கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 211 
 
 

அங்கம் 2 – காட்சி 4 | அங்கம் 3 – காட்சி 1 | அங்கம் 3 – காட்சி 2-3

இடம் : நியாய ஸ்தலம்.

(நியாபதி வக்கீல், விசாரணை கர்த்தா முதலியோர் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
வெளியில் சேவகர்கள் கட்டிய தடிகளுடன் நிற்கிறார்கள்)

விசா : அடே சேவகா! பிராது மனுக்கள் கொடுக்க வந்திருப்பவர்களைக் கூப்பிடு.

சேவ : பிராது, மனுக்கள் கொடுக்கிறவர்கள் கொடுக்கலாம். (மூன்று தரம் உரக்கக் கூவுகிறான்)

(விரசேனன் வருகிறான்)

வீர: அடே! சேவகப் பயலே! நான் ஒரு பிராது கொடுக்க வேண்டும். எங்கே நியாயாதிபதி?
சேவ : ஸ்வாமி! இங்கேயே இருங்கள். நான் போய் நியாயாதிபதியிடம் தெரிவிக்கிறேன்.

வீர : ஆகா! அப்படியா! சேவகப் பதரே! நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா! நான் இவ்விடத்திலா நிற்க வேண்டும்?

சேவ : ஸ்வாமி கோபித்துக் கொள்ள வேண்டாம்.

(சேவகன் நியாயாதிபதியிடம் போகிறான்.)

நியா : இராஜாவின் மைத்துனரா? தூமகேது என்னும் வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதாவது ஒரு தேசத்தின் நாசத்தைக் காட்டும் என்பார்கள். இந்தப் பிரபு வந்தது யாருடைய கேட்டிற்கு அறிகுறியோ தெரியவில்லை. இருக்கட்டும். இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதாகவும், நாளைக்கு வரும் படியும் தெரிவித்து அனுப்பு.

சேவ : (வெளியில் வந்து) மகாப் பிரபு இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதால் நாளைய தினம் வரும்படி உத்தரவானது. நாளைக்கு வாருங்கள்.

வீர : என்னுடைய விசாரணையை விட மற்றது அவசரமோ? இந்த நியாயாதிபதி முழு முட்டாள். என் சகோதரியின் புருஷனாகிய இராஜனிடம் போய்த் தெரிவித்து இந்தக் கழுதையை வாலறுத்து ஓட்டி விடுகிறேன். (போகிறான்)

சேவ : ஸ்வாமி ஒரு க்ஷணம் பொறுங்கள்; நான் போய் நியாயாதிபதியிடம் மறுபடியும் தெரிவித்துப் பார்க்கிறேன் (உள்ளே போய்) நியாயாதிபதிகளே! அவர் மிகவும் கோபித்துக் கொள்ளுகிறார். இன்றைக்குத் தன் பிராதை விசாரிக்காததைப் பற்றி இராஜாவிடத்தில் தெரிவித்து தங்களை வேலையில் இருந்து நீக்கி வேறு நியாயாதிபதியை நியமிக்கப் போகிறாராம்.

நியா : பாம்பு அற்பமான ஜெந்துவாய் இருந்த போதிலும் அதன் விஷம் எவரையும் கொல்லும் அல்லவோ! நல்லது; அவரை வரச் சொல் அவர் பிராதை விசாரிக்கலாம்.

சேவ : (வெளியில் போய்) மகாப் பிரபு! வரலாம்; உங்கள் பிராதை இன்று விசாரிக்கப் போகிறார்கள்.

வீர : ஓகோ! முதலில் விசாரிக்க முடியாது: இப்பொழுது முடியும். நல்லது, இவன் என்னிடத்தில் கொஞ்சம் பயம் வைத்துக் கொண்டிருக்கிறான். நான் சொல்வதைச் செய்கிறானா இல்லையா பார்க்கலாம்.

நியா: ஐயா! அப்படி உட்கார்ந்து கொள்ளும்.

வீர: சந்தேகம் என்ன? இந்த ஸ்தலமே என்னுடையது. நான் உட்காருவதற்கு உம்முடைய உத்தரவு வேண்டுமோ? எங்கே உட்கார விருப்பமோ அங்கே நானே உட்காருகிறேன். (விசாரணை கர்த்தாவிடம் போய்) இங்கேதான் உட்காருவேன். இல்லை, இல்லை. இன்னம் உயரத்தில் உட்காருவேன். (நியாபாதிபதிக்குப் பக்கத்தில் போய் உட்காருகிறான்.)

நியா : ஐயா! உம்முடைய பிராது என்ன? சொல்லிக் கொள்ளும்.

வீர : சொல்லும் சமயம் எனக்குத் தெரியும் அதிருக்கட்டும். நீர் முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் யார் தெரியுமா? சிறந்த குடும்பத்தில் உதித்தவன். என் தந்தை இராஜாவின் மாமனார். இராஜாவோ என் தகப்பனாருடைய மருமகன். நான் இராஜாவின் மைத்துனன். இராஜா என்னுடைய சகோதரியின் கணவன்.

நியா : இதெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும்; குடும்பப் பெருமையைப் பற்றி அதிகமாய்ச் சொல்ல வேண்டாம். பிராதைத் தெரிவியும்.

வீர : இதோ சொல்லுகிறேன். ஆனால் அதில் என் பேரில் யாதொரு குற்றமும் இல்லை. என் மைத்துனனாகிய இராஜன், நான் விளையாடி, சந்தோஷமாய்ப் பொழுது போக்க, எனக்குப் பூஞ்சோலை ஒன்றைக் கொடுத்து இருக்கிறார். நான் தினம் தினம் அங்கு போயிருந்து விட்டு வருவது வழக்கம். இன்றைய தினம் அங்கு போனேன். ஆகா! எதைக் கண்டேன் தெரியுமா? என் கண்களையே நம்பக்கூட இல்லை! ஒரு யெளவன ஸ்திரீ யின் சவம் கிடக்கக் கண்டேன்.

நியா : அது யாருடையது என்பது அடையாளம் தெரிந்ததா?

வீர: நன்றாய்த் தெரிந்தது. அவள் நம்முடைய நரகத்திற்கே அழகாய் இருந்தவள்; யாவராலும் புகழப்பட்ட வஸந்தஸேனை. அவளுடைய ஆடை ஆபரணங்களைக் கண்டு பேராசை கொண்ட எந்தக் கொலை பாதகனோ அவளைத் தனிமையான அந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். அங்கு அவளுடைய தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டான். ஆனால் நானல்ல.

நியா : ஆகா! பாராக்காரர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள். விசாரணை கர்த்தா இதை எழுதிக் கொள்ளும், ”ஆனால் நானல்ல” என்பதையும் எழுதிக் கொள்ளும்.

விசா : சரி, எழுதிக் கொண்டேன்.

வீர (தனக்குள்) என்ன முட்டாள்தனம் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலப் பேசி விட்டேனே சரி, சொல்லியாய் விட்டது இனி என்ன செய்கிறது! ஐயா! நியாயாதிபதி அதிக மேதாவியாகிய தாங்கள் இந்த அற்ப விஷயத்தைப் பற்றி இவ்வளவு பிரமாதம் செய்கிறீர்களே! ஆனால் நானல்ல இச்செய்கையைப் பார்த்தவன் என்று சொல்ல உத்தேசித்தேன்.

நியா: அப்படியானால் அவளுடைய ஆடை ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு யாரோ அவள் தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டதாக உமக்கு எப்படித் தெரிந்தது?

வீர : அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். ஏனென்றால் அவளுடைய கழுத்து வீங்கிப் போய் இருந்ததோடு ஆபரணங்களும் போயிருந்தன.

நியா: இருக்கலாம்.

வீர (தனக்குள்) உயிர் வந்தது?

நியா: சரி, வஸந்தஸேனையின் தாயை முதலில் விசாரிக்க வேண்டும். அடே சேவகா! அவளை வரவழை.

சேவ : உத்தரவு. (போய் அழைத்துக் கொண்டு வருகிறான்)

சேவ : அம்மா! இப்படியே வா! இதுதான் வழி.

தாய்க்கிழவி : (தனக்குள்) என்னுடைய குழந்தை வஸந்தஸேனை தன் நண்பர் வீட்டிற்கு நேற்றிரவு போனவள் இன்னம் வந்து சேரவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இவன் நியாயாதிபதி அழைப்பதாகச் சொல்லுகிறான். என்ன காரணமோ, என்ன சம்பவித்ததோ தெரியவில்லை. என் மனம் பதைக்கிறது. என்ன செய்வேன்? போனால் உண்மை தெரிகிறது.
( நியாயாதிபதியை நோக்கி) ஸ்வாமி! நமஸ்காரம்.

நியா : வா! அப்படி நில்லு.

வீர : ஓகோ தாய்க் கிழவியா! வந்தாயா சரி.

நியா : நீ வஸந்தஸேனையின் தாயா?

தாய் :ஆம்.

நியா: உன் மகள் இப்பொழுது எங்கிருக்கிறாள்.

தாய்: ஒரு நண்பர் வீட்டிற்குப் போயிருக்கிறாள்.

நியா : அவருடைய பெயர் என்ன?

தாய் : ஸ்வாமி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வெட்கமாய் இருக்கிறது! –

நியா: நியாய ஸ்தலத்தில் சொல்லுவதினால் யாதொரு குற்றமும் இல்லை. இங்கே வெட்கப்பட்டால் காரியம் எப்படி ஆகும்? கேட்பதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தாய் : நற்குணமே அணியாகப் பெற்ற மாதவராயருடைய மாளிகைக்குள் போனாள்.

வீர : இவள் சொன்னதைக் கேட்டீர்களா? இதை எழுதிக் கொள்ளுங்கள். மாதவராயன்தான் குற்றவாளி.

நியா : அவளுடைய நண்பர் எப்படிக் குற்றவாளி ஆவார்? அவரையும் வரவழைத்து விசாரிப்போம். அடே சேவகா! மாதவராயரை அழைத்து வா!
(போய் அழைத்து வருகிறான்)

மாத : (தனக்குள் இந்த நியாய ஸ்தலம் சமுத்திரத்தைப் போல் இருக்கிறதே! இதைப் பார்க்க என் மனதில் ஒரு வித சஞ்சலம் உண்டாகிறது. வழியில் பலவிதமான கெட்ட சகுனங்கள் தோன்றின. என்ன தீங்கு சம்பவிக்குமோ தெரியவில்லை. (நிலைப்படியில் தலை இடிபடுகிறது) ஆகா! மேலும் அபசகுனம் உண்டாகிறது. நல்லது ஈசுவரன் இருக்கிறான். எல்லாம் விதியின்படி நடக்கிறது.

நியா : (தனக்குள் அதோ மாதவராயர் வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்த்து அவர் இவ்விதமான குற்றம் செய்யக் கூடியவர் என்று யார் சொல்லுவார்கள்? ஒரு மனிதனுடைய அகத்தின் அழகை அவனது முகம் கண்ணாடி போலக் காட்டுமல்லவா!

மாத : நியாயாதிபதிகளே! சித்தத்தின்படி இதோ வந்தேன். அடியேனை அழைத்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

நியா : மாதவராயரே வாரும்; இந்த ஆசனத்தில் உட்காரும்.

வீர : ஸ்திரீ ஹத்தி செய்தவரே! வாரும்.

நியா : மாதவராயரே! உமக்கும்! இந்த ஸ்திரீயின் புத்திரிக்கும் நட்புண்டா?

மாத : எந்த ஸ்திரீ?
நியா ” இதோ நிற்பவள் வஸந்தஸேனையின் தாய்.

மாத : (எழுந்து வணக்கமாக) ஓகோ அப்படியா! நான் இது வரையில் பார்த்ததில்லை. அம்மா! ஸந்தஸேனை வீடு வந்து சேர்ந்தாளா?

தாய் : அப்பா குழந்தாய்! இன்னம் வரவில்லை. நீ நீடுழி வாழ வேண்டும். (தனக்குள்) இவர்தாம் மாதவராயரா ஆகா! என் புத்திரியின் பாக்கியமே பாக்கியம். நல்ல சீலரையே விரும்பினாள். என்ன அழகு! என்ன மேன்மைக் குணம் இவர் அவளுக்குக் கிடைப்பாரானால் அவள் ஜன்மம் கடைத்தேறி விடும்.

நியா : மாதவராயரே! இவளுடைய பெண்ணாகிய தாஸி வஸந்தஸேனைக்கும் உமக்கும் நட்புண்டா?
(மாதவராயர் திடுக்கிட்டு வெட்கிக் கீழே குனிகிறார்)

வீர: என்ன பாசாங்கு செய்கிறான்! தான் செய்த குற்றத்தை மறைக்க இது நல்ல தந்திரம் சாமர்த்தியசாலிதான்

நியா : மாதவராயரே! உம்மீது பெருத்த குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் யோசனை செய்யாமல் சொல்லும்.

மாத: அப்படியா! அவள் இப்பொழுதுதான் சமீப காலத்தில் சாதாரணமாகப் பரிச்சியம். அதனால் குற்றம் என்ன? ஸ்திரீ புருஷர்களுக்கே பாலியத்தில் விளையாட்டுக்கள் இருப்பது சகஜந்தானே!

நியா: ஐயா! மாதவராயரே மறை பொருளாய்ப் பேசுவதை விட்டு வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும். நான் இங்கு சட்டப்படி கேட்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். .

மாத : என் பேரில் குற்றம் சுமத்துகிறவர் யார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

வீர : இதோ! நான்தான்.

மாத : நீங்களா! அப்படியானால் விஷயம் பெரிதாக இருக்க வேண்டும்.

வீர: ஆம், தடை என்ன. இவ்வளவு கீர்த்திப் பெற்ற வஸந்தஸேனையைக் கொன்று அவளுடைய ஆபரணங்களை அபகரித்துக் கொண்டால் அது ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்தாயோ!

மாத : உமக்கென்ன புத்தி மாறாட்டம் கொஞ்சம் உண்டா?

நியா : சரி! போதும்; வஸந்தஸேனை இப்பொழுது எங்கு இருக்கிறாள்?

மாத : தன் வீட்டிற்குப் போயிருக்க வேண்டும்.

வீர: தன் வீட்டிற்கா போயிருக்க வேண்டும் ஆகா! என்ன துணிபு? நீ அவளை என்னுடைய சோலைக்கு இரகசியமாய் அழைத்து வந்து கழுத்தை இறுகப் பிடித்துக் கொன்று அவளுடைய நகைகளை அபகரித்துக் கொள்ளவில்லையா? தன் வீட்டிற்குப் போயிருப்பாள் என்று எப்படிச் சொல்லுகிறாய்.

மாத : (காதில் கையை வைத்து மூடிக் கொண்டு) ஆகாகா! ஈசுவரா என்ன வார்த்தைகளைக் கேட்கும்படி வைத்தாய்; இந்த வார்த்தை என் காதில் நாராசம் நுழைந்ததைப் போல் அல்லவோ இருக்கிறது. போதுமையா உம்முடைய விளையாட்டு; நிறுத்தும். இனி எனக்குக் கோபம் உண்டாகும்.

தாய் : ஆகா! என் மகள் இறந்து போய் விட்டாளா? ஐயோ! இனி என்ன செய்யப் போகிறேன். (ஒரு பக்கமாக நின்று அழுகிறாள்)

நியா: (தனக்குள் எவ்வளவோ கீர்த்தி பெற்ற இவர் பேரில் ஒரு சிறிய மாசைக் கற்பிப்பதைக் காட்டிலும், ஹிமய மலையைத் தூக்கி நிறுத்துவதும், சமுத்திரத்திற்குக் கரை கட்டுவதும், காற்றைக் கையால் பிடிப்பதும், எளிதில் முடியும். (உரக்க) எவ்வளவோ கீர்த்தியைப் பெற்ற இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.

வீர : அவருடைய கட்சியை நீரே எடுத்துக் கொண்டாற் போல் இருக்கிறதே?

நியா : நடுப் பகலில் சூரியனை எதிர்த்துப் பார்த்தால் நம்முடைய கண்ணொளி மழுங்கி விடாதோ? நெருப்பில் கையை நீட்டினால் கை அல்லவோ எரிந்து போம் அவர் பேரில் அநியாயமாக அவதூறு சொன்னால் தெய்வத்திற்கு சம்மதம் ஆகுமோ? தலையில் இடியல்லவோ விழும் இவர் சாதாரணமான மனிதரா சமுத்திரத்தை ஒத்த தன் ஐசுவரியத்தை எல்லாம் பரோபகாரத்தின் பொருட்டுத் தருமம் செய்து செலவிட்டவரும், சிறந்தவரிற் சிறந்தவரும் தயாள குணத்தையே பூஷணமாக அணிந்தவருமான இவர் கேவலம் அற்பப் பொருளை உத்தேசித்து கொடிய பாதகர் செய்யக் கூடிய இந்தப் பாவத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.

வீர: ஓகோ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேண்டியவர்கள் போல் இருக்கிறது. உமது வேலை பிராதை விசாரிக்க வேண்டியதே ஒழிய ஜோசியம் சொல்வதல்ல. எனக்கு நேரமாகிறது; விசாரணை நடக்கட்டும்.

தாய் : (தனக்குள்) இதென்ன மோசமோ தெரியவில்லையே! என் அருமைப் பெண் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ தெரியவில்லையே! இவரை ஏன் இப்படி வருந்துகிறார்கள்? (திபாயாதிபதிக்கு) நியாயாதிகளே இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார். இவர் ஒரு எறும்பைக்கூட வதைப்பவர் அல்லவே! தன் உயிர் போவதாய் இருந்தாலும், பிறருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாரே! இவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், இவருடைய மேன்மை ஒரு நாளும் போகாது. என் மகள் தன் ஆபரணங்களை ஒரு நாளிரவு இவரிடம் வைத்து வந்தாள். அவைகள் களவு போய் விட்டன; இவர் அவற்றைவிட எவ்வளவோ விலை உயர்ந்த ஒரு வைர மாலையைக் கொடுத்தார். அப்படி இருக்க, இவர் அற்ப நகைகளுக்காகக் கொலை செய்தாரென்பது முழுதும் பொய்.

நியா : மாதவராயரே! அவள் உம்முடைய மாளிகைக்கு எப்பொழுது வந்தாள்.

மாத : நேற்று சாயங்காலம்.

நியா : பிறகு எப்பொழுது போனாள், நடந்து போனாளா, அல்லது வண்டியில் போனாளா?

மாத : அந்த விவரம் எனக்குத் தெரியாது; அவள் இன்று காலையில் தன் வீட்டிற்குப் போகுமுன் நான் எழுந்து என் உத்தியான வனத்திற்குப் போய் விட்டேன்.
(வீரகன் அவசரமாக வருகிறான்.)

வீர :நியாயாதிபதிகளே! நமஸ்காரம்.

நியா : வீரகா! எங்கு வந்தாய்; என்ன விசேஷம்?

வீர : ஒரு பிராது சொல்லிக் கொள்ள வந்தேன்..

நியா : இன்று காலையில் பிரதாபனைத் தேடிக் கொண்டு போன போது, ஒரு பெட்டி வண்டி ஊருக்கு வெளியில் அவசரமாகப் போனதைக் கண்டேன். என்னுடன் வந்த சந்தானகன் வண்டியை நிறுத்தி அதற்குள் பார்த்தான். அதன் பிறகு, நானும் உட்புறம் யார் இருந்தார்கள் என்பதைப் பார்க்கப் போனேன். அவன் என்னைத் தடுத்துக் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி உதைத்தான். அதை இராஜனிடம் தெரிவிக்குமுன் தங்களிடம் சொல்லிக் கொள்ளலாமென்று வந்தேன்.

நியா : அந்த வண்டி யாருடையது?

வீர. : அது மாதவராயருடையதென்றும், அவருடைய உத்தியான வனத்தில் சந்திக்கும் பொருட்டு அதில் வஸந்தஸேனை போவதாயும் வண்டிக்காரன் தெரிவித்தான்.

வீர : பார்த்தீரா உண்மையை?

நியா : மாசற்ற சந்திரனைக் கிரகணம் பிடிக்கும் போல் இருக்கிறதே! நல்லது; வீரகா! உன் பிராதை விசாரிக்கிறேன். நீ குதிரையின் பேரில் ஏறிக் கொண்டு இவருடைய பூஞ்சோலைக்குப் போய், அங்கே கொலை செய்யப்பட்ட ஒரு ஸ்திரீயின் பிணம் கிடக்கிறதோ என்று பார்த்து விட்டு வா?

வீர : அப்படியே இதோ வந்து விட்டேன்.
(போய்த் திரும்பி வருகிறான்)

வீர: ஒரு ஸ்திரீயின்பிரேதத்தைக் காட்டு மிருகங்கள் இழுத்துக் கொண்டு போயிருக்கக் கண்டேன்.

நியா: ஸ்திரீ என்பது எப்படித் தெரிந்தது.

வீர : அங்கு கிடந்த தலை மயிரின் நீட்சி, அழகு முதலியவற்றாலும் கால் கைகளின் அடையாளங்களினாலும் கண்டு பிடித்தேன்.

நியா: வாரும்; மாதவராயரே உண்மையைச் சொல்லி விடும்.

மாத : என்ன ஆச்சரியம்! என்ன அநியாயம்! தன் உயிரைக் காட்டிலும் அதிகமாக என்மீது அன்பையும் ஆசையையும் கொண்டவளும், நீதியிலும் அரியவளுமான அந்த சுந்தராங்கியின் சிரத்திலுள்ள ஒரு சிறிய உரோமத்திற்கும் தீங்கு செய்ய எனக்கு மனம் வருமா? என்னையும் என் குணத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்களா? இன்ப சாகரமாகிய வஸந்தஸேனையைக் கொல்ல அவளுடைய விரோதி கூட நினைக்க மாட்டானே?

வீர : ஐயா! நியாயாதிபதி இந்தக் குற்றவாளியை இனியும் இவ்விடத்தில் உட்கார வைத்தால், நீங்கள் இருவரும் நண்பர்கள் என்று மதிக்கப்படுவீர்கள்.

நியா : மாதவராயரே! எழுந்து நில்லும்.

மாத : நியாயாதிபதிகளே! அப்படியே நிற்கிறேன். நீங்கள் நன்றாய் யோசனை செய்யுங்கள்.

வீர : (மாதவராயருக்கு அருகில் போய் நின்று கொண்டு) ஏ மாதவராயா! என்னைப் பார் நிஜத்தைச் சொல்லி விடு. வஸந்தஸேனையைக் கொன்று விட்டதாக நாணயமாக ஒப்புக் கொள்.

மாத : துஷ்டா! என்னுடன் பேசாதே; போ அப்பால். (தனக்குள்) என்னுடைய உண்மை மித்திரம் ஸோமேசன் இந்த அவதுறைக் கேட்டால் எப்படி விசனப்படுவானோ? மேலான குலத்தில் உதித்த பரிசுத்த ஸ்வரூபியான என் அரிய நாயகி இதைக் கேட்க சகிப்பாளோ? ஆகா குழந்தாய் உன்னுடைய பாலிய விளையாட்டில், உன் பிதாவுக்கு வந்திருக்கும் மானக் கேட்டை நீ எங்கே அறியப் போகிறாய்? எனக்கு இந்த மான ஹானி வந்ததைப் பற்றிக்கூட நான் வருந்தவில்லை. இதனால் என் உயிர் போவதாய் இருந்தாலும் கவலை இல்லை. பதிவிரதா சிரோன்மணியான வஸந்தஸேனை உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் மனதை வருத்தி வதைக்கிறது. அவள் உண்மையில் இறந்திருப்பாள் என்பதை என் மனது இன்னமும் நம்பவில்லை. அவள் என் குழந்தைக்குக் கொடுத்து விட்டுப் போன ஆபரணங்களைத் திரும்ப அவளிடம் கொடுத்து விட்டு வரும்படி ஸோமேசனை அனுப்பினேன். அவனும் திரும்பி வரவில்லை. ஈசுவரா! கருணாநிதே! என்ன செய்யப் போகிறேன்.

(ஸோமேசன் ஆபரணங்களுடன் நியாய ஸ்தலத்திற்கு வெளியில் வருகிறான்.)

ஸோ : (தனக்குள்) வஸந்தஸேனை அவள் மாளிகையில் காணப்படவில்லையே? வேறு எங்கு போய்த் தேடுகிறது. என் மித்திரரை நியாய ஸ்தலத்திற்கு அழைத்துப் போயிருப்பதாய்க் கேள்விப்பட்டேன். நியாய ஸ்தலம் இதோ இருக்கிறது. உள்ளே போய் விசேஷம் என்ன என்பதை அறிந்து கொண்டு பிறகு வஸந்தஸேனையைத் தேடுகிறேன். (உள்ளே போய்)

ஆ!மித்திர ரத்னமே! என்ன விசேஷம்? இங்கு வந்த காரணமென்ன?

மாத : ஸோமேசா! நான் கொலை பாதகன்; என்னைக் காதலித்த மங்கையைக் கொன்ற படுபாவி நான்.

ஸோ : ஆகா! என்ன சொன்னீர்கள்! உங்களை இப்படிச் சொல்லத் துணிந்தவன் யார்? மங்கையையாவது கொலை செய்யவாவது?

மாத : அதோ நிற்கும் கொடியவனே என் விதியை நிறை வேற்றும் கருவியாக வந்திருக்கிறான்.

(ஸோமேசன் காதில் விவரத்தைச் சொல்லுகிறார்)

ஸோ : அவள் தன் மாளிகைக்குப் போய் விட்டதாகச் சொல்லி விடுகிறதுதானே.

மாத : நான் என்ன சொன்ன போதிலும் பயனில்லை; ஏழையின் சொல்லை யார் நம்புவார்கள்?

ஸோ: நியாயாதிபதிகளே இதென்னஅநியாயம்? நம்முடைய நகரத்தைக் கோவில்களாலும், தடாகங்களாலும், சாலைகளாலும், மண்டபங்களாலும், ஊற்றுக்களாலும், வாவிகளாலும் அலங்கரித்த இந்த மகானுபாவரா கேவலம் அற்பமான கொலை பாதகம் செய்பவர்? நன்றாய்த் தீர்க்காலோசனை செய்து பாருங்கள். அடே வீரசேனப் பதரே! மனிதரை வருத்தி வயிறெரியச் செய்யும் பரம பாதகா ஒரு கொடியிலுள்ள புஷ்பத்தைப் பறிப்பதைக் கூட பாவமென்று மதிக்கும் இந்தப் புருஷோத்தமர், இகத்திற்கும் பரத்திற்கும் இகழையும் துன்பத்தையும் தரும் இந்த மகா பாதகத்தைச் செய்தார் என்று எங்கே எனக்கு முன்பாகத் தெரிவி! இதோ இந்தத் தடியால் துற்புத்தியே நிறைந்த உன் தலை ஆயிரம் சுக்கலாகும்படி உடைக்கிறேன்.

வீர : எல்லோரும் இதைக் கேட்டீர்களா எனக்கும் மாதவராயருக்கும் உள்ள வித்தியாசத்தில் இவன் தலையிட இவனுக்கு என்ன அதிகாரம்? அடே! இதோ பார், நான் உன் தலையை உடைக்கிறேன். (இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாய்த்து கட்டிப் புரளுகின்றனர். ஸோமேசன் மடியில் வைத்திருத்த ஆபரணங்கள் கீழே விழுகின்றன.)

வீர : (அவற்றை எடுத்துக் காட்டி) இதோ பார்த்தீர்களா அவள் மேலிருந்து அபகரித்த ஆபரணங்கள். நான் சொன்னது நிஜமாய்ப் போய் விட்டது பார்த்தீர்களா! அவனுக்கு இவனும் உடந்தை.
( நிதிபாயாதிபதி தன் சிரத்தைக் கீழே போட்டுக் கொள்ளுகிறார்.)

மாத: (ஸோமேசனிடம்) என்னுடைய கால வித்தியாசத்திற்குத் தகுந்த விதம் இந்த சமயத்தில் இவ்வாபரணங்களும் விழ வேண்டுமா இது என்னுடைய கர்மவினை எப்பொழுது இவைகள் விழுந்தனவோ, அப்பொழுது நானும் விழுந்தேன். தப்புவதில்லை.

ஸோ: நடந்த விவரங்களை நன்றாய் விளங்கச்சொல்கிறது தானே.

மாத : சந்தேகத்தைத் தரக்கூடிய இத்தனை சங்கதிகளுக்கு மத்தியில் உண்மை இன்னதுதான் என்பதை அறிய இராஜ பீடத்திற்கு வல்லமை இல்லை. என்ன செய்கிறது! இவ்விதமாக அவ மானப்பட்டு நான் உயிரை விடவேண்டும் என்று இருந்தால், அதை நாம் எப்படித் தடுக்கக் கூடும்? நடப்பது நடக்கட்டும்.

நியா : (தாய்க் கிழவிக்கு) ஸ்திரியே இந்த ஆபரணங்கள் உன் மகளுக்குச் சொந்தமானவைகளா?

தாய் : அவைகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் அல்ல.

வீர : ஏ கிழ முண்டமே! என்ன உளறுகிறாய்? நிஜத்தைச் சொல்.

தாய் : புரட்டனே! போ அப்பால்!

வீர : அடி! ஜாக்கிரதையாகப் பேசு. இவைகள் உன் மகளுடையவைகளா இல்லையா?

தாய் : நியாயாதிபதிகளே! தட்டான் தன்னுடைய ஸாமர்த்தியத்தினால் ஒன்றைப் போல மற்றொன்றைச் செய்யக் கூடும் அல்லவா! அவை என் மகளுடைய நகைகள் என்று நிச்சயமாக எப்படிச் சொல்லுவேன்?

நியா : ஆம். நிஜந்தான் அப்படியும் இருக்கலாம். மாதவராயரே இவ்வாபரணங்கள் உம்முடையவைகளா?

மாத : இல்லை.

நியா : அப்படியானால் யாருடைய ஆபரணங்கள்?

மாத : வஸந்தஸேனையினுடைய ஆபரணங்களே.

நியா : சொந்தக்காரியிடம் இருந்து உம்மிடம் இவை எப்படி வந்தன!

மாத : அவளே கொடுத்தாள்.

நியா : மாதவராயரே! நீர் உண்மையைப் பேச வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்ல வேண்டுவதில்லை. பொய் சொல்ல வேண்டாம்.

மாத : நான் சொல்வதைப் பொய்யென்று நினைப்பானேன்?

வீர : அவளைக் கொன்ற பிறகு அவ்வாபரணங்களை அவள் தேகம் கொடுத்தது? இவர் சொல்வதும் உண்மைதான்.

நியா : மாதவராயரே! நிஜத்தைப் பேசும்; இல்லாவிட்டால் துன்பம் வந்து சம்பவிக்கும்.

மாத : சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே பொய் என்றால் பிறகு நான் சொல்வதில் பயன் என்ன? குற்றம் என்பதே இன்னது என்று அறியாத குலத்தில் உதித்த நான் என் முன்னோர்களுக்கு அவமானம் வரக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்பவனல்ல. குற்றமற்றவனைக் குற்றவாளியென்று ஸந்தேகித்தால், வருவதை நான் அனுபவிக்க வேண்டுவதுதான் முடிவு.

வீர : இன்னம் ஸந்தேகமாக ஏன் பேச வேண்டும்? கொன்றேனென்று சொல்லி விடு.

மாத : எனக்குப் பதிலாக நீர்தாம் சொல்லி விட்டீரே! நான் கூடச் சொல்ல வேண்டுமா?

வீர : கேட்டீர்களா இவரே ஒப்புக் கொள்கிறார்; இவர் வாக்குமூலத்தினாலேயே சந்தேகம் நீங்கிவிட்டது. இனி தண்டனை விதிக்கலாம். ஐயோ பாவம்! மாதவராயரைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது! இவர் இந்தக் குற்றம் செய்யாமல் இருந்தால் நன்றாய் இருக்கும். இதை வேறு யாராயினும் செய்திருக்கலாகாதா?

நியா : மாதவராயரே! இப்பொழுது ஏற்பட்ட சாட்சியங்களால் நீர் வஸந்தஸேனையைக் கொன்று இருக்கலாம் என்று ஸ்ந்தேகம் ஏற்படுகிறது நீர்கொல்லவில்லை என்பதற்கோஅல்லது வேறு யாராவது அவளைக் கொன்றார்கள் என்பதற்கோ உமக்கு சாட்சிகள் இருக்கிறார்களா?

மாத : இந்த ஆபரணங்களை வஸந்தஸேனை கொடுத்தாள் என்பதற்கு என் பணிப் பெண் சாட்சி இருக்கிறாள். தவிர, இன்று காலையில் இருந்து, என்னுடைய நண்பன் ஸோமேசன் என்னுடன் கூடவே இருந்திருக்கிறான். இவ்விருவரும் தான் சாட்சிகள்.

வீர: இவர்கள் உனக்கு அனுகூலமானவர்கள். உன் வேலைக்காரியும், நண்பனும் உன் உயிரைத் தப்புவிக்க ஏன் பொய் சொல்ல மாட்டார்கள்? ஆகையால் இவர்களுடைய சாட்சியம் சிறிதும் உபயோகம் இல்லை. நியாயாதிபதி! நீர் இவர்களை விசாரித்த போதிலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

நியா : மாதவராயரே! இவர்களைத் தவிர வேறு சாட்சிகள் இருக்கிறார்களா?

மாத : இல்லை.

வீர : அப்படியானால் நியாயாதிபதி இனி தண்டனை விதிக்க வேண்டியதுதான்.

தாய் : ஐயோ! என் அருமை மகனே! உனக்கு என்ன பொல்லாத காலமோ தெரியவில்லையே! நல்ல மனிதருக்கு இப்படியும் ஆபத்து வருமோ? நியாயாதிபதிகளே! என் மகளுக்காக இந்தப் பிராதில் நான் அல்லவோ வாதியாக வரவேண்டும்? இவர் பேரில் எனக்கு யாதொரு வியாச்சியமும் இல்லை. இவரை விட்டு விடுங்கள்.

வீர : கிழப் பிணமே! போ அப்பால்! எங்களுக்குத் தெரியாததற்கு நீயே சொல்லிக் கொடுக்கிறாய்!

நியா : கொலைக் குற்றத்திற்கு சர்க்காரே வாதி. ஆகையால், உன்னைப் பற்றிக் கவலை இல்லை. நீ போகலாம்.

தாய் : இதென்ன அநியாயம்! யாதொரு குற்றத்தையும் செய்யாத புண்ணிய புருஷர் மீது அடாப்பழி சுமத்துகிறார்களே! இது தெய்வத்திற்கு சம்மதமாகுமோ? நியாயாதிபதிகளே இது தர்மமல்ல என் மகள் ஏதோ தலை விதியினால் இறந்தாள். அதற்காக யாதொரு களங்கமும் அற்ற உத்தம குணமுடைய இவரைத் தண்டிக்க வேண்டாம். விட்டு விடுங்கள்.

நியா : சரி! நீ போகலாம்.

(சேவகர்கள் அவளை வெளிப்படுத்துகிறார்கள்)

வீர: நேரமாகிறது! தண்டனை விதியும்.

நியா : ஐயா! இது கொலைக் குற்றம்; அதிலும் குற்றவாளி பிராம்மணர். ஆகையால் இதை நான் தீர்மானித்தல் கூடாது. மனு நீதிப்படி இதில் அரசனே தீர்மானம் சொல்ல வேண்டும். ஆகையால் என்னுடைய விசாரணை கர்த்தாவை நான் அரசனிடம் அனுப்பி, விசாரணையில் ஏற்பட்ட விஷயங்களைத் தெரிவிக்கச் சொல்லுகிறேன். (விசாரணை கர்த்தாவை நோக்கி) நீர் உடனே அரசனிடம் போய், விவரங்களைத் தெரிவித்து அவருடைய தீர்மானத்தை அறிந்து வாரும். பிராம்மணர் கொலைக் குற்றம் செய்தால், அவரைக் கொல்லக் கூடாதென்றும், அவரை இந்தத் தேசத்தை விட்டு வேறு தேசத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்பதும் சாஸ்திரம் என்று தெரிவியும்.

வீர (தனக்குள் அப்படியானால் நான் முன்னால் அரசனிடம் போய் அவனை சரிப்படுத்தி வைக்கிறேன். (போய் விடுகிறான்)

வி-க : உத்தரவுப்படி செய்கிறேன்.

(போய்த் திரும்பி வந்து), நியாயாதிபதிகளே! அரசனிடம் தெரிவித்தேன். வஸந்தஸேனையின் ஆபரணங்களை இவர் கழுத்தில் போட்டு இவருக்கு எருக்க மாலை அணிவித்து பறை முழக்கத்தோடு இவரை ஊரைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியில் உள்ள மைதானத்தில் கழு மரத்தில் ஏற்றும்படி உத்தரவு பிறப்பித்தார். இவ்விதக் குற்றத்தை இனி ஜனங்கள் செய்யாமல் இருக்க, இது ஒரு உதாரணமாக இருத்தல் வேண்டுமாம்.

ஸோ ; ஹா! தெய்வமே! (மாதவராயர் மீது சாய்கிறான்)

மாத : யோசனையும் நியாயமும் இல்லாத அரசன் இப்படித்தான் துற்புத்தி மந்திரிகளின் உபதேசத்திற்கு இணங்கி அக்கிரமங்களைச் செய்து நாசமடைகிறான். யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே! கேடு வரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே! விதியின் வலியைத் தடுக்க யாரால் முடியும்? முன் ஜென்மத்தில் நான் செய்த பாவத்தினால் இது சம்பவித்தது. இதைப் பற்றி யார் பேரில் குற்றம் சுமத்துகிறது? ஆகையினால் நண்பா! கவலைப்படாதே! என்ஆருயிர்மித்திரா! நான் போகிறேன். இதுவரையில் நீ என் மீது வைத்திருந்த அன்பை மறந்து விடாதே! ஆதரவற்ற என் குடும்பத்தை உன் வசத்தில் ஒப்புவித்தேன். என் மனைவியையும் குழந்தையை யும் இனி நீ தான் காப்பாற்ற வேண்டும்.

ஸோ : ஐயா! மித்ர ரத்னமே! அடிவேர் போன பின் மரம் உயிருடன் இருப்பதும் உண்டோ? ஒரு நாளும் இல்லை. உங்களுக்கு முன் என் உயிர் இதோ போய் விடும் போலிருக்கிறது.

மாத : நண்பா! அப்படி அல்ல! தகப்பன் இறந்த போதிலும் அவன் பிள்ளையின் ஸ்வரூபமாக உயிருடன் இருக்கிறான் என்பது சாஸ்திரம். ஆகையால், என்னிடம் இருந்த விதமே நீ என் குழந்தையிடத்திலும் இருந்து அவனை ஆதரிக்க வேண்டுகிறேன். இதுதான் என் கடைசி வேண்டுகோள். நான் இறக்குமுன் என் குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். நீ போய் அவனை அழைத்து வா. இந்த விஷயத்தை நான் இறந்த பின் என் நாயகியினிடத்தில் தெரிவிக்கலாம்.

நியா : அடே! சேவகா! இவரைச் சண்டாளர்களிடம் ஒப்புவித்து அரசனுடைய கட்டளையை நிறைவேற்றச் சொல்லி விடு.

சேவ : இப்படி வாரும் ஐயா!
(மாதவராயரை வெளியில் அழைத்து வருகிறான்)

மாத : ஜெகதீசா! இனி உன்னுடைய துணையையன்றி எனக்கு வேறொரு துணையுமில்லை.

(நிறுவினா கதிலேதுரா – என்ற பாட்டின் மெட்டு)

ப. நினையலால் கதியேதையா
ஈசா! ஜெகதீசா! பரமேசா! ஸர்வேசா!

அ. நாதனே! உன் சோதனையோ!
பேதையினேன் ஏது செய்வேன்?
நாதா! குணநீதா! பொற்பாதா! ஜகந் நாதா! (நி)

(தனக்குள்) ஆகா! இதுதான் பூலோகத்தின் நீதியோ இது தான் அரசாட்சியோ? இதுதான் செங்கோலோ? ஒரு மயிரிழையும் தவறாத சர்வ வல்லமையுடைய ஈசுவரனால் படைக்கப் பட்ட இந்த உலகில் இப்படி நடப்பது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது! இவ்விதம் நடப்பதற்கு விதி என்னும் ஒரு மூல காரணம் இருந்த போதிலும் இப்பொழுது நேரில் பார்ப்பவர்களுக்குக் கடவுளிடத்து ஒருவித அவநம்பிக்கையும், தூஷணையும், ஒரு விதக் களங்கமும், ஏற்படுகின்றன அல்லவா? எவ்வளவு பெருத்த குற்றம் எவ்வளவு சுருக்கமான விசாரணை எவ்வளவு துரிதமான தீர்மானம்! நல்ல நியாய ஸ்தலம் தீர்மானம் செய்த அரசனும் நல்லவனே ஒரு விரோதியின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் உலகத்தில் மனிதருக்குப் பாதுகாப்பேது? அரசனே! இப்படிக் குற்றமற்றவர்களை வருத்தி நீ எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளை ஒக்கும் அல்லவோ! அரசனே, உனக்கு நரகம் ஆயத்தமாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது; கவலைப்படாதே!
சேவகர், வா போகலாம். (போகிறார்கள்)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *