கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 189 
 
 

அங்கம் 1 – காட்சி 4 | அங்கம் 2 – காட்சி 1 | அங்கம் 2 – காட்சி 2

இடம் : மாதவராயருடைய மாளிகைக்குள் ஒரு சிறிய பூஞ்சோலை.

காலம் : மாலை.

(ஸோமேசன் வருகிறான்)

(தனக்குள்) மாதவராயர் வஸந்தஸேனையின் வரவை அதிக ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார். இவருக்கு அவள் பேரில் இவ்வளவு ப்ரேமை உண்டாகக் காரணமென்ன! அவள் கேவலம் அற்ப புத்தியும் பேராசையுமுடைய தாஸி அல்லவோ! எவ்வளவு ஐசுவரியத்தைப் பெற்றிருந்த போதிலும் அவளுடைய ஜாதிக் குணமாகிய நிர்தாக்ஷண்யம் போகவில்லையே! வைர ஸ்ரத்தைப் பார்த்தவுடனே, வெளி வேஷமாகவாவது ஒரு உபசார வார்த்தைக்கூடச் சொல்லாமல், உடனே அதை ஆத்திரத்தோடு பிடுங்கிக் கொண்டாளே! வேசைக்குக் காசின் மேலாசை என்பது சரியாய்ப் போய் விட்டதே! அவளுக்கு எவ்வளவோ செல்வம் இருந்தும் மேன்மேலும் அபகரிக்கும் புத்தி இருக்கிறதே யொழியத் தயை, இரக்கம் ஈகை முதலிய குணங்கள் இல்லையே! தண்டில்லாத தாமரையும், தஸ்கரம் செய்யாத தட்டானும், சண்டையில்லாத சங்கமும், பேராசை இல்லாத தாஸியும் இல்லையென்று பெரியோர் சொல்வது நிஜமே! இவை ஒன்றை விட்டொன்று என்றும் இணை பிரியாத் துணைப் பொருள்கள். அவள் இன்று வரவேண்டிய காரணம் என்ன? எனக்கு இது மிகவும் சந்தேகத்தைத் தருகிறது. கபடமே அறியாத மாதவராயரை அவள் ஒருவேளை தன் வலையில் விழச் செய்வாளோ ஏழையாய் வருந்தித் தவிக்கும் இவர் இன்னம் அதிகமாகத் துன்புற்றுத் துயரக் கடலில் மூழ்க நேரிடுமோ! இரக்கட்டும்; நான் உடனே போய் இவர் அவள் பேரில் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை மாற்ற முயலுகிறேன்.

மாத : ஸோமேசா! இன்னம் வஸந்தசேனையின் வண்டி வரவில்லையா?
ஸோமே : இல்லை. (ஒருவித வெறுப்போடு) உம்! என்னமோ! எனக்கொன்றும் பிடிக்கவில்லை.

மாத : உனக்கு என்ன பிடிக்கவில்லை.

ஸோமே : அபாத்திரமான மனிதரிடத்தில் நீங்கள் இவ்வளவு அபிமானம் வைப்பது? கேவலம் அற்ப குணத்தைக் கொண்ட தாஸியிடத்தில் உங்களுக்கு இவ்வளவு சபலம் உண்டானது மிகவும் தவறு. தவிர நான் போயிருந்த போது அவளும் அவளுடைய பணிப் பெண்களும் என்னை எவ்வளவு ஏளனம் செய்தார்கள் தெரியுமா? தாஸியின் உறவானது காலில் தைத்த முள்ளைப் போன்றது. முதலில் நுழைவதே தெரியாது. அதைப் பிறகு நாம் எவ்வளவு வருந்திப் பிடிங்கி எடுத்தல் வேண்டும் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. தாஸி நுழைந்த வீடும், சனியன் நுழைந்த வீடும் ஒழியா விஸனத்தை அடை யும். ஆகையால், அவளை நீங்கள் பார்ப்பதும் அவளுடன் சம்பாஷிப்பதும் பிறகு துயரைத் தரும். ஆகையால் அவளைப் பார்க்க இப்பொழுது சந்தர்ப்பமில்லையென்று சொல்லியனுப்பி விடுங்கள்.

மாத : விருத்தம்: பைரவி
நண்பனே ஏனோ வந்த நங்கையை நினைத்த வாறு
புண்படு மொழியாலேசிப் புகன்றனை நவைகள் சால?
எண்படு தனத்தி னோர்க்கே விலைமகள் கூற்ற மாவள்
திண்கொடு மிடியர் தம்மைத் தெரிவையர் நினைத்தலுண்டோ?

சே! அவளை அக்கிரமமாகத் துஷிக்காதே; இதனால் எனக்கு யாதொரு துன்பமும் வராமல் இருப்பதற்கு என்னுடைய ஏழ்மைத் தனமே ஒரு பாதுகாப்பல்லவா? பணத்தாசை உள்ள தாஸி ஏழையை ஏன் விரும்புவாள்? தவிர கற்பிற்கு அரசியாகிய என் மனைவி கோகிலத்திற்கு நான் துரோகம் செய்ய நினைப்பேனோ! என்னுடன் நீ இவ்வளவு காலம் பழகியும் என் மனோ உறுதியையும், நான் எவ்வித நடத்தை உடையவன் என்பதை யும், அறிந்து கொள்ளவில்லையே! அவள் ஏதோ நம் மீதுள்ள அன்பினால் நம்மைக் காண விரும்புகிறாள். நாம் அதைத் தடுப்பது தருமமாமோ? அவள் எதற்காக வருகிறாளோ! அதைப் பற்றி நாம் இப்பொழுது எவ்விதம் ஊகிக்க முடியும்?

ஸோமே : அவள் வைர ஸரத்தைப் பெற்றதோடு திருப்தி அடைந்ததாய்க் காணப்படவில்லை. மேலும் ஏதாவது அபகரிக்கலாம் என்னும் எண்ணத்துடன் வருவதாகத் தோன்றுகிறது! நான் சொல்வதைக் கேளுங்கள். பிறகு துன்பப்பட நேரும்.

(தனபாலன் ஒரு பக்கமாய் வருகிறான்)
(தனக்குள்) இதோ மாதவராயர் இருக்கிறார்; நேரில் அவரிடம் போக வெட்கமாக இருக்கிறது. ஒருவித அச்சமும் என்னை வதைக்கிறது. அதோ அந்த ஸோமேசனும் இருக்கிறான். மெதுவாகச் சைகை செய்து அவனை கூப்பிடுகிறேன். (ஒரு மண் சட்டியை எடுத்து ஸோமேசன் பேரின் மெதுவாக எறிகிறான்)

ஸோமே : (திடுக்கிட்டு மேலே பார்த்து) ஆகா! யார் என் பேரில் கல்லைப் போட்டது?

மாத : மதிளின் மீது இருக்கும் புறாக்கள் தம் விளையாட்டில் தள்ளி விட்டிருக்கலாம்.

ஸோமே : (மேலே பார்த்து) ஏ போக்கிரிப் புறாக்களே! உங்களுக்கு இவ்வளவு குறும்பா! புளியம் பழங்களை உலுக்கி விடுவதைப் போல் உங்களை இந்தத் தடியால் மதிளில் இருந்து ஓட்டி விடுகிறேன். .

மாத : சோமேசா! போனால் போகிறது; உட்கார்ந்து கொள். சாந்தமே உருவாகி வந்த புறாக்களை வருத்தாதே! அவைகள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து கொஞ்சிக் குலாவிக் கும்காரம் செய்து எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன! அவைகளைப் பிரித்து விடாதே.

தன : (தனக்குள் புன்சிரிப்புடன்) முட்டாள் பிராம்மணன்! மேலே புறாக்களைப் பார்க்கிறானே ஒழிய என் பக்கமாகத் திரும்பவில்லை! இவனுக்கு இன்னொரு வந்தனம் அளிக்கிறேன். (இன்னொரு மண்கட்டியை எறிகிறான்)

ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து திரும்பிப் பார்த்து) இதென்ன மறுபடியும் விழுகிறதே! (கொஞ்ச துரம் அப்பால் போய்) அதோ நிற்கிறவன் யார்? தனபாலனல்லவோ? (சமீபத்தில் போய்) அடே தனபாலா! வாவா.

தன : ஸ்வாமி! தெண்டம் வருகிறது!

ஸோமே : என்ன தெண்டம் கொணர்ந்து வைக்கப் பார்க்கிறாய்? இங்கே ஏதாவது பொருள் இருந்தால் அல்லவோ தெண்டம் எங்களை வருத்தப் போகிறது! அதைப் பற்றிக் கவலை இல்லை. என்ன சமாசாரம்! ஏதேனும் விசேஷமும் உண்டா?

தன : அவர்கள் வந்திருக்கிறார்கள்

ஸோமே : எவர்கள்? .

தன : அவர்கள்தான் தெரியாதா?

ஸோமே : எனக்குத் தெரியவில்லையே! அது யார் அந்தச் சுவர்கள்? பெயரைச் சொல்லேன்.

தன : உமக்கு எதுதான் தெரியும்! நூறு வடையை ஒரு நொடியில் உள்ளே முழுசு முழுசாகத் தள்ளி விடத் தெரியும்! எந்தப் பள்ளிக் கூடத்திலும் கற்காமல் அந்த வித்தை மாத்திரம் சுலபமாகவே வந்து விட்டது. ஆச்சரியந்தான். அது இருக்கட்டும் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லும். இந்த மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? அதாவது தெரியுமா?

ஸோமே : என்ன என்னைப் பரீட்சிக்கிறாயோ? ஆனி ஆடி மாசங்களில் புஷ்பிக்கும். இது தெரியாதா முட்டாள்!

தன : அந்தப் பெயர் உமக்குத்தான் நன்றாய்ப் பொருந்துகிறது. அப்பா சாஸ்திரி வீட்டில் பிறந்து குப்பா சாஸ்திரி வீட்டில் வாழ்க்கைப்பட்ட எனக்கு லவணம் என்றால் எருமைச் சாணம் என்று தெரியாதோ? என்று அழுத்தம் திருத்தமாய் ஒருத்தி சொல்லிக் கொண்டு இலையில் பரிமாறினாளாம். அதைப் போல் இருக் கிறது நீர் சொல்வது.

ஸோமே : அதென்ன அப்படிச் சொல்கிறாய்! நான் சொன்னது ஒருநாளும் தவறாது! நீ இவ்விடத்திலேயே இரு. இதோ எஜமானரிடம் போய்க் கேட்டுக் கொண்டு வருகிறேன். (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? தயவு செய்து தெரிவியுங்கள்.

மாத : அது எதற்காக இப்பொழுது? வசந்த காலத்தில் புஷ்பிக்கும்.

ஸோமே : (திரும்பி வந்து) அடே! அது வசந்த காலத்தில் புஷ்பிக்கும்.

மாத : அப்படியானால் நீர் சமர்த்தர்தான்! உள்ளே போய் எஜமானரிடங் கேட்டு அறிந்து கொண்டு வந்து சொன்னால், இது உமக்கு முன்னமேயே தெரிந்ததாய் விட்டதோ? நீர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். இந்தப் பிரவேசப் பரிட்சையில் நீர் தவறிப் போனீர். இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காவது நீரே பதில் சொல்லும் பார்க்கலாம். தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்?

ஸோமே : (அலட்சியமாக) மகா பெரிய கேள்வியோ இது? அரசன் பாதுகாக்கிறான்?

தன : அப்படியானால் உம்முடைய மூளையில் அழுக்குப் படிந்திருக்கிறது. அதை வண்ணானுக்குப் போட வேண்டியது தான் சரியான சிகிச்சை. இன்னொரு முறை எஜமானரிடம் போய் இந்த மடமைக்கு மருந்தை அறிந்து வாரும்.

ஸோமே: (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்?

மாத : இவை என்ன கேள்விகள்? உமக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதோ? பட்டினத்தைக் காப்பது சேனை என்பது கூட உனக்குத் தெரியாதா?

ஸோமே : (திரும்பி வந்து) தனபாலா! பட்டினத்தைச் சேனை காக்கிறது என்பது கூடத் தெரியாதா? முட்டாள்! இதெல்லாம் என்ன கேள்வி! யார் வந்திருப்பவர் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. பைத்தியக்காரனைப் போல் ஏதேதோ உளறுகிறாயே! நான் கேட்டதற்கு நீ சொன்னதற்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தாராளமாய் இருக்கிறது.

தன : ஐயோ பாவம் புத்திக்கு எட்டவில்லை! மிகவும் உயரம் போல் இருக்கிறது! ஒரு ஏணியாவது வைத்து ஏறிப் பார்க்கக் கூடாதா! அதற்கு இவ்வளவு பீடிகை எதற்காக? எஜமானரிடம் போய்த் தெரிவிக்கிறேன். (போகிறான்) ஸ்வாமி! கடன்காரி வந்துவிட்டாள்!

மாத : எனக்குக் கடன்காரி யார் இருக்கிறாள்?

ஸோமே : பலே! நன்றாய் இருக்கிறதே! நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை இதற்குள் மறந்து விட்டீர்களே! வஸந்த ஸேனைக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது நினைவிற்கு வர வில்லையா?

மாத : என்ன விளையாடுகிறாயோ?

ஸோமே : இல்லை இல்லை; நிஜமே. இதோ தனபாலன் வந்திருக்கிறான். வேண்டுமானால் அவனைக் கேளுங்கள்.

மாத : தனபாலா! வஸந்தஸேனை வந்திருப்பது நிஜந்தானா?

தன : ஆம், ஸ்வாமி!

மாத : ஆகா! சந்தோஷ சங்கதி கொண்டு வந்தவர் வெறுங் கையோடு போகக் கூடாது. இதோ எனது அங்க வஸ்திரத்தை உன் சிரமத்திற்காக எடுத்துக் கொள். (கொடுக்கிறார்) போ! சீக்கிரம் உள்ளே அழைத்து வா.

தன : உத்தரவு! (போகிறான்)

ஸோமே : நான் சொன்னது உண்மை என்று இப்பொழுதாவது மனதில் பட்டதா? அவள் எதற்காக வருகிறாள் என்பது தெரிகிறதா?

மாத : எதற்காக வருகிறாள்?

ஸோமே : அவளுடைய ஆபரணங்களின் கிரயம் நம்முடைய
வைர ஸரத்தைக் காட்டிலும் அதிகமானது. அந்த அதிகத்தைப் பெறும் பொருட்டு வந்திருக்கிறாள்.

மாத : அப்படியானால் அவள் வந்தது நியாயந்தானே! அதைக் கொடுப்பது நம்முடைய கடமை அல்லவோ வரட்டும்; அவள் இச்சையைப் பூர்த்தி செய்து அனுப்புகிறேன்.
(வஸந்தஸேனை ஒரு தோழியுடன் வருகிறாள்)

வஸ : ஸோமேசரே! எங்கே நம்முடைய ஜூதர்?

ஸோமே ; (தனக்குள்) ஆம் ஜூதர்தான்! நல்ல கெளரதையான பட்டப் பெயர் பெற்றார் (உரக்க) அம்மா! அவர் அதோ சோலைக்குள்ளிருக்கிறார்.

வஸ : அடி ஸகி! நான் அவரிடத்தில் எப்படிப் பேசுகிறது? எனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கிறதே!

தோழி : வெட்கமென்ன! ஜூதரே! நமஸ்காரம் என்று சொல்லுங்களேன்!

வஸ : அவ்விதம் சொல்ல எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்?

தோழி : சந்தர்ப்பத்தில் தைரியம் தானாக ஏற்படும்.

(வஸந்தஸேனை நாணத்துடன் மாதவராயரிடம் நெருங்கிப் புஷ்பங்களை அவர் பேரில் விசிறி) ஸ்வாமி! நமஸ்காரம்!

மாத : ஆகா! வஸந்தஸேனா! வரவேண்டும்! வரவேண்டும்! இந்த தினம் ஸுதினம் ஒரு நாளும் கிடைக்காத கெளரவம் இன்று கிடைத்ததல்லவா!

வஸ : இந்த உபசார வார்த்தைகள் என் வாயில் இருந்தல்லவோ வர வேண்டியவை!

ஸோமே : (மாதவராயரிடம் தனிமையில்) நண்பரே வந்த காரணமென்ன என்பதை விசாரிக்கட்டுமா!

மாத : மரியாதையாகக் கேள்!

ஸோமே : வஸந்தஸேனா சகல சுக போகங்களும் நிறைந்த உன்னுடைய மாளிகையை விட்டு இவ்வளவு தூரம் வரும்படியான சிரமத்தை ஏற்றுக் கொண்ட காரணமென்ன?

தோழி : (ஸோமேசனிடம்) ஐயா! நீர் கொடுத்த வைரசரத்தின் கிரயம் எவ்வளவு என்று அறிந்து கொள்ள எஜமானி அம்மாள் விரும்புகிறார்கள்.

ஸோமே: (மாதவராயரிடம் தனிமையில்) நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா! சரியாய்ப் போய்விட்டது பார்த்தீர்களா?

தோழி : அதைக் கேட்பதின் காரணம் என்ன என்றால், அவர்கள் அதை சூதாட்டத்தில் தோற்று விட்டார்கள். ஆகையால் அதன் விலையை அறிந்து கொள்ள விரும்புகிறார்.

ஸோமே : (தனக்குள்) ஓகோ! பதிலுக்குப் பதிலோ!

தோழி : இழந்த சரத்திற்குப் பதிலாக இவ்வாபரணங்களை வைத்துக் கொள்ளுங்கள்! (திருட்டுப் போன நகைகளைக் கொடுக்க, ஸோமேசன் ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.)

தோழி : என்ன அப்படிச் சோதனை செய்து பார்க்கிறீரே! இதற்கு முன்னால் இவற்றைப் பார்த்திருக்கிறீரோ?

ஸோமே ; இதென்ன ஆச்சரியம்! தட்டானுடைய திறமை நம் கண்களை ஏமாற்றி விட்டதே!

தோழி: இல்லையில்லை; உம்முடைய கண்ணின் பார்வைதான் சற்றுக் குறைவாகத் தோன்றுகிறது. இதற்குமுன் நீர் பார்த்த ஆபரணங்களே இவைகள்!

ஸோமே : (மாதவராயரிடம் எடுத்துக் கொண்டு போய்) ஆகா! நண்பரே! நம்மிடத்தில் இருந்து திருட்டுப் போன ஆபரணங்களைப் பார்த்தீர்களா?

மாத : ஆகா! அப்படியா! சந்தோஷம்! அதுவும் நமது நல்ல காலந்தான்! இவைகள் எவ்விதம் இவர்களிடம் வந்திருக்கக் கூடும்?

ஸோமே: (தோழியிடம்இரகசியமாக) உண்மையில் அப்படித்தானா?

தோழி : (இரகசியமாக) உண்மையில் அவைகளே!

ஸோமே : நிச்சயந்தானா?

தோழி : சத்தியமாய் அவைகளே!

ஸோமே : (சந்தோஷத்துடன்) ஸ்வாமி! சந்தேகமே இல்லை.

மாத: ஸகி! உன் வாயால் சொல். இது நிஜந்தானா?

தோழி : நிஜமே!

மாத : (சந்தோஷத்துடன்) ஆகா! நல்ல சங்கதி தெரிவித்தாய் என்னிடத்தில் எவர் சந்தோஷ சங்கதியைத் தெரிவிக்கிறார்களோ, அவரை நான் வெறுங்கையுடன் அனுப்புவதே இல்லை. இதோ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொள். (தன் விரலில் மோதிரம் இருப்பதாய் நினைத்து, இழுக்கப் பார்க்கிறார். இல்லை என்றறிந்து வெட்கமடைகிறார்)

வஸ : (ஒருபுறமாக) ஆகா! *தனத்தை வைத்துக் கொள்வதற்கு இவர் அல்லவோ அருகமானவர்! என்ன தாராள குணம். அதனாலேதான் சீக்கிரத்தில் ஏழையாய் விட்டார்! பணத்தில் ஏழையான போதிலும் தயையில் மாத்திரம் இவர் முன் போலவே கோடீசுவரராய் இருக்கிறார். இவரை நான் என் மனதார நினைத்து விட்டுப் புருஷனாக அடையா விட்டால், இந்த ஜென்மமே வியர்த்தம்!

மாத : (தனக்குள் விசனத்தோடு) தன் சந்தோஷமும் கோபமும் யாதொரு பயனுமில்லாமல் போகும் நிலைமையில் நித்திய தரித்திரனாய் இருந்து வாழ்வதும் ஒரு வாழ்வாமோ! இறகுகளை இழந்த பறவைகளும், இலைகளை உதிர்த்த மரங்களும், இடிந்த வீடும், பிறருக்குக் குதுகலமாக விருந்தளிக்கும் நிலைமையில் இல்லாத தரித்திரனுக்கு சமானமானவை.

ஸோமே : அம்மா நகைகள் களவு போன போது இவற்றை என் அங்கவஸ்திரத்தில் மூட்டைக் கட்டி வைத்திருந்தேன். தயவு செய்து என் வஸ்திரத்தைக் கொடுத்து விடுங்கள்.

வஸ : (புன்சிரிப்போடு) ஒரு வஸ்திரந்தானா வேண்டும். ஒன்பது வஸ்திரங்கள் தருகிறேன்! (வஸந்தஸேனை தோழியைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட ஸோமேஸனை அழைத்துக் கொண்டு மறைவாகப் போய் விடுகிறாள்)

வஸ: ஸ்வாமி நகை மூட்டை திருட்டுப் போயிருக்க அதற்குப் பதிலாக வேறொன்றை ஏன் அனுப்ப வேண்டும்? அப்படிச் செய்வது அனாவசியமல்லவா?

மாத :விருத்தம்: செஞ்சுருட்டி
மங்கையே! நன்மை மிக்க மானினி அவனி தன்னில்
மங்கிய வறியன் சொல்லை மதிப்பவ ருளரோ? முற்றும்
சங்கையே யடைவர் வாய்மை சாற்றினும் பொய்யா மின்னம்
பங்கமே புரிவா ரெள்கிப் பதரெனக் கொள்வ ரன்னோர்!

ஸ்திரீ ரத்னமே! இதை நான் அனுப்பாவிட்டால் என்னை இனி யார் மதிப்பார்கள்? திருட்டுப் போய்விட்டதென்று நான் சொன்னால் அதை யாராவது நம்புவார்களா? ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா? தனம் இருந்தால் மாத்திரம் மனிதனுக்குக் கெளரவமே ஒழிய, பொருளில்லாதவனுக்குப் புகழும் இல்லை மதிப்புமில்லையே! அவன் உண்மையைச் சொன்ன போதிலும், அது பொய்யாகவே தோன்றுமே!

வஸ: விருத்தம்: சங்கராபாணம்
மறையவர் மணியே! நுங்கள்மதிப்பிலாத்தனங்கள் யாவும்
மறைந்தன வேனுமென்று மகலுமோ புகழும் பேரும்?
நிறைவழா வரிய நீர்மை நீங்கிடாச் செல்வ மாகக்
குறைவினி யுங்கட் குண்டோ கோதிலாக் குணத்தின் மேலோய்

பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. உலகத்தில் யாவரும், தனவந்தர்களையே மதிக்கிறார்கள் என்பதும் ஏழைகளை இகழ்ந்து அவமதிக்கிறார்கள் என்பதும் முற்றும் நிஜமல்ல. ஒருவன் பரம தரித்திரனாய் இருந்த போதிலும் அவனிடத்தில் நற்குண நல்லொழுக்கமும் நீதி நெறி வழுவாமல் நடக்கும் மனோதிடமும் இருக்குமாயின், ஜனங்கள் அவனை எவ்வளவோ பாராட்டிப் பெருமைப்படுத்துகிறார்கள். ஒரு தனிகனிடத்தில் நற்குணம் இல்லாவிட்டால், ஜனங்கள் வெளிக்கு அதைக் காட்டாமல் அவனை மேன்மைப்படுத்தின போதிலும், உள்ளுற அவனை இகழ்வதே உலக இயல்பு. ஆகையால், தங்கம் குப்பையில் கிடந்த போதிலும் அதன் அருமை பெருமைகள் ஒரு நாளும் அதற்கில்லாமல் போகா. எவரோ நன்றியற்ற சிலர் உங்களை மறந்த போதிலும், இந்த நகரத்தினர் பெரும் பாலரும் உங்களுடைய மேன்மையை நினைத்த வண்ணம் இருக்கின்றனர். ஸ்வாமி பிறருக்குக் கொடுக்கப் பொருள் இல்லையே என்று தாங்கள் இனிச் சிறிதும் கவலைப்பட வேண் டாம். இந்த அடிமைக்கு ஏராளமாக பொருள்கள் தேவைக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். அவற்றை இனித் தங்கள் இச்சைப் படி உபயோகித்துக் கொள்ளலாம். தாங்கள் இதற்காகச் சிறிதும் வருந்த வேண்டாம்.

மாத : (தனக்குள்) ஆகா! என்ன மேன்மைக் குணம் கற்பாறையில் தாமரை பூத்ததைப் போலவும், ஆலகால விஷத்தைக் கொண்ட ஸர்ப்பத்தின் தலையில் மாணிக்கம் உண்டானது போலவும், ஈவிரக்கம் என்பதே இல்லாத தாஸியின் குலத்தில் இவ்விதமான உத்தமி வந்துதித்தது விந்தையிலும் விந்தையே! (உரக்க) ஹே! பெண்மணி வஸந்தஸேனை! உன்னுடைய அழகிய மொழியைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தேன்! இவ்வளவு தயை எவருக்கு உண்டாகும் நற்குணவதியாகிய நீ, நீடுழி இன்பம் அனுபவித்து வாழ அந்த ஈசுவரன் அனுக்கிரகிப்பானாக! மாதே நான் இதுவரையில் பிறருக்குக் கொடுத்தறிவேனே யொழிய எவரிடத்தும் வாங்கி அறியேன். எப்பொருளையும் நாம் நியாயமான வழியில் சம்பாதித்துச் செலவு செய்தல் வேண்டுமே ஒழிய அன்னியருடைய செல்வத்தை நாம் இப்படிக் கவருதல் திருட்டாகும். ஆகா! நல்ல காரியம் செய்யச் சொல்லுகிறாய்! என்னிடத்தில் அந்தரங்க அபிமானம் வைத்தவளாய்க் காணப்படும் நீ எனக்கு இவ்விதமான தீங்கை நினைக்கலாமா? நீ எனக்கு உதவி செய்வதாய் வாயினால் சொன்ன அந்த அன்பான மொழியும், நினைத்த நல்ல நினைவுமே போதும். நான் அவற்றை அடைந்து தனிகனானதிலும் அதிகம் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

வஸ : ஸ்வாமி என்னை அன்னியளாகப் பாவிக்கக் கூடாது! நான் சதா காலமும் இடைவிடாமல் தங்கள் உருவத்தையே என் மனதில் வைத்து அதையே தெய்வமாக மதித்து வழிபட்டுத் தங்களைப் பற்றி மனனஞ் செய்வதையே பேரின்பமாய் மதித்து வருகிறேன். தங்களைப் பார்த்துத் தங்கள் மேன்மையைப் பற்றி உணர்ந்த பின் இந்தச் சரீரத்தைத் தங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விட்டேன். ஆகையால் என்னை அங்கீகரித்துத் தங்களுக்குப் பணி புரிபவளாய் வைத்துக் கொண்டு என்னை ஈடேற்ற வேண் டும். தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் தங்களிடத்தில் சென்ற மனது இனி வேறு யாரிடத்திலும் இந்த உயிரழிவதாய் இருந்தாலும் செல்லாது. என்னுடைய ஏராளமான செல்வத்தையும் என்னுடைய ஸ்ரீதனமாக ஏற்றுக் கொண்டு இனித் தாங்கள் துன்பத்தையும், மனக் கவலையும் நீக்கி இன்புற்று வாழலாம்.

மாத : என்ன ஆச்சரியம்! இது எங்கும் நடக்காத விந்தையாய் இருக்கிறதே! பரம தரித்திரனாகிய என்னைக் குல ஸ்திரீயும் மணக்க இச்சைப்பட மாட்டாளே. அப்படி இருக்கப் பணத்திலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள தாஸி குலத்தில் உதித்த நீ விரும்புவது நம்பத் தகுந்ததாய் இல்லையே! உன்னுடைய பேரழகைக் கண்டு மயங்கி உன்மீது ஆசை கொண்டு எத்தனையோ தனவந்தர்கள் உன் மாளிகையின் வாசலில் உனது தயவிற்காகக் காத்திருப்பார்களே! அரசன் மைத்துனன் என்றால் நகரமே நடுங்கும். அவனையும் அவமதிக்கிறாய்! இதென்ன வினோதம்! இவ்வளவு மேன்மைகளை அலட்சியம் செய்து விட்டு என்னை நாடுவதின் காரணமென்ன? இது கனவோ? அல்லது நினைவு தானோ? இப்படியும் நடக்குமோ? இதுவரையில் நீ என்னிடத்தில் உண்மையாய்ப் பேசியதாக நினைத்தேன். இப்பொழுதே அதை உள்ளபடி அறிந்தேன். நான் தரித்திரன் என்று நீயும் என்னை ஹேளனம் செய்கிறாய் போல் இருக்கிறது.

வஸ : (காதைப் பொத்திக் கொண்டு) அடாடா! எவ்வளவு கடுரமான வார்த்தைகள்! ஸ்வாமி! நான் சொன்னது எல்லாம் உண்மையே அன்றி அணு அளவும் பொய்யல்ல. முற்றிலும் சத்யம். தங்கள் விரோதியும் தங்களுக்கு மனக் கவலை உண்டாக்க அஞ்சிப் பின்வாங்குவானே. அப்படி இருக்க, நான் அதைச் செய்வேனா? தங்களுடைய பாத சாஷியாகச் சொல்கிறேன். நான் தங்கள் பேரிலேயே காதல் கொண்டு நெடு நாளாய் இதே நோயால் வாடி வதங்கிக் கிடக்கிறேன். தாங்கள் என்னை உல்லங்கனம் செய்து விட்டால் எனக்கு வேறு புகலில்லை. நான் மற்றவர்களைப் போலப் பணத்திற்காக விரும்புபவள் அல்ல குணத்திற்காக விரும்புகிறேன் என்னை எப்படியாயி னும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இனிமேல் திரும்பி என் மாளிகைக்குப் போக மாட்டேன்.

மாத : மாதரசி! எத்தனையோ கோடி தவம் செய்து அதன் பயனாய்க் கிடைக்கத் தகுந்த உன்னையும் உன் ஐசுவரியத்தையும் வேண்டாமென்று நான் சொல்ல வேண்டி இருப்பதைப் பற்றிப் பெரிதும் வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்.

வஸ : பிரபோ! பிறர் காலில் கேவலம் ஒரு முள் தைப்பதைக் கண்டு பொறாமல் வருந்தி இளகும் தங்களுடைய தயாளமானது என் விஷயத்தில் மாத்திரம் ஏன் இரக்கம் கொள்ள வில்லை? இது என் அதிர்ஷ்ட ஹீனமோ? ஏன் என்னிடத்தில் தங்களுக்கு இவ்வளவு விருப்பமின்மை! என்னிடத்தில் யாதாயினும் குற்றம் குறைபாடுகளைக் கண்டீர்களோ? நான் கற்பில் தவறி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களோ? எங்கும் நிறைந்திருக்கும் ஸர்வேசுவரன் ஸாக்ஷியாகச் சொல்லுகிறேன். நான் அறிவு பெற்ற முதல் இதுவரையில் தங்களை அன்றி பிற புருஷரை மனதினால் நினைத்ததும் இல்லை; வாயால் குறித்ததும் இல்லை; தேகத்தால் பரிசித்ததும் இல்லை; இது உறுதி! இது சத்தியம்! தாங்களே எனக்கு நாதன்; தாய்; தந்தை; நண்பர்; உறவினர் முதலிய யாவரும் தாங்களே! நான் தொழும் கடவுளும் தாங்களே! இந்தப் பிறப்பில் நான் தங்களை அன்றி வேறு எவரையும் விரும்பேன். தங்கள் மேற்கொண்ட ஆசையென்னும் தீயால் கருகித் துவளும் எனக்கு உயிர்ப் பிக்ஷை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். தருமப் பிரபோ!

மாத : ஆகா என்ன செய்வேன்? ஈசுவரா இதென்ன என்னை இவ்விதமான தரும சங்கடத்தில் வைத்துச் சோதனை செய்கிறாய்? ஹே! மங்கையர்க்கரசி! வருந்த வேண்டாம். உன்னிடத்தில் ஏதோ களங்கம் இருக்கிறதென்று நினைத்து உன்னை மறுக்கவில்லை. உன்னைப் போன்ற உத்தமியை அடைவதை அரசர்களும் கிட்டாத பாக்கியமாக மதிப்பார்களே! அப்படி இருக்க நான் வேண்டாமென்று சொல்வேனோ!

வஸ : அப்படியானால் உயர் குலத் துதித்தோராகிய அந்தணர் கேவலம் தாழ்ந்த வகுப்பிற்குரிய என்னை அங்கீகரிப்பது தவறு என்று மதிக்கிறீர்களோ?

மாத : பெண்மணி! அப்படியல்ல! கடவுளால் படைக்கப்பட்ட யாவரும் சமமானவர்களே! உயர் குலத்தினரிடத்திலும், பறையரிடத்திலும், பெண்பாலரிடத்தும், குழந்தைகளிடத்தினும், ஈசுவரனுடைய் அம்சமாகிய ஜீவாத்மாவே இருக்கின்றது. நமக்கு மாயையால் வெவ்வேறாகத் தோன்றினும் ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே. இந்த உண்மையை அறிந்து எல்லாரையும் சமமாக மதித்து யாவரிடத்தும் தயையோடும் அன்போடும் நடந்து கொள்பவர்களே அந்தணர். அந்தணர் என்பது குளிர்ந்த அழகிய தன்மை உடையவர்களுக்குக் காரணப் பெயர். ஆதலால் அவர்கள் கீழ் வகுப்பிலுள்ள பிறரைத் தம் வழிகளில் திருப்பி, புலால் மறுத்தல், கற்றல் முதலிய நல்லொழுக்கங்களில் பயிற்றிக் காலக் கிரமத்தில் அவர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளக் கடவர்கள் என்பது பற்றி, அவர்கள் மற்ற மூன்று வருணத்தார்களிடத்திலும் மணம் புரிந்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் நான் குலத்தின் உயர்வு தாழ்வைப் பற்றி நினைக்கவே இல்லை. நான் ஏற்கெனவே ஒருத்தியை மணந்த கிரகஸ்தன் என்பது உனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். சகல உத்தம குணங்களும் நிறைந்த மனைவியிருக்க, இந்தக் காரியத்தைச் செய்து அவள் மனதிற்கு ஆறாத் துயரைத் தருவது தருமமாகுமா? இதை நீயே யோசனை செய்து பார்.

வஸ : (மிக வருந்தி) என் பிராண நாதா தாங்கள் என்னை இப்படிச் சோதனை செய்தால், பேதையாகிய நான் என்ன செய்யக் கூடும்? ஒரே புருஷனை நினைத்து மணக்க வேண்டும் என்பது ஸ்திரீகளுக்கு மாத்திரமே ஒழியப் புருஷர்கள் ஒரு மனைவி உயிருடன் இருக்கையிலேயே, மற்றவரை முறைப்படி மணந்து கொள்ளலாம் அல்லவோ! ஒரு ஸ்திரீ தன் கணவன் இருக்கும் பொழுது வேறொருவனை மணத்தல் முடியாது. இந்த விஷயத் தில் ஸ்திரீ புருஷர்களுக்கு வித்தியாசம் உண்டு. ஆகையால், என்னை ஏற்றுக் கொள்வது சாஸ்திரத்திற்கும் விரோதம் ஆகாது. என்னை அலட்சியம் செய்து மறுத்து விட்டால், நான் இந்த உயிரைச் சுமந்து வருந்தி வாழ வேண்டும். தங்களையே நினைத்து நினைத்து தங்கள் பொருட்டாகவே உயிரை விட்டு விடுவதே உறுதி. ஆகா! தாங்கள் மறுக்க மறுக்க, என் மனம் படும் பாட்டை என்னவென்று விவரிப்பேன் என் உயிர் இப்பொழுதே போய் விடும் போல் இருக்கிறது! என் ஆருயிர் நாதா! உன் இச்சைப் படி ஆகட்டும் என்று தங்கள் இனிய வாயால் ஒரு மொழி கூறி என்னை இந்த இடர்க் கடலில் இருந்து கை தூக்கி விடக் கூடாதா? ஏழையின் முகத்தைப் பாருங்கள். பிரபு தங்களையே எண்ணி எண்ணிப் புண்ணான என் மனதை ஏற்றுக் கொண்டேன் என்னும் அந்த மொழி அமுதைச் சொரிந்து உய்விக்கக் கூடாதா? இதோ தங்களை ஆயிரம் தடவை சேவித்து வணங்குகிறேன்.

மாத: ஹா. ஈசுவரா கருணாநிதி! இதுவும் உன் சோதனையோ? கற்பிற்கு அரசியாகிய என் பிராண சுந்தரியின் மனதை வருத்த நினைப்பேனோ? இவள் படும் பாட்டைக் காண என் மனம் தத்தளிக்கிறதே என்ன செய்வேன்: ஹா. ஜெகதீசா! (மூர்ச்சித்து விழுகிறார்)

வஸ : (துடிதுடித்து) ஐயோ! என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே என் துரை மூர்ச்சித்து விழுந்து விட்டாரே! ஓய் ஸோமேசரே! அடி தோழி! சீக்கிரம் வாருங்கள் (கையைப் பிசைந்து கொண்டு) சீக்கிரம் வாருங்கள் நமது எஜமானர் மயங்கி விழுந்து விட்டார். (யாவரும் ஓடி வருகிறார்கள்)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *