சேற்றில் மனிதர்கள்

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 3,526 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

பள்ளமாக இருக்கும் பங்கிலிருக்கும் அதிகமான தேக்க நீரை, ஓர் இறைவை கட்டி மேட்டுப் பங்குக்கு மாமுண்டி இறைத்துக் கொண்டிருக்கிறான்.

அது கோவிலுக்குரிய நிலம். சம்பாப் பயிர், பகங்கொள்ளையாகக் கண்களையும் மனதையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. வரப்பு மிகக் குறுகலாக இருக்கிறது. காலை எட்டி எட்டி வைத்துச் சம்முகம் மிக விரைவாக வாய்க்காலில் இறங்கிக் கடந்து வருகிறார். பொன்னடியான் இன்று வகுப்பெடுக்க வரவேண்டும்.

பழைய கடைத்தெருக் கொட்டகையை விட்டு புதிதாக ஆற்றோரத்தில் குப்பன் சாம்பார் முதலியோருடைய குடிசைகளுக்கு அருகிலேயே ஒரு சிறு கூரைக் குடில் அமைத்திருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை நட்டு, ‘படிப்பகம்’ என்று எழுதிய அட்டையையும் மாட்டியிருக்கிறார்கள்.

முறையாகத் திறப்பு விழா என்று ஒன்றும் கொண்டாடவில்லை. பொன்னடியான் புதன் கிழமையும் சனிக்கிழமையும் வருகிறான். முக்கியமாக வடிவு, மாமுண்டி, சித்தையன் என்று ஐந்தாறு ஆண்களுடன், அம்சு, ருக்மணி, சாலாச்சி ஆகியோரும் முதல் வகுப்பில் வந்து அவன் பாடம் சொல்வதையும், பலகையில் எழுதிப் போடுவதையும் கேட்டார்கள், பார்த்தார்கள்.

சம்முகம், இளைஞர்கள், தங்கள் தொழில், பொது அறிவு, சமுதாயம், உலகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த அறிவுபெற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர், அடுத்த வகுப்புக்குப் பொன்னடியான் வந்தபோது சம்முகம் ஐயர் பூமியில் மருந்து தெளிப்புக்குப் போய்விட்டார். அதற்கு அடுத்த வகுப்பில் ஐந்தாறு பேர்கூட இல்லை. வடிவு, குப்பன் சாம்பாரைப் பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, வேறெங்கோ உழவென்று போயிருந்தான்.

அவன் இப்போதெல்லாம் அவர் கண்களில் அதிகம் படுவதில்லை. குப்பன் சாம்பார் மட்டுமே கூடக் கூட வருகிறான். பழனிப்பயல் எப்போதேனும் இங்கு வருகிறான்.

சேத்துார் மதகை எட்டியதும் சாலையில் சைக்கிள் வருகிறதோ என்று பார்க்கிறார். பொன்னடியான் சைக்கிளிலேயே வந்து விடுகிறான். காந்தியைக் கட்டுவதுதான் நடக்கவில்லை. அந்தத் தலைகுனிவு நீங்க, இந்த அறுவடை முடிந்ததும் அம்சுவை இவனுக்கு விமரிசையாகக் கட்டிவைக்க வேண்டும் என்றதொரு வீம்பு இவருள் ஓங்கியிருக்கிறது.

“வணக்கம் காம்ரேட். பத்து நிமிசம் லேட்டாயிடுச்சி…”

சைக்கிளை விட்டிறங்கி அதை உருட்டிக்கொண்டே அவன் அவருடன் நடக்கிறான்.

பசுமையில் பூத்த வண்ணப் பூக்களாய்ப் பெண்கள் குனிந்து களை பறிக்கிறார்கள். நல்ல மழையும் வெயிலும் பசுமைக்கு வீரியம் அளிக்க, கன்னிப் பெண்ணின் மலர்ச்சிபோல ‘தூர்’ பிடித்துப் பயிர்கள் விரிந்திருக்கின்றன.

முட்செடிகளிடையே மாரியம்மா சுள்ளி பொறுக்குகிறாள்.

“மாரியம்மா, வடிவு இருக்கிறானா?…”

“அவனுக்கு ஒடம்பு நல்லால்ல. ஐயனார் குளத்து வயித்தியரிட்டப் போனா…”

“ஏ என்னாச்சி? ரொம்பக் குடிச்சிட்டானா?”

“அப்பிடியெல்லாம் வடிவு குடிக்கமாட்டா. அன்னிக்கி மழயில முச்சூடும் நனஞ்சிட்டான். சளி புடிச்சிக் காச்சலும் ஒடம்பு வலியுமா அல்லாடினா. சோறே சாப்பிடறதில்லே. பித்தமாயிருக்குன்னா…”

“சரி, பழனி இருக்கிறானா?”

“பழனி இப்ப எப்பிடி வருவான்? மிசின்ல மூட்ட வருமில்ல?”

“வகுப்ப சாயங் காலமா வச்சிக்கிறதுன்னாலும் தோதுப்படுறதில்ல. அல்லாம் குடிக்கப் போயிடறாங்க. பொம்பிளங்களுக்கு வீட்டு வேலயிருக்கு. ஆனா இப்ப நடவு உழவு இல்ல, மத்தியானம் ஓரவரு ஒதுக்கலான்னு நினைச்சி வரேன்… அதான், காம்ரேட் காலம ஏழு மணிக்கு வேல தொடங்கி, மத்தியானம் ரெண்டு மணியோட வேலய முடிச்சிடனும்ணு சில இடங்களில் அமுல் பண்றாங்க. மஞ்சக்குடிப் பக்கமெல்லாம் இதுக்கு ஒத்திட்டிருக்காங்க, இதுனாலே நாம நாலு மணிக்குப் படிப்பகம் நடத்தலாமில்ல…?”

சம்முகம் பேசாமல் நடக்கிறார்.

இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை அவரால்.

“நாம இந்தச் சங்கக் கூட்டத்துல பேசினதுதான? சேத்தில எறங்குனா ஏழு மணி நேரமும் தல நிமிராம வேலை செய்ய முடியுமா? நடுவில ஒருமணி, ரெண்டு மணி இருக்கிறது சரிதான். காலம எட்டுலேந்து பன்னண்டு. பெறகு இரண்டிலேந்து அஞ்சு, அஞ்சரைன்னு இருக்கிறதா சரி. அநேகமா பக்கத்திலேந்தா பொண்டுவ வூடுகளுக்குப் போயிட்டுக் கூட வாராங்க. புள்ளிக்கிப் பாலு கொடுக்கிறதுன்னு வேற இருக்கு… அதுமில்லாம, ரெண்டு மணிக்கே கள்ளுக் கடயில போயி உக்காந்திடுவாங்கல்ல?…”

சங்கத்து வாசலுக்கு வருகிறார்கள்.

நாலைந்து சிறுவர் சிறுமியர் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

“ஏண்டால? ஸ்கூலுக்குப் போகல நீங்க?”

பொன்னனின் பயல் முருகன் சம்முகம் கேட்டதும் மூக்கை உறிஞ்சிக்கொண்டு ஒடுகிறான்.

பொன்னடியான் குடிசைகளுக்கு முன் நின்று “யாருமில்ல?… ஏ. ராசாத்தி உங்கண்ணனெங்க…” என்று ஆள் கூட்டுகிறான்.

“எம்பேரு ராசாத்தியில்ல…”

இடையில் பாவாடை கிழிந்து தொங்க முடி அவிழ்ந்து மறைக்க அதேபோன்ற சாயலுடைய ஒரு குழந்தையை இடுக்கிக்கொண்டு நிற்கும் சிறுமி சிரிக்கிறது.

சங்கத்துக் கதவாக அமைந்த இரட்டை வரிக் கீற்றை எடுத்து வைக்கிறான். திறப்பு வைபவத்தன்று சாணி மெழுகிக் கோலமிட்டதுதான். கருமை பூசிய பலகை ஒரு முட்டுக்கட்டையின் ஆதரவில் சாய்ந்திருக்கிறது. உள்ளே ஆடு கோழி வகையறாக்கள் வந்து தங்கிய அடையாளமாகப் புழுக்கைகள், எச்சங்கள்.

“மாதர் சங்கத்துக் கிட்டாம்மாளக் காணம்! இத்த நறுவிசு பண்ணி வைக்கக்கூடாது?”

“தா… யாரங்க…? பாட்டி! கொஞ்சம் இங்க வா!…”

ஒரு கிழவி தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய அகப்படுகிறாள்.

ஒரு கீற்றைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கரும் பலகையைத் துடைத்து, கையோடு கொண்டு வந்திருக்கும் சாக்குக்கட்டியால் தேதியை எழுதிப் போடுகிறான்.

பையிலிருந்து புதிய பத்திரிகை, சிறிய துண்டுப் பிரசுரங்களை எடுத்து வைக்கிறான்.

சம்முகம் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார்.

மாடசாமி வாய்க்கார் கட்டம்போட்ட சிவப்புத் துண்டுடன் ஓடி வருகிறான்.

“முதலாளி… முதலாளி… வீரபத்திரனையும் குஞ்சிதத்தையும் போலீசில புடிச்சிட்டுப் போறாவ…!”

“என்னடா..? போலீசிலா?”

“ஆமா அக்கிரகாரத்துப் பக்கம் காலமேந்து கூட்டம் கூடிக் கெடக்குது…”

“ஏ, என்னாச்சி?”

“கோயிலில் அம்மன் நகையெல்லாம் வச்சிப் பூட்டிருந்தாங்களாம். பொட்டி ஒடச்சிருக்குதாம்…”

“அதுக்கு…? வீரபத்திரனுக்கென்ன? கோயிலுக்கு நகை இருக்கிற விசயமே நமக்குத் தெரியாது.”

“அதென்ன்மோ மூணு நா முன்னம செங்கல்பட்டு ஐயிரு, வரதராசன் எல்லாரும் வந்து பொட்டி தொறந்து அல்லா நகையும் பார்த்து வச்சிப் பூட்டினாங்களாம். இப்ப பொட்டி ஒடச்சிருக்கு தாம். சரப்பளியோ, பதக்கமோ காணாம போயிடிச்சாம். வீரபத்திரனும் குஞ்சிதமுந்தா வூட்ட ராவில இருந்தாங்களாம். கிட்டம்மா இப்பத்தா அழுதுகிட்டே போவுது, வடிவுப் பயதா கூட்டிட்டுப் போறா.”
“இதென்னடா வம்பாயிருக்கு?”

பொன்னடியான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

அக்கிரகாரத்துக் கூட்டம் இன்னமும் கரையவில்லை.

குருக்கள் வீட்டு வாசலில் ரங்கன் பயல், நடராசு சின்னத் தம்பி, விருத்தாசலத்தின் அக்கா, மூலையான் மனைவி எல்லாரும் இருக்கின்றனர்.

“என்னங்க சாமி?”

“சம்முவமா? வாப்பா. விசாரணைன்னு டேசனுக்குக் கொண்டு போயிருக்காங்க. நிலவறைக் கதவு திறந்திருக்கு. இரும்புப் பெட்டிய மறு சாவி போட்டுத் திறந்திருக்காங்க. ஒட்டியாணம், சரப்பளி மாலை, கல்லிழைச்ச பதக்கம், நாலு சங்கிலி எல்லாம் காணலியாம். மூணு நா முன்ன ஐயர் வந்து லிஸ்ட் கொண்டாந்து பாத்தாங்களாம்…”

“குஞ்சிதம், இந்தப் பொம்பிள பாவம், அத்த வேற புடிச்சிருக்காங்குறிய?”

“வீரபுத்திரன் வூட்டுலதா ராத் தங்குறானாம், காவலுக்குன்னு. தேங்கா புடுங்கிப் போட்டிருக்காங்க, சாமான் சட்டெல்லாம் இருக்கு. இந்தப் பொம்பிளதா கேக்க வேண்டாம். இவளும் இங்கதானிருந்திருக்கா. இரண்டாங்கட்டு ரூம்ல நிலவற இருக்கு…”

“ராத்திரி பூட்டிட்டுப் போனேன்னு நடராசு சொல்லுறான். அந்த ரூம் பூட்டுத் திறந்து பத்து இருபது நாளாச்சி. பாத்திரமெல்லாம் குஞ்சிதம் தேச்சி வச்சா, எனக்குத் தெரியும். அந்தப் பக்கமே நா போகலன்னு வீரபுத்திரன் அழறான், பாவம். ஆனா, நகை என்னமோ காணல. குஞ்சிதத்தின் சீலையில் சாவி இருந்ததாம். அதுதா மாத்து சாவியாம்…”

“இதென்ன சாமி, நம்பறாப்பல இல்லியே? அந்தப் பொம்பிள எதோ நாலுபேர அண்டிட்டுப் பிழச்சிட்டிருந்திச்சி. அத்தப் போயி…”

“அதா இவந் தூண்டுதலில் அவளும் சம்பந்தப் பட்டிருக்கலாம்…”

“என்னா சாமி, கேவுறில் நெய்யொழுவுதுன்னா கேக்கிறவங்களுக்கு மதி வாணாம்?”

“கோவிலுக்கு சாமி கும்புடவே போகாத ஆளுங்க, கோயில் விசயமே தெரியாது. இது அப்பட்டமான சூட்சியாயிருக்குதே?”

விருத்தாசலத்தின் அக்காள் மங்கம்மா தன் பெரிய குரலெடுத்துப் பாய்ந்து வருகிறாள்.

“கழிசடங்க. சாமி கும்பிடப் போகாத சனியங்க. இந்தக் கோயில் விழா நல்லபடியா நடக்கக்கூடாதுன்னு கச்ச கட்டிட்டு இப்பிடிப் பண்ணித் தொலச்சிருக்குங்க. குஞ்சிதமாம் குஞ்சிதம், வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சலம். எங்கேந்தோ வந்த பர நாயி. அத்த வூட்ட வச்சி, சோறு போட்டதுக்கு இப்பிடிக் கோயில் சொத்தக் களவாண்டிருக்கிறாளே? வீரபுத்திரன் தல தெறிச்சி நின்னான். என்னடா பேச்சு? ஒரு நிமிசத்தில துக்கி எறிஞ்சிடுவா! பண்ணக்கார பயனுவளாவா இருக்குறானுவ?”

சம்முகத்தின் நாவில் வசைகள் தெறிக்கின்றன. கொட்டிவிடாமல் பதுக்கிக் கொள்கிறார்.

“கணக்கப்புள்ள, பழயமணிகாரர் அல்லாருந்தா இருந்தாவ. அந்தக் களுத வாயத் தொறந்தாளா? இனிஸ்பெட்டரு வந்து கேக்கறாரு இவ, வாயெ தொறக்கல. இந்தச் சாவி உனக்கு எப்பிடிம்மா கெடச்சிச்சின்னு கேக்குறாரு ஒண்ணுமே பேசல. சரி டேசனுக்கு இட்டுப் போயி கேக்குறபடி கேக்குறோம்னு போயிருக்காங்க. தங்கம் விக்கிற வெலயில டேயப்பா! போயிருக்குற பொருள ஒரு லட்சத்துக்குக் காணும்…”

இந்த நகைகளை இவர்களே பதுக்கிக்கொண்டு இப்படி நாடகம் ஆடுகிறார்களா?

கோயில் திருவிழா நாடகமே இதற்குத்தானா?

ஆனால் இதையெல்லாம் எப்படிக் கேட்பது?

“நாம அப்ப அஸ்தமங்கலம் போயித்தான் பார்க்கணும். முள்ளுமேல போட்ட துணியாக நம்ம சமூக வாழ்க்கை ஆயிடுச்சி.”

சம்முகத்துக்கு நெற்றி வேர்க்கிறது. காலையிலிருந்து ஒழுங்காக ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. சிறிது நீராகாரம் அருந்திவிட்டு விடியற்காலையில் வயலுக்குச் சென்றவர்தாம். வீட்டுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது.

“வாப்பா, பொன்னு, வீட்டுக்குப் போயிட்டு வரலாம்…”

சைக்கிளில் பின்னே அமர்ந்து கொள்கிறார். விரைவாகவே விடு திரும்பி விடுகின்றனர். சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே குனிந்து நுழைகிறார்.

வாசலில் பெட்டைக்கோழியும் ஒரு குஞ்சும் இரை பொறுக்குகின்றன.

திண்ணையில் அப்பா படுத்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் படுத்தே கிடக்கிறாரே என்று தோன்றுகிறது.

வீடு திறந்திருக்கிறது. உள்ளே மனித அரவமே தெரியவில்லை.

“அம்சு!…”

கூவிக்கொண்டே நடுவிட்டில் துண்டைப் போட்டுக் கொண்டு அமருகிறார்.

தாய்தான் பின் தாழ்வரையிலிருந்து வருகிறாள்.

“உக்காரு தம்பி. எங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்கிறாங்களா?”

“காத்தான் மாமன் வந்து சொன்னா, நடவுன்னு நாளாக்கிப் பத்து ரூபாக்கிமேல செலவாவுதில்ல? போயிருக்காவ…”

“சோறிருக்குதா, எதுனாலும் இருந்தா எடுத்து வையி. ஒரே குழப்பம். இப்ப போலீஸ் டேசனப் பார்க்க போவணும்…”

இதொன்றும் கவனமில்லாதவள் போல் உள்ளே பார்க்கிறாள் கிழவி.

சமையலறை இருட்டிலிருந்து கையில் தண்ணிர் செம்புடன் வெளிப்படும் உருவம் கண்களில் முதலில் நிழலாக பின்னர் தூலமாக – உயிர் வடிவாகத் தெரிந்து பார்வையை அப்பிக் கொள்கிறது.

தண்ணிரைக் கொண்டு கீழே வைப்பவள் குனிகையில் கன்னத்தில் நெருப்புத் தழலாக விரல்கள் வீறுகின்றன. தண்ணிர் சிதறப் பாத்திரம் பிடியை விட்டு நழுவிச் சாய்கிறது.

காந்தி இதை எதிர்பார்த்தவளாகவே சுவரைப் பற்றிக் கொண்டு, கண்ணீரை விழுங்கிக்கொண்டு அவரைப் பார்க்கிறாள்.

‘இது நியாயமா’ என்று துளைப்பது போலிருக்கிறது அந்தப் பார்வை.

சிறிது நேரம் அவருக்கும் எதுவும் புரியவில்லை. பொன்னடியான் வெளியே வந்து தெருவைப் பார்க்கிறான்.

“எந்த மூஞ்சிய வச்சிட்டு நாய் மாதிரி உள்ளே நுழஞ்ச? சீச்சி! வெக்கங்கெட்டு எப்பிடி வந்து உள்ளாற நுழைஞ்சு எம்முன்ன வந்து நிக்கிற? பொட்டச் சிறுக்கி, உங்குணத்தக் காட்டிட்டியே?” அவள் அசையவேயில்லை.

அவள் எதிரொலி எழுப்பியிருந்தால் அவருடைய பொங்கலுக்கும் குமைச்சலுக்கும் வடிகாலாக இருந்திருக்கும். சிலையாக நின்றதுஎழுச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. தம்முடைய சீற்றத்தின் வேர்களை அசைப்பதாக இருக்கிறது. எனவே தமக்குச் சாதகமான வகையில் மருமகள் வெளியே நிறுத்தி வைத்தது, மகன் உதாசீனப்படுத்தியது எல்லாம் நினைவில் புரண்டு கொடுத்து அவரை வெறியனாக்குகின்றன.

“என்னடீ, நாங் கேக்குற, நிக்கற? அந்தப் பய கூட ஸ்கூட்டர்லல்ல ஊர்கோலம் போனியாமே? ஒட்டல்லே பார்த்ததாக ஒந்திரியர் சொன்னாரு எண்சாணும் ஒரு சாணாக் குறுகிப்போனேன். அப்பிடியே கெடந்து மானம் துடிச்சிச்சி. அப்பிடி ஒரு ஒடம்பு கேக்குமாடீ?… இந்தக் குடிலபெறந்து…” வசைகள் கட்டுக்கடங்கவில்லை. எழுந்து தாவுகிறார்.

கிழவி குறுக்கே மறிக்கிறாள்.

“என்னடால, உனக்குப் புத்தி பெரண்டு போச்சு? அது இந்த மட்டுக்கும் சமாளிச்சிட்டு வந்திருக்குதேன்னு ஒரு தன்ம வேணாம்? இத உம்பய கூடத்தான் போயி கட்டிக்கிட்டான். அவன் ஒரு வூட்டில கொண்டாந்து வச்சி கொளாவல?…”

“நீ இப்ப நாயம் பேச வந்திட்டியாக்கும்? அவங் கண்ணு காணாம தொலைஞ்சி போயிருக்கிறா. ஓடிப் பூடிச்சாமேன்னு கேட்டவங்க திரும்பி வந்திடிச்சி போலிருக்குன்னு சொல்லுறப்ப… மானமே போயிடுமே! யாராருக்கோ நாயஞ் சொன்னான். பொண்ண மட்டும் கூட்டி வச்சிட்டான்னு சொல்லமாட்டா? ஒரு பய என்ன மதிப்பானா?… இனிமே இவள எந்தப்பய கட்டுவா? போயித்தொலஞ்சவ அங்கியே இருக்கிறத வுட்டுட்டு ஏண்டி வந்தே?”

அவளுக்கு உதடுகள் துடிக்கின்றன. முகத்தை மூடிக்கொண்டு விம்முகிறாள்.

“ஏண்டி வந்தே? அப்பன் முகத்தில கரி பூசினாலும் சமாளிச்சிக்குவான், இருந்து அவனச் சாவ அடிக்கணும்னு திரும்பி வந்தியா? உனக்கு சூடு சொரண இருந்தாப் போயிருப்பியா, போனவ திரும்பி வந்திருப்பியா?. இதபாரு, இந்த வீட்டில இனிமே எடமில்ல. நட… எவங்கிட்ட வேணாப் போ…”

அவள் கையைப் பற்றித் தள்ளுகிறார். அவள் எதிர்ப்புக் காட்டாததால் தடுமாறி விழுகிறாள்.

“லே, சம்முகம். நீ செத்த சும்மாருடா. அது வரவே மாட்டேனுதா சொல்லிச்சாம். ஆத்துல கொளத்துல வுழுந்து பழிகொண்டு வராம வந்திச்சேன்னு எரக்கப்படு. ஆந்தக் குடியா பெத்த பயதா, படிச்சிட்டு வந்திருக்கிறான்ல. தேவு, ஐயிரு வூட்டில வந்திருச்சாம். ஐயிரு அவங்க கூட சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதபாரு லட்டர் கூடக் குடுத்திருக்காரு…”

ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

“சம்முகத்துக்கு ஆசீர்வாதம். மகள் காந்தியைக் தேவுவுடன் அனுப்பி வைக்கிறேன். எதுவும் முரண்டாமல் ஏற்றுக்கொள். அவள் மகா தைரியசாலி. சோதனைக்குள் அகப்பட்டு அதிலிருந்து எழும்பி வருவதுதான் தீரம்.

உன்னுடைய ஊர் கெட்டு, சாதிக்கெட்டு, கொள்கைக் கெட்டு எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, மனிதாபிமானக் கண்ணோடு பாரு. புதைமணலில் கால் வைத்தவள் தெரிந்து தப்பி வந்திருக்கிறாள். இன்றைய நிலையில் பெண்ணினம் எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்பதற்கு அவள் அநுபவமே போதும். இந்த நிலையை மாற்றப் பெரிய அளவிலே எதானும் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. அவளை அடிக்காதே. புண்படுத்தாதே. விசுவநாதன்.”

சட்டென்று தெருவாசலைப் பார்க்கிறார்.

நாகு கையில் மண்ணை வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டே நெல் துற்றுவதுபோல் இறைக்கிறான்.

சைக்கிளை, பொன்னடியானைக் காணவில்லை.

தலைவிரிகோலமாகக் கிட்டம்மாளும், தேவுவும் வருகின்றனர்.

தேவு சற்றே முகமலர வணக்கம் தெரிவிக்கிறான்.

“எங்குடில மண்ணள்ளிப் போட்டுட்டாங்க, அந்தத் தேவிடியா! ஊராம் புள்ளக அத்தினி பேரயும் கொலச்சிப் போடணும்னு வந்த பரநாயி. எம்புருசனுக்கு ஒண்ணு தெரியாது. இவுருபோயி கள்ளச்சாவி கொண்டாந்தாராம். மாரியாயி! நீ பாத்துக்கிட்டுத்தான் இருக்கிற…?”

தெருவில் உள்ள பொட்டு பொடிசுகள் கூடிவிடுகின்றன. படுக்கையோடு கிடந்த கிழவன் ஏதோ கனவு கலைந்தாற் போன்று எழுந்து உட்காருகிறான்.

“நீங்க இப்ப கொஞ்சம் வாங்க. நாம போலீஸ் ஸ்டேசனுக்குப் போயி மேக்கொண்டு செய்ய வேண்டியதைப் பார்ப்போம்..” என்று தேவு நிதானமாகக் கூறுகிறான்.

“நான் காலம வந்திருந்தேன்…”

“நானும் அதான் கிளம்பினேன்… இது ஒரே அடாவடியால்ல இருக்கு. எப்படியோ கண்ணி வச்சி நாடகம் போடுறாங்க. கோவில் திருவிழான்னு வரப்பவே சம்சயமாயிருந்திச்சி…”

“இப்ப, முக்கியமா மணிகாரரு. வரதராசனெல்லாம் கூட ரொம்ப அக்கறை காட்டல. நகை என்னென்ன இருந்திச்சின்னு சரியா லிஸ்ட் குடுக்கவே ஆளுங்க இல்ல. சாவி செத்துப்போன அம்மா வாசுதேவங்கிட்டக் குடுத்து, அவரு கொண்டாந்தாராம். ஆனா, அது நிலவறச் சாவிதான்னு குருக்கள் சொல்றாரு… விருத்தாசலம், வாசுதேவன் நாலு பேருக்கு முன்ன சாவியக் காட்டித் திறந்து நகையப் பாத்துட்டு வச்சாருன்னும், பிறகு பெட்டிய நிலவறயில வச்சிப் பூட்டிட்டு அந்தச் சாவிய வூட்டில கொண்டு பீரோவில் வச்சாருன்னும் சொல்றாங்க. வீரபுத்திரன் முந்தாநா அவுருகிட்ட சாயங்காலம் காசு கேக்கப் போனானாம். கூடத்துல அவனப் பாத்ததாக அம்மா சொல்லிச்சாம். பீரோல சாவி தொங்கிச்சாம். ஒண்ணும் நம்பறாப்பல இல்ல. கோயிலுக்கு இத்தினி சொத்து, நகை இருக்கு, ஏன் எண்டோமெண்ட் போர்ட் கீழ வரலங்கிறதே பெரிய கேள்வி. முதல்ல, நாம போயி அந்தப் பொம்பிளய விடுவிச்சிட்டு வரணும். ஸ்டேஷனிலே ரா நேரத்துக்கு வச்சிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.”

கிட்டம்மா இதைக் கேட்டதும் குமுறிப் பாய்கிறாள்.

“பொம்பிள… பொம்பிளயா அவு? எங்குடிக்கில்ல மண்ணு போட்டுட்டா! ஊராம்புள ஒருத்தன் பாக்கியில்ல. இவ போலீசுகாரனயும் வளச்சிட்டிருப்பா… ஊரு சனமறியாம, ஒடம்ப வித்து சீவிக்கிறவளுக்குப் போயி சட்டம் பேசுறிய?…”

“த, ஏனிப்படி லோலு லோலுன்னு கத்துறீங்கம்மா? ஒரு பொம்பிளக்கிப் பொம்பிளங்கற எரக்க புத்தி உங்களுக்கு இல்லாம போனதுதா எல்லாத்தயும் விட மோசம்!…”

அவர்கள் படி ஏறாமலே நிற்கின்றனர். சம்முகம் சட்டையை மாட்டிக் கொண்டு செல்கிறார்.

அத்தியாயம்-20

நீர், பசுமை, மரம், செடி, புதர் எல்லாமே இருட்டுத் தான்.

ஆனால் வடிவுக்கு எல்லாம் துல்லியமாகத் தெரியும். அந்த இடத்து மண்தறி ஒவ்வொன்றுக்கும் அவனுடன் உறவாடிய பரிச்சயமுண்டு.

மடையில் குலங் குலங்கென்று தவளைகள் பூரித்துப் பாடும் இனிய ஒலி அவனுக்கு மிக ரம்மியமான சங்கீதம். இந்த மண்ணும் நீரும் சில்லிப்பும் தன் உடலிலிருந்து வந்தாற்போலும், அந்தக் கலவையிலேதான் உருவானாற்போலும் பேதமற்று உணரும் உணர்வு.

இதற்கு முகம் வாய் வார்த்தை கிடையாது.

வீச்சு வீச்சென்று சுள்ளிப் பயலாகக் கோவணத்தைப் பாய்ச்சிக்கொண்டு குட்டை மாட்டுக்கு ஜோடி சேர்த்து முதன்முதலாக நாயக்கர் நிலத்தில் ஏரோட்ட இறங்கிய காலம் நினைவிருக்கிறது. வெண்மையும் நீலமும் கருமையுமாக மின்னும் உடலுடன் காது வெட்டிக் கொம்பு சீவிக்கொண்டு வந்த வெம்பளச்சேரி சோடியை ஆற்றுக்கரையில் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொட்டிலுக்குக் கொண்டுபோகும்போது அவனுக்கு மண்ணும் மாடும் தனக்குச் சொந்தமில்லாதவை என்ற உணர்வே இருந்ததில்லை.

உழவோட்டவும், களியில் நடக்கவும், உரம் வீசவும், மருந்து தெளிக்கவும், நாற்றுப் பறித்துக் கட்டுச் சுமந்து வந்து வீசவும் அவன் களியாட்டங்களைப் போல் கற்று, அவை அவன் இளமையுடன் இசைந்திருக்கிறது.

“ஏண்டா வடிவு? அரி பழுத்துட்டாப்பல இருக்கு. நாளக்கிக் காலம புதிர் கொண்டாந்திடு!” என்று முதலாளி அவனைத்தான் கொண்டு வரச் சொல்வார்.

“போன குறுவக்கி மாமன் சாவுன்னு போயிட்டீங்க. மழ நெருக்குதுன்னு நானே புதுர் எடுத்தே. மேனியே காணல…” என்றார் சென்ற ஆண்டில்.

பழக்கப்பட்ட காலே வழுக்கும் வகையில் வானம் யாருக்காகவோ கண்ணிர் வடிப்பதுபோல் அவனுக்கு இன்று தோன்றுகிறது. தடியை ஊன்றிக்கொண்டு விரைகிறான்.

அம்மா பொட்டுக் கடலையும் வெங்காயமும் வைத்துத் துவையல் அரைத்திருந்தாள். சுடுசோறும், வறுத்த கருவாடும் துவையலுமாக வயிறு நிறைய உண்டுவிட்டு அவன் புறப்பட்டிருக்கிறான்.

நிறைந்த வயிரும் வெளிக் குளிர்ச்சியும் அவனுக்கு மனம் நிரம்பிய உற்சாகத்தை ஊட்டவில்லை. இவ்வாறு மழைக்கார் குவிந்து பொழிவதும் பின்னர் சற்றே ஓய்ந்து மறுபடி ஒரு பாட்டம் கொட்டுவதுமாக இருக்கும் நாட்களில் கண்மாய் மடையில் துணியைக் கட்டிவைத்து மீன் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் செல்வான். வடிவுக்கு இப்போதெல்லாம் அந்த மாதிரியான ஆர்வங்களே பிறக்கவில்லை.

கால் அவன் மனக் குழப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வயலுக்குள் நழுவ வழுக்குகிறது. பயிர் மிதிபடும்போது, பாம்பை மிதித்தாலும் ஏற்படாத குளிரோட்டத்தில் சிலிர்க்கிறது.

தவளைகளின் ஒலியையும், நீர்பாயும் ஓசையையும் தவிர வேறு உயிர்ப்பே தெரியாத இருளில் அவன் நடந்தும் ஓடியும் போகிறான்.

இலுப்பை மர மேடு, பச்சை மரத்துக்குள் படபடவென்று சிறகை அடித்துக்கொள்ளும் பறவைகள்… கால்வாய்; இருமருங்கிலும் தாழை செழித்த புதர்கள்… குளத்தில் நீர் தெரியாமல் மைத்தட்டாக மூடிக் கிடக்கிறது.

மேலே போட்டிருக்கும் சாக்குக் கொங்காட்டில் நீர்த்துளி விழுந்து கனமாகக் கனக்கிறது.

ஐயனார் குளத்துக் கோயிலில் முன்பெல்லாம் ஒரு விளக்கு எரிவதுண்டு. இந்த எண்ணெய் விலையில் கோயிலுக்கு யார் விளக்கெரிப்பார்கள்? குதிரைவீரனுக்கும் ஐயனாருக்கும் பூசையும் விழாவும் கிடையாது. இப்போதைக்கு இந்த மேட்டில் இறந்தவர்களைப் புதைக்கும் பூசைதான் நடக்கிறது!

ஒரு குடிசையில்கூட ஒளியின் உயிர்ப்பில்லை.

இவன் போய் திண்ணை முழுவதும் இரட்டை விரிச்சாக்கால் போர்த்துக் கொண்டிருக்கும் வீட்டுப்படி ஏறுகிறான்.

“பஞ்சி…! பஞ்சி…!” கைத்தடியால் தட்டுகிறான்.

திண்ணையிலிருக்கும் ஆட்டின் கழுத்துமணி அசைகிறது.

நாய் செவியடித்து ஓசை எழுப்புகிறது.

கதவைத்திறந்து சிம்னி விளக்கை உயர்த்தும் பஞ்சமிக்கும் ஒரே ஆச்சரியம்!

“அண்ணே!… வாங்கண்ணே! அட மழல நனஞ்சிட்டா வந்தீங்க…”

அவன் சாக்கை உதறித் திண்ணையில் போடுகிறான்.

“இன்னாருங்க!… அண்ணா வந்திருக்கு, அண்ண..!”

சோலை திடுக்கிட்டாற்போல் எழுந்திருக்கிறான்.

“சட்டையெல்லாம் நனஞ்சிருக்கி…!”

“இல்ல… மேல துண்டுதா… அதுங்கூட ரொம்ப இல்ல.”

விளக்கைப் பெரிதாக்கி வைத்துப் பாயை இழுத்துப் போட்டு “உக்காருங்க அண்ணே…” என்று பஞ்சமி உபசரிக்கிறாள்.

வடிவு வேட்டிச் சுருட்டில் நனையாமல் வைத்திருக்கும் ஐயர் கடைச் சேவு பொட்டலத்தை எடுத்து வைக்கிறான்.

“என்னா, இந்நேரத்துல வந்திருக்கீங்க. பொளுதோட வாரதில்ல?”

“பொழுதோட வாரணும்னுதா பாத்தே. நேரமாயிப் போச்சு…”

“மழ நல்லதுதா. பெய்யிற நாளுல ஊத்துனாத்தான பயிருக்கு நல்லது! உங்க பக்கம் என்னப்பு கோயில்ல திருட்டுப் போச்சாம், வீரபுத்திரனப் புடிச்சி அடச்சிருக்காங்களாம்!”

“அந்த வவுத்தெரிச்சல ஏங் கேக்குறிய…? இவுங்க சாமி இந்த அக்கிரமத்தப் பாத்துக்கிட்டிருக்கிறதுதா எனக்குப் புரியல. நா இப்ப அதுவிசயமாத்தா வந்தது. இவனுவ அக்கிரமத்துக்கு நாம பேசாம இருந்திட்டே இருந்தா என்னக்கி விடிவுகாலம் வருது…”

அவன் எதுவும் பேசாமல் இவன் முகத்தையே பார்க்கிறான்.

“இப்பதா பாத்திட்டு வாரே. இங்க எதுனாலும் சீக்கு செவாப்புன்னு மொட வந்தாகுளத்தில வுழுந்துதா சாவணும் போல இருக்கு!…”

“தாசில்தாருட்ட பிடிசன் குடுத்திருக்கு…”

“கிளிச்சாங்க. இவனுவளுக்கு அக்குசு இருந்தால்ல? போடால, வயல்ல எறங்கிப் பொணத்தக் கொண்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு இவரு போயிட்டாரு. வயல்ல எறங்கியிருந்தா அவனுவ சும்மா விடுவானுவளா? அங்க குடிசயப் பேத்துப் போட்டானுவொ. என்ன மயிரு பண்ணினாரு தலவரு? மவன ஓட்டிவிட்டாரு, மவள ஓட்டிவிட்டாரு. சேத்துக்க மாட்ட, நடுத்தெருவிலே நிக்கவச்சி செருப்பாலடிப்பேன்னாரு, இப்ப ஒரு ஒடன்படிக்க மாதிரி திரும்பி வந்திடிச்சாம்!…”

“யாரண்னே? காந்தியா?…”

“ஆமாம். ஒழப்பாளி ஒழப்பாளியச் சொறண்டுற கதயாயிருக்கு. இப்ப கிளாசு எடுக்கிறாங்களாம், மயிரு! இவரு சொந்த வூடு கட்டியாச்சு. இப்ப வெளியாளு ஒருத்தன் வாரா. சைக்கிளத் தள்ளிட்டு அவன் வாரதும் போரதும்! அவன் பு…ர…ச்…சி…ன்னு பலவயில எழுதிப் போட்டுப் பாடங் கத்துக்குடுக்கறதும் அம்சுவக் கூட்டி வுடுறதும்…?”

முகம் சிவப்பேறுகிறது அவனுக்கு.

“இவங்க என்னிக்கு இதெல்லாம் எழுதிக் கத்துக்கிட்டுப் புரட்சி பண்ணுற வரயிலும் நாம சாவுறம். ‘வீணா கத்தி ஆப்ப்பாட்டம் பண்ணாம போங்க’ன்னாரு அவன் ஆரோட கையாளு? போலீசு… எங்காளு குத்தவாளி இல்லண்ணு எழுதிக் குடுக்கிறதுன்னா குடும்பா. கோர்ட்டில வந்து பாரும்பா. முணு புள்ளக, கிட்டம்மா பொம்புள பாவம். மாதர் சங்கம்னு உருட்டி மிரட்டிட்டு வருமே! அது ஒரே நாள்ள வேவுடியாயிடிச்சி..?”

கைவிளக்கில் ஒரு பீடியைக் கொளுத்திக் கொண்டு அவனுக்கும் ஒன்று கொளுத்திக் கொடுக்கிறான் சோலை.

அந்தக் காரப் புகையின் மணம் சூழலின் அசமஞ்சத்தனத்துக்கு விருவிருப்பூட்டுகிறது.

பஞ்சமி கூறுகிறாள்:

“இத, நாட்டாம பொம்பளக்கி மாசம். முன்ன மொதப் பொஞ்சாதி புள்ள பெத்துதா கழிச்சிக் கண்டு பாவம் செத்துப் போச்சி. அப்ப தரிசாக் கெடந்திச்சி. தூக்கிட்டுப் போனாங்க. இதுக்கு முதப்புள்ள வகுத்திலியே செத்துப்போச்சி. அப்ப புதுக்குடி ஆசுபத்திரில வச்சிருந்தாவ. இப்ப மூணாவது. ஆசுபத்திரிக்குப் போவாணாம்னு அது எங்கியும் போவல. காலெல்லாம் நீர்க்கொண்டு இருக்கு… பாவம்…”

“அதா, இவனுவள நம்பிப் பிரேசனமில்ல. கோயில்ல பந்தப் போடுறா செங்க சிமிட்டி எங்கேந்து வாரதுன்னு தெரியல. நமக்கு ஒரு ஆவத்துன்னா அஞ்சு ரூவா குடுக்க, ஒதவி செய்ய நம்மகிட்டயே ஆருமில்ல. அறுப்புக்காலத்துல எதானும் சம்பாரிச்சா, வட்டி குடுக்கவே நெல்லு செரியாப்போவுது. நாளெல்லாம் ஒழச்சிட்டு, ரேசன் கடையில ஒண்ணுட்டொரு நாளு போடுற அரிசிய வாங்கியாந்து அர வயித்துக்குக் கஞ்சி காச்சறோம். ஆ, ஒண்ணா, அரிசனனுக்கு கடன், அரிசனனுக்கு ஆடு, அரிசனனுக்குப் பள்ளிக்கொடம்ன்றா! எந்தப்பய வங்கில கடன் குடுக்கிறான், ஈடு எதுமில்லாம? எவன் நமக்குச் சாமீன் போட வரான்? ஆரோ குடுக்கிறான், ஆரோ வாங்கிக்கிறான்; அப்பிடியப்பிடியே போவுது! பள்ளிக்குடுத்துக்கு ஏண்டால அனுப்புறதில்லன்னு கேக்கறாங்க. ஒரு துணி தச்சிக் குடுக்க முடியல. பாப்பாத்தி மவன பள்ளிக்கொடத்துக்கு அனுப்பிச்சி, ஆனா பாடும்பட்டு எட்டாவது வாரயில கண்ணு தெரியலன்னு சொல்லிட்டேயிருந்தான், பெயிலாயிட்டான். ரெண்டு வருசமா, இப்ப ஒழவுக்குத்தான வாரா…”

அந்த இரவின் அந்தரங்கமான தனிமையில், வடிவின் நெஞ்சப் புகைச்சல் கிளர்ந்து உள்ளிருக்கும் ஆற்றாமைகளைத் தள்ளி வருகிறது.

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் என்ன செய்வது; மழை சேர்ந்தாற்போல் ஐந்தாறு நாட்கள் பெய்தால், வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டியதுதான். வருசம் முழுவதுமா கூலி இருக்கிறது?

சோலை எழுந்திருக்கிறான்.

“எங்க போற இப்ப?…”

“நாட்டாம வூட்ட போயிக் கூட்டியாரேன்.”

“கூட்டிட்டு வா மச்சான், இன்னிக்கி ரெண்டில ஒண்ணு தீத்துக்கணும். சொன்ன பேச்சு மாறுற நாணயங்கெட்டவ நம்ம எனத்துலதா இருக்கிறதா…”

மீசையில் கை போகிறது.

“நீ வந்திருக்கிறது அப்பாருக்குத் தெரியுமா அண்ணே?”

“நா நெனச்சிட்டு வந்தே. அவருக்கு சாராயம் வாங்கிக்க காசு கெடச்சா போதும். கடவீதில போயி, அந்தையிரு வந்திருக்காரு, இந்த பண்ண முதலாளி வந்திருக்கிறாருன்னு கை நீட்டி ஒண்ணு அரைன்னு கேக்குறாரு, பிச்ச வாங்குற மாதிரி. மொதலாளி வூட்டுக் கெழவனாருக்கு சாராயம் வாங்கிக் குடுக்க இவரு ஆளு… பேரணி போனாங்க; நாம் போறேன்னு கெஞ்சுனே. வுட்டாரா? போடாலா, உனக்குத்தா அம்சுவக் கட்டப்போறன. அப்ப போலாண்டான்னாரு… இப்ப வெளியாளக் கூட்டிப் போவுறதுமா…”

கைத் தின்பண்டம் பறிபோன குழந்தை போல் துக்கம் பீறிடுகிறது அவனுக்கு.

“நீ என்னாமோ சொன்ன, என்னன்னாலும் அந்தாயா, அந்தப் பொம்பிள எல்லாரும் நாந்தொட்டுகூட எதும் எடுக்கல, அன்னிக்கு வூடு இல்லாம அவங்கூட்டுக்குப் போயிருந்தமில்ல?… அப்ப பாத்தனே, மொதலாளி நல்லவரு, பொம்பிளங்க வாணான்னிருப்பா. வாய்க்காரு குடிப்பொண்ணு, சாம்பாரு எனத்திலே போயி ஏண்டா கட்டணும், நம்ம புள்ளக்கி மாப்பிளயா கெடக்காதுன்னிருப்பாங்க… நீ ஏ அண்ணே இதுக்குப் போயி குமஞ்சிட்டிருக்கிற?…”

“அப்படி இல்ல பஞ்சி, ஒனக்குத் தெரியாது; அம்சு என்னத்தான் கெட்டும். முன்னல்லாம் அது நடவுக்கு வரும். நாயக்கர் வூட்டுச் சாணி அள்ளிப்போட்டுப் போட்டு கொளத்துல வந்தும் குளிக்கும். இப்ப ஒரெடத்துக்கு அத்தவுடறதில்ல. போனா ஆயி கூடதா போவுது. கண்ணுல படாம காபந்து பண்ணியிருக்காங்க. ஆனா, அந்தப் பய கிளாசெடுக்க வாரான். ரோஸ்ல பூச்சீல. கட்டிக்கிட்டு முன்னாடி வந்து உக்காந்திருக்கா. கூடவே ருக்மணிப்பொண்ணு.”

“அண்ணே, போனாப் போவுது. ஊருல ஒனக்குப் பொண்ணா இல்ல? இத இப்பந்தா மாங்கொம்புலேந்து இவரு மாமன் வந்திருந்தாரு. உம்மச்சானுக்கு இந்த வருசம் கட்டுவாங்கல்ல? தனவாக்கியம் இருக்கு. ‘மேசராயி சடங்கு சுத்தி ரெண்டு வருசமாயிடிச்சி, வெளுப்பா இருக்கும் பொண்ணு’ன்னு சொன்னாரு. கம்மல் மூக்குத்தி அல்லாம் போட்டிருக்காவளாம், ஸிலுவர் ஏனம் இருவத்தொண்ணு எடுத்து, மாப்பிளக்கி வாட்ச் மோதரம் அல்லாம் போட்டுக் கலியாணம் பண்ணுவோம்னு சொன்னாரு, மழவக்காளிச் சிரிச்சின்னா ஒரு நா போயி, இந்தப் பயலையும் காட்டிட்டு எல்லாஞ் சொல்லணும்னு நெனைச்சே, நீயே வந்திட்ட…”

“இத பாரு பஞ்சி, ஒருமா நெலம் சொந்தம்னு இல்லாம, ஒரு காத்து மழக்கி கமுக்கா குந்த எடம் இல்லாம, நாங் கலியாணம் கட்டப் போறதில்ல…”

“போண்ணே… அதெல்லாம் எப்ப வந்து, நீ எப்ப கலியாணம் கட்டுகிறது?”

“உனக்குத் தெரியாது. புரட்சி வரும். ரத்தப் புரட்சி. அதெல்லாம் வராம, இவங்க ஒண்ணும் வழிக்கு வாரப் போறதில்ல…”

பஞ்சமி அவன் கண்களில் ஒளிரும் தீவிரத்தைக் கண்டு உள்ளுற பயந்து போகிறாள்.

வாயிலில் அடிச்சத்தங்கள் கேட்கின்றன.

நாட்டாண்மை கத்தி மீசையும் போர்வை போர்த்த மேனியுமாக முன்னே வருகிறான்.

வீரன், ராசப்பன், சங்கிலி ஆகிய நால்வர் வந்திருக்கிறார்கள்.

வீரன் நாட்டாண்மைச் சாம்பாரின் தம்பி. சங்கிலி வீரனின் மச்சான். ராசப்பன் அந்தக் குடியிருப்பில் ஐந்தாவது வரை படித்தவன்.

“என்னடா வடிவு, வாய்க்கார் மகளக் கட்டப் போறதா பேச்சு வந்திச்சி…”

இவனுக்கு மீசை துடிக்கிறது. நாட்டாண்மை உட்கார்ந்து கொள்ளப் பாயை நகர்த்திப் பஞ்சமி மரியாதை செய்கிறாள்.

“எதும் நெருக்கடி இல்லாம இந்த நேரத்துல வரமாட்ட? என்னமோ சொல்லிட்டா, கோயில்ல திருட்டுப் போச்சாம். முப்பது ஏனமாம்? போலீசு வந்திச்சாமே?…”

“ஏனமில்ல பெரி… சாமானுங்களாம். இவனுவ கொள்ளயடிச்சிட்டு, கங்காணம் பாக்குற பண்ணக்காரனப் புடிச்சிப் போலீசில அடச்சிருக்கிறானுவ…”

“என்னமோ பொம்பிள திருடினான்னு சொன்னானுவ!”

“பொம்புள யாரு? அதுவும் சூட்சிதா. நாம இத்தினி நா அக்கிரமத்துக்குப் பொறுத்தோம். இனியும் பொறுக்கிறது அநியாயம். இப்ப, நாம எதிர்ப்பைக் காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நம்ம எனத்து ஆளு, வீரபுத்திரன். அவன அநியாயமா போலிசில புடிச்சி அடச்சிருக்கா. நாம நூறு ஆயிரம் பேராப் போயி போலீஸ் டேசன வளச்சி, அவன விடுவிச்சிட்டு வந்திடணும்.”

பீடிப்புகையை ஊதிக்கொண்டு சுவாரசியமாக நாட்டாமை இவனைப் பார்க்கிறான். “உங்க பக்கம் அல்லாம் வாரானுவளா?”

“வருவானுவ. அம்மங்கோயில், கண்டானூருக்கெல்லாங் கூட ஆளுவ போயிருக்கா. டேசன ஒடச்சி, அவன விடுதல பண்ணனும். காதும் காதும் வச்சாப்புல ராவோடு போயித் தாக்கிடணும்…”

“அது சரிதாம்பா. இந்த எடத்தில அவம் போலீசு டேசன் இருந்திச்சின்னா. நீ சொல்றது சரி. இவனுவ வாரான்னு சொன்னதுமேயில்ல அவங்க உஜாராயிடுவாங்க? சும்மா திபுதிபுன்னு காருலயும் ஜீப்பிலும் வந்து எறங்கி வேட்டையில்ல ஆடுவானுவ?”

“ஆமா, நமுக்கு அத்தினி பேருக்கும் கைகாலில்ல? தடி கம்பு, கல்லு, மம்முட்டி, அருவா எல்லாங் கொண்டு போகமாட்டோம்?”

“…அது சரி. நீங்க ஆளுவ போறதுக்குள்ள அவன் உஜாராயிருப்பாண்டா?. இத, இதுக்குள்ளாற போலீசுக்கு சமாசாரம் போயிருக்கும்; இந்த பன்னாடப் பயலுவ தாக்கப் போறானுவன்னு…”

“அதெல்லாம் போயிருக்காது. ரொம்ப கமுக்கமா ஏற்பாடாவுது…”

“சம்முக வாய்க்காரு கெட்டிக்காரருதா, நல்ல தலவருதா. ஆனா, அன்னைக்கு இங்க செத்தவள வச்சிட்டு, அந்தப் பிச்சுமுத்துகிட்ட கால்ல வுழுந்து கெஞ்சினோம். அப்ப. அவங்கிட்டப்போயி, இல்ல சுந்தரத்தையா, சின்ன நாயக்கரு, ஆரிட்டன்னாலும் சொல்லி, எங்களுக்குப் பொணம் கொண்டுபோக வழி பண்ணினாரா? என்ன மயிராச்சின்னு போயிட்டானே?”

“இப்ப நாங்கமட்டும் போலீஸ் டேசன ஒடச்சி ஒங்க ஆளுவளக் கொண்டிட்டு வரணுமாக்கும்? அவன் கெடு வச்சிட்டு இங்க வந்து பொம்பிளங்களக் குலச்சிப் போடுவான்? நாங்க இப்ப என்னமோ சொல்லிட்டுப் போனாருன்னு பேரணிக்கு இந்த ராசப்பனும் நானும் போயிருந்தோம். எல்லாம் வெவரமாக் கேட்டு எளுதிக் குடுத்திருக்கு இந்தத் தபா, பயிரு அறுத்த பெறகு எங்களுக்குப் பாதை வுடணும். ரோடு போடணும். இல்லன்னா… ஜாடாவும் ராவுத்தர் பக்கம் போவுறதுன்னு முடிவு செஞ்கிட்டோம்.”

வடிவு கிணறுவெட்டப் பூதம் புறப்படுவதை எதிர்பார்த்திராததால் சற்றே திகைக்கிறான்.

“இப்ப் சம்முக வாய்க்காரு அனப்பி நா வந்தன்னு ஆரு சொன்னது?”

“பின்ன… யாரனுப்பிச்சி வந்த?…”

“யாரனுப்பணும்? நமுக்கு அறிவில்ல? சோத்துல உப்புப்போட்டுத் தின்னல?”

“அப்ப நீயா இதெல்லாம் ரோசன பண்ணிட்டு வந்தியா ஏண்டால…?”

“இல்ல. இப்ப நாஞ்சொல்லமாட்டே நமுக்குப் பின்னாடி படிச்சவங்க, நமுக்காக ரத்தம் சிந்தத் தயாரா இருக்கிறவங்க இருக்காங்க. தெனவெடுத்தவந்தா சொறிஞ்சிக்கணும். சேத்தில கெடக்கிறவங்க நாமதா… நாம எதிர்ப்பக் காட்டினா அவர்களும் சேந்து நம்மோட நிப்பாங்க…”

“அது யாருடா அத்தினி பெரிய படிச்சாளு? எங்கக்கும் சொல்லிப்போடு, தெரிஞ்சிக்கறோம்.”

அவன் விழிகள் குறுகுறுக்கின்றன. குரல் இறங்குகிறது.

“உங்களுக்குத் தெரிஞ்சாளுதா… நம்ம ஆளு. அம்மங் கோயில், நாமெல்லாம் ஒண்ணாத் திரண்டெழுந்தா போலீசும் ஆரும் ஒரு மயிரும் செய்யமுடியாது. அப்பத்தா வழிக்கு வருவானுவ நம்ம பக்கம் நாயம் இருக்கு…”

நாட்டாமை மீசைத்திருகலிலேயே ஆழ்ந்திருக்கிறான்.

“அது சரி… எப்ப போயி வளச்சிக்கப் போறீங்க?”

“நாள ராவு. கப்புனு அப்பிடியே போயி வளச்சிச்சிக் கிடணும். அந்தால கண்டானூரு கிளியந்தொற, ஆத்துக்கு இந்தப் பக்கம் இருந்து எல்லா ஊருச்சனங்களும், மொத்தம் ஒரு நாலாயிரத்துக்குக்கு கொறயாம. நம்ம பலத்தைக் காட்டணும். பொம்பிளங்கக் கூட வரணும். அப்ப என்னமோ எல்லாரும் வந்து போராடினாங்கதா. இப்ப ஒருத்தருக்கும் ஒரு வீருசமில்ல. அல்லாம் எதோ கையில காசு கெடச்சா கள்ளுக்கடயில குடுத்திட்டு பேசாம போயிடுறாங்க… அல்லாரும் வரணும்…”

“சரிப்பா, வாரம் போ…”

“தடி, கம்பு, அருவா எல்லாம் கொண்டிட்டு ஒரு ஆறு மணிக்கே வந்திடணும். நமக்கென்னாத்துக்குன்னு நினைச்சிரக் கூடாது. நம்மளப்போல தொழிலாளி வீரபுத்திரன்…”

“சரிப்பா…”

“கோயில் திருவிழாவுக்கு இங்கேந்து ஒரு பொம்பிளயும் மகில் எடுத்திட்டுப் போகாம பாத்துக்குங்க. நமுக்கும் அதுக்கும் ஒண்ணும் சம்பந்தமில்ல.”

“சரிப்பா…”

அவர் ‘சரிப்பா சரிப்பா’ என்று சொல்லும்போது இவனுக்குச் சிறிது சந்தேகம் தோன்றுகிறது. “என்னாடா இந்தப்பய யாருன்னு நினைச்சிராதீங்க. நாம பலத்தக் காட்டணும்…”

“அதான் சொல்லிட்டியேடா…! எல்லாம் கேட்டுக் கிட்டீங்கல்ல? பாத்துப்புடுவோம்…”

“அப்ப… இத்தச் சொல்லி போட்டுப் போவத்தா வந்தேன். நா வார.” வடிவு எழுந்திருக்கிறான். தடியை எடுத்துக் கொள்கிறான். சாக்குக் கொங்காணியையும் எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.

எல்லா ஓசைகளையும் அசைவுகளையும் துடைக்கும் வண்ணம் ஒரு திரை விழுந்து விடுகிறது.

இவன் வாயிற்படியைத் தாண்டும்போது, அந்தத் திரையை மெல்லக் குத்துவதுபோல் குழந்தையின் சிணுங்கலொலி கேட்கிறது.

அத்தியாயம்-21

அம்சு இரவுச் சோறுண்ட பின் தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு முழு நாளாகிறது. தாயும் கூடக் காந்தியிடம் பேசவில்லை.

காந்தி மூலையில் நின்று உள்ளூறக் குமுறுகிறாள்.

கிட்டம்மா “இடியாத் தலல வுழுந்திடிச்சுக்கா!” என்று ஓலமிட்டுக் கொண்டு வருகிறாள்.

“வாய்க்காரு புதுக்குடி போயிருக்காரு. சொல்லிட்டுப் போவலான்னு வந்தே. நேத்தெல்லாம் ஒரே அலயா அலஞ்சிட்டம். இப்பிடி இடியா வந்திரிச்சே!”

லட்சுமி நாகுவைச் சோறு தின்ன வைத்துக் கொண்டிருக்கிறாள்.

“நா நல்லூரு நாயக்கர் நெலத்திலே சம்பா நடவு. நாயக்கரம்மா கூட ரெண்டு நா கூலி வருதேன்னு போயிட்டே செலவுக்கே கட்டல. இன்னிக்கு வாரப்ப வெளக்கு வச்சிப் போச்சி. பஸ்ஸு வரும்னு நின்னு பார்த்தே வரல. மழவேற தூத்தப் போட்டுக்கிட்டே இருக்கு. கடத் தெருப்பக்கம் வாரச்சேதா காதுல வுளுந்திச்சி. குஞ்சிதத்த வேற புடிச்சிட்டுப் போயிருக்காவளாம்?”

“அவ பேச்ச எடுக்காதீங்கக்கா! என் தலக்கிக் கல்லுவுழுந்ததே அந்த நேயினாலதா. நேயி அவ புழுத்துத் தெருத் தெருவா அலஞ்சி சாவணும்! எம் வவுறு எரியிது!”

கையைச் சொடுக்கிக் கிட்டம்மா சபிக்கையில் காந்திக்கு உடல் குலுங்குகிறது.

“அவள ஏன் சாபம் போடுற? அவ அலஞ்சிட்டாப்பல உனக்கு நல்லாயிடுமா? நாமதா ஏற்கெனவே ஈனக்குடில பெறந்து நாயாப் படுறமே, பத்தாதா?”

“வூட்டோட வுழுந்து கெடங்கன்னு அடிச்சிப்பே. ஆபுரேசனப் பண்ணித் தொலச்சிடே, புள்ள வாணாமுன்னு. அந்த ஆம்புல கொணந்தெரிஞ்சும்; இப்ப கையுங்களவுமாப் புடிபட்டுச் சந்திசிரிக்கிது.”

“இப்ப இவரு புதுக்குடிக்குப் போயிருக்காரா?”

“ஆமா. பணங்காசு தோது பண்ணணும், சங்கத்துல பேசணும்னு சொல்லிட்டுப் போயிருக்காரு…”

கிழவி வாயிலிலிருந்து வந்து அருகில் உட்காருகிறாள்.

“புள்ளங்களெல்லாம் வூட்டில இருக்கா?”

“நேத்து பூரா பட்டினி. அன்னாடம் கஞ்சிக்காச்சக் கடன் வாங்குற கதியாயிருக்கு. அல்லாருக்கும் இவ வெடுக்குத் துடுக்குன்னு பேசிட்டுத் திரியிறாளேன்னு காட்டம். மாட்டி வச்சிட்டாங்க… நா என்ன பண்ணப்போற…?”

“அழுவாதடி? இதுக்குமேல எத்தினியோ வந்திருக்கு. என்னாடா, நாம தொடுற பொம்பிளய இவனும் கை வைக்கிறதான்னு கூட மாட்டிருப்பானுவ, ஒனக்குத் தெரியாது. அந்தக் களுத கோனாம் பய ஒருத்தன நம்பி ஓடி வந்தா, அவெ வுட்டுட்டுப் போயிட்டா. நாஞ் சொன்னே செவனேன்னு இங்க ஒரு பக்கம் இருந்துக்க. இல்லாட்டி இங்க நம்ம குடில ஒருத்தனச் சேத்துக்க. காக்கா குளிச்சா கொக்காயிடுமா? மேச்சாதிக்காரனுக்குப் பொண்டாயிருந்திட்டா நீ மேச்சாதின்னு சேத்துப்பாவளாடீன்னே. பொம்புளயாப் பெறந்துட்டு சாதி என்ன சாதி? அல்லாச் சாதிலியும் பொம்புள சீரழியற சாதிதே. கட்ன பொண்டாட்டிய கண்ணும் கண்ணீருமா அடிச்சிட்டு வண்டி கட்டிட்டுப் போயி ஊருமேயுற ஆம்புள இருக்கிறப்ப பொம்புளக்கி என்ன காவந்து இருக்கு? அவனுவ மேவேட்டிய போட்டுட்டு டாவுடீவுன்னு வந்திடுவா. இவ கத இப்ப என்ன ஆச்சி? தன் சனம் ஊருநாடுன்னு இல்லாம வெரட்டிட்டிங்கன்னு நமக்கு இவ ஒழுங்கா இருந்தா ஈரம் இருக்குமில்ல? இப்ப எவன் வருவான்? போலீசு டேசன்ல அந்த நாயிங்க பொம்புளயக் கண்டா சும்மா வுடுமா?”

காந்திக்கு உதடுகள் துடிக்கின்றன.

குஞ்சிதத்தை அவள் பார்த்திருக்கிறாள். குளப்படியில் அழுந்தக்கால் வைக்கவில்லை எனில் எவ்வாறு கால் வழுக்கிக் கொண்டுபோய் விடுமோ, அவ்வாறே வாழ்கையும் கவனமில்லை எனில் ஊன்ற வழியில்லாமல் போய்விடும் போலும்!

தந்தை வெறுத்து உதாசீனம் செய்தார்.

தாய். “ஏண்டி கண்ணு…” என்று ஒரு அன்புச் சொல் உதிர்க்கவில்லை. இத்தனைக்கும், வாழ்க்கையில் கரிப்பையும், கசப்பையும் அநுபவித்துக் கொண்டிருப்பவள்…

களகளவென்று கண்ணிர் ஊறுகிறது.

கிட்டம்மா அவளைப் பொருள் பொதிந்த பார்வையால் பார்த்துக்கொண்டே “வாரேன்…” என்று போகிறாள்.

“அக்கா, சாப்பிட வாயே?” என்று அம்சுதான் கூப்பிடுகிறாள்.

லட்சுமி எதுவும் பேசாமலே நாகுவைக் கை கழுவத் தள்ளிச் செல்கிறாள்.

அவன் காந்தியை அப்போதுதான் பார்ப்பவனாக முகம் மலருகிறான்.

“கா…யி…கா.யி…”

ஒரு சிரிப்பு வழிகிறது. “முயாயி… வய்யா…”

“போடால…” என்று லட்சுமி தள்ளுகிறாள்.

காந்தி முன்பெல்லாம் விடுதியிலிருந்து வரும்போது அவனுக்குக் கடலை உருண்டையோ மிட்டாயோ வாங்கி வருவாள். அந்தப் பழக்கம்.

அவனுடைய பிறப்பும் வாழ்வும் ஒரு புதிய பொருளை அவளுக்கு அறிவுறுத்துகிறது. இந்த நாகு பெண்ணாகப் பிறந்திருந்தால் மூன்று வயசிலேயே வயிறு காய்ந்து இறந்து போயிருக்கும். இத்தனை நாட்கள் உயிர் வாழவே வாய்ப்பு இருந்திருக்காது.

“ஏண்டி இப்ப என்னாத்துக்கு அழுவ?… என்னமோ, போன, வந்த இப்ப இந்தத் தலகுனிவு வந்திருக்கலன்னா, இதே கிட்டம்மா ஊரு பூராத் தமுக்கடிச்சிட்டு வருவா?”

“இப்ப மட்டும் அடிக்க மாட்டான்னு என்ன நிச்சியம்? இவ என்னாத்துக்கு இப்ப உள்ள வந்தா? ஒளவறியத்தா!” என்று முணுமுணுக்கிறாள் பாட்டி.

“உங்கப்பா பார்த்தாராடி?”

“அல்லாம் பாத்தாச்சி. அடிச்சாச்சி, முள்ளு குத்திடிச்சின்னு சொல்லுறதும் கல்லு தடுக்கிடிச்சின்னு சொல்லுறதும் போல பொண்ணுதா கெட்டுப் போவுதுன்னு ஒலகம் சொல்லும். உள்மாந்திரம் என்னன்னு அறிஞ்சு தெரிஞ்ச பொம்பளையே அத நெனக்கலன்னா?”

அம்மாளும் பாட்டியும் பேசிக்கொள்கையில் அவளுக்குக் கண்ணிர் மடையாகப் பெருகிக் கன்னங்களில் வழிகிறது.

“வூட்டில செக்குலக்க போல நா இருக்கிறன, ஏங்கிட்டச் சொல்லிட்டுப் போனியாடீ? புதுக்குடில, கன்யாஸ்திரி, அவங்கதா டீச்சர், ஏங்கிட்டக் கேக்குறாங்க. காந்தி எப்படி இருக்குன்னு. அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, நாயக்கர் வூட்டம்மா, எல்லாம் புடுங்கி எடுத்திட்டாங்க. வரப்புல வந்து தெறிச்சிட்டா எந்தப் பயிரையும் கண்டவங்களும் முதிச்சிட்டுத்தாம் போவா. நாத்துக்கட்டுலேந்து நழுவிடிச்சின்னு ஆரு வயல்ல கொண்டு வய்ப்பானுவ? படிச்சவ, சூடுபட்ட குடும்பத்துல தலையெடுத்துவ, அச்சடக்கமா இருக்கத் தெரியாம போயிட்டியே?”

“என்ன மன்னிச்சிறது கிடக்கட்டும். எத்தினி சுமையோ செமக்கப் பிறந்திருக்கிற ஊரு உலகம் மன்னிக்காதே?”

அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

இரவில் பத்திரமான இடத்தில் படுத்திருந்தாலும் உறக்கம் வரவில்லை.

அன்று சாலியின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த சாகசத்தை நினைத்துப் பார்க்கிறாள். இரவு தனக்கு அடைக்கலம் கொடுத்த செங்கமலத்தையும், மின் வாரிய ஆபீசிலே நாட் கூலி வேலை செய்யும் அவள் புருசனையும், குழந்தையையும் நினைக்கிறாள். அவர்களிடம் ஒரு பொய்க் கதையைச் சொல்லி இரவு தங்கினாள். காலை பஸ்ஸுக்கு தணிகாசலமே அவளைக் கூட்டிவந்து புதுக்குடியில் ரத வீதியில் விட்டான். பஸ் சில்லறை கூட வாங்கிக் கொள்ளத் தயங்கினான்.

“ஏம்மா காதுத் தோட்டக் கழட்டித் தாரங்கற? பாவம், நாங்கொண்டு உன்னப் பத்திரமா வுட்டுடறேன்!” என்று கூட வந்தான்.

“படுபாவிப் பயல்கள். இவங்க ராச்சியம் தானே இப்ப நடக்குது? படவாவ இந்தப் படி ஏற விட்டதே தப்பு: நீங்கல்லாம் இப்படித் தொட்டாச் சுருங்கியா ஊளு ஊளுன்னு அழுறது தாம் புடிக்கல எனக்கு! அஹிம்சை அஹிம்சைன்னு சொன்ன காந்தி கூட ‘பொண்ணுகள் தற்காப்புக்குக் கத்தி வச்சுக்கலாம். குத்தமில்ல’ன்னு சொல்லிருக்கார். நான் சாவித்திரிகிட்டக் கூடச் சொல்வேன்…” என்ற ஐயரின் சொற்கள் காதில் ஒலிக்கின்றன.

“விபசாரத்தடைச் சட்டம்னா என்ன மாமா…” என்று அவரிடம் தான் கேட்டாள் அவள்.

“ஏன்? நீ எதுனாலும் வெளில சொன்னா உன்ன அதுல மாட்ட வச்சிடுவேன்னு பயமுறுத்தினானா?”

“உங்களுக்கு எப்பிடி மாமா தெரிஞ்சிச்சி?” என்று ஆச்சரியப்பட்டாள்.

“இது தெரியாதா? இதபாரு, இந்த தருமம், சட்டம் எல்லாம் ஆம்பிளைக்கித் தப்பிச்சிக்கத்தா. உங்களப் பயமுறுத்துறதுக்கு கற்புங்கறது. அது போயிடிச்சின்னு இவனுவ இஷ்டப்படி வேட்டயாடுறது. உன்னப்போல இருக்கிற பொண்ணுக இனிமே அழக்குடாது. வேண்டியது அழுதுட்டீங்க. பொம்பிள சுமக்கத்தா மனுஷாபிமானம். அந்தப்பய… நா அவன ஏழெட்டு வயசில கூட்டிட்டு வந்திருந்தா, பாத்தேன். இதுமாதிரி ஒரு பிரயோசனமும் இல்லாத சுமய சொமக்க வந்திருக்கு. சட்டம், சமூகந்தா, நீங்க இந்த அநியாயங்கள் எல்லாம் மாத்த நிக்கணும். இவனுவ மாதர் சங்கம் அது இதெல்லாம் போலி. உங்க சங்கிலிகளை நீங்கதா அறுத்துக்கிட்டு ஏன்னு கேக்கணும். அன்னிக்கிருந்த எத்தனையோ அநியாயம் போயிருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் அப்படியே இருக்கு. பெண்ணடிமத்தனந்தா. இல்லாட்ட நாக்குமேல பல்லுப்போட்டு எவனாலும் நாலாயிரம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கேப்பானா? பழகின ஆனய விட்டுப் புது ஆனய அடிமைப்படுத்துறாப்பல, உங்களுக்கு நீங்களா விலங்கு போட்டுக்கறாப்பல தொடர்ந்து வந்திட்டிருக்கு. எங்க வூட்டில, அவ பேசுறப்ப, நா பல சமயம் ஒண்ணுஞ் சொல்லாம ரசிச்சிட்டிருப்பேன். இப்பிடிப் பேசுறாளேன்னு கோவம் வந்தாகூட அடங்கிடும். பெண்ணுக்குச் சமமா பொருளாதார சுதந்தரம், பொறுப்பில் பங்கு, மரியாதை எல்லாம் உண்டு. சட்டத்த மாத்தணும். நீங்க ஏன்னு கேட்டுக் கிளம்பிட்டீங்கன்னா ஒரு பயலுக்கு மூஞ்சி கிடையாது. கற்பு பொம்பிளைக்கித்தானா? விபசாரம் பொம்பிளயாலா வருது?…”

சாவித்திரியின் சேலையை உடுத்துக்கொண்டு ஒரு வாரம் போல் அந்த வீட்டில் அவள் அவரிடம் துணிவுப் பாடம் கேட்டாள்.

தேவு அங்கு அடிக்கடி வருகிறான் என்பதை அப்போது தான் அறிந்தாள்.

அவளை அங்கு கண்ட முதல் நாளே அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான்.

“நீங்க… இங்கதா இருக்கிறீங்களா?”

“அட்வகேட் ராமசுந்தரம் வீட்டுக்கு வருவேன். நீ… நீங்க…”

“நீங்க அன்னிக்கு ஒட்டல் வாசல்ல நின்னிங்க. ஆனா என்னால எதுவும் சொல்ல முடியல. ஆனா, உங்களக் கண்டதும் எப்படீன்னாலும் தப்பிக்கணும்னு நிச்சயமா நினைச்சிட்டு ஓடிவந்தேன்… திரும்பி வாரப்ப உங்களக் காணல…”

“இருந்தேன். தையக்கடயில உக்காந்து நீங்க போறதப் பார்த்தேன். ஆனா… எப்பிடி என்னால அனுமானிக்க முடியும்?”

“அதாண்டா சொல்லிண்டிருந்தேன். நீங்கள்ளாம் இப்ப இருக்கிற சட்டங்களை ஒத்துக்கக் கூடாது. உங்க விலங்குகளை நீங்களே உடைச்சிக்கணும்னு!” தேவு சிரித்தான்.

“சாமி, வடக்கெல்லாம் பொம்பிளய வித்து வாங்குறதுக்குச் சந்த நடக்குதாம். பொம்பிளய அடகுவச்சுக் கடன் வாங்குறாங்களாம். இப்பவும் புருசன் செத்ததும் சிதையில படுத்துக்கிறோம்னு பொம்பிளக போறாங்களாம்.”

“அவ்வளவுக்கு இல்ல, நாம்ப மேலங்கறியா? வெளயாடலடா தேவு, நீதான் தீவிரமாப் பேசுற. இந்தப் பொம்பிளகள ஒண்ணுசேக்க முடியுமா உன்னால? அதுக்கு ஒரு மூவ்மெண்ட் வேணும். பொழுது விடிஞ்சு எத்தனை பெண் அவமானச் சங்கதிகள் கேட்கிறோம்?…” என்றார் அவர்.

“ஏன் சாமி அவுங்களக் கூட்டுற மூவ்மென்டையும் ஆம்பிளதா ஆரம்பிக்கணமா?…” என்று தேவு சிரித்தான் அவளைப் பார்த்து.

“ஆமாண்டா, அவங்கதா வெளில தல நீட்டவே இப்ப பயமாயிருக்குதே? அதெல்லாம் இல்ல, உங்களுக்கு நல்லது செய்ய வாரம்னு நம்பிக்கை குடுக்கலேன்னா வருவாங்களா? அதான் சொன்னேன்!”

“ஆரம்பிச்சிட்டாப் போச்சு சாமி. இவங்க வாழ்க்கையை ஒரு சட்டம் பாதிச்சா, சமுதாயத்தின் வளமையையுந்தா பாதிக்கிது. இவங்களப் போலவங்க ஊருக்கு வந்து பொம்பிளங்க கிட்ட மனமாற்றத்தைக் கொண்டுவரணும். கிராமத்தில எதும் பேச முடியிறதில்ல?”

“ஜமாயிடா, உனக்கு இப்பவே என் நல்லாசி. அந்த காலத்துல தேவதாசி ஒழிப்புக்கு முத்துலட்சுமி ரெட்டி சட்ட சபையில அப்படி ஒரு எதிர்ப்பைச் சமாளிச்சாங்கப்பா. தேவதாசி முறை ஒழிஞ்சாச்சின்றாங்க. ஆனா, இன்னிக்கி பொண்ணுங்கள வச்சு வியாபாரம் செய்யிறது சர்வசாதாரணமாயிருக்கு. படிக்கிறது, சம்பாதிக்கிறது எதுவும் மனசை மாத்தல. இதுக்கு முதல்ல ஆம்பிளங்க மாறவேணும். இவனுவள அடிச்சித்தான் மாத்தணும். உளுத்துப்போன சாதிப்பழக்கம், சம்பிரதாயம், சமூகப் பழக்கம், சமயப் பழக்கம் எல்லாம் மாறணும். ஒரு பொம்பிளை காவலில்லாம ஒரு தனி மனிசங்கிட்ட அம்புட்டுட்டா மானங்குலைக்கிறதா? என்ன அநியாயம்டா இன்னிக்கு நடக்குது?

நள்ளிரவில் அவர் கேட்ட, உரைத்த சொற்கள் உயிருடன் ஒலிக்கின்றன.

அவர் தந்த துணிவில் அவள் தேவுவுடன் திரும்பி வந்திருக்கிறாள். வந்தவுடன் முதலில் கேட்கும் செய்தி.

“ஏண்டி தூக்கம் வரலியா, முளங்காலக் கட்டிட்டு உக்காந்திருக்கிற?”

“என்னாடி? என்னாடி? எதுனாலும் இருந்திச்சின்னா சொல்லித் தொல. தாயப்போல சீரளிய வாணாம்.”

“யம்மா, குஞ்சிதம். போலீஸ் ஸ்டேசன்ல இருப்பாளே. உன்னையும் என்னையும் போல பொம்பளைதான! இதுக்கு முடிவே கிடையாதா? அன்னிலேந்து இன்னி வரயிலும், காட்டுமிராண்டி காலத்தேந்து, இன்னிக்குச் சந்திரனுக்கு மனுசன் போற காலத்திலும் ஒரே நீதிதானா? இப்பல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பொம்பளையும் ராவில வச்சிருக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்குதாம்?”

“சட்டம் எத்தினியோதா இருக்குன்னு சொல்றாங்க. அதொண்ணும் நமக்கு உதவுறதில்லியே?”

“அம்மா, ஒதவாத சட்டத்த நாம் மட்டும் ஏன் வச்சுக்கணும்? ஒதவாத சட்டத்துக்கு நாம ஏன் அஞ்சி நடக்கணும்?…”

“அஞ்சலன்னா என்னாடி செய்ய முடியும்?”

“பொம்பளக்கிப் பொம்பளையே எதிரியா நிக்காம நம்ம எனம்னு நினைக்கணும். கிட்டம்மா குஞ்சிதத்த என்னா திட்டுத் திட்டுச்சி? குஞ்சிதம் ஏதோ ஊருலேந்து புருசன் வெரட்டி வந்திச்சின்னு பாட்டி சொல்லிச்சி. இப்பிடி வந்த உடனே அவளைக் கண்ணியமா ஆரும் வாழ விடல. கட்டின பொஞ்சாதி புள்ளகளுக்குத் துரோகம் செஞ்ச வீரபுத்திரனுக்குக் கச்ச கட்டிக்கிட்டு இப்ப எல்லாம் போராடுவாங்க. ஆனா, குஞ்சிதம்…? அவ எடுபட்ட பொம்பிள. ஆ, ஊன்னா அவ விவசாய சங்கத்துக்கு மெம்பரில்ல, மாதர் சங்கத்துல இல்ல, ஆரு செலவு செய்யிறதுன்னு கேட்டாலும் கேட்பா? நாம ஒரு பத்து நூறு பொம்பிள போயி, எண்டா பொம்பிளயை ராவில டேசன்ல அடச்சி வச்சியன்னு கேட்டா?… கேட்டா? நாங்க பூச்சிங்க இல்ல, கொட்டுற தேளுன்னு காமிச்சா?…”

இருளில் அந்தக் குரலில் புதிய முறுக்குடன் தாயின் செவிகளில் பாய்கிறது.

“ஏண்டி? போலிச நாம எதுத்துக்க முடியுமா?”

“ஒருத்தரா முடியாது. பொம்பிளன்னா, அவள. அவள எப்பிடியும் நசுக்கிடலான்னு இருக்கிறத எல்லாரும் சேந்தா மாத்த முடியாதா? அம்மா ஆம்புளக வந்து நம்ம பக்கம் இருக்க மாட்டான்னு தோணுது. தப்பித் தவறி யாரோ ஒருத்தக இருப்பாங்களா இருக்கும். நாமளே சேந்து இதுக்கு ஒரு நியாயம் கேக்க இது சந்தர்ப்பம்… நாம் இத்த நழுவ விடக்கூடாது.”

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “சேற்றில் மனிதர்கள்

  1. ராஜம் கிருஷ்ணன் இவ்வாறு பெண்கள் அடிமைத்தனத்தை எதிர்த்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் அவர் ரசிகை.. அவரின் புத்தகங்கள் நிறையப் படித்திருக்கிறேன். இன்று தான் அவரை முழுமையாகத் தெரிந்து கொண்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *