குருவியும் பருந்தும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 104 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காட்டிலே ஒரு முனிவர் தவம் செய்து கொண் டிருந்தார். அவர் தொடையிலே ஒரு சிட்டுக் குருவி வந்து உட்கார்ந்தது. முனிவர் அதை நோக்கினார். சிட்டுக் குருவியின் சின்னஞ்சிறிய அழகான உருவம் அவர் உள்ளத்திலே அன்பு பெருகச் செய்தது. ஆதரவாக அவர் அதன் முதுகைத் தடவிக் கொடுத் தார். அன்பின் மிகுதியால் அதற்குத் தாம் கற்ற கல்வி முழுவதையும் கற்றுக் கொடுத்தார். 

சிட்டுக் குருவி சிறந்த கல்வியறிவு பெற்றது, அது பறவைகளிடம் திரும்பிச் சென்றபோது, எந்தப் பறவையும் கல்வியில் அதற்கு நிகராக நிற்க முடிய வில்லை. எல்லாப் பறவைகளும் அதனிடம் யோசனை கேட்க வந்தன. அதன் புகழ் எங்கும் பரவியது. புகழ் பெருகப் பெருகச் சிட்டுக் குருவிக்குச் செருக்கும் பெருகியது. கல்விக் கடலே தான்தான் என்று நினைத்தது ! கல்விக்கடல் என்று எல்லாப் பறவைகளும் தன்னை அழைக்க வேண்டும் என்று அது விரும்பியது. விரும்பியதைச் சொல்லியது. கல்விக்கடல் சிட்டுக் குருவியார் அவர்களே வணக்கம் என்று சொல்லித்தான் எந்தப் பறவையும் தன்னை அழைத்துப் பேச வேண்டும் என்று அது கூறியது. அவ்வாறு வணங்கிப் பேசாத பறவை களுடன் அது பேச மறுத்தது. 

நாளுக்கு நாள் சிட்டுக் குருவியின் செருக்கு அதிகப்படுவதைக் கண்ட மற்றப் பறவைகள் அதன் மேல் வெறுப்புக் கொண்டன. 

சிட்டுக் குருவியிடம் அவமானம் அடைந்த சில பறவைகள் பருந்திடம் சென்று முறையிட்டன. சிட்டுக் குருவியின் அளவு கடந்த செருக்கைப் பற்றி பருந்து கேள்விப்பட்டது. 

கோபங்கொண்டு பருந்து பறந்து வந்தது. “ஏ! சீட்டுக் குருவி!” என்று அழைத்தது. சிட்டுக் குருவி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. “கல்விக் கடலே” என்று அழைத்து வணக்கம் கூறினால்தான் அது பேசும் என்று கூட இருந்த பறவைகள் கூறின. ஆனால் பருந்து அவ்வாறு அழைக்கவில்லை. 

“அற்பக் குருவியே உனக்கு இவ்வளவு ஆணவமா!” என்று கேட்டுக்கொண்டே சிட்டுக் குருவியை நெருங்கியது. பிடித்து வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டது. 

கருத்துரை :- செருக்குக் கொண்டவர்கள் வெறுப்புக் காளாவார்கள். செருக்கே அவர்களைக் கொல்லும் பகையாகும். 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *