிப் பயங்கரமான வியாதிகளைப் படைத்து. அதற்குப் பலி ஆகிறவர்கள விதி என்று சொல்லித் தேற்ற வேண்டும்?

மதுவைப் படைத்தவன் நஞ்சைப் படைத்திருக்கிறான். மலரைப் படைத்தவன் முட்களைப் படைத் திருக்கிறான். மானைப் படைத்தவன் புலியைப் படைத்-திருக்கிறான். அது தான் சிருஷ்டியின் தத்துவம். யாரும் கண்டறிய முடியாத ரகசியம்.

முகத்தில் வேதனை விளையாட எதிரில் தங்கச் சிலை மாதிரி நிற்கும் பவானியை அவன் ஆசை தீரப் பார்த்த பிறகு அமைதியான குரலில் ”பவானி! இங்கே வாயேன், இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்” என்று ஆசை பொங்க அழைத்தான்.

பவானி பதில் ஒன்றும் கூறாமல் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள். மெலிந்து போயிருந்த தன் கையால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்தவாறு அவன் அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டான். அன்புடன் அவள் முகவாயைப் பற்றித் தன் முகத்துக்கு நேராக அவள் முகத்தைத் திருப்பினான். ஆள் காட்டி விரலைச் சிமிழுக்குள் தோய்த்துக் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வட்ட வடிவமாகப் பொட்டு வைத்தான்.

பவானியின் கண்கள் குளமாக இருந்தன. உதடுகள் துடித்தன. நெஞ்சுக் குமிழ் திக் திக் கென்று அடித்துக் கொண்ட து.

”பவானி! ஏன் அழுகிறாய்?” என்று கவலை தொனிக்கக் கேட்டான் அவன். அவள் பதில் பேசவில்லை.

”பைத்தியம்! நான் போய் விடுவேன் என்று தானே அழுகிறாய்? பிறந்தவன் இறப்பது உறுதி என்று கீதை படித்து எனக்கு உபதேசம் செய்தாயே! அதற்குள்ளாகவே மறந்து விட்டாயே பவானி?”

“ஆம்” என்கிற பாவனையாக அவள் கண்ணீருக்கிடையில் தலையசைத்தாள்.

” நான் பூமியில் பிறந்தேன். இன்றோ நாளையோ இறக்கப் போகிறேன். நான் பிறந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறக்கப் போவதும்…” என்று அவன் இன்னும் ஏதோ முணு முணுத்துக்கொண்டே இருந்தான்.

பவானி ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நீலவானில் மேலே எழும்பி வரும் கதிரவனின் ஒளி வையகமெல்லாம் பரவிப் புத்துணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்தது.

நீள் விசும்பையும் வெட்ட வெளியையும் உற்று நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்த அவள் கவனத்தை குழந்தை பாலுவின் மென் குரல் கலைத்தது .

“அம்மா! அம்மா!” என்று அழைத்துக் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாலு தட்டுத் தடுமாறிய வண்ணம் அவளைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான்.

பவானி திரும்பிப் பார்த்தாள். தூக்கக் கலக்கத்தில் தடுமாறி நடந்து வரும் அவனை, ”வாடா கண்ணு இங்கே!” என்று அவள் கணவன் அழைத்து அவனுடைய தளிர்க்கரங்களைச் சேர்த்துத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டான். அதனால் மட்டற்ற மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அடைந்தான். அவன் மகிழ்ச்சி பொங்கும் குரலில், ”பவானி. குழந்தையின் கைகளைப் பிடித்துப் பாரேன். உனக்கு அந்த ஸ்பரிசம் எவ்வளவு இதமாக இருக்கிறது என்பது தெரியும்” என்றான்.

பவானி ஆசையுடன் பாலுவின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். மெத்து மெத்தென் றிருந்த அந்தப் பிஞ்சுக் கரங்களின் பராமரிப்பில் தன் கணவன் தன்னை விட்டுப் போவதாகவே நினைத்தாள்.

”அம்மா! எனக்குக் காப்பி வேணும் அம்மா” என்றான் குழந்தை. அப்பொழுது தான் பவானிக்குத் தான் இது வரையில் அடுப்பே மூட்டவில்லை என்பது நினைவுக்கு வந்தது. விடிந்து ஏழரை மணி ஆகிவிட்டது. இதுவரையில் வியாதிக்காரனுக்கும் ஆகாரம் ஒன்றும் கொடுக்காமல் என்னவோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை நினைத்து வருந்திக் கொண்டே பவானி சமையலறைக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள்.

பதினைந்து நிமிஷங்களில் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். படுக்கை அருகில் குனிந்து கணவனைப் பார்த்தாள். அவனுடைய நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்தது. கண்கள் லேசாகத் திறந்திருந்தன. அருகில் கிடந்த துண்டினால் அவன் நெற்றியை லேசாகத் துடைத்து விட்டு, “என்ன, காபி கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுகிறீர்களா!” என்று கேட்டாள் பவானி.

அவன் பதில் பேசவில்லை. மெதுவாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. அப்பொழுதும் அவன் அசையவில்லை. மிகவும் நிதானமாக அவன் ‘வளங் கையைத் தொட்டுப் பார்த்தாள். ‘சில்’லென்று இருந்த அந்தக் கரம் அவளை நடுக்கத்துடன் பின் வாங்கச் செய்தது. அவள் பிடியினின்று துவண்டு அது படுக்கையில் விழுவதற்கும், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக டாக்டர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

”எப்படி இருக்கிறார்?” என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அவன் கையை எடுத்தவுடன் வேதனையால் அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டார் .

”டாக்டர் அவர்?…” என்று பவானி திணறிக் கேட்பதற்கு முன்பு ”அவ்வளவு தான் அம்மா, நீ கொடுத்து வைத்தது. கடவுளின் கருணை உன் விஷயத்தில் வற்றிவிட்டது” என்று கூறினார்.

4. அண்ணனும் தங்கையும்

அதன் பிறகு கல்யாணமும் பார்வதியும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்தார்கள். ஊரிலிருந்து பவானியின் தமையனும், அவன் மனைவியும் வந்தார்கள். அருகில் இருந்து எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்தார்கள். பவானியின் கணவன் இறந்து பதினைந்து தினங்கள் வரையில் யாருமே எதுவுமே பேசவில்லை . ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகுதான் பவானிக்குத் தன் தனிமையைப் பற்றி நினைவு வந்தது.

கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்த அவள் அருகில் அவள் தமையன் நாகராஜன் வந்து உட்கார்ந்து கொண்டான் .

மெதுவான குரலில் அவனாகவே பேசவும் ஆரம்பித்தான்.

”பவானி! இனி மேல் நீ என்ன பண்ணப் போகிறாய்?” என்று கேட்டான்.

பவானி. விழிகளில் கண்ணீருடன் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்ன பண்ண வேண்டும் அண்ணா நீதான் சொல்லேன்?’

”நான் என்னத்தைச் சொல்வது? நீயாகவே ஏதாவது சொல்லுவாய் என்று பதினைந்து நாளாகப் பொறுத்துப் பார்த்தேன். நீ ஒன்றுமே பேசவில்லை. எனக்குக் கேட்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா?”

ஆரம்பத்தில் அன்புடனும், அனுதாபத்துடனும் பேச ஆரம்பித்த அவன் படிப்படியாகக் கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.

“உனக்கு இந்த நெஞ்சழுத்தம் ஆகாது. கூடப் பிறந்தவனை அண்டித்தான் இனிமேல் இருந்தாக வேண்டும்”, என்கிற பாவம் தொனிப்பதாக இருந்தது அவன் பேச்சில்.

அவன் வெடுவெடுவென்று பேசியதும் பவானியின் முகம் வாட்டமடைந்தது. மனதுக்குள் எதையோ வைத்துக் கொண்டு வெளியில், ஒன்றுக்கொன்று சம்பந்த-மில்லாமல் அவன் பேசுவது தெரிந்து போயிற்று. ”உன் புருஷன் உனக்கு என்ன ஆதாரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறான்? ஏதோ வேலையில் இருக்கிறான். பிக்கல் பிடுங்கல் ஒன்றும் இல்லை என்று தானே அப்பா உயர்வு என்று உன்னைக் கொடுத்தார்? இப்போது நீ நிராதரவாக ஒரு குழந்தையுடன் நிற்கிறாயே?” என்று அவன் ஏச வேண்டியவன். அப்படி ஏசாமல் ”இனி மேல் என்ன பண்ணப்போகிறாய்” என்று நாசூக்காகக் கேட்கிறான்.

குழந்தைக்குச் சாதம் ஊட்டி முடிந்தவுடன் கையை அலம்பிக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். பீரோவைத் திறந்து அவளுக்காக அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஆதாரத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

அது ஓர் ‘இன்ஷூரன்ஸ் பாலிஸி’. மூவாயிரம் ரூபாய்களுக்கு ’இன்ஷூர்’ செய்யப்-பட்டிருந்தது. வேறே எந்தவிதமான ஆதாரத்தையும் நம்பி அவள் இருக்க முடியாது. இருபத்தைந்து வயது நிரம்பிய பவானியின் வாழ்க்கைக்கு அந்த மூவாயிரம் ரூபாய் ஒரு ஆதரவா என்ன? அவளும் அவள் குழந்தையும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டும்: பாலு பெரியவனாகி விட்டால் அந்த மூவாயிரம் ரூபாயிலிருந்து அவனைப் படிக்க வைத்தாக வேண்டும்.

வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளே அநேகம். ஒரு மாசத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு வருஷத்தில் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. ஏதோ ஒரு சமயம் என்றால் இருக்கட்டும் என்று எண்ணியே பவானியின் கணவன் மூவாயிரம் ரூபாய்க்குப் ’பாலிஸி’ எடுத்துக்கொண்டான். மனைவிக்கும் குழந்தைக்கும் அதுதான் ஆதாரமாக அமையப் போகிறது என்று அவன் கனவிலும் நினைத்தவன் அல்ல. கணவன் மூவாயிரம் சேமித்து வைத்திருப்பதே பவானிக்குத் தெரியாது. மாதச் சம்பளம் நூற்றிருபது ரூபாய் வந்தது. அதில் நூறு ரூபாய் குடும்பச் செலவுக்குக் கணவன் அவளிடம் கொடுத்து விடுவான். மீதி இருபது ரூபாயை அவன் என்ன செய்கிறான் என்பதை அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

இப்போது பவானியின் தமையன் அந்த மூவாயிரம் ரூபாயடன் அவள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதை வைத்து பாலுவின் கல்வியை எடை போடுகிறான். ‘பூ! அது ஒரு பிரமாதமா? பணமென்று மதிப்பு வைக்காமல் செலவு செய்தால் மூன்றே நாளில் தீர்த்து விடலாம். மதிப்புடன் செலவு செய்தால் மூன்று வருஷங்களுக்குக் காணாது. பிறகு?…’ என்று அவன் சிந்தனை செய்வதாகவே பவானி நினைத்தாள்.

தலையைக் குனிந்து நிற்கும் தங்கையையும், அவள் கையிலிருந்த ‘பாலிஸி’ யையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் நாகராஜன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், ”ஆமாம், நீ இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

பவானி பரிதாபமாகச் சிரித்தாள்.

“என்னைப் போய்க் கேட்கிறாயே அண்ணா? உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்யேன். நான் என்னத்தைக் கண்டேன் உலகத்தில்?” என்று பதிலளித்தாள்.

“ஹும்… சரி. ‘பாலிஸி’யைப் பற்றிக் கம்பெனிக்கு எழுதி பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

பவானிக்கு முதல் கேள்விக்கு விடை கூறுவதற்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கத் தயக்கமாக இருந்தது. நிலத்திலே கோடுகள் வரைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் மனதில் எவ்வளவோ எண்ணங்கள் எழுந்தன. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அண்ணாவின் பிரம்மாண்டமான இல்லம். பணத்தின் பெருமையிலும் வாழ்க்கையின் நிறைவிலும் பூரித்து இருக்கும் மன்னி கோமதி, அவர்கள் வீட்டுக் கார், வேலையாட்கள். குழந்தை சுமதி. எல்லோரும் அவள் மனக்கண் முன்பு ஆடி அசைந்து தோன்றினர். அந்த வீட்டில் இவள் யாராக மதிக்கப்படுவாள்?

நாகராஜனின் அருமைத் தங்கையாகவா? மஞ்சளும் குங்குமுமாக இருந்த போது அளித்த மதிப்பை மன்னி கோமதி இப்பொழுதும் இவளுக்கு அளிப்பாளா? யார் கண்டது?

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு தடவை பவானி ஆமையன் வீட்டுக்குப் போயிருந்தாள். கல்யாணமாகிப் புக்ககத்தில் போய் ஆறு மாசங்கள் குடித்தனம் பண்ணி
விட்டு வருகிறவள். மனசிலே எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்ச்சிகள் நிறைந்து இருந்தன. யாரிடமாவது தன் வயசுக்கு ஒத்த பெண்ணி படம் அவைகளை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத் துடன் வந்தாள். கோமதி அவளைவிட வயசில் இரண்டு வருஷங்கள் மூத்தவள். அவளும் புதிதாக மணமாகி வந்திருப்பவள் தான். இருவரும் மனம் விட்டு எவ்வளவோ அந்தரங்கமாகப் பேசி இருக்கலாம்.

பவானி வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு விருவிரு வென்று உள்ளே போய் விட்டாள் கோமதி. அவள் சுபாவம் அப்படி.

“கோமு! கோமு! இதோபார், யார் வந்திருக்கிறார்கள்?” என்று நாகராஜன் அவளைப் பல முறைகள் அழைத்தான்.

கோமதி அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்தாள்.

“நான்தான் பவானி வந்ததை அப்பொழுதே பார்த்தேனே. இதற்குப் போய் இவ்வளவு அமர்க்களம் பண்ணுவானேன்?” என்று ‘சூள்’ கொட்டினாள் கோமதி.

5. அழைப்பு..!

எண்ணங்களும், சிந்தனைகளும் முடிவில்லாமல் ஏற்படும் போது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். பவானி இவ்விதம்தான் தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள். மனதுக்கு வேகம் அதிகம் என்று சொல்வார்கள். நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துச் சுழன்று ஓடும் காட்டாற்றைவிட எண்ணங்களுக்கு வேகம் அதிகம். வாயு வேகத்தை விட மனோவேகம் வலிமை வாய்ந்தது. பவானி ஒரு கண காலத்தில் கடந்துபோன நாட்களை நினைவு படுத்திக் கொண்டு, அவை எழுப்பும் எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தாள். வில்லைப் போல் வளைந்து நெற்றிக்கே ஒரு சோபையைத் தரும் புருவங்களைச் சுளித்து அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அழகிய நீண்ட அவள் கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

நாகராஜன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அமைதியான குரலில், ”பவானி! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? உன்னைப் பல முறைகள் கேட்டும் நீ பேசாமல் நிற்கிறாயே!” என்றான்.

பவானியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

”அண்ணா ! உன்னுடன் என்னை வரும்படிக் கூப்பிடுகிறாய். அவ்வளவு தானே? என்றைக்கும் ஒருவருடைய ஆதரவின் கீழ்தான் நான் வாழவேண்டும். இவை எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணா …..” என்று சொல்லி முடிக்காமல் தேம்பிக் கண்ணீர் வடித்தாள்.

தமையன் வாஞ்சையுடன் அவள் அருகில் வந்து நின்றான். ஆதுரத்துடன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.

“அசடே! என் வீட்டில் உனக்குச் சாப்பிடச் சாதம் இல்லாமலா போய்விட்டது? எதையோ நினைத்துக் கொண்டு வருந்துகிறாயே. பேசாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு என்னோடு புறப்படு அம்மா” என்று அழைத்தான்.

கூடத்திலே கோமதி உட்கார்ந்திருந்தாள். கொல்லையில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து தனியாகவே, சுதந்திரமாக இருந்து வந்தவள். வீட்டுக்கு எஜமானி என்கிற எண்ணம் அவளுக்கு வளர்ந்து போயிருந்தது. அந்த வீட்டில் இன்னொருவர் சுதந்திரமாக வந்து தங்க வேண்டும் என்பதை அவள் விரும்பாதவள். தன்னுடைய புருஷனையும், குழந்தை சுமதியையும், தன்னையும் தவிர அவளுக்கு வேறு ஒருவருமே தேவையில்லாமல் இருந்தது.

செழித்து வளர வேண்டிய கொழு கொம்பிலிருந்து பிடுங்கித் தரையில் எறிந்த மாதிரி பூங்கொடியாகிய பவானியைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்?

நாத்திக்கும். மதனிக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து, அதற்கேற்ப கதைகளையும், சம்பவங்களையும் கேட்டும் படித்தும் அந்த எண்ணத்திலேயே ஊறிப் போயிருப்பவர்கள் நாம். நாத்தி என்ன பூவும் மணமுமாகவா அவள் இல்லத்தை நாடி வந்திருக்கிறாள்? அவள் எதிரில் ஒரு புதுப் புடவை உடுத்த முடியுமா? அவள் பார்த்துக் கோமதி கணவனுடன் பேசி மகிழ முடியுமா? அவள் விடும் பெருமூச்சு நெருப்பைவிட அதிகமாகச் சுட்டுப் பொசுக்கி விடுமே என்றெல்லாம் கோமதி நினைத்தாள்.

”இவருக்கு என்ன? வா என்று சுலபமாகக் கூப்பிட்டு விடுகிறார்! வீட்டிலே அனுபவிக்கப் போகிறவள் நான் தானே? காலையில் கம்பெனிக்குப் போனால், இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் இவருக்கு வீட்டில் நடப்பவை பற்றி என்ன தெரியப் போகிறது?”

கோமதி இவ்விதம் எண்ணமிட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். எப்படியோ போகட்டும். அவர் கூப்பிட்டுப் பவானி வந்தால் அழைத்துத்தான் போய் ஆகவேண்டும். அண்ணன் வீட்டைப் பற்றிய பாத்தியதை மன்னிக்கும் உண்டு என்பதைப் பவானி மறந்து விடுவாளா என்ன? என்று மேலும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கோமதி.

அப்பொழுது கொல்லையிலிருந்து பவானியின் குரல் தெளிவாகக் கேட்டது.

”இப்பொழுது அங்கே வருவதற்கு என்ன அவசரம் அண்ணா? போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொஞ்ச காலம் அவர் இருந்த இடத்திலேயே நான் இருக்க ஆசைப் படுகிறேன்” என்றாள்.

நாகராஜன் பதில் ஒன்றும் கூறவில்லை . அவன் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகளும் பதில்களும் எழுந்தன. அவைகளை அடக்கிக் கொண்டு, அப்படியானால் இந்த மூவாயிரம் ரூபாய் என்னிடம் இருக்கட்டும். மாசம் உனக்காக ஐம்பது ரூபாய் அனுப்பி வருகிறேன் பவானி, உனக்கு எப்பொழுது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது வரலாம். உன்னை இதற்கு மேல் தற்சமயம் வற்புறுத்த நான் ஆசைப்பட வில்லை ” என்றான்.

நாகராஜன் அங்கே இருந்து உள்ளே சென்றதும். கூடத்தில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் மனைவியைக் கவனித்தான். கொல்லையில் நடந்த இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு இருந்தவள் எழுந்து வந்து ஏதாவது ஒரு வார்த்தை பேசியிருக்கக் கூடாது? ஒப்புக்காகவாவது பவானியை ‘வா’ என்று அழைத்திருக்கக் கூடாதா? மனதில் பொங்கும் கோபத்துடன் அவன் மனைவியை விழித்துப் பார்த்து ”கோமு! நீ இங்கேயா இருந்தாய் இந்நேரம்? பக்கத்து வீட்டிற்குப் போயிருப்பதாக அல்லவோ நினைத்தேன்! உனக்கும் நம் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை போல் அல்லவா நீ பேசாமல் இருந்து விட்டாய்?” என்று கேட்டான்.

கோமதியின் உதடுகளில் அலட்சியம் நிரம்பிய புன்னகை நெளிந்தோடியது. அவள் ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு.

“நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துச் செய்கிறீர்களே. இடையில் நான் வேறு குறுக்கே புகுந்து ஏதாவது பேச வேண்டுமா என்ன?” என்றாள்.

நாகராஜனின் கண்கள் கோபத்தால் சிவந்தன! அவன் படபடப்புடன்,

“அழகு தான் போ! என்ன தான் நான் பவானியை வருந்தி வருந்தி அழைத்தாலும் நீ கூப்பிடுகிற மாதிரி இருக்குமா கோமு?” என்றான்.

கோமதி அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பு பவானி பாலுவை அணைத்துப் பிடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

“இதெல்லாம் என்ன அண்ணா ? நீ கூப்பிட்டால் மன்னி கூப்பிட்டமாதிரி இல்லையா? அம்மாதிரியெல்லாம் நீ ஏன் கற்பனை செய்து கொள்கிறாய்? எனக்கு வர வேண்டும் என்று தோன்றும் போது கட்டாயம் வந்து விடுவேன்” என்றாள்.

ஆனால் பவானியின் உள்ளத்தில் குமுறும் எண்ணங்களையோ அவள் மனம் துடிக்கும் துடிப்புகளையோ அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. அண்ணனுக்கும் மன்னிக்கும் தெரியாமல் அவள் வாசல் அறைக்குள் புகுந்து வெகு நேரம் வரையில் கண்ணீர் விட்டுக் கலங்கியதைக் குழந்தை பாலு ஒருவன் தான் அறிவான். கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் அன்னையிடம் சென்று ஆசையுடன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் அவன்.

“அம்மா! அம்மா! நீ ஏன் அழுகிறாய்? அப்பா இல்லையே என்றா? நான் இருக்கிறேனே அம்மா” என்றான் குழந்தை. பவானி அழுகையினூடே சிரித்தாள். அவளுக்குத்தான் பாலு இருக்கிறானே!

பின் அவள் ஏன் அழ வேண்டும்?

– தொடரும்…

– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *