இளைஞன் எழுதிய கவிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 26, 2024
பார்வையிட்டோர்: 296 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வேலம்பட்டி என்ற ஊரிலே முத்து வடுகநாதன் என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப் போது, எதுகை மோனைகளோடு கூடிய ஒரு வாசகத்தை அவன் பேசினான். 

அந்த வாசகம் அழகாயிருந்தது. அவன் நண்பர் களிலே ஒருவன் கூறினான், “முத்துவடுக நாதன் புலவர்களைப் போல் பேசுகிறான். அவன் பேசும் வாசகமெல்லாம் கவிதையாக வெளி வருகிறது !” என்று. 

முத்து வடுகநாதனுக்கு நண்பன் பேச்சு பெருமை தருவதாயிருந்தது. தான் பேசுவது கவிதை யாகவா இருக்கிறது என்று அவன் தன்னைத் தானே வியந்து கொள்ளத் தொடங்கினான். 

முத்து வடுகநாதன் கல்வி கற்றவனல்லன்; உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அந்த ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, உலகநீதி முதலிய நீதிநூல்களை மனப்பாடம் செய்திருந்தான். 

அதற்கு மேல் அவனுக்கு கு இலக்கணப் பயிற்சியோ, இலக்கியப் பயிற்சியோ கிடையாது. 

அவன் பேசும் வாசகமெல்லாம் கவிதையாக வெளி வருகிறது என்று நண்பன் வேடிக்கையாகப் பாராட்டிக் கூறியதை அவன் உண்மையாகவே எடுத்துக் கொண்டான். அன்று முதல் அவன் எழுத்தாணியும் ஓலையும் எடுத்துக் கொண்டு திரிந்தான் ஓய்வுள்ள போதெல்லாம் ஏதாவது சில வரிகளை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான். 

எழுத எழுதப் பனையோலைகள் குவிந்தன. எழுதிய ஓலைகளின் எண்ணிக்கை நாள் ஆக ஆகப் பெருகியது. 

நான்கு நான்கு அடியாக, ஏறக்குறைய ஆயிரம் கவிதைகளுக்கு மேல் அவன் எழுதி விட்டான். ஒரு நாள் அவன் தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்தான். 

தான் எழுதிய ஓலைகளை அவர்கள் முன் பெருமையோடு விரித்து வைத்தான். சிந்தித்துச் சிந்தித்து அலங்காரமாக அவன் எழுதியிருந்த அந்தக் கவிதைகளை நண்பர்கள் படித்துப் பார்த் தார்கள். அவர்களும் முத்துவடுகநாதன் படித்த பள்ளிக் கூடத்திலே படித்தவர்கள் தாம். 

அவர்கள் முத்துவடுகநாதனை ஒரேயடியாகப் புகழத் தொடங்கி விட்டார்கள்.”நண்பா, நீ எங்களோடுதானே படித்தாய். இதெல்லாம் உனக்கு எப்படி வந்தது ? தெய்வம் கனவில் வந்து கூறியதா? இல்லை, அருள் வந்து பாடினாயா?” என்று கேட்டார்கள். 

“நக்கீரர் முதலிய புலவர்களும் பாடி வைத்திருக் கிறார்களே, அவற்றைப் படிக்க முடிகிறதா? நமது முத்துவடுகநாதன் கவிதைகள் எவ்வளவு எளிமை யாகவும் வெள்ளையாகவும் இருக்கின்றன!” என்று ஒரு நண்பன் கூறினான். 

“இது இயற்கையான கவிதை ! எல்லோருக்கும் புரியும் கவிதை! எளிதில் பொருள் விளங்கும். கவிதை !” என்று மற்றொருவன் கூறினான். 

“ஆயிரக் கணக்கில் கவிதைகளை எழுதிப் பாயில் சுருட்டி வைப்பதால் பயனில்லை. முத்து வடுகநாதா, உன் கவிதைகள் தமிழ்நாடு முழு வதும் பரவ வேண்டும். அவ்வாறு பரவினால், வேலம்பட்டிக்குப் பெருமை உண்டாகும். அதற்கு உன் கவிதைகளைச் சங்கத்திலே அரங்கேற்றம் செய்ய வேண்டும்!” என்றான் ஒரு நண்பன். 

“சங்கத்திலே அரங்கேற்றம் செய்வதாயிருந் தால், புலவர்கள் பல கேள்விகள் கேட்பார்களாமே! அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண் டுமே !” என்று சிறிது அஞ்சிய குரலில் கூறினான் முத்துவடுகநாதன். 

“அதற்கெல்லாம் பயந்தால் முடியுமா? உன் கவிதை பொருள்! விளங்காததாயிருந்தால் அல்லவா அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். உள்ள பொருளை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?” என்று ஒரு நண்பன் ஊக்கமூட்டினான். 

முடிவில் முத்து வடுகநாதன் எழுதிய ஆயிரங் கவிதைகளில் நல்ல கவிதைகளாக நூறு கவிதைகள் தேர்ந்தெடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. கவிதை களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளை நண்பர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் தத்தம் மனதுக்கு அழகாகவும் சிறப்பாகவும் தோன்றிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓலைகளின் மேல் “வேலம்பட்டிக் கவிஞர் முத்து வடுகநாதர் இயற்றி யருளிய கவிதைத் திரட்டு’ என்று ஒரு வாசகத்தை ஓர் ஓலையில் எழுதி வைத்துக் கட்டி, ஓர் ஆள் மூலம் மதுரைக்கு அனுப்பினார்கள். 

மதுரைக்கு ஓலைக்கட்டு எடுத்துச் சென்ற ஆள் ஐந்தாறு நாட்களில் திரும்பி வந்தான். அவன் கையில் கொடுத்து விட்ட ஓலைக்கட்டு அப்படியே இருந்தது. 

“ஏன், சங்கத்தில் கொடுக்கவில்லையா?” என்று பரப்பரப்போடு கேட்டான் முத்து வடுக நாதன். 

“கொடுத்தேன். அங்கேயிருந்த ஒரு புலவர் ஓலைக் கட்டைப் பிரித்துப் பார்த்தார். ஐந்தாறு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, மறுபடியும் கட்டி என்னிடமே திருப்பித் தந்தார். ‘இங்கேதான் கொடுக்கச் சொன்னார்கள். அரங்கேற்றத்திற்கு. ஏற்பாடு செய்து நாள் அறிவிக்கச் சொன்னார்கள்!’ என்று நான் சொன்னேன். அவர் என்னை நோக்கி, ‘தம்பி, இவை இங்கே செல்லுபடியாகா!’ என்று கூறி என்னைத் திருப்பியனுப்பி விட்டார்!” என்று கூறினான் அந்த ஆள். 

இந்தச் செய்தியைக் கேட்ட முத்து வடுகநாத னுக்கு அவமானமாக இருந்தது. தன் நண்பர்கள் முகத்தில் விழிக்கவே வெட்கமாயிருந்தது. 

“ஓலைச் சுவடியை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்த புலவர் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த ஆள், “அவர் யார் என்று கேட்டுக் கொண்டு வரவில்லை” என்று கூறி விட்டான். 

நண்பர்கள் செய்தியறிந்த போது முத்து வடுகநாதன் எதிர்பார்த்தபடி கேலி பேசவில்லை.  முத்து வடுகநாதனைக் காட்டிலும் அவர்கள் அதிகமாக ஆத்திரப்பட்டார்கள். ஓலைக்  கட்டைத்  திருப்பியனுப்பிய புலவருக்குக் கவிதையுணர்வு இல்லாமலிருக்க வேண்டும்; அல்லது, அவர் அகம்பாவம் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். 

வேலம்பட்டியை யடுத்து அரசம்பட்டி என்று ஒரு சிற்றூர் இருந்தது. அரசம்பட்டியில் மங்லகங்கிழார் என்றொரு பெரும் புலவர் இருந்தார். நண்பர்கள் முத்து வடுகநாதனை அழைத்துக் கொண்டு அந்த ஓலைச் சுவடிகளுடன் அரசம் பட்டிக்குச் சென்றார்கள். மங்கலங்கிழார் அந்தக் கவிதைகளைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மதுரைக்குச் சென்று சங்கப் புலவர்களோடு வாதிடுவது என்பது அவர்கள் திட்டம். 

அவர்கள் மங்கலங்கிழார் வீட்டையடைந்த போது, அவர் அங்கில்லை. பக்கத்தில் உள்ள பூஞ்சோலைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். உடனே, இளைஞர்கள் அந்தப் பூஞ்சோலைக்கே சென்றார்கள். 

இளைஞர்கள் சோலைக்குப் போய்ச் சேர்ந்த போது மங்கலங்கிழார் ஒரு மேடை மீது அமர்ந்து, சோலைப் பறவைகளின் அழகில் ஈடுபட்டிருந்தார். இளைஞர்கள் சிலர் தம்மைப் பார்க்க வந்திருப்பதை யறிந்தவுடன், அவர்களை அன்புடன் வரவேற்று தம்மருகில் மேடையின் மீது அமரும்படி கேட்டுக் கொண்டார். 

இளைஞர்களை நோக்கி அவர்கள் வந்த நோக்கத்தை விசாரித்தார். 

அவர்கள் நடந்ததெல்லாம் விரிவாகக் கூறினார்கள். 

மங்கலங்கிழார், அவர்கள் கொண்டு போயிருந்த ஓலைச் சுவடியை வாங்கினார். அதில் ஓர் ஏட்டைப்  பார்த்தவுடனேயே அவர் அதை மறுபடியும் கட்டித் தம் அருகில் வைத்து விட்டார். 

அவருடைய செயலைக் கண்டு முத்துவடுக நாதனும் அவன் நண்பர்களும் இடிந்து போனார்கள். 

வானம் இருண்டு கொண்டு வந்தது. 

மங்கலங்கிழார், “அதோ பாருங்கள்! அதோ பாருங்கள் !” என்று ஒரு திசையில் சுட்டிக் காட்டினார். இளைஞர்கள் திரும்பிப் பார்த்தனர். 

கார்மேகத்தைக் கண்டு ஒரு மயில் எழில் தோகை விரித்துக் களிநடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் நின்ற வான்கோழி, மயில் ஆடுவதைப் பார்த்துக் தானும் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. 

மயிலின் நடனத்தையும், வான்கோழியின் ஆட்டத்தையும் ஒன்றாகக் கண்ட அந்த இளைஞர்களை நோக்கி, “இப்போது புரிகிறதா, உங்கள் நண்பன் எழுதிய கவிதைகள் எப்படிப் பட்டவை என்று ?” எனக் கேட்டார் மங்கலங்கிழார். 

இளைஞர்கள் நாணித் தலை குனிந்தனர். 

கருத்துரை:- இலக்கண இலக்கியங் கல்லாதவனுடைய கவிதைகள் நல்ல கவிதைகள் ஆகா. அவற்றைச் சான்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *