பாவம் என்பவனுக்கு பரிதாபமே வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 471 
 
 

சார், எனக்கென்னவோ மாரியப்பனை இன்னும் வேலைக்கு வச்சிருக்கறது சரியா படலை, போர்மேன் கந்தையா பிள்ளை சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த தொழிலதிபர் மாணிக்கம், அவ்வளவு மோசமாய் போயிட்டானா அவன் கோபமாய் கேட்டார். 

ஆமாங்க சார், அவனை பத்தி மேஸ்திரி நிறைய முறை கம்ளெயிண்ட் பண்ணிட்டாரு, நான்தான் அதை உங்க காது வரைக்கும் கொண்டு போக வேணாமுன்னு இருந்தேன். இப்ப என்னடான்னா இழுத்தார். 

என்னாச்சு சொல்லுங்க, மாணிக்கம் அவரை தூண்டவும் ‘கிளீனிங் செக்க்ஷன்ல’ இருக்கற மாசிலாமணிகிட்டே தவறா நடக்க முயற்சி பண்ணியிருக்கான், அந்த பொண்ணு பாவம் அலறி அடிச்சுகிட்டு மேஸ்திரிகிட்டே வந்து கதர்றா, அவரும் எங்கிட்ட வந்து ஏதாவது பண்ணுங்க அப்படீன்னு சொல்லிகிட்டிருக்காரு. 

ம்..ம்.. சில நிமிடம் யோசனை செய்தவர் நீங்க அவனை கூப்பிட்டு விசாரிச்சீங்களா? 

முதல்ல இரண்டு மூணு முறை கம்ளெயிண்ட் வரும்போது கூப்பிட்டு விசாரிச்சேன். அதுக்கே சரியான பதில் சொல்லாம தலைய குனிஞ்சு கிட்டு நின்னான். அப்புறம் சரி போறான்னு விட்டுட்டேன். இப்ப இந்த மாதிரி கம்ளெயிண்ட் வந்தப்புறம்.. 

மத்தபடி வேலை விஷயமா ஏதாவது கம்ளெயிண்ட் இருக்கா? அவன் கிட்டே. 

முதலாளியின் இத்தனை கேள்விகள் இவருக்கு எரிச்சலை உண்டு பண்ணின. கம்பெனியை பொருத்தவரை ஒருத்தன் தவறு செய்தான் என்று தெரிந்தால் அவனை உடனே நீக்கி விடும்படி சொல்லி விடுபவர் இன்று என்னடாவென்றால் இவனுக்காக இத்தனை கேள்வி கேட்கிறார். மனதுக்குள் நினைத்தாலும் இல்லை சார், அவன் வேலை செய்யற ‘கிரைண்டிங்க செக்க்ஷன்ல’ இது வரைக்கும் எந்த கம்ளெயிண்டும் வந்ததில்லை. 

அப்ப கொஞ்சம் யோசிக்கணும், அவர் போர்மேன் கந்தையா பிள்ளையிடம் அடுத்த விஷயங்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். கந்தையா பிள்ளை அதற்கு பதில் சொல்லிக்கொண்டு அவர் பின்னால நடக்க இந்த விஷயம் முற்று பெறாமலேயே போனது. 

மாலை கந்தையா பிள்ளையிடம் புலம்பிக்கொண்டிருந்தான் மேஸ்திரி, என்ன சார் இது ஒரு பொம்பளை கம்பிளெயிண்ட் பண்ணியிருக்காங்க, அதைய நான் உங்க கிட்டே வந்து சொல்றேன், இதுவரைக்கும் நீங்க அவனை கூப்பிட்டு கூட விசாரிக்கலை, வேற எதுவும் செய்யலை. அப்புறம் எப்படி சார் நம்ம கம்பெனியோட ‘ரூல்ஸ்சை’ மத்தவங்க மதிப்பாங்க. 

கந்தையா பிள்ளை யோசனையாய் மேஸ்திரியை பார்த்தார். நான் முதலாளிகிட்ட அவனை பத்தி சொல்லியிருக்கேன். விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காரு, இது வரைக்கும் நான் எது சொன்னாலும் உடனே செய்ய சொல்றவரு கொஞ்சம் தயங்கறாருன்னா ஏதாவது இருக்கும். பார்க்கலாம். 

என்னமோங்க சார் நான் சொல்றதை சொல்லிட்டேன், முணங்கியவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். கந்தையா பிள்ளை சிறிது நேரம் யோசனை செய்தவர் கிரைண்டிங் செக்க்ஷன் சூப்பர்வசரை பார்க்க சென்றார். 

நான்கைந்து பேர் அவரவர் பகுதியில் இயந்திரங்களை கிரைண்டிங் செய்து கொண்டிருந்தனர். ஒரே தீப்பொறியாய் காணப்பட்டது. அவரது கண்கள் அனிச்சையாய் மாரியப்பனை தேட அவன கருத்தாய் அங்கு படுக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு தகட்டை கிரைண்டிங் செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான். 

சூப்பர்வைசர் இவரை கண்டவுடன் விரைந்து வந்தவன் என்ன சார் நீங்க கூப்பிட்டு வர சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே? சொல்லிக்கொண்டே அருகில் வந்தான். 

ஒண்ணுமில்லை, வேலை எல்லாம் எப்படி போகுதுன்னு பார்க்கத்தான் வந்தேன், அப்புறம் நேத்து உங்களுக்கு அனுப்பிச்ச ‘பார்ட்ஸ்’ கிரைண்டிங் வேலை எல்லாம் முடிஞ்சுதா? 

 நேத்து நைட் ஷிப்ட் பாக்க வச்சு அதை எல்லாம் இன்னைக்கு காலையில மெயின் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பிச்சுட்டோம் சார், குட்..வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதில்ல, அதெல்லாம் கரெக்டா போயிட்டிருக்கு சார். உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க எல்லாம் எப்படி? யாரையும் வேலை செய்ய சொல்லி விரட்டாத அளவுக்கு அவங்களா கொடுத்த வேலைய செஞ்சுகிட்டிருக்காங்க சார். 

 கந்தையா பிள்ளைக்கு குழப்பமாக இருந்தது. இந்த மேஸ்திரி பேச்சை கேட்டு மாரியப்பனை பற்றி முதலாளியிடம் சொன்னது தவறோ? யோசித்தவர் தனது இருக்கைக்கு திரும்பினார். அதற்குள் முதலாளி மாணிக்கம் கூப்பிட்டதாக அலுவலகத்தில் சொல்லவும் அவரை காண விரைந்தார். 

மாலை ஆறு மணிக்கு மேல் ‘கிளீனிங்’ செக்சனில் இருந்து வந்த ஆட்கள் ஒவ்வொரு டிபார்ட்மெண்டையும் கூட்டி குப்பைகளை எடுத்து சென்றனர். கிரைண்டிங் செக்க்ஷனின் நுழைந்த மாசிலாமணியை அப்பொழுதுதான் வேலை முடிந்து வெளியே கிளம்பி கொண்டிருந்த மாரியப்பன் தடுத்து நிறுத்தி ஏம்மா உங்க மேஸ்திரி கிட்டே நேத்தே சொன்னேனில்லை, இனிமேல் இங்க உன்னை அனுப்ப வேண்டாமுன்னு, மறுபடி இங்க வந்திருக்கே? குரலில் கோபம் கொப்பளித்தது. 

இங்க பாரு நீ எனக்கு மேஸ்திரி இல்லை, அவர் சொல்ற இடத்துல வேலை செய்யறதுதான் என்னோட வேலை. ஒழுங்கு மரியாதையா உன் வேலைய பாத்துட்டு போ, அவளும் சளைக்காமல் பதில் சொன்னாள். 

மாரியப்பனை பார்க்க வந்த அடுத்த டிபார்ட்மெண்ட் சிவா, சண்டை போட்டுக் கொண்டிருந்த மாரியப்பனிடம் என்ன மாரியப்பா அவங்க கூட எல்லாம் உனக்கு என்ன தகராறு? வா வெளியே போகலாம் அவனை வலுகட்டாயமாக அழைத்து சென்றான். 

சே என்ன மனுசங்க, பாரு அவ உள்ளே போய் சுத்தம் பண்ணறேன்னு நல்ல “பீஸ்” ஏதாவது இருந்தா எடுத்து கொண்டு போயிருவா,  

எப்படின்னாலும் வெளியே போகும்போது செக்யூரிட்டி “செக்”பண்ணித்தானே விடறாரு. 

அதுதான் எனக்கும் புரியலை, இவ ஏதோ பண்ணறா, அது மட்டும் தெரியுது, ஆனா என்னன்னுதான் தெரியலை. அவங்க மேஸ்திரி கிட்டே சொல்ல வேண்டியதுதானே? அவன் கிட்டே பல முறை சொல்லிட்டேன்.  

அப்ப நீ மேலிடத்துல சொல்ல வேண்டியதுதானே? 

வேண்டாம், சிவா அந்த பாவம் நமக்கு வேண்டாம். அவங்களுக்கு வேலை போயிடுச்சுன்னா அதை விட கொடுமை வேறென்ன? நமக்கு ஏன் அந்த பாவம் எல்லாம். 

அப்ப உனக்கு தெரிஞ்சும் இதை மறைக்கறையில்லையா?. 

புரியுது, என்னை என்ன பண்ண சொல்றே? இதுக்குத்தான் அந்த பொம்பளைகிட்டே அப்படி சண்டை போடறேன், வேண்டாம் இந்த வேலைய செய்யாதே அப்படீன்னு, கூட இந்த மேஸ்திரி வேற, அவனுக்கும் தெரியும்னு நினைக்கிறேன், ஆனா விட்டு தர மாட்டேங்கறான். 

அவர்கள் பேசிக்கொண்டே மெயின் கேட்டில் இருக்கும் செக்யூரிட்டியிடம் சோதனையை முடித்து வெளியே வந்தனர்.   

மறு நாள் கந்தையா பிள்ளை, மேஸ்திரியிடம் இரைந்து கொண்டிருந்தார். ஏய்யா அந்த பொம்பளை சுத்தம் பண்ணறேன்னு எதையாவது தூக்கிட்டு போயிட்டிருக்கா, அது தெரிஞ்சும் நீ அவளுக்கு உதவி பண்ணிகிட்டிருக்கே. இன்னும் இரண்டு நாள்ல எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும், இல்லை… 

முதலாளி மாணிக்கத்தின் வீட்டில் அவர் மனைவி வீட்டு வேலைக்காரி பர்வதத்திடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.  

நான் உங்க முதலாளிகிட்டே எதுவும் சொல்லலையம்மா. உன் தம்பி மாரியப்பன் உன்கிட்டே புலம்புனது, நீ என் கிட்டே வந்து சொன்னது எதுவும் நான் அவர் காதுல போடலை. 

ஐயோ அப்ப அவங்களுக்கு வேலை போயிடுச்சா? வருத்தத்துடன் கேட்ட பர்வதத்தை பரிவுடன் பார்த்து அவங்களை வேற இடத்துக்கு மாத்தி விட்டுட்டாரு உங்க முதலாளி அவ்வளவுதான். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *