சேற்றில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 885 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

“குடிப்பதற்கு நீர் வேண்டும்!
குடியிருக்க இடம் வேண்டும்!
புதைப்பதற்கு சுடுகாடு வேண்டும்!”

ஆயிரம் பதினாயிரமாக இந்தக் கோஷம் வானைச் சென்று முட்டுகிறது.

சம்முகம் இதற்கு முன் பல பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தப் பேரணியில் அவருடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே அதிகமாகத் தெரிகின்றனர். முதன்முதலில் அவர்கள் கிராமத்திலிருந்து ஆட்சியாளரின் துணையோடு அவர்களை அடக்க முயன்ற அமைப்பை எதிர்த்துப் பத்து மைல் தொலைவு ஆண்களும் பெண்களுமாக டவுனுக்குப் பேரணி வந்த நாள் அவருக்கு நினைவு இருக்கிறது. அப்போது அரசியல் விடுதலை பெற்றிராத நாட்டின் குடிமக்கள் அவர்கள். அவருக்குப் பதினெட்டு வயசு, மீசை அரும்பும் கிளர்ச்சி மிகுந்த பருவம். ‘அடிமையாக இருப்பதுதான் நம் விதி’ என்று அழுந்திக் கிடந்த மக்களை ஊரூராகச் சென்று, “தாத்தா வாங்க, மாமா வாங்க, மாமி நீங்களும் வாங்க, அண்ணே, அக்கா எல்லாரும் கலந்துக்குங்க!” என்று உற்சாகத்துடன் திரட்டினான். எந்த இருட்டானாலும் பகையானாலும் உயிர் அச்சம் உறைத்ததில்லை. வாலிபத் தோழர்களின் அணியே வெளியிருந்து வந்த தலைவர்களைப் பூரிக்கச் செய்திருந்தது அந்நாளில்,

“நாளை எண்ணி வட்டி வாங்கும் நமன்களை ஒழிப்போம்!”
“உழுபவனுக்கு உரிய பங்கை அமுல் படுத்துங்கள்!”
“புரட்சி ஒங்குக… இன்குலாப் ஜிந்தாபாத்!”

என்றெல்லாம் இவர்கள் முறை வைத்துக் கோஷமிட்டுக் கொண்டு வெள்ளமாய்ப் பெருகி வந்தார்கள். ‘இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்ற வகையில் அந்த எழுச்சி அப்போது பொங்கி வந்திருந்தது. இப்போது அவருக்குக் கோஷமிடவே வாய் அவ்வாறெழவில்லை. அப்போதிருந்த நம்பிக்கை ஒளி இப்போது குறைந்து விட்டது.

“அமுல்படுத்து! அமுல்படுத்து!”

“சட்டக் கூலியை அமுல் படுத்து!”

சட்டம் போட அப்போது போராட்டம்; இப்போது சட்டம் போட்டும் அமுல்படுத்தப் போராட்டம்!

தங்கள் அணியில் மூன்றே மூன்று பெண்களில் கிட்டம்மாள் கட்டிக் கொண்ட தொண்டையைக் கிழித்துக்கொண்டு கூவுகிறாள்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்…”

“தாக்காதே, தாக்காதே! அரிசன மக்களைத் தாக்காதே!”

சுதந்திரம் வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளாகியும் அரிசனங்களுக்குத் தனித் தொகுதிகள், தனி அமைச்சகங்கள் என்று சிறப்புக் கண்காணிப்பு என்று ஆடம்பரம் காட்டியிருப்பது தான் பெரிதாக இருக்கிறது.

வெயில் மிக உக்கிரமாகத் தலையில் படிந்து, நெற்றியில் வியர்வை வழிகிறது. துண்டைத் தலையில் போட்டுக் கொள்கிறார்.

“விவசாயத் தொழிலாளிகளுக்கு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வா!”
“பென்ஷன் வழங்கு! பென்ஷன் வழங்கு!”
“கூலியோடு வார விடுமுறை, மருத்துவ வசதி எல்லாம் வழங்கு!”

சாலையோரங்களில் கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ள மனிதர்கள், நடைபாதைகளில் நடப்பவர்கள் இதைச் சிறப்பாகக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேப்பியர் பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடர்ந்து வருகையில் போக்குவரத்து ஊர்திகளுக்குத்தான் பாதிப்பாக இருக்கிறது.

“என்ன ஊர்வலம்?… விலைவாசியாக இருக்கும்! வேறென்ன? தினம் ஒரு பேரணி ஊர்வலம்!”

“இல்லப்பா விவசாயத் தொழிலாளர் சங்கம்!”

“அது பச்சைக் கொடியில்ல? இது சிவப்புக் கொடியாக இருக்கு?”

“எல்லாத் தொழிலாளர் சங்கத்திலும் எல்லா வர்ணக் கொடியும் இருக்கு இப்ப!…”

“எல்லாரும் சேந்து எதானும் செஞ்சாலும் பலனிருக்கும். ஒருத்தன மத்தவன் கழுத்தப் புடிக்கிறதிலியே இருந்தா என்னத்த நடக்கும்? இத்தயே சாதகமாக்கிட்டு மேலே போறவன் போயிட்டே இருக்கிறான்…”

நடைபாதையில் இந்தப் பேச்சுக்களைச் செவியுறுகிறார் சம்முகம், உறைக்கிறது.

ஓரிடத்தில் குளிக்க இறங்கும் கோலத்தில் தனது இளமைப் பூரிப்புக்களைக் காட்டிக்கொண்டு ஒரு சினிமா நடிகையின் ‘கட் அவுட்’ கண் சிமிட்டிப் புன்னகை காட்டி ‘நீங்கல்லாம் எங்க போறீங்க? இப்படி வாங்க!’ என்று அழைக்கிறது.

“உரவிலை குறையுங்கள்! உற்பத்தி செய்த நெல்லுக்குக் கட்டுப்படியாகும் விலை கொடுங்கள்!”

கோஷமே இடறி விழுவதுபோல் இருக்கிறது.

“என்ன எளவுக்கு இப்பிடிப் பொம்பிள பொம்மய வச்சித் தொலைச்சிருக்கானுவ தூத்தேறி!” கிட்டம்மா காறித் துப்புகிறாள்.

பழக்கப்பட்டுப் பழக்கப்பட்டுக் காய்த்துப் போன சாலைகளில் அத்தனை கால்களின் அத்தனை மக்களின் செருப்பில்லா அடிகளின் உயிர்த் துடிப்பேறியும் உணர்ச்சிப்பொடி பறக்கவில்லை. “எனக்கு உணர்ச்சியே கிடையாது” என்று கிடக்கிறது. இந்தப் பேரணிச் செலவு, உடல்பாடு இவற்றால் முன்னே நின்று வாழ்வின் முண்டு முடிச்சுக்களாய் அச்சுறுத்தும் பிரச்னைகளைக் கரைக்க முடியப் போகிறதோ?

மழைச்சாரல் ஓய்வதும் திடீரென்று வலுக்கத் தொடர்வதும் போன்று குரல்கள் தளர்ந்து ஓயும் சமயம் எங்கோ ஒரு தனிக்குரல் எழும்பப் பலரும் அதைத் தொற்றுவதுமாக தமிழகத்தின் மூலைமுடுக்குக் கிராமங்களிலிருந்து வந்த மண்ணின் மைந்தர்களின் பேரணி சாலையில் வருகிறது. உயர்நீதிமன்றம் வரும்போதே காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். தலைவர்கள் மட்டுமே அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைப் பத்திரங்களை அளிக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பேரணி, சென்னைப்பட்டினம் போகிறோம், நான்கு நாள் சம்பாத்தியம் போகும் என்று மிகப் பெரியதோர் உச்சகட்டத்தை எட்டியாயிற்று. அதிகாலையில் அவர்கள் கூடுவாஞ்சேரிக்கு அருகில் வண்டியை நிறுத்திக் காலைக்கடன்கள் முடித்து வந்தனர். இனி பகலுணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு பசியாறிய பின், ஒரு சுற்று ஊரைப் பார்த்து விட்டு இரவு பத்து மணியளவில் கிளம்ப வேண்டியதுதான்.

“நான் கோபுக்குக் கடிதாசி எழுதியிருக்கிறேன். இப்ப கிளம்பட்டுமா?” விடைபெற நிற்கும் சம்முகத்தைப் பொன்னடியான் நிறுத்துகிறான்.

“ஏன் காம்ரேட்? இப்பதா ஃபுட் பாக்கெட் ஏற்பாடு பண்ணிருக்காங்க, சாப்பிட்டுவிட்டு வண்டில இவங்க எல்லாருடனும் ஒரு சுத்து நீங்களும் பார்க்க வாங்க. சாங்காலம் அஞ்சு மணிக்குத்தா ஆபீசில இருந்து மகன் வருவாரு. வண்டி அநேகமா விடிகாலமதான் கெளம்பும். நீங்க எடம் சொல்லுங்க. வந்து பிக்கப் பண்ணிக்கிறம்!”

சம்முகத்துக்கு இது உவப்பாக இருக்கிறது.

மகன் ஆயிரம் விளக்குக்குப் பின்னே ஒரு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் இருப்பதாக முகவரி கொடுத்திருக்கிறான்.

மாலை ஐந்து மணி சுமாருக்கு அங்கு வந்து இறங்கும் சம்முகம் முடிந்தால் இரவே சங்கத் தலைமை அலுவலகத்தில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி விடைபெறுகிறார்.

அடுக்கு வீடுகளைச் சுற்றிக் கசகசவென்று இரைச்சல்; அழுக்கும் புழுதியுமாகச் சிறுவர் சிறுமியர், இளைஞர், ஆடவர், பெண்டிர் தரையோடு இருக்கும் குழாயைச் சுற்றிய மேடை பெயர்ந்து பொக்கையும் பொள்ளையும் நாற்றமும் பாசியுமாக பெண்டிர் கூச்சலும் வசையுமாக இருக்கிறது. கிராமத்திலும் இவை இருக்கின்றன. ஆனால். அங்கு இல்லாத கபடம் இங்கே வேரோடிப் போயிருக்கிறது. படி ஏறி மூன்றாம் மாடிக்குச் செல்லவேண்டும் என்று கண்டு கொள்கிறார். படியேறும் போதே புதிய ஆள் என்பதை அவர் துண்டும் முகமும் காட்டி விடுகின்றன.

தலையைச் சொறிந்துகொண்டு அழுக்குப் பனியனுடன் வரும் ஒரு பரட்டை இன்னொரு கையில் பிடித்த புகையும் துண்டு பீடியுடன், “ஆரு நயினா? ஆரப் பாக்க வந்த?” என்று விசாரிக்கிறான்.

“கோபால்னு… கைத்தறி ஆபீசில வேல பண்றாரு…”

“ஐயிரு பொண்ணக் கட்டிருக்கே…”

“ஆமா…”

“அவுரு எட்டு மணிக்கு மேலில்ல வருவாரு?… வூட்ட அது வந்திருக்குதோ இன்னாமோ, போயி பாரு நயினா!”

இந்தக் கோட்டைக்குள் எவன் வந்தாலும் போனாலும் எனக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது போலிருக்கிறது, அவன் அனுமதி வழங்கும் பேச்சு!

அவனுக்கு வேலையான பின் அவர் ஒரே ஒருமுறை தான் சென்னையில் அவனை வந்து பார்த்திருக்கிறார். அப்போது சங்கக் கூட்டத்துக்காக வந்தார். அவனைப் பத்து நிமிசம் பார்க்க முடிந்தது. புதிய மெருகும் களையுமாக இருந்தான். அவருக்குப் பெருமையாக இருந்தது. பி.ஏ.யில் ஒரு பகுதி அவன் தேறியிருக்கவில்லை. “முடிஞ்சா அத்தை முடிச்சிடுரா!” என்றார். வேலை செய்து சம்பாதிப்பவன் என்று பணம் எதுவும் அவனாகவும் கொடுக்கவில்லை. இவருக்கும் கேட்கக் கூச்சமாக இருந்தது. பையனானாலும் அவன் தோளுக்குமேல் வளர்ந்து படித்துவிட்டதால் சட்டென்று அந்நியமாகிவிட்டாற் போன்ற பாவம் இவருள் ஓங்கியிருந்ததுதான் காரணம். ஆனால் அவன் இவர் ஊர் திரும்புகையில் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்று உபசாரம் செய்து, பிஸ்கோத்து கேக்கும் கொடி முந்திரிப் பழமும், அம்சுவுக்கும் காந்திக்கும், கழுத்து மணி மாலையும், முடியில் வைத்துக்கொள்ளும் அலங்கார ஊசிகளும் வாங்கிக் கொடுத்தான்.

அதைத் தொடர்ந்து வந்ததுதான் திருமணச் செய்தி. தாம் அங்கே சென்றிருக்கையில் அவன் அவளைச் சந்திக்கச் செய்து தம்மிடம் கேட்டிருக்கவில்லை என்ற மரியாதைக் குறைவு அவருள் புழுவாகக் குடையாமலில்லை. நான் வேறாகிவிட்டவன், என் வாழ்க்கைப் பற்றிய முடிவுகளை நானே எடுப்பேன் என்று சொல்வது போலிருந்தது. பிறகு அவன் ஒரு மாசத்துக்கு முன்பு திடுமென்று புறப்பட்டு வந்து சண்டைக் கொடி ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறான். இவர் முன்னதாகக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். அவன் வீட்டுக்கு முன்னதாகவே வந்திருக்கலாம்; அல்லது வந்துவிடுவான். இவர் கதவு எண்ணைப் பார்த்துக் கொண்டே வந்து தட்டுகிறார்.

அடுத்த பகுதியில் ஒரு பெண் வாயிற் படியில் டிரான்ஸிஸ்டரைப் பெரிதாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அதிலிருந்து வரும் பாட்டு ஒரே கத்தலாக இருக்கிறது.

தனது தட்டல் உள்ளே இருக்கும் மருமகளுக்குச் செவியில் விழுமா என்ற ஐயத்துடன் சற்றே ரேடியாவை நிறுத்து என்று சொல்லும் பாவனையில் பார்க்கிறார். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தாமல் வெளியே கைபிடிச் சுவரில் வைத்துவிட்டுச் சாய்ந்து நிற்கிறாள்.

சினிமாப்பாட்டு புரியத் தொடங்குகிறது. விரசமான சொற்களில் காதல் பாட்டு.

அவர் பலமாக அழுத்திக் குத்துவதுபோல் கதவைத் தட்டுகிறார்.

கதவு திறக்கப்படவில்லை. ஆனால் உள்ளிருந்து குரல் வருகிறது.

“ஆரு?”

“நா… சம்முகம், ஊரிலேந்து வந்திருக்கிறேன். கிளியந்துறை.” கதவு மறுகணம் தாழ்ப்பாள் விடுபட்டுத் திறந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார். பொய்யாகிறது.

“…அவுரு இன்னிக்கு வர நேரமாகும். பிறகு வாங்க?” அவருக்கு நா ஈரம் வற்றி உலர்ந்து போகிறது.

“நா. கோபுவின் அப்பாதான். கதவு திறங்க…”

“ஆராயிருந்தாலும் அப்புறம் வாங்க…”

மனதோடு ஒரு வசை தெறித்து விழுகிறது.

நல்லவேளையாக நாவில் குதிக்கவில்லை.

விழுங்கிக்கொள்கிறார். உடல் முழுவதும் ஒரு சூடு பரவிக் குழம்புகிறது.

“ஆராயிருந்தாலும்… அப்புறம் வாங்க?”

அவர் பெரிதாகக் கருதி, பெருமை பொங்க, தன் வியர்வையைத் தேய்த்து அவனுடைய ஏற்றம் கண்டார். தாம் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தும் இவ்வாறு அவமானம் செய்திருக்கிறான். அந்தப் பெண் என்ன, படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? வந்தவர், புருஷனின் தகப்பன் என்பதை அறிவித்த பின்னரும் கதவு திறந்து பார்த்துப் பேச மாட்டாளா?

வெளியில் டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு நோட்டம் பார்க்கும் பெண் ஒரு சொல் உதிர்க்கவில்லை.

அவள் மீதும் கோபம் வருகிறது. பொட்டைச் சிறுக்கிகள்! பல்லை இளித்து மயக்கி, பெற்றவர்கள் பாசத்தையே துடைத்துவிடச் செய்யும் சிறுக்கிகள்! வாசலில் நிற்க வைத்து, கதவடைக்கச் சொல்லி அவமானம் செய்கிறான் துரோகி!

கட்சி மாறலைக் காட்டிலும் படுபாதகமான துரோகம்!

பையில் இருக்கும் கதம்பமும், பழமும் அவரைப் பார்த்து நகைக்கின்றன. தாயிடம் ஐம்பது ரூபாய் வாங்கிச் சென்றிருக்கிறான்.

இவர் கையில் பத்தே ரூபாய்தான் இருக்கிறது. போகும்போது பத்து இருபது வாங்கிச் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தார்.

சொந்த மகனிடமே அவமானப்பட்டுத் திரும்பி நடக்கையில் நெஞ்சு குலுங்குகிறது. வழி நிச்சயமாகத் தெரியாது. இருள் பரவிவிட்ட நேரம். எல்லாச் சாலைகளும், குறுக்குத் தெருக்களும் ஒரே மாதிரித் தெரிகின்றன. எட்டுப் பேரிடம் வழிகேட்டு அவர்களுடைய வண்டியும் தோழர்களும் தங்கிய இடத்தை வந்தடைகிறார்.

“அதுக்குள்ள மகனப் பாத்திட்டு வந்திட்டியா?…”

தங்கசாமி பீடிக்கங்கைத் தட்டிக்கொண்டு கேட்கிறான்.

“இல்லீங்க, இந்த ஊருல கேட்டா எவனாலும் வழி வெவரம் சொல்றாங்களா? அடுத்தாப்பில கொலவுழுந்தாக்கூடப் பாக்க மாட்டாங்கறது சரியாத்தானிருக்கு. அதுவும் இந்த ஊருப் பொம்பிளங்க, என்னமோ நாம வெளியூரு ஆளுன்னா அவங்களக் கடிச்சி முழுங்கிடுவம்போல கேட்டாக்கூட பதில் சொல்ல மாட்டேங்கறாளுவ. காலம ஆபீசு பக்கம்தான் பாக்கணும். பாக்காம போகக்கூடாது. வண்டி காலம எத்தினி மணிக்குக் கெளம்பும்…”

“அதா இப்ப சிலபேரு சினிமாக்குப் போயிட்டாங்க, காலம விடியறப்பதா கெளம்பனும்?…”

“கொஞ்சம் நின்னிங்கன்னா அந்தப்பய ஒம்பதுக்கு ஆபீசுக்கு வந்திடுவான். பாத்துட்டு வரேன். இல்ல, வண்டி நிருபுடியாப் போவணும்னாதா என்ன பண்ணுறதுன்னுறேன்…”

“ஒரு அரை மணி போதுமில்லை, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாப் போச்சு…”

சம்முகம் எட்டுமணிக்கு முன்பாகவே அவனுடைய அலுவலகத்தின் முன் வந்து காத்திருக்கிறார். இரவு முழுவதும் உறங்கியிராத முகம் சோர்வில் அயர்ந்திருக்கிறது. அவன் பஸ்ஸைவிட்டு, இறங்கி வருவதை அவர் பார்த்துவிடுகிறார். அவரை அங்கு அவன் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்?

திடுக்கிட்டுப் பின் சமாளித்துக் கொள்கிறான்.

“என்னப்பா? ராத்திரி. திலகம் சொல்லிச்சி. நாந்தா, காலம் கெட்டுக்கிடக்கு தெரிஞ்சி வச்சிட்டு உறவு அது இதுன்னு சொல்லிக் கதவைத் தட்டினாத் திறக்காதன்னு சொல்லிருந்தேன். இப்படித்தானே சொல்லிட்டுக் கொலையே பண்ணிடறாங்க இங்க?… ஓ, பேரணிக்கு வந்திருந்தீங்களாப்பா? நேத்து ஸ்டாக் டேக்கிங். ஒரே வேல, அப்புறந்தான் பேரணின்னு எனக்கே தெரிஞ்சிச்சி. திலகம் சொன்னதும் அவளைக் கோவிச்சிட்டேன். ரொம்ப வருத்தப்பட்டேன்…”

“அப்படியா? நான் உனக்கு லெட்டர் போட்டிருந்தேனே, வரல?”

“லெட்டரா? ஒண்ணும் வரலியே? நானே நேத்து வாரப்ப, பேரணிக்கு வர்றவர் இங்க வந்து தங்கிட்டுப் போகக்கூடாதா, வித்தியாசமாகவே நினைச்சுக்கிறாங்களேன்னு வருத்தப் பட்டேன்…”

“நீ ஆபீசிலியா இருந்தே?… சரி, உன் தங்கச்சி, வீட்டவிட்டு ஓடிட்டா. தெரியுமாடா?… அன்னிக்கு நீதான கூட்டிட்டு வந்த துரோகிப் பயல, இவ, காலம பொய்யச் சொல்லிட்டு ஒடிப்போனா. வெளில தலகாட்ட முடியல. உனக்குத் தெரியுமாடா?”

அவன் திடுக்கிட்டு விடவில்லை. எங்கோ பார்க்கிறான்.

“எனக்கெப்பிடித் தெரியும்? அவனாக உதவி செய்யிறேன்னு வந்தான். சும்மா துரோகி துரோகின்னு சொல்றதுல என்னப்பா லாபம்? இஷ்டப்பட்டுப் போயிருந்திச்சின்னா நல்லதுதான். சுகமாயிருக்கும்…”

“சுகமாயிருக்கும்! அப்பன் ஊருப் பொம்பளை எல்லாம் அழிச்சவன். அவன் மகன் எப்படியிருப்பான்? அவன் ஒழுங்கா வச்சிருப்பானோ, கூட்டிவிட்டுச் சம்பாதிப்பானோ? ரத்தம் கொதிக்கிது…!”

“அப்பா, அப்பா… என்ன இது, இதெல்லாம் இங்கே வச்சிப் பேசாதீங்க! மானேசர் வருவார் இப்ப. நீங்க அப்புறம் வாங்க!”

“அப்புறம் வேற வந்து உன் வீட்டு வாசல்ல மானங்கெடனுமா? அப்புறமும் இப்புறமும் வானாம். நீ இப்ப பணத்தைக் குடு. நான் போறேன்.”

“ஏது பணம்?”

“என்னடா ஏதுன்னு கேக்கிற? உங்கம்மாட்ட குழயடிச்சி வாங்கிட்டுப் போனியே அம்பது ரூபா?…”

“அம்மாட்டியா? நானா? அம்பது ரூபா நா வாங்கிட்டு வந்தனா? அவங்க கூலிப்பணம் குடுத்தாங்க. வடிவுகிட்ட அப்பவே குடுத்திட்டேன். அவன் கண்டமானிக்கும் பேசினான். அதனாலதா நீங்க வரவரைக்கும்கூட நிக்காம வந்தேன்… இப்ப நீங்க இப்படி ஒரு பழியைப் போடுறீங்க? சீச்சீ!…”

“அட… பாவி, உங்கம்மா, பெத்த தாயப் பொய் பேசுறவளாக்கிட்டியே…”

“என்னப்பா, கொஞ்சம்கூட ஒரு டீஸன்ஸி இல்லாம இங்க நின்னிட்டுக் கத்துறீங்க? நா வாரேன்! வீட்ல வந்து பேசிக்கலாம், போங்க!”

அவன் விர்ரென்று உள்ளே சென்றுவிடுகிறான்.

எரிமலை புகையாகக் குழம்புகிறது; கண்கள் சிவக்கின்றன.

மிகப் பெரிய சென்னைப் பட்டினமும் அதன் இயக்கமும் அவருடைய உணர்வை விட்டு நழுவிப் போகின்றன.

சொந்த மகனே இப்படிப் போனானே?

தன் மகன் காலில் சேறுபடலாகாது, பிறந்த குடியை உயர்த்திப் பெருமை சேர்ப்பான் என்று கனவு கண்டார். ஈர மண் ஒட்டக்கூடாது என்று நினைத்ததற்கு ஈரத்தையே துடைத்து விட்டார்கள். பெற்றவனும் பெற்றவளும் அழுக்கென்று துடைத்து விட்டார்கள்.

உணர்ச்சியை விழுங்கிக்கொண்டு துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு நடக்கிறார்.

அத்தியாயம்-17

கடந்த சில நாட்களாகத் தாயும் தகப்பனும் ஆக்ரோசமுடைய இரு பூனைகள்போல் சண்டைபோட்டுக் கொள்வதாக அம்சுவுக்குத் தோன்றுகிறது. மாறாக பாட்டியும் பாட்டனும் சீண்டிக் கொள்ளும் பேச்சும் பிணக்கும் ஓய்ந்துவிட்டன. மகள் ஓடிப்போனது, தாயும் தகப்பனுக்குமன்றி பாட்டிக்கும் ஓர் அடிதான். ஏன், பாட்டன் கள்ளுக்கடைக்குச் சென்றுவரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திண்ணையில முடங்கியே கிடக்கிறார். பொழுது விடிந்ததிலிருந்து அன்று நாகு ஊளையிடுகிறான். இந்த ஊளையொலி புதிதல்ல. பழக்கமான இசைதான். ஆனால் வாழ்க்கை இப்போது சுருதி குலைந்து கிடப்பதால் இது நாராசமாக இருக்கிறது.

“அந்தப்பய மென்னியத் திருகிக் காவாயில போடு! என்னாத்துக்குடி எளவு இப்படி ஊளயிடுறா? இந்தப் பயலுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது.”

வாசலில் கோலம் போட்டுவிட்டு வரும் அம்சுவை அழைத்து லட்சுமி இரகசியமாக, “போயி நாலு இட்டிலி வாங்கிட்டு வா. நேத்து முச்சூடும் எதுவும் சாப்பிடல அவெ. பசிக்கிதோ என்னமோ?…” என்று கூறுவதும் சம்முகத்துக்குக் கேட்டுவிடுகிறது.

“ஏய், எங்கடி போற? இவளயும் காலங்காத்தால கடவீதிக்குப் போகச் சொல்லு! பல்ல இளிச்சிட்டு எவங் கூடயேனும் போவா? மானம் அச்சம் மரியாதி ஆத்தாளுக்கிருந்தால்ல மவளுக்கு இருக்கும்? ஒரு ஒச்சம் வந்து ஊரே சிரிக்கிது; தலைநீட்ட முடியல. புழுக்கப் பயலுவல்லாம் நாக்கப் பல்ல இடுக்கிட்டுச் சிரிக்கிறான். அறிவு இருக்குதா உங்களுக்கு?”

லட்சுமிக்கு ஆத்திரம் தாளவில்லை.

சாணியை அள்ளிக் கூடையில் போட்டு மூலையில் கொட்டுகிறாள். பரட்டுப் பரட்டென்று முற்றத்தைப் பெருக்குகிறாள்.

சம்முகத்துக்கும் எழுச்சி அடங்கவில்லை. அவருடைய ஆற்றாமைக்கு ஒரே இலக்காக இருப்பவள் லட்சுமிதான். முடி சிலும்பலில்லாத கூந்தல் கட்டு, எப்போதும் கலையாத பளிச்சென்ற பொட்டு, பெரிய அந்தஸ்தைக் காட்டும்வகையில் சீராகக் கொசுவம் வைத்து உடுத்த சேலைக்கட்டு, பதிந்த ரவிக்கை, கட்டுவிடாத உடல் எல்லாம்.அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளின் மூலைமுடுக்குகளை எல்லாம் குடையும் வண்ணம் கோபமூட்டுகின்றன.

அறைக் கதவு திறக்கப்படாததால் நாகு கதவைப் போட்டு தட்டுகிறான்.

இவர் எழுந்துசென்று கதவைத் திறக்கிறார். அவன் சமையலடுக்கின் கீழ் சென்று உட்கார்ந்து கொள்கிறான்.

சற்றைக்கெல்லாம், வாயில் பல் குச்சியுடன் ஆற்றுக்கரை மேட்டில் நிற்கையில் நாகுவின் ஊளையொலி மீண்டும் கேட்கிறது.

நடுவீட்டில் வந்து அவன் அசுத்தம் செய்திருக்கிறான். லட்சுமி அவனை இழுத்து வருவதும் அவன் ஊளையிடுவதுமாக ஒரு அரங்கம் விரிந்திருக்கிறது.

சம்முகம் புளிய மரத்திலிருந்து ஒரு நீண்ட பிரம்பை ஒடித்து வருகிறார். பளார் பளாரென்று முதுகிலும் காலிலும் பேய் பிடித்தாற்போல் வீறுகிறார்.

நாகு ஐயோ ஐயோ என்று பயங்கரமாக ஊளையிட, லட்சுமி கத்த, தெருவில் கூட்டம் கூடிவிடுகிறது.

“பாவம், அந்தப் பயலுக்கு அமாசி வேந்திடிச்சின்னா இப்பிடியாவுது…!” என்று சொல்லிக் கொண்டு போகின்றனர்.

“உங்களுக்கு என்ன இன்னிக்குப் பேயி புடிச்சிருக்கா…”

இரத்தம் கசியும் பையனின் காலைப் பார்த்து முதுகைப் பார்த்துக் கண்ணீர் தளும்ப விம்முகிறாள் லட்சுமி.

“அம்மா… அம்மா… அம்மா…”

வார்த்தை குழம்பும் அந்தக் குழந்தையைக் கண்களைத் துடைத்துச் சமாதானம் செய்து ஓரமாக அழைத்துச் செல்கிறாள்.

“காபி… காபிம்மா கா…”

“காபிதான? வச்சித்தாரேன். நீ ஏன் அழுவுற? நீ கத்தினதாலதான அப்பா அடிச்சாரு?…”

சம்முகம் புளியம் விளாறை மேட்டிலிருந்து ஆற்றில் வீசி எறிகிறார். மனசில் ஒட்டிக் கொண்ட சாணியை வீசி எறிந்து கழுவ வேண்டும் போல் ஓர் அருவருப்பு தோன்றுகிறது.

அக்கரை எல்லாம் பச்சைப் பாயலாகக் கண்களில் அமுதத்தைத் தடவுகிறது. புரட்டாசிச் சூரியன் தகத்தகாயமாக அந்தப் பச்சையின் மூலகாரணம் நானே என்று விரியக் கதிர்களைப் பரப்புகிறான்.

இந்த மனிதர்களெல்லாம் அற்பம் என்று சொல்லுகிறானோ? தனது ஏலாமை விசுவரூபமாக முட்ட, அழவேண்டும் போலிருக்கிறது. லட்சுமி… அவளை அமுதமென அணைத்துச் சுகித்திருக்கிறார்.

அவர்களை அறியாமைச் சேற்றிலிருந்து கை தூக்கிவிட… உயிரைப் புல்லாக மதித்து அங்கே வந்த தலைவர்களை, வேட்டை நாய்களைப் போல் போலீசார் துரத்திப் பிடிக்க அலைந்த போது, அவர்களுக்காக இவன் காவலாய் நின்ற போது, ஊழியம் செய்த போது, இடையில் இவள் எத்துணை சக்தியூட்டுபவளாக இருந்தாள்?

நாட்டாண்மைக்காரரின் மகளாக, நெஞ்சில் ஆசையைச் சுமந்த காதலியாக இருந்து, எந்த நேரத்திலும் புகலிடம் தேடி வந்தவருக்குத் தம்மால் சோறும் நீருமளிக்க முடியும் என்ற துணிவையும் நம்பிக்கையையும் அளித்திருந்தாள்.

அந்தக் குடிசையில் ராஜன் என்ற கல்லூரி மாணவன் தங்கியிருந்திருக்கிறான். கொள்கைப் பாடங்கள் புகட்டுவதில் மன்னன். அநேகமாகச் சம்முகத்துக்குச் சம வயசுக்காரனாக இருப்பான். இல்லையேல் ஒன்றிரண்டு கூட இருந்திருக்கும். பால் வடியும் முகம். அந்தக் குடிசைக்குள் ஒரு மாதம் போல் தலைமறைவாக இருந்தான். நாளெல்லாம் படிப்பான்; எழுதுவான். சம்முகம் அவ்வப்போது வெளிச்செய்தி கொண்டுவருவான். எழுதியதை எடுத்துக்கொண்டு செல்வான்; இரவு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வான். நாட்டாண்மையின் மகள் லட்சுமி அப்போதெல்லாம் சோறு கொண்டுவந்து போடும்போது ராஜனுடன் சிரித்துப் பேசுவதைக் காண்பான். இவன் வெளியேயிருந்து வந்து போகும் ஆள். அவனோ தலைவர் என்ற ஆழ்ந்த மதிப்புக்குரியவன். அப்போதெல்லாம் கபடமாகவோ, சந்தேகத்துக்குரியதாகவோ ஓரிழை கூடச் சிலும்பல் தெரிந்ததில்லை.

பெரிய பண்ணையின் செல்வாக்கை ஒடுக்கவே சின்னப்பண்ணை சுந்தரமூர்த்தி இந்தப் புரட்சிக்காரரை ஆதரித்தார். லட்சுமியின் அப்பன் பெரிய பண்ணையின் கீழிருந்த ஆள். ஆனாலும் உள்ளூற இவர்கள் பக்கமிருந்து வெளிப்படையாக விரோதித்துக் கொள்ளாமல் அஞ்சிக் கொண்டிருந்தான்.

“எலே சம்முவம்? வெதக் கோட்டயில எலி இருக்குதாம். தீவட்டிக்காரன் புகை போட வாரானாம்!”
இந்தச் செய்தியை லட்சுமிதான் கொண்டு சென்றாள். தப்பிச்சென்ற அவனை மறைவானபடியே கடத்திக்கொண்டு வாய்க்கால் மதகடியில் படுக்கவைத்ததும், காவல்துறையினர் மேலே சென்றதும் இப்போதுபோல் சம்முகத்துக்கு நினைவுக்கு வருகிறது.

அன்றிரவு அந்தச் சேரி முழுவதும் போலீசு புகுந்து வேட்டையாடி இருந்தது. லட்சுமியின் உடல் முழுவதும் அலங்கோலங்கள்.

ஒருநாள் ஒரு பகல் சென்ற பின்னரே, அவன் செய்தி அறிந்து பதுங்கி வந்து பார்த்தான். விம்மி வெடிக்க அழுத அவளை முதலாவதாகத் தீண்டி அணைத்து ஆறுதல் கூறியது அப்போதுதான்.

மறைந்தும் மறையாமலும் சாடையாகவும் சைகையாகவும் நெஞ்சங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அந்தக் குதறப்பட்ட வேளையில்தான் பகிரங்கமாக ஒருவருக்கொருவர் என்று தாங்கி நின்றனர்.

இதைத் தொடர்ந்து சம்முகம் போலீசின் கண்களில் மண் தூவ, ஓடி ஒளிய வேண்டியதாயிற்று. சுந்தரமூர்த்தியின் மைத்துனரின் வீட்டில் கடலூரில் சென்று தோட்ட வேலைக்காரனாக இருந்தான். ஆறு மாசம் கழித்து நாகப்பட்டணம் கோர்ட்டில் அவர் சொன்னபடியே ஆஜராகி, பின்னர் அவர் முயற்சியிலேயே ஜாமீனில் வெளியே வந்தான். ஊரே சூனியமாகி இருந்தது. லட்சுமியின் அப்பன் இறந்து போயிருந்தார். அம்மாளுடன் மாமன் ஊரான பாங்கலுக்குச் சென்றதாகச் சொன்னார்கள். அப்போதெல்லாம் இப்படிப் பஸ்ஸா இருந்தது? நடை… எங்கேனும் ஒளிந்து போக வண்டி கிடைத்தால் உண்டு. ஒரு முன்னிரவில் அவன் சென்று கதவைத் தட்டினான். குளிர்காலம். திண்ணையில் யாரோ பெரியவர் படுத்திருந்தார்.

“ஆரது?”

“நாந்தா கிளியந்துற…”

குரல் சட்டென்று காட்டிக் கொடுத்து விட்டது.

“லட்சுமி…!” விளக்கை எடுத்து வந்து அவன்முன் காட்டினாள் தாய்.

“நீ… உசிரோடு இருக்கியா தம்பி?… சாமி முனிஸ்வரனே?…” என்று கரைந்தாள்.

லட்சுமி… லட்சுமி… அந்த விளக்கொளியில் சிலைபோல் நின்றிருந்த கோலம் அவனுக்கு மறக்கேவேயில்லை.

நெற்றியில் குங்குமமும் – திருநீறும், விம்மிய மார்பும் முன் தள்ளிய வயிறும், செம்மை வெளுத்த நிறமும்… ஷ்…

குப்பென்று ஒர் உஷ்ணம் பாய்ந்து உலுக்கினாற் போல் இருந்தது.

தாய் உள்ளே உட்கார்த்தி வைத்து சோறு போட்டாள்.

எங்கோ அக்கம் பக்கமிருந்து சோறு வாங்கித்தான் வந்திருந்தாள். அந்த நேரத்தில் லட்சுமி அவனிடம் சொன்ன சொற்கள்…

“இங்க… எல்லாரும்… நீங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. நான் உங்ககிட்ட புனிதம்னு வேசம்போட இஸ்டப்படல. போலீசுக்காரப் பாவி அநியாயம் பண்ணிட்டான். எதுனாலும் தின்னு கரச்சிடலாம்னு அம்மா சொல்லிச்சு. கலியாணம் ஆகுமுன்ன வாணான்டின்னு. நா உங்கள ஒருக்க உசிரோட பாத்துச் சொல்லிட்டு, ஆறு குளம் எதிலன்னாலும்…” அவள் மேலே பேச விடாதபடி வாயைப் பொத்தினான்.

“போவட்டும். எல்லாரும் நினைக்கிறாப்பல அது எம்புள்ளயாவே இருக்கட்டும். நீ இல்லேன்னா எனக்கு ஒண்ணுமேயில்ல… ஆறு குளமெல்லாம் பேசாத, லட்சுமி!” என்றான்.

உடனே சுந்தரமூர்த்தி முன்னிலையில் தான் அவர்கள் கல்யாணம் நடந்தது. விசுவநாதனும் கூடக் கல்யாணத்துக்கு வாழ்த்துக் கூறினார். பிறகு தான் அவர் சிறைக்குச் சென்றதும் கூட.

வழக்கு, கோர்ட்டு, சிறை என்று கல்யாணம் செய்த சில ஆண்டுகள் எப்படியோ கழிந்தன. குழந்தை பிறந்து ஒரு வயசு வரையிலும் எதையும் நுட்பமாக அவர்கள் கவனிக்கவில்லை. மரத்தடியில் ஏணையில் போட்டுவிட்டு இவர்கள் வேலைக்குப் போவார்கள். பசித்தழும் போது, மற்ற குழந்தைகள் குட்டைத் தண்ணீரையோ காவாய்த் தண்ணீரையோ கூட ஊற்றுவார்கள். கோபால் பிறந்து அவன் பேச, நடக்க ஆரம்பித்த பின்னரும், இதற்குப் பேச்சு வரவில்லை. எல்லாம் குழம்பிற்று. காற்று கருப்பு சேட்டை என்று பெண்கள் அப்போது ஊர்க்கட்டை மீறி எங்கோ சென்று பூசாரி வைத்தியம் செய்தார்கள். பயனில்லை. பையனின் வளர்ச்சியும் ஏடாகூடமாக இருந்தது. காந்தியும் அம்சுவும் பிறந்த பின் இரண்டு தடவைகள் கருவுற்றாள். இரண்டும் நிற்கவில்லை. அப்போதுதான் சின்னப்பண்ணை வீட்டு அம்மாள் சொல்லி, அவள் புதுக்குடி ஆஸ்பத்திரிக்குச் சென்று பிள்ளை வேண்டாம் என்று சிகிச்சை செய்து கொண்டாள். அந்தச் சமயத்தில்தான் கிழவி இவனைப் புதுக்குடி ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டினாள். குணமாகச் சிகிச்சை சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போது சில நாட்களாக, இந்தப் பயல் போலீசுக்காரனின் அசுரவித்தா, அல்லது… சிறைக்குச் சென்று மஞ்சட் காமாலை நோய் வந்து செத்தானே, அந்தத் தலைவனா என்று சந்தேகம் வந்திருக்கிறது. இவள் ஏன் கருவைக் கலைக்கவில்லை என்று தோன்றுகிறது. இவள் ஏன் அந்தப் பயலைச் சோறுட்டிப் பாதுகாக்கிறாள் என்று எரிச்சல் வருகிறது. சோறு தின்பதற்கும் குளிப்பதற்கும் சில நாட்கள், ஊரைக் கூட்டுகிறான். காந்தியிடம் அவனுக்குப் பயம் உண்டு.

காந்தி சென்ற பிறகு, இங்கே எல்லாம் குலைந்து போயிற்று.

லட்சுமி விரும்பி துரோகம் செய்திருக்கிறாளா?…

இந்த எரிச்சலைத் தாள முடியவில்லை. ஆற்றில் மடமடவென்றிறங்கிக் குளிக்கிறார். உடம்பைத் தேய்த்துத் தேய்த்து ஓடும் நீரில் மூழ்கிக் குளிக்கிறார்.

அவர் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேர்ந்தும் லட்சுமியின் மீது இப்படிச் சந்தேகம் இதுவரையிலும் தோன்றியதில்லை.

எண்ணங்கள் முறுக்குப் பிரிந்த வடத்தின் முனைகளாய் எப்படி நினைவுகளை நெருடுகின்றன!

கொள்கை வீரர்கள், உயிரைப் புல்லாக நினைத்தவர்கள், மேல்மட்டத்து உயர்மதிப்புக்குரியவர்கள், பலரை அவர் தொண்டன் என்ற முறையில் நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறார். எவரும் மாமுனிவர் இல்லை.

ஐயர், முதலியார், நாயுடு எல்லோரும் மனிதர்களே; பலவீனங்கள் இல்லாத மனிதர் யாருமில்லை. தாழ்ந்த சாதிக்காரன் மட்டுமே நெறிகாக்கும் விஷயத்தில் பலவீனப்பட்டவன் என்பதில்லை…

எனவே லட்சுமி… அந்தப் பயல்…

“மொதலாளி…?

கரையில் வடிவு தோளில் மண்வெட்டியுடன் நிற்கிறான்.

நீருக்குள்ளிருந்து தலைநீட்டி வாயைக் காறிக் கொப்புளித்த பின் அவனைத் திரும்பிப் பார்க்கிறார். வடிவு தவறை உணர்ந்தாற் போன்று புன்னகை செய்கிறான்.

“என்ன மாமா, ஐயமாரப் போல காலங்காத்தால குளிக்க எறங்கிட்டிய?”

“சும்மாதா, நின்னே; பல்லு விளக்கிட்டு குளிக்கலாம் போல இருந்திச்சி, களையெடுக்க ஆளனுப்பிச்சிட்டியா?”

“ஐயா கூட்டிப் போயிருக்காரு. நா மேச்சாரிப் பங்கு மடை பாத்திட்டு வார. வூட்ட… அந்தப்பய வந்திருக்கிறா, மாமா…”

அவன் தயங்கித் தலையைச் சொறிகிறான்.

“யாரு…?”

“நீங்க வாங்க, சொல்றேன்…”

சம்முகம் கோவணத்துடன் படியேறி வேட்டியைக் கசக்கிப் பிழிகிறார்.

ஈர உடல் மறைய விரித்துப் பிடித்துக் கொண்டு வருகிறார்.

“ஐயனாரு கொளத்துலேந்து அவெ வந்திருக்கிறான்…”

“யாரு, சோலையா? பஞ்சமி புருசனா?”

“ஆமா. ஆயி செத்துப் போச்சி. வூட்ட கஞ்சிகாச்ச நாதியில்ல. தம்பிகாரன் மாமியா வூட்டோட போயிச் சேந்திட்டா. அப்ப என்னியோ அல்லாம் சொன்னானுவ. தெரியாம செஞ்சிட்டேன்னு கூட்டிட்டுப் போவ வந்து நிக்கிறா…”

“இப்ப புள்ள அவனிதுதாமா…?”

வடிவுக்குக் கடைக் கோடியில் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

“நீங்க வந்து சொல்லுங்க மாமா…”

வீட்டினுள் சத்தத்தையே காணவில்லை. வேறு வேட்டி உடுத்து மேலே துண்டைப் போர்த்துக்கொண்டு நெற்றியில் துளி திருநீற்றைப் பூசியவராக வடிவுடன் நடக்கிறார். இப்போது குடிசைகள் அக்கரையில் இருக்கின்றன.

எல்லாம் வேரூன்றும் ஆதாரம் இல்லாத வெற்றுக் கூரையும் கீற்றுத் தடுப்புக்களுமாக இருக்கின்றன. இவனுடைய வீட்டின் வாயிலில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சோலை பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருப்பது கண்களில் படுகிறது.

முடியில் நிறைய எண்ணெய் அப்பிக் கொண்டு சிகப்புச் சட்டை போட்டிருக்கிறான்!

எட்ட இருந்து பார்க்கும் இந்தக் காட்சி, சம்முகத்துக்கு நெஞ்சில் அடிப்பது போலிருக்கிறது. ஒரு பெண்ணை உயர்த்துகிற தாய்மைக்கு மதிப்புக் கொடுப்பது அந்தப் பிள்ளையை மனிதப்பிள்ளை என்று நினைப்பது தானோ?

இவர்களைக் கண்டதும் அவன் அவசர அவசரமாக எழுந்திருக்கிறான்.

“வணக்கமுங்க…”

“உக்காந்துக்க, நீயும்.”

“இருக்கட்டும்; நீங்க உக்காருங்க…”

“சுடுகாட்டுக்கு வழி வேணும்னு கோரிக்கை வச்சிருக்கு. போரிங்குழாய் போடறதுக்கும் நெருக்கிட்டிருக்கிறோம். இந்தக் கோடைக்குக் கஷ்டம் இருக்காது.”

“தோப்போட பாதையையே குறுக்கா கொண்டாந்து ரோட்டில சேத்திடலான்னு முன்னியே வந்து பாத்து எல்லாம் எழுதிட்டுப் போயிருக்காரு, கணக்கப்பிள்ளை. டேப்பெல்லாம் வச்சி அளந்தாவ. அதுக்குள்ள செட்டியாரு நெலத்த வித்துப் போட்டாரு. எல்லாக் கோளாறும் வந்திரிச்சி…”

“நெருக்கிட்டே இருப்போம். இப்பு என்ன, பெஞ்சாதிய கூட்டிப் போகவா வந்திருக்கிற?”

அவன் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“என்னமோ அன்னிக்குப் பொல்லாத நேரம்… என்னமோ நடந்துபோச்சி. இப்ப, அது வந்தா கூட்டிட்டுப் போவலான்னு. புருசன் பொஞ்சாதின்னு ஒரு கட்டுக்குள்ள ஆன பெறகு… படலக்கி அந்தால பூசிணிக்கா வுளுந்தாக்கூட எடுத்துக்கிறம். புள்ள, பொஞ்சாதிய வெலக்கி வுடுறது செரியில்லன்னு தோணிச்சி…”

குழந்தையை அவன் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறான். அது சிவப்பு சட்டையின் பித்தானைப்பற்றி இழுக்கிறது. துருதுருவென்று கைகளையும் கால்களையும் அசைக்கிறது.

“…சும்மாருடா… பயலே…” என்று கொஞ்சிக் கடிகிறான்.

“பஞ்சமி! இங்க வா பொண்ணு!”

சம்முகத்தின் குரலுக்காகவே காத்திருந்தாற் போல் அவள் குடில் வாயிலில் வந்து நிற்கிறாள்.

“என்ன சொல்லுற!… உனக்கு விருப்பம் எப்படி இருக்கு?”

“இங்க ஏன் கெடக்கணும்?… அது சொன்னாப்பல அப்ப ஆரு பேச்சயோ கேட்டுட்டுப் பேசிடிச்சி. ஊருல கண்டதும் பேசுறாங்க…”

“அப்ப உனக்குப் புருசன் மேல கோவமில்ல?…”

சம்முகத்துக்குச் சிரிப்பு வருகிறது. ஆனால் அவள் சிரிக்கவில்லை.

“ஏன் கோவம்? யாருமேல எப்பிடிக் கோபிச்சுக்கிறதுங்க? மண்ணுல சாணியயுங் கொட்டுறோம். தழயுந்தா அழுவப் போடுறம். அதுலியே நின்னுட்டு எச்சியும் துப்பிட்டுத்தா நாத்து நடுறம் சேத்துல பொறக்கிறவங்க என்னாத்தக் கோவப்படுறதுங்க, சொல்லுங்க?”

சம்முகம் சிலையாகிப்போகிறார். பஞ்சமி, அவருக்குத் தெரிந்து இடுப்பில் துணியைச் சுற்றிக்கொண்டு பெயருக்கு மாறாப்புப் போட்டுக்கொண்டு நாற்று நட இறங்கிய சிறுமி…

அந்தக் காலத்தில் பெண்கள் நடவுக்கு இறங்கினால் நிமிர முடியாது. ஒரு பெண்ணின் இயல்பான ஆசாபாசங்கள், வேட்கைகள், உந்துதல்கள் எல்லாமே அந்த மண்ணோடுதான். மார்பில் பால்கட்டும். நீர்முட்டிக் காலோடு வழியும். நாவின் வறட்சியை, பசி தாகம் போன்ற வேட்கைகளை மாற்ற வெற்றிலைச் சருகை நிமிர்ந்து வாயில் அடக்க இயலாது. அப்போது… அவருடைய தாய், “டேய், யார்ரா…!’ என்று பயங்கரமாக ஒரு நாள் கத்தினாளாம். “நான் காளியாயி, நான் காளியாயிடா. போடுங்கடா பூசை!…” என்று வெடித்து வந்ததாம் குரல்.

மணிகாரன் பயந்து போனானாம். சாமி வந்திடிச்சு தங்கம்மாளுக்கு என்று நடுங்கி, “தாயே, என்ன வேணும் சொல்லு…” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டானாம்!

ஆனால் இந்தத் தந்திரத்தை எப்போதும் கையாள முடியுமா? குட்டு வெளிப்பட்டு விட்டால்…! மண்ணின் புதல்விகள் மண்ணைப் போல் எல்லாரும் பொறுக்கிறார்கள்…

சோலை வாங்கி வந்தான் போல இருக்கிறது. முறுக்கும் வாழைப்பழமும் வருகின்றன. குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.

அரையில் ஒரு செப்புக்காசு சேர்த்து சிவப்புக் கயிறு கட்டியிருக்கிறான். அகன்ற கண்களில் மை, நெற்றி முழுதும் அப்பிக் கொண்ட மைப்பொட்டு.

குழந்தை… பரங்கி பூசணியையே பாக்குறதில்ல… இது மனிதக் குழந்தை. யாரோ சொந்தம் கொண்டாடி யார் வீடுகளிலோ பொன்னும் மணியும் பாலும் நெய்யுமாக வளமை செழிக்க யார் வீட்டுச் சேர்களுக்கோ போய்ச் சேர பசியும் பட்டினியுமாக உதிரம் கொடுத்தார்கள். அப்போது அந்த மண்ணை வெறுத்தார்களா? இன்றும் உச்சவரம்பும் உரிமைச் சட்டமும் கண்துடைப்புக்களாக விளங்கும் போதும் மண்ணை வெறுத்துவிட முடியுமா?

குழந்தையை முத்தமிட்டுக்கொண்டு ஒரு முறுக்குத் துண்டை விண்டு கொடுக்கிறார். மனம் லேசாக இருக்கிறது.

அத்தியாயம்-18

காருக்குள் அமர்ந்திருப்பவர் யாரென்று இனம் கண்டுகொள்ள முடியாது. கறுப்பு அடித்த கண்ணாடி; பின்னால் பட்டுத்திரை.

“இன்னிக்கு நாம திருவாரூர் போலாமா காந்தி? புதுப்படம் வந்திருக்கு…”

அவனை அப்படியே கழுத்தைப் பிடித்துவிடவேண்டும் போல் இருக்கிறது. கபடமறியாது, உலகை எட்டி அளக்கக் கால்வைக்கத் துடித்த அன்றைய காந்தி இல்லை. ஆழந்தெரியாத சகதியில் முட்புதரில் சிக்கிக் கொண்டிருக்கும் மலர் அவள். வடிவு பாம்புக்கு அஞ்சாமல் முள்ளுக்கும் கூசாமல் தாழைக்குலை கொண்டு வருவான். உடையார் வீட்டில் சரோஜாவுக்கு அந்தப் பூவில் உயிர். என்ன வாசம் பாரு! பீரோத்துணில வச்சா அப்பிடியே புதிசா இருக்கும் என்று போற்றிப் போற்றி வைப்பாள்.

வரப்பில் நடக்கும்போது சேற்றில் விழக் கால் தடுமாறி விட்டால், பிறகு குளித்துக் கரையேறிவிடலாம்.

இந்தச் சேற்றிலிருந்து கரையேறுவது எப்படி?

நறுமண சோப்பு, பவுடர், பூ, பொட்டு, நல்ல சேலை, எந்த நீரினாலும் போக்கமுடியாத சேறு…

“சின்னம்மா வராங்களா?…”

“சின்னம்மாவுக்கு இப்ப வார புதுப்படம் எதுவும் புடிக்கலியாம்…”

கண்களைச் சிமிட்டுகிறான் சாலி, கோகிலத்தைப் பார்த்துக் கொண்டே. இந்தக் கிராமத்திலிருந்து அவள் ஓடிச் செல்வதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை. சிறிது நேரம் வாசலில் போய் நின்றால்கூட பலருடைய கண்கள் தன்மீது பதிவது போலிருக்கிறது. ஆனால் இவ்வாறு வெளியே சென்றால் தப்புவதற்கு ஏதேனும் வழியிருக்காதா?

அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மிகவும் கிலி பிடித்துப் போயிருக்கிறாள். உள்ளூற இடிந்து விழுந்து அழுந்திவிட்ட நம்பிக்கையின் இடிபாடுகளின் ஒரு சிதிலத்தைப் பற்றிக் கொண்டுதான் அவள் இச்சேற்றிலிருந்து மீளும் வழியை யோசிக்கிறாள்.

இவள் மருண்டு போயிருப்பதைக் கண்டுகொண்ட சாலியும் களிப்பிக்கும் வகையில் அவ்வப்போது வந்து கல்லூரியில் சேருவது குறித்துப் பேசி உற்சாக மூட்டுகிறான். பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் நுழைமுகக் கல்லூரிப் பரீட்சைக்கான காகிதங்களை அவளிடம் வந்து காட்டி அவள் எந்தப் பாடம் எடுத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தான்.

வெகுநாட்கள் கழித்து இப்போது சினிமாவுக்கு அழைக்கிறான்.

“எங்க தங்குறோம் ராவுக்கு?”

“நான் உன்னைவிட்டே போக மாட்டேன். ஏன் பயப்படுற கண்ணு…”

அவனுடைய ஒவ்வொரு பேச்சிலும் கவடம் நெளிந்து அருவருப்பாய் வெறுப்பூட்டுகிறது. தன் மனைவியை விலைப் பொருளாக்குவதை விட வேறு ஒரு கேவலம் இருக்கமுடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

“அங்க எங்க ஃபிரண்ட் ஒரு புரொபசர் இருக்காரு. அவர உனக்கு ட்யூசனுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிடலான்னு யோசனை சொல்றாரு, அப்பா. ஏன் காந்தி?”

“ம். செய்யுங்க…”

“வா, அப்ப இன்னிக்கு சினிமா பார்த்துட்டுத் தங்கிக் காலம அவரப் பாத்து ஏற்பாடு செஞ்சுட்டு வரலாமில்ல?”

காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அட அசட்டுப் பெண்னே? இந்தக் கார் சவாரி, உயர்ந்த சேலை, அது இதெல்லாவற்றுக்கும் விலை உண்டு. இப்போ தெல்லாம் விலை போடப்படாத எந்தச் சரக்கும், எந்த இயக்கமும் உலகில் இல்லை.

ஒரு பெண்ணை, அவளது மென்மையான இயல்பில் பூக்கும் உணர்வுகளை எப்படிக் கபடத்துடன் கனிய வைத்து அதைக்கொண்டே அவளை வீழ்த்துகிறார்கள். இந்தக் கயவர்கள்!

கோகிலத்தின்பால் அவளுடைய நெஞ்சம் ஒட்டிக்கொள்கிறது. அவள் தேவதாசி மரபில் வந்தவள். இந்தச் சமுதாயம் இப்படி ஒரு மரபை அனுமதித்திருக்கிறது.

அவளுடைய கபடமற்ற அறியாமையில் பயங்கரமான இத்தகையதோர் அனுபவம் வெடித்துத் துளைத்தபின்னர் அந்தப் பொத்தல் வழியாக பல இருண்ட பகுதிகளைத் துலாம் பாரமாகப் பார்க்கமுடிகிறது.

பெண்… பெண்ணை இவ்வாறு பந்தாடுவதற்கே அவள் தன் நாவைப் பறித்து வைத்திருக்கிறார்களோ?

தனது தாயையும், பைத்தியக்கார நாகுவைப் பற்றியும் அவள் இந்நாள் வரை தீவிரமாகச் சிந்தித்ததில்லை.

தாயை போலீசுக்காரன் கற்பழித்து விட்டான் என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவள் அறிந்தாள். விலைவாசிப் போராட்டம் என்று குப்பன் சாம்பாரின் பெண் சாதி மாரியம்மாவும் கிட்டம்மாளும் போனார்கள். ஆனால் அம்மா போகவில்லை. அப்போது அப்பாவிடம் அது பற்றிப் பேசும்போது பாட்டி “ஒருக்க சூடுபட்டு, அவ சென்மம் மிச்சூடும் அனுபவிக்கிறது. பெரிய போராட்டந்தா. ஊரு நாயிங்களுக்கு என்ன தெரியும்?…” என்று பேசினாள். “துரோபத சீலயப் புடிச்சிழுத்தப்ப அவ தேவியா இருந்தா. இந்தக் கலியுகத்துல எந்தச் சாமி வருது? சாமியுந்தா கண்ணளிஞ்சி போயி இவளுக்கு இந்தத் தண்டனையைக் குடுத்திச்சி. காலங்காத்தால அந்தப் பய குரலெடுத்துக் கத்தையில, வயித்தச் சங்கட்டம் பண்ணுது…” என்று கத்தினாள். ஆனால் அப்போது “சீ இதெல்லாம் கூட்டிச் சொல்ற பேச்சு!” என்று இழிவாகவே தோன்றியது. இப்போதெல்லாம் அம்மாவின் முகம் அவள் நெஞ்சில் தோன்றும் போது சொல்லமுடியாத வேதனை தோன்றுகிறது.

ஐயா அவளை மணந்து, குடும்பம் என்ற பேராதரவு கொடுத்தது…

நெஞ்சு வெடிக்க அவர் காலடியில் வீழ்ந்து, “அப்பா நான் தெரியாம செஞ்சிட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று புலம்பத் தோன்றுகிறது.

அந்த வீடு, அம்சு காலையில் வீதி தெளிப்பது, வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களிடையே உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் பொருள் பொதிந்ததோர் அவசியமான வாழ்வுக்காக விரிகிறது.

ஆனால், அவளால் இந்த அழிவிலிருந்து எப்படிப் போகமுடியும்?

விபசாரத் தடைச்சட்டம் என்றால் என்ன?

பெண் ஒருமுறை கற்பழிக்கப்பட்டதும் கறைபட்டு, அதே வாழ்க்கைக் குழியில் தள்ளப்பட்டு விடுகிறாள். பலமுறைகள் தனியாக இருக்கும்போது, கோகிலத்திடம் இதைப்பற்றிக் கேட்க நினைத்தாள். ஆனால், அவள் பேசுவதில்லை. சொல்லப்போனால் காந்தி, சினிமா மற்றும் கதைப்புத்தகங்கள், சாப்பாடு, உடை என்று சாலி அனுபவிக்கச் சிறைப்பட்டிருப்பது போல்தான் இருந்திருக்கிறாள். வேலைக்காரப் பெண், அல்லது பண்ணை ஆளும் கூட அவளிடம் பேசமுடியாத காவலாக அவள் இருந்திருக்கிறாள்.

ஒவ்வொரு சமயங்களில், அந்தத் தடை சட்டம் எதுவாக இருந்தாலும் ஏதேனும் காவல் நிலையத்தில் போய் இவர்கள் அக்கிரமங்களைச் சொல்லி, அல்லது எழுதிப்போட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் காகிதமும் கவரும் ஒருநாள் கேட்டதும் கோகிலம், “பாபுவை விட்டுக் கொண்டிட்டு வரச் சொல்றேன்…” என்றாள்.

அவன், “பேப்பர் பேனா கேட்டியாமே? யாருக்கு, லட்டர் எழுதணும்?” என்றான். பேப்பர் பென்சில் வரவில்லை. அவளுடைய கைப்பையில் சர்ட்டிபிகேட், வகையறாதான் இருந்தது. எழுதினால் அவர்களுக்குத் தெரியாமல் அனுப்ப முடியாதே?

திருவாரூர் வந்துவிட்டது புலப்படுகிறது. ஒரு பெரிய ஓட்டலின் முன் வண்டியை நிறுத்துகிறான் சாலி.

மணி ஏழு என்பதைக் கடியாரம் காட்டுகிறது.

மாலை ஆட்டம் சினிமா துவங்கி இருப்பார்கள். ஏழு மணிக்கு இங்கு வருவதன் காரணம். யாருக்கு விலை பேசவோ?

அவளுடைய தற்காப்பு உணர்வு, சக்திகளனைத்தையும் திரட்டிக்கொள்ள ஆயத்தமாகிறது.

கல்லாப்பெட்டியில் இருக்கும் தங்கச் சங்கிலி, குங்குமப் பொட்டணிந்த சிவந்த முதலாளி சாலிக்குப் புன்னகையுடன் வணக்கம் சொல்கிறான். “ரூமா” என்று கேட்பது போல் முகம் காட்டி, சற்று நேரத்தில் ஒரு சாவியை எடுத்துக் கொடுக்கிறான்.

அப்போது அந்தச் சில நிமிடங்களில், காந்தி வெளியே பார்த்து நிற்கையில், சற்று எட்டி ஒரு ஆசனத்திலிருந்து மாலை தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று அவள் மீது படிகிறது. அவளும் பார்த்துவிடுகிறாள்.

“நீயா..?”

தேவு, “நா… நான்தான்… தேவு. நான்தான்!”

இவள் அவனைப் பார்த்து தன் மன உணர்வுகளனைத்தையும் கொட்டிவிடும் பாவனையில் நிற்கிறாள்.

“…வா… வா காந்தி!…” சாலி மாடிப்படியில் நின்றழைக்கிறான். ஓட்டலின் கலகலப்பான கூட்டத்தில் அவளும் கலந்து துளியாகிவிட வேண்டும்போல் இருக்கிறது.

தேவு… தேவுக்குத் தெரிந்திருக்குமோ?

அவனுடன் அதிகமான பழக்கம்அவளுக்குக் கிடையாது. அவள் தந்தையிடம் ‘தலைவர்’ என்று வந்து நின்று குழையும் விவசாயத் தொழிலாளி அல்ல அவன். அன்று பஸ்ஸில் போகும்போது அவன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை.

தேவு…?

அவன் எப்படிப்பட்டவனோ?

அறைக் கதவைப் பையன் திறந்துவிடப் படியில் தாவி ஓடுகிறான்.

இவள் கால்கள் பின்னலிட அங்கேயே நிற்கிறாள்.

“…என்ன? வா, மேல…?”

அதட்டினாற்போல் அருகில் வந்து சாலி அவளை அழைத்துப் போகிறான்.

“நா வரமாட்டேன். என்ன…”

அவள் கத்த நினைக்கிறாள். குரல் எழும்பவில்லை. பயம் தொண்டையைப் பிடிக்கிறது.

“என்ன திகச்சிப்போயி அங்கேயே நின்னிட்டே?…”

“எங்கூருக்காரரு” என்ற சொல் வாயில் வந்துவிட்டது. அவசரமாக விழுங்கிக் கொள்கிறாள்.

“ஒண்ணில்ல. அவரு கையில பேப்பரில ரஜினி ஆக்ட் பண்ணின சினிமா போல படம் இருந்திச்சி. பாத்தேன்…”

“இன்னிக்கு ரஜினி படம் போகணுமா, கமலஹாசன் படம் போகணுமா?”

“இரண்டு பேருமே இல்லாத படம் ஒண்ணுகூட இல்லியா?”

“ஏ இல்லாம?. முதல்ல என்ன சாப்பிடலாம் சொல்லு, ஆர்டர் பண்ணுறேன்.”

பையன் வருகிறான்.

இவள் இரட்டைக்கட்டில், கண்ணாடி, அறையிலிருந்து வரும் ஒருவிதமான புழுக்க நெடி, இவற்றில் ஒரு பயங்கரம் புதைந்திருப்பதான உணர்வில் குழம்பி நிற்கிறாள்.

அவள் கடந்த சில நாட்களாகப் படித்திருக்கும் பத்திரிகைக் கதைகளில், மலிவுப் பதிப்புக்களில் சித்திரிக்கப்பெற்ற, கற்பழிப்புப் பெண்கள் பலரை நினைத்துப் பார்க்கிறாள். கற்பழிப்புக்காகவே கல்யாணங்கள் நடக்கின்றன. கற்பழித்தபின், அவளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள உரிமை பெற்றவன், உடையவன். இந்த அபாக்கியத்துக்கு ஆளான பெண்ணொருத்தி, கையில் குழந்தையுடன் பாண்டிச்சேரிக் கடலில் விழுந்து உயிரை முடித்துக் கொள்வதைத் தத்ரூபமாகச் சித்திரித்திருந்தாள் ஒரு பெண் கதாசிரியை.

அவள் கற்பழிப்பை நியமமாக்குகிறாளா?

“என்ன ஒரே ‘மூடி’யா இருக்கிற காந்தி? நீ சிரிச்சிட்டுச் சந்தோசமா இருக்கணும். எனக்கு உம்முனு இருக்கிறவங்களக் கண்டா பிடிக்காது…”

அவள் பளிச்சென்று சிரிக்கிறாள். பையன் இரண்டு பிளேட் அல்வா, சப்பாத்தி குருமா, எல்லாம் கொண்டு வருகிறான்.

அந்தப் பையனிடம் ஒரு சீட்டுக் கிறுக்கி ‘வாசலில் நிற்கும் தேவுவிடம் கொடு’ என்று அனுப்பலாமா?

ஆனால், இவன் காவலாக இருக்கிறான்.

அல்வாவும் குருமாவும் நெஞ்சில் குழம்ப விழுங்குகிறாள். பழைய காலக் கதைகளில் வருவதுபோல் அற்புதம் நிகழவேண்டும்!

கோட்டை மதிலுக்குமேல் ஆலமர விழுதைப் பற்றி உள்ளே கதாநாயகன் வந்திறங்குவான். அப்படி அவள் வெகுநாட்களுக்கு முன் சினிமா பார்த்திருக்கிறாள், அப்படி யார் வரப்போகிறார்கள்?

“காந்தி, அப்பா உன்னை மட்றாஸ் ஆஸ்டலில் சேர்க்கலாம்னு ஒரு எண்ணம் கேட்டாரு. இங்கன்னா உனக்கு உங்கூரு ஆளுக வருவா, போவான்னு ஒரு கூச்சம் இருக்கும்னு அவர் கருத்து. எப்படியும் இந்த வருசம் எதும் செய்யிறதுக்கில்ல. உனக்கு இஷ்டமா…”

“எங்கண்ணனுக்குக் கடிதாசி எழுதிப் போடணும்னு கவர் கேட்டேன். நீங்க காதிலியே போட்டுக்கிடல…!”

“உங்கண்ணனுக்கு நாந்தான் சேதி அனுப்பினேன். நேத்துத்தா ஒந்திரியரு பாத்தேன்னும் ரொம்ப சந்தோசம்னு சொன்னான்னும் வந்து சொன்னாரு நாந்தா உங்கிட்டச் சொல்ல மறந்து போனேன்!”

ஒன்பதரை மணிக்குக் கிளம்பு முன் குளியலறையில் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள்.

பவுடர் போட்டு மறுபடியும் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.

திருத்திக்கொண்டு அவனுடன் வருகிறாள்.

ஓட்டலில் கூட்டம் வந்துவிட்டது. அவர்கள் வருகையில் கல்லாவில் இருக்கும் முதலாளி, புன்னகை செய்கிறார்.

காரடியில் ஒரு பிச்சைக்காரக் கிழவி உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலை பாக்குக் கடை வாசலில் கயிற்று நெருப்பில் பீடிக்கு ஒருவன் நெருப்புப் பற்றவைக்கிறான். தேவு… தேவுவைக் காணவில்லை.

“என்ன சினிமான்னு முடிவு பண்ணினிங்க? மீண்டும் கோகிலாவா?” வெளியில் இருப்பவருக்குக் கேட்கவேண்டும் என்ற மாதிரியில் சற்றே உரக்கவே கேட்கிறாள்.

வண்டி செல்கிறது. இரவில் அதிகமாக லாரிகள் நடமாட்டமே குறுக்கிடுகின்றன. காரின் வெளிச்சம் சாலையில் விழும்போது, எதிர் வண்டி வெளிச்சம் படும்போது, இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று துழாவுகிறாள். புதுக்குடி பழக்கமான இடம்; நாகைக்குப் போய் வந்த பழக்கம் உண்டு. ‘பெண்களைத் தனியாக அனுப்பக்கூடாது’ என்று பாட்டி கடுமையாக நிற்பாள். இவள் உடையார் வீட்டுக்குச் செல்வதையே ஆமோதிக்க மாட்டாள். “போயிட்டு வரட்டும். அப்பத்தான் தயிரியம் வரும்” என்பார் அப்பா.

‘என் தயிரியத்தில் அரைக்கிணறு தாண்டி இருளில் விழுந்தேன் அப்பா!’

சரேலென்று இங்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அலுவலகம் இருக்கும் என்ற நினைவு வருகிறது.

முன் காட்சிக் கூட்டம் இன்னும் வெளிவரவில்லை.

சாலி, சிகரெட்டை ஊதிக்கொண்டு, ஏ என்று போட்ட அடையாளத்தில் ஏயின் ஒரு காலோடு, உடலில் ஒன்றுமில்லாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு தன் நீல விழியை அந்தரங்கமான எண்ணத்தைக் காட்டும் சாளரமாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தவாறு நிற்கிறான்.

திடீரென்று அவள் அருகில் இருக்கிறாளா என்று பார்ப்பதுபோல திருப்பிப் புன்னகைக்கிறான்.

“காந்தி நீ ஆறு, குளத்திலே நீச்சலடிப்பேல்ல?”

“ஹும்… எனக்குத் தெரியாது…”

“உனக்கு நீச்சலுடைபோடணும்னு எனக்கு ஆசை…”

சிகரெட் சாம்பலைத் தூணில் தட்டிக் கொண்டு சிரிக்கிறான்.

“டிக்கெட் வாங்கிட்டு உள்ளாற போக நேரமாகுமா?”

“நாம பால்கனில உக்காந்துப்போம்…”

“ஹலோ, என்னப்பா சாலி ஆளயே காணம்..?”

யாரோ ஒரு விடலை தோளைக் குலுக்குகிறான்.

“மீட், மிஸ் காந்தி?…”

பரட்டைத் தலையும் யானைக் குழாய் சட்டையுமாக இருக்கும் அவன் புன்னகை செய்கிறான்.

இவளுக்கு இது ஏதேனும் முன்னேற்பாடாக இருக்குமோ என்ற திகில் பரவுகிறது. அவர்கள் பேசும்போது கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்களால் துழாவுகிறாள்.

அப்போது படம் முடிந்து கூட்டம் வெளியே திபுதிபுவென்று வெளிவருகிறது.

அவர்கள் சீட்டு வாங்க நிற்கையில், சரேலென்று காந்தி கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். விடுவிடென்று வெளியேறுகிறாள். அவளுக்கு அடுத்த சிந்தனை இல்லை.

ஒரு கிராமத்தான் போன்ற ஆணும், மனைவியும் கைக்குழந்தையுடன் முன்னே நடக்கின்றனர். தலைப் பூவைப் பிய்த்துப் போட்டுவிட்டு அவள் அவர்களுடன் விரைகிறாள்.

“தூத்தேறி” என்று காறி உமிழ்கிறாள் அந்தப் பெண்.

“என்னாளெவு? கூச்சநாச்சம் இல்லாம!…”

“அப்பிடி இருந்தாத்தா சனங்க வாரங்க…”

“நெல்லால்ல. சாமி படம், ஆதிபராசக்தி நெல்லாருந்திச்சி, திருவிளையாடல் நெல்லாருந்திச்சி…”

அவர்கள் விரைந்து நடக்கிறார்கள். இவள் அவர்களுக்கு ஈடுகொடுக்க ஓடவேண்டி இருக்கிறது.

பின்னே ரிக்சாக்கள். லாரி வெளிச்சம் விழும்போது, கார் தன்னைத் துரத்தி வருவதாகக் கிலி பிடித்து நா ஒட்டிக்கொள்ள வீழலில் ஒதுங்குகிறாள்; ஓடுகிறாள்.

“என்னாங்க…? ஒங்களுக்கு வெவசாய சங்க ஆபீசு எங்க இருக்குன்னு தெரியுமா?…”

அந்த ஆள் திரும்பிப் பார்க்கிறான்.

“ஆரும்மா நீ?…”

“இல்லிங்க… வந்து. பஸ்ஸுக்கு நானும் எங்கண்ணனும் வந்தம், அவரு பஸ்ஸுல என்ன உக்காத்தி வச்சிட்டு எதுக்க கடய்க்கு போயிட்டு இதா வந்திடறேன்னு போனாரு பஸ்ஸு அதுக்காட்டியும் எடுத்திட்டா நா அண்ணன் வரலியேன்னு எறங்கிட்டேன். பாத்தா கடயில அண்ணன் இல்ல. ஓடிப்போயி பஸ்ஸில ஏறிப் போயிடுச்சி போல இருக்கு…”

கதை ஒன்று ஒட்டுப்போடுவது சிரமமாக இருக்கிறது.

“என்னம்மா, ராநேரம் பதனமா இருந்துக்கிடாம இப்பிடி எறங்குவாங்களா?”

“எங்கிட்ட காசொண்ணுமில்ல. அண்ணன் வராம நாம் போயிட்டு டிரைவர் கேட்டா என்ன பண்ணுவே?…”

“எந்துாரு…?”

“புதுக்குடி போவணும்.”

“காலம அஞ்சரைக்குத்தா இனி பஸ்ஸு…”

“அதா, ஒங்கூட்ல வந்து தங்கிட்டு, மொத பஸ்ஸில கொஞ்சம் ஏத்திபுட்டீங்கன்னா… நா உங்களுக்கு. உங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன்…”

“புதுக்குடில எந்தப் பக்கம்?” அந்தப் பெண் இடைமறித்தாள்.

“ரதவீதிக்குப் போகணும்.”

“என்னாம்மா, புத்திகெட்ட பொண்ணா இருக்கிறியே? அவரு ஆம்பிள ஓடிவந்து ஏறிப்பாரு. டைவரிட்ட சொல்லி பாக்கச் சொல்லுறதில்ல?”

பெண் பிள்ளைக்கு அவளுக்கு இடம் கொடுப்பதில் விருப்பமில்லை என்று புரிகிறது.

பெண்கள் தாம் பெண்களுக்கு முதல் எதிரிகளாக இருக்கிறார்கள்.

கோகிலத்திடம் அந்தரங்கமாக இருக்க எவ்வளவு முயன்றாள்?

“நடந்து போச்சி, கொஞ்சம் எரக்கம் காட்டுங்க. எனக்குக் கார்க்காக குடுத்து ஏத்தி புதுக்குடி அனுப்பிடுங்க. நா. மறக்கவே மாட்டேம்மா…”

“இந்த வம்பெல்லாம் நமக்கு என்னாத்துக்கு” என்ற மாதிரியில் பெண் பிள்ளை நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்.

“நாங்க இருக்கிற எடத்துல பெரிய… குடும்பம். எல்லாம் யாரு என்னன்னு கேப்பாங்க…”

“எனக்கு ஒக்கார எடம் குடுங்கம்மா, உங்களப்போல நானும் ஒரு பொண்ணு. காலையில் நான் போயிடுவேன். உங்களுக்குச் சந்தேகம் எதும் வாணாம். புதுக்குடில… டாக்டர் வூடு இருக்கு வேண்டிய மனிசாள் இருக்காங்க. உங்களுக்கு அப்பிடி ஒரு ரூவாக் காசில சந்தேகம் இருந்திச்சின்னா, காதில போட்டிருக்கிற தோடு கழற்றித்தாரேன். வந்து வாங்கிக்குங்க…”

அந்தச் சேற்றுக் குழியிலிருந்து மீள, காலை எடுத்துவிடும் நம்பிக்கையில் அவர்களைப் பற்றிக் கொள்கிறாள்.

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *