ருசி கண்ட பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 166 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கமலம், நான் எவ்வளவோ தடவை சொல்லி வாய் வலியெடுத்ததுதான் பிரயோசனம். படிப்பில் உனக்குக் கொஞ்சங் கூடப் பிரியமில்லை. அந்தக்கதைப் புஸ்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மாசம் ஆகிறது. இன்னும் வாசித்து முடித்த பாடில்லை. என்னுடைய மனைவி வாசிக்க வேண்டுமென்று கெளரவமாக மட்டும் சொல்லி வாங்கி வந்து விட்டேன். இங்கே உனக்கு அடுப்பு ஊதுவதில் தான் பிரியம் இருக்கிறதே ஒழிய ஒழிந்த நேரங்களில் எதையாவது எடுத்து வாசிப்போம் என்ற எண்ணமே இருக்கிறதில்லை. 

“என்னை நீங்கள் குற்றம் கூறுவதில் என்ன பிரயோ சனம்? எனக்குப் படிப்பதில் பிரியம் இல்லையா? தினத் துக்கு ஒரு புஸ்தகம் வாசித்துத் தீர்த்து விட மாட்டேனா?’ இங்கே வருவதற்கு முன் எங்கள் அகத்தில் எவ்வளவோ புஸ்தகங்கள் வாசிக்கவில்லையா? என்ன செய்வேன்!’ அகத்து வேலையை எல்லாம் செய்துவிட்டு வீண் பொழுது போக்குவதில் எனக்குக் கொஞ்சங் கூடப் பிரியமில்லை. உங்களுக்கு நான் பதில் சொல்வேனா? அத்தைக்குப் பதில் சொல்வேனா? அவர்களுக்குப் புஸ்தகத்தின் ருசி கொஞ்ச மாவது தெரியவில்லை. அந்த ரஸம் தெரிந்தால் என்னை படிக்க வேண்டாமென்று தடுப்பார்களா? அவர்கள் மேலும் குற்றம் இல்லை. இப்பொழுது வேண்டுமானால் கொஞ்சம் படிக்கிறேன். 

“ஆமாம். போதும் நீ படித்தது. கால் வலிக்கிறது. கொஞ்சம் காலைப் பிடி” 


கமலம் என்ன செய்வாள் பாவம்! பிறந்தகத்தில் சல்வமாய் வளர்ந்த பெண். அறுபது நாழிகையும் புஸ்தகமும் கையுமாக இருப்பாள். அவள் வாசியாத தமிழ்க் கதைகள் இல்லை; பாராத தமிழ்ப் பத்திரிகை இல்லை. புத்தகம் வந்தவுடன் வேலைகளைச் செய்து ஓய்ந்த நேரங்களில் படிக்க ஆரம்பிப்பாள்; அவளுடைய மாமியார் வருவாள்: ‘“என்னடீ அது; இரண்டாம் வேளைக்கு தோசைக்கு நனைத்ததை மறந்து விட்டாயோ? அரைக்கிறது தானே அதை? அதற்குள்ளே என்ன வரசிக்க உட்கார்ந்து கொண்டாய்? உன் அகமுடையானுக்கு குமாஸ்தா வேலை பார்க்கப் போகிறாயோ? இல்லை, வாத்தியாரிச்சி வேலைக்குப் போகப் போகிறாயோ? தலைக்கு மேல் காரியம் இருக்கிறது; அதற்குள்ளே வாசிப்பு என்ன வேண்டி இருக்கிறது?” என்பாள். 

“இல்லை, அத்தை, இன்னும் கொஞ்சம் ஊறினால் நன்றாய் அரைக்கலாமே என்று நினைத்தேன்.” 

“இன்னும் என்ன ஊற வேண்டும்? காலையில் எட்டு மணிக்கே நனைத்தது இன்னும் ஊறாமல் கிட க்கிறதா? வாசித்து வாசித்து இந்த வாய்தான் பழகியிருக்கிறது. சோம்பலுக்குக் குறைச்சல் இல்லை.” 

“இதோ அரைத்து விடுகிறேன்.” 

ஒரு நாள் நடைபெறும் காட்சி இது. 

எல்லா வேலையும் குறைவில்லாமல் செய்து விட்டாள் கமலம். தோசைக்கு அரைத்தாயிற்று. புருஷன் துணி களையெல்லாம் மடித்து வைத்தாயிற்று. அத்தைக்குப் பிரியமான மொந்தம் பழம் வாங்கி வைத்தாய் விட்டது. தன் புருஷன் இரண்டு வாரங்களுக்கு முன் வாங்கிக் கொண்டு வந்து வைத்த ‘மங்கையர்க் கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற புஸ்தகத்தை வாசிக்கலாமென்று உட்கார்ந்தாள். ஐந்தே நிமிஷம் இருக்கும். பக்கத்து வீட்டிற்கு வம்பளக்கப் போயிருந்த மாமியார் வந்து விட்டாள். 

“தெரியுமே எனக்கு! அந்தப் பாழும் புஸ்தகம் உன்னைக் குட்டிச் சுவராக்க வந்திருக்கிறதென்று அப்பொழுதே சொன்னேனே. தலையை வாரிக் கொள்ளவில்லை; நெற்றியைக் கழுவிக் கொள்ளவில்லை. அகமுடையான் வந்தால் முன்னாலே போய் மூதேவி மாதிரி நிற்கத் தெரிகிறது. பெண்களுக்கு வேண்டிய நாஸுக்கு வேண்டாமோ! இந்தப் புஸ்தகப் பிசாசு எப்பொழுதுதான் ஒழியுமோ தெரியவில்லை” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மாமியார். 

“உங்கள் பிள்ளைதான் இதை வாசித்துப் பார்” என்று சொன்னார். 

“அவன் சொல்லுவான் ; நீயும் வாசிப்பாய். பெண் களுக்கு ஒரு வரம்பு இல்லையோ? அவன் நாளைக்கு ஆபீஸுக்கு வந்து உத்தியோகம் பார்க்கச் சொல்கிறான். நீ போகிறதுதானே? நான் சொல்லுகிறது உனக்குக் காதில் ஏறுகிறதோ? அவன் சொல்கிறானென்று ஒரே அடியாக வாயை அடைக்கப் பார்க்கிறாய். அவன் நான் பெற்ற பிள்ளை தானே?” 

விஷயம் ஆபாஸமாகப் போய்விடுமென்று கமலம் யயந்தாள். ஆகையால் தன் மாமியார் கண்முன் வாசிப் இதையே நிறுத்தி விட்டாள். கணவனிடம் அதிகமாக ஒன்றும் சொல்ல மாட்டாள். அவனை அன்பினால் சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது. ஆனாலும் அடிக்கடி அவன் படிக்கும் படி வற்புறுத்தி வந்தபடியால் உண்மையை ஒருவாறு கூறி விட்டாள். 

நாராயணன் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டான். அவனுடைய தாய் அவனிடத்தில் அளவற்ற பிரியம் கொண்டவள். கமலத்தினிடத்திலும் பிரியமுடையவள்தான் ஆனால் அவள் புஸ்தகத்தைத் தொடுவதை மட்டும் பார்க்கச் சகிக்க மாட்டாள். தாயைக் கோபித்துக் கொள்ள நாராயண னுக்குப் பிரியம் இல்லை. மற்ற எல்லா விஷயங்களிலும் அவள் காட்டி வரும் அன்பை அவன் மறக்க வில்லை, தன் மனைவியின் கல்வி பயன்படாதொழிவை தை எண்ணி வருந்தினான். என்ன செய்வது? ஒன்றும் தோன்ற வில்லை. 


சாயங்காலம் ஆறு மணி. கையில் தமிழ்ப் பத்திரிகையுடன் வீட்டில் நுழைந்தான் நாராயணன். தினமும் இங்கிலீஷ் பத்திரிகை- ‘ஹிந்து’ வாவது வேறு ஏதாவது வாங்கி வருவது வழக்கம். 

“ஏது இன்று தமிழ்ப் பத்திரிகை வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டாள் கமலம். 

“இனிமேல் தினமும் அதுதான் வாங்கப் போகிறேன். 

“ஏது, புதிதாகத் தமிழபிமானம் வந்திருக்கிறதா?”

“இல்லை ; உன்னை உத்தேசித்துத்தான் வாங்கி வந்தேன் : எல்லாம் பின்னால் தெரியும்.” 


”இன்றைக்கு என்ன ‘பேப்பரில்’ விசேஷம் ?” என்று கேட்டாள் நாராயணன் தாய். 

“இன்றைக்கா ? கும்பகோணத்தில் ஒரு பெரிய திருட்டாம். அதைப்பற்றிய விவரம் வந்திருக்கிறது” என்றான் நாராயணன். 

“எங்கே, வாசி பார்க்கலாம்” என்றாள் தாய். 

நாராயணன் வாசித்தான். அவன் தாய் மிகவும் ஊக்கத்தோடு கேட்டு வந்தாள். 

நாராயணன் தமிழ்ப் பத்திரிகை வாங்கி வர ஆரம்பித்த பின்பு சாப்பிடும் போதும் மற்றச் சமயங்களிலும் தன் தாய்க்குப் புரிகின்ற விஷயங்களையும் உலகத்தில் நடக்கும் விஷயங்களையும் எடுத்துச் சொல்வான். கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி, பின்பு அந்தச் சமாசாரத்தைப் பற்றிய விவரம் பத்திரிகையில் இருந்தால் படித்துக் காண்பிப்பான்; புரியாத விஷயங்களை விளக்கிச் சொல் வான். இந்த வழக்கம் மூன்று மாசமாக நடக்கிறது. நான் தளறினாலும் சமாசாரங்களைக் கேட்பதில் அவன் தாய் தவறுவதில்லை. நாராயணன் ஒரு சமாசாரத்தைப் பாதி வாசித்து விட்டு வேலை இருக்கிறதென்று போய் விடுவான். கமலம் பாக்கிப் பாதியைப் படித்துக் காட்டுவாள். இப்படித் தினம் பத்திரிகை வாசிப்பதில் இருந்து வாரப் பத்திரிகைகள் மாதப் பத்திரிகைகள் வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கதைப் புஸ்தகங்கள் வாசித்துக் கேட்கும் அளவுக்கு வந்து விட்டாள் நாராயணன் தாய். இப்பொழுதெல்லாம் நாராயணன் தன் தாய் பக்கத்திலேயே வருவதில்லை, எல்லாம் கமலந்தான். தான் வாசிக்கா விட்டாலும் தன் மாமியாருக்காகவாவது வாசித்தாக வேண்டும். 


“கமலம், என்ன பண்ணுகிறாய்?’ 

“அடைக்கு நனைக்கப் போகிறேன்.” 

“போதும், போதும்; ரவை உப்புமா பண்ணிவிடலாம். அந்தப் புஸ்தகத்தில் பாக்கி இருக்கிறதை இன்றைக்கு, வாசித்துக் காட்டி விடு.” 

“ரவை இல்லையே!” 

“இல்லா விட்டால் போகிறது; அடைக்கு நனை, பரவாயில்லை. ஆனால் நீ அரைக்க வேண்டாம், நான் அரைத்துக் கொண்டே இருக்கிறேன். நீ கதையை வாசித்துக் கொண்டே இரு!” 

இப்படியும் ஒரு காலம் வருமென்று கமலம் நினைத்திருப்பாளா? அவளுடைய மாமியார் ருசி காணாதபோது புஸ்தகத்தை வெறுத்தாள்; இப்பொழுது அவள் ருசிகண்ட பூனையல்லவா?

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *