நீர்க்கம்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 141 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மழையென்றால் எனக்குத் தமிழைப் போல் உயிர். ஏன்? அதிலும் ‘ழ’கரம் இருக்கிறதே என்பது மட்டும் காரண மில்லை… நான் என் வீட்டுத்தோட்டத்திலே வைத் திருக்கும் மரம், செடி, கொடிகள் வளர்வதற்கு அடிப் படையாக இருப்பதால்…நான் பழகும் மனிதர்கள் மனிதர்களாக இல்லை…ஆனால் மரங்கள் மரங்களாகவே இருக்கின்றன. இலை, கிளை, பூ, கனி ஆகிய இவற்றின் மீது துளிகள் பட்டாலும் வேர்வழி வரும் நீரையே அவை ஏற்று முறைமையாக வாழ்கின்றன. ஆனால் மனிதனுக்கு இதுமாறாக உள்ளதே! வாய் வழிப் பருகும் பழக்கத்தைக் கொண்டு மழை நீரையே உட்கொள்ள முடியாத உடல் நிலையைப்பெறுகின்றான். நான் அப்படியில்லை… மழை யில் நனைவதை ஓர் இலக்கிய நுகர்ச்சியாகக் கருதுகிறேன். 

சிறுவயதில் ஒருமுறை தந்தையார் கடிதம் எழுதிக் கொடுத்துக் “தபால் பெட்டியில் சேர்த்து’விடு?” என்றார். முகத்தில் சினம் தெரிந்தது. விலாசம் உள்ளபக்கம் மடிந் திருக்கும்படிச் செய்து சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். கண்ணை மூடிக்கொண்டு பேருந்து வண்டியின் ஓட்டுநராக என்னைக் கற்பனை செய்து ஒலி யெழுப்பிக்கொண்டே ஓடியபோது, மழை என்னை விட்டுவைக்கவில்லை. கல்லூரி விரிவுரையாளரின் பேச்சைப் போல் தொடர்ந்து பெய்தது. பழங்காலத்தமிழிலக் கியங்கள் சிலவற்றைக் கடல் கொண்டதைப்போலக் கடிதத்தின் எழுத்துக்கள் சிலவற்றை மழைகொண்டது. கவலைப்படாமல் பெட்டியில் போட்டுவிட்டேன். ஒரு சீட்டெடுத்தால் சோதிடக்காரன் கிளிக்கு ஒரு நெல் கொடுப்பான். ஆனால் செய்த செயல் எதையும், தந்தை பாராட்டியதே இல்லை…ஆனால் உள்ளத்தில் அன்பு இருக்கும்… சில நாட்களுக்கு பிறகு என்னை ஆரத்தழுவிக் கொண்டார். “ஏதோ கோபத்தில் ஒருவரைக்கண்டபடித் திட்டி எழுதிவிட்டேன்…பிறகுதான் தெரிந்தது தவறு என்று… நல்லவேளை எழுத்துக்கள் தண்ணீர்ப்பட்டு அழிந்து போச்சுதுன்னு எழுதியிருக்கார்… நான் பொழச் சேன்” என்றார். நான்மழையை நினைத்துக்கொண்டேன் அதற்காக நன்றிக் கவிதைகூடப் பாடியிருக்கிறேன். 

மனப்பக்குவம் வரப்பெறாத நிலையில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கிணங்க என்னோடு உடன் பயிலும் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவ நண்பன் ஒருவனுக்கு உதவித்தொகை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு கல்வி நிலையப் பொறுப்பாளரின் விட்டிற்குச் சென்றேன். 

மலைபடுகடாம் என்ற இலக்கியத்தின் தலைவன் வீட்டிற்குப் போகும் வழி எவ்வளவு அரிதோ, அதைவிட அரிது அவர் முகவரியைக்கொண்டு அவர் வீட்டைக் காண்பது..ஃபிளாஷ் போட்டோ எடுக்கும் புகைப்படக் காரரின் காமிராவைப்போல் மின்னல் பளிச்சிட்டது. பயிற்சியில்லாத பக்கத்து வீட்டுக்காரரின் மிருதங்க வாசிப்பைப்போல இடி கடுமையாக இடித்தது. 70 எம்.எம் சினிமாவில் பெய்யும் மழையைப்போல் அப்படியே மழை பெய்தது….ஒருவேறுபாடு… மழை திரையில் பெய்வதாகத் தெரிந்தாலும் திரையில் ஈரம் இருக்காது…ஆனால் இந்த அசல் மழை எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லார் மீதும் பெய்தது. 

எனக்கென்னவோ சலவை சோப் விளம்பரங்கள்தான் என் நினைவுக்கு வந்தன. ‘இருட்டறை யில் உள்ள தடா உலகம்’ என்பதைப் புரிந்துகொண்டேன். திரியழல் விளக்கு எரியும் வீட்டிற்குள் நுழைந்தேன். அது அடையா வாயிலாக இருப்பதைக்கண்டு, நான் தேடிய கொள்கைச் சான்றோர் வீடு அதுதான் என்று உணர்ந்தேன். மெல்லிய குரலில் யாரையோ கடிந்து கொண்டிருந்தார். “அலுவலகத் தொடர்பான பணி அலுவலகத்தில் தான், இவ்வாறு வீட்டிற்கெல்லாம் வந்து தொல்லைப் படுத்துவதும் தொல்லைக்குட்படுவதும் தவறு!” என்று கடுத தாளிப்பைப் போல் பொரிந்தார். என்னை அடையாளம் கண்டு “நீ எங்கே இங்கு வந்தாய்?” என்று தந்தையுணர்வோடு கேட்டார். “பொய்ம்மையும் வாய்மையிடத்த அல்லவா? மாடுமேய்க்கும் கண்ணனைப் பார்க்க வந்தேன்; வழி தவறிவிட்டேன் என்றேன்!” “மழைக்கு ஒதுங்க வந்தாயா?” என்று சொல்லிவிட்டு “அவன் எனக்கே வழிகாட்டி! அவன் ஊதிய குழல் கேட்டுத்தான் இந்த வானம் மழையைப் பெய்திருக்கிறது.” என்று கனிவான குரலில் பேசினார், ஒப்பனை செய்து கொண்ட நடிகை செயற்கையழகுடன் திரைப்பட இயக்குநர்முன் காட்சித் தொடக்கத்திற்குத் தான் தயார் என்பதுபோல மின்சாரக்குழல் விளக்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்தது. “அகஇருளைப் போக்கும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” என்று சொல்லித் தலைகீழாக யோகாசனம் செய்யும் மனிதனைப்போல, வித்தைக்காரரைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தது. 

ஒரு நல்ல நண்பனின் எதிர்காலம், என் அணுகு முறையால் பாழாகாமல் இருக்கக் காரணக்குறியாகிய மழை எனக்கு உதவிய மாண்பை நினைத்து நினைத்து வியக்காமல் இருக்க முடியாது. என் வீட்டுப்பக்கமோ, பள்ளிப்பக்கமோ ஒரு தூறல் கூட இல்லை. எனக்காகவே அவர் வீட்டுப் பக்கம் பெய்தது போல் இருந்தது. அலுவலகத்தத்துவம் புரிந்தது. 

இத்தகைய அருளுள்ளம் கொண்ட மழையைப் போய், பேய் மழை என்று சொல்கிறார்களே என்பதற்காக நான் வருத்தப்பட்டதுண்டு, 

என்னைப் பொறுத்தவரையில் மழை ஒரு குழந்தை தான்! இன்னும் சொல் ப்போனால் எடுப்பார் கைப்பிள்ளை. இல்லை யென்றால் மனிதனைப்போலச் சார்ந்ததன் வண்ணமாகுமா? சுற்றினமாகிய சாக்கடை யுடன் சேர்ந்து நலிகிறது. புனிதமான காவிரியில் பெய்கின்றபோது அதற்கு இளமையையும் அழகையும் ஊட்டுவதோடு தானும் பெருமை பெறுகின்றது. அது மட்டுமா? “விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நீர்க்கம்பி:” என்று சொன்னார் என் புதுக்கவிதை நண்பர். “யாராவது திருடிக்கொண்டு போய்விடப்போகிறார்கள்?” என்றேன். “இல்லை அது ஒரு பொதுவுடைமைக்கம்பி! எவரும் நுகரலாமேயன்றி உரிமைகொண்டாட இயலாது; அதற்கு இடமும் தராது!” என்றார். ”கவியே! நீ வாழ்க!” என்றேன். 

சுண்ணாம்புச் சுவர்களில்கூடப் பாசம் பெருக்கும் இந்த மழையை! ஒரு காப்பியக் கவிஞன் “மாமழை என்றானே! அவன் பெருமையே பெருமை! கலையென்ற பெயரில் கறுப்புக் காட்சிகளை வெண்மையாக்கும் காகிதப் புலிக் காட்சிகளை வெண்மையாக்கும் காகிதப்புலிக்கயவர் சிலர் “விலைப்டைப்பு விளம்பரச் சுவரொட்டிகளைக் கிழித்துக் குப்பையாக்கிக் காற்றுத் தூதன் கொண்டு தொட்டியில் எறிகின்றதே அதை நினைத்தால் நெஞ்சம் நிறைவாகும். சட்டத்தின் சந்து பொந்துகளையும் மனிதனின் தனிமக்குறைபாடுகளையும் அறிந்து தங்கள் கருத்தை முற்றுவிக்கும் இருள் மனிதர்களுக்கு, சவுக்கடி கொடுக்கும் இயற்கைச் சட்ட ஒழுங்குக் காவலன் இந்த மழைதான்! 

“தாத்தா மழை!” யென்றாள் பெண் வயிற்றுப் பேர்த்தி!” சாளரத்தில் சாரலைக்காணோமே!” யென்று நினைத்தேன். எங்கம்மா எங்கெ மழை?” என்று கனிவோடு கேட்டேன்!” ‘இங்க தாத்தா! இந்த சிலேட்டுல!” என்று சொல்லிக்கொண்டு அந்த நான்கு வயதுக் குழந்தை கையிலுள்ள சிலேட்டைப் பிடித்துக் கொண்டு தத்தித் தளிர் நடையிட்டு வந்தது. அப்போது வானொலியில் ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி”யென்ற பாடலைக் குயிலின் குரல் ஒத்த பெண்மணி பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்! குழந்தைக்குக்கூட மழை ஓவியமாக எவ்வளவு எளிதாக வந்து விடுகிறது? வியந்தேன்… 

இசை மழை, அன்பு மழை, கவிமழை ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் திளைத்ததால் கற்பனை’ உணர்வுச் சிறகுகள் கொண்டு நெடுநேரம் கவிதை வானில் பறந்துவிட்டு இலக்கிய உலகிலிருந்து இட்லி உலகத்திற்கு வந்தேன்.

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *