கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 448 
 
 

அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9

அதிகாரம் 4 – மனதிற்குகந்த மன்மதன்

வராகசாமிக்கு வயது இருபத்திரண்டாயிற்று. அவன் நடுத்தரமான உயரமும், சிவந்த மேனியும், வசீகரமான வதனமும் பெற்றவன். அவன் தன் சிரசில் அரையணா வட்டத்திற் குடுமிவைத்திருந்தமையால், உரோமத்திற்குப் பதில் ஒரு எலியின் வாலே சிரசிலிருந்தது. அவனது தேகத்தில் சுறுசுறுப்பொன்றே காணப்பட்டதேயன்றி தசைப் பிடிப்ப தென்பதே காணப்படவில்லை. அவன் மிக்க கூர்மையான புத்தியைப் பெற்றிருந்தும், அது ஏட்டுச்சுரக்காயேயன்றி, அவனுக்கு உலகத்தின் அனுபவம் சிறிதும் கிடையாது. அவன் குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையை இழந்து, விதவையான தன் தாயினாலேயே வளர்க்கப்பட்டு வந்தான். போதாக்குறைக்கு இரண்டு சகோதரிமார்களும் விதவை நிலை அடைந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு கைம் பெண்டாட்டியால் வளர்க்கப்பட்டால் மனிதன் கழுதையாக மாறிவிடுவானென்றால், மூன்று புண்ணியவதிகளும் தம்முடைய விவேகத்தைச் செலுத்தி ஆளாக்கிய வராக சாமியைப் பற்றி அதிகம் கூற வேண்டுவதுண்டோ ? அவனுக்கு அவர்கள் எந்த விஷயத்திலும் சுயபுத்தியே இல்லாமற் செய்துவிட்டனர். அவன் நடந்தாற் கால் தேய்ந்து போகும்; அவன் தண்ணீரில் நனைந்தால் உப்பு மூட்டையாகிய அவன் தேகம் கரைந்து போகும்; அவன் வீட்டைவிட்டு வெளியிற் சென்றால் அவனை பூதம் விழுங்கிவிடும் என்று நினைத்து அவன் எந்தக் காரியம் செய்தாலும் அதனால் அவனுக்குப் பெருத்த துன்பமுண்டாகும் என்று அவனை வெருட்டி வந்தனர்.

ஒரு ஊரில் பெருத்த தனிகன் ஒருவன் இருந்தான். அவன் சங்கீதத்தில் மகா நிபுணன். தோடி ராகம் என்றால் தூக்கு என்ன விலை என்பான். பல்லவி என்றால் படி எத்தனை பைசா என்பான். அவன் வீட்டில் ஒரு கலியாணம் நேர்ந்தது. அதற்காக அன்றிரவு ஊர்வலம் வர நினைத்து, அதற்கு மேளக்காரனை ஏற்பாடு செய்து அவனுக்கு நூறு ரூபாய் முன் பணம் கொடுத்தனுப்பினான். அம்மேளக்காரன் அன்று பகலில் வேறொரு ஊர்வலத்தில் மேளம் வாசித்துக்கொண்டு வந்தான். அதைக் கண்ட நமது தனிகனுக்கு அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மேளக்காரனை வரவழைத்து “நாயே!” என்றும், “கழுதே!” என்றும் வைதுவிட்டு சீறி விழுந்தான். தன்னிடம் பெற்ற முன் பணத்தை கீழே வைத்து அப்பாற் போகும்படி உத்தரவு செய்தான். மேளக்காரன் உண்மையை அறிய மாட்டாமல் நடுநடுங்கித் திருடனைப்போல் விழித்துத் தான் எவ்விதப் பிழையும் செய்யவில்லை என்றான். அதைக் கேட்ட தனிகன், “அடே மேளக்கார போக்கிரிப் பயலே! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இப்போது வந்த ஊர்வலத்தில் நீ மேளம் வாசிக்கவில்லையா? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கவா பார்க்கிறாய்?” என்றான்.

மேளக்காரன் :- ஆம்; நான் மேளம் வாசித்தது உண்மை தான். அது எப்படி குற்றமாகும் ? – என்றான்.

தனிகன் :- ஆகா! இன்னமும் என்னை முட்டாளென்று மதிக்கிறாய்? இப்போது குழாயிலுள்ள பாட்டுக்களை யெல்லாம் ஊதிவிட்டு இரவில் வெறுங் குழாயோடு வந்து இருளில் எங்களை ஏமாற்றவா பார்த்தாய்? நானா ஏமாறுகிறவன்? பணத்தைக் கீழே வையடா முட்டாப் பயலே! என்றான். மேளக்காரன் பொங்கி யெழுந்த தனது சிரிப்பை மிகவும் பாடுபட்டு அடக்கிக் கொண்டான். அத்தகைய மூட சிகாமணியிடத்தில் மேளம் வாசிக்காமல் இருப்பதே மேன்மை யென நினைத்து, தான் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.

அதைப்போல வராகசாமி அதிகமாய்ப் பேசிவிட்டால், அவனுடைய தொண்டையிலுள்ள சொற்கள் செலவழிந்து போவதனால் தொண்டை காலியாய் போய் விடுமோவென அஞ்சியவரைப் போல் விதவைகள் அவனை மௌனகுரு சாமியாக்கி வைத்திருந்தனர். அதனால் அவனுக்கு பிறருடன் பேசும் திறமையும், வாக்குவாதம் புரியும் வன்மையும் இல்லாமற் போயிற்று.

அவனுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் விதவையரே கவனித்து வந்தார்கள். ஆதலின், அவனுக்கு எதைக் குறித்த கவலையும் நினைவும் இல்லாமற் போயின. அவன் கடைக்குப் போய் ஒரு நெருப்புப் பெட்டியும் வாங்கியறியான். எப்போதாயினும் விலக்கக்கூடா வகையில் அவன் கடைக்குப் போக நேர்ந்தால், புளி வராகனிடை என்ன விலை யென்றும், ஜவ்வாது வீசை என்ன விலை யென்றும் கேட்பான். இம்மாதிரி வளர்க்கப்பட்டு வந்தமையால், அவன் படிப்ப தொன்றிலேயே தன் முழு நினைவையும் வைத்து வந்தான். அதனால் அவனுக்குப் பெருத்த நன்மையும் பல தீமைகளும் உண்டாயின. அவன் எந்தப் புஸ்தகத்தையேனும் ஒருதரம் படிப்பானாயின், கிராமபோ (Gramaphone)னைப் போலப் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள் யாவும் அப்படியே அவன் மனதிற் பதிந்து போம்.

முதலிலிருந்து முடிவு வரையில் மனப்பாடமாய்ப் பக்கங்களின் இலக்கம், பத்திகள், வாக்கியங்கள், முற்றுப் புள்ளிகள், மைப் புள்ளிகள் முதலியவற்றையும் மறவாமல் ஒப்புவிப்பான். அவன் ஒவ்வொரு பரிட்சையிலும் சென்னை இராஜதானிக்கே முதற் பையனாகத் தேறி வந்தவன். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., முதலிய எல்லாப் பரீட்சைகளிலும் அவ்வாறே முதன்மை யடைந்தான். வெளிப்டையான அந்தச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்தே நம் சாம்பசிவையங்கார் அவனுக்கு மேனகாவை மணம் புரிவித்தார்.

ஆனால் மாப்பிள்ளை (மணப்பிள்ளையின் உண்மைத் திறமை அவனை வீட்டிற் பார்த்தவருக்கே நன்கு விளங்கும். “அடே வராகசாமி! இடுப்புத்துணி அவிழ்ந்து போய் விட்டதடா!” என்று பெருந்தேவியம்மாள் சொன்னாலன்றி, அவனுக்கு தன் இடையிலிருந்த துணி நெடுந்தூரம் பிரயாணம் சென்றது தெரியாது. “சாப்பிட்டு நிரம்ப நாழிகை யாயிற்று, உனக்குப் பசிக்கும், எழுந்துவா!” என்பாள் அன்னை. அவனுக்கு உடனே பசி வந்துவிடும்! எழுந்து உணவருந்தப் போவான். அதற்குள் பெருந்தேவியம்மாள், “அடே! பகலில் நீ அதிகமாய் சாப்பிட்டதினால் இப்போது கூடப் புளித்த ஏப்பம் வந்ததே; திரும்பவும் இப்போது சாப்பிட்டால் அஜீரணம் அதிகமாய் விடும் பேசாமற் படுத்துக்கொள்!” என்பாள். உடனே அவனுக்கு பசியடங்கிப்போம். அஜீரணமும் இருப்பதாய்த் தோன்றும், உடனே படுக்கைக்குப் போய் விடுவான்.

நாட் செல்லச் செல்ல அவன் படிப்பதிலேயே தன் புத்தியைச் செலுத்திச் செலுத்திப் பழக்கம் அடைந்தான் ஆகையால், அவனுடைய நினைவு அவனிருந்த இடத்திலேயே இருந்ததில்லை. அவனுடைய தேக சம்பந்தமான காரியங்கள் யாவும் இயந்திரத்தின் இயக்கத்தைப் போலப் பிறருடைய முயற்சியினால் தாமாய் நிறைவேறி வந்தன. அவன் வீட்டைவிட்டு வெளியில் சென்றால், அவன் மனது ரோமபுரியை ஆண்ட சீசரின் சரித்திரத்திற் சென்றிருக்கும். மனதில் நடக்கும் நாடகத்திற் கிசையக் கைவிரல்கள் அபிநயங்கள் காட்டிக் கொண்டும் யாதாயினும் எழுத்துக்களை எழுதிக்கொண்டும் இருக்கும்.உதடுகள் சொற்களால் அசைந்த வண்ணம் இருக்கும். அவன் வெளிப் பார்வைக்கு உன் மத்தனைப்போல காணப்படுவான். அதனால் அவனுக்குப் பல துன்பங்கள் அடிக்கடி நேர்ந்து வந்தன. மோட்டார் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் தினந்தினம் அவன் உயிர் தப்பி மறு ஜெனனம் எடுத்து வந்தான். வண்டி யோட்டுவோர் மணியை யடித்துக் குழாயால் ஊதி எவ்வளவோ கூச்சலிடுவார்கள். அவன் முழுச் செவிடனைப்போல போய்க்கொண்டிருப்பான். அவர்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு அவனை வாயில் வந்தவிதம் திட்டுவார்கள். அண்டையிற் செல்லும் மனிதர் அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்து விடுவார்கள்.

அவன் ஒருநாள் இரவு 7 1/2 மணிக்குக் கடற்கரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தான். தன் வீட்டின் வாயிலில் வந்தவன் அதற்குள் நுழையாமல், மறதியாக மேலும் நெடுந்தூரம் தெருவோடு போய் அங்கு தன் வீட்டை போலத் தோன்றிய வேறொரு வீட்டிற்குள் நுழைந்தான். காலையலம்பிக் கொண்டு உள்ளே நுழைவது அவனுடைய வழக்கம் ஆகையால், எதிரில் வைக்கப்பட்டிருந்த செம்பைக் கையில் எடுத்தான். கூடத்திலிருந்த அவ்வீட்டுப் பெண்டீர் அவனைக் கள்வனென மதித்துக் “கூ கூ திருடன் திருடன்” எனக் கூவி ஆரவாரம் செய்தனர். அண்டை வீட்டாரும் தெருவிற் சென்றோரும் தடிகளோடு உள்ளே நுழைந்து செம்பைத் திருடிய கள்வனைப் பிடித்துக் கொண்டனர். வராகசாமி அப்போதே தான் செய்த தவறை உணர்ந்து, உண்மையைக் கூறினான். அதை எவரும் நம்பாமல் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர். ஐயங்கார், ஆடு திருடின கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து செய்ய வேண்டுவ தறியாமல் தவித்து நின்றார். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சீதாராமநாயுடு அவனுடன் படித்தவ ராதலால் அவனைக் கண்டவுடன், “அடே வராகசாமி! என்னடா இது? எங்கடா வந்தாய்?” என்றார். ஐயங்கார் உண்மையைச் சொன்னார். அவர் விழுந்து விழுந்து சிரித்து ஜனங்களை அதட்டி யனுப்பி விட்டுத் தன் நண்பனது மானத்தைக் காப்பாற்றி அவனை வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னொருநாள் கச்சேரிக்குப் புறப்படும் அவசரத்தில், சட்டையைப் போட மறந்து தலைப்பாகையை மாத்திரம் அணிந்து கொண்டு வீட்டை விட்டு நெடுந்தூரம் போய்விட்டார். தெருவிலிருந்தோர் யாவரும் அந்த அவதாரத்தைக் கண்டு வியப்புற்றுக் கைகொட்டி நகைத்தனர். கோமளம் ஓடிவந்து உடம்பில் சட்டையில்லை யென்பதை நினைப்பூட்டினாள்.

அவன் உணவருந்த இலையில் உட்கார்ந்து, சாதம் பரிமாறப்படு முன் பரிஷேசனம் (நீர் சுற்றுதல்) செய்தல் மாதம் முப்பது நாட்களிலும் நடைபெறும்.

மேனகா வீட்டிற்கு வந்த சில மாதங்களில் அவனுடைய தாய் இறந்தாள். அவளுக்குப் பதிலாக அடுத்த வீட்டு சாமாவையர் மூன்றாம் விதவையின் பட்டத்திற்கு வந்து சேர்ந்தார். வராகசாமி தன் யெளவன மனைவி யிடத்தில் அதிக விருப்பம் வைத்துவிட்டால் தம்முடைய அதிகாரம் குறைந்து போகுமென நினைத்த பெருந்தேவி முதலியோர் அவன் அவள்மீது வெறுப்பையும் பகைமையும் கொள்ளும்படி செய்து வந்தனர். அவன் இயற்கையில் இரக்கம், தயாளம், அன்பு, நல்லொழுக்கம் முதலிய குணங்களைக் கொண்டவன். பிறருக்கு தீங்கு நினைப்பவனன்று. பிறர் காலில் முள் தைத்தால் அதைக் காணச் சகியாதவன். என்றாலும், அவன் சகோதரிமாரின் சொற்களுக்கு அதிக மதிப்பு வைத்திருந்தமையால், மேனகா விஷயத்தில் மாத்திரம் மிக்க கொடியவனாய் நடந்து வந்தான். அவர்கள் அடிக்கடி அவள் மீது கோள் சொல்லி அவனுக்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவன் தலை, கால் பாராமல் அவளை அடித்து விடுவான். இரண்டு மூன்று முறை கையிலும் பிறவிடங்களிலும் சூடு போட்டு விட்டான்.

தன்னுடைய கலியாணம் சாந்தி முகூர்த்தம் முதலியவற்றில் அவளுடைய தந்தை தனக்குத் தக்க மரியாதைகளும், சீரும் செய்யவில்லை யென்று சகோதரிமார் அவனிடம் அடிக்கடி உபதேசித்து வந்தனர். மேனகா குணத்தழகும், கல்வியழகும், மேனியழகும், நடத்தையழகும், வேலைத்திறமையும், புத்தி நுட்பமும் பெற்ற மாதர் திலகமாயிருந்தாள் ஆயினும், அவள் எவ்விதக் குற்றங் கூறுதற்கும் வழியின்றி ஒழுகி வந்தாள் ஆயினும், எவராலும் கோயிலில் வைத்து தெய்வமென வணங்கத் தகுந்த உத்தமியாயிருந்து வந்தாள் ஆயினும், அவர்கள் அவள் மீது பொய்க் குற்றங்களை நிர்மாணம் செய்து சுமத்தி ஒவ்வொரு நாளும் அடிவாங்கிவைப்பார்கள், அவனும் அவளும் ஐந்து நிமிஷமேனும் தனிமையிற் பேசவிடமாட்டார்கள். அந்த மனைவியே தனக்குத் தேவையில்லை யென்று அவன் அவளை வெறுக்கும்படி செய்துவிட்டனர். அவளுடைய தந்தையின் மீதும் பகைமையை உண்டாக்கி வைத்தனர்.

பெருந்தேவி யம்மாள் அதுவரையிற் சேர்த்த பணத்தை யெல்லாம் 300 – பவுன்களாக மாற்றி அதை ஒரு சிறிய மூட்டையாகக் கட்டி, அம் மூட்டையைத் தன் இடையில் புடவைக்குள் வைத்துச் சுமந்து வந்தாள். அத்துடனே நீராட்டம், போஜனம், நித்திரை முதலிய யாவும் நடைபெற்றன. அந்த இரகசியத்தை எவரும் அறியவில்லை. சாமாவையருடைய கூரிய நாசி அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. அவள் வீணிற் சுமந்திருந்த அந்தப் பளுவைத் தான் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உதவி புரிய வேண்டும் என்பதே சாமாவையரின் அந்தரங்க நினைவு. அதற்காகவே அவர் அவர்களுடன் நட்புக்கொண்டு அன்னியோன்னியமாய்ப் பழகி வந்தார்; அவள் ஊதியதற்குத் தகுந்தவாறு அவர் மத்தளந் தட்டி வந்தார்.

அவர் விதவைகளோடு தனிமையில் இருக்கையில், பெருந்தேவி சொல்வதே சரியென்பார். வராகசாமியோடு இருக்கையில் அவன் சொல்வதே சரியென்பார். இருவரும் இருக்கையில், “இதுவும் சரி அதுவும் சரி; வராகசாமி மகா புத்திசாலி; அவன் வக்கீல் ; மற்ற எந்தக் கோர்ட்டுத் தீர்மானத்தின் மேலும் அவன் அப்பீல் செய்யலாம். அக்காள் தீர்மானத்திற்கு அப்பீல் கிடையாது” என்று கோமுட்டி சாட்சியாக நயமாகச் சொல்லிவிடுவார்.

மேனகா தன் தகப்பன் வீட்டிற்குப் போய் ஒரு வருஷகாலமாயினும், வராகசாமி தனக்கொரு மனைவி இருந்தாள் என்பதை நினைத்தானோ இல்லையோ கடவுளுக்கே தெரியும். ஆனால் மந்திரிமார் மூவரும் அவனுக்கு பெண்ணை மணம் புரிவிக்க வேண்டுமென்று பன்முறை கூறிய காலத்தில் அவன் அதைப்பற்றி எவ்வித ஆக்ஷேபனையும் சொல்லவில்லை. இவ்வாறு அவன் அவர்களால் சூத்திரப் பாவையைப் போல ஆட்டப்பட்டு வந்தான்.

சாமாவையரும், விதவைமாரும் முன்னொரு அதிகாரத்தில் தமக்குள் பேசித் தீர்மானம் செய்துகொண்ட பிறகு அவர்கள் அவனுடைய மனதை மெல்ல மாற்றி, மேனகாவின் மீது அவன் விருப்பம் கொள்ளும்படி சொற்களைக் கூறி வந்தனர்.

அவன் கச்சேரிக்குப் போகாமல் வீட்டிலிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை பெருந்தேவி-யம்மாள் அவன் மனதிற்குப் பிடித்த சிற்றுண்டிகள் முதலியவற்றைச் செய்து அவனை உண்பித்தாள். அவன் தாம்பூலந்தரித்து ஊஞ்சற்பலகையில் உட்கார்ந்திருந்தான். அடுத்த வீட்டு சாமாவையரும் தமது இயற்கை யலங்காரத்தோடு வந்து ஊஞ்சற் பலகையை அழகுப்படுத்தினார். யாவரும் உல்லாசமாக ஊர் வம்புகளைப் பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது சாமாவையர் பெருந்தேவியம்மாளை எதிர்த்து வாதம் செய்பவரைப் போல் நடித்து , “பெருந்தேவி உனக்குக் கோபம் வந்தால் வரட்டும்; நீ இதனால் என்னோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை. நீ எங்கேதான் தேடிக் கலியாணம் செய்தாலும் மேனகாவைப் போன்ற நல்ல குணவதி உனக்குக் கிடைப்பது கடினம். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மற்ற வீடுகளில் நாட்டுப் பெண்கள் இருக்கும் ஒழுங்கைப் பார்த்தால் இவளை நாம் கோயிலில் வைத்தே பூஜை செய்யவேண்டும். அற்பங்களெல்லாம் தலைகால் தெரியாமல் துள்ளி விழுந்து போகின்றன. அவருடைய தகப்பனார் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறாரே என்கிற அகம்பாவம் சிறிதாயினும் உண்டா ? அவள் காரியம் செய்யும் திறமையும், அவளுடைய பணிவும், அடங்கிய சொல்லும், நாணமும் யாருக்கு வரும்?” என்றார்.

எதிர்பாரா அம்மொழிகளைக் கேட்ட வராகசாமியினது மனம் ஒருவாறு கலக்கம் அடைந்து, அதற்கு இன்னவிதம் பதில் சொல்வதென்பதை அறியாமல் அவன் பேசாமலிருந்தான். சாமாவையரின் சொல் அவனது மனதில் ஒருவித ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும் விஷயம் உண்மையாகவே தோன்றியது. அப்போது பெருந்தேவி, ”அது நிஜந்தான் என்னவோ அவளுடைய அப்பன் லோபித்தனம் செய்கிறான் என்கிற ஒரு வெறுப்பைத் தவிர வேறென்ன இருக்கிறது? அவள் பேரில் நமக்கென்ன வர்மம்? அவள் தங்கமான பெண், அவளுடைய பொறுமைக் குணம் ஒன்று போதுமே! பாவம் நாம் அயலார் பெண்ணின் மேல் வீண்பழி சுமத்தினால் பொய் சொன்ன வாய்க்கு போஜன மற்றுப்போம்” என்றாள்.

சாமா:- அவளுடைய தகப்பனார் நம்முடைய விஷயத்தில் என்ன லோபித்தனம் செய்தார்? அவருடைய குடும்பக் கவலைகள் ஆயிரமிருக்கும். தமது சொந்தக்காரியத்தில் அவர் செட்டுக்காரரா யிருக்கலாம். அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய காரியங்களை யெல்லாம் அவர் சொன்னபடி ஒரு குறைவுமின்றிச் செய்துவிட்டார் அல்லவா? நமக்கு வேறென்ன வேண்டும்?

கோம:- தங்கந்தா னென்ன பொல்லாதவளா? அவள் நம்மிடத்தில் எவ்வளவு அந்தரங்க வாஞ்சையோடும் கபடமில்லாமலும் பேசுவாள்? அவள் முகத்தில் கோபமும் வாயிற் கொடுமையான சொல்லும் தோன்றியதை நான் அறியேன்.

சாமா – பாட்டி கனகம்மாளுக்கு அப்புறந்தான் மற்றவர்கள். அவளுடைய பிரியத்துக்கு மற்றவர்களுடையது உறை போடக் காணாது; வராகசாமி! வராகசாமி! என்று இவனைக் கீழே விடமாட்டாளே! அப்பேர்ப்பட்ட அருமையான மனிதர்களிடம் நமக்கு மனஸ்தாபம் உண்டானது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னவோ நம்முடைய வேளைப் பிசகினால் இப்படி நடந்து விட்டதே யொழிய யார் பேரிலும் குற்றமில்லை – என்றார்.

அம்மூவரும் கூறிய சொற்களைக் கேட்ட வராகசாமியின் மனதில் தன் மனைவி முதலியோர் மீது உண்டாயிருந்த வெறுப்பு முற்றிலும் ஒரு நொடியில் அகன்றது. அவன் புரிந்த கொடுமைகளைக் குறித்து ஒரு வித கழிவிரக்கம் தோன்றி அவனை வருத்த ஆரம்பித்தன.

அவனுடைய முகக்குறியை உணர்ந்த பெருந்தேவி அதுவே சமயமென நினைத்து, ”ஆகா! மேனகாவின் கடிதத்தைப் பார்த்தது முதல் என் மனம் படும்பாட்டை எப்படி வெளியிடுவேன்! சொல்லின் அழகும், கருத்தின் உருக்கமும் என்னைப் பிடித்து உலுக்கி விட்டன. கடைசியில் அவள் உயிரை விட்டுவிடப் போகிறேன் என்றல்லவா எழுதியிருக்கிறாள்! அடே சாமா! அந்தக் கடிதத்தை எங்கே வைத்தீர்கள்? அதை இன்னொரு தரம் படிக்க வேண்டும் போல் ஆசையா யிருக்கிறது” என்றாள்.

சாமா:- அடி கோமாளி நீதானே அதை வராகசாமிக்குக் காட்டிவிட்டு பெட்டியில் வைத்துப் பூட்டினாய். அதை எடு – என்றான்.

அவள் உடனே கடிதத்தை எடுத்து வந்து அடியில் வருவாறு படித்தாள்.
“பிராண நாதர் திருவடித் தாமரைகளில் அடியாள் மேனகா தெண்டன் சமர்ப்பித்து எழுதிய விக்ஞாபனம் :

இவ்விடத்தில் மற்றவர் யாவரும் க்ஷேமம். அவ்விடத்தில் தேவரீருடைய திருமேனியின் க்ஷேம லாபத்தைப் பற்றியும், அக்காள் தங்கை முதலியோரின் க்ஷேமத்தைப் பற்றியும் ஸ்ரீமுகம் தயை செய்தனுப்பப் பிரார்த்திக்கிறேன். தேவரீரை விடுத்துப் பிரிந்திருக்கும் துர்பாக்கியத்தை நான் அடைந்த இந்த ஒரு வருஷ காலமாக என் மனம் பட்ட பாட்டைத் தெரிவிப்பதற்கு இந்தச் சிறிய கடிதம் எப்படி இடந்தரப் போகிறது! எத்தனையோ நாட்களுக்கு முன்னமேயே கடிதம் எழுதி அனுப்ப என் மனம் என்னைத் தூண்டியது. கையும் துடித்தது. தேவரீருக்கு என் மீதிருந்த வெறுப்பும், கோபமும் தணியா திருக்கும் போது, மகா பாவியாகிய என்னுடைய எழுத்து கண்ணில் பட்டால் கோபமும் வெறுப்பும் அதிகரிக்குமோ வென்றும், கடிதத்தைப் பிரித்துப் பாராமலே எரித்து விடுவீர்களோ வென்றும் அஞ்சி என் ஆசையை அடக்கிப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். கடைசியில், தேவரீருடைய மனசோடு ஒன்று பட்டுப் பேச அவாக் கொண்டு துடிக்கும் என் மனசை இனி ஒரு நொடியும் தடுக்க வல்லமை அற்றவளாய், இதையனுப்பத் துணிந்தேன். க்ஷமிக்க வேண்டும்.

நான் அங்கிருந்த போது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாழிகையும், இரவிலும், பகலிலும், துயிலிலும், விழிப்பிலும் தேவரீருடைய திருவுள்ளத்திற்கு சந்தோஷ கரமாகவும், இன்ப மூட்டும் விதமாகவும் நடந்து கொள்வதையே பாடமாகப் படித்து, அதையே என்னுடைய ஓயாக் கவலையாகக் கொண்டு, அவ்விஷயத்திலேயே என்னுடைய முழு மனதையும், தேகத்தையும், நான் அர்ப்பணம் செய்து வந்தும், என்னுடைய பொல்லாத வேளையின் பயனாக நான் உங்களுடைய வெறுப்பைப் பெற்றேன். நான் யாதொரு தவறையும் செய்யவில்லை யென்று சொல்லவில்லை. பேதமை என்பது மாதர்க்கணிகலன் அல்லவா? நான் எவ்வளவு தான் ஒழுங்காய் நடக்க முயன்றாலும், என்னையும் மீறி யாதாயினும் பிழை நேருதல் கூடும். என்னுடைய உயிருக்குயிராகிய தேவரீர் என் விஷயத்தில் க்ஷமையும், தயையும் காட்டாவிட்டால் எனக்கு வேறு யார் கதியிருக்கிறார்கள்? காரிகையாருக்குக் கணவன் சன்னிதானமே புகலிடம். அடிப்பதும் உங்கள் கை; அணைப்பதும் உங்கள் கை, பெற்றோர் எவ்வளவுதான் பாடுபட்டு தேக போஷணைக்குக் குறையின்றி என்னைப் பாதுகாக்கினும், அவர்களால் என் மன நோய்க்கு மருந்து செய்தல் கூடுமோ! அதற்குரிய வைத்தியர் தாங்களன்றோ ? என் ஆத்ம ரக்ஷகர் தேவரீரேயாகும். பட்டினியாக வருந்தித் தவிக்கும் என் மனசுக்கும் ஆன்மாவுக்கும் போஷணை செய்ய அவர்களால் எழுமோ? அதற்குரிய வள்ளல் தேவரீரே யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இவ்வொரு வருஷமாய் தேவரீர் என்னை அகல விலக்கிய போதிலும், என் மனசை விட்டு அரை நொடியும் தேவரீர் அகல நான் விடவில்லை. ஆனால், இதனால் என் உணர்வு, துயில் முதலியவை மாத்திரம் விலகி விட்டன. என்னுடைய உயிர் கொஞ்சங் கொஞ்சமாய் முக்காற் பாகம் போய்விட்டது. இன்னம் சொற்ப பாகம் விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கவோ, அல்லது நிற்க வைக்கவோ வல்லமை பெற்ற ஒரு தனிப்பிரபு இவ்வுலகில் தேவரீர் ஒருவரே, அக் காரியம் ஈசுவரனாலும் ஆகாது.

என்னைத் தேவரீர் எவ்வளவுதான் அடித்தாலும், வைதாலும் அது அப்போது என் தேகத்துக்குத் துன்பமாய்த் தோன்றினாலும் அடுத்த க்ஷணமே தேவரீரைப் பற்றிய நினைவு என்னை வருத்தி வந்தது. என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைக் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக வன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமை யற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது. நிமிஷத்திற்கு ஒரு சூட்டைப் பெற்றாலும், தேவரீருடைய சன்னிதானமே எனக்கு இன்பமாய்த் தோன்று மன்றி, வேறிடம் சுக முடைய தாமோ? பன்னிரண்டு மாதங்களாய் வானைக்காணாப் பயிரைப் போல வாடி வதங்கிக் கிடக்கும் இந்த அற்பப் பிராணியைக் கைதூக்கிவிடுவீர்களென்று ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்தேன். இன்னமும் என் பொல்லாத வேளை அகல வில்லை. தேவரீரை விடுத்துப் பிரிந்து இவ்வாறிருந்து இந்தச் சரீரம் இனி என்ன பயனை அடைப்போகிறது? இன்னம் சில நாட்களில் நான் இவ்வுடம்பைத் துறந்துவிடுவேன் என்பது நிச்சயம். அதற்குள் ஒரு தரமாவது தேவரீருடைய திருமேனியைக் கண்டு தரிசித்தாலன்றி என் கட்டை கடைத்தேறாது; என் மனமும் வேகாது.

கொண்டவரால் வெறுத்து விலக்கப்படும் பெண்டிருக்குக் குளங்களும், கிணறுகளுமே பேருபகாரிகளாயிருந்து கை கொடுத்து உதவுதல் வழக்கம். இவ்வூரில் சாமந்தான்குளம், ஐயன்குளம் என்று இரு குளங்களும் இதற்காகவே இருந்து உதவி புரிந்து வருகின்றன. எத்தனையோ தடவைகளில் அவைகளை நோக்கி நான் நடந்தேன். என் உயிரையும் மனசையும் கொள்ளை கொண்ட தேவரீருடைய முகாரவிந்தத்தை ஒரு தரமாவது காணாமல் போக என் மனம் சகிக்க வில்லை; என் செய்வேன்! இனி வேறு எவ்விதம் எழுதுவேன்? அபயம் அபயம் காத்தருளல் வேண்டும். அடியாள் மேனகா.”

என்று கோமளம் மிக்க உருக்கமாகவும், கேட்போர் மனது இளகுமாறும் படித்தாள். அக்கடிதத்தின் கருத்தை அப்போதே ஊன்றிக் கேட்டறிந்த வராகசாமியினது கண்களும், மனமும் கலங்கின. அது கனகம்மாளின் தூண்டலினால் எழுதப் பட்டதாகவும், முழுதும் பகட்டென்றும் நினைத்து அவன் அதை அதுவரையில் நன்றாய்ப் படிக்கவில்லை. அப்போதே அதில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு மொழியும், அந்தரங்க அவாவினால் மனப்பூர்வமாக எழுதப்பெற்றதாக அவனது செவிகளில் கணீர் கணீரென்று ஒலித்தது, அவனது சிரத்தின் ஒவ்வொர் உரோமத்தையும் பிடித்து உலுக்கியது. முன்பே கனிந்திருந்த அவனுடைய மனது எளிதிற் கலங்கி முற்றிலும் நைந்து அவனது முகத்தை விகாரப்படுத்தியது. கண்களினின்று கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. அங்கவஸ்திரத்தால் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். நல்ல பரிசுத்தமான மனதையும், அன்பையும், கல்வியறிவினையும் பெற்ற பெண்மணியான தனது பேதை மனையாட்டியைத் தான் குடிகாரனைப்போல் அடித்ததும், வைத்தும், சுட்டதும் நினைவுக்கு வந்தன. அவன் தன்னைத் தானே வெறுத்து வைது கொண்டான். அவனது அப்போதைய மன நிலையைக்கண்ட அவ்வஞ்சகர், அதுவே சரியான பாகுபத மென்று நினைத்தனர்.

பெருந்தேவி, ” என்னவோ போனது போகட்டும்; இப்போது அவர் இன்னொரு இரண்டாயிரம் ரூபாயும், நகைகளை மீட்க ரூ. 800ம் தருவதாயும், நாம் கடிதம் எழுதினால் அவளை அழைத்து வந்து விடுவதாயும், சாமாவுக்கு எழுதியிருக்கிறார். ஏனடா வராகசாமி! அழைத்துக் கொண்டு வரும்படி எழுதுவோமா? பாவம்! நல்ல வயசுக் காலத்தில் பெண் அங்கே இருந்து பாலியத்தை ஏன் வீணாக்க வேண்டும்? குளத்தில் கிணற்றில் விழுந்து செத்து வைத்தாளானால், பாவமும், பழியும் நமக்கு வந்து சேரும். என்னவோ கோபம் பாபம் சண்டாளம், அப்பா! நீ கோபத்தை மனசில் வைக்காதே!” என்றாள்.

சாமா:- வராகசாமிக்குத்தான் அவள் மேல் அவ்வளவு கோபமென்ன? இவன் மனசு தங்கமான களங்கமற்ற மனசு. பிறர் காலில் முள் தைக்க இவன் சகிக்க மாட்டானே! மேனகாவை நிரந்தரமாய் விட்டுவிட இவனுக்குத் தான் மனம் வருமா? என்னவோ இவனுடைய மாமனார்தான் புத்தியில்லாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போனார். எத்தனை நாளைக்குப் பெண்ணைத் தகப்பன் வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? – என்றார்.

உடனே வராகசாமி விம்மி விம்மி அழுதவனாய்த் தனது மன வெழுச்சியை அடக்கிக்கொண்டு, “உங்களுக்கு எது சம்மதமோ , அது எனக்கும் சம்மதந்தான், சாமாவே பதில் எழுதட்டும்” என்றான்.

சாமா:- இல்லையப்பா! அவர் உன்னுடைய கையால் பதிலை எதிர்பார்க்கிறார். ஏனென்றால், பின்பு ஒருகால் நீ சண்டை போடுவாயோ என்கிற அச்சம் போலிருக்கிறது. இது பெரிய காரியம். அன்னியனாகிய நான் எழுதினால் அவருக்கு வருத்தம் உண்டாகும். நீயே ஒரு வரி எழுதிவிடு.

பெரு :- வராகசாமி! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை ; கடைசியில் அவர் யார்? உன்னுடைய மாமனார்தானே? மாமனார் தகப்பனாருக்குச் சமானம். இதனால் உனக்கு ஒரு குறையும் வந்து விடாது. நீயே ஒரு வரி எழுதிவிடு.

வராக :- என்னவென்று எழுதுகிறது?

சாமா:- வேறே ஒன்றும் அதிகமாக எழுதவேண்டாம். “விஷயங்கள் ஏதோ கால வித்தியாசத்தால் இப்படி நேர்ந்துவிட்டன. இரு திறத்தாரும் ஒருவர்மேல் ஒருவர் வருத்தம் என்பதையே வைக்காமல் யாவற்றையும் மறந்து விடுவோம். தேவரீர் சாமாவையருக்கு எழுதியது என் மனசுக்கு சம்மதமாயிருக்கிறது. எப்போது தேவரீருக்கு சௌகரியமோ அப்போது செளபாக்கியவதி மேனகாவை அழைத்துவந்து விட்டுப் போகலாம். இனி நம்மிரு குடும்பத்தாரும் பாலுந்தேனும் போல இருப்போம் என்பது என்னுடைய மனப்பூர்வமான நம்பிக்கை” என்று எழுது, வேறொன்றும் வேண்டாம் – என்றார்.

வராகசாமி முதலில் சிறிது நாணித் தயங்கினான். தன் மாமனாரிடம் தான் தாறுமாறாய்ப் பேசிய சொற்கள் நினைவிற்கு வந்தன. எனினும், மேனகாவின் கபடமற்ற குளிர்ந்த வதனம் அவனுடைய மனக்கண்ணில் தோன்றி அவனிடம் மன்றாடியது. அவன் உடனே கடிதம் எழுத, அதை சாமாவையர் எடுத்துப் போய் தபாற் பெட்டியில் போட்டு வந்தார்.
மறுநாள் தஞ்சையிலிருந்து தந்தி யொன்று வந்து சேர்ந்தது. வராகசாமி பதைத்து அதைப் பிரித்துப் பார்த்தான். டிப்டி கலெக்டரும் மேனகாவும் அன்றிரவே புறப்பட்டு மறுநாள் சென்னைக்கு வருவதாக அதில் எழுதப்பட்டிருந்தது.

அதிகாரம் 5 – பாய்வதன் முன் பதுங்குதல்

மேனகா திரும்பவும் தன் மணாளனது இல்லத்தை அடைந்து அன்றிரவு தனிமையில் அவனோடு பேசிய பின்னரே – இருவரும் ஒரு வருஷ காலமாக மனதில் வைத்திருந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்ட பின்னரே – அவளுடைய மனப்பிணி அகன்றது. மங்கிக் கிடந்த உயிர் ஒளியைப் பெற்றது. எமனுலகின் அருகிற் சென்றிருந்த அவளுடைய ஆன்மா அப்போதே திரும்பியது. வாடிய உடலும் தளிர்த்தது. நெடிய காலமாய் மகிழ் வென்பதையே கண்டறியாத வதனம் புன்னகையால் மலர்ந்தது. விசனம் என்னும் முகில் சூழப் பெற்றிருந்த அழகிய முகத்தில் இன்பத் தாமரை பூத்தது.

”பெண்ணோ வொழியா பகலே புகுதா
தெண்ணோ தவிரா இரவோ விடியா
துண்ணோ ஒழியா உயிரோ வகலா
கண்ணோ துயிலா விதுவோ கடனே.”

என்னத் தோன்றி, நீங்காமல் வதைத்து வந்த அவளுடைய விசனக் குன்று தீயின் முன்னர் இளகும் வெண்ணெயெனத் தன் கணவனது களங்கமற்ற உண்மை அன்பினால் இளகி இருந்தவிடம் தெரியாமல் பறந்தது. ஒரு வருஷத்திற்கு முன் அவள் தஞ்சைக்குச் சென்ற தினத்திற்கு முந்தய நாளில் சுருட்டி வைத்த வெல்வெட்டு மெத்தையை அப்போதே பிரித்தாள். அவளுடைய தேகம் அன்றைக்கே பட்டுப்புடவையைக் கண்டது. சடையாகப் போயிருந்த அவளுடைய அழகிய கூந்தல், சென்னைக்குப் புறப்படு முன்னரே எண்ணெயையும், புஷ்பத்தையும் ஏற்றுக்கொண்டது. அவள் ஒரு வருஷமாக ஊண் உறக்கமின்றி கிடந்து மெலிந்து வாடி இருந்தாள் ஆதலால் அவளது தேகத்தில் இளமை, நன்னிலைமை, தேகப்புஷ்டி முதலியவற்றால் உண்டாகும் தளதளப்பும், கொழுமையும், உன்னத வாமமும் அவளிடம் காணப்படவில்லை ஆனாலும், தன் கணவனை அடையப் போகும் பெரும் பாக்கியத்தை யுன்னி அவள் அடைந்த மனக் கிளர்ச்சியும், பெரு மகிழ்வுமே அவளை தாங்கிக் கொணர்ந்தன.

நெடுங்காலமாய் பிரிந்திருந்த தன் மணாளர் அன்றிரவு தன்னிடம் தனிமையில் வந்து பேசுவாரோ, பேசினாலும் எவ்விதம் பேசுவாரோ என்று பெரிதும் கவலை கொண்டு அவள் உள்ளூற மனமாழ்கியிருந்தாள். அதற்கு முன் நடந்தவைகளை மறந்துவிடுவதாகக் கடிதத்தில் எழுதி இருந்தவாறு அவர் யாவற்றையும் மறந்து தன்னோடு உண்மை அன்போடு மொழிவாரோ அன்றி மறுபடியும் யாவும் பழைய கதையாய் முடியுமோ வென்று அவள் பலவாறு நினைத்து நினைத்து இரவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தாள். அத்தகைய சகித்தலாற்றா மனநிலைமையினால், அவளது மெல்லிய மேனி ஜுர நோய் கொண்டு வெப்பமடைந்தது; பூக்களோ மோப்பக்குழையும்; பூவையரின் வதனமோ தம்மணாளரது கொடிய நோக்கால் குழையு மன்றோ ? அவள் அதற்கு முன் தனது நாயகனிடம் ஒரு நாளும் இன்புற்றிருந்தவள் அன்று. ஆதலின், இனித் தன் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்குமோ வென்று அவள் கவலை கொண்டு ஏங்கினாள்.

கழிந்த ஒரு வருஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பகலே ஒரு யுகம் போல வளர்ந்து வருத்திக் கடைசியில் அகன்றது. இரவில் யாவரும் உணவருந்தித் தத்தம் சயனத்திற்குப் போயினர். மேனகா தனது படுக்கையறையிலிருந்த வண்ணம் தன் கணவன் அன்று தன்னுடன் தனிமையில் பேச வருவாரோ வென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். கடைசியாக அவர் தன் அறைக்குள் வந்து தன்னுடன் பேசாமல் சயனித்ததைக் காண, அவளது மனம் ஏங்கியது. அப்போதும் அவருடைய வெறுப்பும், கோபமும் தணியவில்லையோ வென அவள் ஐய முற்றாள். ஆயினும், அவர் சயன அறைக்கு வந்ததிலிருந்து அவருக்குத் தன் மீது சொற்பமாயினும் அன்பு பிறந்திருக்க வேண்டுமென்று நினைத்தாள்.

ஆனால், அவர் முதலில் தன்னோடு பேசுவாரென்று தான் எதிர் பார்ப்பது தகாதென
மதித்தாள்; பெண்பாலாகிய தானே முதலில் பணிவாக நடக்க வேண்டுமென்று
எண்ணினாள். ஆனால் எதைப்பற்றி அவரிடம் பேசுவ தென்பது அவளுக்குத் தோன்றவில்லை. சிறிது யோசனை செய்தாள். முதலில் அவருக்கு மகிழ்வுண்டாக்கும்படி தான் பேசவேண்டு மென்று நினைத்தாள். தான் முதலில் மன்னிப்புக் கேட்பது போலவும் இருத்தல் வேண்டும்; தானே முதலிற் பேசியதாயும் இருத்தல் வேண்டும் என்று நினைத்துச் சிறிது தயங்கி, கவிந்த தலையோடு நாணி நின்றாள்; பிறகு மெல்ல அவனுடைய காலடியிற் சென்று, தனது மென்மையான கரங்களால், தாமரை இதழால் தடவுதலைப் போல அவனுடைய காலை இன்பகரமாய் வருடினாள்; அன்று அவர் பேசாவிடினும், தான் அவரது காலைத் தீண்டியதற்காகக் கோபங்கொண்டு தன்னை உதைத்தாலும் அதையும் பெரும் பாக்கியமாகக் கொள்ளத் தயாராக இருந்தாள். அவன் அப்போதும் அவளிடம் பேசாமலும், எவ்வித தடையும் செய்யாமலும் அசைவற் றிருந்தான். அவ்விதம் இருவரும் இரண்டொரு நிமிஷ வெட்கத்தினாலும், பரஸ்பர அச்சத்தினாலும் மௌனம் சாதித்தனர். இனியும், தான் பேசாமல் இருந்தால் கூடாதென நினைத்த மேனகா, வருடியவாறே தனது கையால் அவனுடைய மார்பையும் கரங்களையும் தடவிப் பார்த்து, “ஆகா! என்ன இவ்வளவு இளைப்பு! முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங் கூட இல்லையே!” என்றாள்.

அவளது உள்ளத்தினடியிலிருந்து தோன்றிய அவ் வினிய மொழிகள் புல்லாங்குழலின் இன்னொலியைப் போல அவனது செவிகளிற் பட பஞ்சைப் போன்ற குளிர்ந்த அவளுடைய மெல்லிய கரம் உடம்பிற் படக் கணவன் ஆனந்த பரவசம் அடைந்து, அவளது பக்கம் திரும்பி, அவளை ஆசையோடு இழுத்துத் தனக்கருகில் உட்காரச் செய்தான். ஆனால் அவன் அப்போதும் வாயைத் திறக்கவில்லை. அவன் பேசாமையால் மேனகாவின் மனம் முன்னிலும் அதிகம் துடித்தது. “ஆகா! இன்னமும் கோபமா? இந்தப் பாவியோடு ஒருவார்த்தை சொல்லக்கூடாதா? இவ்வளவு நாழிகை பேசாமலிருந்து என்னைத் தண்டித்தது போதாதா?” என்றாள்.

சாமாவையரும், பெருந்தேவி அம்மாளும் போதித்து போதித்து அவனுடைய மனதை மாற்றி மேனகாவின் மீது நல்லெண்ணத்தையும் அன்பையும் உண்டாக்கியிருந்தனர் ஆதலாலும், கல்லையும் கரையச் செய்யும் தன்மை வாய்ந்த அவளுடைய அன்பு ததும்பிய கடிதத்தைக் கண்டு அவன் கழி விரக்கமும், மனது இளக்கமும் கொண்டிருந்தான் ஆதலாலும், அவன் அவளது விஷயத்தில் தான் பெரிதும் தவறு செய்ததாய் நினைத்து அதற்காக அவளிடம் அன்று மன்னிப்புப் பெறவேண்டு மென்று வந்தவன் ஆதலாலும், அவளுடைய செயலும், சொல்லும் அவனது மனத்தை முற்றிலும் நெகிழச் செய்தன. உள்ளம் பொங்கிப் பொருமி யெழுந்தது. அவன் இன்பமோ , துன்பமோ , அழுகையோ , மகிழ்வோ வென்பது தோன்றாவாறு வீங்கிய மனவெழுச்சியைக் கொண்டான். கனவிற் கள்வரைக் கண்டு அஞ்சி யோட முயல்வோர் கால்கள் தரையினின்று எழாமையால் வருந்துதலைப் போல அவன் சொல்ல விரும்பிய சொற்கள் தொண்டையினின்று வெளிவராமையால் அவன் வருந்திச் சிறிது நேரம் தவித்தான். “மேனகா! உன்னுடைய நல்ல குணத்தை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் மூடனாய் நான் உன்னை எவ்வளவோ வருத்தினேன்! நான் செய்த கொடுமைகளை நினைக்க என் மனமே பதறுகிறது! எவ்வளவு படித்தாலும் என்ன பயன்? மாற்றில்லா மணியான மனைவியை அன்பாக நடத்தும் திறமையற்ற பெருந் தடியனானேன். உன்னிடத்தில் அழகில்லையா? குணமில்லையா? நன்னடத்தை யில்லையா? நீ கற்பிற் குறைந்தவளா? காரியம் செய்யும் திறமையற்றவளா? நீ எதில் குறைந்தவள்? உன்னை நான் ஏன் இவ்விதம் கொடுமையாக நடத்த வேண்டும்? உன்னுடைய பெற்றோரையும் உன்னையும் இப்படி ஏன் துன்ப சாகரத்தில் ஆழ்த்த வேண்டும்? சகல சுகத்தையும் காமதேனுவைப் போலத் தரும் தெய்வ ரம்பையாகிய உன்னை நான் இவ்வொரு வருஷமாக நீக்கி வைத்தது என்னுடைய துர்பார்க்கியமே யொழிய வேறில்லை. பாவியாகிய எனக்கு நற்பொருள் தெரியவில்லை. தானே தேடிவரும் இன்பத்தை அனுபவிக்கப் பாக்கியம் பெறாத அதிர்ஷ்ட ஹீனனானேன். போனது போகட்டும்; உன் விஷயத்தில் நான் இது வரையில் லட்சம் தவறுகள் செய்து உன்னை வதைத்தும் வைதும் கடின மனத்தனாய்த் துன்புறுத்தினேன். அவைகளை யெல்லாம் நீ இன்றோடு மறந்துவிடு. இனிமேல், உன் மனம் வருந்தும்படி நான் எந்தக் காரியமும் செய்வதில்லை. இது சத்தியம்” என்றான். அப்போது அவனுடைய கண்களினின்று கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவளை அவன் அன்போடு இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான். அவளும் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தாள் ஆனாலும், அவளுடைய கை மாத்திரம் அவனை வருடிய வண்ணம் இருந்தது. அந்தக்கரத்தைப் பிடித்துப் பார்த்த வராகசாமி, “ஆகா! இரக்கமற்ற பாவியாகிய நான் சுட்ட வடுவல்லவா இது! அடி மேனகா! இவ்வளவு கொடுமை செய்த துஷ்டனாகிய என்னைக் கொஞ்சமும் வெறுக்காமல் நீ எவ்வளவு அதிகமாக விரும்புகிறாய்! சுகத்தைக் கருதிய பெண்கள் தமது கணவரிடம் வாஞ்சையை வைக்கின்றனர். ஓயாத் துன்பத்தை அனுபவித்தும், நீ என்னுடன் இருப்பதை விரும்புகிறாய்! ஆகா! காதலின் மகிமையை என்ன வென்று சொல்வது! சூட்டைப் பெற்ற உன் கை என்னை வருடி எனக்கு இன்பம் கொடுப்பதைக் காண்பதே எனக்குப் போதுமான தண்டனையாய் விட்டது. நடந்தவற்றை நினைக்க என் மனம் பதறுகிறது. இப்போது நான் அனுபவிக்கும் மன வேதனையைப் போல நான் என் ஆயுசு காலத்தில் அனுபவித்ததும் இல்லை ; இனி அநுபவிக்கப் போவதும் இல்லை” என்றான். அந்தரங்கமான அன்போடு மொழிந்த சொற்கள் பசுமரத்து ஆணிபோல மேனகாவின் மனதிற் புகுந்தன. அதுவரையில் அவள் அனுபவித்த எண்ணிறந்த துன்பங்களின் நினைவு முற்றிலும் அவளுடைய மனதை விட்டு அறவே ஒழிந்தது. நிகழ்ந்தவை யாவும் கனவாகத் தோன்றின. பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்; மனவெழுச்சிப் பெருக்கால் பொருமினாள். ஆந்தக் கண்ணீர் அருவிபோலப் பொங்கி வழிந்து ஆடைகளை நனைத்தது. அதுவரையிற் கண்டும் கேட்டும் அறியாவாறு அவன் அன்று தன்னிடம் அணைவாகவும் உருக்கமாகவும் அந்தரங்க அன்போடும் தன்னை கனப்படுத்தி மொழிந்ததைக் கண்ட மேனகா இன்ப சாகரத்தில் ஆழ்ந்து அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடாமல் நன்றாக இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஆகா! இவ்வளவு ஆழ்ந்த பிரியத்தை என்மேல் வைத்துள்ள உங்களை விட்டு நான் என் உயிரை யொழிக்க முயன்றேனே! அந்த விஷயத்தில் நான் பெருத்த அபராதியானேன். நீங்கள் என் பிழைகளை யெல்லாம் இன்றோடு மன்னித்து விடவேண்டும். இனி என்னுடைய நடத்தையால் உங்களுடைய முழுப் பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் விதத்தில் நான் நடக்கிறேன். இனி நீங்கள் அடித்தாலும், வைதாலும், சுட்டாலும் என் தகப்பனாருடைய வீட்டைக் கனவிலும் நினைக்கமாட்டேன். நான் இறந்தாலும் உங்கள் பாதத்தடியிலேயே இறக்கிறேன்” என்றாள்.

வரா:- எவ்வளவோ செல்வத்தில் இருக்கும் டிப்டி கலெக்டருடைய ஒரே பெண்ணான நீ அடக்க ஒடுக்கம், பணிவு, பொறுமை முதலிய அரிய குணங்களுக்கு இருப்பிடமா யிருக்கிறாயே! ஆகா! நான் எவ்வளவுதான் தேடி அலைந்தாலும் உன்னைப் போன்ற நற்குணமுள்ள பெண்மணியை நான் ஒரு நாளும் காணமாட்டேன் – என்றான்.

இவ்வாறு அவ்விரு யௌவனப் பருவத்தினரும், அவ்வொரு வருஷத்தில் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி பேசியவண்ணம் அதிகக் கிளர்ச்சி அடைந்து மாறி மாறி ஒருவரை யொருவர் புகழ்வதும், மகிழ்வதும், மொழிவதும், அழுவதுமாய்த் தெவிட்டாத இன்பம் அனுபவித்திருந்தனர். அது இரவென்பதும், தாம் துயில வேண்டுமென்பதும் அவர் களுடைய நினைவிற்கே தோன்றவில்லை. அவ்வாறு அன்றிரவு முழுவதும் கழிந்தது. அவர்களுடைய ஆசையும் ஆவலும் ஒரு சிறிதும் தணிவடையவில்லை. மற்றவர் எழுந்து இறங்கி யதையும், சூரியன் மிக்க உயரத்திற் கிளம்பிவிட்டதையும் உணர்ந்த பிறகு, ஒருவாறு அச்சங்கொண்டு அவர்கள் வெளியில் வந்தனர். அவ்விரவு கால் நாழிகை நேரத்தைப் போலக் கழிந்து போனதைக் காண அவர்கள் ஏக்கம் கொண்டனர்.

விசனத்தின் சுமையால் தனது உடம்பின் சுறுசுறுப்பை இழந்து மிகவும் தளர்வடைந்து தோன்றிய மேனகா அன்று புதுப்பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய தேகம் பளுவற்று இலேசாய்த் தோன்றியது. சந்தோஷத்தால் அவளுடைய உள்ளமும், தேகமும் பூரித்தன. வதனத்திற் புதிய ஒளி ஜ்வலித்தது. தான் அங்கு மிங்கும் சென்ற தருணங்களில் தனது மணாளன் தன்னை ஒளிமறைவாய்க் கடைக்கணித்துப் புன்முறுவல் செய்ததைக் காண, அவள் பெருமகிழ்வடைந்து நிகரற்ற பேரின்பம் அனுபவித்தாள். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்கள் அன்றில் பறவைகளைப் போல இணைபிரியாதிருந்து, கொஞ்சிக் குலாவி, எத்தகைய பூசலும் கவலையுமின்றி இன்பக் கடலிலாடி சுவர்க்க போகம் அனுபவித்தார்கள். இரவுகளை பேசியே கழித்தனர். பெருந்தேவி முதலியோர் அதனால் மிக்க மகிழ்வடைந்தோர் போலப் பாசாங்கு செய்து அவர்கள் இச்சைப்படி விடுத்து அவர்களுக்கு அநுகூலமாயிருந்து வந்தமையால், அவர்கள் அவ்வைந்து நாட்களிலும் நிகரற்ற இன்பம் அனுபவித்தனர். பெருந்தேவியின் தூண்டுதலினால் அவன் மாலை வேளைகளில் மேனகாவை வண்டியில் வைத்துக் கடற்கரைக்கும், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றான். அவர்களுடைய விளையாடல்களை யெல்லாம் கவனிக்காதவர் போலத் தோன்றி ஒவ்வொன்றையும் செவ்வனே கவனித்து வந்த விதவைகள் இருவரும் பொறாமையால் வயிறு வெடிக்க உள்ளூற வருந்தினர். ஆனாலும், தமது சதியாலோசனைக்கு அது அநுகூலமானதென்று நினைத்து அவர்கள் வாளாவிருந்தனர்.

இளையோர் இருவரும் சயன அறையில் தனிமையில் இருக்கையில் விதவைகள் தமக்குள் கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி ஏளனமாய்ப் பேசியும், தமது விரலை அறைப்பக்கம் நீட்டிப் பௌரஷம் கூறியுமிருந்து, அவர்கள் மொழிந்த சொற்களை யெல்லாம் உற்றுக் கேட்டு வந்தனர். ஒருவர் மீதொருவருக்குக் காதலும், அன்பும் நிமிஷத்திற்கு நிமிஷம் மலையாய்ப் பெருகியதைக் கண்ட விதவைகளும், சாமாவையரும் தம்முடைய வஞ்சக ஆலோசனையை அதி சீக்கிரத்தில் நிறைவேற்ற உறுதி கொண்டனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு அநுகூலமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஆறாம் நாள் ஒரு பெருத்த கொலைக்கேசின் பொருட்டு வராகசாமி சேலத்திற்குப் போக நேர்ந்தது. அவன் எந்த வக்கீலின் கீழ் வேலை செய்து வந்தானோ அவருடன் அவனும் அவசியம் போகவேண்டியதாயிற்று. அதை முன்னாலேயே அறிந்திருந்த அம்மூன்று சதிகாரரும், அன்றிரவே தமது காரியத்தை நிறைவேற்றி விடத் தீர்மானித்தனர். ஆறாம் நாள் வராகசாமி உணவருந்தி எட்டு மணி வண்டிக்குப் புறப்பட ஆயத்தமானான். வீட்டை விடுத்து வெளிப்படுமுன் அவன் மேனகாவுடன் தனிமையில் தனது சயன அறைக்குள் சென்று “மேனகா! இந்த ஐந்து நாட்களாய் ஒரு நிமிஷமும் பிரியா-திருந்தோம். இப்போது உன்னை விட்டுப் போக மனமே இல்லை. ஏதோ என் மனசில் ஒரு வித சஞ்சலம் தோன்றி வதைக்கிறது. காலெழவில்லை. மனசும் சகிக்க வில்லை. என்ன செய்வேன்!” என்று கண்கலங்க மனதிளக உருக்கமாக நைந்து கூறினான். மேனகா கண்ணீர் விடுத்து விம்மி விம்மி அழுது தனது முகத்தை அவனது மார்பில் புதைத்து, “அங்கே எத்தனை நாள் இருக்க வேண்டும்?” என்றாள்.

வரா:- வேலையெல்லாம் அநேகமாய் நாளைக்கு முடிந்து போம். நாளை நின்று மறுதினம் காலையில் அவசியம் வந்துவிடுவேன். நீ அதுவரையில் மனசைத் தேற்றிக்கொண்டு கவலைப்படாமலிரு – என்று கூறி அவளை இழுத்து இறுகத் தழுவி முத்தமிட்டுக் கண்ணீரைத் துடைத்து விட்டான். அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விடுபட மனமற்றவளாய் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு, “இன்றிரவு! நாளைப்பகல்! நாளையிரவு! அவ்வளவு காலம் நீங்கள் இல்லாமல் எப்படிக் கழியும்? நானும் கூட வந்தால் என்ன?” என்று கொஞ்சிய மொழியாற் கூறினாள். “ஒரு நாளைக்காக இங்கிருந்து அழைத்துப் போய் உன்னை அங்கே வைப்பதற்கு நல்ல வசதியான இடம் அகப்படாது. நீ பெரிதும் வருந்த வேண்டி வரும்” என்றான் வராகசாமி.

மேனகா, “ஆண்பிள்ளைக ளெல்லாம் மகா பொல்லா தவர்கள். அவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெண்பிள்ளை ஒருநாளைக்கு இருக்க வசதியான இடங்கொடுக்காத அந்த ஊர்ப்புருஷரை என்னவென்று சொல்வது! அந்த ஊரிலுள்ளவர் தங்கள் மனைவி மார்களையாவது வசதியான இடத்தில் வைத்திருக்கிறார்களா? அல்லது, அவர்களை யெல்லாம் அங்கே இடமில்லை யென்று அவரவர்களுடைய தாய் வீட்டிலேயே விட்டுருக்கிறார்களா?” என்று பரிகாசமாகக் கூறிப் புன்னகை செய்தாள்.

வரா:- நீ இங்கே ஒரு குறைவு மில்லாமல் சௌக்கியமா யிருப்பதை விட்டு வண்டியில் கண் விழித்து அங்கே வந்து ஏன் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்? ஒரு நாள் ஒரு நொடியில் கழிந்து போம். கவலைப் படாதே!

மேனகா:- நீங்கள் அவ்வித வருத்தங்களுக்கு ஆளாகும் போது நான் மாத்திரம் உயர்வா? வருத்த மெல்லாம் உங்களுக்கு, சுகமெல்லாம் எங்களுக்கோ? நாங்கள் மாத்திரம் வெயிலையே அறியாமல் நிழலிலேயே இருக்கப் பிறந்திருக்கிறோமா? நானும் வந்தால் துன்பம் ஆளுக்குப் பாதியாய்ப் போகுமே – என்றாள்.

வரா:- எங்களுக்கு அவ்வளவு துன்பம் தோன்றாது. நாங்கள் போஜன சாலையில் நூறு ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவோம்; நினைத்த இடத்தில் படுக்கையை விரித்து விடுவோம். ஸ்திரீகளுக்கு அது சரிப்படுமா! பாதக மில்லை. நீ இரு; வருத்தப்படாதே; வண்டிக்கு நாழிகை யாகிறது. நான் போய் விட்டு வருகிறேன் – என்று அவளை இன்னொருமுறை ஆலிங்கனம் செய்தான். அவள் அவனைத் திரும்பவும் இறுகப் பிடித்துக்கொண்டு, “நான் உங்களை விடமாட்டேன். குற்றவாளியே தன் கேசை எடுத்துச் சொல்லிக் கொள்ளட்டும். அவனுடைய நியாயம் அவனுக்குத் தெரியா விட்டால் அதற்காக நானா இங்கே துன்பப் படுகிறது?” என்று வேடிக்கையாக நகைத்துக் கொண்டே மொழிந்தாள்.

வரா :- (அந்த இன்பத்தை விலக்க மாட்டாதவனாய் மதி மயக்கமடைந்து நகைத்த முகத்தோடு நின்று) ஐயோ பாவம்! நான் போகாவிட்டால் துரை நம்முடைய கட்சிக்காரனைத் தண்டித்து விடுவான். பணத்தை வாங்கிக்கொண்டு வக்கீல் வரவில்லை யென்று கட்சிக்காரன் மண்ணை வாரி இறைப்பான் – என்றான்.

மேனகா:- மண்ணை வாரி இறைத்தால் அது இந்த ஊர் வரையில் வராது;
எறிந்தவனுடைய கண்ணில் தான் படும். அந்தத்துரைக்கு ஏன் புத்தியில்லை ? அவனை ஏன் நாம் முதலில் தண்டிக்கக் கூடாது?

வரா -(புன்னகையோடு) எதற்காக அவனைத் தண்டிக்கிறது?

மேனகா:- கொலைக் குற்றத்துக்காக.

வரா:- (திகைத்து) அவன் யாரைக் கொலை செய்தான்?

மேனகா:- உயிராகிய உங்களை உடலாகிய என்னிட மிருந்து பிரித்து விடுவது கொலைக் குற்றமல்லவா! அவர்கள் கிழவியைக் கலியாணம் செய்து கொள்கிறவர்கள். அந்த துரையும் ஒரு பாட்டியைக் கலியாணம் செய்து கொண்டிருப்பான். அதனால் நாம் அனுபவிக்கும் சுகம் அவனுக்கு எப்படி தெரியப் போகிறது. இளந்தம்பதிகளை நாமேன் பிரிக்கவேண்டும் என்ற இரக்கம் இல்லையே அவனுக்கு – என்று பேசி மென்மேலும் உல்லாஸமாகப் பேசிக் கொண்டே இருந்தாள்.

வராகசாமி ஆனந்த மயமாய்த் தோன்றித் தனது மனையாட்டியின் மதுரமான விளையாட்டுச் சொற்களைக் கேட்டு மனங் கொள்ளா மகிழ்வை அடைந்தான்; அவளை விடுத்துப் பிரிய மனமற்றவனாய்த் தத்தளித்துத் தயங்கினான்; ஊருக்குப் போகாமல் நின்றுவிட நினைத்தான்.

அப்போது சாமாவையர், “அடே வராகசாமி! குதிரை வண்டி வந்து விட்டது. நாழிகை யாகிறது” என்றார்.

பெருந்தேவியம்மாள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு, “ஏனடா சாமா! வண்டி வந்தால் என்னடா? நிற்கட்டுமே; என்ன அவசரம்? ஊருக்குப் புறப்படுவ தென்றால் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு, பணமோ காசோ எடுத்துக்கொண்டு தானே வரவேண்டும். வண்டிக்காரனுக்கு முன்னால் உனக்கு அவசரமாடா! எட்டு மணி ரயிலுக்கு இப்போதே என்ன அவசரம்? மணி ஏழேகால் தானே ஆகிறது” என்று வராகசாமியின் காதிற்படும் வண்ணம் கூறினாள்.

சாமா:- (புன்சிரிப்போடு) வண்டிக்காரனுக்காக அவசரப்படுத்த வில்லை. நாழிகை ஆய்விட்டது; ரயில் தவறிப் போனால் கேஸ் பாழாய்ப் போய் விடும். உனக்கென்ன கவலை யம்மா! வீட்டிற்குள் இருப்பவள். கேஸின் அவசரம் உனக்கெப்படி தெரியப் போகிறது! – என்று உரக்கக் கூவினார்.

உடனே மேனகா , “சரி சம்மன் வந்து விட்டது. போய் விட்டு வாருங்கள். ரயில்
தவறிப்போனால், சேலம் குற்றவாளியோடு நானும் இன்னொரு குற்றவாளி ஆகி விடுவேன். போய் விட்டு வாருங்கள்; வரும்போது எனக்கு என்ன வாங்கி வருவீர்கள்?” என்றாள். அவ்வாறு அவள் சலிப்பாக மொழிந்ததும் ஓர் அழகாய்த் தோன்றியது
வரா:- சேலத்தில் முதல் தரமான மல்கோவா மாம்பழம் இருக்கிறது. அதில் ஒரு கூடை வாங்கி வருகிறேன் – என்று கடைசியாக அவளை இழுத்து ஆலிங்கனம் செய்து
முத்தமிட்டான்.

அப்பெண்மணி கொடி போல அவனைத் தழுவிய வண்ணம், ” எந்த மல்கோவாவும் இந்தச் சுகத்துக்கு இணை யாகுமோ! இதைக் கொண்டு வந்தால் போதும்” என்றாள்.

வரா :- எதை?

மேனகா:- தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பாகிய பழத்தை வட்டியும் முதலுமாக ஒரு வண்டியளவு கொண்டு வாருங்கள். ஒரு கூடையளவு போதாது – என்று மெதுவாக அவனை விடுத்து நகர்ந்து அவன் போவதற்கு இடையூறின்றி விலகி நின்றாள்.

அடுத்த நிமிஷம் வராகசாமி வெளியில் வர, அவனும் சாமாவையரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டி புறப்பட்டு சென்டிரல் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது.


இரவு ஒன்பது மணியாயிற்று. ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் இறங்கிய சாமாவையர் பெருந்தேவியைக் கூவியழைத்துக் கொண்டே உட்புறம் நுழைந்தார்.

பெருந்தேவியம்மாள், “ஏனடா! வண்டி அகப்பட்டதா?” என்றாள்.

தனது கணவன் திரும்பி வந்து விடக்கூடாதா வென்று நினைத்து இன்பக் கனவு கண்டுகொண்டே இருந்த மேனகா சாமாவையருடைய குரலைக் கேட்டுக் கதவடியில் மறைந்து நின்று அவருடைய சொற்களைக் கவனித்தாள். கோமளம் ஒரு மூலையில் படுத்துப் பொய்த் துயிலி லிருந்தாள்.

சாமா:- நீங்களெல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா? – என்றார்.

பெரு:- ஆய்விட்டது; என்ன விசேஷம் ? என்றாள்.

சாமா:- சரி! அப்படியானால் புறப்படுங்கள். கேஸை வேறு தேதிக்கு மாற்றி விட்டதாகத் தந்தி வந்து விட்டது. வராகசாமி போகவில்லை. வி. பி. ஹாலில் இன்றைக்கு , “சகுந்தலா”நாடகம், வராகசாமி உங்கள் மூவரையும் அழைத்து வரச் சொன்னான் என்றார்.

அதிகாரம் 6 – வலையிற்பட்ட மடவன்னம்

அதைக் கேட்ட மேனகா உள்ளூறப் பெருமகிழ்ச்சி கொண்டாள். அதற்குமுன் அவளது கணவன் அவளை நாடகம் பார்க்க அழைத்துப் போயிருந்தமையால், அதைப் பற்றிச் சிறிதும் சந்தேகங் கொள்ளாமல் சாமாவையருடைய சொற்களை அவள் உண்மையாக மதித்தாள். பெருந்தேவி கோமளத்தை யெழுப்பி விஷயத்தைத் தெரிவிக்க, அதற்கு முன் தமக்குள் முடிவு செய்யப்பட்டிருந்த அந்தரங்க ஏற்பாட்டின்படி கோமளம், ” எனக்குத் தூக்கம் வருகிறது; என்ன சாகுந்தலா வேண்டியிருக்கிறது? எத்தனையோ தரம் “பிழைக்குந்தலா”வைப் பார்த்தாய் விட்டது. மூன்றே முக்கால் நாடகத்தை வைத்துக்கொண்டு முப்பது வருஷமாய் ஆடினதையே ஆடியாடிச் சொன்னதையே சொல்லிச் சொல்லி அழுது காதைத் துளைக்கிறார்கள். நான் வரவில்லை, நீங்கள் போய் விட்டு வாருங்கள். நான் அகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அதைக் கேட்ட பெருந்தேவி, “அடி! சரிதானடி வாடி; எழுந்திருந்து வண்டியில் உட்கார்ந்தால் தூக்கம் போய் விடுகிறது. நீ வராவிட்டால் நாங்களும் போக மாட்டோம். மேனகா! இவளுக்கு நீ சொல்லடி!” என்றாள்.

மேனகா:- நீங்கள்தான் சொல்லுகிறீர்களே; அதற்குமேல் அதிகமாக நான் என்ன சொல்லப்போகிறேன்? சின்னக்கா! வாருங்கள், வேடிக்கையாகப் போய்விட்டு வருவோம் – என்று நயமாகக் கூறினாள்.

கோமளம்:- இல்லை இல்லை. எனக்குத் தூக்கம் சகிக்கக்கூட வில்லை. கூத்தாடிகளிடத்தில் வீணாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, அங்கே வந்து சாமியாடி விழுந்து பக்கத்திலிருப்பவர்களிடம் வசவும் இடியும் ஏன் பெற வேண்டும். நீங்கள் போங்கள். நான் வரவில்லை – என்று மறுமொழிக் கிடமின்றி உறுதியாகச் சொல்லி விட்டாள். பெருந்தேவியம்மாள் ஐந்து நிமிஷத்திற்குள் அறைகளைப் பூட்டிக் கொண்டு மேனகாவுடன் புறப்பட்டாள். இருவரும் வண்டியின் உட்புறத்தில் உட்கார்ந்தனர். சாமாவையர்வெளியில் வண்டிக்காரனோடு அமர்ந்தார்.

பெரு :- அடே சாமா! வண்டி கடற்கரைப் பாதையின் வழியாகப் போகட்டும் – என்றாள்.

வண்டி அவ்வாறே கடற்கரைப் பக்கமாகத் திரும்பிச் சென்று அங்கிருந்த அழகான சாலையை அடைந்தது. மேனகா தனது ஆசை மணாளனைக் காணப்போகும் நினைவினால் மனவெழுச்சியும் மகிழ்வும் கொண்டிருந்தாள் ஆனாலும் ஒருவித சஞ்சலம் அவளது மனதின் ஒரு மூலையில் தோன்றி அவளை வருத்தியவண்ணம் இருந்தது. அங்கு தோன்றிய கடற்கரையின் அற்புத வனப்பைக் காண, அவளது மனதும், நாட்டமும் அதன்மேற் சென்றன. அந்தப் பாட்டையில் அப்போதைக்கப்போது இரண்டொரு மனிதரையும், யாதாயினுமொரு மோட்டார் வண்டியையுங் கண்டனர். நிலவு பகலைப் போல எங்கும் தவழ்ந்திருந்தது; மிக்க அழகுபடச் சமதூரங்களில் அமைக்கப்பெற்றிருந்த கம்பங்களில் காணப்பட்ட மின்சார விளக்குகளின் வரிசை நிலமகளின் கழுத்தில் அணியப்பெற்ற வைர மாலையைப் போலக் காணப்பட்டது.

நிலமகளின் நெற்றித் திலகத்தைப் போலத் தனது மென்மையான சந்திர பிம்பம் பன்னீர் தெளிப்பதைப் போல தனது மென்மையான கிரணங்களால் அமுதத்தை வாரி வீசிக்கொண்டிருந்தது. கடலினில் உண்டான குளிர்காற்று ஜிலு ஜிலென்று வீசி மனிதரைப் பரவசப்படுத்தி ஆனந்தத் தாலாட்டு பாடியது. பாதையின் சுத்தமும் தீபங்களின் வரிசையும், கடற்பரப்பின் கம்பீரமும், மந்தமாருதத்தின் சுகமும், விண்ணில் நாட்டியமாடிய தண்மாமதியத்தின் இனிமையும் ஒன்று கூடி விவரிப்பதற்கு இயலாத ஒருவிதப் பரமானந்தத்தை உண்டாக்கின. தானும் தன்னாயகனும் அப்போது அங்கு தனிமையிலிருந்தால் அது எவ்வளவு இன்பமா யிருக்கும் என்று மேனகா நினைத்தாள். தன் கணவனின்றித் தான் மாத்திரம் அத்தகைய அற்புதக் காட்சியை அனுபவித்தல் தகாதென நினைத்து அவள் அவ்வின்பத்தில் சென்ற தனது மனதைக் கண்டித்து வழிமறித்தாள்; அதிசீக்கிரம் தான் தனது கணவனைக் காணலாமென்று இன்பக் கனவு கண்டு கொண்டே சென்றாள். பெருந்தேவி அவளிடத்தில் ஓயாமல் மகிழ்வான வார்த்தைகளைச் சொல்லியவாறு இருக்க, வண்டி கோட்டையைக் கடந்து ஹைக்கோர்ட்டுப் பக்கம் திரும்பி அங்கப்ப நாயக்கர் தெருவிற்குள் நுழைந்தது.

மேனகா அது எவ்விடமென்று பெருந்தேவி யிடத்தில் கேட்க, அவள் அதை நன்றாக அறிந்திருந்தாளானாலும் உண்மையை மறைத்து அது வி. பி. ஹாலுக்கு சமீபமென்றும்
தெரிவித்தாள்.

முன்னொரு நாள் தானும் தனது கணவனும் சென்றபோது இரு பக்கங்களிலும் இருந்த கட்டிடங்களொன்றும் அப்போது காணப்படவில்லை; தவிர அதில் அரைப்பங்கு நாழிகையில் தாம் இருவரும் வி. பி. ஹாலை அடைந்து விட்டதாகவும் தோன்றியது. எனினும், அவர்கள் வேறு வழியாகப் போகிறார்கள் என்று மேனகா நினைத்தாள். மேனகா அதற்கு முன்னர் தன்னைக் கணவன் கொடுமையாக நடத்திய நாட்களையும், அந்த முறை தான் வந்த பிறகு தன்னை நடத்திய விதத்தையும் நினைத்து, தனக்கு ஏதோ நல்ல காலமே திரும்பி யிருப்பதாக எண்ணி உள்ளூறப் பூரிப்படைந்தாள். தான் எத்தனையோ தடவைகளில் கிணற்றில் விழுந்து விட முயன்றதையும், பொறுத்தார் பூமியாள்வார் என்றபடி தான் தன் மனதின் உறுதியால் யாவற்றையும் சகித்திருந்தமையால் அப்போது நிகரற்ற சுகம் அனுபவித்ததாயும் நினைத்துத் தற்பெருமை பாராட்டிக் கொண்டாள்; தன் மணாளர் இனி எப்போதும் தன்னை அன்பாகவே நடத்துவாரென்றும், தன்னைப்போன்ற பாக்கியவதிகள் எவரும் இருக்க மாட்டார்களென்றும் நினைத்தாள். அடுத்த நொடியில் பாம்பு கடித்து மரிக்கப்போகும் ஒரு மனிதன் நிலம் வாங்கவும், மெத்தை வீடு கட்டவும், இன்னொரு மனைவியை மணக்கவும் நினைப்பவைபோல மேனகா தனது காலடியிற் கிடந்த வஞ்சகப் பாம்பைப் பற்றிச் சிறிதும் சந்தேகிக்காமல் மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி கொண்டிருந்தாள். அந்தத் தெருவில் நெடுந்தூரம் வந்து விட்டதைப் பற்றி திரும்பவும் ஐயமுற்ற மேனகா , ” என்ன இது? நாம் இப்போது எங்கிருக்கிறோம்? வி.பி. ஹால் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்றாள்.

பெரு:- இதோ வந்துவிட்டது. நாம் குறுக்கு வழியாக வந்திருந்தால் இவ்வளவு நாழிகையில் போயிருக்கலாம், கடற்கரை வழியாக மெல்ல வந்தமையால் தூரம் போல இருக்கிறது – என்றாள்.

இரண்டொரு நிமிஷத்தில் வண்டி ஒரு பெருத்த மாளிகையின் வாசலில் வந்து நின்றது. தெருவில் ஆங்காங்கு மின்சார விளக்குகள் நட்சத்திர மணிகள் போலச் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த மாளிகையின் வாசலில் இரண்டு விளக்குகள் இருந்தன. வண்டி நின்றவுடன் மேனகா, “இது வி. பி. ஹாலை போல இல்லையே!” என்றாள்.

பெருந்தேவி, “சாமா! வண்டியை முன்பக்கத்துக்குக் கொண்டு போகாமல் பின் பக்கத்தில் ஏன் நிறுத்தினாய்?” என்றாள்.

சாமா:- வராகசாமி இவ்விடத்தில் நமக்காக காத்திருப்பதாயும், பின்பக்கமாக உள்ளே போனால் முன்னே நல்ல இடத்தில் உட்காரலாமென்றும் சொன்னான். அவன் இங்கே எதிரில் இருப்பான், இறங்குங்கள் – என்றார்.

உடனே பெண்டீரிருவரும் வண்டியை விடுத்திறங்கினர். சாமாவையரும் இறங்கினார். மாளிகையின் வாசலிலிருந்த ஒரு மகம்மதியனைப் பார்த்த சாமாவையர், “பியூன்! ஐயா எங்கே?” என்றார். அவன், ”உள்ளே இருக்கிறார்; போங்கள்’ என்று மரியாதையாக மறுமொழி கூறினான்.

சாமா:- சீக்கிரம் வாருங்கள்; நாழிகையானால் கதவைச் சாத்தி விடுவார்கள் – என்றவண்ணம் உட்புறம் நுழைந்தார். பெண்டீரிருவரும் அவரைத் தொடர்ந்து உட்புறம் நுழைந்தனர். அவர்கள் உட்புறமிருந்த சில அகன்ற அறைகளைக் கடந்து செல்ல, எதிரில் மேன் மாடப் படிகள் தோன்றின. அவர்கள் அவற்றின் வழியாக ஏறிச்சென்றனர். எங்கும் மனிதரே காணப்படவில்லை. அவர்கள் மேன்மாடத்தை அடைந்தபின் அங்கிருந்த பல நெருக்கமான அறைகளைக் கடந்து மென்மேலும் நடந்தனர். ஒவ்வோர் அறையிலும், மின்சார விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பளபளப்பான புதிய நாற்காலிகளும், அழகிய சோபாக்களும், நிலைக் கண்ணாடிகளும், பூத்தொட்டிகளும், எங்கும் நிறைந்து காணப்பட்டன. அழகான உயர்ந்த இரத்தின கம்பளங்கள் தரை
முழுவதும் விவரிக்கப்பட்டிருந்தன.

சாமாவையர், “பெருந்தேவி! இதுதான் வேஷம் போட்டுக்கொள்ளு மிடம். இது எவ்வளவு அழகா யிருக்கிறது பார்த்தாயா? எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டு முன்னால் போய்விட்டார்கள்” என்றார்.

பெரு :- கூத்தாடிகள் அடுத்த அறையிலிருப்பார்கள். இப்படியே வர எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக் கிறதப்பா; நானும் மேனகாவும் வாசல் பக்கமாக வருகிறோம் – என்று கூறிய வண்ணம் அப்படியே நின்றாள்.

சாமா:- சரி; அப்படியானால் நீங்கள் இவ்விடத்திலேயே இருங்கள், நான் வராகசாமியிடம் போய் டிக்கட்டுகளை வாங்கி வருகிறேன். நாம் முன்பக்கமாகவே உள்ளே போகலாம் – என்றார்.

பெரு:- அப்படியானால் சரி, சீக்கிரமாக வா – என்றாள்.

சாமாவையர் அவர்களை அவ்விடத்தில் விடுத்து எதிரி லிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்து போனார்.

கால் நாழிகை கழித்து, உட்புறத்தில் ஹார்மோனிய வாத்தியத்தின் இன்னோசை யெழுந்தது. அவர்கள் வஞ்சகமாக நடிக்கிறார்களென்று கனவிலும் சந்தேகியாதிருந்த மேனகா, தனது கணவனை விரைவில் காணப் போவதாக நினைத்துத் துடித்து நின்றாள்.

பெரு:- மேனகா! இந்த இடம் எவ்வளவு சொகுசா யிருக்கிறது பார்த்தாயா! ஆகா! இந்த இடம் நமக்குக் கிடைத்துவிட்டால் எவ்வளவு சுகமா யிருக்கும் – என்றாள்.

மேனகா:- நம்முடைய அகத்தில் இருப்பதைவிட இங்கே அதிகமான சுகம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். பெரிய கண்ணாடிகளால் என்ன உபயோகம்? நம்மை நாமே நன்றாகப் பார்த்துக் கொள்ள ஈசுவரன் கொடுத்த கண்ணிருக்க அதற்கு நிலைக்கண்ணாடியின் உதவி எதற்கு? நம்முடைய சாதாரண விளக்கிலிருந்து உண்டாகும் வெளிச்சத்தில் நம்முடைய காரியம் ஆக வில்லையா? எந்தப் பொருள் நம்முடைய கண்ணிற் படாமல் மறைந்திருக்கிறது? முன் தோன்றாத வஸ்து ஏதாயினும் மின்சார விளக்கினால் நமது கண்ணுக்குப் புலப்படுகிறதா? ஒன்றுமில்லை. இதனால் கண்ணைத்தான் கெடுத்துக் கொள்கிறோம். எனக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லை. ஒரு குடும்பத்தினர் ஒருவரிட மொருவர் அந்தரங்க அன்போடு நடந்துவந்தால், ஒரு குடிசை வாசமானாலும் அது பெருத்த சுகந்தான். இல்லையானால், அரண்மனையில் பஞ்சணையில் நடந்தாலும் சுகமில்லை – என்றாள்.

பெரு:- என்னடீ இந்த சாமத்தடியன் போனவனைக் காணோமே! அவனுக்கு யாராவது கொஞ்சம் புகையிலை கொடுத்துவிட்டால் அவன் உலகத்தையே மறந்துவிடுவான்.
பெண்பிள்ளைகளை இங்கே அந்தரத்தில் நிறுத்தி வைத்து விட்டு எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டானே கட்டையிலே போவான்! என்று ஆத்திரமாக மொழிந்தாள்.

”உங்கள் தம்பியைக் காணாமல் கூட்டத்தில் ஒருவேளை தேடி அலைகிறாரோ என்னவோ!” என்றாள் வஞ்சகத்தை அறியாத வஞ்சி.

”ஆம் ஆம். அப்படித்தானிருக்கும். அடுத்த அறையில் அவனிருக்கிறானா வென்று நான் எட்டிப்பார்க்கிறேன்” என்று சொல்லிய வண்ணம் பெருந் தேவியம்மாள் எதிரிலிருந்த அறையின் நிலைப்படியண்டையில் போய் அதன் கதவைச் சிறிது திறந்து அப்புறம் எட்டிப்பார்த்த வண்ணம், “ஏனடா சாமா! நாங்கள் எவ்வளவு நாழிகையடா இங்கே நிற்கிறது? எங்கே டிக்கட்டு? இப்படிக் கொடு!” என்று கேட்டுக்கொண்டே கதவிற்கு அப்புறம் நடந்தாள். அவள் டிக்கட்டை வாங்கிக்கொண்டு திரும்பி வருவாளென்று நினைத்து மேனகா அப்படியே சிறிது நேரம் நின்றாள். ஆனால், அப்புறஞ் சென்ற பெருந்தேவியம்மாளின் குரலாகிலும், சாமாவையரின் குரலாகிலும் பிறகு உண்டாக வில்லை. அவ்விதமே மேனகா ஒன்றையும் அறியாதவளாய்க்கால் நாழிகை நின்றாள்.

எவரும் இல்லாத இடத்தில் தான் தனிமையில் நின்றதைப் பற்றியும், போனவர்கள் திரும்பி வராததைப் பற்றியும், அவள் ஒரு விதக் கவலையும் அச்சமும் கொண்டு தத்தளித்து நின்றாள். அரை நாழிகை யாயிற்று. அவளுடைய மனோவேதனை முன்னிலும் அதிகரித்தது. இன்னதென்று விவரித்தற்கு இயலாத ஒரு வித துன்பமும் சந்தேகமும் வதைக்க ஆரம்பித்தன. தான் முன்னால் சென்று எதிரில் தோன்றிய அறைக்குள் எட்டிப் பார்க்கலாமா என்னும் ஒருவித எண்ணம் மனதில் உதித்தது. ஆனால் காலெழவில்லை. அவள் மெல்ல நடந்து எதிரிலிருந்த வாசலையடைந்து மிக்க அச்சத்தோடு உட்புறம் எட்டிப் பார்த்தாள். அந்த அறையும் விசாலமாய்க் காணப்பட்டது.

அதற்குள்ளும் மனிதர் காணப்படவில்லை. தான் செய்யத் தக்க தென்ன என்பதை அறியாமல் அவள் மனக்குழப்பம் அடைந்தாள். முதலில் நின்ற அறையிலேயே நிற்பதா, அன்றி எதிரில் தோன்றிய அறைக்குள் நுழைந்து பார்ப்பதா வென்னும் நினைவுண்டா-யிற்று. எவ்வித முடிவுக்கும் வரமாட்டாமல் அவள் தடுமாறித் திகைத்து அவ்விதமே ஐந்து நிமிஷ நேரம் நின்றாள். மனம் மேலே செல்லத் தூண்டியது. நாணம் காலைப் பின்புறம் இழுத்தது. அவ்வாறு கலக்கங்கொண்ட நிலையில் எதிரிலிருந்த அறைக்குள் மெல்ல நுழைந்தாள்; அதற்கப்பால் எங்கு செல்வதென்பதை அறியாமல் மயங்கி நின்றாள். எப்பக்கத்திலும் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அப்புறம் செல்ல வழி தோன்றவில்லை. அவ்வாறு தத்தளித்து நின்ற தருணத்தில், அவள் எந்தக் கதவைத் தாண்டி அந்த அறைக்குள் வந்தாளோ அந்தக் கதவை யாரோ சாத்தி வெளியில் தாளிட்டதை உணர்ந்தாள். அவள் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போலப் பெரிதும் கோபமும், அச்சமும் அடைந்தவளாய்க் கையைப் பிசைந்து கொண்டு, “இதென்ன பெருத்த துன்பமாய்ப் போய்விட்டதே! போனவர்கள் திரும்பி வரவில்லையே! அங்கே என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே! ஒருவேளை பிராணபதிக்கு ஏதாவது துன்பம் சம்பவித்திருக்குமோ? அன்றி, அவரைக் காணாமல் இவர்கள் தேடுகிறார்களோ? யாராவது வந்து நான் இவ்விடத்தில் தனியாக நிற்பதைப்பற்றி கேட்டால் நான் என்ன மறுமொழி சொல்லுவேன்? ஐயோ! தெய்வமே! இன்று என்ன ஆபத்தோ தெரியவில்லையே! ஈசுவரா! நீயே துணை” என்று பலவாறு எண்ணமிட்டு ஆற்று மணலில் வெயிற் காலத்தில் கிடந்து துடிக்கும் புழுவைப் போலத் துடித்துக் கையைப்பிசைந்து கொண்டு நின்றாள்.

அவ்வாறு ஒரு நாழிகை கழிந்தது. அவளது மனம் பட்ட பாட்டை எப்படி விவரிப்பது! மேலும் செல்லலாம் என்னும் கருத்தோடு அவள் கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். எல்லாம் அப்புறம் தாளிடப் பெற்றோ பூட்டப் பட்டோ இருந்தன. சாமாவையரும், பெருந்தேவியம்மாளும் எங்கு சென்றார்களோ? வழியில்லாதிருக்க அவர்கள் எப்படி போனார்களோ? அவர்களது கதி என்னவானதோ? என்று நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். அப்போதும் அவளுக்கு அவர்களின் மீது எவ்வித ஐயமும் தோன்றவில்லை. குழம்பிய மனதும் பதைபதைத்த உடம்புமாக மேனகா நின்றாள்.

அந்த அறை ஒரு சயன அறைபோல் மிக்க அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கந்தவருப் பதுமைகள் புஷ்பங் களைச் சொரிதலைப்போன்ற உருவங்களின் கையிற் பொருத்தப்பட்ட மின்சார விளக்குகள் நவரத்தினக் கற்களைப் போலவும் நக்ஷத்திரச் சுடர்கள் போலவும் பல வருணங்களிற் காணப்பட்டன. ஒரு முழ உயரம் காணப்பட்ட வெல்வெட்டு மெத்தை, திண்டுகள், தலையணைகள் முதலியவற்றைக் கொண்ட ஒரு தந்தக் கட்டில் இருந்தது. அதன் மீது அழகிய வெள்ளை நிறக் கொசுவலையும், மெத்தையின் மீது மெல்லிய வழுவழுப்பான பட்டுப் போர்வையும் காணப்பட்டன. மின்சார விசிறிகளின் சுழற்சியால் குளிர்ந்த இனிய காற்று உடம்பில் தாக்கிய வண்ணமிருந்தது; எங்கும் நிருவாணமான மங்கையின் படங்களும் விகாரமான படங்களும் காணப் பட்டன. யாவற்றையும் நோக்கிய மேனகா அது ஒருகால் நாடகத்தின் காட்சியாய் (சீனாக) இருக்குமோ வென்று நினைத்து மயங்கினாள். அந்த அறையில் இருந்த பொருட்களைக் காண அவளுடைய தேகம் குன்றியது. அங்கிருந்த ஒரு கடிகாரத்தின் கைகள் பத்து மணி நேரத்தைச் சுட்டின.

அந்த மகா பயங்கரமான நிலைமையில் ஒரு கதவு திடீரென்று திறக்கப்பட்டது. மேனகா திடுக்கிட்டு யார் வரப்போகிறார்களோ வென்று அந்தப் பக்கத்தைப் பார்த்தாள். அடுத்த நொடியில் மேனகாவைப் பார்த்துப் புன்னகை செய்த வதனத்தோடு ஒரு யௌவனப் பருவ மகம்மதியன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட மேனகாவினது மனம் பதைத்தது. தேகம் துடித்துப் பறந்தது. அவள் நெருப்பின் மீது நிற்பவளைப் போலானாள். அவளுடைய சிரம் சுழல ஆரம்பித்தது, அறிவு தள்ளாடியது. உயிர் துடித்தது. அது கனவோ நினைவோ வென்று நினைத்து முற்றிலும் திகைத்துக் கல்லாய்ச் சமைந்து நின்றாள்.

– தொடரும்…

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது

– மேனகா (நாவல்) – முதல் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *