குறள் பேச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 137 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேச்சாளரைவிடக் கேட்பாளர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் என்ற வாழ்வியல் சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர் மேடை மென்குரலோன். பேசுகின்ற கால அளவு குறைவாக இருந்தாலும், அதை எப்படிப் பேச வேண்டும் என்பதற்காக மிகுதியான நாட்கள் எடுத்துக் கொள்வார். பேச்சின் ஒவ்வொரு தலைப்பும், பெண் தலையிலே சூடிக்கொள்ளும் பூப் போன்றது!’ கரும்புச் சக்கையிலும் கணக்கற்ற எரிசக்தியுண்டென்று உணர்த்திய அறிவியல் நுட்பரைப்போல, பழைய புத்தகக் கடைக் காரர்கூட ஏற்க மறுக்கும், வாசகரோடு வாழ்க்கைப் படாத கதைகளையும் கவிதைகளையும் எப்படியோ படித்து அவற்றையுலகறியச் செய்வதில் இவர் ஓர் அறுகால் பறவை. 

அந்தப் பேச்சரங்கக்காரர்கள், நடப்பியல் நாடக உத்திகளை நன்கு கற்றவர்கள். அவ்வரங்கமே, அந்தியங் காடியில் பறவை ஒலிகளின் ஒன்றியம்போல் விளங்கும். பேருந்து நிலையத்திற்கும், ஒப்பனையும் ஒப்பந்தமும் இல்லா உலகியல் நிகழ்வைத் திரையில் கலையாக்கி நிழலாடச் செய்யும் சொகுசுக் காட்சியரங்கிற்கும், காற்றைப் போல் விரைவாகச் சென்றாலும் பாதையை விட்டு விலகாத புகைவண்டி நிலையத்திற்கும் இடை டயில் அமைந்திருந்தது. “நாம் எங்கே இருக்கிறோம்? ஏன் இங்கு வந்தோம்” என்று தெரியாத பாங்கற் கூட்டத்தின் எண்ணிக்கையை உயர்த்துவதில் உயர்ந்தவர்கள். அப்படிப் பட்டவர்கள் அழைப்புவிடுத்தால், தகுதியையும் திறமையையும் ஏன்? இன்னும் எத்தனை ‘மை’ கள் உண்டோ அத்தனையையும் பார்த்துத்தான் ‘தொலைபேசிக்குரல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று பொருள். 

நீர் நிலைக்கு மேலே மிதக்கின்ற பனிக்கட்டி, நீர் நிலைக்குக் கீழே அதிக ஆழம் அமிழ்ந்திருக்கும் அதுபோல மேடை மென்குரலோன் அச்சாணி அன்ன தோர் சொல் முத்துதிர்த்தார் என்றால் அஃது கேட்பவர்களின் மனதாழம் வரை சென்று மீளும் மீனெறி தூண்டில் போன்றது. 

குறள் பேச்சு குரல் கொடுக்கும் நாள்,ஓர் ஞாயிற்றுக் கிழமை! ஆம் உலகின் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தை ஓய்வு நாள் என்ற கயிற்றால் ஒருமைப் படுத்தும் நாள் அதுதானே. நேரம்… இராகுகாலம் விடை பெற்றுக்கொண்டு கோடு கூடு மதியத்தைக் கூவியழைத் திடும் நேரம்… ஞாயிற்றுக் கிழமை இவருக்குப் பேச்சு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, இவருடைய இணை நலம், ஆம்! மனைவியை அவர் அப்படித்தான் அழைப்பார்! வானத்து விண்மீன் தொலைவு உறவினர் வீடுகளுக்கு மகிழுந்தில் சென்றுவிடுவார், மகளுக்குப் பாதுகாவலன் தேரும் நோக்கால்… பிள்ளைகளுக்கும் இவருக்கும் உளவியல் இடைவெளி குறைவு. ஆனால் இயற்பியல் இடைவெளி மிகுதி! வேறுவேறு துறையில் கற்று வரவு செலவில் ஒருவழிப் பாதையுடையவர்கள். மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று வாயாரச் சொன்ன தெய்வ ஆண்டாள் பெயர் தாங்கிய உடன்பிறந்தவள், புக்ககம் செல்லத் தங்களால் இயன்ற அணிலுதவியைச் செய்யவேண்டும் என்ற நினைப்பு இல்லாதவர்கள்…ஆனால் மைத்துன மைத்துனியர்களின் நலத்தில் முறையான அப்பழுக்கற்ற அக்கறை காட்டும் இடம்மாறிய வேர்கள்.. பாசம் என்றால் இவர்களுக்குக் கொள்ளை விருப்பம்… ஆனால் அது, இவர்களை வழுக்காமல் பார்த்துக்கொள்வதில் வல்லுநர்கள். 

அரண்மனை போன்ற அந்த வீடு அவருடைய உழைப்பில் உருவானது என்றாலும் அவருக்கென்று ஒதுக்கப் பட்ட இடம் ஓர் அறைதான்! அதிலும் ஒரு நிறைவுண்டு… 

பதவி, பட்டம், பணம் மேலிடத்துச் செல்வாக்கு ஆகிய இவற்றை வங்கியில் மாற்றாத வரைவோலையாகத் தான் கொண்டிருப்பாரேயன்றித் தனிம உதவிக்காகத் தகையாளர்களிடம் கூடச் செல்வதில்லை. 

நேரம் காட்டி, எதற்கும் அஞ்சாதே அஞ்சாதே என்பதுபட அஞ்சுமுறை ‘ஒலித்தது. தன்புற முகம், ஏனையோருக்கு நகைமுகமாகிவிடக் கூடாதேயென்று கீரைகடைந்த மத்துப் போன்ற தன் தலையைச் சமன் செய்து சீர் தூக்கினார். நடத்துநருக்குத் தன்னால் மனச் சோர்வு வருதல் கூடாதென்று உரிய சில்லறையை உட்பை யில் போட்டுக் கொண்டு, இரண்டு கைப் பைகளுடன், காய்கறி வாங்கத்தான் புறப்பட்டார். 

ஐந்து நிறுத்தத் தொலைவுள்ள இடத்தினைப் பேருந்து நகர்ந்து நகர்ந்து இருபத்தைந்து மணித்துளி களில் அடைந்தது. நடந்திருந்தால் கால்களுக்குப் பயிற்சியாயிருந்திருக்கும். காரணம் பேருந்தல்ல… நகரை வலமாக வருபவர்கள், விரைவாகச் செல்ல முடியாத ஊர்திகள், தன்னைக் கடந்து உந்து செல்லக் கூடாது என்ற தனிமச் சிந்தனை கொண்டவர்களையெல்லாம் தாண்டியல்லவா ஓட்டுநர் செல்ல வேண்டியுள்ளது… கண்களுக்கு நேராகத் தெரியும் குறளை விட்டுவிட்டு உந்து செல்லும் வேகத்திலும் அதன் இருகரைகளிலும் ஒட்டப் பட்ட கூரொட்டிகள், ஆதரவற்ற அனாதைகட்கு ஆடையாகச் செல்லும் வாய்ப்பில்லாத ஆலைத் துணிகள் தாங்கிய செய்தித்தோரணங்கள் இவையே பயணம் செய்வோர் பலரின் பார்வையில் பட்டன. கண்ணுக் கணிகலமாகக் கண்ணாடியணிந்த சிலர், மனத்துக் கணிகலமாக எதையாவது கொள்ள வேண்டாமா? 

புற்றீசல் போல் நிற்கும் பயணிகள் இருந்தாலும், இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் புண் சொற் கணைகளை அள்ளி வீசாமல் இறங்கினர். இறங்கும் பொழுதே, ‘வரவேற்புல சாப்பாட்டுக்கு ஏழரையாகுமே! என்னமோ குறள் பேச்சுன்னு போட்டிருக்கே… அதைக் கொஞ்சம் கேட்டுத்தான் வைப்போமே…நேரமும் போனாப்பல இருக்கும்…போன்ற முல்லுரைகள் அவர் உள்ளத்தில் தொடுகோடுபோல் தொட்டுச் சென்றனவே தவிர தைக்கவில்லை. 

பேச்சரங்கத்திற்கு நடைபாதை நளினங்களை யெல்லாம் நயமாகச் சுவைத்த வண்ணம், படிகள் ஏறி மேலே சென்றார். அவ்வரங்கத்தின் நெற்றிப்பொட்டாய்த் திகழ்ந்த மணிகாட்டி ஐந்து ஐம்பதைக் காட்டியது. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், “வாங்க, பேச்சுத் துணைக்கு ஓராள் வந்தீங்க…ஆறாகப் போவது …பேச்சாளரையுங்காணும்… அமைப்பாளர்களையுங் காணும் என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் வாசலில் “இனிய இசையொலிக்கும் உந்து வண்டி நின்றது … “சே! சே! மணி ஆறாவப் போவுது…ஓராசாமியக்கூடக் காணோம்…என்று சொல்லிக் கொண்டு மிடுக்கான மனிதர் ஒருவர் வந்தார்…”ஏன்யா காப்பாளரே! பேச்சாளர் வந்தாச்சுதா? ஆளைவேற முன்ன பின்னெ பாத்தது இல்லே… என்னமோ தொலைபேசியில் பேசறப்ப மட்டும் ஏதோ தான்தான் முன்னாடி வர்ர ஆளுமாதிரிப் பேசுனாரே! பேச்சோட சரி…” என்று முடித்தார்… காப்பாளர், “ஐயா…நானும் சோடா வாங்கியாரப் போயிட்டேன்…ஆறாகப் போவுது யாரும் பேச்சாளர் வண்டீல வந்தாப்ல தெரியலியே!” என்றார். 

உடனே, கடிதோச்சி மெல்ல எறிவதைப் போல ஒரு பொருளுள்ள பார்வையை வீசிவிட்டு “அடியேன் கலை முதல்வன், பேச்சாளன்” என்ற சொற்களைக் கூறிய அளவில் அந்த மிடுக்கர், தன் முகத்தைச் சரிசெய்து கொள்ள ஏழை பட்ட பாட்டைப் பெற்றார். அருந்த பருக ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். “நன்றி”யென்று மட்டும் சொல்லிவிட்டு “நான் இங்கே வந்தது பேச மட்டுமே! முன்னமேயே வந்தவர்களையும் அழைப்பிதழில் அச்சிட்ட நேரத்தையும் மதிக்க வேண்டுவது நம் கடமை! எனவே நிகழ்ச்சியைத் தொடங்குங்கள்!” என்றார் கலை. 

வரவேற்புரையென்ற பெயரில், பள்ளி மாணவன் தேர்வுப் பொதுக் கட்டுரையில் தோன்றியதையெல்லாம் எழுதுவதைப் போல் அந்த மிடுக்கு மனிதரும், “குறள் பேச்சென்றால் எந்தக் குறளைப் பற்றிப் பேசப் போகிறார்…நான் பெரிய பெரிய மனிதர்களிடம் எல்லாம் இந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன் என்று தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போனார். அரங்கமும் களைகட்டத் தொடங்கியது…இரண்டு வகையான பேச்சுக் களைக் கலை முதல்வனால் காண முடிந்தது. ஒன்று! வரவேற்பாளர் ஒலி வாங்கியின் முன்பாகப் பேசியது… மற்றொன்று, அரங்கிலுள்ளோர் தங்களுக்குள் பேசிக் கொண்டது. திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் செல்லும் நேரம் எடுத்துக் கொண்ட வரவேற்பாளர் ஒரு வகையாகத் தன் பொழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கலை முதல்வன்! வரவேற்பாளர் பேசிய பேச்சு “குறளைப் பேச்சு… நான் பேசப் போவது குறள் பேச்சு” என்றார். அரங்கில் கைதட்டல் ஒலி வெளியில் பெய்யும் மழை யொலியையும் விஞ்சியது. “வானமிழ்தத்தை விடச் சொல்லமிழ்தம் சுவைக்க வந்த சுறுசுறுப்பிகளே!” என்று அவையடக்கம் கூறியதில் உள்ள நரைச்சுவை அமுதத் தைப் பருகியவர்கள் பேச்சினைத் தொடர்ந்து கேட்க ஆர்வலராய் இருந்தனர். 

“குறள் அளவால் சிறியது; ஆயின் பொருள் தருவதில் பெரியது. வடிவால் வாமனம்; பயனால் திருவிக்கிரமம்” என மின்வெட்டினைப் போல் பளிச்பளிச்சென்று ஒளிச் சொற்களை வீசியதும் மக்கள் வாயை மூடிக் காதுகளைத் திறந்தனர்.” அந்தக் குறள்போல் சுருக்கமாகப் பேசி விளக்கமான வாழ்க்கைத் தத்துவம் தந்த பெரியோர் களைப் பற்றித் தான் பேசலாம் என்று நினைத்துள்ளேன்” என்றார். “பிறவிக்கடலை நீந்துகிறோமோ இல்லையோ கவலைக் கடலை நீந்தத் தெரிய வேண்டும்; மனச்சாலை யைக் கடக்க வரலாறு கற்பித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒரு மனிதர் கூறினார். அவர் உங்கள் மனதில் முன்னமேயே பதிந்த பெரியவர்களில் ஒருவர் இல்லை. ‘குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுக் கொலை புரிந்ததாகச் சொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் சொன்ன இறுதி வார்த்தைதான் அது குற்றவாளிகளின் வாழ்க்கை நமக்குத் தேவை இல்லை… மனமடங்கக் கல்லாமல் அவர்களைத் தீங்கு செய்யத் தூண்டிய மனத்தை நாம் அடக்கக் கற்றால், மரணம் இல்லாப் பெரு வாழ்வு, அதாவது புகழுடன் வாழலாம். அவர்கள் செய்த செயலால் அல்ல; ஆனால் சொல்லிச் சென்ற செய்தியால் பெரியவர்கள் அவர்கள். 

“பிச்சையெடுப்பவனை விட, அந்த நிலைக்கு வர முடியாமல் போலிப் பெருமைக்காகப் பிச்சை போடுகிறார் களே அவர்கள்தான் இழிந்தவர்” என்று சொல்லி ஒருவர் இறந்து பட்டார்! அவருடைய அந்தக் குறுகிய பேச்சு; குறட்பேச்சு சமுதாயத்தைப் பற்றிய ஒரு சரியான திறனாய்வு இல்லையா? 

“தெருவிலே வீடில்லாததால் திரிகின்ற எங்களைப் பரத்தையென்றால், வீட்டிற்குள்ளேயே வளைய வருகின்ற சில மனமாறிகள் மட்டும் வேறு போர்வைகளைப் போர்த்துவதால் கற்பாளிகளா என்று தங்களுக்காகவே வழக்குரைத்த விலை நலப் பெண்டிரின் வாதத்தைச் சிந்திச்கவேண்டும். தற்கொலை செய்துகொண்டு கடிதம் எழுதிய ஒவ்வொருவரின் எழுத்தும் வடிவம் இல்லாக் கவிதை. முன்னேற முடியாதவனின் முணுமுணுப்புகள் ஒழுங்காக வாழத்தெரியாமல் காட்டாற்று வெள்ளம்போல் விரைந்து தன்னையும் அழித்துக்கொண்டு சமுதாயத் திற்கும் சுமையாக இருந்தவர்களின் துன்ப நினைவுகள். நமக்குத் தேவை… ஏளனம் செய்ய அல்ல… தடம் புரளாமல் வாழ! ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் ஒன்றுகூடத் தெரியாமல் இருப்பது பிழையில்லை… இவருடைய வாழ்க்கையைப் பார்…குறளுக்கு விளக்கமாக இருக்கிறார்…என்று குறளோடு ஒப்பிட்டுப் பேசப்படும் பேச்சுத்தான் குறள் பேச்சு…ஒன்று கூறுவேன். ஏமாற்றப் பட்டவனைவிட ஏமாற்றியவன் தான் பெருந்துன்பத் திற்குள்ளாகிறான். அது பனிக்கட்டியில் மறைந்த வெப்பத்தைப்போல. எனவே தன்னலத்தின்” அடிப்படை யிலாவது பிறரை நாம் வஞ்சிப்பதோ பிழைப்பதோ தவறு…இதுவே குறள் பேச்சு” என்று பேசி முடித்ததற்கும் வாசலில் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது. 

வேறு எகனையும் பொருட்படுத்தாமல் படிகளில் இறங்கிப் பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கே அவர் மனைவி மிகுந்த புன்முறுவலுடன் மகிழுந்தை வைத்துக்கொண்டு காத்திருந்தார். “மழைக்காக ஒதுங்கி வண்டியில் இருந்தவாறே உங்கள் பேச்சைக் கேட்டேன்… ஆழமான உணர்வுகள். இன்னொரு செய்தி! உங்களுக்கு வரவேற்புரை சொன்னாரே அவர்தான் நம் சம்மந்தி ஆகப் போகிறார். அது அவருக்கு தெரியாது… அவர் மனைவியும் நானும் இப்போதுதான் பேசி முடித்தோம்…நாங்கள் பேசியதும் குறள்பேச்சுத் தானே?” என்று வினவினாள். 

துன்பக் கடலில் மூழ்கி. வாழ்க்கைப் புயலில் சிக்கி, சூழல் வலையில் அகப்பட்டதால் உணர்வுகளைச் சுருக்கிய கலை முதல்வன், மனைவியின் வலம்புரி வாசகங்கேட்டு மகிழவும் இல்லை; மாற்றுரைக்கவும் இல்லை “எனக்குப் பேருந்துப் பயணம்தான் பழக்கப்பட்டது. பல்வேறு கதைக் கருத்துக்களை உள்ளடக்கி இடைவெளியில்லா நாடகத்தை மனித நடிப்பால் வெளிக்கொணரும் இயங் சக்தியின் ஆற்றலை நான் ஒரு கருவியாக இருந்து மற்றவர் களுக்குச் சொல்ல வேண்டுமானால், என் போக்கிலேயே என்னை விட்டுவிடு” என்று கூறினார் கலை முதல்வன்.

மறுநாள் காலையில் தொடர்ந்து பார்வையாளர்கள் “கேட்க முடியாமற் போயிற்றே!” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். உடல் காட்ட முடியாமல் குரல்வழித் தங்களைத் தொலைபேசிமூலம் அறிமுகம் செய்துகொண்ட அறிவர்களும் பிறமொழிச் சொற்களில் தாங்கள் வர இயலாமற் போனதற்காக வருந்தினர். 

“இந்தக் குறள் பேச்சு என் தனிப்பட்ட ஒருவனின் பேச்சல்ல; வாழ்ச்கையில் மிகுதியாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து சோர்ந்து போன மனநலக் குறை யாளர்களின் அரங்கேறாத பேச்சுத்தான் அது” என்று இவர் பேசியதைப் பத்திரிகையில் படித்துவிட்டு பாராட்டுத் தெரிவிக்க வந்ததையும் பொருட் படுத்தாமல், ஊருக்கு அப்பால் தனியாகக் குடிசை யொன்றில் ஊனமுற்ற தன் தம்பிக்காகத் தள்ளாத வயதிலும் அவனுக்காக வாழ்கிறாரே தந்தையார்; அவரைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். “பணம் மகிழ்ச்சியைத் தந்து விடாது; மனம்தான் அதைத்தர வேண்டும்” என்ற உண்மைப் பொருளை உபதேசித்த உத்தமரைக் காணப் புறப்பட்டார். 

குறட்பேச்சு ஒரு வெற்றுச் சொற்களால் ஆன காகித மாலையல்ல; மனிதனின் பட்டறிவைக் கோர்வையாக்கிய தஞ்சாவூர்க் கதம்பம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே விளங்கும். 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *