கணக்கப் பிள்ளையின் ஆணவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2024
பார்வையிட்டோர்: 242 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். ஒரு முறை அவன் வெளி நாடு போக வேண் டியிருந்தது. அதனால், அவன் தன் கணக்கப் பிள்ளையின் பொறுப்பில் தன் சொத்துக்களை ஒப்படைத்தான். தான் திரும்பி வரும்வரை தன் சொத்துக்களைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான். பிறகு, அவன் வெளி நாட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். 

பணக்காரன் வெளி நாடு சென்ற பிறகு, கணக்கப் பிள்ளையின் அதிகாரம் அளவுக்கு மிஞ்சியது, அவன் எல்லாச்சொத்துக்களையும் தன்னுடையதாகவே பாவித்துக் கொண்டான். மிகுந்த அதிகாரம் செலுத்தி வந்தான், அவனுடைய அளவுக்கு மீறிய அதிகாரத்தைக் கண்டு “இது என்ன, இவை யெல்லாம் உன்னுடைய சொத்துக்கள் தானா!” என்று யாரேனும் கேட்டால்,”ஆம். என்னுடைய சொத்துக்கள் தான்!” என்று கர்வத்தோடு பதிலளிப்பான். “இந்தத் தோட்டம் வீடு எல்லாம் என்னுடையவைதான்! என் விருப்பப்படிதான் செய்வேன்” என்று கூறி வந்தான். 

நாளுக்கு நாள் கணக்கப் பிள்ளையின் ஆணவமும், அதிகாரப் போக்கும் வளர்ந்து வந்தன. 

அந்தப் பணக்காரனுடைய தோட்டத்தில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்த மீன்களை யாரும் பிடிக்கக் கூடாதென்பது பணக்காரனின் கட்டளை. 

பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது பணக்காரனின் கொள்கை. அதனால் அவன் தன் தோட்டத்துக் குளத்தில் இருந்த மீன்களைப் பேணி வளர்த்து வந்தான். பணக்காரன் ஊரில் இருந்த வரையில் யாரும் அந்தக் குளத்தில் மீன் பிடிப்பதில்லை. அவன் வெளி நாடு சென்ற பிறகு கூட யாரும் அந்தக் குளத்தில் மீன் பிடிக்க வருவதில்லை. ஆனால் ஆணவம் மிகுந்த அந்தக் கணக்கப்பிள்ளை பணக்காரனின் கட்டளையை மதிக்கவில்லை. அவனே அந்தக் குளத்தில் மீன்பிடிக்கத் தொடங்கினான். 

ஒருநாள் கணக்கப்பிள்ளை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்து விட்டான். தோட்டத்தின் பக்கமாக நடந்து சென்ற பணக்காரன் குளத்தின் அருகில் வந்தான். அங்குக் கணக்கப் பிள்ளை மீன் பிடித்துக் கொண்டிருப்பதை நேரில் பார்த்து விட்டான். 

அவனுக்கு வந்த கோபத்துக்கு அளவே யில்லை. 

தன் சொத்துக்களை யெல்லாம் பாதுகாத்து வரும்படி ஒப்படைத்திருக்க, அந்தக் கணக்கப்பிள்ளை கட்டளையை மீறி மீன் பிடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. நம்பிக்கைக்குப் பாத்திர மற்ற அந்தக் கணக்கப்பிள்ளையை அவன் அப்பொழுதே வீட்டை விட்டுத் துரத்திவிட்டான். 

கணக்கப்பிள்ளை, யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் பணக்காரன் பறிமுதல் செய்து விட்டான். 

கணக்கப்பிள்ளைக்குச் சொந்தமான சில செப்புத் தவலைகள் இருந்தன. அவற்றை ஓர் ஓட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்திருந்தான். அவற்றைக் கூட அவன் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. 

மற்றவனுடைய சொத்துக்கு உரிமை கொண்டாடிய கணக்கப்பிள்ளை தனக்குரிய சிறு சொத்தைக் கூட இழக்க நேர்ந்தது. 

வீண் ஆணவம் நன்மை விளைக்காது. 

– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *