கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 444 
 
 

அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12

அதிகாரம் 7 – காட்சி தந்து மறைந்ததேன் காதலியே!

மூன்றாவது நாட் காலையில் சேலத்திலிருந்து திரும்பி வந்த வராகசாமி அதிவிரைவாக வீட்டிற்குள் நுழைந்தான். மல்கோவா மாம்பழம் நிறைந்த ஒரு மூங்கிற் கூடையைத் தாங்கிப் பின்னால் வந்த வண்டிக்காரன் அதை வைத்து விட்டுத் தனது கூலியைப் பெற்று வெளியிற் சென்றான். அதற்கு முன் இரண்டு நாட்களாய் மேனகா மேனகா வென்று தியானம் செய்திருந்த வராகசாமி அந்த மடவன்னத்தைக் காணவும், அவளோடு தனிமையில் பேசவும் பேராவல் கொண்டிருந்தான். ஆதலால், அவளைத் தேடி ஒவ்வொரு அறையாக நுழைந்தான். துடிதுடித்துத் தோன்றிய அவனது கண்கள் அவ்வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுழைந்து அந்தப் பொற்பாவையைத் தேடி யலைந்தன. தன் சட்டை முதலிய உடைகளைக் கழற்றி அவற்றை வைக்கச் செல்பவன் போல அவன் தன் படுக்கையறைக்குள் சென்று அவ்விடத்தில் தேடினான். அவள் எங்கும் காணப்பட-வில்லை ; கோமளமும், பெருந்தேவியும், மகிழ்வற்ற வதனத்தோடும், அவனிடம் வெறுப்பைக் காட்டியும், அவன் வந்ததைப் பொருட் படுத்தாமலும் ஏதோ அலுவல் இருப்பவரைப்போலப் பித்தளைப் பாத்திரங்களையும் அம்மிக் குழவியையும் உருட்டி ஓசை செய்தவண்ணம் இருந்தனர். ஒருக்கால் தனது பிரிய நாயகி மாதவிடாய் கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்றிருப்பாளோவென ஐயமுற்று அவன் உடனே வெளியிற் சென்று திண்ணையிலிருந்த சிறிய அறையை நோக்கினான். அதன் கதவு வெளிப்புறம் தாளிடப் பெற்றிருந்தது. என்ன செய்வான்? தேகம் பதறியது. ஆவலோ அதிகரித்தது. சகோதரிமாரிடம் தன் மனைவி யெங்கே யென்று கேட்பதற்கும், ஒருவித வெட்கம் வருத்தியது. அத்தகைய நிலையில் உள்ளே வந்து ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து, “கோமாளீ ” என்று மெதுவாகச் சிறிய பேயை அழைத்தான். அவள் வரவு மில்லை; ஏனென்று கேட்கவுமில்லை. அவனுடைய வியப்பும், வேதனையும், ஆவலும் அபாரமாய்ப் பெருகின.

அப்போது சாமாவையர் கவலை கொண்டு வாடிய வதனத்துடன் வந்து சேர்ந்தார். எப்போதும் புன்னகை கொண்ட சந்தோஷமான முகத்தோடு தோன்றும் அவ்வுல்லாச புருஷர் அன்று வழக்கத்திற்கு விரோதமாக அவ்வாறு தோன்றியதைக் கண்டு, தான் இல்லாத சமயத்தில் வீட்டில் ஏதோ விபரீதம் சம்பவித்திருப்பதாக வராகசாமி ஒருவாறு சந்தேகித்தான்.

உள்ளே வந்த சாமாவையர் நிரம்பவும் ஆவலோடு, ”அடே! வராகசாமி! சங்கதிகளை யெல்லாம் பெருந்தேவி சொன்னாளா?” என்றார்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட வராகசாமி, “இல்லையே! என்ன நடந்தது?” என்றான்.

சாமா:- பெருந்தேவியை அழைத்துக் கேள். அடீ பெருந்தேவி! இங்கே வா – என்றார்.
சமையலறைக் கதவின் மறைவில் ஆயுத்தமாக நின்றிருந்த மூத்த அம்மாள், ” எல்லாம் நீயே சொல். எனக்கு இங்கே கையில் காரியமிருக்கிறது” என்றாள்.

வராக :- சாமா! நீதான் சொல்லடா; என்ன விளையாடுகிறீர்கள்? என்ன நடந்தது? – என்று பெருத்த ஆவலோடு கேட்டான்.

சாமாவையர் உடனே கனைத்துத் தமது தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டார்; முகத்தில் அதிகரித்த விசனக் குறியை உண்டாக்கிக் கொண்டவராய், “அப்பா வராகசாமி நான் என்ன சொல்வேன்! முந்தா நாள் நாம் புறப்பட்டு ரயிலுக்குக் போன பிறகு உன்னுடைய மாமனார் ஒரு பெட்டி வண்டியில் வந்தாராம். வண்டி வாசலில் நின்றதாம். அவர் வண்டியை விட் டிறங்காமல் ஒரு சேவகனை உள்ளே அனுப்பினாராம். அவன் உள்ளே வந்து டிப்டி கலெக்டர் வாசலில் பெட்டி வண்டியில் இருந்ததாகவும், மேனகாவைக் கூப்பிட்டதாகவும் சொன்னா னாம். உடனே மேனகா வெளியில் போய் வண்டியின் பக்கத்தில் நின்று அவரோடு அரைநாழிகை வரையில் பேசிக் கொண்டிருந்தார்களாம். பிறகு டிப்டி கலெக்டர் வண்டியின் கதவைத் திறக்க, அவளும் ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாளாம். உடனே வண்டி போய்விட்டதாம். அவர் அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டுபோய் விட்டுத் திரும்பவும் கொணர்ந்து விடுவாரென்று இவர்கள் நினைத்தார்களாம். அவன் திரும்பி வரவே இல்லை. நேற்று முழுவதும் பார்த்தோம்; இன்னமும் வரவில்லை. ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார் போலிருக்கிறது. உனக்குத் தந்தி மூலம் தெரிவிக்க நினைத்தோம். நீ எவ்விடத்தில் தங்குகிறாய் என்பது தெரியாது ஆகையால், எந்த விலாசத்துக்கு அனுப்புவ தென்னும் சந்தேகத்தினால் அப்படிச் செய்யக் கூடவில்லை. முந்தா நாளிரவு, நேற்று முழுவதும், டிப்டி கலெக்டருக்கு வேண்டிய இடமெல்லாம் தேடிப் பார்த்தோம். அவர்கள் எங்கும் காணப்படவில்லை ! அவர் அவளை ஊருக்குத்தான் அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால், அவர் உள்ளே வராமலும் எவரிடத்திலும் சொல்லாமலும் பெண்ணை அழைத்துப்போனதும், மேனகா அப்படியே வண்டியில் ஏறிப் போனதுமே வருத்தமாக இருக்கிறது” என்றார்.

அதைக் கேட்ட வராகசாமிக்கு அடக்கவொண்ணா கோபமும், ஆத்திரமும் உண்டாயின. அவனுடைய தேகம் பதறியது. ” என்ன ஆச்சரியம்! ஏழெட்டு நாட்களுக்கு முன் வந்தவன், இங்கே அன்னியோன்னியமா யிருந்து விட்டுப் போயிருக்கிறான். இதற்குள் அவனுக்கு என்ன கிறுக்கு வந்துவிட்டது! ஏனடி அக்கா! அவள் உங்களில் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளா மலா போய்விட்டாள்?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட பெருந்தேவி மனத்தாங்கலாக, “அவளேன் சொல்லுவாள்? நாங்கள் அவளுக்கு இலட்சியமா? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி ஊரில் ஒரு வருஷமாக நாறிக் கிடந்த தரித்திரத்தைத் திரும்ப அழைத்து வந்து நல்ல பதவியில் வைத்தோமல்லவா! அவளுடைய பகட்டைக் கண்டு அதற்குள் நீயும் மகிழ்ந்து போய்விட்டாய். அதனால் அந்த நாய்க்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. உன்னுடைய தயவைப் பூர்த்தியாகச் சம்பாதித்துக் கொண்டவளுக்கு எங்களுடைய தயவு எதற்கு? எங்களிடம் ஏன் சொல்லுவாள்?” என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமிக்கு டிப்டி கலெக்டர் மீதும், மேனகாவின் மீதும் அடக்கமுடியாத கோபம் பொங்கி யெழுந்தது. அவர்கள் யாராயினும் அப்போது எதிரிலிருந்தால் அவன் அப்படியே கசக்கிச்சாறு பிழிந்திருப்பான். அவனுடைய கண்ணில் தீப்பொறி பறந்தது. “இந்தப் பீடைகளின் உறவு இன்றோடு ஒழிந்தது. இனி செத்தாலும் நான் இவர்களுடைய முகத்தில் விழிப்பதில்லை ! சனியன் ஒழியட்டும்” என்று அவன் உறுதியாகக் கூறினான். எவ்வளவோ சிபார்சு செய்து சில நாட்களுக்கு முன்னரே பெண்ணைக் கொணர்ந்து விட்டவன், ஒரு வாரத்தில் யாதொரு காரணமுமின்றி அழைத்துப் போக வேண்டியதென்ன வென்பதே அவனது மனதைப் பெரிதும் வருத்தியது. வீட்டிலிருந்து வெளியே போக ஆரம்பித்தான்; இன்ன இடத்திற்குப் போகிறோம்; எவ்வளவு நேரமாக அலைகிறோம் என்பதை அறியாமல் பல தெருக்களின் வழியாகப் பைத்தியங் கொண்டவனைப் போல அலைந்து கடைசியில் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தான். தண்ணீரின் ஓரமாக நடந்து நெடுந்தூரம் சென்றான். தானும் மேனகாவும் அதற்கு முன் வந்து உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் செல்ல, அவளுடைய வேடிக்கையான சொற்களும், அஞ்சு கத்தைப் போல அவள் கொஞ்சிக் குலாவித் தன்னோடு செய்த விளையாடல்களும், அவள் தன்னை உயிருக்குயிராய் நினைத்து அதைச் செயல்களில் காட்டி வந்ததையும், அவ்விடம் நினைப் பூட்டியது. அவளுடைய அரிய குணமும், ஆழ்ந்த காதலும் நினைவிற்கு வந்தன. அந் நினைவுகள் அவனது மனதைப் பெரிதும் வருத்தத் தொடங்கின.

அவ்வாறிருந்தவள் தான் இல்லாத காலத்தில் எதிர்பாரா வகையில் நடந்ததன் காரணமென்ன என்பதைப்பற்றி எத்தனையோ முறை யோசித்து உண்மையை அறியமாட்டாத வனாய்த் தடுமாறினான். சென்ற ஒரு வாரத்தில் அவள் நடந்து கொண்ட விதமும் , அவளால் தான் அடைந்த சுவர்க்க போகமும் அவனுடைய மனதில் தத்ரூபமாய்த் தோன்றின. அவள் மீது அவன் கொண்ட கோபமும் வெறுப்பும் ஒருவாறு தணிவடைந்தன. தான் அவ்வளவு விரைவாக அவர்களின் மீது வெறுப்பையும் கோபத்தையும் கொண்டு அவர்களுடைய உறவை அறவே விலக்கிட நினைத்தது பிசகெனத் தோன்றியது. நடந்தது என்ன என்பதை உள்ளபடி உணராமல் அவர்கள் மீது தான் பகைமை பாராட்டுதல் ஒழுங்கன்று என நினைத்தான். தன் மனைவியின் அழகும், ஆசையும் மாதுரிய குணமும் படிப்படியாக அவனை மேற்கொள்ள ஆரம்பித்தன.

உடனே அவன் ஒரு விதமான உறுதி கொண்டு திரும்பி திருவல்லிக்கேணி தபாற்சாலைக்கு விரைவாக நடந்து சென்று டிப்டி கலெக்டருக்கு அவசரமான தந்தி யொன்றை அனுப்பிவிட்டுத் திரும்பத் தனது வீட்டிற்கு வந்தான்; பெருத்த இழவு விழுந்த வீட்டிற்குள் நுழைபவனைப்போலத் துயரங் கொண்டவனாய் நுழைந்து தன் படுக்கையறைக்குள் சென்று, துணியால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான். ஒரு நிமஷத்தில் அவனது மனத்தில் கோடி எண்ணங்கள் உதித்தன. தொடக்க முதல் தன்னிடம் மாறாத அன்புடன் மனதிற்குகந்த விதமாய் ஒழுகி வந்த மேனகாவின் வடிவம், அப்போதே இதழ்களை விரித்து நகைக்கும் தாமரைப்போல , அவளது சொற்களும், செயல்களும், திரும்பத் திரும்ப அவனது நினைவில் தோன்றின. சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தான். உடனே அதை எடுத்து அருகில் பார்க்கவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று, அதை எடுத்து அருகிற் பிடித்து உற்று நோக்கினான். மனதிலிருந்த விசனத்தை முகத்தின் புன்னகையால் மறைப்பதாகத் தோன்றிய அவ்வடிவத்தின் வதனத்தைக் கண்ணிமைப்பின்றி நோக்கினான். அறையின் வெளியிலிருந்த தன் சகோதரிமார் தன்னைப் பார்க்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்து ஆராய்ச்சி செய்து அந்தப் படத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான். ”ஆகா! உன்னை அன்போடு நடத்தாமல் வருத்துகிறேனே என்று நீ விசனப்பட்ட காலத்தில் எடுத்த படமல்லவா இது! நீ எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் உன் விசனம் நன்றாய்த் தெரிகிறது. நான் உன்னுடைய மனதின் நோயை மாற்ற முயலும் சமயத்தில் நீ என்னை விட்டுப் போய்விட்டாயே! இனிமேல் உன்னை நான் எப்படி அழைத்துக் கொள்வேன்? ” என்று பலவாறு எண்ணமிட்டு அவன் வருந்திக் கிடந்த சமயத்தில், “வரகுசாமி அய்யர் வரகுசாமி அய்யர் !” என்று வீட்டின் வாசலில் எவனோ உரக்கக் கூவிய ஓசை உண்டாயிற்று. அவன் திடுக்கிட்டெழுந்து வெளியிற் சென்று பார்க்க, சேவகனொருவன் ஒரு தந்தியை நீட்டினான்.வராகசாமி கையெழுத்துச் செய்து அதை வாங்கி மிகுந்த ஆவலோடு திறந்து படித்தான். அதில் அடியில் வருமாறு விஷயம் எழுதப்பட்டிருந்தது :- ”ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லா இடங்களில் நன்றாய்த் தேடிப் பார்க்கவும்; போலீசிலும் பதிவு செய்யவும், நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு அவ்விடம் வருகிறேன். அவசரம்; அசட்டையாயிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறு தந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஓய்வுமிராது; ஒரு வேலையிலும் மனம் செல்லாது” என்றிருந்த சங்கதியைப் படித்தான். அவனுடைய நெஞ்சம் தடுமாறியது, குழம்பியது. கோபம் பொங்கி யெழுந்தது. என்ன செய்வான்? யார் சொன்னது உண்மை யென்பதை எப்படி அறிவான்? உடனே ”அக்கா! அடி அக்கா!” என்று அதட்டிய குரலில் பெருந்தேவியை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

அதிகாரம் 8 – கும்பிடும் கள்ளன்

நமக்கு நன்மைகளை அளிக்கும் விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களையும் நாம் கோயிலில் வைத்து வணங்குகிறோம்; தீமைகளைத் தரும் காட்டேறி, பிடாறி, மதுரை வீரன் முதலியவற்றையும் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறோம். ஆனாலும், தீமையைச் செய்யும் தெய்வங்களிடத்தில் நமக்குள்ள அச்சமும், மதிப்புமே மிக்க அதிகம். தீங்கற்றதும், நமது உணவிற்குப் பயன் படுவதுமான புடலங்காயை நாம் ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை; அதை வணங்குவதும் இல்லை. ஆலகால விஷத்தை வாயிற்கொண்டு நம்மைக் கொல்ல ஆயத்தமாக இருக்கும் நாகப்பாம்பையே நாம் பெரிதும் நன்கு மதிக்கிறோம்; அதன் புற்றில் பால் தெளித்து அதை வணங்குகிறோம்; அதைக் கண்டு அஞ்சி ஓடுகிறோம். அவ்வாறே தஞ்சையை ஆண்டதாசில்தார் தாந்தோனி ராயருடைய அருமையான புகழை நாம் இனியும் பாடாது இருப்போமானால், அவருக்கு நம்மீது கோபம் பிறக்கும். ஆதலால், அவரைப் பற்றிய விவரத்தை நாம் சிறிது அறிந்து கொள்வோம்.

அவர் எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை களைக் கொண்டவர்; முரண்களுக்கே இருப்பிடமானவர். அவர் தோற்றத்தில் ஒரு விதமாயும், உண்மையில் வேறு விதமாயும் இருப்பவர். அவர் வயதில் முதுமையடைந்தவர் அல்லர்; ஆனால், தலையின் உரோமமோ முற்றிலும் வெளுத்திருந்தது. அவருடைய மேனி பறங்கிப்பழம் போலச் சிவந்திருந்தது; மனதோ களாப்பழத்திலும் அதிகமாய்க் கறுத்திருந்தது. சொற்களோ தேனும் பாலுமாய் ஓடின ; செயல்களோ எட்டிப்பழங்களாய் உதிர்ந்தன. அகமோ ஆழந்தெரியா அகழியாய் இருந்தது; முகமோ கண்களையும், மனதையும் குளிரச் செய்து, கவரும் வண்ண ம் அந்த அகழியின் மீது மலரும் தாமரைப் பூவை யொத்திருந்தது. வாயில் வருவது இன்சொல்; நெஞ்சில் மறைந்திருப்பது வஞ்சம்; புரிய முயல்வது பொல்லாங்கு. கடைவாயில் காலகோடி விஷத்தை ஒளிய வைத்துள்ள நாகப்பாம்பு பரம பக்தனைப்போல நெற்றியில் திருநாமம் அணிந்திருப்பதை நாம் காண்கிறோம் அல்லவா. அவ்வாறே தாந்தோனிராயருடைய கழுத்தில் உத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், அட்சதை முதலிய பக்த அலங்காரம்; அதிகாலை தொடங்கி பகல் பன்னிரண்டு மணிவரையில் சிவபூஜை, காதில் வில்வப்பத்திரம், ஆனால் சுவாமி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை நோக்கி, அர்ச்சனை நிவேதனம் , ஸ்தோத்திரம் முதலியவை செய்யும்போதே இப்புறம் தன் மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டித் தாம் ஈசுவரனிடம் பாசாங்கு செய்து அவனை ஏமாற்றுவதாய்ச் சைகை காட்டக்கூடிய மனப்பான்மை உடையவர். அவருடைய கைகள் பிறரிடம் பெறுதலை அறியுமன்றி கொடுத்தலை அறிந்தனவன்று. அவருடைய நாவிற்குப் பிறர் வீட்டுச் போஜனத்தில் விருப்பம் அதிகமன்றித் தமது வீட்டுச் சோற்றில், ஆசையில்லை. அவருடைய மனது பொதுவாக ஆண்பாலரிடம் அருவருப்பையும் பெண்பாலரிடம் விருப்பையும் கொண்டது. கால் முதல் தலை வரையில் வைரங்களையும், பட்டாடை களையும் அணிந்து எழிலை ஏந்தி பூங்கொம்பு போல இருப்பவளும், லட்டு, ஜிலேபி, ஹல்வா முதலியனவே எனக் கண்டோர் வாயில் தேனூறும் வண்ணம் இனிமைத் திரளாகத் தோன்றும் மயிலியலாளுமான அவரது மனையாட்டியின் மீது அவருக்கு முற்றிலும் வெறுப்பு ; மூன்றுகாத தூரம் முடைநாற்றம் கமழும் தலையாரி எல்லப்பனுடைய தலைகாய்ந்த மனைவி முளியம்மாளின் மீதே அவருடைய காதலும் கண்ணோக்கமும் பிடிவாதமாகச் சென்றன. வெளியூர்களில் சுற்றுப் பிரயாணம் வரும் தாசில்தார்களெல்லோரும் ஊருக்குள் ஆண்பாலார் இருக்குமிடத்தில் முகாம் செய்வர்; தாந்தோனிராயரோ , அவ்வூர் மகளிர் தண்ணீ ரெடுக்கவும், நீராடவும் வரும் குளம், ஆற்றுத் துறைகள், கிணறுகள் முதலிய வற்றிற்கு அருகிலேதான் கச்சேரி செய்வது வழக்கம். உலகில் பிறர் யாவரும் அவரிடம் உண்மை யொன்றையே பேசுதல் வேண்டும்; நல்லொழுக்கம், நற்குணம் முதலியவற்றை உடையவராயிருத்தல் வேண்டும்; ஆனால், அந்த விதி அவரை மாத்திரம் கட்டுப்படுத்தாது, பிறர் எவரும் எத்தகைய சுகத்தையும் அனுபவித்தல் கூடாது; அதற்குப் பிறந்தவர் அவர் ஒருவரே. அவருடைய மேலதிகாரிகள் எதைக்குறித்தும் அவரைக் கண்டித்தலும், அவர் மீது குற்றங் கூறுதலும் தவறு; அவர் தமக்குக் கீழிருந்தோரை மாத்திரம் நினைத்த விதம் பேசலாம்; எண்ணிய விதம் ஏசலாம்.

அதுகாறும் அவர் பெரிய கலெக்டர் கச்சேரியில் சிரஸ்தார் உத்தியோகத்தில் இருந்து மகா பயங்கரமான பிளேக் நோயைப் போலத் தம்மை நடுங்கும்படி அந்த ஜில்லாவில் எல்லோ ரையும் ஆட்டி வந்தவர். கட்டை விரல் பருமனிருந்த அகஸ்தியர் தமது வயிற்றில் எட்டாவது கடலுக்கும் இடமிருக்கிறதே, கடலில்லையே என்று ஏங்கினாராம். அதைப் போல் எத்தனையோ கலெக்டர்களை விழுங்கிய தமது சொக்காப் பையில் இன்னம் இடமிருக்கிறதே என்று தாந்தோனியப்பர் ஏங்கினார். இலங்கையை ஆண்ட இராவணன் வீட்டில் வாயுபகவான் விசிறி கொண்டு வீசினான்; அக்கினி பகவான் அடுப்பெறித்தார்; சூரிய பகவான் விளக்கேற்றும் வேலை செய்தான்; வருண பகவான் தண்ணீர் குடமெடுத்தான். நவகிரகங்களே ஜாதகம் கணித்தன. அவ்வாறே நமது சிரஸ்ததாரான தாந்தோனி ராயர் வீட்டில் அறந்தாங்கித் தாசில்தார் முறந்தாங்கிப் புடைத்தார். திருவையாற்று போலீஸ்தார் திரிகை பிடித்தறைத்தார். பட்டுக்கோட்டைத் தாசில்தார்கட்டைகளைப் பிளந்தார். மன்னார்குடித் தாசில்தார் வெந்நீர் தயாரித்தார். கும்பகோணம் தாசில்தார் செம்பு தவலை கழுவினார். வலங்கிமான் போலீஸ்தார் பாயைப் பிரித்தார்.

அந்த ஜில்லாவிலிருந்த எல்லா உத்தியோகஸ்தர்களின் குடுமியும் அவருடைய கையிலிருந்தது. அவர்கள் செய்த நற்காரியங்கள் யாவற்றையும் ராயர் மறந்து விடுவார். எவனாயினும் அவருடைய கோபத்திற்கு இலக்கானால், ஒரு வாரத்திற்குள் அவனுடைய தலைச்சீட்டு கிழிபட்டுப்போம். தையல் இலையின் கோணலை நிமிர்த்தக் கல்லியந்திரத்தைப் பாரம் வைத்தலைப் போல, அவன் தலையைத் தூக்கா வண்ணம், அவனைப் பாதாளத்தில் ஆழ்த்தி அவன் மீது பாரம் வைத்து விடுவார். அத்தகைய உன்னத பதவியான சிரஸ்த்தார் வேலையிலிருந்து தஞ்சையின் தாசில்தார் வேலைக்கு வந்தவ ராதலால், தாந்தோனி ராயர் இன்னமும் பழைய மேன்மையை விடாமல் பாராட்டி வந்தார். அதற்கு முன் தமது வீட்டில் தஞ்சையின் தாசில்தார் மஞ்சள் அரைத்ததை மறந்து, தலை கால் தெரியாமல் அதிகாரமும் ஆடம்பரமும் செய்து தாசில் வேலை பார்த்து வந்தார்.

சில வருஷங்களுக்கு முன்னர் பி.ஏ., பி.எல்., முதலிய பாடங்களைப் பெற்ற ஒருவர் தேசத்தில் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அவர் மகா புத்திமான். ஆனால், கீழிருந்த சிப்பந்திகளை மிரட்டி இரக்கமற்ற மனதோடு வேலைவாங்க அறியாதவர். மேலதிகாரிகளையும் வசியப்படுத்த அவர் கற்க வில்லை. இரண்டொரு வருஷங்களில் அவர் தமது உத்தியோகத்தை விட்டுவிட நேர்ந்தது. அப்போது அவர் தம் நண்பர் ஒருவருக்கு அடியில் வருமாறு கடிதம் எழுதி அனுப்பினார். “தாசில் உத்தியோகத்திற்குக் கல்வியும் தேவையுமில்லை. மூளையும் தேவையுமில்லை. மாதம் இரு நூறு ரூபாயை வீண் செலவு செய்து ஒரு மனிதனையும், அந்த வேலைக்கு வைக்கவேண்டுவதில்லை. பயங்கரமான ஒரு தோற்றத்தைக் கொண்ட ஒரு நாயைப் பிடித்து அதற்குச் சொக்காய், தலைபாகை முதலியவற்றை அணிவித்து நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். பக்கத்தில் ஒரு டபேதார் நிற்க வேண்டும். எதிரில் வரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாலுக்கா குமாஸ்தாக்கள், கிராம முனிசீப்புகள், கணக்குப் பிள்ளைகள் முதலியோரைக் கண்டு அந்த நாய் நன்றாய்க் குலைத்துக் கடிக்கப் போவதைப்போலப் பாய வேண்டும்.

அதே காலத்தில் கலெக்டர் முதலிய மேலதிகாரிகளைக் கண்டால், அன்னமிடுவோரின் பின்னர் வாலைக் குழைத்துச்செல்லும் நாய்களைப்போல, அந்த தாசில் நாய் உடனே செய்யவேண்டும். இவ்வாறு ஒரு நாய் இரண்டு தாலுக்காக்களின் தாசில் வேலையைத் திறமையோடு செய்யும்” என்று எழுதினார். அவர் பொறாமையால் அவ்வாறு கூறினாரோ அன்றி அது உண்மையோ வென்பதை அந்த இலாகாவில் இருப்பவர்களே நன்கறிவர். ஆனால், தாந் தோனிராயர் விஷயத்தில் இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் உண்மையா யிருந்தன. அவர் கீழிருந்தவர் விஷயத்தில் சாதாரண நாயைப் போல் நடக்கவில்லை; பைத்தியங் கொண்ட நாயைப் போலிருந்தார். மேற்கண்ட கடிதத்தில், “குலைத்துக் கடிக்கப் போவதைப் போல பாயவேண்டு”மென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நமது தாந்தோனி ராயர் உண்மையிலேயே வீழ்ந்து கடித்துவிடுவார். அவருடைய ஆளுகையில் கீழிருந்த அதிகாரிகள் ரத்தக்கண்ணீர் விடுத்தனர். ஆனால், அவர் மேலதிகாரிகளான துரைகளை மயக்குவதில் யௌவனப் புருஷரை மயக்கும் வேசையரைக் காட்டினும் பெருந் திறமை வாய்ந்தவர். அவர் ஆணாய்ப் பிறவாமல் பெண்ணாய்ப் பிறந்திருந்தால், ஐரோப்பாக் கண்டமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்குமோ வென்று பலரது மனதில் ஐயம் தோன்றலாம். அதற்கு நாம் என்ன செய்வது? அது அவருடைய பாக்கியம்.

பெரிய கலெக்டர் துரையின் பூரணமான தயவை அவர் பெற்றிருந்தமையால், டிப்டி கலெக்டர் முதலிய சிறிய அதிகாரிகள் அவருக்கு அதிகாரிகளாய்த் தோன்றவில்லை. மலையை விழுங்கும் மகாதேவ சாமிக்குக் கதவு ஒரு அப்பளமா மென்பர் நமது பெண்டீர். தாந்தோனிராயர் நமது சாம்பசிவ ஐயங்காரிடத்தில் வெளிக்கு மாத்திரம் பணிவும் அன்பும் கொண்டவரைப் போல நடித்துப் பகட்டி வந்தார்; உண்மையிலோ சாம்பசிவ ஐயங்கார் முன் கோபத்தால் அப்போதைக்கப்போது திட்டியதும் கடிந்து கொண்டதும் ஈட்டியாற் குத்துதலைப் போல தாந்தோனி ராயருடைய மனதில் தைத்தமையால், அவரிடம் உள்ளூற வெறுப்பும், பகைமையுங் கொண்டிருந்தார். தாந்தோனி ராயர் பெரிய கலெக்டரிடம் சென்றால், அவர் தாசில்தாருக்கு ஆசனமளித்து அவரை உட்காரவைத்தல் வழக்கம். நமது சாம்பசிவமோ உட்காரச் சொல்லுவதுமில்லை.

சாம்பசிவத்திற்கும், தாந்தோனிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. சாம்பசிவ ஐயங்கார் இளகிய மனத்தினராயினும் முன்கோபமும், கடிந்த சொல்லுமுடையவர்; அதனால் பகைவர் பலரைப் பெற்றவர். தாந்தோனிராயர் கொடிய மனத்தினர் ஆனாலும் இனிய சொல்லினர்; ஏமாற்றும் திறமை உடையவர்; ஆகையால் அவரிடம் பலர் நத்தியலைந்தனர். சாம்பசிவம் தமது அலுவலையும், தமது கடமைகளையுமே மிக்க மதிப்பவர் அன்றி மனிதரைப் பற்றிக் கவனிப்பதில்லை. அவருக்குத் தமது மனிதனுக்கு ஒன்று பிறமனிதனுக்கு ஒன்று என்னும் நியாயம் கிடையாது. மேலதிகாரிகளுக்கு அஞ்சியோ , அன்றி அவர்களின் விருப்பின்படியோ , நீதி தவறி நடப்பவரல்லர். தாந்தோனி ராயர் காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் திரும்பி விடுவார். அவருடைய காலை ஒருவன் நன்றாய் வருடிவிட்டால் அவனுக்குக் கணக்குப் பிள்ளை வேலைக்குச் சிபார்சு செய்து விடுவார். பருப்பு ஸாம்பாரை மிக்க மாதுரியமாகச் செய்பவனுக்குப் பட்டா மணியம் வேலை கொடுக்க எழுதி விடுவார். தாம் ஒழுங்காய் வேலை பார்ப்பவர் என்பதைப் பெரிய கலெக்டரிடம் தந்திரமாகக் காட்டிக் கொள்வார். ஆனால், அவருடைய காரியமெல்லாம் ஊழலாகவே இருக்கும். ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்த தபால்கள் உடைபடாமல் ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். குமாஸ்தாக்கள் எழுதி அவரது கை யெழுத்துக்காக வைத்த அர்ஜிகள் மலையாய்க் குவிந்து கிடக்கும். மேலதிகாரிகளிடமிருந்து ஏதாவதொரு விஷயத் திற்கு மறுமொழி வரவில்லை யென்று குமாஸ்தாவின் மீது சீறி விழுவார். அவன் அவருடைய கையெழுத்திற்கு ஆறுமாதத் திற்கு முன்னரே அனுப்பிவிட்டேன் என்பான். அது தம்மிடம்
வரவேயில்லை யென்று அவர் துணியைப் போட்டு தாண்டிச் சத்தியம் செய்து விடுவார். அந்த குமாஸ்தாவின் மீது விரோதமாக எழுதிவிடுவார். சாம்பசிவ ஐயங்கார் யாவரையும் முதுகில் அடிப்பார்; தாந்தோனிராயரோ வயிற்றில் அடிப்பார். சாம்பசிவம் பிறர் வீட்டில் தண்ணீர் கூடக் குடித்தறியார். பிறன் பொருளை விஷமாக மதித்தவர், தாந்தோனியோ பிச்சைக்காரனுடைய அரிசி மூட்டை பெரியதா யிருந்தால், அவனுக்கு வருமான வரி போடுவதாய்ப் பயமுறுத்தி, அவனிடம் அவ்வரிசி மூட்டையிலும் ஒரு பங்கு வாங்கி விடுவார். இருவரும் பணச் செலவு செய்வதில் செட்டுக்குணம் உடையவர்களே. சாம்பசிவம் எந்தச் செலவு இன்றியமை யாததோ அதைச் செய்வார். எது அவசியமில்லாததோ அதைச் செய்யமாட்டார். ஆனால், அவருடைய செட்டுத் தனம் கண்ணியத்திற்குக் குறைவு செய்யாதது. தாந்தோனிராயருடைய செட்டுத்தனம் பிறர் மனதில் அருவருப்பை உண்டாக்கக் கூடியது. அவர் வெளியூர்களில் சுற்றுப்பயணம் வரும்போது, அவரைச் சந்தோஷப்படுத்த நினைத்துக் கர்ணம் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதலியோர் நல்ல விருந்து தயார் செய்து அவருக்குப் பரிமாறினால், ஒட்டகம் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீரை வயிற்றில் சேகரம் செய்து வைத்துக் கொள்வதைப் போல, அவர் பல நாட்களுக்குப் பசியா திருக்கும்படிச் சாப்பிடுவார். ஆனால் பரிமாறும் கணக்குப் பிள்ளையின் மனைவி மீதிருக்கும் நகைகளையும், அந்த விருந்தின் சிறப்பையுங்கண்டு, அவன் லஞ்சம் அதிகமாக வாங்குகிறவனென்று நினைத்து, அவனை வேலையிலிருந்து தொலைக்க உறுதி கொள்வார். காலணாவிற்குக் கீரை வாங்குவதிலும் தாசில்தார் உத்தியோகத்தின் அதிகாரத்தைச் செலுத்தி நாலணா கீரை வாங்கிவிடுவார். அவர் எப்போதும் அம்பட்டனுக்கு முக்காலணா கொடுப்பது வழக்கம்; அவரிடம் இருந்தது ஒரு அணா நாணயமாக இருந்தால், அதைக் கொடுத்துவிட்டு, அதில் அதிகமாக இருக்கும் காலணாவிற்குத் தமது மனைவியின் தலையையும் சிறைத்துப் போகச் சொல்லக்கூடிய அற்ப குணத்தை உடையவர். இத்தகைய எண்ணிறந்த குண வேறுபாடுகளினால் தாசில்தாருக்கு டிப்டி கலெக்டர் மீது பெருத்த பகைமை உண்டாய்விட்டது. அவரை எவ்வகையாலும் கெடுத்து அவருடைய வேலையைத் தொலைத்துவிட வேண்டுமென்னும் உறுதி ஏற்பட்டு விட்டது. தாசில்தார் பெரிய கலெக்டர் துரையிடத்தில் பரம யோக்கியத்தைப் போல் நடந்து அவருடைய நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார். அந்த நட்பை இழக்காமல் காப்பாற்றுவதற்காக அவர் வேறு எத்தகைய அட்டூழியம் செய்யவும் பின்வாங்கமாட்டார். ஒவ்வொருநாளும் அவர் காலையில் பெரிய கலெக்டரின் பங்களாவிற்குப் போவார். முதலில் அம்மன் சன்னிதிக்கு வெளியில் நின்று துரைசானி யம்மாளுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி ஸ்தோத்திரம் செய்து காலை வந்தனம் சமர்ப்பிப்பார். அம்மாளுடைய தேக சௌக்கியத்தை விசாரிப்பதோடு நில்லாமல், அம்மாளுடைய போஜனத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள், கோழிகள், வாத்துக்கள், அம்மாளுடைய நாய், அம்மாள் படுக்கும் கட்டில் மெத்தை முதலியவற்றின் சுகத்தைப் பற்றியும் அந்தரங்க அன்போடு கேட்பார். தினம் ஒவ்வொரு பூமாலை கொண்டு போய் அம்மாளின் நாய்க்குச் சாத்தி, அதன் நற்குணம், மேன்மைகுணம் முதலியவற்றைப் பற்றி அம்மாளுக்கு முன் ஒரு அத்தியாயம் திருப்புகழ் படிப்பார். அதன் உடம்பில் ஓடும் சீலைப் பேனை எடுத்து நசுக்குவார். அவற்றைக் கண்ட துரைசானி பெருமகிழ்ச்சியும் புன்னகையும் கொள்வாள். அதை எவருக்கும் கிடைக்காப் பெரும் பாக்கியமாக மதிப்பார் தாந்தோனியார் பங்களாவில் எத்தகைய தேவையும் உண்டாகாமல் தாசில்தார் பார்த்துக்கொள்வார். அவர்மீது துரை, துரைசானி ஆகிய இருவருக்கும் பட்சம் பெருகி வந்தது.

அவர் பங்களாவிற்கு வரும் போதெல்லாம் எதை மறக்கினும் தமது பகைவரான சாம்பசிவ ஐயங்காரை மாத்திரம் மறவாதிருந்தார். அவரைப் பற்றிப் பெரிய கலெக்டர் மனதில் கெட்ட அபிப்பிராயத்தையும், அருவருப்பையும், பகைமையும் உண்டாக்கி வந்தார்.

வராகசாமி தனது மனைவி மேனகா காணாமற் போனதைப்பற்றித் தஞ்சையில் தன் மாமனாருக்குத் தந்தியனுப்பிய தினம் காலையில் பெரிய கலெக்டர், சென்னை கவர்னருக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் அர்ஜி தயாரித்து அனுப்பவேண்டி யிருந்தது. அதில் தமக்குப் பக்கத்துணையா யிருக்கும் பொருட்டு கலெக்டர், தாந்தோனியாரையும், சாம்பசிவத்தையும் காலை ஒன்பது மணிக்கே வரும்படி கண்டிப்பாய் உத்தரவு செய்திருந்தார். தாந்தோனிராயர் தகப்பனுடைய திதியை விடுத்தாலும் விடுப்பார். பெரிய துரையின் உத்தரவை மீறவே மாட்டார். அவர் விடியற்காலம் ஐந்து மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டார். வழக்கப்படி முதலில் அம்பாளின் சன்னிதிக்கு வந்தார். அவள் எழுந்திருக்க வில்லை. அங்கிருந்த நாய், ஆடுகள் முதலியவற்றைத் தடவிக்கொடுத்த பிறகு, சுவாமி சன்னிதிக்குச் சென்றார்.

தாழ்வாரத்தின் பக்கத்தில் சார்புப் பந்தலிருந்தது, அதில் ஏற்றிவிடப்பட்டிருந்த சம்பங்கிக்கொடி உட்புறத்தை நன்றாய் மறைத்துக்கொண்டிருந்தது. அதன் மறைவில் நின்று உட்புறத்தில் துரை என்ன செய்கிறார் என்பதை உணரும் பொருட்டு ஒட்டகத்தைப் போலத் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தவண்ணம் நின்று தத்தளித்தார். பொட்லர் அந்தோனி ஓசை செய்யாமல் பங்களாவிற்குள் நுழைவதும், வெளிப்படுவது மாயிருந்தான். அவனிடம் பரம நண்பரைப் போல அன்பும் புன்னகையும் காட்டி துரை எழுந்து விட்டாரோ என்று தலையசைப்பாற் கேட்டார். அந்த மாதத்திற்கு தாசில்தார் அவனுக்குப் பணம் கொடா திருந்தமையால் அவன் அவருக்கு முகங் கொடாமற் போய்விட்டான். அடுத்த நிமிஷம் உட்புறம் துரையின் குரல் உண்டாயிற்று. அது கோபக்குரலாய்த் தோன்றியது. துரைமார் படுக்கையை விட்டெழுமுன் தேத்தண்ணீர் குடித்தே எழுதல் வழக்கம். அவ்வாறே, திண்டில் சாய்ந்தவண்ணம் துரை தேத்தண்ணீரைப் பருக முயன்றார். தூக்க மயக்கத்தில் கண்ணிமைகள் இன்னம் மூடிக்கொண்டிருந்தன. அப்படியே தேத்தண்ணீர் பாத்திரத்தை வாயில் வைத்தார். அதில் சருக்கரை அதிகமாய்ப் போடப்பட்டிருந்தது. துரைக்கு பெருத்த கோபம் மூண்டு விட்டது. உரத்த குரலில் அந்தோனியை அழைத்தார். அது தாசில்தார் காதில் தாந்தோனியென்று தம்மை அழைத்ததாகப் பட்டது. உடனே தாசில்தார் குடுகுடென்று உள்ளே ஓடிக் கட்டிலண்டையில் நின்றார். துரை இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. தாந்தோனிராயர் “காலை வந்தனம்”கூற வாயைத் திறந்தார். அப்போது துரையின் வாயிலிருந்த தேத்தண்ணீர் வெளிப்பட்டு தாசில்தாரின், வாயிலும், மூக்கிலும், முகத்திலும் உடைகளிலும் வருணாஸ்திரம் போல மோதி அபிஷேகம் செய்தது. துரை அதே காலத்தில் “கழுதையின் மகனே! எடுத்துக்கொள் உன் தேத்தண்ணீரை. மூளையில்லா மிருகமே!” என்று தாசில்தாரை அன்போடு உபசரித்தார். எதிர்பாராத அந்த பட்சத்தைக் கண்ட தாசில்தார் சிறிது நேரம் திகைத்துக் கல்லாய் நின்றார். அவருடைய விலையுயர்ந்த ஆடைகள் கெட்டுப் போயின. என்ன செய்வார்; ஒரு வகையான அச்சத்தையும், திகைப்பையுங் கொண்டார். தேத்தண்ணீர் அளவு கடந்து தித்திப்பாயிருந்ததால், துரை தம்மை பொட்லரென நினைத்து அவ்வாறு செய்தாரென்று ஒருவாறு யூகித்தார். சிறிது துணிந்து, “துரைகளே! காலை வந்தனம். நான் தாசில்தார் என்மேல் தேத்தண்ணீர் படவில்லை ” என்றார் ராயர். தாசில்தாருடைய குரலை உணர்ந்த துரை திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தார். உடனே விரைந்தெழுந்து மிகுந்த விசனத்தோடு, “தாசில்தாரே! மன்னிக்க வேண்டும், பொட்லரென்று நினைத்து இப்படி செய்துவிட்டேன். திரும்பவும் உம்முடைய மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றார். அங்கிருந்த தண்ணீர் பாத்திரம், துவாலை, சோப் முதலியவற்றைக் கொணர்ந்து தாசில்தாருடைய முகத்தைச் சுத்தி செய்ய முயன்றார். தாம் அறியாமல் செய்ததை மன்னிக்க வேண்டு மென்று மென்மேலும் கூறி மனதார வருந்தினார். “அதிகம் படவில்லை ; பாதமில்லை; நானே துடைத்துக் கொண்டேன். துரையவர்கள் இதைப்பற்றி வருந்த வேண்டாம்” என்று தாசில்தாரும் தாண்டவமாடினார். அவர் மீது பெரிதும் இரக்கமும், அன்புங்கொண்ட துரை, அவர் கேட்கும் வரத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தார். அந்தக் குறிப்பையறிந்த தாந்தோனியார் தமக்கு ஒவ்வொரு நாளும் அவ்விதம் பூஜை கிடைக்க வேண்டுமென்று ஈஸ்வரனை வேண்டினார்.

அரை நாழிகைக்குப் பிறகு அவ்விருவரும் தாம் எழுதக் கருதிய அர்ஜியைத் தயாரிக்க உட்கார்ந்தனர். அப்பொழுதும் சாம்பசிவம் வரவில்லை. மணி பத்தாயிற்று; துரை பொறுத்துப் பொறுத்துப்பார்த்தார். “தாசில்தாரே! ஏன் டிப்டி கலெக்டர் வரவில்லை ? இது அவசரமான காரியமென்று நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறி தவறாமல் ஒன்பது மணிக்கே வரச் சொன்னேன். அவர் கொஞ்சமும் மதிக்க வில்லையே” என்றார் துரை.

தாசில்:- தங்களுடைய உத்தரவே இம்மாதிரியானால், எங்களுடைய கதியைப்பற்றித் துரையவர்களே யோசிக்க வேண்டியது தான். நாங்கள் நாயினும் கீழாகவே மதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், அவர் எங்களுடைய மேலதிகாரி. அவர் மீது வேண்டு மென்று கோள் சொன்னது போலாகும். கவர்மெண்டாருக்குப் போகவேண்டிய அவசர அர்ஜி விஷயத்தில் நான் என் உயிர் போவதாயிருந்தாலும் வராமல் இருக்கவே மாட்டேன். எனக்கு என்னுடைய கடமையே பெரிதன்றி மற்றது பெரிதல்ல – என்றார்.

துரை:- இந்த விஷயம் இருக்கட்டும். அவர் லஞ்சம் வாங்கும் விஷயம் எப்படி இருக்கிறது?

தாசில்:- அதைப்பற்றி சந்தேகங் கூடவா? அது ஒழுங்காக நடந்து வருகிறது. அவருடைய மைத்துனனை அவர் எதற்காக வரவழைத்து வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவன் மூலமாகவே லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. அவன் வைத்துக்கொண்டிருக்கும் தாசிக்கு மாத்திரம் மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கிறானாம். அவனுக்கு வேறு வருமானம் இல்லை. நிலம் முதலிய எவ்வித ஆஸ்தியுமில்லை. டிப்டி கலெக்டர் மனைவியின் உடம்பில் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை ஏறுகிறது. அவருடைய சம்பளம் ரூ.400. இவ்வளவும் எங்கிருந்து வரும்? பணத்தைக் கொடுத்தவர்களில் பலர் வந்து கேஸும் தம் பட்சம் ஜெயமாகவில்லை யென்று சொல்லி என்னிடம் அழுதார்கள். நான் என்ன செய்கிறது! மேலதிகாரியின் சங்கதி – என்றார். அதைக்கேட்டதுரை உள்ளூற ஆத்திரமடைந்தார். மீசை துடித்தது. ஆனால் தம்மை நன்றாய் அடக்கிக்கொண்டார். “இந்த அர்ஜி விஷயத்தில் அவர் செய்ததை நேரில் துரைத்தனத்தாருக்கு எழுதுகிறேன். தவிர நீரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளையும் லஞ்சம் வாங்கும் விஷயத்தைப் பற்றி இரகசியமாக விசாரணை செய்து சாட்சியங்களை சேகரம் பண்ணுங்கள். லஞ்சம் வாங்கின கேஸ்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்றார்.

தாசில் – அதில் இன்னொன்றிருக்கிறது. அவர் மேலதிகாரி. உண்மையை அறிந்தவர்கள் அவருக்குப் பயந்து இரகசியத்தை வெளியிடப் பின் வாங்குகிறார்கள். ஆகையால், ஒரு காரியம் செய்தால் நலமாயிருக்கும்; ஆனால் அது என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவரை வேலையிலிருந்து மறு உத்தரவு வரையில் நீக்கி (சஸ்பெண்டு செய்து ) வைத்தால், யாவரும் உண்மையைச் சொல்லுவார்கள், லஞ்சம் வாங்கின கேஸ்களெல்லாம் பிறகு வெளியாகும் – என்றார்.

துரை :- இருக்கட்டும்; அதைப்பற்றி நான் நன்றாக யோசனை செய்து மேலே எழுதி அவரை நீக்கி வைக்கிறேன் – என்றார்.

அதற்குள் சலாம் செய்து டபேதார் உள்ளே வந்து ஒரு கடிதத்தைப் பெரிய கலெக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பார்த்தார்.

அது டிப்டி கலெக்டரிடமிருந்து வந்திருந்தது; அதைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார்:

“ஐயா!
சென்னைக்கு நான் மிக்க அவசரமான சொந்த விஷயத்தின் பொருட்டு போகவேண்டி யிருப்பதால், எனக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரஜாக் கொடுக்கக் கோருகிறேன்.”

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்தவுடன் துரை தாசில்தாரின் முகத்தைப் பார்த்தார். அவர் புன்னகை செய்து, “சென்னைக்கு இராத்திரி 7-மணிக்கல்லவா ரயில் புறப்படுகிறது. அவர் இப்போது வந்து விட்டுப் போவதற்குத் தடை யென்ன?” என்று கூறி எரிகின்ற கட்டையைத் தட்டி விட்டார்.

துரை:- டபேதார்! இதை யார் கொண்டு வந்தவர்?

டபே – டிப்டி கலெக்டருடைய மைத்துனர் கிட்டையர் என்றான். உடனே துரை வேறொரு காகிதத்தை எடுத்து அதில், “ரஜாக் கொடுக்கப்பட மாட்டாது” என்று எழுதி மடித்து ஒரு உறையில் போட்டு ஒட்டிடபேதாரிடம் கொடுக்க, அவன் அதை
வாங்கி வெளியிற் சென்றான்.

துரை:- அவ்வளவு அவசரமான காரியம் என்ன விருக்கும்?

தாசில் :- என்ன சூதோ தெரிய வில்லை. ஏதாயினும் லாபத்தை உத்தேசித்ததாகவே யிருக்கும். எல்லாவற்றிற்கும் நான் தந்தி ஆபீஸுக்குப் போய் டிப்டி கலெக்டருக்கு ஏதாயினும் தந்தி வந்ததா வென்று கேட்டு உண்மையை அறிந்து கொண்டு அவருடைய வீட்டிற்கே போய் தந்திரமாக விஷயத்தை அறிந்து கொண்டு வருகிறேன் – என்றார்.

துரை:- சரி; அப்படியே செய்யும் – என்றார்.

உடனே தாந்தோனிராயர் குனிந்து சலாம் செய்துவிட்டு தந்தி ஆபீசுக்குப் புறப்பட்டார்.

அதிகாரம் 9 – காணாமற் போனாயோ கண்மணியே?

மேனகா காணாமற் போனதைப் பற்றித் தமக்குக் கிடைத்த தந்தியைப் படித்த சாம்பசிவமும், அவருடைய தாயும், மனைவியும் பெருத்த திகைப்பையும், அச்சத்தையும், கவலையும் கொண்டனர். எதிர்பாராத வகையில் கோடை காலத்தில் உண்டாகும் பேரிடியைப் போலத் தோன்றிய அந்த விபத்தை அவர்கள் எதிர்பார்த்தவரல்லர். ஒரு வருஷகாலம் துயர்கடலில் ஆழ்ந்து வருந்திக் கிடந்த தமக்கும், தமது அருமைப் பெண் மேனகாவிற்கும் அப்போதே நல்ல காலம் திரும்பியதாக மதித்துக் கவலைச்சுமையை அகற்றி, உஸ்’ ஸென்று உட்கார்ந்த தங்களை விதி என்னும் கொடிய நாகம் இன்னமும் துரத்தியதாய் நினைத்துத் தளர்வடைந்தனர். வழக்கத்திற்கு மாறாகத் தமது மருமகப் பிள்ளை தம்மிடம் அன்பையும் வணக்கத்தையும் காட்டியதை நினைத்து சாம்பசிவம், இனி மேனகா துன்புறாமல் சுகமாய் வாழ்க்கை செய்வாள் என்று நினைத்துப் பெரு மகிழ்வு கொண்டிருந்தார். அதற்கு முன் தாம் தமது மருகப்பிள்ளையைப் பற்றிக் கொண்டிருந்த அருவருப்பை மாற்றி அவன் மீது முன்னிலும் பன் மடங்கு அதிகரித்த வாஞ்சையை வைத்தார். அந்த முறை மருகப்பிள்ளை தம்மிடம் காட்டிய நன்னடத்தையைப் பற்றித் தாய், மனைவி முதலியோரிடம் பன் முறை கூறி அவர்களையும் மகிழ்வித்தார். இரு நூறு ரூபாயில் மருமகப் பிள்ளைக்குத் தங்கச் சங்கிலி கடியாரம் முதலியவற்றை வாங்கி வைத்திருந்தார். மனிதன் எத்தகைய இடைஞ்சலுமின்றி தனது இச்சைப்படி தனது வாழ்க்கையையும் தனது நிலைமையையும் செவ்வைப் படுத்திக்கொள்ளவும் நீங்காத சுகம் அனுபவிக்கவும் வல்லமை உடையவனாயிருப்பானாயின் அவனுக்கு உண்டாகும் செருக்கிற்கும் இறுமாப்பிற்கும் அளவிருக்குமோ! பிறகு அவன் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை நினைப்பானா! தன்னையே கடவுளா யன்றோ மதிப்பான். எவனும் பிறனை மதியான். இரண்டு மனிதருக்கு இடையிலுள்ள நட்பு, சார்பு, அன்பு, உதவி, பணிவு முதலியவை சிறிதும் இல்லாமல் போய்விடும்; உலகமே கலக்கத்திற்கு இருப்பிடமாய் நாசமடையுமன்றோ ? அதனால்தான் கடவுள் விதி யென்பதை நியமித்து நம்முடைய நினைவுகளில் தலையிடச் செய்து நமது சிறுமையை நமக்கு ஓயாமல் அறிவுறுத்தி வருகிறார். நமது வாழ்க்கையாகிய காட்டை நாம் எவ்வளவு தான் வெட்டி அழகுப் படுத்தினாலும், அதில் விதியென்னும் புலியும், சிங்கமும், பாம்பும், தேளும், முட்களும், கற்களும் மேன்மேலும் காணப்படுகின்றன. விதிக்குக் கலெக்டரானாலும், கவர்னரானாலும் ஒரு பொருட்டோ? ஆசையோடு மோக்க நினைத்த ரோஜாப்பூவிதழில் கண்குத்தி நாகம் மறைந்திருந்ததைக் கண்டவரைப்போல நமது சாம்பசிவம் பெருந்திகைப்பும் மனக் குழப்பமும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாதவராய்த் தமது சாய்மான நாற்காலியையே சரணாகதியாக அடைந்தார். அன்று காலையில் பங்களாவிற்கு வரும்படி துரை தமக்கு உத்தரவு செய்திருந்ததையும் மறந்து பைத்தியம் கொண்டவரைப் போல உட்கார்ந்து விட்டார்.

கனகம்மாளுக்கு மாத்திரம் மேனகாவின் நாத்திமார்களின் மீதே சந்தேகம் உதித்தது. அவர்கள் செய்த துன்பங்களைப் பொறாமல் கிணற்றில் குளத்தில் வீழ்ந்து மேனகா உயிர் துறந்திருப்பாளோவென்று ஐயமுற்றாள். அருமைக் கண்மணி யான மேனகாவைத் தாம் இனிக் காண்போமோ காண மாட்டோமோ வென்று பெரிதும் சந்தேகித்தாள். அவளுடைய தேகம் பதைபதைத்து ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் துடித்தது. துயரமும் ஆத்திரமும் கோபமும் பொங்கி யெழுந்தன. அவளுடைய மெய்யும் மனமும் கட்டுக்கடங்கா நிலைமையை அடைந்தன. எத்தகைய அலுவலும் காரணமுமின்றி அங்குமிங்கும் திண்டாடிக்கொண்டிருந்தாள். மேனகாவைத் தேடுகின்றாளோ அன்றி சென்னைக்குப் பறந்து போக இரண்டு இறகுகளைத் தேடுகின்றாளோ வென்னத் தோன்றும்படி அறையறையாய்ப் புகுந்து புறப்பட்டாள். மேனகாவின் நாத்திமார் இருவரும் தனது கண்முன்னர் நிற்பதாகப் பாவித்து வெற்று வெளியை நோக்கிப் பல்லைக் கடித்து வைது கர்ச்சித்தாள்; காணப்படுவோரின் மீது சீறி விழுந்தாள். தனக்குத்தானே புலம்பினாள், அழுதாள், கதறினாள், பதறினாள், அயர்ந்தாள், சோர்ந்தாள், தடுமாறினாள், ஏங்கினாள், தள்ளாடினாள், வாய்விட்டு வைதாள், வயிற்றிற் புடைத்தாள், தெய்வங்களை யெல்லாம் தொழுதாள், “என் மேனகா எங்கு போனாளோ? என் செல்வம் தவிக்கிறதோ? என் தங்கம் பசியால் துடிக்கிறதோ! என் மணிப்புறா களைத்துக் கிடக்கிறதோ? என் மாணிக்கக்கட்டி எங்கு மறைந்து போய்விட்டதோ? என் பஞ்சவருணக் கிளி எந்தக் குளத்தில் மிதக்கிறதோ? ஐயோ! என் வயிறு பற்றி எரிகிறதே! ஈசுவரா! உன் இடிகளை அனுப்பி அந்தப் பாழாய்ப்போன முண்டைகளின் மண்டையை உடைக்க மாட்டாயா? தெய்வமே! உன் சக்கராயுதத்தை அனுப்பி அந்தக் கொடிய வஞ்சகரின் நெஞ்சைப் பிளக்கமாட்டாயா?” என்று சரமாரியாக எதுகை மோனைகளோடு பிதற்றிச் சொற்களை வாரி வாரி வீசினாள். அரற்றிப் பொருமினாள். அவளுடைய வதனம் கொல்லன் உலையைப் போலக் காணப்பட்டது. பழுக்கக் காய்ந்த இரும்பிலிருந்து தீத்திவலைகள் தெறித்தலைப் போலக் கோவைப் பழமாய்ச் சிவந்த கண்களினின்று தீப்பொறி பறந்தது. அவள் அடிக்கடி விடுத்த நெடு மூச்சு இருட்டைத் துருத்திக்கொண்டு காற்றை விடுதலைப்போலிருந்தது. வாயின் சொற்கள் சம்மட்டி அடிகளைப் போல, “மூச்சுவிடுமுன்னே முன்னூறு, நானூறு ஆச்சென்றால் ஐந்நூறு மாகாதா” என்றபடி செத்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து கொண்டிருந்தன. சொற்களின் கருத்திற் கிணங்க கைகளையும் உடம்பையும் அசைத்து அபிநயங் காட்டி எண்ணெயில் தை தை யென்று குதிக்கும் அப்பத்தைப் போல நிலை கொள்ளாமல் ஆடித் தவித்தாள். வாயில்லா ஜெந்துக்களான பாத்திரங்கள் உணவுப்பொருட்கள் முதலியவற்றிற்குமே அந்த நாள் விசனகரமான நாளாய் முடிந்தது. அத்தகைய நிலையில் வீட்டின் காரியங்களைத் தான் செய்வதாக அவளுக்கு நினைவு ; இங்கிருந்ததை அங்கு வைத்தல்; அங்கிருந்ததை இங்கு வைத்தல், அவ்வளவு காரியம் வீடு முற்றிலும் அலங்கோலம். மேனகா தன் கணவன் வீட்டைவிட்டுப் பிரயாணம் போனமையால் அன்று சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருட்களுக்கெல்லாம் தத்தம் இருப்பிடத்தை விட்டுப் பிரயாணம். அவளுடைய அபி நயங்களுக் கிணங்கப் பாத்திரங்கள் யாவும் பக்க வாத்தி யங்களாய் முழங்கின. அம்மிக்குழவி “திமி திமி தை தா” வென்று நாட்டியமாடியது. செம்புகள் உருண்டு போய்த் தவலைகளிடம் முறையிட்டன. தவலைகள் தக்காளிப் பழமாய் நசுங்கிப் போய்ச் சுவரில் முட்டி அதைத் தட்டி யெழுப்பின; சுவர்களோ தாம் நியாயாதிபதியான டிப்டி கலெக்டர் வீட்டிலிருந்தும், அம்மாளின் செய்கைக்கு அப்பீலில்லையே என்று வருந்தி வாய்விட்டாற்றின. அடுப்புகள் இடிந்தன. துடுப்புகள் ஒடிந்தன, அறைகள், ஜன்னல்கள் முதலியவை அவள் நடந்த அதிர்ச்சியால் நடுக்கு ஜுரங் கொண்டு நடுங்கின. அரிசியும் பருப்பும் சிதறி யோடின. ”பாழும் வயிற்றிற்கு இன்றைக்குக்கூடப் பிண்டமா?” என்று நினைத்த அம்மாள் அடுப்பில் தண்ணீரை வார்த்து அதற்கு நீராட்டம் செய்து வைத்தாள். மறைந்து கொள்ள இடமில்லாமல் ஓட்டின் மீது அஞ்சி நின்ற பூனைக்கூட்டி, அம்மாள் அடுப்பிற்கு அன்று விடுமுறை நாள் கொடுத்ததையறிந்து, அவளுக்குத் தெரியாமல் அதற்குள் மறைந்து அம்மாள் வருகிறாளோ வென்பதை அறிய இரட்டைத் தீவெட்டி போட்டதைப் போல கண்கள் மின்ன உற்றுப் பார்த்திருந்தது, அப்பூனைக்குட்டியைக் காட்டிலும் அதிகரித்த அச்சத்தையும், பெண்ணைப்பற்றிய விசனத்தையும் கொண்ட டிப்டி கலெக்டரின் மனையாட்டி தங்கம்மாள், மேனகா காணாமற்போனது பொய், தான் காணாமற் போனது நிஜமென்று செய்ய நினைத்தவளைப் போலக் கட்டிலிற்கடியில் மறைந்து துப்பட்டியால் தலை முதல் கால்வரையில் மூடிப் படுத்து டிப்டி கலெக்டர் தன்னையும் தேடும்படி செய்தாள். அந்தப் பெரும்புயலையும் மழையையுங் கண்டு அதிலிருந்து தப்ப நினைத்த ரெங்கராஜு தனக்கு வயிறு வலிக்கிறதென்று எதிரிலுள்ள சுருட்டுக்கட்டை இராமச்சந்திராவிடம் சொல்லி விட்டுக் கம்பி நீட்டினான்.

“என்ன ஆச்சரியம் இது! நான் பட்டணத்திற்குப் போனேனாம்! அவர்களிடம் சொல்லாமல் பெண்ணை அழைத்து வந்துவிட்டேனாம்! ஜெகஜாலப் புரட்டா யிருக்கிறதே! இந்தத் தந்தியை வேறு யாராயினும் அனுப்பி யிருப்பார்களா? இங்குள்ள நம்முடைய விரோதிகளின் தூண்டுதலினால் நடந்திருக்குமா? பெருத்த அதிசயமாய் இருக்கிறதே!” என்று சாம்பசிவம் தனக்கு எதிரிலிருந்த கம்பத்தோடு பேசினார். அதைக் கேட்ட தாய் “போடா! பைத்தியக்காரா! நம்முடைய தந்தி போய்ச் சேர்ந்து இரண்டு நாழிகையாயிருக்குமே. பொய்த் தந்தியா யிருந்தால் உடனே மறு தந்தி அனுப்பி யிருக்கமாட்டானா? இம்மாதிரி பொய்த் தந்தி அனுப்புவதால் யாருக்கு லாபம்? ஒன்றுமில்லை. நிஜமாய்த்தான் இருக்கும். அந்த முண்டைகள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களே; அந்தப் பைத்தியம் வீட்டை விட்டுப் போயிருக்கையில் பெண்ணை வெட்டிக் கொல்லை யிற் புதைத்துவிட்டு, அவனிடம் இப்படிப் பொய் சொல்லி யிருப்பார்களா!” என்று ஆத்திரமும் துடிதுடிப்புங் கொண்டு கூறினாள்.

சாம்ப – அவர்களுக்கு நம்முடைய குழந்தையிடத்தில் அவ்வளவு பகைக்கென்ன காரணமிருக்கிறது? அப்படி வெறுப்பவர்கள் இங்கிருந்தவளை அழைத்துப் போக வேண்டிய தன் காரணமென்ன? – என்றார்.

கனகம் – உன்னைப்போல படித்த முட்டாள் ஒருவனும் இருக்க மாட்டான். பணத்தாசை எதைத்தான் செய்யாது? அவள் உடம்பிலிருந்த நகைகள் மூவாயிரம் பெறுமே, அவைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? அதற்கா கத்தான் இருக்கலாம். என்னவோ எல்லாம் நாளைக்குக் காலையில் விளங்கப் போகிறது. இன்றைய பகலும் இரவும் போகவேண்டுமே! பாழாய்ப்போன ரயில் சாயுங்காலத் திலல்லவா பட்டணத்திற்குப் புறப்படுகிறது. நீ அங்கே போனவுடன் அவசரத் தந்தி அனுப்ப வேண்டும். பேசாம லிருந்து விடாதே – என்றாள்.

சாம்ப:- கலெக்டர் இன்று காலையில் ஒரு காரியமாக என்னை வரச்சொல்லி யிருந்தார். நான் வரவில்லையென்று அவருக்குக் கோபமுண்டாயிருக்கலாம். ரஜாக் கொடுக் கிறாரோ இல்லையோ தெரியவில்லை, கொடுக்காவிட்டால் என்ன செய்கிறது?

கனகம்:- இந்த அவசரத்திற்கு இல்லாமல், வேறு எதற்காகத்தான் ரஜா இருக்கிறது? சே! பெரிய துரை நல்லவராயிற்றே! அவசரமென்று நீ எழுதி இருக்கும் போது, நீ வரவில்லை யென்று ஏன் கோபிக்கிறான்? அவன் அவ்வளவு அற்பத்தன்மை உடையவனல்லன். உன்னைப்போலவும் உன்னுடைய தாந்தோனிராயனைப்போலவும் நடப்பா னென்று பார்த்தாயோ? துரைகள் அறியாமையால் ஏதாயினும் தவறு செய்வார்கள். நீங்களோ வேண்டு மென்று செய்பவர்கள். துரை ஒரு அடி வைத்தால் நீங்கள் ஒன்பதடி பாய்கிறீர்கள். தகப்பனுக்குத் திதி யென்று கோபாலசாமி அய்யர் ரஜாக் கேட்டதற்குத் துரை, “ஏன் ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாய் வைத்துக்கொள்ளக் கூடாதா?” என்று அறியாமையால் கேட்டான். தாலுகா குமாஸ்தா தனகோடிப் பிள்ளை தனக்கு சாந்தி முகூர்த்தம் என்று இரண்டு நாளைக்கு ரஜாக் கேட்டபோது, வேறு ஏஜென்டு வைத்து அதை ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டான். வெள்ளைக்காரரை நம்பலாம்; உங்களை நம்பக்கூடாது – என்றாள்.

அப்போது கிண் கிண்ணென்று பைசைகிளின் மணியோசை உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் தடதடவென்று சைகிளை உள்ளே உருட்டிக்கொண்டு வந்த கிட்டன் அதை யொரு புறமாக நிறுத்தி விட்டு நேராகச் சாம்பசிவத்தினிடம் சென்று தனது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை யெடுத்து மேஜை மீது வைத்தான். அவர் மிகுந்த ஆத்திரத்தோடு பாய்ந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தார். கனகம்மாளும் ரஜாக் கிடைத்ததோ இல்லையோ என்பதை அறிய ஆவல் கொண்டு துடி துடித்து நின்றாள்.

அவர் கடிதத்தைப் படிப்பதற்குள் நாம் அதைக் கொணர்ந்த கிட்டனைப் பற்றிய விவரத்தில் சிறிதறிவோம். அவன் தங்கம்மாளின் தம்பி என்பதைச் சொல்வது மிகையாகும். அவன் இருபத்திரண்டு வயதடைந்தவன். அழகிய சிவந்த மேனியையும் வசீகரமான பெண் முகத்தையும் பெற்றவன். அவன் தலையின் குடுமியை நீக்கி முன்மயிர் வளர்த்து அதை இரண்டாய் வகிர்ந்து விட்டிருந்தான். அவனுடைய நெற்றியில் சாந்துத் திலகமும், வாயிற் புகையிலை அடக்கியதால் உண்டான கன்னப் புடைப்பும் எப்போதும் குன்றின் மேல் விளக்காயிருந்து அவன் முகத்திற்கு அழகு செய்து கொண்டிருந்தன. அவன் கல்வி கற்கும் பொருட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் பல வருஷங்கள் சென்று புகையிலை போடுதல், பொடி போடுதல் முதலிய இரண்டு பரிட்சைகளிலும் முதல் வகுப்பில் தேறிவந்தான். அவனுடைய தந்தை சொற்பமான நிலத்தின் வருமானத்தில் ஜீவனம் செய்து வந்தவர். புத்திரன் கல்வி கற்கச்சென்றவன் ஆதலால் நிலச்சாகுபடி செய்தலைக் கற்கவில்லை. நிலச்சாகுபடி செய்தலும் இழுக்கான தொழிலென அவன் மதித்தான். குமாஸ்தா, கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகம் அவருடைய பெருமைக்குக் குறைவானது. அவற்றிலும் பெரிய உத்தியோகங்களைச் செய்யத் தேவையான உயர்ந்த பரிட்சைகளில் அவன் தேறவில்லை. ஆகையால், அவனுக்குத் தகுந்த உத்தியோகம் உலகத்தில் ஒன்றுமில்லை. இத்தகை யோருக்கு சாம்பசிவத்தைப் போன்ற மனிதர் வீட்டில் வந்திருந்து அதிகாரம் செய்து சாப்பிடுதலே உத்தியோகம். அவனுடைய கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டு அவனுடைய தந்தையும் அவனை அடிக்கடி கண்டித்தார். தவிர, அவனுக்குத் தேவையான காப்பியும் பலகாரங்களும் வேளைக்கு வேளை அங்கு கிடைக்கவில்லை. ஆகையால், சாம்பசிவத்தின் வீட்டில் சர்வாதிகாரியா யிருத்தல் அவனுக்குப் பரமபதமாய் இருந்தது. அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக்கட்டினான். அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான். உடம்பில் பிளானல் ஷர்ட், தோளில் பட்டு உருமாலை, தலையில் மகம்மதியர் தரிக்கும் நீண்ட அரபிக் குல்லா, கையில் வெள்ளி முகப்பு வைத்த சிறிய பிரம்பு முதலியவைகளே அவன் மனதிற்கு உகந்த ஆடையா பரணங்கள். இத்தகைய அலங்காரத்தோடு அவன் வெளிப்படுவானாயின், பன்னிரண்டு நாமங்கள் தரித்த வைதிகரான அவனுடைய தந்தை அவன் தமது மைந்தரென்று சத்தியம் செய்தாலும், அவரது சொல்லை எவரும் நம்பார். தவிர, அவன் தமது புத்திரன் என்பதை அவரே கண்டுபிடித்தல் முடியாது. ஆனால் சூது, கபடம், வஞ்சம் முதலியவற்றை அவன் அறியாதவன். முகவசீகரம் பெற்றவன். அவனுடைய கபடமற்ற தோற்றமும், குழந்தைச் சொற்களும், அவன் மீது யாவரும் விருப்பங்கொள்ளச் செய்தன. சாம்பசிவம் தமது மனைவியின் மீது காதல் கொண்டிருந்தார். கிட்டான் மீதோ மோகங் கொண்டிருந்தார். தங்கம்மாள் சாம்பசிவத்தைக் காணாமல் ஒரு பகல் சகிப்பாள்; தமது செல்லத் தம்பியான கிட்டனைக் காணாமல் பத்து நிமிஷமும் சகித்திராள். வீட்டின் விஷயங்களில் அவ்விருவரும் அவன் சொல்லை மிக்க மதித்து அதன்படியே நடந்து வந்தனர். வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குதலிலோ மற்ற தேவைகளைக் கவனித்தலிலோ அவன் எஜமான், அவன் சித்தமே மந்திரி. அவனுக்குப் பலவகைப்பட்ட மனிதரென்னும் வேறுபாடே கிடையாது. தம் வீட்டுக் குதிரைக் காசாரியோடும் சகோதர உரிமை பாராட்டி அவனோடு கட்டிப் புரளுவான். வாசற் பெருக்கி நாகம்மாளின் வெற்றிலை பாக்குப் பையைப் பிடுங்கி அதிலிருந்து புகையிலை எடுத்துப் போட்டுக்கொள்வான். அவன் மனதில் ஒரு இரகசியம் நிற்பதில்லை. பெருத்த கொலை, கொள்ளை முதலிய கேஸ்களில் சாம்பசிவம் முதல் நாளே தீர்மானம் எழுதிவிடுவார். கிட்டன் அதை வேடிக்கையாகப் படித்துப் பார்த்துவிட்டு இரகசியமாக சேவகர்களிட மெல்லாம் சொல்லிவிடுவான். அவர்கள் அந்தச்சரக்கை வைத்துக்கொண்டு தமது திறமைக்குத் தகுந்தபடி வர்த்தகம் செய்து டிப்டி கலெக்டர் பெயரைச் சொல்லி பெருத்த பொருள் தட்டி விடுவார்கள். அதனால் டிப்டி கலெக்டர்லஞ்சம் வாங்குகிறார் என்று பெருத்த வதந்தி கிளம்பி ஊரெல்லாம் அடிபட்டது. அவர்மீது ஆத்திரங் கொண்டவர் யாவரும் அதை ஒன்றிற்குக் கோடியாய் வளர்த்துப் பேசி வந்தனர்.

இத்தகைய குண வொழுக்கங்களைக் கொண்ட யௌவனப் புருஷனான கிட்டன் கொடுத்த கடிதம் பெரிய கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்தது என்பதைக் கூறுதல் மிகையாகும். அதைப் படித்த சாம்பசிவத்தின் முகம் மாறியது. கோபத்தினால் தேகம் துடித்தது. பெரிய கலெக்டர் அங்கி ருந்தால் அவருடன் கைக்குத்துச்சண்டைக்குப் போயிருப்பார். என்ன செய்வதென்னும் குழப்பமும் கோபமும் ஒன்று கூடி அவரைப் பெரிதும் வதைத்தன. மதிமயக்கங் கொண்டு திரும்பவும் தமது நாற்காலியில் சாய்ந்து விட்டார். ரஜாக் கொடுக்கப்படவில்லை என்று உணர்ந்த கனகம்மாளின் நிலைமையை வருணித்தல் எளிய காரியமன்று. குரங்கு இயற்கையில் சுறுசுறுப்பானது. அது மரத்திலேறி கள்ளைக் குடித்து விட்டது. உச்சியிலிருந்த பேயொன்று குரங்கைப் பிடித்துக்கொண்டது. கீழே இறங்குகையில் தேளொன்று அதைக் கொட்டி விட்டது. அத்தகைய நிலைமையில் அக்குரங்கு எவ்வித ஆடம்பரம் செய்யுமோ அவ்வாறு கனகம்மாள் காணப்பட்டாள். அவளுடைய கோபமும், ஆத்திரமும் குதிப்பும் ஆயிரம் மடங்கு பெருகிப் பெரிய கலெக்டர் மீது திரும்பின. அவனுக்கு சகஸ்ரநாம (1000- பெயர்களால்) அருச்சனை செய்யத் தொடங்கினாள். அது பேரிடி மின்னல்களுடன் ஏழு மேகங்களும் ஒன்று கூடி அந்த மாளிகைக்குள் பொழிந்ததை யொத்தது.

அப்போதே அந்த மழைக்கு அஞ்சி அதில் நனையாமல் இருக்க முயல்பவனைப் போல சுவரோரத்தில் பதுங்கி, இடையில் அணிந்த வஸ்திரத்தை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு மெல்ல ஒரு சேவகன் டிப்டி கலெக்டர் இருந்த இடத்திற்கு வந்தான். அவனைக் கண்ட சாம்பசிவம் கோபத்தோடு உரத்த குரலில், “ஏனடா! என்ன சங்கதி?” என்று அதட்டிக் கேட்டார். மழையில் நனைந்தவனுக்கு நடுக்கம் உண்டாதலைப்போல , அவனுடைய கை, கால்கள் அச்சத்தினால் வெடவெடென்று நடுங்கின. துணிந்து அவனது வாய் வரையில் வந்த சொல், திரும்பித் தொண்டைக்குள் போய்விட்டது. அவர் மேலும் இனுனொருமுறை முன்னிலும் ஓங்கி அதட்டிக் கேட்க, அவன் “சின்ன எஜமான்; சின்ன எஜமான்” என்று கையைப் பின்புறம் கட்டினான்.

கிட்டனை வேலைக்காரர் யாவரும் சின்ன எஜமான் என்று குறித்தல் வழக்கம். ஆதலால் கிட்டன் மீது ஏதோ கோட் சொல்ல அவன் வந்தான் என்று நினைத்த சாம்பசிவம், “ஏனடா கழுதை! அவன் மேல் என்னடா சொல்ல வந்தாய்? செருப்பாலடி நாயே! இதுதான் சமயமென்று பார்த்தாயோ? போக்கிரிக் கழுதே! ஓடு வெளியில் என்று கூறிய வண்ணம் எழுந்து அவனை அடிக்கப் பாய்ந்தார். அவன் நெருப்பின் மீது நின்று துடிப்பவனைப் போல தத்தளித்துத் தனது பற்களை யெல்லாம் ஒன்றையும் மறையாமல் வெளியிற்காட்டி, “இல்லை எஜமான்! ராயர் எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

”அவன் யாரடா ராயன்? எந்தக் கழுதையையும் இப்போது பார்க்க முடியாது! போ வெளியில்” என்றார்.

தன் மீது அடிவிழுந்தாலும் பெறத் தயாராக நின்ற சேவகன் மேலும், “தாலுகா எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

அதைக் கேட்ட சாம்பசிவத்தின் கோபம் உடனே தணிவடைந்தது. “யார்? தாசில்தாரா வந்திருக்கிறார்? உள்ளே அழைத்துவா!” என்றார்.

உட்புறத்தில் நடந்த அழகிய சம்பாஷணையை முற்றிலும் கேட்டிருந்த நமது தாந்தோனிராயர் பெரிதும் வெட்கினார்; அவருடைய தேகம் குன்றியது; என்றாலும் அக் குறிகளை மறைத்து, ஒன்றையும் கேளாதவரைப் போல எத்தகைய சலனமும் இல்லாத முகத்தோற்றத்தோடு உள்ளே நுழைந்தார். டிப்டி கலெக்டரிடத்தில் அந்தரங்க அன்பையும், மரியாதை யையும், பணிவையும் கொண்டவரென்று அவருடைய முகங் காட்டியது. “காலை வந்தனம் ஐயா!”(Good Morning Sir) என்னும் ஆங்கிலச் சொற்கள் அவருடைய வாயிலிருந்து வந்தன. அதே காலத்தில் இந்து மதக் கொள்கையின்படி கைகளைக் குவித்தார். அவர் ஒன்றற் கொன்று பொருந்தாக் காரியங்களைச் செய்யும் மனிதர் ஆதலின் அவரிடம் விழிப்பாயிருக்க வேண்டு மென்று அவருடைய வந்தனமே டிப்டி கலெக்டரை எச்சரித்ததைப் போல இருந்தது.

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது

– மேனகா (நாவல்) – முதல் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *