கடலின் பொக்கிஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 450 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீமான், கடற்கரை ஓரத்தில் தன் தாடியைச் சொறிந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான். கடலின் அலைகள் வேகமாக வந்து கரையேறத் துடித்துக் கொண்டு முடியாமல் திரும்பவும் கடலுக்கேத் திரும்பிக் கொண்டிருந்தது.

அங்கங்கே, கடல் மணலில் சிறிய நண்டுகள் துளை போட்ட பொந்துகளிலிருந்து வெளியேறி நடமாட ஆரம்பித்துக் பில் ண்டிருந்தன. சூரியன் கடலுக்குள் மூழ்கி விடத் துடிக்க, இருள் ஆங்காங்கே ஆக்கிரமிக்க போர் ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தன.

சிங்காரயனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீன்கள் கிடைக்கின்றன? நானும் அவனைப் போல தோணியில் மோட்டார் வாங்கி மாட்டிக் கொண்டு தான் கடலுக்கு மீன் பிடிக்கப் போகிறேன். ஆனால் எனக்கு மட்டும் அவ்வளவு மீன்கள் கிடைக்க மாட்டேன் என்கிறதே?

என் மனைவி சின்னம்மாவும் எப்போதும் ராயன் குடும்பத்தையே ஒப்பிட்டுப் பேசுகிறாள். ராயன் மனைவி எத்தனை விதமாக நகைகள் அணிந்திருக்கிறாள். அவன் எப்படி பெரிய பங்களாகட்டி அதன் முன்னாலே தனக்கும் மகனுக்கும் தனித்தனியாக மாடி வீடுகட்டி வைத்திருக்கிறான். என்னாலே தினச்சாப்பாடு கூட ஒரு சுமாராகத் தானே ஓடுகிறது. இருவரும் ஒரே கடலுக்கு ஒரே நேரத்திலே தான் புறப்பட்டு போகிறோம். அவனுக்கு மட்டும் எப்படி தினப்படிக்கு என்னை விட இருபது, முப்பது மடங்கு மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன ? யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அருகிலிருந்த ராயனின் தோணியில் கிடந்த வலைகளை அறுத்தெறிந்து விடுவோமா ? என்று தோன்றியது.

ம்…கூம்… தொழில் தர்மம் நமக்கு மிகவும் முக்கியம். இதை எப்படி செய்கிறான் என்பதை அவனிடமே கேட்க வேண்டியது தானோ? அவனாகச் சொல்வானா? எழுந்து கடலை நோக்கி நடந்தான்.

அப்படியே கடலுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வோமா என்று வந்த சிந்தனையை கலைத்து விட்டுத் திரும்பினான் வீட்டுக்கு.

வயிறு பசிக்கிறது என்று சொல்ல சின்னம்மா.. சாப்பாடு போடு என்றான் சீமான்.

அரிசி கடைகாரர் வந்து பைசா கொடுக்கலேண்ணு திட்டிட்டுப் போறாரு, சாப்பாட்டுத் தட்டைத் தரையில் வைத்து விட்டு மீன்கறி ஊற்றினாள் சின்னம்மா.

“நாளைக்கு எப்படியும் குடுத்துறலாம்” என்றாவாறு சாப்பிட ஆரம்பித்தான் சீமான்.

“நான் என்ன புள்ள செய்யட்டும் நானும் நல்ல வல போட்டுத் தான் மீனு புடிக்கப் போறேன். ஆனா அவனுக்கு எங்கேயிருந்து மீனு கெடைக்குவுண்ணு தெரியல. சரி சரி பார்ப்போம்” என்று சாப்பாட்டைத் தொடர “நல்லா வந்து வயிறு முட்டச் சாப்பிடத் தெரியுது. நெறைய மீனு கொண்டாரத் தெரியல” என்றாள் சின்னம்மா.

அவளுடைய பேச்சில் எரிச்சலுற்ற சீமான் எழுந்து, கைகழுவி விட்டு வெளியே வர, கோயிலுக்குப் போய் விட்டு வந்த அவள் மகள் கலா, “அப்பா நான் நாளைக்கு எக்ஸாம் பீஸ் கட்டணும்பா பணம் தர்ரியளா?” என்று கேட்க, “சரி சரி பார்க்கலாம்” என்றான் சீமான்.

“ஆமா, இவுக கொண்டு வார மீனுல காலேஜூக்கும் பைசா கட்டுவாக… உனக்கு எக்ஸாமுக்கும் பைசா குடுப்பாவ… சும்மா வேலையைப் பார்த்துட்டுப் போவியா?” என்றாள் சின்னம்மா ஏளனமாக.

என்ன சொல்வது என்று புரியாமல் ஏகாந்தியமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

விடியலில் ராயன் மோட்டார் மாட்டி தோணியைத் தள்ளி விட்டான் கடலுக்குள். வலையை எடுத்துக் கொண்டு அவன் தம்பியும் ஏற, “ராயன் நானும் இன்று உன்னோடு கடலுக்கு மீன் பிடிக்க வரட்டுமா” என்றவாறு தோளில் வலையோடு ஓடி வந்தான் சீமான்.

“ஏல சீமான் உன் தோணி என்னாச்சுல” என்றான் ராயன்,

“மோட்டாருல மிஸ்டேக்கு ஆயிடுச்சு” என்று ஏறிக் கொண்டான் சீமான் ராயனின் தோணியில்.

“அண்ணே சீமான் நம்ம தோணியிலே எதுக்கு வந்திருக்காக தெரியுமா?” என்று கேட்டான் மோட்டாரை ஸ்டார்ட் செய்த ராயனின் தம்பி.

“எதுக்குலே”

“அண்ணே அவருக்கு ஒழுங்காக மீன் படலே நமக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீனு படுது தெரிஞ்சுக்க வந்திருக்காரு”

“அப்படியாலே சீமான்”

“அது வந்து…” பேச முடியாமல் திணறினான்.

“ஏமுல முழுங்கற எங்கிட்ட வீட்டுல வந்து கேட்டுருக் வேண்டியதுதானல.

எல்லோரும் ஒரே ரூட்டுலே மீனு பிடிக்கப் போறீங்க. அதுனா முந்துறவனுக்கு நெறைய மீனுபடுது. பின்னால வாரவனுக்கு மினு கொறச்சுப் படுது.

நான் எல்லோரும் போற ரூட்டை உட்டு கொஞ்சம் கடலை எதுத்துக்கிட்டு தோணியை வேற வழியை உடுறேன். அந்த வழியிலே வேற யாரும் வராதனால எனக்கு நிறைய மீன் படுத்து. விவஸ்தை கெட்ட பயல. இது வீட்டுல வந்து கேட்டுருக்க வேண்டியது தானல…

சரி சரி இன்னைக்கு கெடக்கிற மீனுல நீ பாதிய கொண்டு போ. நீ வலையை அந்தப் பக்கம் போடு. இந்தப் பக்கம் வீசறே”.

– மே 29, 2004, தமிழ் போஸ்ட்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *