சேற்றில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 528 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-22

நவராத்திரி விழா தொடங்கப் போகிறது.

பெருமாள் கோயில், சிவன் கோயில் இரண்டிலும் வழக்கத்துக்கு அதிகப்படியான பூஜைகளில் குருக்கள் பரபரப்பாக இருக்கிறார்.

மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சுதைச் சிற்பக் கோபுரம் கோபி வண்ணப் பின்புலத்தில் சிற்பங்கள் புதிய பொலிவு கொண்டு விளங்குகின்றன. சுற்றுக்குள் முன் மண்டபம் மொட்டையாக இருந்தது. அதற்குச் சிமந்துக் கூரை போட்டிருக்கிறார்கள். வெளிச்சுவரில் வெண்மையும் சிவப்புமாகப் பட்டை தீட்டித் துலங்குகிறது.

குடிசைகள் இருந்த இடம் துப்புரவாகச் சமமாக்கப் பட்டிருக்கிறது.

பெண்கள் பொங்கலிடக் ‘கோடு’ கிழித்திருக்கிறார்கள்.

கடை கண்ணிகள் வரப்போவதற்கு முன்னோடி ஒரு தொட்டி ராட்டினம் வந்திருக்கிறது. சேரிப் பிள்ளைகள் ஏக்கத்துடன் எட்ட நின்று பார்த்துக் கொண்டிருக்கையில், மற்ற சிறுவர் சிறுமியர் பத்துபைசாவும் இருபது பைசாவும் கொடுத்து அதில் சுழன்று களிக்கிறார்கள்.

ஆங்காங்கு வயல்களின் இடையே, கிராமங்களின் வெளியே ஒதுக்குப்புறங்களில் முட்டு முட்டாய் வைக்கோல் வேய்ந்ததும், வெறும் கூரையாகவும் மண் சுவர்களாகவும் விளங்கும் குடில்களில் ஒரு புதிய கிளர்ச்சி உருவாவதைத் தோற்று விக்கும் எந்த அடையாளமும் இந்தப் பகுதிகளில் தெரியவில்லை. குருக்கள் மலர் கொய்கிறார். குளத்தில் ஏட்டையாவின் வீட்டுக்குச் சொந்தமான நான்கு வாத்துக்களும், தன் உடமையாளரை விளக்கும் கம்பீரத்துடன் அன்னங்களைப்போல் உலவுகின்றன.

மாட்டு வாகடம் செய்யும் ஆசுபத்திரிக் கிழவன் இருமிக் கொண்டு ஆற்றுப் படித்துறையில் பல் துலக்குகிறான்.

மழை பெய்து சகதியாயிருப்பதால் ஆற்றோர மேட்டுப் பாதை வழுக்குமென்று பஸ்ஸை ஊருக்குள் நுழைய விடாமலே திருப்பிவிட்டான். சம்முகம் நடந்து வருகிறார். வெயில் சுள்ளென்று விழுகிறது.

இந்த வெயிலில் முதிர்ந்த மணிகள் குப்பென்று பழுக்கும். அறுவடைக்குத் தயாராகும்.

சனி, ஞாயிறு வந்துவிடுகிறது. திங்கட் கிழமைதான் சென்று வீரபுத்திரனை விடுவித்து வர முயற்சி செய்யவேண்டும். அதற்குள் பணம்… பணம் திரட்டவேண்டும்.

வடிவு… தடியை ஊன்றிக் கொண்டு ஆற்றுப் பாலம் கடந்து ஓடுவது தெரிகிறது.

சம்முகம் எதிர் வெயிலுக்குக் கண்களை சரித்துக் கொண்டு கூவுகிறார்.

“வடிவோய்…!… வடி…வோய்…?”

அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

இரவு முழுவதும் உறங்கவில்லை.

அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று கூடிப்பேசி முடிவு எடுக்கவே நேரமாகிவிட்டது. படுத்த இடத்தில் மூட்டைப்பூச்சிகள், மண்டையைக் கொத்தும் பிரச்னைகள்.

பொன்னடியான் காந்தியைக் கட்டுவான் என்று தோன்றவில்லை. ஐயரைப் பார்க்க இப்போது நேரமில்லாமலாகிவிட்டது.

வீட்டுப்பக்கம் திரும்புமுன் ஆற்றுக்கரை மேட்டில் அம்சு நிற்பதைப் பார்க்கிறார்.

“ஏண்டி, அங்கே போயி நிற்கற?…”

வடிவு… அவனுக்காகவா?

“என்னாடி?”

“ஒண்ணில்லப்பா… நாவு… நாவு ஓடிட்டான்…”

“எங்க?”

“அம்மாளும் அக்காளும் போனாங்க. இவனும் கூடப் போறன்னு ஓடினா. ரூமில் போட்டுட்டுப் போனாங்க. ரொம்பக் கத்துனான் தொறந்துவுட்டேன்.”

“அம்மாளும் அக்காளும் எங்க போயிட்டாங்க?”

எப்படிச் சொல்வது?

“என்னாடி நிக்கற? எங்க போயிட்டாங்க?”

“கிட்டம்மா மாமி வந்து ராத்திரி அழுதிச்சி. ரெண்டு பேரும் காலம எல்லாப் பெண்டுவளயும் சேத்துட்டு, அஸ்தமங்கலம் போலீசு டேசன்ல போயி ஆர்ப்பாட்டம் செய்யப் போறாங்க…”

சம்முகம் திகைக்கிறார்.

“பாட்டியெங்க?”

“இங்கதா இந்தப் பொம்புளகளெல்லாம் சேத்துக்கிட்டுப் போகப் போவுது…”

“அட? இவளுவளுக்கு இம்புட்டுத் தயிரியம் வந்திடிச்சா? ஆம்புளக எல்லாம் தொலஞ்சிட்டாங்கன்னு இவளுவ கெளம்பிட்டாளுங்களா?”

“வேற ஆரு இங்க வந்தது! தேவு வந்தானா?”

அம்சு இல்லை என்று தலையை ஆட்டுகிறாள்.

“இதென்னடா இது!…”

அவர் வாயில் முற்றத்தில் வந்து நிற்கிறார்.

தண்ணிர் கொண்டுவரும் ருக்மணி பார்த்து விடுகிறாள்.

“அண்ணன் இத வந்திட்டாரு. என்னாங்க!… நாங்க பொண்டுவள்ளாம் போலீஸ் டேசனுக்குப் போறதுன்னா முடிவெடுத்திருக்கு. தண்ணி கொண்டாந்து வெச்சிட்டு, அல்லாம் போறம். நீங்க புள்ள குட்டியப் பாத்திட்டு வூட்ட பொறுப்பா இருங்க!”

“அட… அம்புட்டுத் தயிரியம் வந்திடுச்சா? இதெல்லாம் ஆரு கெளப்பி வுட்டது?”

“ஆரு கெளப்பி வுடணும்?… யாருன்னாலும் கெளப்பி வுடணும்னா வருமா! எப்பயும் நீங்கதா போவிய? இப்ப நாங்க போறம். பதினோரு மணி வாக்குல அல்லாம் அஸ்தமங்கலம் ரோட்டில வந்திடுங்கன்னு லட்சுமியக்கா, சொல்லிட்டுப் போச்சி. தலவரு பெஞ்சாதியாச்சே, சொன்னா கேக்கவானாம்?”

சம்முகம் உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறார்.

செவத்தையனும் கோடியான் வீட்டுத் தாத்தாவும் வெயிலில் நிற்கின்றனர்.

“இப்பத்தா வரீங்களா, மொதலாளி… அல்லாம் போலீஸ் டேஷன் வளச்சிக்கப் போறாங்களாம்? நம்ம பொம்பிளகளுக்கு எம்மாந் தெகிரியம் பாருங்க!”

“வளச்சிக்கிடட்டம், ஆனா நாம இங்க உக்காந்திருக்கிறதா?…”

அம்மா வருகிறாள். கண்களைச் சரித்துக் கொண்டு.

“அல்லாரும் ரோட்டாண்ட போறாவ. சேத்துரு மதகுக்கப்பால ஒடயாரு வூட்ட போயிச் சொல்லிட்டு வாரக் காலமேயே குப்பன் சாம்பார அனுப்பிச்சிருக்கு. இவளுவல்லாம் போனா ஒரு தவ தண்ணிவோணுமில்ல?…”

“அது சரி, ஆரு இதெல்லாம் இப்ப திடீர்னு கெளப்பி விட்டது அம்மா?”

“ஏண்டா… ஆருன்னாலும் கெளப்பணுமா? வகுத்துப்புள்ள அந்த நேரம் வந்ததும் வாராப்புலதா. என்னா அக்குரவம்; பொம்பிள எத்தினிக்குப் பொறுப்பா? காந்தி திடீர்னு ராத்திரி எந்திரிச்சிப் போலாம்னா. பொம்பிளயப் போலீஸ் டேசன்ல வைக்க அதிகாரம் இல்ல. போயி வுடச் சொல்லுவம்னா. கெளம்பிட்டாளுவ போவட்டும்னு நானுந்தா சொன்னே. தா, ஆத்துக்கப்பால மேக்கால கெளக்கால எல்லாச் சேரி சனமும் பொம்பிளயும் போங்கடான்னு சொல்லச் சொன்னே. இந்தக் கெளவனும் கொமரிப் பெண்ணும் இல்லன்னா நானுந்தா போயிருப்பேன். வந்தது வாரது, துணிஞ்சடிச்சுப் போவம்! இனிமே என்னாத்துக்குடி பயப்படணும்? இனிமே எழக்கப் போறது ஒண்ணில்லன்னு போகச் சொன்னே…”

சம்முகம் சட்டைப் பையில் கடனாகப் பெற்று வந்த ஐம்பது ரூபாயை நெருடிக் கொள்கிறார். போகாதீர்கள் என்று தடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், காந்தியா இவ்வளவு புகை எழும்பப் பொறி இட்டிருக்கிறாள்?

வீரமங்கலத்தில் ஒரு பொதுக் கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்ற நினைவு வருகிறது. ஊனமுற்றோருக்கு உதவியளிக்கும் வங்கி விழா. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரங்கள் தொங்கின. பெரிய சாலையில் புதுக்குடியில் ஆட்சியாளர்களை, அதிபர்களை வாழ்த்தும் வளைவுகளும் தோரணங்களும் அமர்க்களமாக இருந்தன.

காவல்துறை மிகக் கெடுபிடியாக இருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் புகுந்தால் என்ன நடக்கும்?

சம்முகம் வீட்டுக்குள் அடி வைக்காமலே குளத்தைச் சுற்றிக்கொண்டு வயல்களினூடே செல்கிறார். ஒரு ஈ காக்கை தென்படவில்லை. அந்த நேரத்துக்கு வெயிலும், கதிர் வந்து தலையசைக்கும் பயிரின் மென்மையான வாசனையும் அவருக்கு உறுத்தவில்லை.

அம்மன் கோயில் சேரியின் முன் வண்ணார் குளத்தின் பக்கம் புதியதொரு சுவரொட்டி குடிசைச் சுவரொன்றில் தெரிகிறது.

‘ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு சைக்கிள் வழங்கும் திட்டம்!…’

‘விதவையருக்கு மறுவாழ்வு – உதவித் தொகையளிக்கும் திட்டம்!…’

‘தொழிலாளிகளுக்குச் சாதனங்கள் அளிக்கும் திட்டம்.’

அந்தச் சுவரொட்டியைத் தவிர, வேறு எதுவும் சேரியில் புதுமையாகத் தெரியவில்லை.

வண்ணார் குளம் நாகரிகக்காரியின் அற்ப உடைபோல் பாசியாடை உடுத்துத் தன் வறட்சியை மறைத்துக் கொண்டிருக்கிறது. மேல் சாதியார் அங்கு வரமாட்டார்கள்.

அழுக்கு வண்டுகளைப் போல் சில குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் பாதையில் நடந்துவரும் அவரை முறைத்துப் பார்க்கின்றனர். மற்றபடி எந்த உற்சாக உயிர்ப்பும் இல்லை. வீடுகளெல்லாம் வறுமையினால் தன் மேனி மறைக்க இயலாத குமரி, கந்தல் கொண்டு மூடி நாணிக் கண் புதைப்பதைப் போல் கண் புதைத்துக் கிடக்கின்றன. ஒன்றில் ஒரு கிழவி, மேல் சீலைக் கிழிசலுடன் இனிமேல் எனக்கென்ன என்று உட்கார்ந்து கிடக்கிறாள்.

“ஆயா, தேவு வூடு எங்க இருக்கு?”

ஆயாவுக்குக் குரல் காட்டக்கூடச் சக்தியில்லை போலும்! கையை மட்டும் அந்தத் திசையில் அசைக்கிறாள்.

இதென்ன, ஊரே சுடுகாடா போயிட்டாப்புல ஆரயும் காணோம்…!

படலைக்குள் சில குடிசைகள், சொறி நாய்கள். ஆட்டுப் புழுக்கைகள் நிறைந்த திண்ணையில் இன்னொரு கிழம். பிறந்த மேனியில் ஒரு பயல் அழுதுகொண்டு நிற்கிறான்.

“ஏண்டா அழுவுற? அம்மால்லாம் எங்க?”

பையன் விசித்து விசித்து அழுவதிலேயே இருக்கிறான்.

நடவு, அறுவடை என்று வேலை நெருக்கும் காலங்களில் தான் குடிசைகள் இவ்வாறு வெறுமையாகக் காட்சியளிக்கும். இந்த நிலை இப்போது அசாதாரணம். மூங்கிற் பிளாச்சி போட்ட குடிசை ஒன்று நாகரிகமாகத் தெரிகிறது. பிளாச்சுக் கதவு பூட்டியிருக்கிறது.

“ஏ பயலே? இந்த வூட்டுக்காரங்கல்லாம் எங்க?”

யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

வெயில் உச்சிக்கு ஏறுகிறது. அதற்குள் எல்லாரும் கிளம்பி இருப்பார்களா என்ன?

உள்ளுற ஒரு தோல்வி உணர்வும் எரிச்சலும் மண்டுகின்றன.

சாலையைத் தொடும் இடத்தில் சாக்கால் மூடிக்கொண்டு ஒரு சிறு கடை. அங்கும் விளம்பரத்தில் ஊனமுற்றோர் உதவி, சலவைத் தொழிலாளருக்கு அமைச்சர் இஸ்திரிப் பெட்டி வழங்குகிறார்.

ஒருகால் மாலைக் கூட்டத்துக்கு இப்போதே எல்லோரும் போயிருப்பார்களா!

சாலையில் கண்களைக் கொண்டு பார்க்கையில் சங்கக் கொடியைத் தூக்கிக்கொண்டு, நாலைந்து பேர் வருவது தெரிகிறது. இரண்டு பெண்பிள்ளைகள், மூன்று ஆண்கள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருகிறாள் ஒரு பெண்.

“வணக்கம் அண்ணே! நாங்க குமட்டூரிலேந்து வாரம்.”

“ஆரு சொல்லியனுப்பிச்சது?”

“செத்தமின்னதா, பளனி, குப்பன் சாம்பாரு மவ சைக்கிள்ள வந்து சொன்னா. அல்லா வாங்க அத்தமங்கலம் போலீசு டேசனாண்ட, தலவரப் புடிச்சி வச்சிருக்காவன்னா, ஒடனே ஓடியாரம்…”

ஓரத்துக் கடையில் வெற்றிலை புகையிலை வாங்கிக் கொண்டு நடக்கின்றனர்.

“நாஞ் சொன்ன, தலவர இல்ல. பொம்பிளயத்தா புடிச்சி வச்சிருக்குன்னு சொன்னான்னு, நீ இல்லன்னே!… சம்சாரத்தத்தா புடிச்சிருக்காவளா, இல்ல…”

“கிஷ்டா, மாரியம்மங் கோயில் நகையத் திருடிட்டான்னு அநியாயமா பழிபோட்டு வீரபுத்திரன்ங்கற தோழரையும், குஞ்சிதம்மாங்கற பொம்பிளயயும் நேத்துப் புடிச்சி வச்சிருக்கா. இந்த அநியாயத்தைக் கண்டிக்கத்தாம் போறோம் இப்ப.”

குருதிச் சிவப்பான கொடி ஒன்றுதான் அவர்களுடைய வித்தியாசமான தன்மையை எடுத்துரைக்கிறது. சாலையில் செல்லச் செல்ல, ஆங்காங்கு வயற்கரைகளில் ஒற்றையும் இரட்டையும் ஆணும் பெண்ணுமாக வருகின்றனர்.

இவர்கள் நடவுக்கோ, உழவுக்கோ செல்லவில்லை என்பதைக் கொடிகள் இனம் காட்டுகின்றன.

வீரமங்கலம் சாலை முகப்பில் மோரும் நீருமாகக் கரைத்து வைத்துக்கொண்டு கந்தசாமி வழங்குகிறான். குருவிச் சிவப்பு வெற்றிலை வாயும் நரைத்த முடியுமாக உடையார் நிற்கிறார்.

“வணக்கம் சாமி…”

“லே, சம்முகமா, பாத்தியாட பொம்பிளகள? அப்ப முதமுதல்ல நாம புதுக்குடிக்குக் கிளம்பினமே, நாப்பத்துமுணுல? அப்பிடி இருக்கு! முழுகம் பொம்பிளகதா. காந்தி காலம வந்திச்சி, ஆறுமணி இருக்கும். குப்பங்கூட, மாமா இப்பிடி சமாசாரம். நாங்க போகப் போறம்னிச்சி. அதுக்குள்ள இவ்வளவு கூட்டம் கூட்டணும்னா அவிங்களுக்கு எத்தினி ஆக்ரோசம் இருக்கணும்?” “மந்திரி வந்து விழாவில்ல இன்னிக்கு?… இப்ப போலீசு வந்திடாது…?”

“விழா முந்தாநாள்ள?… அது ஒரு சாங்கியம். கட்சிக்காரன் நாலு பேருக்கு வழங்கி எல்லாம் ஆயிப்போச்சே!…”

“நா தேதியக் கவனிக்கலியா? இன்னிக்கு இருபத்தெட்டில்ல, அது இருவத்தாறு…”

இவர் காந்தியையும் லட்சுமியையும் பார்க்கவில்லை. கிட்டம்மாவின் முகத்தில் சலனமில்லை. இவரைப் பார்த்து “வணக்கம் அண்ணே” என்று தெரிவிக்கிறாள். அவள் மனசுக்கு குஞ்சிதத்துக்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம் செய்வது பொறுக்கவில்லை போலும்!

“எத்தினி மணிக்குக் கிளம்புறாங்களாம்?”

ஓரத்தில் அமர்ந்து ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள்.

“அதா போயிருக்காவ, மின்னாடி கொஞ்சம் பேரு. பொம்புள வச்சிருக்கக் கூடாதாமில்ல! நமக்கென்ன எளவு தெரியிது!”

“இதா எங்க கொழுந்தியா மவள இட்டுட்டுப் போயி கண்டமானியும் பேசினானுவ… எத்தினியோ!”

ஆல மரத்துக் குருவிகள் இரைவதுபோல் ஒரு கலகலப்பு.

பொழுது சாயத் தொடங்கும் நேரத்தில் இவர்கள் அணி கிளம்புகிறது.

“மாதர் ஒற்றுமை, ஒங்குக!”

“பெண்ணை இழிவு செய்யும் பேய்களே, ஒடிப்போங்கள்!”

தேவுவின் குரல் தனித்து ஒலிக்க, பல குரல்களும் முறை வைக்கின்றன.

“நிரபராதிகளை விடுதலை செய்!”

“குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையங்களைக் கற்பழிப்பு நிலையங்களாக்காதீர்! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

காந்திக்கு எங்கிருந்து இத்தனை ஆவேசம் வருகிறது? லட்சுமி பழி தீர்க்க வந்திருக்கிறாளா? நெல் அறைவை ஆலையும், பெரிய பள்ளிக்கூடமும் இடம்பெற்ற அஸ்தமங்கலத்துக் கடை வீதியில் அண்மைக் காலங்களில் கண்டறியாத பெண்கள் கூட்டம். அந்தக் காவல் நிலையம் உயர் மதிப்புப் பெற புறக்காவல் நிலையத்திலிருந்து ஏற்றம் கண்ட பின் இத்தகைய கெளரவத்துக்கு ஆளாவது இதுவே முதல் தடவை. கூட்டத்தில், ஐந்துக்கொரு விகிதமே ஆண்கள் கலந்திருக்கின்றனர். அவர்களும் விளிம்பு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இவர்கள் காவல் நிலையத்தை நெருங்கு முன்பே நிலையத்திலிருந்து காவலர் மறிக்கின்றனர்.

“குஞ்சிதத்தை விடுதலை செய்! காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமல்ல!”

சம்முகம் முன் பக்கம் செல்ல விரும்பவில்லை. கூட்டத்தின் பின்னே அவரும், வீரமங்கலத்து ராசுவும், சின்னையாவும், சேர்ந்தாற்போல் நிற்கின்றனர். வடிவு தடியுடன் நடுவில் மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கிறான்.

மாலை வெயில் இறங்கும் நேரம்.

“எல்லாம் திரும்பிப் போங்க! போயிடுங்க! இங்க ஒரு பொம்பிளயும் காவல் நிலையத்தில் கிடையாது!”

“பொய்! குஞ்சிதத்தையும் வீர புத்திரனையும் இங்கு கொண்டுவந்தீர்கள், குஞ்சிதத்தை விடுதலை செய்யுங்கள்?”

“இதா… ஸ்டேஷன்ல யாரும் கெடையாது. பொம்பிளய நேத்து ராவே விட்டுவிட்டோம். என்னத்துக்கு வீணா ஆர்ப்பாட்டம் பண்ணுறிங்க?”

இது ஒரு சூழ்ச்சியா? நிசமா?

“இங்கே பெண் யாரும் இல்லை. வீணாக ஆர்ப்பாட்டம் செஞ்சு கலவரம் பண்ணாதீங்க. போங்க!”

“குஞ்சிதம் இல்லை என்பதை எப்படி நம்புவது?”

“நீவாணா உள்ளாற வா…! பாரு?”

“சீ!” என்று காறி உமிழ்கிறாள் லட்சுமி.

“நாங்க அத்தினி பேரும் உள்ளாற வந்து பார்ப்போம்!”

“இதம்மா, வீண் வம்பு பண்ணாம மரியாதயாப் போயிடுங்க. பெண் பிள்ளைகளை இரவுக்கு வைப்பதில்லை. விட்டுவிடுகிறோம். காலம ஸ்டேஷன்ல வந்து அவங்க பதிவு செஞ்சிட்டுப் போயிடுவாங்க!”

“அப்ப. அந்தம்மா எங்க இருக்காங்கன்னாலும் துப்பு சொல்லணுமல்ல?” லட்சுமியும் காந்தியுமே பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

“அது நாங்க சொல்றதில்ல. வாணா காலம எட்டுமணிக்கு வருவா. வந்து பார்த்துக்குங்க!” இவர்கள் என்ன செய்வதென்று திகைக்கையில் படார் படாரென்று அதிர்வேட்டுக்களைப் போன்று ஓசை கேட்க, கூட்டத்தினிடையே இருந்து பானைத் துண்டுகள் காகிதங்கள் வெடித்துச் சிதற, “ஐயோ, சுடுறான், சுடுறான்” என்று பெண்கள் அல்லோகல்லோலமாக அந்தக் குறுகிய கடைத்தெருவின் ஓரங்களில் சிதறிப் போகின்றனர். வெளியிருந்து காலிக்கும்பல் புகுந்து தள்ளுவதைப் புரிந்து கொண்ட வடிவும், பெண்களுக்குக் காவலாக வந்த வேறு சில ஆடவர்களும் கைத்தடிகளாலும், கொடிக் கம்புகளாலும் தாக்கத் தொடங்குகின்றனர்.

“சட்டிக்குள்ள பட்டாசு வெடிய வச்சிக் கொளுத்திருக்கிறானுவ… நம்ம ஆளுவ அமைதியா இருங்க. தோழரெல்லாம் அமைதியாக இருங்க!”

கற்கள் வந்து விழுகின்றன. சம்முகத்தின் நெற்றியை ஒரு கூரான கல் பதம் பார்க்கிறது. லட்சுமிக்குத் தோளில் அடி விழுகிறது. ஒரு நடுத்தர வயசுக்காரி மோதப்பட்டுக் கீழே விழுகிறாள். காவலரின் குண்டாந்தடி சுழன்று குழப்பத்தை அடக்க அகப்பட்டவர் மண்டையை உடைத்து விடுகிறது.

ஒன்றிரண்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட அவசரமாகக் கடைகளை மூடிவிட்டனர்.

வடிவுவின் தோள்பட்டையில் விழுந்த அடி, அவனைத் தரையில் வீழ்த்தி விடுகிறது. மீண்டும் எழுந்து பெண்பிள்ளைகள் தலைகளில் அடி விழக்கூடாதென்று தடுக்கிறான்.

கைகளில் ஓங்கி அடி விழுகிறது.

காந்தி இத்தகைய கலவரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுபிள்ளை உற்சாகத்துடன் முன் வரிசையில் நின்ற அவளுக்கு நெஞ்சு பதைக்கிறது. தேவு வடிவுவைத் தூக்கி நிறுத்தித் தோளில் கை கொடுத்துச் செல்கிறான்.

கீழே விழுந்த பெண்ணின் முகத்தில் தண்ணிரைத் தெளித்து முதலுதவி செய்யச் சிலர் விரைகின்றனர். அந்திநேரத்தில் பொல்லென்று மலர்ந்த புதரனைத்தும் மிதிபட்டுச் சிதைந்து மண்ணோடு புரண்டாற்போன்று அவர்களுடைய நம்பிக்கை உற்சாகங்கள் சிதைந்து போகின்றன.

அத்தியாயம்-23

அம்சுவுக்கு உள்ளே அடி வைக்கவே தோன்றவில்லை. சிறிது நேரம் கொல்லை ஆற்றுக் கரை மேட்டிலிருந்து எதிர்ச் சாரியில் செல்லும் ஆட்களைப் பார்க்கிறாள். இன்னும் சிறிது நேரம் வாசலில் இறங்கி, கிழக்கே குளக்கரை வரையிலும் சென்று வாய்க்கால் கடந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறாள்.

அவர்களெல்லாம் அஸ்தமங்கலம் போனால், போலீஸ் டேஷன் ஆர்ப்பாட்டம் என்றால் எப்போது வருவார்களோ?

மூக்கனும் அவன் மாமியார்க் கிழவியும் திண்ணையில் குந்தியிருக்கிறார்கள்.

“நாவுவ உள்ளே போட்டிருக்கியா அம்சு?”

“இல்ல பாட்டி. அவனத்தா தேடுறே, காலம ஒடிப் போயிட்டா…”

“அங்க கோயிலாண்ட ராட்டினம் வந்திருக்கில்ல? எல்லாம் ஓடிப்போயிருக்குங்க…”

வீட்டுக்குள் ஒடி வருகிறாள். பாட்டி தாத்தாவுக்கு சோறும் நீருமாக உப்புப்போட்டு மிளகாய்த் துவையலுடன் வைத்துக் கொடுக்கிறாள்.

“சோறு சமச்சி வைக்கிறாயாடி?… எதுனாலும் போட்டு ஒரு குளம்பும் காச்சி வய்யி. அந்தப்பய எங்க இருக்கிறானோ?”

“காணம் பாட்டி..!”

“ஓடிப் போயிட்டு வருவா. என்னமோ கப்பலே முழுவுறாப்பல இருக்கு, அவனப்பத்தி என்ன இப்ப?”

அம்சுவுக்கு உள்ளூற ஏதோ ஓர் அச்சம் ஆட்கொள்ளுகிறது. சோற்றை வடித்து வைத்து, ஒரு காரக் குழம்பைக் கூட்டி வைக்கிறாள். வீடுபெருக்கி, மாடுகளுக்குத் தண்ணிர் காட்டி, எல்லா வேலையையும் முடித்தாயிற்று. வெயில் பின் முற்றத்துச் சுவரில் ஓடிவிட்டது.

காந்தி மணிக்கணக்காகப் புத்தகம் படிப்பாள். படங்கள் கத்திரிப்பாள். ஒட்டுவாள். ஏதேனும் வீட்டுக்குள் செய்வாள். அம்சுவுக்கு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கவே பொருந்தாது.

நாகு இத்தனை நேரம் எங்கும் போய் வராமலிருந்ததில்லை. ஒருமுறை மருள் நீக்கி வரையிலும் போய்விட்டான். அவனை அந்தப் பக்கத்தில் எல்லாருக்கும் தெரியும். கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அவனுக்குத் தண்ணிரைக் கண்டால் பயம். ஆறு குளத்தில் நிச்சயமாக இறங்கமாட்டான்.
நெருப்புப்பெட்டி கிடைத்தால் கொளுத்துவான். பீடி குடிக்கவேண்டும் என்று சாடை காட்டுவான். வெளியே யாரேனும் குடித்துக் கொண்டிருந்தால் போய்க் கேட்பான். கோடித் தாத்தா அவனுக்குப் பீடி குடிக்கக் கொடுப்பார். அவள் அம்மா திட்டுவாள்…

“என்னாடி? அம்சு? இங்க வந்து நிக்கிற?”

“நாயக்கர் வூட்டம்மா!”

“வாங்கம்மா… வாங்கம்மா!…”

“என்னாடி? எல்லாம் பேசிக்கிறாவ? உங்கக்கா வந்திட்டாளாமே?”

“வாங்கம்மா, பாட்டி இருக்கு…”

“கேட்டதுக்குப் பதிலக் காணல?…”

“ஆமாம்மா. அல்லாரும் இன்னிக்கு அஸ்தமங்கலம் போயிருக்காவ…”

“என்னா விசேசம்?”

“வீரபுத்திரன் மாமாவப் போலீசில புடிச்சி வச்சிருக்காவல்ல? அதுக்குத்தா?”

நாயக்கரம்மா புருவத்தைச் சுளிக்கிறாள்.

“அதுக்கு இவங்கெல்லாம் போயி என்ன செய்யப் போறாங்கடி?”

“எனக்குத் தெரியாதுங்க, பாட்டிகிட்ட கேளுங்க…”

“சாதுரியக் காரியாச்சே நீ! ஏண்டி! கோயில் விழாவுக்கு இப்ப ஆரும் மகில் எடுத்திட்டுப் போயிக் கும்பிடுறதில்லைன்னு தீந்திடிச்சா?”

“அதப்பத்தி எல்லாம் பேசிக்கலிங்க. வூட்டுப்பக்கம் வாங்கம்மா, பாட்டி இருக்கு…”

“மூட்டு வலிக்கிதுடி கொஞ்சம் வாத மடக்கி எல கொண்டான்னு ஒங்கிட்டச் சொல்லச் சொல்லி அசந்துட்டே. கோமதி சொன்னா, மூலையா வுட்டுக் கொல்லையில இருக்குன்னு. அதுவர வந்தமே கோயில்ல என்னமோ வர்ணமெல்லாம் அடிச்சிருக்காவன்னாங்களே, பாத்திட்டுப் போவம்னு வந்தே. நீ இங்க மேட்டுல நிக்கிறியே? ஏன்னு கேட்டேன். உள்ள போடி! காலம் கெட்டுக் கிடக்குது!”

மாலை குறுகி மஞ்சள் முறுகிக் கருமை பரவுகிறது.

வெளியில் கட்டிய மாட்டை உள்ளே கட்டிச் சாணியை எருக்குழியில் போட்டாயிற்று. அம்சுவுக்குப் பொழுதைப் பிடித்துத் தள்ளினாலும் போகவில்லை. தாழ்வரையிலுள்ள அறை நாகுவில்லாமல் திறந்து விறிச்சிட்டுக் கிடக்கிறது. அக்கரையில் கள்ளுக்கடையில் பளிச்சென்று பெட்ரோமாக்ஸ் லைட் தெரிகிறது. கீழே பாம்பாய் நெளியும் ஆறு. முதுகில் வரிப்பாலம். அதன் மீது நிழலுருவங்கள் சொட்டாய்ச் சொட்டும் பனித்துளிப்போல் ஒவ்வொன்றாக நகர்ந்து வருகின்றன.

கொசுக்கள் ஙொய்யென்று செவிகளில் பாடுகின்றன.

மாரியம்மாவின் குரல் கேட்டது.

“புள்ள வந்திச்சா?”

“ஆரு அப்பாவயா கேக்குறிங்க? அவரு காலம வந்திட்டுப் போயிட்டாரு…”

“அவங்கல்லாம் இப்ப எங்க வருவாங்க? நாவு… அரச மரத்தடில குந்திட்டு பீடி குடிச்சிட்டிருக்கு. புள்ளங்கள்ளாம் கூடிச் சிரிச்சிச் சீட்டுதுங்க. இது புக வுட்டுட்டு இருந்திச்சு. வூட்டுக்குத் தெரியுமோ, தெரியாதோன்னு ஓடியாந்தே. சோறு வச்சீங்களா?…”

“வச்சே! நீங்க சாப்பிடுறீங்களா?…”

வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வேண்டாம் என்று மாரியம்மா கைகாட்டுகிறாள்.

“நாம் போறேன். பதனமா இருந்துக்க. அந்தப் பயல முடுக்கி வுட்டுட்டுப் போறேன். ரெண்டு வெறவு இருந்தா தாயே?”

முட்சுள்ளியை ஒடித்துக் கூடையில் வைத்துக் கொண்டு செல்கிறாள். இவர்களுக்கே விறகு தீர்ந்துவிட்டது. மூங்கிற் காட்டில் போய் கொஞ்சம் சேகரித்து வரவேண்டும்.

கொல்லைப்படலை இழுத்துக் கட்டிவிட்டு வாசற்பக்கம் வருகிறாள்.

“சோறு சாப்பிட்டுட்டுப் படுத்துக்கடீ. நா மூக்கனப் போயிப் பாத்துட்டு வரச் சொல்லுற.”

கிழவர் எழுந்து கேட்கிறார். “எல்லாம் எங்க போயிட்டாவ?”

“முன்ன போனமே புதுக்குடிக்கு அப்படி எல்லாம் போயிருக்காவ.”

“கூலித் தவராறா?…”

“இல்ல… பொம்பிளயப் போலீசில கூட்டிட்டுப் போயிருக்கிறானா…”

ஒரு வசையை உதிர்த்து விட்டுச் சாராயத்தைப் பருகுகிறார்.

லொக் லொக்கென்று இருமல் வருகிறது.

தெருவில் பிள்ளைகள் குஞ்சுகள் போகும் அரவங்கள்.

யார் வீட்டிலோ பிள்ளை அழுகிறது.

மாடத்தில் முணுக் முணுக்கென்று சிம்னி விளக்கு எரிகிறது.

நடுவிட்டில் அம்சு விரிப்பை விரித்துப் படுக்கிறாள். பாட்டி அருகில் வந்து சுருங்கிய கையை அவள் தலையில் இதமாக வைக்கிறாள்.

“சோறு தின்னியா கண்ணு?…”

“அவுங்கல்லாம் வரட்டுமே!…”

இருளில் மூங்கில் தோகைகள் சரசரப்பதுபோல் ஓசை கேட்கிறது.

“பாட்டி! நாவு… நாவு வந்திருக்கிறா…?”

“நீ இரு. நாம் போயிப் பாக்கிறே…”

பாட்டி பின்பக்கக் கதவைத் திறக்கிறாள்.

பின்பக்கம் யார் யாரோ ஒடிவரும் அரவங்கள். கிழவிக்கு நெஞ்சு திக்கென்று குலுங்குகிறது. நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. அவள் உள்ளே வந்து கதவை அழுத்தமாகத் தாளிடுகிறாள்.

அம்சு விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு வாயிற்பக்கம் நாகு வந்திருக்கிறானோ என்று பார்க்கப் போகிறாள்.

அடுத்த கணம் வாசலில் வெள்ளையும் சள்ளையுமாக இருளில் உருவங்கள். ஒரு மொட்டை பனியன், “டேய், சிறுக்கி துணிய அவுங்கடா வசமாச் சிக்கிட்டா” என்று கொக்கரிக்கிறது இரட்டைத் தொண்டையில்.

கிழவிக்கு எப்படிப் புலனாயிற்றோ?

அடுத்த நிமிஷம் உலக்கை அவன் கையில் விழுகிறது.

“டே மாடா, மூக்கா, அமாசி…! எல்லாம் வாங்க!…”

பாட்டி அம்சுவை உள்ளே இழுத்து வந்து நடுவீட்டுக் கதவுகள் இரண்டையும் தாழிட்டு விடுகிறாள்.

கிழவர் திடுக்கிட்டு எழுந்தாற்போல் திண்ணையில் வசை பொழிகிறார். ஈக்கூட்டம் போல் வாயிலில் கூடிவிடுகிறது. செவத்தையனும் மூக்கனும் மாடசாமியும் கையில் கதிரரிவாள், தடி சகிதம் வந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கின்றனர்.

துணியை உருவிச் சட்டையைக் கிழிக்கிறார்கள்.

“ஏண்டா இப்பிடித் திமிருபுடிச்சி மனிச ரத்தத்துக்குப் பேயா அலயுறீங்க?”

“அந்தக் கெளவன உதச்சி எறியுங்கடா! சாமி கோயில் பந்தல்ல நெருப்பு வச்சிருக்கானுவல்ல?…”

“பந்தலெறியிதா? எரியட்டும்! எங்க வவுத்தெரிச்சல் அதுவா பத்திட்டு எரிறது!…”

“பாத்திங்களா? இவனுவதா வச்சிருக்கானுவ! எலே நெருப்புக் குச்சியக் கிளிச்சிப் போடுங்க! இவனுவளும் எரியட்டும்!”

செவத்தையனும் மாடசாமியும் ரங்கனைப் பிடித்துக் குமுக்குகின்றனர். உழவோட்டி தூக்கி அடித்து சுமந்த உரம் வாய்ந்த உடல்கள். காலிக்கும்பலை எதிர்க்க அவர்கள் அனைவரும் திரண்டு ஆற்றுக்கரை மேடு, குளப்பக்கம் என்று அரண் நிற்கின்றனர்.

அம்சுவைத் திண்ணையில் பதுங்கச் செய்துவிட்டுக் கிழவியும் வெளியே உலக்கையைக் கையிலெடுத்துக்கொண்டு வருகிறாள்.

இரவு நெடிய இரவாக ஊர்ந்து செல்கிறது. குஞ்சு குழந்தைகள் கிழவர்கள் யாருமே உறங்கவில்லை.

மறுநாட் காலையில் இருள் விலகும்போது கோயிலும் சுற்றுப்புறங்களும் முழுமையாக மலரவில்லை.

பந்தல் கரிந்து மூளியும் மொக்கையுமாகக் கிடக்கிறது. உடம்பில் ஒரு துண்டு துணிகூட இல்லாமல் குஞ்சிதத்தின் உடல் காவாய்க்கரையில் கிடக்கிறது…

அத்தியாயம்-24

தங்கம் உருக்கித் தழல் குழைத்த தேனாக வரும் கதிரவன் கண்டு மகிழும் அறுவடை இல்லை. அவ்வப்போது வான் கருமை காட்டி, ஆதவனின் ஆட்சி அதற்குள் மலருவதற்கில்லை என்று அச்சுறுத்தும் நாட்களின் அறுவடை.

யாருக்குத் துயரமானால் என்ன? எங்கு ரத்தம் சிந்தினால் என்ன? எங்கு தீக்கருகினால் என்ன? உழைப்பைத் தந்தவர்களுக்குத் துரோகம் செய்யாத அன்னையே சத்தியம் என்று கதிர்கள் பழுத்துச் சாய்ந்திருக்கின்றன.

உழைப்பே எங்கள் சத்தியம் என்று ஒட்டிய உடலும் சுருங்கிய முகமுமாகக் குப்பன் சாம்பாரும், பொன்னையனும் மற்றவரும் குளிர் இறங்கும் அந்த விடியலில் களத்திலிறங்கி அரிகளைக் கொய்து வைக்கிறார்கள்.

இனி பெண்கள் வந்து அரிக்கற்றைகளை அடுக்கிக் கட்டுவார்கள். ஆண்களின் தலையில் கட்டுக்களைத் தூக்கிவிட்டு, நட்டுவைத்த பயிர்கள் எங்கள் கை மகத்துவம்தான் என்று நிறைவெய்துவார்கள்.

களத்தில் கட்டுக்களை அடித்த மணிகளையும் வைக்கோலையும் வேறாக்கும் போது உடனிருப்பார்கள்.

“இன்னும் நாலு நாப் போனா களம் கெடக்காது. நாயக்கர் களத்துக்குக் கொண்டிட்டுப் போயிடலாம்!”

“வானாம், அத்தினி தூரம் எதுக்குப் போவனும் முதலாளி? இதா, காவா தாண்டி ரோட்டோரம் பலவக் கல்லு போட்டு வச்சிருக்கு. நாலெட்டு, அடிச்சிரலாம்!”

செவத்தையன் கூறுகிறான்.

சம்முகத்துக்கு வேலை செய்வது பழக்கம் விட்டுப் போய் விட்டதால் தானோ வியர்வை இப்படி ஊற்றுகிறது? உள்ளுற ஒரு சூடு பரவித் தகிக்கிறது. மூச்சு வாங்குகிறது.

சற்றே நிமிர்ந்து ஆசுவாசம் பெறுகிறார்.

“நீங்க கரையேறிடுங்க. இத ஆச்சி, ஒரு நிமிட்டு.”

குப்பன் சாம்பார் அவரை விரட்டுகிறான்.

“அடே பழனி, கோட்டுப் பழுதய இப்பிடி வீசுடா..?”

தொலைவில் பெண்கள் காவாயைக் கடந்து வருவது தெரிகிறது. சிவப்பும் பச்சையும் நீலமுமாகப் புள்ளிகளாய் நகர்ந்து வருகின்றனர். எத்தனை பேர் இந்த நான்கு மா நிலத்துக்கு என்று கணக்கிட்டுப் பயனில்லை. இது பஞ்சத்து அறுவடை. ஆட்கள் அதோ இதோ என்று வந்து நெருங்குவார்கள். அத்தனை பேரும் பங்கிட்டுக் கொள்ளக் கொடுக்க வேண்டும்.

சாலையோரத்துக் கட்டாந்தரையில், முதன் முதலாக இந்தக் குறுவைக் கதிர்களை அடிக்கப் போகிறார்கள். பொன்னம்மா கூட்டிப் பெருக்குகிறாள்.

சாய்வாக வைத்திருக்கும் ஆறு பலகைக் கற்களிலும் பனி ஈரமா மழைத் துாற்றல் ஈரமா என்று வேறுபடுத்த இயலாத வகையில் ஈரம் படிந்திருக்கிறது.

களத்தில் அறுத்து வைத்துவிட்டுக் குப்பன் சாம்பாரும் செவத்தையனும் அமாவாசியும் தலைத்துண்டை உதறிக்கொண்டு விடாயாறப் போய்விட்டார்கள். வானில் இன்று வெயில் கிடையாது என்பதைப்போல் மேகம் கூடியிருக்கிறது. ‘கருமேக மில்லை’ என்று சம்முகம் திடம் கொள்கிறார்.

மாரியம்மா தன் கிழக்குரலைக் கிளப்பிக் குலவை இட்டுக்கொண்டு வருகிறாள்.

அது குலவையொலியா, நெஞ்சு பிளந்துவரும் ஒப்பாரியா என்பது புரியாமல் சம்முகத்துக்குச் சங்கடம் பிசைகிறது.

மரபுகளிலும் சடங்குகளிலும் ஊறிப்போன பெண் குலம்.

வாழ்க்கையின் அலைப்புக்களில் பாறைகளோடும், அத்துவானங்களுடனும் மோதுண்டாலும் இன்னமும் நம்பிக்கையை விடாத மூதாட்டி…

சிவந்த கண்களில் அவளுக்கு ஈரம் பசைக்கிறது.

அவள் அரிக்கற்களை ஆக்கையில் வைத்துப் பிணிக்கையில் அவள் அருகில் நின்று சுமட்டைத் தன் தலையில் ஏற்றிக் கொள்கிறார்.

“மொதலாளி! நீங்க போங்க. நாங் கொண்டிட்டுப் போறே…” என்று பழனிப் பயல் வந்து மறுக்கிறான்.

இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தில் உழைக்காமல் மேற்பார்வை செய்யும் ஒருவர் என்ற பெருமையைக் கொடுப்பதில் ஒரு கெளரவம்! ஆனால் அவர் கட்டைச் சுமந்துகொண்டு வரப்பில் நடக்கிறார். முன்பெல்லாம் இவ்வாறு ஓடி நடந்ததுண்டு. சங்கத் தலைவர் என்று ஆனபின், பெயருக்குக் கதிர் கொய்வாரே ஒழிய, அதிகமாக உழைப்புக் கொடுக்க இறங்குவதில்லை.

இப்போது, ‘உங்களைப்போல், உங்களில் ஒருத்தன் நான்’ என்று சொல்லிக்கொண்டு பாரம் சுமந்து வருகிறார்.

அம்சு, கைதேர்ந்த விரைவுடன் அரியை தலை கால் மாற்றிப் பார்த்து வைத்துக் கட்டுகிறாள்.

கல்லின் பக்கம் சாம்பாரும் செவத்தையனும், அமாவாசியும் கட்டுக்களைப் பிரித்து மும்மூன்று அரிகளாக எடுத்து மாற்றிக் கல்லில் ஓங்கி அடிக்கின்றனர், நெல்மணிகள் நிலத்தில் சிதறி வீழ்கின்றன.

சம்பா நெலுக்கு இத்துணை அவசரமும் உழைப்புமில்லை. நன்றாகப் பருத்துவிட்ட மணிகளை வெறுந்தரைத் தட்டலிலேயே உதிர்த்துவிடலாம்.

திடீரென்று வானக்கதிர் இந்த நிறைவுக் காட்சியைப் பார்க்கும் ஆவலில் மேகத்தினிடையே தலை நீட்டுகிறது.

அந்த ஒளியில், சாம்பாரின் தளர்ந்த மேனி, சத்தியத்தின் வடிவாக மின்னுகிறது. சம்முகம் நெஞ்சு நெகிழக் கற்றைச் சுமையை இறக்கிவிட்டு நிற்கிறார்.

இந்த சத்திய ஒளி பிறர் பங்கைத் திருடுவதாக இருந்தால் கிடைக்காது. இந்தச் சத்தியம், அவன் இப்போது குடித்துவிட்டு வந்திருப்பதால் மூளியாக மழுங்கி விடவில்லை.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் சம்முகத்துக்கு இப்படி ஓர் அழகிய வடிவம் தமக்கு இருக்குமா என்ற ஐயம் தோன்றுகிறது.

இவர்கள் எப்போதும் யாருக்கும் அடிமைகளில்லை. உயிர்க்குலத்துக்கு உணவளிக்கும் இத்தொண்டு மனிதத் தொண்டு. இதுவே பரிபூரணத்துவத்தின் விளக்கங்கள். மனைவிகள், தாயர், குமாரிகள் மானம் குலைக்கப்பட்டாலும், தலை மகன்கள் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் சாவடிகளில் சிறையிருந்தாலும், பொட்டு பொடிசுகள் தொண்டை நனைக்கும் உயிர்ப்பாலின்றி அழுது வாடினாலும், முதிய தாய் தந்தையர் பராமரிப்பவரின்றி முடங்கிச் சோர்ந்து நைந்து கரைந்தாலும் இந்த நேரத்தின் முக்கியத் துவத்துக்குச் சமானமில்லை.

குனிந்தும் நிமிர்ந்தும் நிமிர்ந்தும் குனிந்தும் மாற்றி மாற்றிக் களியில் விளைந்ததைக் கல்லில் அடித்து, மனிதனுக்கும் மாட்டுக்கும் என்று பிரித்துப் போடுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இவர்கள் தங்கள் குருதியை மண்மாதாவுக்கு உழைப்பாக்கி அவள் உயிர்ச் சூட்டை அமுதமாக்கும் இரசவாதம் புரிபவர்கள்.

இது பச்சை நெல்… இது ஒழுங்காகக் காய்ந்து வியாபாரியின் சாக்கை நிறைத்துக் கடனடைய வேண்டும்.

“என்ன சம்முவம்?. அறுப்பு வச்சிட்டியா? ரெண்டு நா போவட்டும்னியே?”

உடையார் சைக்கிளில் வந்து இறங்குகிறார்.

“ஆமா. நாலுநாளா வெயில் காஞ்சிருக்கு. நேத்து புதிர்பாத்தே, அறுத்துடலான்னு தோணிச்சி. வெலதா என்னமாருக்கும்னு புரியல…”

உடையார் உதட்டைப் பிதுக்குகிறார்.

“ஒண்ணும் சொகமில்ல. கட்டுப்படியே ஆவாது. அறுவதுக்குங் கீள தா கேக்குறாங்க…”

சம்முகத்துக்கு நா எழவில்லை. இந்தக் குறுவை அறுப்பை எதிர்பார்த்து எத்தனை கடன்கள் வாய் பிளந்து நிற்கின்றன! அன்றாட உப்புப் புளி சாமான்களிலிருந்து, வாழ்வா சாவா என்று நெருக்கும் போராட்டங்கள், அடிதடிகள், வம்பு வழக்குகள் ஆகிய எல்லாச் செலவுகளுக்கும் இந்த ஒரே சந்தர்ப்பத்தில் தான் ஆதாரம் காண முடியும்!

“நா. புதுக்குடி போறேன். காந்தி ஐயர் வீட்டில்தான இருக்கா?”

“ஆமாய்யா… இந்தப் போராட்டம் இப்ப அவங்க கிட்டத்தா முனைப்பா இருக்கு. பெண்களுக்குத்தான் எல்லாப் படியிலும் அநியாயங்கள் நடக்குது. இதுக்கு ஒரு பெரிய இயக்கம் செயல்பட வைக்கணும். அதுதான் எனக்கு வாழ்க்கையிலேயே லட்சியம்னு அது ஒரே பிடியா இருக்கு. ஐயர் கூட இப்ப இவங்களுக்காக அந்தக் காலத்தைப் போல அவ்வளவு ஆக்ரோசமா நிக்கிறாரு…”

“செய்யட்டும். நானும் அமைச்சர் வரார்னாங்க, பாத்து விசாரணைக் கோரிக்கை குடுக்கலான்னு போறேன். வடிவுக்கு சாமீன் கிடைச்சிடும். வீரபுத்திரனுக்கும் கிடைக்கும். தேவு விசயந்தா ஒண்ணும் செய்ய முடியாதோன்னு தோணுது…”

“கூட்டத்துல சட்டில பட்டாசை வச்சு இவனுவளே கொளுத்திக்கறானுவ. இதெல்லாம் திட்டமிட்டுச் செஞ்சிருக்கானுவய்யா. தேவு வெடிகுண்டு வச்சிருந்தான், தீவிரவாதிங்கற லிஸ்டில சேக்கிறாங்கன்னு வக்கீலையா அன்னிக்கே சொன்னாரு…”

“இங்க இருக்குற குண்டருகள வச்சிட்டே எல்லாக் காரியத்தையும் செஞ்சிட்டு இப்புடிப் பழியப் போடுறதும் இப்ப நடந்துட்டுத்தானிருக்கு. அந்தப் பொம்புளதா பந்தலுக்கு நெருப்பு வச்சான்னும், ஒடுறப்ப தடுக்கி வுழுந்து கல்லுல மண்ட தட்டிச் செத்திட்டான்னும் எவ்வளவு சாதுரியமாக் காரியத்தை முடிச்சி, ஒரு விசாரணயில்லாமக் கொளுத்திட்டானுவ?”

“காந்தி அதைத்தான் இப்பப் புடிச்சிட்டிருக்கு. குஞ்சிதத்துக்கு இவங்க செஞ்ச அக்கிரமம் எதோ தெரிஞ்சிருக்கு. அவளப் போலீசுல புடிச்சிக் குடுக்கிறாப்புல குடுத்து, இவனுவளே கூட்டியாந்து பயமுறுத்தி இருக்கிறாங்க. மசியல, தீத்துக் கட்டியிருக்கிறானுவ. காலம நாங்க ஓடிவந்து மறிக்கிறதுக்கு முன்ன, பொணத்த எடுத்திட்டாங்களே? காலம விடியறச்சே கொடியான் நாவுவத் தேடிட்டுப் போயிருக்கிறான். பொணம் கெடந்திருக்கு. பாத்திருக்கிறான். துணியில்லாம கெடந்திச்சி, பாத்தேன்னுறான். இவனுக்குப் பயம் புடிச்சி ஓடியாந்து வந்து சொல்லியிருக்கிறான். தேவு, வடிவு உள்பட பத்துப் பேரயில்ல போலீசுல புடிச்சி வச்சிருந்தான்? நா இங்க வாரதுக்குள்ள விசாரண முடிச்சி அவள எரிச்சிட்டானுவ!”

“அதான், எல்லாம் விவரமா விசாரண செய்யணும். அன்னக்கி ராத்திரி சேரில வந்து ஆடுகளைத் தாக்கியிருக்கிறாங்க. காந்தியும் மெட்ராஸில், மாதர் சங்கங்கள் பக்கம் இதை எடுத்துகிடணும்னு எழுதிப் போட்டிருக்கு. புதுக்குடியில இப்ப ஐயிருமக சாவித்திரியும், காந்தியும் ஒரு இளைஞர்மாதர் அணியே சேத்திருக்கிறாங்க. இந்தமாதிரி பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட மேல் படிப்பு, கல்யாணம்னு எதேதோ நினைச்சேன். ஆனா, அன்னிக்கு சொந்த வாழ்க்கையை விட நம் சமுதாய விடுதலைதான் முக்கியம்னு போராட வந்தோமே, அதே ஒரு வேகம் அவங்க கிட்ட இப்ப வந்திருக்கு.”

“வரட்டும். பட்டி தொட்டிலேந்து பட்டணம் வரயிலும் இன்னிக்குப் பொம்பிள வியாபாரம் நடந்துட்டுத்தானிருக்கு. அப்ப. நீ நாளக்கி வரியா?…”

“இந்த அறுப்பு இல்லன்னா நானும் வருவேன், அமைச்சரைப் பார்க்கும்போது நானும் இருக்கணும்தா. பணத்தட்டு வேற, வந்த வெலக்கு நெல்ல விக்கணும். ஆனா நான் விடுறதில்லன்னு வச்சிட்டேன். வீடு வாசல் போனாலும் போகட்டும்னு வச்சிட்டேன்…”

“இன்னிக்கு ஆளுறவங்க, அரிசனனுக்கு எல்லாம் செய்யணும்னு சொல்லிட்டாத்தான் கதை ஓடும். அந்தவகையில் ஒரு நியாயம் தோணியிருக்கிறதுதான் அன்னிக்கும் இன்னிக்கும் வித்தியாசம். அன்னிக்கு இந்த மேச்சாதிக்காரன் ‘கூலின்னாலும் குடுத்திடுவம். இவன் நமக்குச் சமமா நம்ம தெருவில நடக்கிறதா, மானம் போயிட்டுதே’ன்னு நெனச்சுத்தான் ஊரவுட்டுப் போனான். இன்னிக்கு எந்த மேச்சாதியானும் இப்படி வெளிப்படயாச் சொல்லமாட்டான். இல்லியா?”

“…கோயில்ல நெருப்பு வச்சுது பத்தி… எதுனாலும் குறிப்பு நீங்க காட்டணுமில்ல, அவுங்க குற்றச்சாட்டை மறுக்கறாப்பல…?”

“அதான் நீ வரணும்னு பாத்தேன்…”

“காந்திகிட்ட சொல்லிருக்கையா… அம்சு, எங்கம்மா எல்லாருமே இதுக்கு முக்கிய சாட்சிகளா வருவாங்க. நெருப்புக் கொளுத்திப் போட்டது நாவுவா இருக்கணும். இல்லேன்னா, அவுங்களே கொளுத்திருக்கணும். நாவு அன்னிக்குப் பீடி கொளுத்தி வச்சிட்டிருந்தான்னு மாரியம்மா சொல்லி இருக்கிறா. நெருப்புக்குச்சி கிடச்சா விளக்குமாத்துக் குச்சிய ஒவ்வொண்ணா எடுத்து எரியவுடுவான். உபயோகமத்த பயல இப்படிச் சோறூட்டிக் காப்பாத்துறாளேன்னு நா நினைச்சிப்பேன். இத்தன கலவரத்தில அந்தப் பயலுக்கு ஒரு கேடு வரல பாருங்க! பெருமா கோவில் வாசல்ல மண்ணள்ளிப் போட்டுட்டிருந்தான்னு யாரோ சொல்லி எங்கம்மா போயி கூட்டியாந்தாங்க. குஞ்சிதம் நெருப்பு வச்சிட்டுத் தானே வுளுந்தாங்கறது பச்சப் பொய்யி?”

“அப்ப நான் வரேன்.”

“வாங்கையா… கடசீவரய்க்குமில்ல, நம்பிக்கைய எப்பவும் வுடுறதில்ல. நமக்கு அடுத்த தலைமுறையும் நியாயத்துக்குப் போராடியே ஆகணும்னிருக்கு…”

சம்முகம் கண்ணீரைத் தேக்கிக் கொள்ளும் வகையில் வானைப் பார்க்கிறார். வானில் கருமை அச்சுறுத்தக் குவிகிறது.

கீழே விழுந்த பச்சை நெல்லைக் குவித்துச் சாக்கில் போட்டுக் கட்டி வைக்கிறார்.

பகலுணவுக்குக்கூட ஓய்வு கொள்ள இயலாதபடி வான் கருமை குவிந்து தூற்றல் விழுகிறது.

புகையிலையில் ஊறிய எச்சிலைத் துப்புவதற்கும் கூட ஓடாமல் மணிகளை வேறாக்க, அரிக்கற்றைகளை ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள்.

திருக்கை மீன் வாலினால் செய்த சாட்டையடியும், முரட்டுக்காலணி உதைகளும் பட்ட சாம்பாரின் மேனி, தளர்ந்து குலுங்குகிறது. அதைப் பார்க்கையில், தலைமகனுக்கும் அதே அநுபவங்கள் தொடருகின்றனவே என்று நெஞ்சம் இறுகுகிறது. ஆண்டானும் அடிமையும் இல்லை என்று சட்டப்படி தீர்ந்துவிட்ட பின்னரும் விடிவு காலம் வரவில்லை. நெஞ்சைக் குறுக வைக்கும் இழி சொற்களும், உடல் வாதையில் துடிதுடிக்க இம்சைகளுக்கும் ஆளாக இவர்கள் என்ன தவறைச் செய்திருக்கிறார்கள்?…

“மழ கொட்டும்போல இருக்கு முதலாளி. போயி வண்டி கொண்டிட்டு வாங்க…!”

வியாபாரிகள் உள்ளுரில் இருக்கிறார்கள். கேள்விப்பட்டு இந்த நெல்லை வாங்க வருபவர்கள் யாரும் இல்லை. மழை என்றால் வியாபாரிகளுக்குக் கை மேலாகிவிடும். ஆழும்பாழுமாகப் போகும்போது இன்னும் விலையைக் குறைப்பார்கள்.

வடிவு இல்லாதது கை ஒடிந்தாற்போல் இருக்கிறது. இன்னும் கட்டுக்களைச் சுமந்து வரப்போடு நடந்து, மடைகளில் இறங்கிக் கடந்து, கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சம்முகம் ஒடிச்சென்று வண்டி பிடித்து வருகிறார்.

சேகரித்த மணிகளை அள்ளிக்கட்டிய மூட்டைகளை வண்டியில் ஏற்றுகையில் துாற்றல் மழையாக வலுக்கிறது.

“சாம்பாரே, வண்டில குந்திட்டு நீங்க போங்க மைத்தத நாங்க பாத்துக்கறோம். எனக்குச் சங்கட்டமாயிருக்கு.”

“அட ஒண்ணில்ல, இதெல்லாம் புதுசா? மழை இன்னும் பெரிசா கொட்டுறதுக்குமுன்ன அடிச்சிப் போட்டுடலாம்.”

சம்முகம் கையைப் பற்றி நிறுத்துகிறார்.

“நீங்க நில்லுங்க. பழனி அடிக்கட்டும்…”

முதியவனின் கண்கள் கலங்குகின்றன;

புளிய மரத்தடியில ஒதுங்கி நிற்கிறார்.

“இன்னைக்குப் புதிசா? மழ இப்பிடிப் பயமுறுத்தும். பொறவு செத்த வுட்டுடிச்சின்னா அடிச்சிப் போட்டு வாரிட்டுப் போறதுதா. ஆனா. இந்த மனசுல இப்ப உஜாரா எதுமில்ல… இந்தப் பத்து வருசமா, அந்தப் பயதா புதுர் கொண்டுவருவா. நாயக்கர் ஊடோ, ஐயிரு பங்கோ, எதுன்னாலும் அவந்தா. நான் பாக்காத போலிசா? இப்ப உச்ச வரம்பு நெல்லபடியா அமுல்படுத்தணும்னு போராட்டம் போகலியா? லத்தியெடுத்துப் பொம்புளக பக்கம் அடிக்கிறானேன்னு குறுக்க பூந்தே, வெறட்டினானுவ ஆத்துலியே வுழுந்தோம். ஆனா… பய இருக்கறான். இதுக்குன்னே தலையெழுத்திட்டா. அவன் கையி மண்ணுல பேசுற கையின்னு மதிப்பா இருந்தே, அவங் கைய அடிச்சிக் கூழாக்கிட்டானுவளே அதுதா தாளலப்பா!”

குத்திக் கொடுத்தாற்போல் துயரம் பெருக, குலுங்கி அழுகிறான் சாம்பார். “அதெல்லாம் ஒண்ணில்லிங்க. பொம்பிள தலையில அடி வுழுந்திடும்னுதா கையவச்சு அவனே வாங்கிட்டி ருக்கிறான். ஆனா, டாக்டரிட்ட நான் கேட்டேன், பாத்தேன், நல்லாப்பூடும்னு காரண்டி குடுத்திருக்காரு, இல்லேன்னாலும் ஐயிரு அண்ணன் மவ, ரொம்பக் கைராசி. எங்காலு நடக்க முடியும்னு நெனச்சனா? அவங்க நமக்குன்னா எல்லா ஒதவியும் செய்வாங்க. கொண்டு காட்டி நல்லபடியாக்கிடலாம், நீங்க ஏன் வருத்தப்படறீங்க? செத்த வூட்டப்போயி இருங்க. அதா முக்காலும் முடிஞ்சிரிச்சே?”

“அவனுக்கு, தான் முன்ன நின்னு கூட்டம் நடத்தணும், போராட்டம் போவணும்னு ஒரே புடி. ராவுல ஐயனார் கொளத்துக்குப் போயி சொல்லிட்டு வந்திருக்கிறா! பஞ்சமியும் சோலையும் நாங்க கெளம்புறப்ப வாறாங்க. ‘ஏண்டால, சம்முவ வாய்க்காரக் கேக்காம நீயா என்னடா இது’ன்னு கேட்டேன். மொகங் குடுத்தானா?. அந்த வெடப்பய தேவு, அவம் பேச்சக் கேட்டுக்கிட்டு, பொம்பிளயள எறக்கினா ஒங்க மக. அது என்ன மாரியாத்தா ஆவேசம் வந்தப்பல ஒரே புயலால்ல பேசிச்சி? இப்ப என்ன ஆச்சி! அவனுவ அநியாயத்துக்கு நூறாயிரம் சாட்சி கொண்டாருவானுவ. நாம எங்க போவம் சாட்சிக்கு?”

“அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே, நமக்கு சாட்சி இருக்கு. சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது!”

“குந்தக் குச்சில்லன்னு இருக்கிறோம். எப்பிடிக் கேசு நடத்தி எப்பிடி மீளப்போறம்? கண்ட கனாவெல்லாம் கதிர் முத்துறப்ப பொகையான் வுழுந்தாப்பல பாழாயிடிச்சே!”

“சாம்பாரே, நீங்க என்னாத்துக்கு இப்பத் தனியா பிரிச்சுப் பேசுறீங்க? இது ஒங்க மகனோட ஒரு தனிப்பட்ட விவகாரமும் வழக்குமுமில்ல. இந்த உலகம் முச்சூடும் உள்ள சமுதாயப் பிரச்சினையோட வழக்கு. சமுதாயம் உசிர்வாழ, ஆதித் தொழில் இது. மண் ஒரு தனிப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் சொந்தமில்லங்கறது தீரணும். காத்து, சூரியன், சந்திரன் இதெல்லாமும் போல மண்ணும் தண்ணியும்னு தீரணும். நாம இதுக்காகப் போராடுறோம்னு நினச்சிக்குங்க. நீங்க என்னாத்துக்கு அதைரியப்படணும்? நாம செய்யிற தொழில் இல்லேன்னா. எதுவுமே இல்லே!”

வீட்டருகில் வண்டி வந்து நின்றதும், ஓட்டிவந்த செவத்தையனே மூட்டைகளை இறக்கித் திண்ணையில் போடுகிறான். அம்சுவும் லட்சுமியும் கூட்டி ஒழுங்காக்கி வைத்திருக்கிறார்கள். இதற்குள் சங்கிலி, கருப்பன் எல்லோரும் வருகிறார்கள்.

டீத்துள் போட்டு நீர் காய்ச்சி இறக்கி வெல்லம் போட்டு அம்சு எல்லோருக்கும் வழங்குகிறாள்.

“சம்முவம் களத்து மேட்டுல இருக்கிறானாடா சங்கிலி?”

பாட்டிக்கு மகனைப் பற்றிக் கவலை.

“பாழாப்போன மழ இன்னும் ரெண்டவுரு பொறுத்திருக்காது? அவுரு நாயக்கர் வூட்டுக்குத் தார்ப்பாயி வாங்கியாரப் போயிருக்காரு!”

நாகு வண்டியைப் பார்த்ததும் ஹைஹை என்று ஓடி வருகிறான்.

“போட…ல… போ!”

மூட்டைகளை அடுக்கியபின் எல்லோரும் அங்கேயே காத்திருக்கின்றனர். இருள் வருவது தெரியாமலே கவிந்திருக்கிறது.

திண்ணையிலிருக்கும் கிழவர் சட்டென்று விழித்துப் பார்க்கிறார்.

“மழையா பெய்யிது?”

“ஆமா. குடிக்கிற நேரம் வந்திரிச்சின்னா எந்திரிப்பே” பாட்டி அதட்டுகிறாள்.

அம்சு மாடத்தில் விளக்கேற்றிக்கொண்டு வந்து வைக்கிறாள்.

“அறுப்புவுட்டு, மழ புடிச்சிக்கிச்சே, பாதி நெல்லு வூட்டுக்கு வரலியே, எங்க கெடந்து அல்லாடுறாங்களோன்னு தவிக்கிது மனசு…”

“மள பெய்யிது. வாமடல துணியக்கட்டி வச்சா மீனு வுளும். எனக்குதா கண்ணு சுத்தமாத் தெரில. ஒருக்க பாரு…” என்று ஆரம்பித்துத் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளவும், பாட்டி மீண்டும் அதட்டுகிறாள்.

“தாத்தா அந்த காலத்துலியே இருக்காரு” என்று குந்தி இருந்து பீடி குடிக்கும் சங்கிலி சிரிக்கிறான்.

அப்போது, தன் பையினால் தலை முகத்துக்கு காப்புச் செய்துகொண்டு காந்தி விரைந்து வருகிறாள். தொடர்ந்து முழுதாக நனைந்த கோலத்தில் லட்சுமியும் சம்முவமும் வந்து படியேறுகின்றனர்.

“அட… காந்தி? நீ எப்ப வந்த?…”

“வந்திட்டே இருக்கிறேன். பஸ்ஸ அன்னாண்டயே நிறுத்திட்டான். அறுப்பு வுட்டிருக்கீங்களாப்பா இன்னிக்கி? நா நெனச்சிட்டே வந்தேன். நாகபட்டணத்துக் காப்பால காற்றழுத்த மண்டலம் உருவாகிறதுன்னு ரேடியோவிலே நேத்தே சொன்னான்…”

“ஒடயாரப் பாத்தியா?…”

“அங்க வந்திருக்கிறாரா?… நா இன்னும் பார்க்கல அப்பா. கால பஸ்ஸில போறேன். ஒரு முக்கியமான சங்கதி, நம்ம தங்கசாமி சொன்னாரு மட்றாசில, சங்கம் கட்சின்னு இல்லாம, பலதரப்பட்ட பொண்ணுகளும் சேந்து, பெண்களை இழிவு செய்யும் விளம்பரம், பத்திரிகை, புத்தகம் இதெல்லாம் தடுக்கணும்னு பெரிய கூட்டம், ஊர்வலம் நடத்தறாங்களாம். பெண்களுக்கெதிரா அடக்குமுறை அட்டூழியம் நடப்பதை எல்லாங் கண்டிச்சுப் பேசுவாங்களாம். நான் போயிக் கலந்துக்கறேன்னிருக்கிறேன், சாவித்திரி எங்கூட வருது. புதுக்குடில இருந்து இன்னும் ஒரு அம்மா கூட வராங்க. என்ன அக்கிரமம் அப்பா? பொண்ணுகளக் கடத்திட்டுப் போயி, அரபு நாடுகளுக்கு விக்கற வேலயே நடக்குதாம்! இதுதானா நம்ம பெருமையா சொல்லிட்டிருக்கிற பாரத நாட்டுப் பண்பு, கலாசாரம்! நெனச்சா வயிறெறியிது! மண்ணத் தனிப்பட்டவன் அடிமையா வச்சிட்டு அதன் சாரத்தைக் கறந்து, சுயநலம் பெருக்கிக்கிறான். அப்பிடிப் பெண்ணையும் அடிமையாக்கி விக்கிறான்; இதை – இந்த அக்கிரமங்களைக் காட்டி, வேசம் போடுறவங்களக் கொண்டு வந்து நிறுத்தணும்! இதுக்கு முடிவு கொண்டு வரணும்!”

“நான் பட்டணம் போறப்பா நாளக்கி!”

லட்சுமிக்கு நெஞ்சு விம்முகிறது.

அவள் தலையில் ஆதரவாகக் கை வைத்து, “முதல்ல ஈரத் துணிய மாத்திக்க காந்தி… போவலாம்…” என்று அழைக்கிறாள்.

சம்முகத்துக்கு நா எழவில்லை.

“ஆரு இருக்கா களத்து மேட்டுல?”

குப்பன் சாம்பாரின் தளர்ந்த குரல்.

“ஆரு இருக்கா…? ஆரு இருக்கா…?”

அந்தக் கேள்வி சம்முகத்தின் உள்ளச்சுவரை மோதி எதிரொலிக்கிறது.

தார்ப்பாயைப் போட்டு மூடிவிட்டு வந்திருக்கிறார்கள். நியாயமாக உழைக்கிறவன் பங்கில் இருக்கவேண்டிய மானமே இன்னிக்கின்னு இப்பிடிக் கொட்டுது. நாம அநியாயம் கேக்கலங்கிற சத்தியந்தான் இப்பக் காவல், அம்சு இந்தச் சட்டய வாங்கி உள்ள கொடில போட்டுட்டுப் பைய எடுத்திட்டு வா; இவங்கல்லாம் காத்திருக்காங்க எந்நேரமா?”

அம்சு பணப்பையைக் கொண்டு வந்து சம்முகத்திடம் கொடுக்கிறாள்.

“கண்டு முதல் ஒண்ணும் இப்ப பாக்குறாப்பல இல்ல. வெளவு நல்லாத்தா கண்டிருக்கு எதுக்கும் இருக்கட்டும்னு பணம் கொஞ்சம் கேட்டு வாங்கி வச்சிருக்கிறேன். இப்ப பத்துப்பத்து ரூபா தாரேன். விடிந்து கணக்குப் பாத்துக்கலாம்.”

இதற்காகவே காத்திருந்தவர்கள் கள்ளுக்கடைக்குத்தான் ஓடுவார்கள்!

“சாம்பாரே, நீங்க இப்ப எங்க வூட்டுக்குப் போறது? இங்க இருங்க?”

காந்தியை உறுத்துப் பார்க்கிறான் சாம்பார்.

“வடிவு நாளைக்கி வந்திருவா…”

“கையி எப்பிடி இருக்கு?”

“கையெல்லா நல்லாப் போயிடும்… வீரபுத்திரன் கூட வந்திடுவா, கேசுதா நடத்தணும்… ஆனா… தேவு அவுருக்குத்தா நா இப்ப மட்றாக போறதுகூட, அது முக்கியமான காரணம். நியாயம்னு உரக்கக் குரல் எழுப்பினா இப்பிடி ஒரு ஆபத்துக் கட்சின்னு போடுறது ஒரு தந்திரமா வச்சிறாங்க. இருக்கிற அக்கிரமத்தை எல்லாம் நல்ல வேசம் போடுறவந்தான் செய்யிறான். ஏன்னு கேட்டா, அவன் ஆகாதவன். தேவுவப்போல இருக்கிறவங்களுக்கும் நாம போராட வேண்டிருக்கு…”

காந்தியின் ஆழ்ந்த குரலும் மங்கலான ஒளியும் அவர்கள் சமுதாயத்தின் குரலாகவே ஒலிப்பது போன்ற சிலிர்ப்பைத் தோற்றுவிக்கிறது சம்முகத்துக்கு.

தலைத்துணியை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டு சாம்பார் திரும்புகிறான்.

“இப்ப என்னாத்துக்குப் போவனும்? மருமவ சோறாக்கி வச்சிருக்கா. இருந்து பேசிட்டுப் போவுறது?”

சம்முகம் அவன் பின்னே வந்து அழைக்கிறார்.

“இருக்கட்டும்பா! நா இப்பப் போற வூட்டுக்கு பொம்புள அப்பவே வூட்டுக்குப் போயிட்டா. சோறாக்கி எதுனாலும் கசக்கிக் கொளம்பும் வச்சிருப்பா!”

அவன் படியிறங்கிப் போகிறான். இருட்டிலும் அந்த உருவம் சத்திய வடிவமாகத் துல்லியமாகப் புலனாகிறது.

இருளோடு அவன் மறைந்த பின்னரும், உயிர்க்குலம் வாழும் உழைப்பைக் கொடுக்கும் அந்த மனிதனின் பிம்பம் மிக அழகாக மிகப் பெரியதாக வளர்ந்து வளர்ந்து ஆணென்றும் பெண்ணென்றும் இனம் பிரிக்கமுடியாத ஓர் ஆற்றலாக அவர் கருத்தை நிறைக்கிறது.

“அப்பா! உள்ளாற வந்து எதுனாலும் சாப்பிடுங்க!”

வாயிற்படியில் படச்சித்திரம்போல் தோன்றும் அம்சு அழைக்கிறாள். உடல் சிலிர்த்து அவர் திரும்புகிறார்.

(முற்றும்)

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *