இளவரசியின் சமயோசிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 538 
 
 

நான் எண்ணியது தவறோ? இவனை சாதாரணமாய் எடைபோட்டு விட்டேனோ? இது வரை கிட்டத்தட்ட பனிரெண்டு நாட்கள் முற்றுகை இட்டு விட்டோம், முடிவு கிடைக்கவில்லையே? ஆயிரக்கணக்கான என் படைகள் முன்பு கேவலம் ஒரு சிறு படையை வைத்து இத்தனை நாட்கள் தாக்கு பிடித்து விட்டானே? இனி என்ன செய்வது திரும்பி போவோம் என்றால் அதை விட கேவலம் என்ன இருக்கிறது. இது வரை எத்தனை போர்களில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு இவனிடம் வந்து இப்படி நிற்கிறேன். நினைக்க நினைக்க விஜயபாலனுக்கு கோபமாய் வந்த்து. அவனது எண்ணங்களை புரிந்து கொண்டாற்போல் அவன் அமர்ந்திருந்த குதிரையும் சத்தம் காட்டாமல் அந்த காட்டுப்பகுதியில் அவனை சுமந்து சென்றது. சற்று தள்ளி அவனை பாதுகாக்க பத்து குதிரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அவனை தொடர்ந்தனர்.

சற்று தொலைவு அப்படியே மெளனமாய் செல்ல அருவி ஒன்று சலசலத்து ஓடும் சத்தம் கேட்டது. குதிரையை அப்படியே நிறுத்தி விட்டு கீழிறங்கினான் விஜயபாலன். அங்கிருந்த புதர் செடிகளை தன் வாளால் ஒதுக்கிக்கொண்டு அந்த நீரோட்டத்தை நோக்கி நடந்தான். அப்பொழுது அவன் கண் பார்வையில் பட்ட காட்சி…

இந்த இரவு நேரத்தில் ஒரு இளம் பெண் எந்த வித கவலையுமின்றி அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பதை கண்டவன் வியப்பில் ஆழ்ந்து போனான். நாட்டின் எல்லையில் பகைவனாகிய நான் படைகளை குவித்து வைத்திருக்கிறேன்.அப்படி இருந்தும் இந்த இரவில் ஒரு இளம் பெண் அதுவும் தன்னந்தனியாக இந்த ஆற்றில் குளித்து கொண்டிருக்கிறாள் என்றால்? மனதில் எழுந்த கேள்விக்கு பதிலை அவளிடமிருந்தே பெற வேண்டி அந்த பெண்ணை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சற்று தள்ளி வந்து கொண்டிருந்த அந்த பத்து வீரர்களும் சட்டென குதிரையிலிருந்து குதித்து மன்னனை பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் தன்னுடைய பார்வைகளை சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே. விஜயபாலனை விட சற்று வேகமாக நகர்ந்து அவனை வட்டமிட்டவாறு அவனுக்கு இடைஞ்சல் தராதவாறு அவனுடனே நடந்தனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் சட்டை செய்யாமல் தன்னுடைய எண்ணங்களை ஒரே குறிக்கோளாக கொண்டு நடந்த விஜயபாலன் அந்த பெண் குளித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு சற்று தொலைவிலேயே நின்று நாகரிகம் கருதி “க்கும்” சற்று கணைத்தான்.

இவனின் கணைப்பை சற்று நேரங்கழித்தே காதில் ஏற்றிக்கொண்ட அந்த பெண் எந்த வித பயமுமின்றி திரும்பி பார்த்தாள். அவளின் முக அழகு அப்படியே விஜயபாலனை மயக்கியது. இவ்வளவு அழகிய பெண்ணா? இருந்தால் இருபதுக்குள்தான் இருக்கும். இந்த வயதில் இவளுக்கு என்ன துணிச்சல்?

அந்த பெண் எந்த விதமான படபடப்பும் இல்லாமல் மெல்ல அந்த நீரிலிருந்து எழுந்தவள் வேகமாய் நடந்து ஒரு புதருக்குள் மறைந்தாள். அந்த நொடி பொழுதில் நீரில் இருந்து எழுந்த உருவத்தின் எழிலில் தன்னையே மறந்து விட்டவன் போல் விதிர்த்து நின்றான் விஜயபாலன்.

ஐந்து நொடிகளில் உடைமாற்றி இவனை நோக்கி வந்த அவளது ந்டையை பார்த்த விஜயபாலன் இந்த பெண் அழகியவளாய் இருந்தாலும் நடை ஒரு போர் வீரனை போல் இருப்பதை சற்று வியப்புடன் பார்த்தான்.

யார் நீங்கள்? அந்த பெண்ணின் அதட்டல் கேள்வியில் சற்று தடுமாறிய விஜயபாலன் அதை நான் கேட்க வேண்டும் யார் நீ? அதுவும் இந்த நேரத்தில் உனக்கு இங்கென்ன வேலை?

கலகலவென சிரித்த அந்த பெண் எனது நாட்டில் அதுவும் எனது இடத்துக்கு வந்து என்னை யார் நீ என்று கேட்க உமக்கு நிரம்ப தைரியம்தான்.

சர்..சர் என்று வாளை உருவும் சத்தம் மன்ன்னை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் தங்களுடைய வாளை உருவும் சத்தம் அவர்களை கை அமர்த்திய விஜயபாலன்

பெண்ணே வார்த்தையை வீசுமுன் சற்று எச்சரிக்கை தேவை. நான் இந்திர தேசத்து மன்னன் விஜயபாலன், இந்த நாட்டை பிடிப்பதற்காக வந்திருப்பவன். ஏறக்குறைய இந்த நாட்டு மன்னன், அதாவது உங்கள் மன்னன் இன்னும் இரண்டொரு நாட்களில் என்னிடம் சிறைபட போகிறவன். அடுத்து உங்களையும் சிறைபிடிக்க எங்களுக்கு நீண்ட நாட்கள் ஆகாது.. அவன் சொல்லிக்கொண்டே போக

மீண்டும் கல கலவென சிரித்த அந்த பெண் நீர் எங்கள் மன்னனை சிறை பிடிக்க போவதாய் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை. மீண்டும் தனது பெருஞ்சிரிப்பை தொடர்ந்தவளை எரிச்சலுடன் பார்த்தான் விஜயபாலன். உன் மன்னன் என்ன பெரிய வீரனா? அப்படியானால் இன்னும் ஏன் என் முன்னால் வந்து போர் புரியாமல் இருக்கிறான்..

மீண்டும் பெருஞ்சிரிப்பை உதிர்த்த அந்த பெண் எங்களுடைய படைவீரர்களின் மன வலிமையை உங்களால் வெற்றி பெற முடிந்ததா? இத்தனை நாளாக போரிடுகிறேன் என்கிறீர்களே? அப்புறமல்லவா என் மன்னனிடம் போர் புரிய வரமுடியும்?

இந்த பதிலுக்கு உண்மையிலேயே நாணினான் விஜயபாலன். உண்மைதான் உங்கள் நாட்டு மக்கள் வீரமாகத்தான் இத்தனை நாள் என்னுடைய முற்றுகைக்கு தாக்கு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவும் எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்க முடியும்?

அது சரி இப்படி தனியாக வந்து இந்த காட்டில் குளித்துக் கொண்டிருக்கிறாயே. என்னைப்போல் வருபவன் ஏதாவது செய்து விட்டால்?

மீண்டும் கல கலவென்று சிரித்தாள் அந்த பெண். என்னை எதுவும் செய்ய முடியாது, இப்பொழுது நீங்கள் நினைத்தால் கூட என்னை எதுவும் செய்ய

முடியாது, அவளின் சிரிப்பு பெருஞ் சிரிப்பாய் மாறி உண்மைதான் நீங்கள் நினைத்தாலும் என்னை தொடக்கூட முடியாது.

மன்னனை சுற்றி நின்ற வீர்ர்களுக்கு அவளின் சிரிப்பை கண்டு எரிச்சலும் கோபமும் அடைந்தவர்கள் வாளை உருவிக்கொண்டு அவள் மீது பாய் முற்பட அவளின் குரலில் அதுவரை இருந்த மென்மை காணாமல் போய்

அப்படியே நில்லுங்கள்.! ஒரு அடி முன் எடுத்து வைத்தாலும் நீங்கள் மண்ணுக்குள் புதைந்து விடுவீர்கள். நீங்கள் அனைவருமே உங்கள் மன்னன் உட்பட அனைவருமே இப்பொழுது என்னுடைய கைதிகள். புரிகிறதா நீங்கள் நிற்பது பெரும் புதைகுழி, இன்னும் சற்று நேரத்தில் இந்த மணலுக்கு உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ள போகிறது.

அவ்வளவுதான் அதுவரை கையில் வாளுடன் நின்று கொண்டிருந்த அனைவருமே மிரண்டு கீழே பார்க்க அவர்கள் கால்கள் மணலுக்குள் அழுந்திக்கொண்டிருந்தன. பயத்தில் அனைவருமே பேச்சு மூச்சற்று போனார்கள். விஜயபாலன் அப்பொழுதும் தன் தைரியத்தை விடாமல் நல்லது பெண்ணே நயவஞ்சகமாய் எங்களை வளைத்து விட்டாய், உங்கள் மன்னன் வீரத்தால் முடியாததை ஒரு பெண்ணால் சாதித்து விட்டான். அடுத்து என்ன செய்ய உத்தேசம்? குரலில் ஏளன சிரிப்பு

அவள் முகம் கோபாக்கினியாய் மாறிற்று, வார்த்தையை பார்த்து பேசுங்கள், நானா உங்களை இங்கு வரவழைத்தேன். நீங்களாக ஒரு பெண் குளிக்கிறாள் என்று தெரிந்தும் வந்த வழி போகாமல் என்னை இரசிக்க வந்து விட்டு இப்பொழுது நான் உங்களை மாட்டி விட சதி திட்டம் தீட்டிவிட்டதாக சொல்கிறீர்கள். எங்கள் மன்னனையும் குறை சொல்லி பேசுகிறீர்கள். இதற்கும் எங்கள் மன்னனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

விஜயபாலன் வெட்கினான், உண்மைதான், ஒரு பெண் குளிக்கிறாள் என்றவுடன் நான் இங்கு பார்க்க வந்தது தவறுதான், அதற்கான தண்டனையாக இந்த மணலுடன் புதைந்து போக தயாராக இருக்கிறேன். ஆனால் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? மன்னனை பாதுகாக்க வந்ததால்தானே இந்த இக்கட்டில் மாட்டிக்கொண்டார்கள்.

சற்று நேரம் மெளனமாய் இருந்த அந்த பெண் ஒரு நிமிடம், சர சரவென காட்டுக்குள் நுழைந்தவள், பத்து நாழிகைக்குள் பத்திருபது மூங்கில் கழிகளை கொண்டு வந்து பரப்பியவள் நீங்கள் அனைவரும் தவழ்ந்து இந்த பக்கம் வாருங்கள்.

முதலில் விஜயபாலசிங்கம் ஒவ்வொரு வீரனாய் தவழ்ந்து போக செய்து விட்டு கடைசியாக அந்த மூங்கில் தட்டை வழியாக இந்த பக்கம் வந்தான்.

மிக்க நன்றி பெண்னே, நாங்கள் வருகிறோம், மெய்காப்பாளர்கள் சூழ அங்கிருந்து நகர்கிறான்.

மறு நாள் விஜயபாலனின் தூதுவன் அந்த நாட்டு மன்னனை சந்தித்து மன்னர் எங்கள் மன்னர் உங்களோடு சம்பந்தம் செய்ய விரும்புகிறார். தங்கள் மகளை

அவரது மகனுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

அந்த நாட்டு மன்னரும், விஜயபாலனும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர். அந்த நாட்டு மன்னர் கேட்டார், திடீரென்று தாங்கள் என்னிடம் சம்பந்தம் செய்து கொள்ள விரும்பிய காரணம்.

சப்தமாய் சிரித்த விஜயபாலன், உமது பெண்ணின் சாமார்த்தியத்தை நேற்று ஆற்றங்கரையில் கண்டேன். இப்படிப்பட்ட பெண் எனக்கு மருமகளாய் வந்தால்; எதிர்காலத்தில் என் நாட்டுக்கு நல்ல அரசி கிடைப்பாள் என்கிற நம்பிக்கையில்தான்.

அதுவரை திரை மறைவில் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண் தயங்கி தயங்கி விஜயபாலன் முன் வந்து நின்று முதலில் என்னை மன்னித்து கொள்ளுங்கள் அப்படி துடுக்காக பேசியதற்கு. எப்படி கண்டு பிடித்தீர்கள் நான் இளவரசி என்று.

நீ ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போதே கவனித்து விட்டேன் உன் கையில் இருக்கும் அரச முத்திரை பதித்த மோதிரம்,அதை நீ கழட்டாமல் குளிக்கிறாய் என்றால் அரச வம்சத்தை சேர்ந்தவளாய் இருக்க வேண்டும். இரண்டு நீ அந்த இருளில் தனியாக் இல்லை என்பதை அங்கங்கு மறைவில் நின்று கொண்டிருந்த வீரர்களையும் பார்த்து தெரிந்து கொண்டு விட்டேன். மூன்றாவது சமயோசிதமாய் நாங்கள் நின்று கொண்டிருந்த வெறும் இரண்டு மூன்றடி மட்டுமே புதையும் மணல் திட்டை “புதைமணல்” என்று சொல்லி என்னுடைய வீரர்களை மனதளவில் பயமுறுத்தி நிறுத்தி வைத்தாய், அது உன் துணிச்சலையும் சம்யோசித்த்தையும் காட்டுகிறது. அடுத்து நீ கொண்டு வந்த மூங்கில்கள் அப்பொழுது வெட்டப்பட்டவை அல்ல. ஏற்கனவே பதுக்கி அந்த புதருக்குள் வைத்திருந்தவை, போதுமா…

தங்களை என் மாமனாகவும், புகும் வீட்டு மன்ன்னாகவும் பெறுவதற்கு மிகுந்த அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். அந்த பெண்ணின் தந்தையும் நானும் உங்களை சம்பந்தியாய் அடைய மிகுந்த பாக்கியம் செய்தவனாயிருக்கிறேன்.

விஜயபாலனுக்கும் தோன்றியது ஒரு வேளை போரில் இவர்களை வென்றிருந்தாலும் இவர்களின் மனதை அன்பால் வெல்வது போல மகிழ்ச்சி கிடைத்திருக்குமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *