கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2024
பார்வையிட்டோர்: 132 
 
 

(1887ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-30 | அத்தியாயம் 31-45 | அத்தியாயம் 46-60

31.தண்ணீரின் அருமை பெருமை 

நாம் குடிக்கிற தண்ணீரும் சுத்த நிர்மலமா யிருக்க வேண்டும். உலகத்திலுள்ள அசுத்தங்களை யெல்லாம் போக்கி நமக்கு ஆகாராதிகளை உண்டாக்கி, தானும் நமக்கு ஆகாரமாயிருக்கிற தண்ணீருக்குச் சமானமான வஸ்து வேறொன்றுமில்லை. நாம் அனுபவிக்க வேண்டிய சகல பொருள்களையும் சிருஷ்டித்து, உலகத்திலே வைத்துவிட்ட கடவுள் தண்ணீரை மட்டும் நம்முடைய ஸ்வா தீனத்தில் விடாமல் ஆகாசத்தில் மேக ரூபமாய் வைத்துக்கொண்டு, வேண்டும்போது மழை பெய்வித்து நம்முடைய பானாதிகளை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டு வருகிறார். அதைக்கொண்டே ஜலத்தினுடைய அருமை பெருமை நன்றாய் விளங்குகின்றது. கடவுள் அவ்வளவு அருமையாய்க் கொடுக்கிற ஜலத்தை நாம் சுத்தமான நதிகளிலும் ஏரிகளிலும் குளங்களிலும் துரவு களிலும் தேக்கி வைத்துக்கொண்டு, யாதொரு அசுத்தஞ் சேராதபடி சர்வ ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். குடி தண்ணீர்க் குளத்தைக் குடிக்கிறதற்கு மட்டும் உபயோகப் படுத்த வேண்டுமே தவிர, அதில் ஒருவரும் வஸ்திரம் தோய்க் காமலும், ஸ்நானம் செய்யாமலும், கால் கழுவாமலும், தந்த சுத்தி செய்யாமலும், செத்தை குப்பை விழாமலும், இன்னும் வேறு ஆபாசங்கள் செய்யாமலும் பாதுகாக்க வேண்டும். அன்றியும் குடிதண்ணீர்க் குளம், கிணறு முதலானவை களுக்குச் சமீபத்தில் சாக்கடை, சலதாரை முதலிய அசுத்தங் களிருந்தால் அவைகள் மண்ணில் சுவறிக் குடிதண்ணீரின் குணத்தைக் கெடுக்குமாதலால் அவைகள் சமீபத்தில் இல்லாதபடி ஜாக்கிரதை செய்யவேண்டும். 

32. சுத்தமான வாயுவைச் சுவாசித்தல் 

அப்படியே வாயுவும் நாம் ஜீவிப்பதற்கு இன்றியமை யாத முக்கிய சாதனமா யிருப்பதால் அதுவும் பரிசுத்தமா யிருக்க வேண்டும். நாம் ஜலத்தை எப்படி உட்கொள்ளுகிறோமோ அப்படியே வாயுவையும் சுவாசித்து உட்கொள்ளுகிறபடியால், அசுத்தமில்லாமல் வாயுவும் நிஷ்களங்கமா யிருக்கவேண்டும். மனிதர்களுக்குள்ளே சிலர் துஷ்டசகவாசத் தால் கெட்டுப் போவது போல, ஜலமும் வாயுவும் எந்தப் பொருளோடு கூடுகின்றனவோ, அந்தப் பொருளின் குணத்தைக் கிரகித்துக் கொள்ளுகின்றன. அவைகள் கெட்ட வஸ்துவோடு கூடினால் தாங்கள் கெட்டுப்போவது மன்றி, அவைகளை உபயோகிக்கிற நமக்குந் தீங்கை விளைவிக் கின்றன. அசுத்தமான வஸ்துவோடு கூடும்போது அதன் துர்க்கந்தமே நமக்குக் காட்டிவிடுகின்றது. ஆகையால் நாம் வசிக்கும் வீடுகள் எவ்வளவும் அசுத்தமில்லாமல் எப் போதும் சுத்தமா யிருக்கவேண்டும். உடலுக்கும் உயிருக்கும் எவ்வளவு சம்பந்தமோ, அதைப் பார்க்கிலும் நமது பிராண வாயுவுக்கும் வெளி வாயுவுக்கும் அதிக சம்பந்தமிருப்பதால், சுத்தமான காற்று நம்முடைய சுகவாழ்வுக்கு அத்தியா வசியமாயிருக்கின்றது. நாம் விஷத்தை உண்ண எப்படி அஞ்சு வோமோ, அப்படியே கெட்ட ஜலத்தையும் கெட்ட காற்றை யும் உட்கொள்ள அஞ்சவேண்டும். மீனுக்கு ஜலம் எப்படி அவசியமோ, அப்படியே நாம் பிழைப்பதற்கு நல்ல காற்று அவசியமானபடியால், எப்போதும் நம்முடைய வீடுகளில் தாராளமாய் நல்லகாற்று நடமாடும்படி சாளரங்கள் வைக்க வேண்டும். பலருடைய சுவாசங்களினாலும் அசுத்தங்களினா லும் வீட்டுக்குள்ளிருக்கும் காற்று, விஷக்காற்றாக மாறுகிற படியால், அதை மாற்றுவதற்கு வெளிக்காற்று வீட்டுக்குள் வந்து உலாவவேண்டியது அகத்தியமாக யிருக்கிறது. ஆகை யால் சாளரங்கள் இல்லாமல் அடைப்பாயிருக்கிற வீடுகளில் குடியிருக்கக்கூடாது. துர்க்கந்தத்தைக் காட்ட நம்முடைய நாசியே போதுமானதா யிருந்தாலும் சிலர் அசுத்தத்தில் பழகிப்போன தினால் துர்நாற்றம் இன்னதென்றும், நல்ல வாசனை யின்னதென்றும் அறியாமலிருக்கிறார்கள். 

அதற்கு உதாரணமாக ஒரு தனவான் வீட்டிலே பிறந்து சுத்தமான இடத்திலே வசித்த ஒரு பெண், ஒரு ஏழையைக் கலியாணம் செய்துகொண்டு அசுத்தமான வீட்டிலே வசிக் கும்படி சம்பவித்தது. அவள் புருஷனுடைய வீட்டுக்குப் போனவுடனே அந்த அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் சகிக்கமாட்டாமல் அவள் மூக்கைப் பொத்திக்கொண்டே யிருப்பாள். அவள் சில காலத்துக்குள் அசுத்தத்திலே பழகிப் போனதால், “நான் வந்த பிறகல்லவோ என் மாமியார் வீட்டு நாற்றம் போய்விட்டது” என்று பெருமையாய்ப் பேசிக்கொண்டாளாம். அசுத்தத்திலே எவ்வளவு பழகினாலும், அது நாளடைவில் சரீர சுகத்தைக் கெடுக்காமலிருக்க மாட்டாது. அசுத்தங்களையும் துர்க்கந்தத்தையும் காட்டு வதற்கு, நம்முடைய கண்களும் நாசிகளுமே போதுமான கருவிகளா யிருக்கின்றன. உட்சுவரிருக்கப் புறச்சுவர் தீற்று தல் போல், சிலர் பிறர் மெய்க்க வீட்டின் வெளிப்பக்கங் களை மட்டும் சுத்தி செய்துவிட்டு, வீட்டுக்குள் சகல ஆபாசங்களையும் வைத்துக் கொள்ளுகிறார்கள். இது உடம்புக்குப் பால் வார்த்துண்ணாமல் ஊருக்குப் பால் வார்த்துண்பதற்குச் சமானமா யிருக்கிறது. எப்படி வீடு சுத்தமா யிருக்கவேண் டியதோ அப்படியே நமது தேகமும் வஸ்திராதிகளும் எப்போதும் சுத்தமா யிருக்கவேண்டும். இந்த உஷ்ண தேசத் தில் நாம் ஒரு நாளாவது சர்வாங்க ஸ்நானமில்லாமலிருக்கக் கூடாது. தேக சுத்திக்கும் மனோசுத்திக்கும் அந்நியோந்நிய சம்பந்தமிருப்பதால், தேக சுத்தியில்லாதவன் ஹிருதய சுத்தி யுள்ளவனாயிருப்பது மிகவும் அருமை. 

33. தேகமுயற்சியின் இன்றியமையாமை

நாம் தேகப் பிரயாசப்படும்பொருட்டே கடவுள் நமக்குச் சகல அவயவங்களையும் கொடுத்திருக்கிறார். ஏழைகள் தேகப் பிரயாசப்படுவதினால் அவர்கள் பெரும்பாலும் வியாதியில்லாமலிருக்கிறார்கள். தனவான்களுக்கும் அவர்கள் ளுடைய வீட்டுஸ்திரீகளுக்கும் சரீரப்பிரயாசமில்லாமையால் வியாதிகளால் பீடிக்கப்பட்டு அவர்களில் அநேகர் அற்பாயு சாய் மாண்டுபோகிறார்கள். தனவான்கள் கைப்பாடு படா விட்டபோதிலும், தேகமுழுவதும் அசைந்து வியர்க்கும் படியான யாதொரு சரீர முயற்சியைத் தினந்தோறும் செய்யவேண்டும். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஊருக்கு வெளியே நிர்மலமான காற்று வீசுகிற இடத்தில் பாதசாரியாய் உலாவுகிறது நல்ல வழக்கம். அந்த வழக்கத்தி னாலுண்டாகிற நன்மை யாவருக்குந் தெரியும் பொருட்டு, ஒரு ஊரில் நடந்த உண்மையான சங்கதியைத் தெரிவிக்கிறேன். 

இங்கிலீஷ் தேசத்தில் ஒரு ஊரில் அஜீரண வியாதியை ஸ்வஸ்தப்படுத்துவதில் பெயர் போன வைத்தியர் ஒருவரிருந் தார். அவர் அந்த வியாதியுள்ளவர்களை மித போஜனஞ் செய்யும்படியாகவும் வெளியிலே தேகமுயற்சி செய்யும்படி யாகவும் சொல்வதைத் தவிர, வேறு ஒளஷதப் பிரயோகம் செய்கிறதில்லை. போஜனப் பிரியனும் ஸ்தூல தேகத்தை யுடையவனுமான ஒரு தனவான் அந்த வைத்தியரிடத்தில் வந்து தான் அதிக அசௌக்கியமாயிருக்கிறதாகத் தெரிவித் தான். அந்தத் தனவான் எப்போதும் வாகனத்தின்மேற் செல்லுகிறதே தவிரக் காலால் நடந்து அறியான். அவனைப் பட்டணத்துக்கு வெளியே தன்னோடுகூட வண்டியில் வரும்படி வைத்தியர் சொன்னதினால், அவன் அந்தப் பிரகாரம் அவரோடு வண்டி யேறிக்கொண்டு சென்றான். அவர்கள் பட்டணத்துக்கு வெளியே ஐந்துமைல் தூரம் சென்றவுடனே,வைத்தியர் குதிரைச் சவுக்கைக் கீழேபோட்டு விட்டு அதையெடுத்துக் கொடுக்கும்படி தனவானைக் கேட்டுக் கொண்டார். அதை யெடுப்பதற்காகத் தனவான் வண்டியை விட்டு இறங்கின உடனே வைத்தியர் அவனை மறுபடியும் ஏற்றிக்கொள்ளாமல் திடீரென்று வண்டியைத் திருப்பிப் பட்டணத்துக்குப் போக ஆரம்பித்தார். அவர் போகும் போது சிரித்துக்கொண்டு அந்தத் தனவானைப் பார்த்து “நீர் ஊருக்கு நடந்து வந்தால் உமக்கு நல்ல பசியுண்டாகும்” என்று சொல்லிப் போய்விட்டார். அவன் அந்தப் பிரகாரம் ஊருக்கு நடந்துபோனதுமன்றி, அன்று முதல் அவன் தினந்தோறும் நடக்கிற வழக்கத்தை அநுசரித்து வந்ததால் அவனுக்குப் பூரண ஆரோக்யம் உண்டாயிற்று. வேறொரு பிரபலமான ரணவைத்தியர் அதே விதமான வியாதியுள்ள ஒரு ஆஸ்திவந்தனை நோக்கி, “நீர் தினந் ே தாறும் நான்கு அணாவுக்குள் ஜீவிக்கவேண்டும், அந்தத் தொகையை நீரே தேகப் பிரயாசப்பட்டுச் சம்பாதிக்க வேண்டும்” என்றார். இதைக்கொண்டு அதிகச் செல வில்லாத சாதாரணமான உணவும் தேகப் பிரயாசமும் சுகாநுபவத்துக்கு முக்கியமென்று தோன்றுகிறது. இந்தத் தேசத்தில் தனவான் வீட்டு ஸ்திரீகள் புருஷர்களைப்போல் அடிக்கடி வெளியே போய் உலாவக்கூடாமலிருப்பதால், அவர்கள் வீட்டுக்குள்ளே சுத்தமான காற்றுள்ள இடத்தில் தினந்தோறும் தேக முயற்சி செய்யும்படி ஜாக்கிரதை செய்யவேண்டும். அவர்கள் வீட்டு வேலைகளை யெல்லாம் தங்கள் கையாலே செய்து வீட்டுக்குள்ளேயாவது எப்போதும் நடமாடிக்கொண்டிருப்பது மிகவும் நலம். 

அகங்காரம், கோபம், குரோதம், சோம்பல், பொறாமை, மதுபானம், பரஸ்திரீ கமனம், பேராசை. பேருண்டி, நெடுந்துயில் முதலிய துர்க்குணங்கள் தேக சுகத்துக்குப் பிரதிபந்தங்களாக யிருக்கின்றமையால். அந்தத் துர்க் குணங்களுக்கு இடங்கொடாமல் கூடியமட்டும் நிர்மல சித்தமாயிருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அதிக மனக் கவலைக்கு இடங்கொடுக்கக் கூடாது. சிலர் தாய் தந்தைகளிடத்திலிருந்து சுதந்தரிக்கிற பிதுரார்ஜித வியாதி களும், சில தொத்து வியாதிகளும் தவிர மற்ற வியாதிகளுக் கெல்லாம் பெரும்பாலும் நம்முடைய அறியாமையும் அஜாக்கிரதையுமே முக்கிய காரணங்களா யிருக்கின்றன. நாம் மேலே விவரித்த சுகாதார விதிகளை அனுசரித்தால் நாம் கூடிய வரையில் அரோக திட காத்திரர்களாயிருப்போ மென்பதற்குச் சந்தேகமில்லை” என்றார். 

34. மதுரேசனுடைய அரமனையும், புவனேந்திரனுடைய அரமனையும் 

மதுரேசனுக்குக் குணம், கல்வி முதலிய சுயயோக்கியதை யில்லாவிட்டாலும், கள்ளிக்கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல் உயர்வான வஸ்திர பூஷண அலங்காரங் களினாலும் மற்ற இடம், பொருள், ஏவல் முதலிய சம்பத்துக் களினாலும் அவனை அவன் தகப்பன் மென்மைப்படுத்தி வைத்திருந்தான். அவனுக்காக அவன் தகப்பன் ஒரு பெரிய அரமனை கட்டுவித்து, அதன் கிரகப் பிரவேசத்திற்காக ஒருநாள் பல பெரிய பிரபுக்களை வரவழைத்தான். அப்போது குரு சிரேஷ்டர், புவனேந்திரன் முதலானவர்களும் போய் இருந்தார்கள். கிரகப்பிரவேசத்துக்குப் பிற்பாடு, மதுரேசன் புவனேந்திரனையும் பின்னும் சில பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய், அந்த அரமனையின் நாநாவித அலங் காரங்களையும் சுவரில் தீட்டப்பட்ட சித்திரங்களையும் காட்டிக்கொண்டு வந்தான். பிறகு புவனேந்திரனை அவமானம் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்துடன் மதுரேசன் புவனேந்திரனை நோக்கி “என் தகப்பனார் எனக்காக இப்படிப்பட்ட அரமனையைக் கட்டியிருக்கிறார். உன் தகப்பனார் உனக்கு என்ன செய்தார்?” என்றான். புவனேந்திரன் அதற்கு மறுமொழி சொல்லாமலிருப்பதே யுக்தமென்று நினைத்து மௌனமாயிருந்தான். மதுரேசன் சும்மா இராமல் மறுபடியும் அலட்டி அலட்டிக் கேட்ட தினால் புவனேந்திரனுக்குச் சிறிது ஆக்கிரகம் உண்டாகி மதுரேசனை நோக்கிச் சொல்லுகிறான்: 

35. சர்வ லோகத் தகப்பன் சமாச்சாரம்; அநாதப் பிள்ளைக்கு அநாதியே தந்தை

“என் தகப்பனும் எனக்காக ஒரு பிரம்மாண்ட அரமனையைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பூமியே கீழ் எல்லை. வானமே மேல் எல்லை. அஷ்ட திக்குகளுமே சுற்று எல்லைகள். அந்த அரமனைக்கு முன் இந்த அரமனை ஒரு எறும்பு வளைக்கும் சமானமல்ல. அந்த அரமனையிலிருக்கிற சாமான்களைக் கொண்டுதான் சகல அரமனைகளும் கட்டப்படுகின்றன. என்னுடைய தகப்பன் ராஜாதிராஜன். தேவாதிதேவன். என் தகப்பனுக்கு ஒப்பாருமில்லை; மிக்காருமில்லை. சகல ராஜாக்களும் மந்திரி முதலானவர்களும் தகப்பனிடத் தில் பிக்ஷை வாங்கிப் பிழைக்கிறார்கள். உன்னுடைய அரமனையைக் கட்டிய சிற்பர்களும், அதில் உபயோகிக்கப் பட்டிருக்கிற கற்கள், மரங்கள் முதலிய தளவாடங்களும், கீழ் மனையும் மற்ற சாமான்களு ம் உன் தகப்பனுக்கு என் தகப்பனார் பிக்ஷை கொடுத்தவைகள். இந்த அரமனைச் சுவரில் மனிதர்கள் போலவும், மிருகங்கள் போலவும், பக்ஷிகள் போலவும், விருக்ஷ ஜாதிகள் போலவும் எழுதப் பட்டிருக்கிற சித்திரங்கள் என் தகப்பனாருடைய கைவேலை யின் பாவனையே யல்லாமல் உண்மையல்லவே! இந்தச் சித்திரங்களுக்கு உயிருண்டா? அவைகள் பேசுமா? நடக்குமா? ஓடுமா? உண்ணுமா? மற்றச் சுகங்களை அநுபவிக் குமா? இந்தச் சித்திர மரங்கள் வளருமா? தளிர்க்குமா? புஷ்பிக்குமா? காய்க்குமா? கனிக்குமா? இல்லையே. என் தகப்பனார் வரைந்த சித்திரங்கள் மேற்சொல்லிய செய்கை களெல்லாம் செய்யுமே. இவ்வளவு குறுகலான இடத்தில் உன் தகப்பன் எண்ணிக்கை யில்லாத தீபங்களை வைத்து எவ்வளவோ செலவு செய்தும், போதுமான பிரகாச மில்லையே! என் தகப்பன் செப்பில்லாமல், திரியில்லாமல், எண்ணெயில்லாமல், தூண்டுகோலில்லாமல், ஒரே விளக் கேற்றிச் சகல லோகங்களுக்கும் பிரகாசங் கொடுக்கிறாரே! இந்தச் சிறிய இடத்தில் எத்தனையோ பங்காக்களை மாற்றி அநேகர் ஓயாமல் இழுத்தும் போதுமான காற்று இல்லையே! என் தகப்பன் சர்வ லோகத்துக்கும் வாயுவாகிய ஒரே பங்காக்காரனையும், தேயுவாகிய ஒரே சுயம்பாகியையும், அப்புவாகிய ஒரே தண்ணீர்க்காரனையும் நியமித்திருக் கிறாரே! அந்த வேலைக்காரர்களுடைய சகாயம் இல்லா விட்டால் உனக்கு எண்ணிறந்த ஊழியர்களிருந்தும் பிரயோஜனமென்ன? என்னுடைய தகப்பன் அரூபி யானதால், முகக் கண்ணுக்கு அதரிசனமா யிருக்கிறார். அவருக்குத் தேகமில்லாதிருந்தும், ஜீவகோடிகளுக்குத் தேகங்களைக் கொடுத்து ரக்ஷிக்கிறார். அவர் கண்ணில்லாமல் பார்க்கிறார், காதில்லாமல் கேட்கிறார், காலில்லாமல் நடக்கிறார்,கையில்லாமல் சகல காரியங்களையுஞ் செய்கிறார். அன்றியும் அவர் நமக்குக் கண்ணாயிருந்து சகல பொருள்களை யும் காட்டுகிறார். மற்ற இந்திரியானந்தங்களை யெல்லாம் நமக்கு ஊட்டுகிறார். அவர் ஒரே காலத்தில் இங்குமிருப்பார்! அங்குமிருப்பார்! எங்குமிருப்பார்! எள்ளுக்குள் எண்ணெய் போலவும், கரும்புக்குள் ரசம் போலவும், உடலுக்குள் உயிர் போலவும், அவர் சகல பொருள்களுக்குள்ளும் நிறைந் திருக்கிறார். அவர் அங்ஙனம் இராவிட்டால் எந்தப் பாருளாவது ஜீவிக்குமா? அவர் சூரிய சந்திரர்களிடத்தில் இராவிட்டால் அவைகளுக்குப் பிரகாசமேது? அவர் மேகத்திலிராவிட்டால் மேகத்துக்கு மழையேது? அவர் பஞ்ச பூதங்களிலும் இராவிட்டால் அந்தப் பூதங்களுக்குத் தொழிலேது? அவர் சகல மன்னுயிர்களுக்குள்ளும் வியாபித் திராவிட்டால் அவைகளுக்குப் பிழைப்பு ஏது? இப் பூமியின் பல பக்கத்திலும் சரியான பிரகாசமும் உஷ்ணமும் தாக்கும் படி, என் தகப்பன் இந்தப் பூமியைச் சூரியனுக்கு நேராக ஓ ஓயாமல் உருட்டிக்கொண்டே. யிருக்கிறார். பிறகு மன்னுயிர் களெல்லாம் தூங்கி இளைப்பாறும் பொருட்டு முப்பது நாழிகைக்கு ஒரு தரம் இருளாகிற போர்வையினால் இப் பூமியை மூடி வைக்கிறார். இப்படியே எண்ணிக்கையில்லாத அண்டங்களைச் சாட்டையில்லாப் பம்பரம்போல் ஆட்டு கிறார். நக்ஷத்திரங்களை எண்ணினாலும், ஆற்றின் மணலை எண்ணினாலும், என் தகப்பன் எனக்கும் உனக்கும் மற்றவர் களுக்கும் செய்திருக்கிற உபகாரங்களை எண்ணக் கூடுமா? சமுத்திர ஜலமுழுமையும் ஒரு நண்டு வளையில் அடைக்க யத்தனித்ததுபோல், என் தகப்பனுடைய பெருமையைச் சொல்ல ஒருவராலும் முடியாது” என்று. வேதாந்தக் கருத்தாய் கடவுளைக் குறித்துப் புவனேந்திரன் பேசினான். அதைக் கேட்டவுடனே மதுரேசன் பிரமித்து, இஞ்சி தின்ற குரங்குபோல் ஏமாறியிருந்தான். புவனேந்திரன் முதலான வர்கள் போன பின்பு மதுரேசன் தன் தகப்பனிடம் போய் புவனேந்திரனுடைய தகப்பனிடத்தில் சகல அரசர்களும் பிக்ஷை வாங்கிப் பிழைக்கிறார்களென்றும், இன்னும் பலவித மாகவும் புவனேந்திரன் தூக்ஷித்தான் என்றும் முறையிட் டான். அதை மதுரேசன் தகப்பன் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் குரு சிரேஷ்டருக்கு விஞ்ஞாபித்தான். பிறகு அரசன் குரு சிரேஷ்டர் மூலமாய் நடந்த உண்மையை அறிந்து பரம சந்துஷ்டி யடைந்தான். 

36. அந்நிய அரசர்களின் மணத் தூது 

அதியுன்ன தமான ஆகாயத்தில் உதயமாகிற சூரிய சந்திரர்களின் பிரகாசம் பூமியெங்கும் நிறைவது போலவும், சுகந்த புஷ்பங்களின் வாசனை வெகு தூரம் வரையிற் பரிமளிப்பது போலவும், சுகுணசுந்தரியின் கீர்த்திப் பிரதாபம் பல தேசங்களிலும் பரவியதால், அவளை மணஞ்செய்ய விரும்பாத அரசர்கள் ஒருவருமில்லை. ஆனால், அந்தப் பெரும் பேறு தங்களுக்குக் கிட்டாதென்றெண்ணி, அநேக அரசர்கள் அவளுக்கு மணத் தூது அனுப்பத் துணியவில்லை. இரண்டொரு வேந்தர்கள் மட்டும் ‘ஆசை வெட்சுமறியாது’ என்கிற பழமொழிக்கேற்ப, சுகுணசுந்தரியைத் தங்களுக்குப் பாணிக் கிரகணஞ் செய்யும்படி அவளுடைய தந்தையிடம் தூதனுப்பினார்கள். அந்தத் தூதர்கள், தங்களுடைய அரசர்களது பெருஞ் செல்வத்தையும் குணாதிசயங்களையும் விஸ்தாரமாய்ப் புகழ்ந்ததுமன்றிப் பின்னும் சொல்லு கிறார்கள்: “எங்களுடைய அரசருக்கு மனோக்கியமான கேளிவிலாசப் பெண்கள் அநேகரிருந்தாலும், ராஜ குடும்பத்தில் புத்திர சந்ததிக்கு யோக்கியமான ஒரு பட்டமஹிஷி வேண்டியது அகத்தியமானதால், அதற்காகத் தங்களுடைய செல்வப் புதல்வியை மணம் பேசவந்திருக் கிறோம்” என்றார்கள். இதைக் கேட்டவுடனே அரசனுக்கு அடக்கக்கூடா த கோபம் மூண்ட போதிலும் கரை கடவாத சமுத்திரம் போல், தனக்குண்டான சீற்றத்தை யடக்கிக் கொண்டு, அந்தத் தூதர்களை நோக்கி “அநேக கேளி விலாச ஸ்திரீகளுடனே சமான ஸ்கந்தமாயிருக்கப் பெற்ற என்னு டைய மகளுடைய பாக்கியமே பாக்கியம்! ஆனால், அந்தப் பாக்கியத்துக்கு என் மகள் யோக்கியமுள்ளவள் அல்ல; ஆகையால் நீங்கள் உடனே ஊருக்குப் போகலாம்” என்று அவர்களுக்கு உத்தரவு கொடுத்து அனுப்பி விட்டு, பிறகு அரசன் குரு சிரேஷ்டரை வரவழைத்துத் தூதர்கள் சொன்ன வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தான். 

37. புருட பாரிய ரியல்பு 

குரு சிரேஷ்டர் அரசனை நோக்கி, ‘கலியாணத்துக்குப் பிறகு அடையவேண்டிய பலனை, அதற்கு முன்னமே அந்த அரசர்கள் அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. அரசனா யிருந்தாலும், யாராயிருந்தாலும், ஒரு புருஷனுக்கு ஒரே பாரியாயிருக்க வேண்டியது முறையே தவிர, ஒருவன் கலியாணமில்லாத பல ஸ்திரீகளைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பது, சுபாவ முறைக்கும் தர்ம நீதிக்கும் முற்றிலும் விருத்தமாயிருக்கின்றது. புருஷனும் பத்தினியும் ஒரே தேகமானதால், புருஷனுடைய சுக துக்கங்களுக்குப் பெண்சாதியும், பெண்சாதியுடைய சுக துக்கங்களுக்குப் புருஷனும் சமபாகஸ்தர்களே தவிர,அவர்களுக்குள் யாதொரு வித்தியாசமுமிருக்கக் கூடாது. ஸ்திரீயும் புருஷனும் ஒரு தேக மென்பதற்குத் திருஷ்டாந்தமாக, ஹரிஹரபிரமேந்தி ராதிகள் அவர்களுடைய பத்தினிகளைப் பிரத்தியேகமாய் விடாமல், தங்களுடைய தேகங்களிலே வைத்துக் கொண்ட தாகப் புராணங்கள் கூறுகின்றன. புருஷன் பாதி, பெண் சாதி பாதி, ஆக இருவருங்கூடி ஒரு தேகமென்று, மநு ஸ்மிருதியிலும் சொல்லப்படுகின்றது. கடவுள், ஆதி மனுஷ னுடைய விலாவெலும்பிலிருந்து ஸ்திரீயை உண்டுபண்ணின தால், அவர்களிருவருஞ் சமானமென்று கிறிஸ்துவர்களும் சொல்லுகிறார்கள். கடவுளுக்குப் பிறகு, புருஷனே தனக்குச் சகல பாக்கியமுமென்று, ஸ்திரீ எப்படி எண்ணவேண்டியது கிரமமோ, அப்படியே பெண்சாதி தனக்குச் சகல பாக்கியமு மென்று, கருதப் புருஷன் கடமைப்பட்டிருக்கிறான். ஆடு மாடுகளின் மந்தை சேர்த்து வைப்பது போல, பல ஸ்திரீ களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் இறைவன், அந்த ஸ்திரீகளுக்கும் தன் பெண்சாதிக்கும் பெரிய துரோகஞ் செய்கிறான். “பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ” என்கிற பழமொழிப்படி பெண்ணைத் தகுந்த இடந்தேடி வதுவை செய்விக்க வேண்டி யது பெற்றோர்களுடைய முக்கிய கடமையா யிருக்கிறது.) பொறை, நிறை, சத்தியம், சாந்தம் முதலிய சற்குணங் களுக்கு ஆலயமாயிருக்கிற சுகுண சுந்தரிக்குச் சமானமான பெண்கள், உலகத்தில் யாரிருக்கிறார்கள்? அவளுக்குத் தக்க மாப்பிள்ளை ஒருவனே அன்றி வேறொருவருமில்லை. ஆனால் அவன் இப்போதிருக்கிற அந்தஸ்தில் அவனுக்குப் பெண் கொடுக்கச் சம்மதிக்க மாட்டீர்கள். அவனும் கொள்ளச் சம்மதியான்” என்றார். இவ்வாறு புவனேந்திரனைக் குறித்து குரு சிரேஷ்டர் பேசுகிறாரென்பதை அரசன் கண்டு கொண்டு குரு சிரேஷ்டரை நோக்கி “புவனேந்திரனைப்போல் குணேத் தமர்கள் ஒருவருமில்லையென்பது நிச்சயமே. அவனிருக்கும் போது, வேறு மாப்பிள்ளை தேடுவது கையிலே வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதற்குச் சமானமே. ஆனால், நான் என்ன செய்வேன்? தாய்தகப்பன் இன்னா ரென்று தெரியாத பிள்ளைக்குப் பெண் கொடுத்தால் உலகம் நிந்திக்குமே. ஊர்வாயை மூட உலை மூடியுண்டா? அவனு டைய பூர்வோத்தரந் தெரியாமலிருக்கும்போது என்ன செய்யலாம்?” என்று நராதிபன் சொல்ல, குரு சிரேஷ்டர் ஒன்றும் சொல்லாமல் பெருமூச்செறிந்து கொண்டு மௌனமா யிருந்தார். 

38. யுத்தம் 

மேற்கூறியபடி அந்நிய அரசரிடத்திலிருந்து கலியா ணத் தூதுக் கொணர்ந்தவர்கள் திரும்பிப் போய்த் தங்களு டைய தூது பலித்ப்படாமற் போனதை, அந்த அரசர்களுக்குத் தெரிவித்தவுடனே அவர்கள் மிக்க சினங்கொண்டு நராதிபன்மேற் படையெடுத்துச் சென்று, அவனை வென்று சுகுண சுந்தரியைச் சிறையெடுத்துக் கொண்டு போகிற தென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அந்தச் சத்துருக் களால் அனுப்பட்ட சதுரங்கசேனைகளை நராதிபன் படைகள் எதிர்த்துக் கோர யுத்தஞ் செய்து நாசமாக்கினார்கள். அப்போது புவனேந்திரனும் போர்க் கோலம் பூண்டு, மாற்றார் படைகளை யெதிரிட்டு, அவர்களைச் சின்னா பின்ன மாகச் சிதறவடித்து, ஜயஸ்தம்பம் நாட்டினான். அதனால் நராதிபன் அகமகிழ்ந்து புவனேந்திரனுடைய வீர பராக்கிர மத்தை மிகவும் வியந்து கொண்டாடினான். 

39. குரு சிரேஷ்டர் புவனேந்திரனின் மனநிலை அறிதல் 

இவ்வாறு நிகழுங் காலத்தில் ஒரு நாள் குரு சிரேஷ்டர் புவனேந்திரனுடைய மனோபாவத்தை அறியும் பொருட்டு அவனை நோக்கி ”அப்பா! என்அபிமான புத்திர சிகாமணியே! சுகுண சுந்தரிக்கு நேரிட்ட விபத்துகளெல்லாம் உன்னால் நிவர்த்தியானமையால் நராதிபன் உன்னிடத்தில் அத்தியந்த விசுவாசமுள்ளவராயிருக்கிறார். இத்தருணத்தில் நீ என்ன விரும்பிக் கேட்கினும் சித்தமாய்ச் செய்வார்” என்றார். உடனே புவனேந்திரன் “ஐயா! எனக்குத் தாயுந் தகப்பனும் குருவுமாகிய நீங்கள் எனக்கு என்ன குறைவு வைத்திருக் கிறீர்கள்? ஆகையால் எனக்கு ஒரு அபேக்ஷையுமில்லை” என குரு சிரேஷ்டர் அவனை நோக்கி, “அப்பா கண்மணியே! எப்படிப்பட்ட சித்த விரக்தியுள்ளவர்களையும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்கிற மூவாசையின் மயக்கம் விடாது. ஆதலால் உனக்கு வேண்டுவனவற்றைத் தெரிவி” என்றார். உடனே புவனேந்திரன் “ஐயா ! தங்களது கிருபை யால் எனக்கு மண்ணாசையுமில்லை, பொன்னாசையுமில்லை. ஆனால் பெண்ணாசையுமில்லையென்று சொல்வேனானால், அது பொய் வார்த்தையாய் முடியும். அந்தப் பெண்ணும் ஒரு பெண்ணேயன்றிப் பலர் அல்ல. இப்போது அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாச மென்றால், வானத் துக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரமோ, மலைக்கும் அணு வுக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்திலிருக்கிறோம். மாணிக்கப் பாத்திரத்தில் வைக்கவேண்டிய தேவாமிர் தத்தை மண்பாத்திரத்தில் வைக்க விரும்புவதுபோல், அகண்ட. சாம்ராஜ்ஜிய மகாமண்டலேசுரர்களுக்கு யோக்கிய மான அந்தக் கன்னிகா ரத்தினத்துக்கு நான் சுத்த அபாத் திரன். ஆகையால், அந்தப் பெண்ணாசையை என்னாற் கூடியமட்டும் நிக்கிரகஞ் செய்யப் பிரயாசப்படுகிறேன் என்று சொல்லி, நெட்டுயிர்ப்புடன் பொருமினான். குரு சிரேஷ்டரும் அவனோடுகூடக் கண்ணீர் சொரிந்து “ஐயோ! இந்த உத்தமவானுக்கு வீணே மனக்கிலேசத்தை உண்டுபண்ணினோமே” என்று அவர் தம்மைத் தாமே நொந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் உண்டாகும்படியாகப் பல நன்னய வார்த்தைகளை மொழிந்தார். 

40. சுகுண சுந்தரியின் மனோலயம் 

புவனேந்திரனுடைய வார்த்தைகளால் அவனுடைய மனோரத மின்னதென்று தெரிந்துகொண்டோம். பெண் பாலாகிய சுகுணசுந்தரியின் மனநிலை யாதென்றறியோம். ஊமை கண்ட கனவு போல், அவள் உள்ளக் கருத்தை ஒருவருக்கும் வெளியிடா விட்டபோதிலும். அடுத்த பொருளைக் காட்டும் பளிங்குபோல, அவள் மனக்கருத்தை அவளுடைய முகக் குறி காட்டிவிட்டது. எப்படியென்றால், பெருங் காற்றினால் அசைவுற்று வீழ்கிற விருக்ஷத்தோடு அதன்மேற் படர்ந்த கொடியுங் குலைந்து வீழ்வதுபோல், புவனேந்திரனைப் போலவே சுகுண சுந்தரியும் சிந்தாகுலமுடையவளாயினாள். ஆயினும் சூரியன் எந்தப்  பக்கந் திரும்புகிறதோ அந்தப் பக்கத்தில் தானும் திரும்புகிற சூரிய காந்திப் புஷ்பம்போல் சுகுண சுந்தரி தன் தகப்ப னுடைய எண்ணம் எப்படியோ அந்தப்படி நடக்கிறவளான தால், தன்னுடைய மனமாகிய யானை வரம்பு தப்பிச் செல்லாதபடி, ஞானமாகிய அங்குசத்தினால் அடக்கிக் கொண்டு வந்தாள். 

41. அதிவிருஷ்டி வெள்ளச்சேதம் 

உலகத்தில் நடக்கிற அக்கிரமங்களுக்குத் தக்கபடி வேண்டும் காலத்திலே மழை பெய்யாமலும். வேண்டாத காலத்திலே அபரிமிதமாய்ப் பெய்தும் கெடுப்பதுபோல் நராதிபனுடைய ராஜ்ஜியத்தில் ஒரு காலத்தில் அதிக மழை பெய்து பெருஞ் சேதத்தை உண்டுபண்ணிற்று. எப்படியென்றால், தீயர்களுடைய நெஞ்சம் போல் வானம் கறுத்து, அவர்களுடைய கோபாக்கினிபோல் மின்னி, அவர் களுடைய கொடுஞ் சொற்கள் போற் குமுறி யிடித்து சோனாமாரியாய் மழை பொழிந்து யுகாந்த காலப் பிரளயம் போல எங்கும் வெள்ளம் பெருகி ஆறுகள், குளங்கள், ஏரிகளெல்லாம் உடைப்பெடுத்து விளைவுகளை யெல்லாம் நாசமாக்கிவிட்டது. அதனாற் பெரும் பஞ்ச முண்டாகிப் பிரஜைகளெல்லாம் வருந்தினார்கள். அக்காலத்தில் நராதிபன் தன் பண்டகசாலைகளை யெல்லாம் திறந்து நகரத்திலுள்ள ஜனங்களுக்கு வேண்டும் தானியங்களைக் கொடுத்து ரக்ஷித்தான். வெளிநாட்டு ஜனங்களுக்குத் தானியம் அனுப்புவதற்கு ரஸ்தாக்களெல்லாம் வெள்ளத்தினால் இடிந்து, பள்ளமும் படுகுழியுமாய்ப் போய்விட்டதால் வண்டிகள் போக மார்க்கமில்லாமல் அநேகர் பசியினால் மடிந்து போனார்கள். அந்தச் சமயத்தில் சில பிராஞ்சுக்காரர்கள் பலூன் (Balloon) என்கிற ஆகாய விமானங்கொண்டு வந்து அதன் வழியாய்த் தானியங்கள் கொண்டுபோவதாக ஒப்புக் கொண்டு, அரசன் உத்திரவுப்படி பல ஊர்களுக்குத் தானிய தவசங்கள் கொண்டுபோனார்கள். சில சமயங்களில் அரசனும் அந்த விமானத்தின் மேலேறிப் பல ஊர்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவான். ராஜதானிக்கு ஐங்கா தவழி தூரத்திலுள்ள நவநீதபுரியென்னும் ஊரானது தன்னுடைய ராஜ்ஜியத்துக்கு மத்தியஸ்தானமாயும் நல்ல விளைவுள்ளதாயு மிருந்தமையால், அந்த ஊரில் அரசன் சில மாசம் தங்கியிருந்து, பல ஊர்களுக்கு ஆகாய மார்க்கமாய்த் தானியங்கள் அனுப்பிக் கொண்டுவந்தான். 

42. ஆகாய கமனம். சுகுண சுந்தரியை ஒரு அரசன் சிறை யெடுப்பித்தல் 

தன் பிதாவை ஒரு நாளும் பிரியாத சுகுணசுந்தரி இப்போது சில காலம் பிரிந்திருக்கும்படி நேரிட்டதால் நவநீதபுரிக்குப் போய்த் தகப்பனைப் பார்க்க வேண்டு மென்கிற அபேக்ஷையுடையவளானாள். ஜலப் பிரவாகத்தால் வழிகளெல்லாம் சேதப்பட்டு, வண்டி முதலிய வாகனங்கள் செல்வதற்குத் தடையா யிருந்தமைபால் நவநீதபுரிக்கு எப்படிப் போகிறதென்று சுகுண சுந்தரி மயங்கிக் கொண்டிருக்கையில், அந்தப் பிராஞ்சுக்காரன் தன்னுடைய ஆகாய விமானத்திலேற்றி அதி சீக்கிரத்தில் கொண்டு போய் விடுவதாக ஒப்புக் கொண்டான். உடனே சுகுண சுந்தரியும் அவளுடைய உயிர் பாங்கியும் விமானாரூடராய்ப் புறப்பட்டார்கள். அந்தப் பிராஞ்சுக்காரனும் அவனுடைய ஊழியர் சிலரும் சூரியாஸ்தமனத்துக்கு முன் நவநீதிபுரியிற் கொண்டுபோய் விடுவதாக வாக்களித்து, அதிவேகமாய் ஆகாயத்தில் விமானத்தை நடத்திக் கொண்டு சென்றார்கள். மனோ வேகத்திலும் அதிவேகமாய் ஆகாய கமனம் செய்த அந்த விமானம், அருணன் அஸ்தமித்து வெகுநேரம் சென்றும் நவநீதபுரியிலே சேராமையால் அதற்குக் காரணம் என்ன வென்று சுகுண சுந்தரி வினவினாள். அந்த ஆகாய கமனி “இன்னும் சிறிது நேரத்துக்குள்ளே கொண்டு போய்விடு கிறேன், அஞ்சவேண்டாம்” என்று சொல்லிக் கொண்டு போனான். பெருங் காற்றும் மழைக்காலிருட்டுமா யிருந்தபடி யால் விமானம் இன்ன திசையை நோக்கிச் செல்லுகிற தென்று சுகுண சுந்தரிக்குத் தெரியவில்லை. அர்த்த சாமமாகி யும் குறித்த இடத்தில் வந்து சேரவில்லை. விமானம் செல்லு கிற வேகத்தைப் பார்த்தால் நராதிபனுடைய இராஜ்ஜிய எல்லையைக் கடந்து அந்நிய தேசத்திற் பிரவேசித்து, வெகு தூரம் போயிருக்கலாமென்று நினைக்கும்படியா யிருந்தது. இது ஏதோ கபட மார்க்கமென்று சுகுண சுந்தரிக்குப் பயமும் சந்தேகமும் ஜனித்து அந்த வெள்ளை மனிதனை நோக்கி “இன்னமும் ஊர் வந்து சேரவில்லையா” வென்று வினவினாள். அவன் யாதொரு பிரதி உத்தரமும் சொல்லாமலே விமானத்தை நடத்தினான். சுகுண சுந்தரியும் அவளுடைய பாங்கியும் இன்னது செய்கிறதென்று தோன்றாமல் மலைத்துச் சோகித்து மனமறுகலுற்றார்கள். 

43. கன்னியர் மாடத்தில் சுகுணசுந்தரி அடைக்கலம் புகுதல் 

விடியற்காலம் சுக்கிரோதயமாவதற்கு முன், மலையையும் பேர்க்கும்படியான பிரசண்ட மாருதம் நாலு பக்கமும் ஓங்கி வீச ஆரம்பித்தது. இதுகாறும் ஒரே மார்க் கத்தில் ஒழுங்காய்ச் சென்றுகொண்டிருந்த விமானமானது இப்போது சுழல் காற்றிலே சிக்கி, பெருங்குடியர்கள் மதுபான மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுவது போல் விமானமும் நாற்பக்கத்திலும் சுழன்று தத்தளிக்க ஆரம்பித்தது. அதை ஒரே மார்க்கத்தில் செலுத்த அந்த ஐரோப்பியனும் அவனுடைய ஊழியர்களும் எவ்வளவு பிரயாசைப்பட்ட போதிலும், பாகனுக்கு அடங்காத மத யானை போல் அந்த விமானம் அசைந்தாடிக் கொண்டு மியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. சுகுண சுந்தரியும் அவளுடைய சகியும் அந்த ஐரோப்பியனுடைய மோசக் கருத்து நிறைவேறுவதைப் பார்க்கிலும், விமானத்தோடு பூமியில் விழுந்து சாகிறது நலமென்று நினைத்து மரணத்துக்கு ஆயத்தமா யிருந்தார்கள்; ஆயினும் அந்த ஐரோப்பிய னுடைய அபாயத்துக்கு விடாமுயற்சியினால் யாதொரு இடமில்லாமல் விமானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழே யிறங்கி, கடைசியாய் ஒரு ஊரில் கிறிஸ்து வேத கன்னிகா ஸ்திரீகளுடைய மணிமாடத்தின் மேலே தங்கி நின்றது அப்பொழுது அந்தக் கன்னிகா ஸ்திரீகள் மேல்மாடியில் கடவுளை நோக்கிக் காலை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந் தார்கள். அவர்களுக்கு முன் திடீரென்று விமான மிறங்கிய வுடனே அவர்கள் திடுக்கிட்டுத் திகைத்து, பூதமோ பேயோ வென்று பயப்பிராந்தியுள்ளவர்களானார்கள். அதிலிருந்து சுகுண சுந்தரி யிறங்கினது எப்படியிருந்ததென்றால், இந்திர விமானத்திலிருந்து ஒரு தெய்வப் பெண் இறங்கியதுபோற் காணப்பட்டது. 

உடனே சுகுண சுந்தரி அந்தக் கன்னிகா ஸ்திரீகளுக்கு நமஸ்காரஞ் செய்து “தாய்மார்களே! நான் திராவிட தேசாதிபதியான நராதிப மகாராஜாவின் மகள். என்னை இந்த மனிதன் அவகடமாய்க் கொண்டு வந்திருக்கிறான். நான் உங்களுக்கு அடைக்கலம். என்னை ரக்ஷிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தாள். அவளுடைய வார்த்தை முடியுமுன் அந்தக் கொடியன் கன்னிப் பெண்களை நோக்கி “தக்ஷண தேசாதிபதியாகிய நம்முடைய மகாராஜா இந்த மாதரசியை விவாகம் செய்வதற்காகக் கொண்டுவரும்படி ஆக்ஞாபித்த பிரகாரம் நான் கொண்டு வந்தேன். நாங்கள் ஏறிவந்த விமானம் பெருங்காற்றினால் அலைப்புண்டு, இராச நகரத்தை யடையாமல் இவ்விடத்திலேயே தங்கிவிட்டது. இந்தப் பெண்ணை நான் அரசரிடம் கொண்டுபோகும்படி நீங்கள் உத்தரவு கொடுக்க வேண்டும்” என்றான். உடனே அவர்கள் சுகுண சுந்தரியை நடந்த விசேஷம் என்னவென்று விசாரித் தார்கள். அவள் தன்னுடைய சரித்திரத்தைச் சங்க்ஷேப மாய்த் தெரிவித்ததுமன்றி, தன்னுடைய தந்தையைப் நவநீதபுரிக்குத் தான் புறப்பட்டதும், அந்த ஊருக்கு விமானத்தைக் கொண்டு போவதாக கொண்டவன், இவ்வளவு தூரம் தன்னையும் மோசமாய்க் கொண்டு வந்தது முதலான சகல விவரங்களை யும் சாங்கோபாங்கமாய்த் தெரிவித்தாள். அவர்கள் அந்த அண்டப் புரட்டனை நோக்கி “எங்களிடத்திலே அடைக்கலம் புகுந்த பெண்ணை உன்னிடத்தில் விடோம்” என்றார்கள். அவன் அவர்களை நோக்கி “அரசனுடைய ஆக்ஞையை நீங்கள் அவமதித்து இந்தப் பெண்ணை விடோமென்கிறீர் கள். உங்களுடைய ஆகாத்தியத்தை அரசனுக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொல்லிக் கோபாவேசத்துடன் போய் விட்டான். 

44. தக்ஷண தேசாதிபதியின் தூதிகளுக்கும் சுகுண சுந்தரிக்கும் சம்வாதம் 

அந்த ஐரோப்பியன் மூலமாய் நடந்த காரியங்களைக் கேள்வியுற்ற அரசன், ஒளியப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல், இப்படி வந்து சம்பவித்ததேயென்று ஆச்சரியமெய்தி “சாக்ஷிக்காரன் காலில் விழுவதைப் பார்க் கிலும் சண்டைக்காரன் காலில் விழுவது நலம்” என்கிற பழமொழிப்படி சுகுண சுந்தரியைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும்படி வாசாலகமும் வசன சாதுரியமுமுள்ள சில தூதிகளை அனுப்பினான். அவர்கள் மாய வித்தைக ளெல்லாம் கற்றவர்கள். கல்லிலும் நார் உறிப்பார்கள். இரும்பையும் இளகச் செய்வார்கள். அவர்கள் சுகுண சுந்தரி யிடம் வந்து “அம்மா உம்முடைய அழகைப் பார்த்த உடனே நீர் மானிடப்பெண்ணாவென்று சந்தேகித்துப் பிரமிக்கிறோம். உம்மைப்போலப் பெண்களான எங்களுடைய தன்மையே இப்படியிருக்குமானால், புருஷர்களுடைய தன்மையை எப்படிச் சொல்லப் போகிறோம்? மகா லக்ஷ்மி இப்போது தான் புஷ்பாசனத்தை விட்டுப் பூமியிலே அடிதோயப் புறப் பட்டது போலத் தோன்றுகிறீர்! இப்படிப்பட்ட உமக்குத் திருப்பாற்கடலில் யோக நித்திரையைவிட்டு எழுந்த மகா விஷ்ணுபோல விளங்கா நின்ற எங்களுடைய வேந்தரே தக்க மணவாளர். அவருடைய அழகும், குணமும், கல்வியும், நீதியும், நெறியும் வாசாம கோசரமா யிருக்கின்றன. அவர் உம்மைப் பாணிக்கிரகணம் செய்ய விரும்புகிறாரேயன்றி வேறு வியபிசாரமல்ல. வேசித்தனமல்ல. நல்ல எழுத்து நடுவே யிருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது போல், தானே வருகிற பாக்கியத்தை நீர் தள்ளி விடலாமா?” என்றார்கள். 

45. கலியாண உடன்படிக்கையைப் பற்றி ஓர் பிரசங்கம் ராக்ஷத மண கண்டனம் 

உடனே சுகுண சுந்தரி அந்தத் துஷ்டைகளை நோக்கிச் சொல்லுகிறாள்:- “கலியாண மென்பது ஸ்திரீ புருஷர்கள் இருவரும் சம்மதித்துச் செய்துகொள்ளுகிற பரஸ்பர நிபந்தனையே யல்லாது, ஒருவருடைய சம்மதத்தின் பேரில் மட்டும் நடக்கிற காரியமல்ல. அவர்களிருவரும் தக்க பருவ மில்லாத சிறுவர்களாயிருக்கிற பக்ஷத்தில், அவர்களுடைய விவாகத்துக்கு உற்றார் பெற்றார்களுடைய சம்மதம் அவசிய மாயிருக்கின்றது. அற்பமாகிய ஸ்தாவர ஜங்கமங்களைப் பற்றி இருவர் செய்து கொள்ளுகிற உடம்படிக்கைக்கு, ஒருவர் சம்மதித்து ஒருவர் சம்மதிக்காவிட்டால், அந்த உடம்படிக்கை ஊர்ஜிதமாமா? அப்படியிருக்க, ஸ்திரீ புருஷர் களுடைய யாவத் ஜீவ பரியந்தமும், அதற்குப் பிறகு தலை முறை தலைமுறையாயும் நீடித்திருக்க வேண்டியதும், இகபர சம்பந்தமானதும், தாய் தந்தையர், மற்ற பந்துக்கள், இஷ்டமித்திரர்கள், கோயிலார், குருக்கள் முதலானவர் களுடைய அநுமதியின் மேல் நடக்க வேண்டியதுமான விவாக உடன்படிக்கைக்குப் புருஷன் மட்டும் சம்மதித்து, ஸ்திரீயும் அவள் இனத்தாரும் சம்மதியாவிட்டால், அந்த உடன்படிக்கை செல்லுமா? உங்களுடைய அரசர் அனுப்பின மணத் தூதுக்கு நானும் சம்மதிக்காமல் என்னுடைய பிதாவும் சம்மதிக்காமல் நிராகரித்த பிறகு, அவர் எங்கள் மேலே படையெடுத்து யுத்தஞ்செய்தும், அவருடைய எண்ணம் பலிக்காமலிருக்க, என்னை இவ்வாறு தந்திரமாய்ச் சிறையெடுப்பித்தது துராக்கிருதமல்லவா? இப்படிப்பட்ட அக்கிரமத்தை வேறொருவன் செய்தால், அவனைத் தண்டிக்கக் கடமைப்பட்ட அரசர், தாமே இந்த அநியாயத்தைச் செய்தால், தெய்வந் தண்டியாமல் விடுமா? நீங்கள் சொல்லுகிறபடி, உங்களுடைய அரசர் நீதிமானாயிருந்தால், இராக்ஷத மணமென்றும் பைசாச மணமென்றும் சாஸ்திரத்தில் நிஷேதிக்கப்பட்ட மணத்துக்கு உடன்படலாமா? ஒரு அரசரை மனப்பூர்வமாய் மணம் செய்துகொள்ள, எத்தனையோ ஸ்திரீகள் சித்தமாய்க் காத்திருப்பார்கள். அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு, சம்மதமில்லாத ஸ்திரீயை விரும்புவது அரசர்களுக்கு அழகா? என்தந்தை முதலானவர்கள் என்னைக் காணாமையால், இப்போது என்ன ஸ்திதியிலிருப்பார்களோ என்று நினைக்கும்போது, என் தேக மெல்லாம் பதைக்கின்றது. உங்களுடைய அரசர் யோசனை யில்லாமல், இப்படிப்பட்ட அதிக்கிரமமான செய்கையை ஒருக்கால் செய்து விட்டாலுங்கூட, என்னை மறுபடி யும் என்னுடைய தந்தையாரிடம் அனுப்பிவிடுவாரானால், அதுவாவது கிஞ்சித் பரிகாரமாயிருக்கும். மங்கிப்போன அவர் கீர்த்தி மறுபடியும் பிரகாசிக்கும்” என்றாள். சுகுண சுந்தரி சொன்ன ஒவ்வொரு நியாயமும் தகுதியாயும் மறுக்கக் கூடாததாயுமிருந்ததால், அதற்கு மறுமொழி சொல்ல வாயில்லாமல் அந்தத் தூதிகள் போய்விட்டார்கள். கன்னிகாஸ்திரீகள் சுகுண சுந்தரியின் விநய சாதுரியத்தை வியந்து கொண்டார்கள். 

– தொடரும்…

– சுகுணசுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல். 1887ல் இந்நாவலை வெளியிட்டார்.

– சுகுணசுந்தரி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1979, வானவில் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *