பேராசைக்கு ஓர் ஊர்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 669 
 
 

அது வீர யுகம்.

போந்தை ஊரில் வயல்வெளிகளும் தோட்டங்களும் கடல்போல பரந்துகிடக்கின்றன . அந்த வயல்களில் நீர் பாய்ந்து நிலம் சேறாகிக் கிடைக்கிறது. அதில் ஏர் பூட்டி உழுது பயிர் செய்யும் உழவரின் முயற்சியின் பயனாய் நெல் நிறைந்த களஞ்சியங்கள் வீடுகள் தோறும் உள்ளன. நெல்லை விற்று பொன் கொள்வனவு செய்ததனால் பொற்குவியலுக்கும் அங்கே பஞ்சம் இருக்கவில்லை. ஆங்காங்கே மலர்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற அழகு மனதுக்கு இதமாய் அமைகிறது,

இந்த வளமான பூமி ஆதனுக்கு உரியது.

கடல் நடுவே கப்பல் போன்று வயல் வெளிகளால் சூழப்பட்டு ஆதனின் கொடி பறக்கும் கோட்டை நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது. அந்தக் கோட்டை எழுமரத் தாழ்ப்பாள் கொண்டது. மண்ணை அரைத்துக் கட்டப்பட்டது. இக்கோட்டையை எளிதில் பகைவரால் வெற்றி கொண்டுவிட முடியாது..

ஆதன் ஒரு குறுநில மன்னன் தான். ஆனாலும் அவன் சிறந்த வீரன். அவன் மகன்களும் வீரத்தில் சற்றும் குறைந்தவர்களல்லர்.

வீரத்தோடு இணைபிரியாது இருப்பது மானம் தானே. ஆதன் மானத்தை தன் உயிர் எனக் கொண்டவன். தன்னை மதிக்காதவர் வேந்தர் ஆயினும் அவன் அவர்களுடன் முரண் பட்டு போர் செய்யத் தயங்க மாட்டான்.

நன்முல்லை… ஆதனின் செல்ல மகள். தொய்யில் எழுதிய அழகிய மார்புகளில் சோலையில் அன்றலர்ந்த நந்திப் பூ கொண்டு செய்யப்பட்ட மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவள் கூந்தலோ அவள் இடைவழியே சரிந்து அவள் நடைக்கியைய அசைந்தாடிக் கொண்டிருந்தது. என்றும் புதிதாய் தொன்றும் இயற்கையின் அற்புத திருஷ்டிதான் அவள்.

ஆதன் போலவே அவளும் சுதந்திர சிந்தை வாய்த்தவள்.அவள் பூப்படைந்து சில ஆண்டுகள் சென்ற போதும் இன்னும் காதலில் விழவில்லை. அவள் உள்ளத்தை பறித்து காதல் கொள்ளும் கொம்பன் ஒருவனையும் அவள் இன்னும் சந்திக்கவில்லை.

அவள் மனதுக்கு ஒவ்வாத ஒருவனை கலியாணம் செய்து வைக்க ஆதன் என்றும் விரும்பியதில்லை. வீர யுகத்தில் அது இயற்கையான செயலுமன்று என்பது அவனது தீர்க்கமான முடிவும் கூட .

இப்படியொரு நிலையில்தான் ஒரு புது பிரச்சினை கிளம்பியிருக்கிறது. வம்ப வேந்தன் ஒருவன் நன் முல்லையைப் பெண்கேட்டு அவனிடம் தூது அனுப்பியிருக்கிறான். அவ்வாறு அனுப்பிய வேந்தனிடம் பணிவு இருக்கவில்லை. கட்டளையிடும் தொனியே மேலோங்கி யிருந்தது,

வேந்தனின் உள்ளக் கிடைக்கையும் ஆதன் அறியாததல்ல. ஆதனிடம் பெண்ணை எடுப்பதன் மூலம் அவனைத் தன் ஆளுகைக்கு உள்ளே கொண்டுவர வேந்தன் முனைவது அவனுக்கு நன்கு புலப்படுகிறது…

ஆதன் இதற்கெல்லம் அசரப்போவதில்லை. தான் மறுக்குமிடத்து அவன் தன் மீது போர் தொடுப்பான் என்பது ஆதனுக்கு நன்கு தெரியும்.

மண்ணுக்கும் பெண்ணுக்குமான வேந்தனின் பசிக்குத் தனது மகளையும் தனது மண்னையும் அவன் பலிகொடுக்கப் போவதில்லை. உண்மைக்காதலுக்கு இடமில்லாது

ராணி என்ற போர்வையில் நான்கோடு ஐந்தாக வாழ்வதை நன் முல்லை சற்றும் விரும்பாள் என்பதும் ஆதனுக்கு நன்கு தெரியும்.

பெண் ஏன் அவளது சொந்த விருப்பத்துக்குப் புறம்பாக யாரோ ஒருவரின் விருப்பத்துக்காக அவரது தேவையை நிறைவேற்றுவதற்காக பலிக்கடாகவேண்டும் ?

அதுவும் அத்தகைய ஒரு அவலம் தன் சொந்த மகளுக்கு உண்டாவதை ஆதனால் எப்படி அனுமதிக்க முடியும்.

அதனால் வம்புக்கு இழுக்கும் வேந்தனுக்கு, மான உணர்வுடைய ஆதன் அவன் பாணியிலேயே பதிலளிக்கத் தொடங்கிவிட்டான்.

நன் முல்லையின் அண்ணன் மாரும் கண்களில் பெரும் கோபத்துடன் போருக்குத் தயாராகிவிட்டார்கள்.

ஒளிரும் முகத்துத் தந்தங்களில் காப்புப்பூண் அணிந்திருக்கும் யானைகளோ கட்டுத்தறியில் இருந்து அகற்றப்பட்டு போருக்குத் தயாரக்கப்பட்டுவிட்டன். வேலேந்திய வீரர்களும் வாயை மடித்துச் சினம் கொண்டு திரிகின்றனர். போர்முழக்கம் செய்வோரும் பல வகையான போரிசைக் கருவிகளை முழக்குகின்றனர்

வேந்தனும் புலிப் போலப் பாயக்கூடிய தனது போற்சுற்றத்துடன் போருக்குத் தயாராகிவிட்டான், .அவன் . போருக்கு உரிய பூவைச் சூடும் விழாக் கொண்டாடும்படி ஆணையிட்டுவிட்டான்..

எங்கும் போர் மோகம் சூழ்ந்துவிட்டது..

வேந்தன் பெரும் படை வைத்திருக்கிறான். அவன் படையில் யானைக்கும் குதிரைக்கும் பஞ்சம் இல்லை..

அவனோடு போரிட்டால் ஆதன் தோல்வியையே தழுவ வேண்டியிருக்கும். அதனால் அமைதியும் செழிப்பும் கொண்ட இந்த ஊர்.

நாளை யானை புகுந்து கலக்கிய குளம் போல கலங்கி அமைதியை இழந்துவிடுமே என்று பலர் அஞ்சுகிறார்கள்.

வெகு சிலரோ, “பெண்ணைக் கேட்ட வேந்தனோ பெரும் கோவக்காரன். இவளது தந்தையும் இவளுக்குப் பருவத்தில் திருமணம் செய்து தரவேண்டிய கடமையைச் செய்யவில்லை. தாயோ அறம் செய்யவில்லை. பண்பு இல்லாமல் பகையை அவர்கள் வளர்த்துவிட்டார்கள்.

நன் முல்லையோ, வேங்கை பூத்திருக்கும் மலையில் கோங்கு பூத்திருப்பது போல அழகியமுலைத் தோற்றத்துடன் பயம் சிறிதுமின்றி புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறாள்.

ஐயோ !பாதுகாப்பான இந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கின்றது என்ன ஆகுமோ?” என்று புறம் பேசுகிறார்கள்

அந்த குறுநிலத்தின் குடிகள் பாவம் என்பது என்னவோ உண்மைதான்.

ஓரு பெண்ணையிட்டு ஊரின் அமைதி கெட்டதா என்ன…

அல்லது…

வேந்தனின் பேராசைக்கு ஓர் ஊர்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *