கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 184 
 
 

அங்கம் 1 – காட்சி 1 | அங்கம் 1 – காட்சி 2 | அங்கம் 1 – காட்சி 3

இடம் : மங்களபுரியில் வேறொரு வீதி.

பொழுது : மறுநாள் பகல்.

முன்னால் ஒருவன் ஓடி வருகிறான்; பின்புறம் சற்று தூரத்தில், ”உடாதே! உடாதே அதோ ஓட்றான்! அதோ ஓட்றான்! அடே சூதாடிப் பயலே! எங்கே ஓட்றே? நீ அந்த எம லோகத்துக்கு போனாலும் ஒன்னை உட மாட்டோம். அடே மகிபாலா! நீ இந்த முண்டங்கிட்ட தப்பற தேதுடா; நில்லுடா நில்லுடா!” என்று ஒரு கூச்சல் கேட்கிறது.

மகிபாலன் : (தனக்குள்) ஆகா இந்தப் பாழும் சூதாட்டத்தில் எனக்கு என்ன இவ்வளவு பைத்தியம்! இந்தக் கெட்ட புத்தி எப்பொழுதுதான் என்னை விட்டு விலகுமோ தெரியவில்லையே! கையில் பணமில்லா விட்டால் கடனாவது வாங்கி ஆடும்படி மனது தூண்டுகிறதே. சூதாட்டத்தில் உட்கார்ந்தால், சோறு வேண்டாம்; நீரும் வேண்டாம், வீடு, பெண்சாதி, பிள்ளைகள் முதலிய எல்லா ஞாபகமும் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. நான் இவர்களிடத்தில் சூதாடக் கடன் வாங்கிய 10 ரூபாயையும் திரும்பிக் கொடுக்கும்படி என்னை அடித்து உபத்திரவிக்கிறார்களே! நான் என்ன செய்வேன்! என்னிடத்தில் இப்பொழுது ஒரு செப்புக் காசும் இல்லையே! இந்த இரண்டு நாய்களும் இப்பொழுது என் உயிரை வாங்கி விடும் போல் இருக்கிறதே! ஐயோ! அதோ வந்து விட்டார்களே! அடுத்த க்ஷணத்தில் என்னைப் பிடித்துக் கொள்வார்களே (நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) நல்ல வேளையாக இதோ ஒரு பாழுங் கோவில் இருக்கிறது! இதற்குள் ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன். (பின்புறமாக நடந்து கோவிலுக்குள் நுழைந்து கொள்கிறான்.)

(முண்டன் திண்டன் என்னும் இரண்டு சூதாடிகள் ஒடி வருகிறார்கள்.)

முண் : உடாதே! உடாதே புடிச்சுக்கிங்க! புடிச்சுக்கிங்க!

திண்: அடே! நீ அந்தச் சாச்சாத் கடவுளுக்கிட்டப் போயி ஒளிச்சுக்கினாக்கூட ஒன்னை உடப் போவதில்லையடா! அடே அண்ணே! காலடியைப் பாருடா! கோணக் கோணலா இக்குதுடா!

முண் : என்னாத்துனாலே அப்படி இக்குதுன்னு ஒனக்கு அம்புட்டு ரோசனை புரியல்லே பாத்தியா பயத்துனாலேடா அது அவன் ஒடம்பு நடுக்க மெடுத்துக்கிச்சு! காலு தாறு மாறாய்ப் போயிக் கெடக்குதுடா!

திண் : காலடி இத்தோடே நின்னு போச்சே! இதென்னடா ஒவித்திரியம்! எங்கிட்டோ மாயமாப் பறந்து பூட்டாண்டா சனியம் புடிச்சவன்.

முண்: காலடியைத் திருப்பி வச்சுக்கிறாண்டா! என்னா சாமார்த்தியமுண்டா பயமவனுக்கு! முதுவுப் பக்கமா திருப்பிக்கினு கோயிலுக்குள்ளற போயிருக்கிறாண்டா என்னை ரோசனைடா இவனுக்கு கோயிலுக்குள்ளற நாம்ப வரமாட்டோமுன்னு நெனெச்சுக் கினாண்டா இவன்! வாடா உள்ளற போயிக் கோளிக் குஞ்சேப் பிராந்து அமுக்கறாப்லே குபீருன்னு புடிச்சுக்கலாம். (உள்ளே போகிறார்கள்.)

மகிபாலன் : (தனக்குள்) இவர்கள் இங்கேயும் வருகிறார்களே என்ன செய்கிறது? இங்கு அதிகமாய் வெளிச்சம் இல்லாமல் மங்கலாக இருக்கிறது. நான் ஒரு கல் விக்கிரகத்தைப் போல அசையாமல் நிற்கிறேன். இருவர்கள் என்னை விக்கிரக மென்று நினைத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

(அப்படியே நிற்கிறான்; உள்ளே வந்த அவ்விருவரும் அவனைக் கண்டு பரிகாசமாகத் தமக்குள் சைகை செய்து கொள்கிறார்கள்.) .

முண் : அடே திண்டா! அந்தாலே சாமி இக்குது பாத்தியாடா மனிசனெப் போல இக்குதுறா!

திண் : சாமி எம்பிட்டுப் பெரிசுடா! அண்ணே! அது மரத்துலே செஞ்சதுறா!

திண்: (மகிபாலனை அசைத்த வண்ணம்) இல்லேடா இது கல்லு மாதிரி இக்குதுறா! ரவையுண்டு கிள்ளிப் பாக்கிறேண்டா.
(கிள்ளுகிறான்.)

திண் : எல்லாக் கோயில்லெயும் சாமி கல்லுலேயும் மண்லேயுங் கட்டேலெயுந் தாண்டா இக்குது! அடிச்சா அளத் தெரியாதுறா. இந்தச் சாமி உயிருள்ள சாமி மாதிரி புச்சா இருக்கு.

முண் : ஆமுண்டா! இந்தச் சாமிக்கு புதுமாதிரிச் பூசெ, நிமித்தியம் எல்லா பண்ணணும்டா. இந்தச் சாமிக்கு அடிச்சா அளத் தெரியுமான்னு பாக்கறேண்டா. (முதுகில் ஓங்கி அடிக்கிறான்.

திண் : சாமி அளுவல்லெடா! நல்ல சாமிடா பொறுமைப் பொறுத்தவருடா; பூலோவம் ஆண்டவருடா! தப்புதம்! தப்புதம்! சாமி ஒன்னே அடிச்சேன்னு கோவிச்சுக்காதே! கன்னத்திலே போட்டுக்றேன். (மகிபாலனுடைய இரு கன்னங்களிலும் அடிக்கிறான்.)

முண் : அதெல்லாம் இக்கட்டும். நாம்ப ரெண்டு பேரும் இந்த உயிருச்சாமிக்கு மின்னாலே சூதாடலாம் வா! சாமி எங்கப்பன் நம்ப தகராரைத் தீப்பாரு.

திண் : சரி ஒக்காரு; ஒனக்காச்சு எனக்காச்சு! ஒரு கை பார்க்கலாம்; சாமிகூட கொஞ்சூண்டு கண்ணைத் தொறந்து அதோ என்னெப் பாக்குதுடா!

முண் : சாமி என்னெப் பாக்க மாட்டேங்குதே! இந்தச் சாமிக்குச் சூதாட்டத்துலே நொம்ப பிரியண்டா! நொம்ப பத்தியோடே சூதாட்ற சீசாக்களைக் கண்ணாலே பாத்து முத்தி
கொடுக்கும்டா பேசற சாமிடா இது!

(இருவரும் எதிரில் உட்கார்ந்து கொண்டு சூதாடுகிறார்கள். அதைப் பார்த்திருந்த மகிபாலனுக்கு ஆட்டத்தில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது.)

மகி: (தனக்குள்) நாட்டை இழந்த அரசனுக்குப் பேரிகை வாத்தியத்தின் முழக்கம் எவ்வளவு மனோ வேதனையை உண்டாக்குமோ, அவ்விதமே பாய்ச்சிக் கைக் காய்களின் ஓசை
பணமில்லாத தரித்திரனாகிய என்னை மிகவும் வருத்துகிறதே! கோகிலத்தின் சங்கீதம் காதில் படுவது எவ்வளவு இன்பமாக இருக்குமோ அப்படி இருக்கிறதே இந்தக் காய்களின் ஒலி! இனி சூதாடக் கூடாதென்று எவ்வளவு உறுதி செய்து கொண்டாலும் பிறர் ஆடுவதைப் பார்த்தால் என் மனோ திடமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகிறதெ!

திண்: இந்தா இருக்காப் பன்னெண்டு பாத்துக்க! கெலிப்பு என்னோடே.

முண் : போவட்டும் இந்தாலே பாரு பகடெ பன்னண்டு. சாமி! பகடெ பன்னண்டு விளனும்! நீ எம்பக்கத்திலெ இரு; நீ கண்ணு இக்கா தெய்வமானாப் பார்த்துக்க! இந்தா பகடெ பன்னண்டு உளுந்திச்சு! போடு துட்டே!

மகி : (தன்னை மறந்து பீடத்தில் இருந்து கீழே குதித்து) இல்லை இல்லை நன்றாய்ப் பார்! இது இருக்கா லெட்டர் அல்லவா.

திண் : அம்புட்டுக் கிட்டாண்டா ஆளு!

முண்: (மகிபாலனைப் பிடித்துக் கொண்டு) அடே ரோக்கியா! மாட்டிக்கினியா? போடு பணத்தெ! என்னெ ஆருன்னு பார்த்துக் கிட்டெ? சொம்மா ஏமாத்திப் புடலாமுன்னு பார்த்தியா? கழட்டுறா ரூவாயெ; ஒங்க பாட்டன் வூட்டுப் பணமோ ஓட்றியா? செவிட்டுலே குடுக்கறேன் பாரு. (அடிக்கிறான்.)

திண் : முளிக்கிறாண்டா ஆடு திருடின கொறவன் மாதிரி! தோண்டுறா முளியே. (அடிக்கிறான்.)

மகி : (நயந்து) அப்பா! என்னை அடிக்க வேண்டாம். இன்றைக்குள் எப்படியாவது பணத்தைக் கொடுத்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

முண் : இப்பவே குடுக்கணும்; இல்லாமெப் போனா உட மாட்டேன் ஒன்னை.

மகி : ஐயா! கோபித்து கொள்ள வேண்டாம். இத்தனை நாள் பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னம் கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? என் கையில் இருந்தால் கொடுக்க மாட்டேனா! என்னை அடித்தால் பணம் வந்து விடுமா?

முண் : ஒதவாது. ஒன்னைக் கொஞ்சூண்டுகூட நம்பவே மாட்டேன். ஓங்கிட்ட ரோக்கிதையே இல்லே. இப்பத்தான் பணம் ஓணும்; போடு பணத்தெ!

மகி : ஐயோ! நான் என்ன செய்வேன் என்னிடத்தில் ஒரு காசுகூட இல்லையே. நான் இப்பொழுது எப்படி 10-ரூபாய் கொடுப்பேன். எனக்கு மயக்கம் வருகிறதே. என் தலை சுற்றுகிறதே!

(மயங்கினவனைப் போலக் கீழே விழுகிறான். இருவரும் அடிக்கிறார்கள்.)

முண் : அடியாத்தே! மயக்கமாவா வருது? எம்பிட்டு சாலங்கிறேன்!

திண் : சாமிக்குச் சன்னதம் வந்துக்கிது. பூசெ போட்டாச் சரியாப் போவும். (அடிக்கிறான்.)

மகி : (அடியைப் பொறுக்க முடியாதவனாய்) எழுந்து ஐயோ! உயிர் போகிறதே! அடிக்க வேண்டாம். அடே அடிக்க வேண்டாம்! இனி அடித்தால் பிராணன் போய்விடும். பிறகு பணமும் போய்விடும். சத்தியமாய் இன்றைக்குள் எப்படி யாவது பணத்தைக் கொடுத்து விடுகிறேன். கொஞ்சம் சாவகாசம் கொடுங்கள். என்னிடத்தில் இப்பொழுது பணமே இல்லை. சோதனை செய்து பாருங்கள்.

திண் : பணம் இல்லாத முண்டே ஏண்டா கடன் வாங்கினே?

முண் : பணமில்லாட்டி எதெனாச்சும் அடகு வைடா களுதே!

மகி : (திண்டனைத் தனியாய் அழைத்துப் போய்) ஐயா உம்மை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். ஒரு உதவி செய்ய வேண்டும்.

முண் : என்னடா செய்யனும்?

மகி : என்னிடத்தில் இப்பொழுது பணமில்லை. பாதி கொடுத்து விடுகிறேன். இன்னொரு பாதியைத் தள்ளிக் கொடுத்து விடுகிறீரா?

முண் : சரி சம்மதித்தான்! அதையாச்சும் வை கீளே.

மகி : (முண்டனைத் தனியாக அழைத்துப் போய்) அடே! ஒரு உபகாரம் செய். என்னிடத்தில் சிறிய நகை ஒன்றிருக்கிறது. அது பாதிக் கடனுக்குத்தான் சரியாகும். அதைக் கொடுக்கிறேன். இன்னொரு பாதிக் கடனை மன்னித்து விடுகிறாயா?

முண் : சரி! அப்படியே ஆவட்டும் கொண்டா நவையெ.

மகி : (முண்டனைப் பார்த்து உரக்க) நீபாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறது நிச்சயந்தானே?

முண் ; நிச்சியந்தான்.

மகி : (திண்டனைப் பார்த்து உரக்க) உனக்கும் சம்மதந்தானே! நீயும் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறாயா?

திண் : சரி.

மகி : சந்தோஷம்! இப்படி யார் உதவி செய்யப் போகிறார்கள்! நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவர்கள். இந்த உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்.)

முண் : எங்கிட்டு வேகமாப் போறே? நில்றா நில்லு.

மகி: ஏன் ஐயா! நிற்கச் சொல்லுகிறாய்? நீ பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தாய்; திண்டன் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தான். கடன் முழுதும் தீர்ந்து போய் விட்டது. நான் போகிறேன். என்னை ஏன் திரும்பவும் வதைக்கிறீர்கள்?

முண் : சவாசப்பா! அடே! என்னெ யாருன்னு பாத்துக் கிட்டே; ஒன் சூச்சமெல்லாம் எங்கிட்டச் செல்லாது. எனக்குக் காதா குத்ரே? என் காதைப் பாத்தியா எம்பிட்டுப் பெரிய தொளே மின்னயே குத்தியாச்சுடா பூராப் பணத்தியும் கீளே வச்சுப்பிட்டு அந்தாண்டே போ. அதுக்கு மின்னே அப்பாலே இப்பாலே நகந்தின்னா முட்டியைப் பேத்துப்புடுவேன் சாக்கிறதே.

மகி : நான் இங்கே பணம் யாரிடத்தில் வாங்கிக் கொடுப்பேன்?

முண் : ஆருக்கிட்ட வாங்கினா எனக்கென்னடா? வெக்கங் கெட்ட நாயே! ஒங்கப்பனை வித்துக் குட்றா!

மகி : என் தகப்பன் இறந்து போய் விட்டானே! எமனுக்குத் தான் சீட்டு எழுத வேண்டும்.

முண் : இல்லாமே போனா ஒங்கம்மாளை வித்துக் குட்றா.

மகி : அவள் என் தகப்பனைத் தேடிக் கொண்டு போய் 3 வருடமாய் விட்டதே! அவளை நான் எங்கே காணப் போகிறேன்? அவள் இருக்கிற இடத்தைக் காட்டினால் அவளை விற்றுத் தருகிறேன்.

திண் : போடு பல்லு மேலே; பேசராண்டா வெறும் பேச்சு! இன்னும் செத்தே நேரத்துலே பணம் வராமெப் போனா நீ ஒங்கம்மா இக்கற வெடத்துக்கு போயிருவே. ஆச்சேபனை இல்லை. பேசாமே ரொக்கத்தெக் கீளே வச்சீன்னாப் பொளெச்சே.

முண்: இல்லாமெப் போனா ஒன்னையே வித்துக் குட்றா.

மகி : சரி! அப்படியே ஆகட்டும். என்னை இராஜ வீதிக்கு அழைத்துக் கொண்டு போங்கள்.

முண்: போகலாம் வா! (போகிறார்கள்)

திண் : (உரக்க) பத்து ரூவாய்க்கி இந்த மனிசனை விக்கிறோம்; வாங்கறவங்க வாங்கலாம். (பலதரம் கூவுகிறான்.)

ஒரு வழிப்போக்கன் : என்னையா கூச்சல்?

மகி : பத்து ரூபாய் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிக் கொள்ளும். நான் உமக்கு அடிமையாய் இருந்து ஊழியம் செய்கிறேன்.

வழி: சரிதான்! உனக்கு யார் சோறு போடுகிறது? எனக்கு வேண்டாம். (போய் விடுகிறான்)

மகி : அடாடா போய் விட்டானே! இன்னொரு முறை கூவிப் பார்க்கிறேன். (உரக்க) என்னை 10 ரூபாய்க்கு வாங்குவாருண்டோ? என்னை அடிமையாக வாங்கிக் கொள்வார் உண்டோ? (தனக்குள்) அடாடா ஒருவரும் வரவில்லயே! ஆகா! அதிர்ஷ்ட ஹீனனே! எப்பொழுது மாதவராயர் தரித்திரரானாரோ அப்பொழுதே எல்லாருக்கும் தரித்திரம் வந்துவிட்டது.

முண் : ஏண்டா சொம்மா நிக்கிறே? எங்கிடா பணம்? வைடா கீளே! (பிடித்துத் தள்ளுகிறார்கள்)

மகி: நான் நினைத்தவுடன் பணம் எங்கிருந்து வரும். பிர்ம்மாவாக இருந்தால் உடனே சிருஷ்டி செய்யலாம். (கீழே விழுகிறான். இருவரும் இவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள்)

மகி : ஐயையோ அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! ஐயோ! கேள்வி முறை இல்லையா? இந்த நகரம் அதிகாரி இல்லாமல் பாழாய்ப் போய் விட்டதா? இந்த அக்கிரமத்தைத் தடுப்பவரில்லையா? (கமலேசன் வருகிறான்.)

கமலே : (தனக்குள்) இதென்னடா எயவாகீது! இந்தச் சூதாடிப் பயவ ஏன் இங்கிட்டு நிக்கிறாங்க? சூதாடிப் பயவளுக்கு எசமான் முண்டனும் இன்னொருத்தனும் மகிபாலனை என்னாத்துக்கோ தெரியல்லே கீழே போட்டு இளுத்துக்கிட்டு வாராங்களே! சூதுலே இருக்கிற இம்பம் எதுலே வருங்கிறேன்! அந்த இம்பம் கறி சோறு திங்கறத்தலே கூட வராதே; நான் முண்டன் ஊட்டுக்குப் போயி ஆட்டம் ஆடி எத்தினி நாளாச்சு! பணமில்லாமே எம் பெஞ்சாதியெப் பதினஞ்சி ரூவாக்கி வச்சு ஆடின. பொறவாலே நான் போகவே இல்லையே; என்னெக் கண்டாக்கா ஏன் வல்லென்னு முண்டன் கோவிச்சுக்கினா என்னா செய்றது? அவனே பாக்காமே மூஞ்சிலே துணியெப் போட்டு மூடிக்கினு இந்த வழியா போறேன். (தன் வஸ்திரத்தைப் பிரிக்கிறான்) ஆகாகா முளுக்கக் கந்தலால்ல இக்குது! இதுலே எத்தினி கண்ணு! எத்தினி ஒட்டு! இதுவும் ஒரு மாதிரி அளவுதான்! இல்லே இல்லே! இந்தத் துணியோடே சோக்கைப் பாத்துப்புட்டு எம்புட்டுப் பேரு கண்ணெப் போட்டுட்டாங்கறேன். இதெல்லாம் அந்தக் கண்ணுங்க. இதெப் பிரிச்சுப் போட்டுக்கினா இன்னம் கண் போட்றுவாங்க. மடிச்சே வச்சுக்கறேன். (மடித்து வைத்துக் கொள்ளுகிறான்.) என்னே முண்டன் பார்த்தான் என்ன செஞ்சுடுவான்? போயிப் பார்க்கறேன். (வருகிறான்.)

முண்: எங்கேடா ரூவா?

மகி: எங்கிருந்து வரப்போகிறது?

கமலே : அடே முண்டா என்ன விசேசம்? சொகமா இக்கிறாயா?

முண் : இந்தச் சமயத்துலே நீ எங்கிட்டுறா வந்தே? இந்தக் களுதே 10-ரூவா தரனும். ஏம்மாத்தராண்டா.

கமலே : அதுக்கா இம்புட்டு பெறமாதம்!

முண் : (கமலேசனுடைய அங்கவஸ்திரத்தைப் பிடிங்கிப் பிரித்து) ஆகா! பலே! பாருங்கையா ஆயிரம் கண்ணோடையாளே! இந்த அளவான துணியைப் போட்ட இந்த பெபுரவுக்கு 10-ரூவா பெரமாதம் இல்லையாம்.

கமலே : போடாமுட்டாளே! நான் எத்தினியோ பத்து ரூபாயே ஒரு கண நேரத்துலே சூதாடித் தோத்திருப்பேண்டா முண்டே! மனிசன் பணத்தே என்னாத்துக்குடா மூட்டையாக் கட்டி வைக்கிறது? பணத்தைத் திங்க முடியுமாடா? கொலபாதவண்டா! நீ 10-ரூவாக்காவ இந்த மனிசனேப்போட்டு இப்புடித் தானாடா நசுக்கறது! ஒனக்கு நெஞ்சுலே எரக்கமில்லியடா?

முண் : அடே! நீ பெரபு தாண்டா! ஒன்னெத் தெரியுண்டா இதாண்டா வளி; நீ போய்த்து வாடா.

கமலே : அடே! இவனெச் சொம்மாப் போட்டு ஒவித்திரம் பண்ணாதே! நான் ஒண்ணு சொல்றேன். அந்த மாதிரி கேளு! இன்னும் 10-ரூவா இவனுக்கு கடனாக்குடு. அதை வச்சு ஆடி ஒன் கடனைத் தீத்துடுவான்.

முண் : எப்பிடிடா?

கமலே : இவன் கெலிச்சா நீ பணம் குடுக்க வாணாம்.

முண் : தோத்தான்னா?

கமலே: அப்பவும் குடுக்க வாணாம்.

முண்: புத்திசாலிடா நீ என்னே யாருன்னு பாத்துக்கிட்டே!
பொறந்தது மொத ஒன்னைப் போலே நான் எம்பிட்டுப் பேரெப் பார்த்தவனாச்சே! நான் அம்புட்டுப் பேரையும் ஏமாத்தரவனாச்சே! அடே ரோக்கிதே இல்லாத பயலே! ஒங்கிட்ட நான் பயப்பட்டவன்?

கமலே : ஆர்றா ரோக்கிதே இல்லாதவன்?

முண் : நீதாண்டா?

கமலே : ஒங்கப்பன், பாட்டன், முப்பாட்டன் இவிங்க தாண்டா ரோக்கித இல்லாதவிங்க. (ஓடிப் போகும்படி கமலேசன் மகிபாலனுக்குச் சைகை காட்டுகிறான்.)

முண் : அடே! களுதே! இனிமேலே பேசினின்னா பல்லு கில்லெல்லாம் ஒடஞ்சி போவும். ஆருன்னு பாத்துக்கிட்டே? அடே, மகிபாலா! எங்கிடா பணம்? வைடா கீளே! (இழுக்கிறான்.)

மகி : ஐயா! ஐயா! இன்றைக்குள் எப்படியாவது கொடுத்து விடுகிறேன். என்னை ஏன் இப்படிக் கொல்லுகிறாய்? இனி மேல் உபத்திரவித்தால் என் உயிர் போய்விடும்.

கமலே : (கோபத்தோடு) அடே தேவிடியா மகனே. அவனேத் தொடாதேங்கிறேன். போட்டு இளுக்கிறீயா? அவன் மேலே இன்னமேக் கை போட்டீன்னா ஒன் முதுகு தோலைப் பேத்துடுவேன். சாக்கிரதே! அடியாத்தே ஆருன்னு ரோசனை பண்ணிக் கிட்டே?

(முண்டன் மகிபாலனுடைய மூக்கின் அடிக்க இரத்தம் வடிகிறது. அதைக் கண்ட மகிபாலன் சோர்ந்து கீழே விழுகிறான்.)

கமலே : இதோ பாருடா ஒரே ஒதலே ஒன் தலை கிலேல்லாம் எகிரிப் போவுது (முண்டனை அடிக்கப் போகிறான்.)

முண் : வாடா ஒரு கை பார்க்கலாம். ஒம் பொஞ்சாதி புள்ளெங்களுக்கு ஒரு எலும்புகூட இல்லாமெப் பண்ணிப் புட்றேன். (அடிக்கிறான்.)

கமலே : ஆகா! அப்படியா ராசவீதிலே பட்டப் பகல்லே நீ என்னே அடிக்கிறியா? ஒருத்தரும் ஒன்னெக்கேக்றவங்க இல்லேன்னு நெனச்சுட்டியா? இப்பவே ஒங்க பாட்டன் ஒங்கம்மா புருசன் நாயாதபிதி இக்கிறான் பாரு அவன் கிட்டப் போயிச் சொல்லி ஒன்னே எங்கிட்டுப் பாக்கனுமோ அங்கிட்டுப் பார்க்கறேன். பயப்படாதே!

முண் : அடே இந்தப் பூச்சிக்கெல்லாம் இந்த முண்டன் பயந்துடுவான்னு நெனெச்சிக் கிட்டியாடா? கையாலே ஆவாத முண்டே இப்பவே போயி சொல்லிக் கோடா! நானும் ஒன்னெப் பாக்கறேண்டா எனக்கும் சாமி குடுத்த கண்ணு இக்குதுடா!

கமலே : நீயுமா பாக்கப் போறே? அடே எப்புடிடா பாப்பே? அந்த அளவெக் கொஞ்சூண்டு காட்டுறா பார்க்கலாம்.

முண் : இப்படித் தாண்டா பாப்பேன் (முண்டன் தன் கண்களை நன்றாய்த் திறந்து கொண்டு முகத்தை நீட்டுகிறான்.)

கமலே : இந்தா நல்லாப் பாருடா (கமலேசன் ஒரு பிடி மண்ணை எடுத்து முண்டன் கண்களில் போட்டு விடுகிறான். அவன் கண்களை மூடிக்கொண்டு தவிக்கிறான்.)

முண் : அடேடே! கண்ணு போச்சுடா! அடே திண்டா! இங்கிட்டு ஓடியாடோய்! என் கண்ணுலே ஊதுடோய்!
(அந்தச்சமயத்தில் மகிபாலன் எழுந்திருக்கிறான். அவனுக்குக் கமலேசன் சைகை செய்ய, அவன் ஓட்டம் பிடிக்கிறான்.)

கமலே : (தனக்குள்) சரி நம்ப ஆளு தப்பிச்சுக்கிட்டான். இந்த முண்டன் ராசாவுக்கு ரொம்ப வேண்டியவன். இவன் நம்ப தலெக்கிக் கல்லு வச்சுடுவான். பிரதாபன் என்கிற எடையன் ராசாவாகப் போரான்னு சோசியக்காரன் சொல்லிப் புட்டானாம். சானாபேரு அவங்கிட்டப்போயிச் சேந்துட்டாங்களாம். நானும் போயிச் சேந்துக்கறேன். (போய் விடுகிறான்.)

(வஸந்தஸேனையின் மாளிகை: ஒரு மஞ்சத்தின் மீது அவள் ஏதோ சிந்தனையின் ஆழ்ந்தவளாய்ச் சாய்ந்திருக்க, அவளுடைய பணிப்பெண் மல்லிகா விசிறியால் வீசுகிறாள்.)

மல்லி : அம்மா! இன்று பூஜைக்குத் தாங்கள் வர முடிய வில்லை என்று தங்கள் தாயிடத்தில் தெரிவித்து விட்டேன்.

வஸ : (தன் யோசனையில் இருந்து திடுக்கிட்டு) ஆகா! மல்லிகா! நீயா? என்ன சொல்லுகிறாய்?

மல்லி : பூஜை விஷயமாய் தாங்கள் செய்த உத்திரவைத் தெரிவித்து விட்டேன் என்றேன்.

வஸ : சந்தோஷம் (திரும்பவும் யோசனையில் ஆழ்கிறாள்.)

விருத்தம்: எதுகுல காம்போதி

மல்லி :
அன்னையே! அரியநங்காய்! அகத்தினை வருத்திச் சால
நின்னையே வதைக்கு மெண்ண மென்னென வுரைப்பா யென்பால்
பொன்னையே நிகர்த்த மேனி பொலிவெலா மிழக்கச் சோமன்
தன்னையே பழித்த வாமத் தண்முக மிழந்த கோலம்.

அம்மா! என்ன விசேஷம்? தாங்கள் அடிக்கடி எதை நினைத்தோ கவலைப்பட்டு வருந்துகிறீர்களே. நான் கேட்டால் கோபித்துக் கொள்வீர்களோ? என்று இதுவரையில் கேட்காமல் இருந்தேன். முகமெல்லாம் வெளுத்துப் போய்விட்டது! அடிக்கடி மெய்மறந்து ஏதோ விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்த வண்ணமாகவே இருக்கிறீர்கள். ஊணுறக்கம் முதலியவற்றையும் அலட்சியம் செய்கிறீர்கள். மாந்தளிரையும் வாழையின் குருத்தையும் போன்ற உங்களது மெல்லிய அழகிய தேகத்தை ஏதோ ஒரு மனப்பிணி வருத்திக் கருக்குகின்றதே! தயவு செய்து என்னிடத்தில் தெரிவியுங்கள். எந்த காரியத்தையும் மனதிலேயே இரகசியமாய் வைத்துக் கொண்டு தனிமையில் வியாகூலப் படுவானேன்? ஆப்தர்களான என்னைப் போன்றவர்கள் எதற்காக இருக்கிறோம்? விசேஷமென்ன என்பதைத் தெரிவித்தால் இதில் என்னால் ஏதாவது உதவி செய்யக் கூடுமானால் அதைச் செய்கிறேன்.

வஸ : (நாணத்துடன்) அப்படி ஒன்றையும் காணேனே! நான் சாதாரணமாக எப்பொழுதும் இருப்பதைப் போலத் தானே இருக்கிறேன். சர்க்கரை கசப்பது சர்க்கரையின் குற்றமல்லவே! வாயின் குற்றமல்லவா. ஆகையால் உன் கண்களிலேதான் ஏதோ மாறுபாடு உண்டாயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

மல்லி: அம்மா!
(சங்கல்பமே என்ற கீர்த்தனையின் வர்ணமெட்டு)
ப. ஸஞ்சலமே யாதோ மனதில்? தாயே
நீ ரதை யினிப் போக்குவீர் (ஸ்)
அ. நஞ்சானவே ஆகாரந்துயிலும்;
நங்கை நீ விர் வருந்தயான் சகிப்பெனோ?
ச. என்ன வேதனையோ? இனியும் நாணமோ?
என்ன கோலமெனது தேகம் பதைக்குதே!
அன்னாய்! துயர்போது மித்தொடு,
என்ன தேவை வருத்துதோ கூறுவீர். (ஸ்)

அம்மணி! எப்போதும் என்னைப் பரிகாசம் செய்வதைப் போல இப்போது செய்வது தவறு. யாவரிலும் உயர்ந்து ஆகாயத்தில் உலவும் அழகிய சந்திரனுக்குத் தன்னிடத்திலுள்ள களங்கத்தை அறிந்து கொள்ளும் வல்லமை இல்லை. அதை நாமல்லவோ அறிந்து கொள்ளுகிறோம். என்னிடத்தில் சொல் வதில் வெட்கமென்ன? நானும் தங்களைப் போல ஒரு ஸ்திரீ தானே! தாய்க்கு ஒளித்த சூலுண்டோ என்று சொல்லுவார்கள். தங்களை வருத்தும் நோய் இன்னதென்று ஒருவாறு எனக்குத் தெரிகிறது. அதுதானோ? என்று நிச்சயமாய் அறிந்து கொள்ள விரும்புகிறேன். எந்த நோயானாலும் அதை விலக்க மருந்திருக்கிறதே! வியாதியைப் போக்க முயலாமல் ஏன் அனாவசியமாய் அதை அதிகரிக்க விடவேண்டும்? தயவு செய்து தங்களுடைய மனோ வியாதியை வெளிப்படுத்துங்கள். அம்மணி!

வஸ : சில விஷயங்களில் உலகத்தாரின் அபிப்பிராயம் தவறாய்த் தோன்றுகிறது. அவர்கள் எதை நல்லதென்று நினைக் கிறார்களோ அது கெட்டதாக இருக்கிறது; எதைக் கெட்டது என்று மதிக்கிறார்களோ அது நல்லதாக இருக்கிறது.

மல்லி : அப்படியானால் உலகத்தார் யாவரும் மூடர்களோ? எந்த விஷயத்தில் அப்படித் தவறாக அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள்? தெரிவியுங்கள் கேட்கலாம்.

விருத்தம்: கானடா

வஸ:
மங்கையே என்றனாவி மல்லிகா உண்மைத் தோழி!
சங்கையை வதைத்துச் சாலச் சலனமே தரும்பொருட்கள்
எங்ஙன முயர்ந்த வாகு மெழிலினாற் குணத்தாற் கூறாய்
பங்கமார் பொருளே யன்றிப் பிறிதெனப் பகர லாமோ?

எது மிகவும் அழகானது, எது மிகவும் நற்குணமுடையது என்று சொல்லப்படுகிறதோ, அது பெரிதும் துன்பத்தைத் தருவதாய் இருக்கிறது. குணமும் அழகுடைய பொருள் நமது மனதைக் கவர்ந்து நம்மை ஓயாக் கவலையிலும் ஒழியா மனோ வேதனையிலும் ஆழ்த்துகிறது. செல்வமென்பது சிந்தையின் அமைதி அல்லவா? எல்லாச் செல்வத்திலும் அருமையானதும் மேலானதும் மனதின் திருப்தி ஒன்றே! அவ்வித அருமையான திருப்தியைக் குலைத்து மனதைப் பாழாக்குகின்ற பொருளை நல்லதென்று சொல்லலாமோ? நம்முடைய பஞ்சேந்திரியங்களுக்கும் மனதிற்கும் எது இன்பத்தை ஊட்டுகின்றதோ அதையல்லவோ அழகுடைய பொருள் என்றும் நற்குணமுடைய பொருள் என்றும் கொள்ள வேண்டும்.

மல்லி : அழகான ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது எதனால்? அந்தப் பொருள் இன்பம் தருவதைக் காணவே, அதை நாமடைதல் வேண்டுமென்று மனதில் உண்டாகும் பேராசையினால் நமக்கு மனோ வேதனை உண்டாகிறது. நம்முடைய துன்பத்திற்கு நமது மனதே காரணமின்றி அந்தப் பொருள் இன்பத்தையே தருகிறது! இது யாருடைய குற்றம்? அந்தப் பொருளை அடைய நாம் அவ்வளவு ஆத்திரப்படுவானேன்? எல்லாவற்றினிடத்திலும் அதிக விருப்பும் வெறுப்பும் இல்லாமல் இருந்தால் நம் மனதில் அவ்வளவு வேதனை ஏன் உண்டாகிறது? ஆகையால் இன்பமும் துன்பமும் நம்முடைய மனதிலேயே இருக்கின்றன. நாம் நம்முடைய மனதை அடக்கி நடத்துவதில் இருந்து அவை ஏற்படுகின்றன.

வஸ : உலகத்தில் எல்லோரும் சந்நியாசியைப் போல மனோ உறுதியைக் கொள்ள முடியுமா? எல்லா மனிதரும் துறவிகளாய் விட்டால், இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் மாயா ரூபமான சிருஷ்டிப் பொருட்கள் யாவும் அனாவசியமாய் விடும். அவற்றைப் படைத்த ஈசுவரனுக்கும் ஒரு வேலையும் இல்லாமல் போய் விடும். உலகப் பற்றை ஒழித்த யோகியும் அழகென்று சொல்லப் படும் அந்த வஞ்சகப் பொருளின் மாய வலையில் பட்டுத் தத்தளிக்கிறான் என்றால், மற்றவரின் தன்மையைப் பற்றி சொல்வானேன். ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது அந்தப் பொருளின் குற்றமாய் இருந்தால் என்ன? எவ்விதத்திலும் நாம் அந்த பொருளைப் பற்றி வருந்த நேருகிறது. ஆகையால் நம்மைத் துன்புறுத்தும் பொருட்களை நல்ல பொருட்கள் என்று சொல்வது தவறு. எது நம்முடைய மனதில் சலனம் உண்டாக்காமல் இருக்கிறதோ அதுவே நல்ல பொருள். அதையே விசேஷித்ததாய் நாம் கொண்டாட வேண்டும். ஆனால் ஜனங்கள் பின்னதை அலட்சியமாக மதிக்கிறார்கள். அதிருக்கட்டும்; நீ என் மனோ வியாதியின் காரணத்தைக் கொஞ்சம் அறிந்து கொண்டதாய்த் தெரிவித்தாயே! எங்கே? இன்னதென்று சொல் பார்க்கலாம்.

மல்லி : (’மருவே செறித்த’ என்ற திருப்புகழ் வர்ணமெட்டு)

ஆனந்த பைரவி
அகமோவிளைக்க முகமோ வெளுக்க அழகே யொளித்த திதுதீது,
அறிவேனனைத் துமதவேள் விடுத்த கணையேவகுத்து குறியாகும்.

இச்சின்னங்கள் எல்லாம் காதல் நோய்க்குத்தான் உண்டாகும். என்னை ஏன் இப்படிப் பரீட்சிக்கிறீர்கள். தயவு செய்து இரகசியத்தை என்னிடத்தில் தெரிவியுங்கள். அநியாயமாய்த் தங்களுடைய மெல்லிய மேனி வதைபடுகின்றதே எந்த இராஜ குமாரன் தங்களுடைய மனதை இப்படிக் கவர்ந்தான்? உண்மையைச் சொல்லுங்கள்.

வஸ : (மேற்படி வர்ணமெட்டு) – கல்யாணி
ஸகியே! கணத்திற்பலமாதை நத்துநிருபோர் மணத்தல் ஸரியாமோ?
ஸகியே எனக்கு விதியோ? மனத்தும் நினையேன் சலிக்கும்-மகிபோரை

இருந்திருந்து இராஜகுமாரன் பேரிலா காதல் கொள்ள வேண்டும்? அவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் மனையாட்டி ஆயிற்றே அவர்கள் காதல் நிலைத்ததல்லவே! அவர்களை நம்பினோர்களின் கதி அதோ கதியல்லவோ இன்றைக்கு என்னை விரும்புவார்கள் நாளைக்கு வேறு ஒருத்தியின் பேரில் மோகம் கொண்டு என்னை அலட்சியம் செய்வார்களே! அவர்களை நம்புவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போன்றதே!

மல்லி : (மேற்படி வர்ணமெட்டு) – ஆபேரி
மயிலே பழித்த இயலே செழித்த மணியே இனித்த மடமானே
மறையோர் குலத்தி லெழிலா ரொருத்தர் மனமீ திருத்தல் நிஜமாமே.

அப்படியானால் தங்கள் மனதிற் குடிகொண்ட புண்ணியவான் யாராவது பிராம்மணராய்த்தான் இருத்தல் வேண்டும். தாங்கள் சாதாரணமானவர்களின் மீது இச்சை கொள்வீர்களா? அவர் சகல விதமான கல்வியிலும் தேர்ச்சி பெற்றவரும் யெளவனப் பருவமுடையவருமான அந்தணராய்த் தான் இருக்க வேண்டும். ஆம், அதோ பாருங்கள்! உங்கள் முகத்தில் ஒருவிதப் புன்னகை உண்டாகிறதே!

வஸ: (மேற்படி வர்ணமெட்டு) – காம்போதி
கயலே பழித்த விழியாய்! படித்த மறையோர் மணத்தல் கருதார்கள்
அவரோ துதித்துப் பணிவோடிருத்த துருகான முற்று-மறிவோர்கள்.

பிராம்மணர்கள் வணங்கப்படுவதற்கு அருகரே ஒழியக் காதலிக்கப்படக் கூடியவர்கள் அல்லரே அதற்கென்ன செய்கிறது?

மல்லி : அப்படியானால் அவர் வைசிய ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கலாமோ? அந்த ஜாதியாரிடத்திலேயே பொருள் குன்று குன்றாய்க் குவிந்திருப்பதால் அதுவும் ஒரு விதத்தில் நல்ல சம்பந்தந்தான்.

வஸ: அடி மல்லிகா ஏதேது? நீ என்னை விட மாட்டாய் போல் இருக்கிறது! ஒவ்வொரு ஜாதியாய்க் கேட்டுக் கொண்டே வருகிறாயே! கடைசியாக நல்ல வார்த்தை சொன்னாய்! வெட்கக் கேடு, வைசியனை யாராவது கணவனாய் அடைவார்களோ? திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி அவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்லவோ? இரவிலும் பகலிலும் விழிப்பிலும் துயிலிலும், அவர்களால் வணங்கப்படும் கடவுள் பணமே. அவர்கள் மனிதரிடத்தில் சிறிதும் பிரியம் வைக்க மாட்டார்களே! அவர்கள் ஓயாமல் தூர தேசத்திற்குப் போவதிலும் கடைகளைக் கட்டியழுது கொண்டிருப்பதிலும் தம் ஆயுட் காலத்தைக் கழிப்பவர்கள் அல்லவோ. ஸ்திரீகளின் மனது குளிர அவர்கள் வாயில் இருந்து ஒரு அன்பான மொழியும் வராதே. ஆகையால் வைசியர் பேரில் எந்த ஸ்திரீ ஆசை வைப்பாள்!
மல்லி : அப்படியானால் உங்கள் காதலர் பிராம்மணரும் அல்ல, க்ஷத்திரியருமல்ல, வைசியருமல்ல, வேறு யார்?

வஸ: அடி மல்லிகா நீ ஒன்றையும் அறியாதவளைப் போல மிகவும் அவசரமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறாயே! நாம் இரண்டொரு மாசத்திற்கு முன் ஸ்வாமி கோவிலுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவரைப் பார்த்து அவர் யாரென்று நான் உன்னைக் கேட்டதை மறந்து விட்டாயா?

மல்லி: ஓகோ அப்படியா? அறிந்து கொண்டேன்! அறிந்து கொண்டேன்! நேற்றிரவு நீங்கள் ஒளிந்து கொண்டதாகச் சொன்னீர்களே. அது அவருடைய மாளிகை அல்லவோ? ஆனால் அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாய் ஜனங்கள் சொல்லிக் கொள்கிறார்களே! அவர் பேரிலா இச்சை கொண்டீர்கள்?

வஸ: (’எந்துகுவாடலகிநாடு’ என்ற பாட்டின் வர்ண மெட்டு)
தோடி – ரூபகம்
ப. ஸுந்தரனால் எனதுமேனி சோர்ந்ததேவாடி
அ. இந்து வதனங் கினிமை காண
எந்தமாது மாசைமீற வந்து பாதம் போற்றிடுவாள் (ஸு)
ச. எந்த நாளும் நிறையில்மீறா நீர்மையும் நலமும்
சொந்தமான தனமேயாக – ஸுகமோ செல்வமே!
மனத்தின் பெருமை பணத்திற் காமோ!
மாரன்வாம மேனிகாணத் தீமையாரு நீங்கியோடும் (ஸூ)

அவர் தனத்தில் ஏழையாய் இருந்த போதிலும் குணத்தில் அவரைவிட மேலான தனிகர் உண்டோ? கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்பார்களே. அதற்கு இணங்க அவருடைய அழகு கண்கொள்ளா காட்சி அல்லவா? யோக்கியதையைக் கருதாமல் பணத்தையே தாசியர் நாடு வார்கள் என்று சொல்லப்படும் தூஷணை எனக்கு இல்லாமற் போகட்டுமே.

மல்லி : அம்மணி! மாமரத்தின் புஷ்பங்களெல்லாம் உதிர்ந்து போன பிறகு, அதை வண்டுகள் நாடுதல் உண்டோ?

வஸ : ஆகையினாலேதான் வண்டிற்குக் காமன் என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. அறிவில்லா வண்டுகள் அப்படி நன்றி அற்றதாயும், சுயநலம் உடையதாயும் இருந்தால் நன்றாய்ப் பகுத்தறிவைப் பெற்ற நாமும் அதைப் போலச் செய்தல் வேண்டுமா?
மல்லி : அப்படியானால் அவரை அடையும் வழியைப் பற்றி யோசனை செய்யத் தடையென்ன?

வஸ : அதற்காக நான் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். அதை ஹேதுவாக வைத்துக் கொண்டு அவரிடம் திரும்பவும் போய்ப் பார்க்கலாம். ஆனால் அவருடைய பிரியத்தைப் பெறுவது சுலபமான காரியம் அல்ல, என்ன செய்கிறது?

மல்லி : (புன்சிரிப்புடன்) ஓகோ இந்த எண்ணத்தினாலே தான் ஆபரணங்களை அவருடைய மாளிகையில் வைத்து விட்டு வந்தீர்களோ?

வஸ : (திடுக்கிட்டு) இதென்ன சப்தம்? யார் ஓடி வருகிறார்கள். யார் இந்த மனிதன்?

(மகிபாலன் அவர்களிருந்த இடத்திற்குள் வேகமாய் ஓடி வந்து வஸந்தஸேனையின் காலில் விழுகிறான்.)

மகி : அம்மணி! அபயம்! அபயம்! இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.

வஸ : கொடுத்தேன் அபயம்! எழுந்திரு! மல்லிகா! வாசற் கதவை மூடிவிடு. (மல்லிகா போகிறாள் யாரைக் கண்டு இப்படி ஓடி வருகிறாய்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது?

மகி : கடன்காரனுக்காக பயந்து ஓடி வருகிறேன்.

வஸ: அடி மல்லிகா கதவைத் தாளிட்டு விடு.

மகி : (தனக்குள்) ஆகா கடன்காரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் இவள் என்னைக் காட்டிலும் அதிகமாய்ப் பயப்படுகிறாளே! இதுவும் அதிர்ஷ்டந்தான் ஏராளமான செல்வமும், நற்குணமும் பெற்ற இந்த ஸ்திரீ எனக்கு உதவி செய்யாமல் இருக்க மாட்டாள். பார்க்கலாம்.

(வீட்டிற்கு வெளியின் முண்டன், திண்டன் இருவரும் வருகிறார்கள்.)

முண் : அவன் எங்கிட்டுத்தான் போனான். அவனே உடப் போறதில்லை! நமக்காச்சு அவனுக்காச்சு! பார்க்கலாம் ஒரு கையி.

திண் : அவனாவது இன்னமே ஆப்புடவாவது! அவன் என்ன சாகசீகம் சேஞ்சுப்புட்டுப் போய்த் தாங்கிறேன்.

முண் : அவன் மூக்கே கீழே போட்டுத் தேச்சு மூஞ்சிலே மோடு பள்ளம் இல்லாமெ நெரவிப்புட்டேனே! இந்தாலே பாரு இன்னம் நெத்தம் சொட்டிக்கினே ஓடிக்கிறான்.

திண் : நெத்தம் இந்த ஊட்டுக்குள்ளே போயிருக்குதுடா ஆப்புட்டுக்கிட்டாண்டா ஆளு. இந்த ஊட்டுக்குள்ளற ஒளிச்சிக் கினுக்கிறாண்டா திருடன்.

முண் : கதவே இடிக்கலாண்டா!
(உட்புறத்தில்)

மல்லி : (மகிபாவனைப் பார்த்து) ஏனப்பா நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன தொழில் செய்பவன்? நீ பயந்து ஓடி வந்த காரணமென்ன? என்னுடைய எஜமானி அம்மாளுக்குத் தெரியும்படி சொல்.

மகி : அம்மா என்னுடைய சொந்த தேசம் குஸ்ஸும புரம். நான் ஒரு ஏழையின் மகன். எனக்குக் கால் பிடிக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும்.

வஸ: அது ஸ்திரீகள் செய்யக் கூடிய தொழில் அல்லவா! அதையா கற்றுக் கொண்டாய்?

மகி : ஆம்! என்ன செய்கிறது! வயிறு வளர்க்க வேண்டுமே!

வஸ : ஸரி! மேல் விருத்தாந்தங்களைத் தெரிவி.

மகி : அந்த தேசத்தில் பிழைப்பதற்கு வழி இல்லாமையால் இந்த மங்களபுரத்திற்கு வந்து ஒரு பிரபுவினிடத்தில் வேலைக்கு அமர்ந்தேன். அவருடைய தேகத்தின் அழகைப் போலவே அவ ருடைய குணத்தின் அழகும் பொருந்தி இருக்கிறது. அவருடைய அன்பும் தயாளமும் என்னவென்று சொல்வேன்! பிறர்க்கு உதவு வதற்கு என்றே தனக்குப் பொருள் இருப்பதாக நினைப்பவர்.
மல்லி : அப்படியா? அவர் முழுத் திருடராய் இருக்கிறாரே.

மகி : அம்மா! அப்படிச் சொல்ல வேண்டாம். பாவம் வந்து சம்பவிக்கும். அவரைத் தூஷிக்கும் நாக்கு அழுகிப்போம்.

மல்லி : என்னுடைய எஜமானி அம்மாளின் குணங்கள் யாவற்றையும் திருடி அணிந்து கொண்டிருக்கும் அவரை வேறு எவ்விதமாய் மதிப்பது அவ்வளவு மேன்மை பொருந்தியவர்
யாரப்பா?.

வஸ : ஆம் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்று எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. தெரிவி.

மகி : அம்மா அவர் தன்னுடைய தயாள குணத்தினாலும் ஈகையினாலும்…

வஸ : தன்னுடைய தனத்தை எல்லாம் செலவு செய்து விட்டாரோ!

மகி : அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது. நான் இன்னம் சொல்லவில்லையே!

வஸ : அதைச் சொல்லவும் வேண்டுமா செல்வமும் நற்குணமும் ஒன்றாய்க் கூடி இருப்பது அபூர்வமல்லவோ. உலோபிகளிடத்திலேயே பொருள் யாவும் நிறைந்திருப்பது உலக வழக்கம். சாக்கடைக் குழியில் தானே அருந்துவதற்கு அருகமற்ற ஜலம் உச்சி விளிம்பு வரையில் நிறைந்திருக்கும்.

மல்லி : அவருடைய பெயரைத் தெரிவி.

மகி : குளிர்ந்த முகத்தை உடையவராதலால் பூலோக சந்திர னென்று யாவரும் அவரை அழைக்கிறார்கள். அவர் பெயர் மாதவராயர்.

வஸ : (திடுக்கிட்டுத்தன் ஆசனத்தை விட்டெழுந்துஅடி! மல்லிகா! இவருக்கு ஆசனம் கொண்டு வந்து போடு. ஐயா இது உம்முடைய வீடு; தயவு செய்து உட்கார்ந்து கொள்ளும். அடி மல்லிகா விசிறி கொண்டு வா அந்தச் சரீரத்தைத் தொட்டு வருடும் பாக்கியத்தை உடைய இவர் எவ்வளவோ தவம் செய்திருத்தல் வேண்டும்! இவருடைய பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! விசிறியால் வீசு! அபூர்வமாக வந்த நம்முடைய விருந்தினர் களைத்துப் போயிருக்கிறார்.

மகி : ஆகா! மாதவராயருடைய பெயரைச் சொன்னதற்கு இவ்வளவு மரியாதையா! மெச்சினேன் சிரேஷ்டரே! உலகில் உதித்தால் இப்படிப் புகழுடன் உதித்தல் வேண்டும். இல்லை யாயின் பிறக்காமல் இருப்பதே உத்தமம். நீர் ஒருவரே உயிருடன் இருப்பவர்; மற்றவர்கள் நடை பிணங்களே. தனிகர்களை அடுத்த நாய்க்கும் வண்டியேற்றம் கிடைப்பதைப் போல், அவரால் எனக்கும் இந்தப் பெருமையோ அம்மா! தாங்கள் நிற்க வேண்டாம் உட்காருங்கள்.

வஸ : (உட்கார்ந்து) உமக்குக் கடன் கொடுத்த பிரபுவின் பெயரென்ன?

மகி : பணம் இருந்ததினாலேயே எல்லாரும் பிரபுவாய் விடுவார்களா? எவனிடத்தில் குணத்தழகும், பிறரை எவ்விதம் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் உணர்வும் இருக்கின்றனவோ அவனே பிரபு!

வஸ : சரி! உண்மைதான்; அது போகட்டும்; உமது கடன்காரன் பெயரைச் சொல்லும்.
மகி : நான் மாதவராயப் பிரபுவின் வேலைக்காரனாய் இருந்தேன். அவர் ஏழ்மைத் தனம் அடைந்த பிறகு நானும் அவருக்குப் பாரமாய் இருக்கக் கூடாதென்று நினைத்து, அவரை விட்டு வந்து விட நேர்ந்தது. பிழைக்க வழி வேறு இல்லாமையால் நான் சூதாட ஆரம்பித்தேன். அதில் 10-ரூபாய் தோற்றேன்.

(வெளியில் இரண்டு சூதாடிகளும் கதவை இடிக்கிறார்கள்)

மகி : (திடுக்கிட்டு) ஆகா! அவர்கள் வந்து விட்டாற் போல் இருக்கிறதே! ஐயோ என்ன செய்யப் போகிறேன்.

வஸ : அடி மல்லிகா! இதோ இந்தக் காப்பை எடுத்துக் கொண்டு போய் 10-ரூபாய்க்குப் பதிலாய்க் கொடுத்து விட்டு வா. இவரே கொடுத்ததாகத் தெரிவி.

மல்லி : ஏனையா! உமது கடன்காரன் பெயரென்ன?

மகி : அவன் பெயர் முண்டன்.
(உடனே மல்லிகா வெளியிற் போய்க் கதவைத் திறக்கிறாள்.)

முண் : அடே! ஆரோ கதவெத் தொறக்கிறாடா!

திண் : அவன் எங்கிட்டோ போயி நொளஞ்சிட்டாண்டா! இன்னமேலே நம்ம கையிலே சிக்க மாட்டாண்டா போவோம்டா!

மல்லி : யார் நீங்கள்? கதவை இப்படித் தானா இடிக்கிறது! இரண்டு பேரில் முண்டன் யார்?

திண் : அடே அண்ணே! இவ எம்பிட்டு அளவாக்கிறாடா! ஒன்னெத்தாண்டா கேக்கறா!

முண் : முண்டனே நீ என்னாத்துக்கு தேட்றே? அவுனுக்கு நொம்ப வருசத்துக்கு மின்னெயே கண்ணாளம் ஆயிப் போச்சே!

திண் : இல்லாமெப் போனா, அவனோடெ கூடச் சூதாடலாமான்னு தேட்றியா? .

முண் : இம்புட்டுச் சோக்கான பொண்ணு என்னை என்னாத்துக்குத் தேட்றே? நாந்தான் முண்டன்; ஆசையா தேட்றியே எனக்கு என்ன தரப் போறே? சொல்லேன்.

மல்லி : உனக்கு யாராவது பணம் தரவேண்டுமா?

முண் : ஆமா, ஒரு களுதெ 10-ரூபா குடுக்கணும். அய்யோக்கிய முண்டே. அந்த நாயி இந்த ஊட்டுக்குள்ளற நொளஞ்சிதே அவன் ஒனக்கு என்ன சொந்தம்? ஆசெ நாயகனா?

திண் : அந்தப் பொணத்தெக் கட்டிக்கினா வாள்ந்து பூடுவே!

மல்லி : அடெ! ஏது வார்த்தைகள் வர வர அதிகரிக்கின்றன? போதும் நிறுத்துங்கள் அதிகப் பிரசங்கத்தை. இதோ இந்தக் காப்பை அவர் உன்னுடைய கடனுக்காக கொடுக்கச் சொன்னார். எடுத்துக் கொண்டு இங்கு நிற்காமல் நடவுங்கள்.

முண் : ஆகா! சந்தோசம்! அப்படியானா ரோக்கியந்தான்! அவன்மேலே எங்கிளுக்கு ஒரு கோவமுமில்லெ! எப்போ ஓணாமின்னாலும் இனிமேலே வந்து சூதாடட்டும். அடே! வாடா போவோம்.

திண் : அடே இவன் எம்புட்டு அளவான பணக்காரக் குட்டியை சம்பாறிச்சுக் கிட்டான் பாத்தியாடா இவ மேலே நவெ ஜிலுஜிலுன்னு மின்னுதுடா
(போகிறார்கள்)

(மல்லிகா உள்ளே வருகிறாள்)

மல்லி : அம்மா அவர்கள் காப்பை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்ப் போய்விட்டார்கள்.

வஸ : ஐயா! நண்பரே! நீர் திரும்பி வராததைப் பற்றி உம்முடைய மனைவி மக்கள் வருந்தியிருப்பார்கள். சீக்கிரம் போய் அவர்களுடைய ஆவலை நீக்கும்.

மகி : அம்மணி எனக்கு மனைவி ஏது? பிள்ளை ஏது? ஒன்றுமில்லை நான் ஏகாங்கி. நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஈசுவரன் உங்களைக் காப்பாற்றுவான். உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்)

(வெளியில் வந்து தனக்குள்)
ஆகா! இந்தத் தொழில் எவ்வளவு மானக் கேட்டையும் துன்பத்தையும் கொடுத்தது. சே! இப்படித் திக்கில்லாமல் அலைவதை விடப் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பதே நல்லது. என்ன உலகம்! நாணயமாய் வேலை செய்து இந்த ஒரு வயிற்றை வளர்ப்பதற்கு இந்த ஊரில் ஒரு வேலை அகப்படாமற் போய் விட்டதே! இவ்வளவு திடமான சரீரத்தை வைத்துக் கொண்டு நான் பிச்சை எடுக்கப் போனால் எவன் ஒரு பிடி சோறு போடுவான் தடியை எடுத்து வந்து மண் டையை உடைத்து அனுப்புவான். நல்லது! நான் இப்பொழுது காஷாயம் முதலியவற்றைப் பெற்றுச் சந்நியாசியாகிறேன். அதைவிடக் குறைந்த மனக்கவலை உடைய நிலைமை பூமியில் வேறொன்றுமில்லை. ஆகையால் அப்படியே செய்கிறேன்.

(போகிறான்)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *