கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 917 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

19 – கோஷின் காதல்

அன்றைய தினம் மாலை ளங்கோவும் அருள்ராசாவும் வீடு திரும்பியபோது அவர்களது சிந்தனையெல்லாம் அடுத்தநாள் அவர்கள் ஹரிபாபுவுக்காக ஆரம்பிக்கவிருக்கும் நடைபாதை வியாபாரத்தின் மீதிலேயேயிருந்தது. அன்று சில மணித்தியாலங்கள் ஹென்றியுடன் பொழுதினைக் கழித்ததன் மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம் பற்றிய புரிதலேற்பட்டுவிட்டிருந்தது. சிறிது முயன்றால் விற்பனையை மேலும் அதிகரிக்கலாம் போலவும் அவர்கள் எண்ணினார்கள். இதே சமயம் இளங்கோ தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து அன்றுவரையிலான அவர்களது வாழ்வின் நிகழ்வுகளை ஒருகணம் எண்ணிப் பார்த்தான். இதுவரையில் புதுப்புது அனுபவங்களுக்குமேல் அனுபவங்களாக பொழுதுகள் விடிந்து கொண்டிருந்தனவேயல்லாமல் ஓர் உறுதியான அடித்தளத்தைப் பொருளியல்ரீதியிலிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் எந்தவிதமான சம்பவங்களுமே நிகழவில்லையே என்ற உண்மை உறைத்தது. அந்த நினைப்புடன் அவன் அருள்ராசாவிடம் கூறினான்: “அருள்! இதுவரையிலை ஒன்றுமே எங்கடை எதிர்கால வாழ்க்கையை உறுதியாகக் கட்டுகிறமாதிரி அமையேலை. பார்ப்பம். இந்தத் தடவையாவது அமையுதாவென்று..” 

அதற்கு அருள்ராசாவின் பதிலிவ்விதம் அமைந்தது: “என்னடா இளங்கோ. எப்பவுமே ‘பாசிடிவ் திங்கிங்’ அது இதென்று கதைத்துத் திரியிற நீயே இப்பிடிக் கதைக்கிறதை நினைச்சால் நானென்னத்தைச் சொல்ல. நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எல்லா அனுபவங்களையுமே எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுக்களாக எடுக்க வேண்டியதுதானே. அதைவிட்டிட்டு இப்பிடி நெகட்டிவ்வாகக் கதைக்கிறதாலை என்ன லாபம்?” 

இளங்கோவுக்கு அருளின் கூற்று மனநிறைவினைத் தந்தது. அதே சமயம் தன் சொற்களையே வைத்து நண்பன் தன்னை மடக்கியதை நினைத்து உள்ளூர ஒருவித பெருமையும் கொண்டான். சோர்ந்திருந்த அவனது மனம் வழக்கம்போல் மீண்டும் துள்ளியெழுந்து விட்டது. அத்துடன் “அருள்! நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரிதான். எங்களுக்குக் ஹரிபாபுவிடம் கிடைச்சிருக்கிற சந்தர்ப்பம் ஒருவிதத்திலை நல்ல சந்தர்ப்பமாகத்தான் படுகுது. விற்பனைக் கலையை எங்கடை வாழ்க்கையிலைப் பிரயோகித்துப் பார்க்கிறதுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் என்று கருதவேண்டியதுதான். அதுதான் உண்மையும் கூட எங்களாலை முடிந்த அளவுக்கு ஹரிபாபுவிடமாவது நிலைச்சு நிற்க முடியுதாவென்று பார்ப்பம் என்றும் கூறினான். 

ஹரிபாபுவுடனான வேலை பற்றிய சிந்தனைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் தம்மிடம் திரும்பியவர்களை கோஷ் வரவேற்றான்: நண்பர்களே! இன்று போன விடயம் என்னவாயிற்று? காயா? பழமா?” 

அதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்: “பழம்தான். நாளையே அவனுக்கு வேலையை ஆரம்பிக்கப்போகின்றோம். இன்று அவனது விற்பனையாளனான எஸ்கிமோ ஹென்றியுடனிருந்து வியாபாரத்தின் நுணுக்கங்களைக் கவனித்துக் கொண்டோம்” 

இச்சமயம் இடைமறித்த கோஷ் “என்ன மராத்திய முதலாளி எஸ்கிமோவிடமும் வேலை வாங்குகின்றானா? ஆள் ஊரையே தின்ற கள்ளனாகவிருப்பான் போல் தெரிகிறதே!” என்று வியந்தான். 

இதற்கு அருள்ராசா பின்வருமாறு பதிலளித்தான்: “ஒருவிதத்தில் நீ சொல்லுவதுபோல் ஊரைத்தின்று ஏப்பமிட்டவன் போல்தான் தெரிகிறான். இன்னும் அவனுடன் பழகி அவனைப் பற்றிய போதிய தகவல்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் அவனைப் பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வரமுடியும். எதற்கும் அவனுடனும் வேலை செய்து பார்ப்போம். முயன்று பார்ப்பதில்தான் தவறொன்றுமில்லையே.”

இவ்விதம் அருள்ராசா கூறவும் இளங்கோ கூறினான்: “அருள்! சரியாய்ச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டுப் பிறகு கஷ்டப்படுகிறதிலும் பார்க்க ஆறுதலாக முடிவுகளை எடுக்கப் பழக வேண்டும் அதுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வந்து வாய்ச்சிருக்கு”

இச்சமயம் மீண்டும் அவர்களது உரையாடலில் தன்னையும் பிணைத்துக் கொண்ட கோஷ் நண்பர்களே! இந்த விடயத்தில் எனக்கு உங்களை நிரம்பவும் பிடித்திருக்கிறது. எத்தனை தடவைகள் முயற்சி பிழைத்தாலும், எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாது போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களே! அது எனக்கு நன்கு பிடித்துள்ளது. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். ஒருவேளை இம்முறையும்….” 

அருளராசாவும் இளங்கோவும் ஏககாலத்தில் கேட்டார்கள்” ஒருவேளை இம்முறையும்… என்ன பிழைத்துக் கொண்டால் என்றுதானே கூற வருகிறாய்?” 

அதற்கு கோஷ்” ஒருவேளை இம்முறையும் உங்களது இந்த முயற்சி பிழைத்து விட்டால் கவலைப் படாதீர்களென்று கூற வந்தேன். நான் என் தொழிற்சாலையில் கதைத்து நிச்சயம் உங்களுக்கொரு வேலை எடுத்துத் தர முயல்கின்றேன் என்ன கூறுகிறீர்கள்?” 

இதற்கு இளங்கோ “கோஷ். நல்ல சமயத்தில் நல்ல வார்த்தைகள் பேசி நெஞ்சில் பாலை வார்த்தாய். உன்னை மறக்கவே மாட்டோம். நீ இவ்விதம் கூறியது எமக்கு இந்த வேலையினைச் சிறப்பாகச் செய்வதற்குரிய மன வலிமையினை அளித்து விட்டது. இந்த வேலை போனால் எப்படியாவது நீ எங்களுக்கொரு வேலை எடுத்துத் தருவாயென்ற நம்பிக்கையொன்று முகிழ்த்துள்ளது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இந்த வேலையினை உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் செய்வதற்குரிய ஆற்றலினை அளித்து விடுமென்ற நம்பிககை நிறையவே ஏற்பட்டுவிட்டது.” என்றான். 

கோஷ்: “நல்லது. அதுதான் தேவை. இதில் மட்டும் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்களென்றால் உங்களைப் பிறகு பிடிக்க முடியாது. அதற்குப் பிறகும் இந்த அப்பாவி கோஷை நீங்கள் உங்கள் அடிமனதில் வைத்திருப்பீர்களா? வைத்திருப்பீர்களென்று நினைக்கிறேன்.” 

நண்பர்களிருவரும் ஒரே சமயத்தில்: “நிச்சயமாக. கோஷை நினைக்காமல் யாரை நினைப்பதாம்?” 

கோஷ் உள்ளூர மகிழ்வுடன்: “பிறகென்ன! புது வேலை கிடைத்ததற்கொரு ‘பார்ட்டி’ போட வேண்டியதுதானே?” 

இளங்கோ: “அதற்கென்ன, போட்டால் போயிற்று” 

பிறகென்ன அன்றிரவுப் பொழுதும் குடியும் கும்மாளமுமாகக் கழிந்தது. ஆனந்தமாகப் பொழுதினைக் கழித்தனர். பல்வேறு விடயங்களைப் பற்றியும் தமக்குள் பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். நனவிடை தோய்ந்தனர். அவ்விதமான நனவிடை தோய்தலில் உரையாடல் காதலில் வந்து நின்றது. கோஷ்தான் இந்த விடயத்தைப் பற்றி உரையாடலினை முதலில் ஆரம்பித்தவன்: “இளங்கோ. அடிக்கடி உனக்கு ஊரிலிருந்து ஒரு நாளைக்கு பத்து இருபதென்று கடிதங்கள் வருகிறதே. எல்லாமே காதற் கடிதங்களா?”

அதற்கு அருள்ராசா இவ்விதம் சிறிது கேலியாகக் கூறினான்: “அதையேன் கேட்கிறாய். ஐயா மேல் பழகாமலே வந்த காதலின் விளைவு அது.” 

இதற்கு கோஷ் சிறிது வியப்புடன் “என்ன பழகாமலே வந்த காதலா? அப்படியும் காதல் வருமா என்ன?” என்றான். 

அதற்கு அருள்ராசா “வருமாவா. ஐயாமேலை வந்திருக்கிறதே” என்றான். 

இச்சமயம் உரையாடலில் குறுக்கிட்ட இளங்கோ “இதுவொரு பெரிய கதை. பிறகொரு சமயம் கூறுகிறேனே. இப்பொழுது இதெல்லாவற்றையும் கொஞ்ச நேரமாவது மறந்து விட்டு உற்சாகமாகப் பொழுதினைக் கழிப்போமே.” 

இச்சமயம் கோஷின் முகம் சிறிது வாட்டமடைந்தது. “இளங்கோ நீ கொடுத்து வைத்தவன். என் நிலையைப் பார். ஒரு சமயம் ஒருத்தியை நீண்ட காலமாக ஒரு தலைக்காதலாக விரும்பினேன். அவளோ அதை எள்ளி நகையாடிவிட்டு இப்பொழுது இன்னுமொருத்தனுடன் கூடி வாழ்கிறாள். அதையே மறக்க முடியாமல் இன்னும் கிடந்து மனது வாடிக்கொண்டுதான் இருக்குது.” 

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் கோஷின் காதற்கதை சிரிப்பையும். வியப்பையும் கூடவே தந்தது. 

“என்ன ஒருதலைக் காதலியை நினைத்து இன்னும் வாடிக்கொண்டிருக்கிறாயா. இருதலைக்காதலென்றாலும் பரவாயில்லை. அதுவும் ஒருதலைக் காதல். அதற்காக யாராவது இவ்விதம் மனதைப் போட்டு தன்னையே இழக்கச் வருத்திக் கொண்டிருப்பார்களா?” 

இவ்விதம் இளங்கோவும், அருள்ராசாவும் கூறவும் கோஷிற்குச் சிறிது சினமேற்பட்டது. எவ்வளவு எளிதாக அவனது அந்தக் காதலை அவர்கள் எடைபோட்டு விட்டார்கள். பதினைந்து வருடங்களாக அவன் மனதுக்குள் உருகி உருகி வளர்த்த காதல் உணர்வுகளை எவ்விதம் எளிதாகக் கருதிவிட்டார்கள். சுமித்திராவின் ஞாபகம் நெஞ்சில் தலைகாட்டியது. சுமித்திரா அவனது நெஞ்சில் காதற்பயிரை வளர்த்துவிட்டுப் பின்பு காட்டுப் பன்றியாகச் சீர்குலைத்தவள். அது அவள் தவறா? 

சுமித்திராவின் நினைவுகள் தந்த கனத்தினைத் தாளமுடியாதவனாக இன்னுமொரு மிடறு ‘ஜானிவாக்கரை’ உள்ளே தள்ளினான் கோஷ். அவனது கண்கள் மதுமயக்கத்தால் மேலும் சிவந்தன. இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனது காதற்கதையைக் கேட்பதிலொரு சுவாரசியமேற்பட்டது. இச்சமயம் வீட்டுச் சொந்தக்காரர் அஜித்தும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். வரும்போதே இலேசாக அவர்களது உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டு வந்தவர் “என்ன காதல் அது இதுவென்று அடிபடுகிறதே. என்ன விசயம்?” என்றார். அவர் இவ்விதம் கேட்கவும் அருள்ராசா கூறினான்: “அங்கிள். நீங்களே சொல்லுங்கள் யாராவது ஒருதலைக்காதலுக்காக இவனைப் போல் இவ்விதம் வாழ்க்கையை வீணாக்குவார்களா?” 

இவ்விதம் அருள்ராசா கேலியாகக் கூறவும் கோஷின் சினம் மீண்டுமேறியது. “இங்குபார். இவ்விதம் மீண்டும் மீண்டும் நீ என்னை அவமதித்தால் நான் இப்பொழுதே இந்தப் பார்ட்டியிலிருந்து விலகிவிடுவேன்”. 

விளையாட்டு வினையாவதை உணர்ந்த இளங்கோ “கோஷ்.அவன் கிடக்கிறான் விடு. நாங்கள் உன் காதலை நம்புகிறோம் இல்லையா அங்கிள்” என்றான். அதற்கு ‘அங்கிள் அஜித்தும் ஒத்துப்பாடினார்: “காதல் உணர்வுகள் ஒருதலையோ இருதலையோ புனிதமானவை என்பது என் கருத்து. காதலுக்காக ஒருவர் தன்னையே இழக்கச் சித்தமாகவிருக்கிறாரே. ஒருதலையோ இருதலையோ அந்த உறுதி உண்மையானதுதானே. எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி ஒருத்தர்மேல் ஒருதலையாகக் காதல் கொண்டார். ஆனால் அவர் காதலித்தவரோ இதுபற்றி ஒன்றுமே அறியாமல் அந்தப் பெண்மணியின் உயிர்த்தோழி ஒருவரைக் காதலித்து மணந்து கொண்டார். அந்தப் பெண்மணியோ அதற்குப் பின் யாரையும் திருமணமே செய்யவில்லை. வாழ்க்கை முழுவதுமே தான் காதலித்தவரின் நினைவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்” 

இப்பொழுது அருள்ராசா மீண்டும் உரையாடலினுள் தன்னை நுழைத்துக் கொண்டான்: “கோஷ். என்னை மன்னித்துக் கொள். நான் உன் மனதைப் புண்படுத்துவதற்காக எதனையும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காதல் கீதல் உருகலெல்லாம் தேவையில்லாதவை. பருவக் கோளாறுகள். அதனால்தான் அவ்விதம் கூறினேன். ஆனாலும் இவ்விதம் காதல்வயப்பட்டு வாழும் மனிதர்களைக் கண்டு ஒவ்வொருமுறையும் நான் வியப்பதுண்டு. ஒருவேளை அவ்வுணர்வுகளை அறிந்து கொள்ளும் பக்குவமெனக்கில்லையோ தெரியவில்லை” 

இப்பொழுது கோஷ் கூறினான்: “நண்பனே! பரவாயில்லை. நானும் சிறிது மிகையாக என் உணர்வுகளைக் கொட்டி விட்டேன். அவற்றை நீயும் மறந்துவிடு. ஒருவேளை நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். நான்தான் தேவையில்லாமல் என் வாழ்க்கையை இந்த உணர்வுகளுக்காக வீணடித்துக் கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை” 

இளங்கோ: “கோஷ். நீண்டகாலமாக ஒருத்தியை விரும்பியதாகக் கூறினாய். எவ்வளவு காலமாக?” 

கோஷ்: “பதினைந்து வருடங்களாக அவளை, சுமித்திராவை, நான் எனக்குள்ளேயே விரும்பியிருக்கிறேன். அவளிடம் இதுபற்றி எதுவுமே கூறாமலேயே எனக்குள்ளேயே பதினைந்து வருடங்களாக நான் அவளை விரும்பியிருக்கிறேன்.. 

அனைவரும் வியப்புடன் : என்ன பதினைந்து வருடங்களாகவா… இவ்வளவு வருடங்களாக ஒருமுறையாவது உன்காதலை நீ அவளுக்கு வெளிப்படுத்தவில்லையா! என்ன ஆச்சரியமிது. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா!” 

கோஷ்: “அதுதான் எனக்கும் புரியவில்லை. நானே அவ்வளவு காலம் அவ்விதம் ஓட்டினுள் தலையை நுழைத்துவிட்ட ஆமையாக இருந்திருந்தேனோ? எனக்கும் புரியவில்லை. ஆனாலொன்று.. அந்தப் பதினைந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் நான் சுமித்திராவை நினைக்காத நாளில்லை. ஒவ்வொரு நாளும் அவளை நிணைத்திருக்கின்றேன். அவளைப் பற்றிய கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவளைப் பற்றி ஒவ்வொரு கணம் நான் நினைக்கும் போதும் என் நெஞ்சம் விரகத்தால் உருகி வழியும். என் ஆழ்மனது முழுவதும் அவளே நிறைந்திருப்பதால்தான் நான் அவ்விதம் நினைப்பதாகக் கருதினேன். அவ்விதம் ஒருவரை ஆழ்மனதொன்ற ஆழமாக நினைப்போமானால் அந்த நினைவுக்குரியவ்ரும் காலப்போக்கில் அவ்விதமே நினைப்பாரென்றொரு ஆழமானதொரு நம்பிக்கை உளவியல்ரீதியில் எனக்கிருந்தது. அதனால் நான் அவளைப்பற்றி ஆழமாக உருகிக் காதலிப்பதைப்போல் அவளும் என்னைக் காதலிப்பாளென்றொரு ஆழமான நம்பிக்கையுடன் வாழ்ந்திருந்தேன். பதினைந்து வருடங்களாக அவ்விதமே காலத்தைக் கழித்து விட்டேன். அதன்பிறகே அவளிடம் சொல்லுவதற்குரிய துணிவும் ஏற்பட்டது. ஆனால் அந்தச்சமயம் அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகிவிட்டாள். இருந்தும் சந்தர்ப்பமேற்பட்டபோது அவளிடமே கூறினேன். அவ்விதம் கூறாவிட்டால் என் தலையே உடைந்து சுக்குநூறாகிவிடும்போலிருந்ததால் என் மனப்பாரத்தை இறக்கி வைப்பதற்காக அவளிடமே அவ்விதம் சந்தர்ப்பமேற்பட்டபோது அவ்விதம் கூறினேன். அவ்விதம் கூறியதன்மூலம் என் காதல் வெற்றியடையாததாகவிருந்தாலும் ஒருவிதத்தில் அவளும் அறியும் சந்தர்ப்பமேற்பட்டதன் மூலம் இருதலைக் காதலாகி விட்டதல்லவா. அதன்பின்தான் என் மனப்பாரம் சிறிது குறைந்தது.”

‘அங்கிள்’ அஜித்: “கோஷ். நீ அவ்விதம் அவளிடம் உன் காதலைத் தெரியப்படுத்திய சமயம் அவள் என்ன கூறினாள்? ஆத்திரப்பட்டாளா? அனுதாப்பட்டாளா?” 

கோஷ்: “முதலில் நானும் அவ்விதமானதொரு பதில்தாக்கத்தைத்தான் அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அவளோ மிகவும் இயல்பாக அதனை எடுத்துக் கொண்டாள். அவளிடம் நான் கேட்டேன் ‘இவ்விதம் கூறியதற்காக ஆத்திரப்படுகிறீர்களா’வென்று. ‘என்னைப் பற்றித் தவறாக நினைக்கிறீர்களாவென்று’. ஆனால். அவளோ மிகவும் இயல்பாக என்னில் மிகவும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறி அந்தச் சூழலையே மாற்றி வைத்து விட்டாள். அந்தக் கணத்திலிலிருந்து நான் அவள் பற்றிய நினைவுகளை மனதின் மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டேன். இருந்தாலும் அந்தப் பதினைந்து வருடத் தாக்கம் அவ்வளவு எளிதில் போய் விடுமாயென்ன? நிறைவேறாக் காதல் உணர்வுகள் தொல்லை தருவதைப் போல் வேறெந்த உணர்வுகளும் தொல்லை தருவதில்லை” 

இவ்விதமாகக் கோஷ் தன் காதற் கதையினை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதைத்தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் காதல் அனுபவங்களைக் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். முதலில் ‘அங்கிள்’ அஜித்தே தன் காதற்கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்:”என் காதல் கதையைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்பாகவிருக்கும். நானும் ஒருத்தியைக் காதலித்தேன். நான் யார் மூலம் அவளுக்குக் காதற்கடிதங்களை அனுப்பினேனோ அவள்தான் இன்று எனக்கு மனைவியாக இருக்கிறாள். அக்கடிதங்களை அன்று ஆசையோடு வாங்கியவள் தன் வீட்டாரின் சொல்லுக்கடங்கி என்னைவிடப் படித்த பணக்கார மாப்பிள்ளையாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டாள். அன்று நான் பட்ட வேதனையைக் கண்டு பரிதாபப்பட்டு பத்மா என்னைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். இன்று பத்மா இல்லாமல் ஒரு வாழ்வையே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. வாழ்க்கையென்றால் எப்பொழுதுமே இப்படித்தான். நினைப்பதொன்று நடப்பதொன்று. சூழலுக்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்” 

இச்சமயம் இளங்கோவுக்கும் தன் முதற்காதல் அனுபவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே சிரிப்பும் வந்தது. அவன் தன் வாழ்க்கையில் ஒருமுறைதான் காதற் கடிதமென்று எழுதியிருக்கிறான். பதினாறு வயதுக் காதல். அவளது சுருண்ட கூந்தலும், நிலம் நோக்கிய பார்வையும், கூரிய கண்களும் அவனைப் பாடாய்ப்படுத்தி விட்டதன் விளைவாக ஒரு கடிதமொன்றினை எழுதி அவளிடம் நேரிலேயே துணிவாகக் கொடுத்து விட்டான். அதில் அவள் அவனை விரும்பும் பட்சத்தில் வரும்போது தலையில் மல்லிகைப் பூ வைத்து வரும்படி கூறியிருந்தான். அவ்விதம் விரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைக் கெட்ட கனவாய் மறந்து விடும்படியும், யாரிடமும் அது பற்றிக் கூற வேண்டாமெனவும் கூறியிருந்தான். அவளோ.. அவன் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்த்தானோ அதனைச் செய்யாமல், எவையெல்லாவற்றையெல்லாம் செய்யக் கூடாதென்று எழுதியிருந்தானோ அவற்றையெல்லாம் செய்தாள். அதன்பிறகு அவளது தோழிமாரெல்லாரும் வழியில் அவனைக் கண்டால் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி எள்ளிநகையாடத் தொடங்கி விட்டார்கள். அவனோ.. அத்துடன் அந்தக் காதற்கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதானென்று தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டான். அதன்பிறகு அவளை அவன் ஒருமுறை கூடச் சந்திக்கவேயில்லை. அதெல்லாம் அந்த வயதுக் கோளாறு. அத்தகைய கோளாறுகளால்தான் அந்தப் பருவமும் பூத்துக் குலுங்குகிறது. அந்த வயதில் விரும்பிய எத்தனைபேர் நிஜ வாழ்வில் இணைகிறார்கள்? இவ்விதமாக அன்றையை இரவுப் பொழுது காதல் பற்றிய நனவிடை தோயலுடன் கழிந்தது. 

20 – இந்திராவின் சந்தேகம்

அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதை க் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். 

ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’, நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்க்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான். 

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்: 

வீதி ‘அ’கிழக்கு மேற்காகச் செல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வீதியினை ஊடறுத்துத் தெற்கு வடக்காக இன்னுமொரு வீதி ‘ஆ’ செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வீதி ‘அ ‘ மூடப்பட்டு அன்றைய தினம் நடைபாதை வியாபாரம் நடைபெற நகரசபை அனுமதித்திருப்பதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீதியில் வைத்துப் பொருட்களை விற்பதற்குத்தான் நகரசபைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வீதி ‘ஆ’வில் வைத்து விற்பதற்கல்ல. அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் நடுத்தெரு நாராயணனுக்கு ரே குதூகலம்தான். இத்தகைய தருணங்களில் நடுத்தெரு நாராயணன் என்ன செய்வானென்றால்.. வீதி ‘ஆ’வும் வீதி ‘அ’வும் சந்திக்குமிடத்திற்கண்மையில், வீதி ‘ஆ’வில் தனது கடையைப் பரப்பி விடுவான். வீதி ‘அ’விற்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலராவது வீதி ‘ஆ’வில் கடை விரித்திருக்கும் தன் பக்கம் கடைக்கண் பார்வையினைத் திருப்ப மாட்டார்களா என்றொரு நப்பாசைதான். பெரும்பாலும் அவனது நப்பாசை வீண் போவதில்லை. கிடைத்தவரை இலாபமென்று திருப்தியடைந்து கொள்வான். சில சமயங்களில் அவனது காலம் சரியில்லாமலிருந்ததென்று வைத்துக் கொள்ளுங்களேன், அத்தகைய தருணங்களில் அவன் சில சமயங்களில் சட்டவிரோதமாக நடைபாதையில் விற்பனை செய்ததற்காகக் காவற்துறையினரிடமிருந்து ‘டிக்கற் களும் பெற்றுக் கொள்வதுமுண்டு. அந்த மூன்று வாரங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்விதமாகக் கடை விரித்த நடுத்தெரு நாராயணன் இளங்கோவின் துணையை நாடினான். அருள்ராசாவுக்கு அன்றைய தினம் வேலை செய்ய விருப்பமில்லாமலிருந்ததால் இளங்கோ மட்டுமே நடுத்தெரு நாராயணனுடன் வேலை செய்யச் சம்மதித்தான். அன்றைய தினம் நடுத்தெரு நாராயணனுக்கும் வேறு சில சோலிகளிருக்கவே இளங்கோவும் நடுத்தெரு நாராயணனின் மனைவி இந்திராவுமே அன்றைய நடைபாதை வியாபாரத்திற்குப் பொறுப்பாக விடப்பட்டனர். 

இளங்கோவுக்கோ சட்டவிரோதமாக நடைபாதையில் அவ்விதம் பொருட்கள் விற்பதற்குச் சிறிது தயக்கமாகவிருந்தது. அவனுக்கு இந்திராவைப் பார்த்தால்தான் சிறிது பாவமாகவிருந்தது. நடுத்தெருவில் அவளை அவ்விதம் விட்டுவிட்டுப் போய் விட்ட நடுத்தெரு நாராயணின்மேல் சிறிது கோபமாகவுமிருந்தது. இத்தகைய பாவ,கோப உணர்வுகளுடன் அவன் அவளிடம் “இவ்விதம் நடுத்தெருவில் நின்று விற்பதற்குத் தயக்கமாகவோ அல்லது பயமாகவோ இல்லையா?” என்று கேட்டான். அதற்கு அவள் சிரித்தவாறு பதிலளித்தாள்: 

“ஆரம்பத்தில் இவ்விதம்தான் பயமாகவிருந்தது. ஆனால் போகப் போகப் பயமெல்லாம் போயே போய் விட்டது. பழகப் பழக எல்லாமே பழகிவிடும் இல்லையா? அது போல்தான்.” 

“உண்மையாகத்தான் சொல்லுகிறீர்களா? இப்போழுது இங்கே ஒரு காவற்துறை அதிகாரி வந்து நடைபாதையில் விற்பதற்குரிய பத்திரங்களெங்கேயென்று கேட்டால் என்ன செய்வீர்கள்?” 

“அதற்கும் அவர் சுலபமானதொரு வழியைச் சொல்லித் தந்திருக்கிறாரே” 

“என்ன வழி?” 

“அப்படி யாராவது வந்து கேட்டால் எனக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்று கூறி விடுவேன்…”

“அதெப்படி..நீங்கள் இங்கு நின்று கொண்டு அபபடியெப்படி இவ்விதம் கூறலாம்?” 

“அதுவும் மிகவும் சுலபம். ‘நான் இங்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தவள். கடைக்காரரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இனி இது உங்கள் பொறுப்பு’ என்று நழுவி விடுவேன்” 

இளங்கோவுக்கு அவளது பதில் ஆச்சரியத்தைத் தந்தது. 

“நீங்கள் உண்மையிலேயே மிகுந்த தைரியசாலிதான். என்னால் இவ்வளவு துணிந்து பொய் கூற முடியாது. அதுசரி அப்படி நீங்கள் கூறி நழுவி விட்டால் அங்குள்ள விற்பனைப் பொருட்களின் கதி?” 

இதற்கு இந்திராவின் பதில் அவனுக்கு மேலும் வியப்பினைத் தந்தது. அவள் கூறினாள்: “அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். அவ்வளவுதான்.”

சில சமயங்களில் மாலை நேரங்களில் ‘சைனா டவுனி’லுள்ள ‘கனால்’ வீதியிலும் நடைபாதைகளில் இவ்விதம் தந்திரமாகப் பொருட்களை விற்பதுண்டு. அத்தகைய சமயங்களில் அவனது மூளை வேறு விதமாக வேலை செய்யும். உதாரணமாக அவ்வீதியிலுள்ள பிரபலமான வர்த்தக நிலையமொன்று மாலை ஆறு மணிக்கு மூடி விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வர்த்தக நிலையம் இழுத்து இரும்பும் கம்பிகளுடன் கூடிய கதவுகளால் மூடப்பட்டபின்னர்தான் நடுத்தெரு நாராயணன் தன் கடையினை விரிப்பான். எப்படியென்றால்… அந்த வர்த்தக நிலையத்தின் படிக்கட்டுகளில் பொருட்களைப் பரப்பி வைத்து விற்பான். யாராவது கேட்டால் அந்த வர்த்தக நிலையத்துக்கும் தனக்கும் இவ்விதம் விற்பதற்குத் தனிப்பட்டரீதியிலான பொருட்கள் ஒப்பந்தமிருப்பதாகக் கூறிச் சமாளிப்பான். “சில சமயங்களில் அவனது இந்தத் தந்திரம் யாவுமிருந்தன. வேலை செய்வதுமுண்டு. அவ்விதம் வேலை செய்யாமல் போய் விடும் சந்தர்ப்பங்களில் முதலை இழக்க வேண்டியதுதான். 

இளங்கோவுக்கு இவ்விதம் வியாபாரம் செய்து கொண்டு எவ்விதம் இலாபம் சம்பாதிக்கிறானிந்த நடுத்தெரு நாராயணன் என்றிருக்கும். அந்தச் சந்தேகம் குரலில் தொனிக்க அவளிடம் பின்வரும் கேள்வியினைக் கேட்டுவைத்தான் இளங்கோ: 

“எப்படி இவரால் இவ்விதம் விற்பனையைச் செய்து கொண்டு, முதலையும் அவ்வப்போது இழந்து கொண்டு, தொடர்ந்தும் வியாபாரத்தைச் செய்ய முடிகிறது?” 

“அதனால்தான் என்னை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தபோது கடையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மனுசன் இன்று நடைபாதையிலை வந்து செய்கிற அளவுக்கு மாறியிருக்கிறார்” இவ்விதம் கூறியபொழுது இந்திராவின் குரலில் ஒருவித சோகம் கலந்த தொனி பரவிக்கிடந்ததாகப் பட்டது. 

“உங்களுக்கு இவரை முன்பே தெரியுமா?” 

அன்று இந்திராவுடன் இளங்கோ அதிக அளவு நேரம் செலவழித்ததன் காரணமாக இருவருக்குமிடையில் சகஜமான உரையாடல் நடைபெறுமளவுக்குரிய சூழல் ஏற்பட்டிருந்தது. இவ்விதமாக அவனுடன் மனந்திறந்து உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவள் கூறினாள்: உன்னை என் சகோதரனாகக் கருதி கூறுகிறேன். உண்மையில் உன்னுடன் இவ்விதம் கதைப்பது சரியில்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால் கதைக்காமலும் இருக்க முடியவில்லை. இங்கு நான் தனித்துப் போனேன். எனக்கென்று கதைப்பதற்கு யாருமே இல்லை. உறவினரோ, நண்பர்களோ யாருமேயில்லை. அமெரிக்காவில் தானொரு பிசினஸ்காரனென்று ஊர்ப் பத்திரிகையில் இவரது மணமகளுக்கான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து அகப்பட்டு விட்டேன். என் ஆசைக்குக் கிடைத்த பரிசு. எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வந்தபிறகுதானே எல்லாமே விளங்குது. எனக்கு உண்மையிலேயே ஒரு சந்தேகமும் இவர் விடயத்திலிருக்கு.” 

இளங்கோவுக்கு அவளது நிலை அனுதாபத்தைத் தந்தது. வியாபாரத்தில் நொடிந்துபோன நிலையிலிருந்த ஹரிபாபு உண்மையிலேயே மிகவும் வயதில் இளமையான இவளைச் சீதனத்திற்காகத் திட்டமிட்டே ஏமாற்றி விட்டானா அல்லது உண்மையிலேயே இவளை அழைத்துவந்ததன்பின்னர் அவனது வியாபாரம் எதிர்பாராத காரணிகளால் நொடிந்து போய் விட்டதா? 

“என்ன சந்தேகமா…. பார்த்தால் அவர் சந்தேகபடக்கூடியவராகத் தெரியவில்லையே!” 

இதற்குச் சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்தவள் பின் கூறினாள்: “சகோதரனே! நீ மட்டும் இதை யாரிடமும் கூற மாட்டேனென்று சத்தியம் செய்து தந்தாயானால் ஒரு சில வியங்களை நான் உன்னிடம் கூறலாம். ஏனோ தெரியவில்லை. உன்னை நம்ப முடியுமென்று படுகிறது. உன்னுடன் சிறிது மனந்திறந்து கதைப்பதன் மூலம் என் மனப்பாரமாவது சிறிதளவு குறையலாம்போல் படுகிறது.” 

இதற்கு அவன் கூறினான்: “நீங்கள் நிச்சயம் என்னை நம்பலாம். என்னை நீங்கள் உங்களது உண்மையான சகோதரர்களிலொருவனாக எண்ணிக் கொள்ளலாம். அந்த நம்பிகையினை நான் நிச்சயம் காப்பாற்றுவேன்.” 

இதற்கும் சிறிது நேரம் அமைதியாக இருந்த இந்திரா “இவரது நடத்தையினைப் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே இவரது மனம் சாதாரணமாகத்தானிருக்கிறதா என்ற சந்தேகம்தான் அதிகமாகிறது. இல்லாவிட்டால் எந்தவிதப் பொறுப்புமில்லாமல் எவ்விதம் இவரால் இவ்வளவு எளிதாகக் கள்ளத்தனமாக வேலைகளையெல்லாம் அநாயாசமாகச் செய்யமுடிகிறது? இவரது மனம் உண்மையிலேயே சரியாகத்தானிருக்கிறதா?” என்று அவனை அதிர்ச்சியடையக் கூடியதொரு குண்டினைத் தூக்கிப் போட்டபொழுது நடுத்தெரு நாராயணான ஹரிபாபு அன்றைய தன் சோலிகளை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். இந்திராவோ இளங்கோவை நோக்கி ‘என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே’ எனறொரு பார்வையை வீசிவிட்டு இயல்பாக நிற்பதற்கு முயன்றுகொண்டிருந்தாள். 

21 – கார்லோவின் புண்ணியத்தில்

“என்னபையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்’ என்று வந்ததும் வராததுமாக ளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி “கொஞ்சநேரம் தனியாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள். கொஞ்சநேரம் நான் இளங்கோவுடன் நமது வியாபாரம் பற்றிய முக்கியமான விடயம் பேச வேண்டும்.”என்றான். 

இளங்கோவுக்குச் சிறிது ஆச்சரியமாகப் போய்விட்டது. வந்ததும் வராததுமாகக் ஹரிபாபு இவ்விதம் கூறியது அவன் எதிர்பார்க்காததொன்று. ஹரிபாபுவின் உளவியல் பற்றிச் சற்று நேரத்துக்கு முன்னர் அவன் மனைவி கூறியவை நினைவுக்கு வரவே இலேசாகப் புன்னைகையொன்றும் மலர்ந்தது. அதனை அவதானித்த ஹரிபாபு “என்ன சிரிக்கிறாய். நான் வேடிக்கையாகக் கூறுகிறேனென்று நினைத்து விட்டாயா? இல்லை. மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிக் கதைக்கத்தான் அழைக்கிறேன். கடந்த சில நாட்களாகவே இது பற்றி உன்னுடன் கதைக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முடிவெடுத்தேன். வா.அங்குள்ள உணவகத்துக்குச் சென்று சிறிது நேரம் தேநீர் அருந்தி, கதைத்து வருவோம்” என்று கூறவும் இளங்கோ அவன் கூறப்போகும் அந்த முக்கியமான விடயம் என்னவாகவிருக்குமெனத் தனக்குள் எண்ணியவனாகக் ஹரிபாபுவைப் பின் தொடர்ந்தான். 

இருவருக்கும் ஹரிபாபுவே தேநீர் வாங்கி வந்தான். இளங்கோவுக்கு அருகில் அமர்ந்தவனாக அவனே முதலில் உரையாடலை ஆரம்பித்தான்: “இளங்கோ. உனக்கும் அருள்ராசாவுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும். இதுவரையில் நீங்கள் செய்த உதவியை ஒருபோதுமே மறக்க மாட்டேன்” 

இளங்கோ ஹரிபாபுவையே மௌனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஹரிபாபு தொடர்ந்தான்: “என்னுடைய வியாபாரம் மீண்டும் மந்தமடைய ஆரம்பித்து விட்டது. இனி விற்பதுக்கும் அதிகமாகப் பொருட்கள் எதுவுமில்லை. உங்கள் புண்ணியத்தில் தேங்கிக் கிடந்த பித்தளைச் சிலைகள், ஆபரணங்கள் போன்றவற்றிலும் கணிசமான அளவுக்கு விற்று விட்டோம். இந்த நிலையில் என்னிடமுள்ளவற்றை விற்பதற்கு என்னையும் என் மனைவியையும் தவிர மேலதிகமாக ஆட்கள் தேவையில்லையென நினைக்கிறேன். மேலும் என் மனைவியும் இன்னுமொரு வாரங்களில் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யப் போகிறா. அதன் பிறகு நான் மட்டுமே இதனைக் கவனிக்கப் போகிறேன். ஹென்றியும் அதுமுதல் தன் வியாபாரத்தை மீண்டும் தொடங்க இருக்கிறான்.” 

இளங்கோவுக்கு விடயம் விளங்கி விட்டது. இங்கும் அவனது வேலை வழக்கம்போல் தொடரப் போவதில்லை. அடுத்த வேலைக்கு மீண்டும் முழு மூச்சுடன், வீச்சுடன் முயன்று பார்க்க வேண்டியதுதான். உறுதியான கைகளும், கால்களும், உள்ளமும், மேலே விரிந்திருக்கும் ஆகாயமும், கீழே பரந்திருக்கும் பூமியுமிருக்கையில் அச்சப்படுவதற்கென்னவிருக்கிறத. இருப்புக்கான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை போராடிப் பார்க்க வேண்டியதுதான். 

ஹரிபாபு இறுதியில் இவ்விதம் கூறினான்: “நாளைக்கு நீ மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது. உன் நண்பன் வரத் தேவையில்லை. நாளையிலிருந்து நீயும் வரவேண்டிய தேவையில்லை. ஆனால் அதற்காகத் தொடர்புகளை விட்டுவிடாதே. மீண்டும் எனக்கு உங்களது உதவி தேவைப்பட்டால் அழைப்பேன். அச்சமயம் உங்களுக்கும் தற்போதுள்ளதைப்போல் நேரமிருந்தால் வந்து உதவலாம்” 

இதற்கு இளங்கோவின் பதிலிவ்விதமாகவிருந்தது: “நிச்சயமாக உங்களுக்கு உதவத் தயாராகவேயிருக்கிறோம். எங்கள் வாழ்வின் சோதனையானதொரு காலகட்டத்தில் நீங்கள் செய்த உதவியை நிச்சயம் நாங்கள் மறக்கவே மாட்டோம். குறுகியகாலமே உங்களுடன் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததென்றாலும் எங்கள் நேரமறிந்து நீங்கள் செயத இந்த உதவி இந்த உலகைவிட மிகப்பெரியது. எங்கள் இலக்கியத்தில் இதுபற்றிய அழகானதொரு கவிதையேயுண்டு. ‘காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்று இரு அடிகளில் ஒரு கவிஞன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறான்” 

இவ்விதம் இளங்கோ மிகவும் விரிவாக நன்றி கூறிப் பதிலளித்தவிதம் ஹரிபாபுவைச் சிறிது நெகிழவைத்தது. அத்துடன் அவன் “உங்களது நிலை என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. உங்கள் நாட்டு நிலை விரைவில் சீரடைந்து நீங்கள் உங்கள் குடும்பத்தவர்களுடன் சேர நான் எப்பொழுதுமே பிரார்த்திப்பேன். நீ மிகவும் பெருந்தன்மையாக எனக்கு நன்றி கூறினாலும் உண்மையில் உங்களது கவிஞன் கூறியது எங்களுக்கு நீங்கள் செய்த உதவிக்குத் தான்மிகவும் பொருந்தும். காலமறிந்து நீங்களளிருவரும் செய்த இந்த உதவியினை நாங்களும் நிச்சயம் மறக்க மாட்டோம். மற்றது…” என்று கூறிச் சிறிது நிறுத்தினான். 

“மேலே கூறுங்கள் ஹரிபாபு” என்றுவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தான் இளங்கோ.ஹரிபாபு தொடர்ந்தான்: “நீங்கள் விரும்பினால் எனது கடையில் இலவசமாக, உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் மட்டும், தங்கலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. அங்கு விற்பதற்குரிய பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால்…” 

“ஆனால்…” 

“ஆனால்… குளிப்பதற்குரிய வசதிகளில்லை. கழிவறை மட்டும்தானுள்ளது. முகம் கழுவலாம். குளிப்பதற்கு வேண்டுமானால் என்னிருப்பிடத்தில் வந்து குளிக்கலாம். என்ன சொல்லுகிறாய்?” 

இளங்கோவுக்கு ஹரிபாபுவின் யோசனை பிடித்திருந்தது. “தற்போது எங்களுக்கு இருப்பிடப் பிரச்சினையேதுமில்லை. ஆனால் எல்லாம் எங்களுக்கு வேலை கிடைப்பதைப் பொறுத்திருக்கிறது. சோதனையானதொரு எதற்கும் அருள்ராசாவுடனும் இதுபற்றிக் கதைத்துவிட்டு என் பதிலைக் கூறுகிறேன். நீங்கள் இவ்விதம் கேட்டது உங்களது நல்ல உள்ளத்தைத்தான் காட்டுகிறது. நன்றி ஹரிபாபு. குளிப்பது பிரச்சினையென்றாலும் அவ்வப்போது உங்களிருப்பிடத்தில் வந்து குளிப்பதுவும் அவ்வளவு சிரமானதல்ல. எங்களது தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது.” 

அன்று மாலை ஹரிபாபுவுக்கும், அவனது மனைவி இந்திராவுக்கும் நன்றி கூறிவிட்டுத் தன்னிருப்பிடம் நோக்கித் திரும்புவதற்காக இளங்கோ திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவனது கவனத்தைக் கிறிஸ்தோபர் வீதியிலிருந்த தோலாடைகளை விற்பனை செய்யுமொரு இத்தாலியனின் ஜவுளிக்கடை கவர்ந்தது. கடையின் கண்ணாடி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம்தான் உண்மையில் அவனது கவனத்தைக் கவர்ந்ததென்று கூறவேண்டும். அதில் ‘எங்களது விளம்பரங்களை மாலை “நேரத்தில் இச்சுற்றாடலில் குறைந்தது விட மிகப்பெரியது. மூன்று மணித்தியாலங்களாவது விநியோகம் செய்வதற்குப் பணியாட்கள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உள்ளே வந்து விண்ணப்பிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது. இளங்கோவுக்கு அவ்விளம்பரம் எத்தகைய மகிழ்ச்சியினைத் தந்ததென்று கூறத் தேவையில்லை. உடனடியாகவே உள்ளே நுழைந்தான். அவன் ஜன்னலிலிருந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஏற்கனவே அவதானித்துக் கொண்டிருந்த அக்கடையின் சொந்தக்காரனான இத்தாலியன் “நண்பனே! நான் உதவி உனக்குச் செய்யலாமா?” என்று கூறியவாறே அருகில் வந்தான். 

அதற்கு இளங்கோ “நிச்சயமாக” என்றவன் தொடர்ந்து “நீங்கள்தான் இக்கடையின் சொந்தக்காரரா” என்றான். அதற்கு அந்த இத்தாலியன் சரியாகச் சொன்னாய் நண்பனே! நானேதான் இக்கடையின் உரிமையாளன். கார்லோ இந்தக் கடையின் சொந்தக்காரன்தான். என்ன விழி பிதுங்குகிறாய். கார்லோ என்பது என் பெயர்தான். அதுசரி உன் பெயரென்ன?” என்றான். 

இளங்கோவுக்கு கார்லோவென்னும் அந்த இத்தாலியனின் உரையாடற்போக்கு சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. ஏனோ தெரியவில்லை அச்சமயத்தில் அவன் ஹரிபாபுவை ஒருகணம் நினைத்துக் கொண்டான். 

“என் பெயர் இளங்கோ… நானும் இச்சமயத்தில் வேலை பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்…” 

இத்தாலிய உரிமையாளன் கார்லா: “நாங்களா…மற்றது யார்?” 

இளங்கோ: “அவன் என் நண்பன். இருவரும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் விளம்பரங்களை விநியோகம் செய்யப் பணியாட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் அறிவித்திருக்கிறீர்கள். அந்த வேலை பற்றித்தான் மேலதிகமாக அறிய விரும்புகிறேன். 

கார்லா: “நீ முன்பு இதுபோல் ஏதாவது விளம்பர விநியோகம் செய்திருக்கிறாயா? 

இளங்கோ: “இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரையில் கடுமையாக வேலை செய்வேன்” 

அவனது பதிலும் அதில் கலந்திருந்த உண்மையான உணர்வும், ஆர்வமும்,உற்சாகமும் அந்த இத்தாலிய உரிமையாளனைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவனது அடுத்து வந்த சொற்களிருந்தன: ‘உண்மையில் உன்னைப் போன்ற ஆர்வமும், உற்சாகமும் மிக்க உண்மையான பணியாட்களே எமக்குத் தேவை. குறைந்தது மூன்று வாரங்களாவது எமக்கு உனது உதவி இந்த விடயத்தில் தேவைப்படும். நீயும், உனது நண்பன் விரும்பினால் அவனும் எமக்கு இந்த விடயத்தில் உதவலாம். நாங்கள் குறிப்பிடும் இரு சந்திகளில் நீ ஒரு சந்தியிலும், உனது நண்பன் அடுத்த சந்தியிலும் எங்கள் விளம்பரங்களை விநியோகிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆறு நாட்களும் திங்கள் முதல் சனி வரை, குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் இவ்விதம் விநியோகிக்க வேண்டும். மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் தருவோம். பகுதி நேரமாக எழுபத்தி இரண்டு டாலர்கள் வாரத்திற்கு உழைக்கலாம். விரும்பினால் நாளைக்கே நீயும் உனது நண்பனும் வேலையை ஆரம்பிக்கலாம். இப்பொழுதே நீ உன் பதிலைக் கூறத்தேவையில்லை. வீடு சென்று உனது நண்பனுடனும் இதுபற்றி ஆறுதலாகக் கதை. இருவரும் விரும்பினால் நாளை மாலை உன் நண்பனையும் அழைத்துக் கொண்டு வந்து வேலையை ஆரம்பி” 

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்குமென்று கூறுவது இதனைத்தானென்று பட்டது இளங்கோவுக்கு. மனதில் இலேசானதொரு உணர்வு படர்ந்தது. ஒரு வாரத்துக்கு 72 டாலர்கள். வீட்டு வாடகைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுக்கும் போதுமானது. இத்தாலியத் துணிக்கடைக்காரன் கார்லோவின் புண்ணியத்தில் ஒருவாறு இன்னும் சிறிது காலம் வண்டியோட்டலாமென்று பட்டது. 

– தொடரும்…

– குடிவரவாளன் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2015, ஓவிய பதிப்பகம், பட்லகுண்டு, தமிழ்நாடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *