சேற்றில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 1,000 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

அன்றைய பொழுதின் ஆறுதலாக, மாலை நேர பஸ் கிடைக்கிறது.

வழி நெடுகிலும் மண் அன்னை நீர் முழுகக் குளிர்ந்து நிற்கும் காட்சிகள். வரிவரியாக வண்ணப் புள்ளிகளாகப் பெண்கள் குனிந்து நாற்றுநடும் கோலங்கள், சமுத்திர ராசனிடம் புகுமுன் அன்னையிடம் பிரியா விடை கொள்ளும் காவிரித்தாய் இரண்டு கை விரல்களையும் அகலவிரித்து மண் அன்னையைத் தழுவிக்கொண்டிருக்கும் வளமை. இந்தப் பூமியில் மனிதர் பசி தீர்க்கும் அமுத சுரபிகளாய் ஆறு குளங்கள் நிரம்பித் துளும்பு கின்றன. அந்நாளில் வங்கத்துக்காரரான ஒரு தலைவர் ஒருமுறை கிராமக் கூட்டத்திற்கு வந்தார். பாரதம் முழுவதும் சுற்றியவர். இந்த அழகைக் கண்டு பரவசப்பட்டுப் போனார். எல்லாம் நீர், எல்லாம் மண் என்றாலும், ஒவ்வொரு நதியின் வன்மையிலும், தனித்தன்மை துலங்குகிறது. இந்த பூமியின் மண் தறிகளில் எத்தனை வகை மக்கள். இந்த மக்கள் யாரும் எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும்போது கொண்டு செல்லுவதுமில்லை. ஆனால் இந்த அழகுகளைச் சுதந்தரமாக அதுபவிக்க முடியாமல், மனிதனுக்கு மனிதன் ஆக்கிரமித்து அடித்துக் கொள்ள, இவற்றையே சாதனங்களாக்கிக் கொள்கிறானே என்றார். இந்தப் பேச்சை விசுவநாதன் தான் மொழி பெயர்த்தார். சாமி இல்லை என்று சொல்பவனும் இங்கே இயற்கையின் சூழலில் நெடி துயர்ந்து நிற்கும் கோபுரங்களைக் கண்டு மனம் சிலிர்க்கமுடியும். ஆனால் இந்த மண்ணிலே ஊன்றி இந்த அழகிலே வளர்ந்தவன், மனிதனுக்கு மனிதனாக இல்லை.

வீடு திரும்புகையில் கால் அதிகமாக வலிக்கிறது. பொழுது இறங்கி விட்டது. நடவுக்கும் உழவுக்கும் சென்றவர்கள் கரையேறிக் கொண்டிருக்கிறார்கள். கடைத்தெருவில் வியாபாரமும் கூச்சலும் உச்சக்கட்டத்தில் மோதிக்கொள்ளும் நேரம். கள்ளுக் கடையில் கலகலவென்று ஆட்களின் குரல்கள் உயர்ந்து ஒலிக்கின்றன. அக்கரையிலிருந்து மூங்கிற்பாலம் கடந்து, மூலை ரங்கனும் விருத்தாசலம் பிள்ளையும் வருகின்றனர். இவர் பாதையில் எதிர்ப்படுவதால், சற்றே ஒதுங்கி வழிவிட நிற்கிறார். “ஏம்ப்பா சம்முகம்? நான் சொல்லி ஆறு மாசமாவுது, காதிலேயே போட்டுக்காம இருக்கியே? டவுனுக்கா போயிட்டு வார? மத்தியானம் நேத்தும் வீட்டுப்பக்கம் ஆளனுப்பிச்சேன், இன்னிக்கும் விசாரிச்சேன்.”

கிளியந்துறைப் பிரமுகர்களில் ஒருவராகச் செல்வாக்குப் பெற்றிருக்கும் குரல் அதட்டுவதுபோல் ஒலிக்கிறது.

“என்னாங்க விசயம்?…”

“பாத்தியா? மறந்தே போன? கோயில் பக்கம் குடிசயப் போட்டுட்டு எல்லாம் அசிங்கம் பண்ணிட்டிருக்கானுவ! பத்து வருசத்துக்கு முன்ன, அப்ப பள்ளிக்கூடத்துக்கு இடம் வோனுன்னு இவனுவள குடிசயத் தள்ளிக்கொண்டு போடனும்னு சொன்னாங்கதா, அப்பதா எல்லாம் போதாத காலம், கோயிலுக்கு பூசை, விழா ஒண்ணும் இல்லன்னு இருந்திச்சி! பத்து வருசமா ஏதேதோ ஊரிலும் கஷ்டம். இப்ப இந்த வருசம் கோயிலைச் செப்பம் பண்ணி விழா நடத்துறதுன்னு தீர்மானம் பண்ணிருக்கு. வீராசாமிப் பிள்ளை, வரதராஜன் எல்லோரும்தான் முடிவு செஞ்சி அப்பவே சொன்னேன், உனக்கு விசயமே மறந்துபோச்சி.”

“…இல்லிங்க. நீங்க ஆறு மாசத்துக்கு முன்ன சொன்னதா நினைப்பில்ல. வேற எடம் தோதாக்கிட்டில்ல கிளப்பச் சொல்லணும்? இப்ப நடவு, உழவுன்னு நெருக்கடியாயிருப்பாங்க…”

“அது வருசம் பூராத்தா இருக்கு. இப்ப ஆத்துக்கு அப்பால அரிசனங்களுக்குக் குடிசை போட்டுக்கலான்னு சொல்லி மாரிமுத்து, வீரபுத்திரன்லாம் போட்டுக்கலியா? அந்தப்பக்கம் போட்டுக்கட்டுமே?”

“சொல்றேங்க, ஒரு ரெண்டு மூணு மாசம் பொறுத்துக்குங்க…”

“அதான் முன்னமே சொன்னது, நீங்க இப்படித் தவண கேட்பீங்கன்னு. உன் பண்ணக்காரன் குப்பன்தான் அடாவடிக்காரன். அதும், அவன் பய வடிவு இருக்கிறானே, என்ன எகிறு எகிறறாங்கற? அம்மன் கோயில் பக்கம் பரம்பரையா புத்து இருக்கும். அதுபாட்டில நல்லதுங்க குடியிருக்கும். எப்பவானும் கண்ணுல படும். எங்க வீட்ல கூட பொண்டுவ பால் வய்க்கிறது வழக்கம். இப்ப ஒண்ணு இல்ல. இந்தப்பய அல்லாத்தையும் கொன்னு தோலக் கொண்டு வித்துப்போட்டான்.”

“அப்படிங்களா?”

“ஆமாம். இப்ப ஆள வரச்சொல்லி சுத்து வட்டம் சுத்தம் பண்ணி முன்னால மண்டபம் எடுத்து, புனருத்தாரனம் பண்ணப்போறம். குடிசைகளை அப்புறப்படுத்தச்சொல்லு நல்லபடியாவே, என்ன குடிசை? ஓலைக்குடிசைங்க? ஆளுக்கு அம்பது ருவா வேணாலும் தந்திடறம், வீணா ரசாபாசம் வச்சுக்காதிங்க?”

விருத்தாசலம் பிள்ளை மேல் வேட்டியை வேகமாகச் சரியாக்கிக்கொண்டு போகிறார்.

மண்டையில் அடித்த மாதிரி இருக்கிறது.

வாசலில் அப்பாவைக் காணவில்லை. ஏதேனும் பொட்டு பொடிசு கையைப் பிடித்துக் கொண்டு கள்ளுக்கடைக்குப் போயிருப்பார்.

திண்ணையில் நாகு உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது. பளாரென்று முதுகில் அறைந்துவிட்டு அதைப் பிடுங்கிப் பார்க்கிறார்.

விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளருக்கு சென்னையிலிருந்து அனுப்பப் பெற்றிருக்கும் துண்டுப்பிரசுரம்.

“இந்தப் பய கையில் எட்டும்படி ஒரெளவையும் வைக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தான? பன்னிப்பயல்! நாய்ப்பயல்! போடா! இவன ரூம்பில போட்டுப் பூட்டாம ஏ வுட்டு வக்கிறிய?”

எல்லா ஆத்திரமும் அவன் மீது வடிகிறது. அவனைக் காந்தி கத்தக்கத்த இழுத்துச் செல்கிறாள். காந்தியிடம் மீறமாட்டான். அம்சுவானால் திமிறுவான். அவளுக்கும் ஆத்திரம். பின்புறத்து அறையில் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள்.

பாட்டி, கோழிக்குஞ்சு ஒன்றைக் காணாமல் தேடிவிட்டு வருகிறாள்.

“அல்லாம் வூட்டத் தொறந்து போட்டு, இவனையும் உக்கார வச்சிட்டு எங்க போயிட்டீங்க?”

“ஏங்கண்ணு? இன்ஜினிருக்குச் சேந்தாச்சா…”

பாட்டி அருமையாக அவள் கூந்தலைத் தடவிக் கொண்டு விசாரிக்கிறாள்.

“ஆமா இந்தத் தரித்திரம் புடிச்ச குடில பெறந்திட்டு கனாக் கண்டா மட்டும் பத்துமா?” என்று சீறி விழுகிறாள்.

“கோவப்படுற… நீ நல்லா இருக்கணும். பொறந்த குடில உசத்தனும்னுதான் ஆச…”

“ஆசப்படுங்க, அங்க சீட்டுமில்ல ஒண்ணுமில்ல. ரெண்டாயிர ரூபா கட்டணுமாம்.”

மூலையில் சோர்ந்துபோய் உட்காருகிறாள் காந்தி.

பாட்டியும் திகைத்துப் போய்த்தான் நிற்கிறாள்.

“ஏ, காந்தி இந்தா, பணத்தைப் பத்திரமாக் கொண்டு வையி…” சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுக்கிறார்.

“எங்க லட்சுமி, அம்சு எல்லாம்? நடவுக்குப் போயிருக்காளுவளா?”

“ஆமா, குப்பம் பயலும் இல்ல, வடிவு வந்தா, நேத்துப் புடுங்கின நாத்த மட்டும் நட்டுடலான்னு உம் புள்ள போயி தவராறு பண்ணிருக்கா…”

“கோபுவா?”

“ஆமா, என்னாத்துக்கு ஏழு-ஒம்பது குடுக்கிறது? அஞ்சு ரூபா ஆணுக்கு, பொம்பிளக்கி மூணுன்னா, அப்பாரு வெதக் கோட்டயில எலி மாருதி இன்னா தம்பி, நீயே பேசுறன்னா, இவ அடிக்கப் போயிட்டா. நேத்து நீங்கல்லாம் பண்ண மிராசுன்னு அவனவங்கால நக்கிட்டுக் கிடந்தப்ப, ஆருரா குண்டடிப்பட்டு இந்த நெலமக்கிக் கொண்டு வந்தது? ஏழு-ஒன்பது வெளில பேசு, இங்க அந்த ரூல் செல்லுபடியாவாது? என்றான் போல.”

“அப்படியப்படியே கரையேறிட்டாங்க போல. இவ ஒரு மூணு மணியிருக்கும், கிளம்பிப்போனா…”

“இவன் யாரு இங்க நாட்டாமை பண்ண வந்தது? எல்லா இவளாலதா, பயல அன்னைக்கே, அடிச்சி வெரட்டுன்னேன்! துரை, இங்க வந்து அதிகாரம் பண்றானா? செருப்பாலடிக்க.”

“காந்தி, கொஞ்சம் சுடுதண்ணி வச்சிக் கொண்டா! காலுல ஊத்திட்டுச் செத்தப் படுக்கிறேன்.”

காந்திக்கு முசுமுசென்று கோபம் வருகிறது. உள்ளே சன்னக்குரலில் நாகு ஊளையிடுகிறான். பானையில் தண்ணிர் இல்லை.

குடியிருப்புக்கு ஓர் அடி பம்பு உண்டு. அதை இந்தக் குட்டிப்படைகள் அடித்து அடித்து ஒடித்துவிட்டன. அதற்கு விமோசனம் இப்போது வராது. ஆறு குளங்களில் தண்ணிர் வற்றியபிறகு அவள் தந்தைதான் செப்பனிட ஆள் கூட்டி வருவார். எரிச்சலாக வருகிறது. ஆற்றிலிருந்து தண்ணிர் முகர்ந்துவந்து முட்சுள்ளியை ஒடித்து எறியவிட்டு வெந்நீர் காய்ச்சி வருகிறாள்.

லட்சுமி ஆற்றில் குளித்து ஈரச் சேலையுடன் வீட்டுக்கு வருகையில் இருள் நன்றாகப் பரவியிருக்கிறது.

“வந்தாச்சா? ஏண்டி? விளக்கேத்தி வைக்கிறதில்ல? ஐயா ஏன் படுத்திருக்காரு?…”

காந்தி இருளோடு இருளாக அசையாமலிருக்கிறாள்.

“என்னாங்க…? போன காரியம் நல்லபடியாச்சா?”

“ஒண்ணும் ஆவல. அந்தத் தொர எங்க?”

“அவன் எங்க போனான்னு எனக்கென்ன தெரியும்? இந்த வடிவுப்பய அவன இன்னிக்கு அடிக்கப் போயிட்டான்.”

“வடிவு சும்மா அடிக்கப்போனானா?”

“ஆமா, இவன் வாய் குடுத்தா அவனும் வாயாடுறா, கூலி குடுக்கப் போறவ நா. நடவப் பாத்துக்கன்னு சொல்லிட்டு நா இங்கல்லா ஒட்டடி பண்ணிட்டுப் போறதுக்கு முன்ன மசுருபுடி சண்டை. இவந்தா வம்புக்குப் போகாம இருக்கக் கூடாதா?… அவனும்தா ரொம்ப எகிறறா. மரியாதியில்லாம போயிட்டுது. என்னியே நீங்க சும்மாருங்கன்னு அடக்கிட்டான். நேத்துப் பறிச்ச நாத்த மட்டும் அந்தத் தெக்கோரப் பங்குல நட்டுட்டுக் கரையேறிட்டாளுவ…”

“கூலி என்ன குடுத்த?”

“ஏழு விகிதந்தா. அஞ்சாளுக்கு பத்துப் பேரு வந்தாளுவ…”

“ஆமா பொணம் கொண்டிட்டுப் போகலன்னு வந்தாங்களே? அது யாராச்சும் வந்தாவளா?”

“நீங்க என்ன ஊரக்கப்போர எல்லாம் சாரிச்சிட்டு! இவனுவளும் கேக்கிறபடி கேட்டிருக்கமாட்டானுவ பொட்ட யதிகாரம் பண்ணிருப்பா. தோப்புல தேங்காயெல்லாம் பூடுதுன்னு படலயப் போட்டு மூடி வச்சிட்டானுவளாம். ரோடு சுத்திப் போய்க்கிங்கன்னானுவளாம். எங்கேந்து ரோடு சுத்த? அங்கியே குழிச்சி மூடிருப்பா…”

உலர்ந்த சேலையை உடுத்துக் கொண்டு ஈரத்தைத் தாழ்வாரச் சுவரில் கட்டுகிறாள். காந்தி இன்னும் எழுந்திருக்கவில்லை.

“ஏண்டி மோட்டுவளயப் பாத்திட்டு உட்கார்ந்திருக்கிற? எந்திரிச்சி விளக்கப் பொருத்தி ஒலயப்போடு. நாங்கடக்கிப் போயிட்டு விருவிருன்னு செலவு சாமானம் வாங்கியாரேன். புளி தீந்துபோச்சி.”

“போம்மா, முள்ளு கையக் குத்துது…”

லட்சுமி அவள் கன்னத்தில் இடிக்கிறாள்.

“என்னாடி? எப்பிடியிருக்கு? பெரி மவரானின்னு நினப்பா? சீ, கழுத, குந்தவச்சி சோறுபோட இது பெரும் பண்ண சமீனில்ல? அந்தப் பொண்ணு, இங்க கரையேறி முடிஞ்சி, வேற பக்கம் நடவுக்குப் போட நாலு ரூபா சம்பாரிச்சிக் குடுத்திட்டு நாயக்கர் வீட்டுக்கு ஓடிருக்கு. அம்புட்டுத் தண்ணியும் தூக்கி, பெருக்கி மொழுவி, கழுவி, எத்தினி வேல செய்யறா? காலம எந்திரிச்சி சீவி சிங்காரிச்சிட்டு போயிட்டு ஒடம்பு நலுங்காம வந்து குந்திக்க!”

“ஆமா, பின்ன ஏன் படிக்கப் போட்டிய? படிக்க வச்சா ஒழுங்கா வக்கணும். பாதி ஆத்துல இறக்கி வச்சிட்டு கைவுட்டுடக் கூடாது?”

“என்னாது? பாத்தீங்களா இவ பேச்ச? மூஞ்சி முகர பேந்து போயிடும். எந்திரிடி சொல்ற?… பொட்டக் கழுதய என்னிக் கின்னாலும் கட்டிக் குடுக்கணும், நம்ம விரலுக்கு மிஞ்சி எடுப்பு வானாம்னேன், உங்கையா கேக்கல.”

சுவரொட்டி சிம்னி விளக்கை ஏற்றிச் சமையலறையில் வைக்கிறாள். இந்த வீடு கட்டி ஒன்றரை வருசமாகப் போகிறது. இன்னமும் விளக்கு இழுக்க நேரம் வரவில்லை. குறுவை அறுப்பு முடிஞ்சி இந்த வருசம் வூட்டுக்குக் கரன்ட் இழுத்திடணும்…

அடுப்பில் சுள்ளியைப் பார்த்து எரியவிட்டு எருமுட்டையை வைத்துவிட்டு உலையை ஏற்றி வைக்கிறாள். புகை நடு வீட்டுக்குள் பரவுகிறது.

“அரிசியக் கழுவிப்போடு, நா வாரேன்.”

வெளியே ருக்குமணியும் பாக்கியமும் வீச்சு வீச்சென்று விறகுச் சண்டை போடுகிறார்கள். ஒருவர் சொத்தை மற்றவர் அபகரித்ததாக வாயால் அடித்துக் கொள்வது வழக்கமான சமாசாரம். கோதண்டமும் அம்மாசியும் பொழுதுடன் குடித்துவிட்டுத் திரும்புகிறார்கள். கள்வாடை கப்பென்று மூக்கைப் பிடிக்கிறது.

ஆற்றங்கரை மேட்டோடு கூடடையும் பறவையினங்கள் போல் சேரி மக்கள் விரைந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். புளியமரமும், உடைமரமும், இருளோடு இருளாக மைக்கொத்தாக அப்பியிருக்கின்றன. மதகடி வரும்வரையிலும் வெளிச்சம் கிடையாது.

சைக்கிள் கடையில் இளவட்டங்களின் கும்மாளம். காலரைத் துரக்கிவிட்டுக் கொண்டும், முடியை ஸ்டைலாக வைத்துக்கொண்டும் கவலையற்ற கேலியிலும் கிண்டலிலும் சிரிப்பிலும் காலம்கழிக்கும் இளசுகள். விருத்தாசலம் பிள்ளையின் மகன் துரை, தையல் கடை பக்கிரியின் தம்பி, வஸ்தாது, மூலை ரங்கனின் இரண்டு வாரிசுகள் ஆகிய முக்கியமான இளவட்டங்கள் கண்களில் படுகின்றனர். இங்கே கோபு இல்லை. வீரமங்கலம் சினிமாக் கொட்டகையில் புதிதாக வந்திருக்கும் சினிமா விளம்பரத் தட்டி பெரிதாகக் கடையின் இருபுறங்களிலும் அணிசெய்கின்றன. அதில் பிறந்த குழந்தைக்குப் போடக்கூடிய அரைக்கச்சுடன் ஒரு பெண் காலைத் துக்கிக் கொண்டிருப்பதும், இந்தப் பிள்ளைகளைப் போல ஒரு இளசு குனிந்து அவளைப் பார்ப்பதுமாக இருக்கின்றனர். ‘துரத்தேறி’ என்று துப்பத் தோன்றுகிறது. மறுநாளைய நடவு, உழவு பற்றிய விவரங்களுடன் நாட்டாமைகள் சூழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுடைய சங்கக் கொடியுடன் இருக்கும் கீற்றுக் கொட்டகையில் மொய்த்திருக்கிறார்கள். குப்பன், ஐயனார் குளத்துச் சங்கதிகளைப் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது.

கிட்டம்மாளும் அங்கே நிற்கிறாள். கிட்டம்மாள் கிளியந்துறைக் கடை வீதிக்கு அருகிலேயே ஆற்றுக்கப்பாலுள்ள விவசாயத் தொழிலாளர் குடியிருப்பில் இருப்பவள். இந்த வட்டகை மாதர் அணியின் தலைவி. எட்டாவது படித்திருக் கிறாள். துணிச்சலாகப் பேசி நடப்பவள்.

“லட்சுமியக்கா! வாங்க, தலைவருக்கு உடம்புக்கென்ன? டவுனுக்குப் போனாங்களாம்?”

“ஒடம்புக்கொண்ணில்ல, காலுல எதோ முள்ளு குத்தியோ கல்லு குத்தியோ வீங்கிருக்கு. நடக்கக் கஷ்டப்படுறாரு…”

“செத்த மின்னதா பஞ்சாமி சொல்லிச்சி, ஐயனார் கொளத்துல பொனங்கொண்டு போவ எடங்குடுக்க மாட்டேன்னிட்டாராமே பிச்சமுத்து மணியாரர்? நேத்தென்னமோ தலைவர் வந்ததும் போராட்டம்ன்னாவ, அப்புறம் அங்கியே குழிச்சி மூடிட்டாவளாம்…”

“பத்துப் பேரா படலயப் பிச்செறிஞ்சிட்டுப் போங்கடான்னாரே?”

“அதெப்படி? அவனுவ ஆளுவ சும்மா விட்டுடுவாங்களா? வெட்டுகுத்தல்ல வரும்!…”

“மின்ன அந்த வழியா நடந்திட்டுத்தா இருந்தாங்க. இப்ப அந்தச் செட்டியாரு வித்திட்டுப்போக, இவங்க வாங்கின பெறகுதா படலயப் போட்டு மறச்சிட்டா.”

“இல்லக்கா, அப்ப தரிசா இருந்திச்சாமே? இப்பதானே அல்லாம் உழுது நாத்து நட்டுவச்சிருக்கா? மின்னியே சங்கத்தில சொல்லி பிடிசன் குடுத்ததுதா? இப்ப போராடணும்னு சாம்பாரு முனப்பா பேசிட்டிருக்காரு.”

“போராட்டம்தா. பொழுதுக்கும் எந்திரிச்சிப் படுக்கற வரய்க்கும் பொழப்பு மிச்சூடும்…”

“பின்ன என்ன செய்யிறது? அங்காடில குடும்பக்கார்டுக்கு ஒண்ணுவிட்டொரு நாளு ஒண்றக்கிலோ ரேஷன் அரிசி போடுறான். எட்டு வவுறு சாப்பிடப் பத்துமா? தாசில்தாராபிசுக்கு முன்ன ஆர்ப்பாட்டம் பண்ணுங்கங்கறாங்க. அல்லா ஆம்பிளையும் இத குடிச்சிட்டு வந்து சோத்துக்குக் குந்திக்குவான். கொஞ்சுண்டு வச்சாப் பத்துமா?…”

லட்சுமிக்கு நிற்க நேரமில்லை. கந்தசாமியின் கடையில் கூட்டத்தில் நின்று சோம்பு, பூண்டு, புளி, குப்பியில் எண்ணெய் என்று வாங்கிக்கொண்டு திரும்புகையில் ஒரு போர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காடா விளக்கடியில் திருக்கை மீன் கண்டமிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த புண்யகோடிக் கிழவன் மண்ணில் விழுந்துவிட்ட கண்டங்களைப் பொறுக்கிக் கொண்டு வசை பொழிகிறான். சண்டை கைகலப்பு வடிவுக்கும் அருணாசலத்தின் தம்பி முருகையனுக்கும்தான்.

அவன் அழுக்குத் தண்ணீரை, வடிவு நிற்கையில் இவன் மீதே கொட்டினானாம். ‘எல, ஏண்டா கண்ணு தெரியல’ என்றானாம் இவன்.

‘கடமுன்னால நின்னா அப்படித்தா வுழுகும்’ என்றானாம் அவன். பேச்சு தடிக்கையில் பறப்பயல் என்று சாதியைக் குறிப்பிட்டான். அவ்வளவே, கள்ளுக்கடையிலோ, கடை வீதியிலோ இப்படித் தகராறு ஏற்படாத நாளே இல்லை என்ற மட்டில் பழகிப்போன விவகாரங்கள்.

லட்சுமி விரைவாக நடக்கிறாள். பின்னால் கள்ளின் வேகத்தில், ஆவேசமாகப் புரட்சிப் பிரசங்கம் செய்து கொண்டு மாமனார் வருகிறார்.

“உழவுத் தொழில் ஜீவாதாரமான தொழில். சேத்தில காலவச்சாத்தா சோத்தில கைய வைக்கலாம். சோத்தில கைய வைக்காம மனுசன் உசிர் வாழ முடியுமா? சொவர வச்சித்தா சித்திரம் அறிவு, படிப்பு, பட்டம், பதவி, ராச்சியம் எல்லாத்துக்கும் அடிப்படை இது. அடிப்படை தொழில் இது. சேத்தில இருக்குன்னு குழிதோண்டிப் புதைக்காம மேலே ஏத்தி வைக்கணும். இதுமேல, மத்ததெல்லாம் கீள. இதுதாம் புரட்சி. விவசாயம் முதத்தொழில் இதச் செய்யிறவனுக்கு அந்தசு, கவுரவம் வேணும். அத்தக் கொண்டு வருவது புரட்சி. இப்ப உழைக்காதவன் மேல; உழைப்பவன் கீள. இது மாறிய புரட்சி.”

லட்சுமிக்கு நடை விரைவு கூடப் பிடிக்கவில்லை. நெஞ்சம் கனிந்து கண்கள் பசைக்கின்றன.

“கள்ளுக் குடிச்சா எவ்வளவு தெளிவாப், பேசுறாரு!…”

“அம்மா!…”

இருட்டில் எட்டி ஒடிப் பின் தொடருபவள் அம்சுதான்.

“ஏண்டி இந்நேரமா நாயக்கர்வூட்டில இருந்த?”

“மீனு வாங்கிக் கழுவி மொளவா அரச்சிக் குடுத்தேன். நாகப்பட்டணத்திலேந்து சின்னய்யா வந்திருக்காரு. கோபு கூட இருக்காம்பா!”

“சரி சரி, உங்கய்யாகிட்ட ஒண்ணுஞ் சொல்லாதே, ஏற்கெனவே கோவிச்சிட்டிருக்காரு.”

சோற்றைச் சரித்து வைத்து விட்டுக் காந்தி படுத்துக் கிடக்கிறாள்.

லட்சுமி மசாலைப் பொருள்களை எடுத்து வைத்துச் சிம்னி விளக்குடன் வெளியே கிடக்கும் அம்மியில் அரைக்க உட்காருகிறாள்.

அம்சு குடத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள்.

“எங்கடி? தண்ணி இருக்கே?”

“போம்மா, மேலெல்லாம் மண்ணு, குளிக்கணும்.”

“எந்நேரண்டி நீ குளிக்கிறது, இருட்டில ஆத்துக்குப் போயி?”

“கொளத்துல வெளக்கு வெளிச்சம் இருக்கும்மா!”

“குளிக்க வானாம், இப்ப நீ உள்ளற போ! ஈரமா இருந்தா சீலய அவுத்து மாத்திக்க புளியக் கரைச்சி வையி. இப்ப தாத்தா சத்தம் போடும்.”

அம்சு தனது விருப்பத்தை நிலைநாட்டிக்கொள்ள அடம் பிடிக்க மாட்டாள். செல்லுபடியாகாது என்றால் மறந்து விடுவாள்.

உடனே குடத்தை வைத்துவிட்டுப் போகிறாள்.

“ஏம்மா, வெறும் காரக் குளம்பா? மீனு வாங்கியாரலியா?”

“கைக்காசு இதுக்கே சரியாப் போச்சி. எட்டணா புளி ஒரு நாத்தா வருது.”

வாசலில் யாரோ திமுதிமுவென்று வரும் ஒசைகள்.

“கூப்பிடுடா உங்க தலவர!…”

கபீரென்கிறது. இரட்டைக் குரல், அந்த மூலை ரங்கனின் பயல் மாதிரி கேட்கிறது.

கூடவே சாம்பாரின் அபய ஒலி. “வாய்க்காரே!… வடிவ டேசனுக்கு இட்டுப் போயிட்டானுவ, வாய்க்காரே..!”

அரைத்த குழவி நிற்கிறது. அம்சு திகைத்து விழிக்கிறாள். சம்முகம் எழுந்திருக்க முடியாமல் எழுந்திருக்கிறார். காந்திக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது.

“அந்தப்பய ரோட்டிலே நின்னவ மேல அழுக்குத் தண்ணிய ஊத்திச் சண்டக்கி இழுத்தா வாய்க்காரே…!”

“எல, பொய் சொன்னா பல்லு பேந்து போகும். கடவாசல்ல நின்னிட்டு இந்தக் கம்னாட்டிப்பய மவ திட்டக் குடியான ஒத அடின்னு பேசுனானா இல்லியான்னு கேளு. கிழட்டுப் பய…”

சம்முகத்துக்குச் சுரீலென்று உறைக்கிறது. அந்தத் தோப்புக்காரனும் அருணாசலமும் ஒரு பக்கம். உடம்பிலே ஓரிடத்தில் கேடு வந்தால் எல்லா இயக்கமும் கோளாறாவது போல் தான்.

புறக் காவல் நிலையம் என்ற அவுட் போஸ்ட் அக்கிரகாரத்துக் கோடி வீட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கிறது. சம்முகம் சட்டையைப் போட்டுக்கொண்டு நடக்கமுடியாமல் நடந்து செல்கிறார்.

அத்தியாயம்-5

லட்சுமிக்கு உடல் களைப்பு அதிகமானாலும் உறக்கம் வருவதில்லை. இன்று உழைப்பின் களைப்போடு மன வலியும் கவலையும் சுமையாக அழுத்துகின்றன. உறக்கம் கொள்ளவில்லை. கிழவர் வாயிலில் கறட்டுக் கறட்டென்ற ஒலி எழும்ப மூச்சு விட்டுக்கொண்டு திண்ணையில் தூங்குகிறார். மாமியார்க்காரி, குந்தி இருந்தபடியே தூங்குவாள். காலை நீட்டிப்படுப்பதே அபூர்வம். அம்சு… கபடம் எதுவும் பற்றியிராத உழைப்பாளிப் பெண். பசி தாங்க மாட்டாள். ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுச் சோறு உள்ளே செல்லுமுன் உறக்கம் வந்துவிடும்… இந்தக் காந்திமதி… பையனைப் போல் இவளும் குடும்பத்தை விட்டுப் போய் விடுவாளோ என்ற அச்சம் மேலிடுகிறது. இவளை எப்படியேனும் இந்தத் தை பிறந்ததும் கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்ற தீவிரத்தில் தான் சீட்டு, நாட்டுப் போட்டு ஏழெட்டு எவர்சில்வர் உருப்படி வாங்கி வைத்திருக்கிறாள். நாயக்கர் வீட்டில் இருக்கின்றன. தலைவர் வீட்டில் முதல் கல்யாணம் என்று மகனின் திருமணம் நடக்கவில்லை. எத்தனை திருமணங்களுக்கோ சென்று தலைமைப் பதவியின் கௌரவம் பெற்றுக் கொண்டு மொய் எழுதி விட்டு வந்திருக்கிறார்கள். திருமணம் என்றால் ஐந்துக்குக் குறையாமல் செலவாகும். மேல் சாதிக்காரரெல்லாம் வருவார்கள். நல்லபடியாக விருந்து வைக்கவேண்டும். மாப்பிள்ளைக்குக் கடியாரம், மோதிரம், சட்டைத்துணி எடுக்க வேண்டும். குப்பன் சாம்பார் மகள் கல்யாணத்துக்கு பிரியாணி விருந்து வைத்து, இருபது ஏனம் எடுத்துக் காட்சிவைத்தான். அதைவிடக் குறைவாக இவர்கள் செய்யலாமா?

இத்தனை ஆண்டில் உழைப்பின் பயனாக எதுவும் சேரவில்லை என்றும் சொல்ல முடியாது. என்றாலும், இன்னமும் எதிர்பார்ப்பிலும், தடங்கல்களிலும், அச்சுறுத்தல்களிலும் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் என்ற கெளரவத் துண்டைக் கழற்றாமல் பண வசூல் செய்பவராக மட்டுமே எத்தனையோ பேர் இருக்கிறார்களாம். ஆனால் இன்னமும் புருசன் வயலில் இறங்குபவன்தான். போன வாரம் உழவோட்டும் போதுதான் காலில் முள் குத்தியிருக்கிறது. அவளும் சேற்றில் இறங்குபவள் தான். உச்ச வரம்புக்கு மேல் என்று ஐயர் நிலம் ஐந்து ஏகரா சாகுபடிச் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வருசங்களே ஆகின்றன. அதுவரையிலும் வெளியே நடவு, களை பறித்தல் எல்லாவற்றுக்கும் அவளும் மாமியாரும் போய்க் கொண்டிருந்திருக்கிறார்கள். கிழவரும் கூட உழைக்காமல் சோறு தின்றவரில்லை. அண்டைக் கட்டுவதும், வெட்டுவதும், சுமப்பதும் விட்டுச் சில நாட்களே ஆகின்றன.

பையன் படிக்கிறான், பெண் படிக்கிறாள் என்று அந்தக் குடிக்கே எவ்வளவு பெருமையாக இருந்தது? காந்தி எட்டாவது வரையிலும் ரங்கநாதபுரம் பள்ளிக்குச் சென்று படித்தாள். இப்போது கிளியந்துறையிலேயே பள்ளிக்கூடம் வந்திருக்கிறது, அப்போது இல்லை.

பிறகு மூன்றாண்டுகள் புதுக்குடி மிஷன் பள்ளியில் விடுதியில் இருந்து படித்திருக்கிறாள். இங்கிலீசில் கடிதாசி வந்தால் படித்துச் சொல்லும் அளவுக்குச் சூட்டிகையான பெண் என்று மிகப் பெருமையாகத்தானிருக்கிறது.

ஆனால் சடங்கு சுற்றி எட்டு வருசமாகிறது. விடலைப் பிள்ளைகள், கண்ட கண்ட பாட்டுக்கள், சினிமாக்கள் இதெல்லாம் சுற்றிப் பார்க்கும் போது, அச்சம் நெருப்புப் பொறியாய் உறுத்துகிறது.

வாசலில் நாய் குரைக்கிறது. அடிச் சத்தங்கள் கேட்கின்றன. லட்சுமி விளக்கைப் பெரிதாக்கிக் கொண்டு வாசலுக்கு வருகிறாள். காளி, சிவத்தையன், மாமுண்டி… “எல்லாம் போங்க, காலம பாத்துக்கலாம்.”

உள்ளே வந்து உட்காருகிறான்… “குளுருது அந்தப் போர்வய எடுத்திட்டு வா…”

வெளியே போக வர, சற்றுப் புதிதாகப் பெட்டியில் வைத்திருக்கும் போர்வையை எடுத்து வந்து போர்த்துகிறாள் லட்சுமி.

“காச்சல் அடிக்குதா என்ன?”

கன்னத்தில், நெற்றியில் கை வைக்கிறாள். நல்ல குடு இருக்கிறது.

“இவனுக அடிச்சிப் புரண்டா போலீசுகாரனுக்கு வாக்கரிசி, நம்ம பொழப்பு எப்படியாயிட்டது பாரு?”

“சோறு சாப்பிடுறீங்களா? அடுப்புல சூடாயிருக்கு. குழம்பும் நல்லாயிருக்கு?”

“சோறு குழம்பு எதும் நாக்குக்கு ருசிக்கிறாப்பல இல்ல. சூடா கொஞ்சம் காபி வச்சுத் தந்தா நல்லாயிருக்கும். இன்னி முச்சூடும் வீணலச்சல்.”

காபித் தூளில்லை, தேயிலைத் தூள்தானிருக்கிறது. சீனியும் கிடையாது. துருப்பிடித்த தகரம் ஒன்றில் நாலைந்து வெல்லச்சுகள் இருக்கின்றன. அம்சுதான் வயிற்றுப்பட்டி, வெல்லச்சு வாங்கி வைத்தால் அவள் தான் தின்றுவிடுவாள். நாகு வெல்லம் வைத்தால்தான் பிடிசோறு தின்பான். இப்போதெல்லாம் அவனை அப்படிக் கவனித்துச் சோறே போடுவதில்லை. நினைக்கும்போதே வயிற்றில் சொரேலென்று சங்கடமேற்படுகிறது. பகலில் பிடிவாதமாக அவள் தான் நான்கு பிடி ஊட்டுவாள். கிழவி சோறு போட்டிருப்பாள். ஆனால், சாப்பிட்டிருக்க மாட்டான். அதுதான் சோர்ந்து உறங்கிக் கிடக்கிறான்.

“சக்கர போட்டியா?”

“ஏதுங்க சக்கர! வெல்லந்தா… ஒரச்சுத் தட்டிப் போட்டே வாய்க்கு நல்லாயிருக்கா?”

“என்னாத்துக்குப் போட்ட? எனக்கென்னமோ ரத்தத்துல சக்கர இருக்குமோன்னு பயமாயிருக்கு…”

“ரத்தத்தில் சக்கரயா? அதெல்லா ஒண்ணுமில்லிங்க. சக்கரயா நெதம் தின்னிட்டிருக்கிறீங்க, ரத்தத்தில அது வந்து குந்தியிருக்க?”

“இல்ல லட்சுமி, எனக்குத் தெரிஞ்சி, நம்ம பெரிய பண்ண நாயக்கரு மகன், ரத்தத்துல சக்கரன்னு மட்ராசிக்குத் தூக்கிட்டுப் போயி வருசமா வைத்தியம் பண்ணாங்க. அவனுக்கு இப்பிடிக் காலுலதா வந்து, பிறகு செத்தே போனான்.”

“அட போங்க, அதயும் இதயும் ஏன் நினச்சிட்டு! அலட்டிக்காம படுத்துக்குங்க, நமக்கு அதெல்லா ஏன் வருது?”

படுக்கச் சொல்லிவிட்டுப் போர்த்துகிறாள். கொசுக்கள் பாடுகின்றன.

முன்பெல்லாம் சீமை எண்ணெயை எடுத்துப் பூசிக்கொள்வாள். இப்போது அதற்கும் பஞ்சம், சாம்பலையேனும் பூசிக்கொள்ளலாம் என்றால் அடுப்புச் சாம்பலில் கூடக் கைவைக்க முடியாது.

திருநீற்றை எடுத்துத் தடவுகிறாள்.

நள்ளிரவு கடந்து வெகுநேரம் ஆகிவிட்டது. பின் தாழ்வாரத்து அறையில் விளக்கெடுத்துக் கொண்டு போய்ப் பார்க்கிறாள். அமாவாசை நெருங்கும் நாட்களில் கொஞ்சம் ஒடிச்சாடுவான். மற்றபடி எந்த உபயோகமும் இல்லாமல் இப்படி ஒரு கடன் இருபத்தைந்து வயசு கடந்த பையன். இவன் எதற்குப் பிறப்பு எடுத்திருக்கிறான்! பல சமயங்களிலும் அவள் புருசன் இந்த அறியாப் பயலை அடிக்கும் போதும், கடுகடுக்கும் போதும் இவளுக்கு அவனை ஆற்றில் கொண்டு சென்று அமிழ்த்தி விடலாமா என்று தோன்றும். அந்த உள்மனதின் கரவை உணர்ந்து கொண்டிருப்பானோ என்னவோ? ஆற்றுப் பக்கமே வர மாட்டான். குளம், ஆறு என்றால் ஒரே பயம். நாய்க்குட்டி போல் தண்ணிரைக் கண்டாலே பதுங்குவான். இவனை ஆற்றிலோ குளத்திலோ எட்டு நாட்களுக்கொருமுறை முழுக்காட்டுவ தென்றால் குடியிருப்பே கிடுகிடுக்கக் கூச்சல் போடுவான்.

இரண்டு மூன்று வயசு வரையிலும் ஒன்றுமே தெரியவில்லை. இவள் வயலில் வேலை செய்யப் போகும் போது புளிய மரத்தடியிலோ, புங்க மரத்தடியிலோ மற்ற பிள்ளைகளோடு விட்டுப் போவாள். கோபால் பிறந்து ஒன்னரை வயசில் பேசத் தொடங்கி விட்டான். இது எச்சிலை ஒழுக விட்டுக் கொண்டு கிடந்தது. இது எத்தனையோ நாட்களில் பூச்சியோ எதோ தீண்டிப் போயிருக்கக் கூடாதா என்று கூட உள்ளூற வேண்டியிருக்கிறாள். ஆனால். பசிக்கிறது என்று சொல்லத் தெரியாத, நோகிறது என்று காட்டத் தெரியாத இது நீண்ட ஆயுளோடு இந்த விட்டில் பற்றிக் கொண்டிருக்கிறது. நினைப்பிலேயே கண்கள் கசிந்து எரிச்சலாகக் கனிகின்றன.

தாழ்வாரத்திலேயே வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் படுத்துக் கிடந்து விடியற்காலையின் குளிர்ச்சியிலேயே சற்றே கண்ணயருகிறாள்.

அம்சு சாணம் தெளிக்கும் ஓசையில்தான் விழிப்பு வருகிறது.

கோழிக்கூண்டைத் திறந்தி விட்டுவிட்டுக் கிழவி, “ஏண்டி இங்கு படுத்திட்ட? புள்ளக்கிக் காவலா?” என்று கேட்டுவிட்டுப் போகிறாள்.

கிழவி எப்போதும் பேசமாட்டாள், எப்போதேனும் அறியாததுபோல் ஒரு சொல்லை உதிர்ப்பாள். அது திராவகச் சொட்டாக இருக்கும்.

“லட்சுமி. சுடுதண்ணி வச்சிக் குடேன்? வாயெல்லாம் கசக்குது…”

“காச்சலடிச்சிருக்குது. இன்னிக்கு எங்கும் போகாம படுத்திருங்க… காலுக்கு மஞ்சள் அரச்சிப் பத்துப் போடுறன்…”

எழுந்து இயற்கைக் கடன் கழிக்கச் செல்வது கூடச் சிரமமாக இருக்கிறது.

பின் தாழ்வரையில் நாகு குந்திக் கொண்டிருக்கிறான்.

சம்முகம் படியில் அமர்ந்து அம்சு கொண்டு வந்து கொடுத்த சுடுநீரால் முகம் கழுவுகிறார். ஆற்றுக்கரை மேட்டிலிருந்து பையன் சைக்கிளில் இறங்சி வருகிறான். அவன் மட்டுமல்ல, தொப்பி முடியும், பெரிய மூக்குக் கண்ணாடியும் பாம்புத் தோல் மினுமினுப்பாகச் சட்டையுமாக… ஆறுமுகத்தின் பயல், முதல் நாள் விசுவநாதன் வீட்டுக்கு வந்தானே, ஸ்டாலினோ, புல்கானினோ அந்தப் பயல்தான்.

சைக்கிளைப் பின்புறமே நிறுத்துகின்றனர். படலையைத் தள்ளிக்கொண்டு பையன் நண்பனை அறிமுகப் படுத்துவது போல் நிற்கிறான்.

“வணக்கம்…” என்று நண்பன் புன்னகை செய்து கை குவிக்கிறான்.

சம்முகம் நிமிர்ந்து பார்த்துவிட்டு வாய் நீரை உமிழ்கிறார் வேகமாக.

“கொல்லையில ஏண்டா வந்து நிக்கிறிங்க?”

எரிச்சலில் மேலும் மேலும் நீரை ஊற்றிக் கொப்புளிக்கிறார்.

“உள்ள வாங்க, சாலி…”

சுற்றி வந்து திண்ணையில் நண்பனை உட்காரச் சொல்கிறான் கோபு.

காந்தி திடுக்கிட்டாற் போல் எழுந்து கதவண்டை எட்டிப் பார்த்துவிட்டு உடனே உள்ளே மறைகிறாள்.

எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான் பாட்டன்.

“யார்ரால அது?”

“…உங்க சிநேகிதர் மகன்தா தாத்தா, வெட்டுகுடி ஆறுமுகம்”

“ஆருமவன்?… ஆருமுகமா?… அவந் துரோகிப் பயல்ல? உண்ட வூட்டுக்குத் துரோகம் பண்ண பன்னிப்பய…”

கிழவன் இந்த வரிசையை உதிர்த்த கையோடு சிரிக்கிறான். கசப்பின் இறுதியில் அசட்டுத் தித்திப்பும் அருவருப்பாகிறது.

“டோன்ட் மைன்ட் பிரதர். எங்க தாத்தா எப்பவும் யாரையும் துரோகிப்பயன்னுதா சொல்வாரு. அப்பதா அவருக்கு திங்கிற சோறு செமிக்கும்.”

அவன் உள்ளே செல்கையில் காந்தி முகம் கழுவி புருவங்களுக்கிடையில் கவனமாகப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறாள்.

லட்சுமி கிழவருக்கு நீராகாரம் கலக்குகிறாள்.

“யம்மா, கொஞ்சம் காபி வச்சிக் கொண்டா!”

“காபி…! ஏண்டா, இதென்ன கவுனர் வீடுன்னு நினைப்பா? ஐயா கெடந்து அல்லாடிட்டிருக்காரு. சைக்கிள் வச்சிருக்கேல்ல? கடைப்பக்கம் போயி ரெண்டு பன்னு வாங்கிட்டுவா. ராத்திரியே அவுரு வவுத்துக்கொண்ணும் திங்கல…”

“என்னம்மா நீ, நேரம் காலம் தெரியாம! வந்திருக்கிறவங்க யாருன்னு தெரியுமில்ல! நம்மூட்டுக்கு வரக்கூடிய ஆளில்ல; கொஞ்சம் கவுரதியா நடக்கவானாமா? ஏ, காந்தி, நீதா கொஞ்சம் காபி வச்சுக்கொண்டா!”

“பாலில்லாமயா? அம்சு கொடியான் வீட்டில போயி கொஞ்சம் பாலு வாங்கிட்டு வா!”

காந்தி கவனித்துக்கொள்வாள் என்ற திருப்தியுடன் கோபு வாசலில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

“இந்தத் திண்ணய எக்ஸ்டென்ட் பண்ணி சிமின்ட் போடணும்னு. எங்க தாத்தாதா முட்டுக்கட்டை. இவருக்கு அந்தக் காலத்துல எப்பிடி இருந்தாங்களோ அப்படியே இருக்கணும். இதப்பாருங்க இப்பவும் நீராரம் தான் குடிப்பாரு.”

“காபி வச்சிட்டா ஒரே ரகள… நேத்து காபிதானிருந்திச்சி. சண்டபோட்டு ஆரு வீட்டேந்தேனும் வாங்கிட்டு வரச்சொல்லி அடம்புடுச்சாரு. எப்படி இந்த மனுசங்கள வச்சிட்டு முன்னுக்கு வரது?”

“ஓல்ட் பீப்பிளே இப்படித்தான். நீ இதுக்காக பாதர் பண்ணிக்காத பிரதர்.”

காந்தி அப்போது நிலைப்படியில் வந்து நிற்கிறாள்.

“வணக்கம்…”

“இதாம் பிரதர் ஸிஸ்டர், நா சொல்லியிருந்தேனே?”

“ஓ, இவங்கள நான் பார்த்தேனே?… உக்காருங்க..” என்று சாலி மரியாதையாக அவளை உபசரிக்கிறான்.

“நீங்க ஒருத்தர் இங்க படிச்சி முன்னுக்கு வர ஆர்வமாயிருக்கிறது ரொம்பப் பாராட்டத்தக்கது. வாய்ப்பைப் பயன்படுத்திட்டு முன்னேறத் துடிக்கிறவங்க உங்களைப் போல ஒருசில பேருதான்.”

“ரொம்ப தாங்க்ஸ், உங்க பாராட்டுக்கு. ஆனா… சொல்லவே கஷ்டமாயிருக்கு. இப்பகூட, டெக்னிகல் கோர்ஸ் படிக்கலான்னு இன்டர்வியூ போனேன். ரெண்டாயிரம் டொனேஷன் கேக்கிறாங்க…”

“ஆமா, அவங்களுக்கும் புது இன்ஸ்டிட்யூஷன்; எக்ஸ்பான்ட் பண்ணணுமில்ல? டொனேஷன் வாங்கியாக வேண்டியிருக்கு. ஆனா, இப்ப அதெல்லாம் கஷ்டமில்ல… பணம் வங்கிலகூடக் கிடைக்கும். என் ஃபிரன்ட் ஒருத்தனுக்கு ஃபாரின் போகவே நா பத்தாயிரம் ஏற்பாடு செஞ்சி குடுத்தேன்.”

சட்டைக்காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பாட்டனையும், பாட்டியையும், பிறகு தெருவில் நடவுக்குச் செல்லும் பெண்களையும் பார்த்துக் கொள்கிறான் சாலி.

காந்திக்கு முகமெல்லாம் ஆவலாகப் பளபளக்கிறது.

“பாங்க்ல இதுக்கு லோன் கிடைக்குமாங்க?”

“உங்களுக்குப் பணம் கிடைக்கும். ஆனா எனக்கு. ஒரு சின்ன யோசன. உங்களப்போல லேடீஸ்ங்க, பி.ஏ., எம்.ஏ.,ன்னு படிச்சி ஸ்கூல் காலேஜில வேலை பார்க்கலாம். இல்லாட்டி எதானும் ஆபீசிலே பூந்திட்டா ரிஸர்வேஷன் இருக்கு, மளமளன்னு முன்னுக்கு வரலாம். இந்த டெக்னிக்கெல்லாம் உங்களப்போல இருக்கிற மென்மையான பொண்ணுகளுக்குச் சரிவருமா? பிற்கால வாழ்க்கைக்கு ஒத்துவரணும் பாருங்க?”

“அப்ப. பி.ஏ., பி.எஸ்.சி., சேர்றதுதான் நல்லதுங்களா?”

“சந்தேகமில்லாம இல்லாட்டி மெடிஸின், நர்சிங் கோர்ஸ் படிக்கலாம். அதுதான் நமக்கு வேணும்.”

“ஐயோ இதுக்கே ரொம்ப சிரமமாயிருக்கு. அதெல்லாம் கனவுகூடக் காணுறதுக்கில்ல.”

“அட, நீங்க என்ன அவநம்பிக்கப்படுறீங்க?… இப்பிடித்தா, நம்ம பண்ணைக்காரு ஒருத்தர், மகனப் படிக்கவச்சி எஸ்எஸ்எல்சி முடிச்சிட்டான். அப்பா அப்ப அவனப் பஞ்சாயத்து ஆபீசில நுழைச்சி விட்டாரு மளமளன்னு எதோ யுனிவர்சிடில பியுசி, பிஏ எல்லாம் படிச்சி மட்றாஸ் செகரிடேரியட்டுக்குப் போயிட்டான். போன வருஷம் டிபுடி கலெக்டர் செலக்ஷனுக்கு வந்திச்சி. அப்பாட்ட வந்து அல்லாம் பணம் செலவாகும்னு சொல்றாங்களேன்னு வருத்தமா நின்னான். ஒரு பைசா செலவில்லை. இப்ப எங்கியோ வடாற்காட்டில் வேலையாயிருக் கான்னா பார்த்துக்குங்க…”

“ஏன் கிடைக்காது? நீங்கதா மாத்துக்கட்சி, அரசியல் விரோதம்னெல்லாம் பாக்குறீங்க. கட்சியெல்லாம் யாருக்கு? நம்ம சொந்த வாழ்க்கைன்னு வரப்ப கட்சி பாக்கிறதப்போல மடத்தனம் கிடையாது. அது பாலிசி வேற சொந்த வாழ்க்கை வேற…”

கால்களை ஆட்டிக்கொண்டு ஆழ்ந்த பார்வையால் அவளை ஊடுருவுகிறான் சாலி.

“கட்சி அது இதெல்லாம் எனக்கு ஒரு சுக்கும் கிடையாதுங்க. சொல்லப்போனா இந்த வீட்டில நானும் விவசாயத் தொழிலாளி இல்ல, எங்கண்ணனும் இல்ல. எனக்கு எங்கேனும் வேலை கிடைக்கும்னா, நான் இப்பவே அதுக்கு என்ன செய்யனுமோ செய்யத் தயார். மூணு வருசமா ஸ்கூல் முடிச்சிட்டுக் கஷ்டப்படுறேன். மேல படிக்கவும் இத்தன நாளா பொருளாதார நிலைமை இடம்கொடுக்கல. எங்கப்பாரும் எங்கும் போயிக் கேக்க மாட்டாங்க…”

“அடாடா… இந்த கோபு ஒரு வார்த்த முன்னமே சொல்லிருந்தா கூட அப்பாட்ட சொல்லி நான் எதானும் ஏற்பாடு செஞ்சிருப்பேன். நேத்து, உங்களப் பாத்த பிறகு, இவனத் தற்செயலா ராத்திரி பாத்ததுமே விசாரிச்சேன். அதா இப்பிடியே வந்தேன். வேணுங்கறவங்க எதுக்குக் கஷ்டப்படணும்?”

முன்முடி இரண்டு நெற்றியில் விழுந்து அவனிடம் சரசம் பேசுகிறது. மோதிரம் போட்ட விரல், மினுமினுவென்ற பட்டைக்காலர் சட்டை அவன் மரியாதையான பேச்சு…

காந்தியின் மனம் சிறகடித்துப் பறக்கிறது.

“எதுக்கும் நீங்க அப்பாவ வந்து ஒரு நடை பாத்துடுங்க. அப்பா நிச்சயம் செய்வாரு. இப்ப கூட அப்பா சொல்வாரு யூ.ஜி. காலத்துல சம்முகம் தோசைப் பொட்டலத்தக் குச்சில துக்கிட்டு ஓடியாருவா… மேச்சாதிக்குக் குடுக்கிற சாப்பாட்டத் தொட்டாப் பாவம்னு அவருக்கு வருத்தம். அப்படி ஒரு காலத்துல ஒதவினவங்களுக்கு ஒத்தாச பண்ணணும்னா கண்டிப்பா மறுக்கமாட்டாரு…”

“காந்தி…!”

கக்கல் கரைசலுடன் பீரிட்டடிக்கும் சினக்குரல் உள்ளிருந்து வந்து தாக்குகிறது.

அவள் திடுக்கிட்டாற் போல் திரும்பி உள்ளே பார்க்கிறாள்.

“நான் உயிரோடு இல்லன்னு நினைச்சிட்டியாடீ?…”

“என்னப்பா சொல்றீங்க…”

“சொல்றேன். சுரக்காக்கி உப்பில்லன்னு. நான் செத்துட்டனா? இல்ல, நான் செத்துட்டனான்னு கேக்குறேன்?”

இந்தச் சாட்டை வீறலை எதிர்பார்த்திருந்தாலும் அவள் விக்கித்துப் போகிறாள்.

கோபு எழுந்து உள்ளே சென்று மெதுவான குரலில் கண்டனம் செய்கிறான்.

“இது உங்களுக்கே நல்லாருக்குதாப்பா? வாசல்ல அவன வச்சிட்டு ஏம்ப்பா மரியாதியில்லாம கத்தறிங்க?”

“என்னடால என்ன மெரட்டுற? இது ஏ வூடு. நா கத்துவேன், கூப்பிடுவேன். மரியாத இல்லன்னா போச்சொல்லுடா! என்னமோ பாலிசியாம், மயிராம்; வர்றானுவ சொந்தத்துக்கு ஒரு கட்சி. மேலுக்கு ஒரு பேச்சி. ஏண்டா, வீட்டக் கூறுபோட்டுப் போகவா இப்ப வந்த?”

“ஏம்ப்பா வீணா ஆத்திரப்படுறீங்க?”

“நீ என்னடா மயிரா எனக்குப் புத்தி சொல்ல வந்திட்ட? பல நூறு பேரு உசிரக் குடுத்துக் கட்டி வளர்த்த கோட்டடா இது! இதுல குச்சி கொளுத்தி திரி சொருவி வெளையாடவாடா வந்திருக்கிய? போங்கடா இங்கேந்து!”

சம்முகத்தின் அடித்தொண்டையின் உக்கிரங்களாகச் சொற்கள் விழுகின்றன. அவன் முகம் கனலுகிறது.

குரல் கேட்டுப் பானை கழுவும் லட்சுமி ஓடிவருகிறாள்.

“டே கோபு, அப்பா கோவத்தக் காலங்காத்தால ஏன் கிளறுறிய? அவருக்கு எத்தினி தொல்ல? வூட்டுக்கு மூத்த பய்யன் புரிஞ்சிக்காம நடக்குற?”

“சேச்சே! இந்த வூட்டில நல்லது எதுவொண்ணும் சொல்லவும் முடியாது; செய்யவும் முடியாது. நீங்களா முன்னுக்கு வரவும் மாட்டிய, பிறத்தியார் சொன்னாலும் கேக்க மாட்டிய! நீசத்தண்ணியைக் குடிச்சிட்டு அழுக்கில குந்திக் கிடப்பிங்க! இந்த நாட்டுக்கு உங்களால ஒரு விமோசனமும் இல்ல!” என்று தீர்த்துவிட்டு வெளியே வருகிறான்.

“வந்த விருந்தாளிய விரட்டி அடிக்கிறீங்க. பண்பாடு தெரியாதவங்க, துத்தேறி!”

“வாங்க பிரதர் போகலாம்!”

“காபி கூடச் சாப்பிடாம போறீங்க…”

வாசல்படி இறங்கி மெதுவான குரலில் காந்தி மன்னிப்புக் கேட்கும் பார்வையை இறக்குகிறாள்.

“பரவாயில்ல. நா இதெல்லாம் மனசில வச்சிக்க மாட்டேன். சந்தர்ப்பம் இப்ப சரியில்ல. பின்ன பார்ப்பம். வரட்டுமா?”

அந்தப் பார்வையும் குரலும் நெஞ்சின் உள்ளே வந்து மென்மையாகத் தொடுகின்றன. சைக்கிளுடன் அவர்கள் நடக்கையில் அவளும் வீடு சுற்றி மேட்டில் ஏறும்வரை சென்று வழியனுப்பி விட்டுப் பின்புறமாகப் படலைப் பக்கம் நின்று பார்க்கிறாள்.

அத்தியாயம்-6

வான் முகட்டில் வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற் போன்று மேகங்கள் பரவி இருக்கின்றன. இடைஇடையே எட்டிப் பார்க்கும் நீலங்கள். ஆற்றிலிருந்து கால்வாய்க்கு நீர் பாயும் மதகுச் சுவரில்தான் பாட்டி தங்கம்மா எரிமுட்டை தட்டுவாள். அந்த இடம் அவளுக்குக் குத்தகை. அங்கிருந்தபடியே வீட்டையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளலாம். வெயில் உறைக்காததால் முதல் நாளைய வறட்டிகளைப் பெயர்த்துக் காய வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கையில் காந்தி சோப்புப் பெட்டியுடன் ஆற்றில் குளிக்க இறங்குகிறாள்.

“ஐயா என்ன செய்யிறார்டி?”

“படுத்திருக்காரு.”

“சோறு வடிச்சி வச்சிட்டே?”

“வச்சாச்சு கொளம்பொண்ணும் இப்ப வக்கவானான்னு அம்மா சொல்லிட்டுத்தாம் போச்சி.”

“அந்தப் பய எங்க?…”

“அதோ கோடில புள்ளங்ககூட ஆடிட்டிருக்கிறான்…”

கிழவி ஏதோ நினைவாகச் சூனியத்தை வெறிக்கிறாள். என்ன சோப்போ, அது நுரையே வரவில்லை. இவளுக்கு இருக்கும் சேலைகள் நைலக்ஸ் இரண்டுதான். ஒன்று பொங்கல் சமயத்தில் வாங்கியது. ஆற்று வண்டல் கலங்கிவரும் கலர். அவளுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் மூட்டைக்காரன் இதைக் கொண்டுவந்து நன்றாக இருக்கும் என்று சொல்லித் தலையில் கட்டிவிட்டான். ஆற்றுக் கலங்கல் நிறத்தில் சிறுசிறு நீலப்பூக்கள் போட்டிருந்தன. ஆனால் அந்த நீலம் கூர்மை இழந்து தேக்கத்தில் பாசி பூத்தாற் போல்அசிங்கமாகி விட்டது. இந்தச் சேலையைத் தான் அன்று உடுத்திச் சென்றாள். சனியன், இதற்கு அதிர்ஷ்டமே இல்லை.

அந்த இன்னொரு பச்சைச் சேலையை உடுத்திச் சென்றிருந்தால், அவள் வாழ்க்கை ஒருகால் நம்பிக்கை மிகுந்ததாயிருக்கும்.

வீட்டுக்கு வந்த ஆளை இப்படி விரட்டலாமா?

ஆத்திரத்தைத் துணியில் காட்டுகிறாள். நைலக்ஸ் புஸ் புஸ்ஸென்று காற்றை அடக்கிக் கொண்டு அடங்காமல் சண்டித்தனம் செய்கிறது.

அம்சு வெள்ளித் தூக்கை எடுத்துக் கொண்டு காலையில் நடவென்று கிளம்பி விடுகிறாள். அம்மாவும் சென்றுவிடுவாள். அம்சுவுக்குக் கையில் காசும் சேருகிறது. ஆனால் இவள் வீட்டுக்குத் தண்ணீர் சுமந்து, பைத்தியப் பையனைப் பாலித்து, அழுக்குத் துவைத்து, பெருக்கி, துலக்கி… சீ!

அண்ணனுடன் பட்டணம் போவதைப் பற்றி ஒரு கனவும் அவளுக்கு உண்டு. ஆனால் அவன் வந்திருந்த நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கூடத் தங்கியிருக்கவில்லை. நேற்றுச் சண்டை போட்டுக் கொண்டு போனவன், ஊருக்கே போய்விட்டான்.

“என்ன பாட்டி! வெயில் காயிறீங்களா?”

அவள் திடுக்கிட்டுத் தலை நிமிருகிறாள்.

பொன்னடியான், வெள்ளை வேட்டி சட்டைக்கு மேல் சிவப்புத் துவாலை கண்களைப் பறிக்கிறது. நிறைய எண்ணெய் தடவிக் கிராப் வாரியிருக்கிறான்.

“தோழருக்கு உடம்பு நல்லாயில்லையாமே? முந்தா நா புதுக்குடிக்கு வந்திருந்தாராம். ஆனா ஆபீசுக்கு வரலன்னாங்க…”

அவன் படித்துறையில் இருக்கும் காந்தியிடம் தான் இதைக் கேட்கிறான். ஆனால் அவளுக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது. அவளைவிட இரண்டாண்டுகள் முன் வகுப்பில் ரங்கநாதபுரம் பள்ளியில் படித்தான். உச்சவரம்பைச் சரியாக அமுல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடந்தபோது, அவனுடைய அப்பன் அதில் மூண்ட கலவரத்தில் வெட்டுப்பட்டுச் செத்துப் போனான். பிறகு அவர்கள் குடும்பம் அங்கிருந்து பெயர்ந்து போயிற்று. திருவாரூரில் படித்துப் புகுமுக வகுப்பை முடித்திருக்கிறான். பின்னர் முழுநேரமாக இவர்கள் சங்க வேலைக்கு வந்துவிட்டான். எங்கே கூலித் தகராறென்றாலும் மக்களை அணி திரட்டிக் கொடிபிடிக்க இவன் முன்னே செல்வான். அணி திரட்டி நிர்வகிப்பதில் மிகவல்லவன் என்று அவளுடைய தந்தைக்கு இவனிடம் மிகவும் மதிப்பு. நடவு நடும் பெண்கள், அம்சுவைப்போல், சாலாட்சியைப் போல் இளவயசுக்காரிகள், இளைஞர்களான சக தொழில்காரர்களுடன் சிரித்துப் பரிகாசம் செய்து மகிழ்வார்கள். அதே பெண்கள், இவனைக் கண்டால் சட்டாம் பிள்ளையாக மதித்து அடங்கி நிற்பார்கள்.

“ஏம்மா? நாள அமாசிக்குக் கூட்டம் இருக்கும். தெரியுமில்ல? மாதர் கூட்டம். அல்லாம் வந்திடுங்க” என்று இவன் சொல்லும் குரலில் மன்னனின் ஆணைக்குரிய மிதப்பு பளிச்சிடும்.

“ஏ, என்ன கொளுக்கட்டயா வாயில? கோசம் நல்லா குடுக்கணும்!” என்பான்.

கூட்டம் இவர்கள் வீட்டு முன் தெருவிலேயே நடப்பது உண்டு. அவளுக்கு இதெல்லாம் தனக்குச் சம்பந்தமில்லை என்ற வெறுப்புத்தான் மேலிடும்.

உள்ளே வந்து, “காந்தி, கொஞ்சம் தண்ணிகொண்டா” என்று கேட்பான். அந்தச் சாக்கில், “எம் பேச்சு நல்லா இருந்ததா காந்தி?” என்று சிரிப்பான். புதுக்குடியில் இருந்து வரும் போதெல்லாம் அவன்தான் அவளுக்குப் புத்தகம் பத்திரிகை கொண்டு வருவான். ஆனால் பிரபலமான வார மாத ஏடுகளாக அவை இருக்காது.

அடித்தள மக்கள், புரட்சி, குமுறல், சுரண்டல், வர்க்கப் பார்வை என்ற சொற்களையே புரட்டி எடுக்கும் கவிதைகள், கட்டுரைகள் இருக்கும். அந்தச் சுவாரசிய வார மாத ஏடுகளைப் படிக்க அவள் வீரமங்கலம் உடையார் வீட்டுக்குத்தான் போக வேண்டும். சரோஜா இவளுக்குத் தோழி. உடையார் பழங்காலத்தில் நிலப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர். இப்போது பெருங்காயம் வைத்த பாண்டம்போல் அந்த மனம்தான் இருக்கிறது. சரோஜா அவருடைய இளைய மருமகள். அங்கே செல்லத் தடை கிடையாது. சேலையைக் காயப்போட்டு விட்டு, வீரமங்கலம் செல்லவேண்டும் என்ற நினைப்புடன் அவள் வீட்டுக்கு வருகையில், நடுவீட்டில் பொன்னடியான் ஐயாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

“நீங்க எதுக்கும் அவனக் கொஞ்சம் வார்ன் பண்ணி வையுங்க காம்ரேட். போலீசுக்காரனுக்குச் சந்தேகம்னு புகுந்தா அடில இருக்கிறவனத்தா டவுட் கேசுன்னு புடிச்சுப் போட்டுச் சாத்துவான். இந்த சுடுகாட்டு வழிப்பிரச்சினைக்கு ஒடனே போராட்டம் நடத்தியிருக்கணும். பாடியத் தூக்கிட்டுப் போயிருக்கணும். பொண்டுவ வாணான்னிட்டாங்களாம். அட நமக்கு எத்தினியோ பிரச்சன இருக்கு. இப்ப உரவில, பூச்சி மருந்து வில கொறக்கணும்னு உண்ணாவிரதம் இருக்கிறது தீர்மானமாயிருக்கு. பிரச்சினயாயில்ல?”

“காந்தி? சோறாக்கியாச்சில்ல?… பசியாயிருக்கு…”

அவள் பின்புறம் சேலையைத் தொங்க விட்டுவிட்டு நடுவீட்டில் நிற்காமல் சமையலறைக்குள் செல்கிறாள்.

தடியை ஊன்றிக்கொண்டு பாட்டன் படியேறுகிறான். கைத்துணியில் ஈரமாக மீன் தெரிகிறது. நேராகச் சமையலறைக்குள் வந்து “ஏ செவப்பி, இந்தாட்டீ, தேச்சுக் களுவி, உப்பு, மொளவா தடவி, சட்டில போட்டு…” பதம் சொல்லி அவளிடம் கொடுக்கிறார்.

கண்களைச் சரித்துக்கொண்டு பார்க்கிறார் “யார்ராது? பக்கிரிமவன் பொன்னுவா? ஏண்டால, ஆளயே காணம்? உன்னண்ட நாஞ் சொன்னது என்னாச்சி?”

“என்ன சொன்னிய தாத்தா?”

“ஏண்டா, எத்தினி தபா நாகப்பட்டணம், காரக்கால் போறிய? இங்க இந்தப் பயலுவ, இன்னாமோ பொடியப் போட்டுத் தண்ணிய ஊத்திக் கலக்குறான். புஸ்ஸுனு நுர வருது. அத்த அஞ்சு லிட்டருக்கு அஞ்சு லிட்டர்னு கலந்து விக்கிறானுவ. குடிச்சா ஒடம்புக்குத் தெம்பால்ல சூர் புடிக்கணும்? இதெளவு சாஞ்சாடிட்டுத் தூக்கம் மயக்குது. சேய்! நாகபட்ணம் காரக்கால் போனா சீமப்பிராந்தி வாங்கிட்டு வாடான்னு நீ வார போதெல்லாம் சொல்றேன். வெத்துக்கையா வார. ஏதோ கெளவன், கேக்குறானேன்னு கூட இல்ல!”

“தாத்தா, போலீசுக்காரன் வெலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போயிருவான்!”

“அட. சி, போடா, சால்ஜாப்புச் சொல்ற? இப்பதா அல்லாம் பப்ளிக்கா எடுத்து எங்க பார்த்தாலும் கட துறந்திருக்காங்க? இதா வீரமங்கலம், அஸ்த மங்கலம், குமட்டூரு எங்க பாத்தாலும் கீத்துக் கொட்டா போட்டுத் துறந்து வச்சிருக்கானுவளே? நீ எனக்குப் போலீசு மயிருன்னு காதுகுத்துற?”

“அதில்ல தாத்தா. உள்நாட்டுச் சரக்குக் குடிச்சா விலக்கில்ல. நீங்க சொல்ற சரக்கெல்லாம் வாங்கியாரக் கூடாது.”

“மயிரு எல்லா நாள்ளயும் நாங் குடிச்சிட்டுத்தா வாரனா. எத்தினியோ கண்டம் பொழச்சி உசிர வச்சிட்டிருக்கிற. என்னிக்கின்னாலும் கொஞ்சம் ஊத்தி நல்லதாக் குடிச்சிக்கலாமேன்னு.”

“அப்ப, இதுக்குத்தா உசிரோட இருக்கீங்களா தாத்தா?”

“பின்னென்னல? இதபாரு, மண்ணு, பாசி எப்பிடிச் சதயத் திண்ணிருக்கின்னு!”

கிழவனார் தேய்ந்து சுக்காகிப் பாளமாக வெடித்துப் போன தன் குதிகாலைக் காட்டுகிறார்.

குதிகாலுக்கு மேலாக வெண்மை வரிகளாகத் தழும்புகள்.

பொன்னடியானின் கேலி நிறைந்த ஒளி தீவிரமாகக் குவிகிறது.

“தாத்தா அதென்ன?… அடிப்பட்ட தழும்பா?”

“ஆமா… திருக்கை மீன் தெரியுமில்ல? அந்த வால்சாட்ட நுனில குஞ்சமாட்டுத் தொங்கும்… அதால அடிப்பாங்க பண்ணல. ஒரு காரியக்காரன் இருந்தான். அவனுக்கு ஒடம்பெல்லாம் கண்ணு. களவடில எங்க, இந்தப் பய இங்க ரெண்டு அங்க ரெண்டுண்ணு கருக்காயோடு தள்ளிடறானோன்னு பாத்திட்டே நிப்பான். நா அதுக்கு மேல. இல்லாட்டிக் காவயித்துக் கஞ்சி கூடக் கிடக்காது. கருக்காயில நாலு மரக்கா தேறும்படி பாத்துக் கிடுவேன். இத சம்முவத்துக்கு மின்ன ஒரு பய இருந்தான். நல்லா வெரப்பா அவாத்தா மாதிரி இருப்பான், சரவணன்னு பேரு வச்சிருந்தே, நல்ல துடியா இருப்பான்; அறுப்புக்கு வரப்ப, எங்க எந்தல இருக்குன்னு ரொம்ப தொலவிலியே கரீட்டா கண்டுப்பான். அரிகாவாயில போயி விழும்; வூட்டுக்குப் போய்ச் சேந்திடும். அதுக்குத்தன கட்டி வச்சி அடிப்பானுவ. மிராசு உக்காந்திட்டு காரியகாரன வுட்டு அடிக்கச் சொல்லுவாரு. பொறவு ஒரனா குடுத்து, கள்ளு வாங்கிக் குடில…ம்பாங்க. ஒருக்க. மேட்டுப்பங்குல தண்ணி நிக்கல. தாழ தண்ணி நிக்கிது. இந்தப் பய சரவண போசி மாதிரி ஒண்ண வச்சிட்டு எறச்சி வுட்டிட்டிருக்கிறா. வரப்போரமா, கருணக்கிழங்கும் சேம்பும் நட்டு வந்திருக்கு. காரியக்காரன் ஒரு சுத்துப் போயிட்டு வாரான் அல்லாம் தோண்டிப் போட்டிருக்கு, பய போசில எடுத்திட்டுப் போறதப் பார்த்திட்டான். தொறத்திட்டு ஒடியாரான். சரேல்னு எங்க பூந்தான்னு தெரியல. ஆளக்காணம். வாக்கா மதகடில ஒளிஞ்சுக்குவான். இது வழக்கந்தா, என்னப் பாத்து திட்டிப் புட்டுக் காரியக்காரன் போயிட்டான். பய கெட்டிக்காரன், வூட்டுக்குப் போயிருப்பான்னு நினைச்சிட்டு நானும் பொழுது சாஞ்சி வூட்டுக்குப் போனா, அங்க பய வரல. ஒருவேளை பண்ண வூட்டில புடிச்சிக் கட்டிப்போட்டிருக்களானுவாக்கும்னு ராவிக்கு அங்க ஓடினா காணம். மக்யாநா காலம, மதகடில கெடக்கிறான். பாம்பு கொத்தி, நீலமா கெடக்கிறான். சேம்பும் கருணயும் போசியோட.”

பாட்டனாரின் சுருங்கிய கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிகிறது. அவர் குரல் ஒடுங்கி விட்டாலும், சோக அலைகளின் தொட்டுணர்வில் அங்கிருக்கும் எல்லா இதயங்களும் ஒன்றிப் போகின்றன.

சிறிது நேரம் ஒர் அமைதித் திரை படிகிறது.

“நாளெல்லாம் நெத்தமும் சதயும் தேச்சு, பச்சை சிரிக்கப் பாப்பம். ஆனா, அந்த மணி, நம்ம வயித்துப் பசிய அவிக்கல. அந்த உழப்பு நம்ம குடிய உசத்தல. இது நமக்கு உரிமைன்னு தெரியாது. மாறா, நாம இப்பிடி நண்டு நத்தயப் புடிச்சித் தின்னிட்டு, திருட்டு மணியள்ளிட்டு, திருக்கைச் சாட்டை அடிவாங்கிட்டு இருக்கத்தாம் பெறந்தோம்னு நெனைச்சிருந்தம். இப்ப, இதெல்லாம் உங்களுக்குச் சொன்னாக் கூடப் புரியாதுல. சம்முகத்துக்குக் கூடத் தெரியாது.”

கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு கிழவன் சிரிக்கிறான்.

“பொண்டுவ, நடவு நட்டிட்டே பின்னாடி போவணும். கொஞ்சம் நிமிர்ந்து வெத்திலே போடமுடியாது. காரியக்காரன் சீலயத் தூக்கிக்கச் சொல்லி வெத்துக்காலில அடிப்பான். நாங்க உழவுவோட்டுறப்ப, வெத்துல போட முடியாது. நா என்ன செய்யிவேன்? நாலு முடிப்பா வெத்தில பொயிலயக்கட்டி மாட்டுக் கழுத்தில செருவிருப்ப அங்க இங்க அவம்பாத்திருக்கிற சமயம் பாத்து, எடுத்துப் போட்டுப்பேன்.”

சம்முகத்துக்குக் கண்கள் பனிக்கிறது. ஆனால் காந்திக்கோ இதெல்லாம் கேட்டுப் புளித்த கதைகள். அலுப்பாக இருக்கிறது. என்றோ இருந்த அவல நிலையை இன்னும் சொல்லிக் கொண்டே இருப்பதில் என்ன புண்ணியம்?…

மீனைக் கழுவிச் சட்டியில் போட்டுவிட்டு, மிளகாய் அரைக்கக் குந்துகிறாள். இந்தக் கதை ஓயாது.

“நாம நாயம் வேணும்னு கொடி பிடிச்சிட்டு நின்னம். அப்ப, வெளியேந்து தெக்குத்தியாளுகளக் கொண்டாந்தாங்களா? அவங்க இத்தவுடக் கொறச்ச கூலிக்கு வந்தாங்க. நாங் கேட்டேன். ஏண்டா எங்க வயித்தில மண்ணள்ளிப் போடுறிய? ஒங்களப் போல ஒழச்சிப் பிழச்சிருக்கம் நாங்க. இப்படித் துரோகம் செய்யலா மான்னு. அதுக்கு அந்தாளு சொன்னான் : “நாங்க என்ன செய்யிவம். மண்ணும் தண்ணியும் சேறா. பச்சுனு இருக்கிற பூமி, நீங்க பேசுவீங்க, போராடுவீங்க, மானம்பாத்த மண்ணுன்னா, அப்பத் தெரியும் பசிக்கொடும”யின்னான். நாம இன்னம் கரையேறாம தான் நிக்கிறோம். பெத்தவங்கன்னு ஆயியப்பனைச் சொல்லுகிறோம். மண்ணும் மானமும்தா மனுசனுக்கு பாக்கப் போனா ஆயியப்பன். அதுங்களே பராரியா வுட்டுப் போடவும் மனுசன் என்ன பண்ணுவான்? பஞ்சான குஞ்சும் குடும்பமுமா எடுபட்டு வந்தாங்க. அடியாளுங்க முச்சூடும் அங்கேந்துதா வந்திருந்தானுவ மூலையான்னு இங்கே இருக்கிறானே, அவ யாரு?”

“ஆரு?”

“இங்கதா கிளியந்தொறயோட வெள்ளாழத் தெருவில வீடு வாங்கிக்கிட்டிருக்கிறான். அவெ எங்க மிராசு கிட்ட, அடியாளாத்தா வந்தா. இவனும் சந்தனசாமின்னு ஒராளு, நின்னான்னா சொடலமாடன் கணக்க இருப்பா. ரெண்டு வைப்பு, அவளுவளும் வந்து இருந்தாளுவ…”

“எங்க?”

“இங்கியேதா, பண்ண வீட்டில வச்சிருந்தானுவ, அப்பல்லாம் இந்த அம்மங்கொளம் மாமுண்டி, தின்னா முளுக்கோளியும் படி அரிசிச்சோறும் திம்பா. சாராயங் குடிக்கமாட்டான், கள்ளுதாங் குடிப்பா. ஆளு இப்பிடித் திம்முனு இருப்பான். நம்ம பொம்பிள சாணி தட்டுறாளே அந்த மதகுக்கு இந்தண்ட மிராசு அடியாளுவ, நாங்க அந்தப் பக்கம் அரிவா, மம்முட்டி, கம்புன்னு கெடச்சதெல்லாம் வச்சிட்டு வந்தது வருதுன்னு நிக்கிறம். சந்தனச்சாமி இந்தாண்ட பூந்து வார, தடி சும்மா சுழலுறது. மாமுண்டி பாஞ்சா, ஒரே வெட்டு. இந்தப்பய முலையான், அப்ப எடுத்த ஓட்டம், பெருமா கோயில் மூலையில போயி ஒட்டிக்கிட்டாம் பாரு.. அவனுக்குப் பேரே தெரியாம மூலையான்னே பேரு வந்திச்சி…”

கிழவர் சிரிக்கிறார்.

“நேத்து முந்தாநா கூட வந்திட்டுப் போனாரு…”

“நீங்க எந்த மாமுண்டியச் சொல்றீங்க தாத்தா?… இப்ப எலக்ஷனுக்கு மின்ன… கொலையாகிப் போனாரே, அவரா?”

“ஆமா… அப்ப போலீசில புடிச்சி கேஸ் நடந்து ஏழு வருசம் உள்ள இருந்துட்டு வந்தா. அவனத்தான் குத்திப் போட்டானுவ… எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ போற. அது பாரத யுத்தம்டான்னு நம்ம ஐயுரு சொல்லுவாரு… சந்தன சாமி செத்ததும் மிராசுதாரு, அந்தப் பொம்பிளகளுக்கு தலா ஆயிர ரூபா குடுத்தாராம். ஆனா? அவளுவ சொன்னாளுவளாம், நாயத்துக்குப் போராடுறவங்க அவுங்க. இவங்க இப்ப அடியாளா போறப்பவே நாங்க வாக்கரிசி போட்டுத்தா அனுப்பிச்சம்னு போயிட்டாவளாம். காசக்கூட வாங்கிக்கலியாம். அப்புடி அது உணுமயில நாயத்துக்கான யுத்தம்தா. ஆனா எதிராளிய தருமமா நடக்கல. போலீசு தருமமா பாக்கல. சரளக்கல்லப் போட்டு முட்டிக்கால் போட்டு வரச்சொல்லி அடிப்பானுவ… பொம்பிளகள. எப்பிடிச் சொல்றது? தலைப்பய! மண்ணையும் தண்ணிரையும் குழச்சி அப்பப்ப வித்தூணி உசிர்ப்பச்சை கண்டு வளத்து மணியாக்கி வயித்துப் பசி தீர்க்கிற தொழிலச் செய்யிறவன் சேத்துலதான் உழண்டிட்டிருக்கிறான். ஆனா மனசொப்பி அந்தப் பயிரயே அழிக்கமாட்டான். சுமையா இருக்குதுன்னு மனுச உயிர அழிப்பானா? செம… அநியாயக்கார வச்ச செமயக் கூடச் செமக்கிறம்…”

சம்முகத்துக்கு உடல் சிலிர்க்கிறது. பொன்னடியான் உள்ளிருந்து வரும் மீன் வறுக்கும் மனத்தில் மூழ்கி உள்ளேயே பார்வையைச் செலுத்துகிறான்.

“காந்தியக்கா? காந்தியக்கா?…”

காத்தானின் மகள் பொன்னி இடுப்புக் குழந்தையுடன் கூவுகிறது.

“த பாரு, நாவு எங்கமேலல்லாம் மண்ணெடுத்துப் போடுறான்.”

“காந்தி, போயி அந்தப் பயலக் கூட்டிட்டுவா… போ, போ…”

சம்முகம் அந்தப் பையனால் மற்றவருக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற உணர்வுடன் கண்டிப்பாக இருப்பார்.

“ஏன் காம்ரேட் இவனுக்கு வயித்தியம் ஏதும் பண்ணல…”

“…எங்கப்பா?… அப்பல்லாம் நான்தான் ஓடிட்டே இருந்தேன். பொம்பிள, பிள்ளயப் புளிய மரத்தடில கிடத்திட்டு வேலை செய்யிவா. நாலு வருசம் வரயிலும் கவனிக்கல. பிறகும்கூட, மரத்தடிலே அந்த தோசம் இந்தக் காத்துன்னு ஏதோ சொல்லிட்டிருந்தாங்க. ராவில அப்பல்லாம் ஊளயிடு வான். அப்புறம் புதுக்குடி டாக்டர்ட்ட கேட்டம். ஒண்ணும் பண்ண முடியாதுன்னுதா சொல்லிட்டாரு, என்ன செய்யிறது?”

“அதில்ல காம்ரேட், இப்ப ஊனமுற்றோர் ஆண்டில் எதனாலும்… பாக்கலாமுல்ல…”

“என்னத்தப் பாக்கிறது? ஊனமில்லாதவங்க வசதிக்கே பாக்க முடியல…”

காந்தி ஆத்திரத்துடன் அழுக்கும் மண்ணுமான நாகுவை இழுத்துக் கொண்டு வந்து திண்ணையில் அதட்டி உட்கார வைக்கிறாள்.

பிறகு அவர்களுக்குச் சோறு போடச் செல்கிறாள்.

தட்டுக்களில் சோறு முதல் நாளின் குழம்பும் போட்டு மீன் கறியும் வைத்து மூவரிடமும் கொண்டு வருமுன் பொன்னடியான் எழுந்து தானே வாங்கி வைக்கிறான். “உனக்குத் தொந்தரவு…”

காந்தி இந்த உபசாரத்துக்கு எந்த எதிரொலியும் காட்டவில்லை.

“காம்ரேட், இன்டர்வியூக்குப் போனதாச் சொன்னாங்க, பணங்கட்டியாச்சா?”

“அந்த வயித்தெரிச்சல ஏங்கேக்கிற? ரெண்டாயிரம் ரூபாக்கி எங்கே போக…?”

“அதா, ரெண்டொரு எடத்தில் இப்பிடி டொனேசன் வாங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். சும்மா கண் துடைப்பு. தாழ்த்தப்பட்டவர்ங்கறதெல்லான்னு… நமக்குத் தெரிஞ்ச ஓராள் இருக்காரு நம்ம எஸ்.என். இருக்காரில்ல, அவர் மாமா. நெல்லு வியாபாரம். இப்பிடின்னா, ரொம்பக் கொறஞ்ச வட்டிக்குக் குடுக்கிறாரு. இப்ப, இந்த மாதிரி டொனேசன் வாங்குறாங்கறத அம்பலப்படுத்தி உடக்கணுமின்னாக்கூடக் குடுத்திட்டுத்தா அத்தாட்சி காட்டணும். நா சொல்லி வைக்கிறேன். இன்னிக்குத் தேதி எட்டில்ல. பன்னண்டாந்தேதி போல நீங்க சங்கத்து ஆபீசுக்கு வந்தீங்கன்னா வந்து கூட்டிட்டுப் போறேன்.”

“கடன் வாங்கிட்டா அடய்க்கணுமில்ல. இப்பத் தோணுது. பிறகு இவ வேலைக்கி இதுமாதிரி பணம் குடுக்கணும்னா எங்க போக? பெரிய பையன் உதவாம போயிட்டான். மூணு வருசம் படிக்கணும், அதுவரய்க்கும் சின்னவளையும் கட்டிக்குடுக்காம வச்சிருக்கிறதா? உங்கிட்ட சொல்றதில என்னப்பா? பிரச்சனை ஒண்ணோட போறதில்லை.”

“நீங்க அவநம்பிக்கையே பட்டிருந்தா எப்பிடிப்பா? நான் படிக்கிறதுக்கும் அம்சு கலியாணத்துக்கும் என்ன ஒட்டு? அவள கட்டிக்குடுங்க?…”

“கட்டிக் குடுக்கிறதுன்னா லேசாயிருக்கா? உங்கம்மா இப்பவே மாப்பிளக்கி வாட்ச், மோதிரம் போடணும், இருபத்தொரு ஏனம் குடுக்கணும், அப்பிடி இப்பிடின்னு பிளான் போடுறா. ஒரு அஞ்சு ஆயிப்பூடும் இதுவே, சவரன் என்ன விலை விக்கிறாங்க? தாலித் தங்கமே ஆயிப்பூடும். கடன் வாங்கிக் கலியாணம் கட்டிப் பிடறேன். பிறகு உன் புருசன் முனஞ்சி படிக்க வச்சோ வேலை வாங்கியோ குடுக்கட்டும்…” என்று பொன்னடியானைப் பார்த்துக் கொண்டு கேலியாகக் கண்களைச் சிமிட்டுகிறார்.

“ஆமாண்டால பொன்னு, நீ கட்டிக்கிட்டுப் பொஞ்சாதியப் படிக்க வச்சிக்க மேச்சாதிலல்லாம் அப்படித்தான் செய்யிறா. கட்டிக்கிட்ட பொம்பிளய, வூடு கூட்டுற துடப்பக் கட்டன்னு நினைக்காம, அதுக்கு ஒரு அந்தசுக் குடு…” என்று கிழவர் வெளிப்படையாகப் பொன்னடியான்தான் அவர்கள் தேர்ந்திருக்கும் மருமகன் என்று உடைத்து விடுகிறார். காந்திக்குக் கோபம் வருகிறது. “எனக்கொண்ணும் இப்ப கலியாணம் வேணாம்” என்று வெடிக்கிறாள்.

ஆசை நிழலாடும் கீழ்ப் பார்வையுடன் அமர்ந்திருக்கும் பொன்னடியான் திடுக்கிட்டாலும் சமாளித்துக் கொள்கிறான். எதுவும் பேசவில்லை.

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *