கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 192 
 
 

அங்கம் 1 – காட்சி 3 | அங்கம் 1 – காட்சி 4 | அங்கம் 2 – காட்சி 1

இடம் வஸந்தஸேனையின் மாளிகை.

மேன் மாடியில் வஸந்தஸேனை சோபாவிற் சாய்ந்து கொண்டிருக்கிறாள்.

சசிமுகன் வெளியில் இருந்து மாளிகைக்குள் நுழைகிறான்.

காலம் மேற்படி தினம் விடியற்காலை.

சசிமுகன் : (தொண்டிச் சிந்து: நந்தன் சரித்திரம் ”பழன மருங்கனையும்” என்ற பாட்டின் வர்ண மெட்டு)

  1. எனதே உயிர்நிலையாம் – அந்த
    இந்திர சந்திரரும் இணையோ!
  2. மனதே நினைப்பதெல்லாம் – இந்த
    மாத்திரைக் கோலினால் யான் பெறுவேன்
  3. இரவே எனது நகர் – அதில்
    நித்திரையே படை யான் அரசன்
  4. குறைவே திருட்டிலில்லை – கலை
    கற்றலுங் கண்ணையிழத்தலு மேன்?

(தனக்குள்) என்னுடைய உத்தியோகமும் சந்திரனுடைய உத்தியோகத்தைப் போலவே இரவில் பிரகாசிப்பதும் பகலில் ஒளியை இழந்து ஒடுங்குவதுமாய் இருக்கிறது! இதனாலே தான் எனக்கு சசிமுகன் (சசி = சந்திரன்) என்று பெயர் கொடுத்தார்களோ! நான் இந்த மேன்மையான உத்தியோகத்தைச் செய்வேன் என்று நான் பிறந்த பொழுதே எப்படி அறிந்து கொண்டார் களோ தெரியவில்லை. என்னுடைய காரியம் சோம்பலே நிறைந்த இரவை அவமானப்படுத்தி, நித்திரா தேவியைத் தோற்கடித்து, ஏமாந்த காவலை ஏளனம் செய்கிறதல்லவா! ஆனால் நான் ஒருவருக்கும் தெரியாமல் எவ்வளவோ சாமர்த்தியமாய் இந்தக் காரியத்தை முடித்த போதிலும், என் செய்கைகளை எல்லாம் பார்த்த வண்ணம், என்னுடன் தொடர்ந்தும் நடந்தும் ஓடியும் வருபவ னும், எல்லாத் திருட்டையும் தன் கண்ணால் காண்பவனும், எவராலும் ஏமாற்ற முடியாத அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தனான கடவுளை நினைக்க, என் அச்சம் அதிகரிக்கிறது. என் மனதே இது குற்றம் இதுகுற்றமென்று நீதி போதனை செய்த வண்ணம் இருக்கிறது, என்ன செய்வேன்? என் மனதில் முற்றிலும் குடி கொண்ட அந்த யெளவன மங்கையின் பொருட்டல்லவோ நான் இப்படி இரவைப் பகலாக்கி, எவ்வளவோ தந்திரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் வஸந்தஸேனையின் மாளிகை. மல்லிகா எங்கிருப்பாளோ தெரியவில்லையே!

தன்யாசி-ரூபகம்

ப: எவ்விடங் காண்பேனோ? என் ரதியை எத்தினமடைவேனோ?

அ. செவ்விய மேனியள், ஜெகத்திலிணையே இல்லாள்
ஒவ்வொரு நொடிவளர் சுந்தரவல்லியை (எவ்)

ச. 1 நொடியுக மானது; நோயெனைத் தீய்த்தது;
வடிவழகியை யடை நற்றினம் வருமோ? (எவ்)

2 இப்பெரு நிதியினுக் கிந்திர லோகமும்
ஒப்புயர் வாகுமோ? உரைத்திடப் பெறுமோ? (எவ்)
(கையில் ஒரு விசிறியுடன் மல்லிகர வருகிறாள்)

ஆகா! அதோ வந்து விட்டாள் என் சுந்தரி! அவளை அரை கணம் காணாவிட்டால் என் மனம் படும் பாட்டை என்ன என்று சொல்வேன்? என் உயிரே துடித்துப் போகிறது. ஜூரமடித்த உடம்பில் சந்தனக் குழம்பைப் பூசினால் அது எவ்வளவு இன்பமாய் இருக்குமோ, அப்படி அல்லவோ இருக்கிறது! நெருப்பைப் போல எரிந்து தகிக்கும் என் மனத்தைக் குளிரச் செய்ய அதோ வந்துவிட்டாள் என் இரதி மல்லிகா! சரியான பெயர்தான்! மல்லிகைப் புஷ்பம் எப்படித் தன் வாசனையினால் மனிதரைப் பரவசப்படுத்துகிறதோ அவ்விதமே இவள் என் பஞ்சேந்திரி யங்களுக்கும் பிரும்மானந்தம் ஊட்டுகிறாள். (மெதுவாக) அடி மல்லிகா!

மல்லி : யார் அது? ஓகோ! சசிமுகரா! வாரும் வாரும் இவ்வளவு விடியற் காலத்தில் எங்கிருந்து வருகிறீர்? என்ன விசேஷம்?

சசி : (புன்முறுவலோடு) – கண்ணே! எல்லாவற்றையும் தெரிவிக்கிறேன். சமீபத்தில் வா!

மல்லி : உஸ்! கூச்சலிடாமல் பேசும். என் எஜமானி அம்மாள் காதில் விழப் போகிறது.

வஸந்த : (மேன் மாடிவில் தனக்குள்) என்ன! மல்லிகா விசிறி எடுத்துக் கொண்டு வரப் போனவள் இன்னம் வரவில்லையே! எங்கு போயிருப்பாள் (ஜன்னலின் வழியாகக் கீழே பார்க்கிறாள்) என்ன ஆச்சரியம்! யாரோ ஒரு புருஷனோடு பேசிக் கொண்டிருக்கிறாளே! ஒருவருக்கு ஒருவர் மிகவும் பிரியமாய்ப் பேசுவதாகத் தெரிகிறது! இதற்கு முன் பழகி அறிந்தவர்களைப் போலக் காணப்படுகிறது! சே! அவளை அவன் முத்தமிடுகிறானே! ஓகோ! காதலர்களோ! மல்லிகாவும் என்னைப் போல் யெளவன ஸ்திரீயல்லவா? இருக்காதா! உண்மைக் காதலை நாம் ஏன் கெடுக்க வேண்டும். அவர்கள் இச்சைப்படி செய்து கொள்ளட்டும். அவள் திரும்பி வரும் போது வரட்டும். கஷ்டப் பட்டவர்களுக்கு அல்லவா காதலின் துன்பம் தெரியும்.

மல்லி : சரி! நேரமாகிறது. நான் போக வேண்டும். விஷயத்தைச் சொல்லும். (அவன் நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) ஏன் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பார்க்கிறீர்? என்ன பயம்! என் எஜமானி அம்மாள் மெத்தையில் இருக்கிறாள்.

சசி : நான் உன்னிடத்தில் ஒரு இரகசியம் தெரிவிக்க வேண் டும், இங்கே சமீபத்தில் வேறு யாருமில்லையே.

மல்லி : ஒருவரும் இல்லை. சொல்லலாம்.

வஸந்த : (தனக்குள்) இரகஸியமா! அப்படியானால் நான் இனிமேல் இவர்கள் பேசுவதைக் கவனித்தல் கூடாது.

சசி : வஸந்தஸேனை உன்னை அடிமைத் தன்மையில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு பொருள் கேட்பாள்?

வஸந்த : (தனக்குள்) அவன் என் பெயரைச் சொல்லுகிறானே! இந்த இரகசியத்தில் நானும் சம்பந்தப்படுவதாய்த் தோன்றுகிறது. ஆகையால் இந்த ஜன்னலுக்கு சமீபத்தில் மறைந்திருந்த வண்ணம் கேட்கிறேன்.

மல்லி : தான் இந்த மாளிகைக்கு அதிகாரியாகும் பொழுது யாதொரு பணமும் பெறாமல் என்னை விடுவிப்பதாக என் எஜமானி அம்மாள் பல தடவைகளில் தெரிவித்திருக்கிறார்கள். அதிருக்கட்டும், என்னை மீட்கத் தேவையான அவ்வளவு பொருள் உம்மிடத்தில் எது?

சசி : விருத்தம்: எதுகுலகாம்போதி
என்னரு மணியே! யுன்னை யெத்தின மடைவே னென்று
பன்னரு துயரி லாழ்ந்து பரிபவ மடைந்தேன்-வேண்டிற்
பொன்னொரு பொருட்டோ? தீமை புரியினும் பெரியதாமோ?
நின்னரு வேட்கை நாடி லெவ்வினை முடிக்க கில்லேன்.

பொருள் இல்லாமலா கேட்பேன்? அருமையான ஒரு வஸ்துவைப் பெற விரும்பினால் எவ்விதமான ஹீனத் தொழில் செய்தாயினும் அதற்குத் தேவையான திரவியத்தை சம்பாதித்தல் வேண்டாமா? உன் பேரில் நான் கொண்டிருக்கும் மோகம் இலேசானதா? அக்கிரமக் காரியம் செய்து பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?

வஸ : இவன் பார்வைக்கு நல்ல மனிதனாய் இருக்கிறானே! என்ன அக்கிரமக் காரியம் செய்திருப்பான்?

மல்லி : விருத்தம்: சஹானா
ஐயனே! நன்றே சொன்னீ ரறிவினர்க் குரிய தாமோ?
மெய்யென நாடி யற்ப வின்பநீர் விரும்பி முற்றும்
பொய்யனாய்க் குலத்தின் மேன்மை புகலருங்கலையின் ஞானம்
வெய்யனாய் விலக்கித் தீய வியற்றிடல் தகுதியாகுமோ?

ஒரு க்ஷணத்தில் ஒழியும் அற்ப சுகத்தை உத்தேசித்து நீர் அருமையான இரண்டு பொருட்களுக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிரே!

சசி : இரண்டு பொருள்கள் எவை?

மல்லி : உம்முடைய தேகம் ஒன்று. பெயர் ஒன்று.

சசி : நீ பெரிய முட்டாள். இந்த காலத்தில் துணிந்து செய்பவருக்குத்தான் அதிர்ஷ்டம் உண்டாகிறது! அது உனக்கென்ன தெரியும்?

மல்லி : (ஏளனமாய்) நீர் செய்தது கொஞ்சமும் குற்றம் இல்லாத காரியம்! என்பேரில் உமக்கு இருக்கும் காதலினால் நீர் இந்த அக்கிரமம் செய்தீர். ஆகையால் இது அக்கிரமமாகாது; மிகவும் நீதியான விஷயம்!

சசி : அடி தங்கமே! கோபித்துக் கொள்ளாதே! இந்த நகைகளை நான் ஒரு வீட்டில் இருந்து அபகரித்துக் கொண்டு வந்தேன்.

மல்லி : (வள்ளி சரித்திரம்: ”நெஞ்சையடைக்குதே நான் என்ன செய்குவேன் – நஞ்சை கொடுத்தாயோடி” என்ற பாட்டின் மெட்டு.)

அடானா – சாப்பு
நல்ல வினை செய்தீர்! ஐயா! இனி இங்கு நில்லாமல் ஏகுவீர்.
தீயவர் செய்திடும் காரியமல்லாவோ போம் போம் நீர்.

சசி :
என்ன மொழி சொன்னாய்? எங்ஙனஞ் செய்குவேன்!
கன்னியர் மாமணியே
நின்னையடைத்திட இவ்வினை செய்தேன்
சொன்னது நீதி யன்றே?

மல் :
எந்தப் பிறப்பினு மேலென வோதிடும்
அந்தணர் செய்வினையோ?
இந்தக் குணமுடையாரை விரும்பிடேன்
வந்தவழி இதுவே

சசி :
சுந்தரியே எனதாருயிர் நீ யெனை
நிந்தித்தலோ முறையே?
சொந்த மனைவி யென நின்னை நாடினேன்
கோபம் விடுவிப்பாயே.

அக்கிரமம் செய்தாலும் நான் நன்றாய் யோசித்துத்தான் செய்வேன். நான் ஸ்திரீகள் குழந்தைகள் முதலியோரிடத்தில் இருந்து திருடவில்லை. தானதருமங்களுக்காகச் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாடவில்லை. விலைக்கு விற்று விடும் பொருட்டுக் குழந்தைகளைத் திருடிக் கொண்டு வந்து விடவில்லை. இதோ நான் கொணர்ந்திருக்கும் ஆபரணங்களை உன் எஜமானியிடம் கொடுத்து உன்னை விடுவித்துக் கொண்டு வந்துவிடு. ஆனால் இவற்றை எப்பொழுதும் பெட்டிக்குள் ஜாக்கிரதையாக மறைத்து வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்.

மல்லி : அணிந்துக் கொள்ளத் தகாத ஆபரணங்களால் என் எஜமானி அம்மாளுக்கு என்ன பிரயோஜனம்? எங்கே? நகைகளைக் காட்டும்; பார்க்கலாம்.

சசி : இதோ பார் (காட்டுகிறான்)

மல்லி : ஹா! இதென்ன ஆச்சரியம்! இவைகளை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே! (யோசனை செய்கிறாள்) நீர் எங்கிருந்து இவற்றை எடுத்து வந்தீர்!

சசி : அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? உன்னை வடை தின்னச் சொன்னார்களா? அல்லது அதில் இருக்கும் துளைகளை எண்ணச் சொன்னார்களா? கேள்வி ஒன்றும் கேட்காமல் எடுத்துக் கொண்டு போ.

மல்லி : (கோபமாக) என்னிடத்தில் உமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை, நான் மாத்திரம் உமக்குத் தேவையோ? அப்படியானால் என்னை ஏன் விரும்புகிறீர்?

சசி : மாதவராயரென்று ஒரு பிரபு இருக்கிறார். அவரை உனக்குத் தெரியுமா?

மல்லி : ஹா! என்ன ஆச்சரியம்!

வஸ : ஹா! என்ன ஆச்சரியம்!

(வஸந்தஸேனையும் மல்லிகாவும் ஒரே சமயத்தில் மூர்ச்சிக்கிறார்கள்)

சசி : (மல்லிகாவைத் தாங்கி) மல்லிகா! ஏன் மயங்குகிறாய்? விழித்துக் கொள். (தனக்குள்) இவளுக்கென்ன துன்பம் சம்பவித்ததோ தெரியவில்லையே! கை கால்கள் எல்லாம் துவண்டு போயின. கண்கள் பயங்கரமாய்க் காணப்படுகின்றன. அடி மல்லிகா! இது தான் உன் பிரியமோ? என்னுடன் வந்துவிட நினைப்பதே இவ்வளவு பயமாய் முடிந்ததோ?

மல்லி : (கோபமாக) என் முன் நிற்காதேயும், துன்மார்க்கரே! போய்விடும்; இதை அபகரிக்கு முன், அந்த வீட்டில் இருந்த மனிதர்களில் எத்தனை பேரைக் கொன்றீர், உண்மையைச் சொல்லும்.

சசி : நான் ஒருவரையும் தொடக் கூடவில்லை.

மல்லி : உண்மைதானா?

சசி : நிச்சயம்! சத்தியம் உன் தலையில் அடிக்கிறேன்.

வஸ : ஆகா! உயிர் வந்தது.

சசி : அடி மல்லிகா! நீ என்ன இந்த விஷயத்தில் இவ்வளவு கவலையைக் காட்டுகிறாய்! உன் பேரில் வைத்த ஆசையினால் அல்லவோ, எவ்வளவோ உயர்ந்த பரிசுத்தமான குலத்தில் உதித்த நான் இதைச் செய்தேன். அடிமை நிலையில் இருந்து உன்னை விலக்கி, ஆயுட் காலம் எல்லாம் சுதந்திரத்தையும், என் மனப் பூர்வமான பிரியத்தையும் உனக்குக் கொடுத்ததற்கு, என்னை நீ ஏளனம் செய்வதும், வேறொருவனைப் பற்றி நீ கவலைப் படுவதும் பதில் உபகாரமோ? புஷ்பிக்கும் பாலிய காலமாகிய உன்னத மரமானது வீணிற் பழங்களைச் சுமந்து, வேசைகளாகிய பறவைகளுக்கு அல்லவோ அவற்றை இரை ஆக்குகின்றது! செல்வமும் புருஷத்வமும் இன்னம் நாம் விசேஷமாய் மதிப்பன யாவும், அடக்க முடியாத காமாக்கியினால் நாசம் அடை கின்றன. ஆகா! எப்பொழுதும் சலனப்படும் குணமுடைய ஸ்திரீகளிடத்திலும், எப்பொழுதும் மாறும் நமது அதிர்ஷ்டத்திலும் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் எவ்வளவு மடையர்கள்! ஏழைகளை ஸ்திரீகளும் அலட்சியம் செய்வதாய் இருந்தால், அவர்கள் பேரில் பிரியம் வைப்பதை விட நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் நாயின் பேரில் அந்த அன்பை வைத்தால், அது எவ்வளவோ நன்றியுடையதாய் இருக்கும்! முதலில் அவர்களே நம் மீதில் ஆசையைக் காட்டினால், அவர்கள் அவ்விதம் இருக்கும் வரையில் நாமும் பிரியத்தைக் காட்டிப் பிறகு பேசாமல் விட்டு விடுவது நல்ல காரியம்! ஸ்திரீகள் பணத்தின் பொருட்டு, நினைத்தால் அழுவார்கள்; நினைத்தால் சிரிப்பார்கள்; தம்மால் விரும்பப்படாதவனாய் இருந்தாலும், இவர்கள் தமது பாசாங்கினால், அவனுடைய நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வார்கள். ஆகையால், நற்குலத்தில் உதித்த யோக்கியதை உடைய யெளவன புருஷர், ஸ்மசானத்தில் உண்டாகும் புஷ்பங்களைப் போல ஏராளமாகக் காணப்படும் பரத்தையரின் வலையிற் படாமல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சமுத்திரத்தின் அலைகள் கூட ஸ்திரீகளின் பிரியத்தைக் காட்டிலும் சிறிது நேரம் நிலைத்தவையாய் இருக்கும். மாலை நேரத்தில் வானத்தில் உண்டாகி மாறும் நிறங்கள் கூடச் சற்று உறுதியானவை என்று நினைக்கலாம். பணமே அவர்களுடைய நோக்கம்; பணமே அவர்களுடைய ஆகாரம், பானம், இன்பம் முதலியன. ஆனால் ஒருவனுடைய செல்வம் ஒழிந்து போய்விட்டால், அவனை உடனே ஓட்டி விட வேண்டியதே காரியம்! அதுவே அவர்களுடைய குல தருமம். மின்னலின் ஒளி தோன்றி மறைதலைப் போன்றது அவர்களுடைய மோகம். மனதில் ஒருவன்மீது ஆசையை வைத்துக் கொண்டு, வேறொருவனிடத்தில், தான் அவனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து விட்டதாய்ப் பாசாங்கு செய்வார்கள். ஒருவனை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கையில் வேறொருவனை நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள். தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியப் போகிறதா? இயற்கையிலேயே இல்லாததை விரும்பினால் அது எப்படிக் கிடைக்கும்? கற்பாறையின் மீது தாமரைப் புஷ்பம் எப்படி உண்டாகும்? அல்லது குதிரையின் பாரத்தைக் கழுதை சுமக்குமோ? வரகு தானியத்திற்குள் அரிசி எப்படி உண்டாகும்? ஸ்திரீகளின் மனதில் ஏதாவது ஒரு நற்குணம் இருக்குமோ என்று எவ்வளவு சோதனை செய்தாலும் உள்ளே இருப்பது குதிரைக் கொம்புதான். அந்த துஷ்டன் மாதவராயனையா நீ விரும்புகிறாய்? இந்த சங்கதி முன்னால் தெரிந்திருந்தால், அவனை ஒரே குத்தில் கொன்று விட்டு வந்திருப்பேனே! இப்பொழுதே போய் அவன் உயிரை வாங்கி விட்டு வருகிறேன். (புறப்படுகிறான்)

மல்லி : (அவனைப் பிடித்துக் கொண்டு) என்ன பிரமாதமாக உளறுகிறீரே! தலை கால் தெரியாமல் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்? உயர் குலத்திற் பிறந்த பிராமணராய்
இருந்தும், திருடினேன் என்றும் குத்துகிறேன் என்றும் சொல்லுகிறதற்கு வெட்கமில்லையா? (முகத்தில் இடிக்கிறாள்)

சசி : எல்லாம் யார் பொருட்டு? உனக்காகத்தானே! நான் உனக்காக இவ்வளவு தாழ்வடைவதையும் நீ நினைக்காமல் மாதவராயனுக்குப் பரிந்து பேசுகிறாயே!

மல்லி : உண்மை அதுவல்ல. இந்த ஆபரணங்கள் என்னுடைய எஜமானி அம்மாளுக்கு சொந்தமானவை.

சசி : என்ன ஆச்சரியம்! உன் எஜமானியின் நகைகள் அங்கு போனதின் காரணமென்ன!

மல்லி : ஒரு நாளிரவு திருட்டுக்குப் பயந்து, மாதவராயரிடத்தில் வைத்து விட்டு வந்தார்கள்.

சசி : அப்படியா! உன்னுடைய எஜமானியின் நகைகளா இவைகள் ஆகா! தெரியாமலல்லவோ திருடி விட்டேன்! என்ன செய்வேன்?

வஸ : (தனக்குள்) எவ்வளவோ கெட்டவனாய் இருந்தாலும் இவனிடத்திற் கழிவிரக்கங்கூட இருக்கிறதே! சே! மோகம் பொல்லாதது! அதனால் எவ்வளவு நற்குணமுடையவன் கூட, என்னென்ன தீய காரியங்களைச் செய்ய நேருகிறது! மோகத்தினால் நான் படும் பாட்டில் இருந்தே இவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பது நன்றாய்த் தெரிகிறது! ஐயோ பாவம்! என்ன செய்வான்!

சசி : அடி என் பிரிய மல்லிகா! இப்பொழுது நான் என்ன செய்கிறது?

மல்லி : அது உமக்குத்தான் தெரிய வேண்டும்.

சசி : அப்படி அல்ல! ஸ்திரீகளுக்கு இயற்கை சுபாவமே குரு. கல்வி மதங்கொண்ட புருஷர் புஸ்தகங்களில் இருந்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்படுபவைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரக் கூடாமல் தீய காரியங்களைச் செய்கிறார்கள். ஸ்திரீகள் எல்லாவற்றையும் தாமாக அறிந்து கொள்வதோடு, அவற்றை அனுபவத்திற்குக் கொண்டு வருபவர்களாயும் அதிகப் புத்திக் கூர்மை உடையவர்களாகவும் ஆகின்றனர். தானாய்க் கனியும் வாழைப் பழத்திற்கும் புகை போட்டுப் பழுக்க வைக்கும் வாழைப் பழத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! நீ தான் இப்பொழுது ஒரு யோசனை சொல்ல வேண்டும்!

மல்லி : அப்படியானால் நீர் உடனே திரும்பிப் போய் நகைகளை மாதவராயரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வருவதே உத்தமமான காரியம்!

வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! கேவலம் அடிமையாய் இருந்தாலும் உனக்கு எவ்வளவு கண்ணியமான புத்தி! ஆகா! அதிர்ஷ்டம் ஒன்று தான் பக்ஷபாதமுடையது. அது தனவந்தர்களிடத்திலேயே விருப்போடு செல்கிறது! அது ஏழைகளிடத்திலும் இருக்கிறது. தனவான்களிடத்திலும் இருக்கிறது! நன்றாய் ஆழ்ந்து பார்த்தால் ஏழைகளிடத்திலேயே நற்குணம் அதிகமாய் இருக்கிறது!

சசி : மல்லிகா! நல்ல யோசனை சொன்னாய்! நான் திருடனென்று நேரில் அங்கு போனால் என்னை உடனே அதிகாரிகளிடம் ஒப்புவித்துவிட மாட்டாரா?

மல்லி : ஆகா! நல்ல பைத்தியம்! சந்திரன் எப்பொழுதாகிலும் சுடுதலுண்டோ? ஒரு நாளுமில்லை.

சசி : அவருடைய சாந்த குணத்தைப் பற்றி நான் சந்தேகப் படவில்லை. தவிர நான் எந்தக் காரியத்தைத் துணிந்து செய்கிறேனோ அதனால் உண்டாகும் பலன் எதுவாய் இருந்தாலும் அதை அனுபவிக்க நான் கடமைப்பட்டவனே! ஆனால் இப்படிச் செய்ய வெட்கமாய் இருக்கிறது! வேறு ஏதாவது யோசனை சொல்.

மல்லி : நீர் ஒன்று செய்யும். இவைகளை எஜமானி அம்மாளிடம் திருப்பிக் கொடுக்கும்படி மாதவராயரால் அனுப்பப்பட்ட தூதனைப் போல் நீர் பாசாங்கு செய்து இவைகளை என் எஜமானி அம்மாளிடம் சேர்த்துவிடும்.

சசி : அப்படிச் செய்தால்?
மல்லி : நீர் திருடனாக மாட்டீர்; நகைகள் சொந்தக்காரரைச் சேர்ந்து விடும், மாதவராயருக்கும் நஷ்டமில்லாமற் போய் விடும். மூன்று பேருக்கும் இதனால் அனுகூலம்!

சசி : என் சம்பாத்தியத்தை இப்படி அபகரிப்பது திருட்டு அல்லவா?

மல்லி : ஒரு பொருள் அதன் சொந்தக்காரரைச் சேர்வது எப்படித் திருட்டாகும்? நீர் சொந்தக்காரருக்குத் தெரியாமல் இவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டதினாலேயே இவை உம்முடையவையாய் விட்டனவோ? வேண்டாம். வீண் வாதம் செய்யாமல் நான் சொல்வதைக் கேளும். இப்பொழுதும் மிஞ்சிப் போகவில்லை. நாம் செய்தது தவறு என்று தெரிந்தால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிவர்த்திக்கலாம். மானத்தையும் கீர்த்தியையும், யாவற்றையும் இழந்து பாவ மூட்டையை ஏன் சம்பாதித்துக் கொள்ளுகிறீர்? நான் சொல்வதைச் செய்யும். இது உமக்கு நன்மை தரும் இதன் பொருட்டு நானும் உம்மிடம் முன்னிலும் பதின்மடங்கு அதிகம் ஆசை வைப்பேன்.

வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! உண்மை நண்பனைப் போல நன்றாய் இடித்துப் புத்தி சொல்லுகிறாய்! இவ்வளவு மேன்மைக் குணம் உன்னிடத்தில் இருக்கும் என்று நான் இது வரையில் நினைக்கவே இல்லை.

சசி : கண்ணே! மல்லிகா! நீ சொல்வது எல்லாம் உண்மையே! நான் ஏழ்மைத்தனத்தினால் இவ்விதம் செய்து விட்டேன்? செய்ததற்கு மிகவும் விசனப்படுகிறேன்! இனி நீ எப்படி நடக்கச் சொன்ன போதிலும் அப்படியே நான் செய்கிறேன், தடையில்லை.

மல்லி : சரி நீர் இவ்விடத்திலே இரும். நீர் வந்திருப்பதாக எஜமானி அம்மாளுக்குத் தெரிவித்து வருகிறேன்.
(வஸந்தளேயனையிடம் போய்)
அம்மணி! மாதவராயரிட மிருந்து ஒரு பிராம்மணர் வந்திருக்கிறார்.

வஸ : (புன்சிரிப்புடன்) அப்படியா! சீக்கிரம் மேலே அழைத்து வா.
(மல்லிகா திரும்பிப் போய் பிராம்மணனை அழைத்து வருகிறாள்.)

வஸ : சுவாமி! நமஸ்காரம்! வரவேண்டும்.

சசி : ஸுகீபவா! மங்களானி பவந்து!

வஸ : சுவாமி இப்படித் தயவு செய்யுங்கள். இந்த ஆசனத் தில் உட்கார வேண்டும்.

சசி : இல்லை, இல்லை. நான் அவசரமாய்ப் போக வேண் டும். மாதவராயர் இந்த ஆபரண மூட்டையைத் தன் மாளிகையில் வைத்திருப்பது ஜாக்கிரதைக் குறைவென்றும், இதனால் தான் பெரிதும் கவலைப்படுவதாயும் தெரிவித்து இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.
(மல்லிகாவினிடம் கொடுத்து விட்டுப் போகிறான்.)

வஸ : சுவாமி! தயவு செய்து கொஞ்சம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். இவற்றை அனுப்பிய பிரபுவுக்கு நான் ஒரு வஸ்துவைக் கொடுக்கிறேன், சிரமத்தை மன்னித்து அதை ஏற்றுக் கொண்டு போக வேண்டும்.

சசி : (தனக்குள்) நானாவது இனி அவரிடம் போகிறதாவது நான் எங்கே கொண்டு போகப் போகிறேன்! (வெளிப்படை யாக) என்ன வஸ்து அது?

வஸ : மல்லிகா!

மல்லி : ஏன் அம்மணி!

வஸ : உன்னைக் கூப்பிடவில்லை? இவர் கேட்டதற்குப் பதில் சொன்னேன்.

சசி : சொன்ன பதில் இன்னதென்று விளங்கவில்லையே!

வஸ : ஏன் விளங்கவில்லை! விவரமாய் சொல்லுகிறேன் கேளும். நானும் மாதவராயரும் எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டோம். இவ்வாபரணங்களை அவர் யார் மூலமாய் எனக்கு அனுப்புகிறாரோ அவருக்கு மல்லிகாவை நான் சன்மானமாகக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆகையால் தயவு செய்து இந்த மடந்தையை ஏற்றுக் கொண்டு, இந்தப் பாக்கியம் பெற்றதற்காக மாதவராயரை மனதாற் துதியும். இப்பொழுது நன்றாய் விளங்குகிறதா?

சசி : (திடுக்கிட்டு) தனக்குள் ஓகோ! இரகசியம் தெரிந்து போய் விட்டால் போல் இருக்கிறதே! இதுவும் பாக்கியந்தான் (வெளிப்படையாக) மாதவராயருக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும். உண்மை யோக்கியதை இல்லாத அரசனைக் காட்டி லும் அதைப் பெற்ற தரித்திரனே பெருத்த தனவந்தனாகையால், நற்குண நல்லொழுக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது மனிதருடைய முதற் காரியம். அதை உடையவனுக்குக் கிடைக்காத பொருள் இல்லை. பிரகாசம் பொருந்திய சந்திரன் தன்னுடைய யோக்கியதையினால் அல்லவோ, பரம சிவனுடைய சிரசில் இருக்க இடந்தேடிக் கொண்டான். ஆகா! கடைத்தேறினேன். சற்குருவாகிய உன்னால் நான் இப்பொழுது நல்லொழுக்கத்தின் மகிமையை உணர்ந்தேன். இனி நான் நீதி நெறி பிசகாமல் ஒழுகுவேன். இது சத்தியம்.

வஸ : பிரியஸ்கி மல்லிகா! இவருடன் புறப்படு நான் உன்னை இவருக்குச் சன்மானம் செய்து விட்டேன். எங்கே நிமிர்ந்து பார் என்னை மறந்து விடாதே. (கண்ணீர் ததும்புகிறது)

மல்லி : (அழுதவண்ணம்) ஐயோ! அம்மணி! என் பேரில் தங்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லையே! என் அருமைத் தாயே! என்னை இப்படி விலக்க வேண்டாம். நான் ஏதாவது பிழை செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும். (காலில் விழுந்து வணங்குகிறாள்)

மல்லி : (நந்தன் சரித்திரம்: ”வருகலாமோ” என்ற பாட்டின் வர்ண மெட்டு)
மாஞ்சி – ரூபகம்
ப. தருமமாமோ? அம்மா – இந்தச்
சிறுமியின் மீதுமக் கேனிந்தக் கோபமோ?

அ. இருவருமோருயி ரென்னவே – என்று
மிருந்ததையாயினு மெண்ணவே – உந்த
மிருடா தங்கள் யான் பணிந்தெத்தினேன் தேவியே! (தரு)

ச. தாயென உம்மையான் – அடைந்தேனே – நொடி
தப்பாம லருகினில் இருந்தேனே.
நாயென நன் றியைச் – சுரந்தேனே – என்றன்
ஆவியே யுமதென – மதித்தேனே – என்ன
விதியோ! யென்றன்தீ மையிதாகுமோ? ஞாயமோ? (தரு)

வஸ : அப்படி ஒன்றுமில்லை எழுந்திரு மல்லிகா! மனப் பூர்வமான உன்னை இவருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் ஆசையினாலேயே இப்படிச் சொல்லுகிறேனே யொழிய வேறு வித்தியாசமில்லை. (அன்பொழுக) எழுந்திரம்மா! இவருடன் போய் ஸெளக்கியமாக வாழ்ந்து கொண்டிரு. என்னை மாத்திரம் உன் ஞாபகத்தில் வைத்துக் கொள்.

சசி : (வஸந்தஸேனைக்கு) ஸ்திரீ ரத்னமே! உனக்கு ஈசுவரன் சகல மங்களமும் அளிக்கட்டும். அடி மல்லிகா! உனக்கு சுதந்திரமும், மனைவி என்னும் மேன்மை நிலைமையும் அளித்த பேருபகாரியாகிய உன் எஜமானியை நன்றி பெருக வணங்கி விடை பெற்றுக் கொள்.

வஸ : பிரிய மல்லிகா! சுகமாய்ப் போ!
(”ஷாஜமான்” என்ற இந்துஸ்தானியின் மெட்டு)

மல்லி : பெண்மணீ! சென்று வருவேன் தல்லியே!

வஸ : கண்மணீ! சென்று-வருவாய் மல்லிகா!

மல்லி : காணக் கிடைக்காத வென்றன் – மானே!
நற்றேனே! என்னன்பே – என்னாவியே!

வஸ : ஆசைக்குகந்த வென்றன்மாதே! நற்கோதே!
கவலாதே! மறவாதே!

மல்லி : சுந்தராங்கி! நின்னையினி – மறவேன்.
வஸ : சொன்னமே! நின் நன்மையினி – மறவேன்.

(மல்லிகா விசனத்துடன் வணங்கச் சசிமுகன் அவளை அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வரு கிறான். அந்த சமயத்தில் இராஜபாட்டையில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்.)

”துடும், துடும், துடும், துடும்,
இதனால் சகலமான ஜனங்களுக்கும் அறிவிப்பது யாதெனில்:- பிரதாபன் என்னும் இடையன் அரசனாகப் போகிறேனென்று ஜோசியர்கள் மூலமாய்த் தெரிகிறபடியால், அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கும்படி நமது மகாராஜன் உத்தரவளித்து இருக்கிறார். அவனைக் காண்போர் உடனே பிடித்து ஆஜர் செய்விக்க வேண்டும். ஜனங்கள் இந்த விஷயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தம் தம் வீட்டில் இருக்க வேண்டும்.
துடும், துடும், துடும், துடும்.”

சசி : (மல்லிகாவிடத்தின்) என்ன ஆச்சரியம்! என்னுடைய பிரிய நண்பனாகிய பிரதாபனை அரசன் சிறைப்படுத்த முயலும் சமயத்தில் நான் இப்படி ஸ்திரீ விஷயத்தில் என் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேனே! இந்த உலகத்தில் மனிதருக்கு மிகவும் அருமையானவர்கள் மனைவியும், நண்பனுமே என்ற போதிலும் நூற்றுக்கணக்கான பெண்மணிகளினும் ஸ்நேகிதனே மேலானவன்; ஆகையால் முதலில் அவனிடம் போய் எங்கேயாவது மறைந்து கொள்ளும்படி சொல்லி விட்டு வர வேண்டியது என்னுடைய கடமை. போகிறேன்.

மல்லி : நில்லும் நில்லும்! நீர் போக வேண்டுமானால், முன்னால் என்னை யோக்கியமான ஸ்நேகிதர் யார் வீட்டிலாயினும் வைத்து விட்டுப் போம். இப்படி என்னை விடுத்துப் போனால் நான் என் செய்கிறது?

சசி : பிரிய சுந்தரி கோபித்துக் கொள்ளாதே! உன்னை ஒரு இடத்தில் சுகமாக வைத்து விட்டு நான் போகிறேன். (போய் விடுகின்றனர்)

(வேறொரு வேலைக்காரி வளந்தஸேனையிடம் வருகின்றாள்)

வேலை : (குதுகலமாக) இது உண்மையில் சுபதினமே அவரை உபசரித்து மரியாதையோடு உள்ளே அழைத்து வா!

வேலை : ஆக்ஞை! (போய் ஸோமேசனுடன் வருகிறாள்.)

ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன உன்னதமான மாளிகை! என்ன செல்வம்! அரண்மனையும் இதற்கு ஈடாமோ? எத்தனை தாதிமார்! எத்தனை வேலைக்காரர்! இந்த இடத்தின் சுகம் சுவர்க்கத்திலும் கிடைக்குமோவென்பது சந்தேகம்.

வஸ : ஸ்வாமி! ஸோமேசரே! நமஸ்காரம்; வர வேண்டும்.

ஸோமே : மங்களானி பவந்து! ஸுகிபவா!

வஸ : தயவு செய்து இந்த ஆசனத்தில் உட்காரும்.

ஸோமே : நீயும் உட்கார்.

வஸ : எஜமானர் க்ஷேமந்தானே?

ஸோமே: க்ஷேமந்தான்! இவ்விடத்தில் எல்லாரும் செளக்கியந்தானே?

வஸ : தங்கள் ஆசீர்வாதத்தால் க்ஷேமமே. கெளரவமென்னும் விதை முளைத்து, நாணம் என்னும் அடி மரமாய் வளர்ந்து, நற்குணங்கள் என்னும் கிளைகளாய்ப் படர்ந்து, நல்லொழுக்க மென்னும் இலைகளாய் விடுத்து, தயாள குணத்தை மலர்களாய்ப் புஷ்பித்து, நன்மை என்னும் பழங்களைச் சொரியும் மரமாகிய இந்த மாளிகையில், பிரியமாகிய பறவைகள் ஆனந்தமாய் தங்கி வசிக்கின்றன.

ஸோமே : (தனக்குள்) ஆகா! எவ்வளவு இலக்ஷணமாகவும் புத்தி நுட்பமாகவும் பேசுகிறாள். (வெளிப்படையாக) அப்படியா! மிகவும் சந்தோஷம்! மாதவராயர் தன்னுடைய ஆசீர்வாதத்தையும் பிரியத்தையும் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்.

வஸ : (வணங்கி) அவருடைய ஆக்ஞையை வணங்கிச் சிரசினால் ஏற்றுக் கொண்டேன். (வணங்குகின்றாள்)

ஸோமே ; ஆனால்…

வஸ : என்ன ஆனால்?

ஸோமே : ஒரு விசேஷம்.

வஸ : என்ன அது?

ஸோமே : சொல்ல நாவெழவில்லை.

வஸ : அதென்ன சங்கதி? என்னுடைய பிரபுவுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்ததா? சீக்கிரம் தெரிவித்தல் வேண்டும்.

ஸோமே : ஒன்றுமில்லை. நகை மூட்டை…

வஸ : நகை மூட்டைக்கு என்ன? திருட்டுப் போய்விட்டதா?

ஸோமே : இல்லை. எஜமானர் சூதாடி தோற்றுவிட்டார்.
வஸ : (தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! நகை மூட்டைத் திருட்டுப் போயிருக்கச் சூதாட்டத்தில் தோற்று விட்டதாகத் தெரிவிக்கிறாரே அவர் பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது! அவர் சொல்லும் இந்தப் பொய்கூட நான் அவர் பேரில் கொண்ட மோகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

ஸோமே : நகைகளைப் பற்றி வருத்தப்படாதே! காரியம் மிஞ்சிப் போய் விட்டது! என்ன செய்கிறது! அவர் சூதாடுகிறவரல்ல என்னமோ பொல்லாத வேளை இப்படி ஆனது! இதோ இந்த வைர ஸரத்தை அவற்றிற்குப் பதிலாக ஏற்றுக்கொள்.

வஸ : (தனக்குள்) ஆகா இது இன்னமும் அதிக ஆச்சரியத்தை விளைவிக்கிறது! என்னிடத்தில் வந்து விட்ட நகைகளைக் காட்டி விடலாமா? (யோசித்து) இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

ஸோமே : என்ன பேசாமல் இருக்கிறாய்? பதிலாக அனுப்பப்பட்ட இதை வாங்கிக் கொள்ள மாட்டாயா?

வஸ : (புன்சிரிப்புடன்) ஏன் மாட்டேன்? (வைர ஸரத்தை வாங்கித் தன் மார்பில் வைத்துக் கொண்டு) இதென்ன அதிசயம் மாமரத்தில் இருந்து புஷ்பங்கள் எல்லாம் உதிர்ந்து போன பிறகு அமிர்தத் துளி விழுதலுண்டோ? நல்லது ஸோமேசரே! நான் இன்று சாயங்காலம் எஜமானர் வீட்டிற்கு வந்து பார்த்துப் பேசுவதாய்த் தெரிவியும்.

ஸோமே : (தனக்குள்) அப்படியா! அவரிடத்தில் இன்னம் அதிகமாகப் பொருள் பெற உத்தேசிக்கிறாள் போல் இருக்கிறது! இன்னம் கேட்டால் என்ன செய்வார்? பாவம் இதுவும் அவருக்குத் தலை விதியா! இரவில் வந்தாளே என்று உதவி செய்யப் போக, இந்தத் துன்பம் சம்பவித்தது! (வெளிப்படையாய்) அப்படியே தெரிவிக்கிறேன் அம்மா!

வஸ : நமஸ்காரம்; போய் வாருங்கள். (விஸனத்துடன் போகிறான்)

வஸ : (தனக்குள்) விருத்தம்: பியாக்
எங்ஙன முரைப்பேனிந்த வள்ளலின் பெருமை தன்னைச்
சிங்கவே றனைய ஆண்மை தெவிட்டிடா இனிய பான்மை
மங்கினு மகலாத் தூய்மை இடுக்கணு மதியா வாய்மை
துங்கமே யுருவாய் வந்த சுந்தரம் பொலிந்த மேனி.

ஆகா! என்ன உத்தம குணம்! எவனோ திருடிக் கொண்டு போனதை என்னிடத்தில் தெரிவிக்காமல் தான் சூதாடியதாகச் சொல்லித் தன் யோக்கியதையைக் குறைத்துக் கொண்டாயினும் தன் பேரில் வைத்த நம்பிக்கைக்குக் குறைவு வராமல் நடந்து கொண்டிருக்கிறாரே! இவர் அல்லவோ புருஷ சிங்கம்! இவர் அல்லவோ புருஷரில் சிரேஷ்டர்! தேகத்தில் மாத்திரம் அழகைப் பெற்று, அதை ஆபரணங்களினாலும், உடைகளினாலும், பரிமள கந்தங்களினாலும் அலங்கரித்துக் கொண்டு, செல்வச் செருக்கை அடைந்து இறுமாந்திருக்கும் போலிப் பிரபுக்கள், குணத்தழகைப் பெற்ற இந்த வள்ளலின் பாத தூசிக்கும் ஒப்பாவரோ! புருஷனை அடைவதாய் இருந்தால் இவரையே அடைதல் வேண்டும். இல்லா விட்டால் இந்தத் தேகத்தை அக்கினிக்கு இரையாக்க வேண்டும். இருக்கட்டும்; இன்று சாயங்காலம் போய் முயன்று பார்க்கிறேன்.

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *