பிராயச்சித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 155 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பளீரென்று அறைந்தாள்; குடுகுடுவென்று விட்டாள். அந்த ஒரு கணத்துக்குள் அவள் மார்பு பட படத்ததைப் பார்க்க வேண்டுமே! வெகு வேகமாக மாடிப் படியில் இறங்கி கீழே வந்தாள். உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து விட்டது எதையோ திருடி விட்டவளைப் போல் திருதிரு வென்று விழித்தாள். அவளுடைய படபடப்பு: அடங்க அரைமணி நேரம் ஆயிற்று. ஆனாலும் முழுவதும் அடங்கின பாடில்லை. நெஞ்சில் ஏதோ ஒரு பெரிய பாரம் அமுக்கியது. செய்யக் கூடாத குற்றம் ஒன்றைச் செய்ததைப் போன்ற உணர்ச்சி: அதை மறைக்கப் பார்த்தாள் மறக்கவும் பார்த்தாள்; முடியவில்லை. 

இனிமேல் வெளியே தலையை நீட்டுவதற்குக்கூட அவளுக்கு யோசனைதான். அவனைக் கண்டு விட்டால் அவன் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன இருந்தாலும் அவன் ஆண் பிள்ளை; தான் பெண்; ஒரு ஆணை அவ்வளவு: துணிச்சலாக அறையலாமா? 

ஆணாயிருந்தால் என்ன? அவன் செய்த குற்றம். குற்றந்தானே? அதற்குத் தக்க தண்டனை அளிப்பது. அவசியமல்லவா? அவள் அதை எவ்வளவு சிரத்தையாகப் பாதுகாத்தாள் அது பூக்குமென்று எவ்வளவோ ஆவலோடு எதிர்பார்த்தாள் ! அது பூத்ததும், பூத்த புஷ்பத்தைம் பெரிய புதையலைப்போல் பறித்து வைத்துக் கொண்டாள். எட்டு வயசுப் பெண்ணுக்கு அவ்வளவு அக்கறை ஒரு விஷயத்தில் ஏற்பட்டது மிகவும் ஆச்சரியந்தான். அவளுக்கு. அந்த ரோஜாச் செடியினிடம் அபாரமான பிரேமை, அதற்கு உயிர் இருந்து விட்டால் அதை ஆயிரம் பாடு படுத்தியிருப்பாள். அது வளர்ந்த சட்டியின் வெளிப்பக்கத்தை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாள்! அப்பாவைக் கேட்டுக் கேட்டு அந்தச் செடிக்கு என்ன என்ன எரு வேண்டுமென்று தெரிந்து வரங்கிப் போட்டாள். 

வெறும் முள்ளோடு கூடிய கொம்பை நட்டாள்; பழைய இலைகளெல்லாம் வாடிவிட்டன; **guur, இது தளிர்க்குமா?” என்று ஆசையோடு கேட்பாள். 

“பேஷாய்த் தளிர்க்கும், கண்ணே” என்று அப்பா சொல்லும்போது அவளுக்கு உண்டாகும் நம்பிக்கைக்குக் கங்குகரை இல்லை. 

“இன்னும் ஒரு மாசத்தில் பூக்குமா அப்பா?” 

அவளுக்கு அவ்வளவு ஆத்திரம். மறுநாளே அது தளிர்த்துப் பூத்துவிடாதா என்று அவள் ஏங்குவாள். அந்தக் குழந்தை மனத்தில் இருந்த ஆவல் அப்படியே பூர்த்தியாவதென்பது சாத்தியமா? 

“இலையெல்லாம் வாடிப்போச்சே ; இனிமேல் இது பிழைக்குமா அப்பா?” 

அவளுடைய கண்களில் நீர் ததும்பும். “அசடே! இன்னும் ஒரு மாசத்துக்குள் இதன் பூவை நீ தலையிலே வைத்துக் கொள்ளப் போகிறாய், பார்” என்று தகப்பனார் உற்சாகத்தை மூட்டினார். 

தளிர் விட்டது. அவளுடைய உள்ளத்திலும் உவகைத் தளிர் தோன்றியது. அவளுடைய பராமரிப்பில் ரோஜாச் செடி நன்கு வளர்ந்து வந்தது. தளதளவென்று தளிர்த்து நிற்கும் அதைப் பார்த்தாலே அவளுக்கு ஓர் ஆனந்தம். ஒவ்வொரு தளிரும் அவளுக்கு ஒரு சுவர்ண பத்திரம். 

அரும்பு கட்டிவிட்டது. அவள் எத்தனை சாமியை வேண்டிக் கொண்டாள் தெரியுமா ? ” முதற் பூ உனக்குத் தான் தருவேன் பிள்ளையாரே” என்று தும்பிமுகவனை வேண்டிக் கொண்டாள். நல்ல வேளையாசுக் கண்டம் ஒன்றும் இல்லாமல் ரோஜா நங்கை மலர்ந்தாள், இந்த இளங் குழந்தை பார்வதி ஒரு புதிய சுவர்க்க பதவியை அடைந்தவள் போல ஆனாள். அன்று முழுவதும் அவளுக்கு ஒரே கொண்டாட்டம். அந்தப் பூவை ஆயிரம் விதமாக அலைத்துக் கசக்கி விட்டாள். 

அதுமுதல் ரோஜாப் பூவின் மோகம் அவளுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் ‘அரும்புகள் எத்தனை இருக்கின்றன? இன்றைக்கு மலரும் அரும்பு எவ்வளவு ? நாளைக்கு விகசிப்பவை எத்தனை? இன்னும் இரண்டு நாள் கழித்துப் புஷ்பிப்பவை எத்தனை?’ என்று எல்லாம் கணக்குப் போடுவாள். அதிலே அவளுக்கு ஓர் ஆனந்தம் ; ஒரு தனியான இன்ப உணர்ச்சி. 


‘நிச்சயமாக ஒரு பூவைக் காணவில்லை. நேற்றுத் தான் பெரிய அரும்புகளை எண்ணினேன். ஐந்து அரும்பு கள் இருந்தன. இன்றைக்கு ஐந்து பூ இருக்க வேண்டுமே; நாலே இருக்கின்றன, ஒன்று காணோம். ஆம்! யாரோ ஒன்றைத் திருடி விட்டார்கள்!’ 

திருடிவிட்டார்கள் என்று எண்ணும் போது அவள் வயிறு யகீரென்றது. இவ்வளவு நாளாக. கண்ணும் கருத்துமாகத் தான் வளர்த்த குழந்தை அது ! அதன் புஷ்பம் எல்லாம் தனக்கே சொந்தம் அதை ஒருவர் திருடிவிட்டால் …! 

இந்தத் திருட்டு அடிக்கடி நடந்தது. பார்வதிக்கு மனம் பொறுக்கவில்லை. திருட்டைக் கண்டு பிடிக்காமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டாள். 


பார்வதியின் ரோஜாச் செடி அவள் வீட்டு மொட்டை மாடியில் உ ள்ள கைப்பிடிச் சுவரில் வளர்ந்து வந்தது’ இந்த வீட்டைச் சேர்ந்தாற்போல உள்ள பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கும் இந்த வீட்டு மாடிக்கும் இடையிலே இடுப்பளவு கைப்பிடிச்சுவர் ஒன்றுதான் தடையாக இருந்தது. அங்கிருந்து இங்கே சுலபமாக வரலாம்; இங்கு இருந்து அங்கே சுலபமாகப் போகலாம். 

அந்த வீட்டுப் பையன் பரமசிவம் பன்னிரண்டு வயசு உள்ளவன். அவன்தான் ரோஜாப் பூவைத் திருடினான் என்பதைப் பார்வதி கண்டு கொண்டாள். ‘திருட்டுப் பயல்’ இவனைக் கையும் களவுமாகப் பிடித்து உதைக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். தன்னுடைய அப்பாவிடம் சொல்லவோ அல்லது அவனுடைய அப்பாவிடம் சொல்லவோ அவளுக்குத் தோன்றவில்லை. அந்தப் புஷ்பத்தின்மேல் இருந்த தீவிரமான ஆசை, அந்தத் திருடனைத் தன் கையாலேயே தண்டிக்க வேண்டுமென்ற ஆத்திரத்தை உண்டாக்கியது. சமயம் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

இன்றைக்கு எப்படியாவது. கண்டு பிடித்து விடுவது என்ற தீர்மானத்தோடு ஒளிந்து கொண்டு கவனித்தாள். கண்டு பிடித்து விட்டால் அவனை லேசில் விடுவதில்லை. என்ற தைரியமும் கொண்டாள். 

“அதோ வருகிறான் ; திருட்டுப் பயல். அவன் நாச மாய்ப்போக! இப்போதே போய் ஓர் உதை விடுகிறேன் சே, சே; கையுங் களவுமாகப் பிடித்து உதைக்க வேண்டும்…… இதோ வந்து விட்டான். கொடியைத் தொடுகிறான்; பறிக்கிறான்!” 

குடுகுடுவென்று ஓடினாள்; பளீரென்று அறைந்தான் திரும்பிப் பாராமல் கீழே வந்துவிட்டாள். எல்லாம் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தன. 

பரமசிவம் திக்பிரமை அடைந்து விட்டான். அவனுக்கு. ஒன்றுமே தோன்றவில்லை. கன்னத்தைத் தடவிக் கொண்டான். அடி ஒன்றும் அவ்வளவு பிரமாதமானதன்று. பார்வதியின் மென்றளிர்க் கரத்தில் ஓங்கி அறைவதற்கு அவ்வளவு திறமை ஏது? ஆனாலும் அவனுக்கு அவமானம் தாங்கவில்லை. அவள் அறைந்த அறை அவன் கன்னத் திலே மட்டும் படவில்லை அவனது? இருதயத்திலும் பட்டது.. அவனுடைய உள்ளத்தில் ஒரு கொதிப்பு உண்டாயிற்று; இந்தச் சிறுக்கிக்கு இவ்வளவு துணிச்சலா? பார்க்கட்டும். என் கை வரிசையை! பதிலுக்குப் பதில் செய்யா விட்டால் நான் பரமசிவன் அல்ல’ என்ற சங்கற்பத்தைச் செய்தான். தன் குற்றத்தைத் தெரிந்து கொள்ளவில்தை. பேசாமல், பறித்த புஷ்பத்தைப் பிய்த்தெறிந்து விட்டுக் கீழே போய் விட்டான். அவள் – பாவம் குழந்தை! திடுக் திடுக்கென்று இருதயம் அடித்துக் கொண்டது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு நாள் தைரியமாக மேலே ரோஜாப் புஷ்பம் கூடப் பறிக்கப் போகவில்லை. தலை வலியென்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. இரண்டு நாள் இந்தச் சாக்கு; பிறகு சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகள் வந்து விட்டன. 

‘என்ன இருந்தாலும் நாம் பண்ணினது தப்பு’ என்றே அவள் உள்ளம் அடித்துக் கொண்டது. பதிலுக்குப் பதில் அடிக்காமல் விடுவேனா?’ என்று அவன் மனம் துடித்தது. 


ஒரு வாரம் ஆயிற்று. பார்வதி ஆற்றங்கரைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளுடன் பத்து வயசுப் பெண் ஒருத்தியும் சென்றாள். பரமசிவம் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான். பார்வதியைக் கண்டவுடன் அவனுடைய உள்ளம் கொதிப்பு மூண்டது. ஓர் இமைப் பொழுதில் அவளுக்கு அருகில் வந்து தன் பலங் கொண்ட மட்டும் ஓங்கி ஓர் அறை அறைந்து விட்டு ஓடினான். 

குழந்தை கதி கலங்கி விழுந்து விட்டாள். பக்கத்தில் நின்ற பெண்ணும் பயந்து ஓவென்று கூவினாள். ஓடிப் போய் பார்வதியின் வீட்டில் தெரிவித்தாள். கூட்டம் கூடியது. பார்வதியின் கன்னம் வீங்கிவிட்டது. பரம சிவம்தான் அடித்தானென்பதைப் பார்வதியின் வீட்டார் அறிந்து அவனை வையத் தொடங்கினர். அவனை அவள் அடித்த சங்கதியும் வெளி வந்தது. இப்படிக் காரண காரியங்களைச் சர்ச்சை செய்ய இரண்டு வீட்டாருக்கும் சண்டை முற்றி விரோதம் உண்டாயிற்று. 

பார்வதியின் தகப்பனார் ஒரு செட்டியார் கடையில் குமாஸ்தாவாக இருந்தார். செட்டும் கட்டுமாக இருத்து இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து அந்த மாடி வீட்டை விலைக்கு வாங்கினார். அழகாக வைத்துக் கொள்வதில் அவருக்கு அதிகக் கவனம். அந்தக் குணமே பார்வதியினிடத்திலும் இருந்தது. 

பரமசிவத்தின் தகப்பனார் சர்க்கார் சம்பளக்காரர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இரண்டு கைகளாலும் திரு மகளை வரவேற்பவர். அநேகமாக அவர் ஒவ்வொரு வருஷத்திலும் தம் சொந்த ஊராகிய திருமானூரில் குறைந்த பக்ஷம் ஓர் ஏகார நிலமாவது வாங்காமல் இருப்பதில்லை. தம்முடைய பிள்ளையாகிய பரமசிவத்தை அவர் செல்லம் கொடுத்து வளர்த்தார். அவருடைய முரட்டுத்தனமே அவனுக்கும் படிந்திருந்தது. ஆனாலும் அவன் உள்ளத்திலே கனிவின் முளை இருந்தது. 

பார்வதியின் கன்னத்திலிருந்த வீக்கம் குறைய இரண்டு நாட்கள் ஆயின. உத்தியோகஸ்தன் – அதிலும் போலீஸ் உத்தியோகஸ்தன்-பிள்ளை அடித்து விட்டால் கேட்பார் யார்? இரண்டு நாள் கசுமுசுவென்றிருந்த சண்டை பிறகு ஓய்ந்து விட்டது. ஒருவர்க்கொருவர் பேசுவதில்லை என்ற முடிவோடு அந்தக் கலக அத்தியாயம் முடிந்தது. 

அவ்விரண்டு வீட்டார்களும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் மெளனம் சாதித்தார்கள் என்பது வாஸ்தவந்தான்; ஆனால், அந்தக் குழந்தைகள் இருவர் மனத்தில் மாத்திரம் அமைதி ஏற்படவில்லை; ஒருவகையான கொந்தளிப்புத் தான் உண்டாயிற்று. 

‘பாவம்! எவ்வளவு பெரியதாக விங்கிப் போய் விட்டது! நான் அந்தப் பூவைத் திருடியது முதல் குற்றம்; அவளை அடித்தது இரண்டாவது குற்றம். நான் அடித்த போது அப்படியே அவள் சுருண்டு விழுந்து விட்டாளே! நான் மிகவும் கெட்டவள். அவள் என்னை அடித்ததனால் எனக்கு வலி கூட ஏற்படவில்லையே. அவள் அடித்தது மூன்றாம் பேருக்குத் தெரியாதே. நான் செய்த பிசகுக்காகத்தானே அவள் அடித்தாள்? நானோ அவளைப் பேய் போல அல்லவா அறைந்து விட்டேன்! ஊரே கூடி விட்டதே. இந்த மாதிரி அசட்டுக் காரியம், அக்கிரமமான காரியம், நான் செய்தேன். இப்போதே ஓடிப் போய்ப் பார்வதி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கட்டுமா? அவள் என்னை ராக்ஷஸன் என்று தானே நினைப்பாள்? நம்முடைய அப்பா போலீஸ்காரராக இருப்பதனால் தானே நம்மைப் பேசாமல் விட்டு விட்டார்கள்? இல்லாவிட்டால் ஜெயிலில் அல்லவா போட்டு விடுவார்கள்?’ என்று பரமசிவத்தின் மனத்தில் பச்சாதாபம் உண்டாயிற்று. அவன் உள்ளத்தில் இருந்த கனிவு வெளிப்பட்டது. 

அவள் என்ன நினைத்தாள்? ‘அவன் நம்மை அடித்தது சரிதான் என்ன இருந்தாலும் பெண் பிள்ளையாகிய நாம் ஆண் பிள்ளையாகிய அவனை அறையலாமா? ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அடித்தோம்; அதற்குப் பதில் கிடைத்தது. அவனை, ஏன் பறிக்கிறாய் என்று கேட்டிருக்கலாம். பறிக்காதே என்று சொல்லியிருக்கலாம். அல்லது நாமே பறித்து, இந்தா உனக்கு என்று கொடுத்திருக்கலாம். நாம் அறைந்தது பிசகு. அறையா விட்டால்  இவ்வளவு கலகம் உண்டாகி இருக்காது’ என்று அந்த மாசுமறுவற்ற உள்ளத்திலே நினைவுகள் எழுந்தன. 

2 

பரமசிவத்தின் தகப்பனாரை அந்த ஊரை விட்டு மாற்றி விட்டார்கள். பரமசிவத்தின் தகப்பனார் தாயார் பார்வதியையும் அவள் வீட்டாரையும் மறந்து விட்டார்கள். அப்படியே பார்வதியின் தகப்பனார் தாயாரும் பரமசிவத்தையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மறந்து போனார்கள். வருஷங்கள் கழிந்தன. பரமசிவத்தின் தகப்பனார் எவ்வளவோ ஊர்களைப் பார்த்து விட்டார். பார்வதி இருந்த ஊருக்கும் எவ்வளவோ ஸப் இன்ஸ். பெக்டர்கள் வந்து போய் விட்டார்கள். 

ஒவ்வொரு நிகழ்ச்சியும்* நடக்கும் போது புதிதாகத் தோன்றி அடுத்த கணத்தில் பழையதாகி விடுகிறது. பிறகு மறந்தே போய் விடுகிறது. அதன் சுவடும் நிற்ப தில்லை.பார்வதி பரமசிவத்தின் சண்டையும் அப்படியே மறக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாகி விட்டது. அந்தச் சண்டைக்கு அப்புறம் எத்தனையோ கடுமையான சண்டை கள் அந்த ஊரிலே, அதே தெருவிலே நடந்திருக்கின்றன எல்லாம் மறதியென்னும் கடலுள் ஆழ்ந்தன. அந்த ரோஜாப்பூச் செடிகூட இப்பொழுது இல்லை. அந்தச் சண்டையில் இருந்து பார்வதி பூச்செடி வளர்ப்பதையே விட்டு விட்டாள். அவள் வேறு விஷயங்களில் சிரத்தை கொள்ள ஆரம்பித்து விட்டாள். பெண்களுக்கு வயசு ஆக, ஆக எத்தனையோ ஆசைகள் உண்டாகின்றன. அவளுக்கும் சங்கீதப் பித்து, புஸ்தகப் பசி இவைகள் உண்டாயின. பழைய ரோஜாப்பூ ஞாபகத்தை அவள் அறவே மறந்து விட்டாள். அவளுடைய சரீர அழகோடு சஈரீர இனிமையும் மேன்மேலும் வளர்ச்சி பெற்றது. கல்வியிலும் அவள் சிறப்புப் பெற்றாள். 

பரமசிவமும் காலமாகிய நதியிலே எவ்வளவோ தூரம் வந்து விட்டான். இன்று அவன் பழைய பரமசிவம் அல்ல. பழைய முரடன் அல்ல. அன்பும் தியாகமுமே மக்களுக்கு அமரத்துவத்தை உண்டாக்குபவை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். சென்னையில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே அவனுக்கு அறிவு அதிகம். படிப்புக்குரிய சௌகரியங்களும் இருந்தன. தடை யொன்றும் இல்லாமல் அவனுடைய கல்வி சிறந்து வந்தது. அவன் உள்ளம் உலகத்தை ஊடுருவி உணரத் தொடங்கியது. இளம்பெண்ணை ஓங்கி அடித்த அடியை அவன் மாத்திரம் மறக்கவே இல்லை. அதனால் உண்டான தழும்பு அவன் உள்ளத்தில் மாறவே இல்லை. ‘அந்தப் பெரிய குற்றத்திற்கு என்ன பரிகாரம்?’ என்று அவன் யோசித்து யோசித்து உருகினான். பல நாள் மணிக்கணக்காகத் தன்னுடைய கொடிய செயலுக்காக வருந்தி உருகினான். 

அன்று அவனுக்குப் பன்னிரண்டு வயசு. இன்றோ இருபது வயசு. இந்த எட்டு வருஷங்களில் அவனுடைய உணர்ச்சி விரிந்து விசுவரூபம் எடுத்தது. அன்று அவனு டைய மனத்தே உண்டான பச்சாதாபம் கடுகளவாகவே இருந்தது; இன்று அது மலையளவாக வளர்ந்து விட்டது. அவன் உள்ளம் உலக இயல்பை உணர உணர அதன்கண் அன்பும் இரக்கமும் அதிகமாயின. ஒன்றும் அறியாத பேதைப்பெண்ணுக்குத் துன்பமிழைத்த கொடுமையைக் கொலைக் குற்றத்துக்கு மேலாகக் கருதினான். ‘அந்த இளைய உள்ளம் எப்படித் துடித்திருக்கும்? அந்தப் புஷ்பத்தைக் கசக்கி எறிந்தது போல அந்த உள்ளத்தைப் புண்படுத்தினேனே; இதற்கு என் ஆயுளிலே பரிகாரம் உண்டா? எப்படிப் பரிகாரம் செய்வது? நானாக ஆயிரம் அறை அறைந்து கொண்டால் அதற்குப் பிராயச்சித்தம் ஆகி விடுமா! ஐயோ! அந்தக் கணத்தில் அந்த இளந் தளிர் போன்ற அந்தக் குழந்தை எப்படித் துடித்தது! என் தகப்பனார் போலீஸ் உத்தியோகஸ்தர் என்ற தைரியத்தி னாலேதானே அப்படிப் பேய்போல ஆனேன்’ என்று அவன் லக்ஷம் தடவை சிந்தித்திருப்பான்; அவன் மனம் தன் குற்றத்திற்கு ஒரு பரிகாரம் உண்டாவென்று ஏங்கிக் கிடந்தது. 

ஒரு நாள் அவன் மனத்திலே பளிச்சென்று ஒரு நினைவு எழுந்தது. அந்த ஊரின் பெயர் மோகனூர். அதற்குப் பக்கத்தில் உள்ள நாமக்கல்லில் இருந்து ஒரு பையன் பரம சிவத்தோடு வாசித்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது லீவுக்காக, ஊருக்குப் போயிருந்தான். பரம சிவம் தன் தகப்பனார் அப்போது வேலையாக இருந்த கல்லிடைக்குறிச்சிக்குப் போகவில்லை. லீவு காலத்தில் யூனிவர்ஸிடி புஸ்தக சாலையிலுள்ள பல அருமையான புஸ்தகங்களைப் படிக்கலாமென்று சென்னையிலேயே தங்கினான். அவன் தகப்பனாரும் அதற்கு அநுமதி கொடுத்தார். 

பரமசிவம் தன் நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினரன் : 

‘அன்ப, 

இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கு மென்றே நம்புகிறேன். ஆனாலும்உன்னு டைய உண்மை அன்பை அறிந்தவனாதலின் எனக்காக’ இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். தைக் காட்டிலும் வேறு சிறந்த உபகாரம் இருக்க முடியாது. 

உங்கள் ஊருக்கருகில் மோகனூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே என் இளமைக்காலத்தில் என் தகப்பனார் வேலை பார்த்து வந்தார். அங்கு உள்ள முதலியார் தெருவில் சுப்பிரமணிய முதலியார் என்று ஒருவர் உண்டு. அவர் செட்டியார் கடையில் குமாஸ்தா வாக இருந்தார். அவருக்கு ஒரு மாடி வீடு இருந்தது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அந்தக் காலத்தில் ரோஜாச் செடி வைத்திருந்தார்கள். 

சுப்பிரமணிய முதலியாருக்கு ஒரு பெண் இருந்தாள். அவளுக்குப் பார்வதி என்று பெயர். அவளுக்கும் புஷ்பச் செடி வைப்பதில் பிரியம் அதிகம். 

தயை செய்து நீ அவ்வூருக்குப் போய் அந்த வீட்டை விசாரித்தடைந்து முதலியார் இப்போது எப்படி இருக்கிறார் என்பதைப் பெண் இப்போது எங்கிருக்கிறாள்? கல்யாணம் ஆகிவிட்டதா, புருஷன்- வீடு எங்கே என்ற விவரங்களையும் விசாரித்து எனக்கு விரிவாக எழுது, இதைப் பார்த்து நீ சிரிக்காதே. பார்வதி இப்போது எங்கே இருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெளிவாக விசாரித்து எழுது. உனக்குச் சிரமம் கொடுக்கிறேன் என்பதை அறிவேனானாலும், இந்த விஷயத்தில் உன்னையன்றி வேறு தக்கவர்கள் இல்லாமையின் இந்தக் காரியத்திற்கு உன்னை ஏவினேன். மன்னிக்க வேண்டும். 

இங்ஙனம் 
அன்புள்ள 
பரமசிவம்’ 

கடிதத்தைப் போட்டு விட்டு ஒவ்வொரு நாளும்பதில் எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தான். ஒரு வாரம் கழித்துப் பின் வரும் கடிதம் கிடைத்தது. 

‘அன்ப, 

உன் கடிதம் வாஸ்தவத்தில் எனக்கு ஆச்சரி யத்தையே உண்டாக்கியது. நீ இந்தப் பக்கத்தில் இருந்தாய் என்பதை அறிந்த போது நம்முடைய நட்பு ஒரு படி உயர்ந்ததாக எனக்குத் தோன்றியது. நான் உன் விருப்பப்படியே மோகனூர் போயிருந்தேன். உனக் காகப் போகவில்லை; போக வேண்டிய சந்தர்ப்பமும். நேர்ந்தது. சந்திர கிரகணம் வந்ததாதலால் நானும் என் தாயார் தகப்பனாரும் காவேரி ஸ்தானத்திற் காகப் போயிருந்தோம். அங்கே முருகக் கடவுள் கோயிலுள்ள காந்த மலையைப் பார்த்து வருவதாகச் சொல்லிப் புறப்பட்டு நீ குறிப்பிட்ட விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். நான் அந்தப் பார்வதியைப் பார்க்கலாமென்று சென்றேன். ஆனால் அந்த வீட்டில் அவர்கள் இல்லை. 

இரண்டு வருஷங்களுக்கு முன் அவ்வூரில் பெரி யம்மை வந்ததாம். சுப்பரிமணிய முதலியார் குடும் பத்தில் எல்லோருக்கும் அம்மை பூட்டி விட்டதாம். முதலியார் அதற்கு இரையாகி விட்டாராம். அந்தப் பார்வதிக்கும் பூட்டியதாம்; ஆனால் அவள் பிழைத்துக் கொண்டாளாம். சுப்பிரமணிய முதலியார் இறந்த பிறகு அவருடைய மனைவியும் பார்வதியும் குழந்தை களும் காவேரிக்கு அக்கரையில் உள்ள வாங்கல் என்னும் ஊரில் இருக்கும் ரங்கநாத முதலியார் வீட்டுக்குப் போய் விட்டார்களாம். பார்வதிக்கு அவர் மாமா ஆக வேண்டுமாம். மோகனூரிலுள்ள வீட்டில் இப்போது வேறு யாரோ குடியிருக்கிறார்கள். 

இங்னஙம் 
அன்பன் ராஜரத்தினம் 
குறிப்பு : 
ஒரு விஷயம் மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையாம். 

ஒரு விதமாகப் பார்வதியின் இருப்பிடம் தெரிந்தது பற்றிச் சந்தோஷப் பட்டான் பரமசிவம். ஆனால் தான் நினைத்தபடி ஒரு பிராயச்சித்தம். பரிகாரம், செய்வதற்கு வழியுண்டா என்பதில் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. மறுபடியும் தன் நண்பனுக்கு எழுதலானான்: 

‘அன்ப, 

முதலில் என்னுடைய நன்றியை ஏற்றுக் கொள். எனக்காக நீ இவ்வளவு விஷயங்களை விசாரித்தது குறித்து மிகவும் சந்தோஷம். ஆனால், நீ செய்த உபகாரம் பூர்த்தியாக வேண்டுமானால் மற்றோர் உப போய் காரமும் செய்ய வேண்டும். நீ வாங்கலுக்குப் பார்வதி இருக்கிறாளா, உண்மையில் கல்யாணம் ஆக வில்லையா என்பதை விசாரித்து வர வேண்டும். இந்த விஷயங்களெல்லாம் உனக்குப் பைத்தியக்கார விவ காரங்களாகத் தோன்றலாம். ஆனாலும் எனக்காக இதைச் செய்ய வேண்டும். உன்னை நான் முழுதும் நம்பியிருக்கிறேன்’ 

என்று ராஜரத்தினத்திற்கு எழுதினான். மறுவாரம் விவரமாகக் கடிதம் வந்தது. 

‘பார்வதியைப் பார்த்தேன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது வாஸ்தவந்தான். அம்மை வடுக் கள் அவள் முகத்தில் இருந்தது கொண்டு அவளுக்கு அம்மை பூட்டியது உண்மையே என்று அறிந்து கொண்டேன். அவளுக்குச் சமீபத்தில் கல்யாணம் ஆனாலும் ஆகலாமென்று சொல்லிக் கொண்டார்கள்.’ 

இந்தக் கடிதத்திலே அவனுக்குச் சந்தோஷமும் இருந்தது. துக்கமும் இருந்தது. கல்யாண ஏற்பாடுகள் ஆவதற்குள் தன் கருத்தை முடித்துக் கொள்ள எண்ணித் தன்னுடைய உள்ளத்துள்ளே புதைந்து கிடந்த விஷயத்தைத் தன் அந்தரங்க நண்பனுக்கு எழுதினான். அவன் இந்தத் தடவை எழுதின பதில் மிகவும் கடுமையாக இருந்தது. 

‘அட பைத்தியமே; அந்தப் பெண்ணின் அம்மை வடுவைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறதே. உன்னுடைய லக்ஷணம் எங்கே அவள் அவலக்ஷணம் எங்கே! இந்த விஷயத்தை நீ முன்பே தெரிவித்தி ருந்தாயானால் நான் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டேன். உன் தகப்பனாருடைய அந்தஸ்துக்கும் அவர் உன்னை வைத்திருக்கும். கௌரவத்துக்கும் இந்தக் குரூபியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது மிகவும் ஏர்வைதான்! அட அசடே! இந்த அபூர்வ யோசனை உன் மூளையிலே எப்படி உற்பத்தி ஆயிற்று? இனிமேல் இந்த விஷயத்தை மறந்து விடு. நீ இதைப் பற்றி மேலே முயன்றால் உன்னுடைய அப்பாவுக்கு எழுதி விடுவேன்,’ 

இந்தக் கடிதத்தைப் பரமசிவம் படித்ததிலிருந்து அவனுக்குத் துக்க பொங்கி வந்தது. ஏதோ அரிய வஸ்துவை. இழந்து விட்டதாக ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. யோசனையில் ஆழ்ந்து விட்டான். 

‘ஆம். அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது. என் தகப்பனார் இதற்குச் சம்மதிப்பாரா? அவர் ஏதாவது பிரமாதமாக ஆகாயக் கோட்டையல்லவா கட்டியிருப்பார்? அவருக்கு இது திருப்தியாகவே இராதே. என்ன செய்வது? இதற்கு ஒரு வழியும் இல்லையா? ஈசுவரா! என் மனத்தை நான் இளமையிலேயே செய்த பாவம் பிய்த்துத் தின்னு கின்றதே! அதைப் போக்கிக் கொள்ள வேண்டாமா? இது என்ன பைத்தியக்கார உலகம்? இந்த உலகம் பணத்திலும் புறத் தோற்றத்திலும் மதிப்பு வைத்திருக்கிறதே. உள்ளம் உணர்ச்சி, இரக்கம், அன்பு இந்த மாதிரி விஷயங்கள் செல்லாக் காசுகளா?’ 

‘மூன்றாம் பேருக்குத் தெரியாமல் காரியத்தை முடித்துக் கொள்ளலாமா?’ என்று ஒரு யோசனை தோன்றியது. அதனால் விளையும் அபாயங்களை அவன் நினைத்துப் பார்த்தான். அவன் மனம் தத்தளித்துத் தவித்து ஊசலாடியது. என்னவோ ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றியது. விறுவிறு என்று ஒரு கடிதம் எடுத்து வாங்கல் ரங்கநாத முதலியார் என்னும் விலாசத்திற்குப் பின்வருமாறு எழுதினான் : 

‘ஐயா, இந்த வருஷம் பார்வதிக்குக் கல்யாணம் செய்ய வேண்டாம். அடுத்த வருஷம் உங்களைத் தேடிக் கொண்டு ஒரு மாப்பிள்ளை வருகிறான். இது விளையாட்டல்ல.  தெய்வத்தின் மேல் ஆணை. 

உங்கள் நண்பன்’

அன்றே பரமசிவம் தன் தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதினான். தனக்குப் பிடித்த பெண் ஒருத்தி இருப்ப தாகவும் அவளைத் தான் கல்யாணம் செய்து கொள்ள எண்ணி இருப்பதாகவும் பெண் வீட்டார் ஏழைகள் என்றும் அந்தப் பெண்ணை மணப்பதற்குத் தடை செய்யக் கூடாது என்றும் எழுதியிருந்தான். அவனுடைய தகப்பனார் அதைப் பார்த்துச் சிரித்தார். “உன் பிள்ளையின் பவிஷைப் பார்! எங்கேயோ ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறான் போலிருக் கிறது. என்ன தர்ம சங்கடமோ!” என்று தம் பத்தினியைப் பார்த்துச் சொன்னார். 

“அப்படி ஒன்றும் தப்புத் தண்டாவுக்குப் போகிறவன் அல்ல அவன். ஏதோ நம்முடைய சாதியிலே நல்ல பெண்ணாக இருக்கும். ஏழையாயிருந்தால் என்ன? அவள் கொண்டு வந்து தானா நாம் சாப்பிட வேண்டும்? அவன் மனசு பிடித்தால் அதுவே போதும்” என்று அவள் பதில் கூறினாள். 

ஸப் இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்து விட்டது. “பிள்ளைக் கேற்ற தாய்தான்!” என்று உறுமினார். “இந்தப் பயலுக்குச் செல்லம் கொடுத்ததெல்லாம் இதற்குத் தானா?” என்று முழங்கினார். தம் பிள்ளைக்குப் பதிலே போடவில்லை; மற்றொரு கடிதம் வந்தது: ”நான் விளையாட்டுக்கு எழுதவில்லை. எல்லாம் ஆண்டவன் செயல். ஆ ண்டவன் அருளை முன்னிட்டு இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன்; உங்களுடைய அநுமதியை வேண்டி நிற்கிறேன். என் மனத்தில் இருக்கும் வேதனை தீர வேண்டுமானால் இதற்கு ஸம்மதியுங்கள். 

அதென்ன வேதனை? ஈசுவர சாக்ஷியாம்! ஆண்டவன் செயலாம். -ஸப் இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘பயல் எங்கேயோ இந்தக் காந்திக் கட்சியில் சேர்ந்து கொண்டு அசட்டுப் பெண் ஒருத்தியைப் பார்த்துப் பிரமித் திருக்க வேண்டும்’ என்று அவர் எண்ணினார். அவர் நினைப்பு முழுவதும் தப்பல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மிஞ்சி உலகத்தைக் கரையேற்றப் புண்ணியாத்மாக்களும் சௌரியவான்களும் இல்லை என்பது அவருடைய திட நம்பிக்கை. அவர் பிள்ளை பரமசிவத்துக்கோ தியாகத் திலும் அகிம்சையிலும் இந்தியர்களின் பாரமார்த்திகத்திலும் வித்து. காந்தி மகாத்மாவைப்பற்றி அவன் நன்றாக உணர்ந்திருந்தான். 

ஸப் இன்ஸ்பெக்டருக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டை வந்தது. “நீ போய்க் குஷாலாகக் கல்யாணம் செய்து வை; நான் வரமாட்டேன். இந்த அதிருஷ்ட சனனுக்கு நல்லதென்றால் ஆகுமா?” என்று அவர் கோபித்துக்கொண்டார். அம்மணியம்மாளுக்குத் தன் மகன் சுபாவம் தெரியும். எல்லாம் நல்லதாக முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் புருஷனுக்கு வகை சொல்ல முடியவில்லை. 

ரகசியமாக அவள் ஒரு கடிதம் எழுதித் தன் மகனுக்கு அனுப்பினாள். ஒருமுறை நேரில் வந்து விவரமாக விஷயத்தைத் தெரிவித்து விட்டுப் போகும்படி எழுதினாள். பரமசிவம் அந்தக் கடிதம் கண்ட வுடன் வந்தான். அவனுடைய வேகம் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் தன் தகப்பனார் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வான்? 


“முன்பின் பாராமல் இப்படி நிச்சயம் பண்ணலாமா? என்று கேட்டாள் அன்னை. 

“இல்லையம்மா ! எல்லாம் ஈசுவர ஆக்ஞை. இதற்கு அப்பா உடன்படாவிட்டால் நான் சந்நியாசியாகவே காலம் கழித்து விடுகிறேன். என் மனசிலுள்ள ஒரு வேதனை தீர்வதற்கு இ ந்த ஒரு மார்க்கந்தான் உண்டு. இல்லா விட்டால் என் வாழ்க்கையில் சந்தோஷம் இராது.” 

“என்னடா அப்பா! உன் பேச்சு விபரீ தமாக இருக்கிறதே.பெண் அழகாய் இருக்கிறாள் என்று சொல்ல லூம்; நல்ல குணமென்று சொல்லலாம்; இன்னும் ஏதாவது சொல்லலாம். என்னவோ வேதனை என்கிறாய்.. அப்படிப்பட்ட வேதனை என்ன? அதைத் தீர்க்கும் சக்தி அந்தப் பெண்ணுக்குத்தான் இருக்கிறதா? அப்படிப்பட்ட அந்த மோகினி யாரப்பா?”

அதெல்லாம் வாயினாலே சொல்லி முடிகிற விஷயம் அல்ல. மனசும் மனசும் அறிந்து கொள்ளும் விஷயம்.” அவன் சொல்வது ஒன்றும் தாய்க்கு விளங்கவில்லை. ஆனால் அவன் பேசும் தோரணையிலிருந்து அவனுக்கு ஒரு பெரிய மனவேதனை இருப்பதாகத் தெரிந்தது. அவள் தாய்க்குரிய அன்பினால் இரங்கினாள் ; விஷயம் புரியாமல் அழுதாள். 

”அம்மா, கல்யாணம் என்பது இங்கே விஷயம் அல்ல. மனிதன் தான் செய்யும் பாவங்களுக்கு இந்த ஜன்மத்திலே பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய முன்னிலையில் ஒரு தப்புச் செய்தால் அதற்காக வருந்திப் பரிகாரம் செய்து மனம் உருகினால் அவனுக்கு அத்தெய்வத்தின் அருள் சித்திக்கும்.” 

“உன் வேதாந்தம் மோதுமடா! இது கல்யாணம் பேச்சாக இல்லையே !” என்று அவள் அழுதாள். 

அவன் மனம் கல்லாகச் சமைந்திருந்தது. ஆனால் அந்தக் கடினம் ஒருபுறத்தில்தான்) மற்றொரு புறத்தில் அது மிகவும் அதிகமாக இளகி யிருந்தது; சென்றதற்கு இரங்கி நைந்து கரைந்து உருகியது. 

“எப்படியாவது தொலைந்து போங்கள். என் கண்ப முன் இனிமேல் அவன் இருக்க வேண்டாம். எங்கேயாவது போய் எப்படியாவது படித்துக் கொள்ளட்டும். ஒரு தம்பிடி இனிமேல் நான் தரமாட்டேன்” என்று சொல்லி விட்டான் தகப்பனார். அவர் போலீஸ் வீரர் அல்லவா? 

4

ரங்கநாத முதலியாருக்கு அந்தக் கடிதத்தைக் கண் போது ஒன்றும் புரியவில்லை. ‘யார் இவ்வளவு அக்கறையாகத் தெய்வத்தின் மேல் ஆணையிட்டு எழுதி யிருப்பார்கள்?’ என்று யோசித்தார். யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்கலாமென்று கல்யாண முயற்சியை நிறுத்திக் கொண்டார். 

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் பரமசிவம் வாங்கலுக்கு வந்தான். ரங்கநாத முதலியாருடைய வீட்டிற்குச் சென்று, தானே கடிதம் எழுதியதாகவும். தக்க வரன் ஒருவனைப் பார்த்திருப்பதாகவும் முடிந்தால் தை மாதம் கல்யாணம் நடத்திடலாமென்றும்சொன்னான். அன்று அவனுக்கு ஒரு புதிய ஆச்சரியமான வி ஷயம் தெரிய வந்தது.ரங்கநாத முதலியார் வீட்டில் இரண்டு பார்வதிகள் இருந்தார்கள்; ஒருத்தி அவர் பெண். மற்றொருத்தியே பரமசிவம் தேடிய பார்வதி. அம்மை வார்த்த முகத்தை உடையவள் ரங்கநாத முதலியார் பெண். அவளுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது; தன்னுடைய பார்வதியோ சர்வாங்க சுந்தரியாக இருந்தாள். தன் நண்பன் அவசரத் தில் ஒன்றுக்கொன்று தாறுமாறாக விசாரித்து எழுதி விட்டானென்று அப்பொழுது அவன் ஊகித்து அறிந்து கொண்டான். அம்மாவைக் கொண்டு வந்து காட்டி எப்படி யாவது சம்மதம் பெற்று விடலாமென்று ஒரு துணிவு பிறந்தது. 

“நீங்கள் யார் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார் முதலியார். 

“அதெல்லாம் பிறகு தெரியும்” என்று சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டான் பரமசிவம்.. 

தாயை அழைத்துக்கொண்டு வந்து காட்டினான் “அடே, நம்ம சுப்பிரமணிய முதலியார் பெண் பார்வதில் இவளைத்தான் நீ ஒரு நாள் அடித்து விட்டாய் அதற்காக உங்கள் அப்பாவுக்கும். இவள் அப்பாவுக்கும் சண்டையாகி விட்டது” என்று பழைய கதையை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டு சர்வ சாதாரணமாகச் சொன்னாள். 

அதைக் கேட்கும்போது அவனுக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது. பழைய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. பெருமூச்சு விட்டான். “அதற்குத்தான் இது பரிகாரம்” என்று சொல்ல வாயெடுத்தான். ஆனால் அது வெளிவரவில்லை. 

கல்யாணம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அவர் களுடைய மனோரதம் போன்ற விமரிசை இல்லாவிட்டாலும் இதற்குத் தனிச் சிறப்பு இருக்கத்தான் இருந்தது. ரங்கநாத முதலியார் அந்த ஊர் மணியகாரர். அவருக்கு இருந்த செல்வாக்கில் அந்த ஊருக்கு அவரே ராஜா. கல்யாணம் அவர் அந்தஸ்துக்கு மேல் எவ்வளவோ விமரிசையாக நடந்தது. ஸப் இன்ஸ்பெக்டர் வேண்டா வெறுப்பாக கல்யாணத்திற்கு வந்திருந்தார். அவரைக் கல்யாணத்திற்கு வரும்படிச் செய்வதற்கு அம்மணியம்மாள் கெஞ்சியும் கொஞ்சியும் அழுதும் புகழ்ந்தும் நயந்தும் பயந்தும் செய்த முயற்சிகள் பல. 

இரவு. காதலர்கள் சந்தித்ததும் பரமசிவம் பார்வதி யோடு பேசவில்லை. அவளுடைய கையை எடுத்தான்; அதனால் தன் கன்னத்தில் ஓர் அறை அறைந்து கொண்டான். பளீரென்று சப்தம் உண்டாயிற்று; உடனே குழந்தை போல விம்மி விம்மி அழுதான்; ஒரு பெருமூச்சு விட்டான். “இதற்காக என் நெஞ்சு கிடந்து துடித்தது எத்தனை யென்பது உனக்குத் தெரியுமா? அன்று உன்னை அறைந்த அறை மீண்டும் உன் கையால் கிடைத்தாலன்றி என் பாவம், என் குற்றம், தீராதென்கிற எண்ணம் என் நெஞ்சிலிருந்து அறுத்துக் கொண்டே இருந்தது. அதற் காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டேன்’ என்றான் அவன். 

“ஆனால் என்பால் உங்களுக்குக் காதலில்லையா? என்னை அடித்ததற்காக ஏற்பட்ட கருணைதானா?'”

“அதுவும் கூட உண்டு.” 

“அதற்கு அடையாளம்?'”

“இதுதான்,” 

காதலின் முத்திரையை அவர்கள் வைத்துக் கொண்ட சப்தம் யாருக்கும் கேட்கவில்லை. 

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *