வெண்ணிலவில் நடந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2024
பார்வையிட்டோர்: 324 
 
 

சில வருஷங்களுக்கு முன்னால் சென்னை ஹைகோர்ட்டில் நடந்த பிரபல மோசடி வழக்கைப் பற்றி நேயர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் பிரசித்த வழக்கில் ஜூரிகளாய் அமர்ந்து அபிப்பிராயம் தெரிவித்த ஒன்பது பிரபலஸ்தர்களில் ஸ்ரீமான் கோசல்ராமும் ஒருவர். ஸ்ரீ கோசல்ராம் நேற்று முன் தினம் என்னுடைய ஜாகையைத் தேடி வந்திருந்தார். சில அச்சடித்த தாள்களையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அந்தத் தாளைப் பார்த்ததுமே எனக்கு விஷயம் விளங்கி விட்டது!

நகர சபைத் தேர்தலுக்கு ஸ்ரீ கோசல்ராம் ஓர் அபேட்சகராய் நிற்கிறார் என்கிற விஷயம் அவருடைய உள்ளங் கையிலிருந்த நோட்டீஸ் நெல்லிக்கனியைப் போல் விளக்கிற்று!

“வாருங்கள், உட்காருங்கள் ; ஏது இவ்வளவு தூரம்?” என்று வந்தவரை உபசரித்தேன்.

“விசேஷம் ஒன்றுமில்லை. இந்த டிவிஷனில் தாங்கள்தான் எனக்கு பக்க பலமாக இருந்து வேலை செய்ய வேண்டும்?” என்று கேட்டுக் கொண் டார்.

“ரொம்ப சரி; ஆனால் இந்த டிவிஷன் வாசி கள் பொல்லாதவர்களாயிற்றே! தங்களை எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்பார்களே!” என்றேன்.

”எதற்காகவா? நன்றாய்க் கேட்டீர்கள்? நான் இந்த டிவிஷனுக்கு கௌன்ஸிலராக வந்ததும் முதல் காரியமாக இந்த டிவிஷனை சொர்க்கமாக்கி விடமாட்டேனா?”

“அப்புறம்………”

“ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்? என் வார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“பேஷாக உண்டு; ஆனால், போன தேர்தலின் போது கூட இந்த டிவிஷன் கௌன்ஸிலர் இப்படித் தான் சொல்லி விட்டுப் போனார். அப்புறம் அந்த மகானுபாவர் இந்தப் பக்கம் தலைகாட்ட வில்லை. இதெல்லாம் எனக்குத் தெரியாததும் அல்ல. ‘கலியாணப் பொய்’ என்பதைப் போல் ‘எலெக்ஷன் பொய்’ என்பதும் சகஜமான விஷயம் என்பதை நான் அறிவேன். அதனால் தான்…” என்றேன்.

“அப்படியில்லை; ஐயா! மற்றவர்களைப் போல் மனச்சாட்சிக்கு அஞ்சாதவன் நான் அல்ல…….” — என்று உறுதி கூறினார் கோசல்ராம்.

”அப்படியா? மனச்சாட்சிக்கு பயந்து தாங்கள் அப்படி என்னத்தைச் செய்து விட்டீர்கள்?” என்று கேட்டேன். அவ்வளவு தான்; ஸ்ரீ கோசல்ராம் ஒரு பெரிய கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்தக் கதையை இங்கே பெயரையும் சம்பவங் களையும் மட்டும் சற்று முன் பின்னாக மாற்றி அமைத்து என்னுடைய சொந்த பாணியில் எழுதி யிருக்கிறேன். கதையைப் படித்து முடித்ததும் கோசல்ராம் தம்முடைய மனச்சாட்சிப்படி நடந்து கொண்டாரா இல்லையா என்பதை நேயர்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.


இரவு சுமார் பத்து மணியிருக்கும். வட்ட வடிவான வானத்துச் சந்திரன் தன்னுடைய பால் போன்ற அமுத நிலவைப் பூமியில் வர்ஷித்துக் கொண்டிருந்தான். பூந்தமல்லி ஹைரோடு, சர்க்கார் பஸ்களின் ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற சமயம். அங்கங்கே ஓரிரண்டு பங்களாக்களில் மட்டும் மின்சார விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது.
நேயர்கள் தயவு செய்து பூந்தமல்லிச் சாலையி லிருந்து வடக்குப் பக்கம் புரசை-வாக்கத்தை நோக் கிப் பிரிந்து செல்லும் பாதையின் மீது தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் நமது கதாநாயகர் ஸ்ரீ வேதநாயகம் இப்போது மேற்படி ரஸ்தாவில் தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

ஆறு வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவித்த பிறகு, இன்று விடுதலை பெற்றுத் தம்முடைய சொந்த வீட்டை நோக்கிச் செல்கிறார்.

‘நல்லவர்களுக்கு இது காலமில்லை என்று கூறுவது ஸ்ரீ வேதநாயகம் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிருந்தது. அவர் நல்லவராகப் பிறந்ததாலேயே தான் ஆறு வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதாயிற்று. அந்தக் கதையைத்தான் இங்கே சொல்லப் போகிறேன், கேளுங்கள் :

ஸ்ரீவேதநாயகத்துடன் பால்யம் முதல் சேர்ந்து படித்த ஒரு நண்பன், பின்னால் இவருடன் சேர்ந்தே வியாபாரம் செய்தான். சாது மனிதரான வேத நாயகம் அந்த நண்பனைக் கடைசி வரையில் நம்பி மோசம் போனார். அவனுடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்தியதின் பலனாகக் கடைசியில் ஒரு மோசடி வழக்கில் அகப்பட்டுக் கொண்டார். வழக்கு விசாரணைக்கு வந்த சமயம் அந்தக் கடும் சித்தம் படைத்த கிராதகன் வேதநாயகத்தை வம்பில் இழுத்துவிட்டு விட்டான். அவன் மட்டும் மனம் வைத்திருந்தால் வேதநாயகத்தின் மீது குற்றமில்லை என்று ருசுப்பித்திருக்கலாம். ஆனால், அந்த இரக்கமற்றவன் கோர்ட்டில் விசாரணை நடந்தவரை வாயைத் திறக்கவேயில்லை. அவன் மட்டும் வாயைத் திறந்து உண்மையைச் சொல்லியிருந்தால் வேதநாயகம் அனுபவித்த ஆறு வருஷ சிறைவாசத்தை அவனல்லவா அனுபவித்திருக்க வேண்டும்? அதற்கு அஞ்சியே அந்தக் கிராதகன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் தன்னுடைய தடித்த உதடுகளை மடித்துக் கொண்டு பொம்மை போல் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

சரி; அதோ, நமது கதாநாயகர் வெகு தூரம் போய் விட்டார். அவரைப் பின் தொடர்ந்து பார்க்கலாம். பூந்தமல்லிச் சாலைக்கும், புரசைவாக்கத்துக்கும் மத்தியில் உள்ள ஒரு விசாலமான பங்களாவுக்குச் சற்று தூரத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. ஸ்ரீ வேதநாயகம் அந்த மரத்தடியில் போய் நின்று கொண்டார்.

ஆறு வருஷம் சிறை வாழ்க்கை காரணமாக அவர் மனோபலம் குறையவில்லை என்றாலும், தேக பலம் வெகுவாகக் குறைத்து விட்டது. அவருடைய உடையெல்லாம் பாழ்பட்ட தோற்றம் அளித்தன.

ஆலமரத்தடியில் நின்ற வண்ணம் வேதநாயம் அருகாமையில் தெரிந்த தம்முடைய பங்களாவை ஆவல் நிறைந்த கண்களுடன் நோக்கினார். ஆம்; அந்த பங்களா அவருடையது தான். பங்களாவின் தோற்றம் அவருக்குப் பரம வேதனையை உண்டாகிற்று .

தம்முடைய கேவலமான ஆடைகளையும், அந்த பங்களாவின் கம்பீரமான தோற்றத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார். பங்களாவின் மேல் மாடியில் இருந்த முகப்பு அறையிலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்த அறைக்குள்ளே இருந்த கட்டிலின் மீது வேதநாய கத்தின் மனைவி சோகத்துடன் படுத்திருந்தாள். அந்த திக்கற்ற ஸ்திரீயின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

வேதநாயகம் ஒரு கணம் தமது மண்டையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மனைவி, தன்னை இந்தக் கோலத்தில் இந்த சமயத்தில் இங்கே பார்க்க நேர்ந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? சிறைக்குப் போய் வந்தவன் என்பதற்காகக் கேவலமாக நினைப்பாளோ?

வேதநாயகத்தின் நெஞ்சிலும் வயிற்றிலும் சங்கடமும் பசியும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருந்தன .

காலையில் விடுதலை பெற்றவர் பகல் ஒரு மணி சுமாருக்கு ஏதோ கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டார். அப்புறம் இதுவரை ஒன்றும் சாப்பிடவே யில்லை.

அடுத்தபடியாக, வேதநாயகத்துக்குத் தம்முடைய மகள் ரஞ்சனியின் ஞாபகம் வந்தது. குழந்தை ரஞ்சனிக்கு இப்போது இருபது வயது இருக்கலாம். தான் சிறை சென்ற போது ரஞ்சனி விவரம் தெரியாத சிறுமியா யிருந்தாள். இப்போது வயது வந்த யுவதியா யிருப்பாள் ரஞ்சனி தன்னைப் பற்றித் தாயாரிடம் விசாரித்திருப்பாள். தாயார் என்ன பதில் சொன்னாளோ?

இவ்வாறெல்லாம் மாறி, மாறி நினைத்து வெட்கப்பட்டார் வேதநாயகம். பிறகு மனதைத் தேற்றிக் கொண்டார். தம் சொந்த வீட்டுக்குள் நுழைவதற்கு ஏன் இத்தனை லஞ்ஜைப்பட வேண்டும்?….

இதற்குள் சாலைப் பக்கம் மோட்டார் சைகிள் ஒன்று வரும் சப்தம் கேட்டது.

அப்போ தெல்லாம் சென்னை நகரத்தில் இராக் காலத்தில் திருடர்கள் கிலி அதிகமாயிருந்ததால் கீழ்ப் பாக்கம் ஸி.ஐ.டி. போலீஸ்காரர் ஒருவர் ரோந்து போய்க் கொண்டிருந்தார். தமது மோட்டார் சைகிளின் பயங்கர அலறலைக் கேட்டு விட்டுத் திருடர்கள் சிதறி ஓடிப்போய் விடுவார்கள் என்பது அந்த ஸி.ஐ.டி. யின் திடமான அபிப்பிராயம்!

மோட்டார் சைகிளின் ஓசையைக் கேட்ட வேதநாயகத்தின் மனம் பீதியினால் துணுக்குற்றது. ஒரு வேளை அந்தப் போலீஸ்காரன் தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து விட்டு, திருடன் என்று பிடித்துக் கொண்டு போனாலும் கேள்வி முறை கிடையாது. அப்புறம் மறுபடியும் இந்த ஜன்மத்தில் மனைவியையும் மகளையும் கண்ணால் கூடப் பார்க்க முடியாது என்று பயந்தவராய் சட்டென்று ஆலமரத்துக்குப் பின்னால் நிழலோடு நிழலாக ஒட்டி நின்றார். நல்லவேளை! மோட்டார் சைகிள் வேகமாகப் பறந்து மறைந்தது.

வேதநாயகம் பெருமூச்சு விட்டுத் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். திருடனைப் போல் இப்படியெல்லாம் ஏன் பயந்து நடுங்க வேண்டும்? பகிரங்கமாகத் தம் சொந்த வீட்டுக்குள் நுழைய இத்தனை தயக்கம் என்னத்திற்கு?

இந்தக் காரியம் செய்வதற்கு இடையூறாக ஒரே ஒரு எண்ணம் தான் குறுக்கிட்டது. அது வேறு ஒன்றுமில்லை; தன் மீது அகாரணமாகப் பழிசுமத்தி மோசடி வழக்கில் மாட்டி வைத்துச் சிறைக்கு அனுப்பிய அந்தக் கொலைபாதகனை வஞ்சம் தீர்க்க எண்ணியது தான்.

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது அந்தப் பாதகன் வாய்மூடி மௌனியாக உட்கார்ந்திருந்தானல்லவா? அவன் தொண்டையி ஒரு வார்த்தை கூட அல்லவா கிளம்பவில்லை. அவனைத் தேடிப்பிடித்து அவனுடைய அதே தொண்டையைத் தம்முடைய சொந்தக் கைகளாலேயே திருகிப் போட வேண்டுமென்று பதை பதைத்தார்.

ஆனாலும், அப்படிச் செய்வதற்கு முன்னால் தம்முடைய சொந்த வீட்டையும், மனைவியையும் கண்ணுக்குக் கண்ணான ரஞ்சனியையும் ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட விரும்பினார்.

வீட்டுக்குள் தைரியமாகச் சென்று பார்ப்பதற்கு முன்னால், முதல் காரியமாக அந்தக் கிராதகனைக் கொன்று விட்டே வரவேண்டு மென்று அவர் கைகள் துடியாய்த் துடித்தன.

அதே உள்ளத்தில் இன்னொரு எண்ணமும் தோன்றி முதலில் எழுந்த கொடூர எண்ணத்தைச் சவுக்கடி கொடுத்து அடக்கியது. இத்தகைய மனப்போராட்டத்துடன் வேத நாயகம் இன்னது செய்வதென்று புரியாமல் சாலை யோரத்து ஆலமரத்துக் கடியிலேயே வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

வேதநாயகத்தின் கண்கள் எதேச்சையாகச் சாலையிருந்த திக்கை நோக்கியது. ஆகா ! இது என்ன ஆச்சரியம்!

வேதநாயகம் யாரைப் பற்றி இத்தனை நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்தாரோ, அந்த மகாபாதகன் யாரோ ஒரு பெண்ணுடன் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தான். ஆகா ! இத்தனை நேரத்தில் எங்கே செல்கிறான்? பக்கத்தில் அவனுடன் குதூகலமாகச் சிரித்துக் கொண்டும் சல்லாபித்துக் கொண்டும் செல்லும் பெண்மணி யார்? அந்தப் பெண்ணின் முகத்தில் இளமையும் அழகும் பொலிவுற்று விளங்கியது. சிரிக்கும் போது அவளுடைய வெண்ணிறப் பற்கள் சந்திர வெளிச்சத்தில் முத்துப் போல் பிரகாசித்தான். ஒரு வேளை ரஞ்சனியா யிருக்குமோ? இந்த எண்ணம் வேதநாயகத்தின் உள்ளத்தில் எழுந்தபோது, அவரைச் சுற்றிலும் எங்கெங்கும் அந்தகாரம் சூழ்ந்தது. பின்னர் ஆயிர மாயிரம் நட்சத்திரங்கள் அவர் தலையைச் சுற்றிக் கிளம்பி மின்மினிப் பூச்சிகளைப் போல் பறந்து உதிர்ந்தன. ஐயோ ! என்னுடைய மகள் ரஞ்சனியா இப்படிச் செய்கிறாள்? அடி பாவி! என்னுடைய ஜன்ம சத்துரு வான கிராதகனிடமா சிநேகம் கொண்டிருக்கிறாய்? வேதநாயகத்துக்கு அப்படியே ரஞ்சனி மீது பாய்ந்து அவளுடைய தொண்டையைத் திருகலாமா என்று தோன்றியது. ஆனால், அப்படிச் செய்ய வில்லை. இன்னும் சற்றுப் பொறுத்து மேலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினார்.

அவர் நினைத்தபடியே அவள் ரஞ்சனிதான். அந்தப் படு பாதகனோடு வேதநாயகத்தின் வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள். ஆகா ! எத்தனை நெஞ்சழுத்தம்?. இருவரும் வீட்டுக்குள் நுழைந்து பின் கட்டுப் பக்கம் சென்று விட்டார்கள்.

வேதநாயகம் திகைப்பினாலும் குரோதத்தினாலும் உணர்ச்சி வசமானார். அவருடைய தேகம் ‘வெடவெட’ வென்று நடுங்கியது. ஒரு வேளை தன்னுடைய மனைவியும் இந்தக் காரியத்திற்கு உடந்தை யாயிருப்பாளா? தான் சிறைக்குச் சென்று விட்ட பிறகு, அந்த மோசக்காரன் இவர்களைத் தன்னுடைய மாய வலையில் சிக்க வைத்து விட்டானோ?

வேதநாயகத்தின் மனம் பற்பல விதமாகச் சிந்தித்தன. கடைசியாகத் தம் மனதைத் திடப்படுத்திக் கொண்டவராய், வீட்டுப் பக்கம் பரபரப் போடு நடந்து சென்றார். காம்பவுண்டுக்குள்ளே நுழைந்து நேராக மாடிப்படிகளைக் கடந்து மச்சுக்குள் சென்றார். மச்சின் முகப்பு அறையில் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல்கள் மெல்லிய நீல நிறத் திரையினால் மறைக்கப் பட்டிருந் தன. மெல்லிய திரையானதால், அறைக்குள்ளே கட்டிலின் மீது தம்முடைய மனைவி படுத்துக் கொண்டிருப்பது நிழல் சித்திரம் போல் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. வேதநாயகம் தைரியமாக அறைக் கதவைத் தட்டினார்.

‘யார் அங்கே ?……..” என்று அவருடைய மனைவி இரைந்து கேட்டாள்.

வேதநாயகம் தாழ்ந்த குரலில் “நான் தான்!” என்று கூறித் தம்முடைய பெயரையும் லஜ்ஜையுடன் உச்சரித்தார். சட்டென்று கதவு திறக்கப் பட்டது. ஆனால், வேதநாயகத்தை அந்தப் பரிதாப கரமான தோற்றத்தில் கண்டதும் அவர் மனைவி, “ஐயோ; இப்போது இந்த வேளையில் எப்படி வந்தீர்கள்? ஒரு வேளை சிறையிலிருந்து தப்பி வந்து விட்டீர்களா?” என்று முகத்தில் ஆச்சரியமும் பயமும் தோன்றக் கேட்டாள்.

“இல்லை, நியாயமாகத்தான் வெளியே வந்திருக்கிறேன்” என்று வேதநாயகம் கூறிக்கொண்டிருக்கும் போதே கீழிருந்து, ரஞ்சனி, ‘அம்மா, அம்மா!’ என்று பலமாகக் கூப்பிடும் சப்தம் கேட் டது. அந்தக் குரலில் அடுத்தபடியாக ஏதோ ஒரு பெரும் அதிசயம் நிகழப் போகிறது என்பதை வேத நாயகத்தினால் ஊகிக்க முடிந்தது. வேதநாயகம் எதிர் பார்த்தபடி அந்த அதிசயம் அப்போதே நிகழ்ந்தது.

என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளு முன்னால் நேயர்கள் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

உத்தம குணம் படைத்த ஸ்ரீ வேதநாயகம் எவ்வித சம்பந்தமுமில்லாமல் சிறை தண்டனை அடைந்ததும் அவருடைய குடும்பம் நிர்க்கதிக்குள் ளாயிற்று.

ஸ்ரீ வேதநாயகத்தின் மனைவி தன் கணவனுக்கு நேர்ந்த துர்க்கதியை நினைத்து ஒவ்வொரு தினமும் கட்டிலில் படுத்தவண்ணம் கண்ணீர் உகுத்தாள். கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் அவள் அனுபவித்த கஷ்டங்களை இங்கே விவரித்து எழுதுவது சாத்தியமல்ல. இத்தனை கஷ்டங்களுக் கிடை யிலும் ஸ்ரீமதி வேதநாயகம் ரஞ்சனியைப் படிக்க வைத்து ‘நர்ஸ்’ தொழிலுக்கு அனுப்பினாள்.

ரஞ்சனி தக்க பிராயமடைந்தும் தந்தையைப் பற்றியும், தந்தைக்கு நேர்ந்த துன்பத்தைக் குறித்தும் தாயார் மூலம் அறிந்து கொண்டாள்.

தந்தைக்கு நேர்ந்த எதிர்பாராத சிறைவாசத்தின் காரணத்தை அறிந்த போது ரஞ்சனியின் இருதயம் விம்மி வெடித்து விடும் போலிருந்தது. தந்தையை மோசடி வழக்கில் மாட்டி வைத்த அந்தச் சண்டாளனை பழிக்குப் பழி வாங்க அவள் அக்கணமே கங்கணம் கட்டிக் கொண்டாள். எனவே, அந்த மோசக்காரனை எங்கே சந்திப்பது, எப்படிப் பழி வாங்குவது என்பதைப் பற்றியே அன்று முதல் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவனை வஞ்சகமாகச் சிநேகம் செய்து கொள்வதன் மூலம் தான் தன்னுடைய எண்ணம் கைகூடும் என்பதும் அவளுக்குத் தெரிந்தது . ரஞ்சனியின் கவர்ச்சி மிகுந்த தோற்றம் அவளுடைய இந்த எண்ணத்துக்குப் பெரிதும் ஒத்தாசையாக இருந் தது.

ரஞ்சனி ராயபுரம் சர்க்கார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் தொழில் புரிந்து கொண்டிருந்தாள். தூய்மையான வெள்ளை உடையில் அவள் ‘டியூடி’க்கு வரும் போது தெய்வலோகக் கன்னிகை ஒருவளே நர்ஸ் உடையில் வருவதாகப் பலரும் எண்ணினார்கள்.

ரஞ்சனியின் காதலுக்குப் பாத்திரமான டாக்டர் ரகுநாதன் என்பவரும் அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்து கொண்டிருந்தார். சென்ற மகா யுத்தத்தில் யுத்த களத்தில் சேவை செய்து கேப்டன் பட்டமும் பெற்றிருந்தார்.

ரஞ்சனிக்கென்றே பிறந்தவரோ என்று வியக்கும்படி ஆகிருதியும் அழகும் பொருந்தி கம்பீரமாய் விளங்கினார்.

கேப்டன் ரகுநாதனும் ரஞ்சனியும் முதன் முதலாகச் சந்தித்தபோது கண்களால் பேசிக் கொண்டார்கள். பிறகு புன் சிரிப்பின் மூலம் தங்களுடைய அந்தரங்கக் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்..

கடைசியில், இருவரும் பகிரங்கமாகவே டியூடிக்கு வருவதும், மணி ஐந்தடித்தால் காரில் வெளியே புறப்பட்டுச் செல்வதும் சகஜமாயிற்று.


ஒரு நாள் மேற்படி ஆஸ்பத்திரிக்கு பிரமுகர் ஒரு வரை ‘ஸ்ட்ரெக்ச’ரில் போட்டுக் கொண்டு வந்தார்கள். ஏதோ கார் விபத்தென்றும் பலமாக அடிபட்டிருக்கிறதென்றும் சொன்னார்கள். கேப்டன் ரகுநாதன் இம்மாதிரி கேஸுகளில் அநுபவம் மிகுந்தவர் ஆகையால் இந்தக் கேஸை அவரே நேரில் கவனிக்கும்படி ஆயிற்று.

அடிபட்ட மனிதரைக் கவனித்த ரஞ்சனியின் தேகம் பயங்கரமாக மாறியது. ஒரு தடவை அவள் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

ரஞ்சனியைத் திகைப்படையச் செய்த அந்த மனிதர் யார் என்பதை இதற்குள் நேயர்கள் ஊகித்திருக்கலாம். ஆமாம்; வேதநாயகத்தைச் சிறைக்கு அனுப்பிய மோசக்காரன் தான். கடவுளுக்கே அவன் செய்த அக்கிரமம் பொறுக்கவில்லை போலும்!

இல்லை யென்றால் இத்தகைய விபத்தில் அவனைச் சிக்க வைத்து ரஞ்சனி இருந்த ஆஸ்பத்திரி யில் கொண்டு வந்து ஒப்படைப்பானேன்?

சிறிது சிறிதாகப் பிரக்ஞை தெளிந்த மனிதன் தன் கூரிய கண்களால் ரஞ்சனியை ஒரு தடவை பார்த்தான். தன் உடம்பு வலியெல்லாம் அந்த க்ஷணம் எங்கே போயிற்று என்பது அவனுக்கே ஆச்சரியமாயிருத்தது. “ஆகா! நான் எப்படிப்பட்ட பேரதிருஷ்டக் காரன்? இத்தகைய காந்தர்வப் பெண்ணிடம் சிகித்சை செய்து கொள்ள மோட்டார் விபத்தில் தானா மாட்டிக்கொள்ளலாம்? ஆகாய விமானத்திலிருந்தபடியே பூமியில் குதிக்கலாமே!” என்று எண்ணினான்.

ரஞ்சனி அந்த மனிதரை இதற்கு முன் நேரில் சந்தித்ததில்லை. கண்ணால் பார்த்ததும் கிடையாது.

தன் பங்களாவில் மாட்டி வைத்திருந்த புகைப்படங்களில், அப்பாவும் இந்த அயோக்கியனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ‘போட்டோ’ ஒன்றும் இருந்தது. அந்தப் படத்தை அவள் அடிக்கடி எரிச்சலுடன் பார்த்துப் பெருமூச்செறிந்திருக்கிறாள்.

எனவே, இப்போது ஆஸ்பத்திரியில் அவனைப் பார்த்ததும் அவன் யார் என்பதைப்பற்றி அவளுக்குத் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. சிங்கத்தின் கூண்டுக்குள்ளே இறைச்சி வந்து விழும்போது அந் தக் கொடிய மிருகம் அதை எப்படி வரவேற்குமோ, அதே உணர்ச்சியுடன் ரஞ்சனி அந்த மனிதனைப் பார்த்துப் பற்களைக் கடித்துக் கொண்டாள்..

சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியை விட்டுப் பிரிவதற்குள்ளாக ரஞ்சனி தன் நய வஞ்சக வலையை அவன் மீது வீசிப் படிப்படியாக வெற்றியும் பெற்றாள். வேதநாயகத்தின் மகள் தான் ரஞ்சனி என்று அவனுக்குத் தெரிந்த போது முதலில் சற்றுத் திகைப் பாயிருந்தது. பிறகு ரஞ்சனியாகவே தன்னிடம் அன்பு பாராட்டுவதால் கவலையில்லை என்று எண்ணினான்.

இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் ரஞ்சனி அவனிடம் தனிமையாகச் சந்தித்துப் பேசினாள். பேச்சின் முடிவில் அன்றிரவு அவன் ஒன்பதரை மணிக்கு அதே ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்க வேண்டு மென்றும் தான் ஆஸ்பத்திரி ‘டியூடி’ முடிந்து வெளியே வந்ததும் இருவரும் தன் வீட்டுக்குப் போகலாமென்றும் சொல்லி வைத்திருந்தாள்.

அன்று பூர்ண சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்த வெண்ணிலவில் ரஞ்சனியும் கிராதகனும் தங்கள் ஏற்பாட்டின்படி சந்தித்துக் கொண்டனர். பிறகு, இருவரும் ரஞ்சனியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்தக் காட்சியை வேதநாயகம் ஆலமரத்தடியில் நின்று கவனித்ததையும், அதற்குப் பிறகு நடந்த விவரங்களையும் நேயர்கள் அறிவார்கள்.

கீழேயிருந்து ” அம்மா! அம்மா!” என்ற ரஞ்சனியின் குரல் கேட்டதும், வேதநாயகத்தின்
மனைவி கணவனோடு ஏதோ இரகசியமாகச் சில வார்த்தைகள் கூறிவிட்டு அவசரமாகக் கீழே இறங்கிச் சென்றாள். வேதநாயகமும் சிறிது நேரம் கழிந்த பிறகு கீழே இறங்கிப் போனார்.

கீழே பின் கட்டு அறை ஒன்றில் மெதுவாகப் பேச்சுக் குரல் கேட்டது. வேதநாயகம் அங்கே சென்று பார்த்தார். அந்த அறைக் கதவுகள் உள்பக்கம் தாளிடப் பட்டிருந்தன. அறைக்குள்ளே சுவரில் மாட்டியிருந்த விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. மத்தியிலிருந்த விசாலமான மேஜையைச் சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த நாற்காலிகள் ஒன்றில் கிராதகன் உட் கார்ந்திருந்தான். எதிரில் ரஞ்சனி வலது கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தாள். ஸ்ரீமதி வேதநாயகம் அறைக்குள் இன்னொரு பக்கம் நின்று கொண்டிருந்தாள். கிராதகனுடைய முகம் பேயடித்த மாதிரி பயங்கரமாக மாறி யிருந்தது.

ரஞ்சனி, தன் இடது கையிலிருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் நீட்டி அதைப் படிக்கச் சொன்னாள். கிராதகன் துப்பாக்கி முனையைத் தன் கண்களால் பார்த்துக் கொண்டே, மெதுவாகக் கைகளை நீட்டிக் காகிதத்தை வாங்கிப் படிக்க ஆரம் பித்தான். இவ்வளவையும் ஸ்ரீ வேதநாயகம் அறைக்கு வெளியே நின்ற வண்ணம் திறவுகோல் துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிராதகன் படித்த கடிதம் வருமாறு:

“ஆறு வருஷங்களுக்கு முன்னால் ஹைகோர்ட்டில் நடை பெற்ற மோசடி வழக்கில் சிறைவாச தண்டனை பெற்ற வேத நாயகம் உண்மையில் குற்றவாளி அல்ல. மேற்படி மோசடி வழக்குக்கும் வேதநாயகத்துக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. வஞ்சக எண்ணத்துடன் நான் அவரை வேண்டுமென்றே அந்த வழக்கில் மாட்டி வைத்தேன். உண்மையில் மோசம் செய்தது நான் தான். இதற்காக நான் எத்தகைய தண்டனையையும் அனுபவிக்கத் தயார். வேதநாயகம் நிரபராதி .
இப்படிக்கு
………………….”

பிறகு, ரஞ்சனி கிராதகனைப் பார்த்து அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படி பெண் சிங்கம் போல் உறுமினாள். சர்க்கஸ் கூண்டில் அகப்பட்ட ஆடு போல் விழித்துக் கொண்டிருந்த கிராதகன் ரஞ்சனி காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அப்போது அந்த அறையில் பயங்கர நிசப்தம் நிலவியது.

இத்தனை நேரமும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வேதநாயகத்தின் மனைவி அறைக் கதவைத் திறந்து வெளியே நின்று கொண்டிருந்த தன் கணவனை உள்ளே அழைத்தாள்.

வேதநாயகம் அறைக்குள் பிரவேசித்தபோது ஒரு கணம் ரஞ்சனியும் அந்தப் படு மோசக்காரனும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

அந்த நேரத்தில் திடீரென்று வேதநாயகத்தைக் கண்டதும் கிராதகனுடைய ஹிருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது. ரஞ்சனிக்கு தன் தகப்பனார் அந்த நேரத்தில் அங்கு வந்து நிற்பது சொப்பனத்தில் காண்பது போல் இருந்தது.

கனவு அல்ல உண்மைதான் என்று அறிந்ததும், ரஞ்சனி அந்தக் கடிதத்தைத் தகப்பனாரிடம் நீட்டி ” அப்பா ! நீ இனி இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதோ பார் கடி தத்தை !” என்று கூறிக் கடிதத்தை நீட்டினாள்.

ஸ்ரீ வேதநாயகம் கடிதத்தையும், ரஞ்சனியை யும் ஒரு தடவை மாறி மாறிப் பார்த்து விட்டுத் தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார்.

” ரஞ்சனி! நம்முடைய விதிக்கு இவன் என்ன செய்வான்? இவனை நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் தீர்ப்புக் கொடுக்க வேண்டியவர் கடவுள் தான். இவனை நாம் விட்டு விடுவோம்” என்று கூறி, கிராதகன் எழுதிக் கொடுத்த அந்தக் கடிதத்தைச் சுவரில் மாட்டியிருந்த விளக்கின் மீது தூக்கிப் பிடித்தார். அந்தக் கடிதம் அடுத்த கணமே தீக்கிரையாயிற்று.

வேதநாயகம் கடிதத்தைத் தீயிலிட்டபோது ரஞ்சனி ”இது என்ன ? அப்பாவுக்குப் பைத் தியம் பிடித்து விட்டதா?’ என்று எண்ணினாள்.

“அப்பா! இவனை இப்படி இலேசில் விட்டுவிட்டால் இவன் சும்மா இருக்க மாட்டான். பின்னால் மறுபடியும் நமக்கே கெடுதல் செய்வான் ” என்றாள்.

வேதநாயகம் ரஞ்சனி கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிராதகனை மன்னித்து வெளியே போகச் சொன்னார். பெரும் விபத்திலிருந்து தப்பிய அந்தப் படுமோசக்காரன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று வேதநாயகம் பங்களாவை விட்டுப் பர பரப்புடன் வெளியேறினான். ரஞ்சனிக்கு இதைக் கண்ட போது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

கிராதகன் காம்பவுண்டைக் கடந்து சிறிது தூரம் சென்றானோ இல்லையோ, ஆலமரத்துக்குப் பின்னால் ஏதோ ஓர் உருவம் பதுங்கி மறைவதைக் கண்டான். அடுத்த நிமிஷம் சட்டென்று துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம் ! கிராதகன் அடியற்ற மரம் போல் கீழே சாய்ந்தான்.


இது வரை கதையைச் சொல்லிக் கொண்டே வந்த ஸ்ரீ கோசல்ராம் இந்த இடத்துக்கு வந்ததும் கதையை நிறுத்தினார்.

“சரியான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர்களே ? அப்புறம் என்ன ஆயிற்று? கிராதகனைச் சுட்டது யார்?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“என்ன ஆயிற்று? மறுபடியும் வேதநாயகம் கைதியானார். விடுதலை பெற்ற வேதநாயகம் பழைய விரோதத்தின் காரணமாகவே கிராதகனைக் கொலை செய்திருக்க வேண்டு மென்று போலீஸ் தரப்பில் வாதாடினார்கள். மேலும், வேதநாயகத்தின் வீட்டு வாசலிலேயே கொலை நடந்திருப்பதால் வேதநாயகம் தான் குற்றவாளி என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.

நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னால் ஜூரர்களின் அபிப்ராயம் கோரப்பட்டது. ஒன்பது ஜூரர்களும் ஓர் அறைக்குள் அந்தரங்கமாக ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள். அந்த ஒன்பது ஜூரர்களில் அடியேனும் ஒருவன். மற்ற எட்டு ஜூரர்களும் வேதநாயகம்தான் குற்றவாளி என்று முடிவு செய்தார்கள். என் மனச்சாட்சி மட்டும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே, நான் இதர ஜூரர் களுடன் தர்க்கம் செய்தேன்.

“கொலை நடந்தது வேதநாயகத்தின் வீட்டு வாசலில் என்பதற்காக வேதநாயகத்தைக் குற்றவாளி என்று கூறிவிட முடியுமா? கொலை நடந்த சமயம் யாரும் நேரில் பார்க்காதபோது வேதநாயகம் தான் குற்றவாளி என்று எப்படிக் கூறுவது? ஆகையால், அவர் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல ” என்று வாதாடினேன்.

மற்ற ஜூரிகள் என் வாதத்தை ஒப்புக் கொண்ட போதிலும் என் அபிப்பிராயத்துக்கு இணங்கி வரவில்லை.

“ஜூரர்கள் ஒரு முகமான அபிப்பிராயத்துக்கு வரவில்லை யென்றால், அபிப்பிராய ஒற்றுமை ஏற்படுகிறவரை அவர்களில் யாரும் அறையை விட்டு வெளியே போகக் கூடாது ” என்பது கோர்ட் விதிகளில் ஒன்று.

எனவே, நான் மட்டும் தனிப்பட்ட அபிப்பிராயம் கூறுவதால் பிரயோசனமில்லை என்று தெரிந்ததும் நானாகவே மற்ற ஜூரர்களுடன் ஒத்துப் போய்விட்டேன்.

வழக்கு முடிந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

“வேதநாயகம் குற்றவாளிதான்; ஆனாலும் சரியான ருசு இல்லை என்ற காரணத்துக்காக மரண தண்டனைக்குப் பதில் ஜன்மதண்டனை விதிக்கிறேன்” என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

எனவே, வேதநாயகம் ஆயுள் தண்டனை பெற்று மறுபடியும் சிறை சென்றார் என்று கதையை முடித்தார் கோசல்ராம்.

“கோசல்ராம்! அப்புறம் வேதநாயகத்தின் குடும்பம் என்ன ஆயிற்று? உண்மையாகவே கிராதகனைக் கொன்றது யார்? தாங்கள் மட்டும் ஏன் வேதநாயகம் குற்றவாளி அல்ல என்று வாதாடினீர்கள்?” என்று கேட்டேன்.

கோசல்ராம் சொன்ன பதில் என்னைத் திடுக் கிடச் செய்தது.

“ஏன் என்றா கேட்டீர்கள்? கிராதகனைச் சுட்டுக் கொன்றது நான்தான். வேதநாயகமோ ரஞ்சனியோ ஒரு பாவத்தையும் அறியார்கள்” என்றார் கோசல்ராம் ..

”என்ன? தாங்களா !….. ஐயா, கொஞ்சம் இருங்கள். என் தலை சுற்றுகிறது. தாங்கள் எதற்காகக் கொலை செய்தீர்கள்? அப்புறம் தாங்களே எப்படி இந்த வழக்கில் ஜூரியாய் அமர்ந்தீர்கள்? மிஸ்டர் கோசல்ராம்! இதெல்லாம் எனக்கு ஒரே திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது…….. இன்னும் கொஞ்ச நேரம் போனால் செத்துப்போன கிராதகனுடைய ஆவி. தாங்கள் தான் என்று கூடச் சொல்வீர்கள் போல் இருக்கிறதே! அப்புறம் கேப்டன் ரகுநாதனும் தாங்களே தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். ஐயா! தயவு செய்து கொஞ்சம் விவரமாகவும் நிதானமாகவும் சொல்ல வேணும் ” என்று கேட்டுக் கொண்டேன்.

கோசல்ராம் பிறகு என் காதோடு இரகசியமாகச் சொன்ன விவரம் வருமாறு:-

”ரஞ்சனி அன்று கிராதகனைத் தன் பங்களாவுக்கு வஞ்சகமாக அழைத்துச் சென்றாளல்லவா? அதற்கு முன்னால் இந்த விஷயத்தை அவள் கேப்டன் ரகுநாதனிடம் இரகசியமாகச் சொல்லி, அவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் வாங்கி வைத்திருந்தார். ரஞ்சனியிட மிருந்து இந்த விவரத்தை அறிந்த ரகுநாதன் அவளுக்குத் தெரியாமலேயே அன்றிரவு ஆலமரத்தடியில் போய்ப் பதுங்கிக் கொண்டிருந்தான்,

கிராதகன் ரஞ்சனி வீட்டிலிருந்து தனிமையாக வெளி வருவதைக் கண்டதும் ரகுநாதன் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்று விட்டான் .

ரகுநாதன் செய்த கொலைக் குற்றம் வேதநாயகத்தின் தலையில் சுமந்தது. எனவே வேதநாயகம் ஆயுள் தண்டனை அனுபவிக்கும்படி ஆயிற்று.”

கோசல்ராம் மேற்கண்ட விவரத்தைச் சொல்லி முடித்ததும் “இதெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? சற்று முன் தாங்கள் தான் கிராதகனைக் கொன்றது என்று சொன்னீர்களே?” என்று அவரைக் கேட்டேன்.

”எப்படியா? நான் தான் அந்த கேப்டன் ரகுநாதன். ரஞ்சனியை மனப்பூர்வமாகக் காதலித்தவன் நான் தான். வேதநாயகத்தின் குடும்பத்தைக் கெடுத்த கிராதகனைச் சும்மா விட்டால் பின்னால் அவனால் ரஞ்சனிக்கு ஆபத்து நேரும் என்று எண்ணியே அவனைச் சுட்டுத் தீர்த்தேன். அதே வழக்கில் ஜூரியாய் அமரும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. கோர்ட்டில் மனச்சாட்சி குறுக்கிட்ட தால் வேதநாயகம் குற்றவாளி அல்ல வென்று ஜூரர்களுடன் வாதாடினேன். அவ்வளவுதான் விஷயம் ” என்றார்.

“கோசல்ராம் ! தாங்கள் தான் கேப்டன் ரகுநாதன் என்றால் பெயரை எப்போது மாற்றிக் கொண்டீர்கள்?” என்று கடைசி சந்தேகத்தைக் கேட்டேன்.

“சமீபத்தில் தான்; வைத்தியத்தொழிலிலிருந்து இப்போது ‘ரிடைய’ ராகி விட்டேன்.”

“கோசல்ராம்” என்ற பெயரில் ஒரு இங்கிலீஷ் மருந்துக் கடை ஆரம்பித்து நடத்துகிறேன். அது முதல் என் பெயரும் கோசல்ராம் என்றே மாறி விட்டது. இந்தப் பிரபலமான பெயரை வைத்தே இப்போது முனிசிபல் தேர்தலில் போட்டி போடுகிறேன்” என்று கூறினார்.

“ஐயா! தயவு செய்து இன்னும் சில விவரங் களைக் கூற வேண்டும். இப்போது ரஞ்சனி எங்கே இருக்கிறாள் ? ரஞ்சனியின் தாயார் உயிரோடு இருக்கிறாளா?” என்று கேட்டேன்.

“ரஞ்சனி இப்போது என்னோடுதான் இருக்கிறாள். அவள் தாயார் தகப்பனார் எல்லோரும் சௌக்யம் தான். தகப்பனார் விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார்” என்றார் கோசல்ராம்.

” என்ன விடுதலையாகி விட்டாரா? இதற்குள்ளாகவா? அதெப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம் ; முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது மாகாண சர்க்கார் சில குறிப்பிட்ட கைதிகளை விடுதலை செய்தார்கள் அல்லவா? அவர்களில் ஸ்ரீ வேதநாயகமும் ஒருவர்” என்றும் கதையைச் சுபமாக முடித்தார் கோசல்ராம்.

– வத்ஸலையின் வாழ்க்கை, முதற் பதிப்பு: 1949, வாடாமலர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *