அடுத்த காலடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 393 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

காலைப் பொழுதின் இதமான குளிர்மை தெரியவில்லை. யன்னலுக்கூடாகக் கலந்து வரும் மல்லிகை மணம் வரவில்லை. கீச் கீச் என்று கத்தும் பறவைகளின் கீதமும் இந்தக் காலத்தில் இல்லை. 

கலகலவென்று தொட்டுத் துயிலெழுப்பும் காற்று எங்கே. 

நித்திரையினின்று கண்விழித்து ஒருகண விழிப்பில் சில அங்கலாய்ப்புக்கள். சொந்த மண்ணைவிட்டு உறவுகளை விட்டு, வீட்டை விட்டு இத்தனை ஆயிரம் ஆயிரம் மைல்களுக்குப்பால் வெளிநாட்டிற்கு வந்து ஏழு, எட்டு வருடங்கள் முடிந்த போதும் சில காலைப்பொழுதுகள் இவ்வாறான அவசரத்திலும், இப்படியான அங்கலாய்ப்பு களுக்கும் மத்தியில் தான் முழித்துக்கொள்கிறது. 

திரையை மெதுவாக விலக்கி அறைக்குள் வெளிச்சத்தைப் படரவிட்டு யன்னலுக்குப் பக்கத்தில் முகத்திற்குக் கைகொடுத்து வெறுமனே உட்கார்ந்தாள். 

பஞ்சு பஞ்சாய்ப் பறந்து பறந்து ‘ஸ்நோ’ கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பச்சை இலையைக்கூட காணவில்லை. எல்லாம் காய்ந்து போய் வெறுமனே. இதில் ரசிக்கிறதுக்கு என்ன இருக்கிறது. ஒருகணம் மனம் நினைத்து முடிப்பதற்கிடையில் இல்லை, இதுவும் ஒரு வகையில் இயற்கையின் கோலம். ஒத்துப் பார்த்துக் கொண்டது மனம். பொதுவாகவே இந்தக் காலங்கள் மனத்தினை சோகமாகவே வைத்துக் கொள்கிறது, எல்லாமே விட்டெறிந்து விட்டாற்போன்று. நெருங்கிக் கொண்டிருக்கும் தனது கல்யாணவீட்டு நினைவுகளும் அடிக்கடி அடிமனத்திலிருந்து தலைகாட்டிக் கொண்டுதானிருந்தது. 

இங்கு வெளிநாட்டிற்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு ஏஜென்சிமூலம் வந்து, அண்ணாவின் ஆதரவில் இருந்து தனக்கென ஒரு வேலை தேடிக்கொண்டு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத் துக் கொண்டு தான்தான் என்ற வட்டங்களைப் போட்டுக் கொண்டு, இந்த வாழ்க்கையுடன் ஒட்டியும்… 

வீட்டிலிருந்து… இல்லை எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டிலிருந்து, எங்கள் குடும்பத்திலிருந்து அப்பா, அம்மா, அக்கா அவர்கள் இப்போது எங்கே என்று கூடத் தெரியவில்லை. கடிதங்கள்கூட ஒழுங்காக வருவது நின்றுபோய்விட்டது. அடிக்கொரு தடவை கடிதம் வந்து கிடக்குமா என்று ஏக்கத்தில் பார்த்தே பல மாதங்கள் சென்றுவிட்டது. எதிலும் பதட்டம். அங்கிருந்து திக்குத் திக்காக வரும் செய்திகள் மட்டும் தலைக்குள் போர் நடத்திக்கொண்டிருக்கும் எப்போதும். 

இந்த வாழ்க்கையின் அவசரங்கள். 
அந்த வாழ்க்கையின் அல்லோலங்கள்.
இடையில் நாங்கள்… 

இதற்கிடையில் கலியாணத்திற்கான சந்தோசங்கள் தலைகாட்டத்தான் இல்லை.
என்றாலும் எதிர்காலத் திட்டங்களில் ஒருகண லயிப்பு. இப்படி இப்படிச் செய்யலாம்.
எப்படி எப்படியெல்லாம்… அதற்குக் கூட நிரந்தரங்கள் இருப்பதாகப் படவில்லை. 

வாழ்க்கையை நினைப்பதற்கும், யன்னலுக்குள்ளால் ஓடிக்கொண்டிருக்கும் வானத்திற்கும் முகிலுக்கும் உள்ள இடைவெளியில் தொங்கிக்கொண்டு அலசுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. 

வெளியே கொட்டிக் கிடந்த ஸ்னோவிற்குள் கண்கள் உறைந்து போய்க்கிடந்தன. அங்குமிங்குமாகப் பல காலடிகள். ஓடிச்சென்று அதற்குள் கால்பதித்து சந்தோசமாய் ஓடவேண்டும் என்று இத்தனை வருடங்களாய்த்தான் நினைக்கின்றாள். ஆனால் நினைவில் நின்றாப்போல ஒருநாளும் ஆசைதீர நடந்ததில்லை. மனமும் விட்டதில்லை. அழகான வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி பிள்ளையை வண்டியில் வைத்துத் தள்ளியபடி அமிழ்ந்து போன காலடிகளுக்கு மேலால் தனது பாதச்சுவடுகளைப் பதித்துச் சென்று மறைகிறாள். ஆசையுடன் அதனைப் பார்க்கிறாள். 

மீண்டும் அந்த நேரத்திற்குரியபடி வழமையான பெண்களும், ஆண்களும் வேலைக்கு அவசர அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். 

வீட்டிற்குச் சிறிது தள்ளியிருக்கும் வயது சென்ற கிழவன் நடக்க முடியாமல் மெதுமெதுவாக ஊர்ந்தபடி நாய்களைக் கையில் கொண்டு வெளிக்கிட்டுவிட்டார். காற்றாடவா அல்லது தனது உடல் ஆரோக்கியத்திற்கா, நாய்களின் உற்சாகத்திற்கா? இவரது பிள்ளைகள் மனைவி எங்கே, என இவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

கையில் கிடைத்ததைக் கொண்டு வீட்டிற்குக் கடிதம் எழுதினாள். மனத்திற்குள் இலேசான ஆற்றோட்டம். மீண்டும் கைகொடுத்து யன்னலுக்கு வெளியே பார்வையை விட்டு எதையோ தீவிரமாக ஆராய்ந்தாள். 

ஓ! இந்தக் கிழவிக்கு இன்னமும் நடக்க முடிகிறதா என்ன. வயதில் முதிர்ந்தவள். பலவீனமான உடல் போலப்பட்டது. முதுகில் வேறு கூன். ஒரு கையில் கடையில் பொருள்கள் வாங்கிய பை. மற்றைய கையில் பொருள்களுடன் கூடிய சிறுவண்டி. இழுத்துக் கொண்டு இத்தனை வேகமாக நடக்கமுடிகிறதா? முன்பு எப்போதோ ஒருமுறை அண்மையில் இருக்கும் வீடொன்றின் முற்றத்தில் குந்தியிருந்து உடலெல்லாம் வேர்வை ஓட புற்களைச் செதுக்கிக் கொண்டிருந்தாள். பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். அருகே குவித்துக் கிடந்த குப்பைகள். திகைத்துத் தான் போனாள். 

அவளுக்கென்று உறவுகள் வீட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. யாருடனும் நிறைய நேரம் கதைப்பதில் பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு நிறைய விருப்பம். மனம்திறந்தும் பேசுவாள். மனித உறவுகளைப் பற்றியெல்லாம் பேசுவாள். இப்போதும் இத்தனை நேரமாய் யாரோடோ மிகவும் சத்தமாகச் கதைத்துக் கொண்டிருந்தாள். 

மீண்டும் வீட்டு நினைவு தொட்டுத் தொடருகிறது. 

எத்தனை காலடிகளைப் பதித்து எங்கே நகர்ந்து கொண்டிருக்கின்றார்களோ? உலர்ந்து தோய்ந்து… 

மனம் இவளுக்குக் களைத்தது. 

இவள் யன்னலிலிருந்து விடைபெற்றுக் கொண்டாள். கலியாணத்திற்கு முன்பு வேலையிடத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தன. அவசர அவசரமாகத் திரும்பினாள். வெளியே காய்ந்து போன வெறும் தடிகளோடு இருந்த மரங்களும் பார்வையில் பட்டது. மணி பாய்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. மனம் வேலைக்குப் போகவேண்டும் என உந்தியது. 

சாப்பாட்டில் இரண்டு வாய் சாப்பிட முன்னரே வீட்டு நினைவு தொடர்ந்தது. அம்மா பின்னால் திரிந்து சாப்பாடு கொடுப்பது ஞாபகத்தில் வந்து குந்தியது. சாப்பிட வாருங்கள் என்று கூப்பிட இங்கு ஒருவருமில்லை. 

அடிக்கடி இப்படி நினைவுகள் தோன்றி னாலும் வாழ்க்கையின் வேகத்தில் சமாளித்துக் கொள்ளப் பழகிவிட்டிருந் தாள். ஆனால் கல்யாணம் நிச்சயமாகிய நாளிலிருந்து அப்பிடி அந்த நினைவு களை இலகுவில் துரத்த முடியவில்லை. ஏன் இவ்வளவு நாளும் தோன்றவில்லை? ஓடிஓடி உழைத்துக் கொடுக்கிறேனே? 

புதிதாக சிந்தனை ஓடியது. அவளது சிந்தனைகள் புதிதாகப் பட்டது. வாழ்க்கையைப் பற்றி ஒருநாளும் ஆழமாக அலசியதில்லை. இப்போதெல்லாம் ஆற அமர இருந்து சிந்திக்கிறாள். 

அவசர அவசரமாக கைப்பையில் வைக்க வேண்டியவற்றைத் திணித்துக் கொண்டு நடந்தாள். பார்த்து ரசித்த ஸ்நோவும் ஒருபக்கம் மறைந்து கொள்ள, வேலை மட்டும் மனதில் நிற்க காலில் வேகம் ஒட்டிக்கொண்டது. வழமையான பஸ் ஸ்ராண்ட் வழமையாக அந்நேரத்திற்கு உரியவர்கள் இன்றும் நிற்கிறார்கள். யாரும் அவளுக்கு மிகத் தெரிந்து நெருங்கி பழகுபவர்களாக இல்லை. சாதாரண ஒரு புன்சிரிப்பைத் தவிர. 

வெறுமே நிலத்தில் குந்திக் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பையனை நோக்கி இன்றும் ஆச்சரியம் தலைதூக்கியது. இன்று எத்தனையாவது நாளாக இப்படி இருக்கிறான் என நினைவுபடுத்தினாள். இந்த விறைக்கும் குளிரில், உறையும் ஸ்நோவில் வெறுமனே ஒரு ரி-சேர்ட், கோட் மட்டும் அணிந்து கொண்டு எந்தவித காரணமுமே இல்லாமல் தொடர்ந்து ஒரு இளம் வயதுப் பையன் ஏன் இப்படி இருக்க வேண்டும் என காரணத்தினை அலசத் தொடங்கியது இவளின் மனம். 

அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் காரணங்களைத் தெரிந்து கொண்டிருக்கின்றார்கள் போலும். ஆளுக்கொன்றாய் விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஏன் எப்படி என்றெல்லாம் அருகில் நின்ற வயது சென்ற பெண்ணொருத்தி புன்சிரிப்பொன்றை உதிர்த்து அறிமுகமாகி, அவனைப் பற்றிக் கூறினாள். 

வீட்டை, குடும்பத்தை விட்டு ஓடி வந்திருக்கிறான், இந்தப் பையன். வீட்டில் கருத்து முரண்பாடுகளாம். வீட்டுச்சூழல் பிடிக்கவில்லையாம்; அன்பு செலுத்துவதற்கு யாருமில்லையாம். வந்துவிட்டானாம். நண்பன் ஒருவன் தான் வந்து அழைத்துப் போவதாகவும், இங்கே வந்து காத்திருக்கும்படியும் கூறியிருக்கிறான். வந்தபாடில்லை. காத்திருக்கிறான். அந்தப் பெண் கதையைக் கூறிக் கொண்டிருந்தாள். 

தவிர்க்கமுடியாதபடி மீண்டும் மனம் பறந்தது. தெருவெல்லாம் ஓடியது. வீட்டைச் சுற்றியது. கவலைப்பட்டது. ஒடுங்கிக்கொண்டது. அங்கே இப்போது ஓடிக்கொண்டி ருக்கும் மக்களைப் பற்றியும், பசி தூக்கம் கெட்டு ஓடித்திரிவதையும் ஒருமுறை நினைத்தாள். மூச்சு ஒரு கணம் நின்றுவிடும் போல உணர்ந்தாள். பெரிதாக ஒரு பெருமூச்சினை எறிந்தாள். 

பக்கத்தில் நின்றவள் விமர்சனத்தை எதிர்பார்த்தவள் போல நின்று கொண்டிருக்கிறாள் போலும். பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னமும் அவளது சிந்தனைகளுக் குள்ளும் காலடிகளுக்குள்ளும் நின்றாள். ஆனால் பார்வை மட்டும் வெறுமனே அந்தப் பையன் மீது. 

பஸ்ஸில் போகும்போதே தான் வேலைசெய்யும் சுப்பர் மார்க்கெட்டின் உதவி மனேஜரிடம் சொல்லப் போவதை ஒத்திகை பார்த்துக் கொண்டாள். 

அவன் ஏற்கனவே சிடுமூஞ்சி என்று பெயரெடுத்தவன். நின்று நிமிர்ந்து ஒருவருடனும் ஆறுதலாகக் கதைக்க மாட்டான் என்பது தெரியும். இத்தனைக்கும் அவன் இவளது நாட்டுக் காரானாக இருந்தும் கூட எந்தவித ஆலோசனை அறிவுரை கூறவும் மாட்டான். அவனது பேச்சுகளில் நீதி, நியாயம் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் இத்தனை ஒத்திகைகளையும் பார்த்துக் கொள்கிறாள். இத்தனையும் இவளது கல்யாணத்தை ஒட்டி இரண்டு கிழமை லீவு கேட்கத்தான். இத்தனை நாளாக ஓடி,ஓடி உழைத்திருக்கின்றாள். இப்போது அவனிடம் சென்று தனக்குரிய லீவு எடுப்பதற்கு இத்தனை பயம். தனக்கு தன்னிலேயே ஆத்திரமாகக்கூட இருந்தது. இப்படிக் கேட்கலாமோ? 

இந்த வசனத்தையும் சேர்த்துக் கொள்வோமா? 

பஸ்ஸின் கண்ணாடிக்குள்ளால் ஓடிமறைந்த உயர்ந்த கட்டிட வரிசைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் விட வேகமாக சென்றது மனம். 

இப்படி லீவு கேட்கப் போய் இவனிடமே வாங்கிக் கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. எல்லாவற்றுக்கும் வசனங்களைத் தயார்படுத்திக் கொண்டாள். ஏன் இவன் இப்படி இருக்கவேண்டும்? இவளின் வெகுளி மனம் நினைத்துக் கொண்டது. அங்கு வேலை செய்யும் பெரும்பாலானவர்களுக்கு இவன் மீது எப்போதும் ஒரு ஆத்திரம் தம் உழைப்பிற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனக் கண்டும் காணாதவர்களாக இருந்தார்களே தவிர, அவனைப் பற்றி அடிக்கடி கதைத்துக் குமைந்து கொள் வார்கள். 

பஸ் ஹோல்ட்டில் இறங்கினாள். முன்னே வழமையான கலகலப்புடன் கடை. அதையொட்டி ரெஸ்ற்றோரணற். அதற்குப் பக்கத்தில் எங்கள் இனத்தவன் ஒருவனது கடை. அதில் விற்கும் பொருட்களும் வெளியே அடுக்கி வைத்திருக்கும் எம் நாட்டுப் பழங்கள், மரக்கறிகளை பார்வை யிலேயே ஒவ்வொருநாளும் விலக்குவாள். அதற்கு முன் நின்று தெருவைத் தாண்டி இந்தப் பக்கம் வந்தால் நீண்டுகொண்டு போகும் இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கெட். அதற்குள் இன்று உள்ளே போகவே பிடிக்கவில்லை. 

வழமையான கலகலப்பு இன்னும் தொடங்கியிருக்கவில்லை. காலைவேளை அமைதியாகக் கிடந்தது. ஷெல்புகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வழியில் எதிர்ப்படுபவர்களுக்கு ஹலோ- காலை வணக்கம் சொல்லிக் கொண்டே மனேஜரின் அறை நோக்கிப் போனாள். 

ஏளனமான சிரிப்புக்களுடன், குழந்தைத்தனமான ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் கதைத்துக் கொண்டிருந்தான் அவன். இவள் ஒதுங்கி நின்று காத்திருந்தாள். அவர்களது உரையாடல் காதில் விழுந்து கொண்டிருந்தது. இப்போது விளங்கியது அந்தச் சின்னப் பையன் வேலைகேட்டு வந்திருந்தான். அவனது தாயாருக்கு இன்னும் சில தினங்களில் பிறந்தநாள், தன்னுடைய தாய்க்குப் பரிசொன்றினை அளிக்க விரும்புகிறான். அதற்கு அவனுக்கு பணம் தேவைப்படுகிறது. அதனாலேயே வேலை கேட்டு வந்திருந்தான். ‘எந்த சின்ன வேலையையாவது கொடுங்கள்; செய்து முடித்து விடுவேன். நான் மிகவும் கெட்டிக்காரான்’. தன் ஆற்றலை, திறமையை மிகவும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் விளக்கிக் கொண்டிருந்தான். வேலை கொடுக்கலாமா இல்லையா என்பது வேறு. ஆனால் இவனது முகத்திலோ எவ்வித இரக்கமோ, சலனமோ இல்லை. அவன் என்னதான் நினைக்கிறான். என்பது கூடப் புலப்படவில்லை. கடுமையாகவே கிடந்தது. இல்லவே இல்லை என்று மட்டும் பலமாகத் தலையாட்டி னான். ஆகக்கூடியது அவனது மனத்தினை, முயற்சியைப் புரிந்தவனாகத் தெரிய வில்லை. இவள் அவனை அளந்து கொண்டிருந்தாள். என்ன மனிதன்? புருவங்கள் இறுகிக் கிடந்தன. உதடுகள் பிதுங்கி மறுத்துக் கொண்டிருந்தன. சாவகாசமாக எதையோ எழுதவும் தொடங்கினான். 

அந்தச் சிறுவன் இவனை உதறியெறிந்து விலக, தன் முறைக்குக் காத்திருந்தவள் போலச் சென்றாள். ஏன் என்பது போல தலையைத் துாக்கினான். வாய் குமுறியது, அவன் முன்னே. திரும்பத் திரும்பப் பாடம் பண்ணி வைத்த வசனங்கள் வரவேயில்லை. ஏதோவொன்றை எங்கேயோ இருந்து தொடங்கினாள் இவள். 

‘இரண்டு கிழமை லீவு வேண்டும்’ 

அதற்கு அவள் தகுதியற்றவள்போல ஏளனச் சிரிப்புடன் ஏன் என்பதுபோலப் பார்த்தான். ‘கலியாணம் பண்ணப் போகின்றேன்’ 

‘ஓகோ!’ 

அவன் மனதுக்குள் வேலைசெய்கிறான் என்பது புரிந்தது, அவனது மௌனத்தில். இவள் சிறிது உயிர்பெற்றவள் போல சிறிது உசாரானாள். 

‘ஓ…எடுக்கலாம்’ என்றான் மெதுவாக. 

நிறைய யோசிக்கின்றான் போலப் பட்டது. 

“இப்போது கலியாணத்திற்கு லீவு, பின்பு இன்னும் சில மாதங்களில் பிள்ளை என்பீர்கள். இன்னும் சிறிது காலத்தில் அசதி, களைப்பு, வருத்தங்களோடு நிற்பீர்கள். பிறகு பிள்ளை பிறந்த பின் அதற்கும் உங்களுக்குச் சம்பளத்துடன் லீவு வழங்க வேண்டும். எத்தனை விதமான கஷ்டம் பார்த்தீர்களா? 

அவன் மிகவும் சாதாரணமாக சிரிப்பொன்றுடன் கூறிக் கொண்டிருந்தான். ‘எப்போது பிள்ளை பெறுவதாக யோசித்திருக்கிறீர்கள்? 

கூடவே இதனையும் சிரிப்புடன் கேட்டு வைத்தான். 

அவளின் உடலில் விஷம் பரவுவதைப்போல உணர்ந்தாள். முகம், உடலெல்லாம் சிலிர்த்து விறைத்திருக்க வேண்டும். அவனை ஒரு துச்சமான பார்வையில் தூக்கி அடித்துக் கொண்டிருந்தாள். 

இப்படியான கேள்விகளை ஏனைய பெண்களிடமும் கேட்டிருக்கிறான். தெரியும் கதைத்திருக்கிறார்கள், குமைந்து குமைந்து. ஆனால் அதே கேள்விகள் அவளுக்கு முன்பும் எறியப்பட்டபோது முகத்தில் தழைவாக நின்று கொண்டிருந்த புன்சிரிப்பு மறைந்திருக்க வேண்டும். வார்த்தைகளை இன்னமும் தேடிக்கொண்டே இருந்தாள். 

இவன் எந்த சமூகத்து, எந்த மனித இனத்தின் பிரதிநிதியாக இருப்பான் என்று ஒருகணம் கேள்வி கூட. 

சமூகம், பெண் உரிமை… நிமிஷங்களுக்குள் அடுக்கடுக்காய் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் ஏறி இறங்கி அடம்பிடித்தன. 

இவன் இப்படி கதைத்ததிற்கே சட்ட நடவடிக்கை எடுக்கலாம் இங்கே. நினைத்துக் கொண்டாள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடவே வர சொன்னாள், ‘கலியாணம் பண்ணுவதற்கும் பிள்ளை பெறுவதற்கும் அதற்குரிய லீவுகளை எடுப்பதற்கும், வேலை செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. எப்போது நான் பிள்ளை பெறப்போகிறேன் என்பதை விண்ணப்பப் படிவத்திலேயே உமக்கு சொல்ல வேண்டியதில்லை’. 

“மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதற் கும், வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொள்ளும் முயற்சியும், மற்றையவரின் உரிமைகளை மிதிக்கவும் மாட்டேன். அதேநேரம் எனக்கிருக்கும் உரிமைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்”. கூறிமுடித்ததில் மனம் களை த்தது. ஆனால் தெளிவாக இருந்தது. திரும்பி அடுத்த காலடிகளை உறுதி யாகப் பதித்துச் சென்றாள்.

– புது உலகம் எமை நோக்கி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1999, சக்தி வெளியீடு, நோர்வே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *